S. Ramakrishnan's Blog, page 119
July 29, 2021
இரவின் இனிமை
யாமம் – நாவல் குறித்த விமர்சனம்
ஏழுமலை
••
எஸ் ராமகிருஷ்ணனின் வெயிலை போலவே இரவும் எத்தனை இனிமையானதாக இருக்கிறது நெடுங்குருதி வெயில் மையச் சரடாக வும் தொன்மை படிமமாகும் பின்னப்பட்டிருக்கும் இந்த நாவலில் இரவும் வரலாறும் அத்தர் வாசனையும் மையச் சரடாக இருக்கிறது.

யாமம் என்றால் இரவு, இரவை போல விளங்கமுடியாத இருளாக மனிதர்களும் அவர்களின் அகமும் இருக்கிறது என்பதையே இந்த யாமம் . ஒரு ஞானியிடம் இருந்து அத்தர் தயாரிக்கும் முறையைப் பெறும் அப்துல் கரீம் இரவை போலச் சுகந்தம் தரும் யாமம் என்ற வாசனை திரவியம் கண்டுபிடிக்கிறார். உயர்குடி முதல் சாதாரண மக்கள் வரை அந்த அத்தரை வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள் மதி மயக்கும் அதன் வாசனை காமத்தையும் கிளறுவதாக இருக்கிறது.
இந்த நாவலில் முதன்முதலில் என்பதே வரலாறாக மாறுகிறது முதல் முதலில் வெள்ளைக்காரர்கள் மிளகு வாங்கி விற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள் பிறகு கரையானைப் போல் இந்தத் தேசத்தைச் சுரண்டுகிறார்கள். அதே போல முதன் முதலில் நில அளவைகள் எங்கிருந்து யாரால் தொடங்கப்பட்டது, சென்னை நகரத்தை ஒயிட் டவுன் பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரிப்பது, முதல் தேயிலை இந்திய வருகை, முதல் கிறிஸ்தவ மதமாற்றம் இப்படி நாவலில் பின்னணியில் வரலாற்று இழையோடுகிறது. அந்த வரலாற்றில் விசித்திர நிகழ்வுகள் விசித்திர மனிதர்கள் சுவடே இல்லாமல் மறைந்து போன துயரமிகு வாழ்வின் வரலாற்று மீள்பதிவே யாமம்.
சதாசிவ பண்டாரம் காரணமே இல்லாமல் திருநீலகண்டம் என்ற நாய் சென்ற இடமெல்லாம் அலைந்து திரிந்து நாய் போன போக்கில் தன் வாழ்வை செலுத்தி இறுதியில் பட்டினத்தார் சமாதியில் முக்தியடைகிறார். வாழ்வில் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் விட்டுப் பண்டாரம் கண்ட வாழ்வின் தரிசனத்தை நம்மையும் அடைய வைக்கிறது. நேர் எதிரில் வெள்ளைக்காரர்கள் நாய்களை வாங்கி வருவதும் பிறகு ஒரு வருடம் கழித்து அதுகளை வேட்டையாடிக் கொள்வதும் விசித்திரம் தானே?
கிருஷ்ணப்ப கரையாளர் சொத்துக்காக லண்டன் வரை கூட வழக்கை எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார் ஆனால் அவரே தான் எந்தச் சொத்தும் பணமும் வேண்டாம் என்று கடைசியில் மறுக்கிறார். அவர் எலிசபெத்துடன் மலைக்குச் சென்று இயற்கையோடு தன் வாழ்க்கையைக் கழிக்கும் போது மனமாற்றம் அடைகிறார். இயற்கைக்கு மாறுதல் என்பது மனிதன் இயல்புக்கு திரும்புதல் என்ற என்றாகிறது இல்லையா?. எலிசபெத்தின் குழந்தைகால நினைவுகள், துயரங்கள் பின்பு அவள் வேசியாக மாறுவது என்பவையெல்லாம் வெளியேறமுடியாத இதயக் குமிழியாக இதயத்தில் எங்கோ தங்கிவிடுகிறது.
லண்டனில் போகத்திற்கான இடமாக நினைக்கும் சற்குணம் பிறகு லண்டனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் புரட்சியாளனாக மாறுவது வியப்பான தருணம்.
லண்டனுக்குக் கணிதம் கற்க செல்லும் திருச்சிற்றம்பலம் திரும்பி வரும்போது காமத்தால் சிதைந்து போன குடும்பங்களையும் உறவுகளை இருந்தான். இதே போலத் தான் ராமானுஜம் கூடக் கணிதத்திற்கு வாழ்கை அற்பணித்து அவதியுற்றார். தையல் நாயகியின் பத்திரகிரி உறவையும் தொடக்கத்தில் கசப்பாக என்னும் பகுதியில் மனைவி விசாலா பிறகு அதை அதன்போக்கில் ஏற்றுக் கொள்கிறாள். இதில் வரும் மனிதர்கள், வாழ்வு தன் கையின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவிய ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள். (தையல் திருச்சிற்றம்பலம் மனைவி)
யாமம் கண்டுபிடித்த கரீம் ஒரு கட்டத்தில் குதிரை பந்தயத்தில் மீது ஆசை வந்து அனைத்து சொத்துக்களையும் இழந்து ஒரு நாள் திடீரென்று காணாமல் போகிறார். பிறகு ஆண் வாரிசு இல்லாத அவரின் மூன்று மனைவிகள் சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகிய மூவரும் வறுமையோடு வாகையையும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. பிறகு காலரா சென்னை மாகாணத்தைத் தாக்குகிறது பின் மரணஓலங்கள் எங்கும். நான்கு மாறுபட்ட நாவல்களை ஒரே நாவலில் சேர்த்து வாசிப்பதை போல இருக்கிறது எல்லாவற்றையும் இனைக்கும் மையமாக வரலாறும் காமமும் வாசனையின் சுகந்தமும் இரவும் இருக்கிறது
நன்றி
பனுவல்மணம்
மன்னா மெஸ்
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 99வது கிலோ மீட்டர், அச்சிறுப்பாக்கத்தில் உள்ளது மன்னாமெஸ் (MANNA MESS)

சுவையான அசைவ உணவுகளைப் பராம்பரிய முறையில் தயாரிக்கிறார்கள். மதுரை செல்லும் போது அங்கே சாப்பிட்டிருக்கிறேன். மிகச் சுவையாக இருந்தது.
ஜெயராஜ் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.

இந்த உணவகத்தில் தேசாந்திரியின் புத்தகங்கள் யாவும் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன.
நெடுஞ்சாலைப் பயணத்தில் எனது புத்தகங்கள் தேவைப்படுகிறவர்கள் இங்கே வாங்கிக் கொள்ளலாம்
சிரிப்பை இழந்தவர்
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஆங்கில எழுத்தாளர் பி.ஜி. வுட்ஹவுஸ் மற்றும் அவரது மனைவி எத்தேல் ஆகியோர் பிரான்சில் வசித்து வந்தார்கள். நகைச்சுவையான கதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பி.ஜி. வுட்ஹவுஸ் பெரும்புகழ் பெற்றிருந்தார். அமெரிக்காவில் அவரது கதைகளுக்கு இருந்த புகழின் காரணமாக ஹாலிவுட் மற்றும் அமெரிக்க மேடைநாடகங்களுக்கு எழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இதனால் அவரது வருமானம் கொட்டியது.

இங்கிலாந்தின் நார்மண்டியில் வசித்த போது அங்கு ஏற்பட்ட வரிப்பிரச்சனை காரணமாகத் தனது தேசத்தை விட்டு வெளியேறி வுட்ஹவுஸ் பிரான்சில் குடியேறினார்.
ஜெர்மன் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் துவங்கியது பிரான்சிலிருந்து வெளியேறி பெல்ஜியம் வழியாக அமெரிக்கா செல்ல முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில் ஒரு நாள் அவரது வீட்டை முற்றுகையிடும் ஜெர்மானிய ராணுவம் அவரைக் கைது செய்து பெல்ஜியத்திலுள்ள தடுப்புமுகாம் ஒன்றுக்கு அழைத்துப் போகிறார்கள்
இங்கேயிருந்து தான் Wodehouse In Exile படம் துவங்குகிறது.

ஒரு நாள் காலை நாவல் எழுதும் பணியிலிருந்த வுட்ஹவுஸைத் தேடி வந்த ஒரு ராணுவ வீரன் அவர் உடனடியாக வீட்டைக் காலி செய்து கிளம்ப வேண்டும் என்கிறான். எதற்காகத் தன்னைக் கைது செய்திருக்கிறார்கள். எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று தெரியாத வுட்ஹவுஸ் தன்னுடைய மனைவி மற்றும் செல்லநாயிடம் விடைபெறுகிறார். அந்த ஊரிலிருந்த ஆண்கள் அனைவரும் கைதிகளாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
பெல்ஜியத்திலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில் அவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களை வரவேற்கும் காட்சியில் ஜெர்மன் ராணுவ அதிகாரி ஆங்கிலத்தில் அவர்களுடன் உரையாடுகிறான். அவனது பேச்சு அம்மாவை நினைவுபடுத்துவதாகச் சொல்கிறார் வுட்ஹவஸ்.
முகாமில் யாரும் அவரைத் தொந்தரவு செய்வதில்லை என்பதால் எழுதவும் படிக்கவும் நிறைய நேரம் செலவழிக்கிறார். அவரது கடிதம் ஒன்றின் வழியே ராணுவத்தால் கைது செய்யப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் செய்தியை அமெரிக்காவிலுள்ள அவரது இலக்கிய முகவர் அறிந்து கொள்கிறார். வுட்ஹவுஸின் விடுதலைக்காக அமெரிக்க மக்களைக் குரல் கொடுக்கச் செய்கிறார். இந்தப் பணியில் வுட்ஹவுஸின் வளர்ப்பு மகள் லியோனோரா முக்கியப் பங்கு வகிக்கிறாள்
ஒரு அமெரிக்கச் செய்தியாளர் வுட்ஹவுஸை தேடிவந்து முகாமிற்கு வந்து நேர்காணல் செய்கிறார். புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்த நேர்காணல் அமெரிக்க இதழில் வெளியாகிறது. இதை வாசித்த நாஜி ராணுவ அதிகாரிகள் புகழ்பெற்ற எழுத்தாளரான வுட்ஹவுஸ் தங்கள் தடுப்பு முகாமில் இருப்பதை உணர்ந்து அவரைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறார்கள்
இதற்காக அவர் எழுதுவதற்குச் சிறப்பு வசதிகள் செய்து தருவதுடன் அவருடன் இணக்கமாக நடந்து கொள்கிறார்கள். ஒரு நாள் அவரை விடுதலை செய்து பெர்லின் அழைத்துப் போகிறார்கள். அங்கே நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்படுகிறார்.
முகாமிலிருந்த போது அவர் எழுதிய டயரிக்குறிப்புகளையும் அவரது முகாம் அனுபவத்தையும் ரேடியோவில் உரையாற்றும்படி கேட்டுக் கொள்கிறார்கள். அமெரிக்க வாசகர்களுக்காக வுட்ஹவுஸ் ரேடியோவில் உரையாற்றுகிறார். நகைச்சுவையான அந்த உரையைக் கேட்டு ஜெர்மானிய அதிகாரிகளும் சிரிக்கிறார்கள்

ஆனால் இந்த உரையைக் கேட்ட இங்கிலாந்து மக்கள் அவரைத் தேசத்துரோகி. ஜெர்மன் ராணுவத்திற்குத் துதிபாடுகிறவர் என்று கோபமாக விமர்சிக்கத் துவங்கினார்கள். அவருக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசே பொய்களைப் பரப்பியது. நாடெங்கும் பலத்த கண்டனக்குரல்கள் எழுந்தன. இதை அறிந்த வுட்ஹவுஸ் தனது தரப்பு விளக்கத்தைச் சொல்ல மறுபடியும் ரேடியோவில் உரையாற்றினார். இந்த உரைகளின் வழியே ஜெர்மன் முகாம்களில் எவ்விதமான தண்டனையோ, குரூரமான வன்முறை நிகழ்வுகளோ நடப்பதில்லை என்ற பிம்பத்தை ஜெர்மன் உருவாக்குகிறது. இதை அறியாமல் வுட்ஹவுஸ் ரேடியோவில் ஐந்து உரைகளை நிகழ்த்தினார்.
இதற்குள் ஜெர்மன் ராணுவத்தால் அழைத்துவரப்படும் வுட்ஹவுஸின் மனைவி எத்தேல் வுட்ஹவுஸை சந்திக்கிறார்.
அவர் தந்திரமாக ஏமாற்றப்பட்டதை எடுத்துச் சொல்லி இங்கிலாந்தில் அவர் மீது மக்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைப் பகிர்ந்து கொள்கிறாள்.

வுட்ஹவுஸால் அதை நம்ப முடியவில்லை. மெல்ல உண்மையை உணர்ந்து கொள்கிறார். தான் ஒரு போதும் பிரிட்டனுக்குத் துரோகம் இழைக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார். பெர்லினில் ராணுவ தாக்குதல் தொடரவே அவர் அங்கிருந்து பாரீஸ் செல்ல அனுமதிக்கப்படுகிறார். அங்கு ஒரு நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாள் முழுவதும் நாவல் எழுதுகிறார். போரில் பிரான்ஸ் வெற்றியடைகிறது.
இங்கிலாந்தின் புலனாய்வுத்துறை அதிகாரி மால்கம் பாரீஸிற்கு வருகை தந்து வுட்ஹவுஸை விசாரணை செய்கிறார். உண்மையைப் புரிந்து கொண்ட அவர் வுட்ஹவுஸிற்கு உதவி செய்ய முன்வருகிறார். பிரிட்டன் அரசின் சார்பில் கல்லன் என்பவரால் விசாரணை நடத்தப்படுகிறது. அதில் வுட்ஹவுஸ் தனது தரப்பை முழுமையாக விவரிக்கிறார். முடிவில் கல்லனின் அறிக்கை அரசிடம் சமர்பிக்கபடுகிறது. அதில் அவர் செய்த செயல் குற்றம் என்றே கருதப்படுகிறது. மேலும் அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படக்கூடும் என்றும் வுட்ஹவுஸ் அறிந்து கொள்கிறார்.
இதனால் மனவருத்தமடைந்த வுட்ஹவுஸ் தன் மனைவியோடு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து சென்றுவிடுகிறார். பின்பு தன் வாழ்நாளில் அவர் இங்கிலாந்து திரும்பவேயில்லை.
நீண்ட பல வருஷங்களுக்குப் பிறகு 1974ல் இங்கிலாந்து அரசு அவரை அங்கீகரிக்கும் படியாக Knightwood பட்டம் அளித்தது. வுட்ஹவுஸ் அமெரிக்கப் பிரஜையாக இருந்து அங்கேயே மரணமடைந்தார்.
இந்தப்படத்தில் வுட்ஹவுஸின் செயல்களும் பேச்சும் பல இடங்களில் எழுத்தாளர் அசோகமித்திரனை நினைவுபடுத்தியது. வுட்ஹவுஸின் பாணியில் தான் அசோகமித்திரனின் நகைச்சுவையும் எழுத்தில் வெளிப்படுகிறது. அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர் வுட்ஹவுஸ் என்று அசோகமித்திரனே கூறியிருக்கிறார்.
படத்தில் வுட்ஹவுஸை விடவும் அவரது மனைவி எத்தலே சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். வானொலியில் பேசும் கணவரைத் தடுத்து நிறுத்த அவர் கார் பயணத்தில் காட்டும் வேகம். நேரடியாக வுட்ஹவுஸிடம் குற்றம் சாட்டும் எத்தல், அவர் தன்னை மறைத்துக் கொண்டு நகைச்சுவையாளர் போலத் தோன்றக்கூடியவர். அவரது நகைச்சுவை ஒரு தந்திரம் என்கிறார். எத்தலின் அவதானிப்பும் புரிதலும் முக்கியமானது.
ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அழைத்துப்போகும் போது தன் பெட்டியில் ஷேக்ஸ்பியரின் முழுமையான தொகுதியை மட்டுமே வுட்ஹவுஸ் எடுத்துப் போகிறார். அந்த ஒரு நூல் போதும் என்கிறார். படத்தின் கடைசியிலும் ஷேக்ஸ்பியரைத் தான் மேற்கோள் காட்டுகிறார்.

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது போலவே விதி தான் தன்னை இந்த நிலைக்கு உள்ளாக்கியது என்று வுட்ஹவுஸ் படத்தின் கடைசியில் சொல்கிறார். செவ்வியல் இலக்கியங்கள் யாவும் விதியின் விநோத விளையாட்டினைத் தான் பேசுகின்றன என்றும் குறிப்பிடுகிறார்.
முகாமில் தனது டயரியில் இருந்த குறிப்புகளை அவர் வாசிக்கும் போது மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் ஒரு ஜெர்மானிய அதிகாரிக்குச் சிரிப்பே வரவில்லை. அவரால் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியவில்லை. இதற்கு மற்றொரு அதிகாரி அது British humour என்கிறார்‘. அது உண்மையே நகைச்சுவை எப்போதும் பண்பாட்டோடு ஒன்றுகலந்தது. ஆகவே British humourயை ரசிக்க அந்தப் பண்பாடு நெருக்கமாக இருக்க வேண்டும். அல்லது நாம் அந்தத் தேசப்பிரஜையாக இருக்க வேண்டும்.
பி. ஜி. வுட்ஹவுஸ் நாவல்கள் இந்தியாவிலும் மிகவும் புகழ்பெற்றிருந்தன. ஒரு தலைமுறையே அவரை விரும்பிப் படித்தது. கொண்டாடியது. கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அவரைப் பாடமாக படித்தார்கள். இன்று அந்த வரவேற்பு குறைந்துவிட்டது. என் தாத்தா அவரை விரும்பி வாசித்தார். அவரது நூலகத்தில் பி. ஜி. வுட்ஹவுஸ் நாவல்கள் செம்பதிப்பாக இருந்தன.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பி. ஜி. வுட்ஹவுஸ் ஒரு அப்பாவி, நிரபராதி. எதுவும் அறியாமல் இப்படி நடந்து கொண்டார் என்ற பிம்பத்தைப் பிபிசி ஏன் உருவாக்க நினைக்கிறது என்ற கேள்வி படம் பார்க்கும் போது எழவே செய்கிறது.
உண்மையில் பி.ஜி.வுட்ஹவுஸ் அத்தனை அப்பாவி ஒன்றுமில்லை. அவரை ஜெர்மன் ராணுவம் பயன்படுத்திக் கொண்டது போலவே அவரும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அது இவ்வளவு பெரிய விளைவை உண்டுபண்ணும் என அவர் நினைக்கவில்லை.
நகைச்சுவையின் அளவு கூடும் போது அது கசப்பாகி விடுகிறது. வருத்தமடையச் செய்கிறது. அது தான் பி. ஜி. வுட்ஹவுஸிற்கும் நடந்தது.
ஐந்து ரேடியா உரைகள் ஒருவரைத் தனது சொந்த தேசத்திலிருந்து துண்டித்துவிட்டது என்பது தான் இதில் முக்கியமானது. அந்த உரைகளின் எழுத்துவடிவம் இன்று வாசிக்கக் கிடைக்கிறது அதில் வெளிப்படுவது அசட்டுத்தனம். ஜெர்மானிய ராணுவத்தினைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவர் எழுதியது போலவே இருக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியிலே எத்தல் கேட்கிறார். “பிரான்சின் வீழ்ச்சி கண்ணுக்குத் தெரிகிறது. டன்கிரிக்கிலிருந்து பிரிட்டிஷ் படைகள் சிறிய படகுகளில் வெளியேறிப் போகத் துவங்கிவிட்டன. இனி என்னவாகும் என நினைக்கிறீர்கள்.“
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல்தனது நாவலின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசுகிறார் வுட்ஹவுஸ். எத்தலுக்கு எதிர்காலம் அப்போதே தெரியத்துவங்கியிருக்கிறது. அதை உணர்ந்த போதும் வுட்ஹவுஸ் அரசியல் செய்திகளில் ஈடுபாடு அற்றவரைப் போலவே நடந்து கொள்கிறார்.
அந்த நாட்களில் ஜெர்மனியில் வுட்ஹவுஸின் புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு விரும்பி வாசிக்கப்பட்டன. அதில் கிடைத்த ராயல்டி தொகையைக் கொண்டு தான் அவர் பெர்லினில் நட்சத்திர விடுதியில் தங்கினார். நாஜி உயரதிகாரிகள் பலரும் அவரை வாசித்திருக்கிறார்கள்.
பிரான்சிலிருந்து கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு ஒரு தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்த போதும் அவர் ஜெர்மன் ராணுவத்தைப் பண்பாளர்கள் என்றே நம்புகிறார். முகாம் வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பற்றிக் கேலி செய்கிறார். உண்மையில் அவருக்கு நாஜி ராணுவத்தின் கோரமுகம் தெரியவில்லையா அல்லது தெரிந்து கொண்டு மறைக்கிறாரா எனப் புரியவில்லை.
ஜெர்மன் ராணுவத்திடம் மாட்டிக் கொள்வதற்கு முன்பு ரகசியமாக அமெரிக்கத் தப்பிப் போகத் திட்டமிட்டவர் பி. ஜி. வுட்ஹவுஸ் . என்றால் அவருக்குச் சூழலின் தீவிரம் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நாஜி அதிகாரிகள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களுக்கு எதிராகப் பிரிட்டன் அமெரிக்காவைத் துணை சேர்க்க முயல்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் பிரிட்டனின் புகழ்பெற்ற எழுத்தாளரைக் கொண்டே அந்த முயற்சியைத் தோற்கடிக்கிறார்கள்.
அமெரிக்க மக்கள் இந்த உரைகளைக் கேட்டால் ஜெர்மன் ராணுவம் என்பது ஏதோ அமைதியின் காவலர்கள் என உணருவார்கள். அது தான் அவர்கள் உருவாக்க நினைத்த பிம்பம். அதைப் பி.ஜி.வுட்ஹவுஸ் சரியாகவே உருவாக்கியிருக்கிறார்.
அன்றைய சூழலில் அவர் மீது எழுந்த கண்டன விமர்சனங்கள் பிரிட்டன் அரசின் சார்பிலே வலிந்து உருவாக்கப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்பாவியாக அவர் புனைந்து கொண்ட பிம்பம் கேள்விக்குரியதாகவே உள்ளது.
இன்று அவர் மீதான விமர்சனத்தைத் துடைக்க வேண்டிய அவசியம் பிரிட்டனுக்கு உண்டாகியுள்ளது. ஆகவே தான் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் பி. ஜி. வுட்ஹவுஸ் சதா எழுதிக் கொண்டேயிருக்கிறார். உண்மையில் அவர் எழுதுவதற்கு முன்பு விரிவாகக் குறிப்புகள் எழுதக்கூடியவர். அந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டே நாவல் எழுதியிருக்கிறார். ஒரு நாவல் எழுத நானூறு குறிப்புகள் வரை வைத்திருப்பார் என்கிறார்கள். எந்தக் காட்சியில் நகைச்சுவையான நிகழ்வு வர வேண்டும். எப்படி வர வேண்டும் என நாடக நடிகர்கள் போலத் திட்டமிட்டே அவர் தனது நகைச்சுவையை உருவாக்கினார்.
பி. ஜி. வுட்ஹவுஸ் ஒரு தேசத்துரோகி என்பது போன்ற குற்றச்சாட்டு மிகையானது. ஆனால் சூழலின் தீவிரத்தன்மையை உணராமல் நடந்து கொண்டிருக்கிறார் என்பது நிஜமே.
உண்மையை வெளிப்படுத்த நகைச்சுவை பயன்படுவது போலவே உண்மையை மறைக்கவும் நகைச்சுவை பயன்படுத்தப்படும். அது பி. ஜி. வுட்ஹவுஸிற்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஜெர்மனியில் இருந்த நாட்களில் அவர் நகைச்சுவையை விளையாட்டாக எடுத்துக் கொண்டாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது
••
July 28, 2021
ஃபெலுடா- 50
சத்யஜித்ரேயின் ஃபெலுடா (Feluda) கதைகள் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி சாக்னிக் சாட்டர்ஜி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். Feluda: 50 years of Ray’s detective என்ற அப்படத்தை நேற்றிரவு பார்த்தேன்.
இயக்குநர் கோவிந்த் நிஹலானி மற்றும் ரேயின் மகன் சந்தீப்பிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சாக்னிக் சாட்டர்ஜி

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் ஆறு மொழிகளில் ஃபெலுடா கதைவரிசை வெளியாகியுள்ளது. வீ.பா.கணேசன் மொழியாக்கத்தில் பாரதி புத்தகாலயம் ஃபெலுடா கதைவரிசையை வெளியிட்டபோது நான் தான் புத்தகங்களை வெளியிட்டேன். ஃபெலுடா கதைகளை முழுமையாக வாசித்திருக்கிறேன்.
ஃபெலுடா கதைகளை ரே எவ்வாறு எழுதினார். அது வெளியான நாட்களில் எது போன்ற வரவேற்பு இருந்தது. அதன் திரைப்பட வடிவம் மற்றும் அதில் நடித்த நடிகர்களின் அனுபவங்கள், ஃபெலுடாவை நேசிக்கும் வாசகர்களின் எண்ணங்கள் என இந்த ஆவணப்படம் ரேயின் ஆளுமையைக் கொண்டாடுகிறது.

தீவிரமான கலைப்படைப்புகளை உருவாக்கிய சத்யஜித்ரே சிறார்களுக்காக ஏன் துப்பறியும் கதைகளை எழுதினார்.
ரேயிற்குச் சிறுவயது முதலே துப்பறியும் கதைகள் வாசிப்பதில் விருப்பம் அதிகம். குறிப்பாக ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை விரும்பி வாசித்திருக்கிறார். தானும் அது போல ஒரு துப்பறியும் நிபுணரை உருவாக்க வேண்டும் என்று விரும்பியே ஃபெலுடாவை உருவாக்கியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தைத் தவிரக் கதைகள் முழுவதும் ரேயின் சொந்தக்கற்பனையில் உருவானதே.
துப்பறியும் கதைகளாக இருந்த போது இதில் பாலியல் தொடர்பான எதையும் எழுதக்கூடாது என்பதில் ரே உறுதியாக இருந்தார். பெரும்பான்மை கதைகள் கொலை, கடத்தல், திருட்டு, மறைக்கபட்ட உண்மை என விரிகின்றன. இந்த மர்மங்களைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் தேடுதல்களும் சாகசமுமே கதையின் சுவாரஸ்யம்.
ஷெர்லாக் ஹோம்ஸ் போலவே ஃபெலுடாவும் அதிபுத்திசாலி. தற்காப்புக்கலை அறிந்தவர். துல்லியமாகச் சுடக்கூடியவர். அதிகம் சிகரெட் பிடிப்பவர். துணிச்சல் மிக்கவர். வாட்சன் கதாபாத்திரம் போலவே டாப்ஷே உருவாக்கப்பட்டிருக்கிறார். ஜடாயு என்ற எழுத்தாளர் இந்தக் கைவரிசையில் இடம்பெறத் துவங்கிய பிறகு சுவாரஸ்யம் அதிகமாகியது
வரலாறு, தொல்லியல், கலை, அறிவியல், தத்துவம், இலக்கியம் எனப் பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் கொண்டிருந்த சத்யஜித்ரே அவற்றை ஊடு இழையாகத் துப்பறியும் கதையில் இணைத்து எழுதியிருக்கிறார். அவரே ஒவியர் என்பதால் பொருத்தமான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார்.

ஃபெலுடா வசித்துவந்த கல்கத்தாவின் 21 ரஜனி சென் சாலை வீடு வங்காளிகளின் மறக்கமுடியாத அடையாளம். உண்மையாகவே அங்கே ஃபெலுடா வசிக்கிறார் எனப் பலரும் அவரைத்தேடிப் போய் ஏமாந்து போயிருக்கிறார்கள். .
1965 ஆம் ஆண்டில் சத்யஜித்ரே சந்தேஷ் என்ற இதழில் எழுதிய கதையில் தான் ஃபெலுடா முதன்முறையாக அறிமுகமானார். ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையை ஒட்டி வெளியிடப்படும் சிறப்பு மலருக்காக ரே புதிய துப்பறியும் கதை ஒன்றை எழுதி கொடுத்திருக்கிறார். தனது இடையுறாத திரைப்படப் பணிகளுக்கு நடுவிலும் சிறார்களுக்காகத் தொடர்ந்து ரே எழுதியிருப்பது முக்கியமானது. 35 ஃபெலுடா கதைகள் வெளியாகியுள்ளன.
ஃபெலுடா வின் கதைக்களன் அதுவரை துப்பறியும் கதைகளுக்காக யாரும் தேர்வு செய்யாதவை. எளிய நிகழ்விலிருந்து துவங்கி வலைபோலப் பின்னிப்பின்னி கதையைக் கொண்டு செல்கிறார் ரே. இந்தக் கதைகளின் ஊடே வரலாற்று உண்மைகள். விநோதமான அறிவியல் செய்திகள். பண்பாட்டுத் தகவல்களை இணைத்து ரே எழுதியிருப்பது விசேசமானது.

ஃஃபெலுடாவின் உதவியாளராக டாப்ஷே என அழைக்கப்படும் தபேஷ் ரஞ்சன் மிட்டர் கதைகளில் கூடவே வருகிறார். இந்த ஜோடிகளின் பயணமும் துப்பறியும் முறையும் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
வங்காளிகளின் வாழ்க்கையில் கால்பந்தாட்டம். தாகூர். ரசகுல்லா, காபி ஹவுஸ் போலப் பிரிக்கமுடியாத விஷயமாக ஃபெலுடா வும் ஐம்பது ஆண்டுகளாக இணைந்திருக்கிறார்
பெரும்பான்மையினர் தனது பால்ய வயதில் இந்தக் கதைகளை வாசித்திருக்கிறார்கள். அந்த இனிமையான நினைவு தலைமுறைகள் கடந்தும் நீள்கிறது என்கிறார் படத்தில் ஒரு வாசகர். நடிகர் சபியாசாச்சி சக்ரவர்த்தி தான் ஃபெலுடா வாக நடித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் பெலுடாவாக நடித்தது தனக்கு கிடைத்த பெருமை. அந்த கதாபாத்திரத்தினை ரே எவ்வளவு நுட்பமாக எழுதியிருக்கிறார் என்பதை நடிக்கும் போது தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன் என்கிறார்.
இன்னொரு இளம்பெண் புத்தகமாக ஃபெலுடா கதைகளை வாசித்துவிட்டு அந்தக் கதையில் இடம்பெற்றுள்ள இடங்களைத் தேடிக் கண்டறிந்து வியந்ததாகக் கூறுகிறாள். அவளது தேடுதலும் இந்த ஆவணப்படத்தின் பகுதியாக உள்ளது.
தனது பள்ளிவயதில் விசேச நாட்களின் போது பெரியவர்கள் ஏதாவது பரிசு வேண்டுமா என்று கேட்பார்கள். அப்போது ஃபெலுடா கதைகளைத் தான் பரிசாக வாங்குவேன். ஃபெலுடா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத கதாபாத்திரம் என்கிறார் ஒரு இளைஞர்.

இந்தத் தொடருக்கு வரையப்பட்ட ஓவியங்கள் குறித்தும் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது ஃபெலுடா கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகரைத் தேடியதைப் பற்றியும் ரேயின் மகன் சந்தீப் சுவாரஸ்யமாகக் கூறுகிறார்.
ஃபெலுடா கதைகளில் இரண்டை ரே திரைப்படமாக்கியிருக்கிறார். இதில் சோனார் கெல்லா எடுத்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் படப்பிடிப்பு நடந்த ஜெய்சால்மாரின் வீடுகள், வீதிகள் பற்றிய நினைவுகளையும் தொழில்நுட்ப கலைஞர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் வெளியான பிறகு அங்குச் சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகமாகியது என்கிறார் விடுதி உரிமையாளர்.

இந்த ஆவணப்படத்தில் சத்யஜித்ரே காசியில் படப்பிடிப்பு நடத்திய வீடு ஒன்றை ஒரு கிழவர் தேடுகிறார். அவர் கையில் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு குறுகலான வீதிகளுக்குள் அலைந்து திரிந்து அவர் வீட்டைக் கண்டுபிடிப்பது பெலுடாவின் பயணம் போலவே உள்ளது. உண்மையில் அவர் நினைவிற்கும் நிஜத்திற்கும் இடையில் பயணிக்கிறார். அந்தத் தேடுதல் தான் படத்தின் மையப்புள்ளி.
ஃபெலுடா என்ற கதாபாத்திரம் வங்காளிகள் மனதில் எவ்வாறு பதிந்துள்ளது என்பதைத் தேடும் சானிக் அதன் பல்வேறு கலைவடிவங்களை, சிறப்புகளை, அதோடு தொடர்புடைய மனிதர்களைக் கண்டறிகிறார். தலைமுறை கடந்தபிறகும் ஃபெலுடா எப்படி இளைஞர்களை வசீகரிக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

கதாபாத்திரங்களுக்கு ஒரு போதும் வயதாவதில்லை. ஆனால் ஃபெலுடா என்ற கதாபாத்திரம் அறிமுகமாகி ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டாடி ஆவணப்படுத்துவது வங்காளிகள் ரேயின் மீது கொண்டுள்ள மாறாத அன்பையே வெளிப்படுத்துகிறது
July 27, 2021
கதைகளின் பாதை
கதைகள் செல்லும் பாதை பற்றிய வாசிப்பனுபவம்
– தயாஜி, மலேசியா

மிகுந்த மகிழ்ச்சியில் இதனை எழுதுகிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கிற்காக அல்ல. பொழுதும் போகும்தான் அதே சமயம் அதனை தாண்டியது அதன் பயணம். முதலில் கதை எதனால் சொல்லப்படுகிறது யாருக்காகச் சொல்லப்படுகிறது என்பது யோசிக்கையில் மனதில் பல பதில்கள் கிடைக்கும். என் வரையில் அது ஒரு வழிகாட்டியின் தகவல் பறிமாற்றம். வழிகாட்டுதல் என்பது பயணத்திற்கு எத்தனை உதவியாக அமையும். மிக நீண்ட பயணத்தின் சிக்கல்களை கலைவதற்கும், கேள்விகளை முன்வைக்கவும் வழிகாட்டி உதவும். அதெப்படி வழிகாட்டி கேள்விகளை முன்வைக்க உதவும். நம் கைக்கு கிடைத்த வழிகாட்டியில் செல்ல வேண்டிய இடம் இருக்கிறது. ஆனால் அவ்வழியில்தான் செல்லவேண்டும் என்பதில்லை, பயணம் செய்து பழகியவர்கள் காட்டில் கூட காற்றில் வழி திசை அறிந்து பயணிப்பார்கள்தானே. இதன் வழி நமக்கான வழியை நாம் கண்டுக்கொள்ளலாம்.
நான் ஒரு ‘குறுங்கதை’ எழுதியிருந்தேன். தனது வேண்டுதலுக்காக திடீர் பக்தன் மலைமேல் ஏறுகிறான். அவ்வழி முழுவதும் ஒத்தையடிப்பாதை. உயிரை பணையம் வைத்து மூன்று நாட்கள் பல சிக்கல்களை கடந்து அவன் கோவிலை அடைகிறான். கோவில் வாசலில் ஒருவர் கேட்கிறார்; “ஏன்பா அதான் முன்பக்கமா நல்ல சாலை போட்டிருக்காங்களே, கார்லயே வந்திருக்கலாம்தான..?”. அப்போது அந்த பக்தனின் மனநிலை எப்படியிருந்திருக்கும். ஒரு முறை இருமுறை என்றால் அது அனுபவமாக இருந்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி பயணிக்கும் மனிதனுக்கு விரக்தி வந்துவிடாதா? வாசிப்பும் அப்படித்தான். உங்களுக்கு புத்தகங்கள் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சரியான புத்தகங்களை வாசிக்கவில்லை என்பது பொருள் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். சரியானதை வாசிக்காமல் அடுத்தவர் வாசிப்பை குறை சொல்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே.
பல ஆண்டுகள் பயணிக்க வேண்டிய பாதைக்கு உங்களிடம் ஒருவர் வழிகாட்டியைக் கொடுக்கிறார். அதிலும் அவர் கொடுத்திருப்பது பல ஆண்டுகளாக அவர் தேடி அழைந்த பயணத்தின் குறுக்குவழி என்றால் சொல்ல வேண்டுமா?. அதனைத்தான், ‘கதைகள் செல்லும் பாதை’ என்ற தலைப்பில் வாசகர்களுக்கு கையில் கொடுத்திருக்கிறார் எஸ்.ரா. வாசகர்களுக்கு முக்கியமான எழுத்தாளர்களுக்கு அத்தனை முக்கியமானது இந்த புத்தகம். இதனைக் கொடுத்த அவரின் கைகளுக்கு வாசகனாய் என் முத்தத்தைக் கொடுத்துவிடுகிறேன்.
புத்தகத்திற்குச் செல்வோம்.
‘கதைகள் செல்லும் பாதை’ உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளையும் அதன் நுட்பங்களையும் அழகியலையும் நமக்கு கற்றுத்தருகின்றன. வடிவத்தில் சோதனை செய்த கதைகள், மிகைக்கற்பனையும் புனைவும் கொண்ட கதைகள் என பல மாறுபட்ட கதைகளை இப்புத்தகம் அறிமுகம் செய்கிறது.
மொத்தம் 23 தலைப்புகளில் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். அதிலிருந்து சில தலைப்புகளைப் பார்க்கலாம். அருண் ஜோஷி: பயமும் காமமும், போர்ஹே: இரண்டு குற்றங்கள், ரஷ்யாவிற்கு வெளியே, ஆண்டன் செகாவ்: எழுதப்படாத கதைகள், அம்ரிதா ஏயெம்: விலங்குகள் நடத்தை, எட்கர் கெரெட்: தலைகீழ் மாற்றம்.

பல முக்கியமான எழுத்தாளர்கள் இப்புத்தகத்தின் வழி அறிமுகமாகிறார்கள். முதல் கட்டுரையில் சாகித்ய அகாதமி பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் அருண் ஜோஷியை குறித்தும் அவரின் ‘குழலூதும் பையன்’ சிறுகதை குறித்தும் பேசுகிறார். வணிகனின் மனம் எப்படி அவரது வாழ்வையும் கணக்கிட சொய்கிறது என்பது கதை. தனது பயத்தை காமத்தின் வழி கடக்க முயற்சிக்கிறார். பயத்தை கலைவதற்கே இன்னொரு பெண்ணின் துணை அவருக்கு தேவை. அவரின் கணக்கு சரியானதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் கதையின் முடிவில் விரக்தியில் நடக்கிறார். வழியில் சிலர் அவரிடம் கொள்ளையடிக்கிறார்கள். சண்டை செய்கிறார்கள். அடி வாங்கி மயங்கி விழுகிறார். அவருக்கு ஒரு சிறுவன் உதவுகிறான். பொழுது விடிகிறது. அச்சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு பணம் கொடுப்பதற்கு தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று பணம் கொடுக்கப்பார்க்கிறார். அச்சிறுவனைக் காணவில்லை. அவன் யாராக இருக்கும் என்கிற கேள்வியே வாசகர் மனதில் பல பதில்களைக் கொடுக்கின்றன.
ஜென் கவிதைகளைப் போலவே சிறுகதைகளையும் கவித்துவமான வரிகளைக் கொண்டு எழுதுகிற ஜப்பானிய எழுத்தாளர் ‘யாசுனாரி கவாப்ட்டாவைக்’ குறித்துச் சொல்கிறார். பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் வயதானவர் செல்கிறார். அந்த அறையில் கொசுவலை இல்லை. வாடிக்கையாளர்களின் தேவை முடிந்தப்பின் அவள்தான் இரவு முழுக்க அவர்களுக்கு கொசு கடிக்காமலிருக்க விசிறிக்கொண்டே இருக்கிறாள். அங்கு வரும் கிழவர் தூங்காத அவளின் கண்களை கவனிக்கிறார். கொசுவலை இல்லாததைத் தெரிந்துக்கொண்டு வெளியேறுகிறார். திரும்ப கொசு வலையோடு வருகிறார். கட்டிலை சுற்றி மாட்டிவிடுகிறார். அப்பெண் கட்டிலில் ஏறிப்படுக்கிறாள். கொஞ்ச நேரத்தில் அவள் கண்கள் சொக்குகின்றன. கொசுவலையில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற அவள் கனவு பலிக்கிறது. ஆழ்ந்து உறங்கிவிடுகிறாள். விடிகிறது. கிழவரைக் காணவில்லை. எங்கே படுத்திருந்தார் எப்போதுப் புறப்பட்டார் என தெரியவில்லை.
அவளது காதலன் வந்தே அவளை எழுப்புகிறான். அவர்களின் உரையாடல் அவளை மணப்பெண்ணாக உணர வைக்கிறது. பின்னர் நிதானமாக அவள் தன் கால் நகங்களை வெட்டத் துவங்குகின்றாள். நீண்ட நாட்களாக தன் கால்களைக்கூட அவள் கவனிக்காதது அவளுக்குத் தெரிகிறது. நல்ல கதைகளை நகங்களில் இருந்துக் கூட சொல்ல முடியும் என்பதனை சொல்கிறார்.
அடுத்து ரஸ்கின் பாண்ட் எழுதிய ‘இல்லாத கண்கள்’ சிறுகதையை சொல்கிறார். அவர் சொல்லி முடித்ததும் அக்கதையை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டிவிருகிறது. ரயிலில் செல்லவிருக்கும் நாயகிக்கு அவள் குடும்பத்தினர் பல அறிவுரைகளைச் சொல்லி அனுப்புகின்றார்கள். ரயிலில் பயணம் செய்கிறாள். அவளது எதிரில் பார்வை இழந்த இளைஞன் இருக்கிறான். அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவன் பேச்சை தொடங்குகின்றான். தான் பார்வை அற்றவன் என்பதை அவள் கண்டுக்கொண்டாளா என அவனுக்குத் தெரியவில்லை.
அவனது உரையாடல் அவளை வெட்க்கப்பட்டு சிரிக்க வைக்கிறது. உரையாடல் அதிகம் இல்லையென்றாலும் அவளின் இருப்பு அவனுக்கு பரவசத்தைக் கொடுக்கிறது. அடுத்த நிலையத்தில் அவள் இறங்கவேண்டும். வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகின்றாள். அவள் இடத்தில் இன்னொரு இளைஞன் வருகிறான். பார்வையற்ற இளைஞன் முன்பு இங்கு அமர்ந்திருந்த பெண் போல தன அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்றுச் சொல்லி சிரிக்கிறான். அதோடு அந்த பெண்ணைப் பற்றியும் அவளது அழகு, சிகை அலங்காரம் பற்றி ஆர்வமாக விசாரிக்கின்றான். ஆனால் அந்த இளைஞனோ, அதையெல்லாம் தான் கவனிக்கவில்லை எனவும் அவள் அழகாக பெண் ஆனால் அவள் முழுமையாக பார்வையற்றவள் என சொல்லி அதனை அவன் கவனிக்கவில்லையா என கேட்கிறான். கதையை அங்கு முடிக்கின்றார் ‘ரஸ்கின் பாண்ட்’. பார்வையற்ற இருவரின் ரயில் பயணத்தில் இருவருக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அந்த சந்திப்பும் அவர்களுக்குள் ஏற்படுத்தும் சலனமும் இக்கதையில் அழகாகச் சொல்லப்பட்டிருப்பதாக சொல்கிறார்.
இப்புத்தக வாசிப்பு, இன்பத்தையும் கூடுதலாக இன்ப அதிர்ச்சியையும் எனக்குக் கொடுத்தது. சமீபத்தில் நான் வாசித்து சிலாகித்த சிறுகதைகளையும் அதன் எழுத்தாளரையும் பற்றி நாம் பெரிதும் வியந்து பார்க்கும் எழுத்தாளர் முன்மொழிவதுதான் அது.
‘அம்ரிதா ஏயம்: விலங்கு நடத்தைகள்’ என்கிற கட்டுரை. நான் வாசித்த கதைகள் குறித்து தொடர்ந்து எனது வைப்பூவில் #கதைவாசிப்பு என்ற தலைப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் எழுத்தாளர் அம்ரிதா ஏயம் குறித்தும் அவரது ‘விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்’ என்ற புத்தகத்தில் வாசித்த சில கதைகளைக் குறித்து எழுதியிருந்தேன். அதில் எனக்கு விருப்பமான கதைகளையும் பற்றி எஸ்.ரா மேலும் இப்புத்தகத்தில் பேசுகின்றார்.. நிச்சயம் இந்த புத்தகமும் அவரது கதைகளும் பரவலாக அறியப்படும் என நம்புகிறேன்.
நிறைவாக,
அதிகம் சொல்லிவிட்டேனா என்ன? உண்மையில் இன்னும் இப்புத்தகத்தைப் பற்றி சொல்லத்தான் தோன்றுகிறது. சொல்லத்தான் வேண்டும் . “யான் பெற்ற இன்பம்….” தான் காரணம். வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இந்த புத்தகத்தை தாராளமாக முன்மொழியலாம். வாங்கிப் பரிசளிக்கலாம். வாசிக்க வேண்டிய பல எழுத்தாளர்களின் அறிமுகமும் கதைகள் நாவல்களையும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.
இக்கதைகளைப் பற்றி எஸ்.ரா சொல்வதைக் கவனித்தால் , கதை வாசிப்பில் எப்படியெல்லாம் நாம் நமது சிந்தனையை ஓடவிடலாம் என பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். மேலும் நம் வாசிப்பு தளத்தை விரிவுப்படுத்த இப்புத்தகம் உதவும். இதே தலைப்பில் எஸ்.ரா தனது இணையப்பக்கத்திலும் மேலும் பல கதைகள் எழுத்தாளர்கள் குறித்து எழுதியுள்ளார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்
கு.அழகிரிசாமியின் கதைகள் குறித்துச் சிறந்த விமர்சன நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்.ஆர்.தாசன். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம் 1987ல் வெளியானது. இன்றும் ரூ 12க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. இது போல மௌனி, பிச்சமூர்த்தி பற்றிய கட்டுரை தொகுப்புகளும் மலிவு விலையில் வானதி பதிப்பகத்தில் கிடைக்கின்றன.

ஒரு எழுத்தாளரின் ஒட்டுமொத்த கதைகளையும் வாசித்து இப்படி விரிவாக விமர்சனம் எழுதப்படுவதே அவருக்கான உண்மையான அங்கீகாரம். அதை என்.ஆர் தாசன் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
என். ஆர். தாசன் அழகிரிசாமியை ஆழ்ந்து படித்திருக்கிறார். அழகிரிசாமியின் கதைகளின் சிறப்புகளைச் சிறு அத்தியாயங்கள் மூலம் விரிவாக எடுத்துச் சொல்கிறார். குறிப்பாக கு.அழகிரிசாமி கதைகளில் வரும் குழந்தைகளைப் பற்றியும் தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் பற்றி யாரெல்லாம் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்பதையும் தனித்துவமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்த ஆய்வுரையில் தேவையற்ற எந்த ஜோடனையும் கிடையாது. தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு வரியைக் கூட என்.ஆர் தாசன் எழுதவில்லை. அதே நேரம் கு.அழகிரிசாமியை ஆன்டன் செகாவ் மற்றும் கார்க்கியோடு ஒப்பிட்டு அழகாக வரையறை செய்திருக்கிறார். ரஷ்ய இலக்கியத்தின் பாதிப்பு அழகிரிசாமியிடம் எப்படி வெளிப்பட்டது என்பதையும் தெளிவாகக் கூறுகிறார். பலராலும் கையாளப்படாத கதைக்களன்களை எப்படி அழகிரிசாமி தேர்வு செய்து எழுதினார் என்பதையும். அவரது மொழிநடை மற்றும் கதாபாத்திரங்களின் உருவாக்கம் பற்றியும் நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.
“குழந்தையின் அழகிலும் அதன் விளையாட்டுகளிலும் பேதைமையிலும் ஈடுபட்டு மெய்மறக்காத கலைஞர்கள் கிடையாது“ என்று கு.அழகிரிசாமி கூறுகிறார். அது உண்மை என்பதற்கு அவர் படைத்த கதைகளே சாட்சி என்கிறார் என். ஆர் தாசன்.
குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் கதையில் அழகிரிசாமி கரிசல் மண்ணின் வறட்சியையும் வெப்பத்தையும் மட்டும் வெளிப்படுத்தவில்லை. அதன் சௌந்தர்யத்தை, இனிமையை வெளிப்படுத்துகிறார் என அக்கதையின் நிஜத்தைச் சுட்டிக்காட்டுகிறார் என் ஆர் தாசன்.
ராஜா வந்திருக்கிறார். அன்பளிப்பு, சுயரூபம் இரண்டு பெண்கள். இருவர் கண்ட கனவு, பேதமை. காலகண்டி ஒரு மாதலீவ், அழகம்மாள் எனச் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து விமர்சனம் செய்திருப்பது பாராட்டிற்குரியது

பேதைமை என்ற கதையில் பிச்சைக்காரக் குருட்டுக்கிழவனின் சோற்றில் இரண்டு சிறுவர்கள் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டுச் சிரிக்கிறார்கள். கடைக்காரன் அவர்களைத் துரத்திப் போய் உதைக்கிறான். சிறுவர்கள் செய்தது தவறு என்றாலும் இப்படிக் கண்மூடித்தனமாக அவர்களை அடிப்பதைக் கதைசொல்லியால் தாங்க முடியவில்லை. அவர்களை விடுவித்துக் குடிசைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே அந்தக் குருட்டு பிச்சைக்காரன் சிறுவர்களின் தகப்பன் என்று தெரிய வரும் போது அதிர்ச்சி அடைகிறான். அபூர்வமான இந்தக் கதையைப் பற்றி என். ஆர் தாசன் குறிப்பிட்டு எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
எனக்கு மிகவும் பிடித்த கு.அழகிரிசாமி கதைகளில் ஒன்று அக்னிக்கவசம்.
இக்கதை தெய்வத்தைக் கேள்வி கேட்கிறது. பஞ்சகாலத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் மறக்கமுடியாத கதை
இந்தக் கதை தலைவன் குறிச்சி ரணவீரமுதது மாரியம்மன் கோவில் பூசாரியின் மனைவியைப் பற்றியது.
அந்த மாரியம்மன் தெய்வம் மட்டுமில்லை. வழக்குத் தீர்த்து வைக்கும் நீதிபதியும் நோய் தீர்க்கும் வைத்தியரும், திருடனைப் பிடித்துத் தரும் உளவதிகாரியும் கூட என்று கதையின் துவக்கத்திலே அழகிரிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த மூன்றும் கதையின் மூன்று சரடுகளாக வெளிப்படுகின்றன.
ஒரு பெண் விஷயத்தில் பிரச்சனை துவங்கி அது ஊர் சண்டையாக மாறியதால் ஊரே இரண்டு பட்டுப் போகிறது. இதனால் கோவில் திருவிழா நடைபெறவில்லை. ஊரில். மழையும் இல்லை. விவசாயமும் நடைபெறவில்லை. கொள்ளை நோய் பரவுகிறது. இதனால் ஊர் ஒன்றுகூடி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கிறது. அப்போது தான் அம்மனுக்குச் சாத்தியிருந்த சிவப்புச் சிற்றாடை களவு போயிருப்பது தெரிய வருகிறது.
பூசாரி ஆறுமுகப்பண்டாரத்தின் மனைவி உடுத்திக் கொள்ள மாற்றுத்துணி இல்லாமல் அதை எடுத்துத் துவைத்துச் சாயம் போக வைத்துக் கட்டிக் கொள்கிறாள். வறுமை அவளை அணுஅணுவாகத் தின்றதே இதற்கு முக்கியக் காரணம்.
வீட்டில் கடுமையான வறுமை. கணவனும் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ போய்விட்டான். பிழைக்க வழியே இல்லை. இந்த நிலையில் மாற்று உடையில்லாமல் தன் மகனிடம் சொல்லி அம்மனின் சிற்றாடையைத் திருட வரச் செய்கிறாள் பூசாரியின் மனைவி. எண்ணெய்ப் பிசுக்கு போக வீட்டிலே துவைக்கிறாள். இதில் சாயம் போய்விடுகிறது. அதையே உடுத்திக் கொள்கிறாள்.
தன் கைபடாத புடவை ஒன்றை எப்படிப் பூசாரியின் மனைவி கட்டியிருக்கிறாள் என்று சலவைக்காரி காளிக்குச் சந்தேகம் வருகிறது. அவள் உண்மையை அறிந்து கொண்டுவிடுகிறாள். ஆனால் அதை எப்படி வெளியே சொல்வது எனத் தெரியாமல் திண்டாடுகிறாள்.
இந்நிலையில் பொங்கலன்று சாமி வந்து ஆவேசமாக ஆடும் காளி பூசாரி மனைவியிடம் அவள் செய்த தவறுக்காகக் கண்ணைக் குத்தப் போவதாக மிரட்டுகிறாள்.
இதைக் கேட்ட பூசாரி மனைவி ஆத்திரத்துடன் “குத்து. அதுக்கெல்லாம் பயந்தவுக ஒருத்தரும் இல்ல. காலமெல்லாம் பூசை பண்ணின என் புருஷனைக் காப்பாத்திக் குடுக்க ஒனக்கு சக்தியில்லை இப்போ என்னடான்னா கண்ணைக் குத்துவேன். மூக்கை குத்துறேனு உறுமுறே“ என்று சண்டை போடுகிறாள். அவள் மனதில் இருந்த கோபம் நெருப்பாக மாறுகிறது. அதுவே கவசமாக மாறுகிறது
இன்று படிக்கும் போது மாற்றுடை கூட இல்லாமல் இருப்பார்களா என்று தோன்றக்கூடும். ஆனால் ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன்பு இப்படியான நிலையே இருந்தது. அதுவும் பஞ்சகாலத்தில் கேட்கவே வேண்டாம். பஞ்ச காலத்தில் பிழைப்பு தேடி போகும் தாயும் மகளைப் பற்றிய திரிபுரம் கதையைப் படித்துப் பாருங்கள். மிக அற்புதமான கதை.
சாமி வந்து ஆடிய காளி சாந்தமடைகிறாள். பூசாரியின் மனைவியோ ஊரை விட்டே போய்விடுகிறாள். வெளியூரில் போய்ப் புருஷனைச் சந்திக்கும் அவள் இந்தத் தெய்வகுற்றத்தை நினைத்துப் பயந்து மருகி ஒரு வருஷத்தின் பின்பு ஊர் திரும்பி சாமிக்கு செம்பட்டு சாத்துவதுடன் கதை முடிகிறது.
மிகவும் நல்ல கதை. ஆனால் பூசாரியின் மனைவி காளியோடு சண்டையிடும் இடத்திலே கதை முடிந்து போகிறது. ஏன் அதை நீடித்து ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஊர் திரும்பி செம்பட்டு செலுத்தும் இடம்வரை அழகிரிசாமி கொண்டு போகிறார் என்று வெளிப்படையாகத் தனது விமர்சனத்தை முன்வைக்கிறார் என். ஆர். தாசன்.
இந்தக் கதையைச் சாமியாடி முன்பாகவே முடித்திருந்தால் அது மலையாளப்படமான நிர்மால்யத்திற்கு இணையாக அமைந்திருக்கும் என்று என்.ஆர்.தாசன் குறிப்பிடுவது முக்கியமானது.
தெய்வங்கள் மனிதர்களாக வேண்டும். மனிதப்பிறவிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு என்று திரிவேணி கதையில் அழகிரிசாமி கூறுகிறார். மனிதனின் மேன்மையை மட்டுமின்றிச் சிறுமைகளையும் தனது கதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அழகிரிசாமி.
ஒருவன் இருக்கிறான் என்ற கதையில் ஒண்டுக்குடுத்தனம் ஒன்றில் குடியிருப்பவன் வீட்டிற்கு ஒரு நோயாளி வந்துவிடுகிறான். இதனால் அந்த வீட்டுக்காரனுக்கும் பக்கத்துவீட்டுக்காரனுக்கும் எவ்வளவு வெறுப்பு உருவாகிறது என்பதைத் துல்லியமாக எழுதியிருக்கிறார் அழகிரிசாமி.
அழகிரிசாமி நிறையக் காதல்கதைகள் எழுதியிருக்கிறார். அந்தக் காதல் கதைகளில் சாதியும் அந்தஸ்தும் எப்படி முக்கியப்பிரச்சனையாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

கதையின் வடிவத்தைப் பற்றியோ, அதில் செய்யவேண்டிய புதுமைகள் பற்றியே அழகிரிசாமி கவலைப்பட்டதில்லை. உண்மையான நிகழ்வுகளை மனதிற்கு நெருக்கமான அனுபவமாக மாற்றக் கொஞ்சம் கற்பனை கலக்கிறார். அவ்வளவு தான் அவரது சிறுகதை பாணி. நுட்பமான விவரிப்பு. தனித்துவமான கதாபாத்திரங்கள். பெண்களின் உளவியலை ஆழ்ந்து ஆராயும் பண்பு இவையே அவரது கதைகளைத் தனித்துவமிக்க தாக்குகின்றன.
கு.அழகிரிசாமியின் சிறுகதைகளைப் பற்றி மட்டுமின்றி அவர் எழுதிய குழந்தைகளுக்கான கதைகள், கம்பரைப் பற்றிய நாடகம், இலக்கியக் கட்டுரைகள் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இதில் அழகிரிசாமியின் மொழிபெயர்ப்புகள் பற்றிய ஆய்வு மிகச்சிறப்பு.
“என்ன உக்தியைக் கையாளலாம் என்பது பற்றி நான் தனியே யோசிப்பது கிடையாது. நுணுக்கம், அமைப்பு இவற்றைப்பற்றியும் வரையறுத்துக்கொண்ட ஒருசட்ட வரம்புக்குள் உட்பட்டு நான் எண்ணிப் பார்ப்பதும் கிடையாது. நேரடியாக அன்றாட வாழ்வில் பெறும் அனுபவங்களை,அவற்றின் உணர்வுகளின் தூண்டுதலின் பேரில் மனத்தில் ஏற்படும் கற்பனை வளத்துடன் சேர்த்து எழுதுகிறேன் “என்றே தனது எழுத்து பற்றி அழகிரிசாமி குறிப்பிடுகிறார்
“கு.அழகிரிசாமி ஒரு வித்தியாசமான நடையில் எழுதினார். அவரது நடையின் குண அம்சங்கள் என்ன? அது எளிமையானது. நேரடித்தன்மை கொண்டது. சுற்றி வளைத்து மூக்கைத் தொடாதது. மற்றவர்களைப்போல வார்த்தைகள் மூலம் மிரட்டவும், மயக்கவும், பிரமிப்பூட்டவும் முயலாமல், வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்து, அதன் மூலம் கதையின் உள்ளடக்கங்களைத் தூக்கலாகத் தெரிய வைத்தவர். பொதுவாகவே கு.அ வின் கதைகளில் ஆசிரியரே வெளியில் தெரியமாட்டார். பிரச்சினைகளும், அவற்றின் முகங்களுமே தெரியும்
மன இயல்புகளையும், இயக்கங்களையும் நினைவு வழியே ‘அப்ஸ்ராக்ட்’டாக கு.அழகிரிசாமி சொல்வதில்லை. தத்ததுவ வாசகங்களாகவோ, சித்தாந்த வாய்ப்பாடுகளாகவோ அவர் மாற்றித் தருவதில்லை. சிறுசிறு சம்பவங்களின் மூலமே இதைச் செய்கிறார்
கு.அ வின் கதைகள், வாசிப்பில் மேலான உணர்ச்சிரூபங்களை (visual feelings)த்தோற்றுவிக்கும். அவை சொல்லப்படுவதற்கு வசதியாகச் சுருக்கப்படும் போது சாதரணமாகத் தோன்றும். காரணம் அவரது கதைகள் ஸ்தூல நிகழ்ச்சிகளில் காலூன்றி நிற்கவில்லை“ என்கிறார் என். ஆர். தாசன்.
நூலின் பின் இணைப்பாக அழகிரிசாமியின் புத்தகங்கள் மற்றும் இந்த ஆய்விற்குத் துணைநின்ற புத்தகங்களின் பட்டியலை முழுமையாகக் கொடுத்திருக்கிறார் என். ஆர். தாசன். அரிய எழுத்தாளர்களை நாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நூலை எழுதியதாகச் சொல்கிறார். இது போன்ற புத்தகங்களே ஆரம்ப வாசகனுக்கான வழிகாட்டிகள். இது போலவே வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ந.பிச்சமூர்த்தி பற்றிச் சுந்தர ராமசாமி எழுதிய நூலும் மௌனி பற்றித் திலீப்குமார் எழுதிய நூலும் முக்கியமானது.
தமிழ் சிறுகதையின் சாதனை நாயகர்களை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள இவற்றைத் தேடி வாசிக்க வேண்டும்.
••
ஆங்கில வெளியீடு
எனது உறுபசி நாவலின் ஆங்கில மொழியாக்கம் CHRONIC HUNGER, இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பேராசிரியர் வெங்கடாசலம். தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது
விலை ரூ 200

சிறார்களுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நாவலின் ஆங்கில மொழியாக்கம் Whirling Swirling Sky, இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. கீதா
தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது
விலை ரூ 180

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு THE TWO BUBBLES இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பேராசிரியர் ராம்குமார்
தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது
விலை 350

தொடர்புக்கு
Desanthiri Pathippagam
: D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
Phone: 044 2364 4947
July 25, 2021
நைல் நதி சாட்சிகா
எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது. நைல் நதி சாட்சிகா என்ற இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பாலாஜி. இவர் சாகித்ய அகாதமிக்காக எனது சஞ்சாரம் நாவலையும் தெலுங்கில் மொழியாக்கம் செய்து வருகிறார்

Nylu nadhi sakshiga (Short Stories)
S. Ramakrishnan’s tamil stories translated by Gillella Balaji
விலை ரூ 120
தொடர்புக்கு
Desanthiri Pathippagam
: D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
Phone: 044 2364 4947
கறை படிந்த சட்டை
.Beijing Bicycle படத்தின் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்ற இயக்குநர் வாங் சியாஷுவாய் உருவாக்கியுள்ள புதிய படம் 11 Flowers. பாடகரும் ஓவியருமான ஒருவரின் பதினோறு வயது மகனைப் பற்றியது. ஹானின் தந்தை ஓவியம் வரைவதற்காகப் பூக்குவளையில் மலர்களை அடுக்குவதில் படம் துவங்குகிறது.

குறிப்பிட்ட கோணத்தில் மலர்களை எப்படி அவதானிப்பது என்பதை ஆரம்பக் காட்சியிலே மகனுக்குக் கற்றுத் தருகிறார் வாங் ஹானின் தந்தை.
கலாச்சாரப் புரட்சிக்குப் பின்பு குய்ஷோ மாகாணத்தில் நடக்கும் கதையிது. பள்ளியில் படிக்கும் வாங் ஹான் பெற்றோர் மற்றும் தங்கையுடன் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறான். தந்தை அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.
மூன்று நண்பர்களுடன் பள்ளிக்குச் செல்லும் வாங் ஹான் விளையாட்டுத்தனமானவன். பள்ளியில் நடைபெறும் உடற்பயிற்சியில் அவன் சிறப்பாகச் செய்வதை அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர் அவனைத் தனியே அழைத்துப் பாராட்டுகிறார். பள்ளியில் நடைபெறப்போகும் விளையாட்டு நிகழ்வு ஒன்றில் அவனை அணித்தலைவராக நியமிக்கிறார்.
இதைக்கேட்டு வாங் ஹான் சந்தோஷமடைகிறான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவன் ஒரு புதுச்சட்டை தைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கிறார்.
வாங் ஹான் தனது அம்மாவிடம் தனக்கு ஒரு புதுச்சட்டை வேண்டும் என்கிறான். அவளோ துணி வாங்குவதற்கு ரேஷன் முறை உள்ளதால் நினைத்த நேரம் வாங்கமுடியாது என்று மறுக்கிறாள். வாங் ஹான் பிடிவாதம் பிடிக்கவே அம்மா அவனுக்கு ஒரு வெள்ளை சட்டை தைத்துத் தருகிறாள்.

தனது புதுச்சட்டையை அணிந்து கொண்டு வாங் ஹான் பள்ளிக்குச் செல்லும் காட்சி மிக அழகானது. பள்ளி உடற்பயிற்சி விழாவில் பங்கேற்றுப் பாராட்டுப் பெறுகிறான் வாங் ஹான்.
அன்று பள்ளியை அடுத்த சரிவு ஒன்றில் தொழிற்சாலை அதிகாரியின் சடலம் கிடைப்பதை ஊர் மக்கள் காணுகிறார்கள். கொலை செய்தவன் அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் அண்ணன். அந்த இளைஞனை போலீஸ் தேடுகிறார்கள்.
மாலையில் தனது நண்பர்களுடன் ஆற்றங்கரையில் விளையாடுகிறான் வான் ஹான். அப்போது ரத்த காயத்துடன் ஓடிவரும் கொலையாளி அவனது புதுச்சட்டையைப் பறித்துக் கொண்டு காட்டில் மறைந்து விடுகிறான்.
புதுச்சட்டையை இழந்த வாங் ஹான் அவன் பின்னாலே ஓடுகிறான் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. . இருட்டி விடுகிறது. அழுதபடியே வீடு திரும்புகிறான். அவனது அம்மா கோபத்தில் அவனை அடிக்கிறாள். ஆற்றில் சட்டை தொலைந்துவிட்டது என்று பொய் சொல்கிறான் வாங் ஹான்
இருட்டிலே அவனை ஆற்றங்கரைக்கு அழைத்துக் கொண்டு வருகிறாள். இருவரும் தேடுகிறார்கள். புதுச்சட்டையைக் கண்டுபிடிக்க முடியவில்லை
மறுநாள் பகலில் அந்தக் கொலையாளியைத் தேடிப்போய்ச் சந்திக்கிறான் வான்ஹான். சிறுவனின் வேதனையைப் புரிந்து கொண்ட கொலையாளி தான் புதிய சட்டை ஒன்றை வாங்கித் தருவதாகச் சொல்கிறான். அதை வான் ஏற்க மறுக்கிறான்.
கொலையாளியின் அடிபட்ட காயத்திற்கு மருந்து போடப் பச்சிலை பறித்து வந்து கட்டுகிறான் வான். தான் காட்டில் ஒளிந்துள்ளதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்புகிறான் கொலைகாரன்

பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் அவனைப்பற்றிய சிந்தனையுடன் செல்லும் வான் இந்த ரகசியத்தைத் தன் நண்பர்களிடம் சொல்லிவிடுகிறான். அவர்கள் ஒன்றாகக் கொலைகாரன் இருக்குமிடத்தைத் தேடுகிறார்கள்.
காட்டிற்குள் சிறுவர்கள் செல்லும் காட்சியில் அவர்களின் பயமும் ஆசையும் மிக உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வாங் ஹானின் அப்பா தொழிற்சாலையில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். இதனால் வீடே அச்சத்தில் பீடிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் கொலையாளி ஏன் இந்தக் கொலையைச் செய்தான் என்ற உண்மை வெளிப்படுகிறது. அவனைப்பிடிக்கக் காவல்துறைக்குச் சிறுவன் வான் உதவி செய்கிறான். கொலையாளி என்ன ஆகிறான் என்பதே மீதக்கதை.
சிறுவன் வாங் ஹானின் கண்ணோட்டத்தில் முழுப்படமும் விரிகிறது. தந்தையிடம் அவன் ஓவியம் கற்றுக் கொள்வது, இரவில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுவது. தந்தையும் மகனும் ஓவியம் வரைவதற்காகப் பசுமையான சூழலைத்தேடிப் போவது. எதிர்பாராமல் மழையில் மாட்டிக் கொள்வது, தந்தையும் அவரது நண்பர்களும் ஒன்று சேர்ந்து பாடுவது. கொலையாளியின் பக்கமுள்ள உண்மை என மறக்கமுடியாத காட்சிகளுடன் மிகுந்த நேர்த்தியாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையும் அழகான பாலமும் காட்டின் வனப்பும் தொழிலாளர் குடியிருப்பும் சிறுவர்களின் பள்ளியும் சிற்றூர் வாழ்க்கையும் மறக்கமுடியாதவை.
வெள்ளை சட்டையில் ரத்தக்கறை படிகிறது. அது ஒரு குறியீடு. கலாச்சாரப் புரட்சியின் பின்பு ஏற்பட்ட மாற்றங்களின் குறியீடு போலவே அச்சட்டை சித்தரிக்கப்படுகிறது.
கொலைகாரனின் தந்தையும் சகோதரியும் ஒரு காட்சியில் வாங் ஹானையும் அவனது தந்தையினை வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிப்பதும் தன்னை மீறி கொலையாளியின் தந்தை வெடித்து அழுவதும் அபூர்வமான காட்சி.

நிலக்காட்சி ஓவியங்களின் சிறப்பையும் அந்த ஓவியர்களின் தனித்துவத்தையும் பற்றித் தந்தை ஒரு காட்சியில் மகனுக்கு விளக்குகிறார். நிலக்காட்சி ஓவியங்களில் காட்டப்படுவது போலவே வாங் ஹானின் கிராமம் பேரழகுடன் ஒளிருகிறது. ஆனால் அந்தச் சூழலுக்குள் கண்ணுக்குத் தெரியாத அச்சம். பகை. வன்முறை ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைச் சிறுவர்கள் கண்டறிகிறார்கள்.
பெரியவர்களின் உலகம் சிறுவர்களின் உலகம் என இரண்டு தளங்கள் இயங்குகின்றன. பெரியவர்களால் மனதில் உள்ளதைப் பேச முடியவில்லை. விரும்பிய பாடலைப் பாட முடியவில்லை. சூழலின் நெருக்கடியை உணர்ந்து அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வாழுகிறார்கள். சிறுவர்களுக்கோ விரும்பிய உணவும் உடைகளும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் சுதந்திரமாக நடந்து கொள்கிறார்கள். சந்தோஷமாக ஓடியாடி விளையாடுகிறார்கள். பெரியவர்கள் பேசுவதை ஒளிந்து கேட்கிறார்கள். பெரியவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனக் குழப்பமடைகிறார்கள்.
இயக்குநரின் இளமைப்பருவத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தையே படமாக்கியிருக்கிறார். வாங் ஹானிக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் முழுமையாகப் புரிவதில்லை. ஆனால் சொல்லப்படாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறான். சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் சேர்ந்து கொள்வதும் வெளிப்படையாக இருக்கிறது. பெரியவர்களிடம் அப்படியில்லை. அவர்கள் ரகசியமாகச் செயல்படுகிறார்கள். புதிராக நடந்து கொள்கிறார்கள்.

ஊரில் நடக்கும் சண்டை ஒன்றை சிறுவர்கள் பார்வையிடுவது முக்கியமான காட்சி. அதில் அவர்களுக்கு எதற்காக அந்த சண்டை நடக்கிறது. யார் எதிரி என்று தெரிவதில்லை. ஆனால் அவர்களுடன் சண்டையில் கலந்து கொள்கிறார்கள்.
வான் ஹானின் அம்மா அவனை மிகவும் கண்டிப்புடன் நடத்துகிறாள். கோபத்தில் அடிக்கிறாள். அதே நேரம் அவனுக்கு விருப்பமான உணவை தயாரித்து தருகிறாள். பள்ளி விட்டு வீடு திரும்பியதும் ஹான் சாப்பிடுகிறான். பிறகு இரவு வரை விளையாடுகிறான். அவன் நண்பர்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத போது வருத்தமடைகிறான்.

ஹானின் குடும்பம் கலாச்சாரப்புரட்சியின் காரணமாக இடம் மாறி குய்ஷோ மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள். அது அவர்களின் விருப்பமில்லை. அரசின் உத்தரவு. அந்த நெருக்கடி அவர்களின் உறவில் வெளிப்படுகிறது.
டாங் சின்ஜோங்கின் சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் நெல்லி குட்டீயரின் எடிட்டிங் பிரமிக்க வைக்கிறது.
வாங் ஹான் சட்டையைப் பறிகொடுத்துவிட்டு வீடு திரும்பும் போது நம் பால்யத்தின் நினைவுகள் கொப்பளிக்கத் துவங்கிவிடுகின்றன. இப்படி அழியாத நம் பால்ய நினைவுகளை மீட்டுகிறது என்பதே இந்தப் படத்தை நெருக்கமாக்குகிறது
••
அட்டன்பரோவின் காந்தி
காந்தி படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியபோது படப்பிடிப்பில் என்ன நடந்தது. எவ்வாறு அந்தப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன்.

ஒளி மற்றும் ஒலியின் தரம் மோசமாக இருந்த போதும் காந்தி திரைப்படம் குறித்த அரிய ஆவணப்பதிவு என்பதால் இதனை விரும்பிப் பார்த்தேன்.
காந்தியிடம் என்னைக் கவர்ந்த விஷயம் அவரது அறிவுத்திறன் மற்றும் நம்பிக்கை . அவர் கொண்டிருந்த லட்சியவாதம் முதன்மையானது. தனது அறிவுத்திறனை அவர் வெளிப்படுத்திய விதமும் அதை எளிய மனிதர்களின் விடுதலைக்காகப் பயன்படுத்திய விதமும் தனித்துவமானது என்கிறார் பென் கிங்ஸ்லி.
படத்தில் காந்தி அறிமுகமாகும் காட்சியில் அவர் கையில் ஒரு புத்தகத்தோடு தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். படிப்பு தான் காந்தியை உருவாக்கியது. வழிகாட்டியது. அதன் அடையாளம் போலவே முதற்காட்சி உருவாக்கபட்டிருக்கிறது.

இருபது வயது காந்தியில் துவங்கி 79 வயது வரையான அவரது வாழ்க்கையை எவ்வாறு திரைக்கதையாக்கினார்கள் என்பதைப் பற்றி அட்டன்பரோ சொல்கிறார். ஜாலியன் வாலா பாக் படுகொலை மற்றும் தண்டி யாத்திரை காட்சிகள். முக்கியமானவை நூற்றுக்கணக்கான ஆட்களை ஒன்று திரட்டி படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது வியப்பளிக்கிறது.
காந்தியைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கும் யோசனையை ரிச்சர்ட் அட்டன்பரோவிடம் முன்வைத்தவர் மோதிலால் கோத்தாரி. அவர் ஏன் அட்டன்பரோவைத் தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் காந்தியின் வரலாற்றை படமாக்க வேண்டும் என்று கேப்ரியல் பாஸ்கல் மற்றும் டேவிட் லீன் முயற்சி முன்னதாக செய்தார்கள். ஆனால் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.
காந்தி ஒரு கடவுளில்லை. புனிதரில்லை. நம்மைப் போல ஒரு மனிதர். ஆனால் அசாதாரணமான செயல்களைச் செய்தவர் என்பதைக் காட்டவே அவரைப்பற்றிய திரைப்படம் உருவாக்கப்பட்டது என்கிறார் அட்டன்பரோ.
இதற்காகச் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் நிதிநெருக்கடிகள். மற்றும் திரைக்கதையாக்கம். நடிகர் தேர்வு படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி அட்டன்பரோ In Search of Gandhi என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகத்திலுள்ள சில தகவல்களின் காணொளித் தொகுப்பாக இந்த ஆவணப்படம் உள்ளது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
