எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி- 3
அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்.

உங்கள் சிறுகதைகளில் ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை வடிவம் சார்ந்த பல நுட்பமான உத்திகள் இயல்பாகவே சாத்தியப்பட்டுள்ளன. ஆனால் உள்ளடக்கம் சார்ந்து பார்த்தோமென்றால் மனித மன ஏக்கங்கள், புறச்சூழல் அழுத்தங்கள், அதன் காரணமான அகவுணர்வு மாற்றங்கள் ஆகியவையே அடிநாதமாகின்றன. ஏன்?
இவைதான் என்னை உருவாக்கிய விஷயங்கள். என் ஆளுமைதானே என் எழுத்திலும் வெளிப்படும். இது என் ஒருவன் சம்பந்தபட்ட விஷயமில்லை. எழுத்தாளர்களின் பால்யகாலமும் அவர்கள் உருவான விதமும் அவர்கள் எழுத்தைப் பாதிக்கக் கூடியது. ஆனால் என் சுயவாழ்க்கையின் பாதிப்புகளை மட்டும் நான் எழுதவில்லையே. ‘நூறு கழிப்பறைகள்’ சிறுகதை நான் எழுதியதுதானே. அது சித்தரிக்கும் கழிப்பறையைப் பராமரிக்கும் உலகம் நீங்கள் சொல்வதோடு பொருந்தவில்லையே. தாவரங்களின் உரையாடலில் உள்ள விசித்திர அனுபவம் என் சொந்த வாழ்க்கையில்லையே. ‘தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்’ துவங்கி ‘சிவப்பு மச்சம்’ வரை வெளியான கதைகளில் எதுவும் என் சொந்த வாழ்க்கையை விவரிக்கவில்லையே. பொதுமைப்படுத்தி ஒன்றை மதிப்பீடு செய்வது தவறானது.
‘இடக்கை’ நாவலை வாசித்துப் பாருங்கள். அது அதிகாரத்திற்கு எதிரான குரலை ஒலிக்கிறது. நெடுங்குருதியும் அதிகாரத்திற்கு எதிரானதுதான். ஆனால் இரண்டு நாவல்களுக்குள் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்பதை வாசகரால் உணர முடியும். ‘யாமம்’ காட்டும் சென்னை இருநூறு வருஷங்களுக்கு முந்தைய உலகமில்லையா. அதை எப்படிச் சொந்த அனுபவத்தில் எழுத முடியும். நான் கற்பனையும் நிஜமான அனுபவங்களையும் ஒன்று சேர்ந்து எழுதுகிறவன். அதில் எது கற்பனை எது நிஜம் எனப் பிரிக்க முடியாது. வாசனையும் மலரையும் தனித்துப் பிரிக்க முடியுமா என்ன.
ஜப்பானிய ஆவணப்படம் ஒன்றில் சாமுராய் வாள் தயாரிப்பது பற்றிப் பார்த்தேன். தண்ணீரும் நெருப்பும்தான் வாள் தயாரிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. குளிர்ந்த தண்ணீர்தான் வாளின் கடினத்தை உருவாக்குகிறது என்று அந்தப்படத்தில் குறிப்பிடுகிறார்கள். தண்ணீர் வாளின் கடினத்தன்மையை உருவாக்குகிறது என்பது வியப்பாக இல்லையா. எழுத்தும் அப்படியானது தான்.
நீங்கள் அறிந்த அளவில் மிகுபுனைவு இலக்கிய வடிவத்தின் தன்மைகளாக எதனைச் சொல்வீர்கள்? மிகை கற்பனைகளை வரையறுக்க இயலாது எனினும் ஒன்றை மிகுபுனைவு அல்ல என்று எவ்வித எல்லைகளைக் அல்லது அளவுக்கோல்களைக் கொண்டு நிராகரிக்க முடியும்?
புனைவில் எது அளவு, எது மிக அதிகம் என்று யார் வரையறுக்க முடியும். புனைவே மாயமானதுதானே. கருப்பசாமி என்று கதாபாத்திரத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாகக் கே என்று வைத்துவிட்டால் கதாபாத்திரம் மாறிவிடுகிறது. காபி குடித்து முடித்துக் கோப்பையைக் கீழே வைத்தவுடன் அதே அளவு காபி கோப்பையில் இருந்தது என்று எழுதினால் அது மிகை என்கிறோம். ஆலீஸின் அற்புத உலகில் ஆலீஸ் சொல்கிறாள், காலியான கோப்பையில் இருந்து வெறுமையைக் குடிப்பதாக, வெறுமையில் மேலும் வெறுமையை எப்படி ஊற்றி நிரப்புவது என்று கேட்கிறாள்.
ஒரு கவிதையில் பாதி நிசப்தம் என்ற சொல்லைப் படித்தேன். பாதி நிசப்தம் என்பதை எப்படி வரையறை செய்வீர்கள். இது போலவே தேவதச்சன் தன் கவிதை ஒன்றில் கண்ணீர்த் துளியில் குடிக்கும் ராட்சசன் என்று ஒருவரை பற்றி எழுதுகிறார். அது நிஜமா, மிகை புனைவா. அவரது கவிதையிலே மத் தியானம் என மத்தியானத்தை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிறார். இந்த உடைவின் வழியே ஒரு தியானநிலை போல மதியம் உருமாறிவிடுகிறதே. யதார்த்தத்தை எப்படி இன்னதுதான் என்று வரையறை செய்ய முடியாதோ அப்படித்தான் மிகையினையும் வரையறை செய்யமுடியாது.
அறிவியல் புனைவு வாசிப்பதில் ஆர்வமில்லை என்று சொன்னீர்கள்… காரணம்?
ரே பிராட்பரி, ஆர்தர் கிளார்க், ஐசக் ஐசிமோவ் போன்றவர்களின் அறிவியல் புனைகதைகளை வாசித்திருக்கிறேன். கடந்தகாலம்தான் எனக்கு விருப்பமான உலகம்.. பெரும்பான்மை அறிவியல் கதைகள் எதிர்காலத்தைப் பற்றியது. வேறு கிரகங்கள், விண்வெளியில் உருவாகும் மாற்றங்கள், அதி நவீன தொழில்நுட்பச் சாத்தியங்களை விவரிக்கிறது. என் பிரச்சனையே பக்கத்து வீட்டு மனிதன் தனிக் கிரகம் போல வசிக்கிறான் என்பதுதான். குட்டி இளவரசனை எப்படி வகைப்படுத்துவீர்கள். அது அறிவியல் புனைகதையா? குட்டி இளவரசன் ஒரு கிரகத்தில் வசிக்கும் தெருவிளக்கு ஏற்றுகிறவனைப் பற்றிச் சொல்லுகிறான். மறக்கமுடியாத காட்சியது. அதுதான் நான் விரும்பும் எழுத்து.
சொந்த வாழ்க்கையிலே எதிர்காலம் பற்றி எனக்குப் பெரிய கனவுகள் கிடையாது. ஆகவே அறிவியல் புனைகதைகளை அவ்வளவு விரும்பி வாசிப்பதில்லை. ஆனால் ரே பிராட்ரியின் ஃபாரன்ஹீட் 451, குட்டி இளவரசன் போன்றவை எனக்கு விருப்பமான நாவல்கள். அது போன்ற புனைவு நாவலை வாசிக்க நிச்சயம் விரும்புவேன்.
“இந்த ஒரு விஷயத்தில் கோணங்கி போல நம்மால் இருக்க இயலவில்லையே!” என எஸ்.ரா ஆதங்கப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்லுங்களேன்.
கோணங்கி எவரையும் சந்தித்த மறுநிமிஷம் தம்பி, மாமா, மாப்ளே என்று உறவு சொல்லி அழைத்து நெருக்கமாகிவிடுவார். எவர் வீட்டுச் சமையல் அறைக்குள்ளும் எளிதாகச் சென்று வரக்கூடியவர். என்னால் அப்படி ஒருவரோடு பழக முடியாது. உரிமை எடுத்துக்கொள்ள முடியாது. பாதிப் பயணத்தில் எவரையும் கழட்டிவிட்டுத் தன் போக்கில் கோணங்கி போய்விடுவார். அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதைக் கோணங்கியிடம் கற்றிருக்கிறேன். கோணங்கி போல ஏன் நான் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பேன். பயணத்திலும் என் பாதைகள் வேறு. படிப்பதிலும் எனக்கு விருப்பமான எழுத்தாளர் வேறு. நாங்கள் இணைந்து பதினைந்து ஆண்டுகள் சுற்றியிருக்கிறோம். நிறைய எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறோம். அந்த நினைவுகள் மறக்கமுடியாதவை.

‘நெடுங்குருதி’ உங்கள் மண்ணின் கதை. வேம்பலை கிராமத்தின் யதார்த்த வாழ்வின் நுண்சித்திரங்களும் மாய யதார்த்தக் கூறுகளும் முயங்கிய மாறுபட்ட தரிசனத்தை அளிக்கும் இந்த நாவல் மறக்க முடியாதது. குறிப்பாக ஆவியுடன் ஆடுபுலியாட்டம் ஆடும் சிங்கி, திகம்பரத் துறவிகளின் வருகை போன்றவற்றைச் சொல்லலாம். சமணத் துறவிகளின் வருகை இன்றுள்ள கிராமங்களிலெல்லாம் காணக்கிடைக்காத காட்சி. ‘நெடுங்குருதி’ நாவலின் மூலமாக, யதார்த்தத்தில் தொலைந்து போன இத்தகைய கிராமத்தை நினைவிலிருந்து மீண்டும் புதுப்பித்துப் புத்துயிர் அளித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா? முற்றிலுமாகச் சுபாவம் திரிந்து போன இன்றைய கிராமங்கள் தங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?
இன்றைய கிராமமும் என் பால்யத்தில் கண்ட கிராமமும் வேறுவிதமானது. தெருவிளக்குகள் கூட அதிகம் இல்லாத காலமது. இருட்டு என்றால் அவ்வளவு இருட்டு. அந்த இருட்டிற்கு ஒரு வாசனையிருந்தது. வீதியிலே படுத்து உறங்கியிருக்கிறேன். அந்த வயதின் பகலும் இரவும் நீண்டது. இன்று என் சொந்த கிராமத்திற்குப் போகையில் தெரிந்த முகங்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். இரவு பதினோறு மணி வரை கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் இல்லாத ஆளேயில்லை. ஆடுமேய்க்கும் பையன் கூடச் செல்போனில் வீடியோ கேம் ஆடியபடியே ஆடுகளை மேய்க்கிறான். விவசாய வேலைகள் பெருமளவு கைவிடப்பட்டுவிட்டன. உழவுமாடுகளைக் காணமுடியவில்லை. கலப்பைகள் கண்ணை விட்டு மறைந்துவிட்டன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஏன் கிராமங்கள் இத்தனை அவசரமாகத் தன் தனித்துவத்தை இழந்துவிட்டன. கிராமத்தின் அன்றைய முக்கியப் பிரச்சனை சாதி. அது ஒரு காலத்தில் அடங்கியிருந்த்து. இன்று மீண்டும் தலைதூக்கிவிட்டது.
எஙகள் ஊர் முழுவதும் வேப்பமரங்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு மரம் பூக்காது. காய்க்காது. காரணம் அதற்கு ஒரு கதையிருந்தது. அது மாயமான கதை. அந்த மரத்தை நட்டுவைத்த பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். அதனால் மரம் காய்ப்பதில்லை என்றார்கள். இந்த மாயமும் நிஜமும்தான் நெடுங்குருதியில் வெளிப்படுகிறது.
உங்கள் படைப்புகளின் உள்ளடக்கம் தாண்டி வாசகர்களைப் பெருமளவு ஈர்ப்பது உங்கள் படைப்புகளுக்கு நீங்கள் இடும் தலைப்புகள். கட்டுரை, கதை, நாவல் எதுவாக இருந்தாலும் அவற்றின் கவித்துவமான தலைப்புகள் ஈர்க்கின்றன. துணையெழுத்து, நெடுங்குருதி, உறுபசி, யாமம் போன்ற தலைப்புகள் உடனடியாக நினைவில் எழுகின்றன. வசீகரமான தலைப்புகளைப் பிரக்ஞைபூர்வமாகத் தேடிச் சூட்டுகிறீர்களா அல்லது இயல்பாகவே அவை அமைந்துவிடுகின்றனவா?
ஒரு சிறுகதைக்குத் தலைப்பு வைப்பதற்காக மாதக்கணக்கில் காத்துக் கிடந்திருக்கிறேன். நாவலோ, கதையோ கட்டுரையோ எதுவாக இருந்தாலும் தலைப்பு மிக முக்கியமானது. கவித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அபூர்வமாகச் சில தலைப்புகள் உடனே தோன்றியிருக்கின்றன. நாவல்களைப் பொறுத்தவரை எழுதி முடிக்கும் வரை அதற்குத் தலைப்பு வைக்கமாட்டேன். அச்சிற்குப் போகும் முன்புதான் அதற்குத் தலைப்பு வைப்பேன்.
உண்மை. பாடப்புத்தகங்களில் நாம் கற்ற வரலாறு வேறுவிதமானது. நான் பண்பாட்டு வரலாற்றில் அதிகக் கவனம் செலுத்துகிறவன். அங்கே வரலாறு பண்பாட்டு நினைவுகளாக உருமாறியிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகள் இன்றும் வேறுவடிவில் நடைபெறுகின்றன. நான் வரலாற்றை ஒரு நீருற்று போல உணருகிறேன். தனக்குள்ளே பொங்கி வழிவதும் உயர்ந்து எழுதுவதாக இருக்கிறது.
‘சென்னையும் நானும்’ காணொளித் தொடர் சிறப்பாக அமைந்திருக்கிறது. உங்கள் துணையெழுத்துக் கட்டுரையில் சென்னையைப் பற்றி எழுதும்போது, “ஒரு கல்வெட்டைப் போன்றது ரயில் நிலையப் படிக்கட்டுகள். அதில் பதிந்துள்ள பாத வரிகளைப் படிப்பதற்கு இன்றும் வழியில்லை … நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போலச் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன் முன் பணயமாக வைத்து ஆடத் துவங்குகிறார்கள். சுழலும் வேகத்தில் கைப்பொருட்கள் யாவும் காணாமல் போய்விடுகின்றன,” என்ற வரிகள் இடம்பெறுகின்றன. இன்றைய சென்னை எப்படியிருக்கிறது? இத்தனை வருடச் சென்னை வாழ்வில் மேலே இடம்பெற்ற துணையெழுத்து கட்டுரை வரிகள் அப்படியேதான் உள்ளனவா?
சென்னை எனக்குப் பிடித்தமான நகரம். இந்த நகரம்தான் என்னை எழுத்தாளனாக்கியது. என் அடையாளத்தை உருவாக்கியது. சென்னையில் அறையில்லாமல் பத்து ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்திருக்கிறேன். சென்னையின் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி அலைந்திருக்கிறேன். இந்த நகரை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் சென்னைவாசி என்று பெருமையாகச் சொல்வேன். அந்த நேசத்தின் அடையாளம் தான் ‘சென்னையும் நானும்’ காணொளித் தொடர்.
சென்னை நகரில் கனவுகளுடன் வசிப்பவர்கள் அதிகம். அந்தக் கனவுகளை நிறைவேற்றும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். தோற்றுப்போனாலும் இந்த நகரை நீங்கிப் போக மாட்டார்கள். புதிதாக யார் சென்னைக்கு வந்தாலும் நகரம் அவர்களைத் துரத்தவே செய்யும். ஆனால் விடாப்பிடியாக, உறுதியாக இந்த நகரின் மீது நம்பிக்கை கொண்டு இருந்துவிட்டால் அவருக்கான இடத்தை நகரம் உருவாக்கித் தரவே செய்யும். எத்தனையோ நல்ல நண்பர்களை இந்த நகரம் தந்திருக்கிறது. ஒரு தோழனைப் போலவே சென்னையைக் கருதுகிறேன்.
முக்கியமான உலக இலக்கியப் படைப்புகள் பெருமளவு தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், இன்றைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் தங்களுக்கு நிறைவளிக்கின்றனவா? இன்னும் தமிழில் மொழிபெயர்ப்புத் தேவைப்படும் உலக இலக்கியப் படைப்புகள் ஏதேனும் இருக்கிறதா?
மொழிபெயர்ப்புகள் நிறைய வெளியாவது ஆரோக்கியமானதே. ஆனால் வெறும் வணிகக் காரணங்களுக்காக மொழிபெயர்ப்புகள் இயந்திர ரீதியில் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மொழிபெயர்ப்பு நாவலைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அதில் மூல எழுத்தாளரின் பெயர் .இல்லை. போராடிக் கண்டுபிடித்து ஆங்கில மூலத்தை வாசித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. நாவலின் கடைசிப் பத்துப் பக்கங்கள் மொழிபெயர்க்கப்படவேயில்லை. அந்த மொழிபெயர்ப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்குக் கிடைத்த ஜெராக்ஸ் பிரதியில் அவ்வளவுதான் இருந்தது என்றார். ஒருவரும் அந்தத் தவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இது ஒரு சிறிய உதாரணம்.
இதற்கு மாறாக ஆண்டுக்கணக்கில் செலவிட்டு மொழிபெயர்ப்புச் செய்து மூலத்தோடு ஒப்பிட்டுத் திருத்தி வெளியிடுவதும் நடக்கவே செய்கிறது. க்ரியா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்புகள் அதற்கு ஒரு உதாரணம்.
மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய ஊதியம் தரப்படுவதில்லை. அங்கீகாரமும் கிடையாது. ஆகவே பலரும் அதை இலக்கியச் சேவை என்றே செய்கிறார்கள். இன்னொரு பக்கம் மொழிபெயர்ப்பாளர்கள் மூலத்திற்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று படிக்கவே முடியாதபடி கொடுந்தமிழில் மொழியாக்கம் செய்தும் வெளியிடுகிறார்கள்.
க.நா.சுவின் மொழியாக்கங்கள் வரிக்கு வரி துல்லியமானதில்லை. ஆனால் கதையின் ஆன்மாவை மிக அழகாகக் கொண்டு வந்துவிடுகிறார். ரஷ்யாவிலிருந்து மொழியாக்கம் செய்த பூ.சோமசுந்தரம், கிருஷ்ணையா, நா, தர்மராஜன், முகமது ஷெரிப் போன்றவர்களை மிகவும் பாராட்டுவேன். இது போலவே வெ.ஸ்ரீராம், சிவக்குமார், எத்திராஜ் அகிலன், சா.தேவதாஸ், ஜி.குப்புசாமி, புவியரசு, யுவன் சந்திரசேகர், கணேஷ்ராம், செங்கதிர், சி.மோகன், ராஜகோபால், நம்பி, ரவிக்குமார், கல்பனா, நல்லதம்பி, எம்.கோபாலகிருஷ்ணன், ஜெயஸ்ரீ போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளை விரும்பிப் படிக்கிறேன். இவர்கள் பணி மிகவும் பாராட்டிற்குரியது.

சமகால இலக்கிய உலகில் அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகாத எழுத்தாளர் என உங்களை அழைக்கலாமா?
பெரும்பாலும் மருத்துவர்கள் சிறிய உலகில் வாழுகிறவர்கள். அவர்களுக்கு நோயிலிருந்து ஒருவரைக் குணப்படுத்தி நலமடையச் செய்வதுதான் முக்கியமானது. எழுத்தாளர்களில் நான் அந்த வகையைச் சேர்ந்தவன். எழுத்து மட்டுமே எனது வேலை. அதை மருத்துவம் போலவே நினைக்கிறேன். எழுத்துத் தாண்டிய சர்சைகள், சண்டைகளில் எனக்கு ஒரு போதும் ஈடுபாடு கிடையாது. எழுத்தாளனாக நான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் பொறுப்புணர்வைக் கற்பித்திருக்கிறார்கள். எழுத்தாளனாக என் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென இன்றும் வழிகாட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நாள் என்பது கிடைத்தற்கரிய பரிசு. அதை ஒரு போதும் வீணடிக்ககூடாது என்ற எண்ணம் கொண்டவன். அதை ஏன் சர்ச்சைகள் வீண்விவாதங்களில் வீணடிக்க வேண்டும் என்று நினைப்பேன்.
“பயணம்தான் என்னை எழுத வைத்தது,” என்று சொல்பவர் நீங்கள். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் உங்கள் பயணத் திட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என நினைக்கிறோம். ஊரடங்கு காலத்திற்குப் பின் உங்கள் பயண எல்லைகள் சுருங்கிவிடுமா?
சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு ஒரு பயணம், லண்டனுக்கு ஒரு பயணம் என்று திட்டமிட்டிருந்தேன். 2019இலேயே இதற்காகப் பணிகள் நடைபெறத் துவங்கியிருந்தன. ஏப்ரல் மற்றும் ஆகஸ்டில் செல்வதாக இருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக யாவும் தடைபட்டுவிட்டது. இனி ஓராண்டிற்கு வெளிநாட்டுப் பயணங்கள் சாத்தியப்படாது. வட மாநிலங்களில் இன்னும் தொற்று அதிகமிருப்பதால் அங்கேயும் செல்ல இயலாது. சூழ்நிலை சரியானதும் மீண்டும் பயணிப்பேன்.
புதிய எழுத்தாளர்களின் சவால்கள் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சில கதைகள் திட்டமிடாமலே எழுதுபவனின் கைகளைப் பிடித்து முடிவை நோக்கி அழைத்துச் செல்கின்றன, சில கதைகள் எப்படி முட்டிப் பார்த்தாலும் நகர மறுக்கின்றன. பாதி எழுதிக் கிடப்பில் போடும் கதைகளும் நிறைய இருக்கின்றன. இவை யாவும் எழுத்துச் செயல்பாட்டில் இருக்கும் சவால்கள் என்றால், சில சமயம் எழுதுவதே சவாலாக இருக்கிறது. சோர்வு, பதட்டம், எழுதத்தான் வேண்டுமா என்ற எண்னம், writer’s block போன்றவற்றையெல்லாம் எதிர்கொள்ள உதவும் வகையில் இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் எழுத்தனுபவத்திலிருந்து சில குறிப்புகள் அளிக்க இயலுமா?
நான் எழுத ஆரம்பித்த காலத்தில் ஒரு சிறுகதை பத்திரிக்கையில் வெளியாகக் குறைந்தபட்சம் ஆறுமாதம் அல்லது ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும். கதை வெளியான போதும் ஓர் எதிர்வினையும் இருக்காது. படித்தேன் என்றுகூட எவரும் சொல்லமாட்டார்கள். மூத்த எழுத்தாளர்களிடம் இருந்து பாராட்டுக் கிடைப்பது எளிதானதில்லை. காத்திருப்புதான் எழுத்தாளனின் முன்னுள்ள பெரிய சவால். அதை எதிர்கொண்டுதான் இன்று எனக்கான அடையாளத்தைப் பெற்றிருக்கிறேன்.
ஆனால் இன்று ஓர் இளம் எழுத்தாளன் தன் முதற்கதையை எழுதியவுடன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறான். அடுத்தநாளே படித்துவிட்டீர்களா எனப் பாராட்டினை எதிர்பார்க்கிறான். கதையும் உடனே ஏதாவது ஓர் இதழில், இணையத்தில் வெளியாகிவிடுகிறது. அடுத்த நாள் எனக்கு ஏன் சாகித்ய அகாதமி விருது தர மறுக்கிறார்கள். என் படைப்புகள் குறித்து எதுவும் பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறான். சண்டை போடுகிறான். வேடிக்கையாக இருக்கிறது.
பேஸ்புக்கில் லைக் வாங்குவது போல எளிமையான விஷயமாக இலக்கியத்தை நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஒரு கதை எழுதிய உடனே என் வாசகர்கள் என்று ஒருவன் பேச ஆரம்பித்துவிடும் துணிச்சல் ஆபத்தானது.
மிகச்சிறந்த கதைகளை, கவிதைகளை எழுதிவிட்டு அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ நல்ல படைப்பாளிகள் மௌனமாக இருக்கிறார்கள். ஆனால் இணையத்தின் வருகை எழுத்தாளர் என்ற சொல்லின் மரியாதையை மிகவும் மலினமாக்கிவிட்டது.
இன்று நிறையப் புதியவர்கள் எழுத வருவது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் தான் எழுதியது மட்டுமே சிறப்பானது, தன் முன்னோடிகள் ஒன்றுமில்லை என்று அதிகாரமாக நடந்துகொள்கிறவரை என்ன செய்வது.
சென்ற ஆண்டு யாவரும் பதிப்பகம் பத்து இளம்படைப்பாளிகளின் புத்தகத்தை வெளியிட்டது. பத்து பேரையும் படித்து அவர்களைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன். அதில் ஒருவரைக்கூட எனக்கு முன்பரிச்சயம் கிடையாது. ஆனால் அவர்கள் படைப்பின் வழியேதான் அறிந்துகொண்டேன். இப்படி நான் எழுத வந்த காலத்தில் நடக்கவில்லை. என் சிறுகதை ஒன்றுக்கு சுந்தர ராமசாமி வாசகர் கடிதம் ஒன்றை சுபமங்களாவிற்கு அனுப்பி வைத்தார். அந்த நாளில் அது பெரிய அங்கீகாரம். இன்று அப்படியில்லை. நல்ல எழுத்து தேடிப் படித்து உடனே அங்கீகரிக்கப்படுகிறது. தமிழில் இன்று விருது பெறாத எழுத்தாளரைக் காண்பதுதான் அபூர்வம். அவ்வளவு விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைப் படிக்க வேண்டும். ஓவியம், இசை, நுண்கலைகள் எனப் பரந்த ஆர்வத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எழுத்தைத் தீவிரமாக எடிட் செய்து மேம்படுத்த வேண்டும். கதையில் வரும் தகவல்களைத் துல்லியமாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இசைக் கலைஞர்கள் எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் தினமும் சாதகம் செய்வது வழக்கம். அது எழுத்தாளர்களுக்கும் தேவையானதுதான்.
அடுத்தவரின் பாராட்டிற்காக மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள். அது போலவே எழுத ஆரம்பித்தவர்கள் எதற்காக எழுதுகிறேன், எதை எழுத விரும்புகிறேன் என்பதைத் தானே தேடி கண்டறிய வேண்டும். விரும்புவதை எல்லாம் எழுத்தில் கொண்டுவருவது எளிதில்லை.
தற்கொலை, விலைமாதர்கள், குற்றம் இந்த மூன்றைப் பற்றியே இளம் எழுத்தாளன் கதை எழுத ஆசைப்படுகிறான். இந்த மூன்றையும் எழுதுவது எளிதானதில்லை. ஆனால் இதன் கவர்ச்சி அவனை எழுதத் தூண்டுகிறது என்கிறார் ஆன்டன் செகாவ். இதைச் சொல்லி நூறு வருஷங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இந்த ஆர்வம் மாறிவிடவில்லை.
இன்றைக்கும் நான் புதிய கதை எழுதும் முன்பு கவிஞர் தேவதச்சனிடம் அது குறித்துப் பேசுகிறேன். அவர் எனது கதைகள் கட்டுரைகளை வாசித்துத் தீவிர எதிர்வினை செய்து வருகிறார். இப்படியான ஆசான் உங்களுக்குத் தேவை. மாஸ்டர் இல்லாமல் நீங்கள் உருவாக முடியாது. யார் உங்கள் ஆசான் என்பது உங்களின் தேர்வு. நேரடியாக இப்படி உங்களுக்கு வழிகாட்டும் எழுத்தாளரைப் போல, உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளரையும் உங்கள் வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். நான் ரஷ்ய எழுத்தாளர்களை அப்படி என்னுடைய மானசீக ஆசிரியர்களாக நினைக்கிறேன்.
ஒவ்வோர் ஆட்டத்திலும் டெண்டுல்கர் சதம் அடித்துவிடுவதில்லையே. சில ஆட்டங்களில் அவரும் முதல்பந்தில் அவுட்டாகியிருக்கிறார். அப்படித்தான் எழுத்தும். உங்களிடம் சிறந்த ஒன்றை எதிர்பார்ப்பது வாசகர்களின் விருப்பம். எல்லா நேரமும் அதை உங்களால் நிறைவேற்ற முடியாது என்பதே நிஜம். உங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள்.
வாசகர்கள் புத்திசாலிகள். நிறைய விஷயங்களை நுட்பமாக அறிந்தவர்கள். அவர்கள் உங்களை எளிதாக அங்கீகரித்துவிட மாட்டார்கள். ஆனால் உங்களை அங்கீகரித்துவிட்டால் எளிதாக மறக்கமாட்டார்கள்.
எழுதும் போது பாதியில் நின்றுவிடுவதும், எழுத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதும் தீராத பிரச்சனைகள். இதற்குக் குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. வாசிப்புதான் இதற்கான வழிகாட்டி. சிறந்த கதைகளை, கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருந்தால் புதிய உத்வேகம் கிடைத்துவிடும்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் இந்த உலகத்தின் மீதுள்ள புகார்கள் வடிந்துவிட்டன, விரைவில் இல்லாமலே போய்விடக்கூடும் என்று சொன்னீர்கள். தற்போதைய நிலவரம் என்ன? இந்த மாற்றம்தான் முதிர்ச்சி அல்லது கனிவு என்று சொல்லப்படுகிறதா?
உலகின் மீதான புகார்கள் இருந்தபடியே தானிருக்கும். ஆனால் அதற்காகக் கோபம் கொண்டு மனதை வருத்திக் கொண்டிருக்க வேண்டாம் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். வயது நிறைய விஷயங்களைக் கற்றுத்தருகிறது. நிதானமாகச் செயல்படச் செய்கிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவி செய்கிறது. முழுநேர எழுத்தாளனாக வாழ்வதற்காக நான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் மிக அதிகம். அதைப் பற்றிப் பேசியும் புகார் சொல்லியும் என்ன ஆகப்போகிறது. இது என் ஒருவனின் பிரச்சனையில்லை. நமது பண்பாடு கலையை, எழுத்தை நம்பி மட்டும் ஒருவன் வாழ முடியாது என்ற நிலையில்தானே வைத்திருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கு ஐநூறு ரூபாய் செலவு செய்யும் ஒருவன் புத்தகம் ’பி.டி.எஃப்பாக’ இலவசமாகக் கிடைக்குமா என மின்னஞ்சலில் கேட்கிறான். திருட்டுத்தனமாகக் கள்ளப்பிரதிகளை உருவாக்கிப் பகிர்ந்து தருகிறான். எழுத்தாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம். அதுவும் கதை வெளியாகி ஆறுமாதம் கழித்துக் கிடைக்கும், பலநேரம் அதையும் தரமாட்டார்கள். பின்பு எப்படி முழுநேர எழுத்தாளராக வாழ்வது. நாள்பட நாள்பட மரம் உறுதியாகிக்கொண்டே வரும். எழுத்தாளனும் அப்படித்தான்…
ஒருமுறை உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியபோது புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்த வாசகத்தை எழுதினீர்கள், “நமது கனவுகள் இந்த உலகை விடவும் பிரம்மாண்டமானவை, அதை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும்தான் நமது வேலை.” மிகுந்த உத்வேகத்தை அளித்த வரிகள். உங்களது கனவுகளை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்களா? தற்போதுள்ள கனவுகள் பற்றி?
கனவு காண்பதும் அதைப் பின்தொடர்ந்து செல்வதும்தானே வாழ்க்கை. அப்படி ஒரு கனவுதான் டால்ஸ்டாயின் வாழ்க்கையின் சில நிகழ்வுகளை விவரித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று விரும்பியதும். அதை இந்த ஆண்டு எழுதி முடித்துவிட்டேன். ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற அந்த நாவல் 2022 ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இந்த நாவலை ரஷ்ய மொழியிலும் மொழியாக்கம் செய்ய வேலைகள் நடக்கின்றன. இது போலவே எனது ‘இடக்கை’ நாவலை செர்பிய மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். ‘யாமம்’ ஆங்கிலத்தில் வெளியாகிறது. எனது தேர்ந்தெடுக்கபட்ட சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன. இப்படி நான் நீண்ட காலமாக ஆசைப்பட்ட கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்துள்ளன. ‘எனது இந்தியா’ போலக் காலனிய இந்தியா பற்றி விரிவான ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன். தமயாவும் காத்திருக்கிறாள். அது நீண்டநாள் கனவு.
****
நன்றி
அரூ இணைய இதழ் .அரூ ஆசிரியர் குழு
கணேஷ் பாபு கே.பாலமுருகன்
புகைப்படங்கள்
வசந்தகுமார்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
