நவீன தமிழ் இலக்கியத்தின் புதுக்குரலாக ஒலித்த சிறுபத்திரிக்கை கசடதபற. 1970ல் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வெளிவந்த இந்த இதழின் வடிவமைப்பும், செறிவான படைப்புகளும் தனிச்சிறப்பு கொண்டவை.

க்ரியா ராமகிருஷ்ணன். சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், நா.முத்துசாமி மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து இதனை நடத்தினார்கள். இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் நா. கிருஷ்ணமூர்த்தி.
கசடதபற இதழில் எழுதத் துவங்கிய ஞானக்கூத்தன், நகுலன், பசுவய்யா வைத்தீஸ்வரன், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், கல்யாண்ஜி, கலாப்ரியா, கங்கைகொண்டான் , சுஜாதா , இந்திரா பார்த்தசாரதி, நீல பத்மநாபன், பாலகுமாரன், அம்பை, சார்வாகன் பின்னாளில் புகழ்பெற்ற படைப்பாளியானார்கள்.
வணிக இதழ்களின் வழியே உருவான ரசனையை எதிர்த்து கலகக்குரலாக ஒலித்தது கசடதபற.. கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள். 
கவிஞர் தேவதச்சன் ‘கசடதபற’ வழியாகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்
 கசடதபற, இதழ்களை எழுத்தாளர் விமாலதித்த மாமல்லன் மின்னூலாக மாற்றி அமேஸான் தளத்தில் இலவசமாக அளித்து வருகிறார்.
இது போல முன்னதாகக் கவனம் ,ழ போன்ற சிற்றிதழ்களை அவர் இணையத்தில் பதிவேற்றிப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய இதழ்களை ஆவணப்படுத்திக் காப்பாற்ற இதுவே சிறந்தவழி.

பழைய கசடதபற இதழ்களைத் தேடி எடுத்து ஒவ்வொரு இதழாக வேர்ட் பைலாக மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வேலை எளிதானதில்லை. நேரமும் உழைப்பும் பொறுமையும் அதிகம் தேவை. மாமல்லன் தனக்குப் பிடித்தமான வேலைகளை அயராமல் செய்யக்கூடியவர். எவரிடமும் எந்தக் கைமாறும் எதிர்பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன், தீவிர அக்கறையுடன் பணியாற்றுபவர். அவர் செய்யும் இந்த மின்னூலாக்கப் பணிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய இதழ் கசடதபற. 
இந்தத் தலைமுறை வாசகர்கள். படைப்பாளிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன்..
விருப்பமுள்ள அனைவரும் அமேஸான் தளத்திலிருந்து கசடதபற இதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாரம் ஒரு நாள் மட்டுமே இலவசமாக அளிக்கப்படுகிறது.. தனி இதழ் விலை ரூ49.
