S. Ramakrishnan's Blog, page 121
July 12, 2021
காற்றோடு கைகோர்த்து
The noise of the streets was a kind of language – Virginia Woolf
ஆங்கில எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப் எழுதிய Mrs Dalloway நாவல் லண்டன் நகரில் ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையை விவரிக்கிறது. நடத்தலின் ஆனந்தத்தை விவரிக்கும் இந்த நாவலில் தனக்கு லண்டன் வீதிகளில் நடப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் கிளாரிசா டாலவே

உண்மையில் கிராமப்புற சாலையில் நடப்பதைவிடவும் பரபரப்பான லண்டன் வீதிகளில் நடப்பது சுதந்திரமாக இருக்கிறது என்கிறார் வர்ஜீனியா வூல்ஃப்.
மனம் போன போக்கில் சுதந்திரமாக நடந்து திரியும் போது கண்ட காட்சிகளை மனிதர்களைத் தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் வர்ஜீனியா
மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கெனத் தனியே ஒரு ஈரப்பும் வசீகரமும் இருக்கிறது. அந்த இடங்களுக்குப் போகையில் நாமும் மகிழ்ச்சியின் துளியாகிவிடுகிறோம். வர்ஜீனியா வூல்ஃப் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சந்தையினுள் சென்று அங்குக் கேட்கும் விநோதக் குரல்களை, விதவிதமான வண்ணங்களை, வெளிச்சத்தை ரசிக்கக்கூடியவர்.
“கண்கள் வண்ணத்துப்பூச்சியைப் போல அழகானவற்றை மட்டுமே தேடிக் காணுகிறது. மாலை வெளிச்சத்தில் வீதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன. பேரம் பேசி கடையில் வாங்கும் போது விற்பவரும் வாங்குபவரும் தானே ஜெயித்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் இது ஒரு நாடகம்.

கண்களால் விழுங்க முடிந்த அளவு காட்சிகளை விழுங்கிக் கொள்வதற்காகவே நடக்கிறேன். நடப்பதன் வழியே நிறைய ஆசைப்படுகிறேன். நிறையப் புதிய விஷயங்களைக் காணுகிறேன். நாம் வாங்க விரும்பும் பொருளை யாரோ ஒருவர் வாங்கிப் போகும் போது அவர் மீது நமக்குப் பொறாமை உருவாகிறது. அதையும் நான் ரசிக்கிறேன். எதையும் வாங்காமல் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களைப் பார்வையிடுவது எத்தனை சந்தோஷமானது என்பதை விளக்க முடியாது. உணரத்தான் முடியும்.
வீதியில் காணப்படும் விதவிதமான உணவு வகைகள். கலவையான மணம். சாப்பிடும் ஆசை தானே உருவாகிறது. ஏதாவது பெரிய கடைக்குள் நுழைந்து இல்லாத பொருளைக் கேட்பதில் உள்ள ஆனந்தம் அலாதியானது தானே.
இந்த இன்பங்களுக்காகவே லண்டன் வீதிகளில் சுற்றியலைகிறேன் “என்கிறார் வர்ஜீனியா.
புதிய ஆடைகளை விரும்பி வாங்கக் கூடிய வர்ஜீனியா வூல்ஃப் சில ஆடைகளை வாங்கிய பிறகு வெறுக்கத் தோன்றுவதற்கு என்ன காரணம் என்றே புரியவில்லை என்கிறார். புதிய ஆடைகளை அணிந்து கொள்ளும் அது உடலுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்குத் தீருவதேயில்லை. அதுவும் விருந்துக்குச் செல்லும் போது புதிய ஆடையைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்ற குற்றவுணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது என்கிறார்
வீட்டில் அடைந்துகிடப்பதை விடவும் மீண்டும் மீண்டும் லண்டன் நகரத்திற்குச் செல்லவும் சுற்றித்திரியவும் வர்ஜீனியா வூல்ஃப் அதிக ஆசை கொண்டிருந்தார். பென்சில் வாங்க வேண்டும் என்ற ஒரு அற்ப காரணத்தை உருவாக்கிக் கொண்டு ஒரு முறை அவர் லண்டன் வீதிகளில் நடந்து சென்றதை நினைவு கொண்டிருக்கிறார்.

நினைவுகளும் கடந்து செல்லும் காட்சிகளும் இசைக்கோர்வை போல இணைந்து ஒலிக்கும் இந்த நாவல் லண்டன் வீதிகளை, காற்றோடு கைகோர்த்து நடக்கும் அதன் மனிதர்களை அழகாக விவரிக்கிறது.
கிளாரிசா டாலவே கதாபாத்திரம் வர்ஜீனியா வூல்ஃப்பின் மாற்று வடிவம் போலவே எழுதப்பட்டிருக்கிறது. விருந்திற்கான மலர்களை வாங்கச் செல்லும் கிளாரிசா வழி ஒரு தளமும். செப்டிமஸ் வழியாக மறுதளமும் நினைவு கொள்ளப்படுகிறது.
காலம் தான் நாவலின் மையப்புள்ளி. நினைவுகளின் வழியே தான் கடந்து சென்ற நிகழ்வுகளை மீள் உருவாக்கம் செய்கிறாள். வூல்ஃப் சிறுகதையில் கிளாரிசா டாலவே ஒரு கதாபாத்திரமாக முன்பே எழுதப்பட்டிருக்கிறார். காலத்தினுள் ஊசாலாடும் கிளாரிசாவின் வழியே வூல்ஃப். பெண்ணின் சஞ்சலங்களை, தனித்துவ உணர்வுகளை அழகாகச் சித்தரிக்கிறார். இந்த நாவலையும் வூல்ஃப்பின் எழுத்துமுறையினையும் நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வியந்து கொண்டாடுவதுடன் தன்னைப் பாதித்த எழுத்து அவருடையது என்றும் கூறுகிறார்.
இது 1925 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த நாவல் குறித்து அழகான அறிமுகக் காணொளி.
July 11, 2021
தேடலின் சித்திரம்
துணையெழுத்து / வாசிப்பனுபவம்
பிரேமா

ஏராளமான புத்தகங்களின் வாசிப்பும் அதிக எண்ணிக்கையிலான பயணங்களும் தேடல்களும் கொண்டிருப்பவர் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். தான் காணும் சிறுசிறு நிகழ்வுகளையும் சந்தித்த மனிதர்களையும் கருவாகக் கொண்டு தான் படித்திருந்த புத்தகங்களின் கருத்துக்களை உடன் இணைந்து புதிய புத்தகத்தை ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அளித்திருக்கிறார். நெடுந்தொலைவு தொடர் பயணங்களும் தேடி அலைந்து பெற்ற புத்தகங்களின் அனுபவங்களும் அவரது வாழ்நாளின் எவ்வளவு காலங்களை விலையாகப் பெற்றிருக்குமோ? என்ற கேள்வியில் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு துணைக் கால்களும் நம்மை வியக்க வைக்கிறது. தனது தேடல்களில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் துணை எழுத்தே இத்தனை அனுபவங்களைக் கொண்டு வாழ்க்கையைப் பேசுகிறது எனில், அவரது முதல் எழுத்தும் முக்கிய எழுதும் எத்தனை சிறப்பு மிக்கதாக இருக்கும் என்ற ஆவலைக் கொடுக்கிறது. ஓவியர் மருது அவர்களின் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருக்கும் டிஜிட்டல் ஓவியங்கள் ஆசிரியரின் கசப்பான அனுபவங்களையும் மீறி ரசிக்க வைக்கிறது. புத்தகத்திற்கு கூடுதல் அணியாக சித்திரங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
விகடனில் தொடராக வெளிவந்த இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பில் அமைந்த துணை எழுத்துக்கள், சாதாரணமான நிகழ்வுகளின் ஆழமான கருத்துக்களால் அமைந்த எழுத்தாக்கத்தால் நம் மனதை ஈர்க்கிறது. தன் வீட்டின் கட்டிலின் அடியில் உதிர்ந்து கிடந்த தலையில்லாத பொம்மையை கண்டபிறகு அவரது நினைவில் வந்த நிகழ்ச்சிகளாக, யோவானின் தலையை பரிசாக கேட்டவளின் காதல், தாமஸ்மானின் மாறிய தலைகள், விக்கிரமாதித்யனின் தலை, பரசுராமன் தகப்பனுக்காக தாயின் தலையை துண்டித்தது, என புத்தகத்தில் அவர் அறிந்திருந்த பட்டியல்கள் நீளுகிறது. இப்படி ஒவ்வொரு சிறு சிறு அனுபவங்களும் லேசர் கொண்டு குவித்தது போலச் செய்திகளில் செறிவாக அமைந்திருக்கிறது.
எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் தங்கியிருந்த அறையை அவரது பழைய விலாசத்தில் நூலாசிரியர் தேடிய போது நகரத்தின் பரிணாம வளர்ச்சியில் கிட்டாமல் போன அவரது பழைய அறை, அவர் வாழ்ந்த பொழுது அவர் கொண்டிருந்த கனவுகளையும் அலைக்கழிப்புகளையும் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த அவரது துக்கங்களையும் அப்படியே விழுங்கி விட்டு அவரது புத்தகங்களில் மட்டுமே தற்போது பதிந்திருக்கிறது என்பது வேதனையைக் கொடுப்பதாக இருக்கிறது. புதுமைப்பித்தன் அவர்கள் தங்கங்களை விற்கும் சாலையில் வறுமையில் வாழ்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் முக்கியமான எழுத்தாளர்கள் ஒருவருக்குக்கூட முறையான வாழ்க்கை சரித்திரமே எழுதப் படாமல் இருக்கும் சூழ்நிலையை வருத்தமாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
தொட்டிச் செடிகள் எனும் தலைப்பில்,”நாம் உணவாகக் கொள்ளும் கீரைகள் காய்கறிகள் பழங்கள் தானியங்கள் தூய காற்று யாவும் இயற்கை தந்துகொண்டே இருக்கும் நன்றி செலுத்த முடியாத தானங்கள். நம் உடல் என்பது தாவரங்களின் சாரம்.”என்று பகிர்ந்து, தான் வாழும் நகரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வளரும் தொட்டிச் செடி மாதிரி தானே நாமும் நடக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் நல்ல காற்று இல்லாமல் வாழ்கிறோம் என்பதெல்லாம் எதிர்காலம் பற்றிய பயத்தை நமக்கு கொடுக்கவே செய்கிறது.
சொல்லாத சொல் எனும் தலைப்பில் மௌனத்திற்கு ஒரு இலக்கணமே வகுத்திருக்கிறார். மௌனம் எத்தனை ஆழமானது என்பதை சொல்லின் வலியை உணர்ந்தவர்களே உணர முடியும். சொல்லின் வலியை சொல்லால் வெளிப்படுத்த முடியாது என்பதிலும், பேச்சை கற்றுக் கொள்வதைப் போல மௌனத்தை எளிதில் கற்றுக்கொண்டு விடமுடியாது. பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை போல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வது தான் மௌனம் என்பதிலும் வியக்க வைக்கிறார்.இதைவிட வேறு என்ன மௌனத்தைப் பற்றி சொல்லிவிட முடியும்?
இப்படி ஒரு இலக்கியத்துக்கான அனுபவ புத்தகத்தை நமக்கு அளித்திட அவர் கொண்ட பயணத்தில் வரவேற்பும் உபசாரங்களும் மட்டுமே இருந்து விடவில்லை. அவர் சந்தித்த நிராகரிப்புகளையும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனக் குகையிலும் என்ன இருக்க வேண்டும் என்பதை அவர் அவர்களே முடிவு செய்கிறார்கள். அன்பான ஆதரவான மக்களின் மதிப்பினை உணர்ந்து கொள்ள வெறுப்பினை உமிழும் மக்களும் உலகில் தேவைப்படுகிறார்கள். உலகம் அதனால் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது?
பொய்யைப் பற்றி பேசுகையில், பொய் ஒரு விதை இல்லாத தாவரம் காற்றைப் போல எல்லா இடங்களிலும் பரவி வளரக் கூடியது. என்று அறிமுகப்படுத்திவிட்டு, அப்படி அவர் சொன்ன பொய் எப்படி எல்லாம் பரவி அடுக்கடுக்காக வளர்ந்தது என்பதை சிறிது நகைச்சுவை உணர்வுடன் படித்தால் இப்புத்தகத்தின் இடையே சிறிது இடைவெளி கிட்டியது போல் இருக்கிறது. கிட்டத்தட்ட காந்தியின் சுயசரிதம் இந்நூல். பொய்யைப் பற்றி பேசும் போது கூட உண்மையை மட்டுமே பேசியிருக்கிறார்.
அகத் தனிமை எனும் தலைப்பில் சாதாரணமாக ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துவிட்டு ஓடும் அணிலைப் பின்தொடர்ந்து சென்று, தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு மட்டுமே பறக்கும் அணில் இருக்கிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திராத தகவலாகக் கண்டடைந்து கட்டுரை எழுதியிருக்கிறார். அப்படியே அந்த வனத்தில் வாழும் பளியர்கள் பற்றிய அவர்களது இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் பகிர்ந்திருக்கிறார். காட்டில் இயல்பாக வாழும் இந்த மக்களின் இருப்பிடம் நகர்ப்புற மக்களின் வன வளத்தின் தேடலால் அழிகிறதே என்கிற பதைப்பும் நமக்குள் எழுகிறது.
இப்படி இந்த நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் அவரது பயண அனுபவங்களில் சந்தித்த நிகழ்ச்சிகளையும் மக்களையும் தனது புத்தக அனுபவங்களோடு இணைத்து புதிய வடிவம் கொடுத்து எழுதியிருப்பது ஏதோ ஒரு நசுக்கப்பட்ட நபர்களின் மீதும் சமூகத்தின் மீதும் நமது கவனத்தை அதன் ஒரு வரிகளிலாவது நம்மை திருப்பி கவனிக்க வைக்கிறது.
இந்த நூலுடன் கழிந்த பொழுதுகள் அற்புதமான தருணங்கள். தனது தொடர்ந்த பயணத்தில் செறிவான அனுபவங்களை நூலாக தருவித்த ஆசிரியருக்கு பேரன்பும் நன்றியும்.
••
July 10, 2021
அது அந்தக் காலம்
ஹைதராபாத்தில் வசித்த எஸ்.வி. ராமகிருஷ்ணன் தனது நினைவுகளைச் சுவைபட எழுதக்கூடியவர். சுங்கத்துறை கமிஷனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சொந்த ஊர் தாராபுரம். 2011ல் மறைந்தார்.

நிறைய முறை இவரோடு போனில் பேசியிருக்கிறேன். வரலாறு சார்ந்த நிறைய விஷயங்களை விருப்பமாகப் பேசுவார். அவரது கட்டுரைகள் வெளியாகும் போது அதை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி எனது அபிப்ராயங்களை அவசியம் தெரிந்து கொள்வார்.
இவரது கட்டுரைகள் 1940 களை ஒட்டிய தமிழ் வாழ்க்கையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன. அது அந்தக் காலம் , வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் என இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். இந்த சிறிய கட்டுரை ஒரு காலகட்டத்தில் மொட்டைக்கடுதாசி உருவாக்கிய பிரச்சனைகளை அழகாக விவரிக்கிறது.
இப்படி மொட்டைக்கடுதாசி எழுதும் நபர்கள் ஊருக்கு ஊர் இருந்தார்கள். பள்ளி ஆசிரியர்கள். அரசு அலுவலர்கள், இளம்பெண்கள் என பலரும் இவர்களைக் கண்டு பயந்தார்கள்.
மொட்டைகடுதாசியில் நலம்விரும்பி என்ற பெயர் சில நேரம் இடம்பெற்றிருக்கும். அந்த நலம்விரும்பி எழுதிய மொட்டைக்கடுதாசியை மையமாகக் கொண்டு பாமா விஜயம் படத்தில் நடக்கும் காட்சிகள் சிறப்பானவை.
••

மொட்டைக் கடுதாசி
– எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் இன்ஸ்ட்டியூஷன் பின்னர்ப் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது.
ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பதில் இன்னும் வினோதமாக இருக்கிறது. காலம் என்ற பரிமாணமே காலங்காலமாக இருந்தாற்போல் இல்லையாம். காலமே அவசரக் கோலம் கொண்டு சுருங்கிவிட்டதாம். அதாவது எவருக்கும் நேரம் இல்லையாம். பொழுதைப் போக்க வழியில்லாமல் வம்பு பேசி மகிழ்த நாட்கள் போய் இப்போது யாருக்குமே அவகாசம் இல்லாமற் போய்விட்டதாம். மொட்டைக் கடுதாசிகள் தயாரிப்பதற்கு வேண்டிய ஓய்வோ அவகாசமோ இல்லாமற் போய்விட்டதாம். உலகமே அமெரிக்காவாகி இந்தியா முழுவதும் பம்பாய் ஆகிவிட்டதாம். இந்த நிலையில் மறைந்து வரும் மொட்டைக் கடுதாசியைப் பேணி வளர்ப்பதில் எவருக்கும் அக்கறை இல்லையென்றால் அதில் அதிசயமும் ஏமி லேது தான்.
நூறாண்டு முன் வந்த (அந்தக்காலத்தில் நவீனம் என்று அழைக்கப்பட்ட) தமிழ் நாவல்கள் பலவற்றிலும் – உதாரணம் : பத்மாவதி சரித்திரம் (1898 -1900)** – ஒரு சோப்ளாங்கி வில்லன் ஒரு மொட்டைக்கடிதம் மூலம் கதை வளர வித்திடுவான்.
ஐம்பது அறுபது ஆண்டுகள் முன்னால் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் மனோகர், நம்பியார் (அல்லது கள்ள பார்ட் நடராஜனாகக் கூட இருக்கலாம்) போன்ற வில்லன்கள் ‘டாண்’ என்று காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் காட்டும் முதல் கைவரிசை அநேகமாக மொட்டைக் கடிதம் எழுதுவதாகத்தானிருக்கும் சில சமயங்களில் அதற்கு நேரம் இல்லாமற் போனால் நேராக முகூர்த்ததில் ஆஜராகித் தாலிகட்டும் தருணத்தில் ‘நிறுத்து’ என்று கூச்சலிட்டுக்கொண்டு போய் வாய்வழியாக அபவாதம் ஏதேனும் சொல்லுவதும் உண்டு. ஆனால் மொட்டைக் கடுதாசி மாதிரி வராது, செலவும் குறைவு. விஷம் மாதிரி வேலை செய்யும். வைத்தவர்கள் பெயர் வெளியே தெரியாமலேயே இருக்கவும் முடியும்.
ஆமாம் அரையணா (3 பைசா) கூடப் போதும். மிஞ்சிப் போனால் ஒன்றரையணா (9 பைசா) கவர். இருப்பதையும் இல்லாததையும் எழுதி அடியில் ‘உண்மை விளம்பி’ ‘உன் நலம் நாடுபவன்’ என்று ஏதாவது எழுதினால் வேலை முடிந்து போகும்.
கும்பகோணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூர் வந்து பெண்ணைப் பார்த்திருப்பார்கள். சம்பிரதாயமாகச் சொஜ்ஜி பஜ்ஜி தின்று சம்மதமும் சொல்லியிருப்பார்கள். பெண்ணுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் உள்ளூர்க்கார சோதா ஒருவன் – அவன் பெண்ணுக்கு முறைப் பையனாகவும் இருக்கக்கூடும் – பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் அவளுடைய காதலன் ஒருவன் சேலத்தில் இருப்பதாகவும் அவனுக்குக் கொடுக்க இஷ்டப்படாத பெற்றோர்கள் அவசரமாக விவரம் அறியாத தூரதேசப் பார்ட்டியைத் தேடி திருமணம் நிச்சயத்திருப்பதாகவும் ஒரு போடு போடுவான்.
“தீர விசாரித்தால் உண்மை விளங்கும்” என்று வேறு சேர்த்திருப்பான். சம்பந்திமார்கள் குழம்பிப் போவார்கள். சரி நமக்கெதற்கு வம்பு? இவளை விட்டால் வேறு பெண் இல்லையா என்று பையனின் அம்மா அபிப்பிராயப் படுவாள். கடைசியில் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டு “எங்கள் குலதெய்வத்துக்கு முன் பூக்கட்டி பார்த்தோம் சரியாக வரவில்லை. மன்னிக்கவும்” என்று ஒரு புருடா விடப்படும். பெண்வீட்டார் நிலை குலைந்து போவார்கள். இரண்டு மூன்று முறை இப்படி நிச்சயமாகி நின்று போனால் அதற்கப்புறம் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே கஷ்டம்தான். ஏனென்றால் ஊராரே ‘கசமுச’ வென்று பேசத்தொடங்கி விடுவார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முடமுடியுமா?இந்த நிலையில், இதுவரை எட்டாத பழத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த முறைப்பையனின் மடியிலேயே பழம் விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு.
சுவாரசியமான ஒரு இன்ஸ்ட்டியூஷன் நம்மிடையில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அது உண்மையில் இழப்புதானா என்பது வேறு விஷயம். முன்னாளில் கதாசிரியர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ரெடியாக எப்போதும் கைவசம் இருந்த ஒரு ப்ளாட் கை நழுவிப்போனது என்னவோ உண்மை
***
நன்றி
அது அந்தக்காலம். எஸ்.வி.ராமகிருஷ்ணன்
உயிர்மை வெளியீடு
கதை சொல்வது
எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகச் சுட்டி விகடன் இதழ் சார்பில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். செம்மொழி பூங்காவில் நடைபெற்ற அந்த நிகழ்வில் குழந்தைகளுக்குக் கதை சொன்னேன். அவர்களும் எனக்குப் புதிய கதைகளைச் சொன்னார்கள். அந்தப் புகைப்படங்களைத் தற்செயலாக இன்று மீண்டும் காண நேர்ந்தது.


25 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்காக நிறையப் பள்ளிகளுக்குப் போயிருக்கிறேன். குறிப்பாகக் கிராமப்புற அரசுப்பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொல்லியிருக்கிறேன். மதியம் 3 முதல் 4 வரை ஒருமணி நேரம் இதற்காக நேரம் ஒதுக்கித் தருவார்கள். பிள்ளைகளின் உற்சாகமும் புதிய கதைகளை அவர்கள் சொல்லும் விதமும் மறக்கமுடியாதவை.
பள்ளிதோறும் மாணவர்களைக் கொண்டு கதைசொல்லும் குழுக்களை உருவாக்கலாம். மாதம் ஒரு கதைசொல்லியை அழைத்து கதை சொல்ல வைக்கலாம். பள்ளி மாணவர்கள் சொல்லும் கதைகளைக் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ஏற்றலாம். மாநில அளவில் கதை சொல்லும் போட்டிகள் நிகழ்த்தலாம். இப்படி செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

கடந்து வந்த பாதையில் இது போல மகிழ்ச்சியான விஷயங்களைச் செய்திருக்கிறேன் என்பது மனதிற்கு நிறைவளிக்கிறது.
July 8, 2021
அன்று கண்ட முகங்கள்
தமிழ் நாடகக் கலைமணிகள் என்றொரு நூலைச் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் எழுதியிருக்கிறார். சிறந்த நடிகரான வெங்கட்ராமன் நாடகம் சினிமா இரண்டிலும் நீண்டகால அனுபவம் கொண்டவர். அவர் தனது நினைவுகளைத் தொடராக எழுதியிருக்கிறார். அதை அறந்தை நாராயணன் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.

இந்த நூல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது.

அந்தக் கால நாடக உலகம் மற்றும் திரையுலகம் சார்ந்த ஆளுமைகளையும் அனுபவங்களையும் வெங்கட்ராமன் சுவைபட எழுதியிருக்கிறார்.
இதில் மூன்று கட்டுரைகள் மிக முக்கியமானவை.
நாடகவுலகின் ராணியாகக் கொண்டாடப்பட்ட பாலாமணி அம்மையார் பற்றிய கட்டுரையில் அவர் எவ்வளவு புகழ்பெற்றிருந்தார் என்பதை பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது.

பாலாமணி ஸ்பெஷல் ரயில் பாலாமணி குதிரைவண்டி பாலாமணி பட்டுப்புடவை என்ற அந்தக் காலத்தில் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அவரது நாடகம் ஆரம்பமாகும் இரவு நேரத்தில் திருச்சியிலிருந்தும் மாயவரத்திலிருந்தும் ரயில்கள் கும்பகோணம் வந்து நின்று காலை மூன்று மணிக்குத் திரும்பப் புறப்படும். அதன் பெயரே பாலாமணி ஸ்பெஷல் ரயில்.
நாடகம் நடக்கும் போது ரசிகர்கள் மெய்மறந்து கையிலுள்ள் பணம் மற்றும் நகைகளைக் கழட்டி வீசுவார்கள்.
அவரது வீடு ஜமீன் மாளிகை போலிருக்கும். அங்கே நாற்பது வேலையாட்கள் இருந்தார்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் அன்னதானம் இரவு 9 மணிக்குத் தான் முடியும். நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தான் பாலாமணி போய்வருவார். அதை வேடிக்கை பார்க்க வீதி முழுவதும் மக்கள் திரண்டு நிற்பார்கள். அவரைக் காணாமல் போகமாட்டேன். என நாள் முழுவதும் வீட்டின் முன்பு காத்துகிடப்பவர்களும் உண்டு.
இத்தனை புகழுடன் இருந்த பாலாமணி கடனில் வீடு மற்றும் சொத்துகளை இழந்து மிகுந்த வறுமையில் கஷ்டப்பட்டு மதுரையில் சிறிய குடிசை வீட்டில் வசித்தார் என்பதையும், அவர் இறந்த போது அடக்கச் செய்யக் காசில்லாமல் நிதிவசூல் செய்தார்கள் என்பதையும் படிக்கும் போது வேதனையாகவே இருக்கிறது.
இது போலவே எஸ்.வி. சுப்பையா பற்றிய கட்டுரையில் கப்பலோட்டிய தமிழனில் அவர் பாரதியாக நடித்த அனுபவம். இதற்காக மும்பைக்குச் சென்ற பயணம். மற்றும் அவரது உதவி செய்யும் குணம், முன்கோபம். மூத்த கலைஞர்கள் மீது அவர் கொண்ட மரியாதை. நடிப்பில் அவர் காட்டிய தீவிரம் என அவரது ஆளுமை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

சந்திரபாபுவைப் பற்றிய கட்டுரை கண்ணீரை வரவழைக்கக்கூடியது. வீட்டின் மாடிக்கே கார் போய் நிற்கும்படியாக மிக வசதியான வீடு ஒன்றைக் கட்டுகிறார் சந்திரபாபு. இறுதிவரை அதைக் கட்டி முடிக்க இயலவில்லை. எதிர்பாராத தோல்விகள். அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை., சந்திரபாபுவின் மேற்கத்திய இசை குறித்த ஈடுபாடு. திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள், அவருடன் வெங்கட்ராமன் கழித்த இரவு என விவரித்து வரும் வெங்கட்ராமன் சந்திரபாபு வறுமையில் தன் வீட்டில் யாருமில்லாமல் அநாதை போல இறந்து கிடந்த நாளையும், அவரை நல்லடக்கம் செய்யத் தானும் மேஜர் சுந்தர்ராஜனும் செய்த ஏற்பாடுகள் பற்றியும் அதற்கு சிவாஜி செய்த பணஉதவி குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.
அந்தக் கால நாடக உலகம். நடிகர்களின் வறுமைநிலை. நாடகங்களில் செய்யப்பட்ட புதுமைகள். எம்ஜிஆர் செய்த நற்செயல்கள். என்.எஸ். கிருஷ்ணன் கஷ்டப்படுகிறவர்களுக்குச் செய்த உதவிகள். அவரது திருமணம், தங்கவேலு சினிமாவிற்கு வந்த கதை. கிட்டப்பா, கேபிசுந்தராம்பாளின் காதல். திருமண வாழ்க்கை, முத்துராமன் சினிமாவிற்கு வந்தவிதம் எனப் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை எழுதியிருக்கிறார் வெங்கட்ராமன்.
இவை அந்தக் கால கலையுலகின் அழியாத நினைவுகள். பின் இணைப்பாக உள்ள புகைப்படங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த முகங்களுக்குள் சொல்லப்படாத ஆயிரம் கதைகள் இருக்கின்றன.
அவசியம் வாசிக்க வேண்டிய சிறிய நூல்.
இணைப்பு :
July 7, 2021
விநோத சங்கீதம்
நியூ கினியாவின் மலைக் காடுகளுக்குள் வாழும், சாக்சனி பறவையின் தோற்றமும் குரலும் வசீகரமாகயிருக்கிறது. தனது துணையை ஈர்ப்பதற்காக அது எழுப்பும் விநோதமான குரல் சங்கீதம் போலவே ஒலிக்கிறது.
மரத்தில் சாக்சனி துள்ளிக் குதித்து எடுக்கும் பயிற்சிகளும் குரலை உச்சமாக ஒலிப்பதில் வெளிப்படுத்தும் உற்சாகமும் அலாதியானது. பெண் பறவையை ஈர்க்கும் வரை இதன் குரல் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.
காணொளி இணைப்பு.
July 6, 2021
வாழ்த்துகள்
கவிஞர் சுகுமாரன் ஆசிரியராகப் பணியாற்றிக் காலச்சுவடு 100 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காலச்சுவடு பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது. இந்த இதழின் முகத்தை உருவாக்கியதிலும். அதன் தனித்துமிக்கப் பார்வைகள் மற்றும் படைப்புகளைத் தேர்வு செய்து வெளிக்கொண்டு வந்ததிலும் சுகுமாரனின் பங்கு முக்கியமானது.
சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு அவரது கனவின் வெளிப்பாடாக இருந்தது. அதன் அடுத்த கட்ட நகர்வினை, புதிய சாளரங்களைத் திறந்து வைத்ததில் சுகுமாரன் முக்கியமானவர்.

வார இதழ், மற்றும் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி நீண்ட அனுபவம் கொண்டவர். மிகச்சிறந்த கவிஞர். நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இசை, உலகசினிமா, ஓவியம் என நுண்மையான ரசனை கொண்டவர் என அவரது பன்முகத்தன்மை காலச்சுவடு இதழை உருவாக்குவதில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது
அசோகமித்திரன் ஆசிரியராக இருந்து கொண்டு வந்த கணையாழி இதழ்களை இந்தத் தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். அசோகமித்திரனின் அர்ப்பணிப்பும், படைப்புகளைத் தேர்வு செய்தவிதமும் மிகுந்த பாராட்டுக்குரியது. அதற்கு இணையான பணியைச் சுகுமாரன் செய்திருக்கிறார்.
சமகால அரசியல், மற்றும் பண்பாட்டுப் பிரச்சனை சார்ந்த கட்டுரைகள். சிறந்த சிறுகதைகள். கவிதைகள், மொழியாக்கப் படைப்புகள். இளந்தலைமுறையின் படைப்புகள். மாற்றுக்கல்வி குறித்த கட்டுரைகள், எனப் பல முக்கியப் படைப்புகள் இந்த நூறு இதழ்களில் வெளியாகியுள்ளன. அத்துடன் இதழின் வடிவமைப்பு, மற்றும் அதில் இடம்பெற்ற ஓவியங்கள் சிறப்பானவை.

தனது தனிப்பட்ட நட்பு மற்றும் விருப்பங்களைத் தாண்டி சிறந்த படைப்புகளை மட்டுமே தேர்வு செய்வதில் சுகுமாரன் கறாரானவர். அது போலவே மொழிபெயர்ப்புகளை அவர் மூலத்துடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்வதிலும் அவர் காட்டும் அக்கறை தீவிரமானது.
இலக்கிய இதழின் ஆசிரியருக்குச் சமகாலத்தில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் இலக்கிய முயற்சிகள். படைப்புகள். சிந்தனைகள் குறித்து ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இருக்க வேண்டும். சமூகப்பிரச்சனைகள். பண்பாட்டு மாற்றங்கள். குறித்த ஆழ்ந்த பார்வைகள் இருக்க வேண்டும். அதில் சுகுமாரனுக்கு இணையேயில்லை. தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆழ்ந்து வாசிக்கக் கூடியவர். இந்திய மற்றும் சர்வதேச அளவிலான படைப்பாளர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர். அவரது பரந்த வாசிப்பின். ஈடுபாட்டின் அடையாளங்களைக் காலச்சுவடு இதழ்களில் காணமுடியும்.
எந்நிலையிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அவரது ஆளுமையைக் கண்டுவியக்கிறேன். நிகரற்ற கவியாகவும் சிறந்த பத்திரிக்கையாசிரியராகவும், எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பு மகத்தானது.
சுகுமாரனின் பணி மேலும் சிறக்க மனம் நிறைய வாழ்த்துகிறேன்.
ஒரு அடியீடு மட்டும்
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள எழுத்தாளர் என். பி. முஹம்மதுவின் ஒரு அடியீடு மட்டும் மறக்கமுடியாத சிறுகதை. பாலைவனத்தின் காட்சிகளை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இவரது வேறு கதைகள் எதுவும் தமிழில் வெளியாகியுள்ளதா எனத் தெரியவில்லை.

இந்தக் கதையை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகியும் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. நீதிக்கதைகளின் சாயலில் எழுதப்பட்டிருந்த போதும் கொள்ளைக்கார யூசுஃப் யாத்ரீகனை சந்திக்கும் காட்சியும் நன்மையின் பாதையில் செல்ல முற்படுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அடி தான் இடைவெளி என்பது முக்கியமான குறியீடு. நன்மைக்கும் தீமைக்குமான இந்த இடைவெளி சிறியதாகத் தோன்றினாலும் சிறியதில்லை. இதைக் கடப்பதும் எளிதானதில்லை.
•••
.ஒரு அடியீடு மட்டும்
என். பி. முஹம்மது

கனன்று எரிகின்ற வாழ்க்கையையும் பளிங்குக் குவளையில் செருகிய மஞ்சள் இலைகள் போன்ற தீ நாக்குகளையும் பின் தள்ளிவிட்டு யூசுஃப் நகர வாசலைக் கடந்தான்.
ஆகாயத்தில் முத்துமணிகள் உலரப் போடப்பட்டிருக்கின்றன. தூரத்தில் திட்டுத்திட்டாக இருள் மூடிக்கிடக்கின்ற பாலைவனத்திலிருந்து காற்று விஸிலடித்துக்கொண்டிருந்தது. பாலைவனத்தின் முகத்தில் பாலுண்ணிகள் போல நகர வாயிலுக்கப்புறத்தில் சாகக் கிடக்கும் ஒட்டகங்கள் சுருண்டு கிடந்தன.
யூசுஃப் சற்று நின்றான்.தன்னைப் பாவத்தால் வளர்த்த பட்டணத்தை இன்னுமொருமுறை அவன் நோக்கினான். அவன் பெரு மூச்சு விட்டான்.
பாவத்தில் திளைத்துப் புரளும் நகரம்.வானளவு உயர்த்திய ஸ்தூபிகளைப் போல எழுந்து நிற்கும் மசூதிகளின் கோபுரங்களில் வௌவால்களின் ரீங்காரம் கேட்கலாம்.
இனி விடை பெறட்டும்.
திறந்திருக்கும் நகர வாசல். படுக்கையறை செல்லப் பரபரக்கும் நகரம். அவனுடைய பெருவிரல்கள் நடுங்கின. வேண்டாம்.தான் இப் பட்டணத்தின் மயானத்தைச் சென்றடைய வேண்டியவன். இனியுள்ள நாட்களை இங்கேயே கழிக்கலாம்.
யூசுஃப் அந் நகரத்தை பயத்தால் ஆட்சிசெய்தான். யூசுஃபின் பரந்த மீசையும், அடர்ந்த தாடியும், சிவந்து உருண்ட கண்களும், நீண்ட அங்கியும் காண்கையில், அவனுடைய உறையில் தொங்கிய வாள் அவர்களுடைய மனத்தினுள் புகுந்து பாய்கிறது. தாய்மார் அவனைக் காண்கையில் குழந்தைகளை மார்போடணைக்கின்றனர்; ஆண்கள் பதுங்குகிறார்கள். அந் நகரத்தின் முதுகில் அறைகிற சாட்டையாக விருந்தான் அந்த ஆள்.
யூசுஃப் தலை குனிந்தான்.
தூரத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் மணற்காடுகளில் ஓரிடத்திலும் ஒளியின் மின்னல்கள் பரவுவதில்லை. எவ்வளவு தூரம் அவன் நடக்க வேண்டியிருக்கும்? அவனுக்குத் தெரியாது. பார்க்க வேண்டியவனை அவனுக்குத் தெரியாது. அவன் எங்கே இருப்பான்? தெரியாது. ஒன்று மட்டும் யூசுஃப் அறிவான். பெற்று வளர்ந்து கொழுத்த வாழ்க்கையிலிருந்து அவன் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.
அவன் பின்வாங்குகையில் கடந்த காலத்தின் நேரக் கற்களில் மனம் சென்று முட்டிக்கொண்டிருந்தது.
மசூதியின் மினாரிலிருந்து காற்றில் மிதந்து வந்த பாங் அழைப்பின் ஓசையை யூசுஃப் அப்போது கேட்கிறான்.
அல்லாஹு அக்பர்.
– தெய்வம் மகானாகிறான்.
பிரார்த்தனைக்கான அவ்வழைப்புடன் மனத்துள் எல்லாம் புகுந்தேறி வருகின்றன. எப்படி இது நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது?
விளக்குகள் அணையவும் மனிதர்களின் கண்கள் மூடவும் செய்தபோது பாலைவனத்தின் விரக வேதனையை அனுபவிக்கும் சுழற்காற்று வீசி ஒலிக் கையில் அவனுடைய சிவந்து உருண்ட கண்கள் மின்னவும், உறையில் ஒதுங்கிக் கிடந்த வாள் கையில் எழவும் செய்தது. அடைத்த வாசல் அவனுக்காக மலர்ந்தது.
படுத்துறங்கும் வீட்டுத் தலைவன்; அவனைத் தழுவிக் கிடக்கும் தலைவி. ஜமுக்காளத்தில் கட்டிப் பிடித்துக் கிடக்கும் குழந்தைகள். யூசுஃ பெட்டியைக் குத்தி உடைத்தான். இரும்புப் பெட்டியின் எதிர்ப்பைக் கேட்டுக் கணவன் எழுந்தான்.
“அட கடவுளே…”
“பேசாதே, நாக்கை அறுத்துப்போட்டு விடுவேன்”
பெட்டியில் ஒளித்து வைத்திருந்த பணம் கலகலத்துச் சிரித்தது. மூடி மறைத்த பொன் நாணயங்களின் தடுப்புப் பலகையை நீக்க யூசுஃப் ஆர்வம்கொண்டிருந்தபோது தேம்பித் தேம்பி அழுத கணவன் அவனுடைய கையில் தொங்கினான்.
யூசுஃப்பின் வாள் பளபளத்தது. பளபளத்த வாளின் நுனி சிவக்கையில்…
“அல்லாஹ்!”
கேவிய மனைவி. அலறியழுத அப்பிஞ்சு சிசுக்கள். யூசுஃபிற்கு அவர்களது முகங்களைப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.
வாளை வீசி அவன் வெளியே பாய்ந்தான். எத்தனை யெத்தனை இரவுகள்; எத்தனை யெத்தனை குடும்பங்கள்! கழுத்துகள் இரத்தம் பீறிட்டுத் தெறித்து உடலிலிருந்து துள்ளி விழுந்தன. பயந்து நிற்கும் பெண்களின் ஆடைகளை அவன் கிழித்தெறிந்தான். அது ஓர் ஆவேசமாக இருந்தது. செய்ய நினைத்ததை யூசுஃப் செய்தான். அவன் செய்த போது ஜனங்கள் அவனிடம் பயந்தார்கள்.
யூசுஃப்.
அவன் நகரத் தெருக்களில் நடந்தபோது மற்றவர்கள் விலகிப் போனார்கள். அக் கொள்ளைக்காரன் முன் அரண்மனைகள் நடுங்கின. யூசுஃப் இருட்போர்வை போர்த்தி மணற்காட்டை நோக்கினான். இருள் நீங்குமோ? கதிரவன் கனன்று ஜொலிப்பானோ? யூசுஃபின் மனத்தில் கடந்துபோன நாட்கள் விழித்திருந்தன.
அந்த யாத்ரீகனும் ஒட்டகமும் நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஒட்டகத்தின் கால்கள் பாலைவனத்தில் பதிந்தன. யாத்ரீகன் கூனிக் குறுகி அமர்ந்திருந்தான். சுற்றிலும் தீப்பொறி பறந்து கொண்டிருந்தது. அலைகள்போல மணற்பொடிகள் வழுக்கி வழுக்கி விழ, பாலைவனப் பரப்பில் புதிய பாதைகள், ஓடைகள் உண்டாகிக் கொண்டிருந்தன.
“நில்லுடா!”
யாத்ரீகனின் கையிலிருந்த மூக்கணாங்கயிறு தளர்ந்தது. ஒட்டகம் நின்றது. சீற்றமிகு சூரியன் தகித்தது. உதடு வரண்ட அம் மனிதனின் முகம் தெரியவில்லை. நெற்றியும், மூக்கும், காதுகளும் துணியில் மறைந்திருந்தன. கண்கள்மட்டும் தெரி்ந்தன. கேள்விக்குறி செதுக்கிய கண்கள்.
யூசுஃப் கட்டளையிட்டான்.
“இறங்கு!”
யாத்ரீகன் பணிந்தான். யூசுஃப் வாளை உயர்த்தினான். ஒளி தட்டிப் பளீரிட்ட வாளில் இரத்தக்கறைகள் காணப்படவில்லை.
“எங்கே உன் பண மூட்டை? கொடு”
உலர்ந்த உதடுகளில் புன்னகை விரிந்தது.
“அதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?”
அவன் பண மூட்டையை எடுத்தான். இரண்டு கையாலும் யூசுஃபினிடம் அதைக் கொடுத்தான்.
“அல்லாவின் கருணையால் இது உங்கள் குடும்பத்திற்கு நல்லவிதத்தில் செலவாகட்டும்”
யூசுஃப் அவ் வார்த்தைகளை நன்றாகக் கேட்டான். ஒருபோதும் ஒரு வரும் அவனிடம் அப்படிச் சொன்னதில்லை. பல தடவைகள் அவர்கள் பணப் பையைக் கொடுக்கத் தயங்குவதும் யூசுஃப் அதைத் தட்டிப் பறிப்பதுமே நிகழ்ந்துள்ளன. சிலர் வாய்விட்டு அழுதிருக்கிறார்கள். சிலர் பயந்து விறைத்திருக்கிறார்கள்.
“உன் மூட்டையில் என்ன இருக்கிறது?”
“ஓஹோ, பணப் பையோடு சேர்த்து எனது மூட்டையையும் ஒட்டகத்தையும் உங்களுக்குத் தர நான் மறந்துபோனேன். மன்னித்து விடுங்கள்!”
பிரயாணி ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். யூசுஃப் தாவியேறினான். திருட்டு ஆதாயத்தைப் பார்த்தவாறிருந்தான். விலையேறிய பட்டாடைகள்; ஜாடி நிறையப் பொற்காசுகள்; உலர்ந்த பழங்கள்; கொழுத்துத் தடித்த ஒட்டகம். எல்லாம் அவனுடைய உடமைகளாகி விட்டிருந்தன. யூசுஃப் ஒட்டகத்தின்மேலிருந்து இறங்கினான். எங்கே யாத்ரீகன்? காணவில்லை. பளீரிடும் சூரியன். நிழல் விழாத மணற் காடுகள். அவன் வலது கையை நெற்றியின்மேல் நீளவாட்டில் வைத்துக்கொண்டான். தூரத்தில், பரந்த பாலைவனத்தில், ஒரு வெள்ளைப் பிராணிபோல அம் மனிதன் நடந்து போய்க்கொண்டிருந்தான். யூசுஃபின் மனம் களவு சாமான்களிலிருந்து அம் மனிதனிடம் தாவியது. இதற்கு முன்பு ஒரு தடவைகூட யூசுஃபிற்குத் தன் இரையைக் குறித்து நினைத்துப் பார்க்கவேண்டி வந்ததில்லை. தாவியேறினான் ஒட்டகத்தின்மேல் அவன். தடியை ஆட்டினான். ஒட்டகம் நகர்ந்தது.
“நில்!”
யூசுஃப் அலறினான். யாத்ரீகன் நின்றான். யூசுஃப் அவனைக் கவனமாகப் பார்த்தான்.
கறைபிடித்த செப்புத்தகடு போன்ற அம் முகத்தில் இளநீல நிறத்தில் சிறு கண்கள். கருத்த வட்டத்தாடியைத் தடவியவாறு அவன் யூசுஃபை நோக்கிச் சிரித்தான்.
“என்ன சகோதரா, என்ன வேண்டும்?”
யூசுஃபின் முன்னால் பயமறியாது துளிர்த்த அற்புதம் மனித உருவத்தில் நிற்கிறது.
“என் மேலாடை வேண்டுமோ?”
“வேண்டாம்”
“எனது செருப்புகள் வேண்டுமோ?”
“வேண்டாம்”
“என்னை அடிமையாக்கி விற்க வேண்டுமோ?”
“வேண்டாம்.”
“உங்களுக்கு என்னதான் வேண்டும்?”
“நீ யார்?”
“நான், நான் … உங்களைப் போல ஒருவன்!”
“கொள்ளைக்காரனா?”
யாத்ரீகன் சிரித்தான்.
“ஒருவிதத்தில் . ஆட்களைப் பயமுறுத்தி உங்களைப்போல நான்
சொத்து சம்பாதிக்கவில்லை. அவர்களுக்கு ஆசைமூட்டி, பொருட்களை நல்ல லாபத்தில் விற்று சொத்துச் சேர்த்திருக்கிறேன்.”
“உன் பெயர்?”
“அது தெரிந்து என்ன பயன்? நானொரு யாத்ரீகன். மரணத்தை நோக்கி நடக்கும் மனிதன்”
யாத்ரீகன் மீண்டும் சிரித்தான்.
“உன் ஊர்?”
“குராஸ்தான்”
யூசுஃபின் நா தளர்ந்தது. மனிதர்களிடம் மென்மையாகப் பேச அவன் கற்றதில்லை. முன்னால் நிற்கும் அம் மனிதனிடம் கூற அவனுக்கு எதுவும் இருக்கவில்லை.
யாத்ரீகன் மெதுவாக, சுட்டுப் பழுத்த நிலத்தில் நடந்தபோது காலடிச்சுவட்டின் மணல்தூள்கள் நாற்புறமும் சிதறின.
யூசுஃப் அவனைப் பார்த்தான். சற்று நேரம் பாலைவனத்தில் நின்றான். ஒட்டகத்தின் மேலே ஏறினான். மெல்ல மெல்லப் பட்டணத்தை நோக்கி நகர்ந்தான்.
யூசுஃப் ஏராளமான பொருள்களைக் கவர்ந்திருக்கிறான். அப் பொன் நாணயங்கள் மதுவின்மேலே நுரைத்துப் பொங்கும் குமிழிகளோடு சேர்ந்து காணாமற்போயின. பொன் நாணயங்கள், சூதாட்டத்தில் பகடைகள் திரும்பியபோது கைமாறிப்போயின. மீண்டும் யூசுஃப் திருடினான். கொடுங்கொலை செய்தான். நாணயங்கள் நீர்போல ஓடிப் போகவும், பிணங்கள் பாலைவனத்தில் காய்ந்து பொடியாகவும் செய்தன.
நாட்கள் வாடி விழுந்தன. மனத்தின் எட்டாத மூலைகளில் அந்த யாத்ரீகன் வாழ்ந்தான். யூசுஃபின் இதயத்தினுள் ஏறியமர்ந்து அந்த யாத்ரீகன் யூசுஃபை நிம்மதியாக இருக்க விடவில்லை. பயந்து விழுந்த மனிதர்களைவிட அவனிடம் என்ன முக்யத்துவம்? யூசுஃபின் மனத்தில் பயத்தின் சிறு திரிகள் எரியத் தொடங்கின. அம் மங்கிய ஒளியில் அவன் தன் வாழ்க்கையின் இருண்ட பாகங்களைக் கண்டான். யூசுஃப் திடுக்கிட்டான். பருவமெய்திய பெண்மக்களைக் கல்யாணம் செய்து கொடுப்பதற்காகச் சேர்த்துச் சேர்த்து வைத்த குடும்பத்தலைவனை, பின்னிரவுகளில் அவன் கொள்ளை-யடித்தபோது… தலையற்று விழுந்த குடும்பத் தலைவன் முன்னால் இளஞ்சிறுவர்கள் அலறியழுதபோது… அவற்றிற்கு ஓர் புது அர்த்தம் உண்டாயிற்று. யூசுஃ பயந்துபோனான்.
யூசுஃ பேய்க் கனவுகள் கண்டான். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தால் அவன் வியர்த்து வெளுத்துப்போவான். கைகால்கள் தளர ஆரம்பித்தன. ஆட்களைக் காண்கையில் அவனைப் பச்சாத்தாபம் பீடித்தது.
யூசுஃப் தலைகுனிந்து நடந்து போவான். பரிச்சயமான நகரம் அவனைப் பார்த்துத் தலைகுனிந்தபோது யூசுஃ பெருமைகொண்டிருந்தான். புதிய யூசுஃபை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் அறிந்திருந்தது கொள்ளைக்காரன் யூசுஃபைத்தான். மசூதிக்குள் ஏறிச்சென்றதை அவன் நினைவு கூர்ந்தான். மினாரின் உச்சியில் வெள்ளைத் தாடி காற்றில் பறந்தது. வராண்டாவில் பிரித்து வைத்த குரானை ராகம்போட்டு ஓதிக்கொண்டிருந்த முக்ரி அப்துல் ரஹ்மான் யூசுஃபைப் பார்க்கவுல்லை. அவர் கண்ணைப் பாதி மூடிக் கொண்டிருந்தார். யூசுஃப் தொண்டையைக் கனைத்தான்.
முக்ரி யூசுஃபைப் பார்த்தபோது பயந்துபோனார். இக் கொடியவன் மசூதியிலும் புகுந்துவிட்டானா?
அரண்டுபோயிருந்த முக்ரியிடம் அவன் எல்லாவற்றையும் சொன்னான். அவனால் உட்கார முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இப் பட்டணம் அவனை நெருக்கித் தொலைக்கிறது. அவன் குராஸ்தான் வியாபாரியின் கதையைச் சொன்னான்.
யூசுஃபின் நிற மாற்றம் கண்டு முக்ரி அதிசயப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கடவுளைப் பிரார்த்தித்தார்.
“முக்ரி, என்னை நன்மைக்குள் திரும்பியழைத்துச் செல்ல வேண்டும்.”
பளபளத்தன யூசுஃபின் கண்கள். மசூதி வாசலில் மாடப்புறாக் கூட்டம் பறந்து போயிற்று. விரிந்து நிற்கும் ஈச்சை மரங்களின் நிழல்கள் மசூதி முற்றத்தில் பதிந்தன.
“யூசுஃப், உங்களுக்கு அந்தச் சக்தி இருக்கிறதா?”
“எனக்குக் கொலை செய்யும் சக்தி இருந்தது.”
“இப்போதோ?”
யூசுஃபிற்குப் பதில் சொல்ல முடியவில்லை. முக்ரி பதிலை எதிர்பார்க்கவுமில்லை. அவர் கேட்டார்:
“உங்கள் குரு யாரென்று தெரியுமா?”
“எனக்குக் குரு கிடையாது.”
“உண்டு.”
“இல்லை, முக்ரி ஸாஹேப்.”
“உண்டு. உங்களுடைய குரு குராஸ்தான் வியாபாரி? அவரைக்
கண்டு பிடியுங்கள். அப்படியானால் நீங்கள் நன்மையை அடைவீர்கள்.” கடந்துபோன நிகழ்ச்சிச் சுருள்களை, நகர வாசலின் முன்பு நின்று நிமிர்த்திக்கொண்டிருந்தபோது, இருள் மூடிக்கிடக்கும் நிலத்தையே அவன் கண்முன் கண்டான். யூசுஃபிற்கு அப்போது ஒட்டகமில்லை. குராஸ்தானின் வியாபாரி உயிரோடிருக்கிறாரோ, இறந்துவிட்டாரோ என்று தெரியாது. அவ் வியாபாரி இப்போது குராஸ்தானில்தான் இருப்பாரோ? வேறெங்காவது வியாபாரநிமித்தம் போயிருப்பாரோ?
குறிக்கோளற்றதே அப் பிரயாணம் என்பதை யூசுஃப் அறிவான் மீண்டும் அவன் நகரத்தைப் பார்த்து நெடுமூச்செறிந்தான். பாவத்தில் மூழ்கிக் குளிக்கும் நகரம். பாவத்தாலேயே தன்னை வளர்த்த நகரம். தான் இங்கே மனிதனில்லை.
“கொள்ளைக்காரன் யூசுஃப்.”
உணர்ச்சி வேகங்கள் அவன் மனத்தைக் கொக்கியிட்டு இழுத்தன. யூசுஃப் இருளில் காலெடுத்து வைத்தான்.
யூசுஃப் நடந்தான். பாதையோரங்களில் படுத்தான். கிடைத்த பண்டத்தைத் தின்றான். வயிறு காய்ந்த பகல்கள்; களைத்துறங்கிய இரவுகள். பாலைவனத்தில் சூர்யன் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாக இருந்தது. சிவந்து பளபளக்கும் சூர்யன். பரந்து மயங்கிக் கிடக்கும் பாலைவனத்தில் ஒளியும் வெப்பமும் கொடுத்தது. மணற்குன்றுகள் காற்றில் குழம்பித் திரும்பின. மணற்குழிகளிலிருந்து காலைத் தூக்கி யெடுக்க யூசுஃ பெரும்பாடு பட்டான்.
காலைச்சுற்றிலும் மணல் வட்டம் சூழ்கிறது. அவனுடைய வலதுகால் மணற்குழியில் அகப்பட்டது. யூசுஃபின் முகம் வெளிறியது. உடம்பு வியர்த்தது. உடை கிழிந்து பறந்தது. குழியிலாழ்ந்தன சிவந்து இருண்ட கண்கள்.
மணற்காற்றின் விஸில் முழங்கிக் கேட்டது.
இல்லை. மணற்குழியிலிருந்து அவனுக்குக் காலைத் தூக்க முடியவில்லை.
யூசுஃ பூமிக்குள் புதைந்துபோகிறானோ? அவன் முழுச் சக்தியையும் உபயோகித்தான். காலை உதறினான். மணல் துகள்கள் காலைச் சுற்றிலும் அட்டைகள் போலப் பாய்ந்து கடிக்கின்றன.
யூசுஃபின் கண்கள் நனைந்தன. படலம் விழுந்தது. கண்களுக்குப்பின். மங்கிய வெளிச்சத்தில் வெள்ளை ஜந்துபோலக் குராஸ்தானின் வியாபாரி நடந்துபோய்க் கொண்டிருக்கிறானோ?
“நண்பா!” யூசுஃப் கடைசியாக யாசித்தான்.
“நண்பா!” மணற்காற்றிலிருந்து உண்டான விஸிலடிப்பில் அச் சப்தம் எதிரொலியில் அமிழ்ந்தது.
அலைகள்போல மணல் கர்ஜித்துப் பொங்கிச்சிதறிப் பறக்கிறது
யூசுஃபின் நெஞ்சம் துடித்தது. அவன் கத்தினான். “ஐயோ!” அத்துடன் அவன் முன்பக்கம் பாய்ந்தான். மணற்குழியிலிருந்து கதறித்தாவின விரல்கள். அம் முயற்சியில் அவன் நிலை தடுமாறி விழுந்தான்.
விழுந்த இடத்திலிருந்து அவன் கையூன்றி நகரப்பபார்த்தான். கைகள் தளர்ந்து போயின. அவன் ஓரடி ஊர்ந்தான். ஒரு அடியீடு மட்டும். ஒரு அடி ஊர்ந்ததின் நேர்க்கோடு ஒரு நிமிடம் மணலில் தெரிந்தது. காற்றடித்தது; அக் கோடு அழிந்தது. கண்ணுக்கெட்டா தூரம் பரந்து கிடக்கும் மணற்காடு மட்டும்.
யூசுஃபிற்குக் கையை ஊன்ற இயலவில்லை. உலர்ந்த மாமிசம் போல அவனுடைய உடல் பழுக்கக் காய்ந்த மணலில் பதிந்து கிடந்தது. சூர்யனின் குரூரமான ரேகைகள் அவனுடைய காதுகளில் துளைத்து நுழைந்தபோது யூசுஃப் இருமினான். அவன் செருமினான். தன் இதயத்தை யாரோ பறித்தெடுக்கிறார்கள். அவன் வாய்ப் பிளந்தான்.
கதிரவன் கனன்று ஒளி வீசினான். மணற்காற்று சப்தமிட்டது. யாரும் பார்க்கவில்லை. யாருக்கும் தெரியாது. ஆயிரம் பேரைக் கொன்ற யூசுஃ பாலைவனத்தில் ஒரு துளி நீருக்காகத் தலையை அசைத்தான். தலை சுற்றிற்று. அசைய முடியவில்லை. ஏடுபடிந்த கண்கள் உற்று நோக்கின. அவை மூடவில்லை.
வளைந்த ஆகாயம் தூரத்தில் மண்டியிட்டுக் கிடக்கிறது. அடி வானத்திலிருந்து மேகப் பாளங்கள் உதிர்ந்து விழுவதுபோலக் காட்சியளித்தன. பிளந்த ஆகாயத்திலிருந்து வெண் பறவைகளைப் போல மேகத் துண்டுகள் பறந்து வருகின்றன. அவ் வெண்பூக்கள் பாலை வனத்தில் இறங்கின. யூசுஃப் கண்ணை மூடவில்லை. விரிந்த சிறகுகளுடன் தேவதூதர்கள் யூசுஃபின் வலப்பக்கம் வந்து நின்றனர்.
யூசுஃபிற்கு அதையெல்லாம் பார்க்க முடிந்தது.
மீண்டும் ஆகாயத்திலிருந்து மேகக் கீற்றுகள் கீழே பறந்து வருகின்றன. சிறகுகளுடைய தேவதூதர்கள். அவர்கள் தரையில் இறங்கினார்கள். யூசுஃபின் இடப்பக்கம் அவர்கள் நின்றனர். நடுவில் கீழே சரிந்து கிடக்கும் யூசுஃப். இடப்புறமும் வலப்புறமும் தேவதூதர்கள்.
வலப்பக்கமிருந்த தேவதூதர்கள் அவனைத் தூக்கி யெடுக்கக் கைகளை நீட்டியபோது இடப்பக்கத் தேவதூதர்கள் தடுத்தார்கள்.
“இது எங்கள் ஆத்மா”
வலப்பக்கத் தேவதூதர்களின் தலைவன் கேட்டான்:
“நீங்கள் யார்?”
“நாங்கள் சொர்க்கத்தைக் காக்கும் தேவதூதர்கள்.”
“நண்பர்களே, உங்களுக்கு ஆள் மாறிப் போயிற்று. இவனை நரகத்திற்குக் கொண்டு போகவே நாங்கள் வந்தோம்.” இடப்பக்கத் தேவ தூதர்களின் தலைவன் சொன்னான்.
தேவதூதர்கள் அவனுடைய ஆத்மாவிற்காகத் தர்க்கமிட்டுக் கொண்டார்கள். யூசுஃபிற்கு அதைக் கேட்க முடிந்தது. பார்க்க முடிந்தது. ஆனால் அவனுடைய கைகள் உயரவில்லை. உதடுகள் அசையவில்லை. வெப்பமில்லை. தண்மையில்லை. கண் முன்னால் கண்ணாடியில் பார்ப்பது போல எல்லாம் தெரிகிறது.
“ஆயிரம்பேரைக் கொன்ற துஷ்டன் இவன். நரகப் பாவி!”
“அதெல்லாம் சரி, ஆனால் அவன் பச்சாத்தாபமுற்றிருக்கிறான்.”
“குற்றம் செய்துவிட்டு வருந்தி என்ன பயன்?”
“நல்லபடியாக வாழவே இவன் நகரத்திலிருந்து கிளம்பினான்.”
“ஒருவனுடைய செயலே முக்கியம். இவன் தீமையின் அவதாரம்.”
“யூசுஃப் தீமையிலிருந்து விடுதலையடைந்தான்.”
“இல்லை.”
“இவன் நன்மையை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருந்தான்”
“எண்ணத் தூய்மையல்ல முக்கியம்.”
“எண்ணத் தூய்மைதான் முக்கியம்.”
“இவன் நரகப் பாவி!”
“இவன் சொர்க்கத்தைச் சேரவேண்டியவன்!”
“நாம் இரு கூட்டத்தினரும் கடவுள் சேவை செய்பவர்கள். இந்நரகப் பாவிக்காக நமக்குள் சச்சரவிடவேண்டுமா?”
“சண்டை போடக்கூடாது. ஆனால், சொர்க்கத்தைச் சேர வேண்டியவனை நரகத்திற்கு விட்டுக்கொடுத்தால் எங்கள் கடமையில் தவறியவர்களாவோம்.”
“ம்ஹூம்.”
“தொலைவிலுள்ள நகரத்திலிருந்தாக்கும் இந்த ஆள் வருகிறான். பார், இவனுடைய இடுபபில் வாள் இல்லை. கையில் பணப் பையில்லை. இவன் திருந்துவதற்காகப் புறப்பட்டவன்.”
நரகத்தின் தேவதூதர்கள் யூசுஃபைப் பரிசோதித்தார்கள். சொர்க்கத்தின் தேவதூதர்கள் கூறியவையெல்லாம் சரிதான்.
“ஆனால் இவனுடைய பூர்வ சரித்திரம்!”
“பூர்வ சரித்திரம் இருளடைந்திருந்த எத்தனையோ பேர்கள் பிற்காலத்தில் மகாத்மாக்களாக ஆகியிருக்கிறார்கள்.”
“அது சரி, அவர்களுடைய செயல்தான் அவர்கள் மகத்வத்தின் சாட்சி.”
“அதுபோலவே யூசுஃபின் இந்தச் செயலும்.”
“யூசுஃப் செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள்.”
“இப் பிரயாணம். நன்மையை நோக்கிச் சென்ற இப் பிரயாணம்!”
“இவன் எங்கே போகிறான்?”
“குராஸ்தானுக்கு. அங்குள்ள வியாபாரியே இவனுக்கு நன்மையின் வாசலைக் காட்டிக்கொடுத்தான்.”
“அதற்குச் சாட்சி எங்கே?”
“சாட்சி இல்லை.”
பிடிவாதக்காரர்களாகிய நரகத்தின் தேவதூதர்கள் விடுகிற மாதிரியாகக் காணவில்லை. சொர்க்கத்துத் தேவதூதர்கள் மண்டையைக் குடைந்துகொண்டு யோசித்தார்கள்.
சூர்ய வெப்பத்தால் மணல் துகள்கள் சூடடைந்திருந்தன. யூசுஃபின் திறந்த கண்களைத் தேவதூதர்கள் பார்த்தார்கள். கண்ணீர் நிறைந்த கண்கள். சாந்தம் நிறைந்த முகம்!
“உங்கள் கையில் அளவு நாடா இருக்கிறதா?”
“இருக்கிறது.”
“நாம் ஒன்று செய்வோம். நாம் இவ்வாத்மாவிற்காக ரொம்ப நேரமாகச் சச்சரவிட்டுக்கொண்டிருக்கிறோம். நகரத்திலிருந்து யூசுஃப் இறந்து கிடக்கும் இடத்துக்குள்ள தூரத்தை அளக்கலாம். இங்கே யிருந்து குராஸ்தானுக்குள்ள தூரத்தையும் அளப்போம்.”
“எதற்காக?”
“நகரத்திலிருந்து இவ்விடத்திற்குள்ள தூரம் குறைவானால் நீங்கள் கொண்டுபோய்க் கொள்ளுங்கள். இங்கிருந்து குராஸ்தானுக்குள்ள தூரம் குறைவானால் நாங்கள் கொண்டு போகிறோம்.”
நரகத்திலிருந்து வந்த தேவதூதர்கள் கலந்தாலோசித்தார்கள். அவர்கள் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பிரச்னையைத் தீர்க்க வேறு வழிகளை அவர்கள் காணவில்லை. ஆனால், அந்த நிபந்தனையிலிருந்து அதிக லாபமடைய அவர்கள் தயாரானார்கள்.
“ஒரு சந்தேகம்! எந்தப் பக்கமிருந்து என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.”
“யூசுஃபின் தலை கிடக்கும் பக்கத்திலிருந்து.”
“அது சரியில்லை. நாங்கள் சம்மதிக்க முடியாது.”
“பிறகு?”
“யூசுஃபின் காலடி மணலில் தொட்ட பக்கத்திலிருந்து.” சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதர்கள் யோசித்தனர். வேறு வழியில்லை. அவர்கள் நரகத் தேவதூதர்களின் யோசனையை ஏற்றுக் கொண்டார்கள்.
சொர்க்கத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் வந்த தேவதூதர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்தார்கள். ஒரு பகுதி நகரத்திற்குப் போயிற்று. மற்ற பகுதி குராஸ்தானுக்குப் போயிற்று. அவர்கள் அளவு ரிப்பனால் இரண்டு பக்கங்களிலிருந்தும் அளந்தார்கள். இரண்டு பக்கங்களிலிருந்தும் அவர்கள் ஒரே சமயத்தில் வந்தனர், இரு கூட்டத்தினரும் யூசுஃப் இறந்து விழுந்திருந்த இடத்தை அடைந்தனர். ஒரே நேரம்.
இரு நாடாக்களையும் அவர்கள் நுனியைச் சேர்த்துப் பிடித்தனர். நுனியைச் சேர்த்து வைத்த நாடாக்களைச் சுருட்டி வைத்தனர் தேவதூதர்கள். நாடாக்களின் மறு நுனிகள் தெரிந்தன. இரு கூட்டத்தாரும் ஆவலுடன் நோக்கினர். இரு நாடாக்களும் ஒரே அளவா? யூசுஃபின் ஒரு பாதிச் சொர்க்கத்திற்கும் மறு பாதி நரகத்திற்கும் சேர வேண்டுமோ?
கண்ணைத் திறந்து கிடக்கிறான் யூசுஃப்.
அளவு நாடாவைச் சுருட்டி வைக்கிறார்கள் தேவதூதர்கள்.
நரகத்துத் தேவதூதர்களின் முகம் கறுத்தது.
“எவ்வளவு வித்தியாசம்?”
சொர்க்கத்துத் தேவதூதர்களின் தலைவனுடைய கேள்வி. சொர்க்கத்திலிருந்து வந்த தேவதூதருள் ஒருவன் கீழே பார்த்தான். அவனுடைய அழகான உதடுகளில் மனோகரமான சிரிப்புப் பரவியது. அவன் நாடாவையெடுத்து யூசுஃபின் மரத்துப்போன காலின் நீளத்தை அளக்கையில் நரகத்துத் தேவதூதர்கள் ஆகாயத்தை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.
சொர்க்கத் தூதன் அளந்தான்; அவனுடைய குரல் முழங்கியது:
“ஒரே ஒரு அடியீடு மட்டும்!”
நன்றி
சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்
தொகுப்பு : எம். முகுந்தன்
மொழிபெயர்ப்பு: ம. இராஜாராம்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா,
சொற்களின் புதிர்பாதை
– வாசிப்பு அனுபவம்
தயாஜி, மலேசியாதேர்ந்த எழுத்தாளர்கள் தன் படைப்பின் மீது மட்டுமே தம் வாசகர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை விரும்புவதில்லை. தான் ரசித்த தன்னைப் பாதித்த பிற படைப்புகளையும் பிற படைப்பாளிகளையும் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறார்கள். அதுவே தம் வாசகர்களுக்கு அவர்கள் செலுத்தும் நன்றியாகப் பார்க்கின்றேன். வாசகர்களின் வாசிப்பை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அதுவே வழி. இவ்வாறாக எஸ்.ராவின் கட்டுரைகள் வழி பல மொழி படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் அறிந்துக் கொண்ட வாசகர்களின் நானும் ஒருவன்.

இதில் எஸ்.ரா சில ஆச்சர்யம் தரும் விடயங்களையும் அவ்வப்போது செய்துவருகின்றார். அவர் சொல்லி நாம் வாசித்து அறிந்த எழுத்தாளர்கள் போல, நான் வாசித்து ரசித்த படைப்புகள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும் சில கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். இவற்றை வாசிக்கும் பொழுது ஒரு வாசகனாக என் வாசிப்பின் மீதே எனக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வந்துச் சேர்கின்றது.
‘சொற்காளின் புதிர்பாதை’ கட்டுரை தொகுப்பு 2019 தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கிய ஆளுமைகள் மட்டுமின்றி சமகால மலையாள படைப்பாளிகளை பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 26 கட்டுரைகள் அடங்கியத் தொகுப்பு இது.
தொகுப்பில் முதல் கட்டுரையாக ‘சொற்களின் புதிர்பாதை’ எனும் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையில் மலையாளத்தில் முக்கிய சிறுகதையாசிரியராக இருக்கும் அஷ்டமூர்த்தி குறித்து எழுதியுள்ளார். அவரின் கதைகளை சிதம்பரம் ரவிச்சந்திரன் தமிழாக்கம் செய்துள்ளதைக் குறிப்பிட்டு அவர் கண்பார்வை அற்றவர் என்கிறார். அவரால் எப்படி மலையாளத்தில் இருந்து கதைகளை தமிழாக்கம் செய்ய முடிகின்றது என்பதையும் விவரிக்கின்றார். அதோடு அஷ்டமூர்த்தியின் கதைகள் குறித்தும் தன் பார்வையைச் சொல்கின்றார்.
‘ரகசியத்தின் வரைபடம்’ என்கிற கட்டுரை இரண்டாவதாக வருகின்றது. சமீபத்தில் எஸ்.ரா வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாக ஷங்கர் ராமசுப்ரமணியனின் ‘கல் முதலை ஆமைகள்’ என்கிற கவிதைத் தொகுப்பைக் குறிப்பிடுகின்றார். கவிஞரின் கவிதைகளின் மூலம் குறித்தும் அதன் போக்கு குறித்து தொடர்ந்து விவரிக்கின்றார். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை தொகுப்பாக இத்தொகுப்பை தன் அறிமுகத்தின் வழி வாசகர்களுக்கு கோடி காட்டியுள்ளார்.
கி.ராஜநாராயணன் குறித்து எஸ்.ரா பேசினாலும் சரி எழுதினாலும் சரி, கேட்டுக்கொண்டும் வாசித்துக் கொண்டுமே இருக்கலாம் போலிருக்கும். ‘இந்த அவள்’ என்கிற கட்டுரையில் 96 வயதில் கி.ரா எழுதியிருக்கும் குறுநாவல் குறித்து எழுதியுள்ளார். அந்நாவலின் தலைப்புதான் ‘அந்த இவள்’.
‘போகனின் கவிதைகள்’ என்ற கட்டுரை வழி வாசகர்கள் போகனின் கவிதைகளை எப்படி புரிந்துக் கொள்ளலாம் எனச் சொல்கின்றார். இக்காட்டுரை போகனின் கவிதைகள் குறித்து மட்டுமின்றி அவரின் சிறுகதைகளை அறிந்துக் கொள்ள உதவும்.
‘தோப்பில் எனும் காலத்தில் குரல்’ என்ற கட்டுரை வழி தோப்பில் முகமது மீரானின் எழுத்துகளை வாசிக்கவேண்டிய அவசியத்தைச் சொல்கின்றார். இக்கட்டுரை தோப்பில் முகமது மீரானின் நாவல்கள் மீதான என் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.
‘பிரபஞ்சனின் இணையற்ற தோழமை’ எனும் கட்டுரை வழி கண்களைக் கலங்க வைத்துவிடுன்கிறார். எழுத்தில் மட்டும் அன்பையும் அறத்தையும் காட்டிவிட்டு நிஜத்தில் அதற்கு புறம்பாக நடந்துக்கொள்பவர்கள் மத்தியில் பிரபஞ்சன் எத்தனை அன்பாக இருந்திருக்கின்றார் என உணரவைக்கின்றார்.
‘வசந்தத்தில் ஓர் நாள்’ எனும் கட்டுரையில் ஒரு சிறுகதையை புகுத்தியுள்ளார். சினிமா பாடல்கள் வெறும் பாடல்கள் மட்டுமல்ல. அதற்கு மனித மனங்கள் கொடுக்கும் இடம் மிக முக்கியமானது. நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யவும் துன்பத்தை அழுகையாக்கி கரைக்கவும் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கவும் பாடல்கள் பல வகைகளில் பயன்படுகின்றன என அவர் சொல்லும் போது அதனை மறுக்க நம்மால் முடியவில்லை.
‘எழுத்தாளனின் தீபாவளி’ என்னும் கட்டுரையில் தன் சிறுவயதில் கொண்டாடிய தீபாவளிக்கும் இன்று கொண்டாடப்படும் தீபாவளிக்குமான இடைவெளியைச் சொல்கிறார். நாம் எத்தனை இழந்துவிட்டிருக்கின்றோம் என மனம் ஏங்கத்தான் செய்கிறது.
இத்தொகுப்பில் பல கட்டுரைகளில் வாசகர்கள் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள் அவர்கள் கதைகள், புத்தகங்கள் என ஒரு பட்டியலே இடும் அளவிற்கு குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றார். இந்த ஒரு புத்தகம் வாசகர்களுக்கு பல்வேறு வாசிப்பின் திறப்புகளாக சாவியைக் கொடுத்திருக்கின்றது.
**
காற்றில் பறந்த மலர்கள்
ஜப்பானிய இயக்குநர் யசுஜிரா ஓசு இயக்கிய பெரும்பான்மை திரைப்படங்கள் திருமணத்தை மையமாக் கொண்டவை. தகுந்த இடத்தில் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்ய விரும்பும் தந்தை. தனிமையில் வசிக்கும் தந்தைக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் மகள். விதவையான பெண்ணுக்கு நடக்கும் மறுதிருமணம், குழந்தையோடு தனித்து வாழும் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆசை. உறவிற்குள் திருமணம் செய்வதில் ஏற்படும் சிக்கல். காதல் திருமணத்தினை வீடு எப்படிப் புரிந்து கொள்கிறது என்ற சிக்கல். சகோதரிகளுக்குள் திருமணத்தால் ஏற்படும் மாற்றம் எனத் திருமண உறவின் பல்வேறு பரிமாணங்களையும் தனது திரைப்படங்களில் ஓசு வெளிப்படுத்தியிருக்கிறார்.

திருமணத்தைப் பற்றி இவ்வளவு படங்களை இயக்கிய போதும் ஓசு திருமணம் செய்து கொள்ளாதவர். தனது தாயுடன் தான் வசித்துவந்தார்.
வேலையின்மை. பால்ய வயதின் கனவுகள். முதியவர்களின் உலகம் என்ற மூன்று முக்கியக் கதைக்கருக்களை ஓசு அதிகம் கையாண்டிருக்கிறார்.
ஓசுவின் படங்களில் அந்தகாலக் கட்ட ஜப்பானில் நடைபெற்ற மாற்றங்கள். தொழிற்நுட்ப வளர்ச்சி. பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்ட மாற்றம். ஜப்பானின் புகழ்பெற்ற விளையாட்டுகள். உணவுக்கூடங்கள். மதுவிடுதிகள். ரயில் நிலையங்கள். ஸ்பா, அலுவலகங்கள். தொழிற்சாலைகள், வணிகவீதிகள் என அத்தனையும் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானின் இன்றைய தலைமுறை அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஓசுவின் படங்களைப் பார்த்தால் போதும். அதனால் தான் அவரை ஜப்பானின் அடையாளமாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.
Yasujiro Ozu disregarded the established rules of cinema and created a visual language all his own. Precise compositions, contemplative pacing, low camera angles, and elliptical storytelling are just some of the signature techniques the great filmmaker என்று அவரைப்பற்றிக் கூறுகிறார்கள். இது ஒசுவைப் பற்றிய சரியான மதிப்பீடு

நாடகத்தைப் போலவே குறிப்பிட்ட சில நடிகர்களைத் தனது படத்தில் தொடர்ந்து பயன்படுத்தியிருக்கிறார். அவர்கள் ஓசுவின் கதாபாத்திரங்களாகவே மக்களால் அறியப்பட்டார்கள். ஓசுவின் கதையுலகம் எளிமையானது. அன்றாடம் நாம் காணும் மனிதர்களின் வாழ்விலிருந்தே அவர் கதைகளைத் தேர்வு செய்கிறார்.
சமூகப் பொருளாதார மாற்றங்கள் ஜப்பானியக் குடும்ப வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை ஓசு கவனமாக ஆராய்ந்திருக்கிறார். தொலைக்காட்சி வாங்க ஆசைப்படும் குடும்பம் அதைப் பெரிய கனவாகவே நினைக்கிறது. இன்னொரு படத்தில் கோல்ப் விளையாடும் மட்டைகளைப் பெரிய விலை கொடுத்து வாங்குகிறார் ஒருவர். குளிர்சாதனப் பெட்டிகள். ரேடியோ, கேமிரா, மற்றும் இசைத்தட்டுகளை வாங்க மத்திய தர வர்க்கத்தினர் கொண்டிருந்த ஏக்கம் எவ்வளவு பெரியது என்பதை அவரது படத்தில் காணமுடிகிறது.
பகலில் பக்கத்துவீட்டுப் பெண்கள் ஒன்றுகூடிப் பேசுவது. சீட்டுப் போட்டு பணம் சேகரிப்பது, ஒருவர் வீட்டில் செய்த உணவை மற்றவருக்கு தருவது. அடுத்த வீட்டு சண்டையை பற்றி பேசுவது. வசதியானவர்களைக் கண்டு பொறாமை படுவது. அழகான பெண்களை பற்றி ஆண்கள் ரகசியமாக கூடிப் பேசுவது. என அன்றாட உலகின் காட்சிகளே ஓசுவின் முக்கிய காட்சிகளாக மாறுகின்றன. இதனால் திரைக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிடுகிறது
ஹாலிவுட் படங்களில் தான் அதிக மதுவிடுதிக் காட்சிகள் இடம்பெறுகின்றன என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் ஓசுவின் படங்களில் மதுவிடுதிக்காட்சிகள் இல்லாத படமேயில்லை. அதுவும் கதையின் முக்கியமான நிகழ்வுகள் அங்கே தான் நடக்கின்றன. படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் சாக்கே குடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். போதையில் வீடு திரும்புகிறார்கள்.
அது போலவே ரயில் நிலையக்காட்சிகளை இவர் அளவிற்கு விருப்பத்துடன் யாரும் எடுத்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சில படங்களில் துவக்காட்சியிலே ரயில் நிலையம் தான் காட்டப்படுகிறது. ரயிலில் போவது. ரயில் நிலையத்தில் காத்திருப்பது. ரயிலை விட்டு இரவில் இறங்கி நடந்து வருவது. என ரயில் நவீன வாழ்க்கையின் குறியீடு போலவே படத்தில் காட்டப்படுகிறது.
பழைய நண்பர்கள் ஒன்றுகூடுவது, சேர்ந்து குடிப்பது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது கடந்தகாலத்தின் நினைவுகளைச் சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்வது ஓசுவின் படங்களுக்கேயான தனித்துவம். தந்தைக்கும் மகளுக்குமான உறவினை ஓசு மிக அழகாக, அழுத்தமாகப் பல படங்களில் சொல்லியிருக்கிறார். அதிலும் திருமணமாகி மகள் சென்றபிறகு வீட்டில் ஏற்படும் வெறுமையைத் தந்தை உணரும் காட்சிகள் அபாரமானது.
திருமணமாகி நீண்டகாலமாகியும் குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் வாழ்வில் ஏற்படும் வெறுமையை, உலர்ந்த நாட்களை விளக்கும் படம் The Flavor of Green Tea over Rice .

நடுத்தர வயதிலுள்ள மொகிச்சி / டேகோ தம்பதியினர் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். மொகிச்சி ஒரு என்ஜினியரிங் கம்பெனியில் நிர்வாகியாக வேலை பார்க்கிறார்.
டேகோவிற்குப் பகலில் வீட்டில் இருக்கப் போரடிக்கிறது. வாழ்க்கையில் உற்சாகமேயில்லை என்பது போல நடந்து கொள்கிறாள். இந்தச் சலிப்பைப் போக்கி கொள்ள டெய்லர் கடை ஒன்றுக்குப் போகிறாள். அங்கே அவளது தோழி ஆயாவைச் சந்திக்கிறாள். அவள் வெளியூருக்குப் பயணம் செய்து ஒரு ஸ்பாவில் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கலாம் என்று யோசனை சொல்கிறாள். அதன்படி கணவரிடம் டேகோ தனது உடல்நிலை சரியில்லாத சகோதரரின் மகள் செட்சுகோவைபார்த்து வரச் செல்வதாகவும் பொய் சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள்.
எதிர்பாராத விதமாகச் செட்சுகோ அவர்கள் வீட்டிற்கு வந்துவிடவே டேகோவிற்குத் தர்மசங்கடமாகிறது. ஆனாலும் வேறுபொய்யைச் சொல்லி பயணம் புறப்படுகிறாள்
நான்கு பெண்கள் ஒன்று கூடி ஒரு ஸ்பாவில் சந்தோஷமாக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அப்போது அவர்கள் தமது கணவரைக் கேலி செய்கிறார்கள். டேகோவும் தன் கணவர் ஒரு சோம்பேறி. குள்ளமானவர் கறுப்பு என்று கேலி செய்கிறாள். தங்களுக்கெனத் தனியே வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக அவர்கள் ஒன்று கூடி குடிக்கிறார்கள். விரும்பியதைச் சாப்பிடுகிறார்கள். உற்சாகமாக அரட்டை அடிக்கிறார்கள்.

இந்தப் பயணம் டேகோவிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவள் மீண்டும் தன இளமைக்காலத்தினுள் நடந்து கொண்டது போல வாழ வேண்டும் என நினைக்கிறாள். இதனால் தோழிகளுடன் அடிக்கடி வெளியே போகிறாள். கணவரிடம் உண்மையை மறைக்கிறாள். ஒரு நாள் அவர்கள் ஒன்றாகப் பேஸ்பால் விளையாட்டினை காணச் செல்கிறார்கள்.
அங்கே ஆயாவின் கணவர் அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணும் விளையாட்டினை காண வந்துள்ளதைக் காணுகிறார்கள். இதைக் கண்டு ஆயா அதிர்ச்சி அடைகிறாள்.
இதற்கிடையில் செட்சுகோவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அதை முன்னின்று ஏற்பாடு செய்ய மொகிச்சி அழைக்கப்படுகிறார்.
அவளோ வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணங்கள் பழமையானவை. அதைத் தன்னால் ஏற்கமுடியாது என்கிறாள்.
இப்படிச் செய்து வைக்கப்பட்ட திருமணம் எப்படியிருக்கும் என்பதற்கு மொகிச்சி டேகோ தம்பதியை உதாரணமாக நினைக்கிறாள். அவர்கள் ஒன்றாக வாழுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியாக வாழவில்லை என்று செட்சுகோ உணருகிறாள்.
இதனால் அவள் நோபுரு என்பவரைக் காதலிக்க முற்படுகிறாள். அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒன்றாக உணவகத்திற்குப் போகிறார்கள்

விளையாட்டுக் கூடத்தில் தனது பழைய நண்பனைச் சந்தித்து மொகிச்சி கொள்ளும் நட்பு அழகான காட்சி.
வாழ்க்கையின் எளிய விஷயங்களில் தான் இன்பமிருக்கிறது என்கிறார் மோகிச்சி. ஆனால் ஆடம்பரமான விஷயங்கள் தான் இன்பமானது என்கிறாள் டேகோ. இது தான் அவர்களுக்குள் உள்ள வேறுபாடு. அவள் ரயிலில் முதல் வகுப்பில் போக விரும்புகிறாள். மொகிச்சியோ மூன்றாம் வகுப்பில் போவதே விருப்பம் என்கிறார். பழைய பழக்கங்களைக் கைவிட வேண்டும் என்கிறாள் டேகோ. ஆனால் அது தான் தனது அடையாளம் என்கிறார் மொகிச்சி. இதனால் இருவரும் வாக்குவாதம் செய்கிறார்கள். அவள் மிகவும் கோபப்படுகிறாள், மொகிச்சியோடு பேச மறுக்கிறாள். இந்தப் பிணக்கு வலுவடைய ஆரம்பிக்கிறது
ஒரு நாள் கணவரோடு கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியே பயணம் புறப்படுகிறாள். எங்கே சென்றிருக்கிறாள் என யாருக்கும் தெரியாது. அவள் தனது அம்மா வீட்டிற்குப் போயிருக்கக் கூடும் என மொகிச்சி நினைக்கிறார். முடிவில் அவள் ஸ்பா ஒன்றுக்குப் போயிருப்பதைக் கண்டறிகிறார். அது அவரைக் குழப்பமடையச் செய்கிறது.
இந்த நிலையில் மொகிச்சியின் நிறுவனம் அவரை ஒரு வணிகப் பயணத்திற்காகத் திடீரென உருகுவேவுக்கு அனுப்புகிறது, அவர் வெளிநாடு போக இருப்பதாக டேகோவிற்குத் தந்தி கொடுக்கிறார். அவளோ தந்தியைக் கண்டுகொள்ளவேயில்லை.
விமானநிலையத்திற்குக் கிளம்பும் வரை அவள் வரக்கூடும் எனக் காத்திருக்கிறார். அவள் வரவில்லை. ஆகவே குழப்பமான மனதோடு விமானநிலையம் கிளம்புகிறார்

மொகிச்சியின் விமானம் பறந்த பின்னரே டேகோ வீடு திரும்புகிறார். ஆனால் சில மணி நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்படுகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தரையிறங்க வேண்டியதாகியது. காலையில் தான் மறுவிமானம் என்று மொகிச்சி வீடு வந்து சேருகிறார்
மோகிச்சியின் எதிர்பாராத வருகை டேகோவை மகிழ்ச்சிப்படுத்துகிறது. அவர் தனக்குப் பசியாக இருக்கிறது என்கிறார்.
வேலைக்காரியை எழுப்ப மனமின்றி அவர்களே சமையலறைக்குள் போகிறார்கள். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட டேகோவிற்குத் தெரியவில்லை. அவர்கள் கிரீன் டீயுடன் அரிசியை வேகவைத்து உணவு தயாரிக்கிறார்கள். அந்தச் சோற்றை மோகிச்சி ருசித்துச் சாப்பிடுகிறார். அவளும் விரும்பி உண்ணுகிறாள்.
அவளைத் திருமணம் செய்துகொண்டதிலிருந்து இதுவே அவரது மகிழ்ச்சியான நாள் என்று மொக்கிச்சி சந்தோஷமாகச் சொல்கிறார். எளிமையான இன்பங்களின் முக்கியத்துவத்தை அப்போது தான் டேகோ புரிந்துகொள்கிறாள். தான் கோவித்துக் கொண்டு சென்றது தவறு என அவரிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்கிறாள்.அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று அன்போடு பேசுகிறார் மோகிச்சி அவர்களுக்குள் புதிய நெருக்கம் உருவாகிறது
டேகோவின் சலிப்பிற்கு முக்கியக் காரணம் ஒரே மாதிரியான வாழ்க்கையை அனுபவிப்பது. சமையலறைக்குள் அவள் போனதேயில்லை. வீட்டுப்பணிகளை வேலையாட்கள் செய்துவிடுகிறார்கள். அவளது கணவருக்கோ அலுவலக வேலை சரியாக இருக்கிறது. நடுத்தரவயதின் குழப்பங்கள் அவள் தலைக்குள் ஏறுகின்றன. அவள் தன் வாழ்க்கை உண்மையில் சந்தோஷமானது தானா என்று பரிசோதனை செய்து பார்க்கிறாள். முடிவில் வாழ்க்கையில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு எளிய இன்பங்களைப் பகிர்ந்து கொள்வது பெரிய விஷயம் என்று உணருகிறாள்.
குடும்ப உறவை வலிமையாக்குவது உணவே. அதுவும் சிறந்த உணவை பகிர்ந்து கொள்ளும் போது ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியடைகிறார்கள். குடும்பத்தினருக்கு விருப்பமான உணவை தயாரித்து தருவதில் ஒரு பெண் அதிக ஆனந்தம் அடைகிறாள். சமையல் ருசியற்று போகும் போது வாழ்க்கையும் கசக்கத் துவங்கிவிடுகிறது
டேகோ மிக அழகான பெண். ஆனால் அதை மொகிச்சி பெரிதாக கருதவேயில்லை. அவள் அழகினை அவன் பாராட்டுவதேயில்லை. இதே நேரம் ஆயாவின் கணவன் தன் நீண்ட திருமணவாழ்க்கையில் சலிப்புற்று இளம்பெண்ணுடன் பழக ஆரம்பிக்கும் போது அவனது குடும்ப வாழ்க்கை விரிசல் அடைய ஆரம்பிக்கிறது.
சுதந்திரமாகச் சிந்திக்கும் செயல்படும் இளம்பெண் ஒருபுறம். மரபான திருமண வாழ்க்கையினுள் இருந்தபடியே அதன் சலிப்பை உணரும் பெண் மறுபுறம் என வேறுவேறு காலகட்டத்தின் பெண்களை அடையாளப்படுத்துகிறார். இந்தப் படத்திலும் அழகான ரயில் காட்சி இடம்பெறுகிறது. சைக்கிள் பந்தயம் காணுவதற்காகச் செல்லும் காட்சியிருக்கிறது.
செட்சுகோவைப் புரிந்து கொள்ளும் மொகிச்சி தனது மனைவியைப் புரிந்து கொள்ளவில்லை. அதை முடிவில் உணருகிறார்.
ஒசுவின் படங்களில் துவக்ககாட்சியும் இறுதிக்காட்சியும் இரண்டு வாசல்கள் போலவே உருவாக்கப்படுகின்றன. துவக்ககாட்சியின் வழியே கதைக்குள் செல்கிறோம். இறுதிக்காட்சியில் அந்த வாழ்க்கையிலிருந்து நாம் விலகி வந்துவிடுகிறோம். அது தன்னியல்பில் நடந்து கொண்டேயிருக்கிறது. இப்படித் தொடரும் வாழ்க்கையின் கண்ணியே இந்தப்படத்திலும் முடிவுக்காட்சியாக இருக்கிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
