S. Ramakrishnan's Blog, page 123
July 14, 2021
லேண்ட்மார்க் நினைவுகள்
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லேண்ட்மார்க் புத்தகக் கடை செயல்பட்ட நாட்களில் வாரம் மூன்றோ, நான்கோ முறை அங்கே போய்விடுவேன். புத்தகக் கடைகளுக்குப் போவதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது

சில நேரம் மதியம் இரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தால் மாலை வரை அங்கேயே புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். கடை ஊழியர்கள் பலரும் நண்பர்களாகி இருந்த காரணத்தால் எதுவும் கேட்கமாட்டார்கள். பொதுவாகவே அங்கே நாம் எந்தப் புதிய நூலையும் கையிலெடுத்து நின்றபடியே படித்துக் கொண்டிருக்கலாம்.
மதிய நேரங்களில் கூட்டம் அதிகமிருக்காது என்பதால் புதிதாக வந்துள்ள ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்து ஒன்றிரண்டு பக்கங்கள் வாசித்துப் பார்ப்பேன்.
ஆங்கில நூலின் விலை மிக அதிகம்.ஆகவே அதை வாங்கும் பொருளாதாரம் இருக்காது. ஆனாலும் ஆசையாகப் புத்தகங்களைக் கையில் வைத்துப் புரட்டுவேன். புதிய கவிதைத் தொகுப்பாக இருந்தாலும் தினம் இரண்டு மூன்று கவிதை என அங்கேயே வாசித்துவிடுவேன்.
ஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு நண்பர் வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று லேண்ட்மார்க் அழைத்துப் போனார். எனக்குத் தேவையான புத்தகங்களை நானே சம்பாதித்து வாங்கிக் கொள்ள முடியும் போது வாங்கிக் கொள்கிறேன். உங்கள் அன்பின் அடையாளமாக ஒன்றோ இரண்டோ போதும் என்றேன்.
நண்பர் விடவில்லை. குறைந்தது ஐந்து புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். எந்த ஐந்து புத்தகங்களைத் தேர்வு செய்வது என்று தெரியவில்லை. லேண்ட்மார்க்கில் அரிய புத்தகம் ஏதாவது கண்ணில்பட்டால் அதை ஒளித்து வைத்துவிடுவேன். கையில் பணம் வந்தவுடன் வாங்கிக் கொள்ளலாம் என்று. சிலவேளைகளில் அதைக் கண்டுபிடித்து அடுக்கில் வைத்தும் விடுவார்கள். அப்படி நான் ஒளித்து வைத்த இரண்டு புத்தகங்களைத் தேர்வு செய்து கொண்டதுடன் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பு. ஆக்டோவியா பாஸின் கவிதைகளின் தொகுப்பு. மற்றும் மார்க்வெஸின் சிறுகதைத் தொகுப்பு என ஐந்து புத்தகங்களைத் தேர்வு செய்து கொண்டேன். புதிய புத்தகங்களுடன் லேண்ட்மார்க்கை விட்டு வெளியே வந்தவுடன் நண்பருடன் தேநீர் அருந்தச் சென்றேன். புதிய புத்தகங்களை உடனே படிக்க வேண்டும் என்று மனம் பரபரத்துக் கொண்டிருந்த்து. அதைப்புரிந்து கொண்டவர் போல நண்பர் விடைகொடுத்தார் ஐந்தில் எதை முதலில் படிப்பது என்று வேறு குழப்பம். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை அறைக்குத் திரும்பும் போது பேருந்திலே வாசிக்கத் துவங்கினேன்.
இவ்வளவு ஆசையாகத் தேடித்தேடி வாங்கிய புத்தகங்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள அன்றைய சூழலில் முடியவில்லை. அறையில்லாமல் சுற்றி அலைந்தேன் என்பதால் நிறைய நல்ல புத்தகங்களைத் தொலைத்திருக்கிறேன். சிலர் எனது புத்தகங்களைத் திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

லேண்ட்மார்க்கை ஒட்டி சிறிய தேநீர் கடையிருக்கும். அந்தக் கடை எங்களின் சந்திப்பு. நண்பர்கள் யாராவது வரும்வரை அங்கே மாலையில் காத்துக் கொண்டிருப்பேன். விடுமுறை நாட்களில் லேண்ட்மாரக்கில் கூட்டம் மிக அதிகமிருக்கும். காரில் வந்து பை நிறையப் புத்தகங்களை வாங்கிப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். நண்பர்கள் யார் என்னை காண வெளிஊரிலிருந்து வந்தாலும் லேண்ட்மார்க் அழைத்துக் கொண்டு போய்விடுவேன்.
எனது கதையோ, கட்டுரையோ வெளியாகிக் கிடைக்கும் பணத்தோடு அப்படியே லேண்ட்மார்க் போவதே அன்றைய வழக்கம். ஏதாவது புத்தகம் வேண்டும் என்று சொல்லிவைத்திருந்தால் அதை எப்படியாவது வரவழைத்துக் கொடுத்துவிடுவார்கள். அப்படித்தான் மிலன் குந்தேரா நாவல்களை, இதாலோ கால்வினா, கோபே அபேயின் நாவல்களை வாங்கினேன்.
எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி அங்கே வருவார். அவர் என்ன புத்தகங்களை வாங்குகிறார் என்று ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொருமுறையும் பத்து இருபது புத்தகங்களை தேர்வு செய்திருப்பார். நின்று நிதானமாகப் புரட்டிப் பார்த்துத் தேர்வு செய்வதில்லை. எழுத்தாளர் யார் என்பதையும் எதைப்பற்றிப் புத்தகம் என்பதையும் மேலோட்டமாக வாசித்துப் பார்த்துத் தேர்வு செய்வார். அவரது வாசகர்கள் நண்பர்கள் என யாராவது கண்ணில்பட்டால் லேசாகப் புன்னகை செய்வார். யாரும் அவரைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
லேண்ட்மார்க்கில் ஆண்டிற்கு ஒருமுறை தள்ளுபடி விற்பனை நடக்கும். அப்போது மிகக் குறைவான விலையில் நல்ல புத்தகங்களை வாங்க முடியும். அதற்காகவே காத்துக் கிடப்பேன்.
புத்தகம் வாங்காவிட்டாலும் லேண்ட்மார்க் போவது என்பது விருப்பமான விஷயம். ஒரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட் நாவலை அது வெளிவந்த ஒரு மாதகாலத்தில் தற்செயலாக வாங்கினேன். வாசித்தபோது மிக நன்றாக இருந்தது. அதை நண்பர் ஜி.குப்புசாமியைச் சந்திக்கும் போது அவசியம் படிக்கும்படி சிபாரிசு செய்தேன். அப்போது பாமுக் நோபல் பரிசு பெறவில்லை. ஜி.குப்புசாமியே அதைத் தமிழில் மொழியாக்கம் செய்வார் என்று அன்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு. மிக நல்ல நாவல்.
லேண்ட்மார்க்கில் தமிழ் எழுத்தாளர்களை விடவும் மலையாளம் மற்றும் ஆங்கில எழுத்தாளர்களை அதிகம் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவை அங்கே காணலாம். அது போலவே ஒருமுறை அமிதாவ் கோஷை சந்தித்தேன். ஒரு முறை பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவரின் நூல் அறிமுகம் நடந்தது. இப்படி நிறைய எழுத்தாளர்களை, ஓவியர்களை, சினிமா இயக்குநர்களை அங்கே சந்தித்திருக்கிறேன். லேண்ட்மார்க்கில் இசைபிரிவு 97ல் தனியே துவக்கப்பட்டபோது நிறைய அரிய இசைதகடுகளை வாங்கியிருக்கிறேன்.
சென்னையில் ஹிக்கின்பாதம்ஸ். ஒடிஸி, அமெரிக்கன் புக் சென்டர் என நிறையப் புத்தகக் கடைகள் இருந்தாலும் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கோடு ஏற்பட்ட நெருக்கம் அலாதியானது.
லேண்ட்மார்க் புத்தகக் கடை மூடப்பட்டது எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியது. ஒரு புத்தகக் கடையோடு உள்ள உறவு என்பது சொல்லால் விவரிக்கமுடியாதது. இப்போதும் நுங்கம்பாக்கத்தைக் கடந்து போகும்போது கண்கள் லேண்ட்மார்க்கை தேடுகின்றன.
84 Charing Cross Road என்ற புத்தகம் அமெரிக்காவில் வசித்த ஹெலனுக்கும் லண்டனிலுள்ள பழைய புத்தக் கடை நிர்வாகி பிராங்கிற்குமான நட்பினை கடிதங்கள் வழியாக வெளிப்படுத்தும் சிறந்த நூல். உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது
அது போல லேண்ட்மார்க்கோடு எனக்குள்ள நெருக்கத்தை. எனது புத்தகத்தேடலை, லேண்ட்மார்க்கில் வாங்கிப் படித்த புத்தகங்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது.
வாசிப்போடு நெருக்கமுள்ள அனைவருக்கும் லேண்ட்மார்க் நினைவுகள் இருக்கவே செய்யும்.
••
July 13, 2021
மார்க்ஸின் மகள்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸின் இளமைக்காலத்தை முதன்மைப்படுத்தி The Young Karl Marx என்றொரு படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கார்ல் மார்க்ஸின் இளைய மகள் எலினார் வாழ்க்கையை மையப்படுத்தி Miss Marx என்ற இத்தாலியப் படம் வெளியாகியுள்ளது.

2020ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் பெண் இயக்குநர் சுசனா நிச்சியாரெல்லி. படம் எலினார் தனது தந்தை மார்க்ஸின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலின் முன்பாக நின்றபடியே அவரைப்பற்றியும் தனது தாய் ஜென்னி பற்றியும் நினைவுகொள்வதில் துவங்குகிறது.

தனது தந்தையின் காதலை வியந்தோதும் எலினார் தாயும் தந்தையும் திருமணம் செய்து கொள்ள ஏழு ஆண்டுகள் காத்து கிடந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு போதும் ஏமாற்றமோ, அவநம்பிக்கையோ ஏற்படவில்லை. தாயின் மரணம் தனது தந்தையை மிகவும் பாதித்தது. அவரால் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவரது உடல் நலம் கெட்டதற்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம். கடினமான, நெருக்கடியான, சூழலுக்குள் வாழ்ந்தபடியே அவர் தான் விரும்பிய கனவுகளைப் பூர்த்தி செய்தார். படிப்பதற்கும் ஆய்விற்குமாகத் தனது நாட்களைக் கழித்தார். இந்தத் தருணத்தில் அவருக்குத் துணை நின்ற நண்பர்கள் ஏங்கெல்ஸ். ஹெலன் டெமுத் மற்றும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன் என எலினார் உணர்ச்சிப்பூர்வமாக உரையை நிகழ்த்துகிறார்

எலினார் 1855 ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்தார். அவருக்கு இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. மார்க்ஸின் குடும்பமே ஷேக்ஸ்பியர் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. ஆகவே எலினார் நாடகம் நடிப்பதிலும் விருப்பம் கொண்டிருந்தார்.
மூன்று வயதிலே எலினார் மனப்பாடமாக ஷேக்ஸ்பியரின் வரிகளைச் சொல்லக்கூடியவர். தனது மகளுக்கு ஜெர்மன் மற்றும் பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக் கொடுத்தார் மார்க்ஸ். தனது பதினாறு வயதில் எலினார் மார்க்ஸின் உதவியாளராகச் செயல்பட்டார். தந்தையோடு இணைந்து கூட்டங்களுக்குச் சென்றார்.
தனது பதினேழாவது வயதில் தந்தையின் நண்பரும் தன்னைவிடப் பல வருஷங்கள் வயதில் மூத்த தோழருமான ஹிப்போலைட் லிசாகரேயை காதலித்தார். அதை மார்க்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சில ஆண்டுகள் குடும்பத்தை விட்டு வெளியேறி எலினோர் பிரைட்டனில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தார்

1880 ஆம் ஆண்டில் மார்க்ஸ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி தந்த போதும் எலினார் தன் காதல்உறவை மறுபரிசீலனை செய்வதாகக் கூறி அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
பிரெஞ்சிலிருந்து மேடம்பவாரி நாவலை எலினார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவர் இப்சனின் பொம்மை வீடு நாடகத்தை மொழியாக்கம் செய்து மேடையேற்றுகிறார்
தனது தந்தையின் வழியில் தொழிலாளர்கள் நலனுக்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடுகிறார் எலினார். படத்தின் துவக்க காட்சியில் அவெலிங்கோடு அமெரிக்காவிற்குப் பயணம் செய்து அங்குள்ள பல்வேறு தொழிலாளர்களின் அவல நிலையைக் கண்டறிகிறார். அவர்களின் உரிமை. மற்றும் பிரச்சனைகள் குறித்து கட்டுரைகள் எழுதுகிறார்.
இந்த நாட்களில் அவெலிங்கோடு ஏற்பட்ட காதல் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அவர்களின் அமெரிக்கப் பயணத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சியே பணஉதவி செய்கிறது. கட்சி செலவில் ஆடம்பரமாகப் பூக்களை வாங்கிக் குவித்துத் தன்காதல் விளையாட்டினை நிகழ்த்திய அவெலிங் மீது விசாரணை நடக்கிறது. அது எலினாரை குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது.

படம் 1883 இல் தொடங்கி 1898 இல் முடிவடைகிறது, இதன் ஊடாக எலினோரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் தீவிரம் காட்டிய எலினார் அதற்காகப் இருண்ட உலகமாக கருதப்படும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு குழந்தை உழைப்பிற்குத் தடைவிதிக்கும்படியான கோரிக்கைகளை முன்வைக்கிறார். அதனை ஏற்க மறுத்து பெற்றோர்களும் ஆலை நிர்வாகிகளும் அவருடன் சண்டையிடுகிறார்கள்.
எட்வர்ட் அவெலிங் வசீகரமானவர் மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஆதரிக்கக் கூடியவர் ஆனால் ஊதாரி மற்றும் அபின் அடிமை..ஏற்கனவே திருமணமானவர் இவற்றை அறிந்தும் அவர் மீது கொண்ட காதலால் அவருடன் இணைந்து வாழுகிறார். கடைசிவரை எலினார் திருமணம் செய்து கொள்ளவேயில்லை.

ஊதாரித்தனமான வாழ்க்கையால் அவெலிங்கிற்குக் கடன் அதிகமாகிறது. ஏங்கெல்ஸ் உதவி செய்ய முன்வருகிறார். ஆனால் அதை எலினார் ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் அவெலிங்கின் உடல்நிலை மோசமாகிறது. இந்த நெருக்கடிகள் எலினாரை பாதிக்கின்றன. உடனிருந்து பணிவிடை செய்யும் நாளில் அவெலிங்கால் ஏமாற்றப்பட்ட பெண்ணை சந்திக்கிறாள் எலினாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற உண்மையை ஆழ்ந்து உணருகிறாள்.
படத்தின் ஒரு காட்சியில் அவெலிங கவிஞர் ஷெல்லி உயிரோடு இருந்திருந்தால் அவர் இந்நேரம் இடதுசாரி இயக்கங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டிருப்பார் என்கிறார். அது சரியானதே என்றும் எலினாரும் சொல்கிறார். ஷெல்லியே அவர்கள் இருவரையும் இணைக்கும் புள்ளி.
எலினாரின் சொந்தவாழ்க்கை.. அதில் அடைந்த ஏமாற்றம். அவெலிங்கால் ஏமாற்றப்பட்ட பெண்கள். இதையே படம் அதிக அளவில் விவரிக்கிறது. மார்க்ஸின் ஆளுமையோ, அவரிடமிருந்து எலினார் பெற்றுக் கொண்ட விஷயங்களோ அதிகமில்லை. இது போலவே ஏங்கல்ஸ் உடன் எலினாருக்கு இருந்த ஆழ்ந்த நட்பு. ஏங்கெல்ஸ் செய்த உதவிகள். அதிகம் சித்தரிக்கப்படவில்லை. ஆனால் ஏங்கெல்ஸின் கடைசி நாட்கள் படத்தில் இடம்பெறுகின்றன. ஹெலன்டெமூத்தின் மகன் பிரெடரிக் பற்றி அவர் சொல்லும் உண்மை, அதை அறிந்த எலினார் கொள்ளும் பரிதவிப்பு என அக்காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கபட்டிருக்கிறது.

தந்தையின் நிழலில் வாழ்ந்த எலினார் காதலின் நிழலில் வாழும் போது அடைந்த ஏமாற்றத்தையே படம் பெரிதும் விவரிக்கிறது. இந்தத் துயர வாழ்க்கையின் கசப்பினால் எலினார் தனது 43 வயதில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
படம் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்துடன் அன்றைய கால வீதிகளை, தொழிற்சாலைகளை வீடுகளைச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் புத்தகங்களும் காகிதங்களும் இறைந்து கிடக்கும் மார்க்ஸின் படிப்பறை வெகு அழகாக இருக்கிறது. ஆவணக்காட்சிகளின் உதவியோடு கடந்தகால நிகழ்வுகளை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள்..
படத்தின் ஒரு காட்சியில் எட்வர்ட் அவெலிங் சுயநலமானவர். உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரைத் தூக்கி எறிந்துவிடு என்று ஆலிவ் ஆலோசனை சொல்கிறாள். அவள் சொல்வது சரி என உணர்ந்தபோதும் எலினார் எட்வர்டை விட்டுப்பிரியவில்லை.
ஒரு காட்சியில் எட்வர்ட் முன்பாக அவனது பொய்களை எலினார் சுட்டிக்காட்டுகிறார். அவனோ தன் காதல் நிஜம் என்று பொய்யாக நடிக்கிறான். அறிந்தே எலினார் இந்த மாயவலையினுள் சிக்கிக் கொள்கிறாள்.
போராட்ட குணமும் சுயசிந்தனையும் கொண்ட எலினார் போன்றவர்களும் ஏன் இப்படி ஏமாந்து தன் வாழ்க்கையை இழந்தார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.
எலினாரின் தனிமையும் ஏமாற்றம் நிறைந்த காதல் வாழ்க்கையும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. எலினாராக நடித்துள்ள Romola Garai சிறப்பாக நடித்திருக்கிறார்,
எலினாரின் வாழ்க்கை பல்வகையில் மேடம் பவாரியை நினைவுபடுத்துகிறது. மேடம் பவாரியின் முடிவும் இப்படி தானிருக்கும்.
July 12, 2021
டாலியின் கனவுகள்
சர்ரியலிச ஓவியரான டாலியின் கனவு நிலைப்பட்ட ஓவியங்கள் வியப்பானவை. அந்த ஓவியங்களுக்குள் ஒரு பயணம் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த மயக்கும் காணொளி கனவு வெளியினை அற்புதமாகச் சித்தரித்துள்ளது. டாலியின் புகழ்பெற்ற ஓவியங்களை ஒன்றிணைத்து இந்தக் காணொளியை உருவாக்கியிருக்கிறார்கள். டாலியின் சகோதரி அன்னா மரியா அவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு ஆவணப்படம் ஒன்றினை சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் சிறுவயது முதலே டாலி எப்படி விசித்திரமான உலகின் மீது ஈர்ப்பு கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதைச் சகோதரி விரிவாக விளக்குகிறார். டாலியின் தோற்றமும் அவரது ஓவியங்களைப் போலவே ஆச்சரியமூட்டக்கூடியது.

டாலியின் மிகப் பிரபலமான படைப்புகளில் ஒன்றான தி பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் மெமரியில் கடிகாரம் உருகி வழிகிறது. காலத்தை இது போன்ற விசித்திரநிலையில் யாரும் அதன்முன்பாக வரைந்ததில்லை. கொடியில் உலரவைக்கப்பட்ட துணியைப் போல கடிகாரம் தொங்குகிறது. இந்த உருகும் காலத்தின் பின்புலத்தில் நிலையான, என்றுமிருக்கும் நிலக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. காலம் மனிதர்களின் உருவாக்கம். அது மனிதவாழ்க்கையை மட்டுமே தீர்மானம் செய்கிறது. இயற்கையில் மனிதனின் காலக்கணக்கு செல்லுபடியாவதில்லை
கனவின் விசித்திரம் என்பது அடக்கப்பட்ட ஆசைகள். நினைவுகள் பயங்களின் வெளிப்பாடாகும். உண்மையில் நாம் கனவை விழித்தெழுந்த நிலையில் பேசுகிறோம். அது கனவினைப் பற்றிய நினைவுகள் மட்டுமேயாகும். நினைவுகளால் துல்லியமாக கனவினை வரையறை செய்துவிட முடியாது. கனவில் எந்த பொருளும் நிகழ்வும் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. கொந்தளிக்கும் உலகம் ஒன்றினுள் சிக்கிக் கொண்டது போன்ற அனுபவமது. ஏன் டாலி இந்த விசித்திரங்களை தனது ஒவியங்களின் முதன்மைப் பொருளாக கொண்டிருக்கிறார் என்றால் நம் காலம் இது போன்ற வீழ்ச்சியின், யுத்தங்களின் காலம். அதை உணர்த்தவே அவர் கனவுக்காட்சிகளை உருவாக்குகிறார். கனவில் எவருக்கும் பெயர்கள் இருப்பதில்லை. ஆண் பெண் அடையாளங்கள் கலைந்துவிடுகின்றன. பல்வேறு உலகங்கள் திறந்து கொள்கின்றன.

இந்தக் காணொளியில் காட்டப்படும் வியப்பூட்டும் நிலப்பரப்பும் பறக்கும் யானைகளும் சிதிலங்களும் நம்மை வேருலகில் சஞ்சரிக்க வைக்கின்றன. டாலியின் உருவங்கள் யாவும் கரைந்த நிலையினை கொண்டிருக்கின்றன. பொருட்களின் திடம் கரைந்து நீரைப் போலாகிறது. மனித உருவங்கள் சிலந்தியின் கால்கள் கொண்டது போல தோற்றம் தருகின்றன.
காற்றோடு கைகோர்த்து
The noise of the streets was a kind of language – Virginia Woolf
ஆங்கில எழுத்தாளர் வர்ஜீனியா வூல்ஃப் எழுதிய Mrs Dalloway நாவல் லண்டன் நகரில் ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையை விவரிக்கிறது. நடத்தலின் ஆனந்தத்தை விவரிக்கும் இந்த நாவலில் தனக்கு லண்டன் வீதிகளில் நடப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்கிறார் கிளாரிசா டாலவே

உண்மையில் கிராமப்புற சாலையில் நடப்பதைவிடவும் பரபரப்பான லண்டன் வீதிகளில் நடப்பது சுதந்திரமாக இருக்கிறது என்கிறார் வர்ஜீனியா வூல்ஃப்.
மனம் போன போக்கில் சுதந்திரமாக நடந்து திரியும் போது கண்ட காட்சிகளை மனிதர்களைத் தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் வர்ஜீனியா
மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கெனத் தனியே ஒரு ஈரப்பும் வசீகரமும் இருக்கிறது. அந்த இடங்களுக்குப் போகையில் நாமும் மகிழ்ச்சியின் துளியாகிவிடுகிறோம். வர்ஜீனியா வூல்ஃப் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சந்தையினுள் சென்று அங்குக் கேட்கும் விநோதக் குரல்களை, விதவிதமான வண்ணங்களை, வெளிச்சத்தை ரசிக்கக்கூடியவர்.
“கண்கள் வண்ணத்துப்பூச்சியைப் போல அழகானவற்றை மட்டுமே தேடிக் காணுகிறது. மாலை வெளிச்சத்தில் வீதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன. பேரம் பேசி கடையில் வாங்கும் போது விற்பவரும் வாங்குபவரும் தானே ஜெயித்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் இது ஒரு நாடகம்.

கண்களால் விழுங்க முடிந்த அளவு காட்சிகளை விழுங்கிக் கொள்வதற்காகவே நடக்கிறேன். நடப்பதன் வழியே நிறைய ஆசைப்படுகிறேன். நிறையப் புதிய விஷயங்களைக் காணுகிறேன். நாம் வாங்க விரும்பும் பொருளை யாரோ ஒருவர் வாங்கிப் போகும் போது அவர் மீது நமக்குப் பொறாமை உருவாகிறது. அதையும் நான் ரசிக்கிறேன். எதையும் வாங்காமல் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களைப் பார்வையிடுவது எத்தனை சந்தோஷமானது என்பதை விளக்க முடியாது. உணரத்தான் முடியும்.
வீதியில் காணப்படும் விதவிதமான உணவு வகைகள். கலவையான மணம். சாப்பிடும் ஆசை தானே உருவாகிறது. ஏதாவது பெரிய கடைக்குள் நுழைந்து இல்லாத பொருளைக் கேட்பதில் உள்ள ஆனந்தம் அலாதியானது தானே.
இந்த இன்பங்களுக்காகவே லண்டன் வீதிகளில் சுற்றியலைகிறேன் “என்கிறார் வர்ஜீனியா.
புதிய ஆடைகளை விரும்பி வாங்கக் கூடிய வர்ஜீனியா வூல்ஃப் சில ஆடைகளை வாங்கிய பிறகு வெறுக்கத் தோன்றுவதற்கு என்ன காரணம் என்றே புரியவில்லை என்கிறார். புதிய ஆடைகளை அணிந்து கொள்ளும் அது உடலுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்குத் தீருவதேயில்லை. அதுவும் விருந்துக்குச் செல்லும் போது புதிய ஆடையைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்ற குற்றவுணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது என்கிறார்
வீட்டில் அடைந்துகிடப்பதை விடவும் மீண்டும் மீண்டும் லண்டன் நகரத்திற்குச் செல்லவும் சுற்றித்திரியவும் வர்ஜீனியா வூல்ஃப் அதிக ஆசை கொண்டிருந்தார். பென்சில் வாங்க வேண்டும் என்ற ஒரு அற்ப காரணத்தை உருவாக்கிக் கொண்டு ஒரு முறை அவர் லண்டன் வீதிகளில் நடந்து சென்றதை நினைவு கொண்டிருக்கிறார்.

நினைவுகளும் கடந்து செல்லும் காட்சிகளும் இசைக்கோர்வை போல இணைந்து ஒலிக்கும் இந்த நாவல் லண்டன் வீதிகளை, காற்றோடு கைகோர்த்து நடக்கும் அதன் மனிதர்களை அழகாக விவரிக்கிறது.
கிளாரிசா டாலவே கதாபாத்திரம் வர்ஜீனியா வூல்ஃப்பின் மாற்று வடிவம் போலவே எழுதப்பட்டிருக்கிறது. விருந்திற்கான மலர்களை வாங்கச் செல்லும் கிளாரிசா வழி ஒரு தளமும். செப்டிமஸ் வழியாக மறுதளமும் நினைவு கொள்ளப்படுகிறது.
காலம் தான் நாவலின் மையப்புள்ளி. நினைவுகளின் வழியே தான் கடந்து சென்ற நிகழ்வுகளை மீள் உருவாக்கம் செய்கிறாள். வூல்ஃப் சிறுகதையில் கிளாரிசா டாலவே ஒரு கதாபாத்திரமாக முன்பே எழுதப்பட்டிருக்கிறார். காலத்தினுள் ஊசாலாடும் கிளாரிசாவின் வழியே வூல்ஃப். பெண்ணின் சஞ்சலங்களை, தனித்துவ உணர்வுகளை அழகாகச் சித்தரிக்கிறார். இந்த நாவலையும் வூல்ஃப்பின் எழுத்துமுறையினையும் நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வியந்து கொண்டாடுவதுடன் தன்னைப் பாதித்த எழுத்து அவருடையது என்றும் கூறுகிறார்.
இது 1925 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த நாவல் குறித்து அழகான அறிமுகக் காணொளி.
July 11, 2021
தேடலின் சித்திரம்
துணையெழுத்து / வாசிப்பனுபவம்
பிரேமா

ஏராளமான புத்தகங்களின் வாசிப்பும் அதிக எண்ணிக்கையிலான பயணங்களும் தேடல்களும் கொண்டிருப்பவர் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். தான் காணும் சிறுசிறு நிகழ்வுகளையும் சந்தித்த மனிதர்களையும் கருவாகக் கொண்டு தான் படித்திருந்த புத்தகங்களின் கருத்துக்களை உடன் இணைந்து புதிய புத்தகத்தை ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அளித்திருக்கிறார். நெடுந்தொலைவு தொடர் பயணங்களும் தேடி அலைந்து பெற்ற புத்தகங்களின் அனுபவங்களும் அவரது வாழ்நாளின் எவ்வளவு காலங்களை விலையாகப் பெற்றிருக்குமோ? என்ற கேள்வியில் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு துணைக் கால்களும் நம்மை வியக்க வைக்கிறது. தனது தேடல்களில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் துணை எழுத்தே இத்தனை அனுபவங்களைக் கொண்டு வாழ்க்கையைப் பேசுகிறது எனில், அவரது முதல் எழுத்தும் முக்கிய எழுதும் எத்தனை சிறப்பு மிக்கதாக இருக்கும் என்ற ஆவலைக் கொடுக்கிறது. ஓவியர் மருது அவர்களின் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருக்கும் டிஜிட்டல் ஓவியங்கள் ஆசிரியரின் கசப்பான அனுபவங்களையும் மீறி ரசிக்க வைக்கிறது. புத்தகத்திற்கு கூடுதல் அணியாக சித்திரங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
விகடனில் தொடராக வெளிவந்த இப்புத்தகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பில் அமைந்த துணை எழுத்துக்கள், சாதாரணமான நிகழ்வுகளின் ஆழமான கருத்துக்களால் அமைந்த எழுத்தாக்கத்தால் நம் மனதை ஈர்க்கிறது. தன் வீட்டின் கட்டிலின் அடியில் உதிர்ந்து கிடந்த தலையில்லாத பொம்மையை கண்டபிறகு அவரது நினைவில் வந்த நிகழ்ச்சிகளாக, யோவானின் தலையை பரிசாக கேட்டவளின் காதல், தாமஸ்மானின் மாறிய தலைகள், விக்கிரமாதித்யனின் தலை, பரசுராமன் தகப்பனுக்காக தாயின் தலையை துண்டித்தது, என புத்தகத்தில் அவர் அறிந்திருந்த பட்டியல்கள் நீளுகிறது. இப்படி ஒவ்வொரு சிறு சிறு அனுபவங்களும் லேசர் கொண்டு குவித்தது போலச் செய்திகளில் செறிவாக அமைந்திருக்கிறது.
எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் தங்கியிருந்த அறையை அவரது பழைய விலாசத்தில் நூலாசிரியர் தேடிய போது நகரத்தின் பரிணாம வளர்ச்சியில் கிட்டாமல் போன அவரது பழைய அறை, அவர் வாழ்ந்த பொழுது அவர் கொண்டிருந்த கனவுகளையும் அலைக்கழிப்புகளையும் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த அவரது துக்கங்களையும் அப்படியே விழுங்கி விட்டு அவரது புத்தகங்களில் மட்டுமே தற்போது பதிந்திருக்கிறது என்பது வேதனையைக் கொடுப்பதாக இருக்கிறது. புதுமைப்பித்தன் அவர்கள் தங்கங்களை விற்கும் சாலையில் வறுமையில் வாழ்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் முக்கியமான எழுத்தாளர்கள் ஒருவருக்குக்கூட முறையான வாழ்க்கை சரித்திரமே எழுதப் படாமல் இருக்கும் சூழ்நிலையை வருத்தமாக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
தொட்டிச் செடிகள் எனும் தலைப்பில்,”நாம் உணவாகக் கொள்ளும் கீரைகள் காய்கறிகள் பழங்கள் தானியங்கள் தூய காற்று யாவும் இயற்கை தந்துகொண்டே இருக்கும் நன்றி செலுத்த முடியாத தானங்கள். நம் உடல் என்பது தாவரங்களின் சாரம்.”என்று பகிர்ந்து, தான் வாழும் நகரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வளரும் தொட்டிச் செடி மாதிரி தானே நாமும் நடக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் நல்ல காற்று இல்லாமல் வாழ்கிறோம் என்பதெல்லாம் எதிர்காலம் பற்றிய பயத்தை நமக்கு கொடுக்கவே செய்கிறது.
சொல்லாத சொல் எனும் தலைப்பில் மௌனத்திற்கு ஒரு இலக்கணமே வகுத்திருக்கிறார். மௌனம் எத்தனை ஆழமானது என்பதை சொல்லின் வலியை உணர்ந்தவர்களே உணர முடியும். சொல்லின் வலியை சொல்லால் வெளிப்படுத்த முடியாது என்பதிலும், பேச்சை கற்றுக் கொள்வதைப் போல மௌனத்தை எளிதில் கற்றுக்கொண்டு விடமுடியாது. பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை போல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வது தான் மௌனம் என்பதிலும் வியக்க வைக்கிறார்.இதைவிட வேறு என்ன மௌனத்தைப் பற்றி சொல்லிவிட முடியும்?
இப்படி ஒரு இலக்கியத்துக்கான அனுபவ புத்தகத்தை நமக்கு அளித்திட அவர் கொண்ட பயணத்தில் வரவேற்பும் உபசாரங்களும் மட்டுமே இருந்து விடவில்லை. அவர் சந்தித்த நிராகரிப்புகளையும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனக் குகையிலும் என்ன இருக்க வேண்டும் என்பதை அவர் அவர்களே முடிவு செய்கிறார்கள். அன்பான ஆதரவான மக்களின் மதிப்பினை உணர்ந்து கொள்ள வெறுப்பினை உமிழும் மக்களும் உலகில் தேவைப்படுகிறார்கள். உலகம் அதனால் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது?
பொய்யைப் பற்றி பேசுகையில், பொய் ஒரு விதை இல்லாத தாவரம் காற்றைப் போல எல்லா இடங்களிலும் பரவி வளரக் கூடியது. என்று அறிமுகப்படுத்திவிட்டு, அப்படி அவர் சொன்ன பொய் எப்படி எல்லாம் பரவி அடுக்கடுக்காக வளர்ந்தது என்பதை சிறிது நகைச்சுவை உணர்வுடன் படித்தால் இப்புத்தகத்தின் இடையே சிறிது இடைவெளி கிட்டியது போல் இருக்கிறது. கிட்டத்தட்ட காந்தியின் சுயசரிதம் இந்நூல். பொய்யைப் பற்றி பேசும் போது கூட உண்மையை மட்டுமே பேசியிருக்கிறார்.
அகத் தனிமை எனும் தலைப்பில் சாதாரணமாக ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துவிட்டு ஓடும் அணிலைப் பின்தொடர்ந்து சென்று, தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு மட்டுமே பறக்கும் அணில் இருக்கிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திராத தகவலாகக் கண்டடைந்து கட்டுரை எழுதியிருக்கிறார். அப்படியே அந்த வனத்தில் வாழும் பளியர்கள் பற்றிய அவர்களது இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் பகிர்ந்திருக்கிறார். காட்டில் இயல்பாக வாழும் இந்த மக்களின் இருப்பிடம் நகர்ப்புற மக்களின் வன வளத்தின் தேடலால் அழிகிறதே என்கிற பதைப்பும் நமக்குள் எழுகிறது.
இப்படி இந்த நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் அவரது பயண அனுபவங்களில் சந்தித்த நிகழ்ச்சிகளையும் மக்களையும் தனது புத்தக அனுபவங்களோடு இணைத்து புதிய வடிவம் கொடுத்து எழுதியிருப்பது ஏதோ ஒரு நசுக்கப்பட்ட நபர்களின் மீதும் சமூகத்தின் மீதும் நமது கவனத்தை அதன் ஒரு வரிகளிலாவது நம்மை திருப்பி கவனிக்க வைக்கிறது.
இந்த நூலுடன் கழிந்த பொழுதுகள் அற்புதமான தருணங்கள். தனது தொடர்ந்த பயணத்தில் செறிவான அனுபவங்களை நூலாக தருவித்த ஆசிரியருக்கு பேரன்பும் நன்றியும்.
••
July 10, 2021
அது அந்தக் காலம்
ஹைதராபாத்தில் வசித்த எஸ்.வி. ராமகிருஷ்ணன் தனது நினைவுகளைச் சுவைபட எழுதக்கூடியவர். சுங்கத்துறை கமிஷனராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். சொந்த ஊர் தாராபுரம். 2011ல் மறைந்தார்.

நிறைய முறை இவரோடு போனில் பேசியிருக்கிறேன். வரலாறு சார்ந்த நிறைய விஷயங்களை விருப்பமாகப் பேசுவார். அவரது கட்டுரைகள் வெளியாகும் போது அதை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி எனது அபிப்ராயங்களை அவசியம் தெரிந்து கொள்வார்.
இவரது கட்டுரைகள் 1940 களை ஒட்டிய தமிழ் வாழ்க்கையைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளன. அது அந்தக் காலம் , வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் என இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். இந்த சிறிய கட்டுரை ஒரு காலகட்டத்தில் மொட்டைக்கடுதாசி உருவாக்கிய பிரச்சனைகளை அழகாக விவரிக்கிறது.
இப்படி மொட்டைக்கடுதாசி எழுதும் நபர்கள் ஊருக்கு ஊர் இருந்தார்கள். பள்ளி ஆசிரியர்கள். அரசு அலுவலர்கள், இளம்பெண்கள் என பலரும் இவர்களைக் கண்டு பயந்தார்கள்.
மொட்டைகடுதாசியில் நலம்விரும்பி என்ற பெயர் சில நேரம் இடம்பெற்றிருக்கும். அந்த நலம்விரும்பி எழுதிய மொட்டைக்கடுதாசியை மையமாகக் கொண்டு பாமா விஜயம் படத்தில் நடக்கும் காட்சிகள் சிறப்பானவை.
••

மொட்டைக் கடுதாசி
– எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் இன்ஸ்ட்டியூஷன் பின்னர்ப் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது.
ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பதில் இன்னும் வினோதமாக இருக்கிறது. காலம் என்ற பரிமாணமே காலங்காலமாக இருந்தாற்போல் இல்லையாம். காலமே அவசரக் கோலம் கொண்டு சுருங்கிவிட்டதாம். அதாவது எவருக்கும் நேரம் இல்லையாம். பொழுதைப் போக்க வழியில்லாமல் வம்பு பேசி மகிழ்த நாட்கள் போய் இப்போது யாருக்குமே அவகாசம் இல்லாமற் போய்விட்டதாம். மொட்டைக் கடுதாசிகள் தயாரிப்பதற்கு வேண்டிய ஓய்வோ அவகாசமோ இல்லாமற் போய்விட்டதாம். உலகமே அமெரிக்காவாகி இந்தியா முழுவதும் பம்பாய் ஆகிவிட்டதாம். இந்த நிலையில் மறைந்து வரும் மொட்டைக் கடுதாசியைப் பேணி வளர்ப்பதில் எவருக்கும் அக்கறை இல்லையென்றால் அதில் அதிசயமும் ஏமி லேது தான்.
நூறாண்டு முன் வந்த (அந்தக்காலத்தில் நவீனம் என்று அழைக்கப்பட்ட) தமிழ் நாவல்கள் பலவற்றிலும் – உதாரணம் : பத்மாவதி சரித்திரம் (1898 -1900)** – ஒரு சோப்ளாங்கி வில்லன் ஒரு மொட்டைக்கடிதம் மூலம் கதை வளர வித்திடுவான்.
ஐம்பது அறுபது ஆண்டுகள் முன்னால் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் மனோகர், நம்பியார் (அல்லது கள்ள பார்ட் நடராஜனாகக் கூட இருக்கலாம்) போன்ற வில்லன்கள் ‘டாண்’ என்று காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் காட்டும் முதல் கைவரிசை அநேகமாக மொட்டைக் கடிதம் எழுதுவதாகத்தானிருக்கும் சில சமயங்களில் அதற்கு நேரம் இல்லாமற் போனால் நேராக முகூர்த்ததில் ஆஜராகித் தாலிகட்டும் தருணத்தில் ‘நிறுத்து’ என்று கூச்சலிட்டுக்கொண்டு போய் வாய்வழியாக அபவாதம் ஏதேனும் சொல்லுவதும் உண்டு. ஆனால் மொட்டைக் கடுதாசி மாதிரி வராது, செலவும் குறைவு. விஷம் மாதிரி வேலை செய்யும். வைத்தவர்கள் பெயர் வெளியே தெரியாமலேயே இருக்கவும் முடியும்.
ஆமாம் அரையணா (3 பைசா) கூடப் போதும். மிஞ்சிப் போனால் ஒன்றரையணா (9 பைசா) கவர். இருப்பதையும் இல்லாததையும் எழுதி அடியில் ‘உண்மை விளம்பி’ ‘உன் நலம் நாடுபவன்’ என்று ஏதாவது எழுதினால் வேலை முடிந்து போகும்.
கும்பகோணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூர் வந்து பெண்ணைப் பார்த்திருப்பார்கள். சம்பிரதாயமாகச் சொஜ்ஜி பஜ்ஜி தின்று சம்மதமும் சொல்லியிருப்பார்கள். பெண்ணுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் உள்ளூர்க்கார சோதா ஒருவன் – அவன் பெண்ணுக்கு முறைப் பையனாகவும் இருக்கக்கூடும் – பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் அவளுடைய காதலன் ஒருவன் சேலத்தில் இருப்பதாகவும் அவனுக்குக் கொடுக்க இஷ்டப்படாத பெற்றோர்கள் அவசரமாக விவரம் அறியாத தூரதேசப் பார்ட்டியைத் தேடி திருமணம் நிச்சயத்திருப்பதாகவும் ஒரு போடு போடுவான்.
“தீர விசாரித்தால் உண்மை விளங்கும்” என்று வேறு சேர்த்திருப்பான். சம்பந்திமார்கள் குழம்பிப் போவார்கள். சரி நமக்கெதற்கு வம்பு? இவளை விட்டால் வேறு பெண் இல்லையா என்று பையனின் அம்மா அபிப்பிராயப் படுவாள். கடைசியில் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டு “எங்கள் குலதெய்வத்துக்கு முன் பூக்கட்டி பார்த்தோம் சரியாக வரவில்லை. மன்னிக்கவும்” என்று ஒரு புருடா விடப்படும். பெண்வீட்டார் நிலை குலைந்து போவார்கள். இரண்டு மூன்று முறை இப்படி நிச்சயமாகி நின்று போனால் அதற்கப்புறம் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதே கஷ்டம்தான். ஏனென்றால் ஊராரே ‘கசமுச’ வென்று பேசத்தொடங்கி விடுவார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முடமுடியுமா?இந்த நிலையில், இதுவரை எட்டாத பழத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த முறைப்பையனின் மடியிலேயே பழம் விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு.
சுவாரசியமான ஒரு இன்ஸ்ட்டியூஷன் நம்மிடையில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அது உண்மையில் இழப்புதானா என்பது வேறு விஷயம். முன்னாளில் கதாசிரியர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ரெடியாக எப்போதும் கைவசம் இருந்த ஒரு ப்ளாட் கை நழுவிப்போனது என்னவோ உண்மை
***
நன்றி
அது அந்தக்காலம். எஸ்.வி.ராமகிருஷ்ணன்
உயிர்மை வெளியீடு
கதை சொல்வது
எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகச் சுட்டி விகடன் இதழ் சார்பில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். செம்மொழி பூங்காவில் நடைபெற்ற அந்த நிகழ்வில் குழந்தைகளுக்குக் கதை சொன்னேன். அவர்களும் எனக்குப் புதிய கதைகளைச் சொன்னார்கள். அந்தப் புகைப்படங்களைத் தற்செயலாக இன்று மீண்டும் காண நேர்ந்தது.


25 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்காக நிறையப் பள்ளிகளுக்குப் போயிருக்கிறேன். குறிப்பாகக் கிராமப்புற அரசுப்பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொல்லியிருக்கிறேன். மதியம் 3 முதல் 4 வரை ஒருமணி நேரம் இதற்காக நேரம் ஒதுக்கித் தருவார்கள். பிள்ளைகளின் உற்சாகமும் புதிய கதைகளை அவர்கள் சொல்லும் விதமும் மறக்கமுடியாதவை.
பள்ளிதோறும் மாணவர்களைக் கொண்டு கதைசொல்லும் குழுக்களை உருவாக்கலாம். மாதம் ஒரு கதைசொல்லியை அழைத்து கதை சொல்ல வைக்கலாம். பள்ளி மாணவர்கள் சொல்லும் கதைகளைக் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் ஏற்றலாம். மாநில அளவில் கதை சொல்லும் போட்டிகள் நிகழ்த்தலாம். இப்படி செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

கடந்து வந்த பாதையில் இது போல மகிழ்ச்சியான விஷயங்களைச் செய்திருக்கிறேன் என்பது மனதிற்கு நிறைவளிக்கிறது.
July 8, 2021
அன்று கண்ட முகங்கள்
தமிழ் நாடகக் கலைமணிகள் என்றொரு நூலைச் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் எழுதியிருக்கிறார். சிறந்த நடிகரான வெங்கட்ராமன் நாடகம் சினிமா இரண்டிலும் நீண்டகால அனுபவம் கொண்டவர். அவர் தனது நினைவுகளைத் தொடராக எழுதியிருக்கிறார். அதை அறந்தை நாராயணன் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.

இந்த நூல் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யக்கிடைக்கிறது.

அந்தக் கால நாடக உலகம் மற்றும் திரையுலகம் சார்ந்த ஆளுமைகளையும் அனுபவங்களையும் வெங்கட்ராமன் சுவைபட எழுதியிருக்கிறார்.
இதில் மூன்று கட்டுரைகள் மிக முக்கியமானவை.
நாடகவுலகின் ராணியாகக் கொண்டாடப்பட்ட பாலாமணி அம்மையார் பற்றிய கட்டுரையில் அவர் எவ்வளவு புகழ்பெற்றிருந்தார் என்பதை பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது.

பாலாமணி ஸ்பெஷல் ரயில் பாலாமணி குதிரைவண்டி பாலாமணி பட்டுப்புடவை என்ற அந்தக் காலத்தில் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அவரது நாடகம் ஆரம்பமாகும் இரவு நேரத்தில் திருச்சியிலிருந்தும் மாயவரத்திலிருந்தும் ரயில்கள் கும்பகோணம் வந்து நின்று காலை மூன்று மணிக்குத் திரும்பப் புறப்படும். அதன் பெயரே பாலாமணி ஸ்பெஷல் ரயில்.
நாடகம் நடக்கும் போது ரசிகர்கள் மெய்மறந்து கையிலுள்ள் பணம் மற்றும் நகைகளைக் கழட்டி வீசுவார்கள்.
அவரது வீடு ஜமீன் மாளிகை போலிருக்கும். அங்கே நாற்பது வேலையாட்கள் இருந்தார்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் அன்னதானம் இரவு 9 மணிக்குத் தான் முடியும். நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தான் பாலாமணி போய்வருவார். அதை வேடிக்கை பார்க்க வீதி முழுவதும் மக்கள் திரண்டு நிற்பார்கள். அவரைக் காணாமல் போகமாட்டேன். என நாள் முழுவதும் வீட்டின் முன்பு காத்துகிடப்பவர்களும் உண்டு.
இத்தனை புகழுடன் இருந்த பாலாமணி கடனில் வீடு மற்றும் சொத்துகளை இழந்து மிகுந்த வறுமையில் கஷ்டப்பட்டு மதுரையில் சிறிய குடிசை வீட்டில் வசித்தார் என்பதையும், அவர் இறந்த போது அடக்கச் செய்யக் காசில்லாமல் நிதிவசூல் செய்தார்கள் என்பதையும் படிக்கும் போது வேதனையாகவே இருக்கிறது.
இது போலவே எஸ்.வி. சுப்பையா பற்றிய கட்டுரையில் கப்பலோட்டிய தமிழனில் அவர் பாரதியாக நடித்த அனுபவம். இதற்காக மும்பைக்குச் சென்ற பயணம். மற்றும் அவரது உதவி செய்யும் குணம், முன்கோபம். மூத்த கலைஞர்கள் மீது அவர் கொண்ட மரியாதை. நடிப்பில் அவர் காட்டிய தீவிரம் என அவரது ஆளுமை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

சந்திரபாபுவைப் பற்றிய கட்டுரை கண்ணீரை வரவழைக்கக்கூடியது. வீட்டின் மாடிக்கே கார் போய் நிற்கும்படியாக மிக வசதியான வீடு ஒன்றைக் கட்டுகிறார் சந்திரபாபு. இறுதிவரை அதைக் கட்டி முடிக்க இயலவில்லை. எதிர்பாராத தோல்விகள். அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை., சந்திரபாபுவின் மேற்கத்திய இசை குறித்த ஈடுபாடு. திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள், அவருடன் வெங்கட்ராமன் கழித்த இரவு என விவரித்து வரும் வெங்கட்ராமன் சந்திரபாபு வறுமையில் தன் வீட்டில் யாருமில்லாமல் அநாதை போல இறந்து கிடந்த நாளையும், அவரை நல்லடக்கம் செய்யத் தானும் மேஜர் சுந்தர்ராஜனும் செய்த ஏற்பாடுகள் பற்றியும் அதற்கு சிவாஜி செய்த பணஉதவி குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.
அந்தக் கால நாடக உலகம். நடிகர்களின் வறுமைநிலை. நாடகங்களில் செய்யப்பட்ட புதுமைகள். எம்ஜிஆர் செய்த நற்செயல்கள். என்.எஸ். கிருஷ்ணன் கஷ்டப்படுகிறவர்களுக்குச் செய்த உதவிகள். அவரது திருமணம், தங்கவேலு சினிமாவிற்கு வந்த கதை. கிட்டப்பா, கேபிசுந்தராம்பாளின் காதல். திருமண வாழ்க்கை, முத்துராமன் சினிமாவிற்கு வந்தவிதம் எனப் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை எழுதியிருக்கிறார் வெங்கட்ராமன்.
இவை அந்தக் கால கலையுலகின் அழியாத நினைவுகள். பின் இணைப்பாக உள்ள புகைப்படங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த முகங்களுக்குள் சொல்லப்படாத ஆயிரம் கதைகள் இருக்கின்றன.
அவசியம் வாசிக்க வேண்டிய சிறிய நூல்.
இணைப்பு :
July 7, 2021
விநோத சங்கீதம்
நியூ கினியாவின் மலைக் காடுகளுக்குள் வாழும், சாக்சனி பறவையின் தோற்றமும் குரலும் வசீகரமாகயிருக்கிறது. தனது துணையை ஈர்ப்பதற்காக அது எழுப்பும் விநோதமான குரல் சங்கீதம் போலவே ஒலிக்கிறது.
மரத்தில் சாக்சனி துள்ளிக் குதித்து எடுக்கும் பயிற்சிகளும் குரலை உச்சமாக ஒலிப்பதில் வெளிப்படுத்தும் உற்சாகமும் அலாதியானது. பெண் பறவையை ஈர்க்கும் வரை இதன் குரல் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.
காணொளி இணைப்பு.
July 6, 2021
வாழ்த்துகள்
கவிஞர் சுகுமாரன் ஆசிரியராகப் பணியாற்றிக் காலச்சுவடு 100 ஆவது இதழ் வெளியாகியுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காலச்சுவடு பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறது. இந்த இதழின் முகத்தை உருவாக்கியதிலும். அதன் தனித்துமிக்கப் பார்வைகள் மற்றும் படைப்புகளைத் தேர்வு செய்து வெளிக்கொண்டு வந்ததிலும் சுகுமாரனின் பங்கு முக்கியமானது.
சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு அவரது கனவின் வெளிப்பாடாக இருந்தது. அதன் அடுத்த கட்ட நகர்வினை, புதிய சாளரங்களைத் திறந்து வைத்ததில் சுகுமாரன் முக்கியமானவர்.

வார இதழ், மற்றும் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி நீண்ட அனுபவம் கொண்டவர். மிகச்சிறந்த கவிஞர். நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இசை, உலகசினிமா, ஓவியம் என நுண்மையான ரசனை கொண்டவர் என அவரது பன்முகத்தன்மை காலச்சுவடு இதழை உருவாக்குவதில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது
அசோகமித்திரன் ஆசிரியராக இருந்து கொண்டு வந்த கணையாழி இதழ்களை இந்தத் தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். அசோகமித்திரனின் அர்ப்பணிப்பும், படைப்புகளைத் தேர்வு செய்தவிதமும் மிகுந்த பாராட்டுக்குரியது. அதற்கு இணையான பணியைச் சுகுமாரன் செய்திருக்கிறார்.
சமகால அரசியல், மற்றும் பண்பாட்டுப் பிரச்சனை சார்ந்த கட்டுரைகள். சிறந்த சிறுகதைகள். கவிதைகள், மொழியாக்கப் படைப்புகள். இளந்தலைமுறையின் படைப்புகள். மாற்றுக்கல்வி குறித்த கட்டுரைகள், எனப் பல முக்கியப் படைப்புகள் இந்த நூறு இதழ்களில் வெளியாகியுள்ளன. அத்துடன் இதழின் வடிவமைப்பு, மற்றும் அதில் இடம்பெற்ற ஓவியங்கள் சிறப்பானவை.

தனது தனிப்பட்ட நட்பு மற்றும் விருப்பங்களைத் தாண்டி சிறந்த படைப்புகளை மட்டுமே தேர்வு செய்வதில் சுகுமாரன் கறாரானவர். அது போலவே மொழிபெயர்ப்புகளை அவர் மூலத்துடன் ஒப்பிட்டுத் திருத்தம் செய்வதிலும் அவர் காட்டும் அக்கறை தீவிரமானது.
இலக்கிய இதழின் ஆசிரியருக்குச் சமகாலத்தில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் இலக்கிய முயற்சிகள். படைப்புகள். சிந்தனைகள் குறித்து ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இருக்க வேண்டும். சமூகப்பிரச்சனைகள். பண்பாட்டு மாற்றங்கள். குறித்த ஆழ்ந்த பார்வைகள் இருக்க வேண்டும். அதில் சுகுமாரனுக்கு இணையேயில்லை. தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆழ்ந்து வாசிக்கக் கூடியவர். இந்திய மற்றும் சர்வதேச அளவிலான படைப்பாளர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர். அவரது பரந்த வாசிப்பின். ஈடுபாட்டின் அடையாளங்களைக் காலச்சுவடு இதழ்களில் காணமுடியும்.
எந்நிலையிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அவரது ஆளுமையைக் கண்டுவியக்கிறேன். நிகரற்ற கவியாகவும் சிறந்த பத்திரிக்கையாசிரியராகவும், எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பு மகத்தானது.
சுகுமாரனின் பணி மேலும் சிறக்க மனம் நிறைய வாழ்த்துகிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

