S. Ramakrishnan's Blog, page 124
June 21, 2021
ரெட் பைனின் சீனக்கவிதைகள்
சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது.

பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார்.
இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் கவிதை மரபுக்குமான தொடர்பு, சீனாவில் விவசாயிகள் எவ்வாறு கவிஞர்களைக் கொண்டாடினார்கள். கவிஞர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கவிஞர்களின் சங்கம் மற்றும் ஒன்று கூடி கவிதை பாடும் முறை, கவிஞரின் நினைவாக நடக்கும் விழாக்கள். கவிதை வாசிக்கும் நாள். அரச சபையில் இடம்பெற்ற கவிஞர்களின் நிலை பெண் கவிஞர்களின் வாழ்க்கை, மற்றும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டு பெற்ற அனுபவம் என மிகச் சுவாரஸ்யமான உரையைத் தந்திருக்கிறார்.

அவர் கவிதைகளை வாசிக்கும் அழகும் அதற்குத் தரும் விளக்கமும் மிக இனிமையாக உள்ளது.இந்த உரையில் ஒரு மீனவனுக்கும் கவிஞருக்குமான உரையாடல் பற்றிய பகுதி ஒன்றுள்ளது. மிகச்சிறந்த பகுதியது.
ரெட் பைன் உரையில் மூன்று விஷயங்களை முக்கியமாகக் கருதுவேன். ஒன்று சீனாவில் தொகை நூல்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றிய பார்வை. இரண்டாவது கவிஞர்களின் புனைபெயர்கள். மூன்றாவது கவிஞனின் வாழ்க்கையும் பார்வைகளும்.
நமது அகநானூறு, புறநானூறு போலவே சீனாவிலும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்த கவிஞர்களின் சிறந்த கவிதைகள் ஒன்று திரட்டப்பட்டுத் தொகைநூலாக அரசால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இதன் முக்கியத் தேவை அரசு விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது எந்தக் கவிதையை வாசிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வதே. அது போலவே வணிகச் சந்திப்புகள். மற்றும் தூரதேசம் பயணம் செய்கிறவர்கள் ஒன்று கூடும் போது இந்தக் கவிதைகளைச் சொல்லி மகிழ்வதும் இசையோடு பாடுவதும் நல்லுறவின் அடையாளமாக இருந்திருக்கும் என்கிறார்.
ஒருவகையில் கவிதை சொல்வது என்பது ஆளுமையின் அடையாளம். தனது விருப்பம் மற்றும் ரசனையை வெளிப்படுத்தச் சிறந்த கவிதை ஒன்றைச் சொல்வதை அன்றைய சீனர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். தனக்கென தனித்துவமான பார்வையும் உலகை தனது சொந்த மனவெளிப்பாட்டின் படி அணுகுவதும். மொழியை ரசவாதி போல விரும்பும் படி உருமாற்றம் செய்வதும் கவிஞனின் வேலை. அவன் இயற்கையை அப்படியே நகலெடுப்பதில்லை. கண்முன்னே தோன்றும் காட்சிகளின் வழியே அவன் காணாத உலகை,. அறியாத உணர்ச்சிகளை அடையாளப்படுத்துகிறான். தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலவே உலகின் காட்சிகள் வழியாகவும் பார்த்துக் கொள்கிறான். கவிஞனுக்கு உலகிடம் பயமில்லை. ஆனால் அவன் உலகின் இயக்கத்திற்கு எதிர் திசையில் செல்லவே விரும்புகிறான். கவிஞனின் அகம் எதனால் விழித்துக் கொள்ளும் எதைப் புனைவு கொள்ளும் என்பது கண்டறியமுடியாத ரகசியம்.
தொகை நூலின் வழியே கவிதைகள் தேசம் முழுவதும் பரவத்துவங்கின. இது கவிதைகளைப் பண்பாட்டு செயலாக்கியது என்கிறார். அத்துடன் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கவிதை பயிலரங்குகள். பயிற்சி நிலையங்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்தன என்கிறார்
தொகை நூல்களின் நோக்கம் இப்படிதானிருக்ககூடும். தமிழில் புறநானூறு யாரால் தொகுக்கப்பட்டது எவர் தொகுப்பித்தவர் என்று தெரியவில்லை. அகநானூற்றினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
இந்தத் தொகை நூல்களில் இடம்பெற்ற கவிஞர்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்கள். எவ்வாறு தொகுப்பு முறை செய்யப்பட்டது. ஒரு கவிஞரின் எந்தக் கவிதையை எப்படித் தேர்வு செய்தார்கள், நானூறு என்ற எண்ணிக்கையை எதை வைத்து முடிவு செய்தார்கள் என்று எந்த விபரமும் கிடைக்கவில்லை. கவிஞர்களுடன் மன்னர்களின் கவிதையும் இடம்பெற்றதை அன்றைய இலக்கியச் சூழல் எப்படி எதிர்கொண்டது. தொகைநூலில் இடம்பெறாத கவிஞர்களின் எதிர்வினை எப்படியிருந்தது என்பது போன்ற கேள்விகள் ஆராய வேண்டியவை.

இது போன்ற கேள்விக்கான பதிலாகவே ரெட் பைன் சீனாவில் தொகுக்கபட்ட கவிதைகளின் தேர்வு மற்றும் பயன்பாடு பற்றிக் கூறுகிறார். பௌத்த சமயம் காரணமாகவே தொகுப்பு முயற்சிகள் உருவாகின என்று கூறுகிறார். இந்தக் கோணத்தில் தமிழையும் நாம் ஆராய வேண்டும்.
இது போலவே கவிஞர்கள் ஏன் புனைப்பெயர் வைத்துக் கொண்டார்கள். அதுவும் கவிதையின் படிமம் அல்லது உருவகத்தைத் தனது பெயராகக் கொண்டது ஏன் என்றே கேள்விக்குச் சீனாவில் கவிதை எழுதியவர்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்கள். எளியோர். ஆகவே அவர்கள் புனைப்பெயரை உருவாக்கிக் கொண்டார்கள் என்கிறார். அந்த நாட்களில் வேறு கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்கள் புனைபெயர் வைத்துக் கொண்டதில்லை. இசைக்கலைஞர்கள். ஓவியர்கள், சிற்பிகள் அவர்களின் சொந்த பெயராலே தான் அறியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சீனக்கவிஞர்கள் இயற்கையின் அடையாளமாகத் தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குளிர் மலை என்பது ஒரு கவிஞனின் பெயர். ஆயிரம் மழைத்துளிகள் என்றொரு கவிஞர். தப்பியோடிய மேகம் என்பது வேறு ஒரு கவிஞரின் பெயர். இப்படிக் கவிதைகளிலிருந்தே அவர்களின் புனைபெயர்கள் உருவாகியிருக்கின்றன. தமிழிலும் இது போலவே சங்க கவிஞர்கள் தனது கவிதையின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள்.

சங்க கவிஞர்களின் பெயர்களை வாசித்துப் பாருங்கள். அணிலாடு முன்றிலார்,குப்பைக் கோழியார், நெடுவெண்ணிலவினார் மீனெறி தூண்டிலார் வெள்ளிவீதியார் கல்பொரு சிறுநுரையார் – கங்குல் வெள்ளத்தார் என எவ்வளவு கவித்துவமாக இருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறது.
சீனக் கவிதைகளின் பொற்காலமாக டாங் அரச வம்சம் ஆட்சி செய்த காலத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதுமாக 2500 கவிஞர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியதாகவும் சீன இலக்கிய வரலாறு கூறுகிறது. இதில் துஃபு, , லீ போ, பாய் ஜுய் மூவரும் மிக முக்கியமான கவிஞர்கள், இவர்களின் கவிதைகள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

சங்க இலக்கியத்திலுள்ள பெண் கவிஞர்களைப் போலவே தன் சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டு சீனாவிலும் பெண் கவிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். புற உலகம் அறியாதவர்கள் என்றே இந்தக் கவிஞர்களை வகைப்படுத்துகிறார்கள். வீட்டிற்குள் இருந்தபடியே அவர்கள் உலகை அறிந்திருக்கிறார்கள். காற்றை, மழையை, நிலவை, சூரியனை. பறவைகளின் சங்கீதத்தைப் பற்றிக் கவிதை பாடியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முதுமை, நோய், தனிமை, பிரிவு. மரணம், துக்கம், துரோகம் வஞ்சகம் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கு அந்தக் காலத்திலே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் பொது வெளியில் கவிஞராக உலவ முடியவில்லை. அதைப் பண்பாடு அனுமதிக்கவில்லை என்றும் ரெட் பைன் தெரிவிக்கிறார்.

ரெட்பைன் தனது உரையில் பண்டைய பெண் கவிஞர் ஒருவரின் வீடு தேடி அலைந்த சம்பவத்தை விவரிக்கிறார். முடிவில் அதைக் கண்டுபிடித்தபோது அவர் அடைந்த பரவசத்தை உரையின் போதும் அவரது முகத்தில் காணமுடிகிறது
இது போலவே பூங்காவிலிருந்த கவிஞரின் கல்லறை ஒன்றைத் தேடிய அனுபவத்தையும் மிக அழகாக விவரித்துள்ளார்.
சீனக்கவிஞர்களில் பெரும்பாலோர் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். சுற்றியலைந்து பெற்ற அனுபவத்தைச் செல்லும் இடங்கள் தோறும் கவிதை பாடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில கவிஞர்கள் அரச சபையில் மன்னரின் ஆலோசகராகவோ, நிர்வாகப் பணிகளிலோ ஈடுபட்டிருக்கிறார்கள். அரச சபை வாழ்க்கை கவிஞர்களுக்கு ஏற்றதில்லை என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் அரச சபையில் இதயத்தில் நினைப்பதை எல்லாம் உதட்டின் வழியே பேச முடியாது. ஒரு வேளை அப்படி மனம் திறந்து பேசினால் அவர்கள் உடனே நாடு கடத்தப்படுவார்கள். அரச சபையிலிருந்து நாடு கடத்தப்பட்ட கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு என்கிறார் ரெட் பைன்.
சங்க கவிதை மரபிலும் பாடிப்பரிசல் பெற அலைந்து திரியும் கவிஞர்களையே அதிகம் காண முடிகிறது. கபிலரைப் போலச் சிலர் அரசருக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஔவையைப் போலச் சிலர் நீதி சொல்லியிருக்கிறார்கள்.
சீன மன்னர்களுக்குக் கவிதையிலிருந்த ஈடுபாடு என்பது கவிதை வழியாக அவர்கள் உணர்த்தும் அறத்தின் பொருட்டேயிருந்தது என்கிறார் ரெட்பைன். அது உண்மையே, அந்தக் காலத்தில் கவிதையின் வழியே தான் அறம் பேசப்பட்டது. நீதி நெறிகள் அடையாளம் காணப்பட்டன. கவிதை ஒரு ஊடகம். அதன்வழியே தான் நுண்மையான அனுபவங்கள். ஞானம் பகிரப்பட்டது. அதுவும் கவிதையில் நேரடியாக மன்னரைச் சுட்டிக்காட்ட முடியாது என்பதால் விலங்குகளை, பருவகாலத்தைச் சொல்லி அதன் வழியே மன்னருக்குச் சொல்ல வேண்டிய நீதியைப் புரிய வைத்தார்கள்.
சங்க கவிதைகளைப் போலப் பசியை, வறுமையை, இல்லாமையைச் சீனக்கவிதைகள் அதிகம் பாடவில்லை. வறுமையான சூழலை விவரிக்கும்போதும் தமிழ்க் கவிதையினைப் போலத் துயர்மிகு சித்திரமாக வெளிப்படவில்லை.

மதுவின் மயக்கத்திலே ஆழ்ந்து கிடப்பது அன்றைய கவிஞர்களின் இயல்பு. குடியைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சீனாவில் ஏராளம் இருக்கின்றன. கூடிக் குடிப்பது மட்டுமின்றி, மலையுச்சியில் அமர்ந்து நிலவோடு குடிப்பது, படகில் தனித்திருந்து குடிப்பது எனக் குடிவாழ்க்கையைக் கொண்டாடியிருக்கிறார்கள். அரசசபையில் பதவி வழங்கப்பட்ட கவிஞர்களின் ஒரே வேலை குடிப்பது மட்டும் தான், அது உண்மையைச் சொல்ல வேண்டாதபடி கவிஞனை எப்போதும் மயக்கத்தில் வைத்திருக்கும் என்கிறார் ரெட் பைன்.
இது போலவே உயர்ந்த மலைத்தொடரைத் தேடிச்சென்று சிறிய குடில் அமைத்துக் கொண்டு வாழுவதும் கவிஞனின் இயல்பாக இருந்திருக்கிறது. கவிஞர் லி பெய் திருமணம் செய்து கொண்டு இளம் மனைவியோடு வாழ்ந்த சில மாதங்களிலே இப்படி மலையில் குடில் அமைத்து தனியே தங்கி கவிதைகள் எழுதி வந்தார் என்பதையும் ரெட் பைன் நினைவுபடுத்துகிறார்.
ரெட் பைன் மானுடவியல் பயின்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உதவித்தொகை கிடைக்கிறது என்பதற்காகச் சீனமொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அந்த ஆர்வம் வளரவே சீனத்திலிருந்து அரிய கவிதைத்தொகுப்புகள் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வருகிறார்.
சில காலம் பௌத்த மடாலயங்களில் தங்கி தியானம் கற்றுக் கொண்டதுடன் ஜென் வாழ்க்கையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். தைவானில் வசித்த போது மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டிருக்கிறார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். Cold Mountain எனும் சீனக்கவியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்காக மலையுச்சியிலிருந்த சிறிய விவசாயக் கிராமம் ஒன்றுக்குப் போய்த் தங்கிக் கொண்டு எளிய விவசாயப் பணிகளை மேற்கொண்டவாறு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
சீனாவில் இவர் மேற்கொண்ட பயணங்களும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டறிந்து வெளிப்படுத்திய விதமும் அபாரமானது.
ஜாங்னான் மலைத்தொடர் மிக நீண்டது, இங்குள்ள குகைகளில் வாழும் பௌத்த துறவிகளைத் தேடி ரெட் பைன் நீண்ட பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் அவர் அடைந்த அனுபவங்களை ரோடு டு ஹெவன் என்ற நூலாக எழுதியிருக்கிறார். இதில் நிறையப் பெண் துறவிகளைச் சந்தித்து அவர்களின் தனித்துவமிக்க வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.
ரெட் பைனின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது . அவரது அப்பா ஒரு வங்கி கொள்ளைக்காரர். அவரும் நண்பர்களும் வங்கி ஒன்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார்கள். துரத்தி வந்து அவர்களைக் கண்டுபிடித்த போலீசாருடன் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள்.. இதில் முழங்காலில் காயமடைந்த அவரது அப்பாவைத் தவிர மற்றவர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். ரெட் பைனின் அப்பா சிறைக்குச் சென்றார்.
தண்டனைக்காலம் முடிந்து அப்பா வெளியே வந்ததும் தான் பதுக்கி வைத்திருந்த பணத்தைக் கொண்டு டெக்சாஸில் ஹோட்டல் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கினார். அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். சில ஆண்டுகளிலே அவர் பெரும் பணக்காரராக மாறினார்.

ரெட் பைனின் குழந்தைப் பருவம் ஆடம்பரமான வாழ்க்கையைக் கொண்டிருந்தது. அவரது அப்பாவிற்கு அரசியலில் ஆர்வம் உருவானது. கலிபோர்னியாவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரானார். தேர்தலில் போட்டியிட்டார். அந்த நாட்களில் கென்னடி சகோதரர்கள் அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். தேர்தல் அரசியலில் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. ஆகவே நிறையத் தோல்விகளைச் சந்தித்தார்.
இதற்கிடையில் ரெட் பைனின் அம்மாவை அவரது அப்பா விவாகரத்துச் செய்தார், ஆகவே எல்லா வசதிகளையும் இழந்து நடுத்தர வாழ்க்கைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ரெட் பைன் ஜூனியர் கல்லூரியில் தோல்வியுற்று மன அமைதியை இழந்தார். அதன்பின்பு மூன்று ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகே பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயிலச் சென்றார்.
தைவானில் வசித்த போது சீனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவரது ஊக்கம் காரணமாகவே சீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் துவங்கினார்.
எண்பதுகளின் மத்தியில் தான் சீனா அமெரிக்கர்களைத் தன் தேசம் முழுவதும் தடையில்லாமல் பயணம் செய்ய அனுமதி தந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் சீனா முழுவதும் பயணம் செய்தார். தான் படித்து அறிந்த சீனாவின் நிலக்காட்சிகளை, மஞ்சள் நதியை நேரடியாகச் சென்று பார்த்தார்.பௌத்த துறவிகளின் மீது ஈடுபாடு கொண்டு அவர்களைத் தேடி மலைப்பிரதேசங்களில் அலைந்தார்.
ரெட் பைன் 2005ல் சீனாவில் ஒரு மாதகாலம் பயணம் செய்து முப்பது புகழ்பெற்ற கவிஞர்களின் கல்லறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அக் கல்லறையின் முன்பாக ஒரு கோப்பை ஸ்காட்ச் விஸ்கியை மலர்களுடன் படையல் செய்து வணங்கியிருக்கிறார். இந்த உரையின் போதும் சிறிய குப்பியில் வைத்திருந்த மதுவைச் சந்தோஷத்துடன் உயர்த்திப் பருகிக் கொள்கிறார்.
ரெட் பைனின் முகத்தில் காணப்படும் சந்தோஷம். உற்சாகமான பேச்சு. வேடிக்கையாகச் சொல்லும் விதம் நம்மை அவரோடு நெருக்கமாக்குகிறது. இந்த உரையைக் கேட்ட கையோடு பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதைகளின் தொகுப்பான வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை வாசித்தால் முழுமையான அனுபவத்தை நாம் பெற முடியும்.

ரெட் பைன் போலவே பயணி எனும் ஸ்ரீதரனும் சீனாவில் பணியாற்றிச் சீனமொழியை முறையாகக் கற்றுக் கொண்டு இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மிகுந்த பாராட்டிற்குரிய பணியிது.
ரெட் பைன் தேர்வு செய்து வாசிக்கும் கவிதைகளை கேட்கும் போது பெரிய ஈர்ப்பு உருவாகவில்லை. ஆனால் அதே கவிதைகளை மௌனமாக வாசித்தால் அது தரும் அனுபவம் சிறப்பாக உள்ளது.
ரெட் பைனின் முக்கிய நூல்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன். அதன் துவக்கப்புள்ளியாக இந்த உரையைக் குறிப்பிடலாம்
Bill Porter/Red Pine, Poetry Readings
June 19, 2021
வாழ்வின் நிமித்தம்
திப்பு சுல்தான்
நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம்
••
நிமித்தம், நான் பல முறை படித்த புத்தகம் மட்டுமல்ல என்றெல்லாம் யாரையெல்லாம் தனிமை வாட்டுகிறதோ அப்போதெல்லாம் அவர்களெல்லாம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.

தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண நாளின் முன் இரவில் கதை தொடங்குகிறது. தன் திருமணத்துக்கு தன் நண்பர்களை எதிர்பார்க்கிறான். யாருமே இல்லை. மாப்பிள்ளையின் தோழர்களாக வந்து திருமண நாளைக் கொண்டாட வேண்டிய அவன் வயது ஒத்த சகாக்கள் எல்லாரும் அப்பாக்களாகவும் தாத்தாக்களாகவும் மாறிவிட்ட உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அவன் தன் நண்பர்களுக்காகக் காத்திருக்கிறான். எல்லோரும் காலையில் வரக்கூடும் என பொய்யாகச் சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.
அவன் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. ஜூரம் வந்து காது கேட்காமல் போனது, பாடத்தைக் கேட்க முடியாமல் ஆசிரியரிடம் அடிவாங்கியது, டமாரம் என்று சுற்றியிருப்பவர்களால் அவமானப்படுவது, ஆறுதல் தேடி அலைவது என கதை நகர்கிறது. காதலும் காமமும் ஏமாற்றங்களின் தழும்புகளாக அவனை வதைக்கின்றன.
மனோதத்துவ டாக்டரிடம் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகிறான் தேவராஜ். அவர் கேட்கும் கேள்விகளும் தேவராஜ் சொல்லும் பதில்களும் தத்துவச் சுவைக்குச் சான்று. டாக்டர் ஒரு வட்டம் வரையச் சொல்கிறார். தேவராஜ் வட்டம் வரையப் பிடிக்காது என்கிறான்.
ஏன் என்கிறார் டாக்டர். ‘அது எங்கு ஆரம்பிக்கிறதோ அங்கேயே முடிந்துவிடுகிறது. அதனால் அது பிடிப்பதில்லை’ என்கிறான்.
‘எனக்கு மேகம் பிடிக்கும். ஏனென்றால் அவை ஒன்றுபோல இன்னொன்று இருக்காது’ என்கிறான். ராமகிருஷ்ணனின் முந்தைய நாவல்களில் இருந்து வித்தியாசப்படும் எளிமையான மொழியில் சரசரவென ஓடும் நடை.
புலன் இழந்த சோகம் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கும் என்பது நாவல் முழுக்க காயம் சிந்தும் ரத்தமாக ஓடுகிறது.
நிறைய சம்பவங்கள், நிறைய மனிதர்கள். நாவலின் மிகப்பெரிய பலம் அது. சரித்திர பூர்வமாக பல செய்திகளை நாவலின் வழியே சொல்லிச் செல்கிறார். காந்தி, நேரு, இந்திரா, எமெர்ஜென்ஸி, இலங்கை யுத்தம், அகதிகளாக வந்தவர்கள் என வரலாற்றின் இழை, நாவலைக் கால் ஊன்ற வைக்கிறது.
திருமண மேடையில் வந்து அமர்கிறான் தேவராஜ். கடந்த காலத்தைவிட எதிர்காலம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறது. அந்தப் புள்ளியில் கதை முடிகிறது. உண்மையில் கதை தொடங்கும் புள்ளியோ என்ற அச்சம் நம்மையும் தாக்குகிறது.
எல்லாம் கடந்து போகும் வாழ்க்கையின் சுவாரஸ்யமும் குரூரமும் கலந்த வாழ்வின் நிமித்தம்.
••
June 18, 2021
காந்தியின் பாடல்
காந்தியடிகளால் விரும்பி பாடப்பட்ட வைஷ்ணவ ஜன தோ பாடலைப் பற்றி Gandhi’s Song என்ற புதிய ஆவணப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இரவில் அந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். மாயங்க் சாயா எழுதி இயக்கியிருக்கிறார். நேர்த்தியான ஆவணப்படம். துஷார் காந்தியின் நேர்காணல் படத்தின் தனிச்சிறப்பு.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தாவால் எழுதப்பட்ட இந்த குஜராத்தி மொழிப்பாடல் “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பதை விளக்குகிறது.
இந்த ஆவணப்படம் நர்சிங் மேத்தாவின் வாழ்க்கை மற்றும் இப் பாடலின் பொருளை விளக்குவதுடன் அதன் வரலாற்றுச் சிறப்பினையும் ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்தியாவை ஒன்றிணைத்த இந்த பாடல் எவ்வாறு மதச்சார்பின்மையின் அடையாளமாக விளங்குகிறது என்பதை விவரிக்கிறார்கள்.
1907 ஆம் ஆண்டில் காந்தி தனது பிரார்த்தனையில் இந்த பாடலை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு இப்பாடல் இந்தியா எங்கும் புகழ்பெறத்துவங்கியதுடன் காந்தியின் அடையாளப் பாடலாகவும் மாறியது.
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். எம்.எஸ் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே பாடலின் தமிழ் வடிவத்தை நாமக்கல் கவிஞர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அது இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.
வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேளுங்கள்…
பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.
விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.
மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.
கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.
ஆவணப்படத்தின் இணைப்பு :
நிறங்களை இசைத்தல்
ராபர்ட் லாரன்ஸ் பின்யன் கலைவரலாற்றைப் பற்றிச் சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது Painting In The Far East கீழைத்தேயக் கலைகள் குறித்து மிகச் சிறந்த அறிமுகத்தைத் தருகிறது.

மேற்கத்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கும், சீன ஜப்பானிய ஒவியங்கள் சிற்பங்களுக்குமான அடிப்படை வேறுபாடு மற்றும் தனித்துவம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த நூல் பல்வேறு ஒவியக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தாகூர் இதனைச் சாந்தி நிகேதனின் ஒவியப்பள்ளியில் ஆதார நூலாகப் பயிற்றுவித்திருக்கிறார்.
பின்யனை வாசிக்கும் போது தேர்ந்த பேராசிரியரிடம் பாடம் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.
பின்யன் ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் நாடகாசிரியர். ஆகவே மிகுந்த கவித்துவத்துடன் கலையின் நுட்பங்களை விவரித்து எழுதியிருக்கிறார்.

இங்கிலாந்தின் லான்காஸ்டரில் பிறந்த இவரது தந்தை ஒரு மதகுரு. பின்யன் தனது கல்லூரிப்படிப்பினை ஆக்ஸ்போர்டில் உள்ள டிரினிட்டி கல்லூரியிலும் படித்தார், அங்குக் கவிதைக்கான நியூடிகேட் பரிசை வென்றார். அவர் 1893 முதல் 1933 இல் ஓய்வு பெறும் வரை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பணியாற்றியிருக்கிறார். அந்த நாட்களில் கலை குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதினார். அதில் கீழைத்தேயக் கலைகள் குறித்த நூல்கள் முக்கியமானவை.
பின்யன் தனது கலைகுறித்த பார்வையை உருவாக்கிக் கொள்ளப் பௌத்தம் மற்றும் கிறிஸ்துவச் சமயத்தின் வரலாற்றை ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். குறிப்பாகப் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்ற விதம் மற்றும் அங்கிருந்து ஜப்பானில் வேரூன்றியது. காந்தாரக்கலைகளின் வரலாறு கிரேக்கத்துடன் இந்தியாவிற்கு இருந்த கலைத்தொடர்புகள் என வரலாற்றினை மையமாக் கொண்டு அதிலிருந்து இந்தக் கலைகள் எப்படி உருவாகின என்பதை அடையாளப்படுத்துகிறார்.

குறிப்பாகப் பௌத்தம் அறிமுகமாவதற்கு முன்பு சீனாவிலிருந்த ஓவியக்கலைஞர்களைப் பற்றிக் கூறும் பின்யன் அந்த ஓவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருந்த போதும் அதற்கெனத் தனிச்சிறப்புகள் எதுவுமில்லை. ஆனால் பௌத்த சமயத்தின் வருகை சீன ஓவியங்களுக்குப் புதுப்பரிமாணத்தை உருவாக்கின. குறிப்பாகப் புத்தரின் வாழ்க்கை எப்படிச் சீன ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கு மூலப்பொருளாக விளங்கியது என்பதை அழகாக விவரிக்கிறார்
கிறிஸ்துவச் சமயத்தின் தாக்கத்தினை எப்படி மேற்கத்திய ஓவியங்களில் துல்லியமாகக் காணமுடிகிறதோ அதற்கு இணையானது பௌத்த சமயத்தின் தாக்கம் என்கிறார்
இரண்டாம் நூற்றாண்டின் முன்பு வரை புத்தரின் உருவச்சிலைகள் செதுக்கப்படவில்லை. அதன்பிறகே புத்த வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிற்பத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. காந்தாரக்கலையின் வளர்ச்சியில் புத்தரின் உருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டது. குறிப்பாக அவரது தலையிலுள்ள சுருள் கேசம் கிரேக்கப்பாதிப்பில் உருவாக்கப்பட்டது.
மேற்கத்தியக் கலைகளுக்கும் கீழைத்தேயக் கலைகளுக்குமான அடிப்படை வேறுபாடு கலை குறித்த அதன் கண்ணோட்டத்தில் இருக்கிறது.

மனிதனை இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதும் மேற்கத்தியக் கலைகள் அவனது வெற்றிகள் மற்றும் சாதனைகள். தெய்வீகத்துடன் மனிதனுக்குள்ள உறவு மற்றும் அற்புதங்கள். மனிதனின் பாவம் மற்றும் தண்டனைகளை முதன்மையான கருப்பொருளாகக் கருதின. அதைத் துல்லியமாகச் சித்தரிப்பதைக் கலையின் நோக்கமாகக் கொண்டன.
ஆசிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் மனித உடல்கள் பிரம்மாண்டமாக்கப்படுவதில்லை.ஆனால் மேற்கத்தியச் சிற்பங்களில் உடலை மிகைப்படுத்துகிறார்கள். உடலின் பரிமாணத்தைப் பெரியதாக்கி சிற்பத்தை உருவாக்குகிறார்கள். இந்தப் பிரம்மாண்டம் காண்பவர்களை வியக்க வைக்கிறது.
கலையின் ஆதாரமாக வடிவமே கருதப்பட்டது. ஆகவே நிறங்களை விடவும் ஓவியத்தின் வடிவம் மற்றும் அதன் கருப்பொருள் தனித்துவமிக்கதாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய ஓவியர்கள் விரும்பினார்கள்.
காரணம் அது போன்ற ஓவியங்களே அறிவினைத் தூண்டக்கூடியது. கலையின் முக்கியப் பணிகளில் ஒன்றாக அறிவை மகிழ்ச்சிப்படுத்தவும் வழிநடத்தவும் வேண்டும் என்று கலைஞர்கள் நினைத்தார்கள் என்கிறார் பின்யன். அது உண்மை என்பதைப் புகழ்பெற்ற மேற்கத்திய ஓவியங்களைப் பார்த்தாலே புரியக்கூடும்.

ஏன் மேற்குலகம் நிறங்களை முக்கியமாகக் கருதவில்லை என்றால் நிறங்கள் பெரிதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டன. உணர்ச்சிகளை விடவும் அறிவைத் தான் கலை முக்கியமாகக் கருத வேண்டும் என்ற எண்ணம் மேற்கில் மேலோங்கியிருந்தது.
வடிவத்தினை முதன்மையாகக் கருதியதால் அதில் எல்லையற்ற பரிசோதனைகளை மேற்கத்தியக் கலைஞர்கள் செய்து வந்தார்கள். அதனால் புதிய கலைவெளிப்பாடுகளை அவர்களால் உருவாக்க முடிந்தது. கீழைத்தேய கலைகளில் வரம்பு உண்டு. மரபை மீறி ஒருவனால் செயல்படமுடியாது. எதை எல்லாம் வரையக்கூடாது என்பதினை தீர்மானமாக வரையறை செய்திருந்தார்கள். அத்துடன் கலைஞர்கள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவனது கலையே முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நியதியும் இருந்தது. ஆகவே மிகப்பெரிய சிற்பங்களைச் செய்தவர்கள் கூடத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
சீன ஜப்பானிய பெர்ஷிய ஒவியங்களில் வண்ணங்களே முதன்மையானது. அதுவும் வசீகரமான, அடர் வண்ணங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடியது. தனித்துவமிக்க வண்ணங்களைப் பிரயோகிப்பதன் வழியே ஓவியத்தை மகத்தான கலைப்படைப்பாக மாற்றினார்கள்.
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு ஏற்பவே வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று ரசாயானத்தைக் கொண்டு உருவாக்கப்படும் செயற்கை வண்ணங்களை விட மேலாக அவர்களே விதவிதமான நிறங்களை உருவாக்கினார்கள். வான்கோ போன்ற ஓவிய மேதைகளே ஜப்பானிய ஓவியத்தின் வண்ணத்தைக் கண்டு மயங்கி அந்தப் பாணியைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிறத்தைத் தேர்வு செய்வதிலும் அதைப் பயன்படுத்துவதிலும் ஓவியனின் ஆளுமை வெளிப்படுவதாகக் கீழை தேயக் கலைஞர்கள் நம்பினார்கள். அதைச் சீன ஜப்பானிய ஓவியங்களில் தெளிவாகக் காணமுடிகிறது. இசைக்கருவியை மீட்டுவது போலவே வண்ணங்களை மீட்ட வேண்டும். தேர்ந்த இசையில் வெளிப்படும் இனிமையை நிறங்களும் வழங்கும். அதை உருவாக்க கடுமையான பயிற்சிகள் அவசியம்.

சீனாவின் கலைகளே ஆசியக் கலைகளுக்கான துவக்கப்புள்ளி. அங்கே உருவாக்கப்பட்ட அழகியலே பிற நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. சீனக்கலைகள் புத்தியைக் காட்டிலும் புலன்களை நோக்கியே விரிவு கொள்கின்றன.
பண்டைய சீன ஓவியர்கள் தீட்டிய ஓவியங்களில் வடிவப் பரிசோதனைகள் மிகக் குறைவு. ஆனால் துல்லியமான கோடுகள் மூலம் அவர்கள் ஓவியத்திற்கு ஒரு லயத்தை ஏற்படுத்தினார்கள். இந்த ஒழுங்கமைவு அபாரமானது. அது ஓவியத்தை உயிரோட்டமாக்குகிறது.
வண்ணத்தினை வெறும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை அடையாளப்படுத்தவும் காட்சியின் பின்புலத்திலுள்ள சூழலை வெளிப்படுத்தவும் வண்ணம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேற்கத்திய ஓவியர்களைப் போல சீனர்கள் மாடலை முன் வைத்து ஓவியம் வரையவில்லை. கற்பனையின் துணை கொண்டே ஓவியம் மற்றும் சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள். கற்பனையின் வழியே இவ்வளவு துல்லியமாக உருவங்களை வெளிப்படுத்த முடிந்திருப்பதே அவர்களின் சிறப்பு.
சீன ஓவியங்களில் நிர்வாணத்திற்கு இடம் கிடையாது. நிர்வாணமாகப் பெண்ணை வரைவது ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயம். ஆனால் மேற்குலகில் நிர்வாண ஓவியங்களை வரைவது, அதிலும் மாறுபட்ட கோணத்தில் நிர்வாணத்தைப் பதிவு செய்வது சிறந்த கலைவெளிப்பாடாகக் கருதப்பட்டது. ஏன் உடல்களை நிர்வாணமாக வரைவதைச் சீன தடைசெய்தது. அது வெறும் கலாச்சாரத் தணிக்கை மட்டுமில்லை. பாலின்பம் சார்ந்த ஒவியங்கள் பொதுவெளிக்கானதில்லை என்ற எண்ணம் சீனாவில் மேலோங்கியிருந்தது. மேலும் பெண் உடலைக் கொண்டாடுவது கலையின் நோக்கமாகக் கருதப்படவில்லை.

கிரேக்கம் மற்றும் சீனத்தின் ஓவியக்கலை பற்றி ஒரு பழங்கதையிருக்கிறது. அதில் எந்த நாட்டின் ஓவியம் சிறந்தது என்பதை நிரூபிக்க ஒரு போட்டி நடத்தப்பட்டது. ஒரு சுவரைத் தேர்வு செய்து அதில் விதவிதமான ஓவியங்களைச் சீனர்கள் வரைந்து தள்ளினார்கள். சுவரே ஒரு மிகப்பெரிய கேன்வாஸாக மாறியது போலிருந்தது. ஆனால் கிரேக்கர்கள் அது போன்ற ஒரு சுவரினை தேய்த்துத் துடைத்து சுத்தமாக்கி அந்தச் சுவர் ஒளிரும்படி செய்தார்கள். வெறும் சுவர் சொர்க்கத்தின் மாளிகைச்சுவர் போல மின்னியது. அந்தச் சுவரின் மூலையில் ஒரேயொரு படம் வரைந்தார்கள். இரண்டினையும் பார்வையிட்ட நடுவர்கள் கிரேக்க ஓவியர்களைச் சிறந்தவர்களாகத் தேர்வு செய்தார்கள். காரணம் அவர்கள் வடிவத்தை முதன்மையாகக் கொண்டவர்கள். சுவரை அவர்கள் ஒளிரச் செய்தபிறகே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டார்கள். அது தான் கிரேக்கக் கலையின் சிறப்பு என்கிறார் பின்யன்.
சீனாவில் இது போன்ற கலைஞர்களின் விசித்திரங்கள் பற்றி நிறையக் கதைகள் விளங்குகின்றன. டிராகன் ஒன்றை உயிரோட்டமாக வரைந்த ஓவியர் ஒருவர் அதை வரைந்து முடித்தபோது டிராகன் மூச்சுவிட்டு நிஜமாக வெளிப்பட்டுச் சுவரை உடைத்து எழுந்தது என்றொரு கதையிருக்கிறது. இது கலையின் உச்சத்தில் அது நிஜமாகிவிடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது
மனித வாழ்க்கையின் நிலையாமையை ஆசியக்கலைகள் சுட்டிக்காட்ட விரும்பின. ஆகவே மலர்களை வரையும் போதும் அதை மகத்தான ஒன்றாக அவர்கள் சித்தரிப்பதில்லை. மலர்கள் இயல்பாக, அழகின் முழுமையுடன் வரையப்பட்டன. ஆனால் மேற்குலகில் காணப்படுவது போல வியப்பூட்டும் விதமாக வரையப்படவில்லை.
பௌத்தம் சார்ந்த தொன்மக்கதைகள். மாயக்கதைகள். அற்புத நிகழ்வுகள் மக்கள் மனதில் வேரூன்றியிருந்த காரணத்தால் அன்றாட வாழ்க்கையின் சித்திரங்களை விடவும் இந்த மாய, விநோத உலகினை, விந்தை விலங்குகள், உருவங்களைச் சீன ஓவியர்கள் அதிகம் வரைந்திருக்கிறார்கள். சிற்பமாக உருவாக்கியிருக்கிறார்கள். பூமியில் உள்ள வாழ்க்கையைப் போன்று வானிலும் பூமிக்கடியிலும் தனித்த வாழ்க்கையிருக்கிறது. அந்த ஒளிரும் அல்லது இருண்ட வாழ்க்கையின் காட்சிகளையும் அவர்கள் சித்திரமாக்கியிருக்கிறார்கள்.
கவிஞர் Wang Wei மிகச்சிறந்த ஓவியராகவும் விளங்கினார். இவரது ஓவியங்களில் வெளிப்படும் அழகு நிகரற்றது. Han Kan போன்ற ஓவியர்கள் பிரதானமாகக் குதிரைகளை மட்டுமே வரைந்தார்கள். எனச் சீன ஓவிய வரலாற்றின் அரிய கலைஞர்கள் பலரையும் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்
நாம் ஏன் கீழைத்தேய நாடுகளின் கலைவரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் போலப் பின்யன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்தக் கலைப்படைப்புகள் குறித்தசரியான புரிதலுக்காகவும், தேவையற்ற குழப்பங்களைக் கலைக்கவும், அழகினை ஆழ்ந்து ரசிக்கவும் நாம் இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கலைப்படைப்பு காலத்தை வென்று நிற்பது எதனால் என்று தெரிந்து கொள்ளாமல் அதை ரசிப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும் என்று கேட்கிறார்.
ஆசிய கலைபாரம்பரியத்தின் தனித்துவங்களை நாமே அறிந்து கொள்ளாமல் போனால் மேற்குலகம் எப்படிப் புரிந்து கொள்ளும் என்று பின்யன் எழுப்பிய கேள்வி முக்கியமானது. கலைகளைப் புரிந்து கொள்வதன் வழியே தான் மானுடத்தின் கனவுகளை, கற்பனையின் வீச்சினை, மகத்தான படைப்பாற்றலைப் புரிந்து கொள்ளமுடியும். அதற்குப் பின்யன் போன்றவர்களே வழிகாட்டுகிறார்கள்.
••
June 17, 2021
கவிதை எனும் வாள் வித்தை
லி போ (Li Po) அல்லது லி பாய் (Li Bai ) என்று அழைக்கப்படும் சீனக்கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் ஹா ஜின் The Banished Immortal என விரிவான நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான நாவலாசிரியர் ஒரு கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பது அபூர்வமான விஷயம். ஆகவே இதை விரும்பி வாசித்தேன்.

லி போ (Li Po) மற்றும் து ஃபூ (Tu Fu) இருவரும் நெருக்கமான நண்பர்கள், சீனாவின் மிகப் பெரிய கவிஞர்களில் இவர்களைக் கொண்டாடுகிறார்கள். டாங் வம்சத்தின் இந்த இரண்டு கவிஞர்களும் இரட்டையர்கள் போலவே பேசப்படுகிறார்கள். லிபோவின் கவிதைகளில் ஏற்பட்ட விருப்பம் காரணமாகவே து ஃபூ கவிதைகள் எழுதத் துவங்கியிருக்கிறார்.
லி போ ஏழாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர். தன்னுடைய இருபத்துமூன்று வயது முதல் சீனா முழுவதும் சுற்றியலைந்திருக்கிறார். இந்தத் தேடலில் இவர் தாவோயிசம் மற்றும் சீனமரபு இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

லி போ கவிஞராக உருவான விதம் இந்த நூலில் அதிகம் விவரிக்கப்படவில்லை. அவரது கவிதையின் தனித்துவம் மற்றும் இயற்கையின் மீதான புரிதல் பற்றிய பகுதிகள் குறைவே, மாறாக லிபெய் ஒரு அரசாங்க வேலையைப் பெற வேண்டி மேற்கொண்ட தொடர் முயற்சிகளும், அதன் தோல்விகளும் இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு, அலைக்கழிப்பு மற்றும் விரக்தி பற்றியுமே ஹா ஜின் அதிகம் எழுதியிருக்கிறார்.
அந்த வகையில் ஏழாம் நூற்றாண்டிலிருந்த சமூக வாழ்க்கை, அரசியல் மற்றும் ராஜசபையில் கவிதைக்கு இருந்த இடம் போன்றவை விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன
லி பாய் தன் வாழ்நாளில் அரசுப்பதவியைப் பெற முடியவேயில்லை 764 ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக அரியணை ஏறிய பேரரசர் டைசோங் நீதிமன்றத்தில் ஆலோசகராகப் பணியாற்ற லி பாயைத் தேர்வு செய்து ஒரு ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவை அவரிடம் நேரில் கொடுக்க அதிகாரிகள் சென்ற போது அவர் இறந்து போய் ஒராண்டுகாலம் ஆனது தெரிய வந்தது. எப்போது எப்படி இறந்தார் என்று காரணம் அறியமுடியவில்லை. அவர் மிதமிஞ்சிய போதையால் இறந்து போனார் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். வேறு சிலரோ அவர் தொண்டை அழற்சி காரணமாக நோயுற்று இறந்து போனார் என்று குறிப்பிடுகிறார்கள்

இன்று ஒரு கவிதை வாசகன் லிபெய்யை எப்படி நினைவு கொள்கிறான். அவர் கவிதையில் காட்டும் படிமங்கள். மற்றும் இயற்கை காட்சிகள் வழியாகவே அவர் நினைவு கொள்ளப்படுகிறார். குறிப்பாக நிலவை அவரைப் போல எழுதியவரில்லை. மலையின் உச்சியில் தனிமையில் அமர்ந்து கையில் மதுக்கோப்பையுடன் அவர் நிலவைத் தோழனாக்கி கவிதையில் உரையாடுகிறார்.

இன்றும் தனிமையில் தொலைவில் ஒளிரும் நிலவைக் காணும் ஒருவன் அந்த நிலவொளியின் வழியே லி பாயின் கவிதைகளை நினைவு கொள்கிறான். அவரது கவிதைகளில் நிலவு, வீடு திரும்புதலின் அடையாளமாக, நிரந்தரத் துணையாக, தனிமையில் பயணிப்பவனின் உற்ற தோழனாக இடம் பெறுகிறது.
லி பாயின் வாழ்க்கை வரலாற்றில் என்னைக் கவர்ந்த விஷயம். அவர் சிறந்த வாள்வீர்ர் மற்றும் சித்திர எழுத்துக்கலை நிபுணர் என்பதே.. இந்த இரண்டு கலைகளும் துல்லியத்திற்கு முதலிடம் தருபவை. ஆழ்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டியவை. சீனாவில் வாள் பயிற்சியை ஜென் கலையாகக் கருதுகிறார்கள். துறவிகளும் கற்றுக் கொள்கிறார்கள். மனதை ஒருமுகப்படுத்துவதுடன் வெறுமையைத் துண்டிப்பதும் வாள்வீச்சின் வழியே பெற முடியும் எனக் கருதுகிறார்கள். இது போலவே தான் சித்திர எழுத்துக்கலையும் அதில் ஒருவன் தூரிகையைக் கொண்டு மனதின் ஆழ்நிலைகளை வெளிப்படுத்துகிறான். மலர் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வது போல எழுத்துத் தன்னைச் சித்திரமாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்கள்.
லி பாயின் குடும்பம் பராம்பரியமானது. அவரது தந்தையின் பெயர் லி கே. அவர் சீன மரபு இலக்கியங்களையும் தாவோயிசத்தையும் ஆழ்ந்து கற்றவர். தந்தையின் தூண்டுதலில் தான் லி பெய் கவிதைகள் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.
அந்த நாட்களில் அரச சபையில் கவிஞர்களுக்குப் பெரிய கௌரவமும் அங்கீகாரமும் கிடைத்தன. இசையோடு கவிதை பாடுவதை அரசர்கள் விரும்பினார்கள். ஆகவே அரசாங்க வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் கவிதை புனைவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரையே அவரைக் கவிஞராக்கியது.

நீதித்துறை மற்றும் வரிவசூல் செய்யும் அரசுப் பணிக்கு அந்த நாட்களில் தனித்தேர்வுகள் இருந்தன. அதில் வெற்றி பெறுவது எளிதாகயில்லை. ஆகவே லி பாய் நிர்வாகவியல் சார்ந்த நூல்களை ஆழ்ந்து படித்தார். இளமையில் அவர் எழுதிய கவிதைகள் யாவும் அவர் ரசித்த கவிதைகளின் தாக்கத்திலிருந்தன. அந்தக் கவிதைகளை நண்பர்கள் பாராட்டிய போதும் அது அசலான அனுபவத்திலிருந்து உருவாகவில்லை என்று அவரது தந்தை கறாரான விமர்சனத்தை முன்வைத்தார். ஆகவே அசலான அனுபவத்தைத் தேடியும் வேலை தேடும் முனைப்பாகவும் அவர் நீண்ட பயணத்தைத் திட்டமிட்டார். அந்தப் பயணம் அவரது ஆளுமையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.
பயண வழியில் வசித்த கவிஞர்களைச் சந்தித்து உரையாடினார். அறிஞர்களிடம் பாடம் கேட்டார். பௌத்த மடாலயங்களில் தங்கி ஞானசூத்திரங்களைப் பயின்றார்.
இந்தப் பயணத்தில் அவர் அறிஞர் ஜாவோவுடன் நெருங்கிப் பழகினார். அவர் வழியாக இராணுவ சட்டங்கள். நிர்வாகம், விவசாயம்,மருத்துவம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டார். அவரோடு இருந்த நாட்களில் தான் வாள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபாட்டு அதில் நிகரற்றவராக மாறினார்.
ஜாவோவின் வழியே மருத்துவத்தில் லி பாயிற்கு ஆர்வம் உண்டானது. மூலிகை மருந்துகளைக் கற்றுக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் அவர் எளியோர்களுக்கு மருத்துவ உதவி செய்திருக்கிறார்.

லி பெய்யின் வரலாற்றை வாசிக்கும் போது ஒற்றை ஆளாக அவர் குதிரையில் பரந்த நிலவெளியில் பயணிக்கும் காட்சி மனதில் தோன்றி மறைகிறது. தன் பயணத்தில் கண்ட மாறுபட்ட நிலக்காட்சிகள். மலை ,நதி, புயல் மழை,. மற்றும் கிராமிய வாழ்க்கை மற்றும் பெரிய நகரங்களின் உல்லாச வாழ்க்கை, மதுவிடுதிகள் என்று அத்தனையும் பற்றிக் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் சொந்தவாழ்க்கையின் நெருக்கடி, பிரிவு. குடும்பப் பிரச்சனைகள், அதிகாரம் தன்னை மண்டியிடச்சொல்லும் அவலம் என எதையும் அவர் கவிதைகளில் வெளிப்படுத்தவில்லை. தூய அன்பின் வெளிப்பாடாகவே அவரது கவிதைகள் காணப்படுகின்றன.
அரசாங்க வேலை கிடைக்காத சூழலில் பணக்காரப் பெண்ணான மிஸ் சூ என்பவரை லி பாய் திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்… அவளுக்கும் கவிதையில் மிகுந்த ஆர்வமிருந்தது. அவளது வீட்டில் பெரிய நூலகமிருந்தது. இந்தத் திருமணம் காரணமாக மாமனார் வழியாக அரசாங்க வேலை கிடைக்கக்கூடும் என்று நம்பினார். அதற்கான முயற்சிகள் நடந்த போதும் லி பாயிற்கு வேலை கிடைப்பது எளிதாகயில்லை. அவர் அரசாங்க உயரதிகாரிகளிடம் பணிந்து பேசாமல் அதிகாரமாக உரையாடியதே நிராகரிப்பிற்கான காரணம் என்கிறார்கள்
உங்கள் நற்பெயரை வளர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகும் என்று அவரது மனைவி நம்பிக்கையூட்டினார். இந்த முறை வேலை தேடி அவர் மூன்று ஆண்டுகள் வடதிசையில் பயணம் செய்தார். இடையிடையே பௌத்த மடாலயங்கள் தங்கி கவிதை எழுதினார். அவருக்குத் தேவையான பணஉதவிகளைச் செய்ததோடு அவர் மனைவி தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்கப்படுத்தினார்.
எதிர்பாராத விதமாக அவரது மனைவியின் குடும்பம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அவரது மைத்துனர் சொத்துகளைத் தனதாக்கிக் கொண்டு லி பாயின் மனைவியை வெறும் ஆளாகத் துரத்திவிட்டார். தன் பங்கிற்கு அவள் வீட்டின் நூலகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாள். விசுவாசமான பணியாளர்கள் அவளுடன் இருந்து அவளைக் கவனித்துக் கொண்டார்கள். வீடு திரும்பிய லி பாய் மனைவியைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சுகவாசஸ்தலம் ஒன்றுக்குப் பயணமானார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தன் மகளைப் பற்றி லி பெய் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மகளின் வாழ்க்கை என்னவானது என்பதைப் பற்றி அறிய முடியவில்லை என்கிறார்கள்.
வேலை தேடுவதில் மட்டுமின்றி லி பாய் எடுத்த எல்லா முடிவுகளும் தோல்வியில் தான் முடிந்தன. அரசியல் ரீதியாக அவர் முன்னெடுத்த சார்புகளும் தவறாக முடிந்தன. இதனால் லி பெய் சிறைபிடிக்கப்பட்டார். ஊழல் மலிந்த நீதிமன்றம் அவரை நாடுகடத்தும்படி தண்டனை அளித்தது. அதன்பிறகு அவர் கவிதைகள் எழுதுவதை விட்டு போக்கிடமின்றி ஒடுங்கிப் போனார்.
கவிதையின் வழியாக நாம் காணும் லி பெய் இளமையின் துடிப்போடு காணப்படுகிறார். அவரிடம் கவலையில்லை. வருத்தமில்லை. தனிமை பற்றிய புகார் எதுவுமில்லை. ஆனால் வாழ்க்கை வரலாற்றில் வரும் லி பாய் கனவிற்கும் ஏமாற்றத்திற்கும் இடையில் ஊசலாடுகிறார். உலகெங்கும் கவிஞர்கள் வாழ்க்கை ஒன்று போலதானிருக்கிறது.
இத்தனை அலைக்கழிப்புக்கள். அவமானங்கள். புறக்கணிப்பிற்கு இடையில் எப்படி இயற்கையில் மனதைக் கரைத்துக் கொண்டு நுண்மையான கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று வியப்பாகவே இருக்கிறது
கவிஞன் உலகியல் வாழ்க்கை தரும் நெருக்கடிகளை மோசமாக எதிர்கொண்ட போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனித்த உலகில் சஞ்சரிக்ககூடியவன் என்பதன் அடையாளமாகவே லி பெயின் வாழ்க்கை உள்ளது
.
June 16, 2021
வீடு திரும்பிய நாட்கள்
ரஷ்ய இயக்குநர் பாவெல் லுங்கின் இயக்கிய இஸ்ரேலியத் திரைப்படம் Esau. பைபிள் கதை ஒன்றின் நவீன வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய எழுத்தாளர் மீர் ஷாலேவின் நாவலை மையமாகக் கொண்ட இந்தப்படம் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேரும் போது என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது

“அன்றிலிருந்து இன்றுவரை மகிழ்ச்சியும் துரோகமும் ஒன்றுபோலவே இருக்கிறது“ என்று படத்தின் ஒரு காட்சியில் ஏசா குறிப்பிடுகிறார். அது தான் படத்தின் மையப்புள்ளி
குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசலும் கசப்புணர்வும் காலம் மாறினாலும் விலகிப்போய்விடுவதில்லை. . மீண்டும் ஒன்றிணையும் போது கடந்தகாலத்தின் கசப்புகள் மேலெழுந்து வரவே ஆரம்பிக்கின்றன. விட்டுக்கொடுத்துப் போவது கடந்தகாலத்தை மறந்துவிடுவது என்பது எளிதாகயில்லை. உலகோடு சமரசம் செய்து கொள்ளும் பலரும் குடும்பத்தினருடன் சமாதானம் செய்து கொள்வதில்லை.
வீட்டை விட்டு வெளியேறிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏசா ஊர் திரும்புகிறார். ஒரு தொலைபேசி அழைப்பு அவரை மறுபடி அழைத்து வருகிறது.

ஏசாவிற்கும் அவரது தந்தைக்குமான உறவு மாறவேயில்லை. நோயுற்ற அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள விரும்புகிறார் ஏசா. உண்மையில் அவரது கடைசி நாட்களில் உறுதுணையாக இருக்க விரும்புகிறார்.
ஆனால் குடும்பச் சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. புதிய பிரச்சனைகள் அவரால் உருவாக ஆரம்பிக்கின்றன
தந்தை தான் ஏசாவையும் ஜேக்கப்பையும் இணைக்கும் பாலம். பேக்கரி ஒன்றை நடத்தும் ஜேக்கப் கடின உழைப்பாளி. அவன் மனைவியை மிகவும் நேசிக்கிறான். அவளோ அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. மகள் தந்தையின் பேச்சைக் கேட்பதில்லை. தனக்கென யாருமில்லை என்றே ஜேக்கப் நினைக்கிறான். அவனது கோபம் அங்கிருந்தே பிறக்கிறது
இந்தச் சூழலில் தான் ஏசாவின் வருகை நிகழுகிறது.
படத்தின் துவக்காட்சி அபாரமானது. மாபெரும் ஆலயமணி ஒன்றைச் செய்து வண்டியில் ஏற்றி ஜெருசலம் நோக்கிக் கொண்டு செல்கிறார்கள். அந்த மணி தேவாலயத்தில் ஒப்படைக்கப்படுகிறது. அந்த மணியை செய்த ரஷ்ய கிறிஸ்தவர் வாழ்க்கையில் திடீரென விநோத நோய்க்குறி ஏற்படுகிறது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. அவர் முடங்கிப்போகிறார். அதிலிருந்து விடுபட அவர் யூத சமயத்திற்கு மதம் மாறுகிறார். அவரது வம்சாவழியில் தான் ஏசாவின் தந்தை வருகிறார். இந்தத் துவக்கப்புள்ளி தான் கதையின் ஆதார சரடு. புதிய நம்பிக்கைக்கும் பழைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான போராட்டமாகவே இந்தப் படத்தைக் கருதலாம்.

அமெரிக்காவில் வசிக்கும் ஏசா நாற்பது வயதானவர். சமையற்கலையைப் பற்றிப் புத்தகம் எழுதிப் புகழ்பெற்றவர். ஒரு நாள் அவருக்குச் சொந்த ஊரிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. நோய்வாய்ப்பட்ட தன் தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகப் பூர்வீகமான இஸ்ரேலிலுள்ள தனது பராம்பரிய வீட்டிற்குத் திரும்புகிறார்.
அவர்களின் குடும்பம் நீண்டகாலமாக ஒரு பேக்கரியை நடத்துகிறது. அந்தப் பேக்கரியை தற்போது நடத்தி வருபவன் ஏசாவின் தம்பி ஜேக்கப், அவனுக்கும் ஏசாவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் நீண்டகாலம் பிரிந்து வாழுகிறார்கள்.
ஏசா வருகை தந்தது ஜேக்கப்பிற்குப் பிடிக்கவில்லை. ஏசாவை பொறுப்பற்றவன் என்றே கருதுகிறான். ஆனால் ஜேக்கப்பின் மகள் ஏசாவை வரவேற்கிறாள். நட்போடு பழகுகிறாள்.
நீண்டகாலத்தின் பின்பு தன் மகன் தன்னைத் தேடி வந்துள்ளதை நினைத்து ஆபிரகாம் சந்தோஷம் கொள்கிறார்.
ஜேக்கப்பின் மனைவி லேயா நோயாளியாகப் பல காலமாக ஒரு அறையில் முடங்கிக் கிடக்கிறாள். அவளைக் குளிக்க வைப்பது முதல் உணவு ஊட்டுவது வரை அத்தனையும் ஜேக்கப் கவனித்துக் கொள்கிறான். அவள் இந்த நிலைக்கு ஆனதற்கு ஜேக்கப் காரணம் என்று மகள் நினைக்கிறாள்.
பேக்கரியில் உள்ள பணிகளுக்கு ஏசா உதவி செய்ய முயல்கிறான். அதை ஜேக்கப் விரும்பாமல் சண்டையிடுகிறான். எவ்வளவு முயன்றும் அவனை ஏசாவால் சமாதானம் செய்ய இயலவில்லை.
இவர்களுக்குள் என்ன பிரச்சனை. ஏன் இப்படிச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைப் பிளாஷ்பேக் காட்சிகள் விவரிக்கின்றன.
தனது கடந்தகால வாழ்க்கையை ஏசா ஒரு புத்தகமாக எழுதத்துவங்குகிறான். அது தான் பிளாஷ்பேக் காட்சியாக விரிவு கொள்கிறது.

மிகுந்த கவித்துவமாகப் படமாக்கபட்ட பிளாஷ்பே காட்சிகள். சிறுவயதில் ஒரே மூக்குக் கண்ணாடியை ஜேக்கப் ஏசா இருவரும் மாறி மாறி அணிந்து கொள்ள வேண்டிய சூழல். ஒருவரையொருவர் அனுசரித்துத் தான் வாழ வேண்டும். இந்தச் சூழலில் அழகியான லியாவை சந்திக்கிறார்கள். அவளுடன் பழகுவதில் அவர்களுக்குள் போட்டி நடக்கிறது.
ஏசாவுடன் லியா நெருங்கிப் பழகுகிறாள். இது ஜேக்கப்பிற்குப் பிடிக்கவில்லை. அவன் ஆத்திரமடைகிறான். லியாவிற்கு உதவிகள் செய்கிறான் ஏசா. அவளுடன் சைக்கிளில் சுற்றுகிறான். அவர்களுக்குள் காதல் வளர ஆரம்பிக்கிறது. ஏசாவை விடவும் ஜேக்கப் ரொட்டி சுடுவதில் திறமையானவன். ஏசாவோ படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கிறான்.
ஏசாவின் காதல் நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் ஜேக்கப். அவள் லியாவை ஏசாவிடமிருந்து பறித்துக் கொள்கிறான். ஏசாவின் நிறைவேறாத காதல் அவனை வேதனைப்படுத்துகிறது. வீட்டைவிட்டு வெளியேறி அவன் அமெரிக்கா செல்கிறான்.
அதன் பிறகு ஊரை மறந்து தன்னை ஒரு எழுத்தாளராக மாற்றிக் கொள்கிறான். அப்போதும் குடும்பத் தொழிலான ரொட்டி தயாரிப்பது பற்றியே புத்தகங்கள் எழுதுகிறான். புகழ்பெறுகிறான்.
கடந்த காலத்தின் வடுக்களுடன் நிகழ்காலத்தினை எதிர்கொள்கிறான் ஏசா. தன் தந்தையின் பிடிவாதம் மற்றும் கோபம் காரணமாகவே தாய் முடங்கிக்கிடக்கிறாள் என நினைக்கும் ஜேக்கப்பின் மகள் தந்தைக்கு எதிராக, அவருக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்கிறாள். முகத்திற்கு எதிராக வாதிடுகிறாள்.
அவள் எடுக்கும் புகைப்படங்களை ஜேக்கப் வெறுக்கிறான். ஆனால் ஏசா அவளைப் பாராட்டி உற்சாகப்படுத்துகிறார். அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறார். அவளது புகைப்படக்கண்காட்சிக்குச் செல்கிறான். இது ஜேக்கப்பை மேலும் கோபம் கொள்ளச் செய்கிறது
தன் மகளிடம் ஜேக்கப் கோபமாக நடந்து கொள்ளும் காட்சியில் அவனது இயலாமையும் அன்பும் ஒரு சேர வெளிப்படுகிறது.
லேயாவைத் திருமணம் செய்து கொண்டு இப்படி நோயாளியாக முடக்கி வைத்திருப்பதை ஏசாவால் தாங்க முடியவில்லை. ஒருநாள் அவள் அறைக்குள் சென்று அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறான். அதை ஜேக்கப்பால் ஏற்க முடியவில்லை.
தன் குடும்ப வரலாற்றை ஏசா புத்தகமாக எழுதுவதை ஜேக்கப் வெறுக்கிறான். ரகசியமாக எழுதப்பட்ட காகிதங்களைத் தேடி வாசிக்கிறான். ஆத்திரமடைகிறான். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது.

புரிந்து கொள்ளப்படாத அன்பு தான் அவர்களை இப்படி நடக்கச் செய்கிறது. மீண்டும் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படவே ஏசா புறப்படத் தயாராகிறான். ஆனால் முடிவு எதிர்பாராதவிதமாக நடக்கிறது.
பிரெட் கெலமனின் ஒளிப்பதிவு அபாரமானது. பேக்கரிக்குள் நடக்கும் காட்சிகளில் ஒளியமைப்பு ரெம்பிராண்டின் ஒவியங்களில் வெளிப்படுவது போல அத்தனை கச்சிதம்.
எல்லாக் குடும்பத்திலும் இப்படி வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத வடுக்களும் கசப்பான நினைவுகளும் இருக்கின்றன. சகோதரர்கள் இரத்தத்தால் பிணைக்கப்பட்ட போதும் நடைமுறை வாழ்க்கையால் பிரித்து வைக்கப்படவே செய்கிறார்கள். அடுத்த தலைமுறை தலையெடுத்த போதும் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து பெற்றோர்கள் வெளியே வருவதேயில்லை.
குடும்ப உறவின் சிக்கல்களை மிகவும் நுட்பமாகச் சித்தரித்துள்ள விதம் இந்தப் படத்தைத் தனித்துவமாக்குகிறது.
••
June 15, 2021
துறவின் பாதை
ரெட் பைன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் அமெரிக்க எழுத்தாளரான பில் போர்ட்டர் பௌத்தம் ஞானம் மற்றும் சீன இலக்கிய நூல்களை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார். குறிப்பாகத் தாவோயிசம் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதில் இவரே முன்னோடி..

1989 அவர் சீனாவில் விரிவாகப் பயணம் செய்தார். அப்போது சுங்கான் மலைகள் வழியாகப் பௌத்த துறவிகளைத் தேடி அலைந்து பெற்ற அனுபவத்தை Road to Heaven என்ற நூலாக எழுதியிருக்கிறார்.

இந்த நூல் சீனாவிலும் வெளியாகி மிகுந்த புகழ்பெற்றது. இன்றும் அந்த நூலை ஒரு வழிகாட்டியாகப் பௌத்த துறவிகள் கருதுகிறார்கள்.
ஹான்ஷான் எழுதிய குளிர்மலை கவிதைகளை ஆங்கிலத்தில் இவரே மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இதே மலைப்பகுதிக்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தந்து ஒரு ஆவணப்படத்தை ரெட் பைன் உருவாக்கியிருக்கிறார்.
பௌத்த துறவிகளைத் தேடிய இந்த மலைப்பயணம் மிகச்சிறந்த ஆவணப்பதிவாக உருவாக்கபட்டுள்ளது. உயர்ந்து நீண்டு செல்லும் மலையின் உச்சியில் சிறிய குடில்களை அமைத்துக் கொண்டும். குகையில் தனித்து வாழ்ந்தும் வரும் பௌத்த துறவிகளைச் சந்தித்து ரெட் பைன் உரையாடுகிறார்.
அவர்களின் தியான முறையை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, எளிய உணவு முறைகளை, தனிமையின் மகிழ்ச்சியை அற்புதமாகச் சித்தரித்துள்ளார். அந்த வகையில் இந்த ஆவணப்படம் துறவின் பாதையை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது
ரெட்பைனின் மனைவி தைவானைச் சேர்ந்தவர். ஆகவே மனைவியின் மூலம் அவருக்கு சீன இலக்கியம் மற்றும் பௌத்தம் மீது தீவிர ஈடுபாடு உருவானது. முறையாக பௌத்த நூல்களை பயின்று பௌத்த சமயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்த ஆவணப்படத்தில் எழுபது வயதைக் கடந்த போதும் கையில் ஒரு கோலுடன் உறுதியான மனதுடன் அவர் மலையில் தனித்து அலைகிறார்.
செங்குத்தான பாதையில் ரெட் பைன் ஏறிச் செல்லும் காட்சி மனதில் பதிந்து போய்விட்டது. குறிப்பாக அஸ்தமன சூரியனின் முன்னால் அமர்ந்து துறவியோடும் பேசும் காட்சியும், பெண் துறவியோடு உரையாடுவதும். ஆள் அற்ற குடிலின் கதவை தட்டி காத்திருப்பதும் அற்புதமான காட்சிகள்.
Hermits
June 13, 2021
ஆசையின் மலர்கள்
டேவிட் லீன் இயக்கிய Brief Encounter ஒரு அழகான காதல் கதை. காதலிக்கும் இருவரும் நடுத்தரவயதைச் சேர்ந்தவர்கள். தற்செயலாக ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. ஒரு ரயில் நிலையத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு அழகான காதல்கதையை உருவாக்கியிருப்பது எழுத்தாளர் நோயல் கோவர்ட்டின் தனித்துவம். ரஷ்ய நாவல் ஒன்றைப் படிப்பது போலவே இருக்கிறது.

மில்ஃபோர்ட் செல்வதற்காக லாரா ரயில் நிலையத்தில் காத்திருப்பதில் படம் துவங்குகிறது. அப்போது நாம் காணும் காட்சி படத்தின் பிற்பகுதியில் மறுபடியும் இடம்பெறுகிறது. ஆரம்பக் காட்சியின் முக்கியத்துவத்தை அப்போது தான் முழுமையாக உணருகிறோம்.
மில்ஃபோர்டில் வசிக்கும் லாரா திருமணமானவள். கணவன் குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழுகிறாள். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக அருகிலுள்ள நகருக்குச் செல்கிறாள், தேவையான ஷாப்பிங்கை முடித்துவிட்டு ரயில் நிலையத்திற்குத் திரும்பி வந்து அங்குள்ள சிற்றுண்டி நிலையத்தில் காத்திருப்பது வழக்கம்.
ஒரு நாள் தற்செயலாகப் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் போது ரயிலின் கரித்தூள் கண்ணில் விழுந்துவிடுகிறது. தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்தாலும் போகவில்லை. தற்செயலாக அங்கே வரும் டாக்டர் அலெக் ஹார்வி, அவள் கண்ணில் விழுந்த கரித்துகளை அகற்றி உதவுகிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது

அலெக் ஹார்விக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் நகர மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகிறார். தற்செயலாக லாராவுடன் ஏற்பட்ட நட்பினை அவர் தொடர விரும்புகிறார். மறுபடியும் அவளைச் சந்திக்கும் போது இருவரும் ஒன்றாகத் திரைப்படம் காணப்போகிறார்கள். சேர்ந்து மதிய உணவிற்குச் செல்கிறார்கள். இரவு ஒன்றாக ரயில் நிலையம் திரும்புகிறார்கள்
ரயில்வே சிற்றுண்டி நிலையத்தினை நடத்தும் பெண். உதவி செய்யும் சிறுமி. அங்கு வரும் டிக்கெட் பரிசோதகர். காவலர்கள். நடைபெறும் எனச் சின்னஞ்சிறு நிகழ்வுகள் அழகாகப் பின்னப்பட்டிருக்கின்றன
அலெக் ஹார்வி, போக வேண்டிய ரயில் வரும்வரை அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவளுக்கும் அலெக் ஹார்வியின் பேச்சும் நடத்தையும் பிடித்துப் போகிறது. இந்த நட்பை அவளது கணவன் மற்றும் பிள்ளைகள் அறிவதில்லை. உலகம் அறியாமல் மறைத்துக் கொண்டுவிடுகிறாள்

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒன்றாகப் பொழுதைச் செலவு செய்கிறார்கள். ஒருவர் மீது மற்றவர் காதல் கொண்டிருப்பதை உணருகிறார்கள். ஒருநாள் அலெக் ஹார்வி, தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவளும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.
நல்ல கணவன், அழகான குழந்தைகள் இருந்த போதும் லாரா காதலை விரும்புகிறாள். காதலை வெளிப்படுத்துகிறாள். டாக்டரும் அப்படியே. மருத்துவமனையில் இருந்து அவளைச் சந்திக்க டாக்டர் ஒடோடி வரும் காட்சி மனதில் உறைந்துவிட்டது. எவ்வளவு சந்தோஷம். எத்தனை எதிர்பார்ப்பு.
இருவருக்குமே தங்கள் உறவால் குடும்பம் பாதிக்கப்படும் என்று அறிந்திருக்கிறார்கள். ஆனால் அதற்காக காதலை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அலெக் ஹார்வி ஒரு நாள் காரில் லாராவை அழைத்துக் கொண்டு கிராமப்புறத்தை நோக்கிப் போகிறான். ஒரு பாலத்தில் நின்றபடியே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் காட்சியில் இளம் தம்பதிகள் போலவே நடந்து கொள்கிறார்கள். மிக அழகான காட்சியது

ஒரு நாள் அவர்கள் அலெக்கின் நண்பரும் சக மருத்துவருமான ஸ்டீபனுக்குச் சொந்தமான ஒரு பிளாட்டுக்குச் செல்கிறார்கள், ஆசையோடு கட்டி அணைத்துக் கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஸ்டீபன் வந்துவிடவே . அவமானமும் வெட்கமும் கொண்ட லாரா, பின் படிக்கட்டு வழியே தப்பி ஒடுகிறாள். கோபமும் ஆத்திரமுமாக தெருக்களிலும் ஓடுகிறாள். தனியே ஒரு இடத்தில் அமர்ந்து புகைபிடிக்கிறாள். போலீஸ்காரன் அவளை விசாரிக்கிறான். குழப்பத்துடன் அவள் ரயில் நிலையம் திரும்பிப் போகிறாள். கடைசி ரயில் பிடித்து வீடு போய்ச் சேருகிறாள். அவளது தடுமாற்றம் மிகச்சிறப்பாக விவரிக்கபடுகிறது.
இவர்களின் காதல் உறவு என்னவானது என்பதைப் படத்தின் பிற்பகுதி விவரிக்கிறது
படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் ரயில் நிலையத்தின் சிற்றுண்டிச் சாலையிலே நடக்கிறது. இருவரின் குடும்பத்திலும் பிரச்சனைகள் இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையே நடக்கிறது. ஆனாலும் அவர்கள் எதிர்பாராத தருணத்தில் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள். அதை நினைத்து ஏங்குகிறார்கள்.
டேவிட் லீன் படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.. மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்டபோது நேர்கோட்டில் தான் கதை செல்கிறது. ஆனால் திரைப்படத்திற்கெனக் கதையின் முடிவில் படத்தைத் தொடங்கிக் கடந்தகாலத்தினைப் பின்னோக்கிக் கொண்டு சென்றது இயக்குநரின் தனித்துவம்
இது போலவே ரயில் நிலையக்காட்சிகள் அபாரமாக படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக பிளாட்பாரத்தில் தற்கொலை எண்ணத்துடன் வந்து நிற்கும் லாராவின் முகத்தில் படும் இருளும் வெளிச்சமுமான காட்சி சிறப்பானது. நிழலான சுரங்கப்பாதையில் அவர்கள் முத்தமிட்டுக் கொள்வது, கடைசி ரயிலில் அவள் தனியே செல்வது போன்றவை அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
செலியா ஜான்சன் மற்றும் ட்ரெவர் ஹோவர்ட் இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தண்டவாளங்கள் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வது போலவே அவர்களின் காதலும் நடக்கிறது. லாரா அந்த உறவைப் பற்றிக் கற்பனை செய்கிறாள். அவளுக்கே தனது எண்ணங்களும் செயல்களும் புரியவில்லை. இழந்துவிட்ட இளமையை மறுபடி அடைவது தான் அவளது நோக்கமோ என்னமோ. அவள் மீது தீராத காதல் கொண்டிருந்தபோதும் டாக்டர் தான் பிரிவை முன்மொழிகிறார். அவர் விடைபெறும் காட்சி மறக்கமுடியாதது.

குளத்தில் எறிப்படும் கல் சலனங்களை ஏற்படுத்துவது போலப் புதிய நட்பு அவளுக்குள் நிறையக் கனவுகளை ஏற்படுத்துகிறது. அந்தக் கனவுகளை இதுவரை அவள் தன் கணவருடன் பகிர்ந்து கொண்டதில்லை. அவளுக்குள் இப்படியெல்லாம் ஆசையிருக்கிறது என்பதை அவளது குடும்பம் அறிந்திருக்கவில்லை . ஆனால் டாக்டரை சந்தித்த பிறகு அந்த ஆசையின் மலர்கள் அரும்புவதை அவள் உணருகிறாள். வசந்தகாலம் வந்தவுடன் மலர்கள் தானே அரும்புவதைப் போல இயற்கையான செயலாகக் கருதுகிறாள். லாரா தன் தோழியிடம் பொய் சொல்லும்படி போனில் கேட்கும் ஒரு காட்சியில் தான் குற்றவுணர்வு கொள்கிறாள். வேறு எங்கும் அவளிடம் குற்றவுணர்வு வெளிப்படுவதேயில்லை.
டாக்டரின் மனைவி மற்றும் பிள்ளைகள் படத்தில் காட்டப்படுவதில்லை. அவர்களை விட்டு விலகிப்போக டாக்டர் விரும்பவேயில்லை. ஆனால் இந்த இனிமையான விபத்து அவரை ஆசையின் பாதையில் செல்ல தூண்டுகிறது.
டாக்டரின் நண்பர் ஸ்டீபன் தன் அறையில் டாக்டருடன் பேசும் காட்சி மிக முக்கியமானது. தான் அவரது செய்கையால் ஏமாற்றம் அடைந்தேன் என்று ஸ்டீபன் சொல்வது பொருத்தமானது
மேடம் பவாரி, அன்னாகரீனினா போன்ற நாயகிகள் இதே பாதையில் நடந்து சென்றவர்கள். அவர்கள் காதலின் பொருட்டுக் குடும்பத்தை விட்டு விலகிப் போகிறார்கள். ஆனால் லாரா விலகிப்போகவில்லை.
தன்னைவிட்டு அவள் நீண்டதூரம் போய்விட்டதாக உணர்வதாக உணரும் லாராவின் கணவன் அவள் இப்போது திரும்பி வந்துவிட்டதாகச் சொல்லி அவளை அணைத்துக் கொள்கிறான்.
அவள் பயணித்த நாட்களும் காதல் நிகழ்வுகளும் உலகம் அறியாதவை. இனி வாழ்நாள் முழுவதும் அந்த நினைவுகள் ரகசியப் பெட்டகத்தினுள் பூட்டப்பட்டுவிடும். தனித்திருக்கும் பொழுதுகளில் அதை அவள் நினைவு கொண்டு கண்ணீர் சிந்தக்கூடும்.
••
June 12, 2021
துர்கனேவும் தஸ்தாயெவ்ஸ்கியும்
தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிய மிகச்சிறந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகிறார் சர்வோத்தமன். துர்கனேவின் நாவலையும் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலையும் ஒப்பிட்டுள்ள இந்த கட்டுரை மிக முக்கியமானது. அவரது வலைத்தளத்திலிருந்து இதனை மீள்பிரசுரம் செய்கிறேன்
••
தந்தைகளும் மகன்களும் : துர்கனேவும் தஸ்தாயெவ்ஸ்கியும்
சர்வோத்தமன் சடகோபன்
•••
துர்கனேவ் எழுதிய தந்தைகளும் மகன்களும் (Fathers and Sons – 1862)1 , தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய பதின் (The Adolescent – 1875)2 ஆகிய இரண்டு நாவல்களும் ரஷ்யாவில் நில அடிமைகளின் விடுதலையின் காலகட்டத்தையும் அந்தக் காலகட்டத்தில் நடந்த உரையாடல்கள், கொந்தளிப்புகள், குழப்பங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியவை. இரண்டுமே தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை மையப்படுத்திய நாவல்கள்.
துர்கனேவை எழுத தொடங்கிய அதே காலகட்டத்தில் தஸ்தாயெவ்ஸ்கியும் எழுத தொடங்குகிறார்.இருவருக்கும் இடையில் எப்போதும் நட்பு இருக்கவில்லை.தஸ்தாயெவ்ஸ்கி துர்கனேவை தொடர்ந்து தன் நாவல்களில் கேலி செய்திருக்கிறார்.பீடிக்கப்பட்டவர்கள் அல்லது சாத்தான்கள் (The Devils) நாவலில் வரும் பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் துர்கனேவின் கேலிச்சித்திரம்தான்.அதே போல அந்த நாவலில் வரும் நாவலாசிரியர் கரமாஸினோவ் துர்கனேவ் பற்றிய நேரடியான கேலிச்சித்திரம்.ஆனால் தந்தைகளும் மகன்களும் நாவலும் பதினும் ஒரே கருத்தைதான் முன்வைக்கின்றன.

துர்கனேவின் தந்தைகளும் மகன்களும் நாவல் மறுப்புவாதத்தை (Nihilism) அடிப்படையாக கொண்டது.பிரபுத்துவத்திற்கும்(Aristocracy) மறுப்புவாதத்திற்கும் இடையிலான மோதலை முன்வைக்கும் நாவல் என்றும் இதைப் பார்க்கலாம்.பிரபுத்துவத்தை பிரதிநித்துவம் செய்யும் கதாபாத்திரங்கள் நிகோலயும் அவரது மூத்த சகோதரர் பாவலும்.நிகோலயின் மகன் அர்காடியும் அவனது நண்பன் பஸாரோவும் மறுப்புவாதத்தை பிரதிநித்துவப் படுத்துகிறார்கள்.

தஸ்தாயெவ்ஸ்கியின் பதின் நாவலில் வரும் பிரதான கதாபாத்திரத்தின் பெயரும் அர்காடிதான்.அவனுடைய உயரியல் தந்தை வெர்ஸிலோவ் மற்றும் அவனது சட்டப்படியான தந்தை மகர் இவானோவிச் ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்கள்.மகர் இவானோவிச்சின் மனைவி சோபியாவின் மீது காதல் கொள்ளும் வெர்ஸிலோவ் அவளுடன் இணைந்து வாழ்கிறார்.அவர்களுக்கு பிறந்த மகன் அர்காடி.மகள் லிசா.மகர் இவானோவிச் வெர்ஸிலோவ்வின் பண்ணையில் வேலை செய்த நில அடிமை.இந்த நிகழ்வுக்கு பிறகு அவர் வெர்ஸிலோவிடம் மூன்றாயிரம் ரூபுள்களை பெற்றுக்கொண்டு நாடோடியாக சுற்றித்திரிகிறார்.அந்த திருமணம் முறிக்கப்படாததால் வெர்ஸிலோவும் சோபியோவும் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்கிறார்கள்.அர்காடி வெர்ஸிலோவின் மகன்.ஆனால் அவன் தன் பத்தொன்பது வயது வரையான வாழ்வில் மிகக் குறைந்த அளவே அவரை சந்திக்கிறான்.சோபியாவையும் இரண்டு மூன்று முறை மட்டுமே சந்திக்கிறான்.அவனது பிறப்பால் பால்ய பருவத்தில் அவனின் ஆசிரியர் அவனை மிகவும் அவமானப்படுத்துகிறார்.தன் உயிரியல் தந்தையை அறிந்துகொள்ளும் நோக்கில் பீட்டர்ஸ்பர்க் நகரம் வரும் அர்காடி தன் பயணத்தின் வழியில் தனக்கு என்று தனியாக சுயம் உள்ளது என்பதை அறிகிறான்.அவன் தன் சட்டப்படியான தந்தை மகர் இவானோவிச்சையும் சந்தித்து உரையாடுகிறான்.அவனும் பஸாரோவ் போல இரண்டும் இரண்டும் நான்கு என்பதற்கு அப்பால் வேறு எதுவும் முக்கியமில்லை என்கிறான்.

துர்கனேவின் நாவலில் பஸாரோவ் அர்காடியின் இல்லத்திற்கு வருகிறான்.அங்கு பாவலுக்கும் அவனுக்கும் இடையில் வாக்குவாதம் நடக்கிறது.பாவல் பஸாரோவ் முன்வைக்கும் மறுப்புவாதத்தை பற்றி பல கேள்விகளை எழுப்புகிறார்.நீங்கள் எதையெல்லாம் எதிர்கிறீர்கள்,கண்டனம் செய்கறீர்கள் என்று கேள்வி கேட்கம் போது அவன் நாங்கள் எல்லாவற்றையும் கண்டிக்கிறோம் என்கிறான்.எதுவுமே கண்டனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்கிறான்.எல்லா விழுமியங்களும்,லட்சியங்களும் கண்டனத்திற்கு உரியவை என்கிறான்.அப்போது பாவல் அவனிடம் தானும் தாராண்மைவாத சிந்தனைகளை கொண்டிருப்பதாகவும்,தானும் நில அடிமைகளின் விடுதலையை ஆதிரப்பதாகவும் ஆனால் அனைத்து விழுமியங்களையும் மறுப்பது எந்தப் பயனையும் தராது என்கிறார்.பிரபுத்துவத்தில் ஒருவர் பிறர் தன் கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறார்.அதனால் அவர் தன் கடமைகளை சரியாக செய்கிறார்.பிரபுத்துவத்தில் ஒருவர் சுயமரியாதை கொள்கிறார்.ஏனேனில் அவர் ஏதோ சில விழுமியங்களை கொள்கைகளை ஏற்கிறார்,பின்பற்றுகிறார்.அது அவரை ஒரு ஸ்திரமான ஆளுமையாக ஆக்குகிறது.ஒருவன் தனக்கு என்று ஒரு குணத்தை கொண்டிருக்கும் போது , அதை சில விழுமியங்களின் கொள்கைகளின் அடிப்படையில் வகுத்துக்கொள்ளும் போது அவன் தன்னை வலுவான ஆளுமையாக உணர்கிறான்.இது மிகவும் முக்கியம்.இல்லாவிட்டால் அவன் யார்,அவன் எதை உருவாக்குவான் என்று கேட்கிறார்.எங்களின் நோக்கம் எல்லாவற்றையும் மறுப்பது, மறுப்பது மட்டுமே,நாங்கள் எதையும் உருவாக்குவதில்லை என்கிறான் பஸாரோவ்.இப்படிப்பட்ட சிந்தனைககள் உள்ளீடற்ற ,அறமற்ற வாழ்க்கைக்கே வழிவகுக்கும் என்கிறார் பாவல்.
இந்த உரையாடல்தான் நாவலின் மையம்.இங்கே பாவல் ஒரு வலுவான ஆளுமை பற்றி பேசுகிறார்.அது பிரபுத்துவத்தில் இருக்கிறது.உங்கள் மறுப்புவாதத்தில் அப்படியான எதுவும் இல்லை என்கிறார்.இது ஒருவனை உள்ளீடற்றவனாக , அறமற்றவனாக ஆக்கும் என்கிறார்.பஸாரோவ் நிகோலயுடன் இணைந்து வாழும் இளம் பெண் பெனிச்காவை(Fenichka) ஒரு உரையாடலின் போது சட்டென்று முத்தமிடுகிறான்.அன்னா என்ற இளம் விதவையை காதலித்து அது ஏற்கப்படாமல் உடைந்துபோகிறான்.அவன் தன் மருத்துவ ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடுகிறான்.அதே நேரத்தில் மிகவும் சோர்வாக,சலிப்பாக உணர்கிறான்.தன் கிராமத்தில் இருக்கும் விவசாயிகளிடம் பேசுகிறான்.அவர்கள் இவன் சென்ற பின் அவனைப்பற்றி கேலியாக பேசிக்கொள்கிறார்கள்.ஒரு பிணத்தை அறுக்கும் போது கையில் வெட்டு ஏற்படுகிறது.நோய் தொற்றி இறக்கிறான்.அன்னா அவன் இறக்கும் தருவாயில் அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள்.ஒரு முறை அர்காடியிடம் பேசும் போது தன் தந்தை இந்த அறுபத்தியிரண்டு வயதில் எந்த சோர்வும் இன்றி தன் வேலைகளை மகிழ்ச்சியாக செய்யும் போது தான் இந்த இளம் வயதில் அடையும் சோர்வை பற்றி பேசுகிறான். மறுப்புவாதம் கலைகள் மீதும் இயற்கையின் மீதும் ஒருவன் கொள்ளும் மயக்கத்தை பித்தை மறுக்கிறது.மறுபுறம் அது அணைத்து விழுமியங்களையும் கண்டிக்கிறது.அது அவனை உள்ளீடற்றவனாக்குகிறது.உள்ளீடற்றவன் வலுவற்ற ஆளுமை ஆகிறான்.வலுவற்ற ஆளுமை எளிதில் பிறழும்.சலிப்படையும்.சோர்வடையும்.பாவலும் தன் இளமையில் ஒரு பெண்ணின் மீது பித்தெறி அலைகிறார்.ஆனால் அவர் அந்த உறவின் முறிவுக்கு பின் தன் கிராமத்தில் எளிமையான வாழ்வை வாழ்கிறார்.அவரில் கிளறும் பிறழ்வுகளை அவரின் பிரபுத்துவ விழுமியங்கள் தடுக்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் பதின் நாவலில் அர்காடி சிறுவயதிலிருந்தே தனியாக வளர்கிறான்.பல அவமானங்களை சந்திக்கிறான்.தன் வாழ்வை தீர்மானித்த தன் உயிரியல் தந்தை வெர்ஸலோவை சந்திக்க பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வருகிறான்.அவன் தன் தந்தையை புரிந்துகொள்ள முயன்றபடியே இருக்கிறான்.அவன் அறிந்த அறைகுறை தகவல்களை வைத்து அவரை முதலில் வெறுக்கிறான்.பின்னர் அவற்றில் பல தகவல்கள் பிழையானவை என்று அறிய வரும் போது அவரை மிகவும் நேசிக்கிறான்.வெர்ஸிலோவ் பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் வரும் ஸ்டீபனை போன்றவர்.அவர் ரஷ்யாவை ஐரோப்பாவோடு இணைத்து பார்க்கிறார்.ஐரோப்பாவின் எதிர்காலமே ரஷ்யாவின் எதிர்காலம் என்று கருதுகிறார்.கத்தொலிக்கத்தின் மீது ஈர்ப்பு கொள்கிறார்.ரஷ்யாவை எந்தளவு நேசிக்கிறாரோ அந்தளவு ஐரோப்பாவை நேசிக்கிறார்.உலக பொது மனிதனை எத்தனிக்கிறார்.ஆனால் அர்காடியுடனான ஒரு உரையாடலில் தன் ஐரோப்பிய பயணத்தில் ஜெர்மானியர்கள் ஜெர்மானியர்களாகவும்,பிரஞ்ச் தேசத்தவர்கள் பிரஞ்ச் தேசத்தவர்களாவும் மட்டுமே இருக்கிறார்கள்.அவர்கள் ஐரோப்பியர்களாக இல்லை என்கிறார்.இது தன்னை மிகவும் ஏமாற்றமடைய செய்ததாக சொல்கிறார்.ஒரு ரஷ்யன் மட்டுமே தன்னை ஐரோப்பியனாக உணர்கிறான் என்கிறார்.இந்த கருத்துதான் இந்த நாவலின் மையம்.இந்த கருத்தும் தந்தைகளும் மகன்களும் நாவலில் பாவல் சொல்வதும் ஒரே விஷயம்தான்.ஐரோப்பியாவின் கருத்துருவகமாக வெர்ஸிலோவ் வருகிறார்.தன் சுயத்தை இழந்த வெர்ஸிலோவின் மகன் அர்காடி தன் தொலைந்து போன பால்ய காலத்தால் பதின் பருவத்தில் ஒருவனில் முழுமை பெற வேண்டிய ஆளுமை உருவாக்கம் முழுமை பெறாமல் இருக்கிறான்.அவன் தன் உயிரியல் தந்தையை தேடி அவரை புரிந்து கொள்ள முயல்கிறான்.அப்போது தன் தந்தை காதலிக்கும் இளம் விதவை பெண்னான கத்ரீனாவை அவனும் காதலிக்கிறான்.
அவன் தன் உயிரியல் தந்தை பற்றிய சிந்தித்து அவரின் செயல்களுக்கு விளக்கங்களை உருவாக்கிக்கொண்டு , விளக்கங்கள் கேட்டுக்கொண்டு அதைப்பற்றிய சிந்தித்துக்கொண்டு அவர் காதலிக்கும் பெண்னை காதலித்து அவரில் தன்னை தேடுகிறான்.ஒரு மனிதன் இன்னொரு மனிதனில் ஏற்படுத்தும் பாதிப்பு எல்லையற்றது என்கிறார் ரிச்சர்ட் பிவியர்3.அவனின் சட்டப்படியான தந்தை மகர் இவானோவிச்சை அவர் இறக்கும் தருவாயில் சந்திக்கும் போது பரவசம் கொள்கிறான்.அவன் வெர்ஸிலோவிலிருந்து தன்னை பிரித்து உணராமல் தவிக்கிறான்.இதை வளர்ச்சியற்ற சுயம் (Enmeshment/undeveloped self) என்கிறார்கள்.இதனால் அவனால் தன்னை மற்றமையிலிருந்து விலக்கி தனியாக உணர முடிவதில்லை.அதனால் ஒரு தகவல் கிடைக்கும் போது அவன் வெர்ஸிலோவை வெறுக்கிறான்.மறுகணம் அந்த தகவல் தவறு என்று கருதும் போது அவரை நேசிக்கிறான்.உண்மையில் அவன் அவரை நேசிக்கவும் இல்லை,வெறுக்கவும் இல்லை , அவன் அவரில் தன்னை பார்க்கிறான்.அவன் தனித்த சுயம் கொண்ட தனி ஆளுமை என்பதை நாவலின் இறுதியில் உணர்கிறான்.ஐரோப்பாவிலிருந்து ரஷ்யா தன்னை விலகி பார்க்க வேண்டும் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.இங்கிருந்து கொண்டு ரஷ்யா ஐரோப்பாவின் நிலைபாடுகளை எதிர்க்கலாம்,ஆதிரிக்கலாம்.ஆனால் அது ஐரோப்பா அல்ல.அதன் சமயம் ரஷ்யாவின் மரபான கிறுஸ்துவம்.அதன் கருத்துருவகம்தான் அர்காடியின் சட்டப்படியான தந்தை விவசாயியும் நாடோடியுமான மகர் இவானோவிச்.அர்காடி தான் தனித்த சுயம் கொண்ட மனிதன் என்பதை உணரும் போது அவன் வெர்ஸிலோவை புரிந்துகொள்கிறான்.அவன் வலுவான ஆளுமையாகிறான்.
ஒருவனின் பதின் பருவத்தில்தான் ஆளுமை உருவாக்கம், பிறரிலிருந்து தன்னை வேறுபடுத்தி பார்க்கும் சுயம் உருவாகுகிறது.பிறரிலிருந்து தன்னை பிரித்து பார்க்கும் சுயம் தன் செயல்களை எண்ணங்களை தொகுத்து தனக்கான பிரக்ஞையை உருவாக்கிக்கொள்கிறது.பிறரிலிருந்து தன்னை வேறுபடுத்தி பார்க்க இயலாத சுயம் பிறரில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதை அறிய ஏக்கம் கொள்கிறது.நான் இந்த விஷயத்தில் இந்த முடிவை எடுக்கிறேன் என்று இல்லாமல் பிறர் இதை எப்படி கையாள்வார்கள் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள்.சிதையுண்ட ஆளுமை பிறரில் தன்னை நிறுவ முயல்கிறது.பிறரில் தன்னை நிறுவ முயலும் சுயம் அதற்காக அதிகாரத்தை நோக்கி நகர்கிறது.அதிகாரம் மூலம் மட்டுமே தன்னை பிறரின் சுயத்தின் பகுதியாக மாற முடியும் என்று அது நினைக்கிறது.
குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ் நான் நெப்போலியனாக விரும்பினேன் அதனால் நான் கொலை செய்தேன் என்கிறான்.இந்த நாவலில் வரும் அர்காடி தான் ரொத்ஸ் சைல்டு (Rothschild) ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும்.ஆனால் அந்த செல்வத்தை கொண்டு ஆடம்பரமான வாழ்வை வாழ வேண்டும் என்று அவன் விரும்பவில்லை.மாறாக சாலையில் ஒரு பிச்சைகாரன் போல இருந்தால் போதும்,தான் மிகப்பெரிய செல்வந்தனாக இருப்பதும் ஆனால் அது பிறருக்கு தெரியாமல் தான் ஒரு எளிய மனிதனாக சாலைகளில் சுற்றும் போது பிறர் தன்னை சாதாரணமாக நடத்துவார்கள்.ஆனால் தன்னளவில் தான் மிகப்பெரிய செல்வந்தன் என்ற எண்ணம் அளிக்கும் கிளர்ச்சி தனக்கு போதுமானது என்று நினைக்கிறான்.பிறரில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதை முறியடிக்க அவன் ரொத்ஸ் சைல்டு ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.அதன் மூலம் அதிகாரத்தை அடைய முடியும் என்று கருதுகிறான்.அவனது அதிகாரம் குறித்த ஏக்கம் பிறரில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதும் அது அப்படியில்லை என்று தான் மட்டுமே அறியும் ரகசியம் அளிக்கும் கிளர்ச்சியுமாக இருக்கிறது.அவன் செல்வந்தனாக யாருக்கும் உதவ வேண்டும் என்று நினைக்கவில்லை.அந்த செளகரியங்களில் திளைக்க வேண்டும் என்று விரும்பவில்லை.மாறாக பிறர் தன்னைப்பற்றி கொள்ளும் தவறான எண்ணத்தை எண்ணி உள்ளுக்குள் குதூகலித்து அவர்களை துச்சமாக கருத வைக்கும் ரொத்ஸ் சைல்டு என்ற கருத்து அவனுக்கு போதுமானதாக இருக்கிறது.
பீடிக்கப்பட்டவர்கள் நாவலில் பேராசிரியர் ஸ்டீபனின் மாணவர்களாக வரும் பீட்டரும் , நிகோலயும் அதிகாரத்தை அடைய விரும்புகிறார்கள்.ரஸ்கோல்நிகாவின் நோக்கமும் அதிகாரத்தை அடைவதாக இருக்கிறது.அதிகாரத்திற்கும் சிதையுண்ட ஆரோக்கியமற்ற வளர்ச்சியற்ற சுயத்திற்கும் உண்டு சம்மந்தம் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.சிதையுண்ட ஆளுமைகளாக வளரும் பிள்ளைகள் அதிகாரத்தை நோக்கி செல்வதற்கன காரணம் தங்கள் வேர்களை முழுவதுமாக விடுத்து ஐரோப்பாவின் புதிய கருத்துகளில் தனக்கான எதிர்காலத்தை தேடும் தந்தைகளே காரணம் என்கிறார் தஸ்தாவெய்ஸ்கி.ஐரோப்பாவிலிருந்து தன்னை விலக்கி பார்க்கும் ரஷ்யா தனக்கென்று தனித்த மரபு இருக்கிறது என்பதை அறியும்.அதில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ஐரோப்பாவோடு உரையாடுவதும் உரையாடலில் தனக்கு பிடித்தமானவற்றை ஏற்பதும் , பிடிக்காதவற்றை நிராகரிப்பதும் சாத்தியம் என்கிறார்.மாறாக ரஷ்யாவையே ஐரோப்பாவில் காண விரும்பும் போது ஒரு பக்கம் ஏமாற்றமும் மறுபக்கம் கிளர்ச்சியும் மட்டும்தான் சாத்தியம் ஆகிறது என்கிறார்.இப்படியான சிதைவுகளால் எளிய பிழைகளை கொண்ட சிந்தனைகளை அது அளிக்கும் கிளர்ச்சியின் காரணமாக நாம் ஏற்கிறோம் என்கிறார்.
துர்கனேவின் நாவலில் வரும் நிகோலய், பஸாரோவ் இயற்கையை பார்த்து வியக்க முடியாது அது மனிதன் வேலை செய்ய வேண்டிய தொழிற்சாலை என்று சொல்வதை ஏற்க முடியாமல் இயற்கையின் எழிலில் தன்னை மறந்து நேரம் கழிக்கிறார்.பஸாரோவால் ஈர்க்கப்படும் அர்காடி பின்னர் அவனிலிருந்து விலகி இசையிலும் காதலிலும் தன்னை இழக்கிறான்.அவன் கத்யா என்ற அன்னாவின் சகோதரியை திருமணம் செய்து கொள்கிறான்.நிகோலயுடன் இணைந்து வாழும் பெனச்காவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது சகோதரர் பாவல் அறிவுறுத்துகிறார்.நிகோலயும் பெனச்காவை திருமணம் செய்து கொள்கிறார்.பஸாரோவின் கல்லறையில் பிராத்தனை செய்யும் அவனது பெற்றோரின் காட்சியோடு நாவல் நிறைவுறுகிறது.இயற்கையின் மீதான கற்பனாவாதம் அற்று,இசையின் மீது ஈர்ப்பற்று,காதலை ஒரு உணர்ச்சி கொந்தளிப்பு மட்டுமே என்றும் பார்க்கிறான் பஸாரோவ்.பதின் நாவலில் வரும் மகர் இவனோவிச் தன் முதுமையில் அர்காடியுடன் பேசுகிறார்.அப்போது மனிதனால் தன்னை தாங்கிக் கொள்ள முடியாது.அவன் எதனிடமாவது மண்டியிடத்தான் வேண்டும் என்கிறார்.பஸாரோவ் தன் கூர் அறிவை கொண்டு மட்டும் உலகை நோக்குகிறான்.காடுகளில் திரிந்து தவளைகளை எடுத்து வந்து வெட்டி ஆராய்ச்சி செய்கிறான்.இயற்கையை ஒரு தொழிற்சாலையாக பார்க்கிறான்.அவனால் தன் வலுவை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு முறை காதலை மறுத்த பின் அன்னா அவனை அவளது இல்லத்தில் தங்க சொல்கிறாள்.அதற்கு பஸாரோவ் மீன் தண்ணீரிலிருந்து சிறிது நேரம் காற்றுக்காக வெளியே வரலாம்,ஆனால் அதன் இடம் தண்ணீர்தான் என்கிறான்.அவனது பிரக்ஞை எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கிறது.அவன் தன்னிலையை மறக்கச்செய்யும் எதையும் ஏற்க மறுக்கிறான்.தன்ளுள் கிளர்தெழும் காதலை கண்டு எரிச்சல் கொள்கிறான்.அவன் இறுதியல் தன் வலுவை தாங்க முடியாமல் ஒரு விபத்தில் மரணமடைகிறான்.
பஸாரோவின் நீட்சிதான் தஸ்தாயெவ்ஸ்கியின் ரஸ்கோல்நிகோவ்,இவான் கரமசோவ்,அலெக்ஸி,அர்காடி.பஸாரோவ் உயிருடன் இருந்திருந்தால் அவனும் அதிகாரத்தை நோக்கித்தான் நகருவான்.கூர் அறிவைத்தாண்டி மனிதனுக்கு இயற்கையின் அழகை பார்த்து வியக்கும் கற்பனாவாதமும்,தன்னிலையை மறக்கச்செய்யும் காதலும் இசையும், தான் பிறரில் இருந்து வேறு என்று அறிய சுயமும் அதை தரும் மரபும், தன் வலுவை சுமக்க முடியாத போது மண்டியிட ஆன்மிகமும் தேவைப்படுகிறத்து.இவையனைத்தும் இணையும் போதே ஒரு சமூகத்தில் கூடி வாழும் வாழ்க்கை சாத்தியமாகிறது.கூட்டு வாழ்க்கை (sobornost) என்று இதை பற்றிச் சொல்கிறார் ரிச்சர்ட் பிவியர்.
துர்கனேவ் போல தஸ்தாயெவ்ஸ்கி இயற்கையை அழகை வியந்து எழுதுவதை நான் எங்கும் வாசித்ததில்லை.துர்கனேவின் நாவல் ஒரு எளிய தொடக்கம்,கதாபாத்திரங்களின் அறிமுகம்,அவர்களின் சிக்கல்,முதிர்வு என்று செல்கிறது.கற்பனாவாதத் தண்மை கொண்ட நாவல்.தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் ஒரே நேரத்தில் பத்து பேர் மேடையில் நின்று கொண்டு அன்றைய நிகழ்வுகளை சொல்வது போன்றது.இதைப்பற்றி பக்தீன் சொல்வதை மேற்கொள் காட்டுகிறார் ரிச்சர்ட்.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் படிப்படியான வளர்ச்சி இருப்பதில்லை.மாறாக அதில் அதன் மையம் மனிதர்கள் இணைந்து இருத்தலும்,அவர்களுக்கு இடையிலான பரிமாற்றமும் தான்.அதனாலே அவரின் நாவல்கள் காலத்தில் நிகழ்வதில்லை,மாறாக வெளியில் நடக்கிறது.ஒரே காலவெளியில் நாடகீய வடிவில்,அந்த நாடகீய வடிவத்திற்கான நம்பகமான தரவுகளையும் உருவாக்கி அவரின் கதாபாத்திரங்களை அங்கு கூட்டிணைவான சூழலில் அடுத்தடுத்து வைத்து நாடகீயத்தருணங்களை உருவாக்குகிறார் தஸ்தாயெவ்ஸ்கி.எல்லா நாடகீயத்தருணங்களையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து அந்த நேரத்தில் மனிதஉறவுகளுக்கு இடையில் நடக்கும் விஷயங்களை ஊகிப்பதுதான் அவரின் நோக்கமாக இருக்கிறது என்கிறார் பக்தீன்.
பக்தீன் சொல்லியிருப்பதை படிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கி இயற்கையின் பரிணாமத்தை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.அதனாலே அவரின் நாவல்களில் இயற்கையை வியந்து தன்னை மறந்து நிற்கும் துர்கனேவின் பார்வை இல்லை.அவரின் நோக்கம் எப்போதும் மனித உறவுகளுக்கு மத்தியில் நாடகீயத்தருணங்களில் நடக்கும் போராட்டங்களை பற்றியே இருக்கிறது.அப்போது அவர்களின் விழுமியங்கள் என்னவாகிறது.எது முன்னகர்கிறது,எது பின்னகர்கிறது என்று பார்க்கிறார்.
அதனாலே துர்கனேவின் நாவல்கள் காலத்தில் பயணிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் வெளியில் பயணிக்கிறது.அவரின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் மூன்றே நாட்களில் நடக்கிறது.அதனால் அவரின் நாவல்களில் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கின்றன.
இரண்டு நாவல்களும் ஒருவன் தன் தனித்த சுயத்தை உணர்வதும் அங்கிருந்து மற்றதை மதிப்பீடவும் ,பிறரிலிருந்து தன்னை பிரித்து பார்க்கும் சுயம் மூலம் தன் செயல்களை எண்ணங்களை தொகுத்து தனக்கான பிரக்ஞையை உருவாக்கிக்கொள்ளவும்,அப்படியாக அவனை கூட்டிணைவான வாழ்வை வாழ வழிவகுக்கும் என்கின்றன.உண்மையில் துர்கனேவ் தந்தைகளும் மகன்களும் நாவலை இந்த அடிப்படையில் எழுதவில்லை என்று தோன்றுகிறது.அவர் மரபை மறுக்கும் மறுப்புவாதம் போன்ற சிந்தனைகளை பரிசீலித்தார்.அவருக்கு மேற்குலகின் சிந்தனைகள் மீது ஆர்வம் இருந்தது.ஆனால் நாவலை வாசிக்கும் போது பஸாரோவை மறுப்புவாதம் எவ்வாறு கொல்கிறது என்றே அவர் சொல்ல வருவதாக தோன்றுகிறது.அந்த வகையில் இந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றுக்கு முந்தைய குரலாக இருக்கிறது.
பஸாரோவ் அன்னாவின் வீட்டில் அவளை பார்க்கும் போது அவளின் அழகில் லயிப்பான்.அப்போது அவளின் இடையின் வளைவை பற்றிய வர்ணனை வருகிறது.இப்படியான ஒரு வர்ணனை தஸ்தாயெவ்ஸ்கியின் எந்த நாவலிலும் நான் பார்த்தில்லை.அவர் ஒரு பெண்னை பற்றிய சித்திரத்தை உருவாக்குவார்.அவர் பேரழகி என்று புரியவைப்பார்.ஆனால் இப்படியான வர்ணனைகளை அவரில் பார்க்க முடியாது.இரண்டு பேர் உதட்டில் முத்தமிட்டுக்கொண்டார்கள் என்று கூட நேரடியாக எழுத மாட்டார்.ஆனால் அதைச்சுற்றி இரண்டு பக்கங்களுக்கு எழுதுவார்.தந்தைகளும் மகன்களும் நாவலை தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருந்தால் ஆயிரம் பக்கங்களுக்கு குறையாமல் எழுதியிருப்பார்.
**
நன்றி
தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை
தேசாந்திரி அறிவிப்பு
தேசாந்திரி பதிப்பகம் அனைத்து நூல்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. புதிதாக கர்னலின் நாற்காலி, தேசாந்திரி, எனது இந்தியா ஆகிய மூன்று நூல்களும் கெட்டி அட்டைப்பதிப்பாக வெளிவந்துள்ளது.

எனது புதிய நூல்களுக்கும் இதே சலுகை வழங்கப்படுகிறது

ஆன்லைனில் வாங்க
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
தொலைபேசி (044)-23644947
desanthiripathippagam@gmail.com
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
