மாடத்தி
லீனா மணிமேகலை தயாரித்து இயக்கியுள்ள மாடத்தி திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் சிறந்த படம்.
கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான லீனா தொடர்ந்து மாற்றுசினிமாவை முன்னெடுத்து வருபவர். தனது ஆவணப்படங்களின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லீனா மாடத்தியின் வழியே புதிய திரைச்சாதனையைச் செய்திருக்கிறார். சுயாதீனப்படங்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. அந்த வகையில் மாடத்தி மிக முக்கியமான படம் என்பேன்.

மாடத்தி கோவிலுக்குச் செல்லும் புதுமணத்தம்பதிகளின் வருகையில் துவங்கும் படம் கடவுளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது.
வன்கொலை செய்யப்பட்ட பெண்கள் தெய்வமாக்கப்படுவது உலகெங்கும் நடந்துவரும் விஷயம். இங்மார் பெர்க்மேன் இயக்கிய தி விர்ஜின் ஸ்பிரிங் படத்தில் இடையர்களால் வன்புணர்ச்சி செய்து கரின் என்ற இளம்பெண் கொல்லப்படுகிறாள் அந்த இடத்தில் ஒரு நீரூற்றுக் கிளம்புகிறது. இடைக்காலச் சுவீடனில் நடைபெற்ற அந்தக் கதையில் வரும் நீரூற்று அவள் புனித உருவம் கொண்டுவிட்டதன் அடையாளம்.

கோபல்ல கிராமம் நாவலில் ஊரணியில் கொலைசெய்யப்படும் பெண் தெய்வமாகிறாள். கழுவேற்றிக் கொல்லப்பட்ட திருடனும் தெய்வமாகிவிடுகிறான். இப்படித் தெய்வங்கள் உருவான கதை விசித்திரமானது.
நாட்டார் பெண் தெய்வங்களைப் பற்றிய வாய்மொழிக் கதைகளில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்த இடம்பெறுகிறது. ஒருவராலோ அல்லது ஊர்மக்கள் ஒன்று சேர்ந்தோ வன்கொலை செய்கிறார்கள். உயிரிழந்தவர்கள் பின்னாளில் தெய்வமாகிறார்கள்.
நாட்டுப்புற தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாகவே நம்பிக்கை. இதிலும் ஆறு தான் கதையின் மௌனசாட்சியம். ஆறு அங்கு நடந்த எல்லா நிகழ்வுகளையும் மௌனமாகப் பார்த்தபடியே ஒடிக் கொண்டிருக்கிறது.

வாய்மொழிக் கதைகளைப் போலவே படமும் நேரடியாக, விநோதமும் புதிரும் வசீகரமும் கொண்ட மொழிதலை முன்னெடுக்கிறது. தீட்டு என்பதை ஒரு பொதுக்குறியீடாகப் படம் சித்தரிக்கிறது. யோசனா என்ற பதின்வயது பெண்ணின் உலகம் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் தன் ஆசையில் பாதையில் சிறுபறவையைப் போலச் சுற்றித் திரிகிறாள். அவள் தன் பாலுணர்வின் முதல் மலர்வை உணர்வதும் அந்த ரகசிய இச்சையின் பின்னால் செல்வதும் அதுவே அவளது வீழ்ச்சியின் காரணமாக அமைவதும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
புதிரை வண்ணார்கள் எனப்படும் தீட்டு துணிகளையும் சாவுத்துணிகளையும் துவைக்கும் மக்களின் வாழ்க்கையை அவர்கள் அனுபவித்த சாதியக் கொடுமைகளைப் படம் பேசுகிறது. தீட்டு என்பது பெண்ணின் உடலோடு மட்டும் தொடர்புடையதில்லை அது சாதியின் வெளிப்பாடு.
படத்தின் ஒரு காட்சியில் உவர் மண் எடுத்து வரும் வேணி ஆதிக்கச்சாதியினரைக் கண்டதும் பயந்து ஒடி புதிரில் ஒளிந்து கொள்கிறாள். பார்த்தாலே தீட்டு என்று அவளைச் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது.
ஊரின் தீட்டுத்துணிகளைச் சலவை செய்து தரும் அவர்கள் ஊர் கண்ணல் படாமல் மறைந்து வாழ வேண்டும் என்பதே கட்டுப்பாடு. அப்படி ஒரு ஒடுக்கப்பட்ட வாழ்க்கையின் ஊடாக வளரும் யோசனா தன் வயதுக்கே உரிய ஆசைகளுடன் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சினைப் போலச் சுதந்திரமாக அலைகிறாள்.

இலவம்பஞ்சு உலுக்கும் காட்சி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கனவுகளும் ஆசைகளும் கொண்ட யோசனா அவளை விலக்கி வைத்த உலகிற்குள், ஊருக்குள் நுழைய விரும்புகிறாள். அந்த உலகம் அவளைக் குரூரமாகக் கல்லெறிந்து பலி வாங்குகிறது.
யோசனா அருவியில் சுதந்திரமாக நீந்திக் குளிப்பது. மலையுச்சியில் தனியே அமர்ந்து சாமிக்குப் படைக்கப் பழங்களைச் சாப்பிடுவது, (அக்காட்சியில் குரங்குகள் கூட அவளுடன் ஸ்நேகமாக இருக்கின்றன.) ஆணின் சட்டையை அணிந்து கொண்டு கனவுகளுடன் ஒடுவது. பாட்டியோடு அவளுக்குள்ள நெருக்கம் என அவளது உலகம் இயல்பாக, அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
வேணியாக நடித்துள்ள செம்மலர் அன்னம் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். வன்புணர்வு செய்யப்பட்ட பிறகு எழுந்து நடக்கும் போது அவள் பாதங்களை ஊன்ற முடியாமல் நடந்து போகிறார். எவ்வளவு சிறப்பான நடிப்பு. கணவனுக்குச் சாராயம் ஊற்றிக் கொடுத்துவிட்டு அவளை நிலத்தில் தள்ளி வன்புணர்வு கொள்ளும் போது அவரது முகத்தில் வெளிப்படும் வலியும் வேஷ்டி கிழியத் துவைக்கும் போது ஏற்படும் ஆத்திரமும். குருதிக்கறை படிந்த தீட்டுதுணிகளைக் காலால் அவள் துவைக்கும் காட்சியும் அபாரமானது. அந்தக் காட்சி தான் அவளது மனதின் உண்மையான வெளிப்பாடு.

கல்மண்டபத்தில் நான்கு பேர் மழையோடு அமர்ந்து பீடி பிடிக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து ஊர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அகிரா குரசோவாவின் ரோஷமானை நினைவுபடுத்தியது அந்தக் காட்சி.
கிராமத்திருவிழாவின் துவக்கம். அதற்காக புதிய தெய்வம் உருவாக்கபடுவது. பெண்களின் முளைப்பாரி. ஊர் கூடி இரவில் வழிபாடு செய்வது என படத்தின் இறுதிக்காட்சிகளின் துவக்கமும் அதையொட்டி நடக்கும் நிகழ்வுகளும் சிறப்பாக காட்சிப்படுத்தபட்டுள்ளன.

யோசனாவாக நடித்துள்ள அஜ்மினா காசிம், வேணியாக நடித்துள்ள செம்மலர் அன்னம், சுடலையாக நடித்துள்ள அருள்குமார், கிராமத்தலைவராக நடித்துள்ள புருஷோத்தமன் எனப் பொருத்தமான நடிகர்கள் அந்தக் கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். திரையில் காணும் இந்தப் புதிய முகங்கள் உண்மைக்கு நெருக்கமாக நம்மை உணரவைக்கிறார்கள்
சாதிய ஒடுக்குமுறையும் ஆணாதிக்கமும் பிரிக்கமுடியாதவை அதற்குக் காலம் காலமாகப் பெண்களே பலியாகிறார்கள். அவர்களைத் தெய்வமாக்கி வழிபடுவது என்பது குற்றவுணர்வின் தப்பித்தல் மட்டுமே. இங்கே மனிதர்கள் மட்டுமில்லை தெய்வங்களும நீதி மறுக்கபட்டவர்களே என்பதை லீனா அழுத்தமாகச் சொல்கிறார்.
மிகச்சிறந்த படத்தைத் தந்த இயக்குநர் லீனா மணிமேகலையே மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
