S. Ramakrishnan's Blog, page 128
May 23, 2021
கடைசிக் குதிரைவண்டி
புதிய சிறுகதை
கண்ணாயிரம் வீட்டின் பெரிய இரும்புக் கேட்டை ரகசியமாகத் தள்ளி அந்த இடைவெளியின் வழியே உள்ளே எட்டிப்பார்த்தார் சேர்மதுரை.
குதிரை கண்ணில் படவில்லை.
வாசலை ஒட்டி ஒரு இன்னோவா கார் நிற்பது மட்டும் தான் கண்ணில் தெரிந்தது. எக்கிக் கொண்டு பார்த்தபோது நாலைந்து பூச்செடிகளும் பைக் ஒன்றும் கண்ணில் பட்டது
குதிரையை எங்கே கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று மாலை அவரது கடனுக்காகக் குதிரையைக் கண்ணாயிரத்தின் ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.

அந்த நேரம் சேர்மதுரை வீட்டில் இல்லை. குதிரைவண்டி ஒட்டுவது நின்று போன பிறகு மாலை நேரம் சூப்பும் காளானும் விற்கும் தள்ளுவண்டிக் கடையில் எடுபிடி வேலை செய்துவந்தார். ஒரு நாளைக்குப் பத்து ரூபாய் சம்பளம். இரவுச்சாப்பாடு அவர்களே தந்துவிடுவார்கள்.
பகல் நேரம் கொய்யாப்பழம் வாங்கி விற்பது, தள்ளுவண்டியில் ஐஸ் விற்பது என்று கிடைத்த சிறுவேலைகளைச் செய்து வந்தார். இந்த வருமானத்தில் எப்படி வாங்கிய இருபதாயிரம் ரூபாய் கடனை அடைப்பது என்று புரியவில்லை. அசலைப் போல ரெண்டு மடங்கு வட்டி கொடுத்தாகிவிட்டது. மூன்று மாதமாக வட்டி தரவில்லை. கடன்காரன் குதிரையைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான். அவரிடம் உள்ள ஒரே சொத்து குதிரை தானே.
அதைப் பிடித்துக் கொண்டு போனால் போகட்டும் என்று வீடு திரும்பிய இரவில் வீறாப்பாக இருந்தார். ஆனால் மனது கேட்கவில்லை. குதிரைக்குப் புல் போட்டிருப்பார்களா. அதன் காதில் புண் இருந்ததே அதைச் சுத்தம் செய்து களிம்பு போட்டிருப்பார்களா என்று கவலையாக இருந்தது.
ஒருவேளை கண்ணாயிரம் வீட்டிற்குப் போனால் குதிரைக்குப் பதில் தன்னைப் பிடித்துக் கட்டிப்போட்டாலும் போட்டுவிடுவார்கள். இந்தப் பயம் இரவில் குதிரையைத் தேடி போகாமல் செய்தது.
ஆனால் காலையில் அவரால் வீட்டிலிருக்க முடியவில்லை. வழக்கமாகப் பறிப்பது போல நாலைந்து மூலிகைகளைப் பறித்துக் கசக்கி ஒரு துணியில் முடிந்து கொண்டு குதிரையக் காணுவதற்காகக் கிளம்பினார். காலை ஒன்பது மணிக்குப் பிறகு போனால் கண்ணாயிரம் வீட்டில் இருக்கமாட்டார் என்று அவருக்குத் தெரியும். அவர் எப்போதும் பெட்ரோல் பங்கில் தானிருப்பார். அங்கே போய்த் தான் சேர்மதுரை கடன் வாங்கினார். சில நாட்கள் வட்டிப்பணம் கொடுக்கவும் போயிருக்கிறார். கண்ணாயிரத்திற்கு நாலைந்து பெட்ரோல் பங்குகள். சினிமா தியேட்டர். லாட்ஜ் எல்லாம் இருந்தது.
அவர் குதிரை வண்டி ஒட்டுகிற காலத்தில் கண்ணாயிரம் எங்கோ பலசரக்கு பையனாக வேலை செய்து கொண்டிருந்தான். காலம் சேர்மதுரையைத் தாழ்த்தி அவனை உயர்த்திவிட்டிருக்கிறது.

இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக அவர் குதிரை வண்டி ஒட்டி வந்தார். இதற்கு முன்பு ஒரு குதிரை வைத்திருந்தார். அது வெள்ளைக் குதிரை. அப்படிக் குதிரை அமைவது அதிர்ஷ்டம் என்பார்கள்.
நெல்லூரில் இருந்த வாசிரெட்டியிடம் அதை விலைக்கு வாங்கினார். அந்தக் குதிரை வந்த ராசியோ என்னவோ கையில் எப்போதும் பணம் புரண்டது. அந்த நாட்களில் சொந்த மாமா மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி எவ்வளவோ சொன்னார்கள். ஆனால் சேர்மதுரை கேட்கவேயில்லை.
அவர் புதுத்தெரு சரோஜாவை சேர்த்து வைத்துக் கொண்டார். மாநிறம் என்றாலும் தென்னங்குருதது போல உடல்வாகு. சம்பாதித்த பணத்தை எல்லாம் அவளிடம் தான் கொடுத்தார். அந்த நாட்களில் நெய்சோறு, கறிக்குழம்பு, மீன் காடை, கருவாடு என்று வேளைவேளைக்கு ருசித்துச் சாப்பிட்டார். சினிமா கோவில் கொடைக்கானல் பயணம் என்று சந்தோஷமாக இருந்தார்.
எல்லாம் சில ஆண்டுகளில் வடிந்துவிட்டது வெள்ளைக் குதிரையை விற்கும் அளவிற்கு நெருக்கடி உண்டானது. அந்தப் பணத்தையும் சரோஜா தான் வாங்கிக் கொண்டாள். ஒரு நாள் விடிந்து எழுந்து பார்க்கையில் வீட்டில் சரோஜா இல்லை. வீட்டில் அவளது பொருட்கள் எதுவுமில்லை.
வேப்பங்குளத்தானுடன் ஒடிப்போய்விட்டாள் என்று அறிய வந்தபோது வேதனையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு வீட்டிலே முடங்கிக் கிடந்தார். பின்பு வயிற்றுப்பசி உந்தித் தள்ள எழுந்து நடமாடத் துவங்கினார். கண்ணாயிரத்திடம் கடன் வாங்கிப் புதுக்குதிரை ஒன்றை அந்தியூர் குதிரை சந்தையில் வாங்கி வந்தார். அந்தக் குதிரை தான் இப்போது அவரிடமிருக்கும் தேவானை.
வாங்கி வந்த புதிதில் அந்தக் குதிரைக்கு ஏக அலங்காரம் செய்திருந்தார். மணிகளும் குஞ்சலமும் நெற்றிக்கவசமும் அணிந்து அந்தக் குதிரை வசீகரமாகயிருந்தம். காலவோட்டத்தில் எல்லாம் போய்விட்டது
இப்போது அந்த ஊரின் கடைசிக் குதிரை வண்டி அவருடையது. யாரும் குதிரை வண்டிப் பயணத்திற்கு வராமல் போனதால் வண்டியை எடுப்பதேயில்லை. குதிரையை மட்டும் சில நாட்கள் கல்யாண ஊர்வலத்திற்கு வாடகைக்கு அனுப்பி வைப்பார். அதுவும் கிழடு ஆகிப்போனதால் யாரும் அழைப்பதில்லை.
குதிரையை விற்றுவிடலாம் என்றாலும் கிழட்டுக்குதிரையை வாங்க ஒருவரும் விரும்பவில்லை. குதிரையை வைத்துப் பராமரிப்பதற்கு அவரிடமும் பணமில்லை. ஒரு காலத்தில் அதற்கு ஓட்ஸ், பார்லி, கோதுமைத்தவிடு, போன்றவை எல்லாம் கொடுத்து வளர்த்திருக்கிறார். இப்போது புல்லும் மார்க்கெட்டில் வீணாகிப் போன இலைதழைகளும் தான் அதற்கு உணவாகின்ற்ன. அதிலும் வலது காதில் புண்ணாகி சீல்பிடித்தபிறகு குதிரையின் முகத்தைச் சுற்றிலும் எப்போதும் ஈக்கள் மொய்த்தபடியே இருந்தன. பாவம் அந்தக் குதிரை என்று தோன்றியது
••
கண்ணாயிரம் வீட்டிலிருந்து ஒரு வேலையாள் வயர்கூடை ஒன்றுடன் வெளியே நடந்து வருவது தெரிந்தது. ஒளிந்து கொள்வதா அல்லது குதிரையைப் பற்றிக் கேட்கலமா என்று யோசனையாக இருந்தது
அந்த ஆள் கேட்டினை திறந்து வெளியே வந்த போது சேர்மதுரை அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார்
“என்ன வேணும். எதுக்குப் பம்மிகிட்டு நிக்குறே“ என்று அந்த வேலையாள் முறைத்தபடியே கேட்டான்
“குதிரைவண்டிக்காரன். என் குதிரையைப் பிடிச்சி கொண்டுவந்துட்டாங்க“
“அந்த கிழட்டு குதிரையா. அதை எப்பவோ அடிமாட்டோட அனுப்பி வச்சிட்டாங்க“
“என்னய்யா சொல்றீங்க. அடிமாடு கூட அனுப்பிச்சிட்டாங்களா“
“அதை வச்சி என்ன ஊர்வலமா போக முடியும். ஐநூறு ரூபாயை கொடுத்து அடிமாட்டுக்காரன் கொண்டுட்டு போயிட்டான்“
“எப்போம் போனான்“
“ஆறு மணியிருக்கு. மேற்கே ஒரு டின்பேக்டரி இருக்கும் தெரியுமா. அங்கே இருந்து தான் லாரி கிளம்பும். அங்கே போயி பாரு“
அதைக் கேட்டதும் சேர்மதுரைக்குக் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. டின் பாக்டரியை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார். அவரை அறியாமல் கண்கள் கலங்கின.
எத்தனை வருஷம் தன்னை வைத்து காப்பாற்றிய உசிர். அதை அநியாயமாகக் கொல்ல விடக்கூடாது என்று நினைத்தபடியே நடந்தார்
கண்ணாயிரம் மீது கோபமாக வந்தது. வட்டிக்காக யாராவது இப்படிச் செய்வார்களா. படுபாவி என்று சபித்தபடியே டின்பேக்டரியை நோக்கி நடந்தார்.
அந்த ரோடு மேடு போல உயர்ந்து போகக் கூடியது. குதிரை வண்டி ஒட்டும் காலங்கில் அந்த மேட்டில் ஏறும் போது குதிரைகள் கால் தாங்கும். தட்டி ஒட்ட வேண்டும். இன்றைக்கு பெருமூச்சு வாங்க நடந்தார்.
டின்பேக்டரி முன்னால் நின்ற லாரியில் நாலைந்து வத்தலும் தொத்தலுமான மாடுகள் ஏற்றப்பட்டிருந்தன. குதிரையைக் காணவில்லை. ஒருவேளை வேறு லாரியில் கொண்டு போயிருப்பார்களோ என்று கவலையாக இருந்தது. லாரி க்ளீனரிடம் கேட்டபோது அதைக் கொண்டு போய் என்ன செய்றது. அதான் பின்னாடி கட்டி போட்ருக்கேன் என்றான்

கட்டிடத்தின் பின்னால் குதிரை நின்றிருந்தது. காதில் சீல் வடிந்து ஒழுகியது. கிழே கிடந்த காகிதம் ஒன்றை எடுத்து துடைத்தபடியே குதிரையைத் தடவிக் கொடுத்தார். குதிரையின் கண்கள் உலர்ந்து போயிருந்தன. அதன் நெற்றியை தடவியபடியே அதனுடன் பேசினார்.
சிகரெட் பிடித்தபடியே அடிமாட்டு வியாபாரி வருவது தெரிவது
“யாரு நீ.. குதிரைகிட்ட என்ன செய்றே“ என்று அதட்டும் குரலில் கேட்டான் வியாபாரி
“என் குதிரை …சாமி. “
“நீ.. ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி குதிரைவண்டி வச்சிட்டு இருந்தவன் தானே …உன்னைப் பாத்துருக்கேன். “
“ஆமாய்யா“
அடிமாட்டு வியாபாரிக்கு அவரை அடையாளம் தெரிந்திருந்தது
“உன் பேரு என்ன சொன்னே“
“சேர்மதுரை“
“உன் வண்டியில எம்ஜிஆர் படம் ஒட்டி வச்சிருப்பே. ஞாபகம் இருக்கு“
“ஆமாம் சாமி.. வாத்தியார்னா எனக்கு உசிரு.. “
“சின்ன வயசுல உன் குதிரை வண்டில நான் வந்துருக்கேன். பள்ளிக்கூடத்துப் போறப்போ ஒரு நாள் ஒசியில் நீ ஏத்திகிட்டு போயிருக்கே. ஞாபகமிருக்கா. “
“நினைப்பு இல்லை சாமி“
“ மினி பஸ்சும் ஆட்டோவும் வந்தபிறகு குதிரைவண்டியில யாரு போகப்போறா.. இந்தக் குதிரை எப்படிக் கண்ணாயிரம் கிட்ட வந்துச்சி“
“கடனுக்குப் பிடிச்சிட்டு போயிட்டாரு“
“இந்த கிழட்டு குதிரையை வச்சி நீ என்ன செய்யப்போறே“
“பெத்தபிள்ளை மாதிரி வளர்த்துட்டேன்“
“ஐநூறு ரூபா குடுத்து இதை வாங்கியிருக்கேன் அதை யாரு குடுக்குறது“
“அந்த ரூபாயை நான் அடைக்கிறேன். குதிரையை விட்டு குடுங்க“
“உனக்கு எம்ஜிஆர் பாட்டு பாடத்தெரியுமா“
“தெரியும் சாமி“
“அப்போ நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஒடு பாடு. உன் குதிரையை விட்ருறேன்“
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஒடு ராஜா பாடலை உடைந்த குரலில் பாடினார் சேர்மதுரை. அந்தப் பாடலின் கூடவே அடிமாட்டு வியாபாரியும் பாடிக் கொண்டு வந்தான். பாடி முடித்தபோது சேர்மதுரைக்கு இருமல் வந்துவிட்டது
“உன் பாவம் எனக்கு எதுக்குக் கொண்டு போய்த் தொலை“. என்று சொல்லியபடி அந்த ஆள் சிகரெட்டினை காலில் போட்டு நசுக்கினான்.
எந்தச் சாமி புண்ணியமோ குதிரை திரும்பக் கிடைத்துவிட்டது என்று அதைக் கூட்டிக் கொண்டு வெயிலோடு நடந்து தன் வீடு திரும்பினார் சேர்மதுரை
••
ஊரின் மேற்கே அரளிமலைக்குப் போகும் சரிவில் இருந்த ஒற்றைவீட்டில் சேர்மதுரை குடியிருந்தார். அந்த வீட்டின் முன்னே ஒரு வாகைமரமிருந்தது. ஒரு காலத்தில் அந்த வீடு தீப்பெட்டி குடோனாக இருந்தது.. பயர் ஒர்க்ஸ் செல்லையா குடும்பத்துடன் நீண்டகாலப் பழக்கம் என்பதால் அவரைக் காலி செய்யாமல் வைத்திருந்தார்கள்
ஒரு காலத்தில் ரயில் நிலைய வாசலில் வரிசையாகப் பத்து பனிரெண்டு குதிரை வண்டிகள் நிற்பது வழக்கம். ரயிலை விட்டு இறங்கும் பயணிகள் எந்த வண்டி அலங்காரமாக ஜோடிக்கபட்டிருக்கிறது என்பதைப் பார்த்து ஏறுவார்கள். சேர்மதுரை வண்டியினுள் பெரிய சமுக்காளம் விரித்திருப்பார். விசிறிக் கொள்ள ஒரு விசிறி. அவர் வெற்றிலை போடுவதற்காக சிறிய பெட்டி. நாலைந்து மயில்தோகைகள் வண்டியிலிருக்கும். சேர்மதுரை அதிகம் கூலி கேட்பதில்லை. ஆகவே அவருக்கு வாடிக்கையாளர்கள் எளிதாகக் கிடைத்தார்கள்.
ரயில் நிலையம், சினிமா தியேட்டர். பேருந்து நிலையம் தவிர வாடிக்கையாக டாக்டர் செல்லையா வீடு. டிம்பர் மில் கந்தசாமி முதலியார் வீடு, பழைய சேர்மன் கரையாளர் வீடு போன்றவற்றில் எங்கே வெளியே கிளம்பினாலும் அவரது குதிரை வண்டியை தான் அழைப்பார்கள். தங்கள் வீட்டு மனிதர்களில் ஒருவரைப் போலத் தான் அவரை நடத்தினார்கள்.
அதிலும் அவரது வண்டியில் பெண்களைத் தனியே அனுப்பி வைக்குமளவு அவர் மீது நம்பிக்கையிருந்தது.
டிம்பர்மில் கந்தசாமியாருக்கு ஜோதிடம் பார்ப்பதில் நம்பிக்கை அதிகம். ஆகவே வாரம் இரண்டு நாள் புதுப்புது ஜோசியர்களைத் தேடி போவது வழக்கம். அந்த நாட்களில் விடிகாலையில் கிளம்பிவிடுவார்கள். கந்தசாமி முதலியார் ரயில்வே கேட்டை ஒட்டிய அபிராமி மெஸ்ஸில் தான் எப்போதும் டிபன் சாப்பிடுவார். அதுவும் இட்லி வடை தான். அப்போது சேர்மதுரையும் உடன் சாப்பிட வைத்துவிடுவார்..
“வண்டி ஒட்டுறவன் கூட நாலு இட்லி சாப்பிடுப்பா“ என்று சொல்லி சர்வரிடம் ஐந்தாறு இட்லிகளைக் கொண்டுவந்து இலையில் வைக்கச் சொல்லுவார்.
“சேமத்துரை உனக்கு ஒண்ணு சொல்லுவேன். எப்பவும் வயிற்றைக் காயப்போடக்கூடாது. நேரத்துக்குச் சாப்பிடணும். அதுக்குத் தான் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றேன். நீ கேட்க மாட்டேங்குறே“
“எனக்கு எதுக்கு முதலாளி கல்யாணம்“ என்று மறுத்துவிடுவார் சேர்மதுரை
“நான் பொண்ணு பாக்கட்டுமா. கடையநல்லூர்ல தெரிந்த இடத்துல பொண்ணு இருக்கு“
“வேணாம் முதலாளி. இந்தக் குதிரையை வச்சிகிட்டு வயிற்றுபாட்டைப் பாத்துட்டு இருந்தா போதும்“
“என்னைக்கும் ஒருபோல இப்படி இருக்கமுடியாதுல்ல. நாளைக்கு ஏதாவது உடம்புக்கு வந்துட்டா. பாக்க ஒரு பொம்பளை வேணும்லே“
“நம்ம கஷ்டம் நம்மோட போகட்டும். ஒரு பொம்பளையைக் கண்ணீர் விட வைக்க வேணாம்“
“உன்னை திருத்த முடியாதுப்பா.. உனக்கு உடம்புக்கு முடியாட்டி. என் வீட்டுக்கு வந்துரு.. நான் வச்சி பாக்குறேன். “
“இந்த வார்த்தை போதும் முதலாளி. நீங்க நல்லா இருக்கணும்“
“என் வீட்டுக்காரிக்கு பெரிய மனசு. எப்பவும் வீட்ல பத்து பேர் சாப்பிட்டு இருக்கணும். அவளைத் தான் உனக்குத் தெரியும்லே.. உதவினு யாரு கேட்டாலும் கைல கழுத்துல இருக்கிறதை கழட்டி குடுத்துருவா.. “
“உங்க மனசு தான் அவங்களுக்கு. குடுக்கிறவனுக்கு எப்பவும் குறைவு இருக்காது முதலாளி“.
“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன, கல்யாணத்துக்கு முன்னாடி நான் செய்த வியாபாரம் ஒண்ணும் உருப்படலை. ஆனா அவ வந்த நேரம் தான் எனக்குத் தொழில்ல விருத்தியாச்சி.. புது வீடு கட்டுனேன். டிம்பர் மில் வச்சேன். எல்லாம் அவ ராசி. இல்லாத வீட்டுப் பொண்ணு தான். ஆனா வாழவந்த இடத்துக்கு லட்சுமியை கூட்டிகிட்டு வந்துட்டா.. நமக்குச் செல்வம் கொட்டுது“
“அவங்க நல்லா இருக்கணும் முதலாளி“
“அவ பேச்சுக்கு நான் மறுபேச்சே கிடையாது எல்லாம் அவ முடிவு தான்“.
கந்தசாமி முதலியார் இப்படித்தான். மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவார். எதையும் மறைத்துக் கொள்ளத் தெரியாது.
நாலைந்து முறை கந்தசாமி முதலியார் மனைவியை கோவிலுக்கு வண்டியில் அழைத்துப் போய்வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் பேசிய கூலிக்கு மேலே தான் அந்த அம்மா கொடுத்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கந்தசாமி முதலியார் புதிதாகப் பஸ் சர்வீஸ் விட்டார். எதிர்பார்த்தது போல அது ஒடவில்லை இரண்டுமுறை விபத்து ஏற்பட்டு விட்டது.
ஒரு நாள் புதூர் ஜோசியக்காரனை பார்க்க அவரது குதிரைவண்டியில் தான் போனார்கள்
ஜோசியக்காரன் “உங்க ஜாதகப்படி நஷ்டம் வரப்போகுது. பஸ் கம்பெனியை வர்ற விலைக்குக் குடுத்துருங்க “என்று சொன்னான்
கந்தசாமி முதலியார் கேட்டுக் கொள்ளவில்லை. அது அவர் மனைவியின் ஆசை. அவள் சொன்னபடி தான் பஸ் வாங்கிவிட்டிருக்கிறார். அவள் ராசியை மீறி எப்படி நஷ்டம் வந்து சேரும் என்று உறுதியாக இருந்தார்
வண்டியில் திரும்பி வரும்போது ஜோதிடரை திட்டிக் கொண்டே வந்தார். ஆனால் ஜோதிடர் சொன்னபடி தான் நடந்தது. எதிர்பாராத தீவிபத்து நஷ்டம் என்று அடுத்தடுத்து இழப்புகள். பெரிய கடன் சுமை உருவானது. உறவினர்கள் பலரும் அவரது மனைவி ராசி கெட்டவள் என்று பேசிக் கொண்டார்கள். அவளது துரதிருஷ்டம் கந்தசாமி முதலியாரை பிடித்துக் கொண்டுவிட்டது என்றார்கள். ஆனால் அவர் மனைவியை ஒரு வார்த்தை கோவித்துக் கொள்ளவில்லை.
ஒரு நாள் அவளே சொன்னாள்
“என் பேச்சை கேட்டுப் பஸ் கம்பெனி ஆரம்பிச்சது தான் தப்பு. எல்லாம் போயி.. இப்போ கடன்ல இருக்கோம்“
“அப்படி பேசாதே பாப்பூ. தெரியாத தொழில். நம்பினவங்க ஏமாத்திட்டாங்க. அதுக்கு நீ என்ன செய்ய முடியும். நீ சொர்ணலட்சுமி. உன் கை பட்டது எல்லாம் ராசி தான்“
அவள் பதில் சொல்லவில்லை. ஆனால் பெருஞ்சப்தமாக அழுதாள். அதன் இரண்டு வாரங்களில் கந்தசாமி முதலியார் சொந்த வீட்டினை விற்கப்போகிறார் என்று கேள்விபட்டபோது சேர்மதுரை கண்ணீர் விட்டார்.
வக்கீல் ஒருவரைப் பார்க்க போய்வரவேண்டும் என்று சேர்மதுரையை அழைத்த அன்று பாதி வழியில் குதிரை வண்டியை நிற்கச் சொல்லிவிட்டு கந்தசாமி முதலியார் சொன்னார்
“வீட்டை வித்துட்டு வாடகை வீட்ல குடியிருக்க முடியாது. அவமானமாபி போயிடும். குடும்பத்தோட கோயம்புத்தூருக்கு போகலாம்னு இருக்கேன். இது தான் உன் வண்டியில கடைசியா வர்றது. “
“அப்படி சொல்லாதீங்க முதலாளி. கஷ்டம் யாருக்கும் வரத்தான் செய்யும். உங்க மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும்“
“அந்த நம்பிக்கை போயிருச்சி சேமத்துரை. கல்யாண வயசுல ரெண்டு பொம்பளை பிள்ளைகள் இருக்கு. எப்படிக் கட்டிக் கொடுக்கப் போறேன்னு தெரியலை. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. மனசுல ஒரே பாரம் “
“நீங்களே இப்படிப் பேசினா எப்படி முதலாளி. “ என்று ஆற்றாமை தாங்கமுடியாமல் சேர்மதுரை கண்ணைத் துடைத்துக் கொண்டார்

வக்கீல் வீட்டிற்குப் போய்விட்டு திரும்பி வரும்போது கந்தசாமி முதலியார் ஒரு வார்த்தை பேசவில்லை. அவரது முகம் கறுத்துப் போயிருந்தது.
மறுநாள் காலை சுந்தரம் ஒடிவந்து சேர்மதுரையிடம் சொன்னான்
“கந்தசாமி முதலியார் தூக்கு போட்டு செத்துட்டாராம்“
“அது எப்போ“
“விடிகாலையில்“
அந்த வீட்டு வாசலுக்குப் போய் நிற்கும்போது சேர்மதுரையின் கால்கள் நடுங்கின. எப்பேர்பட்ட மனுசன். இப்படிப் போய்விட்டாரே. ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கும் பெண்களைக் காணும் போது அவராலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை
கந்தசாமி முதலியார் போல எத்தனை எத்தனை பெரிய மனிதர்கள் மறைந்துவிட்டார்கள். ஊரில் புகழ்பெற்றிருந்த குடும்பங்கள் மறைந்துவிட்டன. யார் யாரோ பணக்காரர் ஆகிவிட்டார்கள். பழைய கடைகள். வீடுகள் இடிக்கபட்டு புதிய கட்டிடமாகிவிட்டன. ஊரில் தெரிந்த முகங்கள் குறைந்துவிட்டார்கள். ஊரின் பெயர் மட்டும் தான் அப்படியே இருக்கிறது.
இத்தனை மாற்றங்களுடன் ஒன்றாக அவரது குதிரை வண்டியும் கைவிடப்பட்டுப் போனது. குதிரை வண்டிகள் நிற்கும் இடத்தில் இப்போது ஆட்டோ ஸ்டாண்ட் நிற்கிறது. சாலைகளில் கேட்ட குதிரைவண்டி சப்தம் மறைந்துவிட்டது
கடைசிக் குதிரைவண்டியாக அவன் மட்டும் வண்டியோட்டிக் கொண்டிருந்தான். வயதான சிலரை மருத்துமவனைக்கு அழைத்துக் கொண்டு போவது. ஜவுளிக்கடை விளம்பர பேனரை வைத்துக் கொண்ட மைக்கில் தெருத்தெருவாக விளம்பரம் செய்து வருவது, எனக் கிடைத்த வேலைகள் செய்து வந்தார். ஆனால் நாளுக்கு நாள் வருமானம் தேய்ந்து கொண்டே வந்தது குதிரை வண்டியில் யாரும் ஏறாத ஒரு நாளின் இரவில் காந்தி சிலையின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு விட்டு கண்டபடி கத்தினார் சேர்மத்துரை. யாரை திட்டுகிறார் என்று புரியாமல் தெருநாய்ப் பயந்தோடியது. அதன்பிறகு வண்டியை எடுக்கவேயில்லை.
பேசாமல் எங்காவது வடக்கே ஒடிப்போய்விடலாமா என்று சில நாட்கள் தோன்றும் குதிரையை என்ன செய்வது என்ற குழப்பம் தான் அவரை ஊரோடு நிறுத்தியிருந்தது
••
குதிரையின் காதில் மருந்தை அரைத்துப் போட்டு துணிவைத்துக் கட்டினார். குதிரை கால்தாங்கியபடியே நின்றது. அதன் கண்களில் எதையோ யாசிப்பது போலிருந்தது. எதற்காக இந்தக் குதிரையை மீட்டுக் கொண்டு வந்தோம். இதை இனி என்ன செய்யப் போகிறோம் என்று எதுவும் புரியவில்லை.
எப்படியும் இந்தக் குதிரை சில நாட்களில் செத்துப்போய்விடும். அதை நேர்கொண்டு காண மனதைரியம் கிடையாது. இதைப் பிழைக்க வைக்க வேண்டும் என்றால் செலவு செய்ய வேண்டும். அதற்குக் கையில் பணமில்லை. இரவெல்லாம் அவர் உறக்கம் வராமல் யோசித்துக் கொண்டேயிருந்தார்
குதிரை வண்டி ஒட்டுவது ஒரு காலத்தில் அத்தனை சந்தோஷமாக இருந்தது. அந்த ஊரில் அவர் போகாத வீதியில்லை தெரியாத சந்து கிடையாது. அதிலும் ஒரு காலத்தில் அவரது குதிரைவண்டியில் தான் டிரான்சிஸ்டர் ரேடியோ இருந்தது. அதில் சினிமா பாட்டுகள் ஒலிக்கும். அதைக் கேட்டுக் கொண்டு சந்தோஷமாக வண்டி ஒட்டிவார். இரவில் வீடு திரும்பும் போது அவரது குதிரை வண்டி சப்தம் தனியே கேட்கும்.
எல்லாமும் மறைந்துவிட்டது. அந்தக் காலம் இனி திரும்பி வராது. தன்னை நேசித்த மனிதர்கள் யாவரும் மறைந்துவிட்ட பிறகு அந்த ஊரில் எதற்காக இருக்க வேண்டும். ஏன் ஊரை அவரைப் பிடித்து வைத்திருக்கிறது
இரவெல்லாம் குழப்பத்துடன் இருந்தார்
விடிகாலை இருட்டோடு அவர் சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். பைபாஸ் ரோடு வரை நடந்து சென்று வடக்கே செல்லும் லாரி ஒன்றில் ஏறிக் கொண்டார்
“எங்க போகணும்“ என்று லாரி டிரைவர் கேட்டான்
“திருப்பூர் வரைக்குபோகணும்“
“நான் சேலம் போறேன். வழியில இறக்கிவிட்டா மாறி போயிடுவீங்களா“ என்று கேட்டான் லாரி டிரைவர்
தலையாட்டினார் சேர்மதுரை
கலையும் இருட்டினுள் லாரி விரைந்து சென்றபடியே இருந்தது. காலை எட்டு மணிக்குச் சாலையோரம் இருந்த உணவகம் ஒன்றில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சாப்பிட இறங்கினான்
சேர்மதுரையிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. அவர் தயக்கத்துடன் வண்டியில் உட்கார்ந்து இருந்தார்
“சாப்பிடுவோம் வாங்க“ என்று டிரைவர் அழைத்தார்
“பசியில்லை “என்று மறுத்தார் சேர்மதுரை
“என்கிட்ட காசு இருக்கு வாங்க “என்றான் டிரைவர். அவன் அப்படிச் சொன்னது அவரைத் தலைகுனியச் செய்தது
அவர்கள் சாப்பிட உட்கார்ந்தபோது வீட்டின் வெளியே கட்டியிருந்த குதிரை நினைவிற்கு வந்து போனது
“வேலை தேடிப்போறீங்களா“ எனக்கேட்டான் லாரி டிரைவர்
“ஆமா. ஊர்ல பிழைக்க வழியில்லே. “
“ஊர்ல என்ன வேலை செய்துகிட்டு இருந்தீங்க“
அவர் பதில் சொல்லவில்லை. மௌனமாக இலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். சூடாக இட்லி கொண்டுவந்து வைத்தார். அதைப் பிய்த்து வாயில் வைக்கும் போது ஏன் இப்படிக் குதிரையைத் தனியே விட்டுவந்தோம் என்ற குற்றவுணர்ச்சி மேலோங்கியது
“என்ன யோசனை சாப்பிடுங்க “என்றான் டிரைவர்
குதிரையின் சீல்பிடித்த காதுகளும் உலர்ந்த கண்களும் நினைவில் வந்து மோதின
ஒருவாய் இட்லியை சாப்பிட முடியாமல் “வாய் கசக்குது“ என்றபடியே வெளியே எழுந்து நடந்தார்
இலைபோடும் இடத்தில் கைகழுவுவது போலக் குனிந்து உட்கார்ந்து அழுதார்
பாவம் சேர்மதுரை.. அவரால் அவ்வளவு தான் செய்யமுடியும்.
••
May 22, 2021
மூத்தோர் பாடல் 4
குருகிடம் தப்பிய இறால்.
Minuscule என்ற பிரெஞ்சு அனிமேஷன் தொடர்வரிசை பூச்சிகள் மற்றும் வண்டுகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் மிகச்சிறப்பான தொடராகும். அதில் ஒரு வெட்டுக்கிளி எப்படி இலையை உண்ணுகிறது. ஒரு வண்டு எவ்வாறு மரத்தைத் துளையிடுகிறது என்பதைப் போல நுண்ணுயிர்களின் வாழ்க்கையை அற்புதமாகச் சித்தரித்திருப்பார்கள். அந்தப் படங்களைப் பார்த்தபிறகு வண்டும் பூச்சிகளும் விநோத உலகில் வாழ்வதாக உணர்ந்திருக்கிறேன்.
இது போலவே நேஷனல் ஜியாகிரபி சேனலில் மீன்கொத்தி ஒன்று எப்படி மீனைக் கவ்விச் செல்கிறது என்பதைத் துல்லியமாகப் படம்பிடித்து காட்டினார்கள்.. கேமிரா தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலத்தில் இது போன்ற ஆவணப்படுத்துதல் நம்மை வியக்கவைக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் எதுவும் அறிமுகமாவதற்கு இரண்டாயிரம் ஆண்டின் முன்பாகவே சங்க கவிஞர்கள் வைல்ட் லைப் போட்டோகிராபர் போல இயற்கையை நுண்மையாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். சொற்கள் தான் அவர்களின் கேமிரா. கவிதையில் அவர்கள் காட்டும் காட்சியில் இன்று அதிநவீன தொழில்நுட்பத்தினால் நாம் காணும் காட்சிகளுக்கு நிகரானது.
அப்படி ஒரு வைல்ட் லைப் போட்டோகிராபர் போலச் செயல்பட்டவர் தான் கோட்டியூர் நல்லந்தையார் இவரது பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
அபூர்வமான பாடலிது. காதலன் தன்னைத் திருமணம் செய்ய வரவிலையே என்ற தலைவியின் அச்சம் எப்படிபட்டது என்பதை நல்லந்தையார் அழகாக விளக்குகிறார்
காதலுற்றவர்களின் தவிப்பை, பயத்தை. குழப்பத்தைச் சங்க கவிஞர்கள் மிக நுட்பமாகப் பாடியிருக்கிறார்கள். காற்று தண்ணீரின் மீது கடந்து செல்லுகையில் ஏற்படும் சிற்றலை போல மனதின் சிறுசலனங்களைக் கூட அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
காதலுற்ற பெண்ணுக்கு எதிர்காலம் குறித்த குழப்பங்கள் எப்போதும் அதிகம். அவள் ஒரு பக்கம் காதலனுக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். மறுபக்கம் வீண்கற்பனையில், குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருப்பாள். உண்மையில் அவளது மனது ஊஞ்சலைப் போல முன்பின்னாகச் சென்றபடியே இருக்கும். நல்லபடி நடக்குமோ நடக்காதோ என்ற குழப்பத்தில் அவள் சிறு விஷயங்களுக்குக் கூடப் பயப்படுவாள்.
அப்படியான பயத்தைத் தான் நல்லந்தையார் தனது பாடலில் குறிப்பிடுகிறார்.ஒவியரிகள் கண்கள் போல நுட்பமான அவதானிப்பிலிருந்தே இந்தக் கவிதை உருவாகியிருக்கிறது.

கடற்புறத்திலுள்ள ஒரு பெண் காதலிக்கிறாள். தலைவன் அவள் வீட்டின் புறத்தே வந்து நிற்பது அறிந்தும் ஊர்பேசுமே என்று பயந்து வீட்டிற்குள்ளே இருக்கிறாள். வீட்டிலுள்ள அம்மாவைக் கண்டு கூடப் பயப்படுகிறாள். இந்த மனநிலையைச் சொல்ல வரும் தோழி அது எப்படியிருக்கிறது என்பதற்கு ஒரு உவமை சொல்கிறாள்
இவர் பாண்டி நாட்டிலுள்ள திருக்கோட்டியூரைச் சார்ந்தவர் நல்லந்தையார்.
யார்க்கு நொந்து உரைக்கோ யானே- ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, 5
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?
நற்றிணை -211
கடற்கரையின் உப்பங்கழியிடத்து இரையை விரும்பி ஒரு கரிய காலையுடைய குருகு வளைந்த முதுகும் உயர்ந்த வாயும் உடைய இறால் மீன் ஒன்றைக் குத்திக் கவ்வ முயல்கிறது. ஆனால் இந்த இறால் தப்பிவிடுகிறது. இப்படித் தப்பிய இறால் மணல் மேட்டில் வளர்ந்துள்ள தாழையின் பூவைப் பார்க்கிறது. இதழ் விரியாது மலர்ந்திருந்தது அந்த வெண்தாழைமலரை இதுவும் குருகு தான் என்று நினைத்து அஞ்சுகிறது. அது போலவே தான் தலைவியும் இருக்கிறாள் என்கிறார் நல்லந்தையார்

தாழம்பூ என இன்று அழைக்கப்படுவது தான் தாழைமலர். . தாழம்பூவின் மணம் அடர்த்தியானது. தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வார்கள். தாழங்குடை பிடித்து நடந்து போகிறவர்களை பழைய மலையாளப் படங்களில் காணமுடியும்.
தாழையில் உள்ள முள் கையைத் தைக்கும் என்பதால் இதைக் ‘கைதை’ என்றும் குறிப்பிடுகிறார்கள். தாழையூத்து, தாழையடி, தாழைக்காடு, தாழையூர் எனத் தாழையின் பெயரைக் கொண்ட நிறைய ஊர்கள் இருக்கின்றன. குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தாழை சிறப்பித்துக் குறிப்பிடப்படுகிறது.

குருகு எனும் கொக்கு சங்கப்பாடல்களில் கருங்கால் வெண்குருகு என்றே குறிப்பிடப்படுகிறது. இதன் நிறம் தாமரை போலிருக்கும். அதன் உருவம் தாழம்பூ போல இருக்கும். குருகு சிறகை விரிக்கும்போது தாழம்பூ விரிவது போலவே தோன்றும் இதன். ஒலியைத் தமிழில் ‘நரலல்’ என்கிறார்கள். .துணையைப் பிரிந்த குருகு இரவில் குரல் எழுப்பும்.
குருகும் தாழம்பூவும் ஒன்று போலத் தோன்றியதால் அந்த இறால் மீன் பயந்து போய்விடுகிறது. எவ்வளவு நுட்பமான காட்சியது. பறவையும் பூவும் ஒரு நிமிஷத்தில் ஒன்றாகி விடுகின்றன. இறாலின் அச்சத்தைக் கூடக் கவிஞன் அறிவான் என்பது அவனது கவித்துவத்தின் உச்ச வெளிப்பாடாகவே கருதுவேன்.
குருகியிடம் தப்பிய இறால் என்பது உணர்வுநிலையின் அடையாளம்.. அந்தப் பயம் உடனே கலைந்துவிடக்கூடியதில்லை. காதல் இப்படி அறியாப்பயங்களை உருவாக்க கூடியது தானே.
காதலுற்ற பெண்ணிற்கு காட்சி மயக்கம் தோன்றுவது இயல்பு தான். அவள் ஒசையை தான் அதிகம் உணருவாள். மெல்லிய ஒசை கூட அவள் காதுகளில் பலமாக ஒலிக்கும். நினைவால் வழிநடத்தப்படும் அவளுக்கு ஒரு நாள் என்பது நீண்ட பொழுது. தலைவின் உணர்ச்சிநிலைகளை தோழி அறிவாள்.
“அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை.”
என்ற கலாப்ரியாவின் கவிதையில் வருவது போல நம்மிடம் வெளிப்படுத்த மொழியில்லை. இறால் கண்டுபயப்படுவது தாழைமலர் தான். அது குருகில்லை என்று எப்படி இறாலிடம் தெரியப்படுத்த முடியும். அது தானே தெளிய வேண்டும். அந்த தெளிவு ஏற்படும் போது வரை அச்சம் விலகாது. காதலின் துயரை காதலர்களை தவிர பிறரால் போக்கிவிடவே முடியாது.
சங்க கவிஞர்களுக்குப் பறவைகள். தாவரங்கள். விலங்குகளின் இயல்புகள் துல்லியமாகத் தெரிந்திருந்தன. இயற்கையை முழுமையாக அறிந்து கொண்டிருந்தார்கள். ஜப்பானிய அனிமேஷன் இயக்குநர் மியாசாகி தனது நேர்காணல் ஒன்றில் ஒரு மண்புழுவின் நகர்வைப் படம் வரைவது எளிதானதில்லை. நாம் மண்புழு தன் உடலை எப்படி அசைத்து முன்னே செல்லும் என்று கூர்ந்து கவனித்துப் பார்த்ததில்லை. இன்று பெரிய பல்கலைக்கழகங்களில் ஓவியம் பயின்றுவரும் மாணவர்கள் மண்புழுவை நேரில் கண்டவர்களேயில்லை. அவர்களிடம் மண்புழுவின் இயக்கத்தைப் படம் வரையச் சொன்னால் உடனே கூகிளில் தேடுகிறார்கள். பூச்சிகள். வண்டுகள். மண்புழுக்கள் எனச் சிறிய உயிர்களின் இயக்கங்களை, நடனத்தை எவரால் ஆழ்ந்து பார்க்கவும் வரையவும் முடிகிறதோ அவரையே நல்ல கலைஞன் என்பேன் என்கிறார் மியாசகி.
சங்க கவிஞர்களும் இப்படி தானிருந்திருக்கிறார்கள். தலைவியின் பயம் எப்படிப்பட்டது என்று சொல்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் யாரும் கவனிக்காத. ஆனால் நுட்பமான இறாலின் அச்சத்தை உவமை கூறுகிறார் கவிஞர். அது தான் கவிஞனின் தனித்துவம். இந்தக் காட்சியின் வழியே காதலியின் மனது மட்டுமில்லை. இறாலின் அச்சமும் ஆழமாக நமக்குள் படிந்துவிடுகிறது.

உண்ணும் பொருளாக மட்டுமே நாம் அறிந்திருருந்த இறால்மீனை சட்டென வேறு நிலைக்கு இந்தக் கவிதை கொண்டு போய்விடுகிறது.
நல்லந்தையாரின் ஒரேயொரு பாடல் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத்தனை நுட்பமாக இயற்கையை அவதானிக்க முடிந்த அந்தக் கவிஞனின் மற்ற பாடல்கள் காற்றில் கரைந்து போய்விட்டன. நமக்குக் கிடைக்காமல் போன பொக்கிஷங்கள் எத்தனையோ.
ஒரே கவிதையின் வழியே அவர் தனது ஆளுமையை அடையாளம் காட்டிவிடுகிறார்.
பெரும்பாணாற்றுப்படை பாடலில் உருத்திரங்கண்ணனார் தூண்டிலிலிருந்த இரையைக் கவ்வித் தப்பிய வாளை மீன் நீரருகே வளர்ந்திருந்த பிரம்பச்செடியின் நிழல் நெளிவதைத் தூண்டிலோ என நினைத்துப் பயப்படுவதாக எழுதியிருக்கிறார். இது நல்லந்தையார் பாடலைப் போலவே மீனின் அச்சத்தைப் பாடும் இன்னொரு பாடலாகும்
சங்க காலம் துவங்கி இன்று வரை பெயர்களின் முன்னால் இளமையைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. இப்படி வேறு மொழிப் பெயர்கள் வழங்கப்படுகிறதா என்று தெரியவில்லை. இளங்கீரன், இள நாகன். பால சுப்ரமணியன். பாலச்சந்திரன். பாலசுந்தரம், இளநகை, இளஞ்சேரல், என்பது போல எத்தனையோ பெயர்களில் இளமை முன்னாக வருகிறது. இது போல முதுமையை முன்னொட்டாகக் கொண்ட சில பெயர்களையும் சங்க கவிஞர் வரிசையில் காணமுடிகிறது
••
நெல்லில் பதர் என்பது பொக்காகக் கருதப்படும். அதன் உள்ளே அரிசி இராது. இப்படி நாட்களிலும் பதடி உண்டு என்கிறது சங்க இலக்கியம். அதாவது வீணில் கழியும் நாட்களைப் பதடி என்கிறார்கள்.
இப்படித் தலைவியைக் காணாத நாட்களை வெறும் நாட்களாகக் கருதுகிறான் தலைவன். இதைப் பற்றிக் குறுந்தொகையில் ஒரு பாடலிருக்கிறது
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் 5
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே.
– பதடி வைகலார்.
இந்தக் கவிஞரே பதடி வைகலார் என்றே அழைக்கப்படுகிறார். தலைவியைக் கண்டு அவளுடன் துஞ்சுதல் தான் இன்பமான நாட்கள். அதுவன்றி மற்ற பொழுதுகள் வெறும் பதர்களே
நாட்களும் அதைச் செலவிடும் முறையைக் கொண்டு தான் அளக்கப்படுகின்றன. மதிக்கப்படுகின்றன. நமது பெரும்பான்மை நாட்கள் வீணாகக் கழித்தவை. அதை நாம் உணருவதேயில்லை. இந்தக் கவிஞரின் வழியே தான் அவை பதடிகள் என்பதை நாம் உணருகிறோம்
பதடி வைகலாரின் இயற்பெயர் என்ன என்று தெரியவில்லை. ஆனால் கவிதையின் உவமையின் வழியாகவே அவர் அடையாளப்படுத்தபடுகிறார். கவிதையின் சொல்லாட்சியே அவரது பெயராக மாறியிருக்கிறது.
ஒரு நாளை பிளந்து பார்த்துச் சொல்லும் நுட்பமும் கவித்துவமும் சங்க கவிஞர்களிடம் இருந்திருக்கிறது. இனி நாமும் வெறும் நாட்களைப் பதடி என்றே அழைப்போம்
••
May 21, 2021
கி.ரா: நூற்றாண்டின் சாட்சியம்
இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியான கட்டுரை
••

கி.ராஜநாராயணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க குரல் மட்டும் அல்ல; ஒரு நூற்றாண்டின் சாட்சியமும் அவர். தனது 98 வயதில் உற்சாகமாகப் புதிய நாவலை எழுதி வெளியிட்டார். அடுத்த மாதம் 99 வயதிலும் ஒரு புதிய நாவலை வெளியிடத் திட்டம் கொண்டிருந்தார். எழுத்துதான் அவரது ஒரே இயக்கம்; விருப்பம். வற்றாத ஜீவ ஊற்றுகளில் எப்போதும் நீர் சுரந்தபடியே இருக்கும் என்பார்கள். அப்படியானதுதான் கி.ரா.வின் எழுத்து வாழ்க்கை.
“நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரி வாரிப் போட்டுக்கொண்டும் என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்தக் கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் தெவிட்டவில்லை இந்த மண்” என்றொரு குறிப்பை கி.ரா. எழுதியிருக்கிறார். இதுதான் அவர் எழுத்தின் ஆதாரம்.
மறக்கவியலா கதாபாத்திரங்கள்
கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப் போல விரிவாக எழுதியவர் வேறில்லை. உலகம் கண்டுகொள்ளாத அந்தச் சம்சாரிகளை, விவசாயக் கூலிகளை, ஏழை எளிய மனிதர்களைத் தனது கதைகளின் முக்கியக் கதாபாத்திரங்களாக்கி உலகறியச் செய்தார் கி.ரா. அயிரக்கா, தொட்டண்ணா, பீச்சாங்கை ராமசாமி, கோமதி, தோழன் ரங்கசாமி, அண்ணாரப்ப கவுண்டர், பப்பு தாத்தா, நாச்சியார் தூங்கா நாயக்கர், பேரக்காள், தாசரி நாயக்கர், பிள்ளையாரப்பன், ராமசுப்பா நாயக்கர், மங்கத்தாயார் அம்மாள், சென்னம்மா தேவி, ஜோஸ்யம் எங்கட்ராயலு, மண்ணுதின்னி ரெங்க நாயக்கர், பச்சைவெண்ணெய் நரசய்யா, பயிருழவு பங்காரு நாயக்கர், வைத்தி மஞ்சையா, வாகடம் புல்லையா போன்ற கதாபாத்திரங்களை யாரால் மறக்க இயலும்?
கி.ரா.வின் கதைகளில் வரும் பெண்கள் வலிமையானவர்கள். போராட்ட குணமிக்கவர்கள். கடுமையான உழைப்பாளிகள். குடும்பத்தை அவர்களே சுமக்கிறார்கள். குடும்பம் வறுமையை அடையும்போதும், பிள்ளைகள் நோயில் விழும்போதும், கடன் சுமையால் குடும்பம் வீழ்ச்சியடையும்போதும் பெண்கள் அடையும் துயரத்துக்கும் வேதனைக்கும் அளவேயில்லை. அதைத் தன்னுடைய எழுத்தில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் கி.ரா. அதே நேரம், அவர்களின் தனித்துவமிக்க அழகு, திருமணக் கனவுகள், சந்தோஷங்கள், சஞ்சலங்களை அசலாகப் பதிவுசெய்திருக்கிறார்.
கி.ரா.வின் சிறுகதைகளில் வரும் சிறார்கள் அபூர்வமானவர்கள். வறுமையில், பசியில் வாடியபோதும் அவர்கள் தங்களுக்கேயான விளையாட்டுகளை, சந்தோஷங்களை மறப்பதில்லை. அவரது முதற்கதையான ‘கதவு’ சிறுகதையில் தங்கள் வீட்டுக் கதவை ஜப்தி செய்து கொண்டுபோவதை அறியாத சீனிவாசனும் அவன் நண்பர்களும் அந்தக் கதவை தூக்கிக்கொண்டு போகிறவர்கள் பின்னால் ஆடிக்கொண்டு போகிறார்கள். அபூர்வமான காட்சி அது. இதுபோலத்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் திருடன் கழுவேற்றப்பட்ட நிலையில் அவனைச் சுற்றிப் பிள்ளைகள் நடனமாடுகிறார்கள். அப்படித் தானும் விளையாட முடியவில்லையே என்று திருடன் ஏங்கி அழுகிறான். ‘கதவு’ கதையில் வரும் லட்சுமியும் சீனிவாசனும் வீட்டின் வறுமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், விளையாட்டுத்தனம் வயதின் விளைவு. அதை மாற்றிக்கொள்ளவில்லை. அதே சிறுவர்கள்தான் முடிவில் கைவிடப்பட்டுக் கிடக்கும் கதவைத் தொட்டுக் கண்ணீர்விடுகிறார்கள். அது வீட்டின் கதவில்லை. நம் மனசாட்சியின் கதவு. அதைத் தனது கதையின் வழியே தொட்டுத் திறந்து இந்த விவசாயிகளின் கஷ்டத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியைப் பொதுச் சமூகத்திடம் எழுப்பினார் கி.ரா.
இடதுசாரி இயக்கங்களுடன் இருந்த தொடர்பும் நட்பும் கி.ரா.வின் பார்வையைச் செழுமைப்படுத்தியது. விவசாயிகளுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்கான குரலே அவரது கதைகளின் அடிநாதமாக ஒலிக்கிறது.
அரவணைத்துக்கொண்ட புதுவை
வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்.
புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டு கி.ரா. இடம்மாறிப் போகிறார் என்ற கேள்விப்பட்டவுடன் கோவில்பட்டி இலக்கிய நண்பர்கள் பலருக்கும் ஆச்சரியம். அவரால் எப்படி ஒரு நகரில் வசிக்க முடியும் என்று பேசிக்கொண்டார்கள். டால்ஸ்டாய் தனது யஸ்னயா போல்யானா பண்ணையிலிருந்து மாஸ்கோவுக்கு இடம்பெயரும்போது அது ஒக் மரத்தை இடம்விட்டு இடம் பெயர்த்துக்கொண்டு போனதுபோல இருந்தது என்று ஆய்வாளர் வில்சன் எழுதியிருக்கிறார். அப்படியான இடப்பெயர்வுதான் கி.ரா.வின் புதுவை வருகையும். ஆனால், அந்தக் கடற்கரைச் சூழலும் அன்பான மனிதர்களும் ஆர்வமான மாணவர்களும் கி.ரா.வுக்குப் பிடித்துப்போனார்கள். பாரதியை ஏற்றுக்கொண்டதுபோலவே கி.ரா.வையும் புதுவை ஏற்று அரவணைத்துக்கொண்டது.
கி.ரா.வின் நினைவுகள் துல்லியமானவை. காட்சிகளை விவரிக்கும்போது அந்தச் சூழலை ஒலியோடு விவரிப்பார். ஏதாவது உணவின் ருசியைப் பற்றிச் சொல்லும்போது நம் நாக்கில் நீர் சுரக்கும். சொந்த வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பற்றி ஒருபோதும் அவர் பேசியதில்லை. கி.ரா.வின் சிரிப்பு அலாதியானது. மழைக்குப் பின்பு வரும் வானவில்போல யோசனைக்குப் பிறகு அவர் முகத்தில் சிரிப்பு துளிர்ப்பதைக் கண்டிருக்கிறேன்.
கரிசல் நிலத்துக்கே உரிய உணவு வகைகளை, அவற்றின் செய்முறைகளை, சாப்பாட்டு ருசியை, தண்ணீர் ருசியை வியந்து வியந்து எழுதியிருக்கிறார். பால்சாக்கிடம்தான் இப்படியான வாசனையான எழுத்துமுறை இருந்தது என்பார்கள். அந்த நுட்பம், துல்லியமான விவரிப்பு, சுவாரஸ்யமான கதை சொல்லும் முறை அவரது எழுத்தின் தனித்துவம் என்பேன்.
சுந்தர ராமசாமி தொடங்கி ஜெயகாந்தன் வரை தனது சமகாலப் படைப்பாளிகளுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கி.ரா. அவர்களுடன் கடித உறவைப் பேணிவந்தார். எழுத்தாளர்களைத் தன் ஊருக்கு வரவேற்று உபசரித்திருக்கிறார். அவர் வீட்டுக்குச் செல்லாத முக்கியப் படைப்பாளிகளே இல்லை எனலாம்.
நாட்டார் கதைகள்
இசையில் தீவிர ஈடுபாடு கொண்ட கி.ரா. முறையாக கர்னாடக சங்கீதம் கற்றிருக்கிறார். ஆனால், இசைக் கலைஞராக மாறவில்லை. இசையில் அவரது ரசனை உயர்வானது. விளாத்திகுளம் சாமிகளுடன் இருந்த நட்பு இதற்கு முக்கியமான வழிகாட்டுதலாகும். இளையராஜாவுடன் கி.ரா.வுக்கு இருந்த நட்பு தனித்துவமானது. இளையராஜாவுடன் கர்னாடக இசை குறித்து ஆழ்ந்த உரையாடலை நடத்தியிருக்கிறார்.
நாட்டுப்புறக் கதைகளை இலக்கியமாக யாரும் அங்கீகரிக்காத காலத்தில் அவற்றைத் தேடித் தொகுத்து ஆராய்ந்தவர் கி.ரா. அதுபோலவே கரிசல் வட்டாரச் சொற்களுக்கென ஒரு அகராதியைத் தொகுத்திருக்கிறார். தமிழில் அது ஒரு முன்னோடி முயற்சியாகும். ‘கரிசல்காட்டுக் கடுதாசி’ என அவர் ‘விகடன்’ இதழில் எழுதிய தொடரும் அதற்கு ஆதிமூலம் வரைந்த ஓவியங்களும் மறக்க முடியாதவை. கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் இடைசெவலைச் சார்ந்தவர்கள். நெருக்கமான நண்பர்கள். சிறந்த எழுத்தாளர்கள். ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து இருவர் சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பது வியப்பூட்டும் விஷயம். இப்படி இந்தியாவில் வேறு எங்கும் நடந்ததில்லை.
நன்றி
இந்து தமிழ் திசை
தேவகியின் தேர்
புதிய சிறுகதை
“நம்ம கோவில் தேரைப் பார்க்க வந்திருக்கிறார். அவரைத் தேரடி முக்கு வரைக்கும் அழைச்சிட்டு போயிட்டு வா“ என்று ஹரியிடம் அப்பா சொன்ன போது அவன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தான்.
அம்மா தோசைக்கல்லை அப்போது தான் அடுப்பில் போட்டிருந்தாள். அம்மா மெதுவாகத் தான் தோசை சுடுவாள். அதுவும் அப்பாவிற்குச் சுடும்போது இடையில் வேறு யாரும் சாப்பிட வந்துவிடக்கூடாது. அப்பா சாப்பிட்டுமுடித்துப் போன பிறகு தான் மற்றவர்களுக்குச் சாப்பாடு
அப்பா ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் நிர்வாகத்தைப் பார்க்கிறவர் என்பதால் அதிகாலையிலே குளித்துத் தயாராகிக் கோவிலுக்குக் கிளம்பிப் போய்விடுவார். ஒன்பது மணிக்கு வீடு திரும்பி வந்து தான் சாப்பிடுவார். அப்பா சாப்பிட்ட பிறகு தான் அவனும் அக்காவும் சாப்பிடுவார்கள். அம்மா எப்போது சாப்பிடுகிறாள் என்று யாருக்கும் தெரியாது
அப்பா எப்போதுமே உத்தரவுகளைத் தான் போடுவார். உதவி கேட்பதைக் கூடக் கட்டளையிடுவதே அவரது இயல்பு
“சாப்பிட்டு போறேன்பா“ என்று தயங்கியபடியே சொன்னான் ஹரி
“அதுவரைக்கு அந்த ஆளை தெருவில் நிக்கச் சொல்லவா“ என்று கோபமாகக் கேட்டார் அப்பா
“யாரைச் சொல்கிறார். யார் வந்திருக்கிறார் என்று தெரியவில்லை. “ டம்ளரில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு ஹரி வாசலை நோக்கி நடந்தான்.

நாலு கட்டுகளாக உள்ள பெரிய வீடது. தாத்தா காலத்து வீடு. இப்போதும் அப்படியே வைத்திருக்கிறார்கள். பெரியவீடுகள் வெளியில் இருந்து பார்க்க அழகாக இருக்கும். ஆனால் பராமரிப்பது கடினம். அதுவும் வீட்டினை அன்றாடம் சுத்தம் செய்து துடைத்தெடுப்பது பெரிய வேலை. அந்தக் காலத்து வீடு என்பதால் வசதிகள் குறைவு. மழைநாளில் சுவரில் தண்ணீர் இறங்கும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் அப்பாவிடம் பேச முடியாது. ஒடாத கடிகாரம் கூடச் சுவரில் அப்படியே தானிருக்கிறது. அதைக் கழட்ட அப்பா விடமாட்டார். அவருக்கு வீட்டில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.
வாசலுக்கு வந்த போது நாராயணன் ஏந்திப்பிடித்திருந்த குடையினுள் ஒரு வெள்ளைக்காரன் நின்றிருந்தான். இருபத்தைந்து வயதிருக்கும்.
ஆறடிக்கும் மேலிருக்கும் உயரம். நீளமான கைகள். இளநீலநிறத்தில் சட்டை, கறுப்புபேண்ட். செம்பட்டை மயிர்கள்.. பெண்மை கலந்த முகம். மெலிதான பிரேம் போட்ட முக்கு கண்ணாடி. அவன் தோளில் ஒரு கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது.. எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று தெரியவில்லை. அவனைப் பார்த்தபோது சரவணா தியேட்டரில் பார்த்த இங்கிலீஷ் படத்தில் வரும் டாக்டர் நினைவிற்கு வந்து போனார்.
நாராயணன் குடையை உயர்த்திப்பிடித்திருந்தான்.
“ஹலோ குட்மார்னிங்“ என்றான் ஹரி.
“ஹாய் ஐ ஆம் லியோன்“ என்றான்.
ஏதாவது பத்திரிக்கையாளராக இருக்க வேண்டும். அவர்கள் கோவிலிலிருந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் புகைப்படம் எடுத்து வெளியிட இப்படி வெளிநாட்டுக்காரர்கள் பலர் வந்து போயிருக்கிறார்கள். ஆகவே லியோனிடம் எதுவும் கேட்காமல் அவனைத் தேரடிக்கு அழைத்துக் கொண்டு போனான்.
அவர்கள் வீடிருந்த வீதி மிகப்பெரியது. தெருவில் மொத்தம் பனிரெண்டே வீடுகள். அகலமான அந்த வீதியில் ஆள் நடமாட்டமேயில்லை. கோழிகள் வெயிலை கொத்தி மேய்ந்தபடியிருந்தன. . ஹரி முன்னால் நடந்து சென்றான்.
வெள்ளைக்காரன் பழைய காலத்து வீடுகளை விநோதமாகப் பார்த்தபடியே நடந்து வந்தான். தேரடியில் ஒரு வேப்பமரம் மட்டுமே இருந்தது. சுற்றிலும் சிறிய மைதானம் போலக் காலியிடம். மாலைநேரத்தில் பையன்கள் அங்கே கிரிக்கெட் ஆடுவார்கள். சில நேரம் கிரிக்கெட் பந்து தேரை மறைத்திருக்கும் தகரத்தின் மீது அடித்துச் சப்தம் எழுப்பும்.
அந்தச் சப்தம் கேட்டால் கிட்ணா வீட்டிலிருக்கும் ரங்குதாத்தா தன்னுடை கோலை ஊன்றிக் கொண்டு எழுந்து வெளியே வந்து திட்டுவார். பையன்கள் அதைக் கேட்டுக் கொள்வதேயில்லை
அந்தத் தேர் நூறு வருஷங்களுக்கும் மேலாகப் பழமையானது. ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா எட்டு நாட்கள் நடைபெறும். அதில் ஏழாம் நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்
அன்று சுற்றியுள்ள பத்து கிராமத்து மக்களும் திரண்டுவிடுவார்கள். கூடை கூடையாகப் பூக்களை மாலையாக்கி புதுப்பெண்ணைப் போலத் தேரை அலங்கரித்திருப்பார்கள், தேரின் அழகு அதன் பிரம்மாண்டமான சக்கரங்கள். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே உருளும் அந்தச் சக்கரங்கள் கம்பீரமானவை.
ஊர்மக்கள் தேரின் பெரிய வடங்களைத் தொட்டு வணங்குவார்கள். தேர் ரதவீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைவதற்கு முன்பு சந்தனமடத்தின் எதிரில் தேரை நிறுத்திவிடுவார்கள். அங்கே விசேச பூஜை நடக்கும். அங்கே வாணவேடிக்கைகள் போடுவார்கள்.
தேரோட்டம் காண வெளியூரில் இருந்து உறவினர்கள் வருவதுண்டு. கோவில் முன்னால் துவங்கி பஜனை மடம் வரை பந்தல் போட்டிருப்பார்கள். கண்ணாடி வளையல்கள் விற்பவர்கள். ராட்டினம், பலூன்விற்பவன், குரங்காட்டி, பஞ்சுமிட்டாய் விற்பவன். இளநீர் விற்பவன். பத்து ரூபாய் போட்டோ ஸ்டுடியோ, நீர்மோர் தருகிறவர்கள், கருப்பட்டி மிட்டாய்கடைகள். இனிப்பு பால்பன்விற்பவர்கள். முறுக்கு அதிரசக்கடைகள். தள்ளுவண்டி சிப்ஸ் கடைகள் என்று ஊரெல்லாம் கொண்டாட்டம் நிரம்பிவழியும்.
தேரோட்டம் முடிந்த மறுநாள் தேரை நிலைக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். அடுத்து ஒரு ஆண்டிற்கு அதை யாரும் காணமுடியாது. சுற்றிலும் தகரம் அடித்துப் பூட்டியிருப்பார்கள். அதன் சாவி அப்பாவிடம் தானிருக்கும். எப்போதாது அறங்காவல்துறை அதிகாரிகள் வரும்போது இப்படித் தேரை திறந்து காட்டுவது உண்டு.

தேரின் முன்னால் போய் நின்றபோது நாராயணன் சாவியை எடுத்து நீட்டினான். தகரக்கதவைப் பூட்டியிருந்த இரும்புப்பூட்டினை திறந்தபோது லியோன் “இந்தத் தேர் ஆணா பெண்ணா “என்று ஆங்கிலத்தில் கேட்டான்
இது என்ன கேள்வி தேரில் ஆண் பெண் என்று இருக்குமா என்ன என்ற குழப்பத்துடன் தெரியவில்லை என்று பதில் சொன்னான் ஹரி
.தகரக்கதவைத் திறந்தவுடன் தேரைச்சுற்றிப் பார்க்குமளவு இடைவெளியிருந்தது. லியோன் அந்தத் தேரிலுள்ள சிற்பங்களைக் கவனமாகப் பார்த்தபடியே வந்தான். அந்தத் தேரில் நானூறுக்கும் மேற்பட்ட சிற்பங்களுமிருந்தன.அதன் சக்கரத்தின் உயரம் ஆறரை அடி, தேர் இலுப்பை மரத்தில் செய்யப்பட்டது என்ற தகவல்களைக் கடகடவென ஹரி சொல்லிக் கொண்டே சென்றான்
லியோன் அதைக் கேட்டது போலவே தெரியவில்லை. அவன் நீண்ட பிரிவிற்குப் பிறகு காதலியைக் காணும் காதலன் போல அந்தத் தேரைப் பார்த்து கொண்டிருந்தான். பிறகு பெருமூச்சிட்டபடியே மார்வலஸ் என்றான்.
போட்டோ எடுத்தவுடன் திரும்பத் தகரக்கதவை பூட்ட வேண்டும் என்பதற்காக ஹரி நின்று கொண்டிருந்தான்.
“நான் தேரை தனியாகப் பார்க்கவிரும்புகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம் “என்று ரகசியம் பேசுவது போல லியோன் சொன்னான்
அப்படி இதில் என்ன பார்க்கப்போகிறான் என்று நினைத்த ஹரி சரியெனத் தலையாட்டிவிட்டு நாராயணனிடம் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு வந்துவிடுவதாகச் சொன்னான். நாராயணன் வேப்பமரத்தடியில் போய் நின்று கொண்டான்.
அவர்கள் போனபிறகு லியோன் அந்தத் தேரின் சிற்பங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். குனிந்தும் தரையில் அமர்ந்தும் அந்தத் தேரைப் பார்த்தான். எப்படி இத்தனை நுணுக்கமான சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள் என்ற வியப்பு அடங்கவேயில்லை. இவ்வளவு பெரிய கலைத்தொகுப்பை எதற்காக இப்படித் தகரமடித்து மூடிவைத்திருக்கிறார்கள்.

ஹரி வீட்டிற்கு வந்தபோது தேவகி அக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் ஒரு தோசையைச் சாப்பிட்டு முடிக்க அரைமணி நேரமாகும். வாயில் தோசையை வைத்தபடியே ஏதோ நினைப்பில் மூழ்கிவிடுவாள். சாப்பிடும் போதும் என்ன யோசனை என்று தெரியாது. பசியில் தன் தட்டை எடுத்துக் கொண்டுவந்து அம்மாவின் முன்னால் நின்றான் ஹரி
“அவ சாப்பிட்டு முடிக்கட்டும்டா“ என்றாள் அம்மா
“அதுக்கு ராத்திரியாகிடும். நீ தோசையை எனக்குப் போடு“ என்று அம்மாவிடம் கோபமாகச் சொன்னான் ஹரி
அம்மா தோசையை அவனது தட்டில் போட்டாள். நின்றபடியே பசியில் அவன் வேகவேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்து தேவகி அக்கா சிரித்தபடியே கேட்டாள்
“எள்ளுப்பொடி போட்டுக்கிடலையா “
ஹரி பதில் சொல்லவில்லை. அக்கா நிதானமாகத் தோசையைப் பிய்த்து சக்கரையைத் தொட்டுச் சாப்பிட்டாள். அதைப் பார்க்கவே ஹரிக்கு எரிச்சலாக வந்தது. இன்னும் சின்னப்பிள்ளையா இவள்.
அக்கா தேவகி கல்லூரி படிப்பை முதல் ஆண்டுடன் நிறுத்திக் கொண்டுவிட்டாள். அவளுக்கு ஹாஸ்டல் பிடிக்கவில்லை. அதைவிடவும் “படிபபு மனசில நிற்க மாட்டேங்குது“ என்றாள். அப்பா கோவித்துக் கொண்டார்.
“அவளுக்கு இஷ்டம் இல்லேன்னா விட வேண்டியது தான். நல்ல இடத்துல மாப்பிள்ளை பாத்துக் கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்“ என்றாள் அம்மா.
அதற்கும் அப்பா கோவித்துக் கொண்டார்
“நல்ல இடம் கிடைக்கிறது லேசா. அவ ஜாதகப்படி வரன் அமைய இன்னும் ரெண்டு வருஷமாகும்“
“அதுவரைக்கும் வீட்ல சும்மா உட்கார்ந்து கிடந்தா உடம்பு பெருத்துபோயிடும். “ என்றாள் அம்மா
“எனக்கு ஒரு டைப்ரைட்டிங் மெஷின் வாங்கிக் குடுங்க. உங்க ஆபீஸ் வேலை எல்லாம் நான் வீட்ல இருந்தே செய்றேன்“ என்றாள் அக்கா
அப்பாவிற்கு அந்த யோசனை ஏற்புடையதாக இருந்தது. புதிய டைப்ரைட்டர் மிஷினை வாங்காமல் டவுனிலிருந்து பழைய மிஷின் ஒன்றை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார். அன்றிலிருந்து அப்பாவின் கோவில் சார்ந்த வேலைகளை அவள் வீட்டில் டைப் அடித்துக் கொடுப்பாள். மீதமுள்ள பகலில் தொடர்கதைகள் படிப்பாள். பூத்தையல் செய்வாள். சில நாட்கள் பழைய துணிகளை வைத்துப் பொம்மை செய்வாள்.
தேவகி அக்கா அடுப்படி பக்கமே போக மாட்டாள். கேட்டால் என் கைபட்டா எல்லாம் கசந்து போயிரும். அன்னைக்கு அம்மா சொன்னானு ரசம் வச்சேன். அப்பாகிட்ட ஒரே திட்டு. எனக்குச் சமைக்க வராது என்பாள்
“கல்யாணம் ஆகிப்போன சாப்பாட்டு என்னடி பண்ணுவே“ என்று அம்மா கோவித்துக் கொள்வாள்
“அவன் தலையெழுத்து. நான் பொங்கி போடுறதை சாப்பிட வேண்டியது தான்“ என்று சிரித்துக் கொள்வாள். எந்த நெருக்கடியிலும் அக்கா அழுதது கிடையாது. கோபத்தைக் காட்டிக் கொண்டதும் கிடையாது. எப்போதும் சாந்தமாக இருப்பாள். மாலையானதும் தலையை வாறி பூச்சூடிக் கொள்வாள். குளிக்கும் போது மெல்லிய குரலில் பாடுவாள். சிலநேரம் அம்மா பக்கத்துவிட்டு மங்களத்திடம் “எதுக்கும் ஆசைப்படாத பொண்ணு“ என்று ஆதங்கப்படுவதை ஹரி கேட்டிருக்கிறான்.
அக்கா எப்படி இப்படியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கும். வீடு தான் அவளது உலகம். ஒரு வாரத்திற்கு ஒருமுறை கூட வீட்டுப்படியை தாண்டி வெளியே போக மாட்டாள். கோவிலுக்குப் போகலாம் என்று அம்மா கூப்பிட்டால் கூட மறுத்துவிடுவாள்.
மாடியில் இருந்த சிறிய அறையில் தான் எப்போதுமிருப்பாள். அங்கே பகலிலும் வெளிச்சமிருக்காது. ஒரேயொரு ரேடியா துணையாக இருக்கும். மரமேஜை மீது டைப்ரைட்டர். பக்கத்தில் ஒரு டீப்பாய் அவள் அமர்ந்து டைப் அடிக்க உயரமான முக்காலி. ஒரமாக ஒரு தண்ணீர் கூஜா. பித்தளை டம்ளர். அந்த அறையின் ஜன்னல் மிகச்சிறியதாக இருந்தது. அங்கே நின்றால் தெருவில் போகிறவர்களைக் காணலாம். ஆனால் அக்கா ஒருபோதும் அப்படி நின்று பார்த்தது கிடையாது.
சின்னஞ்சிறிய உலகில் ஒரு சிலந்தி போல ஏன் வாழுகிறாள் என்று வியப்பாக இருக்கும். பெண்கள் சிறிய இடத்திற்குள் பெரிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறார்களோ என்றும் அவனுக்குத் தோன்றும்.
ஹரி சாப்பிட்டு முடிப்பதற்குள் அம்மா ரைஸ்மில்லில் போய் மிளகாய் பொடி அரைத்துக் கொண்டுவரும்படி தூக்கு வாளியைக் கொடுத்து அனுப்பினாள். என்ன வீடிது. ஆளுக்கு ஆள் வேலை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது.
அவன் மிளகாய் தூள் அரைத்துவிட்டுச் சைக்கிளில் திரும்பி வரும்போதும் லியோன் தேரைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்ணில்பட்டது தேரில் ஏதாவது ஆராய்ச்சி செய்கிறானா. என்ன அப்படி இருக்கிறது. வீட்டிற்குப் போய்த் தூக்குவாளியை கொடுத்துவிட்டு தேரடிக்கு வந்த போது லியோன் சொன்னான்
“இப்படி ஒரு தேரை கண்டதேயில்லை. எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள். இதைச் செய்தவர் யார். சிற்பத்திலுள்ள இந்த வாத்தியக்கருவியின் பெயரென்ன“ என்று ஏதேதோ கேட்டான்
“அதெல்லாம் எதுவும் தெரியாது“ என்றான் ஹரி
“யாருக்குத் தெரியும்“ என்று லியோன் கேட்டபோது அவனை அப்பாவிடமே அனுப்பி வைப்பது சரியாக இருக்கும் எனக் கோவிலுக்குப் போகும்படி ஹரி சொல்லி அனுப்பினான். அவன் கோவில்வரை கூடப்போகவில்லை. நாராயணன் தான் கூட்டிச் சென்றான்
அன்றிரவு அப்பா சொன்னார்
“அந்த வெள்ளைக்காரன் பிரான்சிலே இருந்து வந்திருக்கான். அவன் நம்ம கோவில் தேரைப்பற்றி அவ்வளவு பெருமையாகச் சொல்றான். இந்தியா பூரா போயி தேரைப்பற்றி ஆராய்ச்சி பண்ணுறானாம். இதுக்கு அவங்க அரசாங்கம் உதவிதொகை கொடுத்திருக்காம். ஒரு வாரம் நம்ம ஊர்ல தங்க இடம் கேட்குறான்“
“திருட்டுப்பயலா இருக்கப்போறான். ஜாக்கிரதை“ என்றாள் அம்மா
“திருடவருகிறவன் சாவிகேட்டு திறந்து போட்டோ எடுப்பானா.. என்னடி பேசுறே “என்று அப்பா கோவித்துக் கொண்டார்.
சாரதி வீட்டின் மாடியில் அவன் தங்கிக் கொள்வதற்காக அப்பா ஏற்பாடு செய்தார்.

மறுநாள் லியோன் அந்தத்தேரை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுப்பதைச் சிறார்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் தேரின் மீது ஏறி நின்று போட்டோ எடுப்பதை ரங்குதாத்தா கண்டிப்பது போலக் கத்திக் கொண்டிருந்தார். பசியை மறந்து அவன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். உச்சிவேளையில் கோவிலுக்கு வந்து பிரசாதம் விற்கும் கடையில் புளியோதரை வாங்கி அவன் சாப்பிடுவதைக் கோவில் பணியாளர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
லியோன் அப்படித் தேரில் என்ன பார்க்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காகவே மூன்றாம் நாள் அவனைத் தேடிப் போனான் ஹரி
“இந்த தேர் போல இன்னொரு தேர் செய்யப்பட்டிருக்கும். அதாவது ஜோடித்தேர். அது எந்த ஊர்ல இருக்கும்னு விசாரிக்கணும்“ என்றான் லியோன்
“எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது“ என்று கேட்டான் ஹரி
“அதுக்கு ஒரு அடையாளம் இருக்கு. பறவையோட ரெண்டு சிறகு மாதிரி இது ரெட்டை தேர்ல ஒணணு“ என்றான்
அப்படி ஹரிக்கு எதுவும் தெரியவில்லை
“இந்த தேர்ல ஆண்களை விடப் பெண்களின் சிற்பம் அதிகமிருக்கு. அதுவும் ஒரே முகம் கொண்ட ஏழு பெண்சிற்பங்கள் இருக்கு. ஒருவேளை ஒரே பெண்ணாவும் இருக்கலாம் “என்று தேரின் நிலைகளைச் சுட்டிக்காட்டினான்
அவன் காட்டியபிறகே அந்தப் பெண்சிற்பத்தின் முகம் ஒன்று போல இருப்பது தெரிந்தது
“இதில் முப்பத்திரெண்டு கிளிகள் இருக்கு. ஆனா எந்த ரெண்டு கிளியும் ஒண்ணு போல இல்லை. மேல இருக்கிற சிற்பத்தை பாருங்க. அந்த பொண்ட உதடுல சிரிப்பு ஒட்டிகிட்டு இருக்கு.“
“அப்படியா “என ஒன்றும் அறியாமல் கேட்டான் ஹரி
தேரை எப்படிச் செய்வார்கள் என்ற ரதச் சாஸ்திரம் பற்றி லியோன் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தான். எங்கோ பிரான்சில் பிறந்து வளர்ந்த ஒருவன் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தேர் செய்வதை அறிந்து வைத்திருக்கிறான் என்று வியப்பாகவே இருந்தது
“வேற ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க“ என்று சொன்னான் ஹரி
“ எனக்கு இந்த தேரோட்டத்தைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு“ என்றான் லியோன்
“அதுக்குப் பங்குனி மாசம் வரை காத்துகிட்டு இருக்கணும்“
“யாராவது தேரோட்டத்தை வீடியோ எடுத்து இருப்பாங்களா“
“சுந்தர் வீடியோல கேட்டு பாக்குறேன்“
“இருந்தா நான் பணம் தர்றேன் எனக்கு ஒரு சிடி வேணும்“
“கேட்டுபார்த்து சொல்றேன்“
“இந்த தேரை பற்றி ஏதாவது பாட்டு இருக்கா. நடந்த சம்பவம் ஏதாவது “என்று கேட்டான் லியோன்
“ரங்குதாத்தா கிட்ட பேசினா தெரியும்“ என்று கிட்ணா வீட்டினை காட்டினான் ஹரி
“அவர் என்னை வீட்டுக்குள்ளே விட மாட்டேனு சொல்லிட்டார் “என்று சிரித்தான் லியோன்.
கோவிலில் இருந்து வெளியிட்ட பழைய மலரில் இருந்த புகைப்படங்களைக் காட்டுவதற்காக அன்று மாலை அவனை அப்பா அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அம்மா கொடுத்த காபியை மிகவும் நன்றாக இருக்கிறது என்று லியோன் பாராட்டினான். அம்மாவிற்கு அப்படி யாரும் முகத்திற்கு நேராகப் புகழ்ந்து சொன்னதில்லை என்று சந்தோஷப்பட்டாள்.
ஒரு வாரம் முடிந்தபோதும் லியோன் தேரை பற்றிய ஆராய்ச்சியை முடிக்கவில்லை. ஊரிலே ஒரு மாதகாலம் தங்கியிருந்தான். சுந்தர் வீடியோவில் வாங்கி வந்த தேரோட்டத்தைக் கிட்ணா வீட்டிலிருந்த டெக்கில் போட்டுத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நேரம் அந்தத் தேர் செல்வதைக் காணும் போது அவனது கண்கள் பனித்தன
யார் சொன்னார்கள் என்று தெரியாது ஒருநாள் லியோன் ஒரு வேஷ்டி கட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்தபோது அப்பாவிற்கு வியப்பாக இருந்தது. “என்ன வேஷமிது“ என்று கேட்டார். அவன் சிரித்தபடியே “ஐ லைக் வேஷ்டி “என்றான்.
அப்பா கோவில் நூலகத்தில் இருந்த பழைய புத்தகங்களை அவன் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். அந்தப் புத்தகங்களைத் தன் அறைக்கு எடுத்துக் கொண்டுபோவதாகச் சொல்லி ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.
பின்பு ஒரு நாள் அப்பாவைக் காண பெரிய போட்டோ ஆல்பம் ஒன்றுடன் வந்திருந்தான். கல்யாண வீடுகளில் போடப்படும் ஆல்பம் போல மிகப்பெரியதாக இருந்தது.
“என்ன ஆல்பம்“ என்று அப்பா கேட்டார்
“தேரோட போட்டோஸ்“ என்று விரித்துக் காட்டினான்
தேரின் அத்தனை சிற்பங்களையும் அழகாகப் புகைப்படம் எடுத்திருந்தான். இவ்வளவு அழகான சிற்பங்களா என்று வீடே அதிசயமாகப் பார்த்தது. அது மட்டுமின்றி விடிகாலையில், அந்திமாலை சூரிய வெளிச்சத்தில் தேரை படம்பிடித்திருந்தான். அந்த ஆல்பத்தில் இருந்த புகைப்படங்களைக் கண்டபோது அவன் மிகச்சிறந்த போட்டோகிராபர் என்று தெரிந்தது. அப்பா அந்த ஆல்பம் தன்னிடம் இருக்கட்டும் என்று கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார்
“இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் “என்று சொல்லி தன் அறைக்குக் கிளம்பிப் போனான்
அவர்கள் வீதியில் இருந்த எல்லா வீடுகளுக்கும் அம்மா அந்த ஆல்பத்தைக் கொண்டு போய்க் காட்டினாள். அந்தப் புகைப்படங்களைப் பார்த்தபிறகு தேரை ஆசையாகக் கிட்டத்தில் போய்த் தொட்டுபார்த்தவர்களும் உண்டு
லியோன் அந்தப் புகைப்படங்களின் வழியே அனைவரது மனதிலும் இடம்பிடித்துவிட்டான். உள்ளூர் இளைஞர்களுடன் ஒன்றாகச் சீட்டு விளையாடவும் கால்வாயிற்குக் குளிக்கப் போய்வரவும், தனியே சைக்கிள் ஒட்டிப் போய் டூரிங் தியேட்டரில் சினிமா பார்க்கவும் பழகியிருந்தான். பெட்டிக்கடைகளில் கணக்கு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவன் உள்ளூரில் ஒருவனாகியிருந்தான்.
ஒருமுறை லியோன் சொன்னான்
“ஒவ்வொரு தேரும் ஒரு ரகசியம். இந்தத் தேருக்குள் நிறைய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. “
“என்ன ரகசியம்“
“அதைச் சொன்னால் புரியாது“ என்று சிரித்தான் லியோன். பின்பு ஒரு நாள் அப்பாவைத் தேடி வந்து அவன் வெள்ளிகிழமை தான் ஒரிசா புறப்படப்போவதாகச் சொன்னான்
“வந்த வேலை முடிஞ்சது இல்லியா“
“ஓரளவு முடிஞ்சது. பூரி ஜெகனாதர் கோவில் தேரைப் பார்க்கப்போறேன்“
“எப்போ உன் நாட்டுக்கு கிளம்புறே“ என்று அப்பா கேட்டார்
“டிசம்பர்ல“ என்று சொன்னான் லியோன்
வீட்டிலிருந்த பழைய தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை கழட்டி அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார் அப்பா. லியோன மிகப் பணிவோடு அதை வாங்கிக் கொண்டு நன்றி சொன்னான்

அன்றிரவு அம்மா சமையல் கட்டில் இரவு உணவிற்காகச் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்த போது தேவகி கலங்கிய கண்களுடன் அம்மாவிடம் சொன்னாள்
“நான் லியோனை கல்யாணம் பண்ணிக்கிடப் போறேன்“
“என்னடி சொல்றே“
“நான் அவரைக் காதலிக்கிறேன். அவரைத் தான் கட்டுகிடுவேன்“
அம்மாவால் அதை நம்பமுடியவேயில்லை. வீட்டைவிட்டு வெளியே போகவே போகாத தேவகி எப்படி லியோனை காதலித்திருக்க முடியும். அம்மா சப்பாத்தி மாவு பிசைவதை அப்படியே வைத்துவிட்டு எழுந்து தேவகி அருகில் வந்த போது அவள் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்
“நிஜமாவாடீ சொல்றே“ என்று அம்மா கேட்டாள்
தேவகி அக்கா தன் கையில் ஒரு புகைப்படத்தைக் காட்டினாள்
அதில் தேர் சக்கரத்தை ஒட்டி தேவகி நிற்பது போல ஒரு புகைப்படத்தை லியோன் எடுத்திருந்தான். அந்தப் புகைப்படத்தில் தேவகி அத்தனை அழகாக இருந்தாள்.
“இது எப்போ எடுத்தது“
“ஒரு மாசமிருக்கும்“
“அவனோl எப்படிப் பழக்கமாச்சி“
“அடிக்கடி போய் நான் பார்ப்பேன். பேசுவேன்“
“இது எப்போ நடந்துச்சி“
“துணி துவைக்க வாய்காலுக்குப் போயிட்டு வரும்போது “என்று அமைதியாகச் சொன்னாள் அக்கா
அம்மாவால் நம்பமுடியவில்லை. வீட்டை தவிர வேறு எதுவும் தெரியாத பெண்ணா இப்படித் தேடிப் போய் ஒருவனைக் காதலித்திருக்கிறாள். எப்படிப் பயமேயில்லாமல் இப்படி நடந்து கொண்டாள்.
“அவன் உன்னை லவ் பண்ணுறானா “என்று அம்மா கேட்டாள்
“தெரியாது. ஆனா நான் அவரைத் தான் கல்யாணம் பண்ணிகிடுவேன்“
“என்னடி லூசு மாதிரி பேசுறே. “
“நான் அவருக்கு லவ் லெட்டர் எழுதியிருக்கிறேன். அதை வாங்கிக்கொண்டார். என்னை நிறையப் போட்டோ எடுத்திருக்கிறார். அப்படின்னா என் மேல ஆசை இருக்குனு தானே அர்த்தம்“
“குடியை கெடுத்தே. உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா நம்மளை கொன்னே போட்ருவார்“
“நீ தான் அப்பா கிட்ட பேசணும்“
“நான் மாட்டேன். நீயே சொல்லு“ என்றாள்
அக்கா சப்தமாக அழத் துவங்கினாள். அம்மா அதன்பிறகு அவளைச் சமாதானம் செய்தாள் இரவு அப்பா திரும்பி வந்த போது ஹரி தான் இதை அப்பாவிடம் சொன்னான்
“எங்க அவ.. கூப்பிடு அந்த நாயை.. லவ் பண்ணுறாலோ லவ்வு. அவளைச் செருப்பாலே அடிப்பேன். “ என்று கத்தினார்
“அந்த பையனும் லவ் பண்ணுறானாம்“ என்ற அம்மா மென்றுவிழுங்கிச் சொன்னாள்
“இவ்வளவு நடந்திருக்கு. வீட்ல நீ என்னடி பண்ணுறே. “. என்று அப்பாவின் கோபம் அம்மா மீது திரும்பியது. அவர் கத்திக் கொண்டேயிருந்தார். தேவகி அக்கா ஒடிவந்து அப்பா காலில் விழுந்தாள். அப்பா அவள் முதுகில் அடிப்பதை ஹரி தடுக்க முயன்றான். அவனுக்கும் திட்டு விழுந்தது
லியோனைத் தேடி அழைத்து வருவதற்காக ஹரி சென்றபோது அவன் தங்கியிருந்த அறை திறந்து கிடந்தது. அவன் மாலையே கிளம்பிப் போய்விட்டான் என்று கிட்ணா வீட்டில் சொன்னார்கள். கிளம்புவதற்கு முன்பு அவர்களுக்குப் பரிசாகப் பட்டுபுடவையும் பட்டுவேஷ்டியும் கொடுத்தான் என்றும் கூடவே முந்நூறு ரூபாய் பணம் இருந்தது என்றார் கிட்ணா.
“வேற ஒண்ணும் சொல்லலையா “என்று ஹரி கேட்டான்
“இல்லையே… ஏதாவது பிரச்சனையா“ என்று கேட்டார் கிட்ணா
“அதெல்லாம் இல்ல. அவன் எடுத்த போட்டோ தர்றேன்னு சொல்லியிருந்தான். அதைக் கேட்டு போகலாம்னு வந்தேன்“ என்றான் ஹரி
வீடு திரும்பி லியோன் போய்விட்டதைச் சொன்னபோது தேவகி அய்யா சப்தமாக அழுதாள். அவன் தேவகி அக்காவை காதலிக்கவில்லை. அவள் தான் வலிந்து பழகியிருக்கிறாள். ஆசைப்பட்டிருக்கிறாள் என்று அப்பா திட்டினார். அம்மாவும் சேர்ந்து தேவகி அக்காவை திட்டினாள். அவளது அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அப்பா தேவகிக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரமாகினார். அவள் மாப்பிள்ளை யார் என்று கூடக் கேட்டுக் கொள்ளவில்லை. ஆறுமாதங்களுக்குப் பிறகு கல்யாணமாகி அவள் ஸ்ரீரங்கம் சென்றாள். அவளது அறையில் இருந்த டைப்ரைட்டரை அப்பா தன் அலுவலகத்திற்குக் கொண்டு போய்விட்டார். அவளது அலமாரியில் லியோன் எடுத்த அவளது போட்டோ இரண்டாகக் கிழிந்துகிடந்தது
அக்கா எப்போது லியோனை சந்தித்தாள். எப்படி அவள் காதலித்தாள். எதுவும் ஹரிக்குப் புரியவில்லை. லியோன் ஏன் இதை வெளிப்படுத்தவேயில்லை. எப்படி ரகசியத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த தேரையும் தனக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த அக்காவையும் தெரியவில்லை. நிழல் போல இருந்த பெண் இப்படி நடந்து கொண்டுவிட்டாளே என்று வியப்பாகவே இருந்தது. லியோன் மீது கோபமாகவும் வந்தது.
திருமணத்திற்குப் பிறகு அக்கா ஊருக்கே வரவில்லை. வருஷாவருஷம் கோவில் தேரோட்டத்திற்கு வரும்படி அப்பா நேரில் போய் அழைத்து வருவார். .அவள் வந்ததேயில்லை.
அவளுக்கு அந்தத் தேரைக் காணப் பிடிக்கவேயில்லை. அம்மாவிடம் ஒரு நாள் போனில் சொன்னாள்
“நான் செத்தாலும் ஊருக்கு வரமாட்டேன். அந்தத் தேரை பார்க்கமாட்டேன் பாத்துக்கோ“
“தேர் என்னடி பண்ணுச்சி“ என்றாள் அம்மா
“என்ன பண்ணலே“ என்று கேட்டு அழுதாள் தேவகிஅக்கா
அம்மாவிற்கு அப்படித் தேவகி அழுவதைக் கேட்கும் போது கண்கள் கலங்கவே செய்தன
••••
May 20, 2021
காற்றின் நறுமணம்.
காருகுறிச்சியார் நூற்றாண்டுவிழாவிற்காக ஆனந்தவிகடனில் வெளியான சிறப்புக் கட்டுரை
••
திருமண விழாக்களுக்கு ஊர் ஊராகச் சென்று மைக்செட் போடும் வேலாயுதம் எப்போதும் போடும் முதல் ரிக்கார்ட் காருகுறிச்சியின் நாதஸ்வரம் தான். அந்த மங்கள இசையை ஒலிக்க விட்டவுடன் தான் கல்யாணவீடு ஒளிரத்துவங்கும். உண்மையில் சந்தோஷத்தின் அடையாளமாகவே நாதஸ்வரம் ஒலிக்கிறது.
அந்த வாத்தியம் கரிசல் மனிதனின் அன்பைப் போல வீரியமானது. உக்கிரமானது. நாட்டுப்பசுவின் பாலுக்கெனத் தனிருசியிருப்பது போலவே காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது.

அந்த வேலாயுதம் மைக்செட் போடும் இடங்களில் சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். காருகுறிச்சியாரின் இசைத்தட்டினை உறையிலிருந்து எடுத்து அவரே தான் இசைக்கவிடுவார். வேறு யாரும் அந்த இசைத்தட்டினைத் தொடக்கூடாது. தொடவிடமாட்டார். ஆயிரமாயிரம் கல்யாணவீடுகளில் ஒலித்த அந்த இசையைக் கேட்ட கிராமவாசிகளுக்குப் பெரிய சங்கீத ஞானம் கிடையாது. ஆனால் மயில் ஆடுவதை ரசிப்பது போலத் தன்னை மறந்து நாதஸ்வர இசையில் கரைந்து போயிருப்பார்கள்.
காருகுறிச்சியாரின் ரிக்கார்ட் ஒலித்து முடிந்தவுடன் வேலாயுதம் கண்களைத் துடைத்துக் கொள்வார். நல்ல இசை கண்ணீர் வரவழைக்ககூடியது தானே. அதை உறையில் போட்டு மரப்பெட்டியினுள் வைக்கும்போது அவரிடம் காணப்படும் பணிவும் அக்கறையும் அலாதியானது. இசைத்தட்டில் வெளியாகியிருந்த காருகுறிச்சியாரின் புகைப்படத்தை மட்டும் தான் வேலாயுதம் பார்த்திருக்கிறார். அவரை நேரில் கண்டதில்லை. ஆனால் நாதஸ்வர இசையின் வழியே ஒவ்வொரு நாளும் அவர் காருகுறிச்சியாரை பார்த்தபடியே தானிருக்கிறார்.
தென்மாவ்ட்டடக் கோவில்களிலும், சினிமா தியேட்டரில் ஷோ துவங்குவதற்கு முன்பு காருகுறிச்சியின் நாதஸ்வரம் ஒலிப்பது வழக்கம். அது நம்மை மகிழ்வோடு அழைக்கும் குரல். வேலாயுதம் எத்தனையோ முறை காருகுறிச்சியாரின் ரிக்கார்டினைக் கேட்டு ரசித்திருந்த போதும் ஒவ்வொரு முறையும் புதிதாகக் கேட்பது போலவே அமர்ந்திருப்பார். அவர் தான் ஒரு நாள் சொன்னார்
நாதஸ்வர இசை கலக்கும் போது தான் காற்றுக்கு மணம் வருது. தொலைவிலிருந்து கேட்டுபாருங்க. அந்த வாசனை தெரியும்
அது உண்மை. கரிசலின் வெம்பரப்பில் வெயிலைப் போலவே ஊர்ந்து செல்லும் நாதஸ்வர இசைக்கு மணமிருக்கிறது. தாழம்பூவின் மணம் போல அலாதியான மணமது.
எங்கோ களை பறித்துக் கொண்டு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பவர்கள் கூடத் தொலைவிலிருந்து சஞ்சரிக்கும் நாதஸ்வர இசையைக் கேட்டு ரசித்தபடியே தான் வேலை செய்வார்கள்.
காருகுறிச்சியாரின் சங்கீதம் குற்றால அருவியைப் போலத் தனித்துவமானது. குளிர்ச்சியானது. மனதையும் உடலையும் சாந்தப்படுத்தக் கூடியது. இசை ஞானம் கொண்டவர்கள் மட்டுமின்றி எளிய மனிதர்களும் அவரது இசையில் கரைந்து போயிருந்தார்கள்.
இந்த ஆண்டுக் காருகுறிச்சியாரின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. தான் வாழும் காலத்தில் உரிய அங்கீகாரமும் கௌரவமும் பெற்ற கலைஞர் காருகுறிச்சியார்.

கோவில்பட்டியில் வசித்த அவர் புதுவீடு கட்டிய போது அதன் திறப்பு விழாவிற்குத் திரையுலக நட்சத்திரங்கள் திரண்டு வந்திருந்தார்கள். கோவில்பட்டி மக்களின் நினைவில் அது அழியாத காட்சியாகப் பதிந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜியும் ஜெமினி கணேசன் சாவித்ரியும் காருகுறிச்சியார் மீது காட்டிய அன்பு நிகரற்றது. வேறு எந்த இசைக்கலைஞருக்கும் இப்படியான அபூர்வ நட்பு சாத்தியமாகியிருக்குமா எனத் தெரியவில்லை.
இசைமேதையாக இருந்ததோடு பழகுவதற்கு அத்தனை நேசத்துடன், உண்மையான பற்றுடன் இருந்தவர் காருகுறிச்சியார். பெரிய ஜமீன்தார்கள் துவங்கி பெட்டிக்கடை காரர் வரை அவர் ஒரே போலத் தான் நட்பு பாராட்டினார். பிரபலமான இசைக்கலைஞராக விளங்கிய போதும் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குக் கச்சேரி செய்து கொடுத்த அவர் மறக்கவேயில்லை. பேருந்து நிலையத்தினை ஒட்டிய மேடையில் அவர் கச்சேரி செய்யும் போது அதைக் கேட்டவர்கள் சாமானிய மக்கள். அவர்கள் மனதில் இன்றும் அந்த இசை ஒலித்தபடியே தானிருக்கிறது.
கோவில்பட்டியில் அவர் கட்டிய வீட்டைப் போலத் தனது மகள் திருமணமாகிப் போன பழனியிலும் ஒரு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் காருகுறிச்சியார். மகள் பிறந்த வீட்டினை விட்டு புகுந்தவீடு போனபோதும் அதே வீட்டில் இருப்பது போல உணர வேண்டும் என ஆசைப்பட்ட பாசமிகு தந்தையாக இருந்திருக்கிறார். இந்தச் செய்தியை என்னிடம் சொன்னவர் காருகுறிச்சியாரின் உறவினர் முருகேசன்.
தஞ்சை மண்ணின் இசைக்கலைஞர்கள் கொண்டாடப்பட்ட அளவிற்குத் தென்மாவட்ட இசைக்கலைஞர்கள் கொண்டாடப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கிருந்தது. அதன் காரணமாகவே சஞ்சாரம் நாவலை எழுதினேன். அந்த நாவலை எழுதும் நாட்களில் நிறைய நாதஸ்வர கலைஞர்களைச் சந்தித்தேன். அவர்கள் மனதில் ராஜரத்தினம் பிள்ளைக்கும் காருகுறிச்சிக்கும் உள்ள இடம் தெய்வத்திற்கு நிகரானது.
நாதஸ்வரக் கலைஞர்கள் இன்று அழகான சில்க் ஜிப்பா அணிந்து கௌரவமாக மேடையில் அமர்ந்து வாசிக்கிறார்கள் என்றால் அதற்கு ராஜரத்தினம் பிள்ளைக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். அவர் இசைச் சக்கரவர்த்தி. மன்னரைப் போலத் தான் உடையும் உடுத்தியிருப்பார். அவர் காலத்திற்கு முன்பு வரை நாதஸ்வரக் கலைஞர்கள் மேல்சட்டை அணிய முடியாது. துண்டு தான். ஆனால் ராஜரத்தினம் பிள்ளையும் அவரது சீடர் காருகுறிச்சியாரும் எங்களுககு கௌரவத்தை உருவாக்கித் தந்தார்கள். அவர்களை ஒவ்வொரு நாளும் வணங்கியே கச்சேரி செய்கிறோம் என்றார் ஒரு நாதஸ்வரக் கலைஞர்
நாவல் எழுதும் பணியில் ஒருமுறை கழுகுமலைக்குச் சென்றிருந்தேன். முருகன் கோவிலில் கேட்ட நாதஸ்வர இசை அப்படியே காருகுறிச்சியாரின் சாயலில் இருந்தது. கோவிலில் கேட்கும் போது நாதஸ்வரம் மெய்மறக்கச் செய்து விடுகிறது. உண்மையில் கற்சிலைகள் கூடக் கைதட்டும் அளவிற்கு வாசிக்கிறார்கள். அந்த வாசிப்பு தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு செல்லும் மகளைப் போலவே தோன்றியது. அந்த நாதஸ்வரக் கலைஞரைப் பாராட்டிய போது அவர் தன் பர்சில் இருந்து காருகுறிச்சியார் படத்தைக் காட்டி அவரு மாதிரி வாசிக்க முடியாதுங்க. புலிவேஷம் கட்டிகிடுறது மாதிரி நாங்க வாசிக்கிறது வெறும் வேஷம்.
பணிவின் காரணமாக அப்படிப் பேசிய போதும் ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் உருவாகக் காருகுறிச்சியார் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார்.

காருகுறிச்சியாரின் மறைவை ஒட்டிய எழுதிய கட்டுரையில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி காருகுறிச்சியார் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். கு.அழகிரிசாமியின் சொந்த ஊராக இடைசெவல் தான் காருகுறிச்சி பெண் எடுத்திருந்தார். ஆகவே அவரை அழகிரிசாமி நன்றாக அறிந்தவர். .
அந்தக் கட்டுரையில் அருணாசலம் நாகஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, “இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்” என்று பரவசத்தோடும், பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவைகள் இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லி விடலாம். அதேபோல் இந்தக் சிஷ்யரிடத்தில் குருவும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் என்று கு.அழகிரிசாமி குறிப்பிடுகிறார். உண்மையான சொற்களது.
ஆனால் 25ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்து கொண்டு பேசினேன்.
கௌரிசங்கர் உள்ளூர் வீடியோகிராபர் ஒருவர் துணையோடு காருகுறிச்சியாரோடு தொடர்பான இடங்கள். கலைஞர்கள், குடும்பத்தவர் எனப் பலரையும் படம்பிடித்தார். காருகுறிச்சியின் பழைய புகைப்படங்கள். செய்தித் தாளில் வெளியான தகவல்கள் என யாவையும் ஒன்றிணைத்து சிறப்பாக அந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் வேறு எங்கும் திரையிடப்படவேயில்லை. கௌரி சங்கரும் மறைந்துவிட்டார். அவரது கனவு பாதியில் முடிந்துபோனது.
காருகுறிச்சியில் அருணாசலம் அவர்களுக்கு அவரது சொந்த ஊரில் ஒரு சிலையிருக்கிறது உள்ளூர் மக்கள் உருவாக்கிய சிலையது. வளைந்து போன நாதஸ்வரம் உள்ள சிலை. ஒரு மகத்தான இசைக்கலைஞனுக்குக் கம்பீரமான சிலை தேவை. அதை அரசே உருவாக்கி காருகுறிச்சியில் வைக்க வேண்டும். காருகுறிச்சியார் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். கோவில்பட்டியில் அவருக்கு ஒரு நினைவுமண்டபம் உருவாக்க வேண்டும்.
எனது சஞ்சாரம் நாவலுக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது காருகுறிச்சியாரின் குடும்பத்தினர் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருநெல்வேலியில் பெரிய பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் காருகுறிச்சியாரின் துணைவியார் எனக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி கொடுத்தார். அதை மிகப் பெரிய பேறு அன்று நாதஸ்வரக் கலைஞர்கள் என்னைக் கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இது தான் எழுத்தில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்.
தமிழ் மக்களின் அழியா நினைவில் காருகுறிச்சியாரும் அவரது சங்கீதமும் நிகரற்ற மகிழ்ச்சியின் அடையாளமாகவே நிலைகொண்டிருக்கிறார்கள்.
••
0
May 19, 2021
பன்னாலால் கோஷ்
பண்டிட் பன்னாலால் கோஷின் புல்லாங்குழலிசையை விரும்பிக் கேட்பேன். நிகரற்ற இசைக்கலைஞர். கிருஷ்ணகானம் என்பார்களே அது இவரது குழலில் பிறக்கிறது. எச்.எம்.வி வெளியிட்ட இவரது இசைநாடாக்களை வாங்கித் தொடர்ந்து கேட்டிருக்கிறேன்
இணையத்தில் இவரது இசை நிறைய கிடைக்கிறது. இரவில் தனிமையில் கேட்கும் போது நாம் கரைந்து போய்விடுகிறோம். ரகசிய நதியொன்று புல்லாங்குழலில் இருந்து கசிந்து பெருகுகிறது. நிலவொளியைப் போல இசை பிரகாசிக்கிறது. ஆனந்தம் என்பதன் முழுமையான அர்த்தம் இது போன்ற இசையில் தானிருக்கிறது
Pannalal Ghosh Hamsadhwani, Khamaj Thumri & Mishra Pilu
மூத்தோர் பாடல் 3
சிறுகட் பன்றியின் பெருஞ்சினம்
சிவகாசிக்கு முன்பாக உள்ளது திருத்தங்கல். பட்டாசு ஆலைகளும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் நிறைந்த ஊர். பலமுறை அங்கே போய் வந்திருக்கிறேன். ஆனால் அது சங்க காலத்தைச் சேர்ந்த ஊர் என்பதும் இரண்டு முக்கியச் சங்க கவிஞர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதையும் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்க வாசிக்க ஏற்படும் பிரமிப்பும் பெருமையும் அளவில்லாதது. இந்த லாக்டவுன் நாட்களில் அதிகமும் சங்க இலக்கியங்களைத் தான் வாசித்தேன்.
சங்ககாலக் கவிஞர்களில் பலரும் தனது ஊரின் பெயரையும் தந்தையின் பெயரையும் இணைத்தே அறியப்பட்டிருக்கிறார்கள். இன்று கேரளாவில் அப்படி அழைக்கும் முறை இருக்கிறது.

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் , தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்ற இரண்டு கவிஞர்களும் திருத்தங்கலைச் சேர்ந்தவர்கள். இந்த ஊரின் நாராயணப் பெருமாள் கோவில் திருமாலின் நூற்றியெட்டுத் திருப்பதிகளில் ஒன்று.
தடம்புனற் கழனித் தங்கால் என்று இளங்கோவடிகள் சிறப்பித்துப் பாடுவது இந்த ஊரைத் தான் என்று புலவர் கோவிந்தன் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் இந்தத் திருத்தங்கலைச் சேர்ந்தவன். அவனது கதையை இளங்கோவடிகள் விவரிக்கிறார். அந்தக் கதையின் படி
புகார் நகரத்தில் பராசரன் என்ற வேதம்படித்த அந்தணன் சேர நாட்டுக்குச் சென்று மன்னரைப் பாடிப் பரிசல்கள் பெற்று வந்தான்; வழியில் பாண்டி நாட்டில் தங்கால் என்ற ஊரிலுள்ள அரச மரத்தை உடைய மன்றத்தில் தங்கினான். அப்போது அந்த ஊரைச் சார்ந்த சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். தன்னோடு சேர்ந்து வேதம் ஓதினால் அவர்களுக்குப் பரிசு தருவாகப் பராசரன் சொன்னான். வார்த்திகன் மகன் தக்கிணன் என்பவன் சிறப்பாக மந்திரங்களைச் சொல்லி பாராட்டினையும் பொன்னால் ஆன நாண் ஒன்றினையும், கைவளை, தோடு எனப் பல பரிசுகளைப் பராசரனிடமிருந்து பெற்றான்.
இந்த அணிகலன்களை அணிந்து கொண்டு வார்த்திகன் குடும்பம் நடமாடுவதைக் கண்ட அரசாங்க காவலர்கள் இந்தப் பொருட்களை எங்கிருந்தோ திருடிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி வார்த்திகனைச் சிறையில் அடைத்தார்கள். . வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பாள் அவ்வூர்க் கொற்றவை கோயில் முன் நின்று முறையிட்டாள் உடனே அந்தக் கோவிலின் கதவு மூடிக் கொண்டது.
இதனை அறிந்த மன்னன் நடந்த விஷயங்களை விசாரித்து வார்த்திகன் குற்றமற்றவன் என்று விடுவித்தான். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதும் பிராயச்சித்தமாக அந்த ஊரில் விளைநிலங்களையும் கோவிலுக்கு நிலத்தையும் தானம் செய்தான். அதன்பிறகு மூடியிருந்த கோவில் கதவுகள் தானே திறந்து கொண்டன என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
கோவலன் கதையின் மறுவடிவம் போலவே வார்த்திகன் கதை அமைந்திருக்கிறது. ஆனால் வார்த்திகன் விடுவிக்கப்படுகிறான்.
இந்த ஊரை இராசராசப் பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டு கருநீலக்குடி நாட்டுத் திருத்தங்கால் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மாறவர்மன் சுந்தரப் பாண்டியன் காலத்தில் இந்த ஊரில் பாரதம் படிக்க மண்டபம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் எழுதிய பாடல் நற்றிணை 386 ல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு இது காட்டுப்பன்றியைப் பற்றியது. இன்றைக்கும் திருத்தங்கல் ரயில்வே கேட் முன்னால் பன்றிகளின் கூட்டம் சுற்றித்திரிவதைக் காண முடியும். அருகிலுள்ள வத்ராப் மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகளைக் காண முடியும். ஒரு காலத்தில் ஜமீன்தார்கள் காட்டுப்பன்றி வேட்டைக்குச் செல்வார்கள்.

செங்கண்ணனார் பாடலில் ஒரு தோழி தலைவியிடம் தலைவனின் ஊரைப் பற்றிச் சொல்கிறார். அதில் காட்டுப்பன்றியின் சிறிய கண்களையும் அதன் மிகுந்த சினத்தையும் அழகாக எழுதியிருக்கிறார். பன்றியின் கண்கள் மிகக்சிறியவை. காட்டுப்பன்றி மூர்க்கமாகத் தாக்ககூடியது. காட்டில் வாழுபவர்கள் உழுது விதைத்து விளைந்திருந்த தினைக்கதிர்களை அந்தப் பன்றி தின்னும் பின்பு அது அருகிலுள்ள குகைக்குச் சென்று உறங்கும். அந்தக் குகை புலி வாழுமிடம் என்று அறிந்த போதும் அஞ்சாமல் உறங்கும் என்றும் இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் உன் தலைவன். அவன் உன்னிடம் முருகன் மீது சத்தியம் என்றான். நீயோ உன்னைப் போலப் பொய் சொல்லுகிறவர்கள் இப்படிச் சத்தியம் செய்யமாட்டார்கள் என்று பதில் உரைத்தாய்.
இப்போது அவன் உன்னைத்தேடி ஊருக்கு வந்திருக்கிறான். திருமணம் வேண்டிப் பணிவோடு வந்திருக்கிறான். அவனது துணிகரமான செயலைக் கண்டு வியக்கிறேன் என்கிறாள் தோழி.
இதில் பன்றியின் சினமும் அது பயமற்று புலியின் குகையில் உறங்குவதும் அழகான காட்சியாக இடம்பெற்றிருக்கிறது. திருத்தங்கல்லில் உள்ள கருநெல்லி நாதர் கோவில் புகழ்பெற்றது. இங்கே ஆண்டிக்கோலத்தில் முருகன் காட்சி அளிக்கிறார். செங்கண்ணனார் பாடலில் முருகன் மீது தான் சத்தியம் செய்கிறான் தலைவன்.
காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக இந்தப் பகுதி விவசாயிகள் வெடிவைத்து விரட்டுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் காட்டுப்பன்றிப் பயமற்றது. மற்ற விலங்குகளை விடக் காட்டுப் பன்றிகளுக்கு மோப்பத்திறன் அதிகம். உடல் சாம்பல் கலந்த கருமை நிறம் கொண்டது. உடல் முழுவதும் முரட்டு முடிகள் இருக்கும். விவசாய நிலத்தில் இரவில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் இந்தக் காட்டுப்பன்றிகளின் அழிமானத்தைத் தடுக்க முடியாது. கவிதையில் தலைவன் சத்தியம் செய்வதும் அதை நம்பமாட்டேன் என்று தலைவி மறுப்பது அழகான ஊடலாக வெளிப்படுகிறது. ஆனால் அவன் பயமற்று அவளைத் திருமணம் செய்ய வந்திருக்கிறான். காத்திருக்கிறான் என்று கவிதை நிறைவு பெறுகிறது. செங்கண்ணனார் எழுதி இந்த ஒரேயொரு கவிதை தான் காணக்கிடைக்கிறது. நிச்சயம் இவர் நிறைய எழுதியிருப்பார். அவை தொகைநூலில் சேர்க்கப்படாமல் போயிருக்கக் கூடும். அப்படி விடுபட்ட கவிதைகளை என்ன செய்திருப்பார்கள். இப்படி ஒரு தொகுப்பில் ஒரேயொரு கவிதை இடம்பெற்ற கவிஞர் அன்று தன்னை எப்படி உணர்ந்திருப்பார். எப்படி இந்தத் தொகைநூல் வரிசைப்படுத்தபட்டது. இதை எவ்வாறு அன்றைய கற்றோர் சபை எதிர்கொண்டது. நிறையக் கேள்விகள் எழுகின்றன.
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன். 5
”அணங்குடை அருஞ் சூள் தருகுவென்” என நீ,
”நும்மோர் அன்னோர் துன்னார் இவை” என,
தெரிந்து அது வியந்தனென் தோழி! பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
வதுவை என்று அவர் வந்த ஞான்றே. 10
ராஜபுத்திர நுண்ணோவியம் ஒன்றில் காட்டுப்பன்றியை வெகு அழகாக வரைந்திருக்கிறார்கள். ஓவியத்தில் காட்டுப்பன்றியைத் தீட்டுவது விலங்கினை குறிப்பதற்கு மட்டுமின்றிச் சொத்து இழப்பு, மன வேதனை, பயங்கரமான பயம், மரணம், இதையெல்லாம் அடையாளப்படுத்தவும் காட்டுப்பன்றிச் சித்தரிக்கப்படுகிறது.
சிங்கத்துடனும் புலியுடனும் தலைவனின் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் பொதுத்தன்மைக்கு மாற்றாகக் காட்டுப்பன்றியின் துணிச்சலை. சினத்தை உவகைக் கூறியிப்பது தனித்துவமானது.
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியிருக்கிறார்கள் இந்தக் கவிஞர்களும் அவர்களின் பாடலின் அடையாளத்துடன் தான் அறியப்படுகிறார்கள். 59 பாடல்களைப் பாடிய கவிஞர்களின் பெயர்கள் காணப்படவில்லை. ஒருவேளை காலத்தில் அந்தப் பெயர்கள் மறைந்துவிட்டனவா என்று தெரியவில்லை. இந்நூலைத் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இதைத் தொகுக்கச் செய்தவர் “பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி”. எப்படி இந்த நூலைத் தொகுத்திருப்பார்கள். அச்சு இல்லாத காலத்தில் அந்தப் பாடல்கள் மக்கள் மனதிலும் ஏடுகளிலும் தான் காப்பாற்றபட்டு வந்திருக்கும். அவற்றைத் தேடித் தொகுப்பது சவலான பணி. அந்தத் தொகுப்புப் பணி நிச்சயம் ஒருவரால் மேற்கொண்டிருக்க முடியாது. அது போலவே எந்தக் கவிதைகளைத் தேர்வு செய்வது என்ற முடிவும் எளிதானதில்லை.
•••

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் நகைகள் செய்யும் பொற்கொல்லராக விளங்கியவர். இவரது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் 6 உள்ளன. இதில் அகநானூறு 48வது பாடலாக உள்ள பாடல் அற்புதமானது. தங்கால் பொற்கொல்லனார். தங்கால் முடக் கொற்றனார் எனவும், தங்கால் முடக்கோவனார் எனவும் அறியப்படுகிறார்
தலைவனையே நினைத்துக்கொண்டிருக்கும் தலைவியின் நிலையைத் தோழி செவிலித் தாய்க்குச் சொல்லும் இந்தப் பாடல் அழகானது
‘அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
‘பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்’ என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
‘புலி புலி!’ என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
10
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
‘யாதோ, மற்று அம் மா திறம் படர்?’ என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, 15
நாணி நின்றனெமாக, பேணி,
‘ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?’ என்றனன். பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 20
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன் மறை தேஎம் நோக்கி, ‘மற்று இவன்
மகனே தோழி!’ என்றனள். 25
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.
‚அன்னையே நீ வாழ்க! எனத் துவங்கும் இந்தப் பாடலிலும் தலைவியின் ஒளிபொருந்திய நெற்றி சிறப்பித்துக் கூறப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் பெண்களின் நெற்றியை வியந்து போற்றுகிறார்கள். பெரும்பாலும் ஒளி பொருந்திய நெற்றி என்றே இடம்பெறுகிறது. கண்களை விடவும் நெற்றி ஏன் முக்கியத்துவம் அடைகிறது. நெற்றி ஒளிர்வதும் மனநிலையின் வெளிப்பாடா.
இந்தப் பாடலில் பாலும் பழமும் உண்ணாமல் தலைவனையே நினைத்துத் தலைவி வருந்திக் கொண்டிருக்கிறாள். அதன் காரணம் என்னவென்று எனக்கும் முழுமையாகத் தெரியாது. ஆனால் அவள் காதல் வசப்பட்டிருக்கிறாள். என்று சொல்லி அன்று நடந்த ஒரு காட்சியைச் சொல்கிறாள்.
இந்தக் காட்சி சினிமாவில் வரும் பிளாஷ்கட் போல அழகாக இடம்பெறுகிறது வேங்கை மரத்திலுள்ள பூக்களைப் பறிக்கப் போகிறார்கள். அப்போது தலைவி ‘புலி புலி’ என்று சப்தமிடுகிறாள். அங்கே வந்த தலைவன் வில்லைக் கையிலேந்திக்கொண்டு எங்கே புலி என்று கேட்கிறான். வேங்கை மரத்தைக் காட்டவே அவன் நீ பொய்யும் சொல்லுவாயா என்று கேட்டுச் சிரித்தபடியே தனது குதிரையில் சென்றுவிட்டான். அன்றுமுதல் அவனையே தலைவி நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தோழி சொல்கிறாள். வேங்கை மரம் பூத்தால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை அந்தக்காலத்திலிருந்தது.
இளம்பெண்ணின் தோற்ற மயக்கமும் காதலனின் சிரிப்பும் அத்தனை அழகாகக் கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. ஒரு காட்சி வேறு ஒரு காட்சியாக மாற்றம் தருவது தான் காதலின் துவக்கம். ஒருவேளை அவனது கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்காக அவள் பொய்யாக ஒரு நாடகம் ஆடியிருக்கிறாளோ என்றும் தோன்றுகிறது. எதுவாயினும் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். காதல் பிறந்துவிட்டது. அந்த நினைப்பு அவளை வாட்டுகிறது.
சங்க கவிதைகளில் வரும் தோழி தலைவனின் சமவயதை உடையவளா, மூத்தவளா, எந்த வகுப்பைச் சார்ந்தவள் என்று எதையும் நம்மால் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை தோழி என்பதே கவிதையில் உருவான பாத்திரம் தானோ. காரணம் காதலிக்கும் எல்லாப் பெண்களுக்கும் ஒரு தோழி இருக்கிறாள். அவளே காதல் துயரை உலகிற்குத் தெரியப்படுத்துகிறாள். தோழி காதல் கொள்ளும் போது தலைவியாகிவிடுவாளா.

வேங்கை மரத்தினைப் புலியாக நினைப்பது பற்றிக் காளிதாசனும் ரகுவம்சத்தில் எழுதியிருக்கிறார். வேங்கை மரத்தின் பூக்கள் பாறைகளில் உதிர்ந்து கிடப்பதைக் கண்ட யானை அது புலி தானோ என்று நினைத்துத் தாக்க முனையும் காட்சியினைக் கபிலர் தனது பாடலில் எழுதியிருக்கிறார். பரிபாடலிலும் குறுந்தொகையிலும் இது போன்ற காட்சி சுட்டப்படுகிறது. இந்தக் காட்சிகள் தங்கால் முடக் கொற்றனார் பாடலை வாசிக்கும் போது நினைவிற்கு வருகின்றன.
வேங்கை மரத்தில் பூக்கள் பறிக்க இயலாத உயரத்திலிருந்தால் “புலி புலி”என்று சபதமிட்டால் வேங்கை மரம் பூக்களைப் பறிப்பதற்கு வசதியாய்த் வளைந்து கொடுக்கும் என்ற நம்பிக்கை மலைவாழ் மக்களிடம் இருந்தது அதையே இந்தப் பாடல் குறிக்கிறது என்றும் ஒரு விளக்கவுரையைப் படித்தேன். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
இரண்டு கவிஞர்களின் தன் வாழ்வியல் சூழிலில் இருந்தே தனது கவிதையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்கால் என்ற அந்தச் சிற்றூரின் சித்திரமும் அந்தக் கவிஞர்களின் வாழ்க்கையும் இன்று யோசித்தால் வியப்பாக இருக்கிறது. காலம் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்திவிட்டது. இன்றைய திருத்தங்கலில் அந்தக் காட்சிகள் எதுவுமில்லை. ஆனால் கவிதையில் என்றும் அழியாத சித்திரங்களாக அவை இடம்பெற்றிருக்கின்றன.
••
கயிற்றின் முனை
அமெரிக்க எழுத்தாளரான கேதரின் ஆன் போர்ட்டர் எழுதிய, “கயிறு “என்ற சிறுகதையை க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கதையை எப்படித் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்தார் என்று வியப்பாகவே இருக்கிறது.

க.நா.சுவின் ரசனையும் தேர்வும் அபாரமானது. இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று பலரும் அலட்சியமாக விலகிப் போய்விடச் செய்யும் கதையிது. ஆனால் கதையில் அந்தக் கயிறு ஒரு முக்கியமான குறியீடாக இருக்கிறது என்பதை க.நா.சு நன்றாக உணர்ந்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பின் வழியே கண்டறியும் வெளிச்சமது.
கேதரின் ஆன் போட்டர் அமெரிக்காவின் முக்கியமான சிறுகதையாசிரியர். அன்றாட வாழ்க்கையிலிருந்து அவர் உருவாக்கும் சித்திரங்கள் விசித்திரமானவை.
இந்தக் கதையில் ஒரு குடும்பம் நகரிலிருந்து வீடு மாறி நாட்டுப்புறத்திற்குப் போகிறார்கள். முக்கியமான காரணம் வீடு போதவில்லை என்பதே. அவர்கள் பெரிய வீடு ஒன்றைப் பிடித்து அதில் குடியேறுகிறார்கள். நகரில் எந்தப் பொருள் வேண்டும் என்றாலும் உடனே விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால் நாட்டுப்புறத்தில் இருப்பவர்கள் இதற்காக நடக்க வேண்டும் அல்லது பயணம் செய்து போய்வர வேண்டும். ஆகவே காபி பொடி கிடைக்காமல் தலைவலியில் தவிக்கிறாள் அவனது மனைவி. கடைக்குச் சென்ற அவன் திரும்பி வருவதில் தான் கதை துவங்குகிறது
ஒரு கூடை மளிகைப் பொருட்களையும் இருபத்தி நான்கு கெஜம் கயிற்றையும் சுமந்துகொண்டு அவன் திரும்பி வருகிறான். இவ்வளவு பெரிய கயிறை எதற்காக வாங்கிவந்திருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. அதை விடவும் தான் கேட்ட காபித்தூளை அவன் வாங்கி வர மறந்துவிட்டான். அந்தக் கோபம் அவளிடம் வெளிப்படுகிறது…
எதற்காக இவ்வளவு பெரிய கயிறு என்று கேட்கிறாள். அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. இருக்கட்டும் பயன்படும் என்கிறான். என்ன பயன்படும். ஏதாவது ஒன்றைச் சொல் என்கிறாள். அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. இந்தக் கயிற்றைக் கொடி கட்டி ஏதாவது லாண்டரி நடத்தப்போகிறாயா என்று கோவித்துக் கொள்கிறாள். இருக்கட்டும் என்று அவன் சமாதானம் சொல்கிறான். அவளால் ஏற்க முடியவில்லை
எதற்காக இப்படி ஒரு கயிற்றை அவன் வாங்குகிறான். உண்மையில் அவனுக்கும் காரணம் தெரியாது. ஆனால் கடைக்குப் போகும் போது நாம் ஏதோ ஒரு ரகசிய ஆசையால் தூண்டப்பட்டு இதுபோல ஒரு பொருளை வாங்கிவிடுகிறோம். அதன் உடனடி பயன் என்று யோசிப்பதில்லை. அதற்குக் கட்டாயம் வீட்டில் திட்டு கிடைக்கிறது. இந்த எளிய சம்பவத்தைத் தான் கேதரின் கதையின் மையமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வீட்டில் பயனற்ற ஏதேதோ பொருட்கள் நிரம்பியிருக்கின்றன. அதில் ஒன்றாக இந்தக் கயிறு இருக்கட்டுமே என்று அவன் நினைக்கிறான். அவளோ இத்தனை குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று தானே நகரை விட்டு பெரிய வீடு பிடித்துக் குடியேறினோம். பின்பு ஏன் இதை வாங்கி வந்திருக்கிறாய் என்கிறாள். இருவர் பக்கமும் சம அளவிலே நியாயமிருக்கிறது. ஆனால் சண்டை வருகிறது. கோவித்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் அவன் வாங்கி வந்த கயிறு மட்டுமில்லை காரணம். அவர்களுக்குள் உள்ள உறவின் அடையாளம் போலவே அந்தக் கயிறு உருமாறுகிறது. கயிறு என்பதன் பணியே இணைப்பது தானே. கயிற்றின் ஒருமுனை அவன் மறுமுனை அவனது மனைவி. புதுவாழ்க்கைக்குப் பழகும் வரை இது போன்ற கோபம் எழுதுவது இயற்கையே.
சாலையில் வீடு மாறிச் செல்லும் வேனைக் காணும் போதெல்லாம் அதில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள நாற்காலியும் கட்டிலும் கண்ணாடியும் மனதைத் துவளச் செய்யும். வீட்டுப் பொருட்களுடன் ஒரு போதும் பெண்கள் பயணம் செய்வதில்லை. ஒருமுறை வேனில் ஏற்றப்பட்டிருந்த நாற்காலியில் ஒரு கிழவர் அமர்ந்து போவதைக் கண்டேன். அவர் முகத்தில் ஊர் மாறிச் செல்வதன் சோகம் அப்பியிருந்தது.
வீடு மாறும் போது தான் வீட்டில் எத்தனை எத்தனை பொருட்கள் சேகரமாகியிருந்தன என்று கண்ணில் படுகிறது. கிணற்றைத் தூர் வாறும் போது அதிசயமான பொருட்கள் வெளியே வரும். அது போலே வீட்டை காலி செய்யும் போது தொலைந்து போன. மறந்து போன எத்தனையோ பொருட்கள். நாணயங்கள். புகைப்படங்கள் தலைகாட்டும். இந்தக் கதையின் மறுபக்கமது
புது ஊருக்கு புது வீட்டுக்குச் சென்றவுடன் அருகிலுள்ள கடைகள். பால் வாங்கும் இடம். மைதானம். ரேஷன் கடை. காய்கறி கடை இவற்றைக் கண்டறிவதும் உறவு கொள்ளுவதும் முதற்பணி. பலருக்கும் புது வீட்டில் உறக்கம் வராது. ஆனால் சில வாரங்களில் அந்த ஊர் நீண்டகாலம் வாழ்ந்த ஊரைப்போலாகிவிடும். வேர்விடும் வரை தான் மரம் காற்றில் தள்ளாடுகிறது. பின்பு காற்றைக் கண்டுகொள்வதேயில்லை. மனிதர்களும் அப்படித்தான்.
இந்தக் கதையில் வரும் தம்பதிகள் நெருக்கடியான சூழலில் தான் வீடு மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு பைசாவும் கணக்கிடப்பட்டுச் செலவிடும் நேரத்தில், தேவையில்லாமல் பணம் கொடுத்து ஒரு கயிற்றை வாங்குவது முட்டாள்தனம் என்று அவள் நினைக்கிறாள். அது சரியே. ஆனால் தேவையான பொருட்களை மட்டுமே நாம் வாங்குவதில்லை. என்றோ பள்ளி வயதில் கிடைக்காத ஒரு மேஜை விளக்கினை வாங்கி வந்த ஒருவன் வீட்டில் அதை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பான். அவனுக்கு அது அடைய வேண்டிய ஆசையின் வடிவம். ஆனால் வீட்டோருக்கு அது தேவையற்ற பொருள். இப்படிப் பொருட்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கு வெளியில் பல்வேறு ரூபங்களும் அர்த்தங்களும் கொண்டிருக்கின்றன. அதைத் தான் இந்தக் கதையின் வழியே நாம் உணருகிறோம்
இந்தக் கயிற்றை அவன் முட்டைகளின் மீது வைத்த காரணத்தால் முட்டைகள் உடைந்துவிடுகின்றன. இது கடைக்காரனின் தவறில்லை. அவனது தவறு என்கிறாள். அது உண்மையே. அவ்வளவு கவனம் ஆண்களுக்குக் கிடையாது தான். அதே நேரம் கடைக்காரனின் மீது தவறு இருக்கவே செய்கிறது என்கிறான் அவன். அவளுக்குக் கோபம் அதிகமாகிறது. வீடு என்பதே ஒழுங்கீனங்களின் தொகுப்பு தானே என அவன் நினைக்கிறான். அவளோ வீட்டில் அனைத்து விஷயங்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவள் தனக்காக வாங்கிய பயனற்ற, அர்த்தமற்ற எல்லாவற்றையும் அவன் நினைவில் வைத்திருந்தான் அது தான் பிரச்சனையே.
அவள் கயிற்றைக் கடையில் திரும்பக் கொடுக்கும்படி சொல்கிறாள். அவன் கோபம் அடைகிறான்.
உண்மையில் அவள் காலையில் ஒரு சூடான காபியைக் குடித்திருந்தால் அவனுடன் இவ்வளவு சண்டை போட்டிருக்க மாட்டாள். சின்னஞ்சிறிய கதை. முடிவை நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள்
பெரிய விஷயங்களை, நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தான் சிறுகதை எழுதவேண்டும் என்றில்லை. இது போலச் சிறிய, ஆனால் அழுத்தமான கதைக்கருக்களையும் அழகான கதையாக எழுதலாம். அதன் சிறந்த உதாரணமே இந்தக் கதை.
எழுத்தாளர் ராபர்ட் கார்ன்வெல் போர்ட்டரின் கதைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது கதையின் மேற்பரப்பில் நுணுக்கமான தகவல்கள் காணப்படுகின்றன. கதையின் கச்சிதமான கட்டுமானமும் ஆழ்ந்த தன்மையும் குறைந்த உரையாடலும் நம்மைக் கதைக்குள் இழுத்துப் பரவசமூட்டுகின்றன என்கிறார்.
ஆன்டன் செகாவின் கதைப்பாணியைக் கேதரின் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு இந்தக் கதையே சாட்சி.
••
May 18, 2021
சின்னஞ்சிறு மலை ரயில்
மலைரயிலில் பயணம் செய்யும் போது நமது வயது கரைந்து போய்விடுகிறது. குறிப்பாகக் குகைகளுக்குள் ரயில் செல்லும் போது ஏற்படும் இருட்டில் உடனிருக்கும் பயணிகள் கூச்சலிடும் போது நாமும் இணைந்து கத்துகிறோம். மரங்களுக்குள்ளும் பள்ளத்தாக்கின் மீதும் பெரிய பாலத்தைக் கடந்தும் ரயில் செல்லும் போது நாம் புதுவகை அனுபவத்தைப் பெறுகிறோம்.
உலகின் மிகச்சிறிய மலைரயிலாகக் கருதப்படுவது சீனாவின் ஜியாங் நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் இயங்கும் ரயில் சேவையாகும். இந்த ரயில் சேவை பற்றிய ஒரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நாற்பது நிமிஷங்கள் கொண்ட China’s Last Little Train மலைவாழ் மக்களின் வாழ்க்கை மட்டுமின்றி ரயில் பாதை உருவான நீண்ட வரலாற்றையே சொல்லிவிடுகிறது.

ஆவணப்படத்தின் துவக்கக் காட்சியில் மஞ்சள் மலர்கள் பூத்துக் குலுங்கும் வெளியினுள் குட்டி நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் செல்கிறது. தொலைவில் காணும் போது ஏதோ விளையாட்டுப் பொருள் போலிருக்கிறது. மூன்று பெட்டிகள். ஒரு என்ஜின். சின்னஞ்சிறிய அந்த நீராவி ரயில் வேகமாக மலையினுள் செல்கிறது. கேமிரா ரயில் பெட்டியை நெருங்கிச் செல்லும் போது அதில் மலைகிராமவாசிகளும் அவர்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லும் விளைபொருட்களும் காணப்படுகின்றன. அந்த ரயில் தான் மலைக்கிராமங்களையும் அருகிலுள்ள நகரத்தையும் இணைக்கும் ஒரே போக்குவரத்து. ரயில் தண்டவாளங்களை ஒட்டியே மக்கள் நடந்தும் பயணிக்கிறார்கள். சிலர் பைக்கில் தண்டவாளத்தை ஒட்டி வண்டியோட்டிச் செல்கிறார்கள். மலையில் அப்படியொரு ரயில் பாதையினை உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.
மீட்டர்கேஜ் பாதையது. இரண்டு மணி நேரம் மலையில் அந்த ரயில் பயணிக்கிறது. சின்னஞ்சிறு ரயில் நிலையங்கள். அதில் காத்து கிடக்கும் மக்கள். ஒரு பெண் தனது வீட்டிலிருந்து கீரைகள் காய்கறிகள் என இருபது கிலோ எடையுள்ள சுமையை முதுகில் தூக்கிச் சுமந்தபடியே நீண்ட தூரம் நடந்து வந்து ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அந்த ரயிலில் போய் அருகிலுள்ள நகரசந்தையில் காய்கறிகளை விற்க வேண்டும். பல ஆண்டுகளாகத் தான் இப்படித் தான் பயணிப்பதாகச் சொல்கிறார். ரயில் அன்று தாமதமாக வருகிறது. சந்தைக்கு அவள் போவதற்கு நேரமாகிவிடுகிறது. ஆனாலும் அவளது வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இன்னொருவர் தனது பன்றிகளை ரயிலில் ஏற்றி விற்பனைக்காகக் கொண்டு போகிறார். இது போல விலங்குகளை ஏற்றிக் கொண்டு செல்ல சிறிய தடுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். மூன்று பன்றிகளையும் அதில் அடைக்கிறார்கள். சந்தையில் பன்றி இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகிறது
இந்த ரயிலைத் தினசரி முறையாகப் பராமரிக்க வேண்டும். ரயில் என்ஜின் டிரைவர் சிறுவயது முதலே தான் இதை ஒட்ட வேண்டும் என்று கனவு கண்டதாகவும் கடையில் அந்த வேலையே கிடைத்துவிட்டது என்கிறார். ரயில்வே பணிமனை காட்டப்படுகிறது. இந்த ரயிலின் உதிரிப்பாகங்கள் இப்போது கிடைக்காது என்பதால் அவர்களே தேவையான பாகங்களைத் தயாரிக்கிறார்கள். கடினமான பணியது. அன்றாடம் ரயிலின் சக்கரங்கள். பிரேக். மற்றும் திருகாணிகளைச் சரிபார்க்கிறார்கள். அவர்களுக்கான ஓய்விடம் அருகிலே உள்ளது
இந்த ரயில் நிலக்கரி சுரங்கத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டது. இன்று சுரங்கம் மூடப்பட்ட நிலையில் அது மக்களின் போக்குவரத்து பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மலைகிராமவாசிகளின் துணை கொண்டு இந்த ரயில் பாதையை எப்படி உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும் ஒருவர் படத்தில் விவரிக்கிறார். இரவு பகலாக உழைத்து அந்த மலைப்பாதையை உருவாக்கியிருக்கிறார்.
முதன்முறையாக அந்த ரயிலை ஒட்டிய வயதான டிரைவர் மீண்டும் ஒருமுறை அந்த ரயிலைப் பார்வையிட வருகிறார். அவரும் நண்பரும் ரயிலைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார்கள். கடந்த கால நினைவுகளைப் பேசிக் கொள்கிறார்கள்.

அவர்கள் உருவாக்கிய அந்த என்ஜின், அந்த வழித்தடம் இன்றும் பயன்படுவது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. ரயில்வே கவுண்டரில் உள்ள பெண்ணுக்கு அவர்களைத் தெரியவில்லை. அவர்களும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை
இந்த ரயிலில் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள். ஆசிரியர்களைப் பற்றி விவரிக்கிறார். பள்ளிவிடும் நேரம் ரயில் கிடையாது என்பதால் நீண்ட தூரம் நடந்தே வீடு திரும்புகிறாள் ஒரு சிறுமி. குகையில் தனியாக அவள் ஒரு டார்ச் லைட்டுடன் நடந்து வரும் போது அவளது வேதனை அழுத்தமாக உணர்த்தப்படுகிறது. அந்தச் சிறுமி வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவளது அம்மா சாப்பிட ஒரு கிண்ணத்தில் கஞ்சி தருகிறாள். வேகவேகமாக அந்தச் சிறுமி சாப்பிடுகிறாள். வீட்டுப்பாடம் படிக்கிறாள். அன்றாடம் இத்தனை மைல்கள் போய்ப் படித்துவரும் அவளது ஆசையும் கனவுகளும் நம்பிக்கை அளிக்கின்றன
ரயில்வே பணிமனையில் வேலை செய்யும் பெண் அங்குப் பணியாற்றும் தோழர்களுக்காக உணவு தயாரிக்கும் காட்சி அழகாக விவரிக்கப்படுகிறது. இது போலவே இறந்தவர்களை நினைவு கொள்ளும் நாளில் எப்படிப் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன என்பதையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதில் வானுலகில் வசிப்பவர்கள் செலவு செய்வதற்காகக் காகித பணம் போல அச்சிட்டு அதைத் தீவைத்துக் கொளுத்துகிறார்கள். அந்தப் புகையை அவர்கள் பணமாக மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இருபது கிலோமீட்டர் நீளமுள்ள குறுகிய பாதையில் ரயில் செல்லும் போது அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் காணுகிறோம். ரயிலிலிருந்து விழும் சாம்பலுக்குள் கிடக்கும் நிலக்கரியை மக்கள் சேகரித்துப் பயன்படுத்துகிறார்கள். குகைகளின் முன்னால் பாதுகாப்புப் பணியில் உள்ள மனிதன் ஒற்றை ஆளாகப் பகலை கடக்கிறான்.
ஒரு நாளில் நான்குமுறை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போக்குவரத்தை மட்டுமே நம்பி மலைவாசிகள் வாழுகிறார்கள். புதிய சாலைகள் அமைக்கப்பட்டதும் இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று ஒரு காட்சியில் அரசாங்க அதிகாரி விவரிக்கிறார்.
1938, சீன-பிரிட்டிஷ் ஜியாங் நிலக்கரி சுரங்கம் பஜியோகோவில் நிறுவப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியைக் கொண்டு செல்வதற்காக இந்த ரயில் பாதையை உருவாக்கியிருக்கிறார்கள்

ஓய்வுபெற்ற சில நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இந்த இரயில் பாதை எவ்வாறு உருவானது என்பதை நினைவில் வைத்திருக்கிறார்கள். பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆரம்பக் காலத்தில் இந்த ரயிலில் ஏர் பிரேக்குகள் கிடையாது, எனவே ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு பொறுப்பான பயணி கையால் பிரேக்கை இயக்க வேண்டியதிருக்கும். இது போலவே சரக்கு ரயில்களில், பிரேக்மேன்கள் வேகமான ரயில் பெட்டிகளுக்கு இடையில் குதித்து, கையால் பிரேக்குகளை இறுக்குவார்கள்.
இந்தப் பகுதி வீடுகள் யாவும் கலாச்சாரப் புரட்சியின் போது கட்டப்பட்டன. பெரிய அணிவகுப்பு மைதானமும் மேடையும் கட்டப்பட்டிருக்கிறது, அங்கு இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம்.
இந்த மலையில் வாழும் மக்களுக்குச் சின்னஞ்சிறிய ரயில் தான் வெளி உலகத்துடனான ஒரே இணைப்பு. ஆவணப்படத்தின் கடைசிக்காட்சியில் அந்த ரயில் புகைவிட்டபடியே செல்லும் போது காலத்தினஅழியாத நினைவுகளை வெளிப்படுத்தியபடியே செல்வதாகவே தோன்றியது
••
May 17, 2021
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
