S. Ramakrishnan's Blog, page 131
May 6, 2021
கடைசிப் போராட்டம்
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்த இந்தியாவைச் சித்தரிக்கும் ஆங்கிலப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பெரும்பான்மை அமெரிக்கப்படங்கள். அவர்களின் வணிக லாபங்களுக்காக இந்தக் கதைக்களனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தின் பெருமை பாடுவதே இந்தப் படங்களின் தலையான நோக்கம். இப்படங்கள் இந்தியர்களை முட்டாள்கள். போக்கிரிகள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளாகவே சித்தரிக்கின்றன.

போவானி ஜங்ஷன் என்பது கற்பனையான ஒரு ரயில் நிலையம். ஜான்சி ரயில் நிலையத்தின் சாயலில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
Bhowani Junction ஜான் மாஸ்டர்ஸ் எழுதிய நாவல். இதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் George Cukor இயக்கியுள்ளார் 1956 ல் வெளியானது. பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதி நாட்களில் கதை நடக்கிறது.
பிரிட்டீஷ் அரசாங்கம் இந்தியாவிலிருந்து விடைபெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி விக்டோரியாவிற்குள் எழுகிறது. ஆங்கிலோ இந்தியன் என்ற முறையில் அவள் பாதி இந்தியர் பாதி வெள்ளைக்காரி. ஆகவே அவளால் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியவில்லை.

படம் ராணுவ அதிகாரி சாவேஜ் விடைபெற்றுச் செல்வதில் துவங்குகிறது. ரயில் நிலையத்தில் அவரை வழி அனுப்பி வைக்கிறார்கள். ராணுவ இசைக்குழுவின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அவரது ரயில் பெட்டிக்கு வரும் விக்டோரியாவை அவர் முத்தமிட்டு விடைகொடுக்கிறார். இந்தியாவிலிருந்த போது அவரது ராணுவ அனுபவங்கள் எப்படியிருந்தன என்பது பிளாஷ்பே காட்சிகளாக விரிவடைகிறது.
நான்கு ஆண்டுகள் ராணுவ தலைமையகத்தில் பணியாற்றிவிட்டு ஓய்விற்காகச் சொந்த ஊரான போவானிக்கு வருகிறாள் விக்டோரியா. அங்கே அவளது குடும்பம் அவளுக்காகக் காத்திருக்கிறது.
அவளது தந்தை ஒரு பிரட்டீஷ் விசுவாசி. சிறுவயது முதலே அவளைக் காதலித்து வரும் ரயில்வே சூப்ரடெண்ட் டெய்லர் அவளைத் திருமணம் செய்து கொள்ளக் காத்திருக்கிறான். ஆனால் அவளுக்கு அந்தத் திருமணத்தில் ஈர்ப்பு உருவாகவில்லை.
இதற்கிடையில் இந்தியச் சுதந்திரப் போராட்டம் தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது. எங்கே ரயில்கள் தடுத்து நிறுத்தப்படக்கூடுமோ என நினைத்து ரயில் நிலையங்களுக்குக் கூடுதல் பாதுகாப்புத் தருகிறார்கள். அமைதி வழியில் போராடும் சாத்வீக போராளிகள் ஒருபுறம் தலைமறைவாகச் செயல்படும் கம்யூனிச போராளிகள் மறுபுறம். இவர்களை ஒடுக்க முனைகிறது பிரிட்டிஷ் அரசு. இதற்காக கர்னல் ரோட்னி சாவேஜ் தலைமையிலான ஒரு கூர்க்கா படைப்பிரிவு வந்து இறங்குகிறது.

அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் நாசவேலைச் செயல்களை தடுத்து ரயில்வேயைப் பாதுகாப்பதே கர்னலின் முக்கியப் பணியாகும்,
பேட்ரிக் மற்றும் விக்டோரியா இருவரும் ரயில்வேயில் பணியாற்றிய அனுபவம் காரணமாக கர்னல் சாவேஜுடன் இணைந்து பணிபுரிய உத்தரவிடப்படுகிறார்கள். . விக்டோரியா ஏற்றுக் கொள்கிறாள். அவளது தந்தை ராணுவ உயரதிகாரியின் பழக்கம் அவர்களுக்குத் தேவையான நலன்களைச் செய்யும் என நம்புகிறார்.
போவானியில் ஒரு நாள் காந்திய வழியில் போராட்டம் நடக்கிறது. அமைதியாக நடக்கும் அந்தப் போராட்டத்தில் கருங்காலிகள் கலந்து கொண்டு வன்முறையை உருவாக்குகிறார்கள். அதில் கலவரம் ஏற்படுகிறது. இதை ஒடுக்கப் பிரிட்டீஷ் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. இதை நேரடியாக விக்டோரியா பார்வையிடுகிறாள்.
இந்த நெருக்கடியான சூழலில் போவானி ரயில் நிலையத்தில் பணியாற்றும் சீக்கியரான ரஞ்சித் பிரிட்டிஷ் எதிர்ப்பு மனநிலை கொண்டிருக்கிறான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
போவானி ரயில் நிலையம். அவர்களின் குடியிருப்பு. போராட்டம் நடக்கும் இடங்கள். ராணுவ அதிகாரிகளின் அலுவலகம் யாவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பேட்ரிக் டெய்லருக்கும் விக்டோரியாவிற்கும் வீட்டில் நடக்கும் வாக்குவாதமும் அவளது நிலைப்பாடும் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. டெய்லர் அவளை மிகவும் நேசிக்கிறான். அவளை மணந்து கொள்ளக் காத்திருக்கிறான். அவனிடம் முழுமையான பிரிட்டீஷ் விசுவாசம் உள்ளது.
ரயில் நிலையத்தைச் சுற்றிய பகுதிகள். பாலம். அதன் மேலே நின்று பார்வையிடும் விக்டோரியா, ரயில்வே அலுவலகம். அதன் பணியாளர்கள் அறை.. அங்கிருந்து ரயில் நிலையத்தைக் காணும் காட்சிகள் என அழகான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஒரு இரவு அவள் தனியே வீடு திரும்பும் போது விக்டோரியா கேப்டன் மெக்டானியல் என்பவரால் வல்லுறவு கொள்ளத் தாக்கப்படுகிறாள் ஆத்திரமான விக்டோரியா ஒரு இரும்பு கம்பியால் தாக்கி மெக்டானியலை கொன்றுவிடுகிறாள். இந்த நிகழ்வைக் கண்ட ரஞ்சித் அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மறைத்து வைக்கிறான். உடலை அப்புறப்படுத்த முனைகிறான்.
மெக்டானியலிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய ரஞ்சித் மீது விக்டோரியாவிற்கு அன்பு உருவாகிறது. மெல்ல அவள் தான் ஒரு ஆங்கிலோ இந்தியரில்லை. இந்தியப் பெண் என்று உணருகிறாள். இந்நிலையில் தன்னைக் காக்க ஒரு சென்ட்ரி இறந்து போனது அவளை மிகவும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.
மெக்டானியேல் கொலை தொடர்பான விசாரணை முடிவடையும் போது, ரஞ்சித்தை விட்டு விலகி ஓடுகிறாள்.
இதற்கிடையில், கன்ஷியாம் இராணுவ சரக்கு ரயிலில் இருந்து வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் திருடி பயணிகள் ரயில்களை தடம் புரளச் செய்கிறான் இதனால் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் இருவருக்கும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இத்தோடு விக்டோரியாவை பணயக்கைதியாக ஈடுபடுத்த வேண்டும் என்று வேறு திட்டம் ஒன்றையும் தீட்டுகிறான். . இதை தொடர்ந்து வேறு குழப்பங்கள் உருவாகின்றன. முடிவில் உண்மை ராணுவ உயரதிகாரி சாவேஜிற்குத் தெரிய வருகிறது. அவள் அவரைக் காப்பாற்றுகிறார். .
பொதுவாக இது போன்ற பிரிட்டிஷ் ராணுவத்தின் பார்வையில் அமைந்த படங்களில் இந்தியர்கள் பற்றித் தரக்குறைவான பார்வையும் காட்சிகளுமே இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான காட்சிகளில்லை. ஆனால் படம் முழுவதும் பிரிட்டிஷ் அரசின் தியாகம் போற்றப்படுகிறது.

ஆங்கிலோ இந்தியர்களின் அடையாளச் சிக்கலைப் பேசும் படம் என்ற விதத்தில் இப்படம் அவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதை விளக்குகிறது.
விக்டோரியா ஜோன்ஸாக அவா கார்ட்னர் சிறப்பாக நடித்திருக்கிறார். போவானிக்கு அவர் வந்து சேரும் ஆரம்பக் காட்சிகள் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளன.
இப்படம் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் படமாக்கப்பட்ட ஒரு அமெரிக்கத் திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்திற்காக. இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற எம்ஜிஎம் நிறுவனத்தின் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது, ஆகவே பாகிஸ்தானின் லாகூரில் படமாக்கியிருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கு அமெரிக்கத் திரைப்பட நிறுவனங்களுடன் நிறைய ஒப்பந்தங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்படுத்தியது. இதன் காரணமாக எம்ஜிஎம் போன்ற முக்கிய அமெரிக்க ஸ்டுடியோக்கள் இங்கிலாந்தில் ஸ்டுடியோக்களைக் உருவாக்க நிதி அளிக்கபட்டது. கூடுதலாக வரிச்சலுகையும் தரப்பட்டது
இதன் காரணமாகவே படத்தில் கம்யூனிசப் போராட்டம் மற்றும் போராளிகள் பற்றித் தவறான சித்தரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது
பிரிட்டிஷ் காலனித்துவத்தைப் பற்றிய விமர்சனம் படத்தில் அதிகமில்லை. அவர்களின் தியாகத்தை, சேவையைப் பாராட்டும் தொனியே மேலோங்கி காணப்படுகிறது
வெள்ளையனே வெளியேறு இயக்கம் உண்மையில் நடந்த விதம் வேறு. அதை ஒட்டி நடந்த போராட்டங்களும் அடக்குமுறைகளும் இந்திய வரலாற்றில் முக்கியமானவை. ஆனால் அவற்றின் சுவடுகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை.
May 5, 2021
வாழ்வின் தேவை
சிறுகதை
குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஸ்வேதா அம்மாவை வரவழைத்திருந்தாள்.
இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகிவிட்டது. நிறையக் குருதிப்போக்கு. அறுவைசிகிச்சை. அவளை இரண்டுமாதகாலம் படுக்கையில் கிடத்திவிட்டது. இதற்கு மேல் லீவு போட முடியாது என்ற சூழலில் அலுவலகம் போய்வரத்துவங்கினாள்.

அப்பா இருக்கும்வரை அம்மா தனியே பயணம் செய்ததேயில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஏற்றிவிட்டால் தானே பெங்களூர் வந்துவிடுகிறாள். கன்னடம் தெரியாத போதும் அவளாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்துவிடுகிறாள். இந்த முறை அப்படித்தான் வந்து சேர்ந்தாள். அம்மா குழந்தையைக் கவனித்துக் கொள்வதால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடிந்தது. வாரம் மூன்று நாள் மட்டுமே அலுவலகம் போய் வந்தாள்.
அவளுக்கும் சந்திரனுக்கும் ஒரே அலுவலகம். கம்பெனி பேருந்து அவர்கள் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து பிக்கப் பண்ணிக் கொள்ளும். ஆபீஸ் முடிந்து வீடு வர ஏழு மணியாகிவிடும். அம்மா அவளை வளர்த்துப் போலவே அக்கறையாகத் தன் பேத்தியையும் வளர்த்தாள். பேரன் கவினைக் கவனித்துக் கொள்வது தான் அவளுக்குப் பெரிய வேலையாக இருந்தது. அவன் பள்ளிவிட்டு வரும்வரை அவளால் வீட்டை சமாளித்துக் கொண்டுவிட முடியும். ஆனால் கவின் வீடு வந்தவுடன் என்ன செய்வான் என்றே தெரியாது.
இரண்டு நாட்கள் முன்பு கைக்குழந்தையின் வாயில் ஸ்பூன் நிறையச் சீனியைக் கொண்டு போய்த் திணித்துக் கொண்டிருந்தான். அழுகையை நிறுத்துவதற்கு அவன் கண்டுபிடித்த உபாயமது. அதுவும் சீனியை கண்டதும் அழுகையை நிறுத்தியிருக்கிறது. நல்லவேளை அம்மா கவனித்து ஸ்பூனை பிடுங்கிப் போட்டாள்.
இன்னொரு நாள் குழந்தையின் தொட்டிலில் எறும்பு வருகிறது என்று ஹிட் ஸ்பிரேயை கொண்டு போய்க் குழந்தை மீதெல்லாம் அடித்து வைத்திருந்தான். அவனைச் சமாளிப்பது தான் அம்மாவிற்குப் பெரிய வேலையாக இருந்தது. கவின் அம்மாவைப் பெயர் சொல்லி ஏய் வள்ளி என்று அதிகாரமாகத் தான் கூப்பிடுகிறான். அவன் பின்னால் ஒடி ஒடியோடி அம்மா ஒய்நது போயிருந்தாள். ஆனால் அவள் எதையும் முணுமுணுப்பதில்லை. குறை சொல்வதில்லை.
அப்பா இறந்த பிறகு அம்மா ஒரு ஆளாக ஏன் ஊரில் இருக்க வேண்டும் என்று ஸ்வேதா தன்னுடன் இருக்கட்டும் என்று அழைத்தாள்.
இல்லைடா.. நான் ஊர்லயே இருக்கேன். அந்த வீடு தான் எனக்குச் சௌகரியப்படும். உங்க அப்பா இல்லாட்டி என்ன. பக்கத்தில் இருக்கிற ஆட்கள் எல்லாம் நல்லபாத்துகிட தானே செய்றாங்க. மாடி வீட்ல இருக்கிறவங்க கூட அம்மா. அம்மானு அப்படிப் பாசமா இருக்காங்க. உங்க அப்பாவோட பென்ஷன் வருது. அது போதும்
அப்பா கூட்டிப் போன ஊர்களுக்கு மட்டும் தான் அம்மா போயிருக்கிறாள். அவளாகக் கடைக்குப் போய் ஒரு புடவை எடுத்துக் கொண்டு வந்தது கிடையாது. அதிகபட்சம் அவள் செய்யும் விஷயம் கோவிலுக்குப் போய்வருவது. அதுவும் விசேச நாட்களில் மட்டும் தான். மற்றபடி சாப்பாட்டில் கூட அவளுக்கு ஆர்வமில்லை. எதற்கும் காசு செலவழிக்கவே மாட்டாள். அப்பா அலுவலக வேலையாகச் சென்னை போயிருந்த போது ஒரேயொரு முறை அவளது பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் பேசியிருக்கிறாள். மற்றபடி வீடு தான் அவளது உலகம்.

பெங்களுரில் திருமணம் செய்து கொடுத்து ஸ்வேதா வந்தபிறகு எத்தனையோ முறை அப்பாவும் அம்மாவும் வந்து போயிருக்கிறார்கள். ஒருமுறை கூட அம்மா வெளியே எங்கேயும் போனதேயில்லை. அவர்கள் சினிமாவிற்குப் போகும் நாட்களில் கூட அம்மா வீட்டில் தானிருப்பாள். அப்பா அப்படியில்லை. பெங்களூருக்கு வரும் நாளில் தினமும் லைப்ரரி, ஷாப்பிங் மால். கோவில். நாடகம் என்று நிறைய வெளியே போய் வருவார்.
அம்மாவிற்கு என்ன பிடிக்கும் என்று ஸ்வேதாவிற்கு இன்றுவரை தெரியாது. ஸ்வேதா திருமணமாகி வந்த பிறகு சந்திரனின் காரை ஒட்டுவதற்குப் பழகிக் கொண்டாள். போர்டு பிகோ காரது சில நாட்கள் இருவரும் காரிலே அலுவலகம் போய் வருவார்கள். சில தடவைகள் தனியாகவும் அவள் காரில் கடைகளுக்கோ மருத்துவமனைக்கோ போய் வருவாள். பிரசவத்திற்குப் பிறகு அவள் காரை வெளியே எடுக்கவேயில்லை. சில தடவை சந்திரன் எடுத்துப் போய் வந்திருந்தான். மற்றநேரங்களில் அது அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் தான் நின்றிருந்தது.
ஒரு நாள் அம்மா தயங்கிய குரலில் கேட்டாள்
“அந்த கார் ஏன்டீ சும்மாவே நிக்குது. வித்துறலாமே“
“எப்போவாது வெளியே போகணும்னு நினைச்சா.. என்ன செய்றது. அவரு தான் ஒட்டுறாரே“
“மதியமா அந்தக் காரை துடைத்து வச்சேன். தொடுறதுக்கே கூச்சமா இருந்துச்சி. “
“கே பிளாக்கில இருக்கிற கேசவ்வோட அம்மா கார் ஒட்டுவாங்க. பாத்து இருக்கேல்ல.. அது ஒண்ணும் பெரிய விஷயமில்லேம்மா “என்றாள் ஸ்வேதா
“நான் வேணும்னா கார் ஒட்ட கத்துகிடவா “என்று கேட்டாள் அம்மா
அம்மா இதுவரை அப்படி எதையும் அவளிடம் கேட்டதேயில்லை. அதைக்கேட்டபோது ஸ்வேதாவிற்குச் சிரிப்பாகத் தான் வந்தது. ஆனால் அதைக்காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்
“நீயா.. கார் ஒட்டவா. எதுக்கும்மா“
“நான் கார் ஒட்ட கத்துகிட்டா.. ஸ்கூல் விட்டு வந்தவுடன் கவினைக் கூட்டிகிட்டு பார்க் வரைக்குப் போயிட்டு வரலாம். ஜங்ஷன் வரை போய்க் காய்கறி பழம் வாங்கிட்டு வரலாம். “
அதெல்லாம் சரிப்படாது என்று தான் சொல்ல நினைத்தாள். ஆனால் அதற்கு மாறாக “ஏற்பாடு பண்ணுறேன். இப்போ எல்லாம் பெண்ணுகளே டிரைவிங் கத்து தர்றாங்க.. ஸ்டீபன்கிட்ட சொன்னா விசாரிச்சி சொல்வான்“
ஸ்டீபன் அவர்களுக்குத் தெரிந்த எலக்ட்ரீசன். எல்லா விஷயங்களுக்கும் அவனிடம் தான் கேட்பார்கள். அவனுக்குப் பெங்களுரில் தெரியாத இடமேயில்லை.ஆட்களேயில்லை
இரண்டு நாட்களின் பின்பு ஸ்டீபன் வந்திருந்தான்
“எட்டாவது செக்டார்ல ஒரு டிரைவிங் ஸ்கூல் இருக்கு. லேடி தான் டிரைனிங் தர்றாங். அங்கே பேசிட்டேன். திங்கட்கிழமை காலையில வரச்சொல்லிட்டாங்க“
அதைக்கேட்டவுடன் அம்மாவின் முகத்தில் மெல்லிய பயம் வந்து போனது. அதை மறைத்துக் கொண்டபடியே கேட்டாள்
“எவ்வளவு நாள் கத்துகிடணும். நான் சைக்கிள் கூட ஒட்டக்கத்துகிட்டதில்லை“
“தினம் ஐந்து கிலோ மீட்டர். ஒரு மணி நேரம்“ என்றான் ஸ்டீபன்.
அதைக்கேட்டு சந்திரன் சிரித்தான்
“ஏன் ஸ்வேதா இந்த வீண் வேலை. ஏதாவது ஆகிடப்போகுது. வயசானவங்க உங்க அம்மா“ என்றான்
ஸ்வேதா அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை
முதல்நாள் அம்மா புறப்பட்டுப் போன போது சாமி கும்பிட்டுக் கொண்டாள். திரும்பி வந்த போது என்ன நடந்தது என்று சொல்லிக் கொள்ளவேயில்லை. ஆனால் அவளது கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அம்மாவே சொன்னாள்
“ரோட்டில காரை ஒட்டுறது லேசில்லே.. அது ஒரு பக்கமா இழுத்துகிட்டு போகுது. அந்தப் பொண்ணு வேற கன்னடத்தில் ஏதோ சொல்றா. ஒரு எழவும் புரியலை. “
ஸ்வேதா சிரித்தாள். நம்பிக்கை தரும்படியாகப் பேசினாள். அம்மா அதன்பிறகு தனது கார் ஒட்டும் பயிற்சியைப் பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்டீபன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்
அவன் உற்சாகமான சொன்னான்
“ஸ்வேதாக்கா.. உங்க அம்மா சூப்பரா கார் ஒட்டுறாங்க. நானே கண்ணாலே பார்த்தேன். டிரைவிங் ஸ்கூல்ல எல்லோரும் ஹேப்பி. “
நிஜமாகவா எனக்கேட்டபோது அம்மா வெட்கப்பட்டாள். அப்படி வெட்கப்பட்டு அவளைக்கண்டதேயில்லை. கார் ஒட்ட ஆரம்பித்த பிறகு அம்மாவிடம் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. தலையைக் கவிழ்ந்து கொண்டே எப்போதும் நடக்கும் அவள் இப்போது தலை நிமிர்ந்தபடியே நடக்க ஆரம்பித்தாள். வீட்டில் இருக்கும் நேரங்களில் மாடி ஜன்னல் வழியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள்.

என்ன கார்கள் சாலையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஒரு நாள் அவர்கள் காரை வெளியே எடுத்து அவளாகவே ஒட்டிக் கொண்டு ஜங்ஷன் வரை போய் வந்தாள். அன்று அம்மா முகத்திலிருந்த சந்தோஷம் அவளது வாழ்நாளில் கண்டறியாதது.
அம்மா கார் ஒட்டக்கற்றுக் கொண்டதை அபார்ட்மெண்டே வியந்து பேசியது. அம்மா அதைப் பெரிய சாதனையாக நினைக்கவில்லை. ஆனால் தான் அவர்கள் நினைத்தது போல உதவாக்கரை கிழவியில்லை என்று அடையாளம் காட்டிவிட்டவள் போலிருந்தது அவளது செய்கை.
இரண்டுமாதகாலத்தில் அம்மா கார் ஒட்டுவதற்கு நன்றாகத் தேர்ந்திருந்தாள். குறிப்பாகக் காரை ரிவர்ச் எடுப்பதிலும் பார்க்கிங்கில் சரியாகக் கொண்டுபோய்விடுவதிலும் தேர்ந்திருந்தாள். இப்படி எல்லாம் அம்மாவிடம் திறமையிருக்கும் என்று அப்பா ஏன் கண்டுகொள்ளவேயில்லை..
அப்பாவிற்குப் பைக் ஒட்டுவதற்குக் கூடத் தெரியாது. தன் வாழ்நாளில் வாடகை காரில் அம்மாவை நாலைந்து முறை அழைத்துக் கொண்டு போய் வந்திருப்பார். அதுவும் திருமண வீடு. கோவிலுக்கு. ரயிலில் பயணிப்பது என்றால் கூடப் பாதுகாப்பாக இரண்டு மணி நேரம் முன்னாடி போய்விடக்கூடியவர் அப்பா. அம்மாவும் அப்படித்தான் இருந்தாள். ஆனால் திடீரெனக் கார் ஒட்ட வேண்டும் என்ற ஆசை கிளைத்து அம்மா மாறியிருந்தாள்
அம்மாவிற்குத் தற்காலிக லைசன்ஸ் விண்ணப்பிக்க டிரைவிங் ஸ்கூலே உதவி செய்தது. அம்மாவின் பெயருக்கு தற்காலிக லைசன்ஸ் வந்த அன்று அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அறுபத்திரெண்டாவது வயதில் அம்மா கார் ஒட்டக்கற்றுக் கொண்டுவிட்டாள். ஒருவேளை இது போல விமானம் ஒட்டுவதற்குப் பயிற்சி கொடுத்தால் அதையும் எளிதாகக் கற்றுக் கொண்டு இருப்பாள் போலும்
ஸ்வேதாவும் பிள்ளைகளும் ஒரு நாள் அம்மாவை கார் ஒட்டச்சொல்லி ஷாப்பிங் மாலுக்குப் போய் வந்தார்கள். பல வருஷங்கள் கார் ஒட்டியவள் போலத் தடுமாற்றமேயின்றி அம்மா காரை ஒட்டினாள். ஸ்வேதாவிற்கே ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கே நெருக்கடியான நேரங்களில் கார் ஒட்டுவது சிரமமாக இருக்கும். அம்மா எந்த நெருக்கடியிலும் அவசரம் காட்டவில்லை. முந்திப்போகப் பிரயத்தனப்படவில்லை. சாலைவிதிகளை முறையாகப் பின்பற்றுகிறவள் போலச் சரியான இடைவெளி கொடுத்து தன் காரை நிறுத்தினாள்.
அன்று ஷாப்பிங் மாலில் அம்மா முதன்முறையாக அவர்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டாள். அன்றிரவு சந்திரன் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டுச் சொன்னான்
“அப்போ அடுத்தவாரம் மைசூர் போயிட்டு வருவோம். அதான் உங்க அம்மா கார் ஒட்டுவாங்களே“
அதைக்கேட்டு அம்மா சிரித்தாள். அவர்கள் ஆசைப்பட்டது போலவே மைசூர் வரை ஒற்றை ஆளாகக் கார் ஒட்டிக் கொண்டு வந்தாள். குறிப்பாக ஆள் அற்ற நெடுஞ்சாலைகளில் அவள் காரின் வேகத்தை அதிகரிப்பதும் ஒற்றைக் கையால் ஸ்டியரிங்கை திருப்புவதும் சந்திரனுக்கே பார்க்க வியப்பாக இருந்தது.
மைசூர் சாலையில் இருந்த ஒரு மோட்டலில் அவர்கள் காரை நிறுத்திச் சாப்பிட்டார்கள். அப்போது ஒரு வாடகைகாரோட்டி அம்மாவிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தான். அம்மா அவனுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தாள்
தன் அம்மா தானா அது என்று வியப்பாக இருந்தது. என்ன பேசினாள் என்று கேட்டுக் கொள்ளவில்லை. பகலில் மட்டுமின்றி இரவில் கார் ஒட்டும் போதும் அவளிடம் பதற்றம் காணப்படவேயில்லை.
வீடு திரும்பி வந்த போது ஸ்வேதா சொன்னாள்
“நீ கார் ஒட்டுறதை பார்க்க அப்பா இருந்திருக்கணும். “
“அவர் இருந்திருந்தா என்னாலே கார் ஒட்ட கத்துகிட்டு இருந்திருக்க முடியாதுடீ“ என்றாள்
அது உண்மை. அவரது பேச்சில் தைரியம் போயிருக்கும். சந்தர்ப்பம் கிடைக்காமல் தான் அம்மா இத்தனை ஆண்டுகளாக முடங்கியிருந்திருக்கிறாள்
அதன்பிறகு அதிகாலையில் அம்மா காரை வெளியே எடுத்துக் கொண்டு கலையாத இருளில் வெளியே போய் வருவதையும் திரும்பி வரும்போதெல்லாம் பிரெஷ்ஷாக உள்ள பழங்கள் காய்கறிகள் வாங்கி வருவதையும் ஸ்வேதாகக் கவனித்துக் கொண்டாள். நாள் முழுவதும் அவளது குழந்தையைக் கவனித்துக் கொண்டாலும் அதிகாலை நேரம் கார் ஒட்டுவது அம்மாவிற்கு மிகுந்த புத்துணர்வும் நம்பிக்கையும் தந்திருந்தது. அதுவரை அம்மா சாப்பிட்டுவந்த பிரஷர் மாத்திரைகளை நிறுத்திக் கொண்டுவிட்டாள். டிவியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட அவள் கார்களை உன்னிப்பாகக் கவனிப்பதை ஸ்வேதா கண்டாள்.
ஆறுமாதங்களுக்குப் பிறகு அம்மா ஊருக்குக் கிளம்புகிறேன் என்றாள். ஆம்னி பஸ்ஸில் டிக்கெட் போட்டுவந்தான் சந்திரன். அவளைப் பேருந்தில் ஏற்றிவிடச் சந்திரன் உடன் போயிருந்தான். அப்போதும் அம்மா தான் காரை ஒட்டிக் கொண்டு போனாள். அவளது பேருந்து வரும்வரை அம்மா ஒரு வார்த்தை பேசவில்லை. கிளம்பும் போது சந்திரன் சொன்னான்
“உடம்பை பாத்துக்கோங்க. அடுத்த முறை நீங்க கார்லயே ஊருக்குப் போகலாம். “
“நிஜமாவா“ எனக்கேட்டாள் அம்மா. அப்படிக் கேட்டபோது அவளது முகத்தில் விவரிக்கமுடியாத சந்தோஷம் பெருகியிருந்தது. சந்திரன் அதை உறுதி செய்பவன் போலச் சொன்னான்
“ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தனியா காரை ஒட்டிக்கொண்டு உங்களாலே போக முடியும் தானே. “
அதைக்கேட்டபோது அம்மா பலமாகத் தலையாட்டினாள்.
சந்திரன் வீட்டிற்குத் திரும்பி வந்து சொன்னான்
“உங்க அம்மாவை என்னாலே புரிஞ்சிகிடவே முடியலை. நானே இதுவரைக்குக் கார்ல ஊர்வரைக்குப் போயிட்டு வந்ததில்லை. டென் அவர்ஸ் டிராவல். ஆனா நான் ஒட்டுகிட்டுபோயிடுவேனு தலையாட்டுறாங்க“
அதை இப்பவே செய்து இருக்கலாம்லே என்பது போல ஆதங்கமாகப் பார்த்தாள் ஸ்வேதா. இதற்காகவே அம்மாவை உடனே பெங்களூருக்குத் திரும்ப வரவழைக்க வேண்டும் போலிருந்தது. அத்தோடு அப்பாவின் மீது அவளுக்குப் பெருத்த கோபமும் உருவாகியிருந்தது
••
உடலின் அலைகள்
.

பினா பாஷ்( Pina Bausch. )உலகப்புகழ் பெற்ற நடனக்கலைஞர். இவரது Orpheus and Eurydice – Dance opera என்ற நடனநிகழ்வினைப் பற்றிய படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது.
1994ல் பினா பாஷ் சென்னையில் நடனநிகழ்ச்சி நடத்திய போது நேரில் கண்டிருக்கிறேன். மேடையமைப்பும் ஒளியும் நடனமிடும் கலைஞர்களின் உடல்திறனும் வியப்பில் ஆழ்த்தியது. நடனக்கலைஞர் சந்திரலேகாவின் புதுவகை நடனங்களைக் கண்டு ரசித்திருந்த எனக்குப் பினா ஒப்பற்ற சாதனையாளராகத் தோன்றினார். அவர் சந்திரலேகாவின் நண்பர். இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
நம்மில் பெரும்பான்மையினருக்கு மேற்கத்திய நடனம் சினிமா வழியாகவே அறிமுகமாகியிருக்கிறது குறிப்பாகப் பழைய கறுப்பு வெள்ளை படங்களில் கதாநாயகனும் நாயகியும் சேர்ந்து ஆடும் நடனமும் ப்யானோ இசைக்கு ஏற்ப உடல்கள் கொள்ளும் நெருக்கமும் தான் மேற்கத்திய நடனம் என அறிந்திருக்கிறோம்.
ஆப்பிரிக்க இசை நடனக்குழுவினர்களின் நிகழ்ச்சி ஒன்றைக் கண்ட போது நடனம் என்பது விடுதலை உணர்வின் வெளிப்பாடு. நடனத்தின் வழியே அவர்கள் புதிய வெளிப்பாட்டு மொழியை உருவாக்கியிருப்பதை அறிய முடிந்தது. இது போலவே சூபி நடனம் ஒன்றை டெல்லியில் கண்ட போது அது மெய்தேடலின் வடிவமாகவே உணர்ந்தேன்.
நவீன நாடகம் போலவே நவீன நடனமும் தனக்கான புதுவகை வெளிப்பாட்டு முறையை, பிம்பங்களை, மொழிதலை உருவாக்கியுள்ளது.
பொதுவான மேற்கத்திய நடன நிகழ்வுகளிலிருந்து பினாவின் நடனநிகழ்வு முற்றிலும் மாறுபட்டது. அவர் காற்றில் பறக்கும் நீர்குமிழ்கள் போல உடலை பறக்க வைக்கிறார். உடல்களின் இயக்கமும் பிணைப்பும் விலகலும் ஒன்றுகூடுதலும் மாயமாகத் தோன்றுகிறது. அலைகள் தோன்றி எழுவது போலவே உடல்கள் எழுகின்றன. வீழ்கின்றன.

பினா பாஷ் ஒரு நடனநிகழ்வின் போது நடனக்கலைஞர்களைக் கண்களை மூடிக் கொண்டு நடனமாடும்படி செய்தார் என்று வாசித்திருக்கிறேன். நேரில் அவரது நடனநிகழ்வை கண்டபோது உடலினை ஒரு மலர் விரிவது போல மலரச் செய்கிறார். உயிர்பெற்ற சிற்பங்களைப் போலக் கலைஞர்கள் தோற்றமளிக்கிறார்கள். இசையோடு இணைந்து அவர்கள் உருவாக்கும் எழுச்சி நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
The Queen of European Dance Theatre என்று புகழப்படும் பினா தனது தொடர் முயற்சியால் புதுவகை நடனத்தைக் கண்டுபிடித்தார்” என்கிறார் வில்லியம் ஃபோர்சித்
“பினாவின் சாதனை மகத்தானது, உடலின் முப்பரிமாணத்தை அவரது நடனத்தில் காணமுடிகிறது என்கிறார் பால் சனசார்டோ
பினாவின் நடன வாழ்க்கை பற்றி Wim Wenders ஒரு டாகுமெண்டரியை உருவாக்கியிருக்கிறார். முக்கியமான படமது.
May 4, 2021
கைதட்டுகள் போதும்
சிறுகதை
அந்த ஊரில் ரங்கசாமியின் வீட்டிற்கு மட்டும் கதவில்லை. தனக்குக் கதவு தேவையில்லை என்று பிடுங்கி எறிந்துவிட்டார்.
கதவற்ற அவரது வீட்டிற்கு யார் வரப்போகிறார்கள். காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் அபூர்வமாக வரும் மழையையும் தவிர வேறு மனிதர்கள் அந்த வீட்டிற்கு வருவதேயில்லை.
ரங்கசாமி சர்க்கஸில் வேலை செய்ததன் அடையாளமாக அவரிடம் மிஞ்சமிருந்தது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே. அந்தச் சைக்கிளில் தான் இப்போதும் அவர் வெளியே போய் வருகிறார்.

விளாம்பட்டி என்ற அந்தச் சிறிய கிராமத்தில் ஒற்றைச் சக்கரச் சைக்கிளில் வெளியே போய் வரும் ஊரே அவரை வியந்து பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். இப்போது அதுவும் மாறிவிட்டது. யாரும் அவரைக் கவனிப்பதில்லை.
உயரமான அந்த ஒற்றைச் சக்கரச் சைக்கிளில் செல்லும் போது கீரிடம் தாங்கிய அரசன் பவனி வருவது போலிருப்பதாக அவராக நினைத்துக் கொள்வார்.
ஒற்றைச் சக்கரச் சைக்கிள் தான் அவரது அடையாளம். அவரது வீட்டின் வெளியே உயரமான அந்தச் சைக்கிள் நிற்பதை சிறுவர்கள் ஆசையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். எவரையும் அச் சைக்கிளை ஒட்ட ரங்க சாமி அனுமதிக்கவில்லை.
அது வெறும் சைக்கிள் இல்லையே பதினெட்டு ஆண்டுக் காலச் சர்க்கஸ் வாழ்க்கையின் அடையாள சின்னமல்லவா.
ஊரில் பிழைக்க வழியின்றி வேலை தேடி வட இந்தியாவிற்குப் போன ரங்கசாமி சர்க்கஸில் சேருவேன் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. ஆனால் தற்செயலாகச் சந்தித்துப் பழகிய உத்தம்சிங்கின் நட்பு தான் அவரைச் சர்க்கஸில் சேர வைத்தது. உத்தம்சிங் சர்க்கஸின் மிருக வைத்தியராக இருந்தார்.
ராயல் சர்க்கஸில் பார் விளையாடுகிறவராக, கண்ணைக் கட்டிக் கொண்டு கயிற்றில் நடப்பவராக, ஒற்றைச் சக்கரச் சைக்கிளில் வித்தை காட்டுகிறவராக எத்தனையோ சாகசங்களைச் செய்து காட்டி கைதட்டல்கள் பெற்றவர் ரங்கசாமி. சர்க்கஸில் அவரது பெயர் ரங்கா. சர்க்கஸ் விளம்பர தட்டிகளில் அவரது படத்தைப் பெரிதாக வரைந்திருப்பார்கள். குதிரைவண்டியில் அறிவிப்பு செய்யும் போது கூட ரங்கசாமியின் பெயரை தவறாமல் அறிவிப்பார்கள். அவருக்கென்றே ரசிகர் கூட்டமிருந்தது.
இப்போது அவரது உடற்கட்டுத் தளர்ந்துவிட்டது தலை நரைத்து புருவ மயிர்கள் கூட வெண்மையாகிவிட்டது ஆனால் இளமையில் அவரைக் கண்டவர்கள் இரும்பு போல உறுதியாக உடலை வைத்திருக்கிறாரே என்று பிரமித்துப் போனார்கள். அதிலும் இளம்பெண்கள் அவரது சட்டையணியாத உடலைக் கண்டு வியப்பதை அவர் வெகுவாக ரசித்தார். எத்தனையோ பெண்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
ஏன் சர்க்கஸில் பார் விளையாடும் ப்ரீதா அவரைக் காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுவதாகவும் மன்றாடினாள். ஆனால் ரங்கசாமி ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர் ப்ரீதாவிடம் உண்மையைச் சொல்லவில்லை. அவருக்குப் பதினெட்டு வயதிலே திருமணம் முடிந்துவிட்டது. மீனாவோடு சில மாதங்களே வாழ்ந்தார். அவர்களுக்குள் சண்டை வந்து மீனா கோவித்துக் கொண்டு போய் விட்டாள்.
சர்க்கஸில் வேலைக்குச் சேர்ந்த பிறகு கை நிறையப் பணத்துடன் அவளைத் தேடி சமாதானம் செய்து மீண்டும் சில மாதங்கள் கூடி வாழ்ந்தார். மீனா கர்ப்பிணியானாள். பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குத் தன் தாயின் பெயரான பார்வதி என்பதையே வைத்தார். பாரூ பாரூ எனக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தார். ஆனால் கையில் பணமில்லாமல் செய்வதற்கு வேலையில்லாமல் ஊரில் எத்தனை நாட்கள் கைக்குழந்தையைப் பார்த்தபடியே காலம் கடத்தமுடியும். அவரால் ஊரில் முடங்கியிருக்க முடியவில்லை.
மீனாவிற்குத் தெரியாமல் ஒரு இரவு ஊரைவிட்டு கிளம்பி மதுரைக்குப் போய் அங்கிருந்து ரயிலில் குவாலியருக்கு சென்றார். சர்க்கஸ் கம்பெனி குவாலியரில் முகாமிட்டிருந்தது. அதன்பிறகு மூன்று ஆண்டுகள் அவர் ஊர் பக்கமே செல்லவில்லை. தேவைக்கு அதிகமான பணம். விதவிதமான மதுவகைகள். குடி. எளிதாகக் கிடைக்கும் பெண்துணை. இவ்வளவு போதும் என்று அவர் சர்க்கஸ் கம்பெனியோடு இந்தியா முழுவதும் சுற்றி வந்தபடியே இருந்தார். அந்த நாட்களில் அவர் மகிழ்ச்சியில் திளைத்தார்.
குடியை விடவும் அவருக்கு அதிகப் போதை தந்தது மக்களின் கைதட்டல். தன் சாகசங்களைக் கண்டு மக்கள் கைதட்டுவதை அவர் ரசித்தார். நிறையக் கைதட்டுகள் வரும் நேரத்தில் தாங்க முடியாத மகிழ்ச்சி கொண்டார். உறக்கத்திலும் கூட அவரது காதில் கைதட்டல் சப்தம் கேட்டபடியே இருந்தது. கைதட்டல்கள் மட்டுமின்றிப் பொது இடத்தில் அவரைக் காணும் போது மக்கள் வியந்து பாராட்டுவதும் அவரோடு கைகுலுக்கிக் கொள்வதும் அவரைத் தான் சாதாரண ஆள் இல்லை என்று உறுதியாக நம்ப வைத்திருந்தது.
கைதட்டுகளைக் கேட்பது ஒரு மயக்கம். கேட்க கேட்க தீராத மயக்கம். பனிக்கட்டியை தலையில் வைத்தது போன்ற குளிர்ச்சி தரும் விஷயம். மனிதர்கள் பாராட்டிற்கு ஏங்க கூடியவர்கள். சிறிய காரியங்களுக்குக் கூடப் பாராட்டு தேவை என நினைப்பவர்கள். பாராட்டும் கைதட்டும் மாலை மரியாதைகளும் தரும் சந்தோஷத்தை பணம் ஒரு போதும் தந்துவிடாது. பாக்கெட்டில் பை இல்லாமல் கூட இருந்துவிடலாம் ஆனால் பாராட்டு இல்லாமல் ஒரு நாளை கடந்துவிட முடியாது என்று ரங்கசாமி நினைத்துக் கொண்டிருந்த காலமது.
கைதட்டல்களின் சப்தத்தில் அவர் தன் மனைவியை மறந்து போயிருந்தார். எப்போதாது பின்னிரவில் விழித்துக் கொள்ளும் போது மீனாவின் ஞாபகமும் மகளின் நினைவும் வந்து போகும். மகள் இப்போது நடைபழகியிருப்பாள். நன்றாகப் பேச்சு வந்திருக்கும். அவள் மழலை பேசிக் கேட்க முடியாமல் போய்விட்டது. இந்த மீனா ஏன் ஊரிலே இருக்க விரும்புகிறாள். சர்க்கஸ் பெண்களைப் போல அவளும் ஏதாவது வித்தையைக் கற்றுக் கொண்டு தன்னோடு ஊர் ஊராகச் சுற்றிவரலாம் தானே. அந்தக் கிராமத்தில் என்ன இருக்கிறது எதற்காக ஊரைக்கட்டிக் கொண்டு அழுகிறாள் என்று எரிச்சலாக வரும்.
பெண்கள் பிடிவாதமானவர்கள். எதற்காகப் பிடிவாதம் பிடிக்கிறோம் என்று கூடக் காட்டிக் கொள்ளமாட்டார்கள். அவள் பிடிவாதத்திற்காகத் தன்னை மாற்றிக் கொள்ள ரங்கசாமிக்கு விருப்பமில்லை. வீட்டிற்குள் உலகம் இருப்பதாகப் பெண்கள் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் உலகம் தான் வீடு என்பது ரங்கசாமியின் நம்பிக்கை.
சர்க்கஸ் என்பது தனியொரு உலகம். ஒட்டுமொத்த இந்தியாவின் மாதிரி வடிவமது. அங்கே எல்லா மாநிலத்து ஆட்களும் இருந்தார்கள்.. தமிழ் ஆட்கள் குறைவு. அவரும் இன்னும் இரண்டு பேரும் தான் தமிழர்கள். அந்த இருவரும் கூடச் சமையல் வேலைகளில் உதவியாளர்களாகவே இருந்தார்கள். கேரளாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்துமே அதிகமான கலைஞர்கள் சர்க்கஸில் கலந்து கொண்டிருந்தார்கள். கோமாளியாக இருந்தவன் அஸ்ஸாமைச் சேர்ந்தவன். சிங்கத்தை வைத்து வித்தை காட்டுகிற ஆள் மும்பைக்காரன். குஸ்தி பயில்வான் ஒரு பஞ்சாபி. சர்க்கஸில் வேலை செய்கிறவர்களுக்கு ஏழெட்டுப் பாஷைகள் எளிதாகப் பேசத் தெரிந்திருந்தன. ரங்கசாமியும் ஆறு பாஷைகள் நன்றாகப் பேசுவார். எத்தனை பாஷை இருந்தாலும் கைதட்டு தரும் இனிமைக்கு நிகரேது.
மகளைப் பற்றி நினைத்துக் கொள்ளும் போது ஊருக்குப் போய்வரலாம் என்று மனதில் தோன்றும். ஆனால் ஊரில் தன்னைப் பாராட்டுகிறவர்கள் ஒருவருமில்லை. மீனாவும் கூடத் தன் திறமைகளை ஒரு போதும் வியந்து பாராட்டியதில்லையே. ஊருக்குப் போய்விட்டால் தான் வெறும் ஆள். அதை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
இதற்காகவே ஊருக்குப் போகாமல் இருந்தார். சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு வரும் கூட்டத்தில் தன் மகள் வயது குழந்தைகளைக் கண்டால் மனது நெகிழ்ந்து போய்விடும். தனது சாகசங்களைத் தனது மகள் பார்க்க வேண்டும். கைதட்டி ரசிக்க வேண்டும். அது தான் அவரது ஏக்கமாக இருந்தது.
ஒரு நாள் சர்க்கஸ் முடிந்த இரவில் அந்த ஊரின் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் முகர்ஜி அவரைத் தேடி வந்து மறுநாள் தன் வீட்டிற்கு விருந்திற்கு வரவேண்டும் என்று அழைத்தார். அப்படிப் பல இடங்களிலும் அவரை அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார்கள். சில நேரம் பணமுடிப்புகளும் தருவது வழக்கம். ரங்கசாமி வருவதாக ஒத்துக் கொண்டார்.
டாக்டரே வந்து காரில் அழைத்துப் போவதாகச் சொன்னார். மறுநாள் காலை ரங்கசாமி குளித்துப் புதிய ஆடைகள் அணிந்து கொண்டு தயாராகியிருந்தார். முகர்ஜியின் கார் வந்தது. காரில் டாக்டரின் வீட்டிற்குப் போனபோது அலங்கார வளைவு கொண்ட பெரிய மாளிகை போலிருந்தது வீடு. வராந்தாவில் தொங்கிய கூண்டில் இருந்து கிளி சப்தமிட்டது. வீட்டின் ஹாலில் தேக்கில் செய்த சோபா போட்டிருந்தார்கள். சுவரில் டாக்டரின் ஆள் உயர ஒவியம். வீட்டிலிருந்தவர்களை டாக்டர் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு மெல்லிய குரலில் முகர்ஜி அவரிடம் கேட்டார்
“என் மகள் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டதால் தான் விருந்திற்கு அழைத்தேன். அவளுடன் நீங்கள் நிற்பது போல ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா“
“தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்“ என்றார் ரங்கசாமி
தன் அம்மாவின் பின்னால் வெட்கத்துடன் ஒளிந்து நின்று கொண்டிருந்த டாக்டரின் நான்கு வயது மகள் அபர்ணாவை நோக்கி தன் கைகளை நீட்டினார் ரங்கசாமி
அவள் தயங்கி தயங்கி அருகில் வந்தார். அவளை ஆசையாகத் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பதற்குத் தயராக நின்றார். அந்தச் சிறுமியின் கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியை அவரால் உணர முடிந்தது.
டாக்டர் தனது பாக்ஸ் கேமிராவால் நாலைந்து புகைப்படங்கள் எடுத்தார். அபர்ணாவை கிழே இறக்கிவிட்டபோது அவர் அறியாமல் மனது பாரூ பாரூ என்று அரற்றியது. தன் சொந்தமகளை இப்படித் தூக்கி வைத்துக் கொள்ளவில்லையே. அவளை ஒரு போதும் மகிழ்ச்சிபடுத்தியதே இல்லையே. என்ன வாழ்க்கையிது. எதற்காக இப்படி ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது.
டாக்டரின் குடும்பம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது.
டாக்டரின் மகள் ஒரு பொம்மையை அவருக்குப் பரிசாக அளித்தாள். அது இங்கிலாந்தில் இருந்து வாங்கி வரப்பட்ட அதிசயபொம்மை. சாவி கொடுத்தால் கைதட்டக் கூடியது. அந்தப் பொம்மையின் கைதட்டல் ஒசை அவ்வளவு இனிமையாக இருந்தது. தனக்குப் பொருத்தமான ஒரு பொம்மையைத் தந்திருக்கிறாளே என அந்தச் சிறுமியின் சின்னஞ்சிறு கையைப் பற்றிக் குலுக்கி மகிழ்ந்தார்.
உணவு மேஜையில் வைத்து ரங்கசாமி சொன்னார்
“உங்கள் மகள் வயது தான் என் மகளுக்கும்“
“சந்தோஷம். உங்கள் மகள் பெயரென்ன“ என டாக்டரின் மனைவி கேட்டாள்
“பாரூ“ என்றார் ரங்கசாமி
“பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்துவதை விடப் பெரிய விஷயம் ஒன்றுமேயில்லை. என்னிடம் பெட்டி பெட்டியாகப் பணமிருக்கிறது. அதைக் கொண்டு என் மகளுக்கு எதையும் வாங்கித் தர முடியும். ஆனால் அவள் எதற்கும் ஆசைப்பட்டதேயில்லை. சர்க்கஸில் உங்களைப் பார்த்த போது தான் அவள் முதன்முறையாக உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டாள் ஒரு தந்தையாக அதை நிறைவேற்றியதை பெரிய சாதனையாக நினைக்கிறேன். ஒரு வேளை நீங்க வர மறுத்திருந்தால் நான் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பேன். மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாத தந்தையாக இருப்பது துர்பாக்கியம் “ என்றார் டாக்டர்‘
ரங்கசாமியில் உணவை விழுங்க முடியவில்லை. மகளின் நினைவு மனதில் கொந்தளிக்கத் துவங்கியது. ஏன் இப்படித் தான் மகளை நேசிக்கவில்லை. அவள் என் உதிரமல்லவா. தன்னை நினைத்து மகள் ஏங்கியிருப்பாளே. இன்றிரவே ஊருக்குப் போய் விட வேண்டும் என்று தோன்றியது.
டாக்டர் தன் காரில் சர்க்கஸில் கொண்டு போய் விடும் போது ஒரு கவரில் ஆயிரம் ரூபாய் பணம் வைத்துத் தந்தார். கையைப் பிடித்துக் குலுக்கியபடியே சொன்னார்
“ எத்தனை பேரையோ நீங்கள் மகிழ்ச்சிப்படுத்தியிருப்பீர்கள்.அது எல்லாவற்றையும் விட உயர்ந்த விஷயம் என் மகளைச் சந்தோஷப்படுத்தியது. இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நன்றி“
டாக்டரிடம் விடைபெற்று தன் கூடாரத்திற்குப் போனதும் ஒரு மாத கால விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பவேண்டியது தான் என்று தோன்றியது. சர்க்கஸில் திடீரென எவரும் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே சர்க்கஸ் உரிமையாளர் அடுத்த மாதம் கான்பூருக்குச் சர்க்கஸ் போகும்வரை அவர் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஒரு மாத காலம் தானே என ரங்கசாமியும் ஒத்துக் கொண்டார். ஆனால் ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு வந்தபிறகு ஒவ்வொரு நாளும் மனது ஊரையே சுற்றிவரத்துவங்கியது. பகலும் இரவும் மிக நீண்டதாக மாறியது. தன் மகளுக்குப் பிடித்த விஷயங்களை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று பஜாரில் சுற்றி பாசிகள். வளையல்கள்.விதவிதமான பொம்மைகள் என நிறைய வாங்கிச் சேகரித்தார்.
கான்பூருக்குச் சர்க்கஸ் கிளம்பும் நாளில் ஊருக்குப் பயணிக்கத் துவங்கினார். ஒரு நாள் முழுவதும் பயணித்து அடுத்த நாள் மதியம் சொந்த ஊரான விளாம்பட்டிக்கு வந்து சேர்ந்தபோது பெட்டிக்கடை ராமலிங்கம் அவரிடம் சொன்னார்
“ உன் பொண்டாட்டி ஊரைவிட்டு போயி இரண்டு மூணு வருஷம் ஆச்சுப்பா.. அவங்க ஆத்திகுளத்துக்குப் போயிட்டாங்க“
அங்கே யார் இருக்கிறார்கள். மீனா எதற்காக ஆத்திகுளம் போனாள் என்று எரிச்சலாக வந்தது. ரங்கசாமி ஊரில் விசாரித்து மேற்கிலிருந்த ஆத்திகுளம் என்ற ஊருக்குப் போனபோது இரவாகயிருந்தது. சின்னஞ்சிறிய கிராமம். நூறு வீடுகளுக்கும் குறைவாக இருந்தது. மின்சார விளக்குகள் குறைவாக இருந்த ஊரது. மீனா அந்த ஊரில் அவளது பாட்டியோடு குடியிருந்தாள். சிறிய குடிசை வீடு. அவர் போனபோது வீடு ஒரே புகைமூட்டமாக இருந்தது. நாற்பது வாட்ஸ் பல்ப் ஒன்று உள்ளே எரிந்து கொண்டிருந்தது. வாசற்கதவை தள்ளி உள்ளே போனதும் மீனா அவரைக் கண்டு திடுக்கிட்டுப் போனாள். அவர் நினைத்தது போல மீனாவோ அவரது மகளோ அவரது வருகையால் சந்தோஷம் அடையவில்லை. பாரூ உயரமாக வளர்ந்திருந்தாள். அவர் ஆசையாக அணைத்துக் கொள்ள அவளை அழைத்தபோது முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அந்த வீட்டில் எவரும் அவருடன் ஒரு வார்த்தை பேசவில்லை.
மீனா மட்டும் கோபத்துடன் கத்தினாள்
“ இப்போ எதுக்கு வந்தீக. உங்க சகவாசமே வேண்டாம்னு தான் ஊரை விட்டு வந்து கூலி வேலை பாத்து பிழைச்சிட்டு இருக்கோம். மக நினைப்பு இப்போ தான் வந்துச்சாக்கும். “
“ ஏன் மீனா இப்படிப் பேசுறே. என் மகளைப் பாக்க நான் வந்தது தப்பா. “
“ மகளைப் பாத்தாச்சில்லே. கிளம்புங்க“
“ நான் சர்க்கஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டேன் மீனா. இனிமே உங்க கூடத் தான் இருக்கப் போறேன்“
“ போதும் சாமி உங்களைக் கட்டிக்கிட்டு நான் பட்ட கஷ்டம். ஒடுன காலு ஒரு நாளும் வீடு தங்காது. நாலு நாள் இருந்துட்டுச் சொல்லாமல் ஒடிப்போற ஆளு தானே நீங்க. இப்போ என்ன பாசம் பொத்துகிட்டு வருது“
“ அதான் தப்பை உணர்ந்துட்டேன்னு சொல்றேன்லே“
“ அந்தப் பேச்சு எல்லாம் வேண்டாம்.. உங்க கூடயிருந்து வாழ என்னாலே முடியாது“.
“ அப்போ நான் எங்க போறது“
“ உங்க வித்தையைப் பாத்து கைதட்டுனாங்கள்ளே அவங்க வீட்டுக்கு போங்க. எங்களுக்கு உங்க உறவே வேணாம். “
“ அப்படிச் சொன்னா எப்படி மீனா.. அதான் இனிமே வீட்டோட இருக்கேன்னு சொல்றேன்லே“ என்றார் ரங்கசாமி
அவர்கள் சண்டையை முறைத்து பார்த்தபடியே இருந்த மகள் பார்வதி சொன்னாள்
“ உங்களை யாரு வரச்சொன்னது. நீ கதவை மூடும்மா“
மீனா சொன்னதைவிடவும் பாரூ சொன்னதைத் தான் அவரால் தாங்க முடியவில்லை. தான் வாங்கி வந்த பொருட்களை அப்படியே வைத்துவிட்டு வீட்டினை விட்டு வெளியே இறங்கினார். அவர் கண்முன்னாலே பாரூ அவர் கொண்டுவந்திருந்த பரிசுகள் அத்தனையும் தூக்கி எறிந்தாள். வேலிப்புதரில் போய்ப் பொம்மைகள் விழுந்தன.
ஊரேயே சந்தோஷப்படுத்த முடிந்த தன்னால் வீட்டினை சந்தோஷப்படுத்த முடியவில்லை. யாரோ ஒரு டாக்டரின் மகள் தன்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறாள். ஆனால் சொந்த மகள் தன்னை வெறுக்கிறாள்.
விளாம்பட்டியிலிருந்து அன்றிரவே அவர் திரும்பவும் சர்க்கஸிற்குக் கிளம்பிப் போனார். மனதில் வேதனையும் கவலையும் படியத்துவங்கியதால் அவரது கவனம் திசைமாறியது. நிறையக் குடித்தார். தனிமையில் அழுதார். கவனம் கூடாத காரணத்தால் இரண்டு முறை விபத்துக்குள்ளாகி கால் முறிவு கொண்டார். சர்க்கஸில் அவரது புகழும் பேரும் குறைய ஆரம்பித்தது.
அவர் கண்ணைக் கட்டிக் கொண்டு கயிற்றில் நடக்கும் போது ஒருவரும் கைதட்டுவதேயில்லை. அந்த வெறுமை அவரால் தாங்க முடியாததாகியது. சர்க்கஸ் பார்க்க வந்திருப்பவர்களை அவர் வெறுத்தார். எவருக்கோ கிடைக்கும் கைதட்டுகளைக் கேட்டுக் கொதித்துப் போனார். தன் தட்டில் நாணயம் விழாத பிச்சைக்காரனின் நிலை போலிருந்தது அவரது வாழ்க்கை. பின்பு அவராகவே ஒரு நாள் சர்க்கஸை விட்டு விலகிக் கொண்டார்
அவருக்குச் சேர வேண்டிய பணத்தைத் தந்து விடையனுப்பும் போது தனக்குச் சர்க்கஸில் உள்ள ஒற்றைச் சக்கரச் சைக்கிள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டு விளாம்பட்டி வந்து சேர்ந்தார்.
சர்க்கஸில் கத்து வைத்திருந்த எலக்ட்ரிக்ஷன் வேலையை ஊரில் செய்ய ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் அவர் தவறாமல் செய்த காரியம் ஒற்றைச் சக்கரச் சைக்கிளை ஒட்டிக் கொண்டு ஆத்திகுளம் வரை போய் வருவது.
தன் மகள் என்றாவது ஒரு நாள் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்பது போல அவர்கள் வீட்டு முன்பாக அவர் ஒற்றைச் சக்கரச் சைக்கிளை ஒட்டிக்காட்டுவார். தன் மகளுக்காகவே அதிசயமான பொருட்களைச் செய்து கொண்டு போவார். அப்படி ஒருமுறை பாட்டுபாடும் முயல்பொம்மை ஒன்றை செய்திருந்தார். அந்தப் பொம்மையைப் பாரூ கண்டுகொள்ளவேயில்லை. இன்னொரு நாள் காகிதகொக்குகளைச் செய்து அவள் வீட்டு மரத்தில் தொங்கவிட்டிருந்தார். பாரூ வளர்ந்து பள்ளிக்குப் போகும் வரை அவர் நாள் தவறாமல் அவர்களைத் தேடி போய் வந்தார்.
பின்பு அவர்கள் தன் மீது கொண்டுள்ள வெறுப்பும் விலகலும் சரியானது தான் என்று புரிந்து கொண்டவரைப் போல அவர்களைத் தனியே வாழ்வதற்கு அனுமதித்தவராக ஒதுங்கிக் கொண்டார்.
ரங்கசாமியின் வீட்டில் இப்போதும் அந்த ஒற்றைசக்கரச் சைக்கிள் இருக்கிறது. அவரது மனைவியோ மகளோ அவரை மன்னிக்கவேயில்லை. அந்தச் சைக்கிளில் அவர் ஒற்றை ஆளாக ஊரில் வலம் வரும்போதெல்லாம் யாரோ அவரது வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.
சாவி கொடுத்தால் கைதட்டும் பொம்மை இப்போதும் அவரிடம் இருக்கிறது. ஆனால் அதைக் கண்டாலே அவருக்கு ஆத்திரமாக வந்தது. அதன் சாவியைப் பிடுங்கி வீசி எறிந்து விட்டார். இரண்டு கைகளும் தட்டுவதற்குத் தயாராக விரித்தபடியே நின்று கொண்டிருந்தது அப்பொம்மை
கைதட்டு சப்தத்தின் ஊடே தொலைவில் மனைவி வடித்த கண்ணீரின் சப்தம் கேட்காமல் போய்விட்டேன். மகளின் சிரிப்பு பார்வையாளர்களின் உற்சாகக் கைத்தட்டிலில் கேட்காமல் போய்விட்டது. அந்த டாக்டர் செய்தது போலத் தன்னால் மகளைச் சந்தோஷப்படுத்த முடியவேயில்லை. தன் வாழ்க்கை பெரும் தோல்வி. தனது திறமைகள் யாவும் உலகினை மட்டுமே சந்தோஷப்படுத்தக்கூடியது. சொந்த வாழ்க்கையில் அதற்கு ஒரு இடமும் கிடையாது.
நிச்சயம் என்றாவது ஒரு நாள் தன் மகள் தன்னைப் புரிந்து கொள்ளக்கூடும். நேசிக்கக்கூடும். அதுவரை காத்திருக்க வேண்டியது தான் என அவர் தன்னை வீட்டோடு ஒடுக்கிக் கொண்டார்.
பிரிவு இத்தனை ஆழமான மனக்கசப்பை, வெறுப்பை உண்டாக்கிவிடும் என்பதை அவர் பின்னாளில் தான் முழுமையாக உணர்ந்தார். தன் மகள் வளரும் நாட்களில் உடனில்லாமல் போன தவற்றை எதைக் கொண்டும் சரிசெய்ய முடியாது என்பது அவருக்குப் புரிந்தது.
உடைந்த பீங்கான் பாத்திரங்களைக் கூட ஒட்டவைக்கப் பசை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் பிரிந்த உறவினை ஒட்டவைக்க எந்தப் பசையும் உலகில் இல்லை. தன் ஆற்றாமையுடன் அவர் நீண்ட பகலிரவுகளைக் கடந்து சென்றார். மனக்கவலை முதுமையை வேகமாகக் கொண்டுவந்தது.

எப்போதாவது தொலைவில் தன் மகளையோ, மனைவியோ காணும் போது மனது சந்தோஷம் கொள்ளும். அவர்கள் அவரைப் பொருட்படுத்துவதேயில்லை. திரும்பிப் பார்ப்பது கூடயில்லை. சொந்தமகளின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டதை விடத் தனக்குத் தண்டனை வேறில்லை எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தார்.
இந்த உலகின் மனிதன் யாசிக்கும் எந்தப் பொருளும் காத்திருப்பில், விடாமுயற்சியில் எப்படியாவது கிடைத்துவிடும். ஆனால் விலகிப் போன உறவிடமிருந்து அன்பை பெறுவது எளிதேயில்லை.
தன் தவற்றை உணர்ந்த காரணத்தால் ரங்கசாமி என்றாவது தன்னைத் தேடி மகளும் மனைவியும் வரக்கூடும் என நம்பினார். அப்படி வரும் நாளில் வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தால் என்னவாகும் எனப் பயந்தே கதவை பிடுங்கி எறிந்துவிட்டிருந்தார்.
கதவற்ற வீடு ரங்கசாமியின் மனதைப் போலவே மகளுக்காகவும் மனைவிக்காவும் காத்திருந்தது.
காத்திருப்பதைத் தவிர உறவுகள் ஒன்று கூடுவதற்கு வேறு வழியில்லை தானே. காற்றும் மழையும் சூரியனும் அதைத்தான் ரங்கசாமிக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தன.
அவரும் அதை உணர்ந்தேயிருந்தார்
••
May 2, 2021
இயற்கையின் வண்ணங்கள்
Life in Colour என்ற டேவிட் அட்டன்பரோவின் புதிய ஆவணத்தொடரைப் பார்த்தேன். இயற்கையின் வண்ணங்களை ஆராயும் இந்தத் தொடர் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது.

இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்குக் கொடையாக வழங்கியுள்ள வண்ணங்களையும் அதன் தனித்துவத்தையும் மிக அழகாக விவரிக்கிறார் அட்டன்பரோ. அவர் அளவிற்கு உலகெங்கும் சுற்றி இயற்கை வளங்களை, உயிரினங்களை, கடலை, கானகங்களைக் கண்டவரில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் அவர் இயற்கையின் வண்ணங்களைப் படமாக்கியுள்ள விதம் அபாரம். குறிப்பாக ஒரு நண்டின் பார்வையில் உலகம் எப்படித் தெரிகிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது நவீனத் தொழில்நுட்பத்தின் பெரிய சாதனை என்றே சொல்வேன்
இந்த ஆவணப்படம் இந்தியாவிலிருந்து தான் துவங்குகிறது. தோகைவிரித்தாடும் மயிலை படமாக்கியிருக்கிறார்கள். மயில் தோகையின் கண்கள் மின்னுகின்றன. எத்தனையோ முறை மயிலின் தோகை விரிப்பைப் பார்த்திருந்தாலும் இத்தனை துல்லியமாக. வண்ண ஜாலத்துடன் காண்பது பரசவமூட்டவே செய்கிறது.
பெண் மயிலை கவர்வதற்காக ஆண் மயில்,தோகையை விரிக்கும்போது அதிலுள்ள கண்கள் விரிந்து ஒளிருகின்றன. முழுவதுமாக தோகையை விரிக்கும் போது மயில் படபடப்பு ஒசையை ஏற்படுத்துகிறது. இந்த நடனத்தில் மயங்கியே பெண் மயில் துணை சேர சம்மதிக்கிறது.

உயிரினங்களுக்குப் பாதுகாப்பாகவும் துணையை வசீகரிப்பதற்காகவும் உடலின் வண்ணம் பயன்படுகிறது. தன் அடையாளத்தை நிறத்தைக் கொண்டு எப்படி உயிரினங்கள் மறைத்துக் கொள்கின்றன என்பதை அழகாக விவரிக்கிறார்.
ஒரு காட்சியில் Strawberry poison dart எனும் இரண்டு தவளைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன. சுண்டுவிரல் அளவிலுள்ள சிவப்பு நிற தவளை ஒன்று இன்னொரு சிவப்பு தவளையோடு மோதுகிறது. தாவித்தாவிச் சண்டையிடுகின்றன. ஒரு பக்கம் உற்சாகமாக இருந்த போதும் அதை எப்படிப் படமாக்கினார்கள் என்று வியப்பும் ஏற்படவே செய்கிறது

மனிதர்களுக்கு நிறங்கள் அழகுணர்வின் வெளிப்பாடு மட்டுமே. அதுவும் நிலப்பரப்பு பண்பாடு சார்ந்து நிறங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. சில நிறங்களை வெறுக்கிறார்கள். சில வண்ணங்களை மிகவும் நேசிக்கிறார்கள். இயற்கையில் இந்தப் பேதமில்லை. அங்கே வண்ணங்கள் உயிர்வாழ்வதற்காகக் கவசம். எதிரிகளை எச்சரிக்கை செய்யவும் தப்பித்துக் கொள்ளவும் வண்ணங்களே துணை செய்கின்றன.
இயற்கையின் அதிசயங்களை அறிந்து கொள்ள இது போன்ற ஆவணப்படங்களே பெரிதும் உதவி செய்கின்றன
இந்தத் தொடருக்காகப் புதிய கேமிராக்கள் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அது பற்றியும் ஆவணத்தொடரிலே விளக்குகிறார்கள்.
வரிக்குதிரை ஏன் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளைக் கொண்டுள்ளது என்பதற்காகப் பதிலை இந்தப் படம் விளக்குகிறது.
கடலுக்கு அடியில் கேமிராவை எடுத்துக் கொண்டு சென்று Peacock Mantis Shrimp எனும் அபூர்வ இறால் மீனைப் படமாக்கியிருக்கிறார்கள். அதன் கண்கள் விநோதமாக இருக்கின்றன. இந்த மீனின் உடலமைப்பும் அதன் வண்ணமும் வியப்பூட்டுகின்றன. உலகைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளது மிகக்குறைவு என்ற எண்ணத்தைப் படம் உருவாக்குகிறது. பெருந்தொற்று மிகுந்த காலத்தில் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் நம்பிக்கையின்மையைப் போக்குவதற்கு இந்தப் படம் பெரிய வழிகாட்டுதலாக அமைகிறது.

இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கும் போது உயிர்வாழ்வதற்காக அவை மேற்கொள்ளும் போராட்டங்களில் பத்துச் சதவீதம் கூட மனிதனுக்குக் கிடையாது என்பது புரிகிறது. தனக்கென ஒரு வெளியும் காலப் பகுப்பு முறைகளும் மனிதனுக்கு மட்டுமே உரியது. தனக்குத் தேவையான உணவைப் பாதுகாப்பாக மனிதன் சேகரித்து வைத்துக் கொள்கிறான். ஆனால் விலங்குகளைப் பசி தான் வழிநடத்துகிறது. வேட்டையாடப் பாயும் சிறுத்தை சப்தமில்லாமல் நடக்கிறது. அதைக் காணும் போது நிழல் ஊர்ந்து போவது போலவே இருக்கிறது. துரத்தின் போன மானைப் பிடிக்க இயலவில்லை. பசித்த கண்களுடன் திரும்பிச் செல்கிறது.
தனக்காக இணையைத் தேடிக் கொள்ளவும் வசீகரிக்கவும் விலங்குகளும் பறவைகளும் எவ்வளவு தீவிரமாக முனைகின்றன என்பதைப் படம் அழகாக விளக்குகிறது. அதிலும் வண்ணப்பறவை ஒன்று தனது இணையை வசீகரிக்கத் தன் உடலை ஒரு மலரைப் போல விரித்துக் காட்டுவதும் தன் இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் நாலைந்து பெண் பறவைகள் தன்னை தேடி வந்தபோது அதிலிருந்து ஒரு பறவையைத் தனது துணையாகத் தேர்வு செய்வதும் அபாரம்.
தன்னுடைய உணர்ச்சிகளை மனிதனைத் தவிர வேறு விலங்குகள் மறைத்துக் கொள்வதில்லை. அச்சமும் பதைபதைப்பும் சந்தோஷமும் விலங்குகளிடம் வெளிப்படும் விதம் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது 94வது வயதில் டேவிட் அட்டன்பரோ இத்தனை துடிதுடிப்பாகவும் உற்சாகமாகவும் இயங்குவதும் பயணிப்பதும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. முதுமையை அவர் பொருட்படுத்தவேயில்லை. நூற்றாண்டினைக் கடந்த மரம் உறுதியாகிவிடுவது போலவே அவர் நடந்து கொள்கிறார். பறவைகளுடன் அத்தனை ஸ்நேகமாக இருக்கிறார். தேன்சிட்டுகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு மலரிலிருந்து தேனை உறிஞ்சிச் செல்லும் காட்சியிருக்கிறது. அது தான் இன்றைய காலத்தின் அடையாளம்.
டேவின் அட்டன்பரோ இயற்கையைப் புரிந்து கொண்டுள்ள விதமும் அதை வெளிப்படுத்தும் அவரது மென்மையான குரலும் அபாரம். இயற்கை உலகின் ஒப்பற்ற தூதுவராகவே அவரைச் சொல்வேன்.
நாம் இதுவரை காணாத, நேரடியாக சென்று காணமுடியாத இயற்கையின் பேரதிசயங்களை நம் வீட்டிற்குள் கொண்டுவந்து காட்டுகின்றன இது போன்ற ஆவணப்படங்கள். இவற்றை நாம் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டும். வகுப்பறைகளில் திரையிட வேண்டும். இயற்கையின் பேரியக்கத்தின் முன்னால் மனிதன் சிறுதுளியே என்பதை இந்தபடம் மீண்டும் உறுதி செய்கிறது
••
இலக்கற்ற பயணம்
‘தேசாந்திரி’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை
வீட்டின் சாளரங்களின் (ஜன்னல்களின்) வழியாக நிலாவைப் பார்ப்பதற்கும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அல்லது வீட்டின் தோட்டத்தில், முற்றத்தில் நின்று நிலாவைப் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. சாளரங்கள் நம் பார்வைக் கோணத்தைக் கட்டுப்படுத்தும்; நமது சுதந்திரத்தைத் தடுக்கும். ஆனால், மொட்டை மாடியும் தோட்டமும் முற்றமும் நமக்கு அனைத்துச் சுதந்திரத்தையும் கொடுக்கும்; எல்லாக் கோணத்திலும் நிலாவைப் பார்க்க நம்மை அனுமதிக்கும்.

பயணங்கள் சுதந்திரமானவை. அவை தரும் காட்சிப் பதிவுகள் பல வகைப்பட்ட கோணத்தில் அமையும். அதனால், அது நமக்குத் தரும் ரசனை இன்பம் அளவற்றது. நல்ல ரசிகர்கள் பயணத்தையும் பயணம் சார்ந்த புத்தகங்களையும் விரும்புவர். படிப்பதையே ஒரு பயண அனுபவமாக மாற்றிவிடும் தகுதி படைத்தவை பயண இலக்கியங்கள்.
தமிழ் இலக்கிய மரபில் பயண இலக்கியத்திற்குத் தனி இடம் உண்டு. சங்க இலக்கியத்தில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் அனைத்துமே ஒருவகையில் பயண இலக்கியங்கள்தான்.
“செங்கோன் தரைச்செலவு” தமிழில் பயண இலக்கியத்திற்கு முன்னோடியான நூல் என்று கருதப்படுகிறது. அடுத்து “தகடூர்யாத்திரை” என்றொரு பயண நூல் இருந்ததாகத் தெரிகிறது. ‘வழிநடைச் சிந்து’வும் இந்த வகைப்பாட்டில்தான் அடங்கும். கி.பி. 19, 20 நூற்றாண்டுகளைப் ‘பயண இலக்கியத்தின் பொற்காலம்’ என்றே கூறலாம்.
சில எழுத்தாளர்கள் பயணம் இலக்கியம் எழுதுவதற்காகவே பயணம் மேற்கொள்வார்கள். சில எழுத்தாளர்கள் தாம் பயணத்தின் வழியாகப் பெற்ற அரிய அனுபவங்களைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பயண இலக்கியத்தை எழுதுவார்கள். இரண்டுக்கும் வேறுபாடு அதில் உள்ள உண்மைத் தன்மையிலும் புனைவுத் தன்மையிலும் அடங்கியிருக்கும். இருப்பினும் இரண்டுமே படிப்பதற்கு ஏற்றவையே.
என் கணிப்பில், ஏ.கே. செட்டியார், சோமலெ, சிட்டி, தி. ஜானகிராமன் மற்றும் சிட்டி, சாமிநாத சர்மா, பிலோ இருதயநாத், பால்தெரோ, பிகோ ஐயர், ஜூல்ஸ் வெர்ன், ஹீத் வுட், மோனிஷா ராஜேஷ், பியர் லோட்டி போன்றோரின் பயணம் சார்ந்த நூல்கள் இலக்கியமாக மலர்ந்தவை.
1988 முதல் 2018 வரையிலான காலப் பகுதியில் தமிழில் ஏறத்தாழ 900 பயண நூல்கள் வெளிவந்துள்ளன. பயண இலக்கியங்களின் வழியாக ஓர் இடத்தின் புவியியல் அமைப்பு, மக்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம், நம்பிக்கைகள், விழாக்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அவை நமக்குப் பயண வழிகாட்டிகளாகவும் விளங்கும்.
‘பயண இலக்கியங்கள்’ என்பன, ஊர் சுற்றியதை விவரிக்கும் புத்தகங்கள் அல்ல. ஊர்சுற்றியபோது, மனத்துக்குள் பதிந்த நிலக்காட்சிகள், விலங்குகள், பறவைகள், நமக்கும் பிறருக்கும் ஏற்பட்ட நிகழ்வுகள், பாதைகள், ஊர்திகள், ஒலிகள், ஒளிகள், மனித முக அசைவுகள், பேச்சுகள், சைகைகள், தடுமாற்றங்கள், உடைகள், கடைகள், அலங்காரங்கள் என அனைத்தையும் மீண்டும் நினைவூட்டி, மனம் அசைபோட்டு அசைபோட்டு மனத்துக்குள் விரியும் வண்ணப் படங்களைச் சொற்களாக மாற்றி, பிறருக்குச் சொல்லத் துடிக்கும் முயற்சிகள்தான் பயண இலக்கியங்கள்.
வெறும் பயணிகளால் பயண இலக்கியத்தைப் படைக்கவே முடியாது. திறந்த மனத்தோடு இயற்கையையும் செயற்கையையும் பார்த்து, அவற்றைச் சொற்கலாக மாற்றும் எழுத்தாற்றல் மிக்க பயணிகளாலேயே அதைச் சாதிக்க இயலும்.
பொதுவாகவே, வெகுஜன வாசகர்களால் பயண இலக்கியங்களை விரும்பிப் படிப்பர். அதற்குக் காரணமாக, தங்களின் கால்படாத நிலங்களில் கால்பதித்துத் திரும்பியவர்களின் அக அனுபவங்களை எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சிதான்.
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் பயணத்தின் வாசனை நிறைந்திருக்கும். குறிப்பாக, அவரின் பயண வாசனை அடர்த்தியாக அடைத்து வைக்கப்பட்ட நூலாக ‘தேசாந்திரி’ திகழ்கிறது.
இந்தத் ‘தேசாந்திரி’ நூலுக்கு இரண்டு சிறப்புகள் உள்ளன. ஒன்று, கட்டற்ற பயணத்தின் வழியாகத் தான் கண்டடைந்த அனுபவங்களை எழுத்தாளர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். தன்னுடைய ‘கட்டற்ற பயணம்’ குறித்து எழுத்தாளரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“ மரத்தைத் தவிர மேல் வீழ்த்தும் நிழலைப் போல , வீட்டின் கட்டுப்பாடுகளை என் காலடியில் வீழ்த்திவிட்டு வெளியேறிச் சென்றுவிட முடியும் என்று நம்பினேன் . உறக்கத்தின்போதே ஒரு பட்டாம்பூச்சி என்னைத் தன் கால்களால் தூக்கிக்கொண்டு போய் ஏதாவது ஒரு மலையின் மீதோ , பாலைவனத்தின் மீதோ போட்டுவிடாதா என்று கனவு காணத் துவங்கினேன் . நடுநிலைப் பள்ளி முடிப்பதற்குள் உலகின் கதவுகள் திறந்து கொண்டுவிட்டன .”
இரண்டு, இந்தப் புத்தகத்தில் உள்ள 41 கட்டுரைகளும் வெகுஜன இதழில் வெளிவந்திருந்தாலும்கூட எழுத்தாளர் அந்த வாசகருக்காகத் தன்னுடைய எழுத்துநடையை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருவகையில் வெகுஜன வாசகருக்கும் நவீன எழுத்து நடையை அறிமுகம் செய்யும் வகையில்தான் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
சான்றுகள் –
“உப்பு, தண்ணீரில் கரைந்துபோவது போல சாரநாத்தின் பழைமையில் என்னைக் கரையவிட்டிருந்தேன். உடம்பில் வெய்யில் ஏறுவதுபோல காலத்தின் சாறு என் மீது படர்ந்துகொண்டு இருந்தது.”
“மழையை வேடிக்கை பார்க்கத் துவங்கியதிலிருந்து மனம் மெல்ல தன் எடையை இழப்பதையும் ஈரம் உறிஞ்சும் காகிதத்தைப் போல நான் மழையை உறிஞ்சிக்கொண்டு இருப்பது போலவும் தோன்றியது.”
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துகளில் பொதுவாகவே செடி, மண், மரம் என இயற்கையியல் சார்ந்த அனைத்தும் இடம்பெற்றுவிடும். இயற்கையைவிட்டு விலகாத எழுத்து அவருடையது என்று துணிந்து கூறலாம். இயற்கையை நேசிக்கத் தெரிந்தவரே மனிதனுக்கு அறிவுரையும் அறவுரையும் கூறத் தகுதியுடையவர்.
அந்த வகையில் இந்தத் ‘தேசாந்திரி’ புத்தகத்தின் வழியாக எண்ணற்ற அறவுரைகளைத் தன்னுடைய நேசமான சொற்களால் நமக்கு அளித்துள்ளார். அவற்றுள் மூன்றினை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
“அலங்காரத்துக்காக ஒரு மனிதனை வளர்ப்பது என்று முடிவுசெய்தால் அது எவ்வளவு அபத்தமோ, அத்தகையதுதான் செடிகளை வெறும் அலங்காரத்துக்காக மட்டுமே வளர்ப்பதும்.”
“பறவைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. எந்தப் பறவையும் தன் தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைத்துக்கொள்ளதில்லை. அலைந்து திரிய அலுத்துக்கொள்வதும் இல்லை. பறவை, வாழ்வை ஒவ்வொரு நாளும் புதிதாகச் சந்திக்கிறது.”
“ஒரு காகிதம் கசக்கி எறியப்படும்போது எங்கோ ஒரு விருட்சத்தின் ஒரு கிளை முறிக்கப்பட்டுதான் அது உருவாகி இருக்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. உலகில் பயன்படுத்தப்பட்ட காகிதங்களைவிடவும் கசக்கி எறியப்பட்டு வீணடிக்கப்பட்ட காதிதங்களின் அளவு அதிகமானது.”
இன்றைய இந்தியாவின் பாதுகாப்பற்ற தன்மையை மிகச் சரியாக உணர்த்தியுள்ளார் எழுத்தாளர். அதைப் படித்தவுடன், காந்தியடிகள் கண்ட ‘ராமராஜ்யம்’ இனி இந்தியாவில் நிகழ சாத்தியம் இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
“இன்று எவரும் பௌர்ணமி இரவுதானே என்று பின்னிரவில் கடற்கரைக்குப் போய் உலவ முடியாது. வானவில் தெரிகிறதே என்று பெயர் தெரியாத ரயில் நிலையத்தில் இறங்கி நடமாட முடியாது. கோவில்தானே என்று பிரகாரங்களில் படுத்து உறங்க முடியாது. சந்தேகத்தின் நிழல் விழாத இடங்களை இன்று இந்தியாவில் எங்குமே இல்லை. இலவசமாக உணவு அளிக்கப்படும் இடங்களில்கூட சாப்பிடுபவர்களின் முகங்களை உற்று நோக்கிய பிறகுதான் உணவளிக்கிறார்கள்.”
தமிழருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியருக்குமே வரலாற்றின் மீது துளியும் அக்கறை இருப்பதில்லை.
“ஊதியத்துக்காக இந்தியாவுக்குப் பணிபுரிய வந்து வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு போராட்டங்களில் இறந்துபோன வெள்ளைக்காரர்களின் சமாதிகளைப் பாதுகாப்பதற்கு இன்றும்கூட பிரிட்டிஷ் அரசு பண உதவி செய்கிறது. முறையாக அந்தக் கல்லறைத் தோட்டங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்தியச் சுதந்திரத்துக்காகப் போராடி ரத்த பலியானவர்களுள் சிலரைத் தவிர, மற்றவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்ற தகவல்களை அறிந்துகொள்வதுகூட எளிதானதாக இல்லை.”
நமக்காக, நம் நாட்டுக்காக உடல், பொருள், ஆவியை மலர்ந்த முகத்தோடு கையளித்தவர்களை நாம் புறக்கணித்துவிட்டோம். இத்தகைய புறக்கணிப்பே இனிவரும் தலைமுறையினர் நமக்காகவும் நாட்டுக்காகவும் எதையும் தன்னலமின்றிச் செய்ய வாய்ப்பில்லாமல் போகக்கூடும்.
இந்தத் ‘தேசாந்திரி’ நூலின் வழியாக, இந்த எழுத்தாளரின் கால்பதிந்த நிலங்களின் நாம் நம் மனத்தை நடக்கவிட்டு மகிழலாம். நம்மால் ஏன் இவரைப் போலவே பயணம் செய்ய இயலவில்லை? இந்த எழுத்தாளருக்குக் கிடைத்த இத்தகைய பயணம் ஏன் பிறருக்கு அமையவில்லை? ஏன் மிகச் சிலர் மட்டுமே கட்டற்ற பயணத்தை மேற்கொள்கிறார்கள்? ‘பயணம் செய்ய வேண்டும்’ என்பதற்காகவே பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம்தான் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த எழுத்தாளர் மூன்றே வரிகளில் விளக்கமளித்துள்ளார்.
“வாழ்க்கைப் போராட்டம் மனிதனைக் கூண்டுப் புலிகளைப் போல அடக்கி வைத்திருக்கிறது. இல்லாவிட்டால், ஒவ்வொரு மனிதனின் பலமும் விருப்பமும் ஏதேதோ சாதனைகளை உருவாக்கியிருக்கக் கூடும்.”
இந்தத் ‘தேசாந்திரி’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் பொழுதுபோக்குக்காகப் பயணப்பட்டவரின் அனுபவக்குறிப்புகளோ, வாழ வழியின்றிப் பயணப்பட்டவரின் நினைவுப் பதிவுகளோ அல்ல; மானுட வாழ்வின் உண்மை முகத்தைத் தன்னுடைய திறந்த மனத்தால் எதிர்கொள்ள விரும்பிய தனிமனிதரின் பேரன்பிதயக்குறிப்புகளே!.
.
– – –
May 1, 2021
சத்யஜித்ரேயின் நூற்றாண்டு
இயக்குநர் சத்யஜித்ரேயின் நூற்றாண்டு இன்று துவங்குகிறது. அவரது திரைப்படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். பதேர் பாஞ்சாலி எனக்கு மிக விருப்பமான படம். அந்தப் படம் குறித்து விரிவான புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை வாசித்துப் பாராட்டிய பாலுமகேந்திரா அது போல ஒரு திரைப்படத்திற்கு விரிவான நூல் வெளியானதில்லை என்று பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

பதேர் பாஞ்சாலியை தற்போது வண்ணமயமாக்கி வருகிறார்கள். அதன் சில காட்சிகளை முன்னோட்டமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. குறிப்பாக அபுவும் துர்காவும் ரயிலைக் காணச் செல்லும் காட்சி வண்ணத்தில் நம்மை மயக்குகிறது. இப்படத்தில் ரவிசங்கரின் இசை உன்னதமானது. பதேர் பாஞ்சாலியின் இசைக்கோர்வைகளைத் தனியே வெளியிட்டிருக்கிறார்கள். அது இணையற்ற திரையிசை வடிவமாகும்
சத்யஜித்ரேயின் முக்கியப் படங்களை யாவையும் 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காகவே சமீபத்தில் அவரது The Apu Trilogy தொகுப்பினை பார்த்தேன். எவ்வளவு நுண்தகவல்கள். கலைநேர்த்தி. ஒரு காட்சியினைக் கூடத் தேவையில்லை என நீக்கிவிட முடியாது.
சத்யஜித்ரே ஒரு ஓவியர் என்பதால் நுணுக்கமான விவரிப்பு மற்றும் துல்லியமான வெளிப்பாட்டினை அவரது படங்களில் காணமுடிகிறது. காசியை இவரைப் போலக் காட்டியவர் எவருமில்லை. எழுத்தாளராகவும் சிறந்த கதைகளை எழுதியிருக்கிறார். முக்கியமான இலக்கிய நாவல்களைப் படமாக்கியிருக்கிறார். வங்கத்தின் கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் யாவும் அவரது படங்களின் வழியே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாகக் கல்கத்தா நகரின் வளர்ச்சியை அவரது படங்களின் வழியாகவே நம்மால் தொகுக்கமுடியும். பெங்காலிகளின் மனநிலையை, ரசனையை, அரசியலை மிகத் துல்லியமாகத் தனது படங்களை வெளிப்படுத்தியவர். அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மறக்கமுடியாதவர்கள். சாருலதாவின் மாதவி முகர்ஜியை யாரால் மறக்கமுடியும் , அபு சன்சாரின் ஷர்மிளா டாகுரின் வசீகரத்திற்கு ஈடு இணை ஏது.
சத்யஜித் ரேயினைப் பற்றி ஒரு ஆவணப்படத்தினை ஷியாம் பெனகல் உருவாக்கியிருக்கிறார். பிலிம் டிவிசன் சார்பில் உருவாக்கபட்ட 14 ரீல் கொண்ட விரிவான ஆவணப்படமது. இணையத்தில் காணக்கிடைக்கிறது
நேற்று அந்த ஆவணப்படத்தினைப் பார்த்தேன். சத்யஜித்ரேயின் படப்பிடிப்பு ஒன்றிலிருந்து அந்த ஆவணப்படம் துவங்குகிறது. ரேயின் பன்முகத்திறமை, தனித்துவத்தை, நிகரற்ற கலை ஆளுமையைப் படம் சிறப்பாக விவரிக்கிறது. படத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியது. படப்பிடிப்பில் சகல வேலைகளையும் சத்யஜித்ரே தான் செய்கிறார். அவரே கேமிராவை இயக்குகிறார். அவரே நடிகருக்கு ஒப்பனை செய்துவிடுகிறார்.
அவரே ப்யானோ இசைக்கிறார். அவரே பிரேமின் எந்த இடத்தின் எந்தப் பொருளை வைக்க வேண்டும் என்று கலை இயக்கம் செய்கிறார். அவரே நடித்துக் காட்டுகிறார். அவரே எடிட் செய்கிறார். அத்தனையிலும் ரசித்து ஈடுபடுகிறார். நூறு சதவீத ஈடுபாடு, அர்ப்பணிப்பு. நேர்த்தியோடு படத்தை உருவாக்குகிறார். இத்தனைக்கும் நடுவில் அவரது உதட்டில் பைப் புகைந்து கொண்டேயிருக்கிறார். புகை நடுவில் தான் அவரது முகம் தெரிகிறது.

அவரது ஆரம்பக் காலப்படங்களில் மட்டுமே சுபத்ரோ மித்ரா போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர் படமாக்கியிருக்கிறார். சாருலதாவிற்குப் பின்பு கேமிராவை சத்யஜித்ரேயே கையாளத் துவங்கினார். ஒளிப்பதிவாளரின் வேலை ஒளியமைப்புச் செய்வது, ரேயிற்கு உதவி செய்வது மட்டுமே. காட்சிகளை அவர் துல்லியமாகத் திட்டமிடுகிறார். நடிகர்களின் முகபாவங்களை. உடல்மொழிகளைச் சரியாக அறிந்து வைத்திருக்கிறார். மிகை உணர்ச்சிகளுக்கு இடமே கிடையாது. தனக்கான சினிமா மொழியை அவர் எவ்வாறு உருவாகிக் கொண்டார் என்பதை ஷியாம் பெனகலுடன் உரையாடும் போது தெரிவிக்கிறார். இதை Our Films and Their films என்ற நூலிலும் விளக்கியிருக்கிறார்
சத்யஜித்ரேயின் தாத்தா, உபேந்திரகிஷோர் ரே, ஒரு எழுத்தாளர், ஒவியர் குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதியவர் சொந்தமாக ஒரு அச்சகம் வைத்திருந்தார். பிரம்ம சமாஜதத்தின் தலைவராக இருந்தார். இந்த அச்சகம் ரேயின் நினைவில் அழியாத காட்சியாகப் பதிந்துள்ளது. ஆகவே தான் அவரது படங்களிலும் அச்சகப்பணி மற்றும் பத்திரிக்கைகள் வெளியிடுவது. அச்சகத்தில் நடைபெறும் பல்வேறு வேலைகள் குறித்த காட்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாகச் சாருலதாவைக் காணும் போது அதில் வரும் அச்சகம் அவரது பால்ய நினைவின் வெளிப்பாடாகவே காணப்படுகிறது.
சத்யஜித் ரேயிற்கு மூன்று வயதாக இருந்தபோது அவரது தந்தை சுகுமார் இறந்தார், கல்கத்தாவின் பாலிகுங் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரே பயின்றார் பின்பு கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. படித்தார். ஓவியம் மற்றும் இசையின் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் தாகூரின் சாந்தி நிகேதனிற்குச் சென்று ஒவியம் கற்றுக் கொண்டார். மேற்கத்திய மற்றும் இந்திய ஒவியமரபினை ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இசையிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றார். சாந்தி நிகேதன் அவரது ஆளுமையை மாற்றியது,
விளம்பர நிறுவனத்தில் பணியாற்றத்துவங்கி பத்திரிக்கை ஒவியம் மற்றும் அட்டை வடிவமைப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டினார் ரே. அவர் வடிவமைத்த நூல்களின் அட்டைகளைப் படத்தில் காட்டுகிறார்கள். மிக அழகான வடிவமைப்பு. ஐரோப்பிய பாணியில் அவர் அட்டைகளை உருவாக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி எழுத்துருக்களையும் அவர் வடிவமைத்திருக்கிறார்

படத்தின் ஒரு அங்கத்தில் ஷியாம் பெனகல் அவர் பதேர் பாஞ்சாலி பற்றிக் கேட்டபோது அதில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். சிரமங்களைப் பற்றிப் புலம்பாமல் படம் முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. நிறையப் பிரச்சனைகள். தடைகள் என்று எளிதாகக் கடந்து போகிறார். அந்தப் படத்திற்குத் தான் விபூதி பூஷண் நாவலில் வரும் துல்லியமான விவரிப்பினை எப்படிப் பயன்படுத்திக் கொண்டேன். கதாபாத்திரங்களின் உரையாடலில் துவங்கி உடைகள் வரை நாவலுக்கு நூறு சதவீதம் தான் உண்மையாக நடந்து கொண்டதைக் கூறுகிறார். விபூதி பூஷணின் சொந்த வாழ்க்கையின் நினைவுகளிலிருந்தே அவரது பதேர் பாஞ்சாலி நாவல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலும் இந்த நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. குறைவானவர்களே அதை வாசித்திருக்கிறார். பதேர்பாஞ்சாலி படத்தின் திரைக்கதை தனி நூலாக வெளியாகியுள்ளது. இரண்டினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரேயின் தனித்துவத்தையும் சிறப்பினையும் அறிந்து கொள்ள முடியும்
திரைப்பட உலகம் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது. அதற்கு மாற்றுசினிமாவை உருவாக்க ரே போராடிய விதத்தைப் படத்தில் குறிப்பிடுகிறார். குறிப்பாக அபராஜிதோ படம் ஓடவில்லை. ஆகவே இனி எது போன்ற படங்களை எடுப்பது என்ற குழப்பம் அவருக்குள் உருவாகிறது. அதை வெளிப்படையாகச் சொல்கிறார்.

சர்வதேச திரைப்படங்கள், சதுரங்கம் மற்றும் மேற்கத்தியப் பாரம்பரிய இசை ,வை மூன்றுமே அவரது பொழுதுபோக்குகள். மேற்கத்திய இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரே சிறப்பாக ப்யானோ வாசிக்கக் கூடியவர். தனது படத்திற்கான இசைக்குறிப்புகளை அவரே எழுதுகிறார். அவரே படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். குறிப்பாக அவர் Shakespeare Wallah படத்திற்கு ஆகச்சிறந்த இசையை உருவாக்கியிருக்கிறார்.
ஷியாம் பெனகலுடன் ரே உரையாடும் அவரது அறை முழுவதும் புத்தகங்கள் பெரிய ப்யானோ, ஒரு பக்கம் அவரது படத்தின் திரைக்கதைபிரதிகள் கொண்ட கோப்புகள். வார மாத இதழ்கள், இசைத்தட்டுகள். ஓவியங்கள். சத்யஜித்ரே மிக உயரமானவர். நாற்காலியில் அமர்ந்துள்ள விதமும் பேசும் முறையும் அலாதியாக இருக்கிறது.
தான் திரைப்படத்தின் வடிவம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. படத்தின் கதை மற்றும் அதற்குப் பொருத்தமான நடிகர்கள். மிகையற்ற் நடிப்பு. கவித்துவமான கலை இயக்கம் நேர்த்தியான இசை இவற்றைத் தான் அதிகம் நம்புகிறேன். ஒரு சில படங்களில் கதை தான் அதன் இறுதி வடிவத்தை முடிவு செய்திருக்கிறது. சிறார்களுக்காகத் தான் இயக்கிய படங்களிலும் கூடப் பெரியவர்கள் தான் முக்கியக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்தை மீள் உருவாக்கம் செய்வதில் தான் அதிகம் கவனம் கொண்டவன். ஆகவே தான் தாகூரின் கதையைத் தேர்வு செய்து படமாக்கினேன். அந்தக் கதைகளின் வழியே தாகூரின் காலமும் நினைவுகளும் மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றன என்கிறார் சத்யஜித்ரே

சர்வதேச திரைப்பட உலகில் தனிக்கவனமும் நிறைய விருதுகளும் பெற்றதன் காரணமாக அவரது கவனமும் ஈடுபாடும் தீவிரமடைந்தது 1960களில் இயக்கிய தேவி மிக முக்கியமான திரைப்படம். தன் மருமகளை தெய்வமாக எண்ணி மாமனார் வழிபடும் காட்சியினைக் குறித்து ஷியாம் பெனகல் கேட்கும் போது இந்திய சமூகம் பெண்களை இப்படித் தெய்வமாக அல்லது அடிமைகளாகத் தானே நடத்தியது என்று சொல்லும் சத்யஜித்ரே இந்திய பெண்ணின் உண்மையான மனக்குழப்பத்தை, போராட்டத்தைத் தான் முன்னெடுக்க விரும்பியதாகக் கூறுகிறார்
1964 ஆம் ஆண்டில், ரே இயக்கிய சாருலதா அவரது காவியம் என்றே சொல்வேன். ஒளிப்பதிவில் இந்தப் படம் புதிய அழகியலை உருவாக்கியது. ரேயிற்கு மிகவும் விருப்பமான படங்களில் இதுவும் ஒன்று. தாகூரின் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது இப்படம் 15வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான பரிசினை பெற்றுத் தந்தது.
ரே 29 முழுநீள திரைப்படங்களை இயக்கியுள்ளார் அவரது குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களும் சேர்த்தால் முப்பத்தியாறு படங்கள். இதில் ஆறு திரைக்கதைகள் மட்டுமே அவருடையது. மற்றவை வங்க இலக்கியத்தின் முக்கியமான நாவல்கள். சிறுகதைகளைத் தழுவியே படங்களை உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் இந்திய இலக்கியத்தினைச் சிறப்பான திரைப்படமாக உருவாக்கியதில் ரே முன்னோடியாவார்.

ஒரு கட்டுரையில் ரே தனது ஒளிப்பதிவு பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்
“Subroto, my cameraman, has evolved, elaborated and perfected a system of diffused lighting whereby natural daylight can be simulated to a remarkable degree. This results in a photographic style which is truthful, unobtrusive and modern. I have no doubt that for films in the realistic genre, this is a most admirable system.”

சத்யஜித்ரேயின் படங்களைப் பற்றி மட்டுமின்றி அவரது உலகச் சினிமா குறித்த பார்வைகள். இந்தியச் சமூகம் பற்றிய அவரது மதிப்பீடு. சமகால இந்திய சினிமாவின் போக்குகள். அவரது கலைவெளிப்பாட்டு முறைகள். இசை குறித்த புரிதல் என ரேயின் பன்முகத்தன்மையை ஷியாம்பெனகல் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்
சத்யஜித்ரேயின் நூற்றாண்டினை முன்னிட்டு எனது பதேர்பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் நூல் புதிய கட்டுரைகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகிறது. தேசாந்தி பதிப்பகம் இதனைச் சிறப்புப் பதிப்பாகக் கொண்டு வருகிறது
ஆவணப்படத்தின் இணைப்பு
••
திருமண நாடகம்
Marriage Italian Style 1964ம் ஆண்டு வெளியான இத்தாலியத் திரைப்படமாகும்

விட்டோரியோ டி சிகா இயக்கிய இப்படத்தில் சோபியா லோரன் மற்றும், மார்செல்லோ மாஸ்ட்ரோயானி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். டிசிகாவின் புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் படம் பெற்ற கவனத்தையும் புகழையும் அவரது பிறபடங்கள் பெறவில்லை. ஆனால் டிசிகாவை ஒரு மாஸ்டராகக் கொண்டாடச் செய்யும் பல படங்கள் இருக்கின்றன. அதில் Marriage Italian Style முக்கியமானது.
படத்தின் துவக்காட்சியில் பேக்கரியில் தடுமாறி விழுந்துவிட்ட பிலுமேனாவை ஒரு காரில் கொண்டு வருகிறார்கள். அவளது குடியிருப்பே பதற்றமடைகிறது. மருத்துவரை அழைத்து வருவதற்காக ஒரு ஆள் ஓடுகிறான். இன்னொரு பக்கம் அவளை வீட்டிற்குள் தூக்கி வந்து படுக்க வைக்கிறார்கள். மரணப்படுக்கையில் கிடக்கிறாள் என்ற செய்தி கேட்டு அண்டை அயலார் வருத்தமடைகிறார்கள்.
மருத்துவரை அழைக்கப் போனவர் பிலுமேனாவின் காதலனும் பேக்கரி முதலாளியுமான டொமினிகோவை தேடிச் சென்று விஷயத்தைச் சொல்கிறான். அவரோ தனது கடை மற்றும் குடியிருப்பினை விற்றுவிட்டு நாட்டைவிட்டே போகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பிலுமேனாவை கடைசியாக ஒருமுறை காணச் செல்கிறார். அவரைக் கண்டவுடன் பாதிரியை அழைத்துவரும்படி சொல்கிறாள் பிலுமேனா. பாவமன்னிப்பு கேட்கப் பாதிரியை வரச்சொல்கிறாள் போலும் என நினைத்து டொமினிகோ பாதிரியை அவசரமாக வரவழைக்கிறார்.
அவளோ தான் இறப்பதற்கு முன்பு அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். சாகப்போகும் பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்றும்படி பாதிரியாரும் சொல்கிறார். வேறுவழியில்லாமல் அவளது படுக்கையின் முன்பாகவே திருமணம் நடக்கிறது. அவர்கள் கணவன் மனைவியாக மாறுகிறார்கள். பாதிரியார் தம்பதிகளை வாழ்த்துகிறார்.
இன்னும் சில மணிநேரத்தில் பிலுமேனா இறந்துவிடுவாள் எனக் காத்திருக்கிறார் டொமினிகோ. ஆனால் இந்தத் திருமண ஏற்பாடு ஒரு நாடகம். அவள் பொய்யாக நடித்து ஏமாற்றித் தன்னைத் திருமணம் செய்து கொண்டுவிட்டாள் என்பதை அறிந்து கொள்கிறார் டொமினிகோ. எதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்தினாள். அவர்களின் காதல் உறவு எப்படித் துவங்கியது என்று பின்னோக்கி கதை செல்கிறது
மரணப்படுக்கையில் கிடப்பது போலப் பிலுமேனா நடிக்கும் காட்சிகள் அபாரம். உண்மை தெரிய வந்தவுடன் அவள் ஸ்டைலாகக் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து தனக்கு வேண்டியதை எடுத்துச் சாப்பிடும் போது டொமினிகோ கோபத்தில் கத்துகிறார். அவள் தான் நினைத்த விஷயத்தைச் சாதித்துவிட்ட சந்தோஷத்தில் இனி கடவுளே வந்தாலும் நம் திருமணத்தைப் பிரிக்கமுடியாது என்கிறாள்.
••
இரண்டாம் உலகப்போரின் போது ஒரு நாள் ரோமில் விமானங்களின் குண்டுவீச்சு நடைபெறுகிறது. அப்போது ஒரு வேசையர் விடுதியிலிருந்த பிலுமேனா பயந்து போய் ஒளிந்து கொள்கிறாள். பிலுமேனாவின் அழகில் மயங்கி அவளுக்கு உதவி செய்ய முன்வருகிறான் டொமினிகோ. பணக்கார இளைஞனாக அவன் ஒரு உல்லாசி.

இதன்பிறகு தற்செயலாக அவளை ஒரு பேருந்தில் காணுகிறான். தன்னோடு காரில் அழைத்துக் கொண்டு வருகிறான். அவளைக் காதலிப்பதாகப் பொய் சொல்லுகிறான். அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறான். குதிரைப்பந்தயம் நடக்கும் மைதானத்திற்கு அவளை அழைத்துச் செல்லும் காட்சி படத்தின் தனிச்சிறப்பானது. யாருமற்ற மைதானத்தில் அவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். தனது படுக்கை அறையைக் குதிரைப் பந்தய மைதானத்தில் உருவாக்க வேண்டும் என்கிறான் டொமினிகோ.
ஒருநாள் தன் வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போய் வயதான தாயிற்குப் பணிவிடைகள் செய்யும் வேலைக்காரியாக ஏற்பாடு செய்கிறான்
அவன் தன்னைக் காதலிக்கவில்லை. தனது உடலை மட்டுமே விரும்புகிறான் என்பதைப் பிலுமேனா நன்றாக உணருகிறாள்.அவன் மீது கொண்டிருந்த தீவிரமான காதலால் அவன் சொல்லும் படியெல்லாம் நடக்கிறாள். புதிது புதிதாக இளம்பெண்களைத் தேடி அலையும் டொமினிகோவிற்குப் பிலுமேனா சலித்துப் போய்விடுகிறாள். அவளைத் துரத்திவிட முயல்கிறான். ஆனால் பிலுமேனா முழுமையாக அவனைக் காதலிக்கிறாள்.
அவளுக்கு வாடகைக்கு ஒரு தங்குமிடத்தைக் கொடுத்து தனது பேக்கரியை கவனித்துக் கொள்ளச் செய்கிறான் டொமினிகோ. காரணம் அவன் அடிக்கடி வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்வதே.
பேக்கரியை கவனித்துக் கொண்டு கஷ்டப்படுகிறாள். காலம் மாறுகிறது. தனக்குத் தேவையான போதெல்லாம் அவளைத் தேடிவந்து இன்பம் அனுபவிக்கிறான் டொமினிகோ. இந்நிலையில் அவனது கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள இளம்பெண்ணைக் காதலிப்பதாக நாடகம் ஆடி அவளுடன் அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறான். அதைத் தடுக்கும் விதமாகவே அவள் இந்தத் திருமண நாடகத்தை ஏற்பாடு செய்கிறாள்.
முறையாகப் பதிவு செய்யாத திருமணம் ஆகவே இது செல்லாது எனத் தனது வழக்கறிஞர் மூலம் வாதாடுகிறான் டொமினிகோ. இப்போது அவள் ஒரு உண்மையைச் சொல்கிறாள். தனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை அவனுக்குப் பிறந்தது. அந்தப் பிள்ளைகளுக்குத் தந்தை பெயர் வேண்டும் என்பதற்காகவே அவனைத் திருமணம் செய்து கொண்டேன் என்கிறாள்.
யார் தனது மகன் எனக் கேட்கிறான் டொமினிகோ. அவள் சொல்ல மறுக்கிறாள். தன் மகனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறான் டொமினிகோ. இதற்காக அவள் பிலுமேனாவினை தேடிச்சென்று சந்திக்கும் காட்சி அபாரம். அவள் உன் பிள்ளையை மட்டும் நல்லபடியாகக் கவனிக்கப் பார்க்கிறாய். எனக்கு மூன்று பிள்ளைகளும் ஒன்று தான் என்கிறாள். மூவரில் யார் தனது பையன் எனக் குழம்பிப் போகிறான். இதற்கான விடை எப்படிக் கிடைக்கிறது என்பதே மீதப்படம்

ஒரு பெண் பணம் அந்தஸ்து வசதிகள் எல்லாவற்றையும் விடத் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதியே தனது வாழ்க்கையை நடத்துகிறாள். திட்டமிடுகிறாள். காதலிக்கும் போது ஆசைநாயகியாகத் தெரிந்த பிலுமேனா இப்போது தொல்லை தரும் ராட்சசியாகக் காட்சிதருகிறாள். டொமினிகோ எளிதாக அவளை ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவள் எதிராகச் செயல்படத் துவங்கியதும் கொந்தளிப்பு அடைகிறான். முடிவில் தன் தவறுகளை, இயலாமையை ஒத்துக் கொள்கிறான்.
ஒரு காட்சியில் டொமினிகோவின் முன்னால் அவன் கொடுத்த பணத்தை வீசி எறிந்து பிலுமேனா சொல்லும் பதில் அற்புதமானது.
இது போலவே தனது மூன்று பிள்ளைகளையும் அவள் சந்தித்து உரையாடும் காட்சியும் அதில் வெளிப்படும் அவளது தயக்கம், குழப்பம். ஆசை. அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
டிசிகா கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குகிறார். காத்திரமான பெண் கதாபாத்திரங்களே அவரது தனித்தன்மை. அவரது படங்களில் தொடர்ந்து திருமணமும் அதன் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளும் இடம்பெறுகின்றன. Roof படத்திலும் இது போல இளம் தம்பதிகள் வீடு தேடி அலையும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
படத்தில் வரும் துணை கதாபாத்திரங்கள் மறக்கமுடியாதவர்கள். குறிப்பாகப் பிலுமேனாவின் வேலைக்காரி லூசியா. அவளும் இணைந்தே திருமண நாடகத்தை நடத்துகிறாள். முதன்முறையாக அவள் அறிமுகமாகும் காட்சி துவங்கி கடைசிக் காட்சிவரை அவரின் பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது.
கடைசிக்காட்சியில் பிலுமேனாவின் அழுகிறாள். அந்த அழுகை சந்தோஷத்தின் வெளிப்பாடு. தனக்கு அப்படி அழுவதற்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறாள். தன் வாழ்க்கையினை மட்டுமின்றித் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அவள் சரிவர அமைத்துக் கொண்டதன் அடையாளமாகவே அந்த அழுகை வெளிப்படுகிறது. படத்தில் சோபியா லாரென் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். எட்வர்டோ டி பிலிப்போவின் நாடகத்தினைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது

விருந்திற்கு அழைத்துச் செல்வதற்கு உகந்த ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என டொமினிகோ சொல்வதும் அதற்காக அவனைத் தனது இருப்பிடத்திற்குப் பிலுமேனா அழைத்துப் போவதும் அவனே ஒரு உடையைத் தேர்வு செய்து அணிய வைத்து அவளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போவதும் சிறப்பான காட்சி. அதில் அவனது மனைவியைப் போலவே பிலுமேனா நடந்து கொள்கிறாள்.
திருமணம் செய்து கொள்ளாமலே அவனது மனைவிபோல இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட பிலுமேனா இனியும் பொறுக்கமுடியாது என்ற நிலையில் தான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறாள். அடங்கிப் போகிறவர்கள் ஒரு நாள் கிளர்ந்து எழும்போது எவராலும் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாது.
டொமினிகோவின் அம்மா சில காட்சிகளே வந்த போதும் தனித்துவமானவராக உருவாக்கப்பட்டிருக்கிறார். நினைவு அழிந்த உலகில் வாழும் நோயாளி அவர். தாதி போல உடனிருந்து அவரைக் கவனித்துக் கொள்ளப் பிலுமேனாவை ஏற்பாடு செய்கிறான். அம்மா இறந்த துக்கம் கேட்க வந்தவர்களிடம் பிலுமேனாவை அவன் மறைப்பதும் அவள் வெளியே வரவே கூடாது என்று உத்தரவிடுவதும் அவளை மோசமாகக் காயப்படுத்துகிறது.
பிலுமேனாவின் கடந்தகாலம் அவனை உறுத்துகிறது. ஆனால் வசீகரமான அவளது உடலும் அவள் தரும் சுகமும் அவளைத் தேடிப் போக வைக்கிறது. இந்தப் பலவீனமான மனப்போக்கினை டொமினிகோ அழகாக வெளிப்படுத்துகிறார்.
டிசிகாவின் திரைப்படங்கள் சமகாலப் பிரச்சனைகளைத் தொட்டுப் பேசியிருப்பதுடன் சிறந்த கலைப்படைப்பாகவும் விளங்குகின்றன. அவர் தேர்வு செய்யும் கதையும் நடிகர்களும் கதையைச் சிறப்பாகப் படமாக்கும் விதமும் காலம் தாண்டியும் அவரைக் கொண்டாடச் செய்கிறது
••
காலம் சொல்லும் பெயர்கள்
சென்னையும் நானும் காணொளித் தொடரின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது. சென்னையின் இருமுக்கிய கல்விநிலையங்களைப் பற்றிய நினைவுகளும் வரலாற்றுச் செய்திகளும் கொண்ட பகுதியிது.
காலம் சொல்லும் பெயர்கள்
April 30, 2021
புனைவெழுத்தின் வரைபடம்.
‘விழித்திருப்பவனின் இரவு – வாசிப்பனுபவம்
முனைவர் ப. சரவணன், மதுரை
அக இருளிலிருந்து முளைத்து, தலைநீட்டி வளர்ந்து, புறத்தில் பல வண்ணங்களில் ஒளிர்ந்து, மலர்வதுதானே படைப்பு! உலக அளவில் மிகவும் கவனிக்கத்தக்க படைப்பாளர்களுள் 28 பேரின் அகவாழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் ‘விழித்திருப்பவனின் இரவு’.

ஓர் எழுத்தாளரின் படைப்பைப் பற்றி முழுதும் அறிய வேண்டுமென்றால், நாம் அந்தப் படைப்பாளரின் அகவாழ்வை முழுதும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அகவாழ்வை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. காரணம், எல்லாப் படைப்பாளர்களும் தம்மைத் ‘திறந்த புத்தகமாக’ வைத்துக்கொள்வதில்லை.
இந்தப் புத்தகத்தில் படைப்பாளர்களின் படைப்புகளைப் பற்றி விரிவாகப் பேசப்படவில்லை. ஆனால், அந்தப் படைப்பாளர்களின் மற்றொரு முகத்தைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் மற்றொரு ஆளுமையைத் தெரிவிப்பதன் வழியாகவே அவர்களின் படைப்புகளின் தன்மை உணர்த்தப்பட்டுள்ளது.
படைப்பாளர்களின் படைப்புகளைப் பற்றிப் பேசாமல், அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு கூர்முனைகளைப் பற்றிக் குறிப்பிட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்? எழுத்தாளரின் வாழ்க்கையிலிருந்து அவரின் படைப்புக்கும் அவரின் படைப்பிலிருந்து அவரின் வாழ்க்கைக்கும் என வாசிப்பு சார்ந்த ஓர் ஊடாட்டத்தை நிகழ்த்தத்தான்.
ஒவ்வொரு படைப்பாளரின் பிறிதொரு ஆளுமையைப் பற்றி விளக்குவதன் வழியாக அந்தப் படைப்பாளரை ஒவ்வொரு வாசகரும் மனத்தளவில் மிகவும் நெருங்க வாய்ப்புள்ளது.
விரிவான அனுபவங்கள் வாய்க்கப்பட்ட எழுத்தாளர்கள் தம் படைப்புகளை ஆழமாக எழுதவல்லவர்கள். வாசகர்கள் எழுத்தாளர்களின் பன்முக ஆளுமையை அறிவதன் வழியாகவே அவரின் படைப்புகளை எளிதில் புரிந்துகொள்ள இயலும். இவர்களின் படைப்புகளுக்கும் இவர்களின் பன்முக ஆளுமைக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. ஆனால், இவர்களின் பன்முக ஆளுமையின் தாக்கம் இவர்களின் படைப்புகளில் நீருள் விழுந்த ஒளியாகக் கலந்திருக்கும்.
இப்படி ஒரு கட்டுரைத்தொகுப்பினை உருவாக்க வேண்டுமெனில், அந்தந்த எழுத்தாளர்களின் முழுப் படைப்புகளைப் படிக்க வேண்டும், அவரின் படைப்புகள் பற்றி எழுதப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் தேடித் தொகுத்துப் படிக்க வேண்டும், அவரின் தனி வாழ்வு குறித்த குறிப்புகளைப் பல தரப்பிலிருந்தும் திரட்டிப் படிக்கவேண்டும். அந்த வகையில், இந்தப் புத்தகத்தைத் தம் கடின உழைப்பின் வழியாக உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
விளாதிமிர் நபகோவ் வண்ணத்துப் பூச்சி ஆய்வாளர். ஜோர்ஜ் லூயி போர்ஹே புலிகளின் மீது பேரார்வமிக்கவர். கார்லோஸ் புயண்டஸ் சட்ட வல்லுநர், பேராசிரியர், மெக்சிகோ நாட்டு அரசின் தூதுவர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஹென்றி டேவட் தோரோ இயற்கை ஆர்வலரும் சொற்பொழிவாளருமாவார். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சிறந்த பத்திரிகையாளர். அன்னா அக்மதோவா வாழ்க்கை முழுவதும் பல வகையில் துயருற்றவர்.
பிடெரிகோ கார்சியா லோர்கா நாடகாசிரியரும் ஜிப்ஸி போல வாழ்ந்தவருமாவார். வர்ஜீனியா வுல்ப் இளமைக்குப் பின்னர் வாழ்நாள் முழுக்க மனச்சிதைவு நோயாளராகவே இருந்தவர். ஜோசப்கான்ராட் கடலோடி. கோபோ அபே பூச்சியியல் ஆய்வாளர். மிலோராட் பாவிக் அதிகற்பனையாளர். ராபர்டோ கலாசோ புத்தகங்களைத் திருத்தும் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்.

எர்னெஸ்ட் ஹெமிங்வே காளைச் சண்டை வீரர். பாப்லோ நெருதா சிலி நாட்டு அரசின் தூதுவர். ஆக்டேவியா பாஸ் மெக்சிகோ நாட்டு அரசின் தூதுவர். யுகியோ மிஷிமா தனியாக ராணுவக் குழுவை அமைத்த வீரரும் சாமுராயாகவே வாழ்ந்தவருமாவார். லூயி கரோல் கணித மேதையாகவும் புகைப்படக் கலைஞராகவும் இருந்தவர். மிலன் குந்தேரா பியானோ இசைக்கலைஞரும் திரைத்துறைப் பேராசிரியருமாவார்.சர் ரிச்சர்ட் பர்ட்டன் 29 மொழிகளை அறிந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் பயணியுமாவார்.
ஹெர்மன் மெல்விஸ் கடலோடி. பிராம் ஸ்டாகர் நாடக அரங்கின் மேலாளர். ஜே.ஆர்.ஆர். டோல்கின் பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமாவார். ஜோஸ் சரமாகோ தீவிர கம்யூனிஸவாதியும் பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார். ஜேஃஎம்ஃ கூட்ஸி பேராசிரியர். ஒரான் பாமுக் தான் பிறந்த நகரை தன்னெழுத்தால் எல்லா வகையிலும் கொண்டாடியவர்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த எழுத்தாளர்களின் அக மற்றும் புற வாழ்வை விரித்துரைத்து, அவர்களின் படைப்புகள் எந்தெந்த வகையிலெல்லாம் அவர்களின் பன்முக ஆளுமையோடு பொருத்திப் போகிறது என்பது பற்றியும் அலசி, ஆய்ந்து எழுதியுள்ளார். வர்ஜீனியா வுல்ப் பற்றி இவர் பின்வருமாறு கூறியிருப்பதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

“வர்ஜீனியாவிற்குள் நினைவுகள் குளத்துப் பாசிகள் போல ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடந்தன. தன்னைப் பாதித்த நிகழ்வுகளும் அன்றைய நாளும் அவளுக்குள் ஈரம் உலராமல் அப்படியேயிருந்தன. அவள் கதாபாத்திரங்களின் வழியே முக்கிய சம்பவங்களை உருவாக்கிக் காட்டும் எழுத்தை உருவாக்குவதை விடவும் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு கணத்திலும் தனது மனத்திற்குள்ளும் நிஜ உலகத்திற்குள்ளும் எப்படி மாறி மாறிப் பயணம் செய்கிறார்கள் என்பதிலே அதிகம் கவனம் செலுத்தத் துவங்கினாள். எப்படி ஒரு நிறம் அல்லது ஒரு வாசனை ஒரு மனிதரையோ அல்லது ஒரு நிகழ்வையோ நினைவுபடுத்திவிடுகிறது என்பதே அவரது கதைசொல்லலின் தனித்துவமாகயிருந்தது. நினைவுகளின் சிற்றோடைகள் ஒன்றையொன்று குறுக்கிட்டு ஓடிக்கொண்டிருப்பதுதான் வர்ஜீனியாவின் எழுத்து”.
எழுத்தாளர்கள் பற்றித் தம் கருத்தாக எர்னெஸ்ட் ஹெமிங்வே,
“கதைகள் எழுதி, அதில் கிடைக்கும் பெயரையும் வசதிகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பது மட்டுமல்ல ஓர் எழுத்தாளரின் வேலை. எழுத்தாளராக இருப்பது ஒரு சவால். அது வாழ்வில் அடைய முடியாத செயல்களின் மீது ஆர்வம் கொள்ளக்கூடியது” என்று கூறியுள்ளார்.
அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலக எழுத்தாளர்கள் 28 பேருமே வாழ்வில் அடைய முடியாத செயல்களின் மீது பேரார்வம் கொண்டவர்களே. அதுமட்டுமல்ல, எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் கூறுவதுபோல, இவர்கள் அனைவருமே “புனைவெழுத்தால் தங்களின் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்” என்றுதான் தெரிகிறது. அதனாலேயே அவர்கள் உலக எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள்.
இந்தப் புத்தகம் உலக இலக்கிய ஆளுமைகளின் விரிவாக வாழ்க்கையைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றிய அரிய பல கருத்துகளையும் முன்னெடுத்தும் பேசுவதால், இதனை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்படி இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டால், அது இனி வரும் தலைமுறையினரின் மனத்தில் உலக இலக்கியம் பற்றிய ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும்.
– – –
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
