S. Ramakrishnan's Blog, page 133
April 23, 2021
உலகின் முதற்புத்தகம்
நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையாளர்கள், ஆசிரியர்கள். நூலகர் மற்றும் நூலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்.

படிப்பதற்காகவே வாழுகிறவர்கள் என்று சிலரை நினைத்துக் கொள்வேன். அதில் முக்கியமானவர்கள் வேலூர் லிங்கம் மற்றும் ஆம்பூர் அசோகன். இருவரும் ஆண்டு முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். புதிய புத்தகங்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். புத்தகங்களுடனே வாழுகிறார்கள்.
வேலூர் லிங்கம் ஒரு புத்தகக் கண்காட்சி தவறாமல் சென்றுவிடுவார். ஆன்லைன் மூலமாகவும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புத்தகம் வாங்குகிறார். தன் வீட்டில் ஆயிரக்கணக்கான நூல்களை வைத்திருக்கிறார். அவரது வீடு முழுவதும் புத்தகங்கள் தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர வாசகரான லிங்கம் தன்னை என்றும் வழிநடத்துபவர் தஸ்தாயெவ்ஸ்கியே என்கிறார். அன்றாடம் அவருடன் நான் பேசக்கூடியவன். படித்த புத்தகங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வார்.
தான் நல்ல ஆரோக்கியத்துடன் தெளிந்த மனதோடு இருப்பதற்கு ஒரே காரணம் வாசிப்பது தான் என்கிறார். விவசாயத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அவர் புதிதாக எழுத வரும் இளம்படைப்பாளிகள் வரை வாசித்துத் தன் பாராட்டினை தெரிவிக்க கூடியவர்.

இவரைப் போலவே தேடித்தேடி நல்ல இலக்கியங்களை வாசிக்கக் கூடியவர் ஆம்பூர் அசோகன். ஆஸ்திரியா மற்றும் ஜெர்மானிய இலக்கியங்களை மிகவும் விரும்பிப் படிக்கக் கூடியவர். வாசிப்பின் வழியே உருவான தெளிவையும் ஞானத்தையும் அவர் பேச்சில் காணமுடியும்.
ஆம்பூர் அசோகன் டெல்லி JNUவில் படித்தவர். வீட்டில் பெரிய நூலகம் வைத்திருக்கிறார். அவரது மனைவி கல்லூரி பேராசிரியர். அவரும் தீவிரமாக வாசிக்கக் கூடியவர். இலக்கிய உலகோடு எந்த தொடர்புமில்லாமல் தனியே தனக்குப் பிடித்தமான புத்தகங்களை வாசித்துக் கொண்டு சிறிய நண்பர்கள் வட்டத்திற்குள் அமைதியாக வாழ்ந்து வருகிறார் அசோகன்.
உலகப் புத்தகத் தினவிழாவில் இந்த இருவரையும் கௌரவிக்க விரும்புகிறேன். வேலூர் லிங்கம் மற்றும் ஆம்பூர் அசோகன் இருவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். உலகப் புத்தகத் தின வாழ்த்துகள்.
••

எத்தனையோ புத்தகங்களைப் படித்திருந்தாலும் உலகின் முதல் புத்தகத்தைப் பார்த்திருக்கிறோமா, படித்திருக்கிறோமா என்ற ஏக்கம் எனக்குள் எழுவது உண்டு.
உலகின் முதல் அச்சுப்புத்தகமாகக் கருதப்படுவது டயமண்ட் சூத்ரா எனப்படும் பௌத்த நூலாகும். சீனாவில் கையால் செய்யப்பட்ட அச்சாக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதினாறு அடி நீளமுள்ள இந்தச் சுருள் வடிவம் லண்டனின் பிரிட்டிஷ் நூலகத்தில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது
DIAMOND SUTRA புத்தகம் படித்திருக்கிறேன். ஆனால் அதன் மூல சுருள் வடிவ நூலைக் கண்டதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகக் கௌதம் கோஷ் இயக்கிய Beyond The Himalayas என்ற ஆவணப்படத்தினைக் கண்டேன். மிக முக்கியமான ஆவணப்படமது. 1994 ஆம் ஆண்டில் கர்னல் அலுவாலியா தலைமையில் ஒரு குழு ஐந்து மஹிந்திரா ஜீப்புகளின் மூலம் மத்திய ஆசியா, சீனா மற்றும் திபெத் வழியாக 14,000 கி.மீ தூர பயணத்தை மேற்கொண்டனர். -பௌத்த தடயங்கள், பட்டு பாதையின் வரலாறு, அரசியல், புவியியல் கலை மற்றும் தொல்லியல் ஆய்வுகள் சார்ந்த இந்தப் படம் இந்த ஆவணப்படம் 1996 இல் தூர்தர்ஷன், டிஸ்கவரி மற்றும் பிபிசி ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த முக்கியமான பயணத்தின் ஒரு பகுதியில் வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு குகையில் பல நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கபட்டிருந்த , ‘டயமண்ட் சூத்திர நூலின் பிரதியை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.
உலகின் முதல் புத்தகத்தைக் கண்ணால் கண்டது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த நூல் 868ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. சீன மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் மஞ்சள் படிந்த காகிதங்களில் வுட்பிளாக் முறையில் அச்சிடப்பட்டு ஒன்றாக ஒட்டப்பட்டுச் சுருளாக வைக்கப்பட்டிருக்கிறது.

கௌதம புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவர் சுபூதி. இந்தச் சுபூதியோடு கௌதம புத்தர் உரையாடிய ஞானமொழிகளின் தொகுப்பே இந்தச் சூத்திரங்கள். மகாயான பௌத்த நூல்களில் முதன்மையாகக் கருதப்படுகிறது.
புத்தர் தனது துறவிகளுடன் சிராவஸ்திக்கு செல்கிறார். அங்கே வீடு வீடாகச் சென்று உணவினை யாசிக்கிறார். பின்பு அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது மூத்த துறவியான சுபூதி அவரிடம் தனது சந்தேகங்களைக் கேட்கிறார்
“போதிசத்துவரின் பாதையில் புறப்பட்ட ஒருவர் எவ்வாறு தனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், எவ்விதம் தன் வாழ்வினை தொடர வேண்டும், மனதை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும்?“
இந்தக் கேள்விகளுக்குப் புத்தர் சொன்ன பதில்களும் அதையொட்டிய உரையாடலுமே இந்த நூலின் மையமாகும்

இந்த வாழ்வில் எதுவும் நிலையானதில்லை. எல்லாமும் மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒரு நீர்க்குமிழி போன்றது தான் இந்த வாழ்க்கை. ரூப அரூப நிகழ்வுகளும் பொருட்களும் அதற்கு கொடுக்கப்பட்ட பெயர்களும் வெறும் மனக் கட்டமைப்பாகும், அவை உண்மையான, காலமற்ற யதார்த்தத்தை மறைக்கின்றன. எனும் வைரசூத்திரத்தால் வசீகரிக்கப்பட்ட எழுத்தாளர் ஜாக் கரோக்(Jack Kerouac) அதை ஆழ்ந்து படித்துப் பௌத்த ஞானத்தின் பாதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுபூதியின் வாரிசுகளாகவே தலாய் லாமாக்களை கூறுகிறார்கள்.
புத்தரிடம் இந்தச் சூத்திரம் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். உலக மாயையினை அறுத்து உண்மையான மற்றும் நித்தியமானவற்றை வெளிச்சமிட்டுக் காட்டும் ஆழ்நிலை ஞானத்தின் வைரக்கத்தி போன்றிருப்பதால் இதை வைர சூத்திரங்கள் என்று அழைக்கலாம் என்கிறார். அப்படித் தான் இந்தப் பெயர் வந்தது என்கிறார்கள்.

மங்கோலியாவிற்கும் திபெத்துக்கும் இடையிலான வடமேற்கு சீன பாலைவனத்தில் டன்ஹுவாங் நகருக்கு அருகிலுள்ள ஒரு குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளில் அச்சிடப்பட்ட வைரசூத்திர நூலின் நகலும் ஒன்றாக இருந்தது,.

இந்தக் குகையை ‘ஆயிரம் புத்தர்களின் குகைகள்’ என்று அழைக்கிறார்கள. இதனுள் ஒவியங்களும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த வைர சூத்திரத்தை 1907 ஆம் ஆண்டில் ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த மார்க் ஆரேல் ஸ்டெய்ன் என்பவர் கண்டுபிடித்தார்
மேற்கத்தியர்களால் உலகின் பழமையான புத்தகமாகக் குட்டன்பெர்க் பைபிள் கருதப்பட்டு வந்தது. இந்தப் பைபிள் பதினான்காம் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டது. ஆனால் இந்த வைர சூத்திரப் பிரதி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதுவே உலகின் மிகத் தொன்மையான அச்சுப் புத்தகமாகக் கருதப்படுகிறது.
ஒரு புத்தகம் நம் கைக்கு வரும்போது அது காலமற்றதாகவே உள்ளது. எந்த ஆண்டில் அது அச்சிடப்பட்ட என்ற தகவல் தான் அதன் பழமையைச் சுட்டுகிறதே தவிர அச்சிடப்பட்ட சொற்கள் காலத்தைத் தாண்டி புதியதாகவே இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழைய நூலாக இருந்தாலும் நேற்று வெளியான புத்தகமாக இருந்தாலும் நம் கைக்கு வரும் போது அது புதிய புத்தகமே. கலைப்பொருட்களின் மீது காலம் உறைந்துவிடுவது போலச் சொற்களின் மீது உறைவதில்லை. சொற்கள் நித்ய இருப்பின் வெளிச்சத்துடன் ஒளிர்கின்றன.

இந்த வைர சூத்திரத்தினைத் திரையில் கண்டபோது ஆயிரம் ஆண்டுகளாக அது எவராலும் வாசிக்கப்படவில்லை என்பது தான் என் மனதைத் தொட்டது. ஒரு புத்தகத்தின் விதி என்பது விநோதமானது. அது எப்போது எவ்வளவு பேரால் படிக்கப்படும். மறைந்து போகும். மீட்டு எடுக்கப்படும் என்று யாராலும் சொல்லிவிடமுடியாது.
புதைந்து போன நகரங்களைத் தேடிக் கண்டறிய முயன்ற ஸ்டைன் பாலைவனத்தில் மிகுந்த சிரமங்களுக்குள் தான் இந்தக் குகையைக் கண்டறிந்தார். ஒளித்து வைக்கப்பட்ட ஏடுகள். சுருள்களின் மீது வெளிச்சம்போட்டது. உலகின் கவனத்திற்கு உள்ளான இந்த ஏடுகள் மீண்டும் படியெடுக்கப்பட்டன. புதிய வாசிப்பிற்கு உள்ளாகின. வைர சூத்திரம் எப்படிச் சீனாவிற்குச் சென்றது. யார் இதனை அச்சிட்டது. யாரெல்லாம் வாசித்தார்கள் என்று எந்தத் தகவலும் தெரியவில்லை. ஆனால் பூமியின் அடியிலிருந்து கண்டறியப்பட்ட அபூர்வமான வைரம் போலவே இந்த நூலும் பெரும் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் உலகின் ஏதேதோ மொழிகளில் புதிய புத்தகங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. புத்தகமே வெளியாகாத நாள் என்று ஒரு தேதியைச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. அது போன்றது தான் வாசிப்பும்.
உலகெங்கும் யாரோ, ஏதோ ஒரு இடத்தில். ரகசியமாக, சந்தோஷமாக, வடிகாலாக, அன்பின் பரிசாக, காதலின் நினைவாக, போராட்டத்தின் துணையாக,தனிமையின் நண்பனாக, ஞானத்தின் திறவுகோலாக, அறிவின் உச்சமாக, ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துப் புரட்டுகிறார்கள். உலகின் மீது வெளிச்சம் பரவுவது போன்ற மாயமது. புத்தகத்தைத் திறக்கும் போது இருந்த மனிதன் அதை முடிக்கும் போது மாறிவிடுகிறான். என்னவாக மாறினான். என்ன கிடைத்தது என்று அவனால் துல்லியமாகச் சொல்லமுடியாது. ஆனால் அந்த மாற்றம் புதுவகை ஆனந்தம். புது வகை நம்பிக்கை, புதிய திறப்பு என்றே சொல்வேன்.
வாசித்தல் என்பது பறத்தலா, வாசித்தல் என்பது நீந்துவதா, வாசித்தல் என்பது கூடு விட்டுக் கூடு பாய்வதா, வாசித்தல் என்பது தண்ணீரின் மீது நடப்பதா, வாசித்தல் என்பது கரைந்து போவதா, வாசிப்பு என்பது சொல்லை ஆயுதமாக ஏந்துவதா, வாசித்தல் என்பது காலத்தின் பின்னோக்கி பயணம் செய்வதா, வாசித்தல் என்பது தியானமா, வாசித்தல் என்பது சொற்களைக் காதலிப்பதா, அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வதா, வாழ்வின் புதிர்களை அவிழ்க்கும் செயல்பாடா, வாசிப்பு என்பது ரகசியமான நடனமா, எல்லாமும் தான். வாசிப்பின் வழியே நாம் மாறத்துவங்குகிறோம். நம்மோடு உலகமும் மாறத்துவங்குகிறது.
இந்த உலகப் புத்தகத் தின நாளில் உலகின் முதல் புத்தகமான DIAMOND SUTRAவை படிக்க கையில் எடுத்தேன். சிராவஸ்தியில் இருந்தபடி புத்தர் பேசத்துவங்குகிறார். சொற்களுக்கு வயதாவதேயில்லை. சிறுசொற்கள் உலகின் பேருண்மையை. பெரும்ஞானத்தை வெளிப்படுத்தியபடியே நட்சத்திரங்கள் போல ஒளிர்கின்றன.
••

இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது. எனினும்
யாராவது பூமியை விடக் கனமானது
எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.
நீங்களாவது கூறுங்களேன், இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படிக் கையில் வைத்திருப்பது என்று…
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்.
அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடி வருகிறது. நான்
கொஞ்சம் கொஞ்சமாகப் பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்.
– கவிஞர் தேவதச்சன்
April 21, 2021
‘இந்திய வானம்’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை

நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்கள் வகுப்பறையில் நவீன இலக்கியங்கள் தொடர்பான பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, “எல்லாத்துக்கும் உதாரணம் இந்தியாவுல இருக்கும்” என்றார். அப்போது அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரியவில்லை.
ஆனால், எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இந்திய வானம்’ புத்தகத்தைப் படித்ததும் அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரிந்துவிட்டது. ‘மேன்மைகளும் கீழ்மைகளும் சம அளவில் நிறைந்த பெருநிலம்தான் இந்தியா’ என்று இப்போது எனக்குத் தெளிவாகிவிட்டது.
பொதுவாகவே யாருக்கும் பிறர் கூறும் அறிவுரைகள் பிடிக்கவே பிடிக்காது. இந்தப் புத்தகம் அறிவுரை பகரும் புத்தகம் அல்ல; மாறாக அறவுரையை நம் முன்வைக்கும் புத்தகம்.
உங்களின் காலடியில் ஒரு மலர் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் எடுத்தும் செல்லலாம் அல்லது மிதித்தும் செல்லலாம் என்பதுபோல இந்தப் புத்தகத்தின் வழியாக எழுத்தாளர் நமக்கு இரண்டு வாய்ப்புகளைத் தந்துள்ளார். ஒரு வாசகனாக நான் அந்த ‘அறவுரை’ எனும் மலரை எடுத்துக்கொணடேன்.
‘இந்த எழுத்தாளருக்குத்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்!’ என்று நம்மை வியக்க வைக்கும் புத்தகம் இது. அவரது பயணங்களில் உருவாகியிருக்கிறது அழியா நினைவுகளின் நெடும்பாதை. அந்தப் பாதையில் நம்மையும் கைப்பிடித்து நடத்திச் செல்கிறார் எழுத்தாளர். 26 அத்யாயங்களில் அறவுரைகளைத் தம் அனுபவத்தில் தோய்த்து எடுத்துத் தந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரைக்கும் தொடர்புடைய அறிஞர்களின் கருத்துகளை ஊடுபாவாக இணைத்துள்ளார்.
“எல்லோருக்கும் வாழ்வின் லட்சியமாகப் பணம் மட்டும் இருப்பதில்லை. அதைத் தாண்டி, மக்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!” என்று நம்மிடம் கேட்கும் இவர், அப்படிப்பட்டவர்களை நமக்கு அடையாளங்காட்டும் நோக்கில்தான் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
“புத்தரின் புன்னகைதான் எனது எழுத்துத்துணை” என்று கூறும் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளில் புத்தரின் புன்னகையும் அன்பான அறிவுரைகளும் இழையோடியுள்ளன.
“இல்லாத மனிதர்கள் ஒருவரையொருவர் சந்தோஷப் படுத்திக்கொள்கிறார்கள். பகிர்ந்து வாழ்கிறார்கள். ஆனால், வசதியும் வாய்ப்பும் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த மனது இருக்கிறது?” என்று கேட்கும் இவர் நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்ளப் பணித்துவிடுகிறார்.
‘வாழ்க்கை’ பற்றி எத்தனையோ ஞானிகள் எவ்வளவோ தத்துவ விளக்கங்களைக் கூறியிருக்கிறார்கள். அவர்களுள் யாரும் இவரைப் போல இவ்வளவு எளிதாக வாழ்க்கையை நமக்கு விளக்கியிருப்பதாகத் தெரியவில்லை.
“பறவைகள் சிறகுகளால் மட்டும் பறப்பன அல்ல. அவை, ‘பறக்க வேண்டும்’ என்ற இடையறாத வேட்கையால், மனத்தால்தான் பறக்கின்றன. அதுதான் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது சிறகு. நமக்குள்ளும் அந்த மூன்றாவது சிறகு இருக்கிறது. அதை விரித்துப் பறக்க நாம் எத்தனிப்பது இல்லை. வாழ்க்கை பரமபதக்கட்டத்தை விடவும் புதிரானது. எந்த ஏணி ஏற்றிவிடும், எந்தப் பாம்பு இறக்கிவிடும் எனத் தெரியாது. அதைவிடவும் எது பாம்பு, எது ஏணி எனக் கண்டுகொள்வதும் எளிதானதல்ல. ஆனாலும், விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்”.
‘இதுதான் வாழ்க்கை’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு, ‘இந்த வாழ்க்கையை வாழுங்கள்’ என்று நம்மிடம் கோரிக்கைவிடுத்துள்ளார் எழுத்தாளர்.
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்த நெறியின் மீது தீராக்காதலுடையவர். அவர் புத்தம் பற்றி இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
“புத்தரைப் பின்தொடர்வது என்பது ஒரு நீண்ட பாதை. வாழ்நாள் முழுவதும் தொடரும் பணி. அதன் முதற்படியாக, சொல்லாலோ அல்லது உடலாலோ மற்றவர்களின் அமைதிக்கும் இசைவுக்கும் பாதிப்பு வரக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருத்தலே புத்தர் காட்டும் எளிய வழி. அலங்காரப் பொருளாகப் புத்தனை வீட்டில் வைத்திருப்பதைவிடவும் அவரது அறங்களில் ஒன்றைக் கைக்கொள்வதுதான் புத்தரைப் பின்தொடரும் உண்மையான வழி”
புத்தரைப் பற்றித் தாம் புரிந்துகொண்டவற்றை எளிய தொடர்களின் வழியாக நம்மையும் புரிந்துகொள்ளச் செய்துள்ளார் எழுத்தாளர்.
மனிதர்களின் மீதும் அவர்கள் கொண்டுள்ள அன்புள்ளத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். ஆனால், இவர் புறக்கணிக்கப்படும் அன்பு குறித்தும் குறுகிய மனம் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே சுட்டிக்காட்டவும் செய்துள்ளார்.
“நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகிறோம். ஆனால், வன்முறையையும் சுயநலத்தையும் மோசமான பண்பாட்டுச் சீரழிவுகளையும் வளர்த்து வருகிறோம். இந்த முரண்தான் உண்மையின் குரலை அடையாளம் காண முடியாதபடித் தடுக்கிறது.”
“மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவர்களின் இதயத்தை எப்படித் திறப்பது என யாருக்கும் தெரியாது. அன்புதான் மனத்தைத் திறக்கும் ஒரே சாவி. அது எப்போது, எப்படி ஓர் இதயத்தைத் திறந்து தன்வசப்படுத்தும் என்பது விந்தையே!”
“சொற்களால் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது. அன்பை வெளிப்படுத்த பணமும் பரிசுப்பொருட்களும் மட்டுமே உதவுகின்றன. இல்லாதவர்களின் அன்பு ஏளனப்படுத்தப்படவே செய்கிறது.”
நாகரிகம் வளர்ந்துவிட்டது. வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன. ஆனால், மனிதர்கள் மட்டும் தாமரை இலை நீர்த்துளிபோல விலகி விலகியே இருக்கிறார்கள். இது குறித்த தமது கவலையைத் தெரியப்படுத்தும் எழுத்தாளர் ஒரு சிறு நிகழ்வின் வழியாக நாம் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
“இன்று வீட்டைப் பூட்டிக்கொண்டு புறப்படும்போது, ‘யாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்வது?’ என்பது மிகப் பெரிய கேள்வி. இதற்கு மாற்றாக செக்யூரிட்டி கேமரா வாங்கிப் பொருத்திவிடுகிறார்கள். அல்லது செக்யூரிட்டி ஆளை நியமித்துவிடுகிறார்கள். இது பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னை மட்டும் அல்ல. மனித உறவுகள் அற்றுப்போய்விட்டதன் அடையாளம். நாமும் யாருடனும் பழகுவதும் இல்லை. யாரும் நம்மோடு பழகுவதும் இல்லை. நமது வீடுகள் தனித்தனி கல்லறைகள்போல் ஆகிவிட்டன. வாசற்படிகூட இல்லாமல் வீடுகள் சுருங்கிப் போனதுடன் மனித மனமும் சுருங்கிப்போய்விட்டது.”
2000த்துக்கு முன்புள்ள தலைமுறை பெரும்பாலும் தன் கனவுகளையும் கற்பனைகளையும் திரைப்படத்தை முன்னிறுத்தியே உருவாக்கியிருக்கும். திரைப்படம் குறித்தும் திரைப்படங்களைப் பார்ப்பதும் பற்றியும் பேசிச்செல்லும் எழுத்தாளர் இடையே பின்வரும் கருத்தை எழுதிச் சென்றுள்ளார்.
“பால்யத்தின் பெரும்பான்மை நினைவுகள் கறுப்பு – வெள்ளையாக எஞ்சியிருக்கின்றன. ஆனால், வண்ணப் படங்களாக இருப்பன சினிமா பார்த்த நினைவுகள் மட்டுமே!”
ஆம்! திரைப்படத்தைவிட அதைப் பார்க்கச் சென்ற, பார்த்த பொழுதுகளே நெஞ்சில் ஆணியடித்து நிறுத்தப்பட்டுள்ளன.
எழுத்தாளர் சமுதாயத்தைப் பாராட்டும் இடங்களில் எல்லாம் நம் மனம் இளகிவிடுகிறது. அவர் சமுதாயத்தை எதிர்நிலையில் விமர்சிக்கும் போதெல்லாம் நம் மனம் குற்றவுணர்வில் குறுகிவிடுகிறது.
“பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தனையும் கள்ளச் சந்தைக்கு உரிய பொருட்களாகிவிட்டன. எந்தப் பொருளை, எவ்வளவு விலைக்கு விற்பது என்பதற்கு ஒரு கட்டுப்பாடும் கிடையாது. தர நிர்ணயம், பரிசோதனை, கட்டுப்பாடு என எவையும் நடைமுறையில் இல்லை. உணவுப் பொருட்களில் நடைபெறும் கொள்ளை சாமானிய மனிதர்களை அன்றாடம் வதைக்கிறது. காய்கறிக்கடையில், பழக்கடையில், உணவகத்தில் தனக்குத் தானே புலம்பிக்கொள்வதைத் தவிர வேறு எதையும் மக்களால் செய்ய முடிவது இல்லை.”
“நம் காலம் அலங்கரிக்கப்பட்ட பொய்களால் ஆனது. இங்கே உண்மை என்பது, பல்லியின் துண்டிக்கப்பட்ட வால்போல தனியே துடித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய கவலை இல்லாமல் சமூகம் தன்போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.”
நம்மை இவ்வளவு நெருங்கி, நம் முகத்துக்கு நேராக, இப்படிப் பேச இவரால்தான் முடிகிறது. அதனாலேயே இவரின் சமுதாயப் பொறுப்புணர்வுள்ள எழுத்துகளை நம்மால் எந்த வகையிலும் புறக்கணிக்க இயலாமலாகிவிடுகிறது.
இந்தத் தலைமுறையினர் பலவற்றை மறந்துவிட்டனர். குறிப்பாகச் சிரிப்பதையும் புன்னகைப்பதையும் கூட மறந்துவிட்டனர். சிரிப்புக்கும் புன்னகைக்கும் இருக்கும் வலிமை குறித்துப் பேசும் எழுத்தாளர் தன்னனுபவத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை எடுத்துரைத்துள்ளார்.
“அந்தச் சிரிப்பு எங்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. மனிதர்களை ஒன்றிணைக்க சிறிய புன்னகை போதும். அடுத்த விநாடி மொழி தெரியாதவர்கூட சிநேகமாகிவிடுகிறார்” என்று சிரிப்புக்கும் புன்னகைக்கும் இருக்கும் வல்லமையைத் தன் அனுபவத்தின் வழியாக நமக்குக் காட்டியுள்ளார்.
இந்தியாவை உடலால் உள்ளத்தால் மட்டுமல்ல நாக்காலும் உணர முடியும் என்பதைப் பின்வரும் பத்தியின் வழியாக எழுத்தாளர் விளக்கியுள்ளார்.
“இந்தியாவைப் போல இத்தனை ருசிகரமான உணவு வகைகள் வேறு எந்தத் தேசத்திலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு இரண்டு மணி நேரப் பயண தூரத்துக்கும் உணவு மாறிவிடுகிறது. காரமும் புளிப்பும் இனிப்பும் மாறுபடுகின்றன. சைவம், அசைவம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு மாறுபட்ட உணவு வகைகள்! ருசிகள்! இந்தியாவை ஒன்றிணைப்பது உணவுதான்” என்கிறார் இவர்.
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்கள் மீது அளவற்ற நம்பிக்கையுடையவர். இந்தப் புத்தகத்தில் புத்தகங்கள் பற்றியும் அவற்றின் பெரும்பயன்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
“புத்தகம் படிப்பது ஒரு தளம் என்றால், அதைப் பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் மக்களிடையே எடுத்துச் சொல்வதும் அவசியமான இன்னொரு தளம்.”
“உறவுகள் கைவிட்ட நிலையில் தனித்து வாழும் முதியவர்கள் பலருக்குப் புத்தகங்களே ஆறுதலாக இருக்கின்றன. அவர்கள் புத்தகங்களை உயிருள்ள ஒன்றாகக் கருதுகிறார்கள். அதனுடன் பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள். படித்த புத்தகங்கள் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறார்கள்.”
“புத்தகங்கள் வாழ்வின் மீதான பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. துயரத்தில் இருந்தும் வேதனைகளில் இருந்தும் விடுபட வைக்கின்றன. அந்த மௌனத் துணையைப் பலரும் உணராமல் இருக்கிறார்கள் என்பதே தீராத வருத்தம்!”
‘புத்தகம்’ என்றும் நமது ‘சிறந்த தோழமை’ என்பதை நாம் புரிந்து, அந்தப் புத்தகங்களின் பக்கங்களில் நம் மனமுகத்தைப் புதைத்துக்கொள்ள வேண்டும். அது நமக்கு அலுக்காமல் ஆயிரம் முறைக்கும்மேல் ஆறுதல் சொல்லும்.
‘எப்போது தன்னையறிதல் சாத்தியப்படும்?’ என்பது குறித்துப் பேசும் எழுத்தாளர், வாசகரின் தோளில் தன் நேசக்கரத்தை மெல்ல வைத்தபடி இனிமையான சொற்களால் பின்வருமாறு உரையாடுகிறார்.
“நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதிலும் அரட்டை அடிப்பதிலும் எவ்வளவு சந்தோஷம் கிடைக்குமோ, அதற்கு இணையான சந்தோஷம் விருப்பத்துடன் தனித்து இருப்பதிலும் கிடைக்கும். அதற்குத் தனிமைக்கு நாம் பழக வேண்டும். புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் இருப்பது என்பது வேறு. விருப்பத்துடன் தனிமையில் இருப்பது என்பது வேறு. நாம் விருப்பத்துடன் தனித்திருக்கப் பழக வேண்டும். அது ஒரு சுவை. பறக்கும்போது மட்டுமே பறவைகள் கூட்டமாகச் செல்கின்றன. பிறகு, ஒவ்வொரு பறவையும் அதனதன் வழியே தனியேதான் இரை தேடுகின்றன. விரும்பிய மரத்தைத் தேர்வு செய்து, வசிப்பிடத்தை உருவாக்கிக் கொள்கின்றன. தனிமை கொள்ளுதல் என்பது, நம்மை அறிந்துகொள்ளும் வழி.”
‘விரும்பிப் பெறும் தனிமை’ என்பது, ஒரு தவநிலை. அதிலிருந்தே தன்னையறிதல் தொடங்குகிறது என்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
காதலைப் பற்றியும் காதலர்களைப் பற்றியும் காதலுக்கு ஆதரவு அளிப்போரைப் பற்றியும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போரைப் பற்றியும் ஒரே பத்தியில் மிக அழகாக வரையறைசெய்துள்ளார் எழுத்தாளர்.
“காதலை அங்கீகரிக்காத சென்ற தலைமுறையைச் சார்ந்த பெற்றோர்கள் பயந்தது போலவேதான் காதலை அங்கீகரிக்கும் இந்தத் தலைமுறையைச் சார்ந்த பெற்றோர்களும் காதலைக் கண்டு பயப்படுகிறார்கள். இருவருக்கும் உள்ள ஒரே கேள்வி, ‘எதிர்காலம் என்னவாகும்?’ என்பதே!. இதற்கான விடை யாருக்கம் தெரியாது. காதல், எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவது இல்லை. பயம்கொள்வது இல்லை. காதலின் பலமும் அதுதான். பலவீனமும் அதுதான்.” இதற்கு முன்பாக யாரும் இவ்வளவு நேர்த்தியாகக் ‘காதல்’ பற்றி விளக்கம் அளிக்கவில்லை.
‘எது மகிழ்ச்சி?’ என்று தெரியாமலேயே மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கும் படித்த அறிவிலிகளுக்கும் படிக்காத அறிவாளிகளுக்கும் ஒரு செய்தியைத் தந்துள்ளார் எழுத்தாளர்.
“வசதியான வீடு, புதிய கார், கை நிறைய பணம், உயர்ந்த பதவி, விருப்பமான உணவுகள், ஆடம்பர வாழ்க்கை இவைதான் சந்தோஷத்தின் அடையாளங்களாக முன் வைக்கப்படுகின்றன. இவை, விலைகொடுத்துப் பெறும் சந்தோஷங்கள். ஆனால், வாழ்வில் விலையில்லாத சந்தோஷங்கள் நிறைய இருக்கின்றன. சூரியனும் நிலவும் மலைச்சிகரங்களும் புல்வெளிகளும் அருவிகளும் ஆறுகளும் கடலும் வானும் ஒளிரும் நட்சத்திரங்களும் பறவைக்கூட்டங்களும் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகின்றன. இவை விலையில்லாத சந்தோஷங்கள். இதன் அருமையை நாம் முழுமையாக உணர்வதே இல்லை.” எழுத்தாளரின் இந்தக் கருத்திலிருந்து நாம், ‘நமக்கு எது மகிழ்ச்சியைத் தரும்’ என்பதை அறிவதே, நாம் பெறும் முதல் அறிவு’ என்று புரிந்துகொள்ள முடிகிறது.
எழுத்தாளர் மரங்கள், பூக்கள் பற்றிக் கூறியுள்ள ஒரு பத்தியின் வழியாகப் பூடகமாகவும் குறியீட்டு நிலையிலும் பல தகவல்களை நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
“ஒருமரம் பூப்பதைக் கண்டு மற்றொரு மரம் பொறாமை கொள்வதில்லை. அதுதான் இயற்கையின் உன்னதம். இயற்கையில் யாவும் அதனதன் இயல்பிலேயே இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பிரித்து, வகைப்படுத்தி, ‘பயன்பாடு’ என்ற கூடைக்குள் அடைக்க நினைக்கும் மனித மனமே இயற்கையைக் கூறுபோடுகிறது. மனிதனுக்குத்தான் பூவுக்கும் மணம் தேவைப்படுகிறது. மற்றபடி மணம் இருக்கிற மலர்களைப் போல, மணம் இல்லாமல் இருப்பதும் பூவின் இயல்பே! நாம் ‘மணமற்ற மலர்’ என்பதை ‘உபயோகமற்ற ஒன்று’ என நினைத்து விலக்கி விடுகிறோம். அது நமது அறியாமை”. இந்தப் பத்தியைப் படிப்பவர்கள் தமக்கான தகவலை மட்டும் உருவி எடுத்துக்கொள்ள இயலும்.
“குரங்கை இன்னோர் உயிரினமாக நாம் மாற்ற முடியாது. ஆனால், நமக்குள் உள்ள பொறாமை உணர்வை, வெறுப்பை, தீமையை நாம் மாற்றிக்கொள்ள முடியும்தானே!” என்று அன்புடன் வினவுகிறார். இந்த அன்பு வினாவுக்கு யாராவது ‘முடியாது’ என்று பதிலளிப்பார்களா?
அன்பெனும் குடைக்குக் கீழ் நிற்கிறது இந்தியா. அன்பெனும் வான்குடையே இந்தியாவின் வானம்.
காதலின் ஒளியில்
நோபல் பரிசு பெற்ற கவிஞரான ஆக்டோவியா பாஸ் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். The Labyrinth of Octavio Paz”என்ற இந்த ஆவணப்படத்தில் அவரது ஆளுமையின் பன்மைத்தன்மை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ் இந்தியாவில் மெக்சிகத் தூதுவராகப் பணியாற்றியவர். டெல்லியில் வசித்த நாட்களில் பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய அரசியல் ஆலோசகரின் மனைவியான மேரி ஜோஸ் உடன் நெருக்கமான காதல் உருவானது. அந்த ரகசியக்காதல் தான் இந்தியாவை அவர் நேசிக்க ஒரு காரணம் என்கிறார்கள். பாஸ் ஏற்கனவே திருமணமானவர். பாஸின் மனைவி எலெனா கரோ. மிகச்சிறந்த மெக்சிக எழுத்தாளர்களில் ஒருவர்.
பாஸ் 1962 செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா வந்தார். அதே ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் டெல்லியின் சுந்தர் நகரில் உள்ள ஒரு வீட்டில் இராஜதந்திர பானங்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவர் மேரி ஜோஸ் டிராமினியை சந்தித்தார். முதல் சந்திப்பிலே அவர்களுக்குள் ஈர்ப்பு உருவானது.
மெக்சிகத் தூதுவராகப் பணியாற்றுகிறார் என்பதால் டெல்லியில் அவருக்கு அழகான பங்களா ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த வீடு தான் அவரது ரகசியக் காதலின் இருப்பிடமாகியது. வெளியுலகம் அறியாமல் அவர் காதலியோடு பயணம் செய்தார். இரண்டு ஆண்டுகள் அந்தக் காதல் தொடர்ந்தது. முடிவில் காதல் நெருக்கம் அதிகமான போது மேரி ஜோஸை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். பாஸை விடவும் இருபது வயது இளையவர் மேரி ஜோஸ். அத்தோடு அவர் தன் கணவரை விட்டு விலகத் தயாராகவுமில்லை. ஆகவே அவர்கள் தற்காலிகமாகப் பிரிந்தார்கள்.

தனது அலுவலக வேலை காரணமாகப் பாரீஸிற்குச் சென்றபோது தற்செயலாக அவர் தங்கியிருந்த அதே விடுதியில் மேரி ஜோஸ் தங்கியிருப்பதை அறிந்தார். மீண்டும் அவர்களுக்குள் காதல் துளிர்த்த்து. இந்த முறை மேரி ஜோஸ் அவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்தார். 20 ஜனவரி 1966 அன்று டெல்லியில் உள்ள மெக்சிக தூதரகத்தின் மரத்தடியில் அவர்கள் மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டார்கள்.. பாஸ் மறையும் வரை மேரி ஜோஸ் அவரது உற்ற துணைவியாக இருந்தார்.
இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் பாஸ் நிறையப் பயணம் செய்திருக்கிறார். சமஸ்கிருத. பௌத்த, சமண நூல்களை வாசித்திருக்கிறார். இந்திய தொன்மங்கள். புராணங்கள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். கன்யாகுமரி என்ற அவரது நீள் கவிதை பிரபலமானது. அனுமானை முன்வைத்து The Monkey Grammarian என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
அக்டோபர் 2, 1968 அன்று, மெக்ஸிகோவில் நடந்த மாணவர் போராட்டத்தினை ஒடுக்க அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் முந்நூறு பேர் இறந்து போனார்கள். இதைக் கண்டித்துத் தனது தூதுவர் பதவியைப் பாஸ் ராஜினாமா செய்தார். அதன் பிந்தைய காலங்களில் அவர் கேம்பிரிட்ஜில் லத்தீன் அமெரிக்க ஆய்வுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்பு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியராக வேலை செய்திருக்கிறார்..
1970களில் பாஸ் மற்றும் மேரி-ஜோஸ் மெக்ஸிகோவில் வசிக்கச் சென்றனர், அங்கு அவர்கள் இறக்கும் வரை அங்கே வசித்தார்கள்.
ஆக்டோவியா பாஸின் குடும்பம் மெக்சிகோவில் ஒரு முக்கிய அரசியல் குடும்பமாக இருந்தது, அவரது தந்தை மெக்ஸிகப் புரட்சியாளர் எமிலியானோ சபாடாவின் உதவியாளராக இருந்தார். அரசியல் மாற்றம் காரணமாக அவரது குடும்பம் நாடு கடத்தப்பட்டது. பாஸின் குடும்பம் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது. பாஸ் சில ஆண்டுகள் அமெரிக்காவில் கல்வி பயின்றார் பின்பு மெக்ஸிகோ தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் இலக்கியம் பயின்றார். 1931 இல் ஒரு இளைஞனாக, பாஸ் தனது முதல் கவிதைகளை வெளியிட்டார், இடது சாரி இயக்கங்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த பாஸ் அரசியல் இயக்கங்களில் நேரடியாகப் பங்குபெற்றார்.

இந்த ஆவணப்படத்தில் பிரபல இயக்குநர் லூயி புனுவலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு மற்றும் அவர்களின் நீண்டகாலத் தோழமை பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
பாஸின் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் எழுத்தாளர் கார்லோஸ் புயந்தஸ். ஆனால் பாஸின் நேர்காணல் ஒன்றினை மெக்சிக ஊடகங்கள் திரித்து அவர் மீது கண்டனம் சுமத்திய போது கார்லோஸ் புயந்தஸ் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டார் என்று கோபம் கொண்ட பாஸ் அவரது நட்பினை துண்டித்துக் கொண்டார்.
எழுத்தாளர். கலைவிமர்சகர். மானுடவியல் ஆய்வாளர். பத்திரிக்கையாளர். திரைப்பட விமர்சகர். மொழிபெயர்ப்பாளர் என்று பாஸின் பல்வேறு முகங்களை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

The Labyrinth of Octavio Paz”துவக்கத்தில் ஆக்டோவியா பாஸ் யார் என்ற கேள்வியைப் பலரிடமும் கேட்கிறார்கள். அவர் ஒரு சிறந்த கவிஞர். சிறந்த விமர்சகர். சிறந்த சிந்தனையாளர். அறிவாளி எனப் பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள். ஒருவர் மட்டும் அவர் ஒரு நிசப்தம் என்று சொல்கிறார். அந்தப் பதில் எனக்குப் பிடித்திருந்தது.
சர்ரியலிச இயக்கத்துடன் அவருக்கு இருந்த நெருக்கமும் ஈடுபாடும் தான் அவரை முக்கியக் கவிஞராக்கியது. இந்தப் படத்திலும் ஆந்த்ரே பிரடனுடன் அவர் நெருக்கமாக உள்ள விஷயமும் பிரெஞ்சில் பாஸின் கவிதைகள் வெளியாகப் பிரடன் காரணமாக இருந்த செய்தியும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படுத்தபடுகிறது.
இளைஞரான ஆக்டோவியோ பாஸ் ஒரு திரைநட்சத்திரம் வெகு அழகாக இருக்கிறார். பாஸின் குரலில் அவரது கவிதைகளைக் கேட்க இனிமையாக இருக்கிறது
••
ஆக்டோவியா பாஸ் கவிதை
காற்றும் நீரும் பாறையும்
தமிழில் ஷங்கர் ராம சுப்ரமணியன்
நீர் பாறையை உள்ளீடற்றதாக்கியது
காற்று நீரைத் தூவியது
பாறை, காற்றை நிறுத்தியது.
நீரும் காற்றும் பாறையும்
காற்று, பாறையைச் செதுக்கியது
ஒரு குவளை நீர், பாறை
நீர் வழிந்து செல்கிறது, காற்றும்
பாறையும் காற்றும் நீரும்.
காற்று தனது திருப்பங்களில் பாடுகிறது
நீர் ஓடிச் செல்லும்போது முணுமுணுக்கிறது
நகராத கல் அமைதிகாக்கிறது
காற்றும் நீரும் பாறையும்.
ஒன்று, மற்றதுதான்
என்பதோடு
இரண்டுமே இல்லாதது:
அவற்றின் காலிப் பெயர்களினூடாக
அவை கடந்து மறைகின்றன,
நீரும் பாறையும் காற்றும்.
April 19, 2021
மகிழ் ஆதனின் கவிதைகள்
நகுலன் “எட்டு வயது பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும்” என்றொரு கதை எழுதியிருக்கிறார். இந்தக் கதைஅவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் சிமி என்ற சிறுமியைப் பற்றியது. ஒரு நாள் அவள் நகுலனிடம் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டும் என்று கேட்கிறாள். அவர் குஞ்சுண்ணி என்ற மலையாளக் கவிஞரின் புத்தகத்தைத் தருகிறார்.
மறுநாள் அந்தக் கவிதைகளை வாசித்து முடித்துவிட்டு அந்தச் சிறுமி ஒரு கவிதை எழுதிக் கொண்டு வருகிறாள்
“சிமி
குமி
உமிக்கரி” என்ற அந்தக் கவிதையை வாசித்துச் சந்தோஷப்படுகிறார். அது குஞ்சுண்ணி கவிதை போலவே எழுதப்பட்டிருக்கிறது. அதே சொற்சிக்கனம். சந்தம். கவிதையில் வரும் கேலியான குரல். அந்தச் சிறுமியை பாராட்டும் நகுலன்.”கவிதை என்பது சப்த ஒழுங்கால் உருவாவது என்று சிறுமிக்குப் புரிந்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.
கவிஞர் ஆசையின் மகன் மகிழ் ஆதன் எழுதிய நான் தான் உலகத்தை வரைந்தேன் என்ற சிறார் கவிதை நூலை வாசித்தபோது அதே சந்தோஷத்தை அடைந்தேன்.
மகிழ் ஆதனுக்கு இப்போது ஒன்பது வயது. நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை ஆசை தமிழின் முக்கியக் கவிஞர். சிறந்த பத்திரிக்கையாளர்.

பள்ளி வயதில் பலரும் பாடப்புத்தகங்களில் உள்ள கவிதைகளை மனப்பாடம் செய்து எழுதவே தடுமாறும் போது மகிழ் ஆதன் தானே புனைந்து அற்புதமான கவிதைகளை எழுதியிருக்கிறான். அவனது 75 கவிதைகளை ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். வானம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
ஆதனிடம் இயல்பாகக் கவித்துவ உணர்வு பீறிடுகிறது. அவன் சொற்களை எப்படிக் கையாளுவது என்று அறிந்து கொண்டிருக்கிறான். அவனது உலகில் பறவைகளும் வானமும் ஒளியும் மழைத்துளியும் பூக்களும் தானிருக்கின்றன. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் எதுவுமில்லை. கண்ணாடிக் கோளம் ஒன்றில் வசிப்பவன் போல தன்னை உணருகிறான். குட்டி இளவரசன் புதிய கிரகத்தை கண்டுவியப்பதை போலவே ஆதனும் வியக்கிறான்.

பெருநகரங்களில் வசிக்கும் குழந்தைகளைப் பற்றி எப்போதுமே நான் கவலை கொள்ளுவேன். அவர்கள் இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் ஆதனைப் போன்ற சிறுவர்கள் இந்தப் பெருநகர வானில் பறக்கும் பறவைகளை, மழையை, பூக்களை, சூரியனை, நிலவை, மரங்களை நேசிக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம் ஆதனின் பெற்றோர்கள். அவர்கள் அந்த ஜன்னலைத் திறந்துவிட்டிருக்கிறார்கள். பறவைகளை, வானை, மழையின் அற்புதத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அவனுடன் தொடர்ந்து உரையாடியிருக்கிறார்கள். ஏழெட்டு வயதில் இசை கற்றுக் கொள்ளப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால் மகனைக் கவிதையுலகிற்கு அறிமுகம் செய்து அவனுக்குள்ளிருந்த கவித்துவத்தினை வெளிப்படச் செய்யும் பெற்றோர்கள் குறைவே.
அந்த வகையில் ஆசையும் அவரது துணைவியார் சிந்துவும் பாராட்டிற்குரியவர்கள். இசைக்கருவி இல்லாமல் சொற்களைக் கொண்டே இசையை உருவாக்குவது தானே கவிதை.
ஆதனின் உலகில் கோபமேயில்லை. அது ஒரு தூய உலகம். அவனது அப்பா அம்மா தம்பி அவன் நால்வர் மட்டுமேயான சிறிய உலகம். இந்தச் சிறிய உலகத்திற்குள் இருந்தபடியே வானம், சூரியன், நட்சத்திரம், மழை வெளிச்சம் இருள் என இயங்கும் பிரபஞ்சத்தினை வரவேற்று நடனமாடுகிறான் ஆதன். வானைத் தொடப் பறக்கும் பட்டத்தைப் போலவே ஆதனும் செயல்படுகிறான்.
அவன் கவித்துவமான சொற்களைத் தேர்வு செய்யவில்லை. எளிய சொற்களை நீர்க்குமிழிகளைப் போல மாற்றிப் பறக்கவிடுகிறான். உண்மையில் அவனது விளையாட்டு போலத் தான் கவிதையும் செயல்படுகிறது. காற்று அடைக்கபட்டவுடன் பலூனுக்கு ஒரு வசீகரம் உருவாவது போலவே கவிதையில் இடம்பெற்றவுடன் எளிய சொற்கள் அழகாகிவிடுகின்றன.
மகிழ் ஆதனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
மகிழ் நிறைய எழுது. உலகை வண்ணமாக்கு.
ஒரு கவிஞனாக வளர்வது தனித்துவமானது.
••
என் தேன்சிட்டை
என் மூக்கில் உட்கார்ந்து
கவிதை சொல்ல வைப்பேன்
அந்தக் கவிதை
என் முகத்திலிருந்து
பளிச்சின்னு தெரிகிறது
••
ரோஜாப்பூ
என்னை மோந்து பார்த்து
மோந்து பார்த்து
பார்த்தே விட்டது
••
என் வெயில்
என் முகத்திலே பட்டு
நினைவாய் ஆகிறது
••
என் பட்டத்தில்
நான் பறப்பேன்
நான் பறக்குறதை
அந்தக் காற்று கண்டுபிடித்து
என்னைக் கட்டிப்பிடிக்கும்
••
என் நிழல்
எப்படி வருது தெரியுமா
என் மனசாலே வருது
என் இருட்டிலே
பிறந்தது அது
வடிவம் இல்லை
அது பிரகாசம்
••
கண்ணாடி ஒளி
என் மேலே பட்டு
ஒரு அற்புதமான ஒளி வரும்
அந்த ஒளி
என்னை வெயிலாக வரையும்
••
நான் தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச் சென்றேன்
வானம் ன்னைக்
காற்றால் கட்டிப் போட்டது
கட்டுப் போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது
••
கறை படிந்த உறவு.
ராஜீந்தர் சிங் பேதி (Rajinder Singh Bedi) உருது மொழியின் முக்கிய எழுத்தாளர். பேதியின் நாவல் மற்றும் சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன. உருதுக் கதைகள் என்ற சிறுகதைத்தொகுப்பில் உங்கள் துயரை எனக்குத் தாருங்கள் என்று ஒரு கதையிருக்கிறது மிக அற்புதமான கதையது. ராஜீந்தர் சிங் பேதியின் பொலிவு இழந்த போர்வை நாவலை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.
இந்தி சினிமாவில் அவரது பங்களிப்பு பற்றிச் சதத் ஹசன் மண்டோ விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் அசோகமித்ரனும் ராஜீந்தர் சிங் பேதி வசனம் எழுதிய இந்திப்படங்கள் பற்றி எழுதியிருக்கிறார்.
எட்டு சிறுகதைத் தொகுப்புகள். இரண்டு நாடகங்கள் ஒரு குறுநாவல் ஒரு நாவல், மற்றும் இருபத்தியேழு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

லாகூரில் பிறந்த ராஜீந்தர் சிங் பேதி தபால் துறையில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு வேலையைத் துறந்துவிட்டார். பின்பு ரேடியோவில் செய்தி ஆசிரியர் பணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அங்கும் அதிகக் காலம் வேலை செய்யவில்லை. சொந்தமாக ஒரு பதிப்பகம் துவங்கி நடத்திவந்தார். 1947ல் இந்தியப் பிரிவினை காரணமாக அவரது பதிப்பகம் அடித்து நொறுக்கப்பட்டது. அகதியாக லாகூரை விட்டு வெளியேறி சிம்லாவில் தஞ்சம் புகுந்தார். ஜம்மு ரேடியோ ஸ்டேஷனில் சில காலம் பணியாற்றினார். மும்பைக்கு வந்த பிறகு அவரது வாழ்க்கை திசைமாறியது. தீவிரமாகச் சினிமாவில் ஈடுபட ஆரம்பித்துச் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவாக மாறினார். அவரே படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். 1949ல் டி.டி.காஸ்யப் உதவியால் badi bahen படத்தில் வசனம் எழுதினார். அதன் வெற்றியைத் தொடர்ந்து பிமல்ராயின் தேவதாஸ், மதுமதி, சோஹ்ராப் மோடியின் மிர்சா காலிப், ரிஷிகேஷ் முகர்ஜியின் அனுராதா போன்ற படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார்
1970ல் சஞ்சீவ் குமார் மற்றும் ரெஹானா சுல்தான் நடித்த தஸ்தக் படத்தை இயக்கினார், இதன் இசை மதன் மோகன் அதன் வெற்றியைத் தொடர்ந்து பாகன் (1973), நவாப் சாஹிப் (1978) மற்றும் ஆன்கின் தேகி (1978). ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார்:

1954 ஆம் ஆண்டில், அமர்குமார், பால்ராஜ் சஹானி, கீதா பாலியுடன் சேர்ந்து சினி கூட்டுறவு என்ற புதிய படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். 1955 ஆம் ஆண்டில், அதன் முதல் படமான கரம் கோட் உருவாக்கப்பட்டது. பால்ராஜ் சாஹ்னி மற்றும் நிருபா ராய் நடித்த இந்தப்படம் பேதியின் சிறுகதை கரம் கோட்டினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது
Ek Chadar Maili Si என்ற நாவல் தான் பொலிவு இழந்த போர்வையாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த நாவலும் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், பஞ்சாபி கூட்டுக்குடும்பம் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளையே கதை விவரிக்கிறது. குதிரைவண்டி ஒட்டியான திலோகா, அவனது மனைவி ராணி எனும் ரானோ அவர்களுக்குள் ஏற்படும் சண்டை அவனது பிள்ளைகள் என நாவல் பஞ்சாபி குடும்பம் ஒன்றின் கதையை விவரிக்கத் துவங்குகிறது.. அருகிலுள்ள மலையிலிருந்த வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் பயணிகளைக் குதிரைவண்டியில் ஏற்றிக் கொண்டு போய்விடுவதன் வழியே சம்பாதிக்கிறான் திலோகா. அவன் ஒரு குடிகாரன். முரடன். பெண் சுகத்திற்காக ஏங்குகிறவன்.
அவன் மனைவி ரானோ இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாள். அவன் தனக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டுமெனில் அவன் விரும்பும் போது அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அவனைத் தவிக்க விட்டுக் காத்திருந்து முடிவில் கருணையளிப்பது போலப் படுக்கையைப் பகிர வேண்டும் என்று நினைக்கிறாள்.
காமத்தின் தவிப்பில் திலோகா அவளது கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறான் ஆனால் குடித்துவிட்டாலோ, அவளை அடிப்பதும் உதைப்பதுமாக மாறிவிடுகிறான். ரானோ உறுதியான பெண். அவள் கணவனுடன் சண்டை போடுவதன் வழியே தான் தன் அன்பைப் பகிர்ந்து கொள்கிறாள். உரிமை தானே சண்டை போட வைக்கிறது என்கிறாள்.
நான்கு குழந்தைகளின் தாயாகிய ரானோ மாமியாரின் அவமானங்களையும் அவதூறுகளையும் அனுபவித்து, தனது மூத்த மகள் பாரியின் கோபத்துக்குப் பயந்து வாழுகிறாள். எதிர்பாராத விதமாக ஒரு நாள் திலோகா கொலை செய்யப்படுகிறான். அதற்குக் காரணம் அவன் ஜமீன்தார்களுக்குத் தேவையான இளம்பெண்களைச் சப்ளை செய்பவன். அப்படி மலைக்கோவிலுக்குப் போன ஒரு இளம் பெண்ணை மடக்கி ஜமீன்தாருக்காகக் கொண்டு போகிறான். அவன் கொண்டுவந்த பெண் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படுகிறாள். இதனால் ஆத்திரமான அந்தப் பெண்ணின் சகோதரன் கோபத்தில் திலோகாவை கொலை செய்கிறான். காவலர்களால் ஜமீன்தார் கைது செய்யப்படுகிறார்.
இந்த நிலையில் குடும்ப வழக்கப்படி அண்ணன் இறந்து போனால் அவன் மனைவியைத் தம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்தார் கூறுகிறார்கள். அப்படி நடக்காவிட்டால் அவள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாள். அவளது மகளைத் துரத்திவிடுவார்கள் என்ற நிலை உருவாகிறது. இதற்குப் பயந்து ரானோ திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள்.
திலோகாவின் தம்பி மங்கலுக்கு இதை ஏற்கமுடியவில்லை. அவன் ரானோவை தாயைப் போல நினைக்கிறான். ஆகவே திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுக்கிறான். அத்தோடு அவனுக்கு ஒரு முஸ்லீம் பெண் மீது ஈர்ப்பு இருக்கிறது.
மங்கலை மிரட்டிக் கட்டாயப்படுத்தி ரானோவிற்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். அவனால் ரானோவின் கணவனாக வாழ முடியவில்லை. ஒரு பெண்ணிற்குப் போர்வை தான் அவளது கணவன். ஆகவே அதன் அடையாளமாக ஒரு போர்வையை ரானோ தலைமீது போர்த்தச் சொல்கிறார்கள். கறைபடிந்த அந்தப் போர்வை தான் நாவலின் குறியீடு.

ரானோவை திருமணம் செய்து கொண்ட போதும் அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. அவளும் அதைப் புரிந்து கொள்கிறாள். உலகிற்காக மட்டும் கணவன் மனைவி போல நடிக்கிறார்கள்.
ஒரு நாள் போதையில் ரானோவை நெருங்குகிறான் மங்கல். தன் கணவனை அனுமதிக்காதது போலவே அவனையும் அடித்துவிரட்டுகிறாள். ஆனால் அவன் பலவந்தமாக அவளை அடைகிறான். அந்த உறவு அவளுக்குப் பிடித்தேயிருக்கிறது. அவர்களுக்குள் கலப்பு நடந்தபிறகு குடும்ப உறவு எளிதாகிவிடுகிறது. இப்போது அவனும் ரானோவும் தம்பதிகளாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்.
நாவல் அத்தோடு முடிந்துவிடுவதில்லை. மாறாகத் திலோகா செய்த தவறுக்காக அவனைக் கொன்றவன் ரானோவின் மகளைத் திருமணம் செய்து கொள்ள முனைகிறான்.
ரானோ மறக்கமுடியாத கதாபாத்திரம். அவளது கோபம் சண்டை இயலாமை தவிப்பு என அத்தனையும் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபிக் குடும்பத்தினுள் உள்ள விசித்திரமான இந்தப் பழக்கம் மகாபாரதத்தை நினைவுபடுத்துகிறது. குடும்பம் தான் உலகம் என நினைக்கிறாள் ரானோ. அவள் படிக்காதவள். உலகம் அறியாதவள். தன் மகளைத் தான் விரும்பும் படியான இடத்தில் திருமணம் செய்ய நினைக்கிறாள். அனுபவம் தான் அவளை வழிநடத்துகிறது. தான் தூக்கி வளர்த்த மங்கலை தான் எப்படித் திருமணம் செய்து கொள்வது என்று தடுமாறுகிறாள். பின்பு குடும்பத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள்.
ரானோவின் மாமியாருக்கு அவளைப் பிடிக்கவேயில்லை. அவள் தொடர்ந்து குற்றம் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். நோயாளியான அவளது மாமனாரால் எவ்விதமாகவும் உதவ முடியவில்லை.
ஒருவகையில் இந்த மாமியார் தான் ரானோவின் திருமணத்திற்கு முக்கியக் காரணம். அவள் ரானோவை தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருந்தால் தான் தன் பேத்தியின் திருமணத்தைத் தான் விரும்பிய படி நடத்த முடியும் என்று நினைக்கிறாள். ஆகவே மறுதிருமணத்தைக் கட்டாயப்படுத்துகிறாள்.
மலை உயரத்தில் கோவில் கட்டி வழிபடப்படும் வைஷ்ணவ தேவி ஒரு புறம் மறுபுறம் குடும்ப சுமைகளை ஏற்று திணறும் ரானோ மறுபக்கம். இருவரும் பெண் தான். இந்தியச் சமூகம் பெண்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு இந்த நாவல் ஒரு முக்கியமான சாட்சியம் என்கிறார் மனநல ஆய்வாளர் சுதிர்காகர். அவர் இந்த நாவலையும் கிருஷ்ண சோப்தியின் மித்ரவந்தி நாவலையும் ஒப்பிட்டுச் சிறப்பான கட்டுரையை எழுதியிருக்கிறார்.
இந்திய நாவல்களில் திருமண உறவு பற்றி எழுதப்பட்டதே அதிகம். இந்தியக் குடும்பத்தின் மையமே திருமணம் தான். மகன் அல்லது மகளின் திருமணம். வேறு மதம் ஜாதியை சேர்ந்த திருமணம். மரபான கூட்டுக்குடும்பத்தில் திருமண உறவால் ஏற்படும் சிக்கல். பொருந்தாத திருமணங்கள் என திருமணத்தை மையமாகக் கொண்டு ஏராளமாக நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ரஷ்ய இலக்கியத்தின் நாயகர்களாக கொண்டாடப்படும் தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் இருவரும் வீழ்ச்சியடைந்த திருமண உறவு பற்றி அதிகம் எழுதியிருக்கிறார்கள். அன்னாகரீனனா திருமண வாழ்வின் சலிப்பில் தான் வெறுமையை அடைகிறாள். விரான்ஸ்கியின் காதல் அவளை மீட்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகிகளுக்கும் பொருந்தாத திருமணமே முக்கியப் பிரச்சனையாக உள்ளது.
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இந்த நாவலை ஆங்கிலத்தில் குஷ்வந்த் சிங் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
125 பக்கமே உள்ள சிறிய நாவல். இன்றளவும் உருது இலக்கியத்தின் கிளாசிக்காகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
•••
April 18, 2021
தலைகீழ் அருவி
புதிய சிறுகதை
“குற்றாலத்துக்குப் போவமா“ என்று சங்கரன் கேட்டபோது அவர்கள் டீக்கடையில் அமர்ந்திருந்தார்கள்.

சங்கரனை மறுப்பது போல மதன் தலையை அசைத்தபடியே சொன்னான்
“அருவியில் இப்போ ஒரு சொட்டுத் தண்ணி கூட இருக்காது. “
“அது தான் நமக்கு வேணும்“
“மொட்டைப்பாறையைப் பாக்க அவ்வளவு தூரம் போகணுமா“
“சீசன்ல குளிக்க நிறையத் தடவை போயிருக்கோம்லே . இப்போ ஒரு தடவை மொட்டைப் பாறையைப் பாத்துட்டு வருவோம்“
“அதுல என்னடா இருக்கு“ என்று கேட்டான் கேசவன்
“உனக்குச் சொன்னா புரியாது. நீ கூடவா காட்டுறேன்“
“சரி சண்டே போகலாம்“
“அதுவரைக்கும் ஏன் வெயிட் பண்ணனும். இன்னைக்கே கிளம்புவோம்“ என்றான் சங்கரன்
“வீட்ல எங்கம்மா ஒரு வேலை சொல்லியிருக்குடா“ என்றான் மதன்
“அதை எல்லாம் வந்து பாத்துகிடலாம்.. எனக்கு இன்னைக்கே அருவியைப் பாக்கணும்“
“ காசு எவ்வளவு வச்சிருக்கே“ என்று கேட்டான் கேசவன்
“என்கிட்ட நூற்றம்பது ரூபா தான் இருக்கு“ என்றான் சங்கரன்
“நீங்க பைபாஸ் பெட்ரோல் பங்க் கிட்ட நில்லுங்க வீட்ல போயி காசு எடுத்துட்டு வர்றேன்“ என்றான் மதன்
சங்கரனின் பைக்கில் கேசவன் ஏறிக் கொண்டான். மதன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பினான்.
சங்ரகனின் யமஹா பைக் மேற்கு நோக்கி செல்ல ஆரம்பித்தது.
••

மூவருக்கும் இருபத்தைந்து வயது நடந்து கொண்டிருந்தது. மூவரும் வேலையற்றிருந்தார்கள். ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தார்கள். ஒன்றாக ஒரே கல்லூரியில் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படித்தார்கள். மூவருக்கும் மேலே படிக்கவிருப்பமில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வசித்த சிறுநகரில் மூன்று திரையரங்குகள் இருந்தன. அதில் வாரம் ஒருமுறை மட்டுமே படம் மாற்றுவார்கள். இரண்டு பெரிய விளையாட்டு மைதானங்கள் இருந்தன. இதைத் தவிர அவர்களுக்குப் போக்கிடமில்லை.
சங்கரன் தான் நினைத்த விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பான். செகண்ட் ஷோ சினிமா என்ன படம் பார்க்க வேண்டும் என்பதில் துவங்கி எந்தக் கடையில் பரோட்டா சாப்பிடுவது என்பது வரை அவன் தான் முடிவு செய்வான்
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து போய்விடுவோம் என்று நினைத்தார்கள். ஆனால் ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. கல்லூரி நாட்களைப் போலவே காலையில் டீக்கடை சந்திப்பு. சிகரெட் டீ வெட்டை அரட்டை. பின்பு வேண்டும் என்றே மதிய சாப்பாட்டினை தவிர்த்துவிடுவது. பிறகு பைக்கில் ரயில்வே காலனியில் இருந்த முருகனைச் சந்திக்கப் போவது. அவன் வீட்டில் கேரமாடுவது. மாலை மறுபடியும் டீக்கடை. கடைமூடும் வரை அரட்டை. பிறகு சாலையோர பரோட்டா கடையில் சாப்பாடு. நைட் செகண்ட் ஷோ. இப்படியாக அவர்கள் வாழ்க்கை கடந்து கொண்டிருந்தது.
சங்கரன் சில படங்களைப் பாடல்களுக்காக மட்டுமே பார்ப்பான். அந்தப் பாட்டு முடிந்தவுடன் தியேட்டரை விட்டு எழுந்து போய்விடுவான். அவன் மட்டுமின்றி உடன் வந்தவர்களையும் வெளியே இழுத்துக் கொண்டு போய்விடுவான்.
படம் விடும்வரை தியேட்டரின் இருண்ட படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். பிறகு பைக்கை எடுத்துக் கொண்டு காரணமேயில்லாமல் ஊரை சுற்றுவார்கள். அடைத்துச் சாத்தப்பட்ட வீதிகளுக்குள் பைக்கில் செல்லும் போது ஆசுவாசமாக இருக்கும். தெரிந்த மனிதர்கள் கண்ணில் படாமல் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது. ரோந்து வரும் போலீஸ்காரர்கள் அனைவருக்கும் அவர்களை நன்றாகத் தெரியும். எதிர்படும் போது சிரித்துக் கொள்வார்கள்.
கல்லூரி முடிக்கும் வரை ஒரு நாள் என்பது மிகச்சிறியதாகக் கைக்குட்டை போல இருந்தது. ஆனால் வேலை தேடத் துவங்கியதும் ஒரு நாள் என்பது தூரத்து அடிவானம் போலாகியிருந்தது. எவ்வளவு நடந்தாலும் அடிவானம் முடியாது தானே.
குற்றால சீசன் சமயத்தில் அவர்கள் மூவரும் பைக்கிலே குற்றாலம் போய்வருவார்கள். தங்குவதற்கு அறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பைக்கை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்கிலோ மூடக்கிடந்த பள்ளிக்கூடத்திலோ படுத்துக் கொள்வார்கள்.
சீசனில் குற்றாலம் திருவிழா போலாகிவிடும். ஈரஉடைகளுடன் நடந்து செல்லும் பெண்கள். எண்ணெய் தேய்த்த உடலுடன் நடந்து செல்லும் ஆண்கள். பருத்த தொப்பைகள். குழந்தைகள் கையிலிருந்த வடையை இனிப்பை பறித்துச் செல்லும் குரங்குகள். மின்சாரக் கம்பத்தில் தாவி ஆடும் குரங்கு குட்டிகள். . வாழை இலையை மென்றபடியே நிற்கும் கோவில்மாடு. மங்குஸ்தான் பழம் விற்கும் கிழவர். அப்பளக்கடைகள். பிளாஸ்டிக் பொருள் விற்கும் கடைகள். சிறிய உணவகங்கள். அதில் தட்டில் அடுக்கி வைக்கபட்டிருக்கும் பூரிகள்.
சிவப்புப் பச்சை நிற கதர்துண்டுகள். ஆர்ப்பரிக்கும் அருவி. அதை நெருங்க நெருங்க தானாக வெட்கமும் கூச்சமும் கலந்து ஒளிரும் முகங்கள். குளித்துத் திரும்புகிறவர்களிடம் அலாதியான சாந்தம் இருப்பதைச் சங்கரன் பலமுறை கண்டிருக்கிறான்.

ஒருவாரமோ பத்துநாட்களோ அவர்கள் குற்றாலத்தில் தங்கியிருப்பார்கள். ஒரு அருவியிலிருந்து இன்னொரு அருவிக்கு எனப் பைக்கில் சுற்றியலைவார்கள். சில நேரம் பைக்கை மரநிழலில் நிறுத்திவிட்டு தேனருவிக்குச் செல்ல மலையேறுவார்கள். காடு விசித்திரமானது. விநோத ஒசைகளும் மர்மமும் கொண்டது. அந்த மலைவழியாகக் கேரளா போய்விடலாம் என்பார்கள். ஒருமுறை போய்வர வேண்டும் என்று சங்கரன் ஆசை கொண்டிருந்தான். சீசனில் பகலில் மட்டுமின்றிப் பின்னிரவிலும் அருவியில் போய்க் குளித்து வருவார்கள். இரவில் தண்ணீரின் குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஒவ்வொரு நாளும் செங்கோட்டை பார்டர் கடையில் போய்ப் பிய்த்துப் போட்ட கோழியும் பரோட்டாவும் சாப்பிடுவார்கள்.
வேலையில்லாத போதும் அவர்கள் சீசனுக்குக் குற்றாலம் போய்வருவது நிற்கவில்லை. ஆனால் இவ்வளவு சந்தோஷங்களை அனுபவிக்கும் போது மனதில் குற்றவுணர்ச்சி எழவே செய்கிறது. ஒருவகையில் இந்தக் குற்றவுணர்ச்சியைப் புதைப்பதற்காகவே கூட அவர்கள் அருவிக்கு வருகிறார்கள் எனலாம்
மூவரின் வீட்டிலும் வேலை தேடியது போதும் கிடைக்கிற வேலையைப் பாத்துக் கொள் என்று கண்டித்துவிட்டார்கள். அதிலும் கேசவனின் அய்யா அவனை மிட்டாய் கடையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார் அவனுக்குப் போவதில் விருப்பமில்லை. கடையில் மிக்சர் விற்பதற்கு எதற்காகப் பிஎஸ்ஸி பிசிக்ஸ் படிக்க வேண்டும்.
சங்கரன் வீட்டில் அவனை டெல்லியிலுள்ள அக்கா வீட்டிற்குப் போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
மதன் வீட்டில் மட்டும் தான் இதைப் பற்றி அதிகம் பேசவில்லை. அவனது அப்பா அம்மா இரண்டு பேரும் ஆசிரியர்கள். ஒரே பையன் ஆகவே அவனாக வேலை தேடிக் கொள்ளும் வரை அன்றாடச் செலவிற்குப் பணம் கொடுத்தார்கள். அவன் தான் குற்றால சீசனின் போது மொத்த செலவையும் ஏற்றுக் கொள்வான்
சீசன் துவங்கிய சில வாரங்களில் அவர்கள் ஊரிலிருந்து கிளம்பி கிராமசாலைகள் வழியாகப் பயணிப்பார்கள்.
ராஜபாளையத்தைத் தாண்டியதுமே காற்றில் ஈரம் படர்ந்திருப்பதை நன்றாக உணர முடியும். தென்காசியைத் தொட்டவுடனே சாரல் அடித்துக் கொண்டிருக்கும். சாரலுக்குள் பைக்கை ஒட்டுவது அலாதியான சுகம். நனைந்தபடியே அவர்கள் பைக்கில் குற்றாலத்தை நோக்கிப் போவார்கள். ஈரமான சாலைகள். ஈரமான கட்டிடங்கள். ஈரமான பேருந்துகள். ஈரமான மனிதர்கள். குளிப்பது இவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்பதைக் குற்றாலம் வந்த போது தான் உணருவார்கள்.
குளிக்கக் குளிக்கப் பசி அதிகமாகும். தேடித்தேடி விதவிதமாகச் சாப்பிடுவார்கள். சீசன் காலத்தில் குற்றாலத்தில் இட்லிகளுக்குக் கூடத் தனிருசி வந்துவிடுகிறது. அதுவும் தண்ணீராக ஒடும் சாம்பாரை, சட்னியை தொட்டு சாப்பிடுவது அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு முறை இட்லிக் கடை ஐயர் சொன்னார்
“அது தண்ணி ருசி. அப்புறம் குளிர்ந்த உடம்புக்கு சூடான இட்லி ருசி குடுக்கத்தான் செய்யும்“
ஆளுக்குப் பனிரெண்டு இட்லி மூன்று வடை வரை சாப்பிடுவார்கள். எத்தனை முறை வந்தாலும் அருவியின் வசீகரம் குறைவதேயில்லை. அருவிக்கரையில் காணும் மனிதர்களின் வசீகரமும் அப்படித்தான். அருவியிலிருந்து ஈரம் சொட்ட வெளியே வரும் பெண்களில் அழகில்லாதவர்கள் யார். அருவி மனிதர்களை வயதைக் கரைத்துவிடுகிறது.
••
மதன் வருவதற்காக அவர்கள் பெட்ரோல்பங்க் முன்னாடி காத்துகிடந்தார்கள். போனவுடனே திரும்பிவருவதாகச் சொன்னவனைக் காணவில்லை. சங்கரன் ஒரு சிகரெட்டினை பற்ற வைத்துக் கொண்டான். கேசவன் சாலையோரம் பதநீர் விற்கிறவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
மதன் வந்தபோது மதியம் இரண்டு மணியாகியிருந்தது. மதன் குளித்துவிட்டுச் சிவப்பு வண்ண டீசர்ட் அணிந்து வந்திருந்தான்
“வீட்ல போயி குளிச்சிட்டா வர்றே“ என்று கோபமாகக் கேட்டான் சங்கரன்
“ஆமா. அருவியில் தண்ணி வராதே“ என்று சிரித்தான் மதன். அவன் போட்டிருந்த சார்லி செண்ட் வாசனையை நுகர்ந்தபடியே கேசவ் சொன்னான்.
“போறவழியில் சாப்பிட்டு கிடலாம்“
கானலோடிய நெடுஞ்சாலை முடிவற்று நீண்டு சென்றது. ஒரு லாரியை பின்தொடர்ந்தபடியே சங்கரன் பைக்கில் செல்ல ஆரம்பித்தான். மதன் அவர்களை முந்திச் சென்றிருந்தான். மரங்களே இல்லாத சாலை. தார் உருகும் வெயில்.
வானிலிருந்து பேரருவியென வெயில் வழிந்து கொண்டிருந்தது. அவர்களின் பைக் வேகமெடுத்தது. தண்ணீருக்குள் நீந்தும் மீனைப் போல வெயிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தார்கள்.
சின்னஞ்சிறிய கிராமங்கள் வெயிலில் உலர்ந்து கொண்டிருந்தன. கடந்து செல்லும் பேருந்துகளில் வாடிய முகங்கள். சுண்ணாம்பு உதிர்ந்து போன தூரத்துக் கட்டிடங்கள். சாலையோர மின்கம்பிகளின் விநோத ஊசலாட்டம். ஆள் இல்லாத பேருந்து நிறுத்தங்கள். தலையில் முக்காடு போட்டபடி டிராக்டரில் செல்லும் ஆட்கள். சாலையைக் கடக்க முயன்று நடுவழியில் ஒரு நாய் அடிபட்டு செத்துப் போயிருந்தது. அந்த ரத்தம் உறைந்த தார்சாலையினைக் கடந்தார்கள்.
இரண்டு மணி நேரப் பயணத்தின் பின்பு செக் போஸ்டினை அடுத்த ஹனீபா பரோட்டா கடையில் நிறுத்தி சாப்பிட்டார்கள். பரோட்டாவிலும் வெயில் கலந்திருந்தது. ஹோட்டல் ரேடியோவில் மலேசியா வாசுதேவன் ஆகாயக் கங்கைபூந்தேன் மலர் சூடி எனப் பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பாடலை அங்கே கேட்க பிடித்திருந்தது.
பரோட்டா சாப்பிட்டபடியே கேசவ் கேட்டான்
“தர்மயுத்தம் தானே“
“ஆமா சென்ட்ரல் தியேட்டர்ல பாத்தோம்“ என்றான் மதன்
“ எம்.ஜி.வல்லபன் எழுதின பாட்டு “ என்றான் சங்கரன்.
அந்தப் பாடல் வெயிலை தாண்டிய குளிர்ச்சியை அவர்களிடம் கொண்டு வந்திருந்தது. பாடலை முணுமுணுத்தபடியே மதன் தன் பைக்கை எடுத்துக் கொண்டான்..
அவர்கள் தென்காசிக்கு வந்து சேர்ந்த போது மணி நான்கரையாகியிருந்தது வேகமாக வந்துவிட்டோம் என்றபடியே ஒரு இளநீர் கடையின் முன்பு நிறுத்தி ஆளுக்கு ஒரு இளநீர் குடித்தார்கள். உப்பேறிய இளநீர். சீசனில் குடித்த இளநீர் நினைவில் வந்து போனது. தென்காசி உலர்ந்து வெயிலேறி இருந்தது. சீரற்ற சாலைகள். நகரப் பேருந்து கடந்து செல்லும் போது ஆள் உயரத்திற்குப் புழுதி பறந்தது
“இந்த பக்கம் எல்லாம் சம்மர்ல குடி தண்ணீர் கிடைக்காது. பயங்கரத் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். குற்றாலத்தில் குடியிருக்கிறவங்க பாடு திண்டாட்டம் தான்“.
“எல்லா வீட்லயும் போர் போட்ருப்பாங்க. ஆனாலும் அருவி தண்ணி மாதிரி வருமா“ எனக்கேட்டான் கேசவ்
அவர்கள் குற்றாலத்தை நோக்கிச் செல்லும் போது தூரத்துப் பொதிகை மலை தெரிய ஆரம்பித்தது. சீசனில் தென்படும் நீலமேகங்களில்லை. குளிர்ச்சியில்லை. அறுவடைக்குப் பிந்திய வயலைப் போன்ற வெறுமை. பசுமையின் தடயமேயில்லை. காய்ந்து போன நத்தைக் கூடு போலிருந்துது குற்றாலம்
குற்றாலத்தின் நுழைவாயிலில் பேருந்து நிலையம். அதன் முன்னே சீசனில் எவ்வளவு டீக்கடைகள். ஜனக்கூட்டம். இன்றைக்கு ஒரு ஆள் தென்படவில்லை. பேருந்து நிலையமே காலியாக இருந்தது. அருவியை நோக்கி செல்லும் பாதையில் அவர்கள் பைக் போன போது ஒரு கிழவர் குப்பைக் கூடையோடு நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு டீக்கடைகளைத் தவிர அந்தப் பகுதி வெறிச்சோடியிருந்தது
குற்றாலநாதர் கோவிலின் முன்னே இரண்டு பெண்களைக் காணமுடிந்தது. சங்கரன் நினைவில் செண்பக மலர்கள் வந்து போயின நான்கு குரங்குகள் பாலத்தை ஒட்டிய மரத்தில் அமர்ந்திருந்தன.

கேசவன் சொன்னது போல மொட்டைப் பாறை தானிருந்தது. அது தான் பேரருவி என்றால் நம்ப முடியாது. தண்ணீர் வடிந்துவடிந்து பாறையின் வடிவம் மாறியிருந்தது. அவர்கள் பைக்கை அருவியின் ஆர்ச் வழியாக உள்ளே போய் நிறுத்தினார்கள். முன்பு ஒரு காவலாளி இருப்பார். அன்றைக்கு அவரையும் காணவில்லை. பைக்கை நிறுத்திவிட்டு சங்கரன் கிழே இறங்கி நடந்தான்.
ஆள் இல்லாத அருவியைக் காணுவது சங்கரனுக்குப் பிடித்திருந்தது.
யானையை வேடிக்கை பார்ப்பது போல அந்தப் பாறையைச் சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதுல பாக்குறதுக்கு என்னடா இருக்கு“ என்று கேட்டான் மதன்
“ஒரு துளி ஈரமில்லை பாரேன். “
பாறை இடுக்கில் முளைத்திருந்த சிறுசெடி ஒன்றை காட்டியபடியே கேசவ் சொன்னான்
“கண்ணுக்குத் தெரியாமல் ஈரமிருக்கு“
“கண்ணுக்குத் தெரியாமல் அருவியே இருக்கு“ என்று கைகளை உயர்த்திக் காட்டினான் சங்கரன்/ அவன் என்ன சொல்கிறான் எனப்புரியாமல் கேசவ் சிரித்தான்.
அருவியின் முன்னால் நிற்கிறோம் என்ற உணர்வே எழவில்லை. இடிந்து கிடந்த அரண்மனை ஒன்றின் முன் நிற்கும் போது ஏற்படும் உணர்வு போலவே இருந்தது.
மதன் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.
“அடுத்த வருஷ சீசனுக்கு நான் வரமாட்டேன். டெல்லி போயிருவேன் என்றான் சங்கரன்“
“நீயில்லாட்டி நாங்களும் வரமாட்டோம்“ என்றான் மதன்
“ டெல்லிக்கு போயிட்டா நான் திரும்பி ஊருக்கே வரமாட்டேன். எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவேயில்லை. அப்படியே நார்த் இந்தியாவில செட்டில் ஆகிடுவேன். “
“உனக்கு என்னப்பா உங்க அக்கா ஹெல்ப் பண்ணுவாங்க. நான் எங்க போறது “என்று கேட்டான் கேசவன்
“வேலை சம்பாத்தியம் கல்யாணம் குடும்பம் இவ்வளவு தானா வாழ்க்கை. எரிச்சலா இருக்குடா. இதைத் தான் எங்கப்பா செய்தார். எங்க தாத்தா செய்தார். நானும் இதே செக்கைத் தான் சுத்திகிட்டு இருக்கணுமா“
“வேற என்ன செய்ய முடியும் சொல்லு“
“தெரியலை. ஆனா கடுப்பா இருக்கு“
“இதை பேசுறதுக்குத் தானா குற்றாலம் வந்தோம். வேற ஏதாவது பேசுவோம்டா. வேலை வேலைனு கேட்டுச் சலிச்சி போச்சு“ என்றான் மதன்
சங்கரன் எதையும் பேசவில்லை. அவன் பாறையைக் கைகளால் தொட்டுத் தடவி கொண்டிருந்தான். என்ன தேடுகிறான். எதை அடைகிறான் என்று தெரியவில்லை. கல்லில் செதுக்கபட்டிருந்த சிவலிங்கத்தைத் தொட்டுப் பார்த்தான். அருவியின் வேகத்தில் தரையில் ஏற்பட்டிருந்த குழிகளைத் தன் கால்விரல்களால் நோண்டினான் சங்கரன். குரங்குகள் தாவிப் போவது போலத் தாவித்தாவி அருவியின் உச்சியை அடைய வேண்டும் போலிருந்தது.
கிழே கிடந்த சிகரெட் பாக்கெட் ஒன்றினை எடுத்துக் கேமிரா போலச் செய்து அதைக் கொண்டு சங்கரனை கிளிக் கிளிக் எனப் போட்டோ எடுத்தான் கேசவன். அந்த விளையாட்டினை ரசிப்பவனைப் போலச் சங்கரன் போஸ் கொடுத்தான்
“நீங்க விளையாண்டுகிட்டு இருங்க. நான் ஐந்தருவி வரைக்கும் போயிட்டு வர்றேன்“ என்றான் மதன்
அவன் பைக் கிளம்பியதும் சங்கரனும் தன் பைக்கை எடுத்துக் கொண்டான்.
அவர்கள் பைக்கில் ஐந்தருவிக்கு போய் வந்தார்கள். அங்கும் தண்ணீர் இல்லை. சீசனுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன. ஐந்தருவி சாலையில் இருந்த காலியான விடுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடப்பதை காண முடிந்தது. ஊரைச்சுற்றியிருந்த மாந்தோப்புகளில் ஆட்கள் தென்பட்டார்கள்.
தண்ணீர் இல்லாத போது அருவிகள் யாவும் ஒன்றுபோலவே தோற்றம் அளிக்கின்றன. இந்தப் பெயர்கள் எல்லாம் வெறும் அடையாளங்கள். திருவிழாக்கூட்டத்தில் நம் அடையாளம் அழிந்துவிடுவது போன்றது தான் இதுவும்.
பழைய குற்றால அருவியின் முன்பு அவர்களைத் தவிர யாருமேயில்லை. கூந்தலை மழித்துக் கொண்ட இளம்பெண்ணைப் போலிருந்தது அந்த அருவி. ஒருமுறை அங்கே தன்னுடைய வாட்சை தொலைத்திருக்கிறான் மதன். அதை நினைவு கொண்டபடியே சொன்னான்
“இந்த இடத்துல தான் சட்டையும் வாட்சையும் கழட்டி வைத்தேன்“
“குரங்கு தூக்கிட்டு போயிருக்கும்“ என்று கேலியாகச் சொன்னான் கேசவ்
“இத்தனை வருஷம் கழிச்சும் அதை நீ மறக்கலையா“ எனக்கேட்டான் சங்கரன்
“நீ கூட ஒரு தடவை போலீஸகார்ன்கிட்டே அடி வாங்கினயே, அதை மற்ந்துட்டயா “என்று கேசவ்வை நோக்கி கேட்டான் மதன்.
“ஆள் தெரியாமல் அடிச்சிட்டான்“
“பொம்பளை பிள்ளை குளிக்கிற இடத்துக்குப் போனதுக்குத் தானே அடி வாங்குனே. அதை ஏன்டா மறைக்குறே“ என்றான் சங்கரன்
கேசவ் சிரித்தபடியே சொன்னான்
“அது ஒரு பொண்ணு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சி“
மூவரும் சிரித்தார்கள். இருட்டும் வரை அவர்கள் பழைய குற்றாலத்தின் படியில் அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்
இரவு ஒன்பது மணி அளவில் செங்கோட்டைக்குப் போய்ச் சாப்பிட்டார்கள்.
“ஊருக்கு கிளம்புவமா “எனக்கேட்டான் மதன்
“நாம திரும்ப மெயின் பால்ஸ்க்கு போவோம்“ என்றான் சங்கரன்
“அங்கே போய் என்னடா செய்றது“ எனக்கேட்டான் கேசவ்
“அருவி விழுகிற இடத்துல நைட் புல்லா படுத்துகிடப்போம். “
“அதுல என்னடா சந்தோஷம் இருக்கு“
“அருவி விழும் போது அப்படி நம்மாலே படுக்க முடியுமா. இப்போ படுத்தால் தான் உண்டு நம்மளை தவிர யாரும் அப்படிப் படுத்து தூங்கி இருக்க மாட்டாங்க“
சரி போவோம் என அவர்கள் மீண்டும் குற்றாலத்திற்குத் திரும்பினார்கள். இரவில் குற்றாலம் உருமாறியிருந்தது. மலைகள் இருளினுள் ஒடுங்கியிருந்தன. மரங்களில் அசைவேயில்லை. பேருந்து நிலையத்தை ஒட்டி இரண்டு காவலர்கள் நிற்பதைக் கண்டான் மதன். அவர்கள் ஒரு வேன் டிரைவரோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. பாலத்தை ஒட்டிய இரவு விளக்கு விட்டுவிட்டு மினுக்கியபடியே எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் அருவியின் அடியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். சிறுவயதில் தாத்தாவிடம் கதை கேட்கும் போது அரக்கனின் பெரிய வாயை பற்றித் தாத்தா விரிவாகச் சொல்லுவார் .நீரற்ற அந்தப் பாறையைக் காணும் போது அந்த நினைவு வந்து போனது.

சங்கரன் அருவி விழும் இடத்தில் படுத்துக் கொண்டான். அவன் அருகில் மதனும் கேசவனும் உட்கார்ந்து கொண்டார்கள்.
“தரையில்படுத்துக் கொண்டு அருவியைப் பார்ப்பது ரொம்ப விசித்திரமாக இருக்கு“ என்றான் சங்கரன்
“பாலச்சந்தர் படத்துல அருவி பின்னாடி போற ஒரு ஷாட் இருக்கு“ என்றான் கேசவ்
“அருவி ஒரு போதும் பின்னாடி போகாது. “ என்றான் மதன்
“திடீர்னு அருவி பொங்கி வந்துட்டா எப்படியிருக்கும்“ என்று கேட்டான் கேசச்
“நாம காலி“ என்றான் மதன்
சங்கரன் அதைப் பொருட்படுத்தியது போலத் தெரியவில்லை. அருவி வழியத் துவங்கியது போல வானை பார்த்தபடியே இருந்தான். பூமியில் ஒரு சிறுசெடி போலாகிவிட்டது போல உணர்ந்தான். வேண்டுமென்றே முகம் தரையில் படப் புரண்டு படுத்துக் கொண்டான். அவனைத் தொந்தரவு செய்யாமல் மதனும் கேசவனும் படுத்துக் கொண்டார்கள். பின்பு அவர்களும் படுத்துக் கொண்டார்கள்.
பின்னிரவு மணி மூன்றைத் தொடும் போது அவர்கள் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். வழியில் எங்காவது டீக்கடை தென்படுமா எனப் பார்த்தபடியே வந்தான் மதன்
தென்காசியைக் கடக்கும் போது ரோந்து நிற்கும் போலீஸ் ஜீப் தெரிந்தது. இந்த நேரம் எதற்காக நிற்கிறார்கள் என்பது போலப் பைக்கை மெதுவாக ஒட்டினான். லாரிகளை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார்கள்
அவர்களின் பைக்கை கண்டதும் ஒரு கான்ஸ்டபிள் கையைக் காட்டி நிறுத்தினார்
குடித்திருக்கிறார்களா என்று ஊதிப் பார்த்தார்.
“ குடிக்கவில்லை“ என்று மதன் சொன்னான்
“எங்கே போயிட்டு வர்றீங்க“என்று கேட்டார் அந்தக் கான்ஸ்டபிள்
“குற்றாலத்துக்கு“ என்றான் கேசவ்
“தண்ணீயே வரலையே.. குற்றாலத்துல் உங்களுக்கு என்ன ஜோலி. பிகர் எதையாவது கூட்டிகிட்டு வந்தீங்களா“ எனக்கேட்டார் கான்ஸ்டபிள்
“சும்மா வந்தோம்“ என்றான் சங்கரன்
“எந்த ஊரு.. லைசன்ஸ் எடுங்க“ என்று கான்ஸ்டபிள் கடுமையான குரலில் சொன்னார்
சங்கரனும் மதனும் தன் பர்ஸில் இருந்து லைசன்ஸை எடுத்துக் காட்டினார்கள்
“இன்ஸ்பெக்டர் கிட்ட வந்து சொல்லுங்க“ என்றபடியே அந்தக் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தார்
சங்கரன் பைக்கை நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்டரை நோக்கி நடந்தான். மதன் அவன் பின்னாடியே சென்றான்
இன்ஸ்பெக்டர் சங்கரனின் லைசன்ஸை பார்த்தபடியே கேட்டார்
“தண்ணியே வரலையே.. குற்றாலத்துல என்ன மசிரை பாக்க வந்தீங்க. உள்ளதை சொல்லுங்கடா“.
“சும்மா தான் சார் வந்தோம்“ என்றான் மதன்
“இவ்வளவு நேரம் எங்கே இருந்தீங்க“
“அருவிகிட்ட“
“அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க“
“படுத்துக்கிடந்தோம்“
“கஞ்சா போடுவீங்களா“ என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்
“பழக்கமில்லை சார். “
“பிறகு எதுக்கு அங்கே படுத்துகிடந்தீங்க. “
சங்கரன் பதில் சொல்லவில்லை
“நீ எங்க வேலை பாக்குறே“ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்
“வேலை தேடிகிட்டு இருக்கேன்“ என்றான் சங்கரன்
“வேலை வெட்டி இல்லாத மசிரு.. வீட்ல பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தானே. திங்குறது தண்டச் சோறு. இதுல ஊர் சுத்துறதுக்கு வெட்கமாயில்லை“
சங்கரனுக்கு அது அவனது அப்பாவின் குரல் போலவே கேட்டது.
“இவங்க மூணுபேரையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போங்க. காலையில விசாரிப்போம்“ என்றபடியே இன்ஸ்பெக்டர் தன்னுடைய ஜீப்பில் கிளம்பிப் போனார்
“என் பின்னாடியே வாங்க“ என்றபடியே கான்ஸ்டபிள் தன் பைக்கை எடுக்க முனைந்தார். மதன் அந்தக் கான்ஸ்டபிளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவர் மறுத்துக் கோவித்துக் கொண்டார். பிறகு அவன் தன் பர்ஸில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாயினையும் எடுத்துக் கான்ஸ்டபிளிடம் கொடுத்தான்.
அவர் இனிமேல் அவர்கள் குற்றாலம் பக்கவே வரக்கூடாது என்று எச்சரிக்கை பண்ணி விரட்டிவிட்டார்.
“பைக்கை எடுறா “என்று கோபமாகச் சொன்னான் மதன்
சங்கரன் பைக்கை எடுத்தான். பாலத்தை ஒட்டி வந்த போது மதனின் பைக் நின்றது. அவன் கோபத்துடன் சொன்னான்
“உன்னாலே தான்டா தேவையில்லாமல் பிரசச்னை“
“நான் என்னடா செய்தேன். “ என்றான் சங்கரன்
“ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போயிந்தா.. ரிமாண்ட் பண்ணியிருப்பாங்க“
“நாம என்னடா தப்பு பண்ணிணோம். “
“உனக்கு சொன்னா புரியாது. பட்டு அவமானப்பட்டா தான் தெரியும். நாங்க கிளம்புறோம். நீ வந்து சேரு “என்றபடியே மதன் தன்னுடைய பைக்கில் கேசவனை ஏறிக் கொள்ளசொன்னான்.
அந்தப் பைக் கண்ணை விட்டு மறையும் வரை சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தான். ஒரு லாரி அவனைக் கடந்து போனது. ஏதோ நினைத்துக் கொண்டவன் போலக் குற்றாலத்தை நோக்கி மறுபடியும் தன் பைக்கில் கிளம்பத் துவங்கியிருந்தான்.
••
April 17, 2021
மழையின் கடவுள்
பாலுமகேந்திரா அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையைத் திரும்ப வாசித்தேன். டேவிட் லீனைச் சந்தித்த நிகழ்வு அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாகச் சினிமா படப்பிடிப்பைப் பார்த்த நினைவு பலருக்குள்ளும் இப்படி வியப்பாகவே பதிந்து போயிருக்கும்.
••
சினிமாவும் நானும்.
பாலுமகேந்திரா

13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் கால கட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன்.
எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர் நிலைப்பள்ளி லைபரேரியிலும் இருந்த அனைத்து ஆங்கில நாவல்களையும் கரைத்துக் குடித்திருந்தேன்.
அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். இயேசு சபைப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்தது. எங்கள் வகுப்பு ஆசிரியராக ஃபாதர் லோரியோ. அமெரிக்கர். மசேச்சுசேட்ஸ் மாகணத்தைச் சேர்ந்த பொஸ்டனைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.பயங்கர சினிமாப் பைத்தியம். சொந்தமாக ஒரு சினிமாப் புரஜெக்டர் வைத்திருந்தார். நன்றாகத் தமிழ் பேசுவார். A.R. ரஹ்மான் பாடல்களைப் போல, ஆங்கில நெடி கலந்த தமிழ்.
தனது 16 mm புரஜெக்டரில் ஒவ்வொரு வெள்ளியன்றும் எங்களுக்கு சினிமா காண்பிப்பார். அப்பொழுது பார்த்தவைதான் ‘Lushiyana story’, ‘The Glass’, ‘The Post’ , ‘ Bicycle Thieves’, ‘Battleship potemkin’ போன்ற படங்கள்.
எங்கள் ஆறாம் வகுப்புக் கும்பல், ஏழு, எட்டு என்று மேலே போகப் போக ஃபாதர் லோரியோவும் எங்களுடன் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை அவரே எங்கள் கிளாஸ் டீச்சர். அதுகாரணம் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை உலக சினிமா பார்ப்பது தொடர்ந்தது. கூடவே ஃபாதர் லோரியோவின் சினிமாப் பைத்தியம் எனக்கும் தொற்றிக் கொண்டது. வருடங்கள் உருள உருள என்னுள்ளே மொட்டாக முளைத்த அந்த சினிமாப் பைத்தியம் பூவாகி, காயாகி, கனியாகி, விதையாகி, விழுந்து முளைத்த செடியாகி, விரிந்து படர்ந்த விருட்சமாகி விட்டிருந்தது.
இதற்கிடையில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. ஆறாம் வகுப்பின் தொடக்கத்தில் ஃபாதர் லோரியோ எங்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துப் போயிருந்தார். பள்ளிக்கூடப் பேருந்தில் ஃபாதர் லோரியோவுடன் நான்கு நாட்கள் ஊர் சுற்றியதை மறக்க முடியாது. ஸ்கூல் பஸ்ஸில் கை தட்டிப் பாட்டுப் பாடி கும்மாளம் போட்டுக் குதூகலிக்கும் நேரம் போக, சற்று ஓய்வான தருணங்களில் பள்ளிக்கூடத்தில் அவர் காண்பித்த சினிமாக்களைப் பற்றி ஃபாதர் லோரியோவுடன் அரட்டையடிப்பது எனக்கு வழக்கமாயிருந்தது. சினிமா பற்றிய எனது ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. எனது தொடர் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுவார்.
அன்று கண்டி என்ற ஊரில் முகாமிட்டிருந்தோம். கொழும்பிலிருந்து அறுபது மைல் தொலைவில் இருந்த அந்த மலை நகரம் பௌத்த மதத்தினரின்
புனிதத் தலங்களில் ஒன்று. நாங்கள் போன சமயம் அங்கு ஆங்கிலப் படமொன்றிற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கேள்விப்பட்டதும் ஃபாதர் லோரியோ குஷியாகிவிட்டார்.அடுத்த நாள் காலை எங்கள் இருபது பேரையும் அழைத்துக்கொண்டு அந்தப் படப் பிடிப்பு நடக்கும் இடத்திற்குப் போயிருந்தார். அங்கு ஏகப்பட்ட வெள்ளைக்காரர்கள். இடையிலே ஒன்றிரண்டு நம் ஆட்கள். எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
அனைவரையும் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். அரைக் காற்சட்டை, கையில்லாத பனியன், கேன்வாஸ் ஷூஸ் என்று படு கம்பீரமாக இருந்தார். அவ்வப்போது அவர் அருகே வந்து ஆளாளுக்கு ஏதோ கேட்டுப் போனார்கள். எல்லோரும் அவரை
டேவிட் என்று பெயர் சொல்லி அழைத்தார்கள். அந்தப் படப்பிடிப்புக் குழுவின் தலைவர் அவர்தான் என்றும் அவர் பெயர் டேவிட் என்றும் என் மனதில் எழுதிக் கொண்டேன்.

பின்னாளில் தான் தெரிந்தது – “டேவிட்” என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர்தான் “டாக்டர் ஷிவாகோ”, “லாரன்ஸ் ஆஃப் அரேபியா”,”ரையன்ஸ் டாட்டர்”, போன்ற திரைக் காவியங்களை இயக்கிய இங்கிலாந்து இயக்குனர் டேவிட் லீன் என்று! நாம் பார்க்கப்போயிருந்த படப்பிடிப்பு “Bridge on the River Kwai” என்ற அவரது படத்திற்கானது என்றும் தெரிந்தது.
டேவிட் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி மூன்று கால்களைக் கொண்ட ஒரு தினுசான ஸ்டாண்டில் எதோ ஒன்று.. கருப்புத் துனியால் மூடப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த இன்னுமொரு வெள்ளைக்காரர் மூடியிருந்த கறுப்புத் துணியை நீக்க, உள்ளே நான் அது வரை பார்த்திராத ஒரு கருவி. அது தான் “மோஷன் பிக்சர் கெமரா” என்று ஃபாதர் லோரியோ எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எனது உடம்பு பூராவும் ஜிவ்வென்று ஏதோ ஒரு உணர்வு. அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கை குறுகுறுத்தது. மனசு ஏங்கியது. அசாத்தியமான ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எனது ஆசையை ஃபாதர் லோரியோவிடம் தெரிவித்தேன்.
” அவரைக் கேள் ” என்று டேவிட்டை சுட்டிக் காட்டினார். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். எல்லோரையும் விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரிடம் பேசக் கூச்சமாக – இல்லை – பயமாக இருந்தது. எனது பயத்தைப் புரிந்து கொண்ட ஃபாதர் லோரியோ என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு டேவிட் அருகே போகிறார். தன்னை அறிமுகம் செய்து கைகுலுக்கியபின் அவர் காதருகே ஏதோ பேசுகிறார். முடிவில் sure! why not..! என்ற டேவிட்டின் கம்பீரமான குரல் மட்டும் எனக்குக் கேட்கிறது. ஃபாதர் லோரியோ என்னைப் பார்த்து ” போ போய் தொட்டுப் பார் ” என்று சிரித்தபடி சைகை காண்பிக்கிறார்.
கெமிரா அருகே செல்கிறேன். அதன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரருக்கு என் விருப்பம் தெரிவிக்கப்படுகிறது. அவர் சற்று விலகிக் கொள்ள அந்தப் பெரிய கெமிராவை நான் தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். தொட்ட மாத்திரத்தில் என் உடல் பூராவும் ஒரு தடவை உதறிப் போடுகிறது.
எங்கள் வீட்டு வாழைத் தோட்டத்தின் மறைவில், என் பிரியப்பட்ட பால்ய சினேகிதி அன்னலட்சுமியின் இள மார்பகங்களைத் தொட்டு தடவிப்பார்த்த பொழுதும், பின்னொரு நாள் அதே வாழைத் தோட்ட மறைவில், அவளைப் படுக்கவைத்து, பாவாடை உயர்த்தி அவள் பிறப்புறுப்பைத் தொட்டுத் தடவிய பொழுதும் என் உடம்பில் ஏற்பட்ட அதே உதறல் – அதே புல்லரிப்பு…
காலையில் படப்பிடிப்புக்குச் சென்று, கறுப்புத் துணி நீக்கி, முதல் முதலாக எனது கெமராவைத் தொடும்பொழுது அந்த உடல் உதறலும் புல்லரிப்பும் இப்பொழுது கூடத் தொடர்கிறது. படப்பிடிப்பு பார்ப்பதற்கென்று நாங்கள் போயிருந்த நாள் ஒரு சாதாரண நாள். மேக மூட்டம் கூடக் கிடையாது.அதுவரை கசமுச என்று பேசிக் கொண்டும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டுமிருந்த படப்பிடிப்புக் குழுவினர் அமைதியாகிறார்கள். நிசப்தம். Total silence…! அந்த இடத்திற்கான
குருவிச் சத்தங்களைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. அதைப் பார்த்து நாங்களும் மௌனமாகிறோம். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த டேவிட் கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரைப் பார்த்து ஏதோ சைகை செய்கிறார். கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரர் கெமிராவை on செய்கிறார்… Rolling…. என்று குரல் கொடுக்கிறார்.. டேவிட் ஒரு வினாடி
தாமதித்து உரத்த சத்தத்தில் – மிக உரத்த சத்தத்தில் ” RAIN ” ! என்று கத்துகிறார்… அந்தக் காட்டுக் கத்தல் என்னைத் திடுக்கிட வைக்கிறது… டேவிட் ” RAIN ” என்று கத்தியதும், மழை கொட்டுகிறது. பெரிய மழை….. ஆச்சரியத்தில் நான் உறைந்து போகிறேன். RAIN என்று கத்தியதுமே மழை பெய்கிறதென்றால், இந்த டேவிட் என்ற மனிதரிடம் எதோ கடவுள்தன்மை இருக்க வேண்டும்…!
ஆறாம் கிளாஸ் படிக்கும் போது கண்டியில் பார்த்த அந்தப் படப்பிடிப்பை, அந்த மழைக்காட்சியைப் பத்தாம் கிளாஸ் படிக்கும்போது எங்களூர் தியேட்டருக்கு வந்த BRIDGE ON THE RIVER KWAI என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்த போது எனக்குள்ளே ஒரு எண்ணம் வலுத்தது.
பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராகத்தான் வருவேன்…
” RAIN ” என்று நான் கத்தினால் மழை பெய்யும்…..!
••
அஞ்சலி
அன்பிற்குரிய நண்பரும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான விவேக் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இருபத்தைந்து ஆண்டுகளாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி .

April 16, 2021
சென்னையும் நானும் -2
சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் சீசன் தற்போது வெளியாகியுள்ளது.
இதன் முதல் பகுதி இணைப்பு.
April 15, 2021
மை டியர் செகாவ்
எனது மகன் ஹரி பிரசாத் இயக்கிய மை டியர் செகாவ் குறும்படம் பூனேயில் நடைபெற்ற சர்வதேசக் குறும்படப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசை பெற்றுள்ளது.


எழுத்தாளர் ஆன்டன் செகாவைத் தீவிரமாக வாசிக்கும் ஒரு வாசகரின் வாழ்வினைச் சொல்லும் இந்தத் திரைப்படம் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹரி பிரசாத் மற்றும் அவனது குழுவினர்களுக்கு எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
