S. Ramakrishnan's Blog, page 132
April 30, 2021
முதல் இந்தியச் சிற்பம்
இந்தியாவின் மிகப்பெரிய பதிப்பாளர் சாகித்ய அகாதமி. 24 மொழிகளில் புத்தகங்களை வெளியிடும் ஒரே நிறுவனம் சாகித்ய அகாதமி மட்டுமே. அரசு நிதி உதவியுடன் செயல்படும் இந்தப் பதிப்பகம் மலிவு விலையில் மிகச்சிறப்பான நூல்களை வெளியிட்டுவருகிறது
சாகித்ய அகாதமி வெளியிடும் புத்தகங்களின் உள் அட்டையில் ஒரு சிற்பத்தின் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது எழுதும் கலையைச் சித்தரிக்கும் முதல் இந்தியச் சிற்பமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு முறை சாகித்ய அகாதமி நூலைக் கையில் எடுக்கும் போதும் இந்தச் சிற்பத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். எத்தனை அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. சிற்பத்தில் இருப்பவர்களின் அமர்ந்த கோலங்களில் தான் எத்தனை வேறுபாடுகள். நளினங்கள். காலை மடக்கி அமர்ந்திருப்பரின் பாதமும் அடிவயிற்றுமடிப்பும் சாமரம் வீசும் பெண்களின் கண்களும் அழகாக உள்ளன.
நாகார்ஜுனகொண்டா (Nagarunakonda) எனப்படும் நாகர் மலை ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கப் பௌத்த ஸ்தலமாகும். மகாயான பௌத்தத்தைப் பரப்பிய பௌத்த அறிஞர் நாகார்ஜுனரின் பெயரால் நாகார்ஜுனகொண்டா என அழைக்கப்படுகிறது.
அங்கே சென்றிருக்கிறேன். தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கிருந்த பௌத்த விகாரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் தங்கிப் பயின்றிருக்கிறார்கள். முக்கியமான பௌத்த கல்வி நிலையமாக செயல்பட்டிருக்கிறது.
சாதவாகன அரசின் வழிவந்த இச்சவாகு மன்னர்களின் தலைநகராக நாகார்ஜுனகொண்டா விளங்கியது. இச்சவாகு மன்னர்களால் தான் இங்கே பௌத்த விகாரைகள் கட்டப்பட்டது. இடிபாடுகளாக உள்ள இந்தத் தொல்லியல் நினைவுச்சின்னத்திலிருந்த கலைப்பொருட்களைத் தற்போது டெல்லி ம்யூசியத்தில் பாதுகாத்து வருகிறார்கள்
இந்தச் சிற்பம் புத்தரின் பிறப்பு குறித்த கனவை விவரிக்கிறது. அரசி மாயாதேவி கண்ட கனவினை மன்னர் சுத்தோதனருக்கு மூன்று நிமித்திகர்கள் பலன் சொல்லுகிறார்கள் அதை ஒரு எழுத்தர் குறிப்பாக எழுதிக் கொண்டிருப்பதைச் சிற்பம் சித்தரிக்கிறது.

எழுதும் கலையைச் சித்தரிக்கும் தொன்மையான சிற்பங்கள் ஓவியம் மிக குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதில் இதுவே மிகப்பழமையானது. இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது.
கனவிற்குப் பலன் சொல்லும் நிமித்திகர்களை இந்தச் சிற்பத்தில் காணுகிறோம். கனவிற்குப் பலன் சொல்வதை ஒரு கலையாகப் பயின்றிருக்கிறார்கள். நிமித்திகர்களின் ஆலோசனைகளைக் கேட்பது அந்நாளைய வழக்கம்.
சிற்பத்தில் நம்மை வசீகரிப்பது அவர்கள் அமர்ந்துள்ள விதம் மற்றும் கால்விரல்கள் கூடத் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ள நுண்மை. சாமரம் வீசும் பெண்கள். நிமித்திகர்களின் முகபாவம். மற்றும் கைமுத்திரை. அவர்களின் தலையலங்காரம். எழுதுகிற நபர் காலை மடித்து உட்கார்ந்துள்ள விதம் மற்றும் அவரது கையிலுள்ள எழுத்தாணி, அவரது முகபாவம் என மிக அற்புதமான சிற்பமாக உள்ளது

சித்ரா பௌர்ணமி நாளில் புத்தரின் தாயார் ராணி மாயா ஒரு விசித்திரமான கனவு கண்டார். கனவில் ஒரு வெள்ளை யானை தோன்றி அவளது உடலின் வலது பக்கத்தைத் தொட்டு அவளுக்குள் சென்று மறைந்தது. மறுநாள் மாயா இந்தக் கனவைப் பற்றித் தன் தன் கணவரிடம் சொன்னபோது, அவர் நிமித்திகர்களைக் கலந்தாலோசிக்கச் சென்றார். அவர்கள் இந்தக் கனவிற்கு விளக்கம் தந்தார்கள். அதன்படி ராணி ஒரு மகனாகக் கருத்தரித்துள்ளார். அந்த மகன் பேரரசனாகவே அல்லது ஒப்பற்ற ஞானியாகவோ வருவான் என்றார்கள். இவ்வாறு தான் புத்தர் பிறந்தார் என்று புத்த ஜாதகக் கதை சொல்கிறது. நிமித்திகர்களின் பலனை எழுதிக் கொள்ளுபவர் முகத்தைப் பாருங்கள். அவரது தோற்றமே விசித்திரமாக உள்ளது. எழுத்தும் படிப்பும் அன்றைக்கே முக்கியமாக இருந்திருக்கிறது என்பதையே இந்தச் சிற்பம் சித்தரிக்கிறது.
மாயாவின் கனவினைச் சித்தரிக்கும் இன்னொரு சிற்பத்தையும் பார்த்திருக்கிறேன். பேரழகான சிற்பமது.
விசித்திரமான கனவுகள் தோன்றுவதும் அதற்கு விளக்கம் தருவதும் ஜாதகக் கதைகளில் நிறைய இடம்பெற்றுள்ளது. புத்தரும் நிறையக் கனவுகளைக் காணுகிறார். புத்தரின் பிறப்பிற்கு மட்டுமின்றி மகாவீரரின் பிறப்பிற்கு முன்பாகவும் அவரது தாய் ராணி த்ரிஷாலாவின் கனவில் ஒரு வெள்ளை யானை தோன்றுகிறது.
அன்னை த்ரிஷாலாவின் பதினான்கு சுப கனவுகளாக அவை விவரிக்கப்படுகின்றன. த்ரிஷாலா பார்த்த முதல் கனவில் வெள்ளையானை வருகிறது. த்ரிஷாலா பார்த்த இரண்டாவது கனவு காளை பற்றியது. அதுவும் வெண்ணிறமானதே. மூன்றாவது கனவில் சிங்கம் தோன்றுகிறது. . இந்தச் சிங்கம் தன்னை நோக்கி இறங்கி வந்து தனது வாய்க்குள் நுழைவதை ராணி காண்கிறாள் . இது போலப் பதினான்கு விதமான கனவுகளை ராணி காணுகிறார்.

வெள்ளையானை ஒரு பெண்ணை மூன்றுமுறை வலம் வந்து அவளது உடலினுள் மறைந்துவிடுவது ஒரு தனித்த சிறுகதை போலவே உள்ளது. வெள்ளையானையை மகத்துவத்தின் குறியீடாகப் பௌத்தம் சொல்கிறது ஆனால் சந்தோஷத்தின் உச்சம் தான் வெள்ளையானை என்று எனக்குத் தோன்றுகிறது.
புத்தர் தனது ஐந்து கனவுகளை நினைவு கூர்ந்து அவற்றை பதிவு செய்திருக்கிறார்.
திபேத்திய ஒவியம் ஒன்றில் பறக்கும் வெள்ளையானை ஒன்றைக் கண்டிருக்கிறேன். யானையின் பறத்தல் மிக வசீகரமானது. வானில் அது ஒரு விசித்திமான பறவையைப் போலவே பறக்கிறது.
நாகார்ஜுனகொண்டா பற்றிப் பிலிம் டிவிசன் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம் மிகச்சிறப்பானது. இதன் பிரதி அத்தனை தரமாகயில்லை. ஆனால் தகவல்கள் சொல்லப்படும் விதமும் காட்சிகளின் கோணமும் சிறப்பாக உள்ளன. குறிப்பாக இசை இந்த ஆவணப்படத்தின் தனிச்சிறப்பு என்பேன்.
April 29, 2021
ஒரு கொசுவின் கதை
பெர்னாண்டோ ஸோரன்டினோ ஸ்பானிய எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மாயமும் விசித்திரமான நிகழ்வுகளும் கொண்டவை. அன்றாட வாழ்க்கையினை இத்தனை நுட்பமாக, குறிப்பாக அதன் அபத்த நிகழ்வுகளை துல்லியமாக யாரும் எழுதியதில்லை. அவர் கொசுவைப் பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

கொசுவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்று தான் எவருக்கும் தோன்றும். வேறு எவராது இந்தக் கதையை எழுதியிருந்தால் இரண்டு வரிகளுக்கு மேல் எழுத இயலாது. ஆனால் ஸோரன்டினோ எத்தனை அழகாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார். கதையை விவரிப்பவர் ஒரு முதியவர். கதையின் தலைப்பு ஒரு தீர்வுக்கான காத்திருப்பு. இந்தக் கதையை தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் எம்.எஸ். ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை என்ற நூலில் இந்தக் கதை உள்ளது

நான் ஒரு கொசுவின் அதிகாரத்திற்குப் பட்டிருக்கிறேன் என்று கதை துவங்குகிறான். கொசுவை மிக மரியாதையாக அவர் என்றே கிழவர் அழைக்கிறார். தன் மீது கொசு மிதமான அதிகாரத்தைத் தான் செலுத்துகிறது சட்டப்பூர்வமாக தான் நடந்து கொள்கிறது என்கிறார். இந்தக் கேலியினுள் ஒளிந்திருப்பது இயலாமை. தவிப்பு. தன்னால் ஒரு சிறிய கொசுவை ஒன்றுமே செய்ய இயலவில்லை. அது சுதந்திரமாக தன் வீட்டில் பறந்து திரிகிறது. தன்னைக் கடிக்கிறது. தப்பிப்போய்விடுகிறது. அதை ஒரேயொரு முறை கொல்ல முயன்று கிழவர் தோற்றுப்போயிருக்கிறார். அதன்பிறகு கொசுவுடன் வாழ ஆரம்பித்துவிட்டார்.
அதிகாரத்திற்கு கீழ்படுவது அவருக்கு வழக்கமானது. ஒரு பூனையின் அறிவு கூட இல்லாத பலர் தன்னை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்று அவரே ஒரு வரியில் சொல்கிறார். ஆகவே கொசுவிடம் அடங்கிப் போவது அவருக்கு புதிய விஷயமில்லை.
அந்த வீட்டில் கொசுவிற்கென ஒரு இடமிருக்கிறது. அது சுவரில் தொங்கும் பழைய ஒவியம். அதில் தான்கொசு ஒளிந்து கொண்டிருக்கிறது. ஸோரன்டினோ கொசுவின் பசியினை, அது சாப்பிடும் முறையை, நீங்கள் விரும்பினாலும் மாற்றிக் கொள்ளாத அதன் உணவு முறையை பகடியாக எழுதிப் போகிறார். இதில் அழகான வரியொன்று பளிச்சிடுகிறது
அதிகாரத்திலிருப்பவர்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்வதில் உள்ள த்ரிலே தனி தான்.
இது கொசுவை குறிக்கும் விஷயமில்லை. ஆனால் இந்த ஆர்வம் கொசுவின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீதும் குவிகிறது. கொசு எப்படி உறங்குகிறது. பகலில் என்ன செய்கிறது என்பதை எல்லாம் கிழவர் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறார். கொசுவைப் பற்றி இவ்வளவு தெரிந்த போதும் அதைக் கொல்ல முடியவில்லை.
நம் வீட்டில் நம் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் ஒரு உலகம் இயங்கி வருகிறது. ஒரு எலி உங்கள் பேச்சைக் கேட்பதில்லை. ஒரு கரப்பான பூச்சி உங்களை ஏமாற்றி உங்களுடன் வாழுகிறது. வண்டுகள் தன் இஷ்டம்போல உணவுப்பொருளை சாப்பிடுகின்றன. பூனைக்கு எதையும் திருடிக் கொள்ளும் உரிமையிருக்கிறது.
இந்தக் கதையில் வரும் கிழவர் கொஞ்சம் கொஞ்சமாக கொசுவோடு இருந்த பகையை விலக்குகிறார். வளர்ப்பு பிராணியைப் போல கொசுவை நடத்துகிறார். அதற்காக உணவு கொண்டு வந்து வைக்கிறார். அது சாப்பிடுவதை ஒளிந்திருந்து பார்க்கிறார். இந்தக் கதையின் வழியே கொசுவைப் பற்றி மட்டுமில்லை. ஒரு கொசுவைப் போல தான் அந்த முதியவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது புலப்படுகிறது. அவருக்கு யாருமில்லை. அவர் நீண்டகாலமாக தனியே வசிக்கிறார். தனிமை உச்சமடையும் போது சிறிய பொருட்கள். சிறிய உயிர்கள் மீது நெருக்கம் உருவாகிவிடுகிறது. ஒருவகையில் அவர் கொசுவைப் பற்றி பேசுவது தன் அலுவலக உயரதிகாரி பற்றி பேசுவது போலவே இருக்கிறது.
அவரது ஒரே நம்பிக்கை கொசு தானே செத்துவிடும் என்று தான். ஆனால் நித்யஜீவி போல அந்தக் கொசு வாழ்ந்தபடியே இருக்கிறது. அப்போது அவருக்கு இரண்டு சந்தேகங்கள் எழுகின்றன. தன் வீட்டில் இருப்பது ஒரு கொசுவல்ல. அது இறந்தவுடன் இன்னொரு கொசு அதன் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. ஆகவே தான் செத்துக்கிடந்த கொசு ஒன்றை ஒரு நாள் காலையில் பார்த்த நினைவு வருகிறது. இரண்டாவது எண்ணம் பலம் பொருத்திய ஒரேயொரு கொசு எப்போதுமிருக்கிறது பலமற்ற கொசுகள் அது போலவே நடித்துக் கொண்டு வாழுகின்றன. இந்த போலிக் கொசுகள் முந்தைய கொசுவினைப் போல தோற்றம் கொண்டிருப்பதால் அதன் இடத்தை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.
இந்த சந்தேகம் அவரைக் குழப்பமடையச் செய்கிறது. ஒரு கொசுவின் அதிகாரத்தின் கீழ் இருந்தபடி ஒரு தீர்விற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கதை முடிகிறது
சிறுகதை எழுதுவதற்கு நிறைய நிகழ்ச்சிகள். அனுபவங்கள் தேவை என்பதிலிருந்து மாறி கதையை ஒரு உருவகம் போலவும் பகடியான சிந்தனைகளின் தொடர்ச்சி போலவும் துண்டிக்கபட்ட நிகழ்வுகள். விநோதமான விவரிப்பு மூலமும் புதிய தளத்திற்கு ஸோரன்டினோ கொண்டு செல்கிறார்.
இதில் என்ன இருக்கிறது என ஒருவாசகர் நினைக்க கூடும். ஆனால் ஸ்பானிய அரசியல் சூழலையும் அதிகாரப் போட்டியினையும் அறிந்து கொள்ளும் போது கதை புதிதாக ஒளிரத் துவங்குகிறது. ஒருவேளை இந்த பின்புலம் தெரியாதவர் கூட கொசு கூட ஒருவரை அதிகாரம் செய்யமுடியும் என்பதை உணர முடியும் தானே.
ஸோரன்டினோ இன்னொரு வரியும் எழுதுகிறார்
தன் மீது கொசு இருபது ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வருகிறது. அந்த கொசுவிற்கு சிரஞ்சீவியாக என்றும் அதிகாரம் தொடர வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. என்கிறார்.
ஒரு கொசுவின் உயிர்வாழ்க்கை ஐந்தாறு நாட்கள் மட்டுமே பெண் கொசுவாக இருந்தால் நூறு நாட்கள் வரை உயிர்வாழும் என்கிறார்கள். ஆனால் இந்தக் கதையில் வரும் கொசு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. சாமானியர்களின் மீது செலுத்தப்படும் அதிகாரத்தினைப் பற்றி பேசுவது போல கதை வளர்கிறது.
கதையை வாசிக்கும் போது செகாவின் பாணியில் அமைந்த கதையிது என்றே தோன்றியது. ஒரே வேறுபாடு செகாவ் இவ்வளவு நுணுக்கங்களை எழுத மாட்டார். நிறைய உரையாடல்கள் இருக்கும்.
இளம் சிறுகதை ஆசிரியருக்கு ஸோரன்டினோவிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
••
••
April 27, 2021
‘ஆதலினால்’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை
எளிமையை விரும்புபவர்களும் எளியோரை நேசிக்கத் தெரிந்தவர்களும் நிச்சயமாக வலியோர்தான். எளியோரின் உலகைப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக நம்மிடம் வாதாடும் மூத்த வழக்குரைஞராகத்தான் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ‘ஆதலினால்’ என்ற இந்தப் புத்தகத்தின் வழியாக எனக்குத் தெரிகிறார்.
அனைவரையும் தன்னில் ஒருவராகக் காணும் கருணைமிக்கவர்களுக்கே அவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் தகுதியும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை எளியவர்கள்! அத்தனை பேரையும் நாம் ஏதாவது ஒரு வகையில் புறக்கணித்துத்தான் வாழ்கிறோம். ஆனால், இந்த எழுத்தாளர் அத்தனைபேரையும் தன் நெஞ்சில் சுமந்தல்லவா நடமாடுகிறார்!.

இந்த ‘ஆதலினால்’ கட்டுரைத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. இவற்றின் வழியாகத் ஒவ்வொரு தனிமனிதரையும் சுயவிமர்சனம் செய்துகொள்ள வைத்துவிடுகிறார் எழுத்தாளர்.
எறும்புகளின் தனியுலகம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? எறும்பு என்பது நம்மைப் பொறுத்தவரையில் நம்மைவிட அது பலகோடி மடங்கு சிறியதொரு உயிர். அதனாலேயே நாம் அதனைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், அந்த எறும்புகளை உற்றுநோக்கினால் நாம் நமக்குரிய அரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் எழுத்தாளர்.
“ எறும்புகள் தன்னால் தூக்கிச் செல்ல முடிந்ததைப் போல பல மடங்கு எடையைத்தான் எப்போதும் இழுத்துக்கொண்டு போகின்றன . அது பேராசையல்ல . மாறாக உழைப்பின் மீதான பெரிய நம்பிக்கை . தன்னால் செய்ய இயலும் என்ற உத்வேகம் . ”
எறும்புகளை முன்வைத்து மனிதர்களின் மனவோட்டத்தையும் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே இட்டுக்கொள்ளும் மனத்தடைகளையும் விளக்கியுள்ளார் எழுத்தாளர்.
“ எறும்பு தனக்கான பாதையை யாராவது அமைத்துத் தருவார்கள் என்று காத்திருப்பதில்லை . தன் பாதையை தானே உருவாக்கிக் கொள்கிறது . எல்லாத் தடைகளையும் தாண்டி அது தன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது . வேறு எந்த உயிரினத்தையும்விட அதிக உயிரிழப்பைச் சந்திப்பது எறும்புகள்தான் . ”
பொதுவாகவே எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளில், குறிப்பாகக் கட்டுரைகளில் மனிதர்களைப் பற்றிய மதிப்பீடு இலைமறைகாயாக இருக்கும்.
“ மனிதர்கள் எப்போதுமே கற்பனையான பயத்திலும் உலகம் தனக்கு மட்டுமேயானது என்று அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ”
மனிதர்களைப் பற்றிய இந்த மதிப்பீடு எழுத்தார் மனிதர்களின் மீதுகொண்ட எள்ளல் அல்ல; இரக்கம்.
“ பிரச்னைகளும் சிக்கல்களும்தான் எப்போதும் நம் நினைவில் பதிந்து போயிருக்கின்றன . இயல்பாக நடைபெறும் எதையும் நாம் சுலபமாக மறந்து போய்விடுகிறோம் . ”
இந்தப் புத்தகத்தின் வழியாக நாம் எண்ணற்ற எளிய மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் ஒருவகையில் நமக்கு அரிய மனிதர்கள்தான். ஒவ்வொரு நாளும் நாம் அவர்களைக் கடந்துதான் செல்கிறோம்.
மகப்பேறு பார்க்கும் செவிலியர்கள், உணவகத்தின் சமையலறையில் இருக்கும் சமையற்காரர்கள், டீக்கடையில் இருக்கும் டீமாஸ்டர்கள், இரவுநேரத்தில் நகரைக் காவல்காக்கும் கூர்க்காக்கள், சிற்பிகள், இந்தியாவுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழும் கிராமத்து மக்கள், மூத்த யாசகர்கள், உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத சிறுகொடைஞர்கள், எல்லோராலும் கைவிடப்பட்டு இரவில் தூங்க இடமற்று நகரில் அலையும் எளியோர், பொதுநலத்துக்காக மட்டுமே வாதாடும் மூத்த வழக்குரைஞர், இயற்கை உபாதையைக் கழிக்கத் தடுமாறும் மாற்றுத்திறனாளர்கள், முடித்திருத்துநர்கள், கல்லறைகளைப் பராமரிப்பவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புத் தேடும் குழந்தை நட்சத்திரம், நகரில் உள்ள தென்னைமரங்களை விரும்பிப் பேணும் கிராமத்தார்கள், திரையிசைப்பாடல்களுக்குப் பின்னணி இசையை மட்டும் வாசிக்கும் இசைஞர்கள், புகைப்படத்தொழிலாளர்கள், குடியை மறக்க முடியாத குடியர்கள், புத்தகங்களைச் சேமிப்பர்கள், சாலைப் பணியாளர்கள், பூக்களையும் பறவைகளையும் ரசிக்கத் தெரியாத ரசனையற்ற மனிதக் கூட்டங்கள் இவர்களைப் பற்றியும் இவர்களோடு தொடர்புடையவர்களைக் குறித்தும்தான் இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர்.
நெடுவழிப்பயணத்திலோ அல்லது பகட்டுக்காகவோ நாம் உணவகங்களுக்குச் செல்ல நேர்கிறது. அங்கு நமக்கு வழங்கப்படும் உணவின் சுவையை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். ஆனால், அந்த உணவைச் சமைத்துத் தந்தவர்களைப் பற்றி நாம் எந்த வகையிலும் சிந்திப்பதே இல்லை.
“ உணவகங்களோடு நமக்குள்ள உறவு உணவருந்தும் மேஜையோடு முடிந்துவிடுகிறது . அதற்குப் பின்னால் உள்ள சமையல் அறையும் அதன் உள்ளே இயங்கும் மனிதர்களும் அவர்களின் சுகதுக்கங்களும் ஒருபோதும் நாம் அறியாதவை . ”
சுவையான உணவினைத் தந்த அவர்களை நாம் ஒருமுறையும் பாராட்டியதே இல்லை. ஆனால், அந்த உணவில் சிறிதேனும் சுவை மாறுபட்டாலோ அல்லது குன்றினாலோ நாம் அதைச் சமைத்தவர்களையும் அந்த உணவகத்தையும் நேரடியாகவோ அல்லது நம் மனத்திற்குள்ளாகவோ திட்டித் தீர்த்துவிடுகிறோம்.
“ ஹோட்டல்களில் உள்ள பெயர்ப் பலகையில் இட்லி , தோசை , சப்பாத்தி என்று நூற்றுக்கணக்கான உணவின் பெயர்கள் இடம்பெறுகின்றன . ஆனால் , அதன் ஒரு மூலையில்கூட அந்த உணவைச் சமைக்கின்றவரின் பெயர் இடம் பெறுவதில்லை . ஏன் இந்த ஓர வஞ்சகம் ? பிரபலமான நட்சத்திர உணவங்கள் தங்களின் சமையற்காரர் யார் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கின்றன . அதே ருசியோடு உணவு தயாரிக்கும் நமது சமையற்கலைஞர்கள் எவருக்கும் ஏன் அந்த மரியாதைகள் கிடைப்பதில்லை . நியாயமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சிறிய அங்கீகாரம் அது . அதைத் தருவதற்குக்கூட எதற்காக மறுக்கிறார்கள் . உணவை ருசித்துவிட்டு , ‘ நன்றாக இருக்கிறது ’ என்று பாராட்ட நாம் முன்வருவதில்லை . அதே நேரம் சற்றே சுவை மாறியிருந்தாலும் நமது கோபம் தலைக்கேறிவிடுகிறது . ஏன் இப்படி நம்மைப் பழக்கி வைத்திருக்கிறோம் ?. ”
இரவில் நமது தூக்கம் களையாத வகையில் நமது உடைமைகளையும் உயிரையும் பாதுகாக்கும் இரவுக்காவலர்களையும் கூர்க்காக்களையும் நாம் என்றேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? கூர்க்காவுக்கு மாதந்தோறும் நாம் பணத்தரும்போது நமது மனநிலை எத்தகையதாக இருக்கிறது? முழுமனத்தோடுதான் அந்த இருபது ரூபாயை நாம் அவர்களுக்குத் தருகிறோமோ?
“ இன்றைக்கும் பின்னிரவில் தெருவில் நடந்துசெல்லும் கூர்க்காவின் ஓசை கேட்கிறது . குளிருக்குத் தலையில் மஃப்ளர் அணிந்தபடியே அதே மனிதன் சாலையில் சென்றுகொண்டிருக்கிறான் . மழையோ , குளிரோ , அவன் கால்கள் முடிவற்று அலைந்து கொண்டேயிருக்கின்றன . அவன் விசில் சப்தம் , ‘ உறக்கமற்ற ஒருவன் இருக்கிறான் ’ என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது . அவன் வி ழிப்பு என் உறக்கத்திற்குத் துணையாகப் பாதுகாப்பையும் நிம்மதியையும் தருகிறது . ”
மாற்றுத்திறனாளர்களுக்கு நாம் செய்யும் சேவைதான் என்ன? நாம் அவர்களுக்குத் தரும் மரியாதை என்ன? எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட உயிரினமா மாற்றுத்திறனாளர்கள்?
“ ஸ்டீவ் ஒண்டர் என்ற பிரபலமான மேற்கத்திய இசைப்பாடகர் இருக்கிறார் . அவர் பார்வையற்றவர் . அவரிடம் , ‘ இவ்வளவு பிரம்மாண்டமான உலகைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? ’ என்று கேட்டதற்கு , அவர் “ எனக்கு இடி , மின்னல் , மழை , வெள்ளம் , பூகம்பம் என எதைப் பற்றியும் பயமில்லை . ஆனால் , என அடுத்த வீட்டில் வசித்துக்கொண்டு இதுவரை என்னை ஒருமுறைகூட அறிமுகம் செய்துகொள்ளாமல் வசிக்கிறானே அந்த மனிதனைக் கண்டுதான் நான் அதிகம் பயப்படுகிறேன் ” என்று சொன்னார் . அதுதான் இன்றைய நிஜம் . ”
‘புத்தகங்களை ஆயுதங்கள்’ என்று கூறுகிறார்கள். அதனால்தானோ என்னவோ புத்தகங்களைக் கையில் வைத்திருப்போரையும் புத்தகங்களைச் சேமிப்போரையும் கண்டு இந்தச் சமுதாயம் அச்சம் கொள்கிறதோ? அவர்களிடமிருந்து புத்தகங்களை அகற்றுவதன் வழியாகவே இந்தச் சமுதாயம் தன்னுடைய பாதுகாப்பை உறுதிசெய்துகொள்கிறதோ?
“ புத்தகங்களோடு உள்ள உறவு மிக அந்தரங்கமானது . அது காரணம் சொல்லிப் புரியவைக்க முடியாதது . மீன் தொட்டிக்குள் நிசப்தமாக நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைப் போலச் சொற்கள் புத்தகங்களுக்குள் நீந்திக் கொண்டிருக்கின்றன . அதன் இயக்கம் நம் கண்கள் அறிவதில்லை . மாறாக மனத்தால் உணரப்படக்கூடியது . வாசிக்கத் துவங்கும் வரை புத்தகம் சலனமற்றது . ஆனால் , புத்தகத்தினுள் பிரவேசித்த பிறகு அது பெரும் ஆரண்யம் என விரிந்து செல்லத் துவங்குகிறது . ”
‘புத்தகப்புழு’க்களாக வாழும் எத்தனையோ அறிவாளர்களை இந்தச் சமுதாயம் பிழைக்கத் தெரியாதவர்களாகவும் சோம்பேறிகளாகவும்தான் கருதுகிறது. அவர்களுக்கும் அவர்கள் சேமித்த புத்தகங்களுக்குமான உறவை இந்தச் சமுதாயம் ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை.
“ புத்தகங்கள் வெறும் காகிதங்கள் மட்டுமல்ல . அவை நினைவுகள் . வாழ்ந்தும் அறிந்தும் கண்ட நினைவுகள் எழுத்துருவம் கொண்டிருக்கின்றன . எல்லாப் புத்தகங்களும் பேசக்கூடியவை . யாரோடு எப்போது எந்த மனநிலையில் என்பதுதான் சொல்லி விளக்க முடியாதது . ”
‘நம்மைச் சுற்றித்தான் இந்த உலகம் இருக்கிறது’ என்ற தவறான கண்ணோட்டமே மனிதனை இறுமாப்புக்கொள்ளச் செய்கிறது. ‘இந்தப் பெரிய உலகில் தானும் ஓர் உயிரி’ என்று நினைக்கும் மனிதர்களால்தான் இந்த உலகில் உள்ள எண்ணற்ற உயிரினங்கள் காக்கப்படுகின்றன.

“ நாம் செய்ய வேண்டியதும் விரும்புவதும் நம் கவனத்தை , நம்மைச் சுற்றிய இயற்கையை சிற்றுயிர்களைக் கவனிப்பதும் வளர்த்து எடுப்பதுமேயாகும் . நம்மைச் சுற்றிய வாழ்வு கவனிப்பார் அற்றுக்கிடக்கிறது . நாம் எதிர்காலத்தின் சாலையில் பரபரப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் . முரணாக இல்லையா ? ”
நகர்மயமாதலின் பக்கவிளைவுகளுள் ஒன்று குறுக்கப்பட்ட குழந்தைமனம். குழந்தைகளின் உலகத்தைச் சிதைக்கவோ, குறுக்கவோ நமக்கு என்ன உரிமை இருக்கிறது? குழந்தைகளின் உலகம் குறுக குறுக, அவர்களின் ஆளுமையும் குறுகத்தான் செய்யும்.
“ ஒருவகையில் கண்ணாடித்தொட்டியில் வளர்க்கப்படும் மீன்களைப் போலத்தான் மாநகரத்தில் வளரும் குழந்தைகளும் என்று தோன்றியது . என்ன தெரிந்திருக்கிறது அவர்களுக்கு ? பாதுகாப்பான வீடு , உணவு , சிறிய இயக்கம் . இதை அன்றி வேறு அவர்கள் என்ன அறிந்திருக்கிறார்கள் ? ”
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தீராத தாகம் கொண்ட பயணி என்பதை யாவரும் அறிவோம். எல்லாவற்றையும் வரையறைகளுக்கும் எல்லைகளுக்கும் உட்பட்ட இந்தச் சிறு வாழ்வினூடாகவே அனுபவித்தறிந்துவிட வேண்டும் என்ற மாறா வேட்கையோடு இந்த உலகில் அலைந்துகொண்டிருக்கும் தனித்துவமான மனிதர்களுள் அவரும் ஒருவர். இத்தகைய பயணிகளுக்குத் தங்குமிடம், உணவு குறித்த கவலையிருந்தால் அது அவர்களின் பயணப்பாதைக்குத் தடையாகவே இருக்கும்.
எழுத்தாளர் தன்னுடைய பயணத்தின் வழியாகத் தானறிந்த ‘கொடுப்போர்’ பற்றியும் ‘பெறுவோர்’ பற்றியும் சில கட்டுரைகளில் சிறுகுறிப்புகளின் வழியாக நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ஒரு கட்டுரையின் வழியாகக் ‘கொடுப்போர்’, ‘பெறுவோர்’ ஆகிய இருநிலையாளர்களின் மனநிலைகளைத் தன்னனுபவத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
“ யாசகம் தருவது எளிதானது . ஆனால் , யாசகம் கேட்பது எளிதானதில்லை . அதுவும் பசித்த வேளையில் என்ன செய்வது என அறியாமல் தடுமாறும்போது யாசகம் கேட் பதைப் போல நடுக்கமடையும் செயல் வேறு எதுவுமில்லை . ஆனால் , என் பயண அனுபவத்தில் நான் கண்டுகொண்டது யாசிப்பதுதான் நம்மைப் பற்றிய அடையாள நீக்கத்திற்கான முதல்படி . நம்மைப் பற்றி நாமாக வளர்த்துக்கொண்டுவிட்ட பிம்பம்தான் எதையும் யாசிக்கத் தடையாக உள்ளது . பிக்குகளும் துறவிகளும் யாசகம் கேட்பதன் வழியே தாங்கள் சுய அகந்தையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் . இன்னொன் று உணவு குறித்த அதீத முக்கியம் அவர்கள் கவனத்தைவிட்டுப் போய்விடுகிறது . எதையும் தனதாக்கிக்கொள்ளும் மனப்பாங்கு விலகிப் போகிறது . ”
“ ஒரு தட்டில் சூடான பாலும் கையில் ரொட்டித் துண்டுமாக அந்தப் பரதேசிகளுடன் உட்கார்ந்திருந்தபோது மனம் ஏதோவொரு சுதந்திரத்தை அனுபவித்தது . துறவு வாழ்க்கை என்பத ஆன்மிக அனுபவம் இல்லை . மாறாக இதுவரை நாம் கொண்டிருந்த பற்றில்லாமல் இதே வாழ்வை இன்னும் எளிமையாகவும் முழுமையாகவும் வா ழ முடியும் என்பதற்கான நிலை என்றே அப்போது புரிந்தது . ”
பசுமைப்புரட்சிக்கும் நகர்உருவாக்கத்துக்கும் முதற்பலியாவது எளிய கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைதான். அவர்களின் வாழ்க்கை சிதையும் முறைகள் எவையுமே நாமறியாதவைதான்.
“ அணைக்கட்டுகளில் உள்ள தண்ணீரின் கீழே மூழ்கிப்போன கிராமங்களும் அந்த அணையை உருவாக்குவதில் தன் உயிரை இழந்த மனிதர்களின் துயர வாழ்வும் வேலை செய்து இன்று அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத கிராம மக்களின் அவல நிலையும் காணும்போது பிரம்மாண்டத்தின் பின்னால் யாரோ சில மனிதர்களின் கண்ணீர் கசிந்து கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது . ”
பொதுமக்களின் புறப்பார்வையும் அகப்பார்வையும் முழுக்க முழுக்க வணிகநோக்கிலேயே இருப்பதுதான் எல்லாவற்றுக்குமான சிக்கல். எளியவற்றின் மீதான நமது அக்கறையின்மைக்கு அதுவே அடிப்படைக் காரணம்.
“எங்காவது சிதறிக்கிடக்கும் வேப்பம்பூவினைக் கையில் எடுத்துப் பாருங்கள். என்ன ஓர் அற்புதம்! என்னவொரு வாசனை! என்று புரியும். ஆனால், ரோஜாவின் முக்கியம் ஏன் வேப்பம்பூ பெறாமல் போனது? ஒரே காரணம் பயன்பாடு மட்டும்தான். நாம் எதையும் பயன்பாட்டின் வழியாக மட்டுமே தீர்மானிக்கிறோம். உடனடியான பயன்பாட்டிற்கு, வணிக முயற்சிகளுக்கு ஒத்துப் போகாத அல்லது முடியாத பொருட்களின் மீது நாம் அக்கறை காட்டுவதேயில்லை.”
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஏறத்தாழ நூறு புத்தகங்கள் எழுதியவர். அவர் தொடாத தளங்களே இல்லை என்று கூறும் அளவுக்குப் பலதரப்பட்டவற்றை எழுத்தாக்கியிருக்கிறார். சொற்பொழிவு, கேட்பொலி, காணொலி எனப் பல ஊடகங்களின் வழியாகத் தன்னுடைய அனுபவங்களை இந்த உலத்துக்குப் பகிர்ந்து வருகிறார். உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
ஏறத்தாழ நாற்பதாண்டுகள் இலக்கியமும் எழுத்துமாக வாழ்ந்துவரும் அவருக்குரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் இந்த ‘வாசகச் சமுதாயம்’ அவருக்கு வழங்கிவருகிறதா? உலக அளவில் இவரைப் போன்று வாழும் எத்தனையோ படைப்பாளருக்கும் இந்த உலகம் உரிய கைம்மாறு செய்துவிட்டதா?
பின்வரும் மூன்று பத்திகளையும் இந்த எழுத்தாளர் வெவ்வேறு சூழலில், பிறிதொன்றை நமக்கு உணர்த்துவதற்காகவே எழுதியிருக்கிறார். ஆனால், இந்த மூன்றுமே அவரது எழுத்துப் பணிக்குப் பொருத்தமாகவே இருக்கிறது.
“ செய்த வேலைக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காமல் போவதைப் போல வேறு துயரம் என்ன இருக்கிறது ? அதை வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாது . அதே நேரம் பரவாயில்லை என்று முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது . ”
“ உண்மையில் , தன்னை மற்றவர்கள் அடையாளம் காணவும் அங்கீகாரம் செய்யவுமே மனித உழைப்பின் பெரும்பகுதி செலவிடப்படுகிறது . எல்லாக் கலைகளும் யாரோ ஒருவரின் உற்சாகமான வரவேற்பிற்கும் அங்கீகாரத்திற்கும் புரிந்துகொள்ளலுக்குமே காத்திருக்கிறது . அது கிடைக்காதபோது மிஞ்சுவது கசப்பும் வெறுப்பும் மட்டுமே . ”
“ அடையாளம் கண்டு பாராட்டவும் அங்கீகரிக்கவும் செய்த வேலைக்கு உரிய மரியாதை தருவதையும் கட்டாயம் செய்ய வேண்டும் . காலத்திற்குள்ளாகவும் செய்யவேண்டும் . திரையில் காட்சி மாறுவதுபோல அடுத்தவர்கள் வந்துவிடுகிறார்கள் . நம்மை அடையாளம் காண வைப்பதும் நிறுத்திக்கொள்வதும் எளிதானதில்லை . அது , நம் செயல்களையும் மனத்தூய்மையையும் தீராத உழைப்பையும் பொறுத்தது என்பதே உண்மை . ”
‘அவருக்குரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் இந்தச் சமுதாயம் அவருக்கு முழுமையாக வழங்கவில்லை’ என்ற ஆதங்கத்தில்தான், நான் அவரின் படைப்புகளைப் படித்து, சிறு சிறு கட்டுரைகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஓர் எழுத்தாளருக்கு என்னால் இயன்ற மிகச்சிறிய மரியாதை இது.
எழுத்தின் வழியாக இந்தச் சமுதாயத்தை நெறிப்படுத்திக்கொண்டிருக்கும் இவரைப்போன்ற சிறந்த எழுத்தாளர்களுக்கு எளிய வாசகர்கள் இதைவிட என்னதான் செய்துவிட முடியும்?
‘ஆதலினால்’, எந்தவொரு படைப்பைப் (புத்தகம், ஓவியம், சிற்பம், திரைப்படம்) படித்தாலோ, கண்டாலோ, உணர்ந்தாலோ அதை உருவாக்கியவருக்கு உரிய மரியாதையை ஏதாவது ஒருவகையிலாவது செய்துவிடவேண்டும்.
எல்லாவற்றையும் படிப்போம். படித்ததைப் பற்றி அதைப் படைத்தவருக்கு எழுதுவோம். இதைத் தவிர நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு வேறு என்னவாக இருக்கக்கூடும்? இதைத்தவிர அவர்கள் எதைத்தான் நம்மிடமிருந்து எதிர்பார்த்துவிடப் போகிறார்கள்?
– – –
ஷேக்ஸ்பியர் சினிமா
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ஜோஜி திரைப்படம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை தழுவி உருவாக்கபட்டுள்ளது. இதில் பகத் பாசில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மேக்பெத்தை விடவும் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய இரகள் படத்தினை தான் இப்படம் அதிகம் தழுவியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து திரைப்படங்கள் உலகின் வேறுவேறு மொழிகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி உருவாக்கபடுகின்றன.

உலகிலே ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அதிகம் திரைப்படமாக்கட்டுள்ளது ஷேக்ஸ்பியருக்கு மட்டுமே. பைபிளுக்கு அடுத்து இதுவே அதிகமுறை திரைப்படமாக்கபட்டிருக்கிறது.
இதுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மையமாகக் கொண்டு 410 முழு நீளத்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கின்னஸ் புக் கூறுகிறது. ஆனால் ஐஎம்டிபி பட்டியலில் இன்றுவரை 1140 சிறிய மற்றும் முழு நீளப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் காணப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் பதினாறு ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் வேறு வேறு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் ஒரு செய்தி கூறுகிறது.
ஷேக்ஸ்பியரின் நாடங்களில் அதிகமுறை படமாக்கப்பட்டது ஹாம்லெட். 1907ல் முதல் இன்றுவரை 51 முறை படமாக்கப்பட்டுள்ளது. ரோமியோ ஜுலியட் 38 முறையும் மெக்பெத் 34 முறையும் ஒத்தல்லோ 28 முறையும் கிங் லியர் 24 முறை படமாக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

1900ல் பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்ட ஹாம்லெட் படமே முதல் ஷேக்ஸ்பியர் படம் என்கிறார்கள். அதற்கு முன்பாக 1899ல் ஒரு மௌனப்படம் உருவாக்கப்பட்டது என்றும் தற்போது அதன் பிரதி கிடைத்துள்ளதாகவும் பத்திரிக்கைச் செய்தி குறிப்பிடுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஷேக்ஸ்பியரைப் பற்றி அனானிமஸ் Anonymous என்றொரு திரைப்படம் வெளியானது. இதனை இயக்கியவர் ரோலாண்ட் எம்மரிச், அதில் ஷேக்ஸ்பியர் ஒரு போலியான நபராகச் சித்தரிக்கப்பட்டதுடன் அவர் எழுதிய நாடகங்கள் யாவும் உண்மையில் எட்வர்ட் வெரேயால் எழுதப்பட்டதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன, இதில் ஷேக்ஸ்பியர் பெருங்குடிகாரராக வருவதுடன் கொலையும் செய்கிறார்.

இப்படத்தை ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகர்கள் கடுமையாகக் கண்டனம் செய்தார்கள். அதனால் பெரும் சர்ச்சை உருவாகியது. உண்மையில் ஷேக்ஸ்பியர் என்பவர் யார்? அவரது வாழ்வு குறிப்புகள் நிஜமானவையா? நாடகங்களை எழுதியது அவர் தானா என்ற கேள்விகளுக்கு இன்றைக்கும் முடிவான பதிலில்லை என்பதே. சமீபத்தில் ஷேக்ஸ்பியர் என்பது ஒரு பெண். புனைபெயரில் எழுதியிருக்கிறார். அவரது உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் என ஒரு வதந்தி பரவியது. இப்படி ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை குறித்த மர்மம் இன்றும் புதிராகவே உள்ளது.
ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகரான கார்ல் மார்க்ஸ், ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடமாகச் சொல்லக்கூடியவர், வாரந்தோறும் ஞாயிறு அன்று மார்க்ஸின் குடும்பத்தினர் ஒன்று கூடி ஷேக்ஸ்பியர் கவிதைகளை, நாடகங்களை மாறி மாறி சொல்லி விளையாடுவது வழக்கம். அவரையே மூர் என்று தான் வீட்டில் கேலியாக குறிப்பிடுவார்கள்.

1998ல் John Madden இயக்கிய ஷேக்ஸ்பியர் இன் லவ் (Shakespeare in Love ) திரைப்படம் வெளியானது. இப்படம் ஷேக்ஸ்பியரின் காதலைக் கொண்டாடியது. படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் விருதுகளையும் வாறிக் குவித்தது.
அனானிமஸ், ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கற்பனையான திரைக்கதைகளே. இரண்டிலும் உண்மை மிகக்குறைவு. நூறு வருஷங்களுக்கும் மேலாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியது கிறிஸ்தோபர் மார்லோ, இல்லை எட்வர்ட் வெரே, அவருமில்லை வில்லியம் ஸ்டேன்லி, மேரி சிட்னி ஹேபர்ட், ரோஜர் மேனர்ஸ் எனப் பல எழுத்தாளர்களின் பெயர்கள் இச் சர்ச்சையில் இடம் பெற்று வருகின்றன,
ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்த ஒரே ஆவணப்பதிவு தேவாலயத்தில் உள்ள பதிவேடுகள் மட்டுமே. அந்தப் பதிவேட்டில் அவரது திருமண நாள் மற்றும் அவரது மகன் இறந்து போன தேதி மற்றும் அவர் இறந்து போன தேதி மட்டுமே பதிவாகி உள்ளது. அவரது நாடகங்களின் கையெழுத்துப்பிரதிகள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியர் இறந்து ஏழு ஆண்டுகள் கழித்தே அவரது நாடகங்கள் அச்சில் வெளியாகின. அதுவும் அவரது கால நாடக நடிகர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த வரிகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டதே.
ஷேக்ஸ்பியரின் உருவமும் கூடப் பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் வரையப்பட்டதே அன்றி அது துல்லியமானதில்லை. எல்லாச் சித்திரங்களிலும் ஷேக்ஸ்பியர் நடுத்தர வயதுக்காரராகவே சித்தரிக்கபடுகிறார்

இதுவரை நான்கு விதமான ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்று அவரது மேடைநாடகத்தை அப்படியே திரைப்படமாக எடுப்பது. இரண்டாவது ஷேக்ஸ்பியரின் நாடகத்தை மையக்கதையாகக் கொண்டு பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து உருவாக்குவது (Shakespeare adaptations) மூன்றாவது ஷேக்ஸ்பியர் நாடகத்தின் தொலைக்காட்சி வடிவங்கள். (Shakespeare TV Series )நான்காவது ஷேக்ஸ்பியர் நாடகங்களை அனிமேஷன் திரைப்படமாக உருவாக்குவது (animated Shakespeare films). இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெரும்பான்மை ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் கால இடச் சூழல் மாறுபாட்டிற்கு ஏற்ப ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தழுவி உருவாக்கப்பட்டதே.

தொடர்ந்து இன்றுவரை ஷேக்ஸ்பியர் நாடகங்கள் படமாக்கப்படுவதற்கு முக்கியக் காரணிகளாக இருப்பது அதன் அழுத்தமான, தனித்துவமான கதாபாத்திரங்கள். சிக்கலான கதைமுடிச்சு, எதிர்பாராத திருப்பம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள். சிறந்த வசனங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த ஆழ்ந்த பார்வையாகும்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தழுவி திரைப்படத்தை எடுப்பது எளிதானதில்லை. ஆனால் வெற்றிகரமான ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் அதன் சிறந்த திரைக்கதையின் காரணமாகவே சிறப்பாகப் பேசப்படுகின்றன. திரைக்கு ஏற்ப ஷேக்ஸ்பியரை உருமாற்றும் போது கதாபாத்திரங்களை அப்படியே வைத்துக் கொண்டு அவர்களின் பின்புலத்தையும் பண்பாட்டுச் சூழலையும், காலத்தையும் மட்டுமே முதன்மையாக மாற்றுகிறார்கள்.
ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சவால் என்பதால் பிரபலமான திரைப்பட நடிகர்கள் பலரும் ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டார்கள். இதன் காரணமாகவே ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பல மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டன.
இங்கிலாந்தின் லாரன்ஸ் ஒலிவர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு மேடையிலும் திரையிலும் உயிர் கொடுத்த மகத்தான கலைஞன். லாரன்ஸ் ஒலிவர் நடித்துத் தயாரித்த ஹாம்லெட் 1948ல் வெளியானது. நாடகப்பிரதியிலிருந்து பாதியை வெட்டி எறிந்துவிட்டு தேவையான காட்சிகளை மட்டுமே திரைக்கதையாக உருவாக்கினார் ஒலிவர். இப்படம் ஆஸ்கார் விருது பெற்றதுடன் சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு. இசை இயக்கம் என இன்றுவரை ஒரு காவியமாகவே விளங்குகிறது.

ரஷ்ய இயக்குனராகக் கிரிகோரி கோஜின்செவ் (Grigori Kozintsev )இயக்கிய ஹாம்லெட் மற்றும் கிங் லியர் இரண்டும் மகத்தான திரைப்படங்கள். 1964ல் கிரிகோரி இயக்கிய ஹாம்லெட் வெளியானது. போரிஸ் பாஸ்டர்நாக் மொழியாக்கம் செய்த நாடகப்பிரதியை மையமாகக் கொண்டு இதனைக் கிரிகோரி உருவாக்கினார். கேமிராக்கோணங்களும் நீண்ட காட்சிகளும் இப்படத்தின் சிறப்பம்சம். நவீன நாடகபாணியில் உருவான நடிப்பு. அரங்க அமைப்பு மற்றும் இசை இப்படத்தை வியக்க வைக்கிறது.

அகிரா குரசேவா ஷேக்ஸ்பியரின் மெக்பெத், கிங்லியர் ஆகிய இரண்டு நாடகங்களைப் படமாக்கியிருக்கிறார். ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தழுவலாக இருந்தபோதிலும், இந்தத் திரைப்படங்கள் ஜப்பானின் சரித்திர நிகழ்வுகளோடு இசைந்து சொல்லப்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மெக்பெத்திற்கான திரைக்கதையமைப்பில் மைய நிகழ்வுகளை அப்படியே வைத்துக் கொண்டு அதில் ஜப்பானிய காலச்சார ஊடு இழைகளைப் பின்னியிருக்கிறார் குரசோவா.. குறிப்பாக மூன்று மாயக்காரிகள் தோன்றி மெக்பெத்திற்கு எதிர்காலம் பற்றிய ஆருடம் சொல்வதை முழுமையானதொரு ஜப்பானிய ஆவியுலகச் சடங்கின் தோற்றத்திலே மேற்கொண்டுள்ளார். இத்தோடு நோ நாடகத்தின் உடல் மொழியைப் படத்திற்கான வெளிப்பாட்டு முறையாகவும் கைக் கொண்டுள்ளார்.
கிங் லியர் நாடகத்தைப் பீட்டர் புரூக் இயக்கி ஆர்சன் வெல்ஸ் நடித்துள்ளார், தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட இப்படம் ஷேக்ஸ்பியரின் மூலப்பிரதியை அப்படியே கையாண்டுள்ளது. ஆனால் இதே கிங் லியர் நாடகத்தை 1987ல் கோடார்ட் பிரெஞ்சில் படமாக்கினார். நாடகத்தின் வரலாற்றுப்பின்புலத்தை நீக்கிவிட்டுச் சமகாலத்தில் உலவும் நகர மனிதராக லியரை அவர் உருவாக்கியுள்ளார். லியர் பேசும் வசனங்களும் அவரது செயல்களும் இன்றைய பிரெஞ்சு பிரஜைகளில் ஒருவரைப் போலவே அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் பீட்டர் செல்லர்ஸ்.
ஆனால் இதே கிங் லியர் படத்தை ரான் என்ற பெயரில் அகிரா குரசோவா இயக்கிய போது லியரின் மூன்று மகள்களுக்கும் பதிலாக மூன்று மகன்களாக உருமாற்றிவிட்டார் , ஜப்பானிய வரலாற்றுப்பின்புலத்தில் நடைபெறுவதாகவும் திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தார்.

அது குறித்து ஒரு பத்திரிக்கையாளர் கேட்டபோது எனக்கான ஷேக்ஸ்பியரை நான் உருவாக்குகிறேன். ஷேக்ஸ்பியரிலிருந்து ஒரு புதிய படைப்பை உருவாக்குவதே எனது விருப்பம். ஜப்பானிய வரலாற்றுடன் ஷேக்ஸ்பியரை இணைத்து எனக்கான திரைக்கதையை உருவாக்கிக் கொண்டேன் என்றார் குரசேவா.
அகிரா குரசேவாவின் ரான். த்ரோன் ஆ பிளட் இரண்டு படங்களும் ஷேக்ஸ்பியரை எப்படி உருமாற்றிக் கொள்வது என்பதற்கான சிறந்த உதாரணங்கள்.
பிபிசியின் ஷேக்ஸ்பியர் தொலைக்காட்சி வரிசை இப்போது பாக்ஸ் வடிவில் டிவிடியாக வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக இவை திரையிட்டுக் காட்டப்படுகின்றன, ஹாலிவுட்டில் குழந்தைகள் ரசித்துப் பார்க்கும்படியாக ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அனிமேஷன் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
1982ல் குல்சார் இயக்கி சஞ்சீவ் குமார் நடித்த Angoor, The Comedy of Errors. நாடகத்தை மையமாகக் கொண்டது. விஷால் பரத்வாஜ் ஷேக்ஸ்பியரின் தீவிர வாசகர், அவர் ஒத்தெல்லோவை ஓம்காரா என்ற பெயரிலும், மெக்பத்தை மக்பூல் என்ற பெயரிலும் ஹாம்லெட்டை ஹைதர் என்ற பெயரிலும் இந்தியச் சூழலுக்கு ஏற்ப படமாக்கியுள்ளார். இதுவன்றி 10 ml Love என்ற ஹிந்திபடம் A Midsummer Night’s Dream. நாடகத்தைத் தழுவியதே. ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட்டின் தழுவல் தான் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “ராம்-லீலா, இது போலவே மலையாளத்தில் ஜெயராஜ் இயக்கிய களியாட்டம், வி.கே. பிரகாஷ் இயக்கிய கர்மயோகி, கன்னடத்தில் என் எஸ் சங்கர் இயக்கிய Ulta Palta போன்றவை ஷேக்ஸ்பியர் நாடகங்களை மையமாகக் கொண்டதே.
தமிழில் கன்னியின் காதலி, மனோகரா, குணசுந்தரி, சொல்லு தம்பி சொல்லு அறிவாளி போன்றவை ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடுகிறார்கள்.
சிவாஜி ரத்த திலகம் திரைப்படத்தில் ஒத்தெல்லோவாக நடித்திருப்பதும், எம்.ஜி.ஆர் ஹாம்லெட்டை தழுவி புதுமைப்பித்தன் என்ற திரைப்படத்தை உருவாக்கியதையும் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து உருவான படங்களாகக் குறிப்பிடுகிறார்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நிறையவே இந்திய மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் ஷேக்ஸ்பியர் படங்களை மட்டுமே பார்ப்பது என முடிவு செய்தால் கூட ஒராண்டு செலவாகும் என்றொரு குறிப்பைப் படித்தேன். திரைப்படமாக மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர், இணையத் தொடர் என்று வற்றாத கதை ஊற்றாக ஷேக்ஸ்பியர் இருக்கிறார்.
இதுவரை வெளியான ஷேக்ஸ்பியர் திரைப்படங்களில் எனக்குப் பிடித்தமானவை.
1) Lawrence Olivier- Hamlet.
2) Kurosawa -Throne of blood. Ran
3) Grigori Kozintsev – Hamlet, King Lear
4) Orson Welles- Othello
5) Derek Jarman – Tempest
6) Zeffirelli- Romeo and Juliet
7) Polanski- Macbeth
8) Trevor Nunn- Twelfth Night
9) Kenneth Branagh – Hamlet
10) Vishal Bhardwaj -Maqbool . Omkara
11)Joseph L. Mankiewicz- Julius Caesar
12) Ralph Fiennes- Coriolanus
April 26, 2021
புகைப்படம் சொல்லாதது
கன்னட எழுத்தாளர் எஸ். திவாகர் புகைப்படம் என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். மிகச்சிறிய கதை. ஒரு பழைய காலப் புகைப்படத்தைப் பற்றியது.

பாணன் என்ற நண்பர் இந்தக் கதையினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியிருந்தார். இந்தக் கதையில் இரண்டு விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன. கல்யாணப் பெண்ணிற்கு நிகராக அவளது கணவன் அணிந்துள்ள நகைகள் மற்றும் சட்டை அணியாத அவரது தோற்றம்
மாப்பிள்ளை முகபாவத்தில் கல்யாணம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போன்ற உணர்ச்சி வெளிப்படுகிறது. எதையோ மறைக்கும் கண்கள். பெரிய உதடுகள். சிரிப்பை மறைத்துக் கொண்டது போல முகத்தோற்றம். நீளமான கைவிரல்கள். கையில் மோதிரம் கிடையாது.
அப்புறம் புகைப்படம் எடுத்த தமிழரான வேலப்பன். யார் அவர். என்ன கேமிராவைப் பயன்படுத்தினார். எவ்வளவு கட்டணம். என எதுவும் தெரியவில்லை. ஆனால் கல்யாண புகைப்படங்கள் எடுப்பதில் தேர்ச்சி பெற்றவர் என்பது தெரிகிறது.
திருமணப் புகைப்படங்களில் வெளிப்படும் சிரிப்பு இயல்பானதில்லை. அது ஒரு நடிப்பு.
இந்தக் கதையின் துவக்கத்தில் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களை யாரோ என்று நினைக்கிறோம். ஆனால் அது கதைசொல்லியின் தாத்தா பாட்டி என்றவுடன் புகைப்படம் உருமாறிவிடுகிறது. அத்துடன் புகைப்படத்திற்கு வெளியே அம்மா சொல்லும் கதை புகைப்படத்தின் இயல்பை மாற்றிவிடுகிறது. புகைப்படத்தில் உறைந்த காலம் எப்போதும் உறைந்திருப்பதில்லை. அது வெளியுலகின் நோக்கிற்கு ஏற்ப சலனமடைகிறது.
இந்தக் கதையில் வருவது போலவே ஒரு நிகழ்வை என் வாழ்வில் கண்டிருக்கிறேன். எங்கள் கிராமத்திற்குப் புதிதாகத் திருமணமாகி வந்த இளம்பெண் கணவன் வீட்டில் யாருடனும் பேசப்பயந்து போயிருந்தாள். வெளியாட்கள் வந்துவிட்டால் ஒடி ஒளிந்து கொள்வாள். கணவனுடன் வெளியே போகும்போது குனிந்த தலை நிமிர மாட்டாள். வீட்டில் யாராவது சப்தமாக ஏதாவது சொன்னால் அழுதுவிடுவாள். புதுப்பெண் தானே என்று நினைத்து அவர்கள் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் வீட்டில் கோழி அடித்துக் குழம்பு வைக்க நாட்டுக்கோழியை வாங்கி வந்திருந்தார்கள். மாமனார் வெளியே போயிருந்த காரணத்தால் கோழியை யார் அடித்துத் தருவது என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள். என்னிடம் கொடுங்கள் என்று வாங்கிய அந்தப் பெண் தன் இடது கை மணிக்கட்டினை இறுக்கி வைத்துக் கொண்டு கோழியின் தலையினை அதில் அடித்து ஒரு நிமிஷத்தில் கொன்று பரபரவென அதன் ரோமங்களை ஆய்ந்து கோழிக்கறியை துண்டுகளாக்கி கொடுத்துவிட்டாள்.
அந்தக் காட்சி வீட்டினை உறைந்து போகச் செய்துவிட்டது.
எங்க வீட்டில் நான் தான் எப்பவும் கோழி அடிப்பேன். ஒரு அடிக்கு மேலே கோழி உசிரோட இருந்ததில்லை என்று மெதுவான குரலில் சொன்னாள். அதன் பிறகு வீடே அவளைக் கண்டு பயப்பட ஆரம்பித்தது. அவளோ எப்போதும் போல இயல்பாக நடந்து கொண்டாள்.
இதே உணர்வு தான் புகைப்படத்திலுள்ள பாட்டியிடமும் வெளிப்படுகிறது
••
புகைப்படம்
திவாகர்
தமிழில் : பாணன்.

தயவுசெய்து இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். இங்கு அமர்ந்திருப்பவர்கள் புதுமணத் தம்பதிகள். அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களிலிருந்து, இருவரில் ஒருவர் மிகவும் பணக்காரர் என்று நான் நினைக்கிறேன். முதலில், இளம் மணமகள் மீது உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெண்கள் மிகவும் இளவயதிலே திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
எனது யூகம் என்னவென்றால், புகைப்படத்தில் உள்ள பெண்ணுக்கு அநேகமாகப் பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். அவளது புடவையின் மறைப்பிலுள்ள இளம் மார்பகங்களின் வெளிப்புறம் என் யூகத்தை உறுதிப்படுத்துகிறது. வட்ட முகம். அடர்த்தியான புருவங்களுக்கு அடியில் சற்று வீங்கிய கண்கள். அவளது மூக்கின் நுனியிலிருந்து தொங்கும் புல்லாக்கு கிட்டத்தட்ட அவளது கீழ் உதட்டைத் தொடுகிறது, எனவே அந்த உதடுகள் புன்னகைக்கிறதா அல்லது வருத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இவள் கன்னங்கள் உப்பியிருக்கின்றன என்பதற்குத் தாடையில் கவிந்திருக்கும் நிழலே சாட்சி. விதவிதமான ஆபரணங்கள் அவளுடைய தலைமுடியையும் அவள் நெற்றியையும் பிரிப்பதை மறைக்கின்றன; காதணிகள் அவள் காதுகளை மறைத்திருக்கிறது.
நகைகளைப் பற்றிப் பேசுகையில், அவள் எத்தனை சரங்களைக் கழுத்தில் அணிந்திருக்கிறாள் என்று யூகிக்கிறீர்களா? நான் அவற்றைப் பல முறை எண்ண முயன்றேன், இப்படித்தான் நான் கருதுகிறேன்: அவளது கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் நெக்லஸ் குறைந்தது மூன்று விரல்கள் அகலமாக இருக்க வேண்டும், அதற்குக் கீழே புஜத்தளவு வரும் நான்கு சங்கிலிகள். அங்கிருந்து மார்பின் கீழ்வரை இறங்கியிருக்கும் ஏழு சங்கிலிகள். இந்தத் தங்கச் சங்கிலிகளில் முத்து, பவளம், விலை மதிப்புமிக்க மணிகள் உள்ளனவென்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. போதாததற்கு வங்கி, இடையில் ஒட்டியாணம், கைகளில் வளையல்கள், கங்கண வளையல்கள். அந்த வளையல்களிலிருந்து நீளும் இணைப்புச் சங்கிலிகளின் இரண்டு முனைகள், ஆட்காட்டி விரலிலும் சுண்டு விரலிலும் இருக்கும் மோதிரங்களைப் பிடித்துள்ளன. மேலும் இவள் கால்களைப் பாருங்கள். அவற்றில் கைப்பருமனில் சலங்கைத் தண்டைகள். நான்கு விரல்களில் நான்கு மோதிரங்கள். பெருவிரலிலிருக்கும் அவ்வளவு தடிமனான மோதிரத்தைப் பார்த்து என்னைப்போலவே நீங்களும் ஆச்சரியப்படலாம். மொத்தத்தில் தொடைகளின் மேல் கைவைத்துக்கொண்டு, கால்களை முடிந்தளவு பக்கத்தில் கொண்டுவந்து யாருடைய வற்புறுத்தலுக்காகவோ அமர்ந்திருப்பது போலக் கணவனின் உடம்போடு தன் உடம்பு பட்டும் படாமலும் உட்கார்ந்திருக்கும் இந்த பெண்ணை பாருங்கள். சரி, இந்தப் புகைப்படத்தை விவரித்தது போதும்.
புகைப்படத்திலுள்ள ஆணும் பெண்ணும் என் தாத்தா பாட்டி ஆவார், இந்தப் புகைப்படம் புவனகிரியில் உள்ள எனது மூதாதையர் வீட்டில் தொங்குகிறது. புகைப்படம் எடுத்தவர் வேலப்பன், 1923 ஆம் ஆண்டுப் பெங்களூரிலிருந்து புவனகிரிக்கு வந்த ஒரு தமிழர். எனது தாத்தா லக்ஷ்மிநாரணய்யா. எனது பாட்டி கமலம்மா, கங்காவதியின் இனாம்தார் ஷாமண்ணாவின் மகள். ஷாமண்ணா ஒரு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர், அவருக்கு நிறைய நிலங்களும் சொத்துக்களும் இருந்தன. புவனகிரியைச் சேர்ந்த இந்த ஏழை லட்சுமிநாராணய்யாவை தனது ஒரே மகளைத் திருமணம் செய்து வைக்க அவருக்கு ஏதோ காரணங்கள் இருந்திருக்கலாம். சரி, இப்போது அந்தக் கதையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
கமலம்மா ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்ன செய்வது? அவளுக்குத் திருமணமானதும், அவளுடைய கணவன், அவளுக்கு தெய்வம். லக்ஷ்மிநாரணய்யா ரொம்பவும் திமிர்பிடித்தவர், முன்கோபி. புகைப்படத்தில் உள்ள தம்பதியினருக்குப் பின்னால், உள்ள ஜன்னலைப் பார்க்கிறீர்களா? கமலம்மாளின் திருமணத்தைப் பற்றிச் சொல்ல அந்த இரும்புக் கம்பிகளுக்கு ஒரு கதை இருக்கலாம்.
என் அம்மா சொல்வதிலிருந்து பார்த்தால், (அப்போது என் அம்மாவுக்கு ஏழோ எட்டோ வயசு ), அவளுடைய தந்தை லக்ஷ்மிநாரணய்யாவிற்குச் சூலிபெலெபேட்டில் ஒரு வைப்பாட்டி இருந்தாள். வீட்டுப் பணிப்பெண்கள் கூட அதைப் பற்றி ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். இதனால் கமலம்மா வருத்தமடைந்தாள். பலமாக அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்யும் தைரியம் இல்லாத அவள் பட்டினிகிடந்தாள். தூக்கம் கெட்டாள்.
ஒரு நாள் லக்ஷ்மிநாரணய்யா கொல்லைப்புறத்தில் தனது காலை பூஜைக்குப் பூக்களைச் பறித்துக் கொண்டிருந்தார். கமலம்மா கோடாலியைத் தூக்கிக்கொண்டு மூலையில் விறகுக்காக ஆள் உயரத்துக்கு அடுக்கியிருந்த மரக் கட்டைகளை பிளக்கத் துவங்கினாள்.
தன் வாழ்க்கையில் ஒரு போதும் கோடாரியைத் தொட்டிராத அவள் மிகுந்த வீராவேஷத்தோடு இடுப்பில் புடவையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு வேகமாக மரக்கட்டையை பிளந்து கொண்டிருந்தாள். ஒரு முழு வளர்ந்த மனிதனைப் போலிருந்த மரக்கட்டையது.
புகைப்படத்தில் சுருங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இவள், அன்று தன் புடவையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு, கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்தபோது, எப்படி இருந்திருப்பார் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
லக்ஷ்மிநாரணய்யா திகைத்துப் போய் நின்றார், அவள் கோடாலியை உயர்த்தி வீசும் ஒவ்வொரு முறையும் அவரது இதயம் நடுங்கியது அவருக்குப் பேச்சு வரவில்லை. அவ்வளவுதான், அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை என்பதுபோல முன்னைப்போலவே சிரித்துக்கொண்டு இருந்து விட்டாள்
பின்பு லக்ஷ்மிநாரணய்யா ஒருபோதும், மீண்டும் சூலிபெலெபேட்டிற்குச் போகவேயிலை, கமலம்மா அதன்பிறகு அந்தக் கோடரியை எடுக்கவுமில்லை
இந்தக் கதையை என் அம்மாவிடம் கேட்ட பிறகு, நான் மீண்டும் புகைப்படத்தைப் பார்த்தேன். என் பாட்டியின் கண்கள் இப்போது வேறு விதமாக ஏதோ சொல்கின்றன. அது என்ன, நான் ஆச்சரியப்பட்டேன்: அது என்ன? என் உடம்பிலிருக்கும் ஜோரான நகைகளைப் பார் என்றா? பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் பெரிய கல்லூளிமங்கன் என்றா? நீ நினைக்கிறபடி நான் ஒன்றும் அப்பாவியல்ல என்றா?
ஒரு புகைப்படத்தை வாசிப்பது ஒரு கவிதை அல்லது கதையைப் படிப்பது போன்ற ஒரு கலை. இந்தப் புகைப்படத்தை மிக நெருக்கமாக வாசிக்க முயன்றேன். நீங்களும் இதை உன்னிப்பாகப் படிக்க விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வாசிப்பு என்னிடமிருந்து வேறுபட்டிருந்தால் மற்றும் புகைப்படம் உங்களுக்கு வேறு எதையாவது வெளிப்படுத்தினால், தயவுசெய்து அதைப் பற்றி என்னிடம் சொல்ல மறக்காதீர்கள்.
••
April 25, 2021
நோய்மையிலிருந்து விடுதலை
துயில் – ஒரு வாசிப்பனுபவம்
பாஸ்கர் தேவதாஸ்
நோய்மைப் பற்றியும் அதன் ரகசியங்களையும் துயில் நாவல் மூலம் எஸ்ரா அவர்கள் மிக உன்னத படைப்பாக இந்த உலகிற்கு கொடுத்திருக்கிறார். ஒரு எளிய இலக்கியவாசகனாக இந்த நாவல் எனக்குள் உருவாக்கிய பாதிப்புகளை பதிந்திருக்கிறேன்
மூன்று வழியாக தெக்கோடு என்ற கிராமத்து பயணமே இந்த நாவல், இது ஒரு TRIOLOGY SUBJECT போல் உள்ளது, KOKHER என்ற கிராமத்தை மையமாக வைத்து Abbas Kiarostami. மூன்று படங்களை இயக்கியிருப்பார். அது போன்று தெக்கோடு என்ற கிராமத்தை மூன்று பயணமாக பயணிப்பது போல் தான் உணர்கிறேன்.

ஆத்திக்குளத்திலிருந்து அழகர், சின்னராணி, செல்வி ஆகியோரும் எட்டூர் மண்டபம் வழியாக நோயாளிகளாக பலபேரும் பணிமாற்றத்திற்காக கல்கத்தாவிலிருந்து ஏலன்பவரும் மூன்று வழியாக தெக்கோடு பயணிப்பதும். நாமும் இவர்களோடு போக வேண்டிய இடம் தெக்கோடு. ஆத்திக்குளம் இரயில் நிலையம் ஏனோ எனக்கு ASTAPOVO RAILWAY SATION-ஐ நினைவு கொள்ளச் செய்கிறது. யாருமே கவனிக்காத அந்த இரயில் நிலையம் TOLSTOY-யின் நோயின் காரணமாக அங்கே இறங்கியதும் பெரும் பரபரப்பிற்கு ஆளாகியது. மேலும் TOLSTOY அந்த இரயில் நிலையத்திலேயே உயிர் நீத்தார். அதே போல் நம் ஆத்திக்குளம் இரயில் நிலையமும் “நோய்மையை”குணமாக்கும் தெக்கோடு திருவிழா மூலம் சில பயணிகளை இந்த இரயில் நிலையத்தில் தக்க வைத்துக்கொண்டது. மேலும் பெண்களை மையப்படுத்தி நாவல் விரிவது மேலும் சிறப்பான ஒன்று.
முதல் அத்தியாயம் முழுவதும் ஆத்திக்குளம் இரயில் நிலையத்தில் துவங்குகிறது. சின்னராணியின் வலிகளை சொல்லும் போது
“இலையின் மீது ஊர்ந்து செல்லும் புழுவை விளக்க முடியாமல் இலை நடுங்குவதைப் போன்றது தான் அவள் நிலையும்”
STATION MASTER குமாரசாமி நினைப்பது போல்
“இங்குள்ள இரும்புப் பொருள்களைப்போல் தான் நானும்”
என்று நினைக்கும் போது நாம் செய்கின்ற வேலையில் சிலநேரங்களில் ஏற்படுகின்ற சலிப்பு இதுபோன்ற பிம்பங்களை உருவாக்குகிறது என்பதை உணர்கிறேன்.

நங்கா என்ற பெண்ணின் திருமண ஆசைகள் ஒரு விசித்திரம், நிச்சயம் நங்காவிற்கு திருமணம் ஆகியிருந்தால் அந்த கணவன் ஒரு அதிர்ஷ்டசாலியே, நன்றாக கவனித்துக்கொண்டிருப்பாள் என்று தோன்றுகிறது. சக்கரைக்கோட்டை திருவிழாவின் போது செல்வி கேட்ட கேள்வி இன்னும் என்னிடம் கேள்வியாகவே உள்ளது. “ஏன் யாருக்குமே நத்தையை எழுப்பத் தொ¢யவில்லை” அந்த நத்தை என்னவாக இருக்கும் என்று சிலநேரங்களில் நான் நினைப்பது உண்டு.
அத்தியாம் 2-ல் நோய்மைப் பற்றிய விவாதம் அல்லது தருக்கம் ஒரு சூரியனைப்போல் பிரகாசிக்கிறது ஏலன் பவர் அவரது ஞானகுருவான லகோம்பையை சந்தித்துப் பேசிய உரையாடல் ஒரு தெளிந்த நீரில் இரண்டு நீர் துளிகளை எடுத்து சுத்தம் செய்து மீண்டும் அதே நீரில் சேர்த்துவிட்டதைப் போல அமைந்துள்ளது.
சில வரிகள்
“கடவுளும் பயமாக அறிமுகமாகி பயமாகவே மனதில் தங்கியிருக்கிறார்”
“தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து தெரிந்து கொள்பவன் தானே மனிதன் அவனுக்கு எப்படி அகதா¢சனம் கிடைக்கப்பெறும்”
“தேவாலயத்தின் மணிகள் எப்பொழுதும் அடுத்தவர்களுக்காக ஒலி எழுப்பக்கூடியவை தனது போரோசையால் மணிக்கு ஒரு பயனும் இருக்கப்போவதில்லை”
“ஒரு மனிதன் கடலை கண்ணால் கண்டு செல்வது போன்றது”
ஒரு வகையில் நோய் என்பது மதங்களின் மூலதனமாக உணர்கிறேன்.
அத்தியாம் 3-ல் அழகரின் தந்தை முத்திருக்கை அறிமுகமாகிறார். அவருடைய செயலால் கோபம் மற்றும் வெறுப்பு அவனை வேறு பாதையில் திசை திருப்புகிறது. அதே போல் அந்த லாரி டிரைவர் ஏதோ யோசனைக்குப்பிறகு இரண்டு ரூபாய் அழகரிடம் கொடுக்கிறான். என்ன யோசனை செய்திருப்பான்? இதுபோன்று எத்தனை இரண்டு ரூபாய்களை அவன் கொடுத்திருக்க வேண்டும்.
அழகான வாழ்க்கையை ஓரளவிற்கு தீர்மானிக்கின்ற சூழல் இந்த அத்தியாத்தில் உருவாகின்றது. முக்கியமாக தட்டைக்காட்டுக் கதை என்னை ஒருமுறை பாலியத்தின் முன் அமர வைத்தது. நானும் அந்த அண்டரண்டா பறவைக்காக காத்திருக்கிறேன். முத்து அண்ணன் நினைவாக “புருஷன் வீட்டிக்கு போனதுக்கப்புறம் ஒரு வாய் கடுங்காப்பி கொடுப்பியான்னு கேட்டியே” என்று சின்னராணி நினைக்கும் போது பாசத்தின் தரிசனம் காணமுடிகிறது. மொத்தத்தில் அழகர் மற்றும் சின்னராணியின் வாழ்க்கையின் ஒரு சின்ன புள்ளியின் தொடக்கமாக உணர முடிகிறது.
அத்தியாயம் 4-ல் எட்டூர் மண்டபம் வழியாக பயணம் நீள்கிறது, தெக்கோட்டிலிருக்கும் மாதா இங்கே கொண்டலு அக்கா வடிவில் இருந்து கொண்டு ஒரு மகத்தான சேவையை செய்கிறாள். நாவலில் அவள் எதற்காக அந்த இடத்திற்கு வந்தால் என்று தெரியவில்லை (அதனால் அவளை நாம் ஒரு அவதாரமாகவே எடுத்துக்கொள்ளலாம்) அக்கா சொல்வதாக நாவலில் “உடலை நோய்மையிலிருந்து மீட்டுவிடலாம், மனதை மீட்கவே முடியாது” “பாசி படிந்த குளத்தில் எவ்வளவு தண்ணீர் நிறைந்திருந்தாலும் அது குடிக்கப் பயன்படாது”

அத்தியாயம் 5-ல் சின்னராணி என்ற பெண்ணை கடற்கன்னியாக மாற்றியதற்கு அழகர் காரணமாக இருந்தாலும், எல்லோரும் அவள் கடற்கன்னி என்று நம்பவைத்தவர் முத்தப்பா டைலர். அவர் தங்கையைப் பற்றி சொல்லும்போது “மனுசன் வாழ்க்கை எப்படி முடியும்னு யாருக்குமா தெரியும், கொடுப்பனை இருந்தா வாழலாம் இல்லாட்டி போய் சேரவேண்டியதுதான்”
அத்தியாயம் 6-ல் பயணங்கள் நிறைய கற்றுத்தருகின்றன. ஏலன்பவாரின் நினைவுகளில் “வருமை எல்லா அவமானங்களையும் நம்மீது சுமத்திவிடும்”
கோபால் ஜோஷி அவர் மனைவியை மருத்துவத்திற்கு பணிக்கு அனுப்புவது ஒரு புரட்சியின் விதை போன்றது. ஏலன்பவாரின் 2-வது கடிதத்தில் கூவம் ஆற்றைப் பார்த்து “மிகவும் அழகாக இருந்தது” என்று சொல்லும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
வீடு பற்றி ஏலன் பவாரின் எண்ணங்கள் நாவலில்
“வீடு என்பது வசிப்பதற்கான இடமில்லை அது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் இங்குள்ள ஒவ்வொரு வீடும் அந்த ஆளின் வாழ்க்கை எவ்வளவு செல்வாக்குடன் இருக்கிறது என்பதற்கான அடையாளம்… பத்துவருடமாக பூட்டியிருக்கும் வீடு ரங்கூன் செட்டியின் அடையாளம்.
அத்தியாம் 7-ல் இன்றைய மருத்துவத்துறையை நன்றாக சாடியிருக்கிறது,
தம்பிகளே நீங்கள் பேசுங்கள் என்று கொண்டலு அக்கா சொல்லும் போது நோயாளிகளை பேச சொல்லி நிதானமாகக் கேட்டுக்கும் மனிதர்கள் யாவருமே மருத்துவரின் நிலையை அடையமுடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது, அங்கே சீயன்னா சொல்லும் கதையில் வரும் திருடனின் யாசிப்பு இறந்து போன குழந்தையின் எலும்பை அனுப்பும் சூயின் மனைவி, எலும்புக்கு (குழந்தைக்கு) பெயர் வைக்க சொல்லும் அக்கா மிகவும் வியப்பு!
“நோய்மை மனிதனுக்கு அவனது தவறுகளைதான் அடையாளம் காண்டுகிறது அதை புரிந்துகொள்ளாமல் போனால் அவை நம்மைவிட்டு விலகுவதே இல்லை.
அத்தியாயம் 8-ல் அழகான் வாழ்வில் தற்செயலாக எதிர்பட்ட ஜிக்கி, அவனது வாழ்க்கையை அவனுக்குத் தொ¢யாமல் திசைதிருப்பிவிடுகிறாள். இதைப் பார்க்கும் பொழுது நிச்சயம் ஏதோ ஒரு சந்தர்பமும் அதில் வருகின்ற மனிதர்களுமே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறார்கள். அதேபோல் பேரின்ப விலாசில் அழகருடன் வேலை பார்த்த சிறுவன் என்னவாயிருப்பான், சிறுவர் ஜெயிலிலிருந்து வந்திருப்பானா? அவனுக்கு ஜிக்கி போன்ற அல்லது வேறுயாராவது அவனது வாழ்க்கையை மாற்றியிருப்பார்களா?
அத்தியாம் 9-ல் மீண்டும் தெக்கோடு ஏலன்பவாரின் கடிதம்
“இவர்களுக்கு நோயென்பது காலில் களிமண் ஒட்டிக்கொள்வதைப்போல தற்செயலாக நடந்துவிட்ட ஒன்று அதை துடைக்க அக்கறையின்றி களிமண்ணோடு நடந்து நடந்தே அதைப் போக்கிக்கொண்டுவிட முடியும் என்று நம்புகிறார்கள்.
லகோம்பையின் பதில் “பணம் சேருவதுதான் நோய்மையை உருவாக்குகிறது” “பார்வையற்றவனுக்கு நீச்சல் பழகித்தருவதைப் போன்றதுதான் மருத்துவம்”
காலரா வியாதி நம்முடைய ஊரிலும் பரவிவருகிறதோ என்று தோன்றுகிறது. மேலும் உதயானா கிராமத்தில் நடந்த கதையில் ஒரு வணிகன் கேட்ட கேள்வி “நோயே இல்லாத மனிதர் எவராவது இந்த உலகில் இருக்கிறார்களா?” இதற்கு பக்த கபிலானி சொல்கிறார் “நமது பிறப்பே ஒரு நோய்மைதானே பின் எப்படி நோய்மையில்லாத மனிதன் இருப்பான்.
நோய்க்கான சில காரணங்களையும் அவர் விளக்குகிறார். சீரற்ற உணவு, அசுத்தமான குடிநீர், மனக்கொந்தளிப்பு, மலம்மூத்திரம் அடக்குதல், சுவாச ஒழுங்கின்மை, பயம், சோம்பல், கோபம், பொறாமை, வஞ்சகம், மிதம்மிஞ்சிய போகம், அதீத காமம் இவைகள் எல்லாம் நோய்மையின் பிரதான காரணிகள். இவற்றை நாம் அறிந்தே செய்கிறோம், நோய்மையுறுகிறோம்.
இந்த கதையின் வழியாக மருத்துவத்தை ஒரு நம்பிக்கை மற்றும் விந்தையாக பார்க்க முடிகிறது.
அத்தியாயம் 10-ல் நம் வெறுப்பிற்கு மருந்து ஒரு குழந்தையிடம் தான் இருக்கிறது என்று சரவணமுத்துவின் கதை வழியாக எஸ்ரா உணர்த்தியிருக்கிறார், பெயர் மட்டுமே அழகாகப் பெற்ற அமுதினி உள்ளத்தில் வைத்திருந்த கசப்பால் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிட்டாள். அக்கா அவளுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை
“நாக்கு தானப்பா நமக்கு விரோதி”
அத்தியாய் 11-ல் கடற்கன்னியின் மகள் செல்வி அவளைப் பார்த்து “அம்மா இதுதான் கடலா” என்று அடிவானத்தைக் காட்டி கேட்டுக்கும்போது மனது லேசாக கனத்துவிடுகிறது.
அறப்பள்ளி மலைகிராமத்தில் சின்னராணி சந்தோஷமாக இருந்தால் என்பதற்கு சாட்சியாக மலைவாசிகளின் இயல்பு, அவர்களின் கொடைகுணம் வெளிப்பட்ட இடம். மூப்பர் சொல்லும் வார்த்தை உண்மை என்று நாவலின் இறுதியில் உணரமுடிகிறது. “கடற்கன்னியை உன்னால் அடக்கி வைத்திருக்க முடியாது, அது தன்னை விடுவித்துக்கொள்ளும் பொழுது துயரமான சம்பவங்கள் நடைபெறும்”
அத்தியாம் 12-ல் ஏலன்பவருக்கு உதவியாளராக சீயாளி அறிமுகமாகிறாள். ஏலன்பவரும் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி சந்தோஷமடைகிறார். ஏலன்பவா¢ன் நினைவாக நாவலில் “உடல் நிறைய இடைவெளிகளையும், துளைகளையும் கொண்டிருக்கிறது, அதை பூர்த்தி செய்யவேண்டும் என்கிற ஆசை உடலுக்கே இருக்கிறதோ என்னவோ அதனால் தான் அது மற்றொரு உடலை தனதாக்கிக்கொள்ள முயல்கிறது”
அத்தியாயம் 13-ல் வரும் சிவபாலன் சேது கதை நிச்சயம் அரசதிகா¡¢கள் படிக்கவேண்டிய கத
கதையின் சில வரிகள் “தன்னிடமிருந்த பணத்தில் எதையும் வாங்கிவிடலாம் என்று நினைத்தவருக்கு இன்றைக்கு ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட தன்னால் நாற்றமில்லாமல் குடிக்க முடியவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது”
“தாய் இறந்துபோன பிறகு தாய் தந்த சுவையும் நம்மைவிட்டு போய்விடுகிறது” கடைசியாக அக்கா சொல்கிறாள்
“நம்மை நாம் உணரத்தவறினால் அதன் இழப்பு நமக்கு மட்டுமானதில்லை உலகத்திற்கும் சேர்த்துதான்”

அத்தியாயம் 14-ல் பாம்பாட்டியின் மனைவி முதன்முதலாக செல்வியின் பெயரைக் கேட்கிறாள், அவளும் அவள் பெயரை முதன்முதலாக “திருச்செல்வி” என்றாள்.மேலும் அழகர் கடற்கன்னி ஷோ நடத்துவதற்க முன்னோடியாக நாக கன்னி ஷோ நடத்தியது, ராமி அதற்கு யோசனை சொன்னது என்று மொத்தமாக அழகர் அலைந்த அத்தியாயம்.
அத்தியாம் 15-ல் செருப்போடு பேசவும், கஷ்டங்களை பகிர்ந்து கொள்கின்ற ஒரு பிச்சைக்காரன். தனிமையை ஒருவன் புரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் கணிக்கமுடியாத ஒரு எண்ணங்களுக்கு கொண்டு செல்லும் என்பதை இந்த சிறுமியின் செருப்புக் கதை உணர்த்துகிறது.
அக்கா சொல்வதாக
“உண்மையில் நாம் விரும்பினாலும் உலகில் தனியாக இருக்கமுடியாது “
கோமகள் கதை இன்றைய மருத்துவத்தை தோலு¡¢த்துக் காட்டியிருக்கிறது.
அத்தியாயம் 16-ல் பம்பாய்க்குப் போகும் அழகர் அண்ணன் என்னவாகியிருப்பான் என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த பனியனையும் செருப்பையும் அழகர் எவ்வளவு நாள் அணிந்திருப்பான். அவன் அண்ணன் நினைவு வந்து போயிருக்குமா? கேள்வியாகவே மனதில் தங்கிப் போகின்றன. அதேபோல் சின்னராணியின் தந்தையின் பாசம் மற்றும் அழகர் மேல் அவர் படும் கோபம் அவனை தற்காலிகமாக மாற்றுகிறது (10 நாட்களுக்கு) .
அத்தியாம் 17-ல் ஏலன்பவர் தெக்கோட்டின் காற்றை அந்த மக்களுடன் சேர்ந்து சுவாசிக்க கற்றுக்கொண்டுவிட்டாள். மருத்துவத்தைக் கற்றுக்கொள்வதற்கு தன்வா கூறும் போது “கடலை ஒவ்வொரு துளியாக குடித்து முடிக்க எவ்வளவு காலமாகமோ அவ்வளவு காலமாகும்” மேலும் ஏலன்பவா¢ன் கேள்வி? “நான் மருத்துவம் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒன்று கடவுளின் மகிமையால் தான் நலமாகிறது என்றால் நான் வெறும் கருவிதானே”
ஏலன்பவாரின் சேவை பிடிவாதங்கள், மருத்துவம் என்ற பெயா¢ன் நடக்கும் கொடுமைகளை ஏலன்பவர் எதிர்த்தது, நாகலா என்ற பெண்ணின் மரணமும் கொடுக்காய் புளியமரத்தில் கட்டிவைத்து நடக்கும் கொடுமையும் ஏலன்பவரால சகிக்க முடியவில்லை. ஏலன்பவாரின் நம்பிக்கை மட்டும் மீதமிருந்து அத்தனையும் இழந்து அவளின் குருவின் பதிலுக்காக காத்திருக்கிறாள்
அத்தியாயம் 18-ல் தானப்பன், ரமணன் பயணம் வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது. நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள நமக்கு பாடம் எடுப்பதுபோல் உள்ளது. அவர்கள் சொல்லும் போது “மனிதனின் முன்னேற்றம் அவன் நடக்கத்துவங்கியதிலிருந்துதான் ஏற்பட்டது” பெரும்பான்மை நோய்களுக்கு மாத்திரை மட்டும் அல்ல நிசப்பத்தம் ஒரு அரும்மருந்து , ஊர் ஊராக சென்று வாழ்க்கையை அவர்கள் முதுமையிலும் அனுபவித்து வாழ்கிறார்கள்.
அத்தியாயம் 19-ல் தெக்கோடு விலக்கு இரயில் நிலையத்தில் இரயில் நின்று எல்லோரும் இறங்கி போகும் போது நாமும் அவர்களுடன் ஒரு வியப்புப் பற்றிக்கொண்டு திருவிழா மைதானத்திற்கு புறப்படுவோம்.
அத்தியாயம் 20-ல் மாதக்கோயில் உருவான கதை மற்றும் கபாரியேல் மாதா தரிசனம் கிடைக்கப்பெறுவது. மற்றும் மாதா கோயிலின் அமைப்புகள் அழகாய் விளக்கப்பட்ட ஒரு அத்தியாயம்.
அத்தியாயம் 21-ல் ஏலன்பவாரிடம் விசாரணை என்றதும் மனது ஏதோ கோர்ட்டு சீனை உருவகப்படுத்திக்கொண்டிருக்கிறது, அவளிடம் ஏதாவது மறுப்பு சொல்கிறாயா என்று கேட்டவுடன் ஏலன்பவாரின் மறுப்புரை ஏதோ ஒரு தெளிவுரை போன்று அமைந்ததாகக் கருதுகிறேன்.
“மருத்துவம் மனிதநலம் குறித்த அக்கறையால் உருவானது”
“கலாச்சாரம் மனிதநலத்தை கட்டுப்பாடு செய்யும் சூழலில் மருத்துவம் வெறுமனே மருந்து தருவதை மட்டுமே தனது வேலையாக கொள்ளாமல் கலச்சார காரணிகளை ஆராயவேண்டியிருக்கிறது.”
“இங்கே மதம் அரசை, அதிகாரத்தை, அடிப்படை கலச்சாரத்தை, தனிமனிதனை, குடும்பத்தை, பிறப்பு, சாவு உள்ளிட்ட அத்தனை சடங்குகளையும் கற்றுக்கொடுக்கிறது.”
“நோய் முக்கியமானத்தில்லை நோயுற்ற மனிதனே முக்கியமானவனாக கருதவேண்டியுள்ளது” “உலகில் மருத்துவத்தை வணிகமாக்கியது ஆங்கில மருத்துவம் தான்”
அவள் மருத்துவப் பணியின் முக்கியத் தடையாக கருதுவது
1. ஒரு பெண்ணை ஆண் நடத்தும் விதம்
2. நோய்மையுறுதலை தீய்மையின் அடையாளமாக காண்பது
3. மரணம் குறித்த பொது அச்சம்
4. கடவுளின் பெயரால் நடைபெறும் நோய் நீக்குதல் சடங்கு
5. நோய்மை குறித்து எந்த நோயாளியோ, அவனது குடும்பமோ, அவன் வசிக்கும் ஊரோ, சமுகமோ எதையும் யோசிக்காமல் இருப்பது.
“மனிதனுக்கு ஏற்படும் பெரும்பான்மை நோய்களுக்கு மனிதன் உற்பத்தி செய்த கருவிகளும், அவனது மோசமான வணிக புத்தியும் அலட்சியமான வாழ்க்கையுமே காரணம்”
அவள் குற்றமற்றவள் என்று தீர்ப்பு சொன்னவுடன் என் மனது ஏலன் பவரைவிட சந்தோஷமடைந்தது.
அத்தியாயம் 23-ல் முதல் நாள் திருவிழா அன்று நானும் செல்வியைப் போலவே எதைப்பார்ப்பது, எதை விடுவது என்று இந்த அத்தியாயம் முழுவதும் போய்க்கொண்டிருந்தேன், ஆனால் யாரிடமும் அடிவாங்கவில்லை, எத்தனை விதமான நோய்கள் மற்றும் கிராமத்து திருவிழாவில் நடக்கும் வேடிக்கை வினோதங்கள், பால்யத்தின் நதியில் சிறிது நேரம் நீந்துவதுபோல் இருந்தது.
அத்தியாயம் 24-ல் எட்டூர் மண்டபத்திலிருந்து நாவலில் சில வா¢கள்
“காமமும் அது சார்ந்த சிக்கலுமே நோயை தோற்றுவிக்கின்றன”
“நினைவில் வாழ்ந்து கிடப்பதுதான் நமது பலமும், பலவீனமும். நினைவேயில்லாமல் மனிதனால் வாழ முடியாது”
“உனக்கு மட்டும் உனது கடந்தகாலம் முக்கியமானது, உலகிற்கு இல்லை ஆகவே அதிலிருந்து விலகி உனக்கான அடையாளங்களை நீ உருவாக்கிக் கொள்ளும் போது கடந்தகாலம் மெல்ல எடையற்று போய்விடும்”
“மனதில் அன்பாக இருப்பதைப்போல் நம்பவைக்கிறது ஆனால் அதனடியில் சுயநலம் ஒளிந்திருக்கிறது அது யாரையும் எப்போதும் விட்டுக்கொடுக்கவும் காட்டிக்கொடுக்கவும் ஏமாற்றவும் தயாராகவே உள்ளது”
“மனிதர்கள் தாங்கள் விரும்புவதைவிடவும் வெறுப்பைப் பற்றித்தான் அதிகம் நினைத்துக்கொண்டிருப்பார்கள்”
அத்தியாயம் 25-ல் மூன்றாம் நாள் திருவிழாவின்போது தம்பான், ஜிக்கி மற்றும் டோலியைப் பற்றி அழகா¢டம் சொல்லும் போது பதற்றமும் குழப்பமும் நிறைந்த பாசம் அவனிடம் வெளிப்படுகிறது.”என்னை ஞாபம் வச்சிக்கிற ஆளுங்க கூட இருக்காங்களா” என்று ஜிக்கி கேட்கும்போது மனதுக்குள் ஏதோ செய்கிறது.
ஜிக்கி சொல்கிறாள் “எங்கேயாவது படுத்து நல்லா ஒரு ராத்திரிதூங்கி எந்திருச்சா போது அப்புறம் கையை ஊன்றி கருணம்போட்டு பொழச்சுக்குவேன்.” ஒருநாள் உண்மையான இதுபோன்ற தூக்கம் எல்லோருக்குமே தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
அத்தியாயம் 26-ல் கிக்கிலி என்ற கிழவனின் அறிமுகம் மற்றம் ஏலன்பவா¢ன் ஒரு உறுதியான கடிதம் தெக்கோட்டு மக்களைப் பற்றியும் நோய்மையைப் பற்றியும்
“குரூரம் என்பதை நாம் மனதின் துவேச நிலையாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் குரூரம் என்பதை வாழ்வின் நடைமுறையாக மாற்றிவைத்திருக்கிறது இயற்கை.”
“வாழ்வின் மீதான பயம் அற்றுப்போகும் போது வாழ்வதையே ஒரு சந்தர்ப்பமாக தான் கருதுகிறார்கள்.” இப்படியாக மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது ஏலன் பவா¢ன் கடிதம்.
அத்தியாயம் 17-ல் ஏலன்பவர் கடிதத்தில் ஒன்று குறிப்பிடுவார். “கடலை ஒவ்வொரு துளியாக குடித்துத்தீர்க்க நினைக்கும் குருவியைப்போலதான் நான் இருக்கிறேன் என்று” ஆனால் இந்த கடிதத்திற்கு லகோம்பை பதில் எழுதும்போது “இன்று கடலே உன் வசமாகியிருக்கிறது” எவ்வளவு மகிழ்ச்சியாக ஏலன் இருந்திருப்பாள்.
“இயற்கையை நாம் அறிந்துகொள்ள நம் கண்களை பயன்படுத்துவது தவறானது, அது வெறும் தோற்றத்தைத் தாண்டி வேறு எதையும் உணரச்செய்யாது”
அத்தியாயம் 27-ல் “அடுத்தவருக்கு சாப்பாடு போடுவதன் வழியே அவன் தனது தவறை சா¢கட்டப்பார்க்கிறான். நம்முடைய பெரும்பான்மை சமூகம் இதைக்கூட செய்ய மறுக்கிறதே.
அத்தியாயம் 28-ல் 5-ம் திருவிழா எனக்கும் தட்டைக்காட்டு திருவிழாவுக்கு அண்டரண்டா பறவை மூலம் போகவேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது. அண்டரண்டா பறவை எப்படியிருக்கும் என்று ஒரு பொ¢ய கற்பனையையே மனது உருவாக்கிக்கொண்டது. சின்னராணி மிகுந்த சந்தோஷத்தில் அழகரை முத்தமிடுகிறாள்.
அத்தியாயம் 29-ல் சின்னராணிக்கு தம்பானின் சுயரூபம் தொ¢யவருகிறது. தட்டைக்காட்டுக்கு போன செல்வியை வேறு காணவில்லை பயத்திலும், குழப்பத்திலும் உறைந்து போயிருக்கிறாள்.
அத்தியாயம் 30-ல் ஏலன்பவாரின் கொலைக்கான வாக்குமூலங்கள். யார் ஏலன்பவரை கொலை செய்தது? இந்த கேள்வி பொன்னியின் செல்வனில் ஆதித்த கா¢காலனை கொலை செய்தது யார் என்பது போல நினைக்கத்தோன்றுகிறது. கிக்கிலி சொல்வதாக “என்னை கொன்றுவிடுங்கள் என் புத்தி கெட்டுப்போய்விட்டது” என்று வைத்துப் பார்க்கும் பொழுது கிக்கிலி இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவனாக நான் கருதுகிறேன்.
அத்தியாயம் 31-ல் நாவலில் சொல்வதுபோல காமம் ஒரு நோய்க் காரணியாக இந்த அத்தியாயத்தில் செயல்படுகிறது. தம்பான் மற்றும் அவன் மைத்துனனின் வெறிச்செயலால் சின்னராணி சிதைந்து போகிறாள், பண்பற்ற காமம் நிச்சயம் பலிவாங்காமல் விடாதுபோலும், தம்பானின் உயிரை அச்சாணி வாங்கிக்கொண்டது.
சின்னராணி கொலை செய்துவிட்டாள் என்று அழகரால் நம்பவே முடியவில்லை “என் பொண்டாட்டியா” என்று மறுபடியும் கேட்டான். கடற்கன்னியின் உடையை தேங்கிக்கிடந்த குட்டையில் தூக்கியெறிந்துவிட்டான், நிச்சயம் அந்தகணம் உணர்ந்திருப்பான் அவள் சுமந்துகொண்டிருந்த வலியை, ஆனால் முத்தப்பா டைலர் பார்த்திருந்தால் கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் அவர் சொல்லும்போது “கடற்கன்னியின் உடை தைக்கிறது ரொம்பவும் கவனமா செய்யவேண்டிய வேலை நாளைக்கு அதபோட்டுட்டு ஓட்டையாகிப் போச்சுனா எனக்கு இல்ல கேவலம்”
அத்தியாயம் 32 (கடைசி அத்தியாயம்) அழகர் நினைப்பதாக “செல்வியை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம்” என்று?
நாவலின் கடைசி வரி”தொலைவில் இரயில் வருவதற்கான புகை தெரிந்தது அழகர் அதை நிமிர்ந்து பார்க்க மனமில்லாமல் தலைகவிழ்ந்து நின்றிருந்தான்”
நான் புரிந்துகொள்வது, இரயில் நம்பிக்கையின் குறியீடு ஆகவே அவருடைய வாழ்க்கைப் பயணமும் தொடரும். அழகர் இரயிலை மட்டும் பார்த்து தலைகவிழ்ந்து கொள்ளவில்லை. அவன் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்துதான் தலை கவிழ்ந்து கொள்கிறான். நிச்சயம் சின்னராணி போன்ற துணிச்சல் மிக்க பெண் அழகரையும் செல்வியையும் தலைநிமிர வைப்பாள்.
துயில் நாம் அனைவரும் வாசிக்கவும் கொண்டாடவும் வேண்டிய அற்புதமான நாவல் என்பதில் சந்தேகமில்லை
துயில்
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
Rs 525
*******
April 24, 2021
தவற விட்ட மீச்சிறு தருணம்
துணையெழுத்து குறித்த வாசிப்பனுபவம்
கோபி சரபோஜி
———————————————–

எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையை குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், பார்க்கும் மனிதர்கள் குறித்து அது புதிய கண்ணோட்டத்தை தந்து கொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல வாசித்த ஒவ்வொருவரும் இதை உணர்ந்திருக்க முடியும்.
இந்த சமூகத்தை எப்பொழுதுமே அலட்சியமாக, சுயநலமாக பார்க்கப் பழகி விட்டோம். அந்தப் பழக்கம் வழக்கமாகி நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது. ஆனால், எஸ். ரா.வின் பார்வையின் வழியே கசியும் எழுத்து ஒவ்வொரு முறையும் நம்மை அந்தப் பிணைப்பில் இருந்து மீட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, பார்க்கு இடங்களை, சந்திக்கும் மனிதர்களை, அவர்களின் துயரங்களை, வாழ்வியலை, அறத்தை, இயல்பை அணுகும் விதத்தில் நம்மை வேறு ஒரு மனவெளிக்குக் கொண்டு வந்து நிறுத்தும் போது நம் தோல்வியை மறுக்க முடியவில்லை.
இந்தத் தொகுப்பில் இருக்கும் பலவித கட்டுரைகளுக்கான சம்பவங்களை என் பால்யத்தில் கண்டிருக்கிறேன். காணாமல் போவது எப்படி? உள்ளிட்ட சிலவற்றிக்கு சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆனால், அவைகளை அந்த வயதில் நான் கண்டு இரசித்த விதமும், எஸ்.ரா. கண்டு உணர்ந்த விதமும் மலைக்கும், மடுவுக்குமானதாக இருக்கிறது. அதனால் தானோ என்னவோ எதையும் மீட்டுருவாக்கம் செய்யும் படைப்பாளியாக அவரால் எப்பொழுதும் நம்மோடு பயணிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.
ஒரு வீட்டிற்குள் நடக்கும் அந்தரங்கமான புரிதலின்மை, விரிசல்கள், நீர்த்துப் போன விருந்தோம்பல், மனிதர்களின் மனப்புழுக்கங்கள், எதிர்பார்ப்புகள், பெண்கள் படும் துயரங்கள், சாதிய நிலைகள், அறிந்தும் அறியாது கடந்து போன நம் அக்ரோஷ முகங்கள், கலைகளின் நசிவு, நினைக்க மறந்த படைப்பாளிகளின் நினை கூரல்கள், நண்பர்களின் ஸ்பரிசம், உறோடுடனான உறவு, இலக்கியங்கள் என வாழ்வின் நான்கு திசைக மனிதர்களையும், சம்பவங்களையும் ஓரிழையாக்கி ”இப்படி இருக்கிறோமே” என ஆதங்கமாய் சொல்லி விட்டு ”இப்படி இருந்திருக்கலாமே” என அன்பின் பால் நம்மை திசை திருப்புகிறார். சக மனிதனிலிருந்து விலகிப் அதன் எல்லைகளை நாம் எட்டி விட்ட நிலையில் சகமனிதன் மீதான பார்வைகளை மாற்றிப் போட வைத்து விடுகிறார்.
பெரும் வன்முறை ஒன்று நிகழும் இடத்தில் கூட அதன் பின் அலைந்து திரியும் மனிதத் துயரங்களை நமக்குக் காட்டுகிறார். புத்தகங்களுடனான நெருக்கமும், வாசிப்பும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைந்து திரிய வைக்கும் என்பதை வாசித்த போது தேசாந்திரியாய் அவர் இன்று எடுத்திருக்கும் அவதாரத்தின் ஆரம்ப வித்து புரிகிறது. மனித துயரங்களை மட்டுமல்ல தான் பார்க்கும் அனைத்தையுமே அதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார். “கூழாங்கல்லின் குளிர்ச்சியை, அழகை உணரத் தெரிந்த நமக்கு அது தண்ணீருக்குள் அடைந்த வேதனையை மட்டும் ஏனோ பார்க்கத் தெரியாமல் போகிறது” என்ற வரிகள் எஸ். ரா.வின் உள்ளக்கிடக்கையைச் சொல்லி விடுகிறது.
வாழ்வை நேசித்தல் குறித்தும், இழப்புகள் குறித்த ஆதங்கம் பற்றியும், நன்றியுணர்வு சார்ந்தும், வாழ்தலின் அர்த்தம் காட்டியும் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் வாழ்தலின் மீதான பிடிப்பைத் தருகிறது. “மனுசன் மட்டும் தான் ஒவ்வொன்னுக்கும் கணக்குப் பார்த்துகிட்டு” என்ற ஒற்றை வரி சொல்லி விடுகிறது நம் இன்றைய வாழ்வின் லட்சணத்தை! ஒவ்வொரு கட்டுரைகளின் வழியாகவும் இமயமலையைக் கடத்தல் போன்ற அசாத்திய வாழ்வியலில் காணத் தவறி விட்ட மீச்சிறு தருனங்களை குருவிகளைப் போல கடந்து நமக்கு மீட்டுத் தருகிறார்.
துணையெழுத்து வழியாக நான் என் வாழ்வை அவிழ்த்து பார்த்துக் கொண்டேன் என எஸ்.ரா. குறிப்பிடுகிறார். அவர் மட்டுமல்ல. வாசிக்கின்ற நாம் ஒவ்வொருவரும் தான்!
மறைக்கப்பட்ட இந்தியா
‘மறைக்கப்பட்ட இந்தியா’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை

இந்தியத்தீபகற்பம் நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்ட பெருநிலம். ஏறத்தாழ எல்லாப் பெரிய, வலிமையான நாடுகளாலும் எண்ணற்ற வந்தேறிகளான ஆட்சியாளர்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளப்பட்ட அடிமை பூமி இது.
இன்று இது விழிப்படைந்து சுதந்திரம்பெற்ற பின்னரும்கூட இதன் உண்மை வலிமையை இந்தியர்களோ, உலக நாடுகளோ புரிந்துகொள்ளவில்லை. இந்தியாவின் தொல்வரலாறு மட்டுமல்ல நேற்றைய நிகழ்வுகூட யாராலோ, ஏதோ ஓர் அரசியல் காரணத்தை முன்னிட்டு மறைக்கப்படுகிறது.
நெடுநாள் திறக்கப்படாத நூலகத்தில் வைத்த நாள் முதல் இன்றுவரை எடுக்கப்படாத ஒரு நூலை எடுத்து, தூசியைத் தட்டி, திறந்து, விழிகளைச் சுருக்கிப் படிப்பது போலத்தான் இருக்கிறது இந்தப் புத்தகத்தைப் படித்த அனுபவம். எத்தனை எத்தனை அரிய செய்திகள்! ‘அட! இது நம்ம இந்தியாதானா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைக்கும் வகையில் 52 அத்யாயங்களை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
ஏன் நாம் நம் வரலாற்றை மறந்தோம்? நமக்கு நமது இந்தியாவைப் பற்றிய புரிதல் மிக மிகக் குறைவாக உள்ளதே! இதைப் பற்றி நாம் ஏன் சிந்திக்கவே இல்லை. நம்மைப் பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் நம் முன்னோர்களின் அதிதிறமைகளைப் பற்றியும் நாம் ஏன் தெரிந்துகொள்ள, நினைவில்கொள்ள ஆர்வம்காட்டவே இல்லை? அதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அதை இந்த எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே கூறிவிடுகிறேன்.
“ மண்புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடத்துக்கு ஊர்ந்துகொண்டுதான் இருக்கின்றன . மனிதர்கள் மட்டும்தான் , ‘ தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை ’ என்று நினைக்கிறார்கள் .”
உலகம் முழுவதும் தழுவிய அன்பும் பற்றுதலும் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் வேண்டும்தான். அதனால்தான்,
‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” (புறம்: 192)
என்றார் சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார். ஆனால், ஒவ்வொருவருக்கும் இயல்பிலேயே தாய்நாட்டுப் பற்று நிச்சயமாக இருக்க வேண்டும். தாய்நாட்டின் மீதான ‘பற்று’ என்பது வேறு, தாய்நாட்டின் மீதான ‘வெறி’ என்பது வேறு. வெறி வேண்டாம். ஆனால், ‘பற்று’ கண்டிப்பாகத் தேவைதான்.
தாய்நாட்டில் இருந்துகொண்டு, ஏதாவது ஓர் அரசியல் காரணத்திற்காகத் தாய்நாட்டைப் பழிப்பவர்களை என்னால் எந்த வகையிலும் நேசிக்க இயலாது. அரசியலும் ஆட்சியதிகாரமும் ஆட்சியாளர்களும் குறுங்குழுக்களும் காலச்சூழலில் மாறுவர். அவர்களால், அவற்றால் ‘நாடு’ ஒருபோதும் கலங்கப்படாது.
இந்தப் புரிதல் இருப்பவர்கள் தாய்நாட்டைப் பழிக்கவே மாட்டார்கள். தாய்நாட்டைவிட்டுப் புலம்பெயர்பவர்களுக்கு மட்டுமே தெரியும் தாய்நாட்டின் மீதான தம்முடைய காதலும் பேரன்பும். வந்தேறிகளுக்கு அவை புரியுமா என்ன?
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியா முழுக்கப் பலமுறைகள் பயணித்தவர். இந்தியாவின் மீது மாறாக் காதலுடையவர். உண்மையான இந்தியர். ‘இந்தியாவைப் பற்றிய நுண்ணிய தகவல்களைக்கூடத் தன்னால் இயன்றவரை தன் வாசகருக்குத் தெரிவித்துவிட வேண்டும்’ என்ற நோக்கில்தான், ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தியாவைப் பற்றியும் இந்திய தேசியக்கொடியைப் பற்றியும் விரிவாக எழுதிச் செல்லும்போது, “நமது தேசியக் கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பிங்காலி வெங்கைய்யா அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி, கி.பி. 1963ஆம் ஆண்டு இறந்தார்” என்ற ஒரு கசப்பான செய்தியையும் சுயவிமர்சன நோக்கில் குறிப்பிட்டுவிடுகிறார். இந்திய வரலாற்றில் இதுபோல மறக்கப்பட்ட, தவறவிடப்பட்ட எண்ணற்ற ஆன்மாக்கள் உண்டு.
‘உயிரினங்களைப் பரிசாக வழங்கும் முறை’ என்பது, ஒருவகையில் அடிமைமுறையின் எச்சம்தான். ஒரு நிலத்தில் வாழும் உயிரினம் பிறிதொரு நிலத்தில் வாழ முடியாதுபோகலாம். ஒவ்வொரு உயிரினமும் தான் வாழும் நிலத்துக்கு ஏற்பவே தகவமைப்புகளைப் பெற்றிருக்கும். இதுதெரியாமல், தனது விருப்பத்திற்காகவும் பிறரிடம் தன் பெருமையை உயர்த்திக்கொள்வதற்காகவும் நம் நிலத்தில் வாழும் உயிரினத்தைப் பரிசாகவோ பணத்துக்காகவோ பிற நிலத்துக்குத் தரும், விற்கும் முறை இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இருந்துள்ளது. அதனைச் சுட்டிக்காட்ட விரும்பும் எழுத்தாளர் அதனோடு இணைத்து, மிகச் சிறந்த ஓவியக்கலைஞரையும் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார்.
“ இந்தியாவிலிருந்து வெளிநாட்டு அரசர்களுக்கு யானை , காண்டாமிருகம் , மான் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டதை வரலாற்றில் காணமுடிகிறது . கி . பி . 1515 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட காண்டாமிருகத்தை போர்ச்சுக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்திருக்கின்றனர் . அதற்கு முன்பு வரை அப்படிப்பட்ட விசித்திர மிருகம் எதையும் அவர்கள் பார்த்ததே இல்லை . அந்தக் காண்டாமிருகத்தை போப்புக்குப் பரிசாக அனுப்பி வைக்க முடிவு செய்து , மீண்டும் கப்பலில் அனுப்பிவைத்தார் மேனுவல் அரசர் . அந்தக் கப்பல் கடற்புயலில் சிக்கி மூழ்கியது . தனக்குப் பரிசாகக் கொண்டு வரப்பட்ட அந்த அதிசய மிருகம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று போப் விரும்பியதால் , புகழ்பெற்ற ஓவியர் டூரரை அழைத்து , அந்த மிருகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னதும் நேரில் காணாமலேயேஅவர் காண்டாமிருகத்தை அசலாக வரைந்து முடித்த அதிசயமும் நடந்தது .”
இந்தப் பத்தியை வாசித்தபோது, ஓவியர் டூரரை என் மனம் பாராட்டியது. உயிரினங்களை விற்கும் பரிசளிக்கும் அத்தனை பேரையும் என் மனம் சபிக்கவே செய்தது.
இந்தியாவில் நாம் ஒரு புள்ளியில் வாழ்கிறோம். இந்தியாவில் வணிகத்தின் பொருட்டோ அல்லது சுற்றுலாவின் பொருட்டோ குறுக்கும் நெடுக்குமாகச் சென்று வருபவர்கள் இந்தியாவின் சில தனித்துவமான அடையாளங்களை மட்டுமே அறிய முடியும். எல்லாவற்றையும் விரிந்த விழிகளோடும் திறந்த மனத்தோடும் அணுகும் எளிய பயணியாக இந்தியா முழுவதும் நடமாடுபவர்களுக்கே இந்தியாவின் உண்மைமுகம் தெரியவரும்.
“ பன்முகக் கலாசாரமே இந்தியாவின் தனித்துவம் . இந்தப் பண்பாட்டுக் கலப்பினை ஒருவர் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் , அவர் சாலை வழியாக இந்தியாவில் பயணிக்க வேண்டும் . உணவு , உடை , விருந்தோம்புதல் , மொழி , நம்பிக்கை , சடங்கு மற்றும் கலை என்று எத்தனையோ மாறுபட்ட தனித்துவமான கலாசார அம்சங்கள் இருக்கின்றன என்பதை நேரடியாக அறிய முடியும் .”
என்று எழுத்தாளர் கூறுவது, அவர் பெற்ற தொடர் பயண அனுபவத்தின் வழியாகத்தான்.
‘இந்தியாவும் இயற்கை வளங்களும்’ என்ற தலைப்பில் இனிவரும் தலைமுறை ஒரு கட்டுரை எழுதினால், அவர்கள் எந்த இயற்கை வளத்தைக் கண்டு எழுதுவார்கள்?. இந்தியாவில் இருந்த இயற்கையை இணையத்தில் தேடித்தானே எழுத இயலும்! அந்த அளவுக்கு நாம் இந்தியாவின் இயற்கை வளத்தை அழிதொழித்துவருகிறோம். இதனை நாம் அந்நியர்களிடம் அடிமைப்பட்ட காலத்தில்தான் கற்றுக்கொண்டோம் என்கிறார் எழுத்தாளர்.
“ இந்தியாவிலிருந்து கடந்த 300 ஆண்டுகளில் மிக அதிகமாக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன . பிரிட்டிஷ் , டச்சு மற்றும் போர்த்துக்கீசிய வணிக கம்பெனிகளுக்குக் கொள்ளை லாபம் தரும் விற்பனைப் பொருளாக நமது இயற்கை வளங்கள் திகழ்ந்தன . இந்தச் சுயலாப வணிகமே இ ன்று பல்கிப் பெருகி இயற்கையை அழித்தொழிக்கும் வன்முறையாக உருமாறி இருக்கிறது . அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் மரங்களும் சுதந்திரமாக இருப்பது இல்லை என்பதை உணர்த்துவதுபோலவே காடு மௌனமாக நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது .”
நமது தேசத்தின் மகாகவியும் கல்வியாளருமான தாகூர் பற்றி இந்தப் புத்தகத்தில் நீண்ட கட்டுரைகள் இருக்கின்றன. ஏறத்தாழ தாகூரின் அனைத்துப் பரிமாணத்தையும் தொட்டுக்காட்டும் வகையில் அந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தின் வழியாகவும் சமூகஊடகங்களின் மூலமாகவும் நாம் அறிந்த தாகூர் வேறு. எழுத்தாளர் இந்தப் புத்தகத்தின் வழியாக நமக்குக் காட்டும் தாகூர் பிறிதொருவராகத் தெரிகிறார்.
“ ‘ பள்ளி ’ என்பது , இயற்கையான சூழலில் அமைய வேண்டும் . மாணவர்கள் கல்வி கற்க வருவதை மகிழ்ச்சியான செயலாகக் கருத வேண்டும் . தண்டனை இல்லாத , எளிய , தனித்துவமான கற்றல் முறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டார் தாகூர் . அதற்காக அவர் நிறுவியதே ‘ சாந்திநிகேதன் ’.”
மகாத்மா காந்தியடிகளுக்கும் மகாகவி தாகூருக்கும் இடையிலான ஒட்டுதல்களையும் உரசல்களையும் எழுத்தாளர் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் வழியாக அவ்விருவரைப் பற்றியும் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. தாகூரின் சாதனைகளையும் அவரின் ஆளுமையைப் பற்றியும் இந்தப் புத்தகத்தின் வழியாக அறிந்த பின்னர், அவரை நமது தேசத்தின் மற்றொரு ‘மகாத்மா’ என்றே நான் எண்ணுகிறேன்.
இந்தியர்களின் பார்வையில் இந்தியா என்பது வேறு. அந்நியர்களின் பார்வையில் நமது இந்தியா என்பது நாம் அறியும் பிறிதொரு இந்தியாதான். வழக்கமாக நாம் பள்ளிப்பாடப் புத்தகத்தின் வழியாக இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகள் குறித்துப் படித்திருப்போம். அந்தப் பயணிகளின் வரிசையில் அஃபனாசி நிகிதன், அலெக்ஸி சோல்டிகோப் ஆகியோரை இடம்பெற்றிருக்க மாட்டார்கள்.
அஃபனாசி நிகிதன் என்ற கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வணிகர் இந்தியாவைத் தன் எழுத்தால் பதிவு செய்திருக்கிறார். அலெக்ஸி சோல்டிகோப் என்பவர் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவைத் தன் ஓவியத்தால் பதிவு செய்திருக்கிறார்.
இவர்களைப் பற்றியும் அவர்களின் பார்வையில் இந்தியா எப்படி இருந்தது என்பது குறித்தும் விளக்கியுள்ளார் எழுத்தாளர். இறுதியாக,
“ வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் யாவும் நிஜமானவை அல்ல . மிகைப்படுத்துதலும் கேட்டறிந்த தகவல்களும் நிறைய கலந்திருந்திருக்கின்றன . ஆனாலும் , கடந்த காலத்தின் குரலை இந்தக் குறிப்புகள் மூலம் கேட்க முடிகிறது என்பதே இதன் வரலாற்று முக்கியத்துவத்துக்கான காரணம் .”
என்று குறிப்பிட்டு, நாம் எந்த அளவுக்கு அந்நியர்களின் இந்தியப் பயணம் பற்றிய குறிப்புகளை நம்பவேண்டும் என்பதற்கு ஒரு வரையறையை விதித்துவிடுகிறார் எழுத்தாளர்.
இந்தியாவில் பல்வேறுவிதமான ஓவியமுறைகள் இருப்பதைப் பற்றி நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிந்திருப்போம். மொகலாய நுண்ணோவியம் பற்றிய விரிவான புரிதல் நமக்கு நிச்சயமாக இருந்திருக்காது.
“ கையளவு உள்ள சிறிய ஓவியத்தை வரைய ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன . ஒரு மொகலாய நுண்ணோவியத்தில் ஓணாணின் கண் உள்ளே தெரியும் மங்கலான பிம்பம்கூட துல்லியமாக வரையப்பட்டு இருக்கிறது என்றால் அதன் நுட்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் .”
என்கிறார் எழுத்தாளர். கடும் உழைப்பின் விளைவாகவே ஒவ்வொரு ஓவியமும் உருப்பெருகின்றன. அவற்றுள் ‘மொகலாய நுண்ணோவியம்’ சிகரம் எனலாம்.
‘இன அழிப்பு’ என்பது உலக அளவில் ஒரு வல்லரசுக் கலாச்சாரமாகவே மாறிவருகிறது. அல்லது சிற்றரசுகளின் கூட்டணிகளுக்குரிய பெருந்தீனியாகவும் இன அழிப்புக் கொடுமைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் யூதர்களும் ஈழத்தமிழர்களும் பலியானார்கள். ஆனால், வரலாறு அவர்களைப் போன்ற பல இனங்களைக் குறிப்பிடுகிறது. அவர்களுள் ஓர் இனத்தவர்களே ஆர்மீனியர்கள்.
“ ‘ ஆர்மீனியர்கள் ஒருபோதும் வாய்விட்டுச் சிரிப்பதில்லை . மறுக்கப்பட்ட நீதியின்வலி அவர்கள் தாடைகளை ஒடுக்கிவைத்திருக்கிறது ’ என்று புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் சரோயன் கூறியுள்ளார் . அவரும் ஆர்மீனிய வம்சாவழியைச் சேர்ந்தவரே . அந்த வாசகம் இன்று ஈழத் தமிழ் மக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றே ! ”
இந்தப் புத்தகத்தில் ஆர்மீனியர்களைப் பற்றிப் படிக்கும்போது, நெஞ்சம் கனத்துவிடுகிறது. ‘ஒருநாள் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடுமோ?’ என்றும் மனம் பதற்றம்கொள்கிறது.
‘நமது வரலாற்றைப் பிறர் மறைத்தமைக்கு நிகராக, நமக்கு நாமே மறைத்து, அழித்தவைதான் மிகுதியோ!’ என்று எண்ண வைக்கிறது பின்வரும் பத்தி.
“ ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த தடயம்கொண்ட தமிழகம் அதன் வரலாற்றுப் பெருமைகளை மறந்து முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் , தடயங்கள் , அகழாய்வுகள் நடைபெற்ற இடங்கள் யாவற்றையும் சிதைத்தும் அகற்றியும் கைவிட்ட நிலையில் வைத்துள்ளமை வரலாற்றக்குச் செய்யும் பெரும் துரோகம் .”
இனிவரும் தலைமுறையாவது வரலாற்றுக்குத் துரோகம் செய்யாமல் இருக்கட்டும். அதற்கு ஏற்ப அவர்களை நாம் பழக்க வேண்டும். இல்லையெனில், ‘கண்கட்டுவித்தை’யில் மாயமாகும் பொருட்களைப் போலவே நம் கண்முன்னாலேயே நமது இந்தியா ‘மறைந்த இந்தியா’வாக ஆகிவிடும். அதைத் தடுக்கும் வகையில் எழுதப்பட்டதே ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற இந்தப் புத்தகம்.
இந்தியா யாரால், எதனால் மறைக்கப்பட்டது? நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெளிநாட்டவர்களாலும் அவர்களின் கொடுங்கோன்மைமிக்க அதிகாரத்தினாலும்தான். ஒவ்வொரு நாட்டுக்கும் இதுபோன்றே மறைக்கப்பட்ட பெருவரலாறு இருக்குமா? நிச்சயமாக இருக்கும். அவற்றை அகழ்ந்து, உலகுக்குக் காட்டப்போவது யார்? அடுத்த தலைமுறைகளே! அதுபோலவே, ‘நமது இந்தியத் தலைமுறைகளால் நமது இந்தியாவின் புகழ் உலக வரலாற்றில் என்றும் மங்காமல் இருக்கும்’ என்று நம்புவோம்.
வரலாற்று மாணவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டுப் பற்றுடைய ஒவ்வொரு தமிழரும் வாசிக்க வேண்டி மிகச் சிறந்த வரலாற்றுக்கருவூலம் ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற இந்தப் புத்தகம்
– – –
கவிதையும் கவிஞனும்
மணல் கடிகை என்ற தனது வலைப்பக்கத்தில் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் ரமாகாந்த் ரத்தின் கவிதை குறித்த எண்ணங்களைப் பகிர்ந்திருந்தார். மிக நல்ல கட்டுரையது.
“ஒரு கலைஞன் என்ற முறையில் அவன் ஒரு குயவனிலிருந்து அல்லது ஒரு தச்சனிலிருந்து வேறுபடுகிறான். தாங்கள் உருவாக்க நினைப்பதை செய்து முடிப்பதில் அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடிகிறது. தங்களது படைப்புக்கு அவர்களால் நேர்மையுடன் உரிமை கோரமுடிகிறது. ஆனால், கவிஞனின் நிலை அவ்வாறில்லை. முன்னர் அறியாத ஒரு உயிர்துடிப்பான ஒரு தருணத்தின் கருவியாக மட்டுமே அவன் இருந்திருக்கிறான்.“
இந்த வரிகளைத் திரும்பத் திரும்ப படித்துக் கொண்டேயிருந்தேன். கவிஞனின் அசலான வாக்குமூலமிது.
அழகான இந்த;க் கட்டுரையை மொழியாக்கம் செய்து பகிர்ந்துள்ள எம். கோபாலகிருஷ்ணனுக்கு நன்றி
••
கவிதையும் கவிஞனும் – ரமாகாந்த் ரத்
தமிழில் : எம். கோபாலகிருஷ்ணன்

நீண்ட காலமாய் நான் கவிதை எழுதிக் கொண்டிருந்தாலும்கூட ஒரு கவிதை எப்படி எழுதப்படுகிறது என்பது பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. ஒரு சில கவிஞர்களே இதை அறிவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அவர்களிலும் ஒரு சிலர் கவிதையில் தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை என்பதில் திருப்தியடைந்திருக்கிறார்கள் என்றாலும்கூட! என்னைப் பொறுத்தவரை தான் எப்போது எப்படி எழுதப்படவேண்டும் என்பதை கவிதையே தீர்மானிக்கிறது என்றே நினைக்கிறேன். கவிஞனை ஒரு கருவியாகவே அது தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. எனவே, தானே கவிதையின் ஆசிரியன் என்கிற மாயையை கவிஞன் உதறித் தள்ளவேண்டும். அவன் செய்ய வேண்டியதெல்லாம் கவிதை இவ்வுலகில் இறங்கி வரும் தருணத்தில் அதைக் கைகொள்ளத் தவறிவிடாத ஒரு ஆயத்த நிலையில் இருப்பதுதான்.
கவிஞன் கவிதையின் ஆசிரியன் இல்லை என்பதை எந்தவொரு நிலையிலும் எளிதில் நிரூபிக்கமுடியும். அவன்தான் ஆசிரியன் என்றால் அவன் விரும்பும்போதெல்லாம் அவனால் கவிதை எழுத முடியவேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. மேலும், ஒரு கவிதையை எழுதி முடித்த பின்பு அந்தக் கவிதை அவன் நினைத்ததிலிருந்து முற்றிலும் வேறானதாகவே இருக்கிறது. ஒரு கலைஞன் என்ற முறையில் அவன் ஒரு குயவனிலிருந்து அல்லது ஒரு தச்சனிலிருந்து வேறுபடுகிறான். தாங்கள் உருவாக்க நினைப்பதை செய்து முடிப்பதில் அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடிகிறது. தங்களது படைப்புக்கு அவர்களால் நேர்மையுடன் உரிமை கோரமுடிகிறது. ஆனால், கவிஞனின் நிலை அவ்வாறில்லை. முன்னர் அறியாத ஒரு உயிர்துடிப்பான ஒரு தருணத்தின் கருவியாக மட்டுமே அவன் இருந்திருக்கிறான்.
கவிஞன் ஒரு கவிதையைத் தனது சாதனையாக நினைத்து, குதூகலிக்க முடியாமல் போவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. ஒவ்வொரு தொழிலிலும் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகமென்றாலும் தோல்விக்கான சாத்தியங்களும் அதே அளவில் உண்டு. ஆனால், கவிதையைப் பொறுத்தவரை தோல்வி உத்தரவாதமானது. வெற்றி எப்போதாவது வெகு அபூர்வமாய் வாய்க்கலாம். உங்கள் அனுபவங்களை மிக நேர்மையாக அலசிப் பார்ப்பீர்களேயானால் நீங்கள் சொல்ல நினைத்ததில் மிக கொஞ்சமானதையே, பெரும்பாலும் உத்தேசித்த உணர்ச்சியின் சிதைந்த ஒரு பகுதியையே சொல்ல முடிந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் கவிதையில் நீங்கள் விவரிக்க நினைத்த உணர்ச்சியின் பெரும்பகுதி தப்பிப் போயிருக்கும். இது எப்போதும் கவிஞனின் குற்றமாக இருக்காது. கவிஞனின் பல உணர்வு நிலைகளுக்கு மொழியினால் ஈடுகொடுக்க முடியாததால் அவற்றை விவரிக்கச் சொற்களை அவனால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அவன் கண்டெழுதும் சொற்கள் அவனது உணர்ச்சிகளை முழுமையாகவும் நம்பகத் தன்மையுடனும் வெளிக்கொணர முடிவதில்லை.
மழை நாள் இரவொன்றில் ஒரு காட்டினூடே நீங்கள் பயணம் செய்வதாய் கற்பனை செய்துகொள்ளுங்கள். காட்டில் மரங்களும் மலைகளும் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தகர்க்க முடியாத அடர்ந்த இருள் அவற்றைத் தழுவியுள்ளது. மழை பெய்யும் ஓசையை நீங்கள் கேட்கிறீர்கள். திசையெங்கும் காட்டின் மரங்களும் இலைகளும் மலைகளும் மண்ணும் மழையில் நனைந்துகொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இருளும் மழையும் இரண்டறக் கலந்திருக்கின்றன. இப்போது இந்த மழை வெறும் மழையல்ல. இருள் வெறும் இருளல்ல. இவற்றோடு இணைந்து உங்களை நீங்கள் உணர்வது தவிர்க்க முடியாதது. இதை நீங்கள் முழுக்க அனுபவிக்கிறீர்கள். ஆனால் இந்த அனுபவத்தை அதன் எந்தப் பகுதியையும் இழந்துவிடாது முழுமையாக விவரிக்கிற வார்த்தைகளை உங்களால் தேர்வு செய்துவிட முடியுமா?
இவ்வாறு பல அனுபவங்கள் உள்ளன. ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் அனுபவங்களுக்கான வார்த்தைகளைத் தெரிவுசெய்ய நீங்கள் தவறிவிடுகிறீர்கள். இப்படியிருக்கும்போது கவிஞனால் தான் வெற்றி அடைந்துவிட்டதாய் எப்படிக் கூறிக் கொள்ள முடியும்? அவன் எழுத நினைத்த கவிதை பெரும்பாலும் எழுதப்படாமலே நின்றுவிடுகிறது.
இது கவிஞனின் விதி. அவன் உண்மையில் கவிஞனென்றால், கர்வமற்றவன் என்றால் அவனது அனுபவம் தோல்வியான ஒன்றாகவே இருக்கும். சில காலங்களுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதையை எழுதமுடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு அசலான கவிஞனுக்கு இந்த நம்பிக்கை வறட்சி என்பது தீர்வில்லாத முடிவற்ற ஒரு அனுபவமாகும். அவன் தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறானென்றால் அதற்குக் காரணம் அவன் தளராத தைரியசாலி என்பதே. ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்திருந்தாலும் தோல்வியைக் கண்டு துவளாதவன். இந்த தைரிய குணத்தை துணிச்சலிலிருந்தும் அகந்தையிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். துணிச்சலும் அகந்தையும்மிக்க ஒரு கவிஞன், தான் தோற்றுப் போவதை அறிவதில்லை. இதற்கு மாறாக அசலான கவிஞனே தன் தோல்வியைப் புரிந்துகொள்கிறான். இருப்பினும் கவிதையை அவனால் விட்டுவிட முடிவதில்லை. அவன் வாழ்வின் மிக முக்கியமான தவிர்க்கமுடியாத ஒன்றாகவே அது ஆகிவிடுகிறது.

கவிஞனுக்கு முன்னுள்ள வாய்ப்புகள் தெளிவானவை. தன் கவிதையின் உள்ளீடற்ற தன்மையையும் சாதாரண தன்மையையும் அறிந்துகொள்ளாது, கவிஞன் என்கிற முகமூடியயை அணிந்துகொண்டு முகமெங்கும் கர்வம் ஒளிர, பிறரிடமிருந்து தான் வித்தியாசமானவன் என்கிற மிதப்போடு தன்னைப்போல பிரபலமடையாத பிற கவிஞர்களிடமிருந்து தான் வேறுமாதிரியானவன் என்ற தலைநிமிர்வோடு உலகை வலம்வருவது ஒன்று. அல்லது நம்பிக்கை வறட்சியோடு முகம் முழுக்க கண்ணீரில் நனைந்து தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருப்பது. அவன் தொடர்ந்து கவிதை எழுதுவது தன் அனுபவ முழுமையை விவரிக்கும் கவிதையொன்றை என்றேனும் ஒரு நாள் எழுத முடியும் என்ற நம்பிக்கையால் அல்ல! தான் பொய்யானவன் இல்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள வேறு வழியேதும் இல்லை என்பதனால்தான். ‘நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடுவேன்’ என்று அவன் சொல்வதில் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால் அவன் நினைப்பிற்கும் அவனது கவிதைக்கும் உள்ள இடைவெளி என்பது தான் கவிஞனே என்று உறுதியாய் நினைத்துக் கொண்டிருக்கிற மகிழ்ச்சியான ஒரு கவிஞனின் கவிதைக்கும் நினைப்புக்கும் உள்ள இடைவெளி அளவுக்கு பெரிதாய் இருக்காது.
(ரமாகாந்த் ரத், ஒரியக் கவிஞர். நவீன ஒரியக் கவிஞர்களில் முதன்மையானவர். சாகித்ய அகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். சாகித்ய அகாதமியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.)
April 23, 2021
காலத்தின் அடையாளம்
சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ராயப்பேட்டையின் நினைவுகள் குறித்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை புதிய பகுதி ஒளிபரப்பாகும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
