S. Ramakrishnan's Blog, page 135

April 8, 2021

அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல்

புதிய சிறுகதை

டாக்டர் மோகன் தங்கையா தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இரண்டாம் முறையாகப் பிள்ளையார் கோவில் தெரு வரை போய் வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாகத் துவங்கியிருந்த அன்பரசன் கிளினிக் வெளியே முப்பது நாற்பது பேருக்கும் மேலாகக் காத்திருந்தார்கள்.

மணி ஐந்தாகியிருந்த போதும் இன்னமும் டாக்டர் வரவில்லை. ஒருவேளை ராயல் ஹாஸ்பிடலில் இருப்பாரோ என்னவோ.

பெட்டிக்கடையினை ஒட்டித் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மருத்துவமனை வெளியே காத்திருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி என்ன அன்பரசனிடம் யாரும் செய்யாத சிகிட்சை இருக்கிறது என இப்படிக் காத்துக்கிடக்கிறார்கள் என்று எரிச்சலாக வந்தது.

டாக்டர் அன்பரசன் எம்.டி என்ற அந்தப் பெயர் பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இவ்வளவு தான் விளம்பரம். இதுவே மக்களை இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.

அவர் முதன்முறையாக மேட்டுத் தெருவின் கடைசியில் கிளினிக் ஆரம்பித்தபோது இதைவிடவும் பெரிய பெயர்பலகை செய்து மாட்டியிருந்தார். கிளினிக் ஆரம்பித்த நாளில் இரண்டே பேஷண்டுகள். வெறும் எண்பது ரூபாய் வருவாய்.

இந்த முப்பது வருஷங்களில் அவர் ஆறு இடங்களுக்குக் கிளினிக்கை மாற்றிவிட்டார். ஆனால் அவரிடம் நோயாளிகள் வரவேயில்லை. ராசியில்லாத டாக்டர் என்ற பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.

அன்பரசன் வெறும் பொடிப் பையன். கிளினிக் ஆரம்பித்து ஆறு மாதக்காலத்திற்குள் நோயாளிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள். எப்படியும் ஒரு நாளைக்கு முப்பதாயிரத்திற்கும் குறையாமல் வருமானம் வரும். இது தவிர இரண்டு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவராக வேறு வேலை செய்கிறான். சம்பாத்தியம் கொட்டத்தான் செய்கிறது. நிச்சயம் அடுத்த வருஷம் இவன் பெரிய கிளினிக் வைத்துவிடுவான் என்று அவருக்குப் பொறாமையாக இருந்தது

அந்தப் பொறாமையை அவர் மறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தெரிந்தவர்களிடம் வெளிப்படையாகவே பேசினார். வம்பு பேசுவதற்கு வயதா என்ன. ஆனால் வெறுமனே பொறாமைப்பட்டு என்ன ஆகிவிடப்போகிறது

இவனைப் போல இளம் மருத்துவர்கள் பலர் நகரில் முளைத்துவிட்டார்கள். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாகிவிட்டன. டாக்டர்கள் தான் ஊரில் அதிக நிலத்தை, வீடுகளை விலைக்கு வாங்குகிறார்கள்.

ஆனால் தன்னைப் போல முப்பது ஆண்டுகாலமாக மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கும் சாதாரண எம்பிபிஎஸ் டாக்டர்களின் கதி. ஒரு நாளைக்குப் பத்து நோயாளிகள் வந்தாலே அதிர்ஷடம். சில நாட்கள் காலை ஏழு மணிக்கு கிளினிக் வந்தால் பனிரெண்டு மணி வரை ஒரு ஆள் கூட வருவதில்லை. இதில் எதற்காகக் கிளினிக்கை திறந்து வைத்து உட்கார்ந்திருக்க வேணடும்.

நேரத்தை கடத்துவதற்காகவே நாலு நியூஸ் பேப்பர்கள் வாங்கிப்போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். காலை கிளினிக் வந்தவுடன் அந்தப் பேப்பர்களை வரி விடாமல் படிப்பார். நர்ஸ் மேகலா தன் அறையினுள் உட்கார்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதிக் கொண்டிருப்பாள். மருந்துக் கம்பெனி பிரநிதிகள் சிலர் அவரைத் தேடி வருவதுண்டு. அவர்களும் கூட அன்பரசனைப் பற்றித் தான் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்

நேற்று கூட ஒரு விற்பனை பிரதிநிதி அவரிடம் சொன்னான்

“ எக்ஸ் எம்எல்ஏ முத்துசாமி விஷயம் கேள்விபட்டீங்களா டாக்டர். அப்பல்லோ வரைக்குப் போய்க் கைவிட்ட கேஸ். ஆனால் அன்பரசன் நாலு நாள்ல குணமாக்கிட்டார். முத்துசாமியோட மகன் ஒரு தட்டு நிறைய ஐநூறு ரூபாயை வச்சி கொண்டுவந்து டாக்டர் கால்ல கொட்டியிருக்கானு சொல்றாங்க. எல்லாம் கைராசி“

“நல்ல டாக்டர்னு சொல்லு நான் ஏத்துகிடுறேன். அது என்ன கைராசி முகராசினு.. கைராசின்னா மருந்து குடுக்காமல் குணமாக்கச் சொல்லு பாப்போம். இதெல்லாம் வெறும் ஹம்பக்“.

“அப்படியில்லை டாக்டர். நீங்க ரொம்ப சீனியர். மெடிகல் ஜேர்னல்ல கூட ஆர்டிகிள் எழுதுறீங்க. ஆனா இங்கே கூட்டம் வருதா. நாம எவ்வளவு பெரிய டாக்டரா இருந்தாலும் அதிர்ஷடம் கூட இருக்கணும்“

“அதெல்லாம் முட்டாள்தனம். இந்த மக்களைத் திருத்த முடியாது“

“அன்பரசன் கிட்ட போயி குணமாகாதவங்களே கிடையாது. அதுக்கு என்ன சொல்றீங்க“

“அது எல்லாம் பொய். அவன் என்ன கடவுளா. பத்துப் பேருக்கு வைத்தியம் பாத்தால் ரெண்டு பேருக்குக் குணமாகாமல் தான் போகும். அது வெளியே தெரியாது. இதெல்லாம் வெறும் மவுத்டாக்“

“மவுத்டாக் சும்மா வந்துராது டாக்டர்.. அன்பரசனோட அப்பா நாடார் ஸ்கூல்ல வாத்தியாராம். அன்பரன் அக்காவும் டாக்டராம். லண்டன்ல வேலை பாக்குதாம்  அன்பரசன் ரொம்ப சிம்பிளா பழகுறார் .“

“இதை எல்லாம் ஏன்கிட்ட ஏன்பா சொல்றே. நான் கேட்டனா. யாரு எப்படிப் போனா எனக்கு என்ன. “

“கோபால்சாமி டாக்டர் இடத்தைப் பிடிச்சிருவார்னு பேசிகிடுறாங்க“

“பிடிச்சா பிடிக்கட்டும்… நீ கிளம்பு“ என்று அந்த மருத்துவிற்பனை பிரதிநிதியை துரத்தி அனுப்பினார்

மருத்துவத்திற்கும் ராசிக்கும் என்ன தொடர்பிருக்கிறது. அன்பரசன் எழுதும் அதே மருந்தை தான் தானும் எழுதப்போகிறோம். ஆனால் அவனிடம் போகிறவர்கள் கைராசியான டாக்டர் என்கிறார்கள். தன்னைத் தேடி ஒருவரும் வருவதில்லை. இது என்ன முட்டாள்தனம்.

இவ்வளவிற்கும் தான் படித்த அதே மருத்துவக் கல்லூரியில் தான் அன்பரசனும் படித்திருக்கிறான். தன் மகள் வயது தானிருக்கும். இவன் வயதில தானே கனவுகளுடன் நாம் கிளினிக் துவங்கினோம். அவன் ஜெயிப்பது நம்மை ஏன் தொந்தரவு செய்கிறது.

அன்பரசனுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தொடர்ந்து தோன்றியபடியே இருந்தது. அன்பரசன் கிளினிக் இருந்த ரோட்டில் பள்ளம் தோண்டி விட்டால் நோயாளிகள் வருவது குறைந்துவிடும் எனக் கிருஷ்ணதாஸ் மூலம் ஏற்பாடு செய்தார்.

தோண்டிப்போட்ட குழியைத் தாண்டி ஆட்கள் வர சிரமப்பட்டார்கள். அன்பரசனின் பைக் கூட வரமுடியவில்லை. அந்தக் குழியை மூடும்வரை தற்காலிகமாக ஏஞ்சல் லேப்பில் நோயாளிகளைப் பார்ப்பது என அன்பரன் முடிவு செய்யவே அங்கே கூட்டம் நிரம்பியது. லேபிற்கும் வருமானம் கூடியது. சில நாட்களில் கவுன்சிலர் தலையிட்டு உடனே அந்தக் குழியினை மூடியதோடு தார் போட்டு ரோட்டினையும் சரி செய்து கொடுத்துவிட்டார்

இதன்பிறகு அன்பரசன் கிளினிக் இருந்த இடத்து உரிமையாளரிடம் வாடகையை உயர்த்திக் கேட்க வைப்பது. முனிசிபாலிடிக்குப் புகார் அனுப்பி வைப்பது எனப் பலவிதங்களில் முயன்று பார்த்தார். எதுவும் அவனது வளர்ச்சியைத் தடுக்கவில்லை. அதிர்ஷ்டம் அவன் பக்கம் தான் எப்போதுமிருந்தது

••.

ஏதோ ஒரு சக்தி தனக்கு எதிராக வேலை செய்கிறது என்று மோகன் உறுதியாக நம்பினார். அது என்னவென்று தான் அறிந்து கொள்ள முடியவில்லை

அதிர்ஷடம் ஏன் தன்னை நெருங்கவேயில்லை. இத்தனை வருஷமாகக் காத்துகிடக்கிறோமோ, அதற்குக் கருணையே கிடையாதா.

ஏழு ஆண்டுகள் காத்திருந்தால் நிச்சயம் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்பார்களே. தான் முப்பது ஆண்டுகளாகக் காத்திருந்தும் அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல் கூடத் தன் மீது படவில்லையே என அவருக்குக் குழப்பமாக இருந்தது

••

மோகனின் சிறுவயதில் அந்த ஊரில் மொத்தமே நான்கு டாக்டர்கள் தான் இருந்தார்கள். அதிலும் கோபால்சாமி டாக்டர் தான் ரொம்பவும் பிரபலம்.. அவரது கிளினிக்கின் மரப்பெஞ்சில் எப்போதும் நோயாளிகள் காத்துகிடப்பார்கள். சுற்றிலும் இருந்த கிராமங்களிலிருந்து அவரைத் தேடியே வருவார்கள். அவரும் கிராமவாசிகளிடம் கறாராகப் பணம் கேட்பதில்லை. சிலருக்கு இலவசமாகவே அறுவை சிகிட்சை கூடச் செய்திருக்கிறார்.

கோபால்சாமி மருத்துவமனைக்குப் போனால் பூச்சிமருந்து குடித்தவர்களைப் பிழைக்க வைத்துவிடுவார் என்றொரு நம்பிக்கையிருநத்து. அது உண்மையும் தான். கணவனோடு சண்டையிட்டுக் கொண்டு பூச்சி மருந்து குடித்த பெண்கள். கடன் தொல்லையால் பாலிடால் குடித்தவர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

ஐந்தே படுக்கைகள் கொண்ட அவரது மருத்துவமனை சில வருஷங்களில் நான்கு மாடி கொண்டதாக மாறிவிட்டது. காலை ஆறு மணி முதல் இரவு பத்தரை வரை கோபால்சாமி கிளினிக்கில் இருப்பார். இரவு கிளம்பும் போது அவரே தனது கறுப்பு நிற அம்பாசிடர் காரை ஒட்டிக் கொண்டு போவார். பிரௌண் கலர் லெதர் பை ஒன்றை கையில் கொண்டு எடுத்துக் கொண்டு வெளியே வருவார். அந்தப் பை நிறைய அன்றைய வருமானம் இருக்கும்.

ஒரு ரூபாய் நோட்டுகளைப் போட்டு வைக்கத் தனியே ஒரு மரப்பெட்டி வைத்திருத்தார் என்பார்கள். அது உண்மை. மோகனே பார்த்திருக்கிறார். டாக்டரின் நாற்காலியை ஒட்டி அந்த மரப்பெட்டி நிறைய ஒரு ரூபாய்கள் குவிந்து கிடக்கும்.

வஉசி நகரில் டாக்டர் டென்னிஸ் கோர்ட், நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டி திறப்பு விழா செய்தபோது ஊரே திரண்டு போனது.

அவரைப் பார்த்து தான் மோகனின் அய்யா தன் மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். அதற்காக ஒருதடவை கோபால்சாமியிடம் மகனை அழைத்துப் போய் ஆலோசனை கேட்டு வந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு மோகனுக்குள் அப்படித் தான் உருவானது. வேர்விடத் துவங்கியது.

மருத்துவக் கல்லூரி முடித்தவுடன் பயிற்சி காலத்தில் மட்டுமே பொதுமருத்துவமனையில் வேலை செய்தார். பின்பு ஒரு ஆண்டுக் காலம் கோபால்சாமி மருத்துவமனையிலே இளம் மருத்துவராக வேலை செய்தார். அதன்பிறகு தனியே கிளினிக் ஆரம்பித்துவிட்டார்

அந்த நாட்களில் மோகனுக்கு இந்த ஒரே கனவு தான் டாக்டர் கோபால்சாமியின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது. ஆனால் அது இத்தனை ஆண்டுகள் கடந்தும் நடக்கவில்லை. கோபால்சாமி இறந்து அவரது மகன் கிளினிக்கை நடத்த ஆரம்பித்து அவனாலும் அந்த இடத்தைத் தக்கவைக்க இயலவில்லை. இனி அப்படி ஒரு மருத்துவரால் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாது. அந்தக் காலம் இனி திரும்பி வராது.

••

இந்த முப்பது வருஷங்களில் ஊர் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. புதிய அரசியல் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். புதிது புதிதாகப் பள்ளிக்கூடங்கள் வந்துவிட்டன. பழைய சினிமா தியேட்டர் எதுவும் தற்போதில்லை. கார்களும் பைக்கும் மிக அதிகமாகிவிட்டது. அவரைப் போல அந்தக் கால எம்பிபிஎஸ் டாக்டர்கள் நாலைந்து பேர் மட்டுமே இன்றிருக்கிறார்கள்.

இப்போது யார் வெறும் எம்பிபிஎஸ் படித்துவிட்டு கிளினிக் நடத்துகிறார்கள். எல்லாம் எம்டி. எம்எஸ். இன்னும் எத்தனையோ வெளிநாட்டுப் படிப்புகள். நட்சத்திர விடுதிகளைப் போல அறைகள் கொண்ட மருத்துவமனைகள் வந்துவிட்டன. நோயாளிகள் முன்பை விடப் பெருகியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னைப் போன்ற சாதாரண டாக்டர்களைத் தேடி வருவதில்லை. மதிப்பதில்லை.

புதிதாகக் கிளினிக் ஆரம்பித்த காலத்தில் விளம்பரத்திற்காகச் சினிமா தியேட்டரில சிலைடு போடச் செய்தார். காந்தி மைதானத்தில் பெரிய விளம்பரப் பலகை வைத்தார். பொருட்காட்சிக்கு வந்த சினிமா நடிகர் ஒருவரை நண்பர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து போட்டோ எடுத்து மாட்டினார். இது எல்லாம் அவருக்கே வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால் இதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை.

ஒரு மருத்துவரின் விதியை அதிர்ஷடம் எழுதுவதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

கிளினிக் புகழ்பெற வேண்டும் என்பதற்காக நாள் தவறாமல் முருகன் கோவிலுக்குப் போய் வந்தார். வாரம் ஒரு நாள் ஆஞ்சநேயரை வழிபட்டார். பல்வேறு ஜோதிடங்கள் பார்த்தார். பொட்டல்பட்டியில் ஒரு சித்தர் இருக்கிறார் என்று தேடிப்போய் அவரிடம் ஆசி பெற்று வந்தார். அவரது ஆலோசனையின் படி மருத்துவமனையில் கிழக்கு பார்த்த அறையில் அமர்ந்து கொண்டார். ஆனால் நோயாளிகள் அவரைத் தேடி வரவில்லை

டாக்டர் மோகனின் அய்யா காய்கறிமார்க்கெட்டில் தேங்காய் மண்டி வைத்திருந்தார். கம்பத்தில் நாலைந்து தென்னந்தோப்புகளைக் குத்தகைக்கு எடுத்திருந்தார். மகன் கிளினிக் வைத்தும் வருமானம் இல்லையே என்ற வேதனை அவருக்குள் அதிகமாக இருந்தது.

தன் மகனை டாக்டராகப் படிக்க வைத்த பணத்தைத் திரும்ப எப்படி எடுப்பது. என்ற கவலை அவரை அரித்துக் கொண்டிருந்தது எப்போது டாக்டர் கோபால்சாமி போலப் பங்களா கட்டுவது. எப்போது வீடு கடைகள் என்று வாங்கிப் போடுவது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் கிளினிக் மூடும் நேரம் அவர் மருத்துவமனைக்கு வந்து அன்றைக்கு எவ்வளவு வருமானம் என்று மோகனிடம் கேட்பார்.

அதைச் சொல்வதற்கே மோகனுக்கு எரிச்சலாக இருக்கும். தயங்கி தயங்கிச் சொல்வார்.

“கரண்ட் செலவுக்குக் கூட உன்னாலே சம்பாதிக்க முடியலை. பேசாமல் துபாய்க்கு வேலைக்குப் போயிடு. நல்ல சம்பளமாவது கிடைக்கும்“ என்பார் அய்யா

அதைக்கேட்கும் போதெல்லாம் மோகனுக்குத் தனது தோல்வியின் கசப்பு தலைக்கு ஏறும்.

“கிளினிக்கை திறந்து வச்சித் தான் உட்கார முடியும். ரோட்டில நின்று போறவர்றவங்களை ஆள்பிடிக்க முடியாதுல்லே“ என்று கோபமாகச் சொல்லுவார்

“உனக்கு பின்னாடி ஆரம்பிச்ச லாரன்ஸ் டாக்டர் மகன் கிளினிக்ல கூட்டத்தைப் பாரு “

“அது ஆர்த்தோ கிளினிக்“

“அப்போ அதுக்குப் படிச்சிருக்க வேண்டியது தானே“

“நான் படிச்சதுக்கு வைத்தியம் செய்தால் போதும்“

“நான் உன்னை டாக்டருக்கு படிக்க வைச்சது சம்பாத்தியம் பண்ண. அதைச் செய்ய முடியலைண்ணா.. பேசாம இழுத்துமூடிட்டு என் கூடத் தேங்காய் மண்டிக்கு வந்து சேரு. அதுல இதை விட வருமானம் ஜாஸ்தி ‘“

என்று மோகனின் முகத்திற்கு நேராகவே அய்யா சொல்லுவார். அவர் அப்படித்தான். எதையும் மறைத்து பேசுவதேயில்லை.

திருமணம் செய்து கொண்டால் அவரது தோஷம் நீங்கி கிளினிக் புகழ்பெற்றுவிடும் என்ற யோசனையை யார் சொன்னது எனத்தெரியவில்லை. ஆனால் மோகனின் அய்யா அதை உறுதியாக நம்பினார். முடிந்தால் டாக்டர் மகளைத் தேடி திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அலைந்தார்.

டாக்டர் மகளை விடவும் பெரிய இடத்தில் பெண் கிடைத்தது. சாந்தாவின் அப்பா ஒரு பட்டாசுத் தொழிற்சாலை வைத்திருந்தார். ஒரே மகள். பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். சிவகாசியில் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் இருந்தது. இருநூறு பவுன் நகையும் அம்பாசிடர் காரும் கொடைக்கானலில் ஒரு வீடும், லட்ச ரூபாய் ரொக்கமும் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்.

“டாக்டருக்கு படிக்க வைத்ததிற்கு இது ஒன்று தான் பலன் “என்றார் மோகனின் அய்யா

மோகனுக்குத் தன்னோடு படித்த அழகான பெண்களோடு ஒப்பிடும் போது குள்ளமாக, தலையாட்டி பொம்மை போல உடல் கொண்டிருந்த சாந்தாவைப் பிடிக்கவில்லை. ஆனால் மாமனார் தயவிருந்தால் நிச்சயம் பெரிய மருத்துவமனை துவங்கிவிடலாம் என்று நினைத்துத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்

அவருக்குக் கோட் தைப்பதற்காக மெட்ராஸிற்கு விமானத்தில் அழைத்துக் கொண்டு போனார்கள். திருமண மண்டப வாசலில் சீதனமாகப் புதுக்கார் நின்றிருந்தது. அவரது திருமணத்தை மிகப்பெரியதாக நடத்தினார்கள்.

திருமண வாழ்க்கையால் அவரது உடம்பில் சதை போட்டதைத் தவிர வேறு பெரிய மாற்றம் எதுவும் உருவாகிவிடவில்லை. தனது புதுக்காரை கிளினிக் முன்னால் நிறுத்த இடமில்லை என்பதற்காகக் கிளினிக்கை இரண்டாவது கேட்டை ஒட்டிய வீதிக்கு மாற்றினார்.

புதிய மருத்துவமனைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் மாமனாரே செய்து கொடுத்தார். வாடகை கட்டிடம் என்றாலும் பெரிய பெரிய அறைகள் கொண்டதாக இருந்தது. மோகன் அமர்ந்து கொள்ளும் சுழல் நாற்காலியை விசேசமாகச் செய்திருந்தார்கள். நோயாளிகள் காத்திருக்கும் வரவேற்பறையில் கறுப்பு வெள்ளை டிவி கூட வாங்கிப் பொருந்தினார்கள். பெரிய மீன் தொட்டி ஒன்றும் வைக்கபட்டிருந்தது. வெளிச்சுவரில் என்னைப் பார். சிரி என்ற கழுதையின் படம கொண்ட திருஷ்டி போட்டோ ஒட்டப்பட்டிருந்தது.

கிளினிக் ஆரம்பித்த நான்காம் நாள் மாலை புதுக்குடியிலிருந்து ஒரு சிறுமியை ஆம்புலன்ஸில் கொண்டு வந்திருந்தார்கள்.. சிறுமி மூச்சிரைப்பில் துடித்துக் கொண்டிருந்தாள்

கிளினிக்கில் சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக ஒரு நரம்பு ஊசி போட்டார். பின்பு ட்ரிப்ஸில் மருந்து கலந்து போட செய்தார். இரண்டு மணி நேரத்திற்குள் அந்தச் சிறுமி இறந்து விட்டாள்

கிளினிக்கில் ஏற்பட்ட முதல் மரணம். சிறுமியின் தாயும் தகப்பனும் அழுது கூச்சலிட்டார்கள். ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து சண்டையிட்டார்கள்.. டாக்டரின் தவறான சிகிட்சையே காரணம் என்று ஒருவர் சப்தமிட்டார். ஆத்திரத்தில் ஒருவன் கிளினிக்கில் இருந்த மீன்தொட்டியை உடைத்துப் போட்டான். அந்தச் சிறுமியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு பெரிய பஞ்சாயத்தே நடந்தேறியது. அன்றிலிருந்து தான் அவர் ராசியில்லாத டாக்டர் என்ற பெயர் உருவாகத் துவங்கியது. அது எப்படியோ வளர்ந்து உறுதியாகிவிட்டது.

சிறுமியைக் காப்பாற்ற தன்னால் ஆன சிகிட்சைகளைச் சரியாகத் தானே செய்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது. எங்கே ராசி வந்து சேருகிறது என அவர் நிறைய நாட்கள் யோசித்திருக்கிறார்

ராசியில்லாத மருத்துவர் என்று பெயர் வாங்கிவிட்டால் அதை நீக்குவது எளிதானதில்லை போலும்.

••

இனி இந்த மக்கள் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும். தனக்குச் சாப்பாட்டு பிரச்சனையில்லை. மாமனார் கொடுத்த சொத்து இருக்கிறது. காரும் வசதியான வீடுமிருக்கிறது. இனி மருத்துவராகப் புகழ்பெறாமல் போனால் என்ன நஷ்டம் என்ற முடிவிற்கு வந்திருந்தார்

இதனால் சில நாட்கள் காலைக்காட்சி சினிமாவிற்குப் போய்விடுவார். ஒரு சில நாட்கள் தியானம் கற்பது எனத் தபோவனத்திற்குப் போய்த் தங்கி வருவார். நர்சரி கார்டனில் ஆர்வம் கொண்டு ஒரு இடத்தை வாங்கிச் செடி வளர்க்கச் செய்தார். எதைச் செய்த போதும் மனதில் அந்தக் கசப்பு குமட்டிக் கொண்டேயிருந்தது. தனது தோல்வியை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தன்னால் பணத்தையும் சம்பாதிக்க முடியவில்லை. பெயரையும் சம்பாதிக்க முடியவில்லை.

தன்னால் முடியாத விஷயத்தை யார் யாரோ எளிதாகச் சாதித்துவிடுகிறார்கள். அது தான் தாங்கமுடியாத வெறுப்பாக உள்ளது. அதுவும் இந்த அன்பரசன் வந்தபிறகு அவரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. அங்கே எவ்வளவு நோயாளி வருகிறார்கள். எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருந்தார்.

பிடிக்காத விஷயம் மண்டைக்குள் புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவது கஷ்டம். எந்த மாத்திரையாலும் மனதிலிருக்கும் பொறாமையை அகற்றமுடியாது தானே

••

நர்ஸ் மேகலா எட்டு மணிக்குக் கிளம்பிப் போன பிறகு மோகன் மட்டுமே கிளினிக்கில் இருந்தார். செல்போனில் வீடியோ கேம் ஆடுவது தான் நேரத்தைக் கொல்லும் வழி. சோன்பப்டி விற்பவன் வெளியே மணியோசையுடன் போகும் சப்தம் கேட்டது. வாங்கிச் சாப்பிடலாம் என்ற ஆசை தோன்றியது. ஆனால் வெளியே போக மனதின்றி வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தார். விளையாட்டில் அடையும் வெற்றித் தற்காலிமாக அவரை மகிழச் செய்து கொண்டிருந்தது.

இரவு பத்தரை மணிக்கு அவர் கிளினிக்கை மூடும் நேரம் வாசலில் யாரோ வந்து நிற்பது போலிருந்தது. திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தார்

வாசலில் டாக்டர் அன்பரன் நின்றிருந்தான். அவனது கையில் ஒரு கட்டைப் பை இருந்தது.

இவன் எதற்குத் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்பது போலக் குழப்பத்துடன் ஏறிட்டு பார்த்துக் கொண்டிருந்தார்

“டாக்டர் கிளம்பியாச்சா“ எனப் புன்சிரிப்போடு கேட்டான்

அந்தச் சிரிப்புத் தன்னை ஏளனம் செய்வது போலவே மோகன் உணர்ந்தார்

“இல்லை. ஒரு பேஷண்ட் வீட்டுக்குப் போய்ச் செக் பண்ணணும்“ என்றார்

“எனக்கு ஐந்து நிமிசம் போதும்“ என்றபடியே தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு சில்வர்தட்டினை வெளியே வைத்தான். பிறகு பையிலிருந்த ஆப்பிள் ஆரஞ்சு பழங்களை  எடுத்து வைத்து அதன்மீது. ஒரு ஸ்வீட் பாக்கெட்டினை வைத்தான். பிறகு மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிக்கை ஒன்றை அதன் மேல் வைத்து அவரிடம் நீட்டியபடியே சொன்னான்

“எனக்குக் கல்யாணம். மார்ச் 10, மதுரையில் வச்சிருக்கேன். நீங்க அவசியம் குடும்பத்துடன் வந்து வாழ்த்தணும் டாக்டர்“

அதை வாங்கிக் கொள்வதா, வேண்டாமா எனப் புரியாமல் திகைத்து நின்றார்

அவன் தட்டை நீட்டிக் கொண்டேயிருந்தான். அவர் அதைத் தன் கையில் வாங்கியதும் அவன் சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து வணங்கினான்

மோகன் எதுவும் பேசவில்லை. அவனைத் தொட்டு எழுப்பி விட்டார்

அவன் மாறாத புன்முறுவலோடு “நீங்க எல்லாம் சீனியர். உங்களோட ஆசீர்வாதம் இருந்தா தான் நான் நல்லா வரமுடியும்“ என்றான்

எதுவும் தெரியாதவர் போல மோகன் கேட்டார்

“எப்படி போகுது கிளினிக்“

“பரவாயில்லை டாக்டர். உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா.. எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க. “

அந்தக் கல்யாணத்திற்குத் தன்னால் வரமுடியாது என்று முகத்திற்கு நேராகச் சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் அதை வெளிக்காட்ட முடியவில்லை. அன்பரசன் அவரிடமிருந்து விடைபெற்றுப் போனபிறகு அவர் கல்யாணப் பத்திரிக்கையைப் பிரித்துப் பார்க்காமலே கிழித்துப் போட்டார்.

பின்பு அந்தத் தட்டில் இருந்த ஸ்வீட் பாக்ஸ், பழங்களை அப்படியே எடுத்துக் கொண்டு வெளியே நடந்தார். சாலை இருண்டிருந்தது.

தந்திக் கம்பத்தை ஒட்டிய சாக்கடையில் கொண்டு போய் அந்தச் சில்வர் தட்டினை வீசி எறிந்தார். ஆப்பிள் பழங்கள் சாக்கடைகள் விழுந்தன. ஸ்வீட் பாக்ஸ் மட்டும் பாதித் திறந்து அதிலிருந்த சில லட்டுகள் வெளியே விழுந்துகிடந்தன

ஆத்திரத்துடன் அந்த லட்டினைக் காலால் ஒங்கி எத்தினார். புழுதியோடு லட்டுச் சிதறிப்போனது.

“கல்யாணம் ஒரு கேடு“ என்று சொல்லியபடியே சாக்கடையை நோக்கி காறி உமிழ்ந்தார்.

பிறகு தனது கிளினிக்கைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தார். ஸ்கூட்டரில் வீடு போய்ச் சேரும்வரை அவரது மனதில் விவரிக்க முடியாத சந்தோஷம் நிரம்பியிருந்தது.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 04:05

April 7, 2021

டால்ஸ்டாயின் ஒவியம்

டால்ஸ்டாயின் உருவச்சிலையை முதன்முறையாக வடித்தவர் அவரது மனைவி சோபியா. அவர் தான் மார்பளவு சிலை ஒன்றை செய்து கொடுத்தார். Ilya Repin என்ற புகழ்பெற்ற ஒவியர் டால்ஸ்டாயை சிறப்பான ஒவியம் தீட்டியிருக்கிறார். டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ஒவியங்களை வரைந்தவர் லியோனிட் பாஸ்டர்நாக். இவரே. டால்ஸ்டாயின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். இவரது மகன் தான் நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் பாஸ்டர்நாக்.

லியோனர்ட் பாஸ்டர்நாக்  1862 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி ஒடேஸாவில் ஒரு  யூத குடும்பத்தில் பிறந்தார். , 15 ஆம் நூற்றாண்டின் யூத தத்துவஞானியான ஐசக் அப்ரபனெலில் வம்சாவழியில் வந்த குடும்பமது. இளவயதிலே ஒவியம் வரையத் துவங்கிய லியோனர்ட்  ஒடேஸா கலைப்பள்ளியில் பயின்றார்.

1881 முதல் 1885 வரை, லியோனிட் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில், முதலில் மருத்துவத் துறையிலும், பின்னர்ச் சட்டத் துறையிலும் படித்தார்.பின்பு கலையில் முழுமையாக ஈடுபட வேண்டி ம்யூனிச்சிலிருந்த ராயல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் கல்வி பயின்றார். பட்டம் பெற்று ரஷ்யா திரும்பிய அவர் இரண்டு ஆண்டுகள் இம்பீரியல் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார்.

லியோனர்ட் தீவிரமான இலக்கிய வாசகர். இசை ரசிகர். லியோ டால்ஸ்டாயின் நெருக்கமான நண்பராக இருந்த காரணத்தால் அடிக்கடி டால்ஸ்டாயின் பண்ணைவீடான யஸ்னயா போல்யானாவிற்குப் போவதை வழக்கமாக வைத்திருந்தார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவல் தொடராக வந்த போது அதற்கு இவர் தான் சித்திரங்கள் வரைந்தார்.

டால்ஸ்டாயின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட பாஸ்டர்நாக் குடும்பம் அவர் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தது. டால்ஸ்டாய், கார்க்கி ரில்கே எனப் பல முக்கிய ஆளுமைகளை ஒவியம் தீட்டியிருக்கிறார் லியோனிட்.

தனது தந்தை டால்ஸ்டாயின் தொடருக்கு ஓவியம் வரைந்த அனுபவத்தைப் பாஸ்டர்நாக் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

“எனது அப்பா டால்ஸ்டாயை தனது ஆதர்சமாக் கொண்டவர். புத்துயிர்ப்பு நாவலை டால்ஸ்டாய் தொடராக எழுதிய போது அதற்கு எனது தந்தையே சித்திரங்கள் வரைந்தார். நீவா என்ற இதழில் நாவல் தொடராக வெளிவந்தது. அதன் பதிப்பாளர் பியோதர் மார்க்ஸ். நாவலுக்கு ஏற்றார் போல யதார்த்தமான சித்திரங்களாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கதை நடைபெறும் நீதிமன்றம், சிறைச்சாலை. போன்றவற்றிற்கு நேரில் பார்வையிட்டுத் துல்லியமாகப் படங்கள் வரைந்தார். அதை டால்ஸ்டாய் மிகவும் பாராட்டினார்.

நாவல் அச்சிற்குப் போகும்வரை டால்ஸ்டாய் திருத்தம் செய்து கொண்டேயிருப்பார், ஆகவே உரியப் படங்களை வரைந்து பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள பதிப்பாளருக்கு அனுப்பி வைப்பது பெரிய சவால். இதற்குத் தீர்வு காண்பதற்கு ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் இதற்குப் பெரிய உதவி செய்தார்கள்

ரயில் புறப்படும் நிமிஷம் வரை அவர்கள் வெளியே தலையை எட்டியபடியே ஓவியங்கள் வந்து சேர காத்துக் கொண்டிருப்பார்கள், சுடச்சுடப் படம் வரைந்து ஒரு பாக்ஸில் போட்டு ஒட்டி சீல் வைத்து அதை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு அப்பா ஒடிப் போய் ஒப்படைத்து வருவார்.

டால்ஸ்டாய் மீதான அபிமானம் காரணமாக ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் இந்தப் பணிக்குப் பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்கிறார் போரிஸ் பாஸ்டர்நாக்.

1910ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் உடல்நலமற்று மரணத்தருவாயில் கிடக்கிறார் என்பதை அறிந்த லியோனிட் அவரது இறுதிநிமிசங்களை ஒவியம் வரைவதற்காக அஸ்தபோவ் கிளம்பினார். அப்போது போரிஸ் பாஸ்டர்நாக்கையும் உடன் அழைத்துக் கொண்டு போனார்.

அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த டால்ஸ்டாயை லியோனிட் ஓவியம் வரைந்திருக்கிறார். அது தான் டால்ஸ்டாயின் கடைசி ஒவியம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 05:26

April 6, 2021

தமிழ்க் கவிதையின் இடம்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பெரும்பான்மையான INDIAN POETRY ANTHOLOGY களில் தமிழ்க் கவிதையே இடம்பெறுவதில்லை. அபூர்வமாக இடம்பெற்றாலும் மிக மோசமான கவிதையாக உள்ளது. அதைப் படிக்கும் வாசகன் இவ்வளவு தானா தமிழ்க் கவிதையின் தரம் என நொந்துபோவான்.

சமீபத்தில் அப்படி இரண்டு கவிதைத் தொகுதிகளைப் படித்தேன். இரண்டிலும் தமிழ்க் கவிதைகள் இடம்பெறவில்லை. இன்று இந்திய அளவில் தமிழின் நவீன கவிதை மிகச் சிறந்த இடத்தைக் கொண்டிருக்கிறது. தமிழில் உள்ளது போலப் புதுக்குரல்கள். புதிய மொழி, புதிய கவிதையாக்கம் வேறு மொழிகளில் அதிகம் நடைபெறவில்லை.

தமிழ், மலையாளம் கன்னடம் அல்லது குஜராத்திக் கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அந்தக் கவிதையின் சாரத்தை மட்டுமே நாம் பெறுகிறோம். அதன் இசையை, தனித்துவமான மொழியமைப்பை, அர்த்த தளங்களை நாம் பெறுவதில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகளில் மிகக் குறைவானவை தான் சிறந்த முறையில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

கவிதையை மொழியாக்கம் செய்வது எளிதானதில்லை. அது ஒரு சவால். ஒரே கவிதையை எப்படி வேறுவேறு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு Eliot Weinberger எழுதிய Nineteen ways of looking at Wang Wei சிறந்த நூலாகும். அதை வாசித்துப் பாருங்கள். கவிதை மொழியாக்கத்தின் உண்மையான சவால்களை உணர்வீர்கள்.

பெரும்பான்மை ஆங்கில தொகுப்பாளர்களுக்குத் தமிழ் கவிதையுலகம் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தங்களின் நண்பர்களின் மூலம் தெரிந்த தமிழ் கவிஞர்களைத் தேர்வு செய்கிறார்கள். அவ்வளவே. பல நேரம் அந்த முயற்சியைக் கூட எடுப்பதில்லை.

தொகுப்பு நூலில் தான் அப்படி என்றால் இணையத்தில் நடைபெறும் இந்திய அளவிலான கவிதை வாசிப்பு. மற்றும் சர்வதேச கவிதைகள் விழா என எதிலும் தமிழ் கவிஞர்கள் அழைக்கப்படுவதில்லை. பங்குபெறுவதில்லை. அது போன்ற ஒரு உலகம் இயங்குவதே பல தமிழ் கவிஞர்களுக்கும் தெரியாது.

விதிவிலக்காகக் கவிஞர் சுகுமாரன். கவிஞர் சேரன், கவிஞர் சல்மா போன்றவர்கள் சில கவிதை நிகழ்வுகளில் அழைக்கப்படுகிறார்கள். சுகுமாரனின் கவிதைகள் முழுமையாக ஆங்கிலத்தில் வெளியாக வேண்டும். அவர் உலக அளவில் பேசப்பட வேண்டிய கவிஞர். சமீபத்தில் அவரது கவிதைகள் பற்றி மலையாளக் கவிஞர் ராமன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். சிறப்பாக எழுதியிருக்கிறார்.

சமகாலத் தமிழ் கவிதையுலகம் பற்றி ஆங்கிலத்தில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எம்.எஸ். ராமசாமி மொழிபெயர்ப்பில் முன்பு ஒரு தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதைத் தவிர இந்தியன் லிடரேசர் இதழில் தமிழ் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. நகுலன் தானே ஆங்கிலத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். கல்கத்தாவிலுள்ள ரைட்டர்ஸ் வொர்க் ஷாப் அதை வெளியிட்டுள்ளது.

சர்வதேசக் கவிதைகளை வெளியிடும் இணையதளங்கள் ஐம்பதுக்கும் மேலிருக்கின்றன. அதில் நூற்றுக்கணக்கான நவீன சீனக்கவிதைகள். ஜப்பானியக் கவிதைகள். ஸ்பானியக் கவிதைகள் உள்ளன. ஆனால் எதிலும் தமிழ் கவிதைகளைக் காணமுடியாது. மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்கிறார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் அது போன்றவற்றில் கவிதைகளை கொண்டு செல்லும் முனைப்பு தமிழ் வெளியில் குறைவாக இருக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கவிஞர் தேவதச்சனின் கவிதைகளை ஒருவர் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பினால் பத்துக்கும் குறைவான கவிதைகளே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

பிரெஞ்சிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ழாக் பிராவர் கவிதைகளை நாம் கொண்டாடுகிறோம். இது போலத் தேவதச்சன் கவிதைகளைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டால் அங்கே நிச்சயம் கொண்டாடப்படுவார்.

சங்க கவிதைகளை ஏ.கே. ராமானுஜன், வைதேகி ஹெபர்ட் ஆகியோர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தங்கப்பாவும் ஆ.ரா. வெங்கடாசலபதியும் இணைந்து Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry எனத் தொகுப்பினை கொண்டு வந்திருக்கிறார்கள். டாக்டர் கே. எஸ். நிறைய கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். லதா ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியக் கவிஞர்களை மொழியாக்கம் செய்து FLEETING INFINITY என்ற தொகுப்பினைக் கொண்டு வந்திருக்கிறார்.  ஆனால் அவை பரந்த வாசிப்பிற்கும் ஆழ்ந்த கவனத்திற்கும் உள்ளாகவில்லை.

ஆற்றூர் ரவிவர்மா தமிழிலிருந்து புது நானூறு என முக்கியமான நவீனத் தமிழ்க் கவிதைகளை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். இது போல ஆங்கிலத் தொகுப்பு செய்யப்படுதல் அவசியம்.

சென்ற ஆண்டு மும்பையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட போது நிறைய இந்திய எழுத்தாளர்களுடன் உரையாடினேன். அவர்கள் திருக்குறள். கம்பன். பாரதியை தவிர வேறு எந்த நவீன தமிழ் கவியினையும் அறிந்திருக்கவில்லை. இவ்வளவிற்கும் அவர்கள் தீவிர வாசிப்பாளர்கள்.

இன்றும் தொடர்ந்து ஆங்கில நாளிதழ்களில் கவிஞர்கள் பத்தி எழுதுகிறார்கள். சமகால ஆங்கில கவிதைகள் பற்றி பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. மலையாள, கன்னடக் கவிஞர்கள் நிறைய ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தபடுகிறார்கள். சர்வதேச பதிப்பகங்கள் அவர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றன. தமிழ் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குகைக்குள் வாழ்ந்து கொண்டு சுவரோவியங்கள் வரைந்து கொண்டிருப்பதை போலவே இன்றைய நவீன தமிழ் கவிஞன் சமகால உலகினால் நடத்தப்படுகிறான். கவிதையைக் கொண்டாடாத சமூகம் மேம்படாது.

ஆங்கிலத்தில் மட்டுமின்றிப் பிற இந்திய மொழிகளிலும் சமகாலத் தமிழ்க் கவிதைகளின் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு வெளியாக வேண்டும். அதுவே தமிழ் கவிதையின் இடத்தை உலகறியச் செய்யும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2021 06:34

April 5, 2021

சிரிப்பை மறந்த இருவர்

.

இத்தாலிய இயக்குநரான விட்டோரியா டி சிகா இயக்கிய two women 1960 ம் ஆண்டு வெளியான திரைப்படம். டி சிகாவின் மாஸ்டர் பீஸ் என்றே இதைச் சொல்ல வேண்டும். அவரது புகழ்பெற்ற பை சைக்கிள் தீவ்ஸ் படத்தினை விடவும் இப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதில் நடித்த சோபியா லாரன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றிருக்கிறார். நியோ ரியலிசப் படங்களில் முக்கியமான இப்படம் உலகச் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நியோ ரியலிச திரைப்படங்கள் இத்தாலியின் வாழ்வியலை மிக இயல்பாக வெளிப்படுத்தின. வறுமை, போரின் அவலங்கள். அகதி நிலை. பொருளாதாரச் சீரழிவு. வீடற்ற வாழ்க்கை, வேலையின்மை என அதன் கருப்பொருட்கள் அன்றைய காலத்தின் நிஜமான விஷயங்களாக இருந்தன. ஆடம்பரமான அரங்க அமைப்புகள். மிகை ஒப்பனைகள். பரபரப்புக் காட்சிகள் எதுவுமின்றி வாழ்க்கைக்கு நெருக்கமாக இந்தத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் விட்டோரியா டி சிகா நியோ ரியலிச சினிமாவின் புதிய அலையை உருவாக்கிக் காட்டினார்

இரண்டு பெண்கள் திரைப்படம் ஒரு தாயையும் மகளையும் பற்றியது. இரண்டாம் உலகப் போரின்போது கதை நடைபெறுகிறது. ரோமில் ஒரு சிறிய மளிகை கடையை நடத்தி வரும் இளம் விதவை சிசிரா தனது மகள் ரொசெட்டாவுடன் வாழ்ந்து வருகிறாள். உலகப்போரின் காரணமாக ரோம் நகரின் மீது குண்டு வீசப்படுகிறது. இதனால் மகளுடன் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற நினைக்கும் சிசிரா பக்கத்தில் வசிக்கும் ஜியோவானியிடம் தனது கடையை ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறாள்.

மத்திய இத்தாலியின் மலைப்பிரதேசமான சியோசீரியாவுக்குத் தப்பிச் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் ரயில் நடுவழியில் நின்றுவிடுகிறது. ஆகவே ரயிலில் இருந்து இறங்கி தலைச்சுமைகளுடன் தனது ஊரை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பெண்களும் தங்கள் உடைமைகளைத் தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு நடப்பதை மொத்த ரயிலும் வேடிக்கை பார்க்கிறது. மகள் தலையிலிருந்து பெட்டி நழுவி விடுமோ என்று அனைவரும் பதற்றம் அடைகிறார்கள்.

ரயிலில் மகளுக்கு உட்கார இடம் தேடுவதில் துவங்கி வெக்கையைச் சமாளிக்கமுடியாமல் சட்டை பொத்தானைத் திறந்துவிடும் நேரம் ஒரு ஆணின் கண்கள் தன் மார்பை நோக்குவதைக் கண்டு அவனை முறைத்தபடியே சட்டையைச் சரிசெய்து கொள்வது வரையான காட்சிகளில் சோபியா லாரன் பளிச்சிடச் துவங்குகிறார்

தனது தாயின் ஊருக்குச் செல்லும் சிசிரா அங்கே உறவினர்களுடன் ஒன்று சேருகிறாள். அப்போதும் மகளைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வது தான் அவளது ஒரே குறிக்கோள். அப்பாவியான அந்த மகளின் முகத்தில் வெளிப்படும் வெகுளித்தனமும் இயல்பான சிரிப்பும் அபாரம்.

மகள் மீதான தனது அன்பை சிசிரா வெகு அழகாக வெளிப்படுத்துகிறாள். ஒரு காட்சியில் மகளின் அருகில் படுத்துக் கொண்டு அவளது இடுப்பு சதையைக் கிள்ளிப் பார்த்துவிட்டு போதுமான சதை போடவில்லை என்று கவலைப்படுகிறாள். இன்னொரு காட்சியில் மகளுக்கு ஆசையாக ரொட்டியைப் பிய்த்துச் சாப்பிடத் தருகிறாள். வேறு ஒரு காட்சியில் மகளுக்குத் தலைவாறிவிடும் போது மகள் உன்னைப் போலவே எனக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்கிறாள். அதற்கு இன்னும் கொஞ்சம் நீ வளர வேண்டும் என மகளைக் கொஞ்சுகிறாள். தாயும் மகளும் கண்களாலே பேசிக் கொள்கிறார்கள்.

ரோமை விட்டுச் செல்வதற்கு முந்திய நாள் சிசிரா தனது கணவரின் நண்பரும் நிலக்கரி வணிகனுமான ஜியோவானியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். அது அவனது நீண்டநாள் ஆசை. அதை நிறைவேற்றிவிட்டே அவள் நகரை நீங்குகிறாள். அவள் இல்லாத நாட்களில் கடையைப் பாதுகாத்து வருவதற்குத் தரப்பட்ட சலுகை அது என்றே புரிகிறது.

சியோசீரியாவுக்கு வந்த பிறகு அங்கே ஜெர்மனியின் ராணுவ வீரர்களுக்கு மக்கள் பயந்து போயிருப்பதை உணருகிறாள். ஒரு நாள் அந்த ஊரில் இரண்டு ஆங்கில வீரர்கள் தஞ்சம் அடைகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. ஆனால் சிசிரா தன் வீட்டிற்கு அழைத்துப் போய் ரொட்டியும் ஒயினும் தருகிறாள். அந்தக் காட்சியில் அவள் ஒயின் குடிக்கும் அழகு நம்மைக் கிறக்குகிறது.

அறிவுஜீவியாக அறியப்படும் மைக்கேல் அவளது அழகில் மயங்கி சிசிராவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மகள் கூட மைக்கேலின் காதலைப் பற்றிச் சொல்ல கேலி செய்கிறாள். தன்னை விட வயதில் குறைந்த ஒருவனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறாள் சிசிரா

ஆனால் ரோசெட்டா மைக்கேலை தனது தந்தையின் மறுவடிவம் போலவே கருதுகிறாள். அவனும் அவளுடன் மிகுந்த பாசமாகப் பழகுகிறான். அவனுக்குப் பெரிய ரொட்டி ஒன்றை அவளுக்காக மறைத்து எடுத்து வந்து தருகிறான்.

ஒரு நாள் சிசிராவும் மைக்கேலும் உணவுப்பொருட்கள் வாங்கப் பக்கத்து ஊருக்குப் போகிறார்கள். அங்கே தன் பிள்ளைகளைப் போரில் இழந்த ஒரு பெண் தன் மார்பில் ஊறும் பாலை யார் வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளுங்கள் என்று மார்பினை திறந்துகாட்டி வேதனையில் புலம்புகிறாள். மறக்கமுடியாத காட்சியது. போரின் கொடூரத்தை இதைவிடச்சிறப்பாக யாரும் காட்டிவிட முடியாது.

அந்த ஊரின் பாதிரி வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே வரும் ஒரு ஜெர்மானிய அதிகாரி பாதிரியின் குடும்பத்தை மிரட்டுகிறான். அதைச் சகிக்க முடியாமல் சிசிரா அவனுடன் சண்டையிடுகிறாள். அந்த வீட்டிலிருந்து வெண்ணைய். ரொட்டி. மாவு போன்றவற்றைப் பை நிறைய எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். அப்போது ராணுவம் துரத்தவே ஒடி ஒளிகிறார்கள். அந்த நெருக்கடியில் அவளை முத்தமிடுகிறான் மைக்கேல். அவளோ அவனை விலக்கி எழுகிறாள். நெருக்கடியிலும் அவனது காதல் தீ அணைவதேயில்லை.

பின்னொரு நாள் ஜெர்மானிய வீரர்களுக்கு மலைப்பாதையை வழிகாட்டுவதற்காக மைக்கேலை துப்பாக்கி முனையில் அழைத்துப் போகிறார்கள். அந்தக் காட்சியில் சிசிராவின் மகள் கலங்கிப்போகிறாள். மைக்கேலின் தந்தையும் தாயும் பரிதவிக்கிறார்கள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியது. மைக்கேல் உறுதியான குரலில் அவர்களிடமிருந்து விடைபெறுகிறான். அவனது இறப்பு ஒரு தகவலாக மட்டுமே பின்பு தெரிவிக்கப்படுகிறது.

நேச நாடுகள் ரோமைக் கைப்பற்றிய பிறகு, சிசிராவும் ரோசெட்டாவும் ரோம் திரும்ப முடிவு செய்கிறார்கள். கடந்து செல்லும் ராணுவ வண்டிகளைக் கண்டு கையசைக்கிறார்கள். உற்சாகமாக வாழ்த்து சொல்கிறார்கள். அவர்களின் பயண வழியில் ஒரு பாலத்தில் அமர்ந்தபடியே தாயும் மகளும் சாப்பிடும் காட்சி தனித்துவமானது.

படத்தின் மிகவும் அதிர்ச்சியான காட்சி தேவாலயத்தில் நடைபெறுவது. அப்போது குரூரமாக வீழ்த்தப்பட்ட சிசிரா வேதனையுடன் தன் மகளைக் காணுவதும், பிரேதம் போல கிடக்கும் மகளை கைதாங்கலாக அழைத்துக் கொண்டு போவதும் மகள் அவளை விட்டுவிலகி தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ள நீரோடையைத் தேடிப்போவதும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள். சோபியா லாரனின் நிகரற்ற நடிப்பு. மகளின் நடையில், கண்பார்வையில் வெளிப்படும் வேதனை. என அந்தக் காட்சி நிகரற்றது.

கடைசியில் தாயும் மகளும் ஒரு வாகனத்தில் ஏறி பக்கத்துக் கிராமத்தில் போய்த் தங்குகிறார்கள். அங்கே காலையில் எழுந்து மகளைக் காணாமல் சிசிரா பதற்றத்துடன் தேடுகிறாள். தவிக்கிறாள். ஆனால் மகள் ஒரு ஆளுடன் நடனமாடப்போய்விட்டுப் பட்டுக் காலுறையைப் பரிசாக வாங்கிவந்துள்ளதைக் கண்டு ஆத்திரமாகி அவளைக் கண்டபடி அடிக்கிறாள். அதற்கு ரொசெட்டா பதிலளிக்கவில்லை.

தாயிற்கும் மகளுக்கும் இடையில் இடைவெளி உருவாகிவிட்டது. மகள் சுயமாக முடிவு எடுக்க ஆரம்பித்துவிட்டாள். நடந்த அதிர்ச்சி அவளை ஒரே நாளில் உருமாற்றிவிட்டது. தாயிடம் மகள் பாதுகாப்பாகத் தங்கள் வீட்டிற்குப் போய் வாழுவதால் நடந்த விஷயங்கள் மாறிவிடுமா. நம் வாழ்க்கைக்கு இனி என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். தாயிடம் இதற்குப் பதில் இல்லை.

இதுவரை சிறுமியாக இருந்தவள் இப்போது மாறிவிட்டாள். அந்தத் தாயிற்கு அந்தச் சிறுமியின் முதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் மகளைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்

ஆல்பர்டோ மொராவியோவின் நாவலை டிசிகா படமாக்கியிருக்கிறார். Cesare Zavattini இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்

போருக்கு எதிரான படங்களில் யுத்தகளக் காட்சியின்றி. படுகொலைகள் இன்றி மனதைத் துவளச்செய்யும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மூலமே போரின் பாதிப்பை அழுத்தமான புரிய வைத்திருப்பதே டிசிகாவின் சாதனை என்பேன்

படத்தின் துவக்கக் காட்சியில் தாயும் மகளும் சாலையில் நடந்து வரும் போது அவர்களைக் கடந்து செல்லும் சைக்கிள் காரன் மீது திடீரென்று வானிலிருந்து விமானத்தாக்குதல் நடைபெறுகிறது. அவன் அந்த இடத்திலே செத்துவிழுகிறான். தாயும் மகளும் சாலையில் விழுந்து உயிர் தப்புகிறார்கள். இந்தச் சைக்கிள்காரன் போல எந்தக் காரணமும் இன்றி அப்பாவிகள் கொல்லப்பட்டது தான் உலக யுத்தத்தின் குரூரம் என்பதைச் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

போரின் குரூர நிழல் தன் மகள் மீது விழுந்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம் முதலே சிசிரா கவனமாக இருக்கிறாள். ஆனால் முடிவில் அவளும் மகளும் போரின் குரூரத்திற்குப் பலியாகிறார்கள். இடிந்த அந்தத் தேவாலயத்திலிருந்து வெளியேறிப் போன கடவுள் தான் அவர்களின் அவலத்திற்கான சாட்சி.

ஒரு படத்தில் எத்தனை ஊடு இழைகள். ஆரம்பக் காட்சியில் ரயிலில் வரும் ராணுவ வீரர்கள் கிறிஸ்துமஸிற்குள் ஊருக்குப் போய்விடுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு உலகில் வாழுகிறார்கள். தஞ்சம் புகும் தாயும் மகளும் சொந்த ஊர் திரும்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வசிப்பிடமில்லை. உறவினர்கள் அவளிடமிருக்கும் பணத்திற்காகவே அவளை ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வாழ்க்கை ஒரு தனி இழை.

அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முசோலினியின் அரசியல் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் முசோலினையை ஆதரிக்கிறார்கள். உணவுப்பொருட்கள் கிடைக்காமல் கள்ளச் சந்தை உருவாகிறது. வெண்ணெய் வாங்குவதற்காக இடையனோடு அவள் பேசும் பேசும் காட்சி ஒரு உதாரணம். இது போலவே பாதிரியின் வீட்டில் நடக்கும் சம்பவம். இவை இன்னொரு இழை.

ஜெர்மானிய ராணுவ வீரர்களுக்கு ரொட்டி கொண்டு வரும் ரொசெட்டா அதைத் தரையில் வைத்தவுடன் அவர்களுக்குக் கோபம் கொப்பளிக்கிறது. துப்பாக்கியை உயர்த்துகிறான் ஒருவன். அது ஒரு தனியுலகம். இப்படிச் சிறியதும் பெரியதுமான ஊடு இழைகளைப் பின்னி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சோபியா லாரனின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த படம் இதுவே.

யுத்தம் பெண்களின் உடலிலும் மனதிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதை அவர்களால் ஒரு போதும் மறக்கமுடியாது. பாதுகாப்பான இடம் தேடி அலையும் இரண்டு பெண்களும் எங்கேயும் பாதுகாப்பில்லை என்பதை முடிவில் உணர்ந்து கொள்கிறார்கள். அவள் யாசிப்பது சிறிய வெளியை. சிறிய வாழ்க்கையை. ஆனால் அதைக்கூட உலகம் வழங்கத் தயாராகவில்லை. இந்த அவலம் மாறாது இன்றும் தொடருவது தான் வேதனை.

திரைக்கும் நமக்குமான இடைவெளியை அழித்து ஒரு வாழ்க்கையின் சாட்சியமாக நம்மை உணரவைப்பதே டிசிகாவின் வெற்றி.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2021 06:18

April 4, 2021

சென்னையும் நானும் – சீசன் 2

சென்னையும் நானும் காணொளித் தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்ற ஆண்டில் பெருந்தொற்றுக்கால ஊரடங்கின் காரணமாக அதைத் தொடர முடியாமல் போனது. தற்போது மீண்டும் அதன் இரண்டாம் பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் பகுதியில் சென்னையில் நான் சந்தித்த எழுத்தாளர்கள், சினிமா உலக அனுபவங்கள். மற்றும் மறக்கமுடியாத கலை நிகழ்வுகள். ஆளுமைகள். சென்னையின் வரலாறு குறித்த விஷயங்கள் இடம்பெற உள்ளன

இந்தத் தொடரை உருவாக்குவது எனது மகன் ஹரி பிரசாத் , இதனை ஒளிப்பதிவு செய்பவர் கபிலா காமராஜ், வரைகலையாக்கம் விக்கி, மற்றும் ஹரியின் நண்பர்கள். இவர்களின் தொடர்ந்த ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் தான் இதனை சாத்தியத்தியமாக்கியுள்ளது. அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

சென்னையும் நானும் சீசன் 2ன் முன்னோட்டக் காட்சி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2021 22:58

April 3, 2021

வராத ரயில்

புதிய சிறுகதை

அந்த ரயில் நிலையத்திற்கு மதுரை பாசஞ்சர்  பத்தரை மணிக்கு வந்து நிற்பது வழக்கம். சின்னஞ்சிறிய ரயில் நிலையமது. ஸ்டேஷன் மாஸ்டர் அறை புறாக்கூண்டு போல இருக்கும். அருகில் சிறிய ஸ்டோர் ரூம். அதையொட்டி கல்லால் ஆன இரண்டு பெஞ்சுகள். மூன்று தூங்குமூஞ்சி மரங்கள். ஒரு தண்ணீர்தொட்டி. அதில் எப்போதும் குடிதண்ணீர் இருக்காது. சிவப்பு ஒடு வேய்ந்த கட்டிடமது.

சிவமணியை அழைத்துக் கொண்டு கிழவி அந்த ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். அவளை விட்டால் சிவமணிக்கு வேறு யார் இருக்கிறார்கள். சிவமணி அவளது உறவில்லை.  ஆனால் அவள் தான் வளர்த்து வந்தாள்.

சிவமணியின் அம்மா உயிரோடு இருந்த நாட்களில் கிழவிக்கு நிறைய நாட்கள் சோறு போட்டிருக்கிறாள். ஒரு முறை கோவில் கொடைக்கு சேலை ஒன்று வாங்கித் தந்திருக்கிறாள். நாலைந்து முறை கைச்செலவுக்கும் பணம் தந்திருக்கிறாள். அந்த நன்றிக்கு தானோ என்னவோ கிழவி சிவமணியை தானே வளர்ப்பதென முடிவு செய்து கொண்டாள்

கிழவி நினைவு தெரிந்த நாள்முதலே வீட்டுவேலைகள் தான் பார்த்து வருகிறாள். எவ்வளவு குடம் தண்ணீர் தூக்கியிருப்பாள். எவ்வளவு மாவு திரித்திருப்பாள் என கணக்கேயில்லை. அவளது கையே துடைப்பம் போலாகியிருந்தது.

சிவமணிக்கு மூன்று வயதான போது அவனது அம்மா இறந்து போனாள். சிவமணி பிறக்கும் போதே மூளை வளர்ச்சி இல்லாமல் தான் பிறந்தான். நான்கு வயது வரை அவனால் எழுந்து நிற்கமுடியவில்லை. பேச்சு வரவில்லை. வீட்டுபடிக்கட்டில் தான் எப்போதும் உட்கார்ந்திருப்பான். சிவமணியின் அப்பா அவனைக் கவனிக்கவேயில்லை.

கிழவி தான் அவன் பசியறிந்து உணவு கொடுப்பாள். குளிக்க வைப்பாள். கிழவிக்கும் ஒரு துணை வேண்டும் தானே.

சிவமணியின் அப்பா ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் கேரளா கிளம்பிப் போய்விட்டார். அவர் போனதே சிவமணிக்குத் தெரியாது. யாரோ ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார் என்றார்கள். கிழவி அன்று முழுவதும் சிவமணியின் அப்பா கெட்டவார்த்தையால் திட்டினாள்

“பெத்த பிள்ளையை விட்டுட்டு போன நீ புழுத்துபோடுவே. கைகால் விழங்காம போயிரும்“. எனப் புலம்பினாள். உண்மையில் அதைக் கேட்டு சிவமணி சிரித்தபடியே இருந்தான்.

சிவமணி எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பான். இரவில் கூட அவனுக்குத் தூக்கம் வராது. வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இருப்பான். அவனுக்குத் தெரிந்தவை இரண்டே சொற்கள் தான். ஒன்று சோறு, மற்றொன்று எருமை.

வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டால் வாய் ஓயாமல் சோறு சோறு என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். கிழவி சாப்பாடு கொண்டுவருவதற்குள் ஆயிரம் முறை சொல்லியிருப்பான். பசி அடங்கிவிட்டாலே எதிர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் எருமையைப் பார்த்து ரசித்துக் கொண்டேயிருப்பான்..

எருமையை யாராவது அவ்வளவு ரசிப்பார்களா என்ன.

சிவமணி ரசிப்பான். அவனுக்கு எருமை உலகின் விசித்திரமான விலங்காக இருந்தது. தனக்கு ஏன் அதைப் போலக் கொம்புகள் இல்லை என்று யோசித்துக் கொண்டிருப்பான். எருமை வாயை அசைப்பதை போலத் தானும் அசைத்துக் கொண்டேயிருப்பான். எருமை எருமை என்று அதைக் கூப்பிட்டபடியே இருப்பான். கிழவி திட்டுவாள். பேசாமல் உனக்கு ஒரு எருமையைக் கட்டிவச்சிடுறேன். அது கூடவே வாழ்ந்து கோ என்பாள். சிவமணி புரிந்தவன் போலச் சிரிப்பான். இப்போது சிவமணினுக்குப் பதினைந்து வயது நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஐந்து வயது சிறுவன் போலவே இருந்தான். கிழவியைத் தவிர வேறு யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்

சில நாட்கள் கிழவி தான் இறந்து போய்விட்டாள் அவனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்து கவலை கொள்ளுவாள். சில நேரம் அவனை எங்காவது கொண்டு போய்விட்டுவிடலாமா என்று கூட யோசிப்பாள். ஆனால் அவள் மனது ஏன் உனக்கு ஈனப்பத்தி என்று கேட்கும்.

சிவமணியைப் போன்றவர்களை உலகம் வாழ விடாதே. கையும் காலும் திடமாக உள்ளவர்களையே உலகம் பாடாய்ப் படுத்துகிறது. இதில் சிவமணியை யார் கவனித்துக் கொள்வார்கள். யார் வேளை தவறாமல் உணவு தருவார்கள். கிழவி கரையாளர் வீட்டில் இப்போதும் வேலை செய்து வந்தாள் ஆகவே அவளால் சாப்பாடு போட முடிந்தது. அவள் முடங்கிவிட்டால் யார் வேளை வேளைக்குச் சிவமணிக்கு சோறு போட்டுக் காப்பாற்றுவார்கள்

இந்தக் கவலை கிழவிக்கு நெடுநாட்களாக இருந்தது. சில நாள் கனவில் அப்படியான காட்சிகள் கூட வந்து போயிருக்கிறது. அன்றைக்கெல்லாம் அவள் மனநிம்மதியற்று அவனைக் கட்டிக் கொண்டு அழுவாள்.

ஒருநாள் அவர்கள் ஊருக்குத் தடுப்பூசி போட வந்திருந்த ஆள் சொன்னான்

“சிவமணியைப் போன்றவர்களைப் பராமரிக்க மதுரையில் ஒரு ஹோம் இருக்கிறது. அங்கே கொண்டு போய் ஒப்படைத்துவிடு. அவர்கள் வைத்துக் காப்பாற்றுவார்கள். காசு பணம் எதுவும் தரத்தேவையில்லை“

“சோறு போடுவார்களா“ எனக்கேட்டாள் கிழவி

“மூணு வேளை வயிறுமுட்ட சோறு போடுவார்கள். வைத்தியம் செய்வார்கள் ஆனா அந்த ஹோமை விட்டு வெளிய போக விடமாட்டாங்க. ஆனா அநாதையா இருக்கணும்.“

சிவமணினுக்கு அப்பா இருக்கிறார். ஆனால் அவர் தான் கைவிட்டுவிட்டாரே , கிழவி அவன் அநாதை தான் என்று சொன்னாள்

“நாகமலை கிட்ட அந்த ஹோம் இருக்கு. கொண்டுபோய்ச் சேர்த்துட்டு வந்துரு “என்றான் தடுப்பூசி போடுகிறவன்

“அங்க சிவமணியை அடிப்பாங்களா“ எனக்கேட்டாள் கிழவி

“முரண்டுபிடிச்சா அடிக்க அடிக்கதான் செய்வாங்க. இவனை மாதிரி பசங்களுக்கு வலி தெரியாது.. ஒரு நாள் நான் அங்கே போனப்போ ஒரு பையனை முதுகு தோல் உரியுற வரைக்கும் அடிச்சாங்க. அவன் எந்நேரமும் முண்டகட்டையா திரிவானாம். அதுக்குத் தான் அந்த அடி“

`பாவம். அவனுக்குத் தன்னுசார் இருக்காதில்லே“ என்றாள் கிழவி

“அதுக்காக இப்படிக் குஞ்சாமணியை ஆட்டிகிட்டு இருந்தா பாத்துகிட்டு இருப்பாங்களா“.

“சிவமணியை அடிச்சா. அவன் ரொம்பச் சப்தம் போடுவான். அடக்க முடியாது“

“அதை எல்லாம் அவங்களே பாத்துகிடுவாங்க. நீ ஏன் கவலைப்படுறே“

“அந்த பிள்ளைக்கு என்ன விட்டா யாரு இருக்கா“

“ஊரான் பிள்ளையை எத்தனை நாளுக்கு உன்னாலே வச்சி பாக்க முடியும்“

“அப்படி சொல்லாதே. சிவமணி என் பேரன் தான்.“

“இந்த மாதிரி பையனுக்கு எல்லாம் ரெகுலரா வைத்தியம் பாக்கணும். இல்லே ரொம்ப மோசமாகி போயிடுவாங்க. கைகால் கூட வராமல் போயிடும்“.

“சிவமணி அப்படி ஒண்ணும் ஆகமாட்டான்“. என்றாள் கிழவி

“நீ யோசிக்காமல் காப்பகத்தில் கொண்டு போய் விட்ரு. நீ செத்துட்டா. ஊர்க்காரர்கள் இவனைப் பாடப்படுத்தி எடுத்துருவாங்க. அப்போ உதவிக்கு யாரும் இருக்கமாட்டாங்க பாத்துக்கோ“

“நாகமலையில் எங்க இருக்கு“ எனக்கேட்டாள் கிழவி

“அட்ரஸ் எழுதி தர்றேன்“ என ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுத்தான் அந்த ஆள்.

கிழவி அதை வாங்கி வைத்துக் கொண்டாள். ஆனால் சிவமணியை அங்கே சேர்ப்பதில் அவளுக்குத் தயக்கமேயிருந்தது.

ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை என்றும் கிழவிக்குத் தோன்றியது தன் காலம் முடிவதற்குள் அதைச் செய்து விட வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டாள். சிவமணிக்குத் தன்னைக் கிழவி இப்படி ஒரு காப்பகத்தில் கொண்டு போய்விடப்போகிறாள் என்று தெரியாது. அவன் எப்போதும் போலவே எருமை எருமை என்று கத்திக் கொண்டேயிருந்தான்

கிழவி சிவமணியை மதுரைக்கு அழைத்துப் போவதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்தாள். அவள் ஒருமுறை கூட மதுரைக்குப் போனதேயில்ல்லை.

கிழவி டவுனுக்குப் போவதை பற்றிப் பயம் ஒன்றுமில்லை. ஆனால் எங்கே காப்பகத்தில் சிவமணியைக் கொண்டு போய்விட்டு வந்தவுடன் அவன் கிழவியைப் பார்க்க வேண்டி அழுது கூப்பாடு போட்டால் என்ன செய்வது. அல்லது காப்பகத்தில் சிவமணினுக்குச் சாப்பாடு போடாமல் விட்டுவிட்டால் என்ன ஆவது. இப்படித் தான் கவலைகள் அவளுக்குள் முளைத்திருந்தன

இதைப்பற்றி யாருடனும் கலந்து பேசவும் அவளால் முடியவில்லை. இரவில் சிவமணி இருட்டில் உட்கார்ந்தபடியே எருமை எருமை என்று சொல்லிக் கொண்டேயிருப்பதைக் காணும் போது இந்த அப்பாவி பிள்ளையை ஏன் கொண்டு போய்க் காப்பகத்தில் விட வேண்டும் என்று ஆதங்கமாக இருக்கும். ஏன் இந்த உலகம் சிலரை இப்படிக் கைவிட்டுவிடுகிறது. யாரையும் சாராமல் ஒரு மரம் கூட வாழ்ந்துவிட முடிகிறது ஆனால் மனிதனால் அப்படி வாழ முடியாது.

யோசித்து யோசித்துக் களைந்துப் போய் முடிவில் ஞாயிற்றுகிழமை காலை சிவமணியைக் கூட்டிக் கொண்டு காப்பகத்தில் விட்டுவிடுவது என்று முடிவு செய்து கொண்டாள். சிவமணி எப்போதும் ஒரே காக்கி நிற டிராயரையும் ஆரஞ்சு வண்ண முண்டா பனியனையும் தான் அணிந்திருப்பான். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டேயிருக்கும். இந்தக் கோலத்தில் அவனை ரயிலில் கூட்டிக் கொண்டு போக முடியாது என்று போஸ்ட்மாஸ்டர் வீட்டில் கேட்டு பழைய டிராயர் சட்டை இரண்டினை வாங்கி வந்திருந்தாள். அந்தச் சட்டையும் டிராயரும் சிவமணினுக்கு மிகவும் பெரியதாக இருந்தது. அதனால் என்ன. உடலை மறைத்தால் போதும் தானே.

சிவமணி ஆசையாக அந்த உடைகளை அணிந்து கொண்டான். கிழவி அவனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. வெயிலுக்கு முன்னால் நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தாள். சிவமணி மிக மெதுவாகவே நடப்பான். சில இடங்களில் அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டுவிடுவான். ஆகவே அவனை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் போக ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.

சிவமணி ரயில்வே ஸ்டேஷனை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்

கிழவி அவனிடம் ரயிலில் போகிறோம் என்று சொன்னாள்

சிவமணினுக்கு ஒன்றும் புரியாத போதும் உதடு விரிய சிரித்தான். கிழவியும் அவனும் கல்லால் ஆன பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள்.

நீண்ட நேரம் அவர்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள். துணிமூட்டைகளுடன் ஒரு ஆள் அவர்கள் அருகில் உட்கார்ந்திருந்தான். இரும்பு கம்பத்தைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான் சிவமணி.

ரயில் எப்போது வரும் என்று தெரியவில்லை. டிக்கெட் எங்கே எடுக்க வேண்டும். சிவமணினுக்கு ரயிலில் டிக்கெட் உண்டா எதுவும் புரியவில்லை. அவள் டிக்கெட் கவுண்டர் மூடியிருப்பதைக் கண்டாள். ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் நிழல் போல அவர் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை அந்த அறை வாசலில் போய் நின்று ரயில் எப்போது வரும் எனக்கேட்டாள்

அவர் பதில்சொல்லவில்லை. ஆனால் பரபரப்பாக ஏதோ வேலையில் இருந்தாள்

கிழவி திரும்பவும் சிவமணி இருந்த பெஞ்சிற்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்

சிவமணி வெயிலைப் பார்த்தபடியே “எருமை எருமை“ என்று கத்திக் கொண்டிருந்தான்

இங்கே எங்கே எருமையிருக்கிறது. எல்லாப் பொருளும் அவனுக்கு எருமை தானா

சிவமணியும் அவளும் வெயிலுக்குள்ளாகவே காத்துகிடந்தார்கள். கிழவி ரயில்வே தண்டவாளத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தண்டவாளத்தின் மீது வெயில் நடந்து சென்று கொண்டிருந்தது.

நீண்ட காத்திருப்பின் பிறகு ஸ்டேஷன் மாஸ்டர்வெளியே வந்து சொன்னார்

“ மதுரை பாசஞ்சர்  இன்னைக்கு வராது“

கிழவிக்குப் புரியவில்லை. “ என்ன ஆச்சு“ என்று கேட்டாள்

“பாம்பன்ல தண்டவாளம் ரிப்பேராம். … போயிட்டு நாளைக்கு வா“ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்

சிவமணியைக் காப்பகத்தில் கொண்டுபோய்விடுவது கடவுளுக்கே பிடிக்கவில்லையே. இல்லாவிட்டால் ஏன் இப்படி ரயிலை தடுத்து நிறுத்தியிருப்பார். கிழவி சிவமணியிடம் வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்தாள்

அவன் “எருமை எருமை“ என்று சொல்லியபடியே பறந்து கொண்டிருக்கும் தட்டான்பூச்சிகளைக் காட்டினான்

“நாம வீட்டுக்கு போவோம் “என்றாள் கிழவி. அவன் தலையாட்டினான்

தான் உயிரோடு இருக்கும் வரை சிவமணியைக் காப்பாற்றுவோம். செத்துப்போய்விட்டால் பின்பு அவன் விதி. நாம் எதற்காக அவனைக் கொண்டுபோய் எங்கோ ஒரு இடத்தில் விட வேண்டும். அங்கே அடிவாங்கி அழுது கொண்டு ஏன் வாழ வேண்டும். நடக்கப்போவதை பற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. தன்ன போல வேறு ஒருவர் அவனைக் கவனிக்கக் கிடைக்காமலா போய்விடுவார்.

கிழவி ரயில் வராமல் போனது நல்லதற்கே என்று நினைத்துக் கொண்டாள்.

“வீட்டுக்குப் போவோம்“ என்றாள் கிழவி

“ரயில் வரலை“ என்று கேட்டான் சிவமணி

“ரயில் வேண்டாம்“ என்றாள் கிழவி

“ரயிலை யாராவது தின்னுட்டாங்களா“ எனக்கேட்டான் சிவமணி

“ஆமாம்“ என்று தலையாட்டினாள் கிழவி

அவர்கள் ஸ்டேஷனை விட்டு நடக்க ஆரம்பித்தார்கள். கிழவியால் வெயிலை தாங்க முடியவில்லை.

புழுதி பறக்கும் சாலையில் திடீரென ஒரு இடத்தில் சிவமணி உட்கார்ந்து கொண்டான். அவனை எழுந்திருக்கச் சொல்லி திட்டினாள் கிழவி. சிவமணி சோறு சோறு என்று சப்தமிட்டான்

“வீட்டுக்கு வா சோறு போடுறேன்“ என்றாள் கிழவி

அவன் கேட்டுக்கொள்ளவில்லை. அவனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் கிழவி “எருமை எருமை எருமை“ என்று சொல்லத்துவங்கினாள்

கிழவி இப்படிச் சொல்வதைக் கேட்டு சிவமணி சிரித்தான். கிழவி கண்ணீர் வழிய அவன் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்

“நீயும் உட்காரு“ என்று தரையைக் காட்டினான்

வெயிலில் கிழவியும் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் இரண்டு சிறுவர்களைப் போல மாறி மாறி எருமை சோறு எருமை சோறு என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்

சைக்கிளில் போய்க் கொண்டிருந்த தபால்காரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்

“மழையா பெஞ்சிகிட்டுஇருக்கு“

சிவமணி அவனைப் பார்த்துச் சொன்னான்

“எருமை. எருமை“.

கிழவி அதைக்கேட்டுச் சப்தமாகச் சிரித்தாள். பிறகு அவளும் சேர்ந்து “எருமை எருமை“ என்று சப்தமிட்டாள்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2021 21:33

நூல் பேசுவோம்

மஞ்சுநாத் எழுதியுள்ள கர்னலின் நாற்காலி குறித்த சிறிய அறிமுகம்.

***

நூல் பேசுவோம் – கர்னலின் நாற்காலி

பூங்காவிற்குள் நுழைந்தவுடன்  ஊஞ்சலில்  அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம்

கை நிறைய கலர் மிட்டாய்கள்  வைத்திருக்கும் சிறுவனின்  கொண்டாட்டத்திற்கு  ஈடாக சொல்லியிருக்கலாம்

ஆபூர்வ வைரக்கற்கள் கண்டடைந்த  பூரிப்பை முகத்தில் காட்டியிருக்கலாம், வியாபாரியாக இருந்திருந்தால்

என்றைக்குமில்லாமல் பாதி பூக்களுடன் திரும்பி செல்லும் பூக்காரம்மாவிற்கு இன்று ஒரே ஒரு மனிதன் முழுவதையும் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி கொண்டால், அந்த நிம்மதியான மகிழ்ச்சி போலிருந்தது என்று சொல்லியிருப்பேன் ஒரு வேளை பூ  விற்றுக்கொண்டிருந்தால்

வயதானவர்கள் தங்கள் வாழ்வியல் நினைவலைகளை  காற்றிடம்  மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த தனிமையின் வெறுமை சில சமயம்  யாரோ ஒரு தோழமையால்  நிரம்பி விடும்போது நிலவைக் கண்ட குழந்தை போல் குதூகலமாகிறது. நான் முதுமைக்கு செல்லும் போது  சொல்கிறேன்.

பதின்பருவ இளைஞனுக்கு தனது முதல் காதலியின் முதல் பார்வை, முதல் குரல், முதல் ஸ்பரிசம் தந்த இரசயாண வெடிப்பின் தெறிப்பு போலிருந்தது என்று சொல்லலாம்.., ஆனால் நமக்கு கேள்வி ஞானம் மட்டுமே.

இந்த புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய வர்ணஜாலத்தின் ஓவியத்தை எப்படி உங்களுக்கு காட்டுவது.. ?

ஒரு முறை இமயத்தில் துங்கநாத் மலை ஏறிக் கொண்டிருந்த போது வழி தவறி ஒரு சரிவின் விளிம்பிற்கு வந்து விட்டேன்.

பள்ளத்தாக்கின் முடிவில்லாத ஆழம்  மலையின் பிரமாண்டத்தை உணர்த்தியது. எனது மூச்சுக்காற்று எதிரொலித்தது. அந்த பேரமைதி அதுவரை உணராதது .

அந்த சமயம் எதிரே இருந்த பனிமலை முகட்டில் சூரிய ஒளிகள் பட்டு

ஒரு தங்க ஜுவாலையாக மின்னியது. மனதில் மிகப் பெரிய ஆனந்த தாண்டவம்.

அந்த தனிமை, அமைதி, குளிர்ந்தக்காற்று அனைத்தும் பேரானந்தத்தின் உச்சம். அது வார்த்தைகள் கடந்த அனுபவம்.

வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எஸ்.ரா வின் இந்த கர்னலின் நாற்காலி  கூட அது போலத்தான்.மகிழ்ச்சிக்கு எந்த ஒப்புவமையை  தர முடியும். மாட்டு வண்டி வாங்கியவன் மகிழ்ச்சியும் விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கியவன் மகிழ்ச்சியும் ஒரே மாதிரி தான் . அதில்  எந்த வித்தியாசமும் கிடையாது.

தொகுப்பில் மொத்தம் 125 குறுங்கதைகள்.

வாசிப்பின் துவக்கத்தில் ஒவ்வொரு கதைக்கும் சிறு விமர்ச்சனக் குறிப்பு எழுதி வந்தேன். ஒன்றைக் கூட தவிர்க்க முடியாது. 125 கதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் அது புத்தக விமர்சனத்தில்  சாத்தியமில்லை.

இது ஒரு சிறுவனின் கையில் இருக்கும் பூந்தி போன்றது . ஒவ்வொரு பூந்தி துனுக்கின் சுவைப் பற்றி தனித்தனியே  கூறமுடியாது .அதை அப்படியே  அள்ளி முழுவதுமாய் வாயில் போட்டுக்கொண்டால் அதன் சுகமே அலாதிதான்.

ஒரு வாசகன் உள்ளீடற்ற  வேய்ங்குழலாய்  மாற்றிக் கொள்ளும் போது  எஸ் ரா என்கிற  எழுத்தாளனின் உயிர் காற்று பெரும் மாயாஜாலத்தை வாசித்து விடுகிறது.

இன்பம், துன்பம், ஆசை ,நிராசை,  கோபம், தாபம், போராட்டம், புரட்சி,தோல்வி, வெற்றி, ஏக்கம், அரவனைப்பு, புகழ், மாயை, அழுகை, சிரிப்பு, இழப்பு,உணர்வு, உணர்ச்சி, காமம், காதல், திண்டாட்டம்,திகைப்பு,  தெய்வீகம், கலை, கொண்டாட்டம், அமைதி, தியானம்.., என முடிவில்லாத பயணத்தின் திறவுகோலாய் இத்தொகுப்பு இருக்கிறது.

வறுத்த வேர்கடலையின் சுவை ஒரு கொழுப்பு படலமாய் நாவில் ஒட்டிக் கொண்டு அடுத்தடுத்து என வேர்க்கடலையை நோக்கியே நமது கையை நகர்த்தும். ஒவ்வொரு கதையும் அடுத்த கதையின் சுவைக்கு நம்மை இப்படித்தான் நகர்த்துகிறது.

எஸ்.ரா சொல்கிறார் *”புத்தகம் என்பது வாசிப்பவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது அதில் எந்த எழுத்தாளனும் தலையிட முடியாது.”* என்று

ஆனால் இந்த புத்தகம் வாசகனை தன் வசமாக்கி கொள்கிறது.

இனி எப்போதும் நீண்ட  பயணங்களில் என்னை  அமர்த்தி  கொள்ள கர்னலின் நாற்காலியை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

நன்றியும் வாழ்த்துகளும்.

அன்புடன்

மஞ்சுநாத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2021 20:40

இரவின் சிறுபாடல்

புதிய சிறுகதை

கடைசிப் பஸ்ஸைத் தவறவிட்டிருந்தான் ரகுபதி.

வேலை தேடிச் சுற்றியலைகிறவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்குப் போய் என்ன ஆகப்போகிறது என்ற அவனது நினைப்பு தான் பேருந்தைத் தவறவிட முக்கியக் காரணம்.

இனி காலை ஐந்தரை மணிக்கு தான் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து வரும். அதுவரை இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான்.

என்ன செய்வது எனத் தெரியவில்லை. நேரத்தை கழிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் காலம் நீண்டுபோய்விடக்கூடியது. அன்றைக்கும் அப்படித்தான். இப்போது தான் மணி பத்து பத்து என்று காட்டியது அவனது கைக்கடிகாரம். விடியும் வரை என்ன செய்வது.

பேருந்து நிலையத்தை ஒரு சுற்றுச் சுற்றிவரலாம் என எண்ணி நடந்தான்.

••

அவனது கிராமத்திற்கு ஒரு நாளில் ஆறு முறை டவுன் பஸ் வந்து போனது. அவனது ஊர் தான் கடைசி. வழியில் உள்ள கிராமங்களைச் சுற்றிவந்து அவனது ஊரின் மைதானத்தில் பஸ் நின்றுவிடும். இந்த வசதி கூடப் பத்து வருஷங்களுக்குள் தான் உருவானது. அதன் முன்பு வரை மாட்டுவண்டி, சைக்கிள் அல்லது நடை தான். வசதியான ஒன்றிரண்டு பேர் பைக் வைத்திருந்தார்கள்.

பேருந்து வந்து போக ஆரம்பித்த போதும் பேருந்து நிலையம் என்ற ஒன்று அவனது ஊரில் கிடையாது. மைதானத்திலுள்ள கொடிக்கம்பத்தை ஒட்டி பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவரும் கண்டக்டரும் பெட்டிக்கடையில் போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

பள்ளி மாணவர்களின் போக்குவரத்திற்காகவும் மருத்துவமனைக்குப் போய் வருகிறவர்களுக்காகவுமே அந்தப் பேருந்து முதன்மையாக இயக்கபட்டது. அதுவும் சில நாட்கள் வழியில் ரிப்பேராகி நின்றுவிடுவதுண்டு. இரவு ஒன்பது நாற்பதுக்குக் கடைசிப் பஸ். அதைத் தவறவிட்டால் காலை வரை காத்திருக்க வேண்டியது தான்

ரகுபதிக்கு இப்படி நடப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. எத்தனையோ முறை இப்படிப் பஸ்ஸை தவறவிட்டுக் காத்திருக்கிறான். சில நாட்கள் யாராவது நண்பர்களைத் தேடிப் போய் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் உறங்கி எழுந்து காலை ஊருக்குப் போவதுண்டு. இன்றைக்கு யாரையும் தேடிப் போய்ப் பார்த்து உதவி கேட்க மனசில்லாமல் இருந்தது

பேருந்து நிலையத்தின் புத்தகக் கடையை மூடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை அவன் நினைவு தெரிந்த நாள் முதலே இருக்கிறது. வார இதழ்கள். நியூஸ் பேப்பர்கள் அங்கே கிடைக்கும். அந்தக் கடையில் இருப்பவர் எப்போதும் சந்தன நிறத்தில் தான் ஜிப்பா அணிந்திருப்பார். காலையில் நெற்றியில் வைத்த திருநிறு இரவிலும் அழியாமல் இருக்கும். மென்மையான குரலில் பேசுவார்.

அந்தக் கடையை ஒட்டி ஒரு காலத்தில் சிறிய கேண்டியன் ஒன்றிருந்தது. அங்கே நல்ல காபி கிடைக்கும். அதை எப்போதோ மூடிவிட்டார்கள். அந்த இடத்தில் இப்போது ஒரு சலூனும், டீக்கடையும் வந்துவிட்டது. அந்தக் கடைகளை இரவு எட்டு மணிக்கெல்லாம் எடுத்து வைத்துவிடுவார்கள். இரவில் யார் சவரம் செய்யப் போகிறார்கள்.

பழைய லாட்டரி சீட்டுக் கடையை ஒட்டிய ஆவின் ஸ்டால் மட்டும் பத்து மணி வரை திறந்திருக்கும். அந்தக் கடையை நெருங்கும் போதே பால்கவிச்சி அடிக்கும். தரையில் பால் சிந்திய பிசுபிசுப்பு மாறாதிருக்கும்.

அந்தக் கடையில் ஒரு தட்டில் பால்கோவா பாக்கெட்டுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். எப்போதும் ஒரே போல அந்தப் பாக்கெட்டுகள் வைக்கபட்டிருக்கும். அதை யாரும் வாங்கிப்போகிறார்களா எனத் தெரியாது.

பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உடைந்து கிடந்த சுவரோடு உள்ளது மூத்திரப்பிறை. அங்கே பெய்யப்படும் மூத்திரம் தாரை தாரையாக வழிந்து பேருந்து நிலையத்தில் ஒடிக்கொண்டிருக்கும். மூக்கைப்பிடித்துக் கொண்டு கடந்து போவார்களே அன்றி ஒருவரும் புகார் செய்யமாட்டார்கள். சிலர் அவரசமாக நடந்தபடியே மூத்திரம் பெய்வதைக் கண்டிருக்கிறான்.

பேருந்து நிலையத்தினுள்  ஒரேயொரு வேப்பமரம் நின்றிந்தது. எப்படி அந்த வேப்பமரத்தை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று ரகுபதி யோசித்திருக்கிறான். பெரும்பாலும் கிராமவாசிகள் தான் அந்த மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்கள். நகரவாசிகளில் ஒருவரும் பேருந்து நிலையத்தின் தரையில் உட்கார்ந்து அவன் கண்டதில்லை. அந்த வேப்பமரம் மூத்திரம் குடித்து வளர்ந்ததால் தானோ என்னவோ அதன் காற்று கூட நாற்றமடிக்கும்.

வெளியூர் பேருந்துகள் வந்து நிற்பதற்கு மேற்கில் வரிசையாகத் தளம் அமைத்திருந்தார்கள். காலியாக நிற்கும் பேருந்துகளில் ஏறி விளையாடுவது சிறார்களுக்குப் பிடித்தமானது. அவன் சிறுவயதில் அப்படி விளையாடியிருக்கிறான்.

பங்குனித் திருவிழா நாட்களில் தான் அந்தப் பேருந்து நிலையம் புதிய அழகு கொள்ளும். அன்றைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பார்கள். பேருந்து நிலையத்தினுள் வண்ண விளக்குகள் அமைத்திருப்பார்கள். பலூன் வியாபாரிகள். கொட்டு அடிப்பவர்கள். அக்னிச் சட்டி ஏந்திய பெண்கள். குரங்காட்டி. பாம்பாட்டி, சவுக்கால் அடித்துக் கொள்பவன் என விசித்திரமான ஆட்கள். விடிய விடிய பொருட்காட்சி பார்த்துவிட்டு வந்து அலுப்போடும் பேருந்து நிலையத்தில் உறங்கும் குடும்பம் என விநோத காட்சியாக இருக்கும்.

••

இன்றைய இரவில் பேருந்து நிலையம் தன் நீண்டகால அசதியில் தூங்கி வழிவது போலப்பட்டது. மனிதர்களைப் போலவே இடங்களுக்கும் முதுமை ஏற்படவே செய்கிறது. பார்த்துப் பழகிய இடங்களைப் போலச் சலிப்பு தருவது வேறு எதுவுமில்லை. அன்றாடம் பேருந்து நிலையத்திற்கு வந்து போகிறவர்களுக்குப் பேருந்து நிலையத்தின் வாசலில் பூ விற்கும் பெண் கண்ணில் படுவதேயில்லை. அவர்கள் பார்வை முழுவதும் ஏற வேண்டிய பேருந்தின் மீது மட்டுமேயிருக்கும்.

அந்தப் பேருந்து நிலையம் கட்டி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் என்றார்கள். பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் கோவிலை ஒட்டி சிறிய கல்வெட்டு இருக்கிறது. அதை யார் படிக்கப்போகிறார்கள். இரவில் எல்லாப் பேருந்து நிலையங்களும் ஒன்று போலவே இருக்கின்றன. மனிதர்கள் வடியத்துவங்கிவிட்ட பேருந்து நிலையங்களுக்கு கிழட்டு நோயாளி போன்ற தோற்றம் வந்துவிடுகிறது. ரகுபதி அதை உணர்ந்திருக்கிறான்.

பேருந்து நிலையத்தின் மேற்கில் ஒரு சைக்கிள் மற்றும் பைக் ஸ்டாண்ட் இருந்தது. அது ஒன்று தான் இரவிலும் இயங்கிக் கொண்டிருக்கும். யாராவது செகண்ட் ஷோ சினிமா விட்டு கூடச் சைக்கிளை எடுக்க வந்து நிற்பார்கள். சிவப்பு நிற பனியன் அணிந்த ஒரு ஆள் தான் எப்போதும் ஸ்டாண்டில் இருக்கிறார். அவரது கழுத்தில் எம்ஜிர் படம் போட்ட டாலர் தொங்கிக் கொண்டிருக்கும். சைக்கிளை வரிசையாக அடுக்கி வைப்பதில் அவர் கில்லாடி. ஒரு சைக்கிள் கூட முன்பின்னாக நிற்காது. அத்தனை ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்.

பேருந்து நிலையத்தின் நுழைவாயிலை ஒட்டி வடை, போண்டா, அதிசரம், சமோசா விற்பவர்கள் கடையிருக்கும். அங்கே பகலில் சிறிய அடுப்பில் எப்போதும் வடையோ, பஜ்ஜியோ வெந்து கொண்டிருப்பது வழக்கம். அந்தக் கடைகளில் நல்ல கூட்டமிருக்கும். அதுவும் வெளியேறும் வாசலை ஒட்டிய தள்ளுவண்டிக்கடையில் எப்போதும் ஆட்கள் நின்று எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். பேருந்து நிலையத்தினுள் விற்கபடும் உணவு ஏனோ ருசியற்றுப் போய்விடுகிறது. அது பசிக்கான உணவு. அதுவும் அவசரமான பசிக்கானது

பேருந்து நிலையத்தின் இரண்டு வாசலை ஒட்டியும் இரண்டு சினிமாத் தியேட்டர்கள். யார் இந்த ஏற்பாட்டினை செய்தது எனத் தெரியவில்லை. ஆனால் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையத்தின் அருகில் தான் சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. புதுப்படம் ரீலிஸ் ஆகும் நாட்களில் பேருந்திலிருந்து இறங்கி அப்படியே தியேட்டரை நோக்கி ஒடுவார்கள்.

சினிமா தியேட்டரின் வடபுறத்தை ஒட்டி இரண்டு பரோட்டா கடைகள். ஒரு உரக்கடை. ஒரு மருந்துக்கடை, மாத தவணையில் பொருட்கள் விற்கும் பர்னிச்சர் கடை. அதை ஒட்டி ஒரு எலக்ட்ரிக்கல் கடை. இது போலவே தென்புறத்தை ஒட்டிச் சேவு மிக்சர் விற்கும் மிட்டாய்கடைகள். சைவ உணவகம், இரண்டு பெட்டிக்கடைகள். சைக்கிள் வாடகைக்கு விடும் கடை. வரிசையாகப் பூக்கடைகள். முனியாண்டி விலாஸ் ஹோட்டல். முன்பு அதன் எதிரில் நிறைய ரிக்சாக்கள் இருந்தன. இப்போது ஒரு ரிக்சா கூட கிடையாது. ஆட்டோ ஸ்டாண்ட் தியேட்டரை ஒட்டியிருந்தது. பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் விநோதமான ஒரு வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதில் எத்தனையோ மனிதர்கள். எத்தனையோ விதமான வணிகங்கள்.

பேருந்து நிலையத்தினுள் விசித்திரமான குரல்களைக் கேட்கலாம். குறிப்பாக அலுமினியத் தட்டில் சமோசா வைத்துக் கொண்டு விற்பவனின் குரலைப் போன்ற ஒன்றை வேறு எங்கும் இதுவரை கேட்டதேயில்லை. இது போலவே பூவிற்கும் சிறுமியின் குரல். அது ஒரு வேண்டுதல் போலவே ஒலிக்கும். கண்தெரியாத பிச்சைக்காரன் பாடும் பாடல், கண்டக்டர்களின் அழைப்பொலி என விசித்திரமான குரல்கள்.

சிலநாட்கள் பேருந்து நிலையத்திற்குள் யானையை அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். யானை பேருந்தினுள் தும்பிக்கையை நுழைத்துக் காசு கேட்கும். யானை நுழைந்தவுடன் பேருந்து நிலையத்தின் இயல்பு மாறிவிடுகிறது. யானை பேருந்தின் டிரைவர்களை ஆசிர்வாதம் செய்யும். பிள்ளையார் கோவிலில் யானைக்கு வாழைப்பழம் கொடுப்பார்கள். சில நேரம் யானைப்பாகன் ஆவின் கடையில் ஒசியில் தரப்படும் பாலை சூடு ஆற்றி மெதுவாகக் குடிப்பான். அதுவரை யானை பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்தபடியே நின்றிருக்கும்.

இந்த இரவில் ரகுபதி அந்த யானையை நினைத்துக் கொண்டான். அந்த நகரில் ஒரேயொரு யானை மட்டுமே இருந்தது. அதுவும் கோவில்யானை. மனிதர்களைப் போலத் தன் தனிமையைப் பற்றி யானை நினைக்குமா என்ன.

பேருந்து நிலையத்தினை ஒட்டியிருந்த பிள்ளையார் புழுதியும், தூசியும் அப்பியிருந்தார். அதிகாலை நகரப்பேருந்துகள் கிளம்பும் முன்பு அந்தப் பிள்ளையாரைத் தான் கண்டக்டர்கள். டிரைவர்கள் வணங்குகிறார்கள். பேருந்து நிலையத்தில் காணப்படும் குப்பைகளைத் தினமும் அள்ளிக் கொண்டுபோவதில்லை. சுத்தமான பேருந்து நிலையம் என ஒன்றை அவன் தன் வாழ்நாளில் கண்டதில்லை.

பேருந்து நிலையத்திற்கென்ற சில நாய்கள் இருக்கின்றன. அவை இரவிலும் வெளியேறிப் போவதில்லை. அவை பேருந்தின் டயர்களுக்கு நடுவே உலவுவதுண்டு. பேருந்து நிழலில் உறங்குவதும் உண்டு.

கடைகள் அடைத்து சாத்திவிட்ட பேருந்து நிலையத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என ரகுபதிக்கு எரிச்சலாக வந்தது

••

பரோட்டா கடையின் வாசலில் உள்ள பெஞ்சில் இருவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பேசாமல் செகண்ட் ஷோ சினிமாவிற்குப் போய்விடலாம் என்று தோன்றியது. இரண்டு தியேட்டரில் ஒடும் படங்களும் அவன் பார்த்தது தான். ஆனால் நேரத்தைக் கொல்வதற்காக ஏதாவது ஒரு படத்திற்குப் போய்த் தான் ஆக வேண்டும்.

இரவுக்காட்சி பத்தரை மணிக்குத் துவங்குவார்கள் என்றாலும் பதினோறு மணி வரை டிக்கெட் கொடுப்பார்கள். அவன் தியேட்டருக்குள் போன போது படம் துவங்கியிருந்தது. இருட்டிற்குள்ளாக ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்தான். தியேட்டரில் கூட்டமேயில்லை. பேசாமல் கண்களை மூடிக் கொண்டு தூங்கிவிடலாமா என்று யோசித்தான். அப்படி முயன்றபோது படம் ஒடும் சப்தம் தொந்தரவாக இருந்தது.

சரி படத்தைப் பார்க்கலாம் எனக் கொஞ்ச நேரம் படம் பார்த்தான். படத்தோடு ஒட்டவே முடியவில்லை. எழுந்து திறந்து கிடந்த கதவைத் தாண்டி வெளிக்காற்றை நுகர்ந்தபடியே நின்றிருந்தான். அவன் சிகரெட் புகைக்க நிற்கிறான் என்பது போல ஒருவர் அருகில் வந்து அவனிடம் தீப்பெட்டி கேட்டார். அவன் தன்னிடமில்லை என்றான். அவர் தீப்பெட்டி கேட்பதற்காக வாட்ச்மேனைத் தேடி நடந்தார்.

என்ன செய்தாலும் நேரம் போகவேயில்லை. இடைவேளையின் போது தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தான். ஒருவருமில்லை. அப்படியே வெளியே போய்விடலாமா என்று நினைத்தான். பேருந்து நிலையத்தில் காத்திருப்பதை விடவும் இது மோசமான விஷயமில்லை என்று தோன்றியது. படம் போட்டபிறகு மெதுவாக உள்ளே நடந்து போனான்.

செகண்ட் ஷோ விட்டு வெளியே வந்தபோது. பரோட்டா கடைகளும் மூடியிருந்தன. பேருந்து நிலையத்தினை ஒட்டிய சாலையில் நடமாட்டமேயில்லை

விட்டுவிட்டு மினுக்கும் டியூப் லைட் வெளிச்சத்தில் பேருந்து நிலையம் ஒடுங்கியிருந்தது. அவனைப் போலப் பேருந்தை தவறவிட்ட சிலர் மட்டுமே தென்பட்டார்கள். பேருந்து நிலையத்தின் இருட்டும் கூடக் கலங்கியே இருந்தது. தூக்கம் அப்பிய முகத்துடன் ஒருவர் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரது அருகில் துணிப்பை ஒன்று காணப்பட்டது.

எங்கோ கோவிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஒரு குடும்பம் சேலையை விரித்துப் படுத்திருந்தது. சந்தனம் உலர்ந்த மொட்டை தலையுடன் ஒரு ஆள் உறங்கிக் கொண்டிருப்பதை வியப்பாகக் கண்டான் ரகுபதி.

இரண்டு போலீஸ்காரர்கள் கையில் டார்ச் லைட்டுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேருந்து நிலையத்தினுள் வந்தார்கள். அங்கே இருந்தவர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தார்கள். ரகுபதி தனது சினிமா டிக்கெட்டினைக் காட்டினான். வேறு எதையும் அவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை.

பேருந்து நிலையத்தில் வசிக்கும் பிச்சைக்காரன் ஆவின் பூத்தை ஒட்டிய குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தான். தண்ணீர் ஒடும் சப்தம் தெளிவாகக் கேட்டது.

ரகுபதி காலியாகக் கிடந்த ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது மணிக்கூண்டினை ஒட்டி ஒரு குடும்பம் நியூஸ் பேப்பரைத் தரையில் விரித்துப் படுத்துக்கிடப்பதை கண்டான். அதுவும் ஒரு பெண்ணின் கொலுசு கண்ணில் பட்டவே கூர்ந்து கவனித்தான். இளம்பச்சை நிற சேலை கட்டிய பெண் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அவளது கணவன் காலை அகலமாக விரித்துத் தன்னை மறந்து உறங்கியிருந்தான். அவனை ஒட்டி ஆறு வயது பையன். நடுவில் இரண்டு கட்டைபைகள். ஒரு லெதர்பேக். அந்தப் பெண்ணின் சேலை விலகி அவளது கெண்டைக்கால் சதையும் அணிந்திருந்த கொலுசும் தெரிந்தன. எங்கோ நீண்ட தூரம் பயணம் போய்விட்டு வருகிறவர்களா இருக்கக் கூடும். அதனால் தான் இப்படி ஆழ்ந்து தூங்குகிறார்கள்.

உறங்கும் பெண்ணை அவதானிப்பது சந்தோஷம் அளிப்பதாக இருந்தது. அதிகாலை நேரத்தில் பேருந்து நிலையத்தினுள் ஈரத்தலையுடன் நெற்றியில் சந்தனம் துலங்க வரும் இளம்பெண்களைக் கண்டிருக்கிறான். அவர்கள் முகத்தைப் பார்த்தால் போதும் அந்த நாளே மகிழ்ச்சியுடையதாக இருக்கும். அந்தப் பெண் தூங்கத்திலே தன்னை உணர்ந்தவள் போலக் கால்களில் விலகிய புடவையைச் சரிசெய்து கொண்டாள். ரகுபதி தலையே வேறு பக்கம் திருப்புவது போல நடித்தான்.

பேருந்து நிலையத்திலிருந்து வானத்தைப் பார்ப்பது அன்று தான் முதன்முறை. பேருந்து நிலையத்திற்குள்ளும் வானம் தெரியுமா என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் போலவே வழி தவறிப்போன ஒற்றை நட்சத்திரம் தனியே மினுங்கிக் கொண்டிருந்தது. கலங்கிய மேகங்களுக்குள் நிலவு மறைந்திருந்தது.

கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். இரண்டு நாற்பது. இன்னும் விடிவதற்கு நேரமிருக்கிறது. என்ன செய்வது. எப்படி நேரத்தை கடத்துவது என்று புரியவில்லை. தூக்கம் அவனையும் அழுத்த ஆரம்பித்தது. சைக்கிளில் டீக் கொண்டு வருகிறன் தென்படுகிறானா எனப் பார்க்க வெளிவாசல் வரை நடந்து வந்தான். தெருவிளக்கும் அணைந்து போய்ச் சாலை தெரியாத இருட்டு.

அவன் திரும்பி வந்தபோது அந்தப் பெண் உறக்கம் கலைந்தவள் போல எழுந்து உட்கார்ந்திருந்தாள். பெஞ்சில் அமர்ந்தபோது அவளது முகம் தெளிவாகத் தெரிந்தது. வெண்கலச்சிற்பம் போன்ற உடல். இருபத்தைந்து வயதிற்குள் தானிருக்கும். வட்டமான முகம். காதில் சிறிய கம்மல். கையில் கண்ணாடி வளையல்கள். தூக்கம் கலையாத முகம் என்றாலும் தனி வசீகரமிருந்தது. தான் அவளைப் பார்க்கிறோம் என்பதை அறிந்து கொண்டவளைப் போல அவள் புடவையைச் சரிசெய்து கொண்டாள். மறுபடியும் படுத்துக் கொண்டுவிடுவாள் என்று ரகுபதிக்கு தோன்றியது. ஆனால் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரகுபதி மெலிதாகச் சிரித்தான். அவள் அதைக் கண்டுகொண்டவளாகத் தெரியவில்லை

சைக்கிளில் டீ கொண்டுவருகிறவன் பேருந்து நிலையத்தினுள் வரும் சப்தம் கேட்டது. அவன் ரகுபதி அருகே சைக்கிளை நிறுத்தி டீ வேண்டுமா எனக்கேட்டான். ரகுபதி தலையசைக்கவே அவன் டீயை கேனிலிருந்து பிடித்துக் கொடுத்தான்

அந்தப் பெண் டீக்குடிக்க விரும்புகிறவள் போல அங்கிருந்தபடியே “டீ எவ்வளவு“ என்று கேட்டாள்

எட்டு ரூபாய் என்றான் டீவிற்பவன். அவள் துணிப்பைக்குள் காசை துழாவினாள். கணவனின் பேண்ட் பாக்கெட்டில் அவன் பர்ஸ் இருப்பதை அறிந்தவளாக அதை எப்படி எடுப்பது எனப் புரியாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு டீக்குடிக்க வேண்டும் போலிருந்தது. வேறு எங்காவது காசு இருக்கிறதா எனப் பார்க்க அவள் உறங்கும் பையன் டவுசர் பையில் கூடத் தேடினாள்.

ரகுபதி சப்தமாகக் கேட்டான்

“டீ வேணுங்களா“

அவள் வேண்டும் என்று தலையாட்டினாள்

டீ விற்பவன் அவளுக்கும் ஒரு டீ கொண்டு போய்க் கொடுத்தான். ரகுபதி இரண்டு டீக்குமான காசை அவனிடம் கொடுத்தான்.

அவள் டீயைக் கையில் வாங்கிக் கொண்டு ஊதி ஊதி குடித்தாள்.

டீவிற்பவன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியேறிப் போனான். டீக்கோப்பையின் கடைசிச் சொட்டுவரை ரகுபதி குடித்தான். அவளும் டீயை ரசித்துக் குடித்தபடியே இருப்பதைக் கண்டான்

பிறகு அவள் டீ குடித்த காலி பேப்பர் கப்பை நசுக்கி வீசி எறிந்தாள். அவளைப் போலவே ரகுபதியும் செய்தான். இனி தூக்கம் வராது என்பவள் போல அவள் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டாள்

அவளிடம் ஏதாவது பேசலாமா. என்ன பேசுவது எனப் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மறுபடியும் தன் கணவன் படுத்திருந்த இடத்தருகே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“எந்த ஊருக்கு போகணும் “என்று ரகுபதி சப்தமாகக் கேட்டான்

அவள் பதில் சொல்லவில்லை. மாறாகச் சிரிப்பது கேட்டது

எதற்காகச் சிரிக்கிறாள். தன்னைக் கேலி செய்கிறாளா. ரகுபதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விரல்களை மடக்கி ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் கண்ணன் வருவான். கதை சொல்லுவான் என்ற பாடலை அவள் முணுமுணுக்கத் துவங்கினாள். அந்தப் பாடலை எத்தனையோ முறை ரேடியோவில் கேட்டிருக்கிறான். ஆனால் இந்த இரவில் அவள் பாடும்போது பாடலின் வழியே பிரகாசமான வெளிச்சம் ஒளிர்வதாக உணர்ந்தான். பாடலின் நாலைந்து அடிகள் பாடியிருப்பாள். பிறகு பாட்டைத் தனக்குள்ளாகவே அடக்கிக் கொண்டு அவள் படுத்துக் கொண்டாள்

என்ன விளையாட்டு இது. இந்தப் பாடல் தனக்கானது தானா. ஏன் இந்த இரவில் இந்தப் பாடலை பாடினாள். எழுந்து அவள் அருகில் போனால் என்னவென்று தோன்றியது. ஆனால் தைரியம் வரவில்லை. அவள் தன் கால்களை அசைத்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை மனதிற்குள் மீதப்பாடலை பாடிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ

அவளின் நாடகத்தை ரசித்தபடியே ரகுபதி அமர்ந்திருந்தான். ரோந்து சுற்றும் போலீஸார் திரும்பவும் வந்தார்கள். தொலைவில் அவர்களைக் கண்டதும் சிமெண்ட் பெஞ்சில் ரகுபதி படுத்துக் கொண்டான். அவர்கள் யாரையும் விசாரிக்கவில்லை. வீடு திரும்பும் சோர்வில் நடந்து கொண்டிருந்தார்கள்

அவர்கள் போனபிறகு அந்தப் பெண்ணைக் காணுவதற்காக எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவள் வேண்டுமென்றே தன் முகம் தெரியாமல் சேலையால் மூடிக் கொண்டாள். தனக்கும் அவளுக்குமான ஒரு அடி இடைவெளி ஏதோ கடக்க முடியாத தூரம் போல உணரச் செய்தது.

அவள் நடிக்கிறாள். உறங்குவது போல நடிக்கிறாள். இது ஒரு விளையாட்டு. தன்னிடமிருந்து தப்பிக்கும் விளையாட்டு. தன் மீது கோபம் கொண்டிருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவன் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்ள ஆசைப்பட்டவள் போல ஒரு பையை எடுத்து முன்னால் வைத்துக் கொண்டாள். இப்போது அவள் முகம் தெரியவில்லை.

திடீரென நேரம் வேகமாக ஒடிவிட்டது போலிருந்தது. பால்கொண்டுவருகிற ஆளின் மணிச்சப்தமும் அதைத் தொடர்ந்து முதல்பேருந்தின் வெளிச்சமும் பேருந்து நிலையத்தை விழிக்க வைத்தது. அந்தப் பெண்ணின் கணவன் எழுந்து தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கையில் ஊற்றி முகம் கழுவி கொண்டிருந்தான். அந்தப் பெண் பையிலிருந்து துண்டு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள். ஒன்றின் பின் ஒன்றாகப் பேருந்துகள் வரத் துவங்கியிருந்தன. அந்த வெளிச்சம் பேருந்து நிலையத்தைத் துயில் எழுப்பிக் கொண்டிருந்தது.

அந்தக் கணவனும் குழந்தையும் அந்தப் பெண்ணும் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு பேருந்தை நோக்கிப் போவதைக் கண்டான். தானும் அந்தப் பேருந்தில் ஏறி அவர்கள் போகிற ஊருக்கே போய்வரலாமா என்று தோன்றியது. ஆனால் அவன் அசைவற்று அவர்கள் போவதை பார்த்துக் கொண்டிருந்தான்

காலியாக இருந்த பேருந்தில் அவர்கள் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அந்தப் பெண் அவனைப் பார்ப்பது போலவே அமர்ந்திருந்தாள். அவள் தன்னிடம் ஏதோ சொல்கிறாள். மௌனமான உரையாடலது. பேருந்து கிளம்பும் போது அவள் திரும்பி பார்ப்பாள் என்று தோன்றியது. ஆனால் அவள் திரும்பவில்லை. பேருந்து வெளிவாசலைத் தாண்டிப் போனபிறகு ரகுபதி எழுந்து கொண்டான். தூக்கமில்லாத அலுப்பும் கசகசப்பும் எப்போது தன் ஊருக்கு போகும் பேருந்து வரும் என எரிச்சலை ஏற்படுத்தியது.

அவனது ஊருக்குச் செல்லும் பேருந்து வந்து அதில் ஏறிக் கொண்டபோது பேருந்து நிலையம் உயிர்பெறத் துவங்கியிருந்தது. யாரும் காணாமல் இரவில் பூக்கும் சில மலர்கள் இருப்பதாக அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அப்படியான ஒரு பூ தான் இந்த இரவில் மலர்ந்ததோ என நினைத்தபடியே கண்களை மூடிக் கொண்டான். நினைவில் அந்தப் பெண் பாடிய பாடல் மெதுவாகக் கேட்கத் துவங்கியது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2021 07:01

April 2, 2021

சுழலும் பார்வைகள்-1

மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலேவிற்கு 2020ற்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது டாடா நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது. பதினைந்து லட்ச ரூபாய் விருதுத் தொகை தருகிறார்கள். லிம்பாலே மராத்தியின் முக்கிய தலித் எழுத்தாளர். அவரது நான்கு நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

தமிழ் இலக்கிய உலகிலிருந்து இந்த விருதினை இந்திரா பார்த்தசாரதி மற்றும் பேராசிரியர் மணவாளன் இருவரும் பெற்றுள்ளார்கள்.

••

எழுத்தாளர் உம்பர்த்தோ ஈகோவின் நூலகம் என்றொரு வீடியோவைப் பார்த்தேன். அரிய நூல்களைத் தேடித்தேடிச் சேகரித்தவர் உம்பர்த்தோ ஈகோ என்ற அறிவேன். ஆனால் அவரது சொந்த நூலகம் இத்தனை பெரியது என்பது வியப்பளிக்கிறது. ஒரு நூலகத்தினுள் தான் அவர் வசிக்கிறாரோ எனும்படியாக மனிதர் நடந்து போய்க் கொண்டேயிருக்கிறார். வீடு முழுவதும் புத்தகங்கள். இத்தனை அறைகள் முழுவதும் புத்தகங்கள் கொண்ட ஒரு வீட்டினை நாம் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. தான் விரும்பிய ஒரு புத்தகத்தை அவர் தேடி எடுத்து வரும் இந்த வீடியோவில் ஈகோவின் பரந்து பட்ட வாசிப்பும் மேதமையும் எங்கிருந்து உருவானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

••

The Tale of the Horse:Yashaswini Chandra என்ற யஜஸ்வினி சந்திரா புத்தகம் இந்திய வரலாற்றில் குதிரையின் பங்கினை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது. குதிரையைப் பற்றிய சிற்பங்கள். ஓவியங்கள் கதைகள். போர் களத்தில் குதிரைகளின் பங்கு, குதிரைகளைப் பற்றிய கதைப்பாடல் வரை பல்வேறு தளங்களில் இந்த நூலில் குதிரையின் வழியே இந்திய சரித்திரம் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது

••

பதினைந்தாம் நூற்றாண்டில் மால்வாவின் ஆட்சியாளராக இருந்த ஹர்சுனிட் கியாத் ஷா ஒரு கலாரசிகன். அவரது ஆட்சியின் போது இசை, நடனம் மற்றும் ஓவியம் செழித்து வளர்ந்தது, கியாத் ஷா ஒரு சாப்பாட்டுப் பிரியர். விதவிதமான உணவு வகைகளை ருசிப்பதில் தீவிர அக்கறை காட்டியவர் அவர் தனக்குப் பிடித்தமான உணவுவகைகள் பற்றி ஒரு சமையல் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். சிறந்த ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சமையல் புத்தகத்தின் பெயர் நிமட்னாமா(Nimatnama)

நிமட்னாமா உருது மற்றும் ஃபார்ஸியில் எழுதப்பட்டுள்ளது. இதில் 50 அற்புதமான நுண்ணோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு உணவு வகைகளின் சிறப்புகளை விளக்குவதுடன் அதன் செய்முறை விளக்கமும் இடம்பெற்றுள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த அன்றாட உணவுவகைகளைப் பற்றிச் சொல்கிறது நிமட்னாமா. இதில் வடை சமோசா, அல்வா வகைகள் மற்றும் சிற்றுண்டிகள் அந்த நாட்களில் எவ்வளவு புகழ்பெற்றிருந்த என்பதையும் இன்று ராஜஸ்தானில் விரும்பி குடிக்கப்படும் லஸ்ஸியின் பல்வேறு வகைகள் பற்றியும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிமட்னாமாவின் வழியாக இந்த உணவு வகைகள் கால மாற்றத்தில் எப்படி மாறியிருக்கிறது என்ற வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சமோசா எப்படி அறிமுகமானது என்பதோடு பல்வேறுவகையான சமோசா வகைகளைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்று பிரபலமாக உள்ள நான் பூரி சப்பாத்தி ரொட்டி யாவும் நிமட்னாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் இதில் பரோட்டா கிடையாது. அது பிற்காலத்தில் உருவாகியிருக்கக்கூடும். அது போலவே உருளைக்கிழங்கு பற்றியும் ஒரு குறிப்பும் கிடையாது. பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியாவில் உருளைக்கிழங்கு அறிமுகமாகி புகழ்பெறத்துவங்கியது. தக்காளி. முந்திரிப்பருப்பு. மிளகாய். கொய்யாப்பழம், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம் போன்றவை இதன் பிறகே இந்தியாவில் அறிமுகமாகின.

அன்று கிச்சடி புகழ்பெற்ற உணவாக இருந்திருக்கிறது. விதவிதமான கிச்சடி பற்றிக் குறிப்புகள் உள்ளன. ஆனால் இதில் புலாவ் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாரசீக உணவு வகைகளிலிருந்து சூப். கபாப், பிரியாணி போன்றவை எப்படி உருவாக்கப்பட்டன என்பதையும் இதில் அறிந்து கொள்ள முடிகிறது.

மன்னர் எளிமையான உணவு சாப்பிட ஆசைப்படுகிறார் என்றால் அவருக்கா உருவாக்கப்பட்ட அரிசிக் கஞ்சி சோளக்கஞ்சி பற்றியும் குறிப்பிடும் இந்நூல் பயணத்திலும் வேட்டையின் போதும் என்ன உணவு வகைகள் தயாரிக்கப்பட வேண்டும் எதை விலக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதில் மான்கறியைக் கொண்டு சமோசா எப்படித் தயாரிப்பது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

இந்தப் புத்தகம் கரப்பான் பூச்சிகளின் அரசனுக்குத் தான் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கரப்பான்பூச்சிகளின் அரசனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஏட்டினை கரப்பான்பூச்சிகள் அரிக்காது என்றொரு நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தது. அதுவே இந்தச் சமர்ப்பணத்திற்கான காரணம்.

இன்று இந்த நூலின் பிரதி லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது

**

பிரபல கவிஞர் டிலான் தாமஸ் பற்றிய திரைப்படம் Set Fire to the Stars. இது அவரது கவிதை ஒன்றின் வரியே. இந்தப் படத்தில் போதையின் உச்சத்திலிருக்கும் டிலான் தாமஸைக் கவிதை வாசிக்கத் தயார்ப்படுத்துகிறார்கள். அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. தடுமாறுகிறார். மேடைக்குப் போக முடியவில்லை. எப்படியோ சமாளித்து மைக் முன்னால் போய் நிற்கிறார். கூட்டம் ஆரவாரம் செய்கிறது. அவர் தனது கவிதையை வாசிக்க ஆரம்பிக்கிறார். மறுநிமிடம் சபை நிசப்தமாகிறது. டிலான் தாமஸ் தன்னை மறந்து கவிதை பாடுகிறார். போதையின் சுவடேயில்லை. நீருற்று போலக் கவிதை பொங்கி எழுகிறது.

டிலான் தாமஸின் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தினைப் படம் விவரிக்கிறது. படம் முழுவதும் டிலான் தாமஸ் குடித்துக் கொண்டேயிருக்கிறார். அவரை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறவர் பாவம். தாமஸைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிப்போகிறார். “you’re scared of your talent என்ற ஒரு காட்சியில் பிரின்னின் தாமஸிடம் சொல்கிறார். அது உண்மைதானோ எனும்படியாக படம் முழுவதும் தாமஸ் நடந்து கொள்கிறார்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2021 21:42

April 1, 2021

இந்திய இலக்கியத்தின் முகம்

.ரஷ்ய இலக்கியங்களையும் உலகின் சிறந்த படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நீங்கள் ஏன் இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யவில்லை என்று நர்மதா என்ற இளம் வாசகி மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.

நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதமி மூலம் நிறைய இந்திய நாவல்கள், சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மிகச்சிறந்த சில நாவல்களுக்கு ஒரு விமர்சனம் கூட வெளியானதில்லை என்பது வருத்தமான விஷயமே

என் கல்லூரி நாட்களில் எந்த எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றாலும் வங்க நாவல் குறித்தோ, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட புத்தகங்கள் பற்றியே விசாரிப்பார்கள். விவாதிப்பார்கள். குறிப்பாக அக்னி நதி, ஆரோக்கிய நிகேதனம், நீலகண்ட பறவையைத் தேடி நாவல் பற்றி விரிவாகப் பேசுவார்கள். மறைந்த தா.மணி அவர்களுடன் இநத நாவல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசியது நினைவில் பசுமையாக உள்ளது.

இந்திய நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும்.அக்னி நதி, ஆரோக்கிய நிகேதனம், நீலகண்ட பறவையைத் தேடி,பொலிவு இழந்த போர்வை, அழிந்த பிறகு. கங்கைப்பருந்தின் சிறகுகள். கினுகோனார் சந்து. நீலமலை, கவி, இலட்சிய இந்து ஹோட்டல். காகிதமாளிகை, பன்கர்வாடி, வெண்குருதி, மண்ணும் மனிதர்களும், சிக்கவீர ராஜேந்திரா, பதேர்பாஞ்சாலி, கரையான், விடியுமா, நான், வனவாசி, கறுப்பு மண், பொம்மலாட்டம், கோரா, சோரட் உனது பெருகும் வெள்ளம், விஷக்கன்னி, கயிறு, பாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத் தோழியும், அரை நாழிகை நேரம், தர்பாரி ராகம் ,கிராமாயணம், முதலில்லாததும் முடிவில்லாததும் ,ஒரு குடும்பம் சிதைகிறது ,உயிரற்ற நிலா ,வாழ்க்கை ஒரு நாடகம், உம்மாச்சு, துளியும் கடலும், பாணபட்டன், சிப்பியின் வயிற்றில் முத்து, செம்மீன், சாம்பன், இது தான் நம் வாழ்க்கை, இயந்திரம், கங்கைத்தாய், கடைசியில் இது தான் மிச்சம், கடந்தகாலம், கங்கவ்வா கங்காமாதா, சோறு தண்ணீர், சூரியகாந்திப்பூவின் கனவு, தன் வெளிப்பாடு, துருவ நட்சத்திரங்கள். மங்கியதோர் நிலவினிலே, மித்ரவந்தி, வானம் முழுவதும், மறைந்த காட்சிகள் போன்றவற்றை ஒருவர் வாசித்து முடித்தால் போது நவீன இந்திய இலக்கியத்தினைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

எழுதத் துவங்கிய நாட்களில் இந்தப் புத்தகங்களைத் தேடி அலைந்து படித்தேன். கிடைக்காத புத்தகங்களுக்காகப் பயணம் மேற்கொண்டேன். இன்று இந்த நூல்கள் யாவும் என் நூலகத்தில் இருக்கின்றன. இந்த நாவல்களை நான் மட்டுமில்லை என் குடும்பமே படித்திருக்கிறது. இன்றைக்கும் வெளியூர் பயணம் என்றால் இதில் ஏதாவது சில நாவல்களை எடுத்துக் கொள்வதே எனது வழக்கம்.

இந்திய இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளைக் கொண்டாடும் விதமாக நிலவழி என்ற நூலை எழுதியிருக்கிறேன்.

இந்திய இலக்கியத்தில் முக்கியப் படைப்பாளியாகக் கருதப்படும்அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி, உருது எழுத்தாளர் ஜோகிந்தர் பால், இஸ்மத் சுக்தாய்,மணிப்பூரி எழுத்தாளர் பிநோதினி, இந்தி எழுத்தாளர் பபானி பட்டாசார்யா, ஒரிய எழுத்தாளர் ரிஷிகேஷ் பாண்டா, தெலுங்கு எழுத்தாளர் கேசவ ரெட்டி, மராத்தி எழுத்தாளர் விலாஸ் சாரங், கன்னட எழுத்தாளர் திவாகர், மலையாள எழுத்தாளர் என்.எஸ். மாதவன் ஆகியோரின் படைப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் நிலவழியில் உள்ளன.

குறிப்பாக வடகிழக்கு இந்தியாவின் இலக்கிய உலகமும் அதன் தனித்துவமும் இந்த நூலில் சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியாகி இது வரை மூன்று பதிப்புகள் வந்துள்ளன

நிலவழி

தேசாந்திரி பதிப்பகம்

விலை ரூ 100

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 23:58

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.