ஒளியிலே தெரிவது

புகழ்பெற்ற சீன இயக்குநர் ஷாங் யிமூவின் புதிய திரைப்படம் One Second. 2019 ஆண்டுப் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட படம் உடனடியாகச் சீன அரசால் திரும்ப பெறப்பட்டது. அத்தோடு சீனாவில் இப்படம் வெளியாகவுமில்லை. அரசின் தணிக்கை காரணமாகத் தடைவிதிக்கப்பட்டதே காரணம்

நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு One Second சென்ற ஆண்டு வெளியானது. இவ்வளவிற்கும் அந்தப் படம் சீன அரசியலைப் பேசும்படமில்லை. கலாச்சாரப் புரட்சி காலத்தில் ஒரு பாலைவன கிராமத்தில் சினிமா திரையிடும் அனுபவத்தைச் சுற்றி நடக்கும் கதையது.

சிறுவயதில் சினிமா தன்னை எவ்வாறு வசீகரித்தது என்பதன் அடையாளம் போலவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மையில் இந்தப் படம் love letter to cinema என்றே ஷாங் யிமூ தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார். சினிமாவைப் பற்றிய சினிமா வரிசையில் இப்படம் முக்கியமானது.

ஹாலிவுட் சினிமாவிற்குச் சென்று Hero, House of Flying Daggers போன்ற சாகசப் படங்களை எடுக்கத் துவங்கி திசைப்போனார் ஷாங் யிமூ என்ற குற்றச்சாட்டினை மறுத்து, தான் மீண்டும் தனது கலைப்பயணத்தைத் தொடர்கிறேன் என இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Red Sorghum , Not One Less , The Road Home, Riding Alone for Thousands of Miles, Raise the Red Lantern, To Live வரிசையில் இந்தப் படம் உணர்வுப்பூர்வமான ஒரு கதையைச் சொல்கிறது. தானே ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் ஷாங் யிமூ தனது படத்தின் ஒளிப்பதிவில் மிக அதிகக் கவனம் எடுத்துக் கொள்ளக்கூடியவர்.

பழைய கதையைக் கூட அவரால் புதிய கோணங்களுடன் புதிய காட்சியமைப்புகளுடன் பிரம்மாண்டமான படமாக உருவாக்கிவிட முடியும். அதற்குச் சமீபத்திய உதாரணம் அவரது Shadow. மிகச் சிறப்பான ஒளிப்பதிவு. படமாக்கப்பட்ட விதம் நம்மை வியக்கவைக்கிறது.

One Second படத்தின் துவக்கக்காட்சியிலே ஒருவர் பாலைவனத்தின் ஊடாக வேகவேகமாக நடந்து போகிறார். எங்கிருந்து, யாரைத் தேடிப் போகிறார் என்று காட்டப்படுவதில்லை. ஆனால் அவரது நடையில் பதற்றம் காணப்படுகிறது. அவர் கன்சு மாகாண தண்டனை முகாமிலிருந்து தப்பி வந்த கைதி என்பது பின்பு தெரியவருகிறது. அவர் கிராமப்புற திரையரங்கு ஒன்றில் நடைபெறும் சினிமாவைக் காணச் செல்கிறார். அவர் போவதற்குள் படம் முடிந்து தியேட்டர் மூடப்படுகிறது. சினிமா ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் சினிமா ரீல்களை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு அருகில் குடிக்கப் போகிறார்கள். அவர்களிடம் மறுநாள் எங்கே சினிமா காட்டப்போகிறார்கள் என்று தப்பிவந்தவன் விசாரிக்கிறான்

மறுநாள் மாலை வேறொரு கிராமத்தில் சினிமா திரையிட இருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கே போக வேண்டும் என முடிவு செய்கிறான். இதற்கிடையில் ஒரு இளம்பெண் சினிமா ரீல்கள் உள்ள பையிலிருந்து ஒரு ரீலை மட்டும் திருடிக் கொண்டு போவதைக் காணுகிறான் அந்த மனிதன்.

அவளைத் துரத்திக் கொண்டு போய் அடித்து நியூஸ் ரீலைப் பிடுங்கிக் கொள்கிறான். அடுத்த ஊரை நோக்கி நடந்து போகையில் அந்தப் பெண் அவனைப் பின்தொடர்ந்து வந்து தாக்கி மீண்டும் ரீலைத் தானே திருடிக் கொண்டு போய்விடுகிறாள்.

மயக்கம் தெளிந்து அவளைத் துரத்திப் போகிறான் அக்கைதி. தற்செயலாக ஒரே வாகனத்தில் பயணம் செய்கிறார்கள். பக்கத்து ஊருக்குப் போனதும் அந்தப் பெண் காணாமல் போய்விடுகிறாள். அவளை ஒரு உணவு விடுதியில் கண்டுபிடித்து ரீலை மீட்டு சினிமா ஆபரேட்டரிடம் ஒப்படைக்கிறான். அப்போது அவள் அந்த ஆள் ஒரு திருடன் என்று குற்றம் சாட்டுகிறாள்.

சினிமாவிற்கு முன்பாக ஒளிபரப்புச் செய்யப்படும் நியூஸ் ரீலில் தனது மகள் இடம்பெற்றிருக்கிறாள். அதைக் காணவே தான் வந்துள்ளதாகச் சொல்கிறான். இதன் சாட்சியமாக ஒரு கடிதம் ஒன்றையும் காட்டுகிறான்.

இதற்கிடையில் படப்பெட்டி ஏற்றிவந்தவன் பைக் வழியில் ரிப்பேர் ஆகவே சினிமா ஆபரேட்டரின் செல்ல மகன் ரீல்களைத் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு வருகிறான். டப்பா திறந்து அத்தனை ரீல்களும் சிக்கும் சிடுக்குமாகின்றன. அத்துடன் புழுதியும் தூசியும் படிந்து போகிறது.

அதிர்ச்சி அடைந்த ஆபரேட்டர் இதை வைத்துக் கொண்டு சினிமா காட்டமுடியாது என்கிறான். ஊர்மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். ஆனால் அந்தக் கைதி பிலிம்ரோலைச் சுத்தம் செய்து ஒழுங்காக சுற்றிவிட்டால் படம் ஒட்டலாம் என்கிறான். ஊரே கூடிப் புழுதி படிந்த ரீல்களைச் சுத்தம் செய்கிறார்கள். படத்தின் மிக அழகான காட்சியது. ரீல்கள் தயாராகின்றன.

தியேட்டரில் மக்கள் நிரம்பி ஆரவாரம் செய்கிறார்கள். தன் மகளைத் திரையில் காணுவதற்காகக் கைதி காத்திருக்கிறான். நியூஸ் ரீல் திரையிடப்படுகிறது. கண்ணீர் மல்க தன் மகளைத் திரையில் காணுகிறான். ஒரேயொரு நிமிஷம் திரையில் தோன்றும் மகளைக் காண அந்தத் தந்தை மேற்கொள்ளும் போராட்டங்கள் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

Heroic Sons And Daughters என்ற பாஜின் நாவலை மையமாக் கொண்ட திரைப்படம் தான் படத்தில் மையமாக இடம்பெறுகிறது. சீன இளைஞர்களின் புரட்சிகரச் செயல்பாடுகளை, ராணுவ பங்களிப்பை விவரிக்கும் இந்தப் படம் ஒரு குறியீடு. திரைப்படத்தைப் பிரச்சாரக் கருவியாக மட்டுமே சீன அரசு பயன்படுத்துகிறது, உண்மை எப்படியிருக்கிறது என்றால் கைவிடப்பட்ட அநாதை லியு. அரசு எதிர்ப்பு காரணமாக முகாமில் அடைக்கப்பட்ட கைதி. அவனது மகளின் நினைவுகள் எனப் சூழலின் மறுபக்கத்தை ஷாங் யுமூ சித்தரிக்கிறார். இதன் காரணமாகப் படம் சீனாவில் வெளியிடப்படவில்லை.

பாலைவனத்தை ஒட்டிய கிராமம். அங்குள்ள அரசு திரையரங்கம். கிராமவாசிகள். ஊர் ஊராகப் போய்ச் சினிமா காட்டுபவன். அநாதை லியு. தப்பி வைத்த கைதி எனச் சிறிய கதைக்குள் மிகவும் வசீகரமான காட்சிகளை உருவாக்கிச் சிறந்த திரை அனுபவத்தை ஏற்படுத்துகிறார் ஷாங் யுமூ.

தப்பியோடியவருக்கும் லியுவுக்கும் இடையில் ஒரு தந்தை-மகள் பிணைப்பு எவ்வாறு தற்காலிகமாக உருவாகிறது என்பதை ஜாங் யுமூ அழகாகக் காட்டுகிறார். குறிப்பாக வாகனத்தில் வரும் போது அவள் சொல்லும் பொய்க்கதை. அதைக் கேட்டு டிரைவர் கோபம் கொள்வது சிறப்பான காட்சி.

Cinema Paradiso படம் சினிமா ஆபரேட்டருக்கும் திரையரங்கிற்குமான உறவை அழகாகச் சித்தரித்தது போலவே, சினிமாவுடனான கிராமப்புற மக்களின் உறவை இப்படம் சித்தரிக்கிறது. கிராமவாசிகள் சினிமா பார்ப்பதற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். சினிமா காட்ட முடியாது என்று ஆபரேட்டர் சொன்னவுடன் ஏமாற்றமடைந்து போகிறார்கள். பிலிம்ரோலைச் சுத்தம் செய்யும் பணியில் ஊரே ஆர்வத்துடன் ஈடுபடுகிறது. தியேட்டரில் சண்டை வருகிறது. சினிமாவை மக்கள் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிப் போய்ப் பார்க்கிறார்கள்.

தப்பிவந்த கைதிக்கு நியூஸ் ரீல் என்பது அரசின் பிரச்சாரப்படமில்லை. தன் சொந்த மகளின் சாட்சியம். ஒரேயொரு காட்சியில் அவள் தோன்றுகிறாள். அதைக் காணும் போது அவனால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவனுக்காக மறுமுறை அதே நியூஸ் ரீலை திரையிடுகிறார் ஆபரேட்டர். அது மிக அழகாகத் தருணம்.

பெரிய திருப்பங்கள். மாற்றங்கள் இல்லாத திரைக்கதை. சிறுகதை ஒன்றின் திரைவடிவம் போலவே இருக்கிறது. ஆனால் பார்வையாளரைத் தன்வசம் முழுமையாக ஈர்த்துக் கொள்வது தான் இப்படத்தின் தனிச்சிறப்பு.

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு வரை சினிமா பார்ப்பது என்பது இது போன்ற அனுபவம் தானே. சீனாவில் அரசே திரையரங்குகளை நடத்துகிறது. என்ன படம் திரையிட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்தார்கள். ஆனால் இன்று சினிமா சந்தை மிகப்பெரியதாகிவிடவே ஹாலிவுட் திரைப்படங்கள் சீனாவில் பெரும் வசூலைப் பெறுகின்றன. இந்தியப் படங்களுக்கும் அப்படியான ஒரு சந்தை உருவாகியிருக்கிறது.

அரசு பிரச்சார நோக்கத்திற்காகப் படத்தைத் திரையிடுகிறது. ஆனால் ஒரு படம் என்பது நினைவுகளின் தொகுப்பு. எல்லோரும் படத்தை பொழுது போக்கிற்காக மட்டும் பார்ப்பதில்லை. இந்தப் படத்தில் வருவது போல எனக்குத் தெரிந்த ஒருவரின் அம்மா படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். அவர் மறைந்துவிட்டதால் அந்த படத்தை அடிக்கடி நண்பர் போட்டுப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். அம்மா வரும் காட்சிகளின் போது கண்ணீர் விடுகிறார். இப்படத்தில் மகளைத் திரையில் காணுவதன் வழியே தன் நினைவுகளை மீட்டெடுக்கிறான் அந்த கைதி.

முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக கிராமப்புறங்களில் பீடிக்கம்பெனிகள் இப்படி திரைப்படங்களை விளம்பரத்திற்காகத் திரையிடுவார்கள். ஊரின் நடுவில் திரைக்கட்டி எம்ஜிஆர் அல்லது சிவாஜி படம் ஒன்றைக் காட்டுவார்கள். அது போன்ற நாட்களில் இப்படி தான் ஊரே கூடி சினிமா பார்க்கும். ஆரவாரம் செய்யும். கோவில் திருவிழாக்களிலும் ஊரின் மைதானத்தில் சினிமா காட்டப்படுவதுண்டு. சாமி ஊர்வலம் வரும்போது சினிமா நிறுத்தப்படும். முதன்முறையாக சினிமா பார்த்த நினைவு ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதே.

படத்தில் சொல்லப்பட்டதை விடவும் சொல்லப்படாமல் விடப்பட்டது நிறைய இருக்கிறது. நாமாக உணர்ந்து கொள்கிறோம். இந்த மௌனத்தை அழகாக உருவாக்கியது தான் படத்தின் சாதனை.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2021 05:27
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.