S. Ramakrishnan's Blog, page 134
April 15, 2021
கைகளின் மாயம்
Glass 1958ம் ஆண்டு வெளியான டச்சு ஆவணப்படமாகும். இயக்குநரும் தயாரிப்பாளருமான பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் இந்தப் படம் 1959 இல் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் சினிமா பயிலரங்குகளில் தவறாமல் இப்படம் இடம்பெறுகிறது. இதை ஒரு பாடமாகவே மாணவர்கள் பயிலுகிறார்கள். 60 ஆண்டுகளைக் கடந்த போதும் இந்தப் படத்தின் தனித்துவமும் ஈர்ப்பும் மறையவேயில்லை.
நெதர்லாந்தில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலையினைப் படமாக்கியிருக்கிறார்கள். கண்ணாடிப் பாட்டில்களை எப்படிக் கையால் தயாரிக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. படத்தின் தனித்துவம் இதன் பின்னணி இசை. எத்தனை அழகாக ஜாஸ் இசை காட்சிகளுடன் ஒன்றிணைகிறது.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் கண்ணாடிப் பாட்டில்கள் கலைப்பொருள் போல உருமாறுவதைக் காணும் போது மகிழ்ச்சியளிக்கிறது
10 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் மிக உயிரோட்டமாகத் தொழிற்சாலையில் நடைபெறும் பணிகளை ஆவணப்படுத்தியுள்ளது.
ராயல் லீர்டாம் கிளாஸ் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கான விளம்பர படம் எடுக்க வேண்டும் என்றே ஹான்ஸ்ட்ரா அழைக்கப்பட்டார். அவர் கண்ணாடித் தொழிற்சாலையைப் பார்வையிட்ட பிறகு இதை நேர்த்தியான ஒரு கலைப்படைப்பாக உருவாக்க முடியும் என்பதை அறிந்து கொண்டார். அப்படி உருவானது தான் இப்படம்
இந்த ஆவணப்படத்தைக் காணும் போது சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் நினைவிற்கு வருகிறது. அதில் தொழிற்சாலையில் ஏற்படும் சிறிய கோளாறு எப்படி மொத்த இயக்கத்தைப் பாதிக்கிறது என்பதைக் காட்டியிருப்பார். படம் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி தொழிற்சாலையில் உருகிய கண்ணாடியை ஊதி உருவத்தை அமைக்கிறார்கள். . அவர்களின் செயல்பாடு இசையுடன் இணையும் புதிய அனுபவம் உருவாகிறது.

இரண்டாம் பகுதியில். தொழிலாளர்கள் இல்லாத நிலையில் மொத்தமாக இயந்திரங்களால் பாட்டில்கள் தயாரிக்கப்படுகிறது.. ஒரு பாட்டில் பெல்ட்டில் சிக்கிக்கொள்வதால், வரிசையாகப் பாட்டில்கள் விழுந்து உடைகின்றன. மூன்றாவது பகுதி கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் இயந்திரங்களின் வேலைகளுடன் ஏற்படும் ஒருங்கிணைப்பாகும், ஜாஸ் இசையுடன் கண்ணாடி தயாரிக்கும் செயல்முறையின் நுணுக்கங்கள் காட்டப்படுகின்றன. நான்காவது மற்றும் கடைசிப் பகுதியில், இசை பிரதானமாகிறது. கண்ணாடி பாட்டில் தயாரிப்பவர்களின் கன்னங்கள், விரல்கள் மற்றும் அசைவுகள் இசையுடன் இணைந்து பரவசமளிக்கின்றன
பாட்டிலைப் பற்றிய இந்த கவிதை நினைவில் வந்து போகிறது.
The sand and the bottle
today I went to the beach
and filled an empty bottle
with sand
until it was overflowing
the bottle
represented me
the sand
represented my thoughts
and feelings
and then i stood
by the waves
and threw the filled bottle
into the water
the sand fell out
disappeared
and sunk to the bottom
eventually the bottle
copied
the bottle
still
represents me
the sand
still
represents my thoughts
and feelings
–chantelle
April 13, 2021
வாக்கியங்களின் சாலை
– வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை
உலக மொழிகளுள் எழுதப்பட்ட எந்த வகையான இலக்கியமானாலும் அது மனிதனின் அகமனவோட்டத்தை நிச்சயமாகக் காட்சிப்படுத்தத்தான் செய்யும். அந்த இலக்கியத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் அந்த மனவோட்டங்களுள் ஏதாவது ஒன்றைத் தன் வாழ்வில் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தோடு பொருத்திப் பார்ப்பார். அப்போது அந்த இலக்கியப் படைப்பு அவருக்கு நெருக்கமானதாக அமைந்துவிடும்.

சில வாசகருக்குத் தன்னனுபவத்தோடு இலக்கியம் முன்வைக்கும் மனவோட்டத்தைப் பொருத்திப் பார்ப்பதில் பயிற்சி இருக்காது. அந்தப் பயிற்சியை அளிக்கும் ஒரு கையேடுதான் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகம்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உலக இலக்கியங்களைத் தன்னுடைய சுய அனுபவப்பதிவுகளோடு மெல்ல உரசிப் பார்க்கிறார். அந்த உராய்வில் பிறக்கும் தீத்துளிகளின் ஒளியால் உலக இலக்கியம் நமக்குப் புதுவகை அனுபவத்தையும் புதிய புரிதல்களையும் புதுவிதமான மனவோட்டத்தையும் அளிக்கிறது.
‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகம், உலக அளவில் எழுதப்பட்ட மிக முக்கியமான புனைவு, புனைவல்லாத இலக்கிய வகைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் எழுதப் பெற்ற 19 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவலைகளின் வழியாகவே தொடங்குகின்றன. அவரின் ஒவ்வொரு நினைவலையும் ஒரு சிறுகதைக்குரிய அல்லது தன்வரலாற்றுப் புதினத்துக்குரிய பாய்ச்சலோடுதான் விரிகின்றன. அந்த நினைவலை வாக்கியங்களால் பெருக்கெடுக்கும் ஒரு சிற்றோடையாக மாறிவிடுகிறது.
வாசகர்கள் அந்த நினைவோடையில் மகிழ்ந்து, சறுக்கிக்கொண்டு செல்லும் போதே எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஓர் உலக எழுத்தாளுமையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். பின்னர், அந்த எழுத்தாளர் படைத்த படைப்பினை விவரிக்கிறார். அந்தப் படைப்பு பற்றிய பல தகவல்களைப் பலகோணங்களில் நமக்குக் காட்டுகிறார். பின்னர் அந்தப் படைப்பினை நாம் எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி நமக்குக் கற்பிக்கிறார். இறுதியாக அந்தப் படைப்பு குறித்த தன்னுடைய ஒட்டுமொத்த மனப்பதிவினை மிகச் சுருக்கமாக நம் முன் வைத்துவிட்டு, மெல்ல விலகிக்கொள்கிறார்.
அடுத்த விநாடியே வாசகர்களின் மனம் அந்தப் படைப்பின் பின்னாலும் அந்த எழுத்தாளுமையின் மீதும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சுய அனுபவத்தின் முன்னும் சென்று குவிந்து நிற்கிறது. பிறகென்ன? அந்த எழுத்தாளுமையின் முழுப் படைப்புகளையும் நாம் தேடி தேடிப் படிக்க வேண்டியதுதான்.
‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகம், ‘உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் புத்தகம்தானே?’ என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதுதான். இந்தப் புத்தகத்தை நூலறிமுகப்புத்தக வரிசையில் வைக்கலாமா? என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘கூடாது’ என்பதுதான்.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் அனைத்துப் புத்தகங்களும் தேர்ந்த வாசகரின் ‘அறிவுச்சிந்தனைப்பசி’க்கு நல்விருந்தாகக் கிடைக்கப் பெற்ற எத்தனையோ புத்தகங்களுள் இருந்து, தேர்ந்தெடுக்கப் பெற்றவையே. அந்தத் தேர்ந்த வாசகர் சிறந்த எழுத்தாளராகவும் இருப்பதால் அவரின் தேர்ந்தெடுப்பு மிகவும் சிறப்பாகவே அமைந்துவிட்டது.
‘இதனால் யாருக்கு லாபம்?’ என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘எளிய தமிழ் வாசகர்கள் ஒவ்வொருவருக்குமே’ என்பதுதான் என்னுடைய அசைக்க முடியாத பதில். ‘அதெப்படி?’ என்றும் நீங்கள் கேட்கக்கூடும்.
எளிய தமிழ் வாசகர்களுக்குத் தமிழில் இதுவரை எழுதியுள்ள எண்ணற்ற மகத்தான ஆளுமைகளைப் பற்றி முழுமையாகத் தெரியாது. அவர்களின் படைப்புகளைப் பற்றியும் முழுதும் தெரியாது. இந்த நிலையில் அவர்களுக்கு உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எத்தகைய புரிதல் இருக்கக்கூடும்?
அவர்கள் அறிந்த உலக இலக்கிய ஆளுமைகள் பெரும்பாலும் நமது இலக்கிய விமர்சகர்கள் நமது இலக்கிய ஆளுமைகளை உலக இலக்கிய ஆளுமைகளோடு ஒப்பிட்டு எழுதும் குறிப்புகளைக் கொண்டுதானே ஒழிய, உலக இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து, வெளியிடப்பட்ட புத்தகங்களைப் படித்து அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இன்றும்கூட உலகின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் முழுப் படைப்புகளும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதையும் நாம் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், சூழலிலிருந்துதான் நாம் இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகத்தை அணுக வேண்டும்.
இந்தப் புத்தகத்தின் வழியாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எந்த உலக இலக்கிய ஆளுமைக்கும் ‘நன்நெறிச்சான்றிதழ்’ வழங்கவில்லை. அந்த ஆளுமைகளின் எந்தப் படைப்புக்கும் மதிப்பெண் இடவில்லை. அயல்மொழி இலக்கியப் படைப்புகளைப் பெருமைபட பேசும்போதும்கூட எந்தத் தருணத்திலும் நம் மொழிப் படைப்புகளை ஒப்பிடவுமில்லை. இந்த மூன்றுமே இந்தப் புத்தகத்தின் ‘தரமும் பலமும்’ என்பேன்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள், இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகத்தின் வழியாக, ‘நான் இந்த அயல் இலக்கியப் புத்தகத்தைப் படித்ததன் வழியாக, என்னுடைய சுய அனுபவமான ஒன்றினை நினைத்துப் பார்த்துக்கொண்டேன்’ என்றும் ‘இந்த அயல் எழுத்தாளரின் படைப்பாளுமையைப் புரிந்துகொள்வதன் வழியாக, நான் என்னுடைய வாசிப்பு அனுபவத்தையும் எழுத்தின் தரத்தையும் புத்தொளிகொள்ளச் செய்தேன்’ என்று தன்னுடைய தரப்பினை விரிந்த மனத்தோடு நம் முன் வைக்கின்றார்.
ஒரு புத்தகத்தைப் படிப்பதன் வழியாக நம் வாழ்வில் நாம் அடைந்த அனுபவங்களை எவ்வாறெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்துத் தொகுத்துக்கொள்ளலாம் என்பதையும் ஒரு படைப்பாளரை மனத்தளவில் அணுகுவதன் வழியாக நாம் நமது சிந்தனை விரிவையும் கற்பனைத் திறத்தையும் எவ்வாறு புதுமையாக்கிக் கொள்ளலாம் என்பதையும் நாம் இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகத்தைப் படிப்பதன் வழியாகக் கற்றுக்கொள்ளலாம்.
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ‘படைப்பாக்கத் திறன்’ சார்ந்த பாடத்திட்டத்தில் இந்தப் புத்தகத்தைத் துணைநூலாக அல்லது மேற்பார்வைநூலாக வைக்கலாம். அதற்குரிய முழுத்தகுதி இந்தப் புத்தகத்துக்கு உள்ளது.
தெலுங்கில்
” எம்பாவாய்” என்ற எனது சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் “neccheli.com என்ற மின் இதழில் வெளியாகி இருக்கிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபானந்தன்.

அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி

இணைப்பு
అభిమానధనం (తమిళ అనువాదకథ)
சென்னையும் நானும் -2
சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ஏப்ரல் 16 முதல் துவங்குகிறது. வாரம் வெள்ளிதோறும் இந்தக் காணொளித் தொடர் வெளியாகும். தேசாந்திரி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்

அன்பு மொழி
நேற்று எனது பிறந்த நாள்.
இந்நாளில் எனக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முகநூலிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். அன்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது போல வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் நேசமும் வாழ்த்துக்களும் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. இத்தனை நல்ல உள்ளங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன் என்பது எனது பேறு.
அயல்நாட்டிலிருந்து மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவித்தார்கள். அலைபேசித் தொடர்பு சீராக இல்லாத காரணத்தால் சிலரது அழைப்பை ஏற்கமுடியவில்லை. உங்கள் அழைப்பினையே வாழ்த்தாக எண்ணிக் கொள்கிறேன். காலை ஐந்து மணி துவங்கி இரவு பனிரெண்டு வரை மின்னஞ்சலில் வாழ்த்துச் செய்தி வந்தபடியே இருந்தது. வாட்ஸ்அப்பிலும் முகநூலிலும் நிறைய வாழ்த்துச் செய்திகள்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன். வண்ணதாசன். கலாப்ரியா துவங்கி இலங்கையிலுள்ள சாந்தன். கருணகாரன் வரை முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு என் அன்பும் தீராத நன்றிகளும்.

எனது குடும்பம் என்பது ஆயிரமாயிரம் அன்பு உள்ளங்கள் தான்.
தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள். அரசியல்பிரமுகர்கள். திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள். மருத்துவர்கள். நீதியரசர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள். கல்வியாளர்கள். பதிப்பாளர்கள். என அவ்வளவு பேரும் வாழ்த்து சொன்னது எழுத்தையும் எழுத்தாளனையும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே நினைக்கிறேன்.
வழக்கமாகப் பிறந்தநாளை ஒட்டிச் சிறிய சந்திப்பு நடைபெறும். நேற்று பெருந்தொற்று முடக்கம் காரணமாக அதை ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஆனாலும் நெருக்கமான நண்பர்கள் என்னைச் சந்திக்க நேரில் வந்திருந்தார்கள். அவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
நேற்றைய நாளை மிகுந்த கொண்டாட்டமாக்கிய அனைவருககும் இதயப்பூர்வமான நன்றிகள்
••
April 12, 2021
கலையில் கண்கள்
இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் கண்ணை வடிவமைப்பது முக்கியமானது. இந்தியக் கலைஞர்கள் கண்ணின் வழியே உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள். இந்திய இலக்கியத்தில் கண்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம். கண்களே உணர்ச்சிகளின் ஜன்னலாக இருக்கிறது.

இந்திய ஓவியர்கள் கண்களை எப்படி வரைந்தார்கள். எத்தனை விதமான வடிவங்களில் கண்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கடவுளின் கண் எப்படியிருக்க வேண்டும் என்பது போல இந்தியக் கலையுலகில் கண்ணின் முக்கியத்துவத்தை விவரிக்கும் “The Eye In Art” என்ற புத்தகத்தைப் பப்ளிகேஷன் டிவிசன் வெளியிட்டிருக்கிறது.
மிகச்சிறந்த இந்த நூலை ஐம்பது சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்கிறார்கள். 250 ரூபாயில் மிக முக்கியமான புத்தகம் கிடைக்கிறது. ஓவியம் பயிலும் மாணவர்கள் மற்றும் கலையின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமாகும்
An Andalusian Dog என்ற லூயி புனுவலின் திரைப்படத்தில் கண்ணை ஒரு பிளேடினைக் கொண்டு குறுக்காக வெட்டும் காட்சியிருக்கிறது. சர்ரியலிசத்தின் பாதிப்பால் உருவான காட்சியது. நம் பார்வை இறுக்கமடைந்து வரம்புகளுக்குள் உட்பட்டிருக்கிறது. அதை மாற்றியமைக்க வேண்டும். புதிய அழகியலை உருவாக்கக் கண்ணை விஸ்தாரணம் செய்ய வேண்டும் என்கிறார்கள்

ஓவியர் டாலி கலை இயக்குநராகப் பணியாற்றிய ஹிட்ச்காக் படத்தில் கண்ணின் விசித்திரமான வடிவங்களைக் கொண்டு ஒரு அரங்கினை உருவாக்கியிருப்பார்.
மேற்குலகம் கண்களைச் சித்தரிக்கும் விதமும் இந்தியக் கலைகள் கண்களைச் சித்தரிக்கும் விதமும் மாறுபட்டவை. குறிப்பாக இந்திய ஓவியங்களில் காணப்படும் வெட்கம். சாந்தம். கருணை, தனிமையை மேற்கத்திய ஓவியங்களில் காணமுடியாது. பண்டைய எகிப்திய கோவில்களில் அறிவின் பாதுகாவலராகப் பயன்படுத்தப்படும் ஹோரஸின் கண் மிகவும் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகும்.
ராஜேந்திர பாஜ்பாயின் “The Eye In Art” புத்தகம் ஒரு முன்னோடியான ஆராய்ச்சி நூலாகும். இதில் தொகுப்பில் பன்னிரண்டு அத்தியாயங்கள் உள்ளன. இந்தியாவின் கிளாசிக்கல் கால ஓவியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பிடும் அவர் அஜந்தா, ராஜஸ்தானி மற்றும் பஹாரி ஓவியங்களில் கண்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைச் சிறப்பாக விளக்குகிறார்.
நவரசங்களையும் கண்ணின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகப் புத்தரின் கண்களைப் பாருங்கள். அதில் தான் எத்தனை சாந்தம். எவ்வளவு ஞானம். அஜந்தா ஓவியங்களில் காணப்படும் பெண்களின் கண்களையும் வெண்கலச் சிற்பங்களில் காணப்படும் கண்ணின் அழகினையும் காணும் போது இதற்கு நிகரேயில்லை என்றே தோன்றும்.

ராஜஸ்தானிய ஓவியம் ஒன்றில் யானையின் கண்களை அவ்வளவு அழகாக வரைந்திருப்பதைக் கண்டேன். உயிரோட்டமான அந்தக் கண்களே ஓவியத்தை பெரும் கலைப்படைப்பாக மாற்றுகின்றன. மீன் போன்ற கண்கள் தாமரை போன்ற கண்கள். வில்லின் வடிவத்தை ஒத்த கண்கள் போன்றவை மரபாக ஓவியங்களில் சித்தரிக்கப்படுகின்றன. Vishnudharmottar எனும் சித்திர சூத்திரம் கண்கள் எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக விளக்குகிறது
மேற்கத்திய மற்றும் கிழக்கு மரபுகளில் கண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பதுடன் ஒப்பிட்டு இந்தியக்கலைகளை ஆய்வு செய்திருக்கிறார். கலைவரலாற்றில் மிகுந்த தேர்ச்சியும் தீவிர ஈடுபாடும் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்
லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் எழுதிய Seiobo There Below நாவல் 2015ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் கலைத்திறன் பற்றியது இந்நாவல். பல்வேறு துண்டுகளால் ஒன்றிணைந்த வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

இந்நாவலில் ஜப்பானிலுள்ள புத்த கோவில் ஒன்றில் பழங்காலப் புத்தரின் சிலையை எப்படி மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பகுதி எழுதியிருக்கிறார்.
ஜப்பானின் ஜெங்கன்-ஜி கோயிலில் உள்ள அமிதா புத்தரின் மரச் சிலை 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. இந்தச் சிலையின் சிறப்புப் பாதித் திறந்த விழிகளுடன் உள்ள புத்தரின் தோற்றம். கால ஒட்டத்தில் இந்தச் சிலை சிதைந்து வருவதை உணர்ந்த மடாதிபதி சிலையை அங்கிருந்து அகற்றி முறையாக மறுசீரமைப்புச் செய்ய முற்படுகிறார்.
இதற்காகப் பீடத்திலிருந்து புத்தர் சிலையை அகற்றும் சடங்கு நான்கு துறவிகளால் ரகசியமாகச் செய்யப்படுகிறது,
புஜிமோரி என்பவரால் நடத்தப்படும் மறுசீரமைப்பு பட்டறைக்குச் சிலையைக் கொண்டு போகிறார்கள். அங்கே மறுபடியும் உரியச் சடங்குகள் செய்யப்பட்டுச் சிலை சுத்தம் செய்யப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து மறுசீரமைப்பு செய்கிறார்கள்.
சிலையின் பாதி மூடிய கண்களை மறுசீரமைப்பு செய்யும் வேலை கொய்னோமி ஷுன்சோ என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் கண்களைச் சரிசெய்வதற்குக் கவனமாக வேலை செய்கிறார். சிலையின் சிறப்பு அந்தக் கண்கள் தான் என்பதால் புஜிமோரி அடிக்கடி அந்தப் பணியைப் பார்வையிட்டுக் கவனமாக வேலை செய்யும்படி கடிந்து கொள்கிறார்
முடிவில் ஒரு நாள் கண்கள் சீரமைப்பு செய்யப்பட்டு விட்டதாகக் கொய்னோமி ஒப்படைக்கிறார். புஜிமோரி அவரது கலைத்திறன் கண்டு வியந்து போகிறார்.
மற்ற பணிகள் முடிந்து சிலை மீண்டும் மடாலயத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்போது. புத்தர் சிலையை லாரி ஒன்றில் ஏற்றி புத்த கோவிலுக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கே புத்தர் சிலையை வரவேற்க பொதுச் சடங்கு நடைபெறுகிறது
மக்கள் ஒன்று கூடி சடங்குகளை நிகழ்த்துகிறார்கள். சடங்கின் உச்சக்கட்டத்தில், நின்று, மண்டியிட்டு, கோஷமிட்டு, பிரார்த்தனை செய்தபின், அமிதா புத்தர் மீண்டும் தெய்வச்சிலையாகிறார்.. கடைசியாக,கூட்டம் கலைந்துபோகிறது, யாருமில்லாத கோவிலில் மடாதிபதி தனியாகச் சோர்ந்து போய்ப் படிகளில் அமர்ந்தபடியே, வலம் வரும் ஒரு எறும்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
புத்தர் சிலை வெளியேறிச் செல்வதும் மடாலயம் திரும்புவதுமான நிகழ்வு காலமாற்றத்தில் ஜப்பான் அடைந்துள்ள நிலையின் குறியீடு போலவே உள்ளது. புத்தரின் கண்களை மறுசீரமைப்பு செய்யும் கொய்னோமி அடையும் உணர்வுகளும் மடாதிபதி முடிவில் யாருமற்ற மடாலயத்தில் எறும்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதும் ஒரே மனநிலை தான். வேறுவேறு விதமாக வெளிப்படுகிறது. இப்போது அது பழைய புத்தர் சிலை தான். ஆனால் அது புதுப்பிறவி எடுத்துள்ளது. ஜப்பானியப் பண்பாட்டின் அடையாளமாகவே அந்தச் சிலை முன்வைக்கப்படுகிறது. கலையின் வழியாக அபூர்வமான தருணங்கள், நிகழ்வுகள் உருவாவதையே லாஸ்லோ இந்நாவலில் முதன்மைப்படுத்தியிருக்கிறார்
பாதித் திறந்த புத்தரின் கண்கள் என்பது ஒரு குறியீடு. அதைப் புரிந்து கொள்வதற்கு ராஜேந்திர பாஜ்பாயின் புத்தகம் போன்ற கலை ஆய்வுகளை வாசிப்பது அவசியமானது.
••
சிறப்பு சலுகை
தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது.

April 11, 2021
மன்னரின் மூக்குக் கண்ணாடி
The Last Emperor படத்தில் சீனாவின் கடைசி அரசர், புய் ஒரு அரசியல் கைதியாகவும், போர்க்குற்றவாளியாகவும் இருக்கிறார். அங்கே அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் மரியாதை செய்கிறார்கள். அது அவரை அதிகக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. வீழ்ச்சியின் போது ஒரு மனிதன் தனது பழைய மரியாதையைப் பெறுவதை விலக்கவே முற்படுகிறான். ஆனால் அவனது வீழ்ச்சி தற்காலிகமானது என்பது போலவே மக்கள் பழைய மரியாதையை அளிக்க முற்படுகிறார்கள்.

படம் புய் தற்கொலை செய்ய முயல்வதிலிருந்து துவங்குகிறது. மன்னர்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் குறைவே. போரில். வேட்டையில் அல்லது விஷமிட்டுக் கொல்லப்பட்டவர்கள் அதிகம். தோல்வியின் காரணமாகத் தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் புய் ஒரு நவீன மனிதன். அவனுக்குத் தனது அதிகாரம் பறிபோனதை விடவும் வீழ்ச்சியின் கடைசிக்கண்ணியாகத் தான் இருக்கிறோம் என்ற குற்றவுணர்வே மேலோங்கியிருக்கிறது

படத்தின் ஒரு காட்சியில் இளவரசர் புயிக்கு கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்கிறார். குறைபாட்டினை சரி செய்ய ஒரு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஒரு மன்னர் கண்ணாடி அணிந்து கொள்வதா என்று ராஜகுடும்பம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆனால் புயி கண்ணாடி அணிந்து கொள்கிறார். கண்ணாடி அணிந்த மன்னர் என்பது தான் படத்தின் முக்கியமான குறியீடு.
ஒரு மன்னர் கண்ணாடி அணிந்து கொள்வது என்பது எளிய விஷயமில்லை. ஜப்பானிய மன்னர்கள் குடும்பத்தில் கண்ணாடி அணிவது தடைசெய்யப்பட்டிருந்த காரணத்தால் பார்வை பறி போன வரலாறு இருக்கிறது.

புயி மிக அழகான வட்டவடிவ கண்ணாடி அணிந்து கொள்கிறார். கண்ணாடி அணிந்த மன்னரின் முகம் என்பது நவீனத்துவத்தின் அடையாளம். உண்மையில் கண்ணில் பார்வைக்குறைபாடு ஏற்படுவது காலம் காலமாக இருந்து வரக்கூடியது. பார்வைக் குறைவுள்ள மன்னர்கள் யுத்தகளத்தில் எப்படிச் சண்டையிட்டிருப்பார். குதிரையேறி சவாரி செய்திருப்பார்கள். இன்றிருப்பது போல மூக்குக் கண்ணாடிகள் அந்தக் காலத்தில் கிடையாது- ஆனால் வைத்திய முறைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு கண்ணைச் சரி செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் மன்னர் என்பதால் ராஜகுடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி கண்ணாடி அணிந்து கொண்டுவிடுகிறார். இது ராணியாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்காது. மூக்குக் கண்ணாடி அணிந்த மகாராணி வரலாற்றில் இல்லை. இங்கிலாந்தின் ராஜகுடும்பத்திலே நீண்ட தயக்கம் விவாதங்களுக்குப் பிறகே ராணி கண்ணாடி அணிந்திருக்கிறார்
மன்னர் காலத்தைப் பற்றிய நமது பொதுப்பிம்பத்தின்படி அரசருக்கு வயதாகும் என்ற நினைப்பே ஏற்படாது. ஆனால் வரலாற்றில் சரும நோய்களால். உடல் பருமனாலும் பார்வைக்குறைபாடு மற்றும் ஆண்மையற்று போனதால் மன்னர்கள் செய்து கொண்ட சிகிச்சைகள் ஏராளம். கடைசி வரை குணப்படுத்த முடியாமல் இறந்து போயிருக்கிறார்கள்

இந்தப் படத்திலே இன்னொரு காட்சியில் மன்னர் சைக்கிள் ஒட்டுவார். அரண்மனையை விட்டுச் சைக்கிளில் வெளியே செல்ல முயற்சிப்பார். சைக்கிள் என்பது எளியோரின் வாகனம். அதை ஒரு மன்னர் ஒட்டுவது என்பது பெரிய மாற்றம். சைக்கிள் அறிமுகமான நாட்களில் டால்ஸ்டாய் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கி பண்ணையினுள் ஒட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். அவரது பண்ணையாட்கள் அதை வியந்து பார்த்திருக்கிறார்கள்.
நவீன வாழ்க்கையின் அம்சங்கள் வரலாற்றுக் காலத்தில் எளிதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்று நம் எல்லோர் கையிலும் வாட்ச் இருக்கிறது. மணி பார்க்க எவர் தயவும் தேவையில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மன்னராக இருந்தாலும் காலத்தை அறிந்து கொள்ள ஆள் உதவி தேவை. மணற்கடிகாரம். சூரியக்கல். சந்திரக்கல். நீர்கடிகாரம் எனப் பல்வேறு வகையான கடிகாரங்கள் வழக்கிலிருந்தன. ஆனால் நாம் சொல்வது போலத் துல்லியமாக மணியைச் சொல்ல முடியாது. மன்னர்கள் காலத்தை விடவும் நாம் கூடுதல் வசதிகளுடன் வாழுகிறோம்
பைனாக்குலர் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமான போது ஒரு மன்னருக்கு அதைப் பரிசாக அளித்திருக்கிறார்கள். அவரால் தொலைவில் உள்ள ஒரு பொருள் அண்மையாகத் தெரிவதை நம்பவே முடியவில்லை. ஏதோ ஒரு மாயாஜாலம் என்றே நினைத்திருக்கிறார்.
மன்னர்கள் காலம் முடிந்து மக்களாட்சியின் காலம் உருவானது போது ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. முதன்முறையாக டெலிபோன் அறிமுகமான போது ராஜஸ்தானிலிருந்த ஒரு மன்னர் முதல் முறையாக போன் பேசுவதற்கு நாள் நட்சத்திரம் குறித்திருக்கிறார். விசேச பூஜை நடந்திருக்கிறது. அது மட்டுமின்றி யாரோடு மன்னர் பேசப்போகிறார் என்பதை ஜாதகத்தை வைத்துக் கணித்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்தது. அப்போது மன்னன் ஹிரோஹிட்டோவின் புகைப்படத்தை நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன. அதில் கண்ணாடி அணிந்த பேராசிரியர் போன்ற தோற்றம் கொண்ட மன்னரின் உருவம் வெளியானது. அமெரிக்கர்களால் அதை நம்ப முடியவில்லை. இவர் தான் மன்னரா, கிரீடமில்லை. பட்டாடைகள் இல்லை. பாதுகாவலர்கள் வாள் ஏந்தி நிற்கவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னர் மெல்லிய குரலில் பேசியது ஆச்சரியமாக இருந்தது. வரலாற்றில் இப்படித்தான் இருந்திருப்பார்கள். நமது கற்பனை தான் மன்னர் என்றால் வீராவேசமாகப் பேசுவார்கள் என்று பதிய வைத்திருக்கிறது
புகைப்படக்கலை அறிமுகமான நாட்களில் சமஸ்தானங்களை ஆண்ட அரசர்கள் ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அரசியைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. நடனமாடும் பெண்கள். மற்றும் அந்தப்புர ஆசைநாயகிகளைப் புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள். மன்னரின் ஆல்பத்தில் அவரது புகைப்படம் மட்டுமே ஒட்டப்பட்டிருக்கும். அவரது அரசியின் படத்திற்குப் பதிலாக ஒரு ரோஜா பூவின் படம் வரையப்பட்டிருக்கும். அரச குடும்பத்து புகைப்பட ஆல்பங்களில் அப்படியிருப்பதை நானே கண்டிருக்கிறேன்.
ஆங்கில அதிகாரிகள் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதைப் போஸ்ட் கார்டுகளாக்கி விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த நிர்வாணப் புகைப்படங்களுக்கு லண்டனில் பெரிய கிராக்கியிருந்திருக்கிறது. இப்படி மலபாரில் மார்பகங்கள் தெரிய எடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த கவிஞர் பூதலேர் To a Malabar Woman என்ற கவிதையை எழுதியிருக்கிறார்.

இன்றிருப்பது போல மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாத மன்னர்கள் காலத்தில் தன் பிரஜைகளாக எவ்வளவு குடிமக்கள் இருக்கிறார்கள் என்ற தகவலே கூட மன்னருக்கு யூகமாகத் தான் தெரிந்திருக்கும். மன்னர்கள் வாங்கிய கடன். அதற்கு அவர்கள் ஈடாகக் கொடுத்த நிலம். நகைகள் பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்றில் உள்ளன.
த லாஸ்ட் எம்பெரர் படத்தில் வருவது போல மன்னர்கள் குடும்பத்தின் கடைசி வாரிசுகள் வறுமையில் தனது பட்டாடைகளை விற்று வாழ்ந்த வரலாறெல்லாம் இந்தியாவில் இருக்கிறது. நாம் தான் இன்னமும் தங்கக் கீரிடம் அணிந்த மன்னர்களின் கற்பனை உலகிலிருந்து விடுபடவேயில்லை
April 10, 2021
இரண்டும் கப்பல் தான்.
புதிய சிறுகதை
சூயஸ் கால்வாயைத் தடுத்து நின்றிருந்த அந்தக் கப்பல் பிடிபட்ட திமிங்கலம் ஒன்றைப் போலிருந்தது

தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தபடியே திரையில் தெரியும் அந்தக் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபால் ரத்னம்.
மணி மூன்றைக் கடந்திருந்தது. பின்னிரவில் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எதற்காக இப்படிச் சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவருக்கே புரியவில்லை.
ஆனால் அந்தக் கப்பல் அவரைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அதை எப்போது மீட்பார்கள். எப்போது அது மீண்டும் தனது பயணத்தைத் துவங்கும் எனக் காத்துக் கொண்டேயிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியைப் பற்றிக் கவலைப்படுவது போல அது நிஜமானதாக இருந்தது
எங்கோ ஒரு கப்பல் சிக்கிக் கொண்டது தன்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிறது. ஏன் சதா அதைப் பற்றியே ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தனக்கும் அந்தக் கப்பலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. பின் ஏன் இந்தப் பதற்றம்.
காரணங்கள் தெரியாத போதும் அவர் செவ்வாய்க்கிழமை முதல் எவர்கிரீன் கப்பலால் பாதிக்கப்பட்டார். கப்பல் நடுவழியில் சிக்கிக் கொண்டதைப் போல அவரும் அந்தச் செய்தியில் சிக்கிக் கொண்டுவிட்டார். கப்பல் மீட்கப்பட்டால் தான் அவராலும் அதிலிருந்து வெளியேற முடியும்
சப்தமேயில்லாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த அறையில் மகளும் மருமகனும் பேரனும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கப்பல் விபத்து பற்றிக் கவலையில்லை.
தொலைக்காட்சி வந்தபிறகு உலகம் மிகச்சிறியதாகிவிட்டது. சேனலை மாற்றும் போது தோன்றும் வேறுவேறு தேசங்களின் மனித முகங்கள். சாலைகள். இயற்கை காட்சிகள். விளையாட்டுகள் உலகைப் பற்றிய அவரது பயத்தை விலக்கியிருந்தன.
உலகம் ஒரு ஆரஞ்சு பழம் போன்றது. அதன் ஒரு சுளையினுள் தானிருக்கிறோம். மற்ற சுளைகளில் யாரோ வசிக்கிறார்கள். உலகைப் பற்றிய பயம் விலகி எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.

சில நாட்கள் உறக்கமின்றி இரவெல்லாம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பார். வேறு வேறு பாஷைகள் காதில் விழும் ஏதாவது ஒரு நாட்டில் மக்கள் ஒன்றுகூடி ஆரவாரமாக மகிழ்ச்சியினைக் கொண்டாடுவார்கள்.. சிரிப்பும் அழுகையும் உலகெங்கும் ஒன்று போலதானிருக்கிறது. எந்த நாட்டில் மனிதர்கள் சிரித்தாலும் அது உடனே நம்மையும் உற்சாகம் கொள்ள வைத்துவிடுகிறது.
அது போலவே எங்காவது குண்டு வெடிப்பு நடந்திருக்கும். விமானத்தாக்குதல் நடக்கும். போலீஸார் தடியடி நடத்துவார்கள். மக்களின் ஆர்ப்பாட்டம் நடக்கும். அதைப் பார்க்கும் போது உலகம் பற்றி எரிந்து கொண்டிருப்பது போலத் தோன்றும்.
தன்னைப் போலச் சிறிய அறைக்குள் வாழும் மனிதர்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய உலகம். இவ்வளவு பிரச்சனைகள். கடற்கரையில் கால் நனைய நிற்கும் சிறுவனை அலைகள் தன் போக்கில் இழுத்து விளையாடுவது போன்ற உணர்வினையே தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் காடுகள் தீப்பற்றி எரிவதைக் காட்டினார்கள். அந்தக் காட்சி அவரைத் தொந்தரவு செய்தது. அவ்வளவு நெருப்பை அதன்முன்பு கண்டதில்லை. அதுவும் கங்காரு குட்டிகள் நெருப்பிலிருந்து தப்பியோடும் காட்சியைக் காணும் போது கலக்கமாகவே இருந்தது.
காட்டுத்தீயின் உக்கிரமும் வான் நோக்கி எழும் கரும்புகையும் மனதை அழுத்தியது. உலகில் எங்கே எது நடந்தாலும் கேமிராவின் கண்களிலிருந்து
தப்ப முடியாது. கேமிரா தான் நம் காலத்தின் மிகப்பெரிய வேட்டைக்கருவி. துப்பாக்கியை விடவும் அச்சம் தரக்கூடியது. ஆனால் விளையாட்டாகவே பயன்படுத்துகிறார்கள்.
சூயஸ் கால்வாயினுள் சிக்கி நிற்கும் அந்தக் கப்பல் பற்றிய செய்தியை முதன்முறையாகப் பார்த்தபோது கோவத்தில் பிடிவாதமாகச் சுவரில் முகம் பதித்து நிற்கும் சிறுவனைப் போலவே தோன்றியது.
தான் அப்படித்தான் இருந்தோம். அப்பா ஏதாவது சொல்லிவிட்டால் உடனே சுவரை நோக்கித் திரும்பிக் கொண்டு யாரையும் பார்க்க மாட்டார். பேசமாட்டார். அம்மா முதுகில் அடித்து இழுத்தாலும் முகத்தை விலக்கவே மாட்டார். இந்த கப்பலும் அப்படிப் பிடிவாதமாக நிற்பது போலவே இருந்தது.
சின்ன வயதில் கால்பந்தாடும் போது சண்டையிட்ட முத்துராமனை ஒருநாள் அண்ணன் வீட்டிற்குக் கூட்டிவந்திருந்தான். அப்போது இப்படித்தான் இரண்டுகைகளால் கதவைப் பிடித்துக் கொண்டு உள்ளே விடமாட்டேன் என்று நின்றிருந்தார். பிடிவாதம் நம் உடலை மாற்றிவிடுகிறது. திருகாணிகளைக் காணும் போது அவை பிடிவாதத்தின் அடையாளம் போலவேயிருக்கிறது
முதல்நாள் செய்தியில் எவர் கிரீன் கப்பல் ஈபிள் கோபுரத்தை விடப் பெரியது என்றார்கள். படுத்திருக்கும் போது யானை பெரிதாகத் தெரிவதில்லை. அப்படித் தான் கோபுரமும் அது சாய்ந்துவிடடால் பிரம்மாண்டமாகத் தெரியாது.
அந்தக் கப்பலில் ஏற்றப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு அதை விடவும் அந்தக் கப்பல் சூயஸ் கால்வாயின் போக்குவரத்தை நிறுத்திவிட்டதைப் பற்றித் தான் அதிகக் கவலை கொண்டார்.
பள்ளி வயதிலிருந்தே கப்பலைப் பற்றி அறிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. அதுவும் புதையல் தேடிச் சென்ற கப்பல்கள். யாத்ரீகர்களின் சாகசக் கப்பல்கள். கொள்ளையர்களின் கப்பல்கள், கடலில் மூழ்கிய கப்பல்கள் என நிறையப் புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வாசித்திருக்கிறார்.

சூயஸ் கால்வாய் உருவான விதம். அதன்பிறகு உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் கூடப் படித்திருக்கிறார்.
வாழ்நாளில் என்றாவது ஒருமுறை சூயஸ் கால்வாயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட இருந்தது. ஆனால் இந்த எழுபது வயதிற்குப் பிறகு அது சாத்தியமேயில்லை. இப்படித்தான் நிறைய ஆசைகள் மனதில் தோன்றி மனதிலே முடிந்துவிடுகின்றன. இவ்வளவு தான் வாழ்க்கை.
சூயஸ் கால்வாயினைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பார்த்திருக்கிறார். உண்மையில் இக்கால்வாய் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பெரிய சாதனை தான். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் அந்தக் கால்வாய் 1869 இல் திறக்கப்பட்ட காட்சி அந்தப் படத்தில் இருக்கிறது. .
சூயஸ் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ். பத்தாண்டுகள் கால்வாய் வெட்டும் பணி நடந்திருக்கிறது. லெஸ்ஸிப்ஸ் புகைப்படத்தைப் பார்க்கும் போது காலேஜ் பிரின்சிபால் போன்ற முகத்தோற்றமே இருந்தது. பெரிய சாதனைகளைச் செய்யும் மனிதர்கள் தனது தோற்றத்தில் எளியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கனவு தான் அவர்களுக்கான விஸ்வரூபத்தைத் தந்துவிடுகிறது
சூயஸ் கால்வாயினுள் ஓராண்டில் ஏறக்குறைய பதினைந்தாயிரம் கப்பல்கள் கடந்து செல்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகும் என்றார்கள்.
வரிசை வரிசையாகக் கப்பல்கள் சூயஸ் கால்வாயினுள் செல்லும் போது கரையோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிலர் கையசைப்பதைக் காட்டுவார்கள். தானும் அதில் ஒருவர் போலவே கருதுவார்
கப்பல் ஏன் இத்தனை வசீகரமாகயிருக்கிறது. நிறையப் பேருக்கு விமானப் பயணம் என்றால் ஆசையாக இருக்கும். அவருக்கு விமானம் பயணத்தில் பெரிய ஈடுபாடு இல்லை. நாலைந்து முறை பயணித்திருக்கிறார். பறக்கும் உணர்வை அது தரவேயில்லை. மாறாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஆப்பிள் அசைவற்று இருப்பதைப் போலவே உணர்ந்தார். ஆனால் கப்பல்கள் அப்படியில்லை. அதில் ஏதோ ஒரு பிரம்மாண்டமும் வசீகரமும் இருக்கிறது.
இரவு நேரம் கடலில் செல்லும் கப்பலின் விளக்குகள் ஓராயிரம் கண்கள் கொண்ட விசித்திர விலங்கினைப் போலவே தோற்றம் தருகின்றன.
ஒரு முறை கப்பல் பயணம் பற்றிய ஒரு திரைப்படத்தில் ஒரு சுண்டெலி கப்பலில் பயணம் செய்வதைக் காட்டினார்கள். அந்த எலி யாரும் இல்லாத நேரம் வெளியே வந்து படியில் ஏறி மேற்தளத்திற்குப் போகும். அங்குமிங்கும் ஒடியலைந்துவிட்டு பின்பு மீண்டும் சமையல் கூடத்திற்குள் போய் ஒளிந்து கொள்ளும். ஒரு எலி கடலில் பயணம் செய்கிறது என்பதே அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்த எலிக்குத் தான் கடலில் செல்கிறோம் என்ற உணர்வே இருக்காது. அது ஒரு வீட்டில் இருப்பது போலத் தான் உணர்ந்திருக்கும். அந்தச் சிற்றெலியை போலத் தானும் ஒரு கப்பலில் ஓடியாடி மகிழ ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அதை எவரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை

வணிகக் கப்பல்களின் பிரம்மாண்டத்தைக் காணும் போது அது பேராசையின் வடிவம் என்றே தோன்றும். சில லாரிகளில் இப்படித்தான் ஊதி பெருக்க வைக்கோல் ஏற்றிக் கொண்டு போவார்கள். அந்த லாரி ஒரு பக்கம் சாய்ந்து கொண்டே செல்லும். பெரிய வணிகக் கப்பல்களில் நூற்றுக்கணக்கான கார்கள் ஏற்றப்பட்டுச் செல்கின்றன. பெரிய பெரிய இயந்திரங்கள். இரும்பு பாளங்கள். தானியங்கள். எனப் பல்லாயிரம் பொருட்கள் ஏற்றப்படுகின்றன.
கடலில் தெரியும் கப்பலும் கரையில் காணும் கப்பலும் ஒன்றில்லை. உண்மையில் வணிகக் கப்பல் என்பது ராட்சச திமிங்கலம். எவர் கிரின் கப்பலும் அப்படியானது தான்.
கப்பல் எப்படிச் சூயஸ் கால்வாயினுள் மாட்டிக் கொண்டது. அதை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பதை உலகின் எல்லாத் தொலைக்காட்சிகளும் காட்டிக் கொண்டிருந்தன. அரபு சேனல் ஒன்றில் காட்டப்பட்டது போன்ற காட்சிகளை இந்திய சேனல்கள் எதுவும் காட்டவில்லை. எந்தச் சேனலும் கப்பலுக்குள் இருந்தவர்களைக் காட்டவில்லை. அந்தக் கப்பலில் இருபத்தைந்து இந்தியர்கள் இருப்பதாகச் செய்தியில் சொன்னார்கள். யார் அவர்கள். எந்த ஊரைச் சார்ந்தவர். அவர்களின் குடும்பம் இந்நேரம் எப்படியிருக்கும். வீட்டோர் கப்பலின் மீட்சிக்காகப் பிரார்த்தனை செய்வார்களா. ஏன் அவர்கள் திரையில் தோன்றி பேசவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இயந்திரங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டினை எப்போது இழக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. சாதாரண மிக்சி ஒரு நாள் திடீரெனத் தீப்பற்றி எரிந்துவிட்டது. எப்படி என அவரால் அறியமுடியவில்லை. இவ்வளவு பெரிய கப்பலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது எளிதானதில்லை. ஆனால் தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்டது. மனித தவறுகளை அது செய்வதில்லை. ஆனால் இயந்திரமும் தவறு செய்யவே நேரிடும்.
அந்தக் கப்பலின் உரிமையாளர் ஒரு ஜப்பானியர் என்றார்கள். ஜப்பானியர்கள் என்றாலே கறுப்புக் கோட் போட்ட குள்ளமான உருவம் தான் மனதில் தோன்றுகிறது. சட்டை அணியாத ஒரு ஜப்பானியரை கூட அவர் கண்டதில்லை.
கப்பலின் உரிமையாளர் ஷோயேய் தங்களால் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக ஒரு செய்தி வெளியானது. அது ஜப்பானியர்களின் இயல்பு. அவர்கள் தண்ணீரைப் போல மன்னிப்பை எளிதாகப் பயன்படுத்துகிறார்கள். நாம் மன்னிப்பு கேட்பதை மிகப்பெரிய காரியமாக நினைக்கிறோம்.
கப்பலை இயக்கும் தைவான் நிறுவனம் எவர்கிரீனை மீட்பதற்கான முயற்சிகளை விவரித்துக் கொண்டிருந்தார்கள்.
உடனடியாக மீட்க முடியாது என்பதை வல்லுநர்கள் உறுதியாகத் தெரிவித்தார்கள்.
சிறுவயதில் ஒருமுறை அவர் பொருட்காட்சியில் ஒரு நீராவிக் படகினை வாங்கி வந்தார். அதில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்துத் துணிகள் ஊற வைக்கும் பிளாஸ்டிக் டப்பில் தண்ணீரை நிரப்பி ஒட விட்டார். அந்தப் படகு புகையைக் கக்கிக் கொண்டு ஒடி டப்பின் வளைவில் திரும்பாமல் பறந்து வெளியே வந்து விழுந்துவிட்டது. சிறிய பொம்மைப் படகினைச் செலுத்துவதே எளிதாகயில்லை. எவர் கிரீன் எவ்வளவு பெரிய கப்பல்.
கப்பலை மீட்பதற்கான வழிகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மனிதர்களால் தீர்க்கப்படமுடியாத பிரச்சனைகளே இல்லை. நெருக்கடி தான் மனிதனை மேம்படுத்துகிறது. புதிய வழிகளை உண்டாக்குகிறது. விண்வெளியில் உள்ள ராக்கெட்டின் பிரச்சனையே பூமியிலிருந்தபடியே சரிசெய்துவிடுகிறார்களே. இந்தக் கப்பலை மீட்காமலா போய்விடுவார்கள்.
எப்படிக் கப்பலை மீட்கப்போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளப் பகலிரவாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு மேலே இதைப்பற்றிய செய்தியில்லை. ஆனால் சர்வதேச ஆங்கிலச் செய்திகளில் கப்பலை மீட்கும் பணிகள் விரிவாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.
கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டிருந்த போதும் கப்பலின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கப்பலில் வேலை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள். எல்லாப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் அவர்களுக்குப் பசிக்கும். சாப்பாடு தேவைப்படும். உறங்குவார்கள். போர்வீரனும் கூடச் சாப்பாட்டினை எடுத்துக் கொண்டுதானே போகிறான். கப்பலின் சமையற்காரனுக்கு நிச்சயம் ஓய்விருக்காது. அவனுக்குக் கப்பல் கால்வாயினுள் மாட்டிக் கொண்டது விஷயமேயில்லை. பதற்றமான நேரங்களில் மனிதர்களின் பசி அதிகமாகிவிடுகிறது. அந்தக் கப்பலிலிருந்தவர்களில் சிலர் நிச்சயம் அதிகம் சாப்பிட்டிருப்பார்கள். அப்படித் தானே நடந்து கொள்ள முடியும்.
எவர்கிரீன் கப்பலின் உரிமையாளர் ஷோயேய் கிசேன் இந்த நேரம் உறங்கிக் கொண்டிருப்பார். ஜப்பானியர்கள் அப்படித் தான். அவர்கள் புற உலகின் பிரச்சனையைத் தனதாக்கிக் கொள்ள மாட்டார்கள். அவர் வேலை செய்த தொழிற்சாலைக்கு வருகை தந்த ஜப்பானியர்கள் கூட இப்படித் தானே நடந்து கொண்டார்கள்.
மீட்புக்குழுவினர் வியாழக்கிழமை தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தனர். கால்வாயிலிருந்து கப்பலை திசைமாற்றம் செய்யப் புதிய வழிகளைத் திட்டமிடுகிறார்கள் என்று செய்தி சொன்னது. எவர்கிரீன் சிக்கிக் கொண்டதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணம் செய்ய இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சாலையில் நடக்கும் போராட்டத்தால் தான் ஒருமுறை இரண்டுமணி நேரம் ரோட்டில் பைக்கில் நின்ற நாள் அவரது நினைவில் வந்து போனது. பெரிய அனுபவங்களின் வழியே சிறிய அனுபவங்கள் மீட்கப்படுகின்றன.
சூயஸ் கால்வாய் முடக்கபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. உலக வர்த்தகம் சரிந்து கொண்டிருக்கிறது. பங்கு சந்தை தடுமாறுவதாகச் சொன்னார்கள். வணிகக் கப்பல் என்பதால் தான் உலகம் இவ்வளவு கவலைப்படுகிறது. பயணிகள் கப்பல் என்றால் நடந்திருப்பது வேறு.
அவர்கள் சொல்லும் கோடிகளை அவரால் எழுதி கூடப் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ போலவே அந்தக் கப்பலின் பாதிப்பும் நீண்டு கொண்டே போனது.
இவ்வளவு பெரிய பாதிப்பினை ஏற்படுத்திய செய்தியைப் பற்றிச் சேனலில் விவாதிக்கும் ஒருவர் முகத்தில் கூடச் சிறு துயரமில்லை. அவர்கள் ஆபரேஷன் செய்யும் மருத்துவர் நோயாளியினைப் பற்றிப் பேசுவது போல இயல்பாக, எளிதாக, இவ்வளவு தான் விஷயம் என்பது போலப் பேசினார்கள். அதிலும் ஒரு பெண் மாலுமி புதிது புதிதாக யோசனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். அவள் ஒரு வணிகக் கப்பலைச் செலுத்துகிறாள்.

கப்பல் என்றாலே ஆண்களின் உலகம் என்று மனதில் இருந்த எண்ணம் அவளைப் பார்த்த மாத்திரம் மாறத்துவங்கியது. வருஷத்தில் எட்டுமாதங்கள் அவள் கடலில் வாழுகிறாள். இளம்பெண். தோளில் தலைமயிர் புரளுகிறது. கண்களில் அத்தனை உற்சாகம். தன் மகளின் வயது தானிருக்கும். ஆனால் தன் மகளுக்கு நீந்தக் கூடக் தெரியாது, கடற்கரையில் நிற்பதற்கே பயப்படுவாள். தன்னால் மகளைத் தைரியமாக வளர்க்க முடியவில்லை
இந்தப் பயம் குழப்பம் எல்லாம் அவரிடமிருந்து தானே அவளுக்கு வந்திருக்கும். மனதில் பல்வேறு வயதின் கவலைகள். பயங்கள் தரை தட்டி நிற்கின்றன. அவற்றை எளிதில் அகற்றிவிட முடியாது
எவர்கிரீன் கப்பலின் மீட்பு பணிகளை பார்வையிட ஒரு ஹெலிகாப்டர் வானில் சுற்றிக் கொண்டிருந்தது. பிரம்மாண்டமான ஒரு சிலை ஹெலிகாப்டரில் வைத்துத் தூக்கிக் கொண்டு பறப்பதை முன்பு டிவியில் பார்த்திருக்கிறார். கப்பலை அப்படித் தூக்கிக் கொண்டு பறந்துவிட முடியாதே. தரை தட்டி நிற்கும் கப்பலைப் பறவைகள் காண்பது போலதான் இதுவும். பறவைகளும் மரக்கிளையும் கப்பலும் ஒன்று தான். பிரம்மாண்டத்தைக் கண்டு பறவைகள் வியப்பதில்லை. ஒதுங்குவதில்லை.
கப்பலை மீட்கும் வழிகள் மாறிக் கொண்டேயிருந்தன. இந்தக் கவலையால் தானோ என்னவோ வழக்கமாகச் சூடாகச் சாப்பிடும் காபியை ஆறவைத்துக் குடித்தார். இரவில் சாப்பிட எடுத்து வைத்த வாழைப்பழத்தை தொடவேயில்லை. மகளும் மருமகனும் வேலைக்குப் போன பிறகு சப்தமாகச் செய்தியைக் கேட்டார். ஒரு காகிதத்தில் அந்தக் கப்பலைப் படம் வரைந்து கூடப் பார்த்தார். மகளின் கம்ப்யூட்டரில் அந்தக் கப்பல் பற்றிய தகவல்களை வாசித்தார். கனவிலும் இந்தக் காட்சிகள் வந்து போயின.
நான்காம் நாள் இதிலிருந்து விடுபடுவதற்காக மகளும் மருமகனும் வேலைக்குப் போன பிறகு வீட்டைப் பூட்டிக் கொண்டு மார்க்கெட் வரை நடந்து போய் வந்தார். அந்த நகரில் அவருக்குத் தெரிந்த மனிதர்களே இல்லை. யாரிடமாவது இதைப் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. பெங்களூரில் அவருக்கு ஒருவர் கூட நண்பர் கிடையாது. சென்னையில் இருந்திருந்தால் வாக்கிங் போகிற நண்பர்களிடம் இதைப்பற்றிப் பேசலாம்.
ஆனால் மகள் வீட்டிற்கு வந்தபிறகு தனது பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை. அவர்களும் தன்னை நினைக்கவேயில்லை. யாரிடமிருந்தாவது போன் வரும் எனச் சில நாட்கள் நினைப்பதுண்டு. இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருவர் கூடப் போன் பேசவில்லை. இத்தனை ஆண்டுகள் ஒன்றாகப் பழகியிருக்கிறோம். தன்னைப் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை. ஒருவேளை தானும் இப்படித் தரை தட்டி நிற்கும் கப்பல் தானோ.
பழங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும் டிவியைப் போட்டார்.
கப்பலின் நின்ற கோலம் மாறவேயில்லை.. கரையிலிருந்த மணலை இயந்திரம் மூலம் அகற்றிக் கொண்டிருந்தார்கள் இன்னொரு சேனலில் போர் கப்பலை இயக்கிய இரண்டு மாலுமிகள் ஏதோ ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிரிட்ஜிலிருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தபடியே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.
திடீரென அந்தக் கப்பலுக்கு என்ன வயது என்ற சந்தேகம் மனதில் தோன்றியது. மூன்று வருஷங்களே ஆனதாகக் கூகிள் சொன்னது. பொதுவாக இருபது வருஷம் தான் கப்பல் பயன்படுகிறது. அப்படியானால் பத்து வயது பையனைப் போன்றது தான் எவர்கிரீன் கப்பல் தான் நினைத்தது சரி தான் அவன் ஒரு விளையாட்டு பையனே தான்.
வேறு சேனலை மாற்றி எவர்கிரீன் மீட்பது பற்றி ஏதாவது புதிய செய்தி வந்திருக்கிறதா என்று தேடினார். அதே காட்சிகள். அதே மீட்பு முயற்சிகள். ஒரு சேனலில் கரை தட்டி நின்ற கப்பலை ஒட்டிய கரையில் ஒரு நண்டு ஒடிக் கொண்டிருந்தது. நண்டினை கேமிரா பின்தொடர்ந்தது. அது வேகமாக ஒடி வளையினுள் மறைந்துவிட்டது
அந்தக் காட்சி அவருக்குப் பிடித்திருந்தது. எத்தனை நாட்களுக்குத் தான் அதே கப்பலைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். நண்டினை படம் பிடித்த அந்தக் கேமிராமேனை மனதிற்குள் பாராட்டிக் கொண்டார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதாகச் செய்தி ஒளிபரப்பானது. அந்தக் கப்பல் திரும்பும் காட்சியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். கப்பல் அசைந்து திரும்புவதைக் காணும் போது கண்ணில் நீர் கசிந்தது. அவரை அறியாமல் கைதட்டினார். அவசரமாக எழுந்து போய் மூத்திரம் பெய்து வந்தார். அப்போது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தார்.
பேரன் பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் அவனுக்காக ஒரு வெள்ளைப் பேப்பரை மடித்து அழகான காகிதக் கப்பல் ஒன்றைச் செய்து டைனிங் டேபிள் மீது வைத்திருந்தார்.
மாலையில் பள்ளிவிட்டு வந்த பேரன் அகில் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. நேராகப் பிரிட்ஜிற்குப் போய்ச் சாக்லெட் எடுத்துச் சாப்பிட்டான்.

காகிதக் கப்பலை கையில் எடுத்துக் கொண்டு போய் அவனிடம் நீட்டினார்
“பேப்பர் போட் எனக்குப் பிடிக்காது“ என்றான்
“இதை தண்ணியில விட்டா மிதக்கும்“ என்றார் கோபால் ரத்னம்
“பிளாஸ்டிக் பக்கெட்ல மிதக்க விடலாமா“ என்று கேட்டான் அகில்
தலையாட்டினார். அவன் பாத்ரூமில் இருந்த சிவப்பு வாளி நிறையத் தண்ணீரைப் பிடித்து அதில் காகிதக்கப்பலை மிதக்க விட்டான். கப்பல் நகரவேயில்லை
கோபத்தில் அதைக் கையால் அழுத்தி ஒட வைக்க முயன்றான். காகிதக்கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிப் போனது.
“இதை எடுத்து ஒட வை“ என்று தாத்தாவை நோக்கி கத்தினான்
“நனைஞ்சிட்டா அது ஒடாது“ என்றார்
“நீ ஒரு ஸ்டுபிட் தாத்தா“ என்றபடியே அவன் கோபத்துடன் ஹாலை நோக்கி நடந்தான்.
அவர் மௌனமாகப் பேரனை பார்த்துக் கொண்டிருந்தார்
தொலைகாட்சியில். எவர் கிரீன்கப்பல் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டு நஷ்ட ஈடு வசூலிக்கபடும். அந்தக் கப்பலில் பணியாற்றியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அடுத்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. இது எளிதில் முடியாது. கப்பல் நிறுவனம் இனி இந்த வழக்கை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்
தொலைக்காட்சியை அணைத்துவிட்டுச் செய்தியில் காட்டப்பட்ட நண்டு தனது வளைக்குள் ஒடி ஒளிந்து கொள்வது போல அவர் தனது அறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டார்.
அந்த ஆறு நாட்களில் அவருக்கு அதிக வயதாகிவிட்டது போல ஏனோ தோன்றியது
••
.
April 8, 2021
கௌரிசங்கரின் கனவு
நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஏப்ரலில் துவங்குகிறது. இதற்காகச் சென்றவாரம் கோவில்பட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். சொந்தவேலையின் காரணமாக அதில் கலந்து கொள்ள இயலவில்லை

ஆனால் 25ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்து கொண்டு பேசினேன்.
எழுத்தாளர் கௌரிசங்கருக்கு சினிமாவின் மீது ஈடுபாடு அதிகம். சுந்தர ராமசாமியின் ஜே,ஜே.சில குறிப்புகளை சினிமாவாக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து சுற்றியலைந்தார். ஆனால் அவரால் படமாக்க இயலவில்லை. ஆனால் சினிமா உலகின் நிஜத்தை நன்றாக அறிந்து கொண்டிருந்தார். சென்னையில் சுற்றிய நாட்களில் அறிமுகமான திரைப்பட இயக்கம், மாற்றுசினிமா என அவர் மனது உலகச் சினிமாவின் தீவிர ஈடுபாடு கொள்ள வைத்திருந்தது

கேவில்பட்டியில் வசித்து வந்த கௌரிசங்கர் சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர். இவரது மழை வரும்வரை கவிதைத்தொகுப்பும். முந்நூறு யானைகள் சிறுகதைத் தொகுப்பும் மிக முக்கியமானது. கோவில்பட்டியில் தாசில்தாராகப் பணியாற்றியவர். மிகச்சிறந்த இலக்கிய வாசகர்.
கோவில்பட்டியிலிருந்து உருவான எழுத்தாளர்களுக்குக் கௌரி சங்கரின் வழிகாட்டுதல் முக்கியமானது. நானும் கோணங்கியும் அவரை நிறைய முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். தேவதச்சன் வீட்டின் அருகில் குடியிருந்தார் என்பதால் தேவதச்சனைக் காணச்செல்லும் போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். உரையாடுவேன்.
அவருக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஒரு நாள் தான் நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் குறித்த ஒரு டாகுமெண்டரி படத்தை எடுக்க இருப்பதாகச் சொன்னார். எப்படி எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டவுடன் தனது கனவினை விவரிக்க ஆரம்பித்தார்.

காருகுறிச்சியோடு தொடர்புடைய கலைஞர்கள். அவரது குடும்பம், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வீடு. நட்பு. விளாத்திகுளம் சாமிகள். குறுமலை லட்சுமி, பற்றிய விஷயங்கள். காருகுறிச்சி மேற்கொண்ட இலங்கைப் பயணம். அவரது ரேடியோ கச்சேரிகள் திரைப்படப் பங்களிப்பு. அவருடன் நெருக்கமாகப் பழகிய ஜெமினி கணேசன். சிவாஜி கணேசனின் நேர்காணல். ஏபி நாகராஜனின் நட்பு. அவரது வாரிசுகளாகக் கருதப்படும் இசைக்கலைஞர்களின் நேர்காணல்கள் என்று சொல்லிக் கொண்டே போனார்.
இதற்குப் பெரிய பொருட்செலவு தேவைப்படுமே என்று கேட்டவுடன் அதைப் பற்றி இனிமே தான் யோசிக்கணும். யாரும் இதுக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்று விரக்தியாகச் சொன்னார். அது உண்மை, கோவில்பட்டியில் உட்கார்ந்து கொண்டு இவ்வளவு பெரிய டாகுமெண்டரியை எப்படி உருவாக்கப்போகிறார் என்று யோசித்தேன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் எனக்குப் போன் செய்து பேசினார். டாகுமெண்டரி படங்களுக்குத் திரைக்கதை எழுத வேண்டுமா என்று விசாரித்தார். பின்பு NFDC இதற்கு நிதி உதவி அளிக்குமா என்று கேட்டார். நான் அறிந்தவரை அவர்கள் டாகுமெண்டரி தயாரிக்க நிதி உதவி அளிப்பதில்லை என்றேன்.

அவராக உள்ளூர் வீடியோகிராபர் ஒருவர் துணையோடு காருகுறிச்சியாரோடு தொடர்பான இடங்கள். கலைஞர்கள், குடும்பத்தவர் எனப் பலரையும் படம்பிடித்தார். காருகுறிச்சியின் பழைய புகைப்படங்கள். செய்தித் தாளில் வெளியான தகவல்கள் என யாவையும் சேகரித்து வைத்திருந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாளிரவு கோவில்பட்டியிலிருந்த ஒரு வீடியோ எடிட்டிங் ரூமிற்கு அழைத்துக் கொண்டு போனார். சின்னஞ்சிறிய அறை. கல்யாண வீடியோ ஒன்றை ஒரு இளைஞர் எடிட் செய்து கொண்டிருந்தார். அந்த வேலையை நிறுத்திவிட்டு காருகுறிச்சியார் டாகுமெண்டரியை எடுக்கச் சொன்னார். காருகுறிச்சி பற்றி அவர்கள் எடுத்திருந்த காட்சிகளை ஓடவிட்டுக் காட்டினார். இன்னமும் முழுமையாக எடிட் பண்ணவில்லை. இன்னும் நிறையப் படப்பிடிப்பு இருக்கிறது என்றார். அவரது கைப்பணத்தில் தான் அதை உருவாக்கியிருக்கிறார் என்பது தெரிந்தது
அதன்பிறகு அவரைச் சந்தித்த போது காருகுறிச்சியார் டாகுமெண்டரி அப்படியே நிற்பதைப் பற்றிச் சொல்லுவார். சில சமயம் இதற்கு சினிமா நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதற்காகச் சென்னைக்குக் கிளம்பிப் போய்வந்தார். அவர் நினைத்தது போல டாகுமெண்டரியை எடுக்கப் பொருளாதார உதவி கிடைக்கவில்லை.
ஆகவே எடுத்த வரை எடிட் செய்து அதைத் திரையிடும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்

கவிஞர் தேவதச்சனின் அப்பா கோவில்பட்டியில் மிகப்பெரிய நகை வணிகர். சேது முதலாளி என்று தான் அவரை அழைப்பார்கள். சிறந்த பண்பாளர். அவருக்குக் காருகுறிச்சியாருடன் நல்ல நட்பு இருந்த்து. ஆகவே அவரை அழைத்துத் தனது டாகுமெண்டரிப் படத்தை வெளியிடச் செய்தார். வ.உ.சி.பூங்காவை ஒட்டிய ஒரு கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைக்குக் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கௌரிசங்கர் விழாவில் தேவதச்சனின் அப்பா காருகுறிச்சியார் பற்றி மிக நன்றாகப் பேசினார். கோவில்பட்டியில் வசித்த காருகுறிச்சியார் பற்றிய நினைவுகள் பலரது மனதிலும் பசுமையாகத் தங்கியுள்ளது. எனது தாத்தா காருகுறிச்சியாரை நெருக்கமாக அறிந்தவர். காருகுறிச்சியார் புது வீடு கட்டித் திறப்பு விழா செய்த போது அதில் என் தாத்தா குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார். ஆச்சி அந்த நினைவுகளைப் பலமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த இரவில் கௌரிசங்கர் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தார்.
“காருகுறிச்சி எப்பேர்பட்ட கலைஞன். அவனுக்கு நம்மாலே முடிஞ்ச சின்னக் காணிக்கை“ என்று சொன்னார். உண்மையில் அவர் நினைத்தது போலப் படத்தை எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடமிருந்தது.
அந்தப் படத்தை டிசம்பர் ம்யூசிக் சீசன் போது சென்னையில் திரையிட வேண்டும் என்று முனைந்தார். இதற்காக இரண்டு முறை சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தார்
நாங்கள் ம்யூசிக் அகாதமிக்குச் சென்று விசாரித்தோம். ஒருவரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்புச் செய்ய இயலுமா என விசாரித்து அலைந்தார். ஒளிபரப்பு அளவிற்கான தரமில்லை என மறுத்துவிட்டார்கள் என்றார்.
இரண்டு ஆண்டுகள் அந்த வீடியோவை கையில் வைத்துக் கொண்டு பலரையும் சந்தித்து வந்தார். பத்திரிக்கையில் செய்தி வெளியாக உதவும் படி கேட்டுக் கொண்டார். எதுவும் நடக்கவில்லை.
பின்பு அந்தப் படத்தை ஒரு இலக்கிய முகாமில் திரையிடும்படி ஏற்பாடு செய்து அவரிடம் கேட்டேன். அவர் கடைசி வரை அதன்பிரதியை அனுப்பி வைக்கவில்லை.
அதன் பிறகு அவர் தனது டாகுமெண்டரி பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டார். பல சந்தர்ப்பங்களில் வேறு வேறுவிஷயங்கள் பேசிய போதும் அவர் தனது ஆவணப்படத்தைப் பற்றி எதுவும் பேசமாட்டார். அதை என்ன செய்தார் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அவரது குடும்பத்தினரிடம் அதன் பிரதி ஏதாவது இருக்கக் கூடும்.
கௌரி சங்கர் ரஷ்ய இலக்கியங்களின் காதலர். அதிலும் குறிப்பாக இவான் துர்கனேவின் தீவிர வாசகர். மூன்று காதல்கதைகளைப் பற்றி அவர் பேசும் போது அவரது கண்களில் ஒளி மின்னும். துர்கனேவை அப்படி யாரும் பேசமுடியாது. அவ்வளவு ஆழ்ந்து படித்திருந்தார். இந்திய நாவல்கள். சர்வதேச நாவல்கள் எனத் தீவிரமாகப் படித்தவர். அதிலும் படித்த விஷயங்களை ஆராய்ந்து சொல்வதில் தேர்ந்தவர். எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமியோடு நல்ல நட்பு கொண்டிருந்தார்.
கோவில்பட்டியிலிருந்து யார் புதிதாக எழுதத் துவங்கினாலும் கௌரி சங்கரிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்பது வழக்கம். தயவு தாட்சண்யமின்றி விமர்சனம் செய்வார். அதே நேரம் நல்ல கவிதை, நல்ல கதையாக இருந்தால் குளிரக் குளிரப் பாராட்டுவார். சிற்றிதழ்கள் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பி வைக்கும்படி சொல்வார். கோவில்பட்டியின் துர்கனேவ் என்று அவரைக் கேலி செய்வேன். அதை அவர் ரசித்தார்.
கோவில்பட்டியில் காருகுறிச்சியாருக்கு ஒரு சிலையிருக்கிறது. அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும். காருகுறிச்சியார் நூற்றாண்டினை அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுப்பியிருக்கிறார்கள். அவசியம் செய்ய வேண்டிய காரியமது

எனது சஞ்சாரம் நாவலுக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது காருகுறிச்சியாரின் குடும்பத்தினர் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருநெல்வேலியில் பெரிய பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் காருகுறிச்சியாரின் மனைவி எனக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி கொடுத்தார். அதை மிகப் பெரிய பேறு அன்று நாதஸ்வரக் கலைஞர்கள் என்னைக் கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இது தான் எழுத்தில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்.
ஒரு வேளை கௌரி சங்கர் நம்மோடு இருந்திருந்தால் காருகுறிச்சியார் நூற்றாண்டு விழாவை பெரியதாக நடத்த முன் நின்றிருப்பார்.
இசைமேதை காருகுறிச்சி அருணாசலம் பற்றிய அவரது டாகுமெண்டரி முழுமையாக எடுக்கப்படவில்லை. பாதியில் முடிந்த கனவது. ஆனால் கனவுகள் தான் ஒருவனை உயிர்த்துடிப்புடன் செயல்பட வைக்கிறது. கௌரிசங்கர் அப்படிக் கனவுகளின் ஊடாகவே வாழ்ந்து மறைத்துவிட்டார்.
கோவில்பட்டியின் அழியா நினைவில் காருகுறிச்சியாரோடு கௌரிசங்கரும் கலந்தேயிருக்கிறார்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
