புகைப்படம் சொல்லாதது

கன்னட எழுத்தாளர் எஸ். திவாகர் புகைப்படம் என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். மிகச்சிறிய கதை. ஒரு பழைய காலப் புகைப்படத்தைப் பற்றியது.

பாணன் என்ற நண்பர் இந்தக் கதையினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியிருந்தார். இந்தக் கதையில் இரண்டு விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன. கல்யாணப் பெண்ணிற்கு நிகராக அவளது கணவன் அணிந்துள்ள நகைகள் மற்றும் சட்டை அணியாத அவரது தோற்றம்

மாப்பிள்ளை முகபாவத்தில் கல்யாணம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போன்ற உணர்ச்சி வெளிப்படுகிறது. எதையோ மறைக்கும் கண்கள். பெரிய உதடுகள். சிரிப்பை மறைத்துக் கொண்டது போல முகத்தோற்றம். நீளமான கைவிரல்கள். கையில் மோதிரம் கிடையாது.

அப்புறம் புகைப்படம் எடுத்த தமிழரான வேலப்பன். யார் அவர். என்ன கேமிராவைப் பயன்படுத்தினார். எவ்வளவு கட்டணம். என எதுவும் தெரியவில்லை. ஆனால் கல்யாண புகைப்படங்கள் எடுப்பதில் தேர்ச்சி பெற்றவர் என்பது தெரிகிறது.

திருமணப் புகைப்படங்களில் வெளிப்படும் சிரிப்பு இயல்பானதில்லை. அது ஒரு நடிப்பு.

இந்தக் கதையின் துவக்கத்தில் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களை யாரோ என்று நினைக்கிறோம். ஆனால் அது கதைசொல்லியின் தாத்தா பாட்டி என்றவுடன் புகைப்படம் உருமாறிவிடுகிறது. அத்துடன் புகைப்படத்திற்கு வெளியே அம்மா சொல்லும் கதை புகைப்படத்தின் இயல்பை மாற்றிவிடுகிறது. புகைப்படத்தில் உறைந்த காலம் எப்போதும் உறைந்திருப்பதில்லை. அது வெளியுலகின் நோக்கிற்கு ஏற்ப சலனமடைகிறது.

இந்தக் கதையில் வருவது போலவே ஒரு நிகழ்வை என் வாழ்வில் கண்டிருக்கிறேன். எங்கள் கிராமத்திற்குப் புதிதாகத் திருமணமாகி வந்த இளம்பெண் கணவன் வீட்டில் யாருடனும் பேசப்பயந்து போயிருந்தாள். வெளியாட்கள் வந்துவிட்டால் ஒடி ஒளிந்து கொள்வாள். கணவனுடன் வெளியே போகும்போது குனிந்த தலை நிமிர மாட்டாள். வீட்டில் யாராவது சப்தமாக ஏதாவது சொன்னால் அழுதுவிடுவாள். புதுப்பெண் தானே என்று நினைத்து அவர்கள் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் வீட்டில் கோழி அடித்துக் குழம்பு வைக்க நாட்டுக்கோழியை வாங்கி வந்திருந்தார்கள். மாமனார் வெளியே போயிருந்த காரணத்தால் கோழியை யார் அடித்துத் தருவது என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள். என்னிடம் கொடுங்கள் என்று வாங்கிய அந்தப் பெண் தன் இடது கை மணிக்கட்டினை இறுக்கி வைத்துக் கொண்டு கோழியின் தலையினை அதில் அடித்து ஒரு நிமிஷத்தில் கொன்று பரபரவென அதன் ரோமங்களை ஆய்ந்து கோழிக்கறியை துண்டுகளாக்கி கொடுத்துவிட்டாள்.

அந்தக் காட்சி வீட்டினை உறைந்து போகச் செய்துவிட்டது.

எங்க வீட்டில் நான் தான் எப்பவும் கோழி அடிப்பேன். ஒரு அடிக்கு மேலே கோழி உசிரோட இருந்ததில்லை என்று மெதுவான குரலில் சொன்னாள். அதன் பிறகு வீடே அவளைக் கண்டு பயப்பட ஆரம்பித்தது. அவளோ எப்போதும் போல இயல்பாக நடந்து கொண்டாள்.

இதே உணர்வு தான் புகைப்படத்திலுள்ள பாட்டியிடமும் வெளிப்படுகிறது

••

புகைப்படம்

திவாகர்

தமிழில் : பாணன்.

தயவுசெய்து இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். இங்கு அமர்ந்திருப்பவர்கள் புதுமணத் தம்பதிகள். அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களிலிருந்து, இருவரில் ஒருவர் மிகவும் பணக்காரர் என்று நான் நினைக்கிறேன். முதலில், இளம் மணமகள் மீது உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெண்கள் மிகவும் இளவயதிலே திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

எனது யூகம் என்னவென்றால், புகைப்படத்தில் உள்ள பெண்ணுக்கு அநேகமாகப் பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். அவளது புடவையின் மறைப்பிலுள்ள இளம் மார்பகங்களின் வெளிப்புறம் என் யூகத்தை உறுதிப்படுத்துகிறது. வட்ட முகம். அடர்த்தியான புருவங்களுக்கு அடியில் சற்று வீங்கிய கண்கள். அவளது மூக்கின் நுனியிலிருந்து தொங்கும் புல்லாக்கு கிட்டத்தட்ட அவளது கீழ் உதட்டைத் தொடுகிறது, எனவே அந்த உதடுகள் புன்னகைக்கிறதா அல்லது வருத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இவள் கன்னங்கள் உப்பியிருக்கின்றன என்பதற்குத் தாடையில் கவிந்திருக்கும் நிழலே சாட்சி. விதவிதமான ஆபரணங்கள் அவளுடைய தலைமுடியையும் அவள் நெற்றியையும் பிரிப்பதை மறைக்கின்றன; காதணிகள் அவள் காதுகளை மறைத்திருக்கிறது.

நகைகளைப் பற்றிப் பேசுகையில், அவள் எத்தனை சரங்களைக் கழுத்தில் அணிந்திருக்கிறாள் என்று யூகிக்கிறீர்களா? நான் அவற்றைப் பல முறை எண்ண முயன்றேன், இப்படித்தான் நான் கருதுகிறேன்: அவளது கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் நெக்லஸ் குறைந்தது மூன்று விரல்கள் அகலமாக இருக்க வேண்டும், அதற்குக் கீழே புஜத்தளவு வரும் நான்கு சங்கிலிகள். அங்கிருந்து மார்பின் கீழ்வரை இறங்கியிருக்கும் ஏழு சங்கிலிகள். இந்தத் தங்கச் சங்கிலிகளில் முத்து, பவளம், விலை மதிப்புமிக்க மணிகள் உள்ளனவென்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. போதாததற்கு வங்கி, இடையில் ஒட்டியாணம், கைகளில் வளையல்கள், கங்கண வளையல்கள். அந்த வளையல்களிலிருந்து நீளும் இணைப்புச் சங்கிலிகளின் இரண்டு முனைகள், ஆட்காட்டி விரலிலும் சுண்டு விரலிலும் இருக்கும் மோதிரங்களைப் பிடித்துள்ளன. மேலும் இவள் கால்களைப் பாருங்கள். அவற்றில் கைப்பருமனில் சலங்கைத் தண்டைகள். நான்கு விரல்களில் நான்கு மோதிரங்கள். பெருவிரலிலிருக்கும் அவ்வளவு தடிமனான மோதிரத்தைப் பார்த்து என்னைப்போலவே நீங்களும் ஆச்சரியப்படலாம். மொத்தத்தில் தொடைகளின் மேல் கைவைத்துக்கொண்டு, கால்களை முடிந்தளவு பக்கத்தில் கொண்டுவந்து யாருடைய வற்புறுத்தலுக்காகவோ அமர்ந்திருப்பது போலக் கணவனின் உடம்போடு தன் உடம்பு பட்டும் படாமலும் உட்கார்ந்திருக்கும் இந்த பெண்ணை பாருங்கள். சரி, இந்தப் புகைப்படத்தை விவரித்தது போதும்.

புகைப்படத்திலுள்ள ஆணும் பெண்ணும் என் தாத்தா பாட்டி ஆவார், இந்தப் புகைப்படம் புவனகிரியில் உள்ள எனது மூதாதையர் வீட்டில் தொங்குகிறது. புகைப்படம் எடுத்தவர் வேலப்பன், 1923 ஆம் ஆண்டுப் பெங்களூரிலிருந்து புவனகிரிக்கு வந்த ஒரு தமிழர். எனது தாத்தா லக்ஷ்மிநாரணய்யா. எனது பாட்டி கமலம்மா, கங்காவதியின் இனாம்தார் ஷாமண்ணாவின் மகள். ஷாமண்ணா ஒரு வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர், அவருக்கு நிறைய நிலங்களும் சொத்துக்களும் இருந்தன. புவனகிரியைச் சேர்ந்த இந்த ஏழை லட்சுமிநாராணய்யாவை தனது ஒரே மகளைத் திருமணம் செய்து வைக்க அவருக்கு ஏதோ காரணங்கள் இருந்திருக்கலாம். சரி, இப்போது அந்தக் கதையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

கமலம்மா ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்ன செய்வது? அவளுக்குத் திருமணமானதும், அவளுடைய கணவன், அவளுக்கு தெய்வம். லக்ஷ்மிநாரணய்யா ரொம்பவும் திமிர்பிடித்தவர், முன்கோபி. புகைப்படத்தில் உள்ள தம்பதியினருக்குப் பின்னால், உள்ள ஜன்னலைப் பார்க்கிறீர்களா? கமலம்மாளின் திருமணத்தைப் பற்றிச் சொல்ல அந்த இரும்புக் கம்பிகளுக்கு ஒரு கதை இருக்கலாம்.

என் அம்மா சொல்வதிலிருந்து பார்த்தால், (அப்போது என் அம்மாவுக்கு ஏழோ எட்டோ வயசு ), அவளுடைய தந்தை லக்ஷ்மிநாரணய்யாவிற்குச் சூலிபெலெபேட்டில் ஒரு வைப்பாட்டி இருந்தாள். வீட்டுப் பணிப்பெண்கள் கூட அதைப் பற்றி ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். இதனால் கமலம்மா வருத்தமடைந்தாள். பலமாக அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்யும் தைரியம் இல்லாத அவள் பட்டினிகிடந்தாள். தூக்கம் கெட்டாள்.

ஒரு நாள் லக்ஷ்மிநாரணய்யா கொல்லைப்புறத்தில் தனது காலை பூஜைக்குப் பூக்களைச் பறித்துக் கொண்டிருந்தார். கமலம்மா கோடாலியைத் தூக்கிக்கொண்டு மூலையில் விறகுக்காக ஆள் உயரத்துக்கு அடுக்கியிருந்த மரக் கட்டைகளை பிளக்கத் துவங்கினாள்.

தன் வாழ்க்கையில் ஒரு போதும் கோடாரியைத் தொட்டிராத அவள் மிகுந்த வீராவேஷத்தோடு இடுப்பில் புடவையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு வேகமாக மரக்கட்டையை பிளந்து கொண்டிருந்தாள். ஒரு முழு வளர்ந்த மனிதனைப் போலிருந்த மரக்கட்டையது.

புகைப்படத்தில் சுருங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இவள், அன்று தன் புடவையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு, கட்டைகளைப் பிளந்துகொண்டிருந்தபோது, எப்படி இருந்திருப்பார் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

லக்ஷ்மிநாரணய்யா திகைத்துப் போய் நின்றார், அவள் கோடாலியை உயர்த்தி வீசும் ஒவ்வொரு முறையும் அவரது இதயம் நடுங்கியது அவருக்குப் பேச்சு வரவில்லை. அவ்வளவுதான், அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை என்பதுபோல முன்னைப்போலவே சிரித்துக்கொண்டு இருந்து விட்டாள்

பின்பு லக்ஷ்மிநாரணய்யா ஒருபோதும், மீண்டும் சூலிபெலெபேட்டிற்குச் போகவேயிலை, கமலம்மா அதன்பிறகு அந்தக் கோடரியை எடுக்கவுமில்லை

இந்தக் கதையை என் அம்மாவிடம் கேட்ட பிறகு, நான் மீண்டும் புகைப்படத்தைப் பார்த்தேன். என் பாட்டியின் கண்கள் இப்போது வேறு விதமாக ஏதோ சொல்கின்றன. அது என்ன, நான் ஆச்சரியப்பட்டேன்: அது என்ன? என் உடம்பிலிருக்கும் ஜோரான நகைகளைப் பார் என்றா? பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் பெரிய கல்லூளிமங்கன் என்றா? நீ நினைக்கிறபடி நான் ஒன்றும் அப்பாவியல்ல என்றா?

ஒரு புகைப்படத்தை வாசிப்பது ஒரு கவிதை அல்லது கதையைப் படிப்பது போன்ற ஒரு கலை. இந்தப் புகைப்படத்தை மிக நெருக்கமாக வாசிக்க முயன்றேன். நீங்களும் இதை உன்னிப்பாகப் படிக்க விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வாசிப்பு என்னிடமிருந்து வேறுபட்டிருந்தால் மற்றும் புகைப்படம் உங்களுக்கு வேறு எதையாவது வெளிப்படுத்தினால், தயவுசெய்து அதைப் பற்றி என்னிடம் சொல்ல மறக்காதீர்கள்.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2021 02:36
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.