S. Ramakrishnan's Blog, page 129
May 17, 2021
அஞ்சலி
தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார்.

இறுதி நிகழ்விற்குப் போக முடியவில்லையே எனக் கண்ணீர் பெருகுகிறது
கரிசல் மண்ணிலிருந்து உருவான படைப்பாளிகள் அனைவருக்கும் அவரே பேராசான். ஞானத்தந்தை.
நிகரற்ற எழுத்தாளராக மட்டுமின்றி விவசாயிகளின் பிரச்சனைக்காகக் களத்தில் இறங்கிப் போராடி சிறை சென்ற போராளியாகவும் இருந்தவர் .
கரிசல் நிலத்தின் தொல் நினைவுகள், வரலாறு யாவும் அவர் மூலம் எழுத்து வடிவம் பெற்றன. நாட்டுப்புறக்கதைகளையும் பாடல்களையும் தேடிச் சேகரித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்திய ஆய்வாளர். கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய தமிழ் அறிஞர். தேர்ந்த இசை ரசிகர். கிராவைப் போல இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் இன்னொருவரைக் கண்டதில்லை.
பள்ளிப் படிப்பைத் துறந்த அவர் புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றச் சென்ற போது நானும் கோணங்கியும் பாண்டிச்சேரிக்குத் தேடிப்போனோம். இதையும் செய்து பார்ப்போம் என்று உற்சாகமாகப் பேசினார். பாரதியை அரவணைத்துக் கொண்டது போலவே புதுவை மண் கிராவையும் அரவணைத்து அன்பு காட்டியது. புதுவை அரசு கிராவின் மீது காட்டிய அக்கறைக்கும் உதவிகளுக்கும் தீராத நன்றிகள்.
பெருவாழ்வு வாழ்ந்த அந்த மகத்தான படைப்பாளி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஞானத்தந்தையாக அவரை ஏற்றுக் கொண்டாடிய புதுவை இளவேனிலுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கி.ராஜநாராயணன் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களை மனம் நிறையப் பாராட்டுகிறேன்.
தமிழ் உள்ளவரை கிரா எனும் மகத்தான கலைஞனும் இருப்பார். நிகரற்ற அவரது படைப்புகள் என்றும் வாழும்.
இசையே எனது புன்னகை
இந்தியாவின் மகத்தான இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான் தனது சொந்த ஊரான காசி பற்றியும் தனது இசை வாழ்க்கையின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்ட கட்டுரை. அட்சரம் இதழில் வெளியானது.
••

பனாரஸில் மழைக்காலம் துவங்கியிருக்கிறது. கங்கை நதிக் கரையோரங்களில் அதிகாலை நேரம் ரம்மியமானது. படித்துறைகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. குவாலியர் ராஜா இந்தூர் அரசர் எனப் பல்வேறு ராஜாக்களும் கட்டிய படித்துறைகளில் வேகமான கங்கையின் அலைகள் மோதுகின்றன. கங்கையைப் பார்த்துக் கொண்டிருப்பதே இசை கேட்பது போலவேயிருக்கிறது. இந்தப் படிக்கட்டுகளில் தான் முப்பது வருடங்களக்கு மேலாகச் சாதகம் செய்திருக்கிறேன். எனது மாமா, தாத்தா பலரும் இங்குள்ள கோவில்களின் பூஜைகளில் எத்தனையோ முறை இசையை வாசித்திருக்கிறேன்.
எனது வீட்டின் உயரத்திலிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருப்பது மனதிற்கு விருப்பமானதாகயிருக்கிறது. இந்த உலகம் இசையால் நிரம்பிக் கொண்டிருக்கிறது.
இசைக்கு மதம், சாதி பேதமில்லை. குரு சிஷ்யர்கள் என்பது கூட முக்கியமுமில்லை. இப்போதுள்ள குருக்கள் பணம் சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். பணம் வாங்குவது தவறில்லை. ஆனால் அதற்கான பொறுப்பினை விட்டு விடுகிறார்கள். என் சீடர்களிடமிருந்து நானும் பணம் வாங்குகிறேன். ஆனால் அவர்கள் எனது வீட்டு உறுப்பினர்களாகி விடு வார்கள். என்னோடு சேர்ந்து தங்கி, சாப்பிட்டு வாழ்கிறார்கள். ஜெகதீஷ் என்ற சீடன் என் வீட்டில் 11 வருடமாக வாழ்ந்து வருகிறான். ஒருமுறை ஒரு இந்து எப்படி உங்கள் வீட்டில், உங்களோடு சேர்ந்து வாழ்வது எனக் கேட்டார்கள். என்னிடம் இசைகற்றுக் கொள்பவர்களுக்குள் எவ்விதமான பேதமில்லை, இந்து, முஸ்லீம் எனப் பிரிவு கிடையாது. அவர்கள் இசையைக் கற்க வந்தவர்கள் அவ்வளவே.
முன்பு பல் உஸ்தாத்கள் பண்டிட்கள் குறிப்பிட்ட சில ராகங்களைத் தனது சொந்த மகன்களுக்கு மட்டுமே கற்றுத்தருவார்கள். சீடர்களுக்குக் கற்றுத்தர மாட்டார்கள். அது தவறான செயல். கற்றுக் கொடுப்பதன் வழியேதான் நாம் வளரமுடியும். பார்க்க இயலாத இசைக் கலையினைத் தனது சங்கீதத்தைத் தன்னோடு மரணத்தில் கொண்டு செல்லமுடியுமா என்ன?
பாகிஸ்தான் பிரிந்து செல்லும்போது நான் ஏன் அங்கே போகவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். அது அவரவர் விருப்பம் சார்ந்த செயல். எனக்கு ஒரு போதும் அந்த எண்ணம் தோன்றவேயில்லை. இந்தியா, பாகிஸ்தான் எங்கிருந்த போதும் அல்லாவின் கருணைதான் முக்கியம். அது எங்களுக்குக் கிடைப்பதாக இருந்தால், நீங்கள் எங்கிருந்தாலும் வந்து சேரும். எனக்குக் கிடைத்த பாரத ரத்னா, பத்மபூஷன், பத்மவிபூஷன் அத்தனை விருதும் அல்லாவின் கருணையால் கிடைத்தது தானே.
‘காகவி’ என்றொரு வாத்திய கருவி உண்டு, கன்னக்கோல் வைக்கப்போகும் திருடர்கள் இரவில் இதை வாசிப்பார்களாம். இதைக் கேட்டதும் எவரும் ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் வசமாகிவிடுவார்களாம். தண்டி மகாகவி தசகுமாரகரிதம் சொல்கிறது. இசை மயக்கம் தான் இல்லையா.
இந்த ஷெனாய் 13ம் நூற்றாண்டில் அறிமுகமானது என்கிறார்கள். அத்தியா, மேற்கு ஆசியாவிலிருந்து வந்த பெயர். அர்னா எனச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் பறவை வடிவில் செய்யப்பட்ட ஊதல்கள் இருந்தன. அதற்குக் குருவி ஊதல்கள் என்று பெயராம்.

ஒருமுறை கல்கத்தாவில் ஒரு இசைக்கச்சேரி முடித்துவிட்டு இரவு 2 மணிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன். பின்னிரவின் ஆழ்ந்த உறக்கம். ஒரு பகுதியை கடந்தபோது இரண்டு பிச்சைக்காரப் பெண்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு ஆழமான குரல், கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. இரு பெண்களும் உற்சாகமாகப் பாடிக் கொண்டேயிருக்கிறார்கள் எனக்கு உறக்கம் கலைந்துவிட்டது. ஆண்டவர் தான் பாடுகிறாரோ எனத் தோன்றியது, சில வருஷங்களுக்கு அதே இடத்தை இரவில் கடந்தபோது அங்கே யாருமேயில்லை, ஆனால் எனக்கு அந்தச் சங்கீதம் நினைவில் கேட்க துவங்கியது.
ஷெனாய் நல்ல மூச்சுப் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே வாசிச்சகூடியது. மற்ற வாத்தியக்காரர்களை விடவும் பலமான நுரையீரல், உடல்வாகு இதற்கு வேண்டும். இன்னும் நான் இதற்கான பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். அன்றாடம் சாதகம் செய்வது மட்டுமே இதைச் சாத்தியப்படுத்த உள்ள ஒரேவழி.
இசை கடவுளைப் போல அதை நம்புகிறவர்களுக்குச் சாத்தியப்படுகிறது. எனது இதயம் என்னிடம் கற்றுக்கொள்ள வருபவனுக்கு எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் தந்துவிட வே ஆசைப்படுகிறது. நீங்கள் கொடுக்க, கொடுக்க விருத்தியடைக் கூடியது இசை.
எனது தாத்தா குவாலியர் அரசரின் சபையில் இருந்த இசைக்கலைஞர். பரம்பரையாக அரசதர்பாரில் வாசிக்கின்ற குடும்பம் எங்களுடையது. எனது தாத்தா ஷெனாய் வாசிக்கின்றவர். தினமும் கோலில் பூஜையில் இருபது நிமிஷம் அவர் வாசிக்கவேண்டும், பிறகு பல மணி நேரம் சாதகம் செய்வார். எப்போதாவது கச்சேரிகள் நடக்கும். அரச சபையே வீட்டிற்குத் தேவையான உதவிகளும், மாத சம்பளமும் தந்துவிடும். சிறந்த இசைக் கலைஞர்களுக்கான விருதும் உண்டு.
எனது மாமா நல்ல வாத்தியக்காரர். அவரிடம் தான் நான் இசை கற்றுக் கொண்டேன். அவருக்குத் தனது சொந்த பிள்ளைகளைவிடவும் என் மீது விருப்பம் அதிகம். இசையை அவரிடமே கற்றுக் கொண்டேன்.
ஒரு முறை மாமாவுடன் கல்கத்தாவில் நடக்கப்போகின்ற கச்சேரிக்காக ரயிலில் பயணம் செய்தேன். எங்கள் அருகில் உஸ்தாத் அப்துல் கரீம் கான் அமர்ந்திருந்தார். நான் மாமாவிடம் ரகசியமாக உஸ்தாத் இன்று கச்சேரியில் என்ன ராகம் வாசிக்கப் போகிறார் எனக் கேட்கலாமா எனக் கேட்டேன், மாமா வேண்டாம் என்றுவிட்டு, அது தனக்குத் தெரியும் என்றார். என்ன ராகம் எனக் கேட்டதற்கு ரகசியமாகச் சொன்னார். தோடி ராகம். மாமாவிற்கு எப்படித் தெரிந்தது எனக்கேட்டதற்கு, “உஸ்தாத் கரீம்கானின் கண்களில் தோடி ராகம் மின்னிக் கொண்டிருக்கிறது” என்றார் மாமா.
எவ்வளவு விந்தை பாருங்கள். தனது சக கலைஞன் என்ன ராகம் தேர்வு செய்வார் என்பதைப் பார்வையாலே ஒரு இசை கலைஞன் கண்டுபிடித்துவிடுவது. இதைவிடவும் எவ்வளவு இசை நுண்மை கொண்டு இருந்தவர் உஸ்தாத் அப்துல் கரீம்கான். அவர் இதயத்தில் உள்ள இசை, அவர் கண்களில் ஒளிர்கிறது. யாவர்க்கும் எளிதில் வசப்படாத அதிசயம் இதுதான் எனப்படுகிறது.
இசையொரு காணமுடியாத உணர்ச்சி. ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். சம்பு மகாராஜின் உணவினர் புர்ஜ் மகாராஜ் நடனமாடினார். நடனவேகத்தில் ஒரு பாவம் வெளிப்பட்டபோது என்னை அறியாமல் கண்ணீர் வந்து அழுதுவிட்டேன். இதுபோன்ற அரிய கலைஞர்களாக உஸ்தாத் பயால் கான், உஸ்தாத் அமீர்கான், குலாம் அலிகான் என எத்தனையோ இசைக்கலைஞர்கள் என்னைப் பாதித்திருக்கிறார்கள்.

நான் ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ளவன். தினமும் தொழுகை செய்கிறேன். அல்லாவின் ஆசியும் கருணையும் என்னை இசைக்கலைஞராக வைத்திருக்கிறது என நம்புகிறேன். ஆனாலும் இசையே எனது மர்மாக இருக்கிறது. எனது கடவுளோடு நான் இசையாலேதான் பேசுகிறேன். எனது உண்மையான மதம் இசை. கடவுளின் கணக்குப் புத்தகத்தில் நமது செயல்கள் யாவிற்கும் உரிய பதிவு இருக்கிறது.
இந்தக் காசி எனக்குப் பிடித்தமான ஊர். இங்குள்ள கோவில்களில் வாசிப்பது மனதை வருடக்கூடியது. எனது இசையைப் பகிர்ந்து கொள்ள மதபேதம் தேவையேயில்லை. சிறுவயதில் புட்பால், மல்யுத்தத்தில் விருப்பம் இருந்தது, ஆனால் இசையை அறியத்துவங்கிய பிறகு எனக்கு உலகின் எல்லாச் சப்தமும் இசையால் பொங்குவதாக உணர்வதால் வேறு விஷயங்களில் நாட்டமில்லை.
ஜுகல் பந்தி போன்ற இசைக்கூடலை நானும் விரும்புகிறேன். விலாயத் கான், ரவிசங்கர் இவர்களோடு சேர்ந்து வாசிப்பதற்கு அதிக விருப்பம் இருக்கிறது. இதுபோன்ற கச்சேரிகளுக்கு நான் எப்போதும் வாங்கும் பணத்தில் பாதியே வாங்குகிறேன். ஆனால் ரவிசங்கர், விலாயத் கான் இதில் கில்லாடிகள்.
எனது ஷெனாய் இசையை மக்கள் கேட்கும்போது அவர்களை என்னோடு இன்னொரு உலகத்திற்கு அழைத்துப்போகிறேன். கொண்டாட்டம், சந்தோஷம் இவையே அங்குள்ளன. அவர்கள் சந்தோஷத்தில் மனம் துள்ளுகிறார்கள். இது மிகுதியாகும்போது மனம் விட்டு அழுகிறார்கள்.
கைகளின் இயக்கம்
1984ம் ஆண்டுக் கான்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் ராபர்ட் ப்ரெஸனை நேரில் சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்க விரும்பிய நான்கு இளைஞர்கள் பகலிரவாக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொலைப்பேசி செய்தபடியே இருந்தார்கள். ராபர்ட் ப்ரெஸன் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க விரும்பாதவர். நேர்காணல்களில் விருப்பமில்லாதவர். ஆகவே அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில் அந்த இளைஞர்கள் திரைப்படவிழாவிற்கு வந்திருந்த லூயி மால், பால் ஷ்ராடர் தார்க்கோவ்ஸ்கி பல்வேறு இயக்குநர்களிடம் ராபர்ட் ப்ரெஸன் பற்றிப் பேட்டி எடுத்து அதைத் தொகுத்து ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

The Road to Bresson என்ற அந்தப் படத்தை நேற்றிரவு பார்த்தேன்.
தனது நாற்பதாண்டுக்காலத் திரை வாழ்வில் பதிமூன்று படங்களைத் தான் பிரெஸன் இயக்கியிருக்கிறார். அந்தப் படங்களைத் தூய சினிமா என்று அழைக்கிறார்கள். உணர்ச்சிகளை முகத்தின் வழியாகவும் உரையாடல் வழியாகவும் வெளிப்படுத்துவது நாடகத்தின் வேலை. சினிமா வெறும் நாடகமில்லை. காட்சிகளும் இசையும் சப்தங்களும் கொண்டது. ஆகவே அங்கே மேடையைப் போன்ற நடிப்பு அவசியமில்லை. கைகள் மற்றும் கால்களின் அசைவு, மையத்தை விட்டுவிலகி பொருட்கள். மலர்கள். சின்னஞ்சிறு காட்சிகள் இவற்றையே பிரெஸன் முதன்மைப்படுத்தித் தனது சினிமாவை உருவாக்கியிருக்கிறார்.
ஆகவே படத்தில் நாம் காணுவது வாழ்க்கையில் நேரடியாக மனிதர்களைக் காணுவது போன்ற அனுபவத்தையாகும். பிரபலமான நடிகர்களைத் தவிர்த்து புதுமுகங்களையே தனது படத்தில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். காரணம் அவர்களைத் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயார் செய்ய இயலும். அவரது படத்தில் நடித்த நடிகையின் நேர்காணலில் பிரெஸன் மிகக் குறைவான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்றார். குரலை ஒரு போதும் உயர்த்தக்கூடாது. பின்னணி இசை இன்றிச் சலனமின்றிக் குரலை வெளிப்படுத்துவது அவரது பாணி. அது எளிய சினிமா பார்வையாளரைக் கவராது. ஆனால் அதைப்பற்றிப் பிரெஸன் கவலைப்படவில்லை. தான் ஒரு கலைஞன் என்ற முறையில் தனக்கான திரைமொழியை அவர் உருவாக்கிக் கொண்டார் என்கிறார்

பிரெஸனின் பிக்பாக்கெட் படத்தின் துவக்கக் காட்சியில் கதாநாயகன் ஒரு பெண்ணின் கைப்பையிலிருந்து பணத்தைத் திருட முயல்கிறான். அப்போது அவனது முகபாவங்களைப் பாருங்கள். உடல் உறைந்து போயிருக்கும். தலை மட்டும் சிறியது அசையும். அவனது கைகள் ரகசியமாக முன்சொல்லும். கைப்பையை அவன் தொட்டுத் திறக்கும் விதமும் பணத்தை எடுப்பதும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. A Man Escaped படத்தில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
திரைப்படவிழாவில் சிறந்த படமாகப் பிரெஸனின் படம் தேர்வு செய்யப்படுகிறது. ஆர்சன் வெல்ஸ் இந்த விருதை அளிக்கிறார் அவருடன் தார்க்கோவெஸ்கியின் படமும் விருது பெறுகிறது. மேடையில் விருதைப் பெற்றுக் கொண்டு நன்றி சொல்ல எதுவுமில்லை என பேசமறுத்து திரும்புகிறார் பிரஸன். தனது படைப்புகளை தவிர தன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதே அவரது இயல்பு. பிரஸனை மிகப்பெரும் கலைஞனாகக் கொண்டாடும் தார்க்கோவ்ஸ்கியின் தோளைப் பற்றிக் கொண்டு மேடையை விட்டுச் செல்கிறார்
தனக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் அழைப்பினை ஏற்கும் ஒரேயொரு கேள்வி கேட்கலாம் என்று நிபந்தனை விதிக்கிறார் பிரெஸன். அவர்கள் நேரில் சந்தித்து இரண்டு மூன்று கேள்விகளை ஒன்றாக்கி ஒரு கேள்வியாகக் கேட்கிறார்கள். அதற்கு மிகச்சிறிய பதில் தருகிறார். இளம் இயக்குநர்களுக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஸ்டெந்தால் சொன்ன பதில் ஒன்றைச் சொல்கிறார்.

பிரஸன் விளம்பரங்களை விரும்பாதவர். பணத்திற்காகவோ, புகழிற்காகவோ எந்த வேலையும் செய்யாதவர். சினிமாவைப் பற்றிய தனது எண்ணங்களை மிகச்சிறிய நூலாக Notes on the Cinematographer என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். அது முக்கியமான கையேடு
ப்ரெஸனின் திரைப்படங்களை ஆராய்ந்து அமெரிக்க இயக்குநரான பால்ஷெரடர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் ப்ரெஸனின் திரைப்பாணியை Transcendental style என்று அழைக்கிறார். அது உண்மையே.
ப்ரெஸன் தனது படைப்பின் மூலம் ஒரு உள்ளார்ந்த கலைவெளிப்பாட்டினை வெளிப்படுத்துகிறார், அது எளிமையின் அழகியல். தனித்துவமும் வியப்பும் கொண்ட திரைமொழி. ப்ரெஸன் ஓவியராக வாழ்க்கையைத் துவக்கியவர். ஓவியமே சினிமாவை நோக்கி தன்னை அழைத்துச் சென்றது என்கிறார்.
A Man Escaped படத்தின் துவக்கக் காட்சியினைப் பாருங்கள். காரில் கைதியாக அழைத்து வரப்படும் ஃபோன்டைன் காரிலிருந்து குதித்துத் தப்புவதற்காகத் தனது கைகளைக் காரின் கைபிடியை நோக்கி ரகசியமாக நகர்த்துகிறான். அவனது கண்களில் சலனமில்லை. அருகிலுள்ள கைதிகளும் அதைக் கண்டுகொள்வதில்லை. கார் ஒட்டுகிறவனின் கைகள் மட்டுமே காட்டப்படுகின்றன. கார் சாலையின் ஒரு திருப்பத்தில் அவன் காரிலிருந்து குதித்துத் தப்பிவிடுகிறான். கேமிரா காரின் பக்க கண்ணாடி வழியா வெளியே நடப்பதைக் காட்டுகிறது. ஃபோன்டைன் பிடிபடுகிறான். அடித்துத் துவைக்கப்படுகிறான். அவனை இழுத்துக் கொண்டுவந்து காரில் ஏற்றி விலங்கிடுகிறார்கள். ரத்தகறை படிந்த முகம். உடைகள். படம் முழுவதும் ப்ரஸன் கைகளை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படம் தஸ்தாயெவ்ஸ்கியின் The House of the Dead நாவலை நினைவுபடுத்துகிறது தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகனைப் போலவே தான் ஃபோன்டைன் நடந்து கொள்கிறான். சிறையில் ஒருவன் தனது மீட்சிக்காக ஒருவன் பைபிளைத் தேர்வு செய்வதும் தஸ்தாயெவ்ஸ்கியின் சாயலைத்தான் வெளிப்படுத்துகிறது. அவரது பிக்பாக்கெட் படமும் தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் தழுவப்பட்ட வடிவமே. நெருக்கடி ஒருமனிதனை என்ன செய்யும் என்பதையே ப்ரஸன் ஆராய்கிறார். புறச்சூழலின் பாதிப்புகள் எதுவும் ஃபோன்டைன் முயற்சிகளைத் தடுக்கவில்லை. அவன் உறுதியாகத் தனது முயற்சியை நம்புகிறான். முடிவில் வெற்றிபெறுகிறான். இந்த விடுதலை உணர்வை அவரது படங்களில் தொடர்ந்து காணமுடிகிறது.
Film is the definition of an art that requires a style: it takes an auteur, a signature. The auteur writes to the screen, expressing himself by way of varied shots of varied duration, varied angles and points of view. என்கிறார் பிரஸன். அதற்குச் சிறந்த உதாரணம் அவரது படங்களே
••
May 15, 2021
எனது அப்பா
ஐசக் அசிமோவ்
விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவ் தனது சொந்த தேசமான ரஷ்யாவை விட்டு அமெரிக்காவில் குடியேறியவர். 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் பேராசிரியராகப் பணியாற்றியவர். விஞ்ஞானத்தின் புதிய சாத்தியங்கள் பற்றியும் விண்வெளி மனிதர்கள், மற்றும் ரோபோ பற்றிய இவரது கதைகள் அறிவியல் புனைவிற்குப் புதிய தளத்தினை உருவாக்கியவை. அவர் தன் தந்தையைப் பற்றி எழுதிய சிறப்பான பதிவு.

••
1923 ஜனவரி எனது அப்பாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையான நாள். அதுவரை அவர் பெற்றிருந்த அத்தனை செல்வங்களையும் இழந்தவராகத் தனது தேசத்திலிருந்து வெளியேறினார்.
எனது தந்தை யூதா அசிமோவ் ருஷ்யாவில் உள்ள பெட்ரோவிஷ்வில் பிறந்தவர். இது மாஸ்கோவில் இருந்து தென் கிழக்காக 250 கிமீ தொலைவிலிருந்தது. அவர் ஒரு யூதர். உலகமெங்கும் யூத எதிர்ப்பும் யூத துவேசமும் பிறந்து உச்சநிலையான காலமது. ருஷ்யாவில் யூதர்களுக்கு எதிராகப் பெரிய வன்முறை எதுவும் நடைபெறவில்லை என்ற போதிலும் கசப்புணர்வு வலுப் பெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பா மற்றவர்களோடு இணக்கமான வாழ்வை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் யூதர்களுக்கான வரையறுக்கப்பட்ட வாழ்வு எல்லைக்குள் தான் அவரும் இயங்க வேண்டியிருந்தது. அப்பா வசதியானவர். எனது தாத்தாவிற்குச் சொந்தமாக ஒரு மில் இருந்தது.
அம்மாவின் அப்பாவிற்கும் சொந்தமாக ஒரு ஜெனரல் ஸ்டோர் இருந்தது. இதனால் வசதியான வாழ்க்கை அமைந்திருந்தது. எனது அப்பா ஐரோப்பியமுறை கல்வி பெறவில்லை. மரபான யூத முறைப்படியான கல்வி கற்றவராக ஹீப்ரு பள்ளியில் படித்தார் அங்கே வேதாகமமும் மத்தத்துவங்களும் போதிக்கப்பட்டன. அவர் ஹீப்ரு, யிட்டிஷ் மற்றும் ருஷ்ய பொழிகளில் விற்பன்னராக இருந்தார். அத்தோடு ருஷ்ய இலக்கியங்களையும் கற்று, புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அத்தோடு தனது தொழிலுக்கான கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார்.
முதல் உலகப்போரும் ருஷ்ய புரட்சியும் அதன் பிறகு நடைபெற்ற உள் நாட்டுச் சண்டைகளும் பெட்ரோவிச் நகரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. அது ஒரு தனித்தீவு போல ஒதுங்கியிருந்தது. எனது அப்பா நகரில் ஒரு நூலகம் அமைத்து அங்கு ருஷ்ய கதைகளை வாசித்துக் காட்டுவதும் யிட்டீஷ் மற்றும் ருஷ்ய நாடகங்களை நடிப்பதும் ஒரு கூட்டுறவு நிறுவனம் துவங்கி உணவுப் பொருட்கள் மக்களுக்குச் சீராகக் கிடைக்க உதவி செய்வதுமாக இருந்தார். இவை யாவும் எவ்விதமான சிரமமும் இன்றி 1922 வரை நடை பெற்றது. அப்படியே ஒரு வேளை எனது அப்பா நிம்மதியாக வாழ்ந்திருக்கவும் கூடும். ஆனால் எதிர்பாராத சம்பவமொன்று நடைபெற்றது.

அமெரிக்காவிலிருந்த எனது தாய்மாமா ஜோ ருஷ்யாவில் நடைபெற்றுவரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலக யுத்தம் இவற்றுக்குள் தனது சகோதரியின் குடும்பம் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் வந்ததும் எனது அம்மா உடனே பதில் எழுதினார். அதற்கு ஜோ மாமா தனது சகோதரி குடும்பத்தோடு அமெரிக்கா வந்து விடுவதாக இருந்தால் பயண ஏற்பாடுகளையும் அனுமதியையும் தான் வாங்கித் தருவதாகச் சொல்லி கடிதம் எழுதினார்.
அமெரிக்காவிற்குப் போவதா வேண்டாமா என முடிவு செய்யக் குடும்ப ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரிலே பிறந்து வசதியாக வாழ்ந்து நிம்மதியாக இருப்பதைவிட்டுப் போகக் கூடாது என ஒரு தீர்மானமும், இல்லை யூதர்களுக்கு நெருக்கடி அதிகமாகிவிடும் அமெரிக்கா போய்விடலாம் என ஒரு தீர்மானமும் வந்தது. போவதாக இருந்தாலும் அதற்குச் சோவியத் அரசு அனுமதி வேண்டும். அரசு இதை நன்றி கெட்ட செயலாக நினைத்து அனுமதிக்காது என்ற வாதங்கள் வந்தன. மாமா அமெரிக்காவில் வாழ அனுமதி தன்னால் எளிதாக வாங்க முடியும் என்றார்.
அமெரிக்கா பற்றிய தங்கக் கனவு வீட்டில் விரிந்தது. ஏதேதோ சண்டைகள் விவாதங்கள் வீட்டில் நடைபெற்றன. கடைசியில் அமெரிக்கா போவது என முடிவானது. சொந்த ஊரை மனிதர்களை நிலத்தை விட்டு இனி போதும் திரும்பி வரப்போவதில்லை என்ற துக்கத்தோடு பிரிந்து போவது என முடிவு செய்தார்கள். இது வரை அறிந்திராத ஒரு தேசத்தை நோக்கிய பயணம் முடிவானது. இதற்கு அப்பாவின் நண்பர் ஒருவர் உதவி செய்தார்.
ஜனவரி 1923 அப்பா அம்மாவோடு மூன்று வயது சிறுவனான நானும் எனது தங்கையும் அமெரிக்கா நோக்கி பயணமானோம். குறிப்பிட்ட தூரம் வரை படகில் பயணமாகி அங்கிருந்து ரயிலிலும் பிறகு கப்பலிலும் என மாறி ஒரு மாத காலப் பயணத்தின் பிறகு 1923 பிப்ரரரி 3ம் தேதி அமெரிக்கா அடைந்தோம். பயணத்தில் நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தோம்.
நியூயார்க் நகரில் எனது அப்பா கையில் பைசாகாசு இல்லாதவராக முகம் தெரியாத ஒரு வேற்றாளாக அலைந்தார். அவருக்கு என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை. புதிய தேசத்தின் நிலவியலும் பரபரப்பும் அவரைத் திகைக்கவைத்திருந்தது. அமெரிக்கா பிரஜையாவதற்கு விண்ணப்பித்துச் சில வருஷங்களில் அவர் உரிமை பெற்றுக் கொண்டு விட்டார். ஆனால் அமெரிக்கா வந்த நாளிலே அவருக்குத் திடீரெனத் தான் ஒரு படிப்பறியாதவன் எனப் பட்டது அவருக்குத் தெரிந்தவை ரஷ்யன் மற்றும் ஹீப்ரு. இந்த இரண்டு பாஷைகளும் அமெரிக்காவில் செல்லுபடியாகாதவை.
மொழியறியாத் தன்னை ஒரு படிக்காத முட்டாள் போலவே உணர்ந்தார். இதனால் எவரோடும் பேச முடியாத ஊமையைப் போல வாழ நேரிட்டது. இன்னொரு பக்கம் தனக்குத் தெரிந்த வேலையைக் கொண்டு இங்கே பிழைக்க முடியாது எனவும் தெரிந்து போனது. இனி எப்படி வாழப்போகிறோம் எனத் தவித்தவராக இருந்தார். அம்மா மட்டுமே வாழ்வைத் துவங்கிவிட முடியுமெனச் சுய நம்பிக்கை கொண்டிருந்தார்.
வீட்டில் நாங்கள் பேசிக் கொள்வதும் குறைந்து போனது. அப்பா கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் சேர்க்கத் துவங்கி மூன்று வருடத்தில் சிறிய இனிப்புபண்டங்கள் கடை ஒன்றைத் துவங்கினார்.

அந்தக் கடையில் எனது அப்பாவும் அம்மாவும் தினமும் 16 மணி நேரம் வேலை செய்வார்கள். குழந்தைகளான நாங்களும் இனிப்புத் தயாரிப்பதில் உதவி செய்வோம். பைசா பைசாவாக வருமானம் வந்தது. இதற்கிடையில் வீட்டில் குழந்தைகள் பிறந்தனர். அப்பா இந்தச் சூழலில் கூடத் தர்ம காரியங்களுக்கும் தேவாலயத்திற்கும் உதவுவதற்காகப் பணம் தந்தார். எங்களை அமெரிக்கப் பள்ளியில் படிக்கவைத்தார். தனிமையும் வருத்தமும் அப்பாவைப் பீடித்த போதும் இந்த வாழ்வை அவர் எந்தச் சலிப்புமின்றித் தொடர்ந்து வந்தார்.
நாங்கள் படித்து வேலைக்குப் போன பிறகே அந்த மிட்டாய்க் கடையை விற்றுவிட்டு பகுதி நேர வேலையொன்றில் சேர்ந்து கொண்டார். அவர் என்னிடமோ எனது சகோதரனிடமிருந்தோ பணம் பெறுவதை ஒரு போதும் விரும்பாதவர். தனது வயதான காலத்தில் ஆங்கிலம் அறிந்த பிறகும் கூடக் கடைசி நாள் வரை அவர் தன்னை ஒரு கல்வியற்ற மனிதனாகவே கருதிவந்தார்.
யாரையும் சாராத அவர் ஓய்வு பெற்றுப் புளோரிடாவில் வாழ்ந்து 73 வயதில் இயற்கையாக மரணமடைந்தார். அப்போதும் எனது அம்மாவிற்குத் தேவையான பணமும் வீடும் வசதியும் தந்து விட்டவராகவே இறந்து போயிருந்தார்.
தான் வாழ்வில் நொடித்துப் போன போதும் கூடத் தனது பிள்ளைகள் எப்படியாவது வாழ்வில் முன்னேறிவிட வேண்டும் என ஆசைப்பட்டு அதை நிறைவேற்றியவர். அதிலும் நான் ஒரு பேராசிரியராக 100க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவனாக இருப்பதைக் கண்டு சந்தோஷபட்டவர். யூதர்கள் கல்வியைத் தான் பெரிய செல்வமாகக் கருதுகிறார்கள்.அறிவாளிகளை உண்டாக்குவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். (அதற்காக எல்லா யூதர்களும் அறிவாளிகள் அல்ல) இதை எனது அப்பா முழுமையாக நம்பியவர்.
நான் எழுதுகிறேன் இதைப் பலரும் படிக்கிறார்கள் என்பதைப் பெரிய காரியமாக நினைத்தார் அதிலும் விஞ்ஞானம் என்பதை மிக மரியாதைக்குரிய ஒன்றாக மதித்தார்.
நான் கேட்ட எதையும் வாங்கித் தருமளவு அவரிடம் ஒரு போதும் பணம் இருந்ததேயில்லை. ஆனாலும் ஒரு முறை அவர் எனது பிறந்த நாளுக்காக எனக்கு ஒரு பேஸ்பால் பரிசாக வேண்டும் எனக் கேட்டதற்கு மறுத்துவிட்ட அவர் பதிலாகக் கலைக்களஞ்சியத்தின் தொகுதி ஒன்றைப் பரிசாகத் தந்தார்.
நான் எழுதத் துவங்கிய காலத்தில் ஒரு டைப்ரைட்டர் தேவைப்பட்டது. அதை வாங்கித் தர அவரால் முடியவில்லை. நானே கதை எழுதி வாங்கிக் கொள்வதாக முடிவு செய்தேன். ஆனால் அவர் எப்படியோ சிரமப்பட்டு வாங்கித் தந்தார். சில வருடங்களில் புத்தகங்களுக்கு மேல் புத்தகமாக நான் எழுதி வருவதைக் கண்ட அவர் ஒரு நாள் என்னிடம் கேட்டார்.
“ஐசக். இத்தனை புத்தகங்களை எழுத எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?“
“உங்களிடமிருந்து தான் அப்பா“ என்றேன்.
அவருக்கு எதுவும் புரியவில்லை.
என்னிடமிருந்தா, நீ சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை என்றார்.
“அப்பா நீங்கள் தான் கற்றுக் கொள்வதன் மகத்துவத்தை எனக்குப் புரிய வைத்தீர்கள், இது தவிர மற்றவை எல்லாம் சின்ன விஷயங்கள் தானே “என்றேன்.
••••
எஸ்.ராவுடன் விடுமுறைக்காலம்
ஜனக், ரியா, தருணிகா மூவரும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்.சிறந்த நண்பர்கள். இந்த விடுமுறைக்காலத்தில் தினமும் புத்தகங்கள் படித்து வருகின்றனர்.கடந்த வாரம் எஸ்.ரா அவர்களின் புத்தகங்களை படித்து விமர்சனம் எழுதி உள்ளனர் என ரம்யா ரோஷன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அவருக்கு எனது நன்றி. ஜனக். ரியா, தருணிகா மூவருக்கும் என் அன்பும் நன்றியும். சிறப்பாக எழுதியிருப்பதற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
———————————————————-

பெயர் :ஜனக்
புத்தகம்: எலியின் பாஸ்வேர்டு
விமர்சனம்:
வணக்கம். என் பெயர் ஜனக் மணிகண்டன். நான் 7 ஆம் வகுப்பில் இருக்கிறேன். நான் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியை எனது நண்பர்களுடன் பார்வையிட்டேன், புத்தக கண்காட்சியில் இருந்து பல புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒரு எலி தன் இனத்தை காப்பாற்ற என்ன வெல்லாம் செய்கிறது என்ற ஒரு கதை புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அக்கதை எனக்கு உணர்த்திய பாடம் கத்தியை விட புத்தி தான் மேலானது ஆயுதம் ஏந்தி சண்டை போடுவதை விட அறிவை வைத்து சண்டை செய்தல் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று உணர்ந்தேன்.
தன் அறிவையையும் தன்னம்பிக்கையையும்.
பயன்படுத்தி தன் இனத்தை காப்பாற்றும் எலி நமக்கு கற்றுத்தரப்போகின்ற பாடத்தை இங்கு காண்போம்.
மனவலிமை ஒன்றே வெற்றியைத் தரும். பாம்பின் பிடியில் எலிகள் மாட்டிக் கொண்டன. பாம்புகள் கதவுகளற்ற எலியின் வலைக்குள் நுழைந்து அதன் எலிக்குஞ்சுகளையும் தனக்கு உணவாக்கிக் கொள்வதே தனது பணி.இதனால் எலிகள் மிகவும் பாதிக்கப்பட்டன டிஜிட்டல் டோர்கள் அமைக்கப்பட்டன.விடாத முயற்சியால் நவீன டோரை செய்து பாம்புகளை உள்ளே வர முடியாமல் செய்து தன் இனத்தை காப்பாற்றியது.
—————————————————-
பெயர் : ரியா
புத்தகம் : பறந்து திரியும் ஆடு
விமர்சனம் :
எலியின் பாஸ்வேர்டு, மீசையில்லாத ஆப்பிள், நீல சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து போன்ற எஸ்.ரா அவர்களின் புத்தகங்கள் நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகவிமர்சனம் பறந்து திரியும் ஆடு என்ற புத்தகத்திற்கு….எனக்கு ஆடுகள் என்றால் பிடிக்கும்.அதென்ன பறக்கும் ஆடுகள் என்று ஆச்சர்யமாக இருந்தது. அதனால் தான் இந்தப் புத்தகத்தை நான் தேர்ந்தெடுத்தேன். சரி கதைக்கு போகலாமா.
கதை:
யக்கர் என்ற ஆடு மேய்ப்பவரிடம் நாற்பது ஆடுகள் இருந்தது. பூமியில் இருந்த புல்வெளிகள் அழிந்து போனதால் யக்கர் வானத்திற்கு பறந்து சென்று ஆடு மேய்க்க தொடங்கினார். ஒரு நாள் அங்கு சென்று திரும்பும்போது டுவிங் என்ற கண்ணு தெரியாத ஆட்டுக்குட்டி வானத்திலேயே தொலைந்து போனது. அங்கு ஒரு இரவு முழுவதும் இருக்கிறது. டுவிங் ஆட்டுக்குட்டி ஒரு நட்சத்திரம், வண்ணத்துப்பூச்சி, பாரை, வான்மரம், மஞ்சள் அருவி, வானவில், ஒரு மேகம் மற்றும் ஒரு சூரியகாந்தி பூவை சந்திக்கிறது. டுவிங் எப்படி யக்கர் மற்றும் மற்ற ஆடுகளுடன் சேருகிறதோ அதைப்பற்றி தான் இந்த கதை.
ஆடுகளுக்கு இங்கு மேய இடம் இல்லாமல் இந்த கஷ்டத்தை கொடுத்தது யார்? இங்கே இருக்கும் புல்வெளிகள் மரங்கள் அழிய காரணம் என்ன? அதற்கு காரணம் சூழல் சீர்கேடு, மிதமிஞ்சிய வாகன பெருக்கம்,தொழிற்
சாலைகளின் சீர்கேடுகள் என்று எஸ். ரா அவர்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள். நாம் நிறைய மரங்கள் புல்வெளிகள் வளர்ப்போம்.வளர்த்தால் இங்கேயே ஆடுகள் மேயும், உலகத்தை அழகாக ஆக்கும்.
எஸ். ரா அவர்கள் எழுதி நான் படிக்கும் நாலாவது புத்தகம் இது. அவர் எழுதிய புத்தகங்களில் எனக்கு பிடித்த புத்தகம் இதுதான். அடுத்ததாக நான் படிக்கப் போகும் புத்தகம் – ஏழுதலை நகரம்.
————————————————————-
பெயர் : தருணிகா
புத்தகம் :கால் முளைத்த கதைகள்
விமர்சனம் :
வணக்கம் என் பெயர் தருணிகா.நான் ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் என் அம்மாவுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.அங்கு என் அம்மா கால் முளைத்த கதைகள் என்று ஒரு புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார்கள். இதை எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
Summer vacation இல் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.இயற்கை எப்படி தோன்றியது என்பதை பற்றிய கதைகளின் தொகுப்பு இந்த புத்தகத்தில் உள்ளது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நாட்டிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது..இவை எல்லாமே மிகவும் interesting ஆக இருக்கிறது. மொத்தம் 80 கதைகள் இருக்கின்றன. எல்லா கதைகளுமே சின்ன சின்ன கதைகள் தான். one or two paragraphs தான் இருக்கிறது. அதனால் படிப்பதற்கு easy ஆக இருக்கிறது.
இதில் எனக்குப் பிடித்த கதைகள்
மனிதர்கள் எப்படி தோன்றினார்கள்? வண்ணத்துப்பூச்சி ஏன் பூக்களை சுற்றுகின்றது?
ஒட்டகம் ஏன் கூன் விழுந்து காணப்படுகிறது?
நிலா என் வானில் தனியாக இருக்கிறது?
மழை எப்படி உருவானது?
உலகம் எப்படி உண்டானது?
இப்படி பல கேள்விகள் அதற்கு பதிலாக சொல்லப்பட்ட கதைகள் மிகவும் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருந்தன
***
May 14, 2021
மின்தாது யந்திர வினோதம்
நூற்று நாற்பது வருஷங்களுக்கு முன்பாகச் சென்னையில் உள்ள பீபில்ஸ் பார்க்கில் நடைபெற்ற விக்டோரியா மகாராணி பட்டம் சூடிய மகோற்சவ விழா பற்றி ஜநவிநோதினி’ 1878ல் வெளியான கட்டுரை.
**
அந்தக் காலக் கொண்டாட்டம் எப்படி இருந்திருக்கிறது என்று பாருங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தளத்தில் தான் நடைபெறும். குறைவானவர்கள் தான் மாற்றம் குறித்து யோசித்தார்கள். ஏற்றுக் கொண்டார்கள். பின்பு அந்த மாற்றம் தானே மக்களிடம் அறிமுகமாகி பெரிய அளவில் நடந்தேறியது. இன்று நாம் அனைவரும் எல்லாத் துறைகளிலும் மாற்றத்தை நினைத்து பயப்படுகிறோம். தனி நபர்கள் மாற்றம் பற்றி இவ்வளவு கவலைப்படுவது நம் காலத்தில் தான் நடந்து வருகிறது. பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் ஆவணப்படுத்தவேயில்லை. கண்முன்னே நிறைய காட்சிகள். நிகழ்வுகள். கலைகள், தொழில்கள் மறைந்து போய்விட்டன. இந்த உற்வசத்தையும் கொண்டாடும் மக்களையும் பற்றி வாசிக்கும் போது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் சித்திரை திருவிழா நினைவிற்கு வந்து போகிறது. அந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இனிக் கிடைக்காது. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் தவிர ஒட்டு மொத்த சென்னையும் கலந்து கொண்டாடும் நிகழ்வுகள் குறைவே. அந்தந்த பகுதிக்கு ஏற்ப சமய விழாக்கள். கலை விழாக்கள். இலக்கிய நிகழ்வுகள், விளையாட்டுகள் நடைபெறுகின்றன. கிரிக்கெட் சென்னையின் பெரும்கொண்டாட்டமாக இன்றும் இருந்து வருகிறது. அதைத் தாண்டி நகரின் பெரிய கொண்டாட்டம் எதுவுமில்லை. ஆனால் அதற்கான தேவையிருக்கிறது. அந்த வெறுமை ஏதேதோ வடிவங்களில் வெளிப்படுகிறது
••
வருகிற 1879 – ளு ஜனவரி மீ 1 உ நமது காருண்ணிய மகாராணியாரவர்கள் இந்தியச் சக்கரவர்த்தினிப்பட்டம் சூடிய மகோற்சவ தினமாகையால் அதைக் கொண்டாடு நிமித்தம் அதற்கு முன் இரண்டு நாளும், விசேஷமாய் அன்றும் பீபில்ஸ்பார்க் என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடத்தப்படுகிற மகா விநோதங்களை ஒவ்வொன்றாக நடக்கும் வண்ணம் விவரித்துச் சொல்ல வேண்டுமானால் மிகவும் பெருகுமாதலால் அவற்றை ஒருவாறு சுருக்கித் தெரிவிக்கிறோம்.

மேற்கண்ட சிங்காரத் தோட்டத்தில் எப்போதும் ஜன செளக்கியத்திற்கும், உல்லாசத்திற்கும், காலப்போக்கிற்குமாகவே நல்ல பரிமளமுள்ள அலங்காரமான பலவித புஷ்பச் செடிகள், கொடிகள், விதம் விதமான விருக்ஷங்கள், நீரோடைகள், தடாகங்கள், நீர்வளைவுகள், செய்குன்றுகள், மேடைகள், ஊ சல்கள், பீடங்கள், தீபஸ்தம்பங்கள் முதலியவெல்லாம் எவ்வெவ் விடத்தில் எவ்வெவ் விதமாக அமைக்கப்பட வேண்டுமோ, அவ்வவ்விடத்தில் அவ்வவ்விதமாகவே புத்தி சாதுரியத்துடன் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
அன்றியும், சிங்கம், புலி முதலிய நாநாவித விந்தை விந்தையான மிருகங்களும், மயில், குயில் முதலிய பற்பல அதிசய பக்ஷிகளும், நாரை நீர்க்காக்கை முதலிய வகை வகையான நீர் வாழ் பறவைகளும், ஊர்வன, நீர்வாழ்வனவாகிய சர்ப்பங்கள், முதலைகள் முதலிய விதம் விதமான வேடிக்கை ஜெந்துக்களும் இவை முதலியவெல்லாம் அதற்குத் தகுந்த இடங்களில் வெயில், மழைகளால் அபாயம் நேரிடா வண்ணம் கூடு முதலியவைகளிலே விடப்பட்டிருக்கின்றன.
ஒவ்வோர் தினங்களில் செவிக்கின்பமான இங்கிலீஷ் வாத்தியங்களும் நினோதமாய் வாசிக்கப்படுகின்றன. ஜனங்கள் இவைகளை வெற்று நாள்களிலேயே கண்டும், கேட்டும் ஆனந்தப்படுவது யாவர்க்கும் தெரிந்த விஷயம்.
இவ்விதமான தோட்டத்தில் மேல் படி மூன்று தினங்களிலும் நடக்கும் அடியிற் குறிக்கின்ற விநோதங்களைக் கண்டவர், கொண்ட களிப்பிற்கு அளவில்லை. மேற்படி தோட்டத்தின் நான்கு வாயிலும் விசித்திரமான வளைவுகள் அமைத்து மேல் வளையில் மெல்லிய கடிதத்தினால், ஒன்றில் இந்தியச் சக்ரவர்த்தினியாகிய மகா ராணியார் அவர்கள் விருதும், மற்றொன்றில் ராஜாத்தி வாழ்க என்றும், மற்ற இரண்டிலும் நமது கவர்னரவர்களைக் குறித்தும் எழுதப்பட்டிருந்தன.
உத்யானத்தின் அகத்தில் கனெடியன் பிளான்டின், இரண்டு ஸ்தம்பங்களை எதிரெதிராக நாட்டி, அவ்விரண்டின் நுனியில் நேராகக் கயிறு கட்டி, அக்கயிற்றின் மேல் முன்னும் பின்னுமாக நடத்தல், முகத்தை மூடிக் கொண்டு நடத்தல், ஒரு காலாலும் இரு காலாலும் நிற்றல், உட்காருதல், ஆடல் முதலிய அருமையான விசித்திர வித்தைகளைக் காட்டினார்கள்.
இது தவிர, இரண்டு சக்கரங்களை நேர் நேராகத் தொடுத்து அவ்விரண்டுக்கும் இடையில் ஓர் ஆள் உட்கார்ந்து கொண்டு காலால் மிதித்து வீதிகளிற் செலுத்திக் கொண்டு போவது போல் அக்கயிற்றின் மேல் செலுத்திய அருமையிலும் அருமையான செய்கையையும், இரண்டு கால்களிலும் இரண்டு கூடைகளைக் கட்டிக் கொண்டு அக்கயிற்றின் மேல் நடத்தல், மேசை, நாற்காலி போட்டுக் கொண்டு உட்காருதல் முதலிய ஆச்சரியமான வித்தைகளையும் காட்டினர். அவ்வித்தைக்காரரை யார் எவ்வளவு புகழினும் அவருக்குத் தக்கவையாகவே இருக்கும்.
மின்தாது யந்திர வினோதம் என்று ஒரு வித்தை செய்தார்கள். அதாவது மின்தாது அமைந்த ஓர் பாத்திரத்தில் ரூபாய்களைப் போட்டு இஷ்டமான மட்டும் எடுத்துக் கொள்ளும்படி ஜனங்களுக்குச் சொன்னார்கள். அப்படியே பலர் எடுத்துக் கொள்ள முயன்றும், மின் தாதுவின் தன்மையைக் கற்றறிந்தவர் மாத்திரம் அதன் விகற்பத்தைத் தடுக்கும் கருவியின் சகாயத்தால் ரூபாய்களை எடுத்துக் கொள்ளும்படி நேரிட்டதே தவிர ஏனையோர் கைகளை உட்செலுத்தி எடுக்க முடியாமல் வெறுங் கைகளைத் தூக்கிக் கொண்டனர்.
தூரத்து ஒலியைக் கம்பியின் வழியாய் அறிந்து கொள்ளும் விதத்தைக் காட்டுகிற அதிசயம் ஒன்று காட்டப்பட்டது.
ஒரு மனிதர்தலையைப் போலவே ஒரு தலை ஒரு மேசையின் மீது இருந்தது. அதனுடன் பேச மனமுள்ளவர் கேட்ட கேள்விகளுக்கு அத்தலை மறுமொழி சொல்லிக் கொண்டு வந்ததும் ஓர் விந்தையாக இருந்தது. ஆங்கிலேய தேசத்து விந்தையான பொம்மைகளின் ஆட்டங்களும் விதம் விதமாய் ஆட்டப்பட்டன.
ஐரோப்பாவில் துருக்கர்களுக்கும், ருஷியர்களுக்கும் நடந்த பயங்கரமான யுத்தத்தைப்படங்களினால் காட்டிய காட்சி நேரில் அவ்விரு திறத்தாரும் சினந்து போர் செய்கிற பாவனையாகவே இருந்தது.
ஓரிடத்தில் சித்திரப் பந்தல் ஒன்று அமைத்து, அதில் இரண்டு துரைகளாலும், ஓர் துரைசானியாலும் விசித்திரப்படங்கள், பொம்மை முதலிய நாநா வஸ்துக்கள் பீடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அங்கே, திருவுளச்சீட்டு போட்டு எடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு பொருளின் பெயரை ஒவ்வொரு சீட்டில் எழுதி ஒரு சுழல் பெட்டிக்குள் போட்டு அந்தச் சீட்டுகளுள் யாதொன்றும் வேற்றுமை தெரியாதபடி அந்தப் பெட்டியைச் சுழற்றிச் சீட்டுகளை நன்றாய் கலக்கச் செய்து, ஒரு ரூபாய்க் கட்டணம் கொடுத்தவர்கள் அவரவர் அதிர்ஷ்டத்துக்கு ஏற்றபடி வந்த சீட்டை எடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறே பலர் செய்து தாம் தாம் கொடுத்த பொருளுக்கு அதிக மதிப்பும், சம மதிப்பும், குறைந்த மதிப்பும் உள்ள ஒவ்வொரு பொருளை அவரவர் அதிர்ஷ்டத்துக்குத் தக்கபடி எடுத்துக் கொண்டு போனார்கள்.
ஓரிடத்தில் இஞ்சினீர் வேடம் பூண்டவரும், அவருக்குச் சகாயரான பல உத்தியோக வேடம் தரித்தவர்களும் அவ்வவ் வேடத்திற்குரிய கருவிகளைக் கொண்டு இஞ்சினீர் உத்தியோகத்தைத் தற்கொரூப் மாகவே நடத்திக் காட்டினர்.
ஜாலவித்தை, குஸ்தி இவ்விரண்டு செய்கைகளும் கண்டோர் கண்ணைக் கவருகின்றனவாக இருந்தன.
இந்துஸ்தானிப் பாடல் நல்ல கண்டத் தொனியுள்ளவர்களால் அப்பாடல்களுக்குரிய இசையோடு பாடப்பட்ட படியால் அது யாவரும் மெச்சத்தக்கதாகவிருந்தது.

தனிகர் முதல் அரசர் ஈறான கண்ணியவான்கள் யானைமீது அம்பாரி வைத்து ஏறிச் செல்வதை எப்போதாயினும் அதிசயமாகப் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்ப்பதற்கே அருமையான அம்பாரியில் அவ்விடத்தில் சாதாரணமானவர்களும் அதி சொற்ப கட்டணம் கொடுத்து ஏறி உல்லாசமாய்ச் சுற்றி வந்தனர்.
விலாசங்களில் முதல் தொடங்கிக் கடைசி வரையில் சரித்திரம் தோரணையாக அமைக்கப்பட்டு, இசையும் இடங்களில் ஜனங்கள் கைகொட்டி நகைக்கத் தக்கனவாயும் சிரக்கம்பம், கரக்கம்பம் செய்யத்தக்கன வாயும் பல அதிசியம் முதலானவைகள் வெவ்வேறிடங்களில் பொருத்தப்பட்டிருந்தன. டம்பாச்சாரி விலாசம், கிருஷ்ண விலாசம், அரிச்சந்திர விலாசம் ஆகிய இவைகளில் ஜனங்கள் ரம்மியப்படத் தக்க தகுதியான ஓர் சந்தர்ப்பத்தைச் சங்கிரகமாகப் பொருந்தும் வண்ணம் ஆங்காங்குள்ள பற்பல விநோதங்களையும் ஒருங்கு திரட்டிக் கண்டோர் உள்ளங்களிகூர நடத்துவித்தனர்.
மேலும் டம்பாச்சாரி விலாசத்தில் டம்பனுடைய பெயரை மாற்றி வெகு விரயக்காரன் என்றும் இன்னும் ஏனையவர்களில் ஆவகசியமானவர்கள் பெயரையும் அவ்வாறே இசையும் வண்ணம் வெவ்வேறு பெயர்களாக அமைத்துக் தகாத மொழிகள் ஒன்றும் எடுத்துரையாமலும் சிற்றின்ப விஷயமி ல்லாமலும் வெகு யுக்தி புத்தியோடு நடத்துவித்த அருமையையும், சில குரங்குகளைக் கொண்டு ஓர் விலாசம் ஆட்டுவித்த விந்தையையும் என்னவென்று இங்கு விவரிக்கக்கூடும்.

இவை மாத்திரமேயன்றித் தனியே நானாவிதப் பரிகாசக் கூத்துகளும் ஓரிடத்தில் நடத்தப்பட்டன. பழனிக் காவடியாட்டம், ஆண் பூதம் போலும் பெண் பூதம் போலும் இரண்டு நடமாடல் இவைகளும் பார்ப்போர் கண்களைக் கவர்ந்து கொண்டிருந்தன. இவ்விநோதங்களுக்குத் தக்கபடி கண்டோர் இப்படியும் ஒரு சிருட்டியிருக்கிறதாவென்று அதிசயிக்கும்படிக்குக் கடவுள் உண்டாக்கிய ஓர் கோழியானது நான்கு காலும் இரண்டு வாலுமுள்ளதாகக் காட்டப்பட்டது.
மேற்படி மூன்று நாளும் இரவில் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை ஆகிய நிறமுள்ள ஒளிவட்டச் சித்திரக் கூடுகளில் (ராந்தல்) நிரை நிரையாக ஏற்றிய தீபாலங்காரங்கள் பார்ப்போர் விழிகளை இமைக்கவொட்டாமற் செய்தன.
மூன்றாம் நாள் இரவில் நடத்திய பாண விநோதங்கள் நம் இளவரசர் இவ்விராஜதானியில் பிரவேசித்திருந்த போது ஒரு இரவில் கடற்கரையிலும், கப்பல்களிலும் நடத்திய பாண விநோதங்களுக்கு ஏறக்குறைய இணை சொல்லத்தக்கனவே; அவற்றைக் கண்டோர் ஒவ்வொருவர் நாவும் பற்பலவாகச் சிறப்பித்ததென்றால் அவற்றின் பெருமையை எவ்வாறு எழுதுவது?,
நன்றி
அட்சரம் இலக்கிய இதழ்
‘
ஓவியம் என்பது கனவு வெளி.
மார்க் சாகலின் (Mark Chagal) ஓவியங்களை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் பார்த்திருக்கிறேன். மூல ஓவியங்களை நேரில் காணுவது பரவசமூட்டக்கூடியது. அதன் புகைப்படங்களையும் நகல் பிரதிகளையும் கண்டிருந்த போதும் அசல் ஒவியம் தரும் மகிழ்ச்சியும் வியப்பும் அலாதியானது. அப்படித் தான் சாகலின் ஓவியத்தின் முன்பு வியந்து போய் நின்றிருந்தேன். மறக்கமுடியாத அனுபவமது.
சமீபத்தில் மார்க் சாகலின் ஓவியங்களைக் கொண்ட விரிவான நூல் ஒன்றை வாசித்தேன். ஓவியரைப் புரிந்து கொள்வதற்கு அவரது வாழ்க்கையும் பார்வைகளும் முக்கியமாகிறது.

மார்க் சாகல் பெலாரசிய நகரமான வைடெப்ஸ் என்ற ஊரில் பிறந்தவர். அவர் ஊரின் நினைவுகளைக் கனவுகளாக மாற்றுகிறார்.
ஊர் என்பது ஒரு கனவு வெளி. அங்கே வசிக்கும் மனிதர்களும் விலங்குகளும் கனவின் தோற்றங்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.
பறத்தலை மிகவும் விரும்பிய சாகல் சந்தோஷத்தின் உச்சத்தில் தானும் காதலியும் பறப்பதாக ஓவியம் வரைந்திருக்கிறார். உடல்கள் பூமியில் காலூன்றி இருக்கும்வரை தான் அன்றாடப் பிரச்சனைகள் இருக்கும் அவை பறக்கத் துவங்கிவிட்டால் நெருக்கடிகள் யாவும் விலகிப் போய்விடும் என்று நினைத்தார் சாகல்.
அவர் பிறந்த போது அவரது ஊரில் பெரிய தீவிபத்து நடந்தது. தீயின் நடுவில் அவரது வீடும் சிக்கிக் கொண்டது. நெருப்பின் ஊடாகத் தான் அவர் பிறந்தார். ஆகவே நெருப்பை அவர் வாழ்நாள் முழுவதும் நேசித்தார். நெருப்பு இணையற்ற அழகும் வண்ணமும் கொண்டது என்று குறிப்பிடுகிறார்.
சேவல்கள் மற்றும் ஆடுகள் மீது அவருக்குத் தனிப்ரியம். அவற்றைக் குறியீடுகளாக்கி வரைந்திருக்கிறார். இது போலவே பூக்களை வரைவதிலும் அவருக்கு அலாதியான விருப்பமிருந்தது. இசையும் நடனமும் நிரம்பிய தனது பால்ய காலத்தை நினைவு கொள்ளும் மார்க் அந்த இசையை நடனத்தைத் தனது ஓவியத்தில் இடம்பெயரச் செய்திருப்பதாகச் சொல்கிறார். அதனால் தான் அவரது ஓவியத்தில் உருவங்கள் தலைகீழாகத் தோற்றம் தருகிறார்கள். காற்றில் இலை பறப்பது போலப் பறக்கிறார்கள்.

அவரது வீட்டிலே இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். ஆகவே சிறுவயது முதலே அவர் வயலின் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். மார்க்கின் காதலி பெல்லா. அவள் கைநிறைய மலர்களுடன் தான் அவரைக் காண வருவாள். அவளே ஒரு விநோத மலர் என்று மார்க் குறிப்பிடுகிறார்.
பெல்லா ரோசன்பீல்ட், வைடெப்ஸ்க் நகைக்கடைக்காரரின் மகள். சாகல் 1915 இல் அவளை மணந்தார். 1916 இல், அவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள் ஐடா, மார்க் மற்றும் பெல்லாவின் காதலை கொண்டாடும் அவரது ஒவியங்கள் தனித்துவமிக்கதாக இருக்கின்றன.
அவரது பிறந்த நாளின் போது கேக் மீது நிறைய மலர்களை அலங்காரம் செய்திருந்தார் பெல்லா. பூக்களின் வண்ண நிறத்தில் மயங்கி அதை உடனே வரையத்துவங்கிவிட்டார் சாகல்.
பிரான்சிலிருந்த நாட்களிலும் அவர் நீலவானத்தையும் மலர்களையுமே நிறைய வரைந்திருக்கிறார். ஓவியம் வரைபவருக்கு ஐந்து விரல்கள் போதாது. ஏழு விரல்கள் வேண்டும் என்று கூறிய மார்க் தனது ஓவியம் ஒன்றில் தன்னை ஏழு விரல்களுடன் வரைந்திருக்கிறார்.

இயல்புலகத்தைத் தனது கற்பனையின் மூலம் பறக்கும் விநோத உலகமாக மாற்றினார் சாகல். ஆகவே அவரது ஓவியத்தில் மனிதர்கள் இடங்கள் விலங்குகள் யாவும் பறக்கிறார்கள். மிதக்கிறார்கள். தலைகீழ் தோற்றம் கொள்கிறார்கள். வண்ணங்கள் என்பது ஒருவகைச் சங்கீதம். அதை முறையாக இசைக்கும் போது அதிசயங்கள் உருவாகும் என்கிறார் மார்க்
சர்க்கஸ் மீது பெரு விருப்பம் கொண்ட மார்க் தனது மகளை அழைத்துக் கொண்டு அடிக்கடி சர்க்கஸ் காணச் செல்வார். அவருக்கெனத் தனி இருக்கைகள் வழங்கப்பட்டன. அதில் அமர்ந்தபடியே சர்க்கஸ் கலைஞர்களை ரசிப்பார். அந்தக் கலைஞர்களைத் தனது கற்பனையின் மூலம் விந்தையான கலைஞர்களாக உருமாற்றியிருக்கிறார் மார்க்
மார்க் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியைத் தனது தாத்தா பாட்டிகளுடன் கழித்தார். ஆரம்பக்கல்வி யூதமுறைப்படி வீட்டிலே அளிக்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டு முதல் வைடெப்ஸ் கலைஞரான யூடெல் பென்னுடன் ஓவியம் பயின்றார், பென் தனக்கான சொந்த நுண்கலைப் பள்ளியைக் கொண்டிருந்தார். 1911ம் ஆண்டு மார்க் பாரிஸுக்கு படிப்பதற்காகச் சென்றார். இதற்கு அரசின் உதவித்தொகை கிடைத்தது,
பாரீஸில் அவர் ஐரோப்பியக் கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் புதுமையான படைப்புகளை ஆழ்ந்து அறிந்து கொண்டார். பாரீஸ நகரத்தை தீவிரமாகக் காதலித்தார், அவர் பாரீஸை இரண்டாவது வைடெப்ஸ்க் என்றே அழைத்தார்.. இந்தக் காலகட்டத்தில், அவரது ஓவியங்களில் பிரகாசமும் தனித்துவமும் இருந்தபோதிலும், பிக்காசோவின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது.
செகல் தனது சொந்த ஊரைப்பிரிந்து போகையில் தனது வீடும் தன்னோடு சேர்ந்து பறந்து வருவது போலவே உணர்ந்தார். அப்படி ஒரு சித்திரமும் வரைந்திருக்கிறார்.

ரஷ்யப்புரட்சிக்குப் பின்பு நாடு திரும்பிய மார்க் சாகல் இளம் ஓவியர்களைப் பயிற்றுவிக்கும் வைடெப்ஸ் கலைக் கல்லூரியை நிறுவினார்.. அவரிடம் நிறைய இளைஞர்கள் ஒவியம் பயின்றனர்.
சந்தோஷமே ஓவியத்தின் மூலப்பொருள் என்று அந்த மாணவர்களிடம் தெரிவித்தார் ஷாகல். ஒரு மாணவன் இல்லை துயரமும் வேதனையுமே ஒவியத்தின் ஆதாரப்பொருள் என்றான். உண்மை. ஆனால் அதைச் சந்தோஷத்தின் வழியே கடந்து செல்ல முடியும். இரண்டும் ஓவியத்தில் எப்படி இடம்பெறுகிறது என்பது முக்கியம் என்றார் மார்க்
சகலின் ஓவியங்கள் அவரது சிறுவயது நாட்களின் நினைவுகளுடன் வைடெப்ஸ் நகரில் வசித்த யூதர்களின் வாழ்க்கையினையும் விவரிக்கிறது. முதலாம் உலகப் போருக்கு முன்பு, அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், பாரிஸ் மற்றும் பெர்லின் இடையே மாறி மாறிப் பயணம் செய்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் கிழக்கு ஐரோப்பிய யூத நாட்டுப்புற கலாச்சாரம் குறித்த தனது கருத்தின் அடிப்படையில் தனது சொந்த பாணியை உருவாக்கினார்.1937 இல், சாகல் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றார்.

1941 ஆம் ஆண்டில், நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் நிர்வாகம் சாகலை நாஜி கட்டுப்பாட்டில் உள்ள பிரான்சிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்ல அழைத்தது ஆனால் அவருக்கு விருப்பமில்லை. அமெரிக்காவில் ஆடு மாடுகள் இருக்கிறதா என்று நண்பர்களிடம் விசாரித்தார். பசுமாடுகளும் இருக்கின்றன என்றார்கள். உடனே அவர் ர் மரங்களும் பச்சை புல் வெளியும் இருக்கிறதா என்று கேட்டார் எல்லாமும் இருக்கிறது என்ற பிறகே அவர் அமெரிக்கா சென்றார். விநோதமான கேள்விகளாகத் தோன்றினாலும் அமெரிக்கா ஒரு தொழில் நகரங்கள் நிரம்பிய உலகம் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பதைத் தான் இது காட்டுகிறது. அது போலவே ஆடு மாடுகள் புல்வெளி இல்லாத வாழ்க்கையை அவரால் வரைய இயலாது என்பதையும் சுட்டுகிறது
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் ஒரு முறையாவது பறப்பது போல உணருகிறான். அது தான் என் ஓவியத்திலும் வெளிப்படுகிறது என்கிறார் சாகல். பறத்தல் நம்மைப் பிரபஞ்சத்துடன் ஒன்றிணைக்கிறது .அவரது ஓவியங்கள் அனைத்தும் விசித்திரத்தால் நிரம்பியுள்ளன, பெல்லாவுடனான சாகலின் காதல் அவரது ஓவியங்களின் முக்கியக் கருப்பொருளாக விளங்குகிறது

கனவு காணுகிறவர்களுக்கு மட்டுமே எனது ஓவியத்தைப் புரிந்து கொள்ள முடியும். இயற்கையை நகலெடுப்பது எனது வேலையில்லை. என்று மார்க் செகல் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்
செகல் பால்யகாலத்திலிருந்து வெளியேறவேயில்லை. அவர் நித்யமான குழந்தைப்பருவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்கிறார் கலைவிமர்சகர் செலெஸ்னெவ்: அது உண்மை என்பதையே அவரது ஓவியங்கள் நிரூபிக்கின்றன
••
,
May 13, 2021
கலைஞனின் காத்திருப்பு
கைதட்டுகள் போதும் – சிறுகதை வாசிப்பனுபவம்
தயாஜி – மலேசியா

கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து முடித்தேன்.
கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள். இப்படி பிரகாசிப்பவர்களும் காணாமல் போகிறவர்களும் சரி, தத்தம் குடும்ப வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்திக்கும்படி ஆகிறது. கலையின் வெற்றி பலரையும் அனாதையாக்கியிருக்கிறது. நாம் நேசிக்கும், நாம் நம்பும் கலை உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவரை நமக்கருகில் அழைத்து வருகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் பலரையும் தொலைத்து விடுகிறது.
இக்கதை அப்படியான கலையில் ஈடுபாடு காட்டி கைதட்டலில் கிரங்கிய மனிதனை பேசுகிறது. அவனை கிரங்கடித்த கைதட்டல்களால் அவன் இழந்தது அவனது வாழ்க்கையை.
ரங்கசாமி வீட்டில் கதவுகள் இல்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் கதை தொடங்குகின்றது. யார் இந்த ரங்கசாமி என்கிற கேள்விக்கு அடுத்தடுத்து பதில்களைக் கொடுத்து கதையை நகர்த்துகின்றார்.
சர்க்கஸில் வேலை செய்த ரங்கசாமியிடம் இப்போது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே இருக்கிறது. இந்த ஒற்றை சக்கர சைக்கிள் ரங்கசாமியின் வாழ்க்கையை பிரதிபலிப்பும் குறியீடாகவே பார்க்கிறேன். சர்க்கஸில் இருக்கும் வரைதான் அந்த சைக்கிளுக்கு பாராட்டுகள், பார்ப்பவருக்கு பரவசங்கள் எல்லாம். ஆனால் அதுவே வீட்டு வாசலில் சாய்ந்துக் கிடந்தால் யாருக்குத்தான் பரவசத்தைக் கொடுக்கும், யார்தான் வந்து பாராட்டிவிட்டுப் போவார்கள். யோசிக்கையில் சர்க்கஸில் கூட இதைவிட சாகசம் காட்டும் வேறொரு சைக்கிள் வந்துவிட்டால் இந்த ஒற்றை சக்கர சைக்கிளுக்கு மதிப்பேது. அதன் எல்லை அதை விட அதிகம் பரவசமூட்டும் வேறொரு சைக்கிள் வருவரைதானே.
ஊரில் வேலை இல்லாமல் வெளியேறிய ரங்கசாமி சர்க்கஸில் சேர்கிறார். அங்கு ரங்கா என்ற பெயரில் பல சாகசங்களைச் செய்கிறார். தனித்து அறியப்படுகின்றார். அவரை மையப்படுத்தியே விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. பதினெட்டு வயதிலேயே திருமணம் ஆகியிருந்தது. குழந்தையும் பிறந்தது. தன் அம்மாவின் பெயரையே குழந்தைக்கும் வைத்து மகிழ்கிறார். இருந்தும் வேலை ஏதுமில்லாமல் அங்கு இருக்கு முடியாமல்தான் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். சர்க்கஸில் அவருக்கான முக்கியத்துவமும் அவருக்கு கிடைத்த கைதட்டல்களும் அவரை அதில் முழுமையாக ஈடுபட வைக்கிறது. ஆண்டுகள் கடக்கின்றன.
அதற்கிடையில் ரங்காவை ஒரு மருத்துவர் சந்தித்து விருந்துக்கு அழைக்கின்றார். அங்கு மருத்துவரின் மகள் ரங்காவைப் பார்த்து உற்சாகமாகிறார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். அங்கு நடந்தது ரங்காவிற்கு அவரின் மனைவி பிள்ளையை நினைவுப்படுத்துகிறது.
இருந்தும் சந்தர்ப்ப சூழலால் ஒரு மாதம் கழித்தே சொந்த ஊர் செல்கிறார். அங்கே மனைவியும் மகளும் இல்லை. அவர்கள் ஊருக்கு சென்று மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது என தெரிந்துக் கொள்கிறார். அவர்கள் சென்றிருக்கும் ஊருக்கு ரங்காவும் செல்கிறார். இவரைப் பார்த்ததும் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. வெறுப்பையே காட்டுகிறார்கள். மனைவி மட்டுமல்ல மகளும்தான். அவருக்கு அவர்களுடன் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. மன கவலையுடன் மீண்டும் சர்க்கஸ்க்கு செல்கிறார். அவரால் பழையபடி எந்த சாகசத்திலும் ஈடுபாடு காட்ட முடியவில்லை. மனைவியும் மகளும் தன்னை வெறுத்து ஒதுக்கியதையே மீண்டும் மீண்டும் நினைக்கிறார். அவரை இதுநாள் வரை அங்கு நிறுத்தி வைத்த கைதட்டல்களும் பாராட்டுகளும் அவருக்கு வெறுமையைக் கொடுக்கின்றன. சர்க்கஸ்க்கு விடைகொடுத்து அந்த ஒற்றை சக்கர சைக்களுடன் ஊர் திரும்புகிறார்.
தினமும் மனைவி மகள் கண்ணில் படும்படி ஏதேதோ செய்கிறார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இனியும் அவர்களை தொல்லை செய்ய கூடாது என முடிவெடுக்கின்றார்.
எதனால் தன் மனைவியும் மகளும் தன்னை வெறுக்கிறார்கள் என முழுமையாக உணர்ந்து வருந்துகின்றார். என்றாவது அவர்கள் மனம் மாறும் எனவும் ஒரு நாள் அவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் எனவும் நம்புகிறார். அவர்கள் வரும் போது கதவு மூடியிருக்கக்கூடாது என்றே கதவை பிடுங்கியும் வைக்கிறார்.
காத்திருப்பு மட்டுமே காயங்களை மறக்கச்செய்யும் , உறவுகளை சேர்த்து வைக்கும் என்கிற நம்பி நாட்களை கடக்கிறார்.
நாம் எதை நம்புகிறோம். எதில் மயங்குகிறோம். எதையெல்லாம் இழக்கிறோம் என்கிற கேள்விகளை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதையொட்டிய ஒரு எச்சரிக்கையையும் இக்கதை கொடுக்கின்றது.
**
May 12, 2021
ஆனந்த விகடனில்
இன்று வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் குறித்த சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.

ஹெமிங்வேயின் முகங்கள்
ஹெமிங்வேயின் மூன்று நாவல்களும் பதினைந்து சிறுகதைகளும் தமிழில் வெளியாகியுள்ளன. அவரது Death in the Afternoon A Moveable Feast கட்டுரைத் தொகுப்பு மற்றும் The Sun Also Rises. Green Hills of Africa போன்ற நாவல்கள் இதுவரை தமிழில் வெளியாகவில்லை. ஐம்பதுகளில் ஹெமிங்வே பற்றிய கவனமும் உரையாடலும் தமிழ் இலக்கிய வெளியில் அதிகமிருந்தது. சி.சு.செல்லப்பா தோற்காதவன் என்ற ஹெமிங்வே குறுநாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இன்றைய தமிழ்ச் சூழலில் ஹெமிங்வேயை நினைவு கொள்பவர்கள் குறைவு. ஆனால் சர்வதேச அளவில் இன்றும் அவர் ஒரு மாஸ்டராகவே கொண்டாடப்படுகிறார். ஆண்டுத் தோறும் புதிய பதிப்புகள் வெளியாகின்றன. அவரது கதைகளைப் பல்வேறு மொழிகளில் திரைப்படமாக எடுக்கிறார்கள். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், லோசா, முரகாமி உள்ளிட்ட பலரும் தங்களின் ஆசான் என்று கொண்டாடுகிறார்கள்.
[image error]சமீபத்தில் ஹெமிங்வே பற்றிய ஆவணப்படத்தொடரைப் பார்த்தேன். கென் பர்ன்ஸ் மற்றும் லின் நோவிக் இணைந்து இயக்கிய ஆவணப்படமான ஹெமிங்வே மூன்று பகுதிகள் கொண்டது., ஆறு மணி நேரம் ஓடக்கூடியது. ஒரு எழுத்தாளரை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்தப்படம். இதற்கு முன்பாக ஹெமிங்வே பற்றிய சில ஆவணப்படங்களையும் முழுநீள திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரைப் போல அவரது வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்த படம் கிடையாது
ஏன் தலைமுறைகளைக் கடந்து மீண்டும் மீண்டும் ஹெமிங்வே பேசப்படுகிறார். அவரது எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன என்பதற்கான பதிலாகவே இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது. ஹெமிங்வேயின் காலம் துவங்கி இன்று வரை அவரது எழுத்தின் பாதிப்பில்லாத படைப்பாளிகளை அமெரிக்காவில் காணமுடியாது என்கிறார் விமர்சகர் எட்மண்ட். அமெரிக்கச் சிறுகதையின் வடிவத்தையும் சொல் முறையினையும் மாற்றியதில் ஹெமிங்வேயிற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
[image error]சிறிய நிகழ்ச்சிகளின் வழியே தான் அவர் கதையை எழுதுகிறார். மரச்சிற்பம் செய்வது போல மொழியைச் செதுக்கிச் செதுக்கி கதையை உருவாக்குகிறார். அவரது கையெழுத்துப் பிரதிகளைக் காட்டுகிறார். எவ்வளவு திருத்தங்கள். பெரும்பான்மை கதைகளில் மதுவிடுதி இடம்பெறுகிறது. குடிக்கிறார்கள். பேசுகிறார்கள். காத்திருக்கிறார்கள். அல்லது வேட்டையாடுகிறார்கள். அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையை அவரது கதைகளில் காணமுடியாது. மாறாக அவர் சாகசக்காரனின் வாழ்க்கையைத் தான் விவரிக்கிறது. இந்தச் சாகசம் வேட்டையாக இருக்கலாம் அல்லது காதலாகவும் இருக்கலாம்.
அவரது சிறுகதைகளில் உள்ள கச்சிதம் மற்றும் தேர்ந்த உரையாடல்கள் கதையை மிகச் சிறந்த அனுபவமாக மாற்றுகின்றன. தன் சொந்தவாழ்க்கையின் நிகழ்வுகளிலிருந்தே ஹெமிங்வே அதிகக் கதைகளை எழுதியிருக்கிறார். அவருக்கு விருப்பமான ஓவியரான செசான் போலவே ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப முனைந்திருக்கிறார். செசானின் இயற்கைக் காட்சிகள் மற்றும் பழங்களின் சித்திரங்கள் ஒரு காட்சியை வேறுவேறு கோணத்தில் அணுகுகின்றன. அது தான் எனது எழுத்தின் அடிப்படை என்கிறார் ஹெமிங்வே.

நிக் ஆடம்ஸ் கதைகள் யாவும் ஹெமிங்வேயின் சொந்த அனுபவங்கள். தனது தந்தை பற்றிய நினைவுகளைச் சில கதைகளில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஹெமிங்வேயின் தந்தை கண்டிப்பானவர். மனநலப்பிரச்சனை கொண்டவர். அவரது மனநிலை எப்போது உக்கிரமாகும் என்று தெரியாது. ஆகவே அது போன்ற நேரத்தில் பிள்ளைகளைக் கடுமையாக அடிப்பார். கோவித்துக் கொள்வார். அம்மா தான் அவரது ஒரே ஆதரவு.
அவரையும் அவரது சகோதரியினையும் ஒன்று போல உடை உடுத்தி ஒன்று போல விளையாடச் செய்திருக்கிறார் அம்மா. பழைய புகைப்படங்களில் இருவரும் ஒன்று போலவே தோன்றுகிறார்கள். சிறுவயதிலே வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கியுடன் நிற்கிறார் ஹெமிங்வே. அவருக்கு எதைப்பற்றியும் ஒரு போதும் பயம் கிடையாது. சிறுவயது முதலே அப்படித் தான் இருந்தார் என்கிறார்கள்.
பால்ய வயதில் நீங்கள் எப்படி உருவாகிறீர்கள் என்பது படைப்பாளிக்கு முக்கியமானது. ஹெமிங்வேயின் ஆளுமை உருவாக்கத்தில் அவரது பால்யம் மிக முக்கியப் பங்கினை வகித்திருக்கிறது.

படத்தில் ஹெமிங்வேயின் அம்மா, சகோதரிகள். அவரது பால்ய கால அடையாளங்கள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. . ஹெமிங்வேயின் சிரித்த முகமுள்ள புகைப்படங்களில் கூட அவர் எதையோ மறைத்துக் கொண்டிருப்பது போலவே இருக்கிறது.
குடி, வேட்டை. பெண்கள் இந்த மூன்றும் தான் ஹெமிங்வேயின் உலகம். இந்த மூன்றும் அவரை எப்படித் தீவிரமாக ஆட்கொண்டன என்பதைப் படத்தில் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
இளமையில் ராணுவத்தில் சேர விரும்பிய ஹெமிங்வே ரெட் கிராஸ் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இத்தாலியப் போர்முனையில் காயம் பட்டவர்களை மீட்கும் பணியது. அப்படி ஒரு நாள் போர்க்களத்தில் இருந்தபோது குண்டுவெடிப்பிற்கு உள்ளாக்கி பலத்த காயம் அடைந்தார்.
அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் ஹெமிங்வே சிகிட்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஆறு மாதங்கள் கழித்தார் அங்கே பணியாற்றிய ஆக்னஸ் என்ற நர்ஸைக் காதலித்தார். அவளும் ஹெமிங்வேயை விரும்பினார். அந்தக் காதலே அவரது போரே நீ போ நாவலின் மையம்.
[image error]ஆனால் அக் காதல் கைகூடவில்லை. அவரை விலக்கி ஆக்னஸ் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஏமாற்றம் அவரைப் பெருங்குடிகாரராக மாற்றியது. தோற்றுப் போன காதலின் விளைவு அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அவர் நான்கு திருமணங்கள் செய்து கொண்ட போதும் எந்த உறவிலும் முழுமையான பற்று ஏற்படவில்லை. தனது உடல் இச்சைக்காகவே அவர் பெண்களை நாடினார் காதலித்தார். அவசரமாகத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் அமெரிக்காவின் முக்கிய எழுத்தாளர்களான டோபியாஸ் வுல்ஃப் உள்ளிட்ட பலரும் ஹெமிங்வே பற்றிய மதிப்பீடுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
ஹெமிங்வே தன்னைப் பற்றிய பிம்பத்தைத் தானே உருவாக்கினார். அந்தக் கட்டுக்கதைகள் மதுக்கூடங்களில் புகழ் பெறத்துவங்கின. ஒரு கட்டத்தில் அக்கதைகளை அவரே நம்ப ஆரம்பித்தார். அது போலவே நடக்கவும் செய்தார். இந்தப் பிம்ப உருவாக்கம் தன்னை மறைத்துக் கொள்ளச் செய்த தந்திரம். ஊடகங்களின் முன்பு அவர் நடித்தார். தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பெருக்கிக் கொள்ளும் எல்லா வழிகளையும் அவர் நன்றாக அறிந்திருந்தார். அவரது படைப்புகளில் வெளிப்படும் ஹெமிங்வே வேறு அவர் உருவாக்கிய பிம்பம் வேறு. இந்தப் பிம்ப உருவாக்கம் அவரை நிகரற்ற நாயகன் போல உருக்கொள்ளச் செய்தது. அதை வலிந்து அவரே உருவாக்கிக் கொண்டார்
[image error]ஏராளமான பணமும் பெயரும் புகழும் கிடைத்த போதும் அதை அவர் தனது பிம்பத்தைக் கைவிடவில்லை. இந்தக் கட்டுக் கதைகள் முழுவதும் பொய்யானவையில்லை. நிஜமாகவே சிங்க வேட்டைக்குப் போவதும் திமிங்கல வேட்டைக்குப் போவதுமாக இருந்த ஹெமிங்வே தன் கதைகளைப் போல விசித்திரமான நிகழ்வுகளைச் சொந்த வாழ்க்கையிலே நிகழ்த்தினார் அவரைப் போல விபத்துகளைச் சந்தித்த மனிதரில்லை.
அவரது காதல் திருமணங்களைப் பற்றியும் நண்பர்கள் மற்றும் பிள்ளைகளுடன் அவர் நடந்து கொண்ட விதம் பற்றியும் இந்த ஆவணப்படம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது.
யுத்தகாலத்தில் அவர் களத்தில் எவ்வாறு பணியாற்றினார். போர் முடிந்த போது அவர் எப்படி வெற்றி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் என்பதையும் காட்டுகிறார்கள்
இது போலவே காளைச் சண்டையில் அவருக்கு இருந்த ஈடுபாடு. குத்துச்சண்டையில் உருவான ஆர்வம். சிங்க வேட்டையில் காட்டிய வேகம் போன்றவற்றையும் குறிப்பிட்டுப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவரது காதலும் திருமணங்களும் விசித்திரமானவை. அவசரமான காதல் அவசரமான திருமணம், எதிர்பார்த்த விவாகரத்து என்கிறார் ஆண்டர்சன். அது உண்மையே.

சிகாகோவில் ஹாட்லி ரிச்சர்ட்சனை சந்தித்த முதல் நாளிலே அவரைத் தீவிரமாகக் காதலிக்கத் துவங்கிவிட்டார். ஹாட்லி ஹெமிங்வேயை விட எட்டு வயது மூத்தவர். அவரைப் போலவே தந்தையின் குணமூர்க்கத்தால் பாதிக்கப்பட்டவர். வசதி படைத்த ஹாட்லியை ஹெமிங்வே தொடர்ந்து பேசி சம்மதிக்க வைத்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கலைஞர்களாக வாழ்வதற்காகப் பாரிஸுற்கு சென்றார்கள்.
[image error]பாரீஸில் வசித்த நாட்களில் அங்கே இருந்த முக்கிய ஓவியர்கள். கலைஞர்கள். எழுத்தாளர்களுடன் நட்பு கொண்டார். வூடி ஆலனின் மிட் நைட் இன் பாரீஸ் திரைப்படம் பாருங்கள். அதில் இந்த நண்பர்கள் வட்டம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
.எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ், ஓவியர் பிகாசோ போன்றவர்களின் நட்பு அப்போது தான் உருவானது.
1927 இல் ஹாட்லியை விவாகரத்து செய்த ஹெமிங்வே மே மாதத்தில் பவுலின் பிஃபரை மணந்தார். அவரும் ஒரு பத்திரிக்கையாளரே,
ஹெமிங்வேயின் எழுதும் முறையைப் பற்றிச் சொல்லும் அவரது மகன் அவர் எழுத்தாளர்களுக்காகச் சொன்ன ஆலோசனை எதையும் பின்பற்றியதில்லை. பல நாட்கள் தூங்கி எழுந்தவுடன் எழுத துவங்கிவிடுவார். நிறைய நாட்கள் காலை துவங்கி இரவு வரை குடித்துக் கொண்டேயிருப்பார். அவருக்குச் சொந்தமாக ஒரு படகு இருந்தது. அதில் நண்பர்களுடன் கடலுக்குள் சென்று நாள் முழுவதும் குடித்துக் கொண்டேயிருப்பார். தனது பழைய நினைவுகளால் தான் அவர் வழிநடத்தப்பட்டார். அவரது கதைகள் யாவும் நினைவின் வெளிப்பாடே என்கிறார்
1939 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கியூபா சென்ற ஹெமிங்வே ஒரு விடுதியில் தங்கி எழுதி வந்தார். இந்த நாட்களில் மார்தா கெல்ஹோனுடன் காதல் உருவானது. இருவரும் ஒன்றாகக் காதல் வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அவர்கள் ஹவானாவிலிருந்து பதினைந்து மைல் தொலைவிலிருந்த “ஃபின்கா விகா” என்ற மாளிகைக்குக் குடிபெயர்ந்தார்கள். மிக அழகான வசிப்பிடம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே ஹெமிங்வே வசித்திருக்கிறார்.
இரண்டாம் உலக யுத்த செய்தியாளராக ஹெமிங்வே லண்டனுக்கு வந்தபோது, டைம் பத்திரிகை நிருபர் மேரி வெல்ஷை சந்தித்தார், அவருடன் புதிய காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாகச் செய்தி சேகரித்தார்கள். பயணம் செய்தார்கள். கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையிலிருந்த ஹெமிங்வேயை உடனிருந்து கவனித்துக் கொண்டார் மேரி.
இத்தனை காதல் திருமணங்கள் நடந்த போதும் அவர் வாழ்க்கையில் வெறுமையைத் தான் அதிகம் உணர்ந்தார். அவரது முக்கிய நாவல்கள் யாவும் திரைப்படமாக்கப்பட்டன. நிறையப் பணம் கிடைத்தது. நோபல் பரிசு உள்ளிட்ட அத்தனை கௌரவங்களும் கிடைத்தன. ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் நிம்மதியை அடையவில்லை. தீராத மனக்கொந்தளிப்புடன் இருந்தார். விரக்தியும் அலைக்கழிப்பும் குடியை அதிகப்படுத்தியது. இதற்காக மனநலச்சிகிட்சை எடுத்துக் கொண்டார். ஏப்ரல் 1961 இல் ஹெமிங்வே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கதைகளைப் போல எதிர்பாராத முடிவது.
தனது இறுதி ஆண்டுகளில் ஹெமிங்வேயின் செயல்பாடுகள் யாவும் அவரது தந்தையைப் போலவே இருந்தன என்கிறார்கள். தந்தையும் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்து போனார்.

இந்த ஆவணப்படத்தின் வழியே நாம் ஹெமிங்வேயின் தனித்துவத்தை, பலவீனங்களை, திறமையை, தீவிர செயல்பாட்டினை, உல்லாசத்தை, வீழ்ச்சியை அறிந்து கொள்கிறோம்.
ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை இவ்வளவு விரிவாக ஆவணப்படுத்தும் போது தான் நம்மால் அவரது ஆளுமையை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது
கிழவனும் கடலும் நாவலில் வரும் மீனவன் சாண்டியாகோ மீன்பாடுகள் கிடைக்காத போது பொறுமையாகக் காத்திருக்கிறான். ஆனால் அவனைப் போல ஹெமிங்வே ஒரு போதும் வாழ்க்கையில் எதற்காகவும் காத்திருந்ததில்லை. அவர் மோபிடிக்கை தேடிச் செல்லும் கேப்டன் அஹாப் போலவே தானிருந்தார். சில நேரங்களில் அவரே மோபிடிக் எனும் திமிங்கிலமாகவும் இருந்தார். அதுவே அவரது தனிச்சிறப்பு
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
