கடலில் ஒரு காதல்
நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான பால் வான் ஹெய்ஸேயின் “L’Arrabiata” சிறுகதையைக் காளி என்ற பெயரில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். உலகின் சிறந்த காதல்களில் இதுவும் ஒன்று. கதை எழுதப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகிறது. இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்
க.நா.சு மொழியாக்கம் செய்துள்ள உலக எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்க்கும் போது அவரது ஆழ்ந்த பரந்த வாசிப்பின் ஆர்வமும் ரசனையும் புலப்படுகிறது. இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான ஒரு கதையைக் கூட க.நா.சு மொழியாக்கம் செய்துவிடவில்லை. இந்தப் புத்தகங்கள் அவருக்கு எங்கே கிடைத்தன. எப்படி இதைத் தேடிப்படித்தார் என்ற ஆச்சரியம் தீரவேயில்லை. படிப்பதற்காகவே வாழ்ந்தவர் என்பதால் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களைத் தேடித்தேடிப் படித்திருக்கிறார்.

க.நா.சுவின் மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வதில்லை. அவர் கதையின் சாரத்தைத் தான் முதன்மையாகக் கொள்கிறார். வாசிப்பில் சரளம் இருக்க வேண்டும். அதே நேரம் கதையின் ஜீவன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.
க.நா.சு அறிமுகம் செய்து மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர்களில் பலரை அதன் முன்பு தமிழ் இலக்கிய உலகம் அறிந்திருக்கவில்லை. க.நா.சு வழியாகவே செல்மா லாகர்லெவ் அறிமுகமானார். அவர் வழியாகவே பால் வான் ஹெஸ்ஸே அறிமுகமாகியிருக்கிறார். அவர்களின் வேறு படைப்புகளை அதன்பின்பு யாரும் தேடி மொழியாக்கம் செய்யவில்லை. அது ஏன் என்று புரியவேயில்லை. அது போலவே இந்தக் கதைகள் நன்றாக இருப்பதாகப் பாராட்டு கிடைத்தபோதும் அவரது மொழியாக்க நூல்களுக்கு விரிவான விமர்சனங்கள் எழுதப்படவில்லை. இன்று வரை மதகுரு நாவல் பற்றி விரிவாக யாராவது எழுதியிருக்கிறார்கள் என்று தேடிக் கொண்டுதானிருக்கிறேன். உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று கெஸ்டாபெர்லிங் சாகா. அதை மதகுரு என்று க.நா.சு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இது போலவே தான் பால்வான் ஹெஸ்ஸேயும் அவரது “L’Arrabiata” சிறுகதை பல்வேறு உலகச்சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இதை எழுதிய போது அவருக்கு வயது இருபத்திமூன்று. கதை இத்தாலியில் நடக்கிறது. இதன் தலைப்புப் பிரெஞ்சில் உள்ளது. தலைப்பின் பொருள் கோபக்காரப் பெண் அல்லது கோபக்காரி. அதைக் காளி என்று மாற்றியிருக்கிறார் க.நா.சு.

பால்வான் ஹெஸ்ஸே பனிரெண்டு நாவல்களையும் அறுபது நாடகங்களையும் நூற்றியம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். 1910 ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் நேரில் சென்று பரிசைப்பெறவில்லை.
காளி என்ற இந்தக் கதையில் மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள். காப்ரித் தீவிற்குச் செல்லும் பாதிரி. படகோட்டும் அன்டோனியோ, அந்தப் படகில் பயணம் செய்யும் லாரெல்லா, இவர்களோடு லாரெல்லா வழியாக நினைவு கொள்ளப்படும் அவளது அம்மா, இந்தப் படகு பயணத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கிழவி. காப்ரித் தீவில் உள்ள மதுவிடுதி. அதன் உரிமையாளராக உள்ள பெண் மற்றும் அவளின் கணவன். கதை ஒரு நாளில் நடக்கிறது. கதையின் பெரும்பகுதி கடலில் நடக்கிறது

எல்லாக் காதல்கதைகளையும் போலவே காதலை மறைத்துக் கொண்டிருக்கும் ஆணின் தவிப்பு தான் கதையின் மைய உணர்ச்சி. இந்தக் கதை பாதிரி ஒருவர் காப்ரித் தீவிற்குச் செல்வதில் துவங்கி பாதிரியின் குரலோடு நிறைவு பெறுகிறது
இடையில் நடப்பது அழகான காதல் நாடகம். ஆண்களை வெறுக்கும் இளம் பெண் லாரெல்லா திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறாள். இதற்குக் காரணம் அவளது அப்பா. அவர் அம்மாவை அடித்து உதைத்து மோசமாக நடத்தியது அவள் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்து போய்விடுகிறது. ஆகவே அவளைத் தேடி வந்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஓவியன் ஒருவனைக் கூட அவள் மறுத்துவிடுகிறாள்.
இதைப்பற்றிப் பாதிரி விசாரிப்பதில் தான் கதை துவங்குகிறது. லாரெல்லா தானும் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு அடி உதை பட விரும்பவில்லை. ஆகவே தனக்கு யார் மீது காதல் கிடையாது என்கிறாள். ஆனால் அவளை ரகசியமாகக் காதலிக்கும் படகோட்டி அன்டோனியா அவளுக்காகவே காத்திருக்கிறான். அவள் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று நம்புகிறான். ஆனால் அவனிடமும் கோபமாகவே பேசுகிறாள் லாரெல்லா. படகு காப்ரித் தீவிற்குப் போகிறது. தான் கொண்டு சென்ற பட்டுநூல்களை விற்பதற்காக லாரெல்லா கரையேறிப் போகிறாள். அவள் திரும்பி வரும்வரை அன்டோனியோ மதுவிடுதி ஒன்றில் காத்திருக்கிறான்
அவள் திரும்பி வருகிறாள். இருவரும் ஒன்றாகப் படகில் பயணம் செய்கிறார்கள். நடுக்கடலில் படகை நிறுத்திவிட்டு தன் காதலை வெளிப்படுத்துகிறான் அன்டோனியோ. அவள் அந்தக் காதலை ஏற்க மறுக்கிறாள். சண்டையிடுகிறாள். அவளைக் கட்டியணைக்கிறான் அன்டோனியா. அவனது கையைக் கடித்துவிடுகிறான். ரத்தம் சொட்டுகிறது. அன்டோனியோவிடமிருந்து தப்பிக்கக் கடலில் குதித்து நீந்துகிறாள். மன்னிப்பு கேட்டு அவளை மீண்டும் தன் படகில் ஏற்றுக் கொள்கிறாள்
அன்டோனியோவின் காதல் என்னவானது என்பதைக் கதையின் பிற்பகுதி அழகாகச் சித்தரிக்கிறது.
லாரெல்லாவின் பிடிவாதம். தந்தையின் மீதான ஆழமான வெறுப்பு. தாயின் மீது கொண்டுள்ள பாசம். அவளைத் தேடி வரும் ஓவியனின் சிரிப்பில் தந்தையின் நிழலைக் காணுவது என அழகான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறாள்

அன்டோனியா அற்புதமான இளைஞன். காதலை எவ்வளவு நாள் தான் மனதிலே மறைத்து வைப்பது. படகில் அவளுக்காக ஆரஞ்சு பழங்களைத் தருகிறான். அதைக் கூட அவள் ஏற்கமறுக்கிறாள். அந்த நிராகரிப்பைத் தாங்க முடியாமல் தான் நடுக்கடலில் படகை நிறுத்திவிட்டு அவளை அடைய முற்படுகிறான். பின்பு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள்
கதையின் துவக்கத்தில் லாரெல்லாவை இளைஞர்கள் கேலி செய்கிறார்கள் அவள் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவளது தந்தை அம்மாவைக் கோபத்தில் அடித்து உதைக்கவும் செய்வார். அடுத்த சில நிமிஷங்களில் கட்டிக் கொண்டு முத்தமழை பொழியவும் செய்வார். இந்த மூர்க்கத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை
ஆனால் கதையில் தந்தையைப் போலத் தான் லாரெல்லா நடந்து கொள்கிறாள். கோபத்தை வெளிப்படுத்திய அவள் தான் அன்பையும் வெளிக்காட்டுகிறாள். பாதிரியார் ஒருமுறை அவளிடம் சொல்கிறார்
உன் தாய் உனது தந்தையை மன்னித்துவிட்டார். நீ தான் அந்த வெறுப்பை மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறாள்
இது தான் கதையின் மையப்புள்ளி. இந்தப் புள்ளி தான் கதையில் உருமாறுகிறது.
மதுவிடுதியில் நடக்கும் உரையாடலும் கிழவியின் பார்வையில் சொல்லப்படும் விஷயங்களும் வாசகர்களுக்கு அன்டோனியா மற்றும் லாரெல்லாவின் இயல்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன.

கதையில் வரும் லாரெல்லாவின் தந்தை தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தையை நினைவுபடுத்துகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் தாய் எழுதியுள்ள குறிப்பில் அவரது கணவரைப் பற்றி இது போன்ற சித்திரமே காணப்படுகிறது. லாரெல்லாவின் கடந்தகாலம் அவளது நிகழ்காலத்தை வழிநடத்துகிறது. அவளைத் தற்செயலாக வீதியில் சந்திக்கும் ஒரு ஒவியன் அவளது அழகில் மயங்கி அவளைப் படம் வரைய ஆசைப்படுகிறான். அதை லாரெல்லாவின் அம்மா மறுக்கிறாள். அவன் லாரெல்லாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அதை லாரெல்லா ஏற்கவில்லை.
காரணம் அவனிடம் தந்தையின் சாயல்களைக் காணுகிறாள். அதை நினைத்துப் பயப்படுகிறாள். ஓவியனின் வழியே லாரெல்லாவின் அழகைப் பால் வான் ஹெஸ்ஸே குறைந்த சொற்களில் அழகாக உருவாக்கி விடுகிறார். கதையில் வரும் சிறிய கதாபாத்திரங்கள் கூட அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அன்டோனியோ நீண்டகாலமாகவே லாரெல்லாவை காதலித்து வருகிறான். அது அவளுக்கும் தெரியும். கதையின் துவக்கத்தில் அவள் படகில் ஏறும்போது அவன் தனது சட்டையைக் கழட்டி அவள் உட்காருவதற்காகப் பலகையில் போடுகிறான். அவள் அந்தச் சட்டையை ஒதுக்கித் தள்ளிவிட்டு உட்காருகிறாள். இந்த நிகழ்ச்சி பாதிரி முன்னாலே நடக்கிறது. அவருக்கும் அன்டோனியோவின் காதல் தெரிந்திருக்கிறது. அவரும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறார். ஆனால் லாரெல்லாவின் மனதை அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லை.
கடலில் அவர்கள் படகு செல்லும் காட்சி சினிமாவில் வருவது போல அத்தனை துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரியனைத் தனது கைகளைக் கொண்டு லாரெல்லா மறைத்துக் கொள்வது அபாரம்.
உண்மையில் லாரெல்லா தன்னைக் கண்டு தானே பயப்படுகிறாள். மற்ற இளம்பெண்களைப் போலக் காதல் வசப்பட்டுவிடுவோம் என்று நினைக்கிறாள். அவளது கோபம். உதாசீனம் எல்லாமும் அவள் அணிந்து கொண்ட கவசங்கள். அது கடைசியில் கலைந்து போகிறது
பால் ஹெய்ஸே1830 இல் பெர்லினில் பிறந்தார். அவரது தந்தை தத்துவவியலாளர் கார்ல் வில்ஹெல்ம் ஹெய்ஸே,. அவரது அம்மா ஒரு யூதர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்ற பால் வான் ஹெய்ஸே அதில் முனைவர் பட்டம் பெற்றார் ஜெர்மனியைப் போலவே இத்தாலியிலும் ஹெய்ஸே பிரபலமாக விளங்கினார். அவரது படைப்புகள் விரும்பி வாசிக்கப்பட்டன.
இன்றைய காதலோடு ஒப்பிட்டால் இந்தக் காதல் கதை எளிமையானது. ஆனால் லாரெல்லாவும் அன்டோனியோவும் போன்ற காதலர்கள் இன்றுமிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கடந்தகாலம் அவளது நிகழ்காலக் காதலை தடுத்து வைத்திருக்கும் என்பது மாறாத உண்மையாக வெளிப்படுகிறது. அது போலவே அவளை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் அன்டோனியோ தாங்கமுடியாத ஒரு தருணத்தில் வெடித்துவிடுகிறான். அவளைக் காதலிக்க அவளது சம்மதம் தேவையில்லை என்கிறான். அவளது கோபம் அதிகமாகிறது. சண்டையிட்டுக் கடலில் குதித்துவிடுகிறாள். ஆனால் உடனடியாக அன்டோனியா தன் தவற்றை உணர்ந்துவிடுகிறான். அவளைத் தன் படகில் ஏற்றிக் கொண்டு மன்னிப்பு கேட்கிறாள். லாரெல்லாவும் மாற ஆரம்பிக்கிறாள். இரும்பும் ஒரு குறிப்பிட்ட உஷ்ணத்தில் உருகத்தானே செய்கிறது.
ஆரஞ்சு பழங்கள் அவனது ஆசையின் அடையாளமாக மாறுகின்றன. பட்டுநூல்கள் அவளது ஆசையின் அடையாளமாகின்றன. லாரெல்லா வருவதற்காக அன்டோனியா காத்திருக்கும் நிமிஷங்கள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. அவன் குழப்பமடைகிறான். எங்கே வராமல் போய்விடுவாளோ என்று நினைக்கிறான். அவளோடு தனித்துத் திரும்பும் பயணத்திற்காக ஏங்குகிறான். அது தான் காதலின் உண்மையான வேட்கை. வலி.
பால் வான் ஹெஸ்ஸேயின் இப்படி ஒரு கதையை வாசித்தபிறகு அவரது மற்ற கதைகளை, நாவல்களை ஏன் தமிழில் மொழியாக்கம் செய்யாமல் போனார்கள் என்று வியப்பாகவே இருக்கிறது. க.நா.சு அடையாளம் காட்டிய திசையில் ஏன் பலரும் பயணிக்கவில்லை. ரஷ்ய இலக்கியங்கள் தீவிரமாகத் தமிழில் அறிமுகமாகி வந்த சூழலில் ஐரோப்பிய இலக்கிய உலகின் சிறந்த படைப்புகளை க.நா.சு அறிமுகம் செய்திருக்கிறார். மொழிபெயர்த்திருக்கிறார். அந்தப் புதிய ஜன்னல் வழியே முற்றிலும் புதிய கதைகள் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றன. இது மகத்தான பணி.
காளி என்ற தலைப்பு இன்று ஏற்புடையதாகவில்லை. காளி போலத் தலைமயிரை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று கிராமப்புறத்தில் சொல்வார்கள். அந்த நினைப்பில் இந்தத் தலைப்பை உருவாக்கியிருக்கக் கூடும். ஆனால் வாசகன் காளி என்ற உடனே வேறு ஒரு மனப்பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டுவிடுகிறான்.
புதுமைப்பித்தன் ,க.நா.சு இருவர் தேர்வு செய்து மொழியாக்கம் செய்துள்ள கதைகளிலும் அழுத்தமான கதாபாத்திரங்களும் சிறந்த உணர்ச்சி வெளிப்பாடும் காணப்படுகின்றன. தமிழ் வாழ்க்கையோடு நெருக்கமாக உள்ள கதைகளை அவர்கள் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அந்தக் கதைகளின் மைய நிகழ்வுகள். செயல்பாடுகள் வேறாக இருந்தாலும் ஒரு தமிழ் வாசகன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் புள்ளிகள், நிகழ்வுகள் அந்தக் கதைகளில் இருப்பதை உணரமுடிகிறது. தனது சொந்தப் படைப்புகளுடன் இவர்கள் செய்துள்ள மொழியாக்கங்கள் தமிழுக்கு பெரும் கொடையாகவே அமைந்திருக்கின்றன.
காளி கதையை இதுவரை வாசிக்கவில்லை என்றால் உடனே வாசித்துவிடுங்கள்.
லாரெல்லா படகிலிருந்து துள்ளி இறங்குவதும் படகில் ஏறுவதும் நம் கண்முன்னே காட்சியாக விரிகின்றன. அன்டோனியோவைப் போலவே நாமும் அவளைக் காதலிக்கத் துவங்கிவிடுகிறோம்
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
