S. Ramakrishnan's Blog, page 127
May 29, 2021
மெளனியுடன் கொஞ்ச தூரம்
திலீப்குமார்

எழுத்தாளர் திலீப்குமார் மெளனியின் படைப்புலகம் குறித்து ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன நூலை எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மிக முக்கியமான நூல் அந்த நூலின் துவக்கத்தில் திலீப்குமார் தனது இலக்கியப்புரிதலை அழகாக வரையறை செய்து கொண்டிருக்கிறார்.
••••

மௌனியைப் பற்றிப் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாகத் தூஷிக்கவும் பலர் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், அவரைப் பாராட்டுபவர்களும் ரொம்பவும் தீவிரமான சொற்களைக் கொண்டு பாராட்டுகின்றனர். இத்தகைய அபிப்பிராயங்களில் பாரபட்சங்களை நாம் ஒதுக்கியே விடவேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இவை அவரவர் தம்தம் அறிவுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் வரித்துக்கொண்ட தீவிரமான எண்ணங்களைச் சார்ந்தவை. இவற்றை நாம் முழுதாக ஏற்கவேண்டியதில்லை.
என்னைப் பொறுத்தவரையில், ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ, புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டான் என்றே நினைக்கிறேன். மாறாக இலக்கியத்தில் வரையரைகளையும், வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாக இருப்பான். நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனால், ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பில், சமூகப் பார்வையின் இருப்பையோ, இல்லாமையையோ, அழகியல் நுட்பத்தின் உயர்வையோ தாழ்வையோ நிச்சயமாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இக்கூறுகளின் மிகுதியோ குறைவோ அவனை விசேஷமாகப் பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
என்னதான் படப்பாளியின் இமையருகே சென்று பார்த்தாலும் தான் படைப்பாளியின் கோணத்தில் உலகைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்தவனாக அவர் இருப்பான். அதேபோல், படைப்பாளியின் கோணத்திலிருந்து காட்டப்படும் உலகமே சர்வ நிச்சயமானது என்று ஆவேசம் கொண்டோ, சுருங்கியோ விடமாட்டான். அவர் ஒவ்வொரு படைப்பாளிக்கும் (அப்படப்பாளியின்) அவனது கலமட்டத்திற்கும் ஏற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டே வாசிப்பதில் ஆழ்கிறான்.
உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவச் சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா? உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம்.
இவ்வகையில் பார்க்கும்போது, பல்வேறு தத்துவச் சார்புடைய பல்வேறு எழுத்தாளர்களிடையே – இவர்களுக்கிடையே காணப்படும் வேற்றுமைகளையும் மீறி – ஒற்றுமைக்கான ஏதோவொரு அம்சம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த ஒற்றுமைக்கான அம்சம் என்ன? கொகோலுக்கும், எக்சூபெரிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன? தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, டால்ஸ்டாய், செகாவ், காஃப்கா, காம்யு, ஜேக் லண்டன், மார்க்வெஸ் போன்ற பலரிடமும் காணக்கிடைக்கும் ஒரே விஷயம், ஒரே வசீகரம்தான் என்ன?
இந்த எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை கொண்டிருந்தார்கள் என்பது மட்டும்தானா? இல்லை என்றே தோன்றுகிறது. இதையும் மீறிய ‘ஏதோவொன்று’ இருக்கவேண்டும். வாழ்க்கையின் மீது தீவிரமான அக்கறை என்பதைத் தவிர இவர்களது இலக்கியச் செயல்பாடுகளுக்குப் பின்னிருந்து இயக்கிய ஒரு ‘அற இயல்பு’ என்ற விஷயமும் இருந்திருக்கவேண்டும் என்று நான் கொள்கிறேன். இந்த ‘அற இயல்பு ’ தான் இவர்களுக்கிடையேயான ஒற்றுமைக்கான முதன்மையான அம்சம். தன்மையிலும் தத்துவச் சார்புகளிலும் மிகவும் மாறுபட்ட பல எழுத்தாளர்களிடையே காணப்படும் ஒற்றுமை இந்த ‘அற இயல்பு’ தான். மேலும் இந்த ‘அற இயல்பு’ தன்னளவில் தன்மையற்றதே என்றும் நான் கூறுவேன். இது ஒவ்வொரு படைப்பாளியிடமும் அவனது கலை இயபுக்கும், திறமைக்கும், அவன் செயல்பட்ட கால, சமூக, அரசியல், இலக்கியப் பின்னணிக்கும் ஏற்ப அவனுள் விகசிக்கிறது. எழுத்தாளர்கள் பலராகவும் பல பார்வை கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் ஒரு சில பரிமாணங்களிலேயே கவனம் செலுத்தியவர்களாக இருந்திருப்பினும், இந்த ‘அற இயல்பை’ இந்த ஒற்றுமைக்கான அம்சத்தை நாம் எல்லோரிடமும் காண்கிறோம்.
ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களில், அவன் காட்டும் வாழ்க்கைப் பரிமாணங்களில் அவனது சார்பு நிலைகளில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் ஆவல் உண்மையில் நான் மேலே சொன்ன ‘அற இயல்பின்’ மீது ஏற்படும் மதிப்புதான். இந்த அற இயபு அதுவே ஒரு பண்பு எனவும், அது சார்ந்திருக்கும் ஏனைய விஷயங்கள் இரண்டாம் பட்சமானவையே என்றும் நான் கொள்கிறேன்.
மௌனியின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது, மேலே சொன்ன வகையிலேதான் அவற்றைக் கணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மௌனி ரொம்பவும் குறுகிய ஒரு வட்டத்திற்கான எழுத்தாளராகச் சுருங்கியிருப்பினும், அவரிடமும் நான் மேற்குறித்த ‘அற இயல்பின்’ உந்துதலைக் காண்கிறேன். மேலெழுந்தவாரியான தத்துவச் சார்புகளையும், மேலெழுந்தவாரியான அழகியல் உணர்வுகளையும் தாண்டி வந்து நாம் பார்க்கும் பொழுதே மௌனிக்குரிய மதிப்பை நம்மால் அளிக்கமுடியும்.
நன்றி
மௌனியுடன் கொஞ்ச நேரம் . வானதி பதிப்பகம்.
May 27, 2021
மணிகௌல்
1983ம் ஆண்டு மணிகௌல் இயக்கிய மிகச்சிறந்த ஆவணப்படம் Dhrupad. ஹிந்துஸ்தானி இசையின் மேன்மையைச் சொல்லும் இந்தப்படம் மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதன் இசை மெய்மறக்க செய்கிறது
துருபத் என்பது ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையின் மிகப் பழமையான வடிவமாகும், தலைமுறை தலைமுறைகளாகப் பாடிக்கொண்டிருக்கும் ஹிந்துஸ்தானி பாடகர்கள் இந்த மரபை அப்படியே தொடருகிறார்கள்.
தியானத்தின் போது நாம் அடையும் அமைதியை, சந்தோஷத்தை இந்தப்படமும் நமக்குத் தருகிறது
ஆயிரம் கதைகளின் நாயகன்
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அனைவரும் காத்திருந்த வேளையில் இந்த மண்ணுலகவாழ்வு போதும் என்று உதறி விடைபெற்றுவிட்டார்.
விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார்.
இந்த வாழ்க்கையைத் தேனை ருசித்துச் சாப்பிடுவது போலத் துளித்துளியாக அனுபவித்து வாழ்ந்தார்.
கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப் போல விரிவாக எழுதியவர் எவருமில்லை..

மக்களின் பேச்சுமொழியை இலக்கியமொழியாக மாற்றியவர் கிரா. அவரது பேச்சிற்கும் எழுத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. மனிதர்களைப் போலவே நிலமும் நினைவுகள் கொண்டது. கரிசல் நிலத்து வாழ்க்கையின் அழியாத நினைவுகளை அடையாளம் கண்டுவெளிப்படுத்தும் கதைசொல்லியாகக் கிரா விளங்கினார்.
அவரது கதைகளில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் அசலானவை. மண்ணிலிருந்து பிறந்தவை.ஊரை நினைவு கொள்ளுவது என்பது வெறும் ஏக்கமில்லை. ஒரு வாழ்க்கை முறையை, தனித்துவத்தை. இயற்கையை இழந்துவிட்டதன் வெளிப்பாடு.
அவரது பேச்சிலும் எழுத்திலும் உணவு முக்கியமான அம்சமாக இருந்தது. அதைப்பற்றிப் பேசாமல், எழுதாமல் அவரால் இருக்கமுடியாது.
காரணம்பசியும் ருசியும் தானே கிராமத்து வாழ்க்கையின் ஆதாரம்.
நாட்டுப்புற கதைகளை இலக்கியமாக யாரும் அங்கீகரிக்காத காலத்திலே அவற்றைத் தேடித் தொகுத்து ஆய்வு செய்தவர் கிரா. அது போலவே கரிசல் வட்டார சொற்களுக்கென ஒரு அகராதியினைத் தொகுத்திருக்கிறார். தமிழில் அது ஒரு முன்னோடி முயற்சியாகும்.
மின்சாரம், தேயிலை, டார்ச்லைட், மோட்டார்பம்ப், டிராக்டர், கிராமபோன், கார், தந்தி, தொலைபேசி எனத் துவங்கி கிராமத்திற்குள் வருகை தந்த புதிய விஷயங்களை, அதனால்ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்களை, சுதந்திரப்போராட்ட கால நினைவுகளை, தென்தமிழக அரசியல் பொருளாதார மாறுதல்களைத் தனது படைப்பில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மாற்றத்தை வரவேற்பதும் அதன் விளைவுகளை அடையாளம் காணுவதும் நவீனத்துவத்தின் முக்கிய அம்சம். அந்த வகையில் நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்கக் குரலாகவே கி.ரா ஒலித்தார்.
குடும்பத்தில் ஒரு நபர் என்றொரு சிறுகதையைக் கிரா 1963ல் எழுதியிருக்கிறார்.
தொட்டண்ணன் என்ற கரிசல் விவசாயி காளை மாடு ஒன்றை வைத்திருக்கிறான். அது தான் அவனது சொத்து. இரவல் மாடு ஒன்றை வாங்கிஇந்த இரண்டினையும் பூட்டி ஏர் உழுது விவசாயம் செய்கிறான். அந்த மாட்டினை கணவனும் மனைவியும் தங்களின் பிள்ளை போலக் கவனிக்கிறார்கள். ஒரு நாள் அந்த மாடு நோயுறுகிறது. நாட்டுவைத்தியரிடம் மருந்து வாங்கித் தருகிறார்கள்.
ஆனால் குணமடையவில்லை. பக்கத்து டவுனில் உள்ள வெட்னரி டாக்டரை அழைத்து வரப்போகிறான் தொட்டண்ணன் கிராமத்திற்கு வந்து சிகிச்சை செய்ய ஜீப் வசதியில்லை என்றுகாரணம் சொல்லி மருத்துவர் வரமறுத்துவிடுகிறார். ஏமாற்றத்துடன் தொட்டண்ணன் ஊர் திரும்பும் போது மாடு இறந்துவிட்ட செய்தி கிடைக்கிறது.
தொட்டண்ணனும் அவன் மனைவியும் அழுது புலம்புகிறார்கள். தங்கள் சொந்த நிலத்திலே மாட்டைப் புதைக்கிறார்கள். இப்போது உழுவதற்கு அவனிடம் மாடில்லை. வேறுவழியின்றி அவனே மாடு போல நுகத்தடியை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு உழவு செய்யப்போகிறான்.
இதைக் கண்ட அவன் மனைவி கண்ணீருடன் தலைகவிழ்ந்து இருப்பதாகக் கதை முடிகிறது.
விவசாயியின் துயரத்தை அழுத்தமாகச் சொல்லிய இந்தப் படைப்பு வெளியாகி ஐம்பத்தியெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கிறது. ஆனால் விவசாய வாழ்க்கை இன்றும் மாறவேயில்லை.
கைவிடப்பட்ட கிராமத்து விவசாயிகளின் உரிமைக்குரலாகவே கிரா எப்போதும் ஒலித்தார்.கிராமத்தை அவர் சொர்க்கமாகக் கொண்டாடவில்லை.
அங்கு நிலவும் சாதியக் கொடுமைகள். நிலஉரிமையாளர்களின் கெடுபிடிகள். தீண்டாமை, பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள். கிராமியக் கலைஞர்களின் வீழ்ச்சி. அரசாங்க அதிகாரிகளின் அலட்சியம் எனக் கிராமம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளையும் துல்லியமாகத் தனது படைப்பில் விவரித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளின் போதுஅவரைக் காணுவதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அவரது ஆசிகளைப் பெற்றேன்.
அன்று தான் எழுத இருக்கும் ஒரு நாவலின் கதையைப் பகிர்ந்து கொண்டார்.சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் கிருஷ்ணர் பிறந்த மதுராவில் இருந்த கோசாலைகளில் அதிகமான பசுகள் சேர்ந்துவிட்டன. ஆகவே அவற்றைப் பராமரிக்க முடியாமல் ஒரு கூட்ஸ் ரயிலில் ஏற்றி தெற்கே அனுப்பி வைக்கிறார்கள். அப்படிக் கரிசல் நிலத்திற்கு வந்து சேரும் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வதற்காக ஒரு இளைஞனை நியமிக்கிறார்கள். அந்தப் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் இளைஞனின் வாழ்க்கையை. அவனுக்கு உதவி செய்த ஒரு பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்லிக் கொண்டே போனார்.
எழுதி முடித்த ஒரு நாவலைப் பற்றிப் பேசுவது போலவே இருந்தது.
இதை எல்லாம்எழுதிவிட்டீர்களா என்று கேட்டேன். எழுத வேணும். இப்படி ஆயிரம் கதைகள் மனதில்இருக்கிறது. இருக்கிற வரைக்கும் எழுதிக்கிட்டே இருக்க வேண்டியது தானே என்று உற்சாகமாகச் சொன்னார்.
இந்த உற்சாகம் அபூர்வமானது.
முதுமையில் பலரும் நினைவு தடுமாறி சொந்தபிள்ளைகளின் பெயர்களை மறந்துவிடுகிறார்கள். நடக்க முடியாமல் படுக்கையில் கிடக்கிறார்கள். தனது உடல்நிலையைப் பற்றியே சதா புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் கிராவிடம் கிடையாது.இதற்கு ஒரே காரணம் அவரது இலக்கியப் பரிச்சயம் மற்றும் வாழ்க்கையிடமிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடங்கள். அவரது வலிமையான மனவுறுதி.
பெருந்துயரங்களைக் கடந்துவந்த துணிச்சல் முதுமையிலும் உற்சாகமாக நாட்களை கழிக்கச் செய்தது. அதனால் தான் தனது 98 வயதிலும் நாவல் எழுதிவெளியிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களிலும் அவர் எழுதிக் கொண்டு தானிருந்தார். உண்மையில் அது ஒரு கொடுப்பினை. எழுத்தாளர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கே இப்படியான வாழ்க்கை அமையும்.
கிராவின் சிரிப்பு அலாதியானது. மழைக்குப் பின்பு வரும் வானவில் போல யோசனைக்குப் பிறகு அவர் முகத்தில் சிரிப்பு துளிர்ப்பதைக் கண்டிருக்கிறேன்.
சொந்தவாழ்க்கையின் நெருக்கடிகளைப் பற்றி ஒரு போதும் அவர் பேசியதில்லை. பெரிய வீடு கட்டி வசதியாக வாழவேண்டும் என்ற கனவே அவரிடமில்லை. கடைசி வரை அரசு குடியிருப்பு ஒன்றில் தான் வாழ்ந்தார்.“இசையும் இலக்கியமும் துணையிருக்கும் மனிதனுக்குத் தனிமையைக் கண்டு ஒரு போதும் பயமிருக்காது” என்றே கிரா சொல்வார்.அது உண்மை
அவர் வாழ்க்கை முழுவதும் இசை கூடவே இருந்தது. முறையாகக் கர்நாடகசங்கீதம் கற்றுக் கொண்டவர் கிரா. ரேடியோவிலும் கிராமபோன் ரிக்கார்ட்டுகளிலும் சிறந்த இசையைக் கேட்டிருக்கிறார். தனது கடைசி நாட்களில் கூட அவர் நாள் முழுவதும் நாதஸ்வரம் கேட்டுக் கொண்டிருந்தார் என்கிறார்கள்.
கிராவின் இடைசெவலில் தான் நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் பெண் எடுத்திருந்தார். தங்கள் ஊர் மாப்பிள்ளை என்பதால் அருணாசலம் அவர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கிரா. விளாத்திகுளம் சாமிகள் என்ற அபூர்வமான சங்கீதமேதையிடம் இசை பயின்றவர் கிரா.
கரிசல் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு உன்னதமான இசையை எங்கே போய்க் கேட்க முடியும். பறவைகளின் ஒலியும் மயிலின் அகவலும்தான் இசை. மண்ணின் இசையை ஆழ்ந்து உள்வாங்கி அந்த மனிதர்களுக்கு நாதஸ்வரம் தான் மண்ணின் இசையாக ஒலித்தது. மேளமும் நாதஸ்வரமும் இணைந்து அந்த மண்ணின் ஆன்மாவை வெளிப்படுத்தின.
இசைஞானி இளையராஜாவோடு கிராவிற்குநெருக்கமான நட்பும் தோழமையும் இருந்தது.இசை குறித்து அவர்கள் நிறைய உரையாடியிருக்கிறார்கள். தான் கேட்டு ரசித்த சங்கீதங்களைப் பற்றிக் கிரா பேசும் போது அவர் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அபூர்வமானது.
அந்த இசையின் அமுத துளிகளை நாமும் ருசிப்பது போலச் செய்துவிடுவார்.
இடதுசாரி இயக்கங்களுடன் நெருக்கமான தோழமை கொண்டிருந்த கிரா ரஷ்ய இலக்கியங்களின் மொழியாக்கங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். விவசாயிகளின் உரிமைக்காக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார்.
அந்த நாட்களில் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு விவசாய வேலைகளையும் பார்த்துதான் எவ்வாறு கஷ்டப்பட்டேன் என்று கிராவின்துணைவியார் கணவதி விரிவாக எழுதியிருக்கிறார். அதை வாசிக்கையில் கண்ணீர் கசிகிறது.
ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனதுகுடும்பச் சூழல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.இலக்கியவாசிப்பினையும் எழுத்தையும் அவ்வளவு சீக்கிரமாக வீடு அங்கீகரித்து விடுவதில்லை.
குடும்பப் பிரச்சனைகளின் காரணமாக இலக்கியம் படிப்பதை கைவிட்டவர்கள், எழுதுவதை நிறுத்திக்கொண்ட பலரை நான் அறிவேன். அரிதாகச் சிலருக்கே நல்ல துணையும் எழுதுவதற்கான சூழல்கொண்ட வீடும் அமைகிறது.
கிராவிற்கு அப்படியான துணையாக இருந்தார் கணவதி அம்மாள். விருந்தோம்பலில் அவர்களை மிஞ்ச ஆள் கிடையாது. அவர்கள் வீடுதேடிச் சென்று உணவு உண்ணாத படைப்பாளிகளே இல்லை என்பேன். கணவதி அம்மாளைப் பற்றிக் கிராவின் இணைநலம் என்றொரு நூல் வெளியாகியிருக்கிறது. அதில் அவர் கிராவின் எழுத்திற்கு எவ்வாறு பக்கபலமாக இருந்தார் என்பது விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
கோபல்லகிராமம் ‘கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டும் கரிசல் வாழ்க்கையை உண்மையாகப் பதிவு செய்த அபூர்வமான படைப்புகள். இனவரலாற்றின் ஆவணமாகவும் இதைக் கருதலாம்.
கரிசல் நிலம்தேடி தஞ்சம் புகுந்த குடிகளின் கதையைச் சொல்லும் இந்தப்படைப்பு நூற்றாண்டின் கதையைச் சொல்கிறது. மங்கத்தாயாரு அம்மாளும் சென்னாதேவியும் மறக்கமுடியாதவர்கள். இந்த நாவலில் காலனிய ஆட்சியைக் கிராமம் எப்படி ஏற்றுக் கொண்டது என்பது பதிவாகியிருக்கிறது.
பள்ளிக்கூடம் சென்று படிக்காத கிரா புதுவைப்பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அவர் புதுவைக்கு இடம்மாறி சென்றபோது ஊரே வியப்பாகப் பார்த்தது. ஆனால் பாரதியை புதுவை ஏற்றுக் கொண்டது போலவே கிராவையும் புதுவை மண் தனதாக்கிக் கொண்டது. தன் கடைசி நாள் வரை அங்கே தான் வாழ்ந்தார்.
புதுவையில் வாழ்ந்தபோதும் அவரது மனதும் நினைவுகளும் ஊரையே சுற்றி வந்தன. பந்தயப்புறாக்களை எங்கே கொண்டுபோய்விட்டாலும் தன் வீடு தேடி திரும்பிவிடும் என்பார்கள். அப்படித்தான் கிராவும் இருந்தார்.அவரது எழுத்தும் பேச்சும் ஊரைப்பற்றியதாகவே இருந்தது.
தனது சமகாலப்பிரச்சனைகள், அரசியல், பண்பாட்டு மாற்றங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்தார். அவரது படைப்பில் வரும் பெண்கள் வலிமையானவர்கள். குடும்பத்தைத் தாங்கிச் சுமப்பவர்கள். அளவில்லாத அன்பு கொண்டவர்கள்.
கிராமத்து மனிதர்களின் பலவீனங்களையும் அறியாமையையும் சஞ்சலங்களையும் வெளியுலகம் பற்றிய பயத்தையும் கிரா வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கிறார்
.தன்னைப் போலவே கரிசல் நிலத்திலிருந்து நிறைய இளம்படைப்பாளிகள் உருவாகக் கிரா காரணமாகயிருந்தார். அவரது முன்னெடுப்பில் கரிசல்கதைகள் என்ற தொகை நூல் வெளியானது. அதுவே கரிசல் எழுத்தாளர்கள் என்ற மரபு உருவாகக் காரணமாக அமைந்தது.
கடித இலக்கியங்களுக்கு அவரே முன்னோடி. தன் நண்பர்களுக்குள் தொடர்கடிதப்போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறார். ரிலே ரேஸ் போல மாறி மாறி கடிதங்கள் செல்வது வழக்கம். கரிசல்காட்டு கடுதாசி என அவர் விகடனில் எழுதிய தொடரின் வழியே கரிசல் நிலத்தின் மீது பெருவெளிச்சம் பட்டது. தமிழ் மக்கள் இந்த மண்ணையும் மக்களையும் அறிந்து கொண்டார்கள்.
வறண்ட கரிசல்நிலத்தை உயிர்ப்பான கதைகளின் விளைநிலமாக மாற்றியவர் கிரா. நினைவுகளைக் காப்பாற்றி அடுத்தத் தலைமுறையிடம் ஒப்படைப்பது இலக்கியத்தின் பணி. அதைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிரா செய்து கொண்டிருந்தார்.
கடவுள் விடுகின்ற பெருமூச்சைப் போல காற்றுவீசும் கரிசல் வெளி என்று தேவதச்சன் ஒரு கவிதையில் சொல்கிறார்.
அந்த மூச்சுக்காற்றை இசையாக்கியவர் கிரா. தனது படைப்புகளின் வழியே அவர் என்றும் நம்மோடு இருப்பார்.
நன்றி
தீக்கதிர்
••
நண்பர் புதுவை இளவேனில் எடுத்த கிரா பற்றிய ஆவணப்படம்.
கதையே வாழ்க்கை
இடக்கை நாவல் குறித்த விமர்சனம்.
செ.ஆதிரை.

இடக்கை நாவல் நூற்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்களையும், மன்னன்களின் அசுர வேட்டைகளையும், கொலைகளையும், அவர்களின் மன்னிப்புகளையும், மனித பசியின் கோரதாண்டவத்தையும், நீதி மறுக்கப்பட்டவர்கள், நீதி கேட்டு அலைவதையும், டெல்லி மாநகரைச் சுற்றி தெருத்தெருவாக அலைந்துதிரிந்து தெரிந்துகொண்டதுபோல் உள்ளது ….
இதில் முதல் கதையே ஒளரங்கசீப்பைப் பற்றியது தான் …..தனக்கு எதிராக போர்த் தொடுக்க வரும் மன்னர்களை பயத்தில் தள்ள, அரசனுக்கு எதிரான போரில் தோற்ற வீரர்களின் 1000 நாக்குகளை மட்டும் வெட்டி மாலையாக்கி, அரண்மனை வாயிலில் தொங்கவிட்ட மன்னன் ஒளரங்கசீப்…
அனார் என்பவள் தாதிப் பெண்களில் ஒருவள். ஒரு முறை ஒளரங்கை அழைத்து பவளமல்லி பூ ஒன்றை மரத்திலிருந்து உதிர்க்கச் செய்து பிறகு அதை மரத்திலே ஒட்ட வைக்கச் சொன்னாள். ஒளரங்கசீப் பல முறை முயன்றும் அதை ஒட்ட வைக்க முடியவில்லை. அரசனுக்கு முடியாத ஒன்றைச் சொன்னதால் யானையின் காலில் மிதித்து கொல்லப்பட்டாள். அதற்கு ஆணையிட்டது ஒளரங்கசீப் …..
இவர்களை விட்டுத் தள்ளுங்கள்….இவர்களெல்லாம் யார் யாரோ….. தனது சொந்த மகளான ஜெப்புன்னிஷா தனக்கு பிடிக்காத, எதற்கும் உதவாத கவிதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள் என சிறையில் அடைத்தவன். இது தவறு என அஜ்யா உரைத்த போது “குற்றவாளிகள் மீது நான் ஒருபோதும் இரக்கம் காட்டுவதில்லை”. கவிதை எழுதினால் கூட குற்றமா ! அது சரி கவிதை என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனிடம் “நான் கவிதை பாடுவதற்காகவே பிறந்தவள், தான் இறந்தாலும் எலும்புகள் பாடிக் கொண்டிருக்கும். ரோஜா செடியை புதைமேட்டில் வைத்தாலும் பூக்க வே செய்யும். அதன் நிறம், மணம் மாறிவிடாது”. இப்படியெல்லாம் உணர்ச்சி பொங்க பாடியது ஜெப் புன்னிஷாவின் தவறு தான்…..பாவம் அவள் ஆராயும் மூளைக்கு, அழகை எப்போதும் ரசிக்கத் தெரியாது என அறியாமல் போய்விட்டாள்…..
அதன் பிறகு வருடங்கள் கடந்தது. இவ்வளவு மரணத்தையும், இயல்பாக கண் இமைக்கும் நேரத்தில் செய்து முடித்த ஒளரங்கசீப் இறுதியாக தனது மரணம் எப்படி நிகழப்போகிறதோ என பயந்து பயந்து நிமிடத்தைக் கடத்தினான். இறுதியாக ஞானி இபின் முகைதீனிடம் சென்று தனது மரணம் எவ்வாறு நிகழப்போகிறது? என எந்தப் பாவமும் செய்யாதவன்போல கேட்பான். பிறகு இபின் சில பதில்களை முகத்தில் அறைந்தார் போல கூறுவார்.
ஒளரங்: என் மரணம் இயல்பாக இருக்காது என தோன்றுகிறது.
ஞானி : எப்படி நடந்தாலும் மரணம் ஒன்று தானே. கவலைப்படுவதால் என்ன ஆகப்போகிறது.
ஒளரங்: துர்மரணத்தை நான் விரும்பவில்லை.
ஞானி : மரணம் எவர் விருப்பத்தின்படியும் நிறைவேறுவதில்லை.
இப்படியாக ஞானி ஒளரங்கசீப்பை மன்றாடவைத்துவிடுவார். இறுதியில் ஒளரங்கை ஒரு மணற்குன்றிலிருந்து தனது கையால் தண்ணீர் எடுத்துவரச் சொல்வார். ஆனால் தண்ணீர் ஞானியை நெருங்கும் முன் கைகளிலிருந்து சிந்திவிடும். இப்படியாக பல முறை முயற்சி செய்து தோற்பார். ” இதுதான் உன் விதி. உன் தேசத்தின் விதி…… உன் கைகள் இரத்தக் கறை படிந்தவை. எந்தக் கரங்கள் தூய்மையானதாக, அடுத்தவரை தாங்கிப் பிடிப்பதாக, இருப்பதை அன்போடு பகிர்ந்து தருவதாக இருக்கிறதோ அக்கரங்களில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். உன் கரங்கள் பேராசையின் கறை படிந்தது. அப்பாவிகளின் குருதிக் கறைபடிந்தது. அதிகாரத்திற்காக ஆயிரம் ஆயிரம் துரோகச் செயல் செய்தது. இந்தக் கைகளால் ஒரு துளி தண்ணீரைக் கூட காப்பாற்ற முடியாது. உன் செயல்களே உன் இறுதியை தீர்மானிக்கின்றன”. இவ்வாறாக ஞானியின் பதிலே ஒளரங்கை பாதியாக தின்று தீர்த்துவிடும். இறுதியாக ஞானி முடிவிற்கு வந்து ” உன் மரணம் எவர் கைகளாலும் நிகழாது. ஆனால் நீ நோயினால் அவதியுற்று இறந்துபோவாய்”.
ஆயிரம் ஆயிரம் அப்பாவித்தலைகளை எடுத்த மன்னனுக்கு இறுதியில் யார் அவர் தலையை எடுக்கப்போகிறார் என்ற பயம் …… வாழ்வின் கொடுமையான நிமிடங்கள் தன் சாவை கண் முன் பார்ப்பது. அது ஒளரங்கிற்கு கிடைத்துவிட்டது. அதேபோல் இறுதிக் காலங்களிலாவது அவர் தனது தவறை உணர்ந்தாரே என்று மனதிருப்தி கொள்வதா? அல்ல குழம்பி சுற்றுவதா? எனத் தெரியவில்லை…..
இரண்டாவதாக முடிக்கப்படுவது அஜ்யாவின் கதை . அஜ்யா என்பவன்அரவாணி. அந்தப்புரத்தில் பணியாற்றுபவள். ஒளரங் தனது வாயால் சகோதரி என அன்பாக அழைக்கப்பட்டவள். சிறு வயதில் ஆணாக இருந்த அவள் ஒரு சிலையின் மீது ஆசைபட்டு பெண்ணாக உருமாறியவள். அந்த சிலைக்கு கூட ராதா எனப்பெயர் வைத்து அழகு பார்த்தவள் அவள் ஒருத்தியே…. சிறு வயதில் இம்ரான் என்னும் பெயருடன் பாவாடைகளை கட்டிக்கொண்டு விளையாடித் திரிவாள்.அப்போது தர்ஷன் என்னும் சிறுவன் குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு சில கதைகளை அவிழ்த்து விட அவன் பின்னாலேயே அலைவாள். கதைகள் எப்போதும் மனிதர்களை தன் பின்னே பித்து பிடித்தவர்களைப் போல அலைக்கடிக்கிறது. இறுதியாக தர்ஷன், அஜ்யா ஆண் என அறிந்து அவனை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டான். காலத்தின் சாபக்கேடுதான் நேசித்த ஒருவரை பிச்சைகாரர்களாக்கி நேசித்தவர் முன்நிறுத்துவது. தர்ஷின் கடைசியில் பிச்சைகாரனாக மாறி அஜ்யாவை சந்தித்து இறுதியில் அவள் கையால் சமைக்கப்பட்ட உணவை சுவைத்து சாப்பிட்டுவிட்டு” நீ மன்னனின் அவையில் மிகச்சிறந்தவளாக வருவாய்” என ஆசீர்வதித்துச் செல்வான்.அவன் சொன்னது போலவே ஒளரங்கின் ஆலோசகராக இருந்தாள். பிறகு ஒளரங்காகும் தருவாயில் சில பொற்காசுகளையும், வெள்ளியால் நெய்யப்பட்ட குல்லாவையும் கொடுத்து சகோதரா என அழைத்த ஒருவனுக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு, இந்த நாட்டைவிட்டு வேறு எங்காவது ஓடி விடு என்பான். ஆனால் அஜ்யா எங்கேயும் செல்லாமல் ஒரங்கின் மகன்களிடம் உதைபட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, இதற்கு சாவதே மேல் என்று முடிவு எடுக்கும் தருவாயில் தூக்கிலிடப்படுவாள்.

அஜ்யாவைப் போன்ற சிறந்த மனிதரை ஒளரங்கின் நாடு இழக்கும் தருவாயில் கிழக்கிந்திய கம்பெனி உள்நுழைந்து தனது ஆட்டத்தைத் துவங்கியது. இதுவே ஒளரங்கின் மகன்களுக்கு கொடுக்கப்பட்ட சிறந்த தண்டனை…..
மூன்றவதாக முடிக்கப்படுவது பிஷாட மன்னனின் கதை. இவனுக்கு பிஷாடன் என பெயர் வைத்ததற்கு பதிலாக மனித உயிர்களின் ஓலங்களை கேட்டு ரசிக்கும் பிசாசு என பெயர் வைத்திருக்கலாம். இவன் மக்களை படுத்திய பாடு அளக்கவே முடியாதது. இவனுக்கு பதில் ஒளரங்கே பரவாயில்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டது மனது.
எதை வேண்டுமானாலும் பொருத்துக்கொள்ளலாம், ஆனால் தினந்தினமும் தனக்காதத் தோற்றுத் தோற்று சதுரங்கம் விளையாடிய அநாம் என்ற குரங்கை கொல்வதற்கு இவனுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ என மனது புலம்பியது…..
டெல்லி பயணத்திற்காக செல்லும் வழியில் யாரோ இரண்டு பேர் பிஷாடனை குருடனாக்கி, கையையும் காலையும் வெட்டிவிட்டு உயிருடன் விட்டுச் செல்வார்கள். அவன் உயிரையும் எடுத்து விடுங்கள் எனப் போராடுவான் . கனவிலும் கூட நான் யாரையும் சாக வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் இந்த பிஷாடன் விட்டால் என்னையே கொலைகாரி ஆக்கி இருப்பான். நல்லவேளை அவனே இறந்து விட்டான். இறுதியாக இவன் நீதி என்றால் என்னவென்றே தெரியாமல் செத்து விட்டான். இதுதான் என்னை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. என்ன செய்வது? நான் ஒன்றும் கதையின் ஆசிரியை இல்லையே ……
அடுத்ததாக தூமகேது. வாழ்வென்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்வை முடித்த அப்பாவி…
இடையன் ஒருவனால் குற்றம் சுமத்தப் பட்டு காலாவில் அடைபட்ட அப்பாவி. பிறகு சக்ரதாரால் கட்டிவிடப்பட்ட கதைகளால் தப்பித்தவன் ……
தப்பித்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாடு நாடாக மனைவியையும் குழந்தைகளையும் தேடித்தேடி அலைந்ததைத் தவிர.
பிறகு கால்போன போக்கில் போகாமல் புளியமரத்தடியில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு இஸ்லாமிய பிச்சைக்காரன் ஒருவன் கொடுத்த வெள்ளி தொப்பியை அணிந்து கொண்டு , 10 வயதில் சாமந்தி மாலையை எடுத்ததால் சூடு வைக்கப் பட்ட கைகளில், வாழ்க்கையே வேண்டாம் என நினைக்கும் வயதில் அக்கைகளில் மாலை வந்து விழுகிறது. அந்த மாலையை எடுத்து முகர்ந்தபடியே அவனது இடக்கை தாளமிடுகிறது. இடக்கையில் முடிந்தே போகாத கதாபாத்திரம் தூமகேது. கதைகளின் வழியாக எல்லா ஊர்களிலும் வாழ்ந்து கொண்டு இருப்பவன்….
கிணற்றடியிலும் , ஆட்டுத் தோலிலும் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவனுக்கு கதையே வாழ்க்கை ஆகிப்போனது.
••••
May 26, 2021
கடலில் ஒரு காதல்
நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான பால் வான் ஹெய்ஸேயின் “L’Arrabiata” சிறுகதையைக் காளி என்ற பெயரில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். உலகின் சிறந்த காதல்களில் இதுவும் ஒன்று. கதை எழுதப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகிறது. இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்
க.நா.சு மொழியாக்கம் செய்துள்ள உலக எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்க்கும் போது அவரது ஆழ்ந்த பரந்த வாசிப்பின் ஆர்வமும் ரசனையும் புலப்படுகிறது. இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான ஒரு கதையைக் கூட க.நா.சு மொழியாக்கம் செய்துவிடவில்லை. இந்தப் புத்தகங்கள் அவருக்கு எங்கே கிடைத்தன. எப்படி இதைத் தேடிப்படித்தார் என்ற ஆச்சரியம் தீரவேயில்லை. படிப்பதற்காகவே வாழ்ந்தவர் என்பதால் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களைத் தேடித்தேடிப் படித்திருக்கிறார்.

க.நா.சுவின் மொழிபெயர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்வதில்லை. அவர் கதையின் சாரத்தைத் தான் முதன்மையாகக் கொள்கிறார். வாசிப்பில் சரளம் இருக்க வேண்டும். அதே நேரம் கதையின் ஜீவன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.
க.நா.சு அறிமுகம் செய்து மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர்களில் பலரை அதன் முன்பு தமிழ் இலக்கிய உலகம் அறிந்திருக்கவில்லை. க.நா.சு வழியாகவே செல்மா லாகர்லெவ் அறிமுகமானார். அவர் வழியாகவே பால் வான் ஹெஸ்ஸே அறிமுகமாகியிருக்கிறார். அவர்களின் வேறு படைப்புகளை அதன்பின்பு யாரும் தேடி மொழியாக்கம் செய்யவில்லை. அது ஏன் என்று புரியவேயில்லை. அது போலவே இந்தக் கதைகள் நன்றாக இருப்பதாகப் பாராட்டு கிடைத்தபோதும் அவரது மொழியாக்க நூல்களுக்கு விரிவான விமர்சனங்கள் எழுதப்படவில்லை. இன்று வரை மதகுரு நாவல் பற்றி விரிவாக யாராவது எழுதியிருக்கிறார்கள் என்று தேடிக் கொண்டுதானிருக்கிறேன். உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று கெஸ்டாபெர்லிங் சாகா. அதை மதகுரு என்று க.நா.சு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இது போலவே தான் பால்வான் ஹெஸ்ஸேயும் அவரது “L’Arrabiata” சிறுகதை பல்வேறு உலகச்சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. இதை எழுதிய போது அவருக்கு வயது இருபத்திமூன்று. கதை இத்தாலியில் நடக்கிறது. இதன் தலைப்புப் பிரெஞ்சில் உள்ளது. தலைப்பின் பொருள் கோபக்காரப் பெண் அல்லது கோபக்காரி. அதைக் காளி என்று மாற்றியிருக்கிறார் க.நா.சு.

பால்வான் ஹெஸ்ஸே பனிரெண்டு நாவல்களையும் அறுபது நாடகங்களையும் நூற்றியம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். 1910 ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் நேரில் சென்று பரிசைப்பெறவில்லை.
காளி என்ற இந்தக் கதையில் மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள். காப்ரித் தீவிற்குச் செல்லும் பாதிரி. படகோட்டும் அன்டோனியோ, அந்தப் படகில் பயணம் செய்யும் லாரெல்லா, இவர்களோடு லாரெல்லா வழியாக நினைவு கொள்ளப்படும் அவளது அம்மா, இந்தப் படகு பயணத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கிழவி. காப்ரித் தீவில் உள்ள மதுவிடுதி. அதன் உரிமையாளராக உள்ள பெண் மற்றும் அவளின் கணவன். கதை ஒரு நாளில் நடக்கிறது. கதையின் பெரும்பகுதி கடலில் நடக்கிறது

எல்லாக் காதல்கதைகளையும் போலவே காதலை மறைத்துக் கொண்டிருக்கும் ஆணின் தவிப்பு தான் கதையின் மைய உணர்ச்சி. இந்தக் கதை பாதிரி ஒருவர் காப்ரித் தீவிற்குச் செல்வதில் துவங்கி பாதிரியின் குரலோடு நிறைவு பெறுகிறது
இடையில் நடப்பது அழகான காதல் நாடகம். ஆண்களை வெறுக்கும் இளம் பெண் லாரெல்லா திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறாள். இதற்குக் காரணம் அவளது அப்பா. அவர் அம்மாவை அடித்து உதைத்து மோசமாக நடத்தியது அவள் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்து போய்விடுகிறது. ஆகவே அவளைத் தேடி வந்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஓவியன் ஒருவனைக் கூட அவள் மறுத்துவிடுகிறாள்.
இதைப்பற்றிப் பாதிரி விசாரிப்பதில் தான் கதை துவங்குகிறது. லாரெல்லா தானும் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு அடி உதை பட விரும்பவில்லை. ஆகவே தனக்கு யார் மீது காதல் கிடையாது என்கிறாள். ஆனால் அவளை ரகசியமாகக் காதலிக்கும் படகோட்டி அன்டோனியா அவளுக்காகவே காத்திருக்கிறான். அவள் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று நம்புகிறான். ஆனால் அவனிடமும் கோபமாகவே பேசுகிறாள் லாரெல்லா. படகு காப்ரித் தீவிற்குப் போகிறது. தான் கொண்டு சென்ற பட்டுநூல்களை விற்பதற்காக லாரெல்லா கரையேறிப் போகிறாள். அவள் திரும்பி வரும்வரை அன்டோனியோ மதுவிடுதி ஒன்றில் காத்திருக்கிறான்
அவள் திரும்பி வருகிறாள். இருவரும் ஒன்றாகப் படகில் பயணம் செய்கிறார்கள். நடுக்கடலில் படகை நிறுத்திவிட்டு தன் காதலை வெளிப்படுத்துகிறான் அன்டோனியோ. அவள் அந்தக் காதலை ஏற்க மறுக்கிறாள். சண்டையிடுகிறாள். அவளைக் கட்டியணைக்கிறான் அன்டோனியா. அவனது கையைக் கடித்துவிடுகிறான். ரத்தம் சொட்டுகிறது. அன்டோனியோவிடமிருந்து தப்பிக்கக் கடலில் குதித்து நீந்துகிறாள். மன்னிப்பு கேட்டு அவளை மீண்டும் தன் படகில் ஏற்றுக் கொள்கிறாள்
அன்டோனியோவின் காதல் என்னவானது என்பதைக் கதையின் பிற்பகுதி அழகாகச் சித்தரிக்கிறது.
லாரெல்லாவின் பிடிவாதம். தந்தையின் மீதான ஆழமான வெறுப்பு. தாயின் மீது கொண்டுள்ள பாசம். அவளைத் தேடி வரும் ஓவியனின் சிரிப்பில் தந்தையின் நிழலைக் காணுவது என அழகான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறாள்

அன்டோனியா அற்புதமான இளைஞன். காதலை எவ்வளவு நாள் தான் மனதிலே மறைத்து வைப்பது. படகில் அவளுக்காக ஆரஞ்சு பழங்களைத் தருகிறான். அதைக் கூட அவள் ஏற்கமறுக்கிறாள். அந்த நிராகரிப்பைத் தாங்க முடியாமல் தான் நடுக்கடலில் படகை நிறுத்திவிட்டு அவளை அடைய முற்படுகிறான். பின்பு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள்
கதையின் துவக்கத்தில் லாரெல்லாவை இளைஞர்கள் கேலி செய்கிறார்கள் அவள் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவளது தந்தை அம்மாவைக் கோபத்தில் அடித்து உதைக்கவும் செய்வார். அடுத்த சில நிமிஷங்களில் கட்டிக் கொண்டு முத்தமழை பொழியவும் செய்வார். இந்த மூர்க்கத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை
ஆனால் கதையில் தந்தையைப் போலத் தான் லாரெல்லா நடந்து கொள்கிறாள். கோபத்தை வெளிப்படுத்திய அவள் தான் அன்பையும் வெளிக்காட்டுகிறாள். பாதிரியார் ஒருமுறை அவளிடம் சொல்கிறார்
உன் தாய் உனது தந்தையை மன்னித்துவிட்டார். நீ தான் அந்த வெறுப்பை மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறாள்
இது தான் கதையின் மையப்புள்ளி. இந்தப் புள்ளி தான் கதையில் உருமாறுகிறது.
மதுவிடுதியில் நடக்கும் உரையாடலும் கிழவியின் பார்வையில் சொல்லப்படும் விஷயங்களும் வாசகர்களுக்கு அன்டோனியா மற்றும் லாரெல்லாவின் இயல்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன.

கதையில் வரும் லாரெல்லாவின் தந்தை தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தையை நினைவுபடுத்துகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் தாய் எழுதியுள்ள குறிப்பில் அவரது கணவரைப் பற்றி இது போன்ற சித்திரமே காணப்படுகிறது. லாரெல்லாவின் கடந்தகாலம் அவளது நிகழ்காலத்தை வழிநடத்துகிறது. அவளைத் தற்செயலாக வீதியில் சந்திக்கும் ஒரு ஒவியன் அவளது அழகில் மயங்கி அவளைப் படம் வரைய ஆசைப்படுகிறான். அதை லாரெல்லாவின் அம்மா மறுக்கிறாள். அவன் லாரெல்லாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அதை லாரெல்லா ஏற்கவில்லை.
காரணம் அவனிடம் தந்தையின் சாயல்களைக் காணுகிறாள். அதை நினைத்துப் பயப்படுகிறாள். ஓவியனின் வழியே லாரெல்லாவின் அழகைப் பால் வான் ஹெஸ்ஸே குறைந்த சொற்களில் அழகாக உருவாக்கி விடுகிறார். கதையில் வரும் சிறிய கதாபாத்திரங்கள் கூட அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அன்டோனியோ நீண்டகாலமாகவே லாரெல்லாவை காதலித்து வருகிறான். அது அவளுக்கும் தெரியும். கதையின் துவக்கத்தில் அவள் படகில் ஏறும்போது அவன் தனது சட்டையைக் கழட்டி அவள் உட்காருவதற்காகப் பலகையில் போடுகிறான். அவள் அந்தச் சட்டையை ஒதுக்கித் தள்ளிவிட்டு உட்காருகிறாள். இந்த நிகழ்ச்சி பாதிரி முன்னாலே நடக்கிறது. அவருக்கும் அன்டோனியோவின் காதல் தெரிந்திருக்கிறது. அவரும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறார். ஆனால் லாரெல்லாவின் மனதை அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லை.
கடலில் அவர்கள் படகு செல்லும் காட்சி சினிமாவில் வருவது போல அத்தனை துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரியனைத் தனது கைகளைக் கொண்டு லாரெல்லா மறைத்துக் கொள்வது அபாரம்.
உண்மையில் லாரெல்லா தன்னைக் கண்டு தானே பயப்படுகிறாள். மற்ற இளம்பெண்களைப் போலக் காதல் வசப்பட்டுவிடுவோம் என்று நினைக்கிறாள். அவளது கோபம். உதாசீனம் எல்லாமும் அவள் அணிந்து கொண்ட கவசங்கள். அது கடைசியில் கலைந்து போகிறது
பால் ஹெய்ஸே1830 இல் பெர்லினில் பிறந்தார். அவரது தந்தை தத்துவவியலாளர் கார்ல் வில்ஹெல்ம் ஹெய்ஸே,. அவரது அம்மா ஒரு யூதர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்ற பால் வான் ஹெய்ஸே அதில் முனைவர் பட்டம் பெற்றார் ஜெர்மனியைப் போலவே இத்தாலியிலும் ஹெய்ஸே பிரபலமாக விளங்கினார். அவரது படைப்புகள் விரும்பி வாசிக்கப்பட்டன.
இன்றைய காதலோடு ஒப்பிட்டால் இந்தக் காதல் கதை எளிமையானது. ஆனால் லாரெல்லாவும் அன்டோனியோவும் போன்ற காதலர்கள் இன்றுமிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கடந்தகாலம் அவளது நிகழ்காலக் காதலை தடுத்து வைத்திருக்கும் என்பது மாறாத உண்மையாக வெளிப்படுகிறது. அது போலவே அவளை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் அன்டோனியோ தாங்கமுடியாத ஒரு தருணத்தில் வெடித்துவிடுகிறான். அவளைக் காதலிக்க அவளது சம்மதம் தேவையில்லை என்கிறான். அவளது கோபம் அதிகமாகிறது. சண்டையிட்டுக் கடலில் குதித்துவிடுகிறாள். ஆனால் உடனடியாக அன்டோனியா தன் தவற்றை உணர்ந்துவிடுகிறான். அவளைத் தன் படகில் ஏற்றிக் கொண்டு மன்னிப்பு கேட்கிறாள். லாரெல்லாவும் மாற ஆரம்பிக்கிறாள். இரும்பும் ஒரு குறிப்பிட்ட உஷ்ணத்தில் உருகத்தானே செய்கிறது.
ஆரஞ்சு பழங்கள் அவனது ஆசையின் அடையாளமாக மாறுகின்றன. பட்டுநூல்கள் அவளது ஆசையின் அடையாளமாகின்றன. லாரெல்லா வருவதற்காக அன்டோனியா காத்திருக்கும் நிமிஷங்கள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. அவன் குழப்பமடைகிறான். எங்கே வராமல் போய்விடுவாளோ என்று நினைக்கிறான். அவளோடு தனித்துத் திரும்பும் பயணத்திற்காக ஏங்குகிறான். அது தான் காதலின் உண்மையான வேட்கை. வலி.
பால் வான் ஹெஸ்ஸேயின் இப்படி ஒரு கதையை வாசித்தபிறகு அவரது மற்ற கதைகளை, நாவல்களை ஏன் தமிழில் மொழியாக்கம் செய்யாமல் போனார்கள் என்று வியப்பாகவே இருக்கிறது. க.நா.சு அடையாளம் காட்டிய திசையில் ஏன் பலரும் பயணிக்கவில்லை. ரஷ்ய இலக்கியங்கள் தீவிரமாகத் தமிழில் அறிமுகமாகி வந்த சூழலில் ஐரோப்பிய இலக்கிய உலகின் சிறந்த படைப்புகளை க.நா.சு அறிமுகம் செய்திருக்கிறார். மொழிபெயர்த்திருக்கிறார். அந்தப் புதிய ஜன்னல் வழியே முற்றிலும் புதிய கதைகள் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றன. இது மகத்தான பணி.
காளி என்ற தலைப்பு இன்று ஏற்புடையதாகவில்லை. காளி போலத் தலைமயிரை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று கிராமப்புறத்தில் சொல்வார்கள். அந்த நினைப்பில் இந்தத் தலைப்பை உருவாக்கியிருக்கக் கூடும். ஆனால் வாசகன் காளி என்ற உடனே வேறு ஒரு மனப்பிம்பத்தினை உருவாக்கிக் கொண்டுவிடுகிறான்.
புதுமைப்பித்தன் ,க.நா.சு இருவர் தேர்வு செய்து மொழியாக்கம் செய்துள்ள கதைகளிலும் அழுத்தமான கதாபாத்திரங்களும் சிறந்த உணர்ச்சி வெளிப்பாடும் காணப்படுகின்றன. தமிழ் வாழ்க்கையோடு நெருக்கமாக உள்ள கதைகளை அவர்கள் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அந்தக் கதைகளின் மைய நிகழ்வுகள். செயல்பாடுகள் வேறாக இருந்தாலும் ஒரு தமிழ் வாசகன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் புள்ளிகள், நிகழ்வுகள் அந்தக் கதைகளில் இருப்பதை உணரமுடிகிறது. தனது சொந்தப் படைப்புகளுடன் இவர்கள் செய்துள்ள மொழியாக்கங்கள் தமிழுக்கு பெரும் கொடையாகவே அமைந்திருக்கின்றன.
காளி கதையை இதுவரை வாசிக்கவில்லை என்றால் உடனே வாசித்துவிடுங்கள்.
லாரெல்லா படகிலிருந்து துள்ளி இறங்குவதும் படகில் ஏறுவதும் நம் கண்முன்னே காட்சியாக விரிகின்றன. அன்டோனியோவைப் போலவே நாமும் அவளைக் காதலிக்கத் துவங்கிவிடுகிறோம்
••
May 25, 2021
தானே உலரும் கண்ணீர்
கிஷோர் குமார்
எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல் குறித்து.
***

சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும், அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றி தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது.
இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலைக் குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டுச் சென்றுள்ளது.
முகலாய பேரரசரான அவுரங்கசீபின் இறுதிக் காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்த கொடுந் தனிமையை அவுரங்கசீபும் அனுபவிக்கிறார். இளமையில் மரணத்தைத் துச்சமாக நினைத்துப் பல வெற்றிகளை ஈட்டும் அவுரங்கசீப், இறுதியில் தன் ஆத்மார்த்தமான ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் இறக்கிறார்.
பிஷாட மன்னன் ஆட்சி செய்யும் சத்கரில் தூமகேது என்று கடைநிலை துப்புரவுத் தொழிலாளி , செய்யாத ஒரு குற்றத்திற்காகக் கைதாகிறான். ‘காலா’ என்ற ஒரு சிறை நகரில் அவனை அடைக்கிறார்கள். அவனைப் போல் பலர் செய்யாத குற்றத்திற்காகக் கைதாகிப் பல ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
பிஷாட மன்னனின் விசித்திரமான தண்டனைகள் (தூக்கில் தொங்கும் யானை, விஷம் தின்று மறையும் பறவைகள்) ஒரே நேரத்தில் சிரிப்பையும் ஆழத்தில் அதிர்ச்சியையும் தருகிறது. இவனது நெருங்கிய நண்பன் ஒரு குரங்கு. இதுவே இவனது குணத்தை வெளிப்படுத்துகிறது. இவனும் இறுதியில் ஒரு டச்சு வணிகனுக்குக் குரங்காகிறான் . சத்கர் நகரவாசிகள் அனைவரோடும் டெல்லிக்குச் செல்கிறான். வழியில் கடத்தப்பட்டு கைகால்கள் துண்டிக்கப்பட்டு கண் பிடுங்கப்பட்டு பாலையில் கைவிடப்படுகிறான் என்பிலதனைகள் போல் வெயிலில் காய்ந்து சாகிறான்.
அஜ்யா என்ற திருநங்கையின் வாழ்க்கை விவரிக்கப் படுகிறது. அவள் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டு நடன மங்கையாகி, அரசரின் அணுக்க பணியாளராய் ஆகிறாள். அவுரங்கசீபின் மறைவிற்குப் பின் அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் தூக்கிலிடப்படுகிறாள்.
இன்னும் பல கதாபாத்திரங்களின் கதைகள் கூறப்பட்டுள்ளது. இந்நாவல் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட(இடக்கை போல்)மனிதர்களைப் பற்றி பெரும்பாலும் பேசினாலும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
நாட்டின் அரசனும் கடைக்கோடி மனிதனும், தண்டனை தருபவனும் அதை வாங்குபவனும் அடைவது வெறுமையை அன்றி வேறு என்ன?
“நீதி என்பது நம் காலத்தின் மாபெரும் கொடை” என்னும் உணர்வையும், “நீதி என்பது வெறும் கற்பிதமோ?” என்ற எண்ணத்தையும் ஒரே நேரத்தில் இந்நாவல் நமக்கு ஏற்படுத்துகிறது.
பசியால் இறக்கும் சிறுவன், உணவு திருடும் தாய், அரச அந்தப்புரத்தின் அதிகார கட்டமைப்பு, வணிகர்களின் தந்திரங்கள், பிராஜார்களின் சூழ்ச்சிகள், மதக் கலவரம், அக்கலவரத்தில் கொல்பவன் கொல்லப்படுபவன், கடல் பயணத்தில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகள் போன்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் படவைக்கிற பல அத்தியாயங்கள் நாவல் முழுக்க உள்ளது.
“கண்ணிலிருந்து கசிந்து தானே உலரும் கண்ணீர்”
இந்நாவலில் வரும் இந்த வரி ஒரு திடுக்கிட வைக்கும் வரி. வழியும் கண்ணீரைத் துடைக்க ஒரு கரம் நீளாமல் போவது எவ்வளவு வேதனைக்குரியது.
இந்நாவலின் வரும் முக்கிய கதை மாந்தர்கள் அனைவரையும் இவ்வரிகள் மூலம் விளக்கலாம்.
இந்நாவல் தன் தரிசனமாக, வாசகனுக்கு ஒரு நம்பிக்கையாக, ஒரு கிராமத்தைக் காட்டுகிறது. தூமகேது சில நாள் வாழும் அந்த காந்திய கிராமம் (ஆம்! காந்திக்கு 300 வருடங்கள் முன்பு!) தன்னளவில் நிறைந்த, மனிதர்கள் மகிழ, ஒரு லட்சிய சமூகத்தை ஏந்தி நிற்கிறது.
காந்தியத்தைப் பூடகமாக வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று நாவல்! அபாரமான கட்டமைப்பு.
அரசன் அவுரங்கசீப் தன் கையால் ஆத்மார்த்தமாகச் செய்த ஒரு ‘பிரார்த்தனை குல்லா’ விதிவசத்தால் எங்கெங்கோ சென்று இறுதியில் தூமகேதுவின் தலையில் அமர்கிறது.
ஆனால் மகா இந்துஸ்தானத்தின் பாதுஷா அவுரங்கசீப் செய்த குல்லா அது என்று அவனுக்குத் தெரியாது.
ஆம்! இயற்கை அல்லது விதி அல்லது கடவுள், மனிதனின் கண்ணீருக்கு ஆறுதலாக ஒரு சிறு குல்லாவை , ஒரு புறாவின் சிறகடிப்பை, ஒரு சூரிய உதயத்தை, ஒரு எளிய மலரைக் கொடுப்பதற்கு என்றுமே மறப்பதில்லை, என்ற நம்பிக்கையே இந்த அபத்தமான தொடர்ச்சியற்ற வாழ்வில், வரலாற்றில் ஒரு தூரத்து ஒளியாக, ஆழத்து நங்கூரமாக உள்ளது.
***
வீடில்லாதவர்கள்
ரஷ்யக் கரடிக் குடித்தனம் என்ற சிறார் கதை ஒன்றைத் தினமணி இணையத்தில் படித்தேன் சின்னஞ்சிறிய நாட்டுப்புறக் கதை. கண்முன்னே காட்சிகள் தோன்றி மறைகின்றன.
குயவன் தவறவிட்டுச் சென்ற பானை ஒரு வீடாக மாறுகிறது. அந்தப் பானையைக் கரடி ஆக்கிரமித்துக் கொண்டவுடன் இருப்பிடம் பறிபோகிறது. இது சிறார் கதை மட்டுமில்லை. அதிகாரத்தின் இயல்பினைப் பற்றியது
•••

பானைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒரு குயவர் செல்லும் போது வண்டியிலிருந்து ஒரு பானை தவறி கீழே விழுந்துவிடுகிறது. அந்தப் பானையைக் கண்ட ஈ அதைச் சுற்றிவந்து கேட்டது.
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. ஈ எனும் ரீங்காரி பானைக்குள் பறந்து போய்க் குடியிருக்கத் தொடங்கியது.
அதன்பிறகு கொசு-ஙொய்மொய் பறந்து வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி. நீ யார்?”
“”நான் கொசு-ஙொய் மொய்.”
“”வந்து என்னோடு குடியிரு.”
ஆக, இரண்டும் சேர்ந்து வாழத்தொடங்கின.
சுண்டெலி-கறுமுறுப்பான் ஓடி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய். நீ யார்?”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”வா. வந்து எங்களோடு குடியிரு.”
மூன்றும் சேர்ந்து வாழத்தொடங்கின.
தவளை-குவாக்குவாக் தாவி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி -கறுமுறுப் பான். நீ யார்?”
“”நான் தவளை-குவாக் குவாக்”
“”வா. வந்து எங்களோடு குடியிரு.”
நான்கும் சேர்ந்து வாழத்தொடங்கின.
ஒரு முயல் ஓடி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை- குவாக்குவாக். நீ யார்?”
“”நான் முயல்-கோணல்காலன்.”
“”வா. வந்து எங்களோடு குடியிரு.”
ஐந்தும் சேர்ந்து வாழத்தொடங்கின.
பக்கத்தில் ஓடிய நரி கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது. வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை-குவாக்குவாக்.”
“”நான் முயல் -கோணல்காலன். நீ யார்?”
“”நான் நரி-பேச்சழகி.”
“”வந்து எங்களோடு குடியிரு.”
ஆறும் சேர்ந்து வாழத் தொடங்கின.
ஓநாய் ஓடி வந்து கேட்டது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை-குவாக்குவாக்.”
“”நான் முயல்-கோணல்காலன்.”
“”நான் நரி-பேச்சழகி. நீ யார்?”
“”நான்தான் ஓநாய்-மேட்டுப் புதற்காட்டைச் சேர்ந்தவன்.”
“”வந்து எங்களோடு குடியிரு.”
ஆக, ஏழும் சேர்ந்து வாழத்தொடங்கின. சேர்ந்து வாழ்ந்தால் துன்பம் இல்லை.
முடிவில் ஒரு நாள் ஒரு கரடி வந்து தட்டியது:
“”யாருடைய மாடி வீடு இது? வீட்டில் இருப்பது யார்?”
“”நான்தான் ஈ -ரீங்காரி.”
“”நான் கொசு-ஙொய்மொய்.”
“”நான் சுண்டெலி-கறுமுறுப்பான்.”
“”நான் தவளை-குவாக்குவாக்.”
“”நான் முயல்-கோணல்காலன்.”
“”நான் நரி-பேச்சழகி.”
“”நான் ஓநாய்-மேட்டுப் புதற்காட்டைச் சேர்ந்தவன். நீ யார்?”
“”நான்தான் உங்களை விரட்ட வந்த குடித்தனக்காரன்.”
கரடி, பானை மேல் உட்கார்ந்தது. பானை உடைந்தது. எல்லாப் பிராணிகளும் பயந்து ஓடிவிட்டன.

••
கதையில் வரும் ஈ காலியாகக் கிடக்கும் பானையை மாடி வீடு என்கிறது. ஈக்கு வீடில்லை என்பதும் அது தனக்காக ஒரு வீட்டினை ஏற்படுத்திக் கொள்கிறது என்பது அழகான விஷயம். இது போலவே கொசுவும் ஈயும் ஒன்று சேர்ந்து வாழுகின்றன. இப்படி ஆறு விலங்குகள் மாறுபட்ட இயல்போடு இருந்த போதும் ஒன்றாக வாழுகின்றன. ஆனால் கடைசியில் வந்து சேரும் கரடி தன்னை அந்த வீட்டின் உரிமையாளர் என்கிறது. யாரோ தவறவிட்டுப் போன பானைக்குக் கரடி எப்படி உரிமையாளர் ஆனது. ஆனால் அதிகாரம் வந்துவிட்டால் அப்படித்தான். அந்தக் கரடியை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் அது பானையை உடைத்து சகலரையும் வெளியேற்றிவிடுகிறது.
ஒரு நாடகம் போலவே காட்சிகள் தோன்றி மறைகின்றன. வெறும்பானை வீடாக மாறியதும் அதற்கு ஒரு அர்த்தம் உருவாகிவிடுகிறது. இப்படிதான் எளியோர் தனது இருப்பிடங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
விட்டோரியா டிசிகா என்ற இத்தாலிய இயக்குநர் Miracle in Milan என்றொரு படம் எடுத்திருக்கிறார். இதில் வீடற்றவர்கள் புறநகர்ப் பகுதி ஒன்றினை சீர்செய்து கிடைத்த தகரங்களையும் மரத்துண்டுகளையும் கொண்டு சிறிய வீடு கட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குடியிருக்கத் துவங்கியவுடன் ஒரு ஆள் அந்த இடம் தன்னுடையது என்று காலி செய்யச் சொல்லி காவலர்களுடன் வந்து நிற்கிறான். மக்கள் காலி செய்ய மறுத்துப் போராடுகிறார்கள். காவல்துறை அவர்களை அடித்துத் துரத்துகிறது. மக்கள் அடிவாங்கி விழுகிறார்கள்.

அப்போது ஒரு அதிசயம் நடந்து காவலர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். அப்பாவி ஒருவனுக்கு அதிசய சக்தி கிடைக்கிறது. வேண்டியதை எல்லாம் அவன் உருவாக்கித் தருகிறான். அவர்கள் குடியிருப்பில் திடீரென ஒரு நீரூற்றுப் பொங்குகிறது. அது தண்ணீர் ஊற்றில்லை. எண்ணெய் என்பதை மக்கள் அறிந்து ஆரவாரம் செய்கிறார்கள். அந்த இடத்தை விட்டு மக்களைத் துரத்த முதலாளி தந்திரங்களை உபயோகிக்கிறான்.. இதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் படத்தின் கதையும் இந்தச் சிறார் கதைப்பாடலும் ஒன்று தானே
கதையில் வரும் கொசு ஈ தவளை சுண்டெலி என யாவும் தன் குரலையும் தன்னோடு சேர்த்து அடையாளப்படுத்திக் கொள்கின்றன. எளிய வாழ்க்கையில் நட்பும் உறவும் எளிதாக அமைந்துவிடுகிறது.
கதை கரடியின் வருகையோடு முடிந்துவிடுகிறது. உண்மையில் இந்த முடிவினை நாம் தொடரலாம். ஒரு விளையாட்டாக வீடில்லாத ஈயும் கொசுவும் தவளையும் சுண்டெலியும் நரியும் முயலும் எப்படிக் கரடியை பழிவாங்கின என்று இன்னொரு கதையை நாம் உருவாக்கலாம்
சிறார் கதைகளில் எளிய சொற்களே கையாளப்படுகின்றன. அவை மின்மினி போல ஒளிர்வது தான் அதன் தனிச்சிறப்பு
••
May 24, 2021
பிரான்சில் தமிழ் இலக்கிய விழா
பிரான்சு வரலாற்றில் முதன்முறையாக பாரீசுக்கு அருகில் Centre- Val de Loire மாகாணத்தில் இரண்டு நகரங்களில் (Jargeau & Châteaudun) ‘ Tu Connais la nouvelle எனும் இலக்கிய அமைப்பு இருவாரங்கள் தமிழ் நவீன இலக்கியம், தமிழ் பண்பாடு சார்ந்த விழாவை எடுக்கிறார்கள்.
Editions Zulma என்ற பிரெஞ்சு பதிப்பாளர் இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் அவருடன் Yanne Dimai என்கிற பிரெஞ்சு படைப்பாளியும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் நவீன தமிழிலக்கியத்தின் இன்றைய நிலை குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. கூடுதலாக தமிழ் கதைகளின் மொழிபெயர்ப்பு வாசிக்கபடவுள்ளன.
இந்த நிகழ்வில் எனது சிறுகதை ஒன்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து வாசிக்கிறார்கள்
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்



ஆக்டோபஸின் தோழன்
My Octopus Teacher என்ற ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இந்தப் படம் கிரக் ஃபாஸ்டர் என்று ஆழ்கடல் ஆய்வாளர் தனது கடலடி அனுபவத்தில் சந்தித்த ஒரு ஆக்டோபஸோடு எப்படி நெருங்கிப் பழகினார் என்பதை மிகச்சிறப்பாக விவரிக்கிறது.

ஃபாஸ்டரோடு நாமும் கடலின் அடியில் பயணிக்கத் துவங்குகிறோம். ஃபாஸ்டரின் குரலில் தான் படம் துவங்குகிறது. அவரது கடந்தகால அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. ஒரு காலத்தில் ஆப்ரிக்கா வேட்டை பழங்குடிகளுடன் பழகி அவர்கள் எவ்வாறு விலங்குகளின் சுவடுகளின் வழியே அதன் இயக்கத்தைக் கண்டறிகிறார்கள் என்று ஆவணப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்த படப்பிடிப்பு எடிட்டிங் என்று யந்திரமயமான வாழ்க்கை சோர்வு அளிக்கவே அதிலிருந்து விடுபடுவதற்காகக் கடலடியில் நீந்த ஆரம்பித்திருக்கிறார்.
2010 ஆம் ஆண்டில், ஃபாஸ்டர் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு அருகிலுள்ள ஃபால்ஸ் பேவின் குளிர்ந்த கடலடியில் நீந்த ஆரம்பிக்கிறார். ஒன்பது டிகிரி குளிரல் உடல் விறைத்துப் போய்விடுகிறது. ஆனால் தொடர்ந்து நீந்தி உடலை அந்தக் குளிருக்குப் பழக்க படுத்துகிறார். சில நாட்களில் உடல் அந்தக் குளிரை ஏற்றுக் கொண்டுவிடுகிறார். நீர் வாழ் உயிரினம் போலவே அவர் கடலடியில் நீந்துகிறார். அங்கே அவர் காணும் உலகம் வேறுவிதமானது. புற உலகின் நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு மாய உலகம் ஒன்றினுள் பயணிப்பது போலவே உணருகிறார்.
இந்தக் கடற்பகுதியின் அடியில் பெரிய வனம் போல விரிந்து காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒற்றை ஆளாகக் கடலில் குதித்து இந்தக் கடலடி வனத்தினுள் நீந்தியலைகிறார். அத்துடன் தனது கடலடி அனுபவங்களை ஆவணப்படுத்தவும் துவங்குகிறார்.
முன்பு ஏற்பட்டிருந்த மனச்சோர்வு தற்போது முழுமையாக அகன்றுவிட்டது. புதிய தேடலில் அவர் கேமிராவுடன் கடலுக்குள் நீந்தியலைகிறார்

ஒரு நாள் தற்செயலாக ஒரு ஆக்டோபஸ் ஒன்றைக் காணுகிறார். அது பயத்தில் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதைப் பின்தொடர்ந்து போகிறார். பயத்தில் அந்த ஆக்டோபஸ் ஒடி மறைந்துவிட்டது.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அந்த இளம் ஆக்டோபஸை தேடி அலைகிறார். அதன் மறைவிடத்தைக் கண்டறிந்து மெல்லப் பழக ஆரம்பிக்கிறார். அதன் நம்பிக்கையைப் பெறுவது எளிதாகயில்லை. கேமிராவை மட்டும் தனித்து வைத்துவிட்டு அவர் விலகி வெளியேறி விடுகிறார். ஆக்டோபஸ் கேமிராவை தொடுகிறது விளையாடுகிறது.
தொடர்ந்து ஆக்டோபஸை நெருங்கிச் சென்று அத்தோடு நெருக்கமாகிறார். அத்துடன் ஒரு பிணைப்பை உருவாக்குகிறார்

ஆக்டோபஸ் பயம் கலைந்து அவருடன் விளையாட ஆரம்பிக்கிறது. அவரது வெற்றுடம்பில் ஊர்ந்து போகிறது. அவர் கைகளில் தவழுகிறது. அவரிடமிருந்து சிறிய எதிர்ப்புணர்வு கூட வெளிப்படுவதில்லை. ஆகவே ஆக்டோபஸ் அவரை முழுமையாக நம்புகிறது.
ஃபாஸ்டர் ஆக்டோபஸுடன் கொள்ளும் நெருக்கத்தை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஒரு தாக்குதலில், ஆக்டோபஸ் தனது கைகளில் ஒன்றை இழக்கிறது. அதன் பிறகு அதைக் காணமுடியவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது கையை அது மீண்டும் உருவாக்கிக் கொள்கிறது. இந்த ஆக்டோபஸின் வாழ்க்கையை நெருங்கி ஆவணப்படுத்தியிருக்கும் பாஸ்டர் அதன் ஒரே நண்பனாகத் தன்னைக் கருதுகிறார்.. இயற்கையின் விநோதங்களில் ஒன்றாகவே இதைக் கருதவேண்டும். தன் மகனின் எதிர்காலம் குறித்துப் படத்தின் துவக்கத்தில் ஃபாஸ்டர் கவலை கொள்கிறார். ஆனால் இந்தக் கவலை பின்னால் போய் ஆக்டோபஸ் அவரது மகனைப் போன்ற உறவாக மாறிவிடுகிறது. அந்த நெருக்கம் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றம் சொந்த மகனுடன் ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது
ஆக்டோபஸ் குறித்து நமக்குள் இருக்கும் அச்சத்தை இந்தப்படம் விலக்குகிறது. ஆக்டோபஸின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஃபாஸ்டர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் கடலடியில் செயல்படுகிறார் என்பது வியப்பளிக்கிறது.

நாம் அறியாத இன்னொரு உலகம் நம்மைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த இயற்கையின் பேரழகினை நாம் உணரவேயில்லை. இந்தப் படத்தை இன்றைய லாக்டவுன் காலத்தில் காணும் போது நமது புறநெருக்கடிகள். துயரச் செய்திகள் யாவையும் மறந்து நாமும் ஃபாஸ்டருடன் கடலுக்குள் செல்கிறோம். ஆக்டோபஸின் தோழனாக மாறுகிறோம்
கிரக் ஃபாஸ்டரின் மனைவி சுவாதி தியாகராஜன் சென்னையைச் சேர்ந்தவர்.. சுற்றுச்சூழல் ஆய்வாளர். அவரும் பாஸ்டரும் இணைந்தே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களையும் காடுகளையும் பாதுகாக்கும் முயற்சியில் கடைசிக் காட்சியில் ஒரு குழுவினர்கள் கடலில் நீந்துகிறார்கள். அவர்களோடு நாமும் வேறு உலகை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறோம்
••
.
May 23, 2021
தேரின் அழகு
’தேவகியின் தேர்’ சிறுகதை குறித்த வாசிப்பனுபவம்
தயாஜி / மலேசியா
சிறுகதையில் ஒன்றை சொல்லியும் சொல்லாமலும் வாசகர்களிடம் அதன் முடிவை கொடுப்பது ஒரு கலை. எஸ்.ரா அவர்களுக்கு அது கை வந்த கலை. அதற்கு சான்றாக இக்கதையைச் சொல்லலாம்.
‘தேவகியின் தேர்’ என்பது தலைப்பாக இருந்தாலும், இறுதியில் தேவகியும் தேரும் ஒரே பொருளாக மாறிவிடுவதில் சிறுகதை தனித்து நிற்கிறது. ஆணாதிக்க குடும்பம் என்பதை நாயகியின் அப்பாவின் அறிமுக காட்சியிலேயே நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
அவ்வூரில் இருக்கும் நூறு வருடங்களுக்கும் பழமையான தேரை பார்க்க வெளியூரில் இருந்து லியோன் என்கிற இளைஞன் வருகிறார். அப்பாவின் கட்டளையின் படி லியோனை ஹரி அழைத்துச் செல்கிறார்.
தொடர்ந்து அந்த தேர் பற்றியும் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழாவை பற்றி ஆசிரியர் சொல்லிச் செல்வது நாமும் அவ்விழாவில் கலந்து கொண்ட உனர்வை தருகிறது. எங்கிருந்தோ வந்த வெள்ளைக்கார லியோனுக்கு அவ்வூர் தேரை பற்றி பல விபரங்கள் தெரிகின்றது. அதன் சிற்பங்கள். அதன் நேர்த்தி. அதன் பின்னனி காரணங்கள் என ஹரிக்கு தெரியாததையெல்லாம் பேசி ஆச்சர்யப்படுத்துகிறார். இதுவரை யாரும் கண்டிராதபடி தேரின் அழகை படம் பிடிக்கின்றார்.
அடுத்ததாக ஆசிரியர், ஹரியின் அக்கா தேவகியை அறிமுகம் செய்கின்றார்.
தேவகியின் அறிமுகம் கிடைத்த பிறகு, தேர் குறித்த விபரங்கள் வரும் பொழுது தேவகியையும் அதனுடன் இணைத்துப் பார்க்க தோன்றியது. இந்த இணைப்பில் ஏதோ இருப்பதாக உணர்ந்தேன்.
அதன் பிறகு கதை அதன் விளையாட்டை தொடங்கியது.
அதிக நாட்கள் லியோன் அவ்வூரில் தங்கும்படி ஆகிறது. பலருடன் நெருக்கம் கிடைக்கிறது. இதற்கிடையில் ஒரு நாள் தேவகி தானும் லியோனும் காதலிப்பதாக அம்மாவிடன் சொல்கிறார். அதற்கு சான்றாக தேருக்கு அருகில் தேவகியை அழகாய் படம் எடுத்திருந்ததைக் காட்டுகிறாள். அடிக்கடி சந்தித்து பேசியுள்ளதையும் சொல்கிறாள். அம்மா அப்பாவை நினைத்து பயப்படுகின்றார். அதற்கு ஏற்றார் போலவே அப்பாவும் தேவகியை அடித்து அம்மாவை திட்ட தொடங்குகின்றார்.
அதன் பிறகு ஹரி லியோனை பார்க்க செல்கிறார். லியோன் அங்கில்லை. புறப்பட்டுவிட்டார். தேவகிதான் அந்த மனிதன் மீது காதல் கொண்டிருக்கிறாள். லியோனுக்கும் இதற்கும் சம்பத்தம் இல்லையென அப்பா திட்டுகிறார். ஆறு மாதங்களில் தேவகிக்கு திருமணத்தை நடத்துகின்றார் அப்பா. வெளியூர் மாப்பிள்ளை.
‘அக்கா எப்போது லியோனை சந்தித்தாள். எப்படி அவள் காதலித்தாள். எதுவும் ஹரிக்குப் புரியவில்லை. லியோன் ஏன் இதை வெளிப்படுத்தவேயில்லை. எப்படி ரகசியத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்த தேரையும் தனக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்த அக்காவையும் தெரியவில்லை. நிழல் போல இருந்த பெண் இப்படி நடந்து கொண்டுவிட்டாளே என்று வியப்பாகவே இருந்தது. ’
என ஹரி யோசிகின்றார். உண்மையில் இங்குதான் தேருக்கும் தேவகிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர்.
தேர் இருப்பது பிரம்மாண்டம். திருவிழாக்களுக்கு பயன்படும். ஆனால் அதிலிருக்கும் ஒரு சிற்பத்தைக் கூட அங்குள்ளவர்கள் முழுமையாக கண்டிருக்க மாட்டார்கள் என்பதை கதையின் ஊடே ஆசிரியர் காட்டுகின்றார். நம் வீட்டிலும் இப்படித்தான் பெண்களை அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பதாகச் சொல்லி, மரியாதை கொடுப்பதாகச் சொல்லி அவர்களின் ஆசைகளைப் புறக்கணிக்கின்றோம். திருவிழாக்களுக்கு தேர் அழகை கொடுத்து மற்ற நேரங்களில் ஏதோ ஓர் மூலையில் தனித்து கவனம் பெறாது இருப்பது போலவே பல பெண்களின் நிலை இன்றும் இருப்பதை இச்சிறுகதை காட்டுகிறது.
திருமணத்திற்கு பின் தேவகி ஒரு நாளும் பிறந்தகத்திற்கு திரும்பவில்லை. யார் அழைத்தும் வாருவதற்கு தயாராய் இல்லை.
“நான் செத்தாலும் ஊருக்கு வரமாட்டேன். அந்தத் தேரை பார்க்கமாட்டேன் பாத்துக்கோ“
“தேர் என்னடி பண்ணுச்சி“ என்றாள் அம்மா
“என்ன பண்ணலே“ என்று கேட்டு அழுதாள் தேவகிஅக்கா
அம்மாவிற்கு அப்படித் தேவகி அழுவதைக் கேட்கும் போது கண்கள் கலங்கவே செய்தன.
என சிறுகதையை முடிக்கையில் நம் மனமும் கலங்கத்தான் செய்கிறது. தேவகியின் தேர் சிறுகதை முழுமையாக வாசிப்பதன் மூலம் நாம் அதனை உணரலாம்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
