அஞ்சலி
தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார்.

இறுதி நிகழ்விற்குப் போக முடியவில்லையே எனக் கண்ணீர் பெருகுகிறது
கரிசல் மண்ணிலிருந்து உருவான படைப்பாளிகள் அனைவருக்கும் அவரே பேராசான். ஞானத்தந்தை.
நிகரற்ற எழுத்தாளராக மட்டுமின்றி விவசாயிகளின் பிரச்சனைக்காகக் களத்தில் இறங்கிப் போராடி சிறை சென்ற போராளியாகவும் இருந்தவர் .
கரிசல் நிலத்தின் தொல் நினைவுகள், வரலாறு யாவும் அவர் மூலம் எழுத்து வடிவம் பெற்றன. நாட்டுப்புறக்கதைகளையும் பாடல்களையும் தேடிச் சேகரித்து ஆய்வு செய்து ஆவணப்படுத்திய ஆய்வாளர். கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய தமிழ் அறிஞர். தேர்ந்த இசை ரசிகர். கிராவைப் போல இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் இன்னொருவரைக் கண்டதில்லை.
பள்ளிப் படிப்பைத் துறந்த அவர் புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றச் சென்ற போது நானும் கோணங்கியும் பாண்டிச்சேரிக்குத் தேடிப்போனோம். இதையும் செய்து பார்ப்போம் என்று உற்சாகமாகப் பேசினார். பாரதியை அரவணைத்துக் கொண்டது போலவே புதுவை மண் கிராவையும் அரவணைத்து அன்பு காட்டியது. புதுவை அரசு கிராவின் மீது காட்டிய அக்கறைக்கும் உதவிகளுக்கும் தீராத நன்றிகள்.
பெருவாழ்வு வாழ்ந்த அந்த மகத்தான படைப்பாளி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஞானத்தந்தையாக அவரை ஏற்றுக் கொண்டாடிய புதுவை இளவேனிலுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கி.ராஜநாராயணன் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களை மனம் நிறையப் பாராட்டுகிறேன்.
தமிழ் உள்ளவரை கிரா எனும் மகத்தான கலைஞனும் இருப்பார். நிகரற்ற அவரது படைப்புகள் என்றும் வாழும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
