S. Ramakrishnan's Blog, page 122
July 5, 2021
சிறப்பு சலுகை
தேசாந்திரி பதிப்பகம் புதிய சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது


இணைப்பு
தேசாந்திரி பதிப்பகம் , டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93(044)-23644947desanthiripathippagam@gmail.comhttps://www.desanthiri.com/desanthiri-history-combo
July 4, 2021
முடிவில்லாத அறைகள்
1924 ஆம் ஆண்டில், ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் ஒரு விசித்திரமான கேள்வியை எழுப்பினார் அதாவது சில முடிவிலிகள் மற்றவற்றை விடப் பெரியதா? (are some infinities bigger than others?) அவர் தந்த பதில் ஆம் என்பதே. அதை விவரிப்பதற்காக எண்ணிக்கையற்ற அறைகள் கொண்ட ஒரு ஹோட்டலைக் கற்பனை செய்து கொள்ளும்படியாக செய்தார். அதன் எல்லா அறைகளிலும் விருந்தினர்கள் இருந்தார்கள். அங்கே அறை காலியில்லை என்ற பலகை தொங்குகிறது. ஆனால் புதிதாக ஒருவரை தங்க அனுமதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற கேள்வியில் துவங்கி முடிவின்மையின் எல்லையற்ற சாத்தியங்களை விவரிக்கத் துவங்கினார்.
மிகச்சிக்கலான இந்த ஆய்வினை மிக சுவாரஸ்யமான காணொளியாக உருவாக்கியிருக்கிறார் டெரக் முல்லர். இந்த வீடியோ ஒரு புனைவின் வசீகரத்துடன் விவரிக்கபடுகிறது. முடிவற்ற அறைகள் கொண்ட ஹோட்டல் என்பது தானே இந்த பிரபஞ்சம். இங்கே மனிதன் உள்ளிட்ட புதிய உயிரினங்களுக்கு எப்படி இடம் கிடைக்கிறது என்பதன் விளக்கமாகவும் இதைக் காணலாம்.
முடிவில்லாத அறைகளைக் கொண்ட ஹில்பர்ட் ஹோட்டல் மிகச்சிறந்த படிமம். அதன் வரவேற்பாளர் எவ்வளவு சிறந்த அறிவாளி என்பதை அவர் அறைகளை ஒதுக்கி தரும் முறையில் கண்டுகொள்ள முடிகிறது.
முடிவில்லாத பயணிகள் வந்து கொண்டேயிருந்தால் என்ன நடக்கும் என்பதை படம் விவரிக்கிறது. அதிலும் முடிவற்ற பேருந்துகள் மூலம் முடிவில்லாத பயணிகளின் வருகை என்பது போர்ஹெஸின் கதையைப் படிப்பது போலவே இருக்கிறது
மிகச்சிறந்த காணொளி. புனைவின் விநோத விளையாட்டு இப்படி தான் செயல்படுகிறது. அறைகளுக்குப் பதிலாக சொற்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
தஸ்தாயெவ்ஸ்கி நாடகங்கள்
2016ம் ஆண்டில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதினேன். தியேட்டர் லேப் ஜெயராவ் தன் குழுவினருடன் அதை மேடையேற்றினார். ஒரு மணி நேர நாடகமது. சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நிகழ்த்தப்பட்ட அந்த நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கு முன்பு புதுவை பல்கலைக்கழகத்தில் முருகபூபதி நாடகக்கலை படித்த போது அவருக்காக மரணவீட்டின் குறிப்புகள் எனத் தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from a Dead House யை மையமாகக் கொண்டு நாடகம் எழுதினேன். அந்த நாடகம் புதுவையில் நிகழ்த்தப்பட்டது. பின்பு அது கேரளாவில் உள்ள ஒரு குழுவால் மலையாளத்திலும் நிகழ்த்தப்பட்டது.

தஸ்தாயெவ்ஸ்கிக்கும் அன்னாவிற்குமான காதலை மையமாகக் கொண்டு நான் எழுதிய தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நிகழ்த்தப்பட்டது. இந்த மூன்று நாடகங்களும் தஸ்தாயெவ்ஸ்கியை மையமாகக் கொண்டவை. இவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட இருக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடவுள்ளது .

பொதுவாக ஒரு குழுவினர் நடத்தும் நாடகப்பிரதியை மற்றவர்கள் நிகழ்த்துவதில்லை. ஆகவே இந்த நாடகங்கள் பல ஆண்டுகளாகத் திரும்ப நடத்தப்படவேயில்லை. அத்தோடு நாடகப்பிரதிகளை வாசிக்கும் பழக்கம் நம்மிடையே வெகு குறைவு. ஆனாலும் எழுதி நிகழ்த்தப்பட்ட இந்த நாடகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒரு தொகுப்பாகக் கொண்டு வர இருக்கிறேன்.

இந்த நாடகங்களை எவர் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். நவீன நாடகச்சூழல் மிகுந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இன்றைய சூழலில் இவற்றை நிகழ்த்துவதற்கு ஆதரவாளர்கள் தேவை. பெரிய நிறுவனங்கள் முன்வந்தால் இவை சிறப்பாக நடத்தப்பட முடியும்



மூன்றாம் அரங்கு சார்பில் கருணா பிரசாத் இயக்கிய அரவான் நாடகம். தியேட்டர் லேப் சார்பில் நிகழ்த்தப்பட்ட பொய் விசாரணை. சிந்துபாத்தின் மனைவி, மதுரை சுந்தர் காளி இயக்கிய சூரியனின் அறுபட்ட சிறகுகள். கனடாவில் நிகழ்த்தப்பட்ட சவரக்குறிப்புகள், புதுவை சுகுமார் இயக்கிய அரவான்.எட்வ்ர்ட் பாண்டின் கல், பிரெக்ட்டின் கலிலியோ போன்ற நாடகங்கள் சுந்தர்காளி, சுபகுணராஜனால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதில் அரவான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரியன் பிளாக்ஸ்வான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அரவான் நாடகம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஆங்கிலத்துறையில் பாடமாக வைக்கபட்டுள்ளது.
அரவான், சூரியனைச் சுற்றுகிறது பூமி சிந்துபாத்தின் மனைவி ஆகிய மூன்று நாடகத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவையும் தேசாந்திரி மூலம் மறுபிரசுரம் செய்யப்படவுள்ளன.
கவிதையின் ரகசியப் பாதை
அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் பில்லி காலின்ஸ்.(billy collins) Poet Laureate ஆகத் தேர்வு பெற்றவர், நியூயார்க்கில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்..

Questions about angels: poems 2) . Picnic, lightning. 3) Sailing alone around the room: new and selected poems. 4) Nine horses: poems 5) Trouble with poetry and other poems. 6) Ballistics: poems 7) Aimless love: new and selected poems. 8)Poetry 180: a turning back to poetry போன்ற கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

இவரது கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். கவிதையைப் பற்றி இவர் எழுதும் கவிதைகள் அபாரமானவை.
பேராசிரியராக வேலை செய்த நான் கவிதைகளும் எழுதினேன். இன்று நான் ஒரு கவிஞன் பேராசிரியராகவும் பணியாற்றுகிறேன் என்று தன்னைப் பற்றிக் காலின்ஸ் குறிப்பிடுகிறார். ஆசிரியர்களுக்காகப் பட்டறையில் கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி என்பது குறித்த இவரது உரை இணையத்தில் உள்ளது. மிகச்சிறந்த அறிமுகவுரையது.
பில்லி காலின்ஸ் கவிதைகள் தமிழின் நவீன கவிதைகளோடு மிகவும் நெருக்கமானது. குறிப்பாகத் தேவதச்சன் கவிதைகளுடன் இவரது கவிதைகளை இணைத்து வாசித்து பார்க்கிறேன். ஒரே உலகின் இரண்டு வேறு வெளிப்பாடுகள் என்றே தோன்றுகிறது. சமகால அமெரிக்கக் கவிதையுலகில்

ஒன்றிரண்டு அமெரிக்கக் கவிகளின் கவிதைகளே நம்மோடு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. மற்றவை சிறந்த கவிதைகளாக இருந்த போதும் அமெரிக்கத்தன்மை அதிகம் கொண்டிருக்கின்றன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பில்லி காலின்ஸ் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் கவிதைகளை வாசிக்கும் காணொளிகளும் நிறைய உள்ளன. கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை உற்சாகம். கேலியும் கிண்டலும் கலந்த வெளிப்பாடு. வேர்ட்ஸ்வொர்த் காலத்துக் கவிஞர்கள் கவிதையிலிருந்து காமத்தையும் நகைச்சுவை உணர்வையும் வெளியேற்றிவிட்டார்கள். அதற்குப் பதிலாக இயற்கையினையும் மிகை உணர்ச்சிகளையும் முதன்மைப்படுத்திவிட்டார்கள். நவீன கவிதை காமத்தையும் நகைச்சுவை உணர்வையும் மீட்டுக் கொண்டு விட்டது என்கிறார் பில்லி காலின்ஸ்.
அவரது உரையிலும் நேர்காணலிலும் கவிதை குறித்து வெளிப்பட்ட அவரது எண்ணங்கள் இவை

••
நாவலாசிரியர்கள் போலக் கவிஞர்களால் ஒருபோதும் தன் படைப்பிலிருந்து மாதிரி காட்ட முடியாது. உரைநடை எழுத்தாளர்களுக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் உண்டு. கவிஞர்களுக்கு இருப்பதெல்லாம் நான் மற்றும் நீ தான் அபூர்வமாக நாம் என்றும் சொல்கிறோம். ஆனால் இந்த நீயும் நானும் ஆயிரம் கதாபாத்திரங்களை விட வலுவானவர்கள். பல்வேறு காலங்களைத் தாண்டி வாழ்ந்து கொண்டேயிருப்பவர்கள். இந்த நீயும் நானும் யாரென முற்றாக வரையறை செய்ய முடியாது. அது கடவுளாகவும் இருக்கலாம். குட்டித் தவளையாகவும் இருக்கலாம்.
**
எவராலும் ஒரு கவிதையைத் துவங்கிவிட முடியும். அதைச் சரியாக முடித்து வைக்க ஒரு கவிஞனால் மட்டும் தான் முடியும். கவிஞன் கவிதையை முடிப்பதில்லை. அதிலிருந்து விலகிக் கொண்டுவிடுகிறான். உண்மையில் கவிதையின் முதல்வரி என்பது ஒரு பாதை. அதன் வழியே நீங்கள் நடந்து சென்றால் குறிப்பிட்ட இடத்தை, நிகழ்வை, அனுபவத்தை அடைவீர்கள். கவிதையின் இந்தப் பாதை விநோதமானது. சில நேரம் கவிஞன் கவிதையின் கடைசிவரியை முதலில் எழுதிவிடுவான். பின்பு அந்த வரியை நோக்கி மற்ற வரிகளைக் கொண்டு செல்லுவான். நவீன கவிதையில் முதல் வரியும் கடைசி வரியும் விநோதமானவை. கவிதையின் கடைசிவரியைச் சரியாக முடிப்பது எளிதானதில்லை. பல நேரங்களில் அந்த வரி உங்களை ஏமாற்றிவிடும். நீச்சல் குளத்திலுள்ள விசைப்பலகையைப் போல அந்தக் கடைசிவரி உங்களை எம்பி உயரே பறக்க வைக்க வேண்டும்.
**
துறைமுகம் நோக்கி வரும் கப்பல் போலக் கவிதை கடைசி வரியை நோக்கிச் செல்கிறது. கடலில் செல்லும் போது கப்பலுக்குக் குறிப்பிட்ட திசை நோக்கிப் பயணித்தாலும் அதன் மிதத்தல் நேர்கோட்டில் இருப்பதில்லை. கவிதையும் அப்படித்தான். கவிதையைக் கட்டிப்போட்டு உதைத்து நீ என்ன சொல்ல வருகிறாய் என்று உலகம் கேட்கிறது. அது ஒருவகை சித்ரவதை. கவிதை என்ன சொல்ல வருகிறது என்று கவிதையிடம் கேட்பது பெரிய வன்முறை.
**
அதிசயங்களை உலகம் கொண்டாடும் போது அதிசயங்களைத் தவறவிட்டதைக் கவிஞன் கொண்டாடுகிறான். அற்ப விஷயங்களை அதிசயமாகக் கொண்டாடுகிறான். கொஞ்சம் தாமதமாக உலகிற்கு வந்தவன் போலவே நடந்து கொள்கிறான். அது தான் அவனது இயல்பு. கவிதை என்பது தனியே குடிக்க வேண்டிய மது. உணவு தட்டில் வைக்கப்பட்ட பொறித்த மீனின் கண்கள் என்ன சொல்ல முயல்கிறது என்று கவிஞன் யோசிக்கிறான். கவலை கொள்கிறான். அதே நேரம் மீனின் ருசியையும் அவன் பாடுகிறான். உலகிற்கு இது முரணாகத் தோன்றலாம். ஆனால் கவிதை அப்படியானது தானே,
**
கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதைகள் தந்த உத்வேகம் தான் என்னைக் கவிஞனாக்கியது. அவரது கவிதைகளைப் போலவே நகலெடுத்துப் பார்த்திருக்கிறேன். இளம் ஓவியர்கள் மாஸ்டர்களை நகலெடுப்பது போலத் தான் நானும் நடந்து கொண்டேன். கவிஞர்கள் எளிதில் புகழ்பெற முடியாது. நல்லவேளை பிராஸ்ட் போலவே நானும் வாழும் போதே புகழ்பெற்றுவிட்டேன்
**
என் அம்மா கவிதைகளை விரும்பி வாசிக்கக்கூடியவர். அவருடைய உரையாடலில் நிறையக் கவிதைகள் இயல்பாக வெளிப்படும் அதனால் நான் சிறு வயதில் என் அம்மாவுக்கு இரண்டு விதமான பேச்சு இருப்பதைக் கண்டுபிடித்தேன். உண்மையில் வானொலியின் AM மற்றும் FM போன்ற வித்தியாசமான அலைவரிசையது இதில் FM என்பது கவிதைகளின் வழி பேசுவதாகும். கவிதைகளின் மீது சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்தேன். அதை ஒரு விளையாட்டுப் பொம்மை போலப் பாவித்தேன் ஆனால் திடீரென அந்தப் பொம்மை என்னை விழுங்கிவிட்டது. கவிதை உங்களை விழுங்கிக் கொள்ளும் போது தான் நீங்கள் கவிஞராக மாறுகிறீர்கள்.
ஒரு எலி கையில் ஒலிம்பிக் தீபம் போலப் பந்தம் ஏந்திக் கொண்டு உரக்க முழக்கமிடுவதாகச் சொன்னால் உரைநடையில் சிரிப்பார்கள். கவிதையில் இதெல்லாம் எளிதாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். யாரும் அது எலி என்று நினைக்கவே மாட்டார்கள். எலி யாரைக்குறிக்கிறது என வாசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
**
கவிதை உருவாக நிறையக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அது உடனடியாகச் சமையல் போலச் செய்து முடிக்கப்பட முடியாது. சில கவிதைகளை எழுதி முடிக்க மாதக்கணக்கில் ஆகிவிடுகிறது. சில நேரம் முதல் இரண்டு வரி உருவாகிவிடும். மூன்றாவது வரியைத் தேடித் துப்பறிய வேண்டும். அது எளிதில் கிடைக்கவே கிடைக்காது. சில நேரம் முதல்வரியை ஒட்டுமொத்த கவிதையினையும் உருவாக்கிவிடும்.
**
கவிதை எழுதுவதும் புனைகதை எழுதுவதும் கிளாரினெட் மற்றும் பியானோ போன்ற இரண்டு வித்தியாசமான இசைக்கருவிகளை வாசிப்பதைப் போல மாறுபட்டது. இரண்டிலும் இசை பிறக்கிறது என்பதற்காக இன்றும் ஒன்று போன்ற இசைக்கருவிகள் இல்லையே. இரண்டின் வாசிப்பு முறையும் வேறு தானே, ஒரு சிறுகதையுடன் மூலம் ஒரு நபரின் வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும். அவர் கதை வழியே தன் எதிர்காலத்தைத் திட்டமிட முடியும். ஆனால் கவிதையினை வாசிப்பதற்கு முன்பும் மௌனமேயிருக்கிறது. கவிதையை வாசித்தபிறகும் நிசப்தமே எஞ்சுகிறது. கதை எப்போதும் மற்றவர்களைப் பற்றியே பேசுகிறது. ஆனால் கவிதை கவிஞனைத் தான் முதன்மையாகப் பேசுகிறது. தனிநபர் நடிப்பு போன்றது கவிதை. நாடகம் போன்றது உரைநடை.
**
ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு கவிதைகள் எழுதுவேன். அவ்வளவு தான் எனது கனிகள். நாவலாசிரியர்கள் போலப் புத்தகமாவது பற்றிக் கவிஞர்கள் கவலைப்படுவதில்லை. தனிக்கவிதைகள் மீது தான் அவர்களின் கவனமும் விருப்பமும் எப்போதுமிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு கவிதைத் தொகுப்பு வெளியானால் அதிர்ஷ்டம். சமகாலக் கவிதைத் தொகுப்புகளை விடவும் அனிமேஷன் படங்கள் என்னை அதிகம் பாதித்திருக்கின்றன. எழுதத் தூண்டுகின்றன. கார்டூன் படங்களின் ரசிகன் நான்.
**
பாடப்புத்தகங்களில் கவிதைகளுக்கு கீழே சில கேள்விகள் இடம்பெறுகின்றன. அதற்கு மதிப்பெண் உண்டு. அந்தக் கேள்விகளைக் கண்டதும் கவிதை பதறிப்போய்விடுகிறது. எதைச் சந்திக்கப் பயந்து அது கவிதையாக வெளிப்பட்டதோ, அதைக் கல்லூரிகள் கவிதையின் முன்னால் நிற்க வைத்துவிடுகிறார்கள். அந்தக் கேள்விகளே மாணவர்களுக்குக் கவிதையைப் பற்றிய தவறான புரிதலுக்கான துவக்க புள்ளி.
**
என் பார்வையில் கவிதை என்பது பாவமன்னிப்பு கேட்பதோ, நீதிமன்ற வாக்குமூலமோ, விசாரணை அறிக்கையோ இல்லை. அது ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வது. அழகான சிறு பொய்யை சொல்வது, சமூகத்தை நோக்கி கைகளை நீட்டி அன்பைத் தெரிவிப்பது. அல்லது தனிமையில் சிரித்துக் கொள்வது. வருத்தமடைவது போன்ற செயலே.
**
சில கவிதைகள்

Introduction to Poetry
BY BILLY COLLINS
I ask them to take a poem
and hold it up to the light
like a color slide
or press an ear against its hive.
I say drop a mouse into a poem
and watch him probe his way out,
or walk inside the poem’s room
and feel the walls for a light switch.
I want them to waterski
across the surface of a poem
waving at the author’s name on the shore.
But all they want to do
is tie the poem to a chair with rope
and torture a confession out of it.
They begin beating it with a hose
to find out what it really means.
•••
Silence
BY BILLY COLLINS
There is the sudden silence of the crowd
above a player not moving on the field,
and the silence of the orchid.
The silence of the falling vase
before it strikes the floor,
the silence of the belt when it is not striking the child.
The stillness of the cup and the water in it,
the silence of the moon
and the quiet of the day far from the roar of the sun.
The silence when I hold you to my chest,
the silence of the window above us,
and the silence when you rise and turn away.
And there is the silence of this morning
which I have broken with my pen,
a silence that had piled up all night
like snow falling in the darkness of the house—
the silence before I wrote a word
and the poorer silence now.
••
=
The Trouble with Poetry: A Poem of Explanation
Billy Collins
The trouble with poetry, I realized
as I walked along a beach one night —
cold Florida sand under my bare feet,
a show of stars in the sky —
the trouble with poetry is
that it encourages the writing of more poetry,
more guppies crowding the fish tank,
more baby rabbits
hopping out of their mothers into the dewy grass.
And how will it ever end?
unless the day finally arrives
when we have compared everything in the world
to everything else in the world,
and there is nothing left to do
but quietly close our notebooks
and sit with our hands folded on our desks.
Poetry fills me with joy
and I rise like a feather in the wind.
Poetry fills me with sorrow
and I sink like a chain flung from a bridge.
But mostly poetry fills me
with the urge to write poetry,
to sit in the dark and wait for a little flame
to appear at the tip of my pencil.
And along with that, the longing to steal,
to break into the poems of others
with a flashlight and a ski mask.
And what an unmerry band of thieves we are,
cut-purses, common shoplifters,
I thought to myself
as a cold wave swirled around my feet
and the lighthouse moved its megaphone over the sea,
which is an image I stole directly
from Lawrence Ferlinghetti —
to be perfectly honest for a moment —
the bicycling poet of San Francisco
whose little amusement park of a book
I carried in a side pocket of my uniform
up and down the treacherous halls of high school.
***
“Divorce,” by Billy Collins
Once, two spoons in bed,
now tined forks
across a granite table
and the knives they have hired.
••
அபாயவீரன்
.ஒரு புத்தகத்தின் பக்கங்களை பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப படிக்க வேண்டும் என்ற முறையில் எழுதப்பட்ட ஆங்கில சிறார் நூல் ஒன்றை 2008ல் படித்தேன். என் பையன் ஆகாஷ் அப்போது ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்காக வாங்கப்படும் புத்தகங்களை நானும் படிப்பேன். புத்தகத்தை வைத்து விளையாடுவது பிடித்திருந்த காரணத்தால் அது போன்ற ஒன்றை நானே எழுதலாம் என்று முடிவு செய்து சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கினேன்.

அதை வீட்டிற்கு வரும் சிறுவர்களிடம் கொடுத்து விளையாடச் சொல்லிப் பார்ப்பேன். அவர்களுக்கு அந்த விளையாட்டு பிடித்திருந்தது. அதை ஒரு சிறார் நூலாக வெளியிடலாம் எனப் பாரதி புத்தகாலயம் சொன்னார்கள் அவர்களே இதன் முதற்பதிப்பை வெளியிட்டார்கள். பெரிய கவனம் பெறவில்லை. ஆனால் வாங்கி விளையாடிய சிறார்கள் அது போல வேறு ஏதாவது விளையாட்டுப் புத்தகம் இருக்கிறதா என்று ஆசையாகக் கேட்டார்கள். இன்னொரு சிறிய கதை விளையாட்டினை எழுதினேன். அது வரவேற்பை பெற்றது..
நீண்ட காலத்தின் பின்பு தற்போது தேசாந்திரி பதிப்பகம் அபாயவீரனை வெளியிட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இதை வாங்கி விளையாடிய சிறுவர்கள் இதுபோல வேறு விளையாட்டுப் புத்தகம் இருக்கிறதா என விசாரித்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
புதிய வடிவங்களை, புதிய கதைக்களத்தை. வெளியிட்டு முறைகளை செய்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். ரஷ்ய சிறார் புத்தகங்களை கப்பல் போல, வீடு போல வடிவமைத்திருப்பார்கள். புத்தகத்தைத் திறந்தால் பெரிய கப்பல் வெளிப்படும். இப்போது ஆங்கிலத்தில் அது போன்ற நூல்கள் நிறைய கிடைக்கின்றன. தமிழில் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அபாயவீரனுடன் பகடை ஒன்றை இணைத்துத் தர வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அது லாக்டவுன் காரணமாக சாத்தியமாகவில்லை. தாயக்கட்டை அல்லது பகடை எதைக் கொண்டு உருட்டியும் இதனை விளையாடலாம்.
பரமபதம் விளையாட்டினை வேறுவிதமாக மாற்றிப் புதிய விளையாட்டுப்பலகை ஒன்றை உருவாக்கினேன். இது போலவே மயில் ராவணன் கோட்டை,மாயமாளிகை, கடலுக்குள் பயணம் என்பது போல பல்வேறு புதிய விளையாட்டு பலகைகளை உருவாக்கி என் பையனுக்கு விளையாட அளித்தேன். அவன் வளர்ந்தபிறகு அவைகளுக்கு வேலையில்லாமல் போனது. வீடு மாறும் போது அந்த விளையாட்டுபலகைகளை தொலைத்துவிட்டோம்.
கதைகாட்டி என்ற ஒரு டயரி ஒன்றை நண்பருக்காக உருவாக்கி கொடுத்தேன். அதில் 365 நாட்களுக்கும் தினம் ஒரு கதையிருக்கும். சின்னஞ்சிறிய கதைகள். சிறுவர்களுக்கான டயரியது. அதில் கதைபடிப்பதோடு அதைப் பற்றி சிறுவர்கள் எழுதிக் கொள்ளவும் செய்யலாம். அந்த நண்பர் இந்த ஐடியாவோடு போனவர் இருபது வருஷமாகியும் திரும்பி வரவில்லை.
ஜப்பானிய மாங்கா போல நேரடியாக தமிழில் படக்கதை ஒன்றை எழுத வேண்டும் என்று நீண்ட கால ஆசையிருக்கிறது. இதன் எழுத்துவடிவை முடித்துவிட்டேன். சித்திரங்கள் வரைவதற்கான பொருளாதாரக் காரணங்களால் அது தாமதமாகிக் கொண்டே போகிறது. அடுத்த ஆண்டில் வெளிக் கொண்டுவந்துவிடுவேன் என்று நம்புகிறேன்
••
July 2, 2021
மாடத்தி
லீனா மணிமேகலை தயாரித்து இயக்கியுள்ள மாடத்தி திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் சிறந்த படம்.
கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான லீனா தொடர்ந்து மாற்றுசினிமாவை முன்னெடுத்து வருபவர். தனது ஆவணப்படங்களின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லீனா மாடத்தியின் வழியே புதிய திரைச்சாதனையைச் செய்திருக்கிறார். சுயாதீனப்படங்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. அந்த வகையில் மாடத்தி மிக முக்கியமான படம் என்பேன்.

மாடத்தி கோவிலுக்குச் செல்லும் புதுமணத்தம்பதிகளின் வருகையில் துவங்கும் படம் கடவுளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது.
வன்கொலை செய்யப்பட்ட பெண்கள் தெய்வமாக்கப்படுவது உலகெங்கும் நடந்துவரும் விஷயம். இங்மார் பெர்க்மேன் இயக்கிய தி விர்ஜின் ஸ்பிரிங் படத்தில் இடையர்களால் வன்புணர்ச்சி செய்து கரின் என்ற இளம்பெண் கொல்லப்படுகிறாள் அந்த இடத்தில் ஒரு நீரூற்றுக் கிளம்புகிறது. இடைக்காலச் சுவீடனில் நடைபெற்ற அந்தக் கதையில் வரும் நீரூற்று அவள் புனித உருவம் கொண்டுவிட்டதன் அடையாளம்.

கோபல்ல கிராமம் நாவலில் ஊரணியில் கொலைசெய்யப்படும் பெண் தெய்வமாகிறாள். கழுவேற்றிக் கொல்லப்பட்ட திருடனும் தெய்வமாகிவிடுகிறான். இப்படித் தெய்வங்கள் உருவான கதை விசித்திரமானது.
நாட்டார் பெண் தெய்வங்களைப் பற்றிய வாய்மொழிக் கதைகளில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்த இடம்பெறுகிறது. ஒருவராலோ அல்லது ஊர்மக்கள் ஒன்று சேர்ந்தோ வன்கொலை செய்கிறார்கள். உயிரிழந்தவர்கள் பின்னாளில் தெய்வமாகிறார்கள்.
நாட்டுப்புற தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாகவே நம்பிக்கை. இதிலும் ஆறு தான் கதையின் மௌனசாட்சியம். ஆறு அங்கு நடந்த எல்லா நிகழ்வுகளையும் மௌனமாகப் பார்த்தபடியே ஒடிக் கொண்டிருக்கிறது.

வாய்மொழிக் கதைகளைப் போலவே படமும் நேரடியாக, விநோதமும் புதிரும் வசீகரமும் கொண்ட மொழிதலை முன்னெடுக்கிறது. தீட்டு என்பதை ஒரு பொதுக்குறியீடாகப் படம் சித்தரிக்கிறது. யோசனா என்ற பதின்வயது பெண்ணின் உலகம் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் தன் ஆசையில் பாதையில் சிறுபறவையைப் போலச் சுற்றித் திரிகிறாள். அவள் தன் பாலுணர்வின் முதல் மலர்வை உணர்வதும் அந்த ரகசிய இச்சையின் பின்னால் செல்வதும் அதுவே அவளது வீழ்ச்சியின் காரணமாக அமைவதும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
புதிரை வண்ணார்கள் எனப்படும் தீட்டு துணிகளையும் சாவுத்துணிகளையும் துவைக்கும் மக்களின் வாழ்க்கையை அவர்கள் அனுபவித்த சாதியக் கொடுமைகளைப் படம் பேசுகிறது. தீட்டு என்பது பெண்ணின் உடலோடு மட்டும் தொடர்புடையதில்லை அது சாதியின் வெளிப்பாடு.
படத்தின் ஒரு காட்சியில் உவர் மண் எடுத்து வரும் வேணி ஆதிக்கச்சாதியினரைக் கண்டதும் பயந்து ஒடி புதிரில் ஒளிந்து கொள்கிறாள். பார்த்தாலே தீட்டு என்று அவளைச் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது.
ஊரின் தீட்டுத்துணிகளைச் சலவை செய்து தரும் அவர்கள் ஊர் கண்ணல் படாமல் மறைந்து வாழ வேண்டும் என்பதே கட்டுப்பாடு. அப்படி ஒரு ஒடுக்கப்பட்ட வாழ்க்கையின் ஊடாக வளரும் யோசனா தன் வயதுக்கே உரிய ஆசைகளுடன் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சினைப் போலச் சுதந்திரமாக அலைகிறாள்.

இலவம்பஞ்சு உலுக்கும் காட்சி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கனவுகளும் ஆசைகளும் கொண்ட யோசனா அவளை விலக்கி வைத்த உலகிற்குள், ஊருக்குள் நுழைய விரும்புகிறாள். அந்த உலகம் அவளைக் குரூரமாகக் கல்லெறிந்து பலி வாங்குகிறது.
யோசனா அருவியில் சுதந்திரமாக நீந்திக் குளிப்பது. மலையுச்சியில் தனியே அமர்ந்து சாமிக்குப் படைக்கப் பழங்களைச் சாப்பிடுவது, (அக்காட்சியில் குரங்குகள் கூட அவளுடன் ஸ்நேகமாக இருக்கின்றன.) ஆணின் சட்டையை அணிந்து கொண்டு கனவுகளுடன் ஒடுவது. பாட்டியோடு அவளுக்குள்ள நெருக்கம் என அவளது உலகம் இயல்பாக, அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
வேணியாக நடித்துள்ள செம்மலர் அன்னம் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். வன்புணர்வு செய்யப்பட்ட பிறகு எழுந்து நடக்கும் போது அவள் பாதங்களை ஊன்ற முடியாமல் நடந்து போகிறார். எவ்வளவு சிறப்பான நடிப்பு. கணவனுக்குச் சாராயம் ஊற்றிக் கொடுத்துவிட்டு அவளை நிலத்தில் தள்ளி வன்புணர்வு கொள்ளும் போது அவரது முகத்தில் வெளிப்படும் வலியும் வேஷ்டி கிழியத் துவைக்கும் போது ஏற்படும் ஆத்திரமும். குருதிக்கறை படிந்த தீட்டுதுணிகளைக் காலால் அவள் துவைக்கும் காட்சியும் அபாரமானது. அந்தக் காட்சி தான் அவளது மனதின் உண்மையான வெளிப்பாடு.

கல்மண்டபத்தில் நான்கு பேர் மழையோடு அமர்ந்து பீடி பிடிக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து ஊர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அகிரா குரசோவாவின் ரோஷமானை நினைவுபடுத்தியது அந்தக் காட்சி.
கிராமத்திருவிழாவின் துவக்கம். அதற்காக புதிய தெய்வம் உருவாக்கபடுவது. பெண்களின் முளைப்பாரி. ஊர் கூடி இரவில் வழிபாடு செய்வது என படத்தின் இறுதிக்காட்சிகளின் துவக்கமும் அதையொட்டி நடக்கும் நிகழ்வுகளும் சிறப்பாக காட்சிப்படுத்தபட்டுள்ளன.

யோசனாவாக நடித்துள்ள அஜ்மினா காசிம், வேணியாக நடித்துள்ள செம்மலர் அன்னம், சுடலையாக நடித்துள்ள அருள்குமார், கிராமத்தலைவராக நடித்துள்ள புருஷோத்தமன் எனப் பொருத்தமான நடிகர்கள் அந்தக் கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். திரையில் காணும் இந்தப் புதிய முகங்கள் உண்மைக்கு நெருக்கமாக நம்மை உணரவைக்கிறார்கள்
சாதிய ஒடுக்குமுறையும் ஆணாதிக்கமும் பிரிக்கமுடியாதவை அதற்குக் காலம் காலமாகப் பெண்களே பலியாகிறார்கள். அவர்களைத் தெய்வமாக்கி வழிபடுவது என்பது குற்றவுணர்வின் தப்பித்தல் மட்டுமே. இங்கே மனிதர்கள் மட்டுமில்லை தெய்வங்களும நீதி மறுக்கபட்டவர்களே என்பதை லீனா அழுத்தமாகச் சொல்கிறார்.
மிகச்சிறந்த படத்தைத் தந்த இயக்குநர் லீனா மணிமேகலையே மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
கதைகளின் வழியே
எழுத்தாளர் வால்டர் பெஞசமின் கதை சொல்வதன் முக்கியத்துவத்தை விளக்கி The Storyteller Essays என ஒரு கட்டுரை தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். சிறப்பான கட்டுரைகள் உள்ளன.

அதில் உள்ள ஒரு கட்டுரையில் கதைகளில் சில விஷயங்கள் ஏன் என்று விளக்கப்படாமல் விடப்படுகின்றன. அந்த விடுபடல் தான் கதையின் சுவாரஸ்யம். அதுவே கதைகளைக் காலம் தாண்டி பேசவைக்கின்றன என்கிறார்.
பாரசீக பேரரசர் காம்பிசஸால் தோற்கடிக்கப்பட்டா மன்னர் சம்மேனிடஸ் தனது மகள் சிறைபிடிக்கப்பட்டபோதோ, மகன் மரணதண்டனையை நோக்கிச் செல்லும் போதோ கண் கலங்கவேயில்லை. ஆனால் அவரது உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இனி தன் வாழ்க்கை அவ்வளவு தான் தலையில் அடித்துக் கொண்டு செல்லும் காட்சியைப் பார்த்த போது கண்கலங்கிவிட்டார் என்ற நிகழ்வைக் குறிப்பிடுகிறார். இதில் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது விளக்கப்படுவதில்லை. ஆனால் அது தான் மன்னர் சம்மேனிடஸை தனித்துவமிக்க வராக மாற்றுகிறது.
இதிகாசம் என்பது ஒரு கடல். ஒருவன் கடலுக்குள் எந்தக் காரணம் கருதியும் போகலாம். அல்லது வெறுமனே சந்தோஷத்திற்காகவும் கடலினுள் பயணம் செய்யலாம். அல்லது கரையில் நின்றபடியே அலைகளை வேடிக்கை பார்க்கலாம். நீந்தி மகிழலாம். இதிகாசத்தில் அதன் நாயகர்கள் போர் முடிந்தவுடன் ஓய்வெடுக்கிறார்கள். அடுத்த நாளை பற்றிக் கனவு காணுகிறார்கள். அவர்களின் வீரத்தைப் போலவே அவரின் செயலற்ற தன்மையும் முக்கியமானதே. நாவலாசிரியன் இதிகாசத்திலிருந்து வேறுபட்டவன். அவன் வாழ்க்கையை வேறு நோக்கில். வேறு விதமாகச் சித்தரிக்க முயல்கிறான். அவன் கதாபாத்திரங்களை இதிகாசம் போலக் கையாளுவதில்லை
கதைசொல்லல் என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது ஞானத்தின் வழிகாட்டி. ஞானத்தையே கதையாக வெளிப்படுத்துகிறார்கள் அதன் வழியே வாழ்விற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார்கள்.
குழந்தைக்கு உடல்நலமில்லை என்றால் அதன் தாய் அதன் படுக்கையருகில் அமர்ந்து தலையைத் தடவிவிட்டுக் கதை சொல்லுகிறாள். நோயுற்ற நிலையிலும் குழந்தை கதை கேட்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது. உண்மையில் கதை சொல்வது என்பது நோய் நீக்கும் முறையாகும். ஒவ்வொரு நாள் காலையிலும்,
உலகம் முழுவதிலுமிருந்து செய்திகள் நம்மை வந்து அடைகின்றன. இவ்வளவு செய்திகள் பெருகிய போதும் ஏன் சிறப்பான கதைகள் உருவாக்கப்படவில்லை. காரணம் செய்திகளால் போதும் கதையின் சிறப்பை அடைய முடியாது. எல்லாச் செய்திகளையும் கதையாக்க முடியாது. செய்திகளைத் தாண்டி செய்தியினுள் இருக்கும் மனிதர்களின் உலகை, உணர்வுகளை, அறியப்படாத காரணங்களை, ரகசியங்களை, நோக்கியே கதை பின்னப்படுகிறது. செய்தி குறிப்பிட்ட காலத்துடன் மறைந்து போய்விடக்கூடியது. கதை அப்படியானதில்லை. அது காலத்தைக் கடந்து நிற்க கூடியது.
ஆஸ்கார் வைல்ட் பற்றிய ஒரு கதை உள்ளது: ஒரு நாள் அவர் புத்தகம் படிப்பது பற்றி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இதைச் சொன்னார் என்கிறார்கள். அதாவது எனக்கு மிகவும் சலிப்பாக இருக்கும் போது ஒரு நல்ல நாவலைக் கையில் எடுத்துக் கொண்டு கணப்பு அடுப்பின் முன்னால் போய் உட்கார்ந்து கொள்வேன். நாவலை மூடி வைத்துவிட்டு நெருப்பைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்றார்.
வேடிக்கைக்காகச் சொல்லப்பட்ட விஷயம் என்றாலும் புத்தகமும் நெருப்பும் வேறுவேறில்லை. ஒரு புத்தகத்திலிருந்து உங்களுக்கான கதகதப்பு உருவாகவே செய்யும். அது உங்களை அரவணைத்துக் கொள்ளும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் வசதிகளும் இன்றைய மனிதனுக்குப் புதுவகையான வறுமையை உருவாக்கியுள்ளது. இந்த வறுமை என்பது நேரடி அனுபவமில்லாமல் வளருவதாகும். இயற்கையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டுவிட்ட மனிதன் அவற்றை வெறும் பிம்பமாக மட்டுமே திரையில் பார்த்து ரசிக்கிறான். மனிதர்கள் ஒன்றுகூடிப் பேசுவதும். உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுவதும் குறைந்துவிட்ட காலத்தில் கதைகளுக்கான ஆதாரமான அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன. அனுபவ வறுமை என்பது எந்த அனுபவத்திற்கும் உட்படாமலே கடந்து போய்விடுவதாக இருக்கிறது. பழைய அனுபவங்களை நாம் வெறுக்கிறோம். விடுபட முயல்கிறோம். புதிய அனுபவங்களுக்கு நாம் தயாராக இல்லை. He who travels has a story to tell என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். இன்று நாம் இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் அடைந்துவிட முயல்கிறோம்.
The novel is important not because it instructs us by presenting a stranger’s fate, but because the flame that consumes this stranger’s fate warms us as our own fates cannot. What draws the reader to a novel is the hope of warming his shivering life at the flame of a death he reads about.
என்று ஒரு கட்டுரையில் நாவல் ஏன் முக்கியமானது என்று கூறுகிறார். கதைகளின் வழியே வால்டர் பெஞ்சமின் அடையாளம் காட்டுவது மனிதகுல வளர்ச்சியின் தொடர்ச்சியை, அதன் விடுபட்ட கண்ணிகளை, நினைவுத்திரட்டினை. அந்த வகையில் கதைகளின் பின்னலை ஆராயும் இந்தக் கட்டுரைகள் முக்கியமானவை என்பேன்
••
June 30, 2021
வேம்பலையின் மனிதர்கள்
ஜேகே
நெடுங்குருதி நாவல் குறித்த விமர்சனம்

புத்தகங்கள் எப்போதும் ஆச்சரியங்களையே நமக்கு அளிக்கின்றன. வார இறுதியில், இன்னமும் சில நாட்களில் இழுத்து மூடப்படப்போகும் புத்தகசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லா புத்தகங்களையும் கழிவு விலையில் ஐந்து டொலர்கள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். புத்தக வரிசையில் லாகிரியின் லோ லாண்ட் இருந்தது. கைட் ரன்னர் இருந்தது. லோங்கிடியூட் இருந்தது. டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் என்று ஆதர்சர்கள் அனைவருமே, ஐந்து டொலர்களுக்குள் அடங்கியிருந்தார்கள். ஐநூறு பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். ஐம்பது பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். சுற்றிவரவிருந்த அலுமாரி பூராக புத்தகங்களோடு நடுவில் நின்றபோது, இன்டர்ஸ்டெல்லரில் கருந்துளைக்குள் நிற்கின்ற நாயகன் நினைவே வந்தது.
ஒவ்வொரு புத்தகங்களையும் திறக்கையில் உள்ளே புதிதாக ஒரு உலகம் உருவாகிறது. ஏலவே இருப்பதில்லை. உருவாகிறது. எழுத்தாளர் சிருஷ்டிப்பதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை அடிப்படையாகக்கொண்டு அந்த உலகம் கூர்ப்படைகிறது. லாகிரியின் எழுத்துக்களைக்கொண்டு நான் படைக்கும் உலகம், இன்னொருவன் படைப்பதிலிருந்து நிச்சயம் மாறுபடவே செய்யும். நான் அந்தப்புத்தகத்தை திறக்காவிடில் அப்படி ஒரு உலகம் உருவாகாமலேயே போயிருக்கும். என் மதுமிதாவும் இன்னொருவரின் மதுமிதாவும் வேறு வேறு நபர்கள். ரத்னாவும் வேறு. கீ. ராவின் அண்ணாச்சி என் உலகத்தில் வேட்டியை மடித்துக்கட்டியிருப்பார். வெற்றிலை போடுவார். தலை வழுக்கையாக இருக்கும். உங்கள் அண்ணாச்சிக்கு நிறைய தலைமயிர் இருக்கலாம். புதுமைப்பித்தனின் செல்லம்மாள் எனக்கு நயினாதீவில் வாழும் கொழும்பர்மாமி மாதிரி இருப்பார். உங்களுக்கு வேறொருவராக இருப்பார். ஒரே நாவல். ஒரே பாத்திரங்கள். ஒரே ஊர்கள். ஆனால் உலகம் வேறு. ஒவ்வொரு நாவலுக்கும் உயிர் கொடுக்க ஒரு வாசகன் வரவேண்டியிருக்கிறான். ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு தனி உலகம்.
நெடுங்குருதி. இது என் உலகம். நான் படைத்த உலகம். எஸ். ரா மன்னிக்க;
வேம்பலை, காலவெள்ளத்தில் மெல்ல மெல்ல சிதிலமாகிவரும் கள்ளர்கள் வாழும் கிராமம். வெம்மைசூழ் ஊர். ஊரின் குணம் மக்களில் தொனிக்கிறதா அல்லது மக்களின் குணம் ஊரில் தொனிக்கிறதா என்று தெரியாதவண்ணம் வேம்பலைக்கும் அம்மக்களுக்குமிடையிலான குணாதிசயங்கள் பின்னிப்பிணைந்திருக்கின்றன. அது வேண்டியபொழுதில் மக்களை உள்ளே இழுக்கிறது. வேண்டாதபோது குடும்பத்தோடு காறித்துப்புகிறது. அந்த மக்கள் ஊர் ஊராக சென்று கொள்ளையடிப்பவர்கள். வேம்பலை அவர்களையே தன்னிஷ்டப்படி கொள்ளையடிக்கிறது.
அப்படி வேம்பலை தன் விருப்பப்படி பந்தாடுகின்ற குடும்பம் நாகுவினுடையது. அவனோடு சேர்ந்த மூன்று தலைமுறைகளை சொல்லுகின்ற நாவல் நெடுங்குருதி. நாகு சிறுவனாக வாழுகின்ற வேம்பலை கிராமம், வாழ்ந்துகெட்ட ஊரின் படிமானங்களோடு காட்சி அளிக்கிறது. வெயிலும் பசியும் தாகமும் ஊரை வாட்டியெடுக்கிறது. கிராமத்துக்குவரும் பரதேசிக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பது அரிதாகிறது. ஊர் வரட்சியாகும்போது மக்களும் வரட்சியடைகிறார்கள். அவர்களின் மன நிலைகளும் ஈரம் வரண்டு பாலையாகிறது. நீர் வறண்ட கிணற்றில் கிடந்த ஆமையை எடுத்து வருகிறாள் நாகுவின் தமக்கை நிலா. அதையும் களவாடி சமைத்து உண்ணும் நிலையில் ஊரவர் இருக்கிறார்கள். நாகுவின் தகப்பன், சொந்தத்தொழில் செய்வதை அவமானமாக நினைப்பவன். வேற்றூருக்கு வியாபாரம் செய்வதாகச்சென்று அங்கே அப்பாவி பக்கீரை ஏமாற்றி செருப்புகளை திருடிக்கொண்டு வந்துவிடுகிறான். ஆனால் ஊரில் செருப்பு விக்க அவனுக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. முயல் வேட்டைக்கு செல்கிறான். எலிகளை வேட்டையாடுகிறான். செருப்புகளை தேடி வந்த அப்பாவி பக்கீரை கொல்கிறான். பக்கீரைத்தேடிவரும் மனைவியையும் பிள்ளைகளையும் வேம்பலை கிராமம் சுவீகரிக்கிறது. தனக்குகந்தபடி மாற்றியமைக்கிறது. அயலூரின் குலச்சாமி கரையடி கருப்புவைக்கூட வேம்பலை ஈர்க்கிறது. ஆனால் தன் இயல்புக்கு ஒவ்வாத நாகுவையும் அம்மாவையும் ஊரை விட்டே துரத்துகிறது.
வேம்பர்கள் தெருவின் வடக்கே ஒரு ஊமை வேம்பொன்று நிற்கிறது. பூக்காது. காய்க்காது. காற்றுக்குகூட அசையாத வேம்பு அது. அங்கே நிறைய ஆணிகள் அறைபட்டுக் கிடந்தன. வீரம்மாள் அதில் ஒன்றை பிடுங்கி வீட்டுக்கு கொண்டுவருகிறாள். அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அவளுக்கு தரித்திரம். தாளாமல் வீரம்மாள் மீண்டும் அந்த ஆணியை மரத்திலேயே அறைவதற்கு வருகிறாள். அறைகிறாள். ஏறவேயில்லை. அடிக்க அடிக்க ஆணி எப்பன் கூட நுழையவில்லை. வளைகிறது. பலமாக அடித்தால் ஆணி ஒடிந்துவிடுகிறது. ஆனாலும் அந்த வேம்பிலே ஏலவே அடிபட்ட நிறைய ஆணிகள் இருந்தன. அவை, அந்த வேம்பின்மீது ஆணி அறைந்தால் அது என்றோ ஒருநாள் உள்ளே ஏறும் என்கின்ற நம்பிக்கையை அறைபவனுக்கு கொடுக்கிறது. வீரம்மாள் பித்துப்பிடித்து அலைகிறாள்.
வேம்பலை என்ற மொத்த கிராமுமே அந்த ஊமை வேம்புபோலத்தான். அது தன் இயல்புக்கு ஒவ்வாதவர்களை ஏற்றுக்கொள்ளாது. ஆனாலும் அதனைத்தேடி ஆராரோ அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கிறார்கள். கள்ளர் குடியிருப்பு, கொலை, குடி, கூத்தடிப்பு என்று வாழ்பவர்களிடம் ஏன் மற்றவர்கள் வருகிறார்கள்? எறும்புகள் கூட ஊரைவிட்டு இடம்பெயர்ந்தாலும் வேம்பலை தலைமுறை தாண்டி தப்பிநிற்கிறது. எப்படி? நாகு ஏன் அந்த பாழாய்ப்போன கிராமத்துக்கு மீள வருகிறான்? வசந்தாவுக்கு தான் ஒருநாள்கூட தங்கியிராத வேம்பலைமீதி அப்படி என்ன ஈர்ப்பு?
குடித்துவிட்டு வந்து கலாட்டா பண்ணி கன்னத்தை அடித்த கணவன், விளக்கணைத்தபின்னர் மனைவியின் மடியில் கை போடும்போது அவள் மெல்லிய சிணுங்கலோடு அவனை சுவீகரிப்பாளே. அந்த ஈர்ப்பு அது. புரிதலை, புத்தியை தாண்டிய இயல்பு அது.
வேம்பலையை நிர்மாணிப்பது என்பது கடும் சவாலான காரியமாகவிருந்தது. பரிச்சயமில்லாத கட்டமைப்பு. மனிதர்கள். குணாதிசயங்கள். கதை நடைபெறும் காலமும் குழப்பமானது. நிறைய வெயில், பனை, வேம்பு, வறுமை, வரட்சி என்கிற சில பரிச்சயமான விடயங்கள் போதவில்லை. தண்ணீருக்கு தட்டுப்பாடான கிராமத்தில் சாயக்காரர் தெருவும் இருக்கிறது. அடுத்த கிராமமும், நகரமும் எட்டா தூரத்தில் இருக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால், ஊர் ஊராக சென்று களவெடுத்தாலும், வேம்பலை தனியாக குணம் மாறாமல் அப்படியே தலைமுறை தாண்டியும் இருக்கிறது. கள்ளர்கள் கிராமம் இரவில் விழித்திருக்கிறது. பகலில் உறங்குகிறது. நேர்மையில்லாமல் வாழ்தல் இயல்பாகிறது. ஏற்றுக்கோள்ளப்படுகிறது. இவற்றை வைத்து வாசகன் ஒரு ஊரை நிர்மாணிக்கவேண்டும். கொல்லன் பட்டறையில் காய்ச்சி எடுத்து அடி அடியென்று அடித்து இரும்பை கூராக்குவதுபோல எனக்குத்தெரிந்த கிராமத்தையெல்லாம் வேம்பலையாக்க முயன்றேன். முடியவில்லை.
வேம்பலை என்றில்லை. நாவலில் வருகின்ற எந்த ஊரையுமே அதன் முழுமையான வடிவத்துக்கமைய சிருஷ்டிக்க முடியவில்லை. ஒருவாறு சிருஷ்டித்துவிட்டேன் என்று நினைக்கையில் ஊரின் குணம் அப்படியே மாறிவிடும்.
ஊர் என்றில்லை. மனிதர்களும் அப்படியே. நாகுவும், அவன் தந்தையும், தாத்தாவும், ரத்னாவதியும், மல்லிகாவும், பக்கீரின் மனைவியும் அதனையே செய்கிறார்கள். அடிக்கடி சட்டையை மாற்றுகிறார்கள். அதிலும் ரத்னாவதி தனி ரகம். அவள் காதல், அவள் காமம், அவள் எண்ணங்கள் எம் முன்முடிபுகளை எல்லாம் தவிடு பொடியாக்குகின்றன. ஆதிலட்சுமி பேசும்போது அட கதைக்குள்ளேயே இன்னொரு கதை சொல்லியா? என்று ஆச்சரியப்படுத்துவாள். பூபாலனை தேடி ஊர் ஊராக அலைவீர்கள். திருமால் இன்னொரு புரியாத புதிர். எல்லோருமே முரண்பாடுகளோடு திரிகிறார்கள். அதுவே அவர்களின் இயல்பாகிறது. எஸ். ரா, அவர்களை வாழவிட்டு பின்னாலே சென்று எழுதுகின்ற நாவலோ என்னவோ. எந்தப்பாத்திரமும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்டதல்ல. பெற்று விட்டிருக்கிறார். எம்மோடு சேர்ந்து பாத்திரங்களும், ஊர்களும், படிமங்களும் வாசிப்போடு வளர்கின்றன. முடிக்கையில் நெடுங்குருதி வேறெங்கும் ஓடவில்லை, அது நம்முள் ஓடுகின்ற இரத்தமே என்பது புரியும்போது, வெம்மை சும்மா முகத்தில் அடிக்கும்.
கதையை புறவெளியிலிருந்து இப்படி உள்ளுணர்வுக்கு நகர்த்துவதற்கு எஸ். ரா நாவல் பூராவும் இன்னொரு பாத்திரத்தை உலாவவிடுகிறார். படிமம். படிமங்கள் நாவலில் முதல் வரியிலிருந்து கடைசிவரை விரவிக்கிடக்கின்றன.
நாவலின் முதல்வரியே இதுதான்.
ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாக சென்றுகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோரு வயது நடந்துகொண்டிருந்தது.
இதுதான் நாவல். திருமால் தவளையோடும் மண் புழுக்களோடும் நடத்தும் உரையாடல்கள். பண்டார மகளின் உள்ளங்கை தேள். ஆதிலட்சுமியின் உலகத்தில் இறந்தவர்கள் வானில் போவார்கள். திடீரென்று புழுக்கள் ஊரை மொய்க்கும். எங்கிருந்தோ கொக்குகள் வந்து அவற்றை கொத்தித்திண்ணும். வேம்பலையில் வாழ்ந்து இறந்தவர்கள் எல்லாம் தாம் வாழ்ந்த ஊரை, அப்படியே பாழடைந்தவண்ணமே உருவாக்கி அங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இறந்தவர்களுக்கு ஒரு வேம்பலை. இருப்பவருக்கு ஒரு வேம்பலை என்று ஊர் இரண்டாகிறது. காட்சிப்படிமம். காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
கிராமம் விரிகிறது.
அல்லப்பிட்டி வீதியில், சென்றிப்பொயிண்ட் தாண்டி கொஞ்சத்தூரம் பயணம் செய்தால் வேலணைக்கு திரும்பும் வீதி வரும். அந்த வீதியில் ஒரு நூறு மீட்டர் தாண்டினால் மேற்காலே ஒரு காணியில் சிதிலமடைந்த கூரையற்ற ஒரு கல் வீடு இருக்கும். காணி முழுதும் மாரியில் மழை நீர் முட்டிவிடும். காணியின் தெற்கு எல்லையில் பெரியதொரு எல்லைப்பூவரசு பக்கத்துக்காணிமீது சரிந்து பெரிதாக வளர்ந்திருக்கும். ஒவ்வொருமுறையும் பேரூந்தில் அப்பூவரசைக்கடக்கும்போதும் அதனோடு பேசவேண்டும் என்று மனம் நச்சரவு செய்யும்.
“உனக்கு சின்ன வயசு ஞாபகம் இருக்கா. உன்னை எந்த மரத்திலயிருந்து முறிச்சு இஞ்ச கதிகாலா நட்டாங்கள்?”
பூவரசு எகத்தாளமா பதில் சொல்லும்.
“ஆ… பூவரசு மரத்திலயிருந்து”
“யாரு நட்டாங்கள்?”
“புக்கையிண்ட பெடி ரமேசு… சொத்தியா நட்டிட்டான்”
அதன் இடுப்பிலிருந்த ஆணித்தழும்புகளையும், அதற்குமேலால் கொழுத்து வளர்ந்திருந்த மொக்கு மரத்தையும் தடவியபடி கேட்பேன்.
“முள்ளுக்கம்பி அறையேக்க உனக்கு நோகேலையா?”
“நொந்துதுதான். ஆனா நான் பிடிப்பா நிக்கிறதுக்கு அது தேவையில்லையா? சரிஞ்சு விழுந்திருந்தா இத்தனைக்கு நான் விறகாகியிருப்பனே?”
“யார் வீட்டு வேலி இது?”
“முத்துலிங்கத்தாரிண்ட, செத்துப்போனார். இடுப்புல ‘ம’ எண்டு கத்தி கிழிச்சிருக்கு பாரு. அது மகேசு கிழிச்சது. இப்ப சுவீடனில இருக்கிறாள். பேரப்பிள்ளையுமாயிற்றுது”
“பெரிய குடும்பமா?”
“எட்டு பிள்ளையள். மூத்ததிண்ட கலியாணத்துக்கு அடைச்சவேலி. தெக்காலக்காணிதான் அவளுக்கு சீதனம் குடுத்தது. அதுகள் கொஞ்சநாள் இருந்திட்டு உத்தியோகம் எண்டு யாழ்ப்பாணம் போயிட்டிதுகள். ஆனா மாரி முடிய வேலி அடைக்க வந்திடுவினம். நான், எல்லைத்தடி எண்டதால தறிக்கயில்ல. ஆனா எண்ட கொப்புகளைத்தான் வெட்டி கதிகால் நடுவினம்”
“வெள்ளம் வராதா?”
“அள்ளிக்கொண்டு போயிடும். ஆனா நான் நிண்டுபிடிப்பன். அவையள் கடும்மழை எண்டால் அஞ்சாம் வட்டாரத்திலயிருந்த யோகன் மாமாவிட்ட போயிடுவினம்”
“இப்பவும் தொடிசல் இருக்கா?”
“யோகன் மாமாவும் செத்துப்போனார். குடும்பம் கனடாவுக்கு. முத்துலிங்கத்தாரிண்ட நேரடிச்சொந்தம் எதுவும் ஊரில இல்லை. சனமே இல்ல. ஆனா கட்டாக்காலி ஆடுகள் அப்பப்போ வந்து போகின்றன”
“உனக்கு அதுகளாவது துணை. நல்லம்தானே”
“அதெப்படி? வீடு முழுக்க ஆட்டுப்பீ. மகேசுண்ட பேரப்பிள்ளைகள் வந்தா கால் வைக்கவேணாமே, ஆரிட்டையாவது காசைக்குடுத்து வேலியை அடைப்பிச்சா நல்லம். இப்பிடியே போனா என்னையும் தறிச்சிடுவாங்கள். கள்ளர் கூட்டம்”
தலைமுறைமாற்றம் புறவியல்புகளையும் தோற்றங்களையும் மாற்றுகின்றன. ஆனால் மனிதர்களும் மாறவில்லை. படிமங்களும் மாறவில்லை. முதல்வரியில் எறும்பை ஊரை விட்டு அகற்றும் வேம்பலை, இறுதிவரியில் வசந்தா குடும்பத்தோடு, கொக்குக்கூட்டத்தையும் உள்ளே இழுக்கிறது. நாவலின் இறுதி வரிகள்.
விரிந்த உள்ளங்கை ரேகைகளைப்போல வேம்பலை தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானிலிருந்து வேம்பலையில் இறங்கிக்கொண்டிருந்தன. தொலைவில் எங்கோ மயிலின் அகவல் ஓசை விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது.
வசந்தாவின் கணவன் சேதுவுக்கும் கிட்ணாவுக்கும் பிறந்த குழந்தைக்கு “நாகு” என்று பெயர் வைக்கலாமா என வசந்தா கேட்க, அவன் சம்மதிக்கிறான். வாசிக்கும்போது சுருக்கென்றது. நாகுவை மீண்டும் வேம்பலை கொல்லப்போகிறது.
நெடுங்குருதி. நள்ளிரவின் வெக்கை.
நன்றி
https://www.padalay.com/
வெளிச்சத்தைத் தேடி
பாவண்ணன்
– “செகாவின் மீது பனி பெய்கிறது” – விமர்சனக் கட்டுரை

(திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)

•••
தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நுட்பமான உறவை மனிதன் புரிந்துகொள்கிறான்.
ஒரு படைப்பை மனதார வாசித்த பிறகு மானுட குலத்தின் துக்கம் அவனுடைய துக்கமாகவும் மானுட குலத்தின் ஆனந்தம் அவனுடைய ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு வித்தை காட்டி பணம் சம்பாதிக்கும் சிறுவனொருவனைப்பற்றிய சிறுகதையைக் கார்க்கி எழுதியிருக்கிறார்.
பத்து வயதில் குடும்பப் பாரத்தைத் தாங்குவதற்காக எங்கோ இருக்கும் கல்கத்தா நகருக்கு வீட்டுவேலை செய்வதற்காக ரயில்பயணம் செய்யும் சிறுமியின் கதையைத் தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார்.
இரண்டு கதைகளையும் வாசிக்கும்போது நம் நெஞ்சம் கரைந்துவிடுகிறது. ஓர் இலக்கிய அனுபவம் நம்மீது செலுத்தும் ஆளுமைக்கு இந்த அடிப்படை உண்மைதான் அடையாளம். உலகம் முழுதும் இப்படிப்பட்ட எண்ணற்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒரு வாசகனுடைய கோணத்தில் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தல்ஸ்தோய், செகாவ், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, புஷ்கின், வான்கோ, ஹெமிங்வே, பெசோ, ஜார்ஜ் ஆர்வெல், வெர்ஜினியா வுல்•ப் என உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆளுமைகளை எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆளுமைகளின் சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகள், அவர்களுடைய வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்கள், எழுத்தில் அவர்கள் அடைந்த வெற்றிகள் என்பவற்றை முதல் பகுதியாகவும் அவர்களுடைய மிகச்சிறந்த ஆக்கங்களைப்பற்றிய அறிமுகம் என்பதை இரண்டாவது பகுதியாகவும் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது.
நூலில் முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ள “அஸ்தபோல் ரயில் நிலையம்” உணர்ச்சிமயமான ஒரு கட்டுரை. தல்ஸ்தோயின் இறுதிக் காலத்தில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே மனவருத்தம் உருவாகிக் கசப்பில் முடிவடைந்த காலகட்டம் அது. தன் படைப்புகளின் பதிப்புரிமையை நாட்டுக்குச் சொந்தமாக அறிவிக்கவும் தன் நிலங்களை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கவும் ஓர் உயில் எழுதிவைக்க விரும்புகிறார் தல்ஸ்தோய். ஆனால் தல்ஸ்தோயின் மனைவிக்கு அதில் உடன்பாடில்லை.
விவாதத்தால் மனம் உடைந்துபோன தல்ஸ்தோய் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். பயணத்தின் நடுவில் உடல்நலக் கோளாறின் காரணமாக அவர் இறங்கிய நிலையத்தின் பெயர்தான் அஸ்தபோல் ரயில்நிலையம். அங்குள்ள ஓய்வறையில் அவர் தங்கவைக்கப்படுகிறார். செய்தியைக் கேள்விப்பட்டு மக்கள் அனைவரும் அவரைப் பார்ப்பதற்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் திரண்டுவருகிறார்கள்.

தன் சொற்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக மனைவிமீது மனவருத்தம் கொண்டு பிரிந்துவருகிற தல்ஸ்தோய், மரணப்படுக்கையில் தன்னைக் காணவருகிற தன் பெண்ணைப் பார்த்து அவர் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிற தருணம் விசித்திரமானது. மனத்தின் மாறுபட்ட விசித்திரமான நிலைகளைத் தன் படைப்புகள்வழியாகக் கண்டறிந்துசொன்ன தல்ஸ்தோயின் மனமும் விசித்திரச் செயல்பாடுகளிலிருந்து விலகிநிற்க இயலவில்லை. துரதிருஷ்டவசமாக அந்த இடத்தில் அவருடைய உயிர் பிரிந்துவிடுகிறது. இச்சம்பவத்தை ஒரு சிறுகதைக்கே உரிய நுட்பத்தோடும் விவரணைகளோடும் எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
செகாவின் “நாய்க்காரச் சீமாட்டி” சிறுகதையின் அனுபவத்தை எஸ்.ராமகிருஷ்ணன் முன்வைத்திருக்கும் விதம் மிகவும் நுட்பமாக உள்ளது. ஊரைச் சுற்றிப் பார்க்க வரும் சீமாட்டியின் திட்டம் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து சுற்றவேண்டும் என்பதுதான். தற்செயலாக ஒரு சம்பவத்தால் அது சாத்தியமற்றுப் போகிறது. அந்தத் திட்டத்தைக் கைவிடவும் சீமாட்டிக்கு மனமில்லை. தனிமையில் புறப்பட்டு விடுகிறாள். தனிமைக்கு ஒரு துணையாகத்தான் ஒரு நாயை அழைத்து வருகிறாள். தோளில் ஒருவர் ஒரு பாரத்தைச் சுமப்பதுபோலத் தனிமையை ஒரு பாரமாகக் கையோடு பற்றி இழுத்துவருகிறாள் அந்தச் சீமாட்டி. நாயை ஒரு படிமமாக உள்வாங்கி உரைக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் சொற்கள் அக்கதையின் அனுபவத்தைக் கவித்துவம் நிறைந்ததாக மாற்றுகின்றன.
கைவிடப்படுதலும் நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது என்கிற செகாவின் குறிப்பை ஓரிடத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். செகாவின் கதைகள் இவ்விரண்டு உணர்ச்சிகளையே தொடர்ந்து வலியுறுத்துகின்றன. பனியில் நனையும் குதிரையைப் பார்த்து மனம்கலங்கி அவசரமாக வீதியில் இறங்கிய செகாவும் பனியில் நனைகிறார். இருவர்மீதும் பனி கொட்டுகிறது. குதிரை அவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. செகாவ் ஆழ்ந்த துயரத்துக்கு ஆளாகிறார்.

இந்தச் சம்பவத்தை விவரித்துச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் இறுதியில் கண்டுணர்ந்து எழுதிய வரிகள் மிகவும் முக்கியமானவை. “எப்போதும் செகாவ் பனியில் நனைகிறார் என்ற படிமம் என்னை வசீகரிக்கிறது. அது வெறும் குதிரையின் மீதான பரிதாபம் மட்டுமல்ல. மொழியற்ற துயரின் மீதான எழுத்தாளனின் அக்கறையான செயல்பாடு அதுவே” என்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள். இந்த வரிகளின் அடிப்படையில் இந்த நூலின் தலைப்பு இன்னும் கூடுதலான வெளிச்சத்தில் சுடர்விடுவதைப் பார்க்கலாம்.
தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள், தல்ஸ்தோயின் நடனத்துக்குப் பிறகு கார்க்கியின் கிழவி இஸெர்கில் பாஸி அலியேவாவின் மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது ஆகிய எல்லாப் படைப்புகளும் நிராசையின் வலிகளை முன்வைக்கின்றன. நிலப் பின்னணிகளோடும் காட்சிகளோடும் இவற்றை இணைத்துப் புரிந்துகொள்ளும்போது உருவாகும் பரவசத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்துகொள்கிறார்.
மண்கட்டியை காற்று அடித்துப் போகாது நாவலைப்பற்றி எழுதும்போது, அந்த நாவலுக்கு அலியேவா எழுதியுள்ள முன்னுரை சிறப்பு மிகுந்த பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஓர் இளம்பெண் எழுத்தாளராக மாறிய நுட்பமான கணம் அந்த முன்னுரையில் முன்வைக்கப்பட்டிருப்பதுதான் காரணம். ஒரு காட்சி மனத்தில் உருவாக்கும் பரவசத்துக்கும் அதன் வழியே மனம் மேற்கொள்ளும் பயணத்துக்கும் எல்லையே இல்லை. அலியேவா அப்போது இளம்பெண். வயதான கிழவிக்கு ஊசியில் நூல்கோர்த்துக்கொடுத்து பொழுதின் அலுப்பைப் போக்கிக்கொள்கிறாள்.

பேச்சுவாக்கில் ஒருநாள் கிழவி அவளுக்கு அழகின் ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கிறாள். உராஸ் பண்டிகையன்று விடிகாலையில் புல்வெளியில் காணப்படும் பனித்துளிகளைச் சேகரித்து முகம் கழுவிக்கொண்டால் ஒருபெண் அழகியாகிவிடுவாள் என்பதுதான் அந்த ரகசியம். அழகியாகும் ஆசையை மனத்தில் தேக்கிவைத்துக் காத்திருந்து பண்டிகை நாளன்று அதிகாலையில் எழுந்து ஓடுகிறாள் அவள். பூக்கள் எங்கும் பனித்துளிகள். ஒரு நீலமலரின் முன்னால் மண்டியிட்டு பனித்துளிகளைச் சேகரக்கிறாள். அப்போது அருகில் ஒரு செடி வளைந்து கிடப்பதைக் காண்கிறாள்.
அதை அழுத்திக்கொண்டிருந்த கல்லைப் புரட்டிவிட்டு அதை விடுவிக்க விரும்புகிறாள். கல்லைப் புரட்டித் தள்ளியதும் அந்த இடத்திலிருந்து ஒரு நீரூற்று பொங்கி வழிகிறது. ஆச்சரியம் ததும்ப அந்த ஊற்றைக் கவனித்தபடியே இருக்கிறாள். பண்டிகை நாளில் புது ஊற்றைக் காண்பது பேரதிருஷ்டம் என்பது ஒரு நம்பிக்கை. அது தனக்கு வாய்த்திருக்கிறது என்று தன்னை மறந்து அதில் லயித்துப் போகிறாள்.
தெய்வத்தின் முன் முறையிடுவதுபோலத் தன் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி வேண்டிக்கொள்கிறாள். துக்கமும் ஆனந்தமும் கடந்த மனநிலையில் அவள் தன்னைத்தானே புதிய பிறவியாக உணர்கிறாள். வீட்டுக்கு வந்தவுடன் அவளது மனத்தில் சொற்கள் தாமாகவே சுரக்கின்றன. அவள் முதன்முறையாக ஒரு கவிதையை எழுதுகிறாள். ஒரு கல் புரண்டு அதன் அடியிலிருந்து நீரூற்று பொங்குவதுபோல மனத்தில் இருந்த தடை விலகி அவளுக்குள் கனவுகளும் சொற்களும் பீறிடுகிற அற்புதம் உண்டாகிறது.
இருபது தொகுதிகள் அடங்கும் அளவுக்கு அவள் கவிதைகளை எழுதுகிறாள். படைப்பைப் போலவே ஒரு படைப்பாளி உருவான விதம் பரவசம் மிகுந்ததாக உள்ளது. இந்த அற்புதக் கணத்துக்கு முக்கியத்துவம் தந்து வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்காக எஸ்.ராமகிருஷ்ணனைப் பாராட்டவேண்டும்.
மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் நாவலைப்பற்றிய அறிமுகக்கட்டுரை இந்த நூலின் முக்கியப்பகுதி என்றே சொல்லவேண்டும். கணிதத்தைச் சுவையான கதையாக மாற்றியிருக்கும் ஆசிரியரைப் பாரட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் அந்த நாவலில் வாசித்த மனஎழுச்சியூட்டும் சில வரிகளைக் குறிப்பிடுகிறார்.
நேர்மை என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள் நேர்க்கோடு என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம். அதனுடைய பக்கங்கள் திறந்திருக்கும் சொர்க்கம். கடவுளின் இந்த நூலகத்தை அழிக்கவோ திருடவோ முயற்சிசெய்வது அசிங்கமான குற்றம் ஆகியவை முக்கியமான சில வரிகள்.

விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களின் மொழியாக்கம்வழியாகத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் ஜார்ஜ் ஆர்வெல். அந்த நாவல்களைக் காட்டிலும் முக்கியமான இரண்டு கட்டுரைகளை விரிவாக முன்வைத்து அவர் இந்த நூலில் அறிமுகம் செய்யப்படுகிறார். ஆட்சி நடைமுறைகளைப் பகடி செய்கிறவராக நம் மனத்தில் பதிந்துபோயிருக்கும் ஆர்வெல் படிமத்தை எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்புகள் மாற்றிப் புதிதாக ஒரு படிமத்தை வார்த்தெடுத்துக் கொடுக்கின்றன. இந்தப் படிமம் அவரை நமக்கு இன்னும் நெருக்கமானவராக உணரவைக்கிறது. ஆர்வெலின் கட்டுரைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை இது உருவாக்குகிறது.
தன் எழுத்துகள் வழியே ஒரு படைப்பாளி ஒரு வாசகனுடைய நெஞ்சில் சிறிது வெளிச்சம் படியும்படி செய்கிறான். அந்த வெளிச்சத்தைத் துணையாகப் பற்றிக்கொண்டு வாசகன் இன்னும் இன்னும் என வெளிச்சத்தைத் தேடிப் பயணப்படுகிறான். பயணங்கள் தொடரத்தொடர நெஞ்சில் இருட்டின் அடர்த்தி மங்கிக்கொண்டே போகிறது. வாசகர்களுக்குத் துணையாக எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றியிருக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது.
செகாவின் மீது பனி பெய்கிறது.
எஸ்,ராமகிருஷ்ணன்.
தேசாந்திரி பதிப்பகம்
விலை ரூ 150
நன்றி:
பாவண்ணன் – திண்ணை இணையஇதழ்
June 29, 2021
மணமகளின் காதல்
Brides என்ற கிரேக்கத் திரைப்படத்தைப் பார்த்தேன். சமகாலக் கிரேக்க திரைப்படங்கள் ஒளிப்பதிவிலும் இசையிலும் புதிய கதை சொல்லும் முறையிலும் உச்சத்தை அடைந்திருக்கின்றன. பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கிய ஐந்து படங்களை முன்னதாகப் பார்த்திருக்கிறேன்.

இதில் 2013ல் வெளியான Little England நிகரற்ற படம். கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் இதுவே. எண்பது வயதான வோல்காரிஸ் மிகச்சிறந்த படங்களை இயக்கியுள்ளார், சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கடலோடிகளின் வாழ்க்கையை மையமாக் கொண்டு கிரேக்கத்தில் நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. கடந்தகாலப் பெருமை ஒருபக்கம் நிகழ்காலக் கால நெருக்கடிகள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் ஊசலாடும் வாழ்க்கையைக் கிரேக்க சினிமா சித்தரிக்கிறது..
Brides 1922 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. Mail-order brides என்பது சர்வதேச திருமண நிறுவனம் ஒன்று தனது ஆட்களின் மூலம் திருமணமாகாத ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த அழகான இளம்பெண்களை அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறது. இதன்படி மணமகனின் புகைப்படத்தை மட்டும் காட்டி அவனுக்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிடுகிறார்கள்.

வறுமையின் காரணமாகப் பெண்ணும் சம்மதிக்கிறாள். இந்தப் பெண்களை ஒரு கப்பலில் ஏற்றி அமெரிக்கா கொண்டு சென்று அங்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதில் நிறைய மோசடிகள் நடப்பதும் உண்டு. உண்மையில் இது வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் என்ற போர்வையில் விற்பனை செய்வதாகும்.
படத்தின் துவக்கத்தில் கிரேக்க மற்றும் ரஷ்ய இளம் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து மணமக்களாக ஒப்பந்தம் செய்கிறார்கள்.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட இளம் கிரேக்க மற்றும் ரஷ்யப் பெண்கள் ஒடேசா மற்றும் ஸ்மிர்னாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பற்பயணம் புறப்படுகிறார்கள்
எஸ்.எஸ். கிங் அலெக்சாண்டர் கப்பலில் 700 மணப்பெண்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களில் ஒருத்தியாக இருக்கிறாள் நிகி. அவள் ஒரு தையற்காரி. கிரேக்கத் தீவு சமோத்ரேஸினைச் சேர்ந்தவள் அவள் தனது குடும்பத்தின் வறுமை காரணமாக இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். அவளைச் சிகாகோவிலுள்ள ஒரு டெய்லருக்கு மணம் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

எழுநூறு பெண்களில் ஒருத்தியாக அவளும் கப்பலேறுகிறாள். இந்தப் பெண்கள் கப்பலுக்காகக் காத்திருப்பதும். கப்பலில் அவர்களுக்குள் ஏற்படும் நட்பும், அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கப்பலின் மூன்றாம் வகுப்பு பயணிகளாக இந்த மணப்பெண்கள் தங்குகிறார்கள். அங்கே போதுமான வசதிகள் இல்லை. அவர்கள் மணப்பெண்கள் போல நடத்தப்படுவதில்லை
படத்தின் எண்பது சதவீதம் கப்பலில் நடக்கிறது. இந்தக் கப்பலில் புகைப்படக்கலைஞரான நார்மனும் பயணம் செய்கிறான். யுத்தமுனையில் போட்டோகிராபராக பணியாற்றிய அவன் தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் மனச்சோர்வுடன் அமெரிக்கா திரும்புகிறான். அந்தக் கப்பலில் வரும் மணப்பெண்களைப் பற்றி அறிந்தவுடன் அவர்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த முயல்கிறான். இதற்கு நிகி உதவி செய்கிறாள்.

கப்பலில் ஒன்றுகூடும் பெண்கள் தையல்வேலை செய்கிறார்கள். சிலர் தங்கள் புதிய கணவர்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள், சிலர் தங்களுக்குப் பிடித்த உணவைச் சமைக்கத் தயாராகிறார்கள். பொன்னிற முடி கொண்ட ஒல்கா என்ற பதின்வயது பெண்ணைக் காதலிக்கிறான் நார்மனின் உதவியாளன். அவர்களின் காதல் குறைவான காட்சிகளின் மூலம் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையைத் தாங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.
நிகிக்கும் நார்மனுக்குமான காதல் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிகியின் தயக்கம். நார்மன் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசமாக்குவது. அவள் கப்பலிலும் தையல் தைப்பதிலே நேரத்தைக் கழிப்பதும். பிற பெண்களுக்கு அவள் செய்யும் உதவிகள், தான் விரும்பினாலும் குடும்பச் சூழல் தன் காதலை ஏற்காது என்ற புரிதல். நார்மனுக்கு தனது நினைவாகக் காதணியைக் கழட்டித் தரும் நேசம் என நிகி மறக்கமுடியாத கதாபாத்திரமாக மாறுகிறாள். மனவுறுதி மிக்கக் கிரேக்கப் பெண்ணின் அடையாளமாக இருக்கிறாள் நிகி
நார்மன் சிறந்த புகைப்படக்கலைஞராக இருந்த போதும் பத்திரிக்கைகள் அவனை அங்கீகரிக்க மறுக்கின்றன. அவன் விரக்தியோடு இந்தத் தொழிலை விட்டுவிட நினைத்தே பயணம் மேற்கொள்கிறான். ஆனால் கப்பலில் கண்ட மணப்பெண்களின் நிலை அவன் மனதை மாற்றுகிறது. திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் எப்படிப் பட்டவர். எங்கே வாழப்போகிறோம் என எதுவும் தெரியாமல் இத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருப்பது அவனை வேதனைப்படுத்துகிறது. அவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறான்.
படத்தில் சாரோ என்ற இளம்பெண் தனது தந்தையின் கண்டிப்பினால் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்படுகிறாள். அவள் ஒரு ராணுவவீரனைக் காதலிக்கிறாள். அவனை மறந்து எப்படி யாரோ முகம் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்வது என்று வருத்தமடைகிறாள். கப்பல் தளத்தில் நின்றபடியே மணிக்கணக்காக அலைகளைப் பார்த்தபடியே இருக்கிறாள். இதன் முடிவு அதிர்ச்சி தரும் செயலாக மாறுகிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் மிகச்சிறப்பானது. ஓவியங்களின் நேர்த்தியைக் கொண்ட காட்சிகள். தனித்தன்மைமிக்க கதாபாத்திரங்கள்.மிகை நாடகமின்றி கொண்டுசெல்லப்படும் கதைப்போக்கு. அழகான முடிவு என சிறந்த அனுபவத்தை தருகிறது படம்.

ஒரு காட்சியில் புகைப்படம் எடுப்பதற்காகத் திருமண உடை அணிந்து அந்தப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து நிற்கிறார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. கவலை படிந்த முகம், அதில், சொல்ல முடியாத பயம் தான் வெளிப்படுகிறது. நிகி புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவளை நார்மன் கட்டாயப்படுத்தவில்லை. பின்னொரு நாள் அவளாகவே புகைப்படம் எடுக்க வந்து நிற்கிறாள். அந்தக் காட்சியில் கேமிரா வழியாக அவளை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறான் நார்மன். நிகியின் புகைப்படம் கடைசியில் உலகின் சாட்சியமாக மாறி பத்திரிக்கை ஒன்றில் அட்டையில் இடம்பெறுகிறது.
எது இந்தப்படத்தை நமக்கு மிகவும் நெருக்கமாக்குகிறது. மணப்பெண்களுக்குள் நாமும் ஒருவர் போலக் கலந்துவிடுகிறோம். மிக நெருக்கமாக, உண்மையாக அவர்களின் தவிப்பை, ஏக்கத்தை. பயத்தை அறிந்து கொள்கிறோம். திருமண ஏற்பாட்டாளர்கள் இதைச் சிறந்த வணிகமாகச் செய்கிறார்கள் என்பதைக் காணும் போது நாம் எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழவே செய்கிறது
இந்தப்படம் டைட்டானிக்கை நினைவூட்டினாலும் அதை விட நேர்த்தியாக, பல்வேறு ஊடுஇழைகள் கொண்ட அழுத்தமான கதைசொல்லுதலை முன்னெடுக்கிறது. டைட்டானிக் போலப் பிரம்மாண்டத்தை மட்டும் முதன்மைப்படுத்தவில்லை. திருமணத்தின் பெயரால் பெண்கள் விற்பனை பொருளாகக் கொண்டு செல்லப்பட்ட உண்மை வரலாற்றை துல்லியமாகப் பதிவு செய்கிறது.
இந்தக் கப்பலில் பயணம் செய்யும் கராபுலட் ரஷ்ய மணப்பெண்களை மிரட்டி தனது படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார். இதற்குக் கேப்டனில் இருந்து கப்பல் அதிகாரிகள் பலரும் துணைசெய்கிறார்கள். அவரை நிகி எதிர்க்கும் போது நிர்வாகியான பெண் இது போல ஐந்தாறு பெண்களைப் பறிகொடுத்துத் தான் மற்ற பெண்களைப் பாதுகாக்க முடியும் என்கிறாள்.
இதை நிகியால் ஏற்க முடியவில்லை. அவளுக்காக உதவி செய்யப்போகும் நார்மனை அவர் ஏளனமாகப் பார்ப்பதுடன் உங்களால் என்னை எதுவும் செய்ய இயலாது என்று சவால்விடுகிறார். அவரிடம் நார்மன் தன் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி மிகச்சிறப்பானது.
கப்பல் நியூயார்க் வந்து சேர்ந்தவுடன் மணப்பெண்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட மணமகனைத் தேடுகிறார்கள். தடுப்பின் மறுபுறம் மண்மகன்கள் கையில் மலர்களுடன் நின்று தவிக்கிறார்கள். அந்தக்காட்சி அபாரமானது. அவர்களில் தனது மணமகனாக உள்ள டெய்லரை நிகி தேடுகிறாள். அவன் நிகி இப்படியிருப்பாள என எதிர்பார்க்கவில்லை. முடிவில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் நிகிக்கு ஒரே கனவு தான் இருக்கிறது. அது நிறையச் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். தங்கைகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே. இதற்காகத் தன் ஆசைகளைக் கைவிடும் நிகி கடைசியில் நார்மனின் கடிதத்தை வாசிக்கிறாள். அவளாலும் காதலின் பிரிவைத் தாங்க முடியவில்லை. இனி நிகி நினைவுகளில் வாழத்துவங்குவாள். அது மட்டும் தான் சாத்தியம்

“என் குடும்பம் ப்ரோட்ரோமோஸுக்கு வாக்குறுதியளித்தபடி நான் நடந்து கொள்ளாவிட்டால் என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை எவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். , மேலும் எனது குடும்பத்தின் நற்பெயர் பாழாகிவிடும் என்று ஒரு காட்சியில் நிகி சொல்கிறாள். கிரேக்கக் குடும்பங்கள் நற்பெயரையும் கௌவரத்தையுமே முதன்மையாகக் கொண்டவை. அதன் குரலையே நிகி ஒலிக்கிறாள்
தீவிரமான உணர்ச்சிகள் மற்றும் சாகசத்தை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களையே பான்டெலிஸ் இயக்கிவருகிறார்.“ The love. The passion. The loneliness. The mourning. The untold truths revealed too late. The timeless topic of family relationships“. இதுவே தனது படங்களின் அடிப்படை விஷயங்கள் என்கிறார். அது உண்மை என்பதை Brides பார்க்கும் போது நாமும் உணருகிறோம்.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
