S. Ramakrishnan's Blog, page 118

August 27, 2021

சிறிய உண்மைகள் 6 பனிப் பறவைகள்

இயக்குநர் இங்க்மர் பெர்க்மென் தனது முன்னுரை ஒன்றில் ஒரு நிகழ்வினைக் குறிப்பிடுகிறார். அது வர்ஜின் ஸ்பிரிங் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம்.

கடுங்குளிரான மே மாதத்தில் அவர்கள் வடக்கு பிரதேசமான டலார்னாவில் இருந்தார்கள். காலை ஏழுமணி அளவில் படப்பிடிப்பிற்கான இடத்திற்கு அவரது குழுவினர் சென்று கொண்டிருந்தார்கள். அந்தப் பனிப்பாகையில் செல்வது கடினமாக இருந்த்து. மிக அதிகமான குளிர். ஆகவே விதவிதமான குளிராடைகளை அணிந்து கொண்டு பணியாளர்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்கள். வழியெங்கும் பனிப்பொழிவு அதிகமாக இருந்த்து. படப்பிடிப்பு நடக்க இருந்த இடத்தில் கேமிராவைப் பொருத்தி நடிகர்களைத் தயார்ப்படுத்திப் படப்பிடிப்பிற்கான தயாரிப்பு நடந்து கொண்டிருந்த. . நடிகர்கள், எலக்ட்ரீஷியன்கள், மேக்-அப் மேன்கள், ஸ்கிரிப்ட் கேர்ள், சவுண்ட் க்ரூ என ஒரு பெரிய குடும்பம் போல அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

திடீரென யாரோ ஒருவர் வானைச் சுட்டிக்காட்டியபடி குரல் கொடுத்தார். அடுத்த நிமிஷம் எல்லோரும் அவரவர் வேலையைப் போட்டுவிட்டு வானை நோக்கினார்கள். வானில் கொக்குகள் பறந்து கொண்டிருந்தன.. ஒரு வட்டத்தில் கம்பீரமாக மிதப்பது போல அந்தக் கொக்குகள் பறந்து கொண்டிருந்தன. அதைக் கண்டதும் படப்பிடிப்புக் குழுவினர்கள் சந்தோஷக் கூச்சலிட்டார்கள். எல்லா வேலைகளையும் கைவிட்டு அந்தக் கொக்குகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்று அருகிலுள்ள குன்றின் உச்சிக்கு ஓடினார்கள். .

உச்சியில் நின்று கொக்குகள் தொலைவிலுள்ள காட்டினை கடந்து மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். நீண்ட நேரம் அவர்களைக் கலைந்து போகவேயில்லை.

திடீரென ஒரு அற்புதம் கண்முன்னே நடந்தேறியது போன்ற மகிழ்ச்சி அனைவருக்கும் உண்டானது. நமது வேலைகளைக் கைவிட்டு ஒடிச்சென்று காணும் அளவிற்கு உருவான அந்தக் கொக்குகளின் பயணம் சினிமா எடுப்பதற்கு இணையானது. சினிமாவில் இப்படித்தான் திடீரென அதியசங்கள் நடைபெறுகின்றன. சாத்தியமாகின்றன.

ஸ்வீடனில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்றால் இப்படியானது தான் என இந்தக் காட்சியினைப் பெர்க்மென் குறிப்பிடுகிறார்

எதனால் அனைவரும் அந்தக் கொக்குகளைக் காணத் தனது வேலைகளைப் போட்டு ஓடினார்கள்.. நம் எல்லோருக்கும் வயதைக் கடந்த சிறுவன் அல்லது சிறுமி இருக்கிறாள். அந்தச் சிறுவன் விழித்துக் கொண்டுவிடுகிறான்.

பள்ளி வயதில் வானில் கொக்குகள் பறந்து போகும் போது கூடவே ஓடுவோம். கொக்கே கொக்கே பூப்போடு என்று சபதமிடுவோம். கொக்கு பூ போட்டால் நம் விரல் நகத்தில் வெண் புள்ளி போலத் தோன்றும். அது புத்தாடை கிடைக்கப்போவதன் அடையாளம். கொக்குகளை உலகம் முழுவதும் சந்தோஷத்தின் அடையாளமாக நினைக்கிறார்கள். ஜப்பானில் காகித கொக்குகளைச் செய்வது ஒரு கலை. ஹிரோஷிமாவில் ஆயிரக்கணக்கான காகித கொக்குகளைத் தோரணமாகக் கட்டி விட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சீனக்கவிதைகளில் கொக்குகள் தூய அன்பின் வெளிப்பாடாக, நித்தியத்தின் அடையாளமாக, ஆசையின் தூதுவனாகச் சித்தரிக்கப்படுகின்றன. கொக்கின் நடனம் அளவில்லாத சந்தோஷத்தை அடையாளப்படுத்துகிறது.

மௌனமாகச் செல்லும்

கொக்குகளைப் போல என் நினைவுகள்

உன்னை நோக்கிச் செல்கின்றன என்கிறது குய் ஹாவின் கவிதை வரி.

கடினமான பணிக்கு நடுவில் திடீரெனச் சூடான தேநீர் அமிர்தமாகிவிடுவது போல, எதிர்பாராத நேரத்தில் வானவில் தோன்றுவதைப் போல, மழை பெய்வதைப் போல, இந்தக் கொக்குகளின் வருகையும் அதிசயமான நிகழ்வாகிவிடுகிறது. படப்பிடிப்பின் நடுவே குழந்தைகளைப் போல அதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

அந்தக் கொக்குகள் திடீரெனச் சந்தோஷத்தின் அடையாளமாக, நம்பிக்கையின் குறியீடாக மாறிவிடுகின்றன. மனித மனம் இது போல எதிர்பாராத அதிசயத்திற்கு ஏங்கிக் கொண்டேயிருக்கிறது.

அதிசயம் என்றால் நடக்கவே நடக்காத விஷயமில்லை. எதிர்பாராமல் நடக்கும் விஷயம்.

கொக்குகள் பறந்து போவது புதிய விஷயமில்லை. ஆனால் அந்தப் பனிப்பொழிவின் ஊடே. யாருமற்ற பிரதேசத்தில் கடினமான பயணத்தின் நடுவே கொக்குகள் வட்டமிடுவதைக் காணுவது பரவசமாகிறது. அது தான் மனிதர்கள் வேண்டும் மாயத்தருணம்.

ஒரு கலைஞன் இந்தத் தருணத்திலிருந்து ஒரு உண்மையை அறிந்து கொள்கிறான். திட்டமிடப்படாத விஷயங்கள் நிகழும் போது தான் அதிசயங்கள் சாத்தியமாகின்றன. சினிமா எவ்வளவு தான் திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும் அதில் இப்படித் திட்டமிடப்படாத நடிப்பு. காட்சியாக்கம் உருவாகும் போது படம் அதிசயமாகிவிடுகிறது.

சினிமாவில் இது போன்று திட்டமின்றி உருவாக்கப்பட்ட அபூர்வ தருணங்கள் நிறைய இருக்கின்றன. அது நடிகர் அல்லது நடிகையின் வழியே ஒளிப்பதிவு அல்லது இசை மற்றும் படத்தொகுப்பின் வழியே சாத்தியமாகிவிடும்.

டேவிட் லீன் அப்படி ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். படப்பிடிப்பிற்காக நாங்கள் கடற்கரையில் காத்திருந்த போது நாங்கள் விரும்பிய கருமேகங்கள் வரவில்லை. படப்பிடிப்பு முடியும் தருணம் தற்செயலாக எங்களுக்காக வந்த்து போலக் கருமேகங்கள் வந்தன. அவை நகரவில்லை. நாங்கள் படமாக்கி முடியும் வரை காத்திருந்தன. பின்பு சட்டென மழையாக மாறின. இந்த அதிசயம் அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்தது. இயற்கையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தால் தான் அந்தக் காட்சி அழகாகப் படமாக்கப்பட்டது என்கிறார்

அது உண்மை. இயற்கை உங்களை அனுமதிக்க வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். இயற்கையில் அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவை எப்போது எப்படி வெளிப்படும் என்று யாராலும் கண்டறிந்து சொல்ல முடியாது. மின்னல் வெட்டு போல அதிசயம் சட்டென நடந்து முடிந்துவிடும். அதிர்ஷ்டமிருப்பவர்கள் அதைக் காணுவார்கள், அறிந்து கொள்வார்கள்.

மனிதர்கள் காலம் காலமாக அதிசயங்களுக்காக ஏங்கிக் கொண்டேயிருக்கிறார்கள் அது நடக்கும் போது தவறவிட்டவர்களும் இருக்கிறார்கள். பின்பு அதை நினைத்து நினைத்து ஏங்குவார்கள்.. நரபலி கொடுக்கும் மனிதர்களிடம் சிக்கிக் கொண்ட ஓவியர் ஒருவர் நான் கைகாட்டினால் வானில் சூரியன் மறைந்துவிடும் என்று அவர்களை எச்சரிக்கிறார். அது போலவே வானை நோக்கி கையைக் காட்டுகிறார். சூரியன் இருளத் துவங்குகிறது. அன்று சூரிய கிரகணம் என்று அவர் முன்பே அறிந்து வைத்திருந்தார். இந்தத் தற்செயலைத் தனது தப்பித்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் கண்முன்னே சூரியன் இருண்டு மறையும் அதிசயத்தைக் கண்ட அந்த நரபலி கொடுப்பவர்கள் பயந்து அந்த ஓவியரை வணங்கி விடுதலை செய்தார்கள். ஓவியர் ஒரு அதிசயத்தால் உயிர் தப்பினார். இது ஒரு உண்மை நிகழ்வு. அதில் மனிதர்களின் மீட்சிக்கான வழியாக அதிசயமுள்ளது

அதிசயம் எப்போதும் விண்ணிலிருந்தே உருவாகும் என மக்கள் நம்புகிறார்கள். உண்மையில் மண்ணில் தான் அதிகமான அதிசயங்கள் உருவாகின்றன. நடந்தேறுகின்றன.

முதுமையில் பெர்க்மென் பறவைகள் கூட்டமாகப் பறப்பதைப் பற்றியே கனவுகள் கண்டு கொண்டிருந்தார். அதைப்பற்றித் தனது நாட்குறிப்பிலும் எழுதியிருக்கிறார். போர்ஹெஸின் பறவைகள் கதைகளில் ஒருவன் கண்களை மூடியபோது ஒரு பறவை கூட்டத்தைக் காணுகிறான். ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி இருந்தது. எத்தனை பறவைகளைப் பார்த்தான் எனத் தெரியவில்லை. அந்த எண்ணிக்கை அறுதியானதா? அறுதியற்றதா?

இந்தச் சிக்கலை போர்ஹெஸ் கடவுள் உள்ளாரா? இல்லையா என்பதோடு தொடர்புடையது. என்கிறார்

கடவுள் இருந்தால் இந்த எண்ணிக்கை அறுதியானது. ஏனெனில் நான் எவ்வளவு பறவைகளைப் பார்த்திருப்பேன் என்பது கடவுளுக்கும் தெரியும்

கடவுள் இல்லை என்றால் பறவைகளின் எண்ணிக்கையும் அறுதியற்றது. ஏனெனில், எத்தனை பறவைகள் பறந்து போயின என்று யாராலும் சொல்ல முடியாது. என்கிறார்

தோற்றமும் மறைவும் எளிய விஷயங்களில்லை. அதுவும் கண்ணுக்குள் பறந்த பறவைகளைத் துல்லியமாக ஒருவன் கணக்கிடுவது என்பது கனவில் காசுகளை எண்ணியது போன்றதே. இதைக் கடவுளின் இருப்போடு ஒப்பிட்டது தான் போர்ஹெஸின் சாதனை.

இதே புள்ளியில் தான் பெர்க்மெனும் இணைகிறார். பறவைகளைக் கண்ட அனுபவத்தை எளிய நிகழ்வாக மட்டும் அவர் கருதவில்லை. அது நீண்டகாலம் அவரது நினைவில் சிறகடித்துக் கொண்டேயிருந்து திரைக்கதை நூலின் முன்னுரையாக மாறுகிறது. பின்னாளில் கனவுகளில் பறக்க ஆரம்பிக்கிறது

கலையின் புதிர் தன்மை என்பது இது போன்றது தான். அவற்றைக் காரணங்களால் விளக்கிவிட முடியாது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2021 01:12

August 26, 2021

இரவு ரயிலில் இரண்டு பெண்கள்

ஒரு ரயில் பயணத்தை இத்தனை அழகாகப் படமாக்கமுடியுமா என வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் SOMETHING USEFUL பெண் இயக்குநரான .பெலின் எஸ்மர் இயக்கிய துருக்கி நாட்டுப்படம். 2017ல் வெளியானது

வழக்கறிஞரும் கவிஞருமான லேலா தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்கள் 25 ஆண்டுகளுக்குப்பிறகு ஒன்று சேரும் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பக் காத்திருக்கிறாள். அது நீண்ட தூர ரயில் பயணம்.

தற்செயலாக ரயில் நிலையத்தில் பயிற்சி செவிலியராக வேலை செய்யும் கனனை சந்திக்கிறாள். அவளது தந்தை தன் மகள் நகரத்தில் ஒரு வேலைக்கான நேர்காணலுக்குச் செல்கிறாள். அவளுக்கு ரயிலில் ஏதாவது உதவி வேண்டும் என்றால் கவனித்துக் கொள்ளுங்கள் என்று லேலாவிடம் கேட்டுக் கொள்கிறார்.

தான் வேறு வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறேன். ஆனாலும் ஏதாவது தேவை என்றால் அவசியம் உதவுகிறேன் என்கிறாள் லேலா.

ரயில் வருகிறது. அவர்கள் பயணம் புறப்படுகிறார்கள். படத்தின் இறுதி காட்சிகளைத் தவிர முழுவதும் இரவில் செல்லும் ரயில் பயணம் தான். இத்தனை அழகாக ரயில் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை, கடந்து செல்லும் குடியிருப்புகளை, சுரங்கப்பாதை மற்றும் விளக்குகள் நிறைந்த இரவின் வானத்தை, வேறுவேறு ரயில் நிலையக்காட்சிகளை,. பல்வகைப்பட்ட பயணிகளைக் கண்டதில்லை.

ரயிலின் கழிப்பறையில் நின்றபடியே தன் காதலனுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த கனனாவை காணும் லேலா அவளைத் தன்னுடன் ரயிலில் செயல்படும் உணவகத்திற்கு வரும்படி அழைக்கிறாள். இவரும் செல்கிறார்கள். பரஸ்பர அறிமுகம் நடக்கிறது. அப்போது தான் ஒரு கவிஞர் என லேலா காட்டிக் கொள்வதில்லை.

ஒரு இளம்பெண் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என வியப்புடன் கன்னை கேள்வி கேட்கிறாள்.

அவர்கள் உரையாடலின் வழியே எதற்காகக் கனனா பயணம் செய்கிறாள் என்பதை அறிந்து கொள்கிறாள். அந்த உண்மை தான் படத்தின் மையச்சரடு. நீண்டகாலம் படுக்கையில் நோயாளியாகக் கிடந்த யாவுஸ் என்பவரின் தற்கொலைக்கு உதவுவதற்காகக் கேனன் பயணிப்பதாக லீலா அறிந்து கொள்கிறாள்

அவளால் அதை நம்ப முடியவில்லை. கனனா தனது காதலனின் பொருட்டு இது போன்ற காரியத்தில் ஈடுபடப்போவதாகச் சொல்கிறாள். சட்டெனப் படம் திசைதிருப்பலை அடைகிறது.

இந்தப் பயணத்தின் ஊடே விரியும் இரவுக்காட்சிகளும் ஒளிரும் விளக்குகளும் ரயிலுக்குள் ஊடுருவும் வண்ண ஜாலங்களும் இருளில் மூழ்கியிருக்கும் தூரத்துக் குடியிருப்புகளும் உறக்கம் வழியும் முகத்துடன் காத்திருக்கும் பின்னிரவு பயணிகளும். ரயில் நின்று போன இடத்தில் செயல்படும் இரவு நேர காபிக்கடையும் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டு பெண்களுக்குள் ஏற்படும் உறவு மெல்ல நெருக்கமாகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். இதன்விளைவாகக் கனனாவிற்கு உதவி செய்ய முன்வருகிறாள் லேலா. யாவுஸை தேடி இருவரும் செல்கிறார்கள்

நீண்ட தூர இரவு பயணத்தில் நாமும் இணைந்து பயணிப்பது போலவே இருக்கிறது. பருந்துப் பார்வையில் காட்டப்படும் ரயில் காட்சிகளும், ரயில் பெட்டியினுள் நடைபெறும் நிகழ்வுகளும்,, இசைக்கலைஞர்களின் சந்திப்பும் அந்தப் பெண்களின் கடந்தகாலம் வெளிப்படும் போது உருமாறும் வெளிச்சமும் எனப் படம் கவித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகச்சிறப்பான ஒளிப்பதிவு.

. நீண்ட இரவு பயணத்தின் முடிவில், ஊர் வந்து சேரும் அவர்கள் யாவுஸ் வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே படம் அப்படியே திரும்பி விடுகிறது. லேலாவை பார்த்தவுடனே யாவுஸ் அவள் புகழ்பெற்ற கவிஞர் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறான். அவளது கவிதைகளின் தீவிர வாசகன் என்று அவள் எழுதிய புத்தகங்களைச் சொல்கிறான். எதிர்பாராத அந்த அன்பும் நட்பும் லேலாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. அவள் யாவுஸை புரிந்து கொள்கிறாள். அந்த வீட்டின் மாடியில் வசிக்கும் பெண்ணின் இசை என்பது வாழ்க்கையின் சங்கீதம் என்பதை உணருகிறாள். வெகு அழகாகப் படம் நிறைவு பெறுகிறது

படத்தின் துவக்கத்தில் வயதில் மூத்தவளான லேலா இளையவளின் கதையை அறிந்து உதவ முற்படுகிறாள். ஆனால் கனனாவின் கதையை விடவும் அதிகம் ரகசியங்களும் மறைக்கபட்ட விஷயங்களும் கொண்டது லேலாவின் வாழ்க்கை. அவள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறாள். உண்மையில் அவளது மனது அன்பிற்கு ஏங்குகிறது என்பதைப் படம் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது

குறைந்த கதாபாத்திரங்களின் வழியே ஒரு கதையை நேர்த்தியாகக் கொண்டு செல்கிறார் இயக்குநர் பெலின் எஸ்மர். ஒரு பெண் இயக்குனரால் தான் இப்படியான படத்தை எடுக்க முடியும்..

இவரது வாட்ஸ் டவர் என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். முக்கியமான படமது. அந்தப் படத்திற்கும் இந்தக் கதைக்கும் மெல்லிய தொடர்பு இருப்பதை உணர்ந்தேன். அதிலும் மலைநகருக்குச் செல்லும் ஒரு பேருந்து பயணம் தான் படத்தின் மையம். காட்டினுள் அமைக்கப்பட்ட கோபுரத்தில் தனியே நின்றபடியே காவல்காக்கும் அந்த இளைஞனைப் போலவே தான் யாவுஸ் இருக்கிறான்.

படத்தின் துவக்கக் காட்சியில் கிராஃபிட்டி கலைஞராக உள்ள ஒருஇளைஞன் ரயில் நிலையச்சுவர் ஒன்றில் பறவை ஒன்றை வரைகிறான். போலீஸ்காரன் அவனைத் துரத்துகிறான். அந்தப் பறவையை வரைபவன் வேறு வேறு இடங்களில் இறங்கி இதுபோலப் பறவைகளை வரைகிறான். படத்தில் அந்தப் பறவை ஒரு குறியீடு போலவே இடம்பெறுகிறது. யாவுஸ் வீட்டிற்குச் செல்லும் வழியிலும் அதே பறவை இடம்பெறுகிறது. இந்தக் கலைஞனை லேலா புரிந்து கொள்கிறாள். அவனது சுதந்திரத்தை, தைரியத்தை ரசிக்கிறாள்.

கனனை விட வயதில் மூத்தவளாக இருந்த போதும் லேலாவிடம் முதிர்ச்சியில்லை. பெரிய அனுபவங்கள் இல்லை. ஆனால் கனனா அபூர்வமான பெண்ணாக இருக்கிறாள். அவள் காதலுக்காக எதையும் செய்யத் தயாராகா இருக்கிறாள்.

இரண்டு மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து ஒரே துளியாகிவிடுவது போன்ற அழகிய அனுபவத்தையே படம் தருகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2021 04:18

August 25, 2021

கவிதையின் கையசைப்பு

உலகக் கவிதைகளை அறிமுகம் செய்யும் எனது கவிதையின் கையசைப்பு நூல் பற்றி பவித்ரன் விக்னேஷ் சிறந்த அறிமுகம் ஒன்றை தந்துள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2021 21:05

August 24, 2021

தமிழ் வாழ்க்கையின் புதிய பரிமாணம்.

கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இவரது வாட்டர்மெலன் என்ற சிறுகதைகளின் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் படித்த மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.

கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு செய்யத் தவறிய வாழ்க்கையை அதன் அடர்த்தியோடு உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் இரண்டுவிதமான அந்நிய வாழ்க்கையைப் பேசுகிறது. ஒன்று பிழைப்பிற்காக அரபு நாடுகளுக்குச் சென்று வாழும் இளைஞர்களின் சூழல் மற்றும் நெருக்கடிகள். ஊர் நினைவுகள். அரபு உலகில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள். அச்சமூட்டும் மனநிலை. பன்னாட்டு சமூக வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் எனப் புதிய கதைவெளியினை மையமாகக் கொண்டவை

இரண்டாவது வகைத் தமிழ்நாட்டிலிருந்து கூலித்தொழிலாளர்களாகச் சென்றவர்கள் கர்நாடகத்திலே தங்கி வாழும் போது அவர்கள் வாழ்க்கை எப்படியிருந்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறை மற்றும் மேலாதிக்கம். சடங்குகள் நம்பிக்கைகள். திருமண உறவுகள். மற்றும் மாறும் தலைமுறைகளின் அடையாளச்சிக்கல்கள். புகலிடத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். பொருளாதாரப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகள்.

மலையாளச் சிறுகதைகளில் இது போன்ற அரபு தேச வாழ்க்கை விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னடத்திற்கு நிச்சயம் இது புதுவகைத் திறப்பாகவே அமைந்திருக்கும். கனகராஜ் கதையை வளர்த்தெடுக்கும் முறை அழகாக உள்ளது. நினைவுகளையும் நிகழ்வினையும் அவர் அழகாகப் பின்னிச் செல்கிறார். அதிக உரையாடல்கள் கிடையாது. காட்சிகளாக விரியும் இந்த எழுத்தின் வழியே கடந்தகாலமும் நிகழ்காலமும் அழகான இணைந்து விரிகின்றன.

முதற்கதையில் பாகிஸ்தானியர்களுடன் கார் பயணம் செல்லும் போது எதிர்கொள்ளும் நெருக்கடி மெல்ல விரிவு கொண்டு அந்நிய தேசத்தில் சூழ்நிலை கைதியாக மாறும் ஒருவனின் மனநிலையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. இன்னொரு கதையில் சலூனில் பணியாற்றும் ஒருவர் அங்கு வரும் அரபிகளை எப்படி அடையாளம் காணுகிறார் என்ற சமகால வாழ்வியலில் துவங்கிக் கடந்த காலத்தில் நாவிதராக அழைத்துவரப்பட்ட தாத்தாவின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கிறது. காலம் மாறிய போதும் ஒடுக்குமுறை மாறவேயில்லை. கடந்தகாலத்தின் இருட்டிற்குள் ஒருவர் கைவிளக்கேந்திச் செல்வது போலவே நிகழ்வுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பெருமாயி கிழவியை வாசிக்கையில் மாக்சிம் கார்க்கியின் கிழவி இசர்கீல் நினைவில் வந்து போகிறார். அந்த அளவு அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரமது.

இந்தக் கதைகளை வாசிக்கையில் இவை கன்னடத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் வாழ்க்கையை, புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசுவதை உணர முடிகிறது.

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை என்ற தற்காலக் கன்னடச் சிறுகதைகளைத் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். அதில் தான் கனகராஜின் கதையை முதன்முறையாக வாசித்தேன். சிறந்த கதையது.

இந்தத் தொகுப்பில் 11 கதைகள் உள்ளன. இந்தக் கதைகளில் வெளிப்படும் மாயமும் கனவுத்தன்மையும் யதார்த்த சித்தரிப்புகளும் புதுமையானது.

: ஸ்டேட்யூ ஆஃப் லிபர்டி கதையில் ஹிந்துஸ்தானி இசை மையமாக இருக்கிறது. ஞானச் சரஸ்வதியாகக் கொண்டாடப்படும் கிஷோரி அமோன்கர் மிகச்சிறந்த பாடகி. அவரது பாடல்களை நானும் விரும்பிக் கேட்டிருக்கிறேன். இந்தக் கதையில் நியூயார்க் நகரில் ஒரு இளம்பெண் அவரை நினைவு கொள்ளும் விதம் அபாரமானது. தேர்ந்த கதைசொல்லியால் தான் அதை உருவாக்கமுடியும். கனகராஜ் அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்

புரிந்து கொள்ளப்படாத திருமண உறவின் கசப்புகளை மெல்லிய இழையாக இவரது கதைகளில் காணமுடிகிறது.

கனகராஜ் தற்போது தமிழிலும் எழுத ஆரம்பித்திருக்கிறார். பனிப்பாறை என்ற அவரது கதை காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ளது. சிறந்த கதைகளை எழுதி வரும் அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

வாட்டர்மெலன் போலப் புதிய இளம்படைப்பாளிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் சிறந்த மொழியாக்கத்தைத் தந்த கே.நல்லதம்பிக்கும் அன்பும் பாராட்டுகளும்

வாட்டர்மெலன் தமிழ்வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது. கனகராஜ் பாலசுப்ரமண்யம் இன்னும் பல உயரங்களைத் தனது எழுத்தில் அடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு என் நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 20:40

August 23, 2021

போராடும் தவளை

உலகின் மிகச்சிறிய தவளை – வாசிப்பனுபவம்

ந.பிரியா சபாபதி.

     ஆதிகால மனிதன் இயற்கையோடு இணைந்து அதன் போக்குடனே வாழ்ந்தான்.  மனிதர்களுடைய அறிவு, ஆணவம் விரிவடைய விரிவடைய தன் பலத்தைப் பறைசாற்றத் தொடங்கினான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்தினான். இயற்கையையும் தனதாக்கிக் கொண்டு தான்தான் இந்த அண்டத்தில் வலிமை பொருந்தியவன் என்பதை வெளிக்காட்ட போர் புரிந்தான். பிற நாட்டையும் இயற்கைச் செல்வங்களையும் தனக்கானது உரிமை கொண்டாடினான்.  நம் முன்னோர்களான இவர்களது எண்ணமானது நம்முடைய உடலுக்குள்ளும் ஓடுவதால் இப்போது வரை இயற்கையின் வேர் வரை சென்று அதை அறுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி அறுத்துக் கொண்டிருக்கும் நமக்கு திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ‘உலகின் மிகச்சிறிய தவளை’ என்ற சிறார் நாவல் வழி பெரும் இயற்கையின் மீதும் நேசம் கொள்ளுங்கள் என  உணர்த்தியுள்ளார்.

     நான் என்றைக்குமே நம்மைத் தவிர பிற உயிரினங்களுக்குத் தலைமுறை உண்டு என்றும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதை நீர்வாழ் உயிரனங்கள் உணர்த்துகிறது. அதை உணர்த்துவதற்கான காரணத்தை நோக்கினால் செம்பியன் ஏரியை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்கி அதில் தனது தொழிற்சாலையை உருவாக்க முனைவதால் ஆமை, மீன்கள், தவளை போன்றவை ஒன்று கூடிப் பேசின. ஆனால் ஒன்றின் கருத்துக்குப் பிற உயிரினங்கள் செவி சாய்க்கததால் அவற்றுக்குள் சண்டை ஏற்பட்டன.

     இதில் டம்பி என்ற  மிளகு அளவு உருவம் கொண்ட தவளை மிகுந்த முனைப்புடன் அனைவரிடமும் பேசியது. “நிச்சயம் இந்த ஏரியை நான் காப்பாற்றுவேன். மனிதர்களை எதிர்த்துப் போராடப் போகிறேன்” டம்பியின் உருவத்திற்குப் பிற தவளைகள் மதிப்பு கொடுக்காதது போன்று அதனுடைய பேச்சுக்கும் மதிப்புக் கொடுக்கவில்லை.

           அந்த உயிரினங்கள் வாழும் செம்பியன் ஏரியானது ஒரு காலத்தில் மக்களுக்குக் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்த ஏரியாக விளங்கியது. மக்கள் அந்த ஏரியினுள் நீராளி எனும் கடவுள் குடியிருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஏரியினுள் நீராளி கடவுளை மகிழ்ச்சி அடையச் செய்ய சக்கரையும் பூக்களையும் ஏரியில் போட்டு ஆடிப்பாடுவார்கள். இவையெல்லாம் செம்பியன் ஏரியானது பஸ், லாரி போன்ற வாகனங்கள் கழுவும் ஏரியாக மாறிப் போவதற்கு முன் நடைபெற்றது.

     நீர்வாழ் உயிரினங்களின் குரலினைக் கேட்க எவருமே இல்லை. இச்சூழலில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் கொண்ட அமெரிக்கக் குழு ஒன்று அந்த ஏரியைப் பார்க்க வந்தனர். இதைப் பார்த்த ‘சப்பை’ எனும் நாய் மட்டும் அவர்களின் செயல்களைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருந்தது. காரோட்டிகள் எறிந்த கல்லால் அதற்கு வலித்தது. ஏரிக்கரை அருகே இரவெல்லாம் கிடந்தது.

     பெப்பா, சங்கா என்ற இருதவளைகள் கூடிப் பேசி முடிவெடுத்துக் கொண்டிருந்த வேளையில் நம் கதைநாயகனான டம்பி புகார் எழுதலாம் என்று யோசனை கூறியதும் மற்ற தவளைகள் அதைக் கேட்டு நகைத்தன.

     சங்கா எனும் தவளை தண்ணீரில் வாழ விருப்பமில்லாமல் அவ்விடத்தை விட்டு நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்தது. ஆனால் அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமால் சென்றது. அதனுடன் சில தவளைகளும் சென்றன.  நகரத்தின் வாகனங்களில் பல அடிப்பட்டு இறந்தன. ஒரேயொரு தவளை மட்டும் தப்பித்துப் பிழைத்து ஏரியை நோக்கிச் சென்றது. டம்பி மறுபடியும் தன் கருத்தை முன் வைத்தது. ஆனால் அந்தக் கருத்திற்கு எவரும் செவிசாய்க்கவில்லை.

     ஏரியின் மேல் அன்பு கொண்ட சப்பையிடம் டம்பி புகார் அளிக்கலாம், அந்தப் புகாரில் செம்பியன் ஏரியின் பெருமையைக் கூறலாம். அது மட்டுமல்லாது அதில் வசிக்கக் கூடிய உயிரினங்கள் பற்றியும் ஏரி மூடப்பட்டு கார் தொழிற்சாலை உருவானால் அதனால் ஏற்படப் போகும் சீர்கேட்டினையும் கூறலாம் என்றது.

     இருவரும் இணைந்து அந்த ஏரிக்கு வரும் பூனையிடம் உதவி கேட்கலாம் என்று தீர்மானித்தன. நியூட்டன் எனும் அந்தப் பூனையானது அவர்களுக்கு உதவியது. புகாரை விரிவாக எழுதிக் கொடுத்தது. மற்ற உயிரினங்கள் அதில் கைரேகைகள் பதித்தன.

     நியூட்டன், டம்பி, சப்பை மூவரும் பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்துப் புகாரை அளித்தது. அவர் அளித்த பதில் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் டம்பி மட்டும் தன் உறுதித்தன்மையிலிருந்து மாறாமல் இருந்தது.

     அடுத்ததாக நீதியரசரைச் சந்தித்தன. அவர் சொன்ன பதில்களிலிருந்து அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தன. மக்களின் மனசாட்சியான ஊடகத்தின் உதவியை நாடலாம் என்ற யோசனை தோன்றியதால் அங்குள்ள எடிட்டரிடம் ஏரியில் வாழக் கூடிய உயிரினங்கள் பற்றியும்  அதைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. அவரும் முடியாது எனக் கைவிரித்தார்.

     இந்தச் சூழ்நிலையில் டம்பி சேனலை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து கொண்டிருந்த பொழுது காகம் ஒன்று அதைத் துரத்தித் தின்ன முயன்று கொண்டிருந்தது. தன் நிலையைக் கூறித் தன்னுடன் செம்பியன் ஏரிக்கு வருமாறு கூறியது. டம்பி கூறியது உண்மை என்பதை அறிந்ததும் டம்பி, காகத்திடம், “ நாளை ஒரு நாள் நகரில் உள்ள எல்லாக் காகமும் வாய் ஓயாமல் கத்திக் கொண்டே பறக்க வேண்டும். நாங்களும் கூச்சலிடுவோம்” என்றது. இதற்கு மீன்களும் தவளைகளும் இசைந்தன.

     அதன்படி காகங்கள் கரைந்து கொண்டே இருந்தன. மனிதர்களால் அந்த இரைச்சலைத் தாங்க இயலவில்லை. தவளைகளும் கூச்சலிட ஆரம்பித்தன. வானத்தில் கருமேகங்கள் திரண்டன. இவ்வேளையில் தொலைக்காட்சியில் தோன்றி தங்களின் போராட்டத்திற்கான காரணத்தைக் கூறியது. அந்த மழை நீரை ஏரி வாங்கிக் கொண்டது. அதன் பின செம்பியன் ஏரியை விற்கக் கூடாது முடிவு செய்தது. உருவத்தில் சிறிய டம்பியின் முயற்சி வெற்றி பெற்றது.

     இக்கதையை  நான் வாசித்து முடித்த பின் இது சிறார்களுக்கான கதை மட்டும் என்று தோன்றவில்லை. அனைத்து வயதினருக்குமான கதை என்றே தோன்றியது. இடையிடையே கதைக்கு ஏற்ப வரையப்பட்ட ஓவியம் கண்ணை மட்டும் கவரவில்லை. சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தது. நீயூட்டன் எனும் பூனை என் மனம் கவர்ந்த கதாப்பாத்திரம் ஆகும். இயற்கையை அழித்தால் மனிதன் பெருந்துயருக்கு உள்ளாவான் என்பதை ஆசிரியர் மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார். குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அழகான  கதையை குழந்தைகளுக்குப் பிடித்தமான உயிரினங்களைக் கொண்டே அருமையாகக் கூறியுள்ளார். எளிய தமிழில் குழந்தைகள் பிறர் உதவியின்றி படிக்கும் தமிழில் நயம்பட கூறியுள்ளார்.

••

இந்தச் சிறார் நாவலை உள்ளடக்கி ஐந்து சிறார் கதைகள் ஒன்றாக விலங்குகள் பொய்சொல்வதில்லை என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2021 18:22

August 22, 2021

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள்

 (இந்து தமிழ்திசை நகுலன் நூற்றாண்டு சிறப்புப் பகுதியில் வெளியான கட்டுரை – 22.8.21)

நகுலன் எட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார் அல்லது எட்டுப் பெயர்களில் ஒரே நாவலின் வேறுவேறு பகுதிகளை எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம். நவீன நாவல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான வடிவம். அது மரபான நாவலைப் போல் கதையை வளர்த்தெடுத்து உச்சநிலைக்குக் கொண்டுபோவதைவிடவும் கதைவழியாகச் சுய அனுபவங்கள், நினைவுகள், பாலியல் இச்சைகள், அதன் பின்னுள்ள உளவியல், சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள், வாழ்வின் கசப்புணர்வு, வெறுமை போன்றவற்றைப் பேசுவதாக அமைந்தது. ஆகவே, பழைய பிரம்மாண்டமான நாவல்களிலிருந்து இவை உருமாறி அளவில் சிறியதாகவும், கதாபாத்திரங்களின் நினைவுகளை இசைப்பதாகவும் எழுதப்பட்டன.

தமிழ் நாவல்கள் பெரும்பாலும் சம்பிரதாயமான நாவல் வடிவத்தையே கொண்டிருக்கின்றன. கதைக் கருவிலும், கையாளும் மொழியிலும், நிகழ்வுகளின் அடுக்குமானத்திலும் புதிய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ் நாவல் வரிசையில் நகுலனின் நாவல்கள் தனியிடம் கொண்டவை. அவர் கதையில்லாத நாவல்களை எழுதினார் என்பேன்; அதாவது, சம்பிரதாயமான நாவல்களைப் போல் கதாபாத்திரங்களின் உலகை விரித்துக்கொண்டு போவதற்கு மாற்றாக, ஆழ்ந்த மனவோட்டங்களையும் சிதறலான நினைவுகளையும் தனது மரபும் நவீனமும் இணைந்த மொழிநடையில் எழுதியிருக்கிறார். அவருடைய சொற்களிலேயே சொல்வதென்றால், சிதறுண்ட சாயைகளின் உலகையே அவர் உருவாக்கியுள்ளார். வடிவக் கட்டுப்பாடுகள், வரம்புகள் எதற்குள்ளும் அடங்காதவை நகுலனின் நாவல்கள்.

தனது நாவல்களின் வழியே அவர் அனுபவங்களை வரிசைப்படுத்துகிறார் எனலாம். பொதுவாக, இந்த வரிசைப்படுத்துதலானது காலம் மற்றும் வெளியின் வழியே முன்பின்னாக அமையும். ஆனால், நகுலன் அதைக் கலைத்துக் காலவெளியின் மயக்கத்தில், நிஜத்துக்கும் புனைவுக்குமான இடைவெளியில், இருப்புக்கும் இன்மைக்குமான ஊசலாட்டத்தில் தனது கதையைக் கட்டமைக்கிறார். அது ஒருவகைக் கொந்தளிப்பு. கிளைமீறல், மொழிவழியாக மொழிக்குள் அடங்காத அனுபவங்களைப் பதிவுசெய்யும் உன்மத்தம். ‘வாழ்வின் உச்சகட்டங்கள் நாம் நினைப்பது மாதிரியில்லை. எந்த மனிதன் வாழ்விலும் உச்சகட்டங்கள் அவன் பிறப்பதும் இறப்பதும் மட்டும்தான். ஆனால், இடையில்தான் வாழ்வு சலிக்கிறது. இந்தச் சலனத்தைத்தான் ஒரு எழுத்தாளன் சித்தரிக்கிறான்’ என ரோகிகள் நாவலில் நகுலன் குறிப்பிடுவது முக்கியமானது.

நகுலனின் நாவல்களுக்குத் தமிழில் முன்னோடி கிடையாது. ‘நவீனன் டைரி’, ‘நாய்கள்’, ‘நினைவுப்பாதை’, ‘இவர்கள்’, ‘ரோகிகள்’, ‘வாக்குமூலம்’, ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ போன்ற நாவல்கள் தனித்துவமானவை. இவற்றை ஜேம்ஸ் ஜாய்ஸ், வர்ஜீனியா வுல்ஃப் நாவல்களுடன்தான் ஒப்பிட முடியும். அதுவும் நனவோடை உத்தியின் மூலம் கதை சொல்கிறார் என்பதால் மட்டுமே. வுல்ஃபிடம் இல்லாத தத்துவத் தேடலும், ஜாய்ஸிடம் இல்லாத பரிகாசமும் நகுலனிடம் உண்டு.

நகுலன் தனது புனைவுகளை வாழ்க்கை அனுபவம், வாசித்த அனுபவம் இரண்டிலிருந்தும் உருவாக்குகிறார். இரண்டுக்குமான இடைவெளியை அழித்துவிடுகிறார். வெள்ளைக் காகிதத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் நிழல்கள் என்று தனது எழுத்தைப் பற்றி நகுலன் குறிப்பிடுவது முக்கியமானது. மனவோட்டங்களில் சஞ்சரிப்பது, புலன் மயக்கம், போதையில் உருவாகும் தற்காலிக மகிழ்ச்சி, நினைவின் கொந்தளிப்பு, பித்துநிலை அனுபவங்கள், வாசிப்பின் வழி பெற்ற அபூர்வ தரிசனங்கள், சாவின் மீதான விசாரணை என அவரது நாவல்களின் மையப் புள்ளிகளைப் புரிந்துகொள்ளும்போதுதான் நகுலனின் தனிச்சிறப்பை உணர முடியும்.

நாய் என்று ஒரு மனிதனைக் குறிப்பிட்டால் ஏன் அதை ஒரு வசை மொழியாகக் கருதுகிறார்கள் என்று கேள்வி எழுப்பும் நகுலன், நாய் என்பதை ஒரு தத்துவக் குறியீடாக அமைத்துக்கொண்டு, அதன் பல்வேறு வடிவங்களை, அடையாளங்களை விசாரணை செய்வதாகவே ‘நாய்கள்’ நாவலை எழுதியிருக்கிறார். ‘நாய்கள்’ நாவலில் பாரதியாரைத் தேடிக்கொண்டு நவீனன் திருவல்லிக்கேணித் தெருக்களில் சுற்றுகிறான். பாரதியைப் பற்றிய நினைவுகள், வியப்புகள் இந்தத் தேடுதலில் இடம்பெறுகின்றன. தன் அறைக்குப் போகும் வரையில் தான் பேசிக்கொண்டிருந்தது சுப்ரமணிய பாரதியுடனா அல்லது தேரையுடனா என்று நிச்சயிக்க முடியாமல் நவீனன் மனம் குழம்பிப்போய்விடுகிறான். இந்த மயக்கம் காலவெளியைக் கடந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது. நகுலனின் நாவல்களில் குழந்தைகள் அபூர்வமாகவே இடம்பெறுகிறார்கள். பெண்களும் குறைவே. அதிலும் அவரது அம்மாவைப் பற்றி வரும் நினைவுகளைத் தவிர்த்தால் சுசீலாதான் ஒரே நாயகி. சுசீலா ஒரு கற்பனைப் பெண். அவள் சொல்லில் பிறந்தவள். ஆகவே, அழிவற்றவள். காலவெளிகளைக் கடந்து சஞ்சாரம் செய்கிறாள். நகுலனின் படைப்புகளில் அழியாச்சுடரைப் போல ஒளிர்ந்தபடியே இருக்கிறாள் சுசீலா.

நகுலன் தனது மாற்று வடிவமாக நவீனனை உருவாக்குகிறார். நவீனன் ஒரு எழுத்தாளர். அந்தப் பெயரே நவீனத்துவத்தின் அடையாளம். நவீனன் தான் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள், அவர்களுடனான உறவு, அதில் ஏற்பட்ட கசப்புகளை உரையாடலின் வழியே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். யாருமற்ற தருணங்களில் தனக்குத் தானும் உரையாடிக்கொள்கிறார். தேரை, நாயர், ஹரிஹர சுப்ரமணிய அய்யர், சுலோசனா, கணபதி என நீளும் அவரது கதாபாத்திரங்களுடன் தாயுமானவர், திருவள்ளுவர், பாரதி, வர்ஜீனியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், தெகார்த், வால்ட் விட்மன், ராமகிருஷ்ண பரமஹம்சர் என ஆளுமைகளும் கதாபாத்திரங்களாக இடம்பெறுகிறார்கள்.

திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு கவிதை வரியை நகுலன் எழுதியிருக்கிறார். இந்த உணர்வை அவரது நாவல்களில் அதிகமும் காண முடிகிறது. இருப்பும் இன்மையுமே அவரது கதாபாத்திரங்களின் மையப் பிரச்சினை. முன்பின்னாகச் சென்றபடியே இருக்கும் ஊஞ்சலைப் போலவே எழுத்தைக் கையாள்கிறார். அனுபவங்களில் நிலைகொள்வதும் அனுபவங்களை உதறி எழுந்து பறத்தலும் என இருநிலைகளை அவரது எழுத்தில் தொடர்ந்து காண முடிகிறது.

‘நினைவுப்பாதை’ நாவலுக்கு அசோகமித்திரன் சிறப்பான முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், ‘இது அசலாகச் சதையும் ரத்தமுமாக உயிர்வாழும் ஓர் எழுத்தாளனின் நினைவுப்பாதை. இதில் வேறு பல எழுத்தாளர்கள் வருகிறார்கள், நினைவுகொள்ளப்படுகிறார்கள். இலக்கியவாதிகளைப் புனைவுருக்களாக்கியது நகுலனின் சாதனை’ என்கிறார். அது உண்மையே. நவீனன் என்ற படைப்பாளிக்கும் நகுலன் என்ற புனைபெயர் கொண்ட மனிதனுக்கும் இடையில் நடைபெறும் முடிவற்ற உரையாடல்தான் ‘நினைவுப்பாதை’. இந்த நினைவுப்பாதையில் மாயாரூபிணியாக ‘சுசீலா’ வெளிப்படுகிறாள்.

நகுலனின் நாவலில் இடம்பெறும் உரையாடல்கள் அன்றாடத் தளத்திலிருந்து சட்டென ஞானநிலையை நோக்கி நகர்ந்துவிடுகின்றன. கவிதையும் தத்துவமும் இணைந்து உருவான புனைவெழுத்து இவை என்பேன். எழுத்தாளனை மையக் கதாபாத்திரமாக்கியே நகுலனின் நாவல்கள் அமைந்திருக்கின்றன. அதுவும் புறக்கணிக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத ஒரு எழுத்தாளனின் அகத்தையே இவை வெளிப்படுத்துகின்றன. உலகம் தன்னைக் கைவிடும்போது ஒருவன் சொற்களிடம் அடைக்கலமாகிறான். படைப்பின் வழியே தன்னை மீட்டுக்கொள்ள முயல்கிறான். ஆனால், இலக்கிய உலகமும் சண்டையும் சச்சரவுகளும் பொறாமையும் அவமதிப்பும் நிறைந்ததாக இருப்பதை அறியும்போது, தானும் தன் பூனையும் நாய்களும் போதும் என ஒதுங்கிவிடுகிறான்.

தன்னையே ஒரு கதாபாத்திரமாக உணரும் எழுத்தாளனின் அவஸ்தைகளே இந்த நாவல்கள் என்று குறிப்பிடலாம். சொல்லில் சொல்ல முடியாதவற்றைப் புனைவுகளாக எழுத முயன்றதே நகுலனின் கலை. அந்த வகையில், இன்று நாம் பேசும் நான்லீனியர் நாவல்களுக்கு நகுலனே முன்னோடி

நன்றி

இந்து தமிழ் திசை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2021 18:54

பெர்க்மெனின் வீடு

Trespassing Bergman என்ற ஆவணப்படம். பெர்க்மேன் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து உலகப்புகழ் பெற்ற இயக்குநர்கள் ஃபெரோ தீவில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்து பெர்க்மெனை நினைவு கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது

பெர்க்மென் தனிமையை விரும்பி ஃபெரோ தீவில் வசித்து வந்தார். அவரது வீடு எங்கேயிருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. பார்வையாளர்களை அவர் அனுமதிப்பதில்லை. ஆகவே உலகின் கண்களில் படாமல் வாழ்ந்து வந்த பெர்க்மெனின் வீட்டினையும் அவரது நூலகம் மற்றும் பணியாற்றிய அறையைக் காண்பதற்காக Alejandro Gonzalez Inarritu, Michael Haneke, John Landis, Lars von Trier, Tomas Alfredson, Daniel Espinosa, Claire Denis, Wes Craven, Ang Lee, Thomas Vinterberg, Isabella Rossellini, Harriet Andersson, Zhang Yimou, Woody Allen, Laura Dern, Francis Ford Coppola, Takeshi Kitano, Holly Hunter, Wes Anderson, Robert De Niro, Martin Scorsese, Ridley Scott, Pernilla August, Alexander Payne எனப் புகழ்பெற்ற இயக்குநர்கள் ஃபெரோ தீவிற்கு வருகை தருகிறார்கள்

உண்மையான சினிமா ரசிகருக்கு இந்த வீடு ஒரு புனித ஸ்தலம். இங்கே வருகை தந்து பெர்க்மென் அறையில் அவரது நாற்காலியில் அமர்வது என்பது மாபெரும் கனவு என்கிறார் Alejandro Gonzalez Inarritu,

இன்னொருவரோ பெர்க்மெனின் ரகசியங்களை எட்டிப்பார்ப்பது போலிருக்கிறது என்கிறார். அது உண்மையே.

தனிமையில் வாழ்ந்த பெர்க்மென் அன்றாடம் திரைப்படங்கள் பார்த்திருக்கிறார். அவரது சேமிப்பில் உலகின் முக்கியப் படங்கள் அத்தனையும் இடம்பெற்றிருக்கின்றன. இது போலவே பெர்க்மெனின் நூலகம் மிகப்பெரியது. தத்துவம் இலக்கியம் வாழ்க்கை வரலாறு என ஆழ்ந்து படித்து அவற்றைக் குறிப்புகள் எடுத்திருக்கிறார்.

பெர்க்மென் நாடகங்களை இயக்கியவர் என்பதால் நிறைய நாடகத்தொகுதிகளை வாசித்திருக்கிறார். உலகச் சினிமாவிற்கு அவரது பங்களிப்பு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி இயக்குநர்கள் பலரும் நினைவு கொள்கிறார்கள்

சாவுடன் பகடையோடும் காட்சியை உருவாக்கியது அவரது மேதமை என்கிறார் டெனிஸ். இந்தப் படத்தின் வாயிலாகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் அறையையும் நாம் பார்வையிடுகிறோம். சீன இயக்குநர் ஜாங் யூமூவின் அறைச் சுவரில் அவரது முக்கியப் படங்களில் சுவரொட்டிகள் அழகாகத் தொங்குகின்றன.

தனி ஒருவராகத் திரைக்கதை எழுதும் பழக்கம் கொண்டவர் என்பதால் அந்த வீட்டிலிருந்தபடியே அவர் தனது புகழ்பெற்ற திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். பெர்க்மென் எழுதியுள்ள ரகசிய குறிப்புகள். கடிதங்கள். அவர் மனைவி இறந்து போன நாளை குறித்து வைத்துள்ள எனப் படம் பெர்க்மெனின் தனிப்பட்ட உலகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

படத்தில் என்னை வசீகரித்த விஷயம் சூரிய வெளிச்சம் படும்படியான ஒரு இடத்தில் படிப்பதற்கான நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்து பெர்க்மென் படித்திருக்கிறார் என்பதே. அங்கே அமர்ந்து புத்தகத்தை விரித்தால் சரியாகச் சூரிய வெளிச்சம் புத்தகத்தின் மீது விழுகிறது. எவ்வளவு ரசனையாகத் தனது படிக்கும் இடத்தை உருவாக்கியிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது

இது போலவே பெர்க்மென் மீது இன்றைய தலைமுறை இயக்குநர்கள் கொண்டுள்ள அன்பையும் மரியாதையும் காணும் போது அவர்கள் இளமைப் பருவம் முதல் பெர்க்மென் திரைப்படங்கள் வழியாக அவரை ஆராதனை செய்து வந்திருப்பது தெரிகிறது.

ஆஸ்கார் விருதுகளை வென்ற புகழ்பெற்ற இயக்குநர் Alejandro Gonzalez Inarritu பெர்க்மென் வீட்டிற்குள் நுழைந்து அவரது புத்தகங்கள் மற்றும் வீடியோ சேமிப்பினைக் கண்டு வியப்பதுடன் எந்த இடத்தில் பெர்க்மென் தனது படத்தை இயக்கியுள்ளார் என்பதைக் கண்டறிந்து அதே இடத்தில் அதே போன்ற ஒரு காட்சியைத் தன் செல்போனில் படமாக்குகிறார். நடிகர்கள் இல்லை. ஆனால் கற்பனையாக அதே காட்சியை அப்படியே எடுக்க முனைகிறார். பெர்க்மென் மீதான அவரது நேசத்தின் அடையாளமாக அந்தக் காட்சி உள்ளது.

மார்ட்டின் ஸ்கார்செஸி, பெர்க்மேனின் ஆரம்பகாலத் திரைப்படங்கள், குறிப்பாகச் சம்மர் வித் மோனிகா படத்தை முதன்முறையாகப் பார்த்த போது ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இயக்குநர் ஆங் லீ பெர்க்மெனை தேடிச் சென்று சந்தித்து ஆசி வாங்கும் காட்சி மறக்கமுடியாதது. அந்தக் காட்சியில் பெர்க்மென் அவரை அணைத்துக் கொள்ளும் போது ஆங்லீயின் கண்கள் கலங்குகின்றன. உண்மையான அன்பின் வெளிப்பாடு அதுவே.

ஸ்வீடனின் சிறிய தீவான ஃபாரோவில் வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை. மக்கள் தொகை: 571. மட்டுமே இந்தத் தீவில் வங்கி, தபால் அலுவலகம், ஏடிஎம், ஆம்புலன்ஸ், மருத்துவர் அல்லது போலீஸ் என எதுவும் கிடையாது. ஸ்டாக்ஹோமிலிருந்து விமானம் அல்லது காரில் பயணித்து வந்து இரண்டு படகுகளில் மாறியே இந்தத் தீவை அடைய முடியும்.

இந்தத் தீவில் தான் பெர்க்மென் “The Passion of Anna,” “Shame,” “Scenes From a Marriage”), “Through a Glass Darkly” போன்ற படங்களை உருவாக்கினார். இரண்டு ஆவணப்படங்களும் இந்தத் தீவில் உருவாக்கபட்டுள்ளன.

ஃ பெரோவில் அமைந்துள்ள பெர்க்மேன் மையம் ஒரு கலாச்சாரத் தீவில் பெர்க்மென் தொடர்புடைய விஷயங்களை அடையாளம் காட்டும் பெர்க்மேன் சஃபாரி” ஒன்றையும் நிகழ்த்துகிறது. இது மட்டுமின்றிப் பெர்க்மென் குறித்த கருத்தரங்குகள், திரைப்படங்களை இந்த மையம் ஏற்பாடு செய்கிறது

இந்தத் தீவைப் போன்றதே பெர்க்மெனின் வாழ்க்கையும். பெர்க்மெனின் பலம் நடிகர்களை அவர் கையாண்ட விதம். உண்மையில் அது ஒரு வகை உளவியல் சிகிச்சை. மிக நுணுக்கமாகக் காட்சிகளைப் படமாக்கியவர். தொடர்ந்து உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்ட போதும் அவரது படைப்பாக்கம் குறையவேயில்லை என்கிறார்

பெர்க்மென் மீதான படைப்பாளிகள் அன்பை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படம் 2013ல் உருவாக்கப்பட்டுள்ளது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2021 01:18

August 21, 2021

இருவர் கண்ட ஒரே கனவு

திபெத்தின் கெக்சிலி பீடபூமியின் 16,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையே உலகின் மிக உயரமான சாலையாகும். அந்தக் கெக்சிலி சாலையில் லாரி ஒட்டிக் கொண்டு செல்கிறான் டிரைவர் ஜின்பா. ஆள் நடமாட்டமேயில்லாத நீண்ட சாலை. பழைய ஆடியோ கேசட் ஒன்றை ஒலிக்கவிட்டபடியே வண்டி ஒட்டுகிறான் ஜின்பா. கேமிரா அவன் முகத்தையே மையமிடுகிறது. சலிப்போ, கோபமோ எதுவுமில்லை. அவன் கண்கள் அடிக்கடி கயிற்றில் தொங்கும் டாலரில் உள்ள மகளின் புகைப்படத்தை நோக்குகின்றன. அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டுமே பயணம் செய்கிறான்.

எதிர்பாராதவிதமாக ஒரு செம்மறி ஆடு அவனது லாரியில் விழுந்து அடிபட்டுச் சாகிறது. ஏன் இந்த ஆடு தன் லாரியில் வந்து அடிபட்டது எனக் குற்றவுணர்வு கொள்கிறான் ஜின்பா.

செத்த ஆட்டினை லாரியில் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறான். வழியில் தற்செயலாக ஜின்பா என்ற அதே பெயருள்ள நாடோடி ஒருவனைச் சந்திக்கிறான். அவன் தன் தந்தையைக் கொன்றவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். நாடோடியை லாரியில் ஏற்றிக் கொள்ளும் ஜின்பா அவன் மீது அதிகாரம் செலுத்துகிறான். அவனிடமே சிகரெட் வாங்கி அதைப் பற்றவைக்கவும் சொல்கிறான். தனது தவற்றை மறைத்துக் கொண்டு ஜின்பா முரட்டுதனமாக நடந்து கொள்கிறான்.

நாடோடியோ தன் தந்தையைக் கொன்ற ஆள் பக்கத்து ஊரான சனக்கில் வசிப்பதாகவும் அந்தச் சாலையில் தன்னை இறக்கிவிடும்படியாகக் கேட்டுக் கொள்கிறான். ஜின்பா அதற்கு ஒத்துக் கொள்கிறான். இருட்டில் அந்தச் சாலையில் இறக்கிவிட்டுச் செல்லும் ஜின்பா ஒரு கறிக்கடையில் நிறுத்தி முழு ஆட்டின் விலை எவ்வளவு என்று விசாரிக்கிறான். கடைக்காரன் அவன் வாங்க விரும்புகிறான் என நினைத்துக் கொண்டு ஆசையாக விலை சொல்கிறான். ஆனால் ஜின்பா மாலை வருவதாகச் சொல்லி விடைபெறுகிறான்.

மடாலயம் ஒன்றுக்குச் செல்லும் ஜின்பா இறந்து போன ஆட்டிற்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்யும்படி ஒரு பௌத்த குருவிற்குக் காசு கொடுக்கிறான். அவர் பிரார்த்தனை செய்வதுடன் இறந்த ஆட்டினை கழுகிற்குப் படையல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். அப்போது ஒரு பிச்சைக்காரன் கழுகிற்குப் பதிலாகத் தனக்கு உணவாகத் தரலாமே என்று யாசிக்கிறான். அவனுக்கு நிறையப் பணம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லும் ஜின்பா இறந்த ஆட்டினை கழுகிற்குப் படையல் செய்கிறான். திரும்பிச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் வீட்டில் இரவு தங்குகிறான். இன்பம் அனுபவிக்கிறான்.

மறுநாள் கிளம்பும் போது அந்த நாடோடி என்ன ஆனான் என்று தெரிந்து கொள்வதற்காக அவனை இறக்கிவிட்ட சனக்கிற்க்குப் போகிறான். யாரை நாடோடி கொல்ல முயன்றானே அந்த மனிதனைச் சந்திக்கிறான். அவனுடன் பேசுகிறான். அந்த மனிதன் பயத்துடன் தன்னை அப்படி ஒருவன் வந்து சந்தித்தான். ஆனால் ஒன்று செய்யவில்லை. கண்ணீர் சிந்தியபடியே வெளியேறிப் போய்விட்டான் என்கிறான். உண்மையில் யாரை கொல்ல நாடோடி விரும்பினான் என்பது முடிவில் தெரிய வருகிறது

நாடோடியைத் தேடி ஒரு மதுவிடுதிக்கு ஜின்பா செல்லும் காட்சி அபாரமானது அந்தக் கடையை நடத்தும் பெண்ணுடன் நடக்கும் உரையாடல். கடையின் சூழல்.. அந்தக் காட்சி அப்படியே செபியா டோனுக்கு மாறி நாடோடி வந்து போன நடந்த நிகழ்வுகளைச் சொல்வது என அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஒரே கனவை இருவர் காணுவது போலிருக்கிறது அந்தக் காட்சி.

ஆடு லாரியில் அடிபட்டு விழும் காட்சி சட்டென அதிர்ச்சியை உருவாக்குகிறது. அதிலிருந்து ஒருவன் குற்றவுணர்வில் ஊசலாடத் துவங்குகிறான். மகள் மீது பாசம் கொண்டு அவள் நினைவாக ஒரு பாடலைக் கேட்டபடியே வரும் ஜின்பா உண்மையில் முரட்டுத்தனமான மனிதனா அல்லது தோற்றம் தான் அப்படியிருக்கிறதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. அவனது தோற்றம் ஜானி டெப் போலுள்ளது. எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறான். ஒரு காட்சியில் Animals have souls, too என்று சொல்கிறான் ஜின்பா. மனிதர்களின் ஆன்மாவிற்கும் விலங்குகளின் ஆன்மாவிற்குமான வேறுபாடு பற்றியும் பேசுகிறான். இத்தனை நுண்ணுணர்வு கொண்ட ஜின்பா ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்ற புதிர் படம் முடியும் போது தான் விலகுகிறது.

இதற்கு மாறாக நாடோடியோ தோற்ற அளவில் பிச்சைக்காரன் போலிருக்கிறான். ஆனால் அவன் கொலை செய்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறான். அவன் வாழ்க்கையின் லட்சியமே பழிவாங்குவது தான். ஆனால் அதை அவன் கடைசிவரை நிகழ்த்துவதில்லை. அதற்குத் தன்னை அவன் தயார்ப் படுத்திக் கொள்ளவில்லை

மளிகைப்பொருட்கள் விற்கும் ஆளைத் தேடிச் செல்லும் ஜின்பாவை அந்தக் கடைக்காரனின் மனைவி வரவேற்று உபசரிக்கிறாள். அப்போதும் ஜின்பா உண்மையைச் சொல்வதில்லை. வீடு திரும்பும் கடைக்காரன் துறவி போல நடந்து கொள்கிறான். அவரிடம் ஜின்பா உண்மையைச் சொல்கிறான். இந்த மூன்று கதாபாத்திரங்களும் குறியீடுகளே. அகவிழிப்புணர்வு தான் படத்தின் மையப்புள்ளி. .

கர்மா மற்றும் விதியின் செயல்பாடுகள் பற்றிய ஒரு உவமை போன்றே இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திபெத்தியத் திரைப்பட இயக்குநரான பெமா ட்ஸெடன் இப்படத்தை மிகுந்த கவித்துவத்துடன் உருவாக்கியிருக்கிறார். லு சாங்யேவின் ஒளிப்பதிவு அபாரமானது. செர்ஜியோ லியோனின் படங்களை நினைவுபடுத்தும் ஒளிப்பதிவு. காட்சிக் கோணங்களும் வண்ணங்களும் மிகச்சிறப்பாக உள்ளன.

பௌத்த நீதிக்கதை ஒன்றை வாசிப்பது போன்ற உணர்வைத் தருகிறது படம்

மனிதனின் இருவேறு முகங்களை, இயல்புகளைச் சொல்வதற்காகத் தான் ஜின்பா என்று ஒரே பெயர் இருவருக்கும் வைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது

சினிமாவிற்குப் பெரிய கதைகள் தேவையில்லை. சிறிய கதையை அழுத்தமாகச் சொல்ல முயன்றால் அதுவே போதும் என்கிறார் பெமா ட்ஸெடன். இந்தப் படத்தைப் புகழ் பெற்ற இயக்குநர் Wong Kar Wai தயாரித்திருக்கிறார்.

மிகச்சிறந்த ஒளிப்பதிவு. இசை, படமாக்கப்பட்ட முறை இப்படத்தை மிகச்சிறந்த திரையனுபவமாக மாற்றுகிறது. உலக சினிமா அரங்கில் திபெத்திய சினிமாவின் நிகரற்ற சாதனை இப்படம் என்கிறார்கள். . அது உண்மையே.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 05:14

August 19, 2021

புத்தரின் அடிச்சுவட்டில்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகச் சிவபாதசுந்தரம் புத்தர் பிறந்த இடம் துவங்கி அவரது வாழ்வில் தொடர்புடைய முக்கிய இடங்களை நேரில் காணுவதற்காக ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அந்த பயண அனுபவத்தை கௌதம புத்தரின் அடிச்சுவட்டில் என்ற நூலாக எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

புத்தர் வாழ்க்கையோடு தொடர்புடைய ஸ்தலங்கள் உத்திர பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ளன. நேபாள எல்லையில் அவர் பிறந்த ஊர் உள்ளது.

கபிலவஸ்து சாரநாத், சிராவஸ்தி, வைசாலி கௌசாம்பி சங்கர்ஷ்புரம் நாலந்தா, பாடலிபுரம் குசிநகர் என நீளும் அந்தப் பயணத்தின் ஊடாக அவர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து விரிவான பயண நூலாகக் எழுதியிருக்கிறார்..

இந்தப் பயணத்தின் ஊடாக அவர் பௌத்தம் அன்று இருந்த நிலை மற்றும் இன்றுள்ள நிலை குறித்து அழகாக விளக்குகிறார் தமிழில் வெளியான சிறந்த பயண அனுபவ நூலிது.

நேபாள எல்லையிலுள்ள தௌலீவா என்ற ஊருக்குச் செல்லும் சிவபாதசுந்தரம் அங்கே கபிலவஸ்து என்ற புத்தர் பிறந்த ஊரைத் தேடுகிறார். ஊரில் யாரும் அப்படியொரு பெயரைக்கூட கேள்விப்படவில்லை.

கி,மு.563ல் கபிலவஸ்து நகரத்தின் லும்பினி தோட்டத்தில் புத்தர் பிறந்தார் அந்த இடம் எங்கேயிருக்கிறது எனதேடி அலைந்த போது ஒரு சாஸ்திரியை தேடிப் போய்ச் சந்திக்கிறார். அவர் தௌலீவா தான் கபிலவஸ்து. அதன் இடிபாடுகளை நானே அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன் என்று உடன் வருகிறார்.

இடிந்த நிலையில் காணப்படும் பழைய கட்டிடங்களை, புரதானச்சின்னங்களைப் பார்வையிடுகிறார் சிவபாத சுந்தரம். நேபாள அரசு இதனைச் சிறப்பாகப் பராமரிக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் எழுகிறது.

இங்கேயிருந்து துவங்கும் இவரது பயணத்தில் அன்றைய சாலைகள். மற்றும போக்குவரத்து வசதிகள். குதிரை வண்டியில் பயணம் செய்த போது ஏற்பட்ட நெருக்கடி, ராஜகிருகத்தினைத் தேடிப் போகும் போது தங்கும் விடுதியில் ஏற்பட்ட அனுபவம் ,லும்பினியில், உள்ள மாயாதேவி கோவில் எனத் தனது அனுபவத்தைச் சுவைபட எழுதியிருக்கிறார்.

புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலைக் காணச் சென்றது. பௌத்த சின்னங்கள் வழியெங்கும் இடிக்கப்பட்டு வேறு கோவில்களாக்கப்பட்ட காட்சிகள். நாலந்தா பல்கலைக்கழக இடிபாடுகள். எனப் புத்தரின் காலத்திற்கே நம்மை அழைத்துக் கொண்டு போய்விடுகிறார் சிவபாதசுந்தரம்

இந்த இடங்களில் எண்பது சதவீதம் நான் பார்த்திருக்கிறேன். நான் சென்ற நாட்களில் சாலை வசதி முன்னைவிட மேம்பட்டிருந்தது, குதிரை வண்டிகளுக்குப் பதிலாகக் காரில் போய் வர முடிந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லை.

இன்று இவை முக்கியச் சுற்றுலாத் தலங்களாக மாற்றபட்டுள்ள காரணத்தால் தங்குமிடம், உணவகம் போக்குவரத்து உள்ளிட்டவசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன.. ஆனால் பயணிகளை ஏமாற்றிப் பணம் பறிப்பது மட்டும் மாறவேயில்லை.

1960ல் கௌதம புத்தரின் அடிச்சுவட்டில் முதற்பதிப்பு வெளியாகியுள்ளது. அதன்பிறகு இரண்டாம் பதிப்பு வருவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 1991ல் தான் இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. கௌதம புத்தரின் வாழ்க்கையைத் தேடிச் சென்ற பயண நூலுக்கே இது தான் கதி. இவ்வளவிற்கும் இது போன்ற பயணம் எதையும் வேறு எவரும் மேற்கொண்டு தமிழில் புத்தகம் எழுதவில்லை. நான் பயணித்த காலத்தில் இந்தப் புத்தகம் சிறந்த வழித்துணையாக இருந்தது.

எந்த வசதிகளும் இல்லாத காலத்திலே இவ்வளவு நீண்ட பயணத்தை சிவபாதசுந்தரம் மேற்கொண்டிருக்கிறார். இன்று சகல வசதிகளும் உள்ளன. பயணம் போவதற்கான மனநிலையைத் தான் பலரும் வளர்த்துக் கொள்ளவில்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 22:00

August 18, 2021

வேம்பலையின் நினைவுகள்

நெடுங்குருதி- வாசிப்பனுபவம்

ஏழுமலை.

வாழ்வின் நேரடி எதார்த்தத்தையும் நுட்பமான காட்சிப் படிமங்களின் சித்தரையும் கொண்டு உயிர்ப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்ட ஒரு அற்புத படைப்பு தான் நெடுங்குருதி. நாவலின் கதை வேம்பலை என்ற கிராமத்தில் மக்களையும் அவர்களின் வாழ்வையும் புனைவு எதார்த்தமாகச் சித்தரித்துக் காட்டும் ஒரு படைப்பு நாவலின் முதல் பகுதி ‘கோடைக்காலம் ‘ ‘காற்றடிகாலம்’ இந்த இரண்டு பகுதியுமே நாகு என்ற மைய கதாபாத்திரத்தின் வாழ்வியலோடு நாகுவின் பதின்பருவத்து அக உள சித்தரிப்பக மேலே விரிகிறது. ஊரை விட்டு வெளியே இருக்கும் புறவழிச்சாலை வழியாக எறும்புகள் சாரையாகச் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான் நாகு என்று தொடங்குகிறது நாவல்.

ஒரு எறும்பு ஊரை விட்டு வெளியேறிச் செல்கிறது என்றால் பெரும் பஞ்சம் வருவதற்கான குறியீட்டாக எறும்புகள் இருக்கிறது. வேம்பர்கள் களவைத் தொழிலாகக் கொண்டவர்கள் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் வேம்பர்களை அடக்குவதற்காக வெல்சி என்ற வெள்ளைய அதிகாரி வேம்பர்களை அந்த ஊரில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் தூக்கிலிடுகிறான். அந்த வேம்பு பிறகு பூக்கவோ காய்கவோ இல்லை, இதற்காகப் பதவி உயர்வு கிடைத்து வேறு இடத்திற்குச் சென்ற பிறகு மர்மமான முறையில் இறந்து போகிறான், இந்த நிகழ்வு நாவலோடு ஒட்டாமல் மெல்லிய விலகலை கொடுப்பதாகத் தோன்றுகிறது. வரலாற்றுச் செய்தியாக அது தனியாக நின்று விடுகிறது.

வேம்பலை என்ற கிராமத்தை நினைக்கும்போது மனதில் ஒட்டுமொத்த சித்திரமாகத் தோன்றுவது பக்ரீயின் மனைவி வீடு ஆதிலட்சுமி வீடு சில வேப்ப மரங்கள் இவை மட்டுமே தோன்றுகிறது நாவலில் புறவயமான காட்சி விரிப்புக்கள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் அந்தக் கிராமத்தில் இருந்த மற்ற குடும்பங்கள் பற்றியோ அவர்களின் தொழில் வாழ்க்கை முறை பற்றி அதிகமாக வருவதில்லை, கிராமத்திற்கும் வெளி உலகிற்கும் உள்ள உறவும் எதுவும் இல்லை, நாகுவின் ஐய்யா கொண்டு வரும் பெட்ரமாஸ் லைட் மற்றும் செருப்பு தவிர. பெட்ரமாஸ் லைட் புழக்கத்திற்கு வந்தது 1910ஆம் ஆண்டுக்குப் பிறகு கைரேகை தடைச்சட்டம் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது 1924ம் ஆண்டு நாகு இறக்கும் போது வயது 35 என வைத்துக் கொண்டால் நாவல் தொடங்கப்பட்டு 1905 ஆம் ஆண்டு முதல் நாவலின் இறுதி 1950ஆம் ஆண்டு எனக் கொள்ளலாம். ஏனென்றால்

நாவல் தொடங்கும் போது நாகுவின் வயது பதினொன்று என்று தொடங்குகிறது. முதல் பகுதியில் வரும் நாகு பதின்வயதின் சித்தரிப்பாக வருகிறான் இரண்டாம் பகுதியில் வரும் நாகு முற்றிலும் வேறுவகையான நாகு. இரண்டாம் பகுதியில் வரும் நாகு அலைந்து திரிபவன் ஆகவும், காமத்தின் அலைகழிப்பாகவும் சுற்றி அலைகிறான். பெரிய களவு எதிலும் ஈடுபடாத நாகு துப்புக்கூலி மட்டும் ஒரு முறை பெற்ற நாகு கைரேகை தடைச்சட்டத்தின் போது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறான் இது நம்மைத் திடுக்கிட்ட செய்கிறது. மொத்த வேம்பலையும் கூடப் பெரிய களவில் ஈடுபடவில்லை என்று தோன்றுகின்து.

நாகுவின் மரணத்திற்குப் பிறகு கிராம மக்கள் சாயச் செய்தார்களா என்று தெரியவில்லை. இப்படி நாவல் முழுவதும் பல மரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது மரணங்கள் ஊடே காலம் நீண்டு நெளிந்து சென்று கொண்டு இருக்கிறது. நாகுவின் ஐய்யா நாவலில் முக்கியக் கதாபாத்திரம் பெரிதாக எந்தச் சண்டையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறார் பல ஆண்டுகள் கழித்து வருகிறார். திரும்பவும் பரதேசியாகப் போகிறார் ஒரு கோவிலில் நாகு அவரைக் கண்டுபிடித்து வேம்பலைக்குக் கூட்டிவருகிறான். இயலாமையும், இருப்புகொள்ளாமையும், வறுமையும் அவரை அலைக்கழிக்கிறது. பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும் ஊகங்கள் வழியாக அவர் வளர்ந்து இருப்பது நம்மையும் அறியாமல் அவர் இறப்பின் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாகப் பக்கீரின் கொலையில் அவருக்கு இருக்கும் தொடர்பு பற்றிப் பேசப்படவில்லை என்பது.

மரணத்தோடு தன் காய்களை நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்கும் சிங்கி மூலமாகத்தான் ஒரு இடத்தில் களவு வருகிறது. குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் நகைகளைச் சிங்கி களவாடுவது இல்லை என்று சொல்லப்படுகிறது இதைத்தவிரக் களவை மையமாகக் கொண்ட ஒரு நாவலில் களவு பற்றி எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை.

அதேபோல் நாவலில் வட்டார வழக்கு மொழிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை அனைத்தும் எழுத்தாளரின் சிறந்த தனித்தன்மையுடைய மொழியின் வாயிலாகவே வெளிப்படுகிறது எந்தக் கதாபாத்திரமும் அதிகமாக உரையாடுவதே இல்லை. இது நாவளின் தனிச் சிறப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. ரத்தினா மல்லிகாவை பார்க்க வரும் இடத்தில் எந்த ஒரு உரையாடலோ ஆசிரியரின் வழியாகவோ கூடப் பேசப்படவில்லை வேம்பின் பெரும் கசப்பு மௌனத்தின் ஊடாக உறைந்து நிற்கிறது. நாவலின் நெகிழ்வான இடம் நீலாவின் சமாதியில் இருக்கு மண் புழுவை கொண்டு வந்து “வீட்டடியிலே இருந்துகோ தாயி…” என்று நாகுவின் ஐய்யா சொல்லும் இடம் இலக்கியத்தின் உச்ச தருணம்.

கோடைக்காலம், காற்றடிகாலம், மழைக்காலம், பனிக் காலம் என்று நாவல் நான்கு பகுதிகளாக எழுதி இருந்தாலும் அனைத்திலும் உறைவது பெரும் வெய்யில் தான், நாவல் முழுக்க வெயில் வருகிறது, அதே போல் வேம்பின் தீரா கசப்பு, கசப்பு நிறைந்த அந்த மக்களின் வாழ்வை அசைபோட்ட படி குறியீட்டுச் சித்திரமாக மனதில் பதிகிறது.

நாவலின் இரண்டாம் பகுதி நேரடியாக நவீன வாழ்க்கையைச் சித்தரிக்கிறது பேருந்து, ஹோட்டல், லாட்ஜ், சாலை, கார் என்று நவீன உலகத் தொடர்போடு விரிகிறது. வேம்பலையின் இரண்டாம் தலைமுறை திருமால், வசந்தா. காதல் கம்யூனிஸம் பற்றிப் பேசப்படுகிறது ஆனால் அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை வேம்பர்களின் அதே கசப்பு மிகுந்த வாழ்வே எஞ்சுகிறது. லாட்ஜ் லாட்ஜக தனிமையில் சுற்றி திரியும் ரத்தனா தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணம் மீண்டும் அதே கசப்பேறிய வாழ்வின் வெறுப்பு வெளிப்படுகிறது. ஆனால் அவள் விரும்பிப் பெற்றுக் கொண்ட திருமாலின் மீது ஏன் வெறுப்பாகவே இருந்தாள் என்பது புரியவில்லை. ரத்தினா தத்தனேரி சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறாள் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர் மதுரையைச் சேர்ந்த ஜி நாகராஜன் தத்தனேரி சுடுகாட்டில் தான் தகனம் செய்யப்பட்டார், ஆகக் கதை களம் மதுரையை ஒட்டிய பகுதி என்பது உறுதியாகிறது.

வெறுமை நிறைந்த வாழ்வு, வறுமையும், துக்கமும் அன்பும், மரணமும் நிறைந்து நிற்கும் வேம்பலை அதன் முதாதையர்களின் மூச்சு காற்றும் மனிதர்களை வசியப்படுத்தித் தன்னுள் இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியே மீண்டும் ஒரு நாகு வேம்பலை நேக்கி போகிறான் அங்கிருந்து அடுத்தத் தலைமுறையின் கதை தொடங்குகிறது. அரையப்பட்ட ஆணிகளும், காயங்களும் தன்னுள் புதைத்துக் கொண்டு மீண்டும் பூத்து காய்க்கும் அந்த வேம்பை போல அவர்கள் வாழ்வும் கசபின்றிச் செழிக்கலாம். “நெடுங்குருதி” வாழ்வின் எதார்த்த கலை இலக்கியத்தின் உச்சம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2021 05:18

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.