பழகிய நாட்கள்

சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் தமிழின் அரிய நாவல்களில் ஒன்று. 1983ல் வெளியான இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ள கவிஞர் ஞானக்கூத்தன் ஒரு பத்தியில் நாவலின் மையத்தைச் சிறப்பாகச் சொல்லிவிடுகிறார்

வாழ்க்கைப் பாதையில் அவனது நண்பர்கள் மீட்கமுடியாதபடி தொலைத்துப் போய்விடுகிறார்கள். அவர்களை அவன் பார்க்கலாம், உரையாடலாம். ஆனால் அவர்களை ஒன்று சேர்த்து முன்பு இழந்த உலகைத்தை மீண்டும் கட்டிவிட முடியாது. அவர்கள் தொலைத்துப் போய்விட்டார்கள். எங்கே எப்படி என்று நுட்பமாகக் கூறுகிறது நாவல்

தன்னோடு பள்ளியில் நடித்து ஒன்றாகப் பழகிய நண்பர்களை நீண்ட காலத்தின் பின்பு ஒருவன் சந்திப்பது மகிழ்ச்சியான விஷயம். தாமோதரன் அப்படித் தான் ஒரு ஊர்வலத்தில் தற்செயலாகத் தனது பழைய நண்பன் சங்கரைச் சந்திக்கிறான். அவனைத் தேடிப் போய்த் தங்களின் பால்யகால நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

சங்கர் வழியாகப் பிற நண்பர்களைத் தேடத்துவங்கி அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். பால்யத்திலிருந்த நெருக்கம் இப்போதில்லை. நினைவில் உள்ள நெருக்கம் நிஜத்தில் இல்லையே என்று ஏங்குகிறார்கள். வாழ்க்கை பாதையில் வேறுவேறு திசைகளில் சென்ற அவர்கள் பழகிய நாட்களை நினைவு கொள்கிறார்கள்.

கடந்தகாலத்தை நினைவு கொள்வது எல்லோருக்கும் மகிழ்ச்சியான விஷயமில்லை. தாமோதரன் அவர்களிடம் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. பழகிய நண்பன் என்பது அவர்களுக்கு வெறும் நினைவு மட்டும் தான்

பள்ளி நாட்களில் எதிர்காலத்தைப் பற்றிக் கண்ட கனவிற்கும் இன்றைய நிஜத்திற்குமான இடைவெளியை இந்த நாவலைப் போலச் சொன்ன படைப்பு எதுவுமில்லை. காலம் கருணையற்றது. அது ஒவ்வொருவரையும் ஒரு திசையில் பயணிக்க வைக்கிறது. பகடைக் காய்கள் போல உருட்டி விளையாடுகிறது.

பள்ளி நாட்களில் வசதியாக இருந்த ஒருவன் இப்போது குடியிருக்க வீடில்லாமல் ஒற்றை அறையில் வசிக்கிறான். அன்று கம்பீரமாக இருந்தவன் இன்று நோயாளியாக மாறியிருக்கிறான். ராணுவத்திற்குச் சென்றவனோ குடிகாரனாகத் தோற்றம் தருகிறான். இப்படி வயதின் கோலங்கள் எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகயில்லை.

பழைய நண்பர்களை மறுபடி ஒன்று சேர்ப்பது என்பது எளிதானதில்லை. ஆனால் அந்த ஏக்கம் யாரிடம் தானில்லை.

தாமோதரன் ஆசையாக அவர்கள் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் பற்றிப் பேசும் போது அப்படி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டது கூடச் சங்கருக்கு நினைவில்லை. வீட்டின் சுவரில் பால்யத்தின் சாட்சியமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தைத் தாமோதரன் துல்லியமாக நினைவுபடுத்துகிறான்

ராஜா ஸ்டுடியோவில் எடுத்தபோட்டோ. அதுவும் நீயும் வேணும் குந்திகிட்டு இருப்பீங்க. நானும் ராமசாமியும் பின்னாலே நின்னுகிட்டு இருப்போம். நீ தான் பணம் குடுத்தே. போட்டோவில சிரிச்சிகிட்டு ரொம்ப நல்லா இருந்தே

அப்படியா`` எனச் சாவகாசமாகக் கேட்கிறான் சங்கர். அவன் நினைவில் அந்தக் காட்சியில்லை. யாருக்கோ நடந்தவற்றைக் கேட்பது போலவே கேட்கிறான்.

இந்த நாவலை எப்போது வாசிக்கும் போதும் மனது கரைந்துவிடுகிறது. பிரிந்து போன நண்பர்கள் மீதான ஏக்கம் மேலோங்குகிறது.

ஒருவேளை பழைய நண்பர்களைத் தேடிச் சந்தித்தாலும் தாமோதரன் உணர்வது போலவே விலகலை உணரக்கூடும். அது தான் உண்மை.

சா.கந்தசாமியின் எழுத்தில் அசாதாரண விஷயங்கள் எதுவும் கிடையாது. நேரடியாக, எளிமையாக, சின்னஞ்சிறிய சம்பவங்களும் நினைவுகளும் ஒன்று கலந்து எழுதும் நடை. ஆனால் மறக்கமுடியாத கதாபாத்திரங்களை உருவாக்கி விடுகிறார்.

இந்த நாவலில் பரிச்சையில் தோற்றுப் போன தாமோதரனை அவனது அப்பா கன்னத்திலும் காதிலும் சேர்த்து அறைகிறார்.. அடி தாங்கமுடியாமல் வலியில் கத்துகிறான். அந்த அலறல் சப்தம் அப்பாவை மேலும் கோபம் கொள்ள வைக்கிறது. இடுப்போடு சேர்த்து உதைவிடுகிறார். அப்பாவுக்கு அடி உதையைத் தவிர வேறு எதுவும் தெரியாதது. மூக்கணாம் கயிறு போட முடியாத மாட்டின் மூஞ்சியில் எட்டி உதைத்து அப்பா பணிய வைத்த நிகழ்வை விவரிக்கிறான்.

அந்த அப்பாக்களின் காலம் முடிந்துவிட்டது. இன்றைய அப்பாவிடம் அவ்வளவு மூர்க்கமில்லை. ஒருவேளை அரிதாக யாரோ ஒருவர் இன்று அப்படி நடந்து கொள்ளக்கூடும். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மையான தந்தை அப்படித் தான் நடந்து கொண்டார்கள்.

நான் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பரமசிவன் என்ற மாணவன் நான்காம் வகுப்பில் பெயலாகிப் போனதை அறிந்த அவனது அப்பா பள்ளிக்குத் தேடி வந்து அகலமான பெல்டால் அவனை மைதானத்தில் ஒடஓட அடித்து மயக்கமடையச் செய்தார். அந்த நினைவு அழியாமல் இருக்கிறது. மயங்கிக் கிடந்த பையனை ஆசிரியர்கள் தான் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். இந்த அடிக்குப் பயந்து பரமசிவத்தைப் பாஸ் போட்டுவிட்டு விட்டார்கள். பரமசிவத்தின் அப்பா பெல்டை இடுப்பில் கட்டிக் கொண்டு எதுவும் நடக்காதது போலச் சைக்கிளில் திரும்பிப் போன காட்சியை மறக்கவே முடியவில்லை.

பழைய நண்பர்களைத் தற்செயலாக எங்காவது பார்த்துவிட முடியாதா என்ற ஏக்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதுவும் இப்போது பேஸ்புக் வந்தபிறகு தேடித்தேடி பழைய நண்பர்கள் ஒன்றுசேருகிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பழைய நட்பு மீண்டும் துளிர்ப்பதில்லை. நெருக்கம் கொள்வதில்லை.

சென்ற தலைமுறைக்குப் பழைய நண்பர்களை மீண்டும் காணுவது தற்செயலாக நடந்தால் உண்டு. அந்த ஏக்கத்தை இந்த நாவலில் கந்தசாமி மிக நுட்பமாக எழுதியிருக்கிறார்

தாமோதரன் நாவலின் ஒரு இடத்தில் சொல்கிறான்

சங்கர் உன்னை எத்தனை வருஷமாக நான் தேடிகிட்டு இருந்தேன் தெரியுமா. ரோட்டுல போகறப்ப எல்லாம் நீ தென்படுவியா, ராமு தென்படுவானா, வேணு தென்படுவானா என்று தேடிகிட்டே போவேன்.“

இதைக்கேட்டு சங்கர் சொல்லும் பதில் அதிர்ச்சியானது

அப்படியா,,,, வேடிக்கையா இருக்கே

தாமோதரன் மனதில் பசுமை மாறாமல் இருக்கும் நட்பு ஏன் சங்கர் மனதில் புகைபடிந்த சித்திரமாக இருக்கிறது.

சங்கர் தனது கடந்தகாலத்தை மறக்க விரும்புகிறான். நிகழ்கால வாழ்க்கை நெருக்கடிகளைச் சந்திக்க முடியாமல் தடுமாறுகிறான். உண்மையில் வாழ்க்கை அவனைத் தன்னுடைய போக்கில் இழுத்துக் கொண்டு போகிறது. இன்றைய அடையாளம் மட்டுமே அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் தாமோதரனுக்குப் பணம் வசதி வீடு மனைவி என்ற இன்றைய வாழ்க்கை போதுமானதாகயில்லை. அவன் இழந்துவிட்ட பால்ய கால நட்பினை நினைத்து ஏங்குகிறான். நினைவுப்பாதையில் நடந்து திரிகிறான்.

தற்செயலாகச் சந்தித்துக் கொண்ட இரண்டு நண்பர்களும் ஒன்றாகச் சாப்பிடச் செல்கிறார்கள். அது ஒரு மறக்கமுடியாத காட்சி.

நண்பன் வீட்டில் சிறுவயதில் சாப்பிட்டதைத் தாமோதரன் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறான். நண்பனின் அம்மா, அவரது மீன் சமையல், அதன் ருசி எல்லாமும் நினைவில் துளிர்க்கிறது பிரிந்தவர்கள் ஒன்று கூடிச் சாப்பிடும் போது உணவின் ருசி மாறிவிடுகிறது. அன்று சங்கர் நீண்டகாலத்தின் பின்பு நல்ல சாப்பாட்டு சாப்பிட்ட உணர்வை அடைகிறான்

நண்பர்களில் ஒவ்வொருவராக ஊரைப்பிரிந்து போய்விடும் போது ஏற்படும் மனவெறுமையைக் கந்தசாமி அழகாக விவரித்துள்ளார்.

முதல்ல வேணு போயிட்டான். அப்புறம் நீ. நானும் ராமுவும் என்ன பண்ணுறதுனு தெரியாமல் ஊர் சுற்றிகிட்டு இருந்தோம். மிலிட்டரிக்குஆள் எடுக்கிறாங்கன்னு கேள்விபட்டு போனோம். அதுல ராமசாமி தேர்வாகிட்டான். நான் தோத்துப் போயி அழுதுகிட்டே தனியே திரும்பி வந்தேன். எனத் தாமோதரன் சொல்லும் போது கடைசி ஒருவனாக அவன் மட்டும் ஊரில் மிஞ்சிப்போன வேதனையை நன்றாக உணரமுடிகிறது

1970-80களில் வேலை கிடைக்காதவனைப் பற்றி நிறையக் கதைகள் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று அந்தப் பிரச்சனை மெல்லிய முணுமுணுப்பாக ஒலிக்கிறதே அன்றிப் பெரிய நெருக்கடியாக எழுதப்படவில்லை.

நாவலில் தாமோதரனின் அப்பா சொல்கிறார்

கூட இருந்தவன் எல்லாம் ஒரு வேலையைத் தேடிகிட்டு போயிட்டான். நீ தீனி தின்னுகிட்டு தெருமாடு கணக்காக ஊர் சுத்திகிட்டு இருக்கே

இந்த வார்த்தைகளைக் கேட்காத இளைஞனே அந்தக் காலத்தில் இல்லை. நெற்றியில் கருங்கல் தாக்கியது போல அந்த வார்த்தைகள் பலமாகத் தாக்ககூடியது. இந்தச் சுடுசொல்லுக்குப் பயந்து சொந்த வீட்டில் சாப்பிடத் தயங்கியவர்களை அறிவேன். வீட்டை விட்டு ஓடியவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

தாமோதரன் இந்தச் சொல்லை தாங்கமுடியாமல் தான் வீட்டை விட்டு வெளியேறி தந்தையை அடிக்கக் கல்லைக் கையில் எடுக்கிறான். ஆத்திரமான தந்தை கதவை மூடிக் கொண்டுவிடுகிறார். அவன் எறிந்த கல் கதவில் பட்டுச் சிதறுகிறது

மறக்கமுடியாத காட்சியது. ஒரு காலகட்டத்தின் சாட்சியம் போல இந்த வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன.

பிரிந்து போன காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை, மாற்றங்களைத் தாமோதரன் தெரிந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனது நண்பர்களில் எவரும் அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்வதில்லை.

நான்கு நண்பர்களின் குடும்பத்திற்கும் அவர்களின் கடந்தகாலமோ, அதன் இனிய நினைவுகளோ முக்கியமானதாகவில்லை. இன்றைய வாழ்க்கை என்ற பற்சக்கரங்களுக்குள் சிக்கி அதன் விசைக்கேற்ப அவர்கள் முன்பின்னாக இழுபடுகிறார்கள். இந்த நிஜமே போதுமானதாகயிருக்கிறது.

பாரேன் நீ பெரிய ஆளாக ஆகத்தான் போறே. அப்புறம் நாங்க எல்லாம் உன்னைத் தேடிகிட்டு வந்து வாசல்ல நிற்கப்போகிறோம். என்று கடந்தகாலத்தில் ஒருநாள் ராமசாமி சொல்கிறான்

இந்தக் கனவு யாரிடம் தான் இல்லை. ஆனால் நிஜம் அப்படியாக மாறவில்லை.

நண்பர்களில் யாரேனும் ஒருவர் இறந்து போயிருக்கக் கூடும் என நாவலின் ஆரம்பத்தில் நினைக்கிறான். அது உண்மையான தடுமாற்றம். திரும்பக் காணாத பழைய நண்பர்களின் இழப்பை எப்படி ஈடுகட்டுவது. சிலரது முகம் கூட நினைவில் இல்லையே என்ற உணர்வு நாவலின் வழியே பீறிடவே செய்கிறது

சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் மனதில் அந்தப் பசுமையான நினைவுகளுடனே நண்பர்கள் வாழுகிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியாக விஷயம்.

யாரையும் மறக்காமல் நினைச்சிகிட்டு தான் இருக்கேன். சந்திக்கதான் முடியலை. வயசு ஆகிட்டா நடந்ததெல்லாம் இல்லேனு ஆகிடுமா. என்று நாவலின் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. அது தான் உண்மை.

தாங்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை நண்பர்கள் மீண்டும் காணுவதுடன் நாவல் நிறைவுபெறுகிறது. இதைவிடச் சிறப்பாக நாவலை முடிக்க முடியாது. அந்தப் புகைப்படம் நம் அனைவரின் மனதிலும் உள்ள பால்ய நட்பின் அபூர்வமான புகைப்படம்.

பழைய கட்டிடங்களுக்கு மட்டுமே பேசும் சக்தியிருக்கிறது என்றொரு வரியைப் பிரெஞ்சு எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியிருக்கிறார்

அது பழைய புகைப்படங்களுக்கும் பொருந்தக் கூடியதே

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 23:57
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.