S. Ramakrishnan's Blog, page 152
December 21, 2020
அக்காலம்- மஹாபலிபுரம்
அந்தக் காலத்தில் மஹாபலிபுரத்திற்கு படகில் போய் வந்திருக்கிறார்கள். அந்த நினைவுகளைச் சொல்லும் இந்தக் கட்டுரையை இன்று வாசிக்கையில் வியப்பாகவுள்ளது.
‘ விவேக சிந்தாமணி’ இதழில் ச. ம. நடேச சாஸ்திரி எழுதிய குறிப்பு 1894 ஏப்ரலில் வெளியாகியுள்ளது.
சென்னையிலிருந்து தெற்கே செல்லுகிற தென்னிந்தியா இருப்புப்பாதை வழியாகச் செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய க்ஷேத்திரத்தை ஜட்கா வண்டிகள் மூலமாய்ச் சேரலாம். இந்தவிடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்படி ஜெட்காவிலேயே ஏறிச் சென்றால் யாம் தலைப்பில் குறித்த மஹாபலிபுரம் ஸ்தலத்தயடையலாம்.

இதற்குச் சென்னையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகவும் படகுகளில் செல்லக்கூடும். ஆனால் கோடைக் காலத்தில் இக்கால்வாயில் தண்ணீர் குறைந்திருக்குமாதலால் படகுகள் தங்குதடையின்றிச் செல்வது முடியாது. 40 மைலில் படகுகளிலேறிச் செல்ல வேண்டியிருப்பதால் படகுக்காரர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள்.
ரயில் மார்க்கமாகச் செல்வதே உத்தமம். திருக்கழுக்குன்றம்விட்டு எட்டு மைல் ஜெட்காமீதேறிக் கொண்டு சென்றால். சமுத்திரத் தண்ணீரில் முழுகி சுமார் இரண்டு பர்லாங் தூரமுள்ள சேற்று நீரில் நடந்து செல்ல வேண்டும். பிறகு பக்கிங்ஹாம் கால்வாயைத் தாண்ட வேண்டும். இவைகளைக் கடந்து சுமார் அரை மைல் தூரம் நடந்து சென்றால் மஹாபலிபுரமென்கிற சிறிய ஊரின் வீடுகள் தென்படுகிறது.
மக்கள் சிறிய கூரை வீடுகளைக் கட்டிக்கொண்டும், எருமை, பன்றி முதலிய கால்நடைகளை வைத்துக் கொண்டும் ஊரில் ஒரு புறத்திலுள்ள சிறிது புஞ்சை பூமிகளில் விளையும் தானியங்களைக் கொண்டும் ஜீவிக்கிறார்கள்.
இந்த ஊரைச் சுற்றி மூன்று புறத்திலும் கடல் ஆக்கிரமி த்திருக்கிறபடியால் சாகுபடிக்குத் தகுந்த பூமிகளில்லை.
ஊரின் மத்தியில் அழிந்து கொண்டு வருகிற ஒரு பெரிய விஷ்ணுவாலயிமிருக்கிறது. சுவாமிக்கு – தரைசயனப் பெருமாள் என்றும், அம்மனுக்கு நிலை மங்கைத் தாயார் என்றும், கூறப்படுகிறது. பக்த கோடிகள் வருவது அதிகக் குறைவான படியால் அர்ச்சகர்கள் பூஜை முதலியவைகள் செய்வதும், சிரத்தையுடன் இயற்றப்படுவதாகக் காணப்படவில்லை. ஆலயத்திற்குள் சுவாமி பள்ளி கொண்டிருப்பது போன்ற சில விக்கிரகம் அதிகச் சுந்தரமாயிருக்கிறது. ஆலயத்தின் மதில் சுவர்களும், மற்ற கட்டடங்களும் அழிந்து கொண்டு வருகின்றன. உட்பிரகாரத்திலும் நெரிஞ்சிச் செடிகள் மலிந்து பிரதக்ஷணம் செய்பவர்களை வருத்துகின்றன. இது சிற்ப சாஸ்திர வேலைகளுக்குப் பேர்பெற்றவிடமாதலால் இவ்விடத்தில் யாவரும் பார்க்கக்கூடியதும், பார்க்க வேண்டியதுமான முக்கிய ஸ்தலங்களைக் குறிப்பிடுகிறோம்:

1. அர்ச்சுனன் தபசு: – மேற்படி ஆலயத்திற்கு வடக்கில் ஒரு குளம் காணப்படுகிற பள்ளத்தாக்கு. ஒரு புறத்தில் சுமார் 30 – அடி உயரமுள்ள பாறை. இதில் யானை, மான், மனிதர் முதலிய உருவங்கள் அதிக இலக்ஷணமாய் வெட்டப்பட்டிருக்கின்றன.
2. அர்ச்சுனன் தபசுக்கு வடக்கே விநாயகர் ஆலயம். ஒரே கல்லில் வெட்டப்பட்ட 30 – அடி உயரமுள்ள கோபுரத்தோடு கூடியது.
3. விநாயகர் ஆலயத்திற்கத் தென்புறத்திலுள்ள ஒரு பெரும்பாறையில் குடைந்து வெட்டப்பட்ட மண்டபம். சுமார் 18 – அடி பாறைக்குள் வெட்டிக் குடைந்தது. அதில் ஸ்தம்பங்கள் விடப்பட்டு, உட்புறத்தில் சிற்சில ரூபங்களையுடையது.
4. மேற்படி மண்டபத்திற்குக் கிழக்குப் பாகத்தில் ஒரு சரிவான பாறையின் பேரில் வெகு சிறிய ஆதாரத்துடன் நிற்கப்பட்ட ஒரு குண்டாங்கல். இதை கிருஷ்ணன் உருட்டி எடுத்த வெண்ணெயென்று கூறுகிறார்கள்.

5. பீமன் அடுப்பு: – இது மேற்படி வெண்ணெய்க் கல்லுக்கு வடபுறத்திலிருக்கிறது. மூன்று பெரிய கற்களால் செய்யப்பட்ட ஓர் இடுக்கு. பாறைகளே சுபாவமாயிப் படியமைந்திருக்கிறதென்று கூறலாம். யாதொரு வேலைப் பாட்டையும் காட்டக்கூடியதன்று.
6. யசோதை தயிர்த்தொட்டி: – இது ஒரு பாறையில் ஆறு கஜ சுற்றளவுள்ளதாயும், மூன்று கஜ ஆழமுள்ளதாயும் வெட்டிக் குடையப்பட்ட கற்தொட்டி. ஏறி மேலே செல்லும் படி ஒரு புறத்தில் மூன்று படிகளும் வெட்டப்பட்டிருக்கின்றன.
7. மண்டபங்கள்: – ஒரு பெரிய பாறையில் குடைந்து வெட்டப்பட்ட மூன்று மண்டபங்கள். இவைகளுக்கு புறத்தில் சிற்சில ரூபங்கள் விளங்குகின்றன.
8. ஜோடி மண்டபங்கள்: – மேற்படி மண்டபங்களை கடந்து சுமார் கால் மைல் தூரம் தெற்கே சென்று காணக்கூடியது. ஒரு பெரும்பாறையில் குடைந்து வெட்டிப்பட்ட மண்டபங்கள். 25 – அடி அகலமும், 45 – அடி நீளமுமுள்ளது. இரண்டு வரிசையான தூண்களையுடையதாயும், ஒவ்வொரு மண்டபத்திலும் ஐந்தைந்து சிறிய அறைகளைக் கொண்டதாயுமிருக்கிறது. ஒவ்வொரு அறையில் எதிர்சுவரான பாறையில் சிற்சில ரூபங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
9. இரண்டு கல் ரதம்: – மேற்படி மண்படங்களுக்குத் தென் கிழக்கிலுள்ள கல் ரதம், ஒரே பாறையில் வெட்டப்பட்டது. ஒவ்வொன்றும் 25 – அடி உயரமும், 12 – அடி நீளமும் 12 – அடி அகலமுமுள்ளது.
10. ஒரு கல் ரதம்: – மேற்படி ரதங்களுக்கச் சற்று தெற்கில் ஒரு பாறையில் வெட்டப்பட்ட கல் ரதம். இதுவும் மேற்படி ரதங்களை அளவில் ஒத்திருக்கிறதென்றே கூறலாம்.
11. ஐந்து கல் ரதம்: – மேற்படி ரதங்களிலிருந்து சுமார் அரை மைல் தூரம் சென்றால் இந்த வினோதமான 5 கல் ரதங்களையும் காணலாம். ஒரு பெரும் பாறையில் வெட்டப்பட்டது. ஒன்று சுமார் 50 அடி நீளமும், 18 – அடி அகலமும், 36 – அடி உயரமுமுள்ளதாய் நான்கு புறத்திலும் மண்டபம் போன்ற குத்துக் கால்களை யுடையதாய் வெகு கம்பீரமாய் விளங்குகிறது. மற்றொன்று 25 அடி சம சதுரமாயும், 50 – அடி உயரமுள்ளதாயும் மனிதர்கள் ரதத்தின் உச்சிவரையில் ஏறிச் சென்று பார்த்து வரத் தகுந்த தாயும் வெட்டப்பட்டு வெகு அழகாய் காணப்படுகிறது. மற்ற மூன்று ரதங்களும் சிறியவை. இந்த பஞ்ச ரதங்களையல்லாது கோபுரங்களையடுத்து ஒரு யானை, சிங்கம், எருது இவைகளும் வெகு அழகாய் பாறைகளில் வெட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
இவைகளைப் பலர் பலவிடங்களில் உடைத்துத் தகர்த்திருக்கிறார்கள். பூர்வீகச் சின்னங்களைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்ட உத்தியோகஸ்தர்கள் இவைகளைக் கவனித்து சில ரிப்பேர்களைச் செய்திருக்கிறார்களென்றாலும் போதாதென்றே கூறவேண்டியிருக்கிறது.

12. தரைசயனப் பெருமாள்: – இது சமுத்திரக் கரையோரத்தில் சயனித்துக் கொண்டிருக்கிற பாவனையாய் செய்திருக்கிற பெரிய கற்சிலை. இதை மகாபலிச் சக்கரவர்த்தியின் உருவமென்றும் பலர் கூறுவதுண்டு.
நன்றி: அட்சரம் இலக்கிய இதழ்
••
December 20, 2020
சஞ்சாரம் நாவல்
கெட்டி அட்டை பதிப்பில் சஞ்சாரம் வெளியாகியுள்ளது. எனது கையெழுத்துடன் இதனைப் பெறலாம்.
விலை ரூ460.

ஆங்கிலத்தில்
உறுபசி நாவலின் ஆங்கில மொழியாக்கம்
கிறுகிறு வானம் நாவலின் ஆங்கில் மொழியாக்கம்
எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் தேசாந்திரியில் கிடைக்கிறது

தெலுங்கு மொழியாக்கம்
எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு தெலுங்கில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. நைல் நதி சாட்சிகா என்ற தலைப்பில் இந்த தொகுப்பு வெளியாகிறது.
ஜி.பாலாஜி எனது யாமம் நாவலை முன்னதாக மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்த தருணத்தில் தெலுங்கில் இந்த கதைகள் வெளிவர முன்முயற்சி எடுத்த நண்பர் குறிஞ்சி வேலன் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

December 18, 2020
ஒளியின் பயணம்.
லைட்டிங் என்பது ஒளியை ஒரு குறிப்பிட்ட விதமாக எடுத்துச் செல்வது. கையாளுவது. மிகையான வெளிச்சம் காட்சியின் இயல்பைக் கெடுத்துவிடும் ஆகவே நான் பெரும்பாலும் ஒளியை விட நிழல்களைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்கிறார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட். ஆஸ்கார் விருது பெற்றவர்.
ஹாலிவுட் இயக்குநர்கள். நடிகர்கள் பற்றி நிறைய ஆவணப்படங்கள் உருவாக்கபட்டுள்ளன. ஆனால் அதன் ஒளிப்பதிவாளர்கள். இசையமைப்பாளர்கள் பற்றி மிகக் குறைவான ஆவணப்பதிவுகளே காணப்படுகின்றன.
ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட் பற்றிய ஆவணப்படமான Close Encounters With Vilmos Zsigmond யைப் பார்த்தேன்.

ஹங்கேரியின் திரைப்படப்பள்ளியில் ஒளிப்பதிவு பயின்ற தனது இளமைப்பருவம் குறித்தும், சோவியத் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தாங்கள் நேரடியாகப் படப்பிடிப்புச் செய்து ஆவணப்படுத்திய நாட்கள் குறித்தும் அழகாக நினைவு கூறுகிறார்.
அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த வில்மோஸ் ஹாலிவுட்டில் நுழைய முற்பட்ட போது ஒரு மூத்த ஒளிப்பதிவாளர் உன்னைப் போன்ற ஆட்களுக்கு இங்கே இடம் கிடையாது என்று துரத்திவிடுகிறார். ஆனால் அதையே சவலாக எடுத்துக் கொண்டு பி கிரேட் படங்களில் பணியாற்றத் துவங்கி மெல்ல தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் வில்மோஸ்.
அந்த நாட்களில் அவரது பெயரை வில்லியம் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒருவகையில் அது வேறு யாரோ ஒளிப்பதிவு செய்த படம் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார்.
அவருடன் முக்கியமான ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்கள் நிகழ்த்துகிற உரையாடல் தான் இந்த ஆவணப்படத்தின் முக்கியமான பகுதி. குறிப்பாக Darius Khondji உடன் அவர் நிகழ்த்துகிற உரையாடல் ஒரு பாடம் என்றே சொல்வேன்.
தனது திட்டமிடல், ஒளிப்பதிவு செய்யும் முறை, இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் என்று விரிவாகத் தன் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். இதில் பொது நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையும் இடம்பெற்றிருக்கிறது
McCabe and Mrs. Miller, The Deer Hunter, Blow Out and The Long Goodbye.Close Encounters of the Third Kind படங்களின் ஒளிப்பதிவு குறித்து வில்மோஸ் விளக்கிச் சொல்கிறார். அரங்கத்தில் ஒளியமைப்பு செய்யும் போதும் திறந்த வெளியில் படப்பிடிப்பு நடத்தும் போதும் தான் எவ்வளவு துணிச்சலாக, சவாலாக காட்சிக் கோணங்களை உருவாக்கினேன் என்பதை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு காட்சியில் அவர் அமெரிக்கரா அல்லது ஹங்கேரியனா என்று கேட்கிறார்கள். தான் ஹங்கேரியில் பிறந்திருந்திருந்தாலும் தான் வாழ்ந்தது அமெரிக்காவில் என்பதால் தன்னை ஒரு அமெரிக்கராகவே வில்மோஸ் சொல்கிறார். அவரது வீடும் தனிப்பட்ட வாழ்க்கையும் இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் லாஸ்லோவுடன் அவரது பால்யகாலம் துவங்கிய நட்பு. இருவரும் ஒன்றாக ஹாலிவுட்டில் பணியாற்றிய நாட்கள் எனத் தனது நண்பரைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார் வில்மோஸ்.
எழுபதுகளில் ஹாலிவுட் சினிமாவின் முகத்தை உருவாக்கியதில் வில்மோஸிற்குத் தனிப்பங்கு இருக்கிறது. அவரது கலைத்திறனை ஆராயும் இந்தப்படம் அவருக்குச் செலுத்தப்பட்ட சிறந்த அஞ்சலி என்றே சொல்வேன்
December 17, 2020
இரண்டு விநோதக் கதைகள்
குளிர்சாதனப் பெட்டி
இசபெல் ஸாஜ்ஃபெர்
தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

என்னுடைய பாட்டி இறந்து விட்ட பிறகும் இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்? குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்திக் காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்படியை இழுத்துத் திறக்கும்போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள்
– ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று?
நாங்கள் குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவிளாவிய படியே காலை உணவை உட்கொள்வோம்.
அவளால் பெரிய பிரச்சனை எதுவுமில்லை. ஒரே ஒரு கஷ்டம் அவள் ஆக்கிரமித்துக் கொண்ட இடம் தான். அவளுடைய உணர்வுகளைப் புண்படுத்த விருப்பமில்லை என்றாலும் எங்களுக்கு உணவுப்பொருட்களையும், பானங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அவளுக்குத் தெரியாமல் இரண்டாவது குளிர்சாதனப் பெட்டியொன்றை வாங்கி வந்தோம். அதை உபயோகப்படுத்த தொடங்கினோம். ஆனால், அது குறித்து அவளுக்குச் சந்தேகம் உண்டாக அதிக நாளாகவில்லை. ‘எங்கே போயிருந்தீர்கள்?’ என்று கேட்டாள் அவள்.
‘எனக்கு உங்களை உளவு பார்க்க விருப்பமொன்றுமில்லை. ஆனால் ஒரு முழு நாள் உங்களைக் காணவில்லையென்றால் எனக்குக் கவலையாகி விடுகிறது’ என்று அழுதாள். நாங்கள் அவளை அணைத்துக்கொண்டோம்.
அவள் கழுவப்படாத கீரையாய் வாடையடித்தாள்.
என்னுடைய பெற்றோர்கள் பிரிந்துவிட முடிவு செய்தார்கள். அம்மா, மெஜோரடாவில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்குச் சென்றாள். அப்பா நியூயார்க் நகருக்குக் குடிபெயர்ந்தார். என்னுடைய சகோதரன் கல்லூரிக்குச் செல்ல, நான் தனியாகப் பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தேன்.
ஒரு நாள் இரவு என்னுடைய ஆண் நண்பன் அவள் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியைத் தவறுதலாகத் திறந்துவிடப் பயந்து போய் வீறிட்டு அலறினாள் அவள்.
அவனும் பயத்தில் அலறினான். அவனிடம் அவளைப்பற்றி நான் கட்டாயம் கூறியிருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
அதற்குப் பிறகு அவன் என்னைத் தேடி என் இடத்திற்கு ஒருபோதும் வரவேயில்லை. அம்மா ஆண்களை வீட்டில் அங்குமிங்கும் அலைய அனுமதிப்பது தொடர்பாகப் பாட்டி எனக்கு ஒரு நீண்ட உரையாற்றினாள். ஆனால் நான் அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை.
அவள் முகத்திலறைவதாய்க் குளிர்சாதனப்பெட்டியின் கதவை படீரெனச் சாத்தினேன். இது என்னைக் கொடூர மனுஷியாய்ப் புரிய வைத்தாலும் சரி, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
அக்கம் பக்கத்தார் உள்ளே வந்து மெஜோராடோவிலிருந்து அம்மா திரும்பி வரும்வரை பாட்டியைப் பார்த்துக் கொண்டார்கள்.
நான் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்.
**
விற்பனைக்கு
லியானெ மெர்ஸெர்
தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

ஸாண்ட்டியாகோ என்ற பெயரை தாங்கிய வெறும் இரண்டு வீட்டு வரிசைகள்’ மட்டுமே கொண்ட நீண்ட அந்தக் குறுகிய தெருவின் மீது நிற்கும், தொய்ந்த வெண்ணிற மூடு சட்டங்களைக் கொண்டிருந்த ஒரு சிறிய மஞ்சள் வீட்டின் சமையலறையில், அனிடா என்று அழைக் கப்படும் மூதாட்டியொருத்தி ஒரு கருநிற வாணலியில் வார்த்தைகளை வறுக்கிறாள்.
பதமான இளம்பழுப்பு, தூய்மையான லினோலியப் பரப்பின் மீது, ஒரு கோழி மற்றும் ஒரு சேவல் படபடத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் உணவுக் கொடைகளிலும், வெந்த படையல்களிலும் நம்பிக்கை கொண்டவர்களாய் விளங்கினார்கள்.
ஆனால், அனிடா மிகவும் கவனமாக இருந்தாள். வெகு சில வார்த்தைகள் தீ மூட்டி விடும். அவற்றையும் விடக் குறைவான வார்த்தைகள் அடையாளம் தெரியாமல் எரித்துக் கரித்துவிடும். அனிடா அந்தப் பெயரற்ற சேவலுக்கும் கோழிக்கும் கச்சா வார்த்தைகளால் தீனியிட்டு வருகிறாள். அந்தச் சுவையை விரும்ப அவை பழகிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
மாணிக்கக் கல் மோதிர மொன்றிலிருந்தும், மற்றும் அவளுடைய அம்மா அவளுக்குப் பரிசளித்திருந்த பச்சை மற்றும் மஞ்சள் நிறக் குழிவான கண்ணாடிக் கிண்ணங்களிலிருந்தும் அனிடா அந்த நாளுக்கான பேச்சுக்குரிய மொழிக்கூறுகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறாள்.
அவள் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆங்கிலத்தை ஸ்பானிய மொழியில் பெயர்த்தெழுதவும், மறுபடியும் ஆங்கில மாக்கவும், வாக்கியங்களின் தன்மைகளை விளக்கும் போக்கில் முனைகையில் அந்த வேலைக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அவள் D+ தான் வாங்கினாள் என்றாலும் இலக்கணப்பாடம் அவளுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது.
அவள் கழுவுகிறாள், துண்டமாக்குகிறாள், சீவுகிறாள், நீவிச் சீராக்குகிறாள். பொரித்து முடித்த பிறகு அனிடா சுடச்சுட இருக்கும் வார்த்தைகளை வளைந்த தேக்குத் தட்டத்தின் மீதுள்ள காகிதத்துவாலைகளின் மேல் போடுகிறாள்.
வார்த்தைகள், அவற்றை அனிடா வெளிறிய ‘லினன்’ துணியாலான கைக்குட்டைகளின் மடிப்புகளுக்கிடையே வைக்கையில், குளிர்ந்திருக்கின்றன. அந்தக் கைக்குட்டைகள் பல முறை நனைத்துத் தோய்க்கப்பட்டிருப்பதன் விளைவாய் ‘காக்கர் ஸ்பானியில் ‘நாய்க்குட்டியின் காதுகளைப் போல் மிருதுவாக இருக்கின்றன. அவள் அந்தத் துணியால் மூடிய வார்த்தைகளை நான்கு கூடைகளில் போட்டு அவற்றைச் சந்தைக்கு எடுத்துச் செல்கிறாள்.
அங்கே அவள் மொரமொரா பிஸ்கெட்டுகளைத் தயாரிப்பவனுக்கு அருகில் குந்தி உட்கார்ந்தபடி, மதியக் கோழித்தூக்க நேரத்திற்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளின் உரத்த குரல்கள் அந்தச் சந்தையின் சின்ன இசையை மூழ்கடித்து விடுவதற்கு முன் அவற்றை விற்பனை செய்கிறாள்.
அவளுடைய வாடிக்கையாளர்கள் டி – ஷர்டுகளும், ‘டாக்கர்’களும் அணிந்த, வழிந்தோடும் இடுப்புப் பாவாடைகளும், மென்மையான துணிகளிலான மேற்சட்டைகளும் அல்லது குட்டைக் காற்சட்டைகளும், சாயமிடப்பட்ட, சூரிய வெப்பத்திலிருந்து காக்கவும், கைகளி லுள்ள பச்சைக்குத்தல்களை மறைக்கவுமாய் நீண்டகைப்பகுதியைக் கொண்ட ‘டெனிம்’ சட்டைகளும் அணிந்த, நுட்பமும், தீவிரமும் வாய்ந்த மனிதர்கள்.
அனிடா அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று கேட்டதில்லை. தங்களுடைய எழுத்துக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டது குறித்தும், சரியான வார்த்தைகளைத் தங்களால் கண்டெக்க முடியாமலிருக்கும் ஆற்றலின்மை குறித்தும் அவர்கள் புகார் சொல்லும் போது அவள் அவற்றைத் காது கொடுத்துக் கேட்பதில்லை.
அவளுடைய வியாபாரம் பேச்சுவாக்கிலே மிகவும் வளர்ச்சியடைந்து விட்டது. முந்தைய வாரம், காரோட்டி ஒருவன் கருநிற லின்கான் வண்டியொன்றை, அங்கே நிறுத்தி வார்த்தைகளை வாங்கிச் சென்றான். அந்தச் சமயம் உள்ளூர் கல்லூரியொன்றின் ஆங்கிலத் துறைத் தலைவர் ஒரு கலவையாக, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் சேர்த்து விலைக்கு வாங்கினார்.
அனிடா ஒரு கேள்வியும் கேட்கவில்லை.
வார்த்தைகளின் விலை ஒரேயளவாக இருப்பதில்லை. அவற்றின் சுவையும் ஒன்றாக இருப்பதில்லை.
பெயர்ச்சொற்கள் சில சமயங்களில் கொழ கொழத்து அடர்ந்த காய்கறி சூப்பு போன்ற சுவையில் இருந்தன. வேறு சமயங்களில் இறைச்சியும் காய்கறியும் சேர்த்து செய்தது போல் சுவைத்தன. அந்த வார்த்தைகள் நெருப்பிற்கு மேலாய் உயிர்த்தெழுந்து வரும் ஓசையை அனிடா கவனமாகச் செவி மடுக்கிறாள்.
பின், அவற்றின் ருசியை மேம்படுத்த தோதாய் சில மணம் சேர்க்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறாள். அவளுடைய பெயரெச்சங்கள் மிளகுதான் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட முடியாத ஒன்றால் நாக்கில் உறைக்கின்றன. வினையெச்சங்கள் நவதானிய உணவு மாவுக்கலவையில் நனைத்த விதத்தில் மலிவாகவும், முழுக்கக் கொழுப்புடனும் இருக்கின்றன. வினைச்சொற்கள் மனதிற்கு நெருக்கமானவை. அனிடா மூன்று வகைகளை மட்டுமே பொறிப்பது வழக்கம்.
மறக்கப்பட்ட, அந்தக் கிழிசல் மனிதர்கள் எலுமிச்சையும், கொத்தமல்லியும் கலந்த அளவில் பளபளத்தொளிர்ந்து, வாய்க்குள்ளும், மூளைக்குள்ளுமாய் வெடித்துச் சிதறும் வினைச்சொற்களுக்காய்த் தங்கள் பாக்கெட்டிலுள்ள நாணயங்களையெல்லாம் காலி செய்து விடுகிறார்கள்.
எதிர்கால வினைமுற்று வெள்ளைப்பாகுகள், கரிய விழிகளைக் கொண்ட இளை ஞர்களுக்குக் காதல் கவிதைகளில் தங்கள் ரகசிய இதயங்களை எழுதும் இளம் பெண்களின் கைகளைத் தேடியடைந்து இடம் பிடித்துக்கொண்டன.
ஆச்சரியக்குறிகள் அவர்கள் இன்னமும் வாங்குமளவு வளர்ந்துவிடாத தொலைவிலுள்ள சிகரெட் பாக்கெட்டுக்களிலிருந்து காப்பாற்றப்பட்டதாகின.
ஆனால், நடுத்தர வயது பெண்களிடம் தான் அவள் அந்த மூன்றாவது ரகத்தை விற்பனை செய்கிறாள். நினைவு கூறப்பட்ட காதலர்களின் குளிர்மையில் நிறமற்று சுருண்டு கொள்வதான, மரிக்கும் தறுவாயிலுள்ள ரோஜா இதழ்களாய் வெப்பத்தின் பிடியில் சிக்கிக்கொண்ட ‘நிபந்தனை வினைச் சொற்கள்’. சில பெண்கள் அவளை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை; அவர்கள் தங்களுடைய ரகசிய ‘வாங்கல்களை முடித்துக்கொண்டு சூடான முறுமுறு பிஸ்கெட்டுகளின் உப்புச்சப்பு வாடைக்குள் மறைந்து போய் விடுகிறார்கள். மற்றவர்கள், அவர்களுடைய கண்கள் விலையுயர்ந்த ஸ்படிகக்கற்கள், இழப்புணர்வுகள் மற்றும் தோல் பர்ஸுகளைக் கொண்ட இடைபாதைகளின் வழியாய் கண்கள் தழைந்தோட தன்னிலை விளக்கங்கள் அளிக்கிறார்கள்.
அவர்களுடைய பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் இன்னமும் பேசிக் கொண்டிருக்கையிலேயே, அனிடா அவர்களைத் தாண்டி அடுத்த வாடிக்கையாளரை நோக்குகிறாள். இன்னும் வேறு சிலர் எதிர்ப்புணர்வோடு பட்டியல்களும், காகிதச்சீட்டுகளும் நிரம்பிய காற்சட்டைப்பையிலிருந்தும், சட்டைப்பையிலிருந்தும் கசங்கிச் சுருண்டிருந்த டாலர் நோட்டுக்களை வெளியே எடுக்கிறார்கள்.
இந்தப் பெண்கள் எல்லோரையுமே அவர்கள் மேம்போக்கானவர்கள் என்று அனிடாவால் கூறிவிட முடியும். ஏனெனில், அவர்களுடைய கண்கள் அவர்களுடைய கதைகளை, வார்த்தைகளைவிட மிக அதிகளவு துல்லியமாகச் சொல்லுகின்றன. ஆனால், அவள் அப்படிக் கூறவில்லை.
••
நன்றி: அட்சரம் இலக்கிய இதழ்.
புத்தக வெளியீட்டுவிழா
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 மாலை எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நேரலையில் நடைபெறவுள்ளது. அதன் அழைப்பிதழைப் பகிர்ந்திருக்கிறேன்.
விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இந்த நேரலை நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
ஸ்ருதி டிவி யூடியூப் பக்கம் மற்றும் ஸ்ருதி டிவி முகநூல் பக்கத்தில் இந்த நேரலை ஒளிபரப்பாகும்.

December 16, 2020
இலக்கியப் பேருரை
டிசம்பர் 18 வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு பி ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் கிரேக்க நாடகமான ஈடிபஸ் குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன்

சிறிய இடம் என்பதால் குறைவான நபர்களே கலந்து கொள்ள முடியும், ஆகவே முன்பதிவு செய்தல் அவசியம்.
9042461472 தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முகவரி
பி ஃபார் புக்ஸ் எஸ் ஜிபி நாயுடு காம்ப்ளெக்ஸ் தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம்
பாரதியார் பார்க் எதிரில் வேளச்சேரி சென்னை 31
December 14, 2020
நேரலை நிகழ்ச்சி

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா தேசாந்திரி பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது.
வழக்கமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழா இந்த ஆண்டு கரோனா காரணமாக அரங்க நிகழ்வாக நடைபெறவில்லை.
ஆகவே டிசம்பர் 25 மாலை நாலரை மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து ஸ்ருதி டிவி நேரலை நிகழ்ச்சியின் மூலம் புத்தக வெளியீடு மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் விருப்பமான வாசகர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம்.

நேரலை விபரங்கள் குறித்து கூடுதல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
December 13, 2020
நூலக மனிதர்கள் 29 கதையும் திரையும்.

ஒரு திரைக்கதையை எழுதுவதற்காகத் தான் ரவிச்சந்திரன் பொதுநூலகத்திற்கு வருகை தர ஆரம்பித்தான். அவனைப் போன்ற உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் எழுதுவதற்கான இடம். பூங்காவில் அமர்ந்து எழுத முடியாது. எந்த நேரமும் ஆள் நடமாட்டம் சப்தம் இருக்கும். தனியே அமர்ந்து எழுதுவதற்கு இவ்வளவு பெரிய நகரில் இடமே கிடையாது.
நூலகத்தில் தேவையான புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் கேள்வி கேட்கமாட்டார்கள். சில நேரம் அவனைப் போன்ற உதவி இயக்குநர்கள் யாராவது வந்து சேர்ந்துவிட்டால் ஒன்றாகத் தேநீர் குடிக்கலாம். சேர்ந்து சாப்பிடப் போகலாம். சினிமா உதவி இயக்குநர்களுக்குப் பொதுநூலகங்கள் தான் ஒரே புகலிடம்.
சினிமாவின் மற்ற துறைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை எழுதுவதற்கு எந்தப் பயிற்சியும் கிடைப்பதில்லை. இன்றிருப்பது போல அன்று திரைப்படப்பள்ளிகள் தனியார் நிறுவனங்களும் கிடையாது.
திரைப்படம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றித் திரைக்கதையை கற்றுக் கொள்வதே ஒரே வழி. அதுவும் இயக்குநர் திரைக்கதையின் ரகசியங்களைக் கற்றுத் தர மாட்டார். நாமாகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான். ஆகவே ரவிச்சந்திரன் இவ்வளவு ஆயிரம் புத்தகங்கள் உள்ள நூலகத்தில் திரைக்கதை எழுத வழி கிடைக்காதா என்று முட்டி மோதிக் கொண்டிருந்தான்.
திரைத்துறையில் ஆண்டுக்கு ஐநூறு கோடிக்கும் மேல் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் திரைக்கலையைப் பயில விரும்புகிறவர்களுக்கு எனத் தனி நூலகம் கிடையாது. வழிகாட்டும் நூல்கள் கிடையாது. திரைப்படத்துறையின் சார்பிலே அது போன்ற பெரிய நூலகமும் திரையிடலும், இலவச திரைக்கல்வியும் பயிற்றுவிக்கலாம் தானே.
1990களின் துவக்கத்தில் ரவிச்சந்திரன் சினிமாவில் சேருவதற்காகச் சென்னைக்கு வந்து சேர்ந்தான். ஒரு புது இயக்குநரிடம் சேருவதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நான்கு நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கியிருந்தான். அதற்கு மாதம் நூறு தர வேண்டும். சாப்பாட்டுச் செலவு, பயணம், டீ சிகரெட் என இன்னும் முந்நூறு தேவைப்படும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடையாது. கடன் வாங்கித் தான் வாழ்க்கையை ஒட்டினான்.
அவனைப் படம் பண்ணச் சொல்லி ஒரு தயாரிப்பாளர் முன்வந்திருந்தார். அவர் திருப்பூரைச் சேர்ந்தவர். வெளிநாட்டு ஏற்றுமதி செய்கிறவர். அவர் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ரவிச்சந்திரன் அறையில் தான் தங்கிக் கொள்வார். ரவிச்சந்திரன் சாப்பிடும் மெஸ்ஸில் தான் சாப்பிடுவார். டவுன்பஸ்ஸில் தான் போய்வருவார்.
இப்படி இருப்பவர் எப்படிப் படம் எடுப்பார் என்று ரவிச்சந்திரனிடம் கேட்டேன்
அவருக்கு எண்பது லட்சம் பணம் வரவேண்டியது இருக்கு. அது வந்தவுடனே படம் ஆரம்பிச்சிர வேண்டியது தான்
இப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு வருஷத்தை அந்தத் தயாரிப்பாளர் கடத்திக் கொண்டு போனார். அவர் தன் சொந்தவேலைகளை முடிக்க ரவிச்சந்திரனை பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை. இது ரவிச்சந்திரனுக்கும் தெரிந்திருக்ககூடும். ஆனாலும் எப்படியாவது எண்பது லட்சம் கைக்கு வந்து படத்தை ஆரம்பித்துவிடுவார் என்றொரு ஆசை மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது.
ரவிச்சந்திரன் இவருக்காக முதலில் ஒரு காதல் கதைக்குத் திரைக்கதை வடிவம் எழுத ஆரம்பித்தான். நூலகத்திலிருந்து சிறுகதைத் தொகுப்புகளாக எடுத்து வந்து படிப்பான். அதில் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளைத் தனது நோட்டில் குறித்துக் கொள்வான். மாலை நேரம் அவனது நண்பன் சேகரைச் சந்தித்து அன்று படித்த கதையினை எப்படி மாற்றம் செய்து திரைக்கு ஏற்ப காட்சியாக்குவது என்று விவாதிப்பான். இப்படித் தினமும் ஒன்றிரண்டு காட்சிகளை அவன் சேகரித்துக் கொண்டிருந்தான்
[image error]
ஒரு நாள் என்னிடம் குறுகிய வழி நாவலைப் படித்துக் கண்ணீர்விட்டதாகவும் அதைத் திரைப்படமாக்க நினைத்திருப்பதாகச் சொல்லி அதற்கு யாரிடம் உரிமை பெற வேண்டும் என்று கேட்டான்.
அது ஆந்த்ரே ழீடு எழுதிய பிரெஞ்சு நாவல் க.நா.சுப்ரமண்யம் மொழியாக்கம் செய்திருக்கிறார். க.நா.சு டெல்லியில் வசிக்கிறார் என்றேன்.
அப்படியானால் அவரைத் தேடிப்போய்ப் பார்த்து உரிமை வாங்க இயலாது. ஒரு Thanks card போட்டுவிடுகிறேன் என்று சொல்லி ஆசையாக அதற்குத் திரைக்கதை எழுதினான்.
அன்றாடம் நூலகத்தில் வைத்து காட்சிகளை எழுதுவான். ஒரு நாள் எழுதிய காட்சி ஒன்றைப் படித்துக் காட்டினான். அதில் குறுந்தொகை பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது .காதல் சுவையைக் கூட்டுவதற்காக அப் பாடலை சேர்ந்து இருப்பதாகவும் அதைத் தனியே இசையமைத்து சேர்க்கவுள்ளதாகவும் சொன்னான்
குறுகிய வழிக்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளர் வெறும் காதல்கதை போதாது என்று சொன்னதால் அதில் ஒரு கொலை மற்றும் துப்பறியும் விஷயங்களைச் சேர்க்கப் போவதாகச் சொன்னான். இதற்காக நூலகத்திலிருந்த பெரிமேசன் துப்பறியும் புத்தகங்களைத் தீவிரமாகப் படித்தான்.
சில நாட்களில் ஒரு கொலை ரெடியானது. கூடவே அதைக் கண்டுபிடிக்கப் போகும் துப்பறியும் நிபுணரும் ரெடியானார். இப்போது கதையில் இரண்டு ஹீரோ. துப்பறியும் நிபுணராகப் புதுமுகத்தைப் போட்டுவிடலாம் என்று சொன்னான் ரவிச்சந்திரன். குறுகிய வழியில் ஒரு கொலை என்று தலைப்பும் வைத்துக் கொண்டான்.
தனது திரைக்கதையோடு அவன் திருப்பூர் புறப்பட்டுப் போனான். ஒரு வார காலத்தின் பின்பு திரும்பி வந்து துப்பறியும் கதையை மட்டும் வைத்துக் கொண்டு குறுகியவழியின் காதல் கதையை நீக்கிவிடப் போவதாகவும் அதற்குப் பதிலாகக் கிராமத்திலுள்ள சாதிப் பிரச்சனையை முன்வைத்து புதிய திரைக்கதையை எழுத இருப்பதாகச் சொன்னான்.
இதற்காகக் கி.ரா. பூமணி, சூரியதீபன். மேலாண்மை பொன்னுசாமி எனத் தேடித்தேடிப் படித்தான். கிராமத்தில் நடைபெறும் துப்பறியும் கதையாகத் திரைக்கதை உருமாறியது. இந்த வடிவம் மிகவும் திருப்திகரமாக வந்துள்ளதாகச் சொல்லியபடியே தனது நண்பர்கள் பலருக்கும் அதை வாசிக்கத் தந்தான்
திருப்பூர் தயாரிப்பாளர் தாமதமாகவே வேறு இரண்டு தயாரிப்பாளர்களிடம் சென்று தனது கதையைச் சொல்லியும் வந்தான். அவர்களுக்குக் கதை பிடிக்கவில்லை. இரண்டு மாத காலத்தில் அவனுக்கே தனது திரைக்கதையைப் பிடிக்காமல் போனது. அதை அப்படியே போட்டுவிட்டு இந்த முறை புதுமைப்பித்தனின் துன்பக்கேணியினைப் பீரியட் படமாக எடுக்கலாம் என்று அதற்குத் திரைக்கதை எழுத ஆரம்பித்தான்.
தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்று வந்த குடும்பங்களைப் பற்றிக் கள ஆய்வு செய்யப்போவதாகச் சொல்லி மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று வந்தான்.
எப்படியாவது ஒருமுறை இலங்கைக்குப் போய் வந்துவிட்டால் திரைக்கதை முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தான். ஆனால் இந்தக் கதையை அவனது நண்பர்களுக்கே பிடிக்கவில்லை. இது கமர்சியலாக வரவில்லை. ஆகவே எந்த ஹீரோவும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அவனிடம் சொன்னார்கள். அவனுக்கும் அது நிஜம் என்று புரிந்தது. ஆனாலும் அந்தத் திரைக்கதையோடு திரைப்பட நிறுவனங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தான். ஒன்றும் நடக்கவேயில்லை. நிராகரிப்பு மட்டுமே மிச்சம்.
இந்தக் கதை மலையாளத்திற்குப் பொருத்தமானது என்று யாரோ சொல்லிவிடவே கொச்சிக்குச் சென்று ஒரு மாதகாலம் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுத் திரும்பிவந்தான். அந்த நாட்களில் நிறைய மலையாளம் படம் பார்த்தான். ஆகவே இனிமேல் புதியபாணியில் திரைக்கதை எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
தொடர்ந்த ஏமாற்றங்கள். கசப்பான அனுபவங்கள் அவனை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன. நூலகத்திற்கு வந்தால் நியூஸ் பேப்பர் தவிர வேறு எதையும் படிக்க மாட்டான். அடிக்கடி சிகரெட் பிடிக்க வெளியே எழுந்து போய்விடுவான். பல நாட்கள் மதியம் சாப்பிட மாட்டான். ஒரு நாள் பட்டினத்தார் பாடல்களை நோட்டில் எழுதிக் கொண்டிருந்தான். அதன்பிறகு அவனைப் பொதுநூலகத்தில் காணவில்லை.
அவனது நண்பனிடம்என்ன ரவியை ஆளக் காணவேயில்லை என்று ஒரு நாள் கேட்டேன்
அவனுக்குப் போன வாரம் கல்யாணம் ஆகிருச்சி , ஊர்லயே செட்டில் ஆகிட்டான் என்றான் அந்த நண்பன்
அப்போ சினிமா
அதெல்லாம் அவ்வளவு தான். மாமனார் லாரிகம்பெனி வச்சிருக்கார். அதுலயே வேலை செய்யப்போறானாம்.
அதன்பிறகு ரவிச்சந்திரனைப் போலவே வேறு உதவி இயக்குநர்கள் நூலகத்தில் அமர்ந்து திரைக்கதைக்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு நாள் ரவிச்சந்திரனை திரும்பவும் பொது நூலகத்தில் கண்டேன். ஆள் உருமாறியிருந்தான். கோரையான தாடி. தூக்கமில்லாத கண்கள். சட்டையில் சிகரெட் பாக்கெட். தீப்பெட்டி.
என்ன ரவி.. எப்படியிருக்கே. கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கு என்று கேட்டேன்
செட் ஆகலைண்ணா. வொய்போட சண்டை போட்டு வந்துட்டேன். என்னை மாதிரி கலைஞனுக்கு லாரிகம்பெனி வேலை எப்படி ஒத்துவரும். என் பொண்டாட்டி சினிமாக்காரன்னாலே கேவலமாக நினைக்குறா. மாமனார் பெரிய இம்சை. அதான் கிளம்பி வந்துட்டேன். ஊர்ல இருக்கும் போது நாட்டியக்காரினு ஒரு உருது நாவல் படிச்சேன். செமையான கதை. அதுக்குத் திரைக்கதை எழுதிகிட்டு இருக்கேன். இந்தக் கதையைப் படமாக்கினால் நிச்சயம் சில்வர் ஜுப்ளி தான்.
அதன்பிறகு ரவிச்சந்திரன் எப்போதும் போலக் காலை முதல் மாலை வரை நூலகத்தில் அமர்ந்து நாட்டியக்காரிக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் என்னிடம்Umrao Jaan படம் பாத்து இருக்கீங்களா என்று கேட்டான்.
[image error]
ரேகா நடிச்ச படம் தானே. பாத்து இருக்கேன் என்றேன்
அந்த படத்தோட கதை தான் நான் படிச்ச உருது நாவல். அது தெரியாமல் அதுக்கு உட்கார்ந்து ஸ்கிரீன் பிளே எழுதிகிட்டு இருக்கேன். நேத்து தான் நம்ம சேகர் சொன்னான். அந்தப் படம் ஹிட்டாண்ணா
ஆமா. பாட்டு ரொம்ப நல்லா இருக்கும் என்றேன்
இப்போ என்ன செய்றது. எழுதுனது எல்லாம் வேஸ்டா
எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. ரவிச்சந்திரன் ஒரு சிகரெட் பற்றவைத்தபடியே சொன்னான்
நம்ம நேரம் சரியில்லை. பேசாமல் குறுகிய வழி ஸ்கிரிப்டை திரும்ப எடுக்க வேண்டியது தான். அந்தக் கொலை கிலை எல்லாம் தூக்கிட்டு வெறும் லவ் ஸ்டோரியா சொன்னா ஒடும்
நானும் தலையாட்டிக் கொண்டேன். ரவிச்சந்திரன் சில நாட்களில் ஊருக்கு திரும்பிப் போய்விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். அதன்பிறகு அவனைப் பார்க்கவேயில்லை.
ரவிச்சந்திரன் அமர்ந்து எழுதும் நாற்காலியில் வேறு ஒரு இளைஞன் புதிய கனவோடு எதையோ எழுதிக் கொண்டிருந்தான். சென்னைக்கு வந்து தன் கனவுகளைத் தொலைத்து ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிப் போனவர்களில் ரவியும் ஒருவனாகிப் போனான். ஆனால் அன்று துவங்கி இன்றுவரை சினிமா உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் ஒரே ஆறுதலான இடமாகயிருக்கிறது.
ரவி இப்போது லாரிக்கம்பெனியில் வேலை செய்கிறானா அல்லது வேறு ஏதாவது தொழில் செய்கிறானா எனத் தெரியாது. ஒருவேளை சொந்த ஊரில் உள்ள நூலகத்தில் அமர்ந்து இன்றும் ஏதாவது புதிய திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கக் கூடும்.
**
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
