S. Ramakrishnan's Blog, page 149
January 2, 2021
மூன்றாம் நாள் உரையின் முன்னோட்டம்
உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றும் பேருரைகளில் மூன்றாவது உரை இன்று மாலை ஒளிபரப்பாகிறது
அதன் முன்னோட்டம்

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021
அரூ இணையதளம் அறிவித்துள்ள அறிவியல் சிறுகதைப் போட்டி.
கடந்த இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 அறிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும்.

போட்டியின் விதிமுறைகள்
அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.
வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம்.
போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையதளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தர வேண்டும். இச்சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தப்படாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மொழிபெயர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்குபெறலாம். வயது வரம்பும் கிடையாது. ஒருவர் இரண்டு சிறுகதைகள் மட்டுமே அனுப்பலாம். அதற்கு மேல் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
சென்ற ஆண்டுகளில் பரிசு வென்ற எழுத்தாளர்களைத் தவிர மற்ற அனைவரும் பங்கு பெறலாம் (சுசித்ரா, நகுல்வசன், ரா.கிரிதரன், ஆர். ராகவேந்திரன், தன்ராஜ் மணி, கவிஜி, கோ.கமலக்கண்ணன்).
எழுத்தாளர்கள் தங்களது சரியான பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றைச் சிறுகதைகள் அனுப்பும்போது தனியாகக் குறிப்பிட வேண்டும்.
பரிசுக்குரிய கதைகளை அரூ குழுவும் நடுவரும் பரிசீலித்துத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களின் தீர்ப்பே இறுதியாகும்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளை அச்சு வடிவிலும் கிண்டில் புத்தகமாகவும் பதிப்பிக்கும் உரிமை அரூ இதழுக்கு உண்டு.
கதைகளை 1 மார்ச் 2021 ஆம் தேதிக்குள் aroomagazine@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
இரண்டாம் நாள் பேருரை – தாரஸ்புல்பா
ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றும் பேருரைகளின் இரண்டாம் நாள் உரை.
ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
இரவெல்லாம் சூதாடுகிறவள்
ஃப்லிம் நுவார் (Film noir) திரைப்படங்களின் அழகியல் மிகவும் தனித்துவமானது. அவற்றை வெறும் திரில்லர் படங்கள் என்று வகைப்படுத்திவிட முடியாது.

ஃப்லிம் நுவார் என்பது ஃப்ரெஞ் சொல். இதன் பொருள் இருண்ட உலகைச் சித்தரிக்கும் படம் என்பதாகும். நுவார் திரைப்படங்களில் கேமிராக் கோணங்கள் – இசை – பின்புலம் மிகவும் புதுமையாகயிருக்கும். லோ ஆங்கிள் காட்சிகளைத் திரையில் இத்தனை அழகாகக் காட்டமுடியுமா என்று பிரமிப்பாக இருக்கும்.
குற்றவுலகின் இயல்பினை விவரிக்கும் இந்த வகைப்படங்கள் நாம் பார்த்தறியாத நிழல் மனிதர்களை, விசித்திரமான குற்ற நிகழ்வுகளை, அதன் பின்னுள்ள மனநிலையைத் திரையில் வெளிப்படுத்துகின்றன.
நுவார் படங்களின் நாயகர்கள் பெரும்பாலும் அந்நியர்கள். அவர்கள் வெளியிலிருந்து வருபவர்கள். தற்செயலாகவோ, திட்டமிட்டோ குற்றவுலகிற்குள் நுழைகிறார்கள். சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்தப்படங்களில் தீமை செய்யும் கதாபாத்திரங்களுக்கும் குடும்பமிருக்கும். வீட்டில் அவர்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவார்கள். மனைவியுடன் ஷாப்பிங் செல்லுவார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள். இப்படிக் குற்றவாளிகளின் இயல்புலகத்தை மாறுபட்ட விதத்தில் சித்தரிக்கின்றன.
படத்தின் கதாநாயகனை நல்லவன் என்று நம்மால் வரையறை செய்ய முடியாது. சந்தர்ப்பமே அவனை வழிநடத்துகிறது. பல நேரம் கதையின் முடிவில் தீமையே வெல்கிறது. கதாநாயகனே காட்டிக் கொடுக்கிறான். கொலை, கொள்ளை என்பதையெல்லாம் இப்படங்களில் சர்வ சாதாரணமாகத் திட்டமிடுகிறார்கள். செயல்படுத்துகிறார்கள்.
துப்பறியும் நிபுணர் பல நேரங்களில் தோற்கடிக்கப்படுகிறார். கவர்ச்சியான, சூழ்ச்சியான பெண் கதாபாத்திரங்களே அதிகம் இடம்பெறுகிறார்கள். அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் தயங்குவதில்லை. இது போலவே சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய காவலர்கள் களவிற்கு உடந்தையாக இருக்கிறார்கள். அல்லது அவர்களே குற்றம் செய்கிறார்கள்

இப் படங்கள் இரவு வாழ்க்கையை விசித்திரமாகக் காட்டுகின்றன. குறிப்பாக நீளும் நிழல்கள் உலவும் வீதிகள். பாதி இருட்டு கொண்ட அறைகள். உன்னதச் சங்கீதம் கேட்கும் மதுவிடுதிகள். பிரகாசமாக எரியும் தெருவிளக்குகள். இருண்ட குடோன்கள். துறைமுகங்கள். அழகான உடை அணிந்த கொலையாளிகள் என அந்த உலகம் முற்றிலும் புதியது.
குற்றத்தைத் திட்டமிடுகிறவர்கள் சதா குடித்துக் கொண்டும் சாப்பிட்டபடியும் இருக்கிறார்கள். திடீரென அவர்கள் காரில் கிளம்பிப் போவதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் சந்தேகப்படுவது, காட்டிக் கொடுப்பது, கொலை செய்வது இயல்பாக நடந்தேறுகின்றன.
1940 துவங்கி 1958 வரை நுவார் படங்கள் ஹாலிவுட்டில் பெரும் புகழ் பெற்றிருந்தன. இதன் பாதிப்பு ஜப்பானிய சினிமாவிலும் எதிரொலித்தது. இன்று வரை நுவார் படங்களின் மாறுபட்ட வகைமைகள் உருவாக்கபட்டே வருகின்றன.
Femme Fatales என்றழைக்கபடும் கவர்ச்சியான, சூது செய்யும் பெண்கள் இப்படங்களில் இடம்பெறுகிறார்கள் அவர்கள் ஆபத்தைத் தேடிச் செல்பவர்கள். காதலிப்பது போல நடித்து ஏமாற்றுகிறவர்கள். பணத்திற்காகக் கொலையும் செய்பவர்கள்.
இந்த நுவார் புகைப்படங்களில் ஒன்று தான் The Lady Gambles

1949 ஆம் ஆண்டுப் படமாகும், மைக்கேல் கார்டன் இயக்கியது
படத்தின் துவக்கத்திலே ஒரு பெண் சிலரால் மிக மோசமாகத் தாக்கப்படுகிறாள். மயங்கிக் கிடந்த அவளைக் காவலர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு போகிறார்கள். அங்கே வரும் பத்திரிக்கையாளர் டேவிட் பூத் அந்தப் பெண் தனது மனைவி ஜோன் என்று சொல்லி அவளது கடந்தகாலக் கதையை நினைவு கொள்ள ஆரம்பிக்கிறான்.
சிகாகோவைச் சேர்ந்த டேவிட் பூத் தனது மனைவி ஜோனுடன் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.. அங்குள்ள கேசினோ ஒன்றுக்குச் செல்லும் ஜோன் ரகசியமாக அங்கு நடப்பதைப் புகைப்படம் எடுக்க முயல்கிறாள். அதை அறிந்த கேசினோ உரிமையாளர் காரிகன் அவளைத் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்கிறான். அவள் உண்மையை வெளிப்படுத்தவே பறிமுதல் செய்யப்பட்ட அவளது கேமிராவை ஒப்படைக்கிறான்.
ஜோனுக்குச் சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வமிருப்பதைக் காரிகன் அறிந்து கொள்கிறான். மறுமுறை கேசினோவிற்கு வருகை தரும் ஜோனுக்கு உதவிகள் செய்கிறான். அன்று ஜோன் சூதாட்டத்தில் 600 டாலர்களை இழக்கிறாள். அந்தப் பணம் போன ஏமாற்றத்தில் எவரிடமாவது கடன் வாங்கி மீண்டும் சூதாடத் துடிக்கிறாள். இதற்காகக் காரிகனிடம் கடன் கேட்கிறாள். அவன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லித் துரத்திவிடுகிறான். அவள் பணம் கேட்டு மன்றாடுகிறாள். வேறுவழியின்றிக் கேமிராவை விற்றுப் பணம் பெறுகிறாள்.

எதிர்பாராமல் சூதாட்டத்தில் வெற்றி அவள் பக்கம் திரும்புகிறது. இழந்த பணத்தை மீட்கிறாள். அன்றிலிருந்து சூதாட்ட விடுதியே வாழ்க்கை என உருமாறுகிறாள். அவளைப் பயன்படுத்திக் கொள்ளும் காரிகன் பணக்காரர்களுடன் நடக்கும் தனிப்பட்ட சீட்டு விளையாட்டில் அவளைக் கலந்து கொள்ள வைத்து இரவு முழுவதும் சீட்டு விளையாட வைக்கிறான்.
அதில் நிறையப் பணம் சம்பாதிக்கிறாள். பணம் கிடைத்தவுடன் அவளது வாழ்க்கை மாறுகிறது. நடவடிக்கைகள் மாறுகின்றன. இரவில் சூதாடுவதால் பகலில் உறங்குகிறாள். ஆடம்பரமான உடைகள் வாங்குகிறாள். கணவனுக்குத் தெரியாமல் அவள் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுகிறாள்.
ஒரு நாள் இதை அறிந்து கொண்ட டேவிட் பூத் அவளைப் பின்தொடர்ந்து கண்காணித்து உண்மையை அறிந்து கொள்கிறான். அவள் சீட்டு விளையாட்டில் தோற்றுக் களைத்துப் போய்த் தனியே அமர்ந்திருக்கிறாள்.
அவளை அழைத்துக் கொண்டு மெக்சிகோவுக்கு இடம் மாறிப் போய்விடுகிறான் டேவிட். அங்கே கணவனுடன் புதிய வாழ்க்கையை வாழுகிறாள் ஜோன். மகிழ்ச்சியான நாட்கள். ஒன்றாகக் கடற்கரையில் நீந்திக் களிக்கிறார்கள்.
ஆனால் எதிர்பாராமல் மறுபடியும் சூதாட்ட வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறாள். இந்த முறை அதிர்ஷ்டம் அவளுக்குக் கைகொடுக்கவில்லை. சூதின் வலையில் சிக்கிக் கொண்டதன் விளைவாக அவள் சிலரால் தாக்கப்படுகிறாள். அவளது முடிவு என்னவானது என்பதே படத்தின் மீதக்கதை.
தஸ்தாயெவ்ஸ்கி தனது சூதாடி நாவலில் சூதாட்டத்தின் பின்னுள்ள வசீகரத்தை, ஏமாற்றத்தை, விடுபட முடியாத பதற்றத்தைத் துல்லியமாக எழுதியிருப்பார். அப்படி ஒரு சூதாடியாகவே ஜோன் சித்தரிக்கப்படுகிறாள்.
மரபான ஹாலிவுட் படங்களின் கதாநாயகிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜோன். நுவார் படங்களின் கதாநாயகி எப்படியிருப்பார் என்பதற்கு ஜோன் சிறந்த உதாரணம். கேசினோவில் அவள் நடந்து கொள்ளும் விதமும், தனிப்பட்ட சீட்டாட்ட நிகழ்வில் வெற்றி பெறும் போது ஏற்படும் சந்தோஷமும் மிக அழகாக வெளிப்படுத்தப்படுகின்றன.
டேவிட் பூத் தன் மனைவியை இரவில் சூதாட்ட க்கூடத்தில் தேடி அலையும் போது அவளைப் போலப் பல பெண்கள் இரவெல்லாம் சூதாடுவதைக் காணுகிறான். என்ன உலகமிது என்று குழப்பம் அடைகிறான். ஊரெங்கும் சூதாட்ட விடுதிகள். இரவெல்லாம் சூதாடுகிறவர்கள்.

தோற்றுப்போய்த் தனியே உட்கார்ந்திருக்கும் ஜோனைக் கண்டதும் அவன் வருத்தமே அடைகிறான். ஆறுதலாகப் பேசி தன்னுடன் அழைத்துப் போகிறான்.
அவர்கள் திருமண வாழ்க்கை சூதாட்டத்தால் சீர்கெடுகிறது. பல நேரம் ஜோனைக் கண்டித்த போதும் அவள் மீது அன்பு கொண்டவனாகவே டேவிட் நடந்து கொள்கிறான். தனது மொத்த சேமிப்பை அவள் சூதாட்டத்தில் விட்டபிறகே அவளை விட்டு ஒதுங்குகிறான்.
ஏதோ ஒருவகை வெறி அவளைப் பற்றிக் கொண்டிருப்பது போலவே ஜோன் நடந்து கொள்கிறாள். அவளாக விரும்பினாலும் சூதாடுவதிலிருந்து விடுபட முடியவில்லை. ஒரு குற்றம் அடுத்த குற்றங்களுக்கு அழைத்துச் செல்லும் என்பது ஜோன் விஷயத்தில் உண்மையாகிறது. போதை அடிமையைப் போல அவளுக்குக் கைகள் நடுங்குகின்றன. பதற்றம் கொள்கிறாள். பகடையை அவள் வீசி எறியும் போது அதிர்ஷ்ட தேவதை தன் தோளில் கையைப் போட்டிருப்பது போலவே நினைக்கிறாள்.
கேசினோ உரிமையாளர் காரிகன் முதல் சந்திப்பிலே அவளது உள் நோக்கத்தை உணர்ந்து கொண்டுவிடுகிறான். அவளைப் பயன்படுத்தி அவன் பெரும்பணம் சம்பாதிக்கிறான். அவனுக்கு ஜோன் ஒரு பகடைக்காய் மட்டுமே.
தான் செய்வது தவறு என்று ஜோன் உணரவேயில்லை. அவளிடம் குற்றவுணர்ச்சியே கிடையாது. அவள் மிகுந்த விருப்பத்துடன், வேகத்துடன் சூதில் ஈடுபடுகிறாள். அதிர்ஷ்டம் தன் பக்கம் இருப்பதாக நம்புகிறாள். அது தான் அவளது பலவீனம். தோற்றுப்போன தருணத்திலும் தன்னிடம் விளையாடப் பணமில்லையே என்று தான் ஏங்குகிறாள். வருந்துகிறாள்.
சூதாட்டத்தின் முன்பு ஆண் பெண் என்ற பேதமில்லை. ஒரு வெற்றி அடுத்தடுத்த தோல்விகளுக்கு வழிவகுக்கும் எனச் சூதாடிகள் அறிந்தும் அதை விட்டு விலகுவதில்லை. அவர்கள் கற்பனையில் வாழுகிறார்கள். விழித்தபடியே கனவு காணுகிறார்கள். உண்மையை உணரத்துவங்கும் போது வாழ்க்கை அவர்கள் கதையை முடித்துவிடுகிறது
••
சுதந்திரமும் அன்பும்
இந்த மாத அந்திமழை இதழில் தந்தை மகன் உறவு குறித்து சிறப்பு பகுதி வெளியாகியுள்ளது. அதில் என் மகன் ஹரிபிரசாத் எழுதியுள்ள கட்டுரை
••••

சுதந்திரமும் அன்பும் – ஹரிபிரசாத்
பிற இல்லங்களில் இருப்பதுபோன்ற சராசரி அப்பா மகன் உறவு எங்கள் இல்லத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்பா ‘தேசாந்திரி’ என்பதால் சின்னவயதில் அவர் பெரும்பாலும் வெளியூர்ப் பயணங்களில் இருப்பார்.
எனக்கு தந்தையைப் பிரிந்திருப்பதன் கனம் அவ்வளவாகத் தெரியாது. அவர் வீட்டில் இருக்கும்போதுகூட கிரிக்கெட், ஷட்டில்காக் என விளையாடிக்கொண்டே இருப்பேன்.
சின்னவயதில் நாங்கள் குடியிருந்த வீட்டில் ஒரு கயிற்றுக்கட்டில் இருக்கும். அதில் படுத்துக்கொண்டு இரவெல்லாம் அவர் கதை சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த நினைவுதான் அப்பா என்றதும் பளிச்சென்று மனதில் நிற்கிறது.
அம்மாவை விட எனக்குப் பழகுவதற்கும் எதையும் சொல்வதற்கும் முதல் மனிதராக வீட்டில் இருப்பவர் அவரே. ஒன்றாக அமர்ந்து உலகசினிமாக்களைப் பார்ப்போம். ஆழமாக விவாதிப்போம். அவருடைய அணுகுமுறையும் என்னுடைய அணுகுமுறையும் வெவ்வேறு. அவர் எந்த படைப்பிலும் ஆழகான உள்ளடக்கம் இருக்கிறதா என்று பார்ப்பார். நான் அது எவ்விதம் படைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் பார்ப்பேன். நான் இயங்க விரும்பிய திரைத் துறையில் எனக்கு முதல் ஆசானாக, வழிகாட்டியாக அவரேஅமைந்துள்ளது பெரிய வரம்.
எல்லோரும் சொல்வார்கள் உங்கள் அப்பா பேசினால் அது கண்ணுக்குள் காட்சிகளாக ஓடும் என்று அப்பாவின் கதைகளைப் படிப்பதை விட அவர் சொல்லிக் கேட்பதில் சுவாரசியம் அதிகம். அவர் சொல்ல ஆரம்பித்த சில நிமிடங்களில் என் கண்முன்னால் காட்சிகள் விரிய ஆரம்பிக்கும். அவர் எழுதி பாதியில் விட்ட கதைகள், இன்னும் எழுத்தாக மாறாத கதைகள் என நிறைய அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவற்றைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
எனது ப்ளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு ஆண்டுகள் படிப்புக்காக ராஜபாளையத்தில் சித்தி வீட்டில் இருந்தேன். அப்போதுதான் அப்பா அருகில் இல்லாததன் சுமையை உணர்ந்தேன். வாய்ப்புக்கிடைக்கும்போது அல்லது வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவந்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய வகுப்பு மதிப்பெண் அறிக்கைகளை அவர் கவனித்ததே இல்லை. அப்படியே வாங்கி கையெழுத்திட்டு கொடுத்துவிடுவார். இந்த பள்ளிக்கல்வி என்பது அறிவுபுகட்டமட்டுமே. வேறொன்றும் இல்லை; மதிப்பெண்கள் பின்னால் அலையவேண்டியது இல்லை. வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவர்களை குறைந்த அல்லது நடுத்தர மதிப்பெண் எடுப்பவர்கள் பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்வார். நான் அவருடனே இருந்து கதைகள் சினிமா என வளர்ந்ததால் அது சார்ந்த படிப்பையே தெரிவு செய்தேன். அதிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறேன். எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கடுமையாக உழைக்கவேண்டும் என்பார்.
அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது அவருடைய திட்டமிடலும் ஒழுங்கும்தான். அன்றைன்றைக்கு என்னென்ன செய்யவேண்டும் எழுதவேண்டுமென திட்டமிட்டு செயல்படுவார். அதையே நானும் பின்பற்ற முயற்சித்து வந்திருக்கிறேன்.
கூடவே இருப்பதால் தந்தையின் எழுத்துலக உயரம் அவ்வளவாகப் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய வாசகர்கள் என்னை யார் என்று கேட்டு அறிந்தவுடன் அடையும் நெகிழ்ச்சி எனக்குப் பெருமையை அளித்திருக்கிறது. மதுரையில் புத்தகக் கண்காட்சி போட்டிருந்தோம். தேனியைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அப்பாவைத்தேடினார். அவர் எங்கோ போயிருந்த நிலையில் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். என் கைகளை இறுகக் பற்றிய நிலையில் கண்கள் கலங்க நின்றுகொண்டே இருந்தார். சிறுவயதில் வீட்டை விட்டு எங்கோ சென்றவர் அவர். அப்பாவின் எழுத்துகளால் பாதிக்கப்பட்டு, இப்போது முறையான வாழ்வுக்குத் திரும்பி இருப்பதாகச் சொன்னார்.
இன்னொரு பெண் வாசகர் தன் கணவருடன் வந்திருந்தார். அவர் அப்பாவின் மிக தீவிர வாசகி. என்னைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அப்பாவின் தலை தூரத்தில் தென்பட்டதும் அவர் கைகள் நடுங்க ஆரம்பித்து உணர்ச்சிப்பெருக்கில் கண்கள் குளமாகின. அவருக்கு தண்ணீர் கொடுத்தேன். அவரால் அதை வாங்க முடியாத அளவுக்கு அவர் கைகள் நடுங்கின. எந்த அளவுக்கு அவர் அப்பாவின் எழுத்துகளால் பாதிக்கப்பட்டிருப்பார் என உணர்ந்துகொண்டேன்.
அப்பா எப்போதும் என்னை கோபத்தில் அடித்ததே கிடையாது. குரல் மட்டும் மாறுபடும். அத்துடன் தன் ஆழமான பாச உணர்ச்சிகளை அவர் காட்டவே மாட்டார். நெகிழ்வான தருணங்களில் எங்களை அது பாதிக்கும் என்பதற்காக அவற்றை மறைத்துக்கொள்வார் என்றே கருதுகிறேன்.
அவர் எனக்கு அளித்திருப்பது முழுமையான சுதந்தரமும் அன்புமான இளமைக்காலம்!
– ஹரிபிரசாத், (எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மகன்)
(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)
நன்றி
அந்திமழை.
January 1, 2021
இரண்டு பரிசுகள்
ஒரு நண்பர் ரஷ்யாவிலிருந்து டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவச்சிலைகளை பரிசாக வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
எனக்கு விருப்பமான படைப்பாளிகள் எனது படிப்பறைக்கு வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்


இரண்டாம் நாள் உரை- தாரஸ்புல்பா
உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகளில் இன்று கோகோலின் தாரஸ்புல்பா பற்றி பேசுகிறேன்
ஸ்ருதி டிவி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்
மாலை 6 30 மணிக்கு ஒளிபரப்பாகும்

நாள் 1 மோபிடிக் உரை
ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றும் பேருரைகளின் முதல் நாள் உரை.
ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
December 31, 2020
இலக்கியப் பேருரை -முன்னோட்டம்
புத்தாண்டு தினமாகிய இன்று மாலை 6 30 மணிக்கு எனது உலக இலக்கியப் பேருரை ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்வு குறித்து ஸ்ருதி டிவி வெளியிட்டுள்ள முன்னோட்டம்
புத்தாண்டு வாழ்த்துகள்
அனைவருக்கும் மனம் நிரம்பிய புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த ஆண்டு உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறட்டும். புதிய செயல்கள் வெற்றி அடையட்டும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்
Ring Out, Wild Bell – Alfred Tennyson
Ring out, wild bells, to the wild sky,
The flying cloud, the frosty light:
The year is dying in the night;
Ring out, wild bells, and let him die.
Ring out the old, ring in the new,
Ring, happy bells, across the snow:
The year is going, let him go;
Ring out the false, ring in the true.
Ring out the grief that saps the mind
For those that here we see no more;
Ring out the feud of rich and poor,
Ring in redress to all mankind.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
