S. Ramakrishnan's Blog, page 146
January 16, 2021
சிறிய மனிதனும் பெரிய உலகமும்.
வில்லியம் சரோயன் (William Saroyan) எழுதிய தி ஹ்யூமன் காமெடி 1943ல் வெளியான சிறந்த நாவல். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கலிபோர்னியாவின் இதாக்காவில் கதை நிகழுகிறது. பதினான்கு வயதான ஹோமரைப் பற்றியதே நாவல்.

அவன் பகுதி நேரமாகத் தந்தி அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மா, சகோதரி பெஸ் மற்றும் தம்பி யுலிஸஸ் என அவனது உலகம் மிகச்சிறியது.
தந்தி அலுவலகத்தில் இரவு நேரம் தந்தி வந்தால் அதைக் கொண்டு கொடுப்பதற்கு ஆள் தேவை என்பதால் அவனைத் தற்காலிக பணியில் சேர்த்துக் கொள்கிறார்கள். வயதும் தகுதியும் இல்லாத போதும் அவனது கம்பீரமான தோற்றம் பணிவு காரணமாக வேலை கிடைத்துவிடுகிறது.
பிறந்த நாளுக்கு வாழ்த்து வரும் தந்தியைப் பாடலாகப் பாடிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. இதற்காக ஹோமர் பாடிக் காட்டுகிறான். அதை அலுவலகமே ரசிக்கிறது
ஹோமரின் தந்தை இறந்தபிறகு அம்மா குடும்பச் சுமையை ஏற்று நடத்துகிறாள். ஹோமரின் தம்பி நான்கு வயதான யுலிஸஸ், அப்பாவியான சிறுவன். ஆனால் சாகசங்களில் விருப்பம் கொண்டவன். பயமற்று துணிச்சலாக எதையும் செய்ய முற்படுகிறவன். நாவலின் துவக்கத்தில் அவன் கடந்து செல்லும் ரயிலுக்குக் கைகாட்டுகிறான். அந்த ரயிலில் எவரும் பதிலுக்குக் கைகாட்டவில்லை. இதனால் யுலிஸஸ் ஏமாற்றமடைகிறான்.
ரயிலில் ஊருக்குத் திரும்பிச் செல்லும் கறுப்பின இளைஞன் எதிர்பாராதவிதமாகத் தன் கைகளை அசைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துவதுடன் தான் வீடு திரும்பிக் கொண்டிருப்பதாகச் சப்தமாகச் சொல்கிறான். இந்தச் செய்கை யுலிஸஸை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

யார் இந்த இளைஞன். இத்தனை நாள் எங்கேயிருந்தான். இப்போது எந்த ஊருக்குச் செல்கிறான் என்று யூலிசிஸ் யோசிக்கிறான். அதைப் பற்றி அம்மாவிடம் சொல்கிறான். அவள் வீடு திரும்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள் என்கிறாள். யுலிஸஸிற்கு அது புரியவில்லை.
ஹோமரின் அண்ணன் மார்கஸ் ராணுவத்தில் பணியாற்றுகிறான். அவனது படைப்பிரிவு யுத்தமுனையில் செயல்படுகிறது. யுத்தகளத்தில் நிறைய வீரர்கள் இறந்து போகிறார்கள். அந்தத் துயரச் செய்தியைத் தந்தியாகக் கொண்டு போய்க் கொடுக்கும் ஹோமர் அதைத் தனது சொந்த துயரமாக நினைக்கிறான். அதுவும் மொழிதெரியாத பெண்ணிடம் துயரச்செய்தியை ஹோமர் பகிர்ந்து கொள்ள முற்படுவது உணர்ச்சிப்பூர்வமானது.
வேலை செய்து சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்பும் ஹோமர் பெரிய மனிதன் போலவே நடந்து கொள்கிறான். அம்மாவும் அவனைப் பெரியவன் போலவே நடத்துகிறான். படிக்க வேண்டிய வயதில் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி கொண்டவர்கள் துயரமானவர்கள். அந்த வயதிற்குரிய விளையாட்டுத்தனம் மறைந்து போய் அவர்களின் இயல்பு சட்டென மாறிவிடுகிறது. வறுமை ஒருவனை வயது மீறி நடந்து கொள்ளவைக்கிறது.
ஹோமர் அப்படித் தான் நடந்து கொள்கிறான். வீட்டின் பொருளாதாரத் தேவையைப் பகிர்ந்து கொள்வதில் அவனுக்குச் சந்தோஷம்.
இதாக்காவின் தந்தி நிலையத்தின் ஆபரேட்டராக உள்ள க்ரோகன் நீண்டகாலமாகப் பணியாற்றுகிறவர். திறமைசாலி. மிகுந்த அனுபவம் கொண்டவர். ஆனால் பெருங்குடிகாரர். போதையில் மயங்கியிருந்தால் தன் தலையில் தண்ணீர் ஊற்றி எழுப்ப வேண்டும். அத்தோடு ஓடிப்போய் சூடான காபி வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தால் இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன் என்கிறார் க்ரோகன். தன்னை வெளியே எங்காவது சந்திக்க நேர்ந்தால் கண்டு கொள்ளக்கூடாது என்றும் உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவுப்படியே நடக்கிறான் ஹோமர்
அவரோடு ஹோமருக்கு உள்ள உறவு தந்தை மகன் போலிருக்கிறது. எவ்வளவு போதையிலும் அவர் தந்தியைத் தவறாக எழுதுவதில்லை.அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆனாலும் மருத்துவர்கள் சொன்ன எச்சரிக்கையை அவர் கண்டுகொள்வதில்லை.
ஹோமரின் திறமையைப் புரிந்து கொண்டு அவனைப் பாராட்டுகிறார். அன்பு காட்டுகிறார். தந்தி நிலையத்தின் மேலாளராக இருப்பவர் ஸ்பாங்க்லர். அவருக்கும் ஹோமரை மிகவும் பிடித்துப் போகிறது. அவர் ஒரு தடை தாண்டி ஓடும் விளையாட்டு வீரர். ஆகவே அவரைப் போலப் பந்தயத்தில் ஒடி ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறான் ஹோமர்.
வீட்டில் ஹோமர் உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறான். அத்துடன் பள்ளியில் நடக்கும் ஒட்டப்பந்தயப் போட்டியில் அவன் கலந்து கொள்கிறான். அவனைப் பிடிக்காத ஆசிரியர் அதைத் தடுக்க முயல்கிறார். ஆனால் ஹோமர் முறையான காலணிகள் கூட இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு தடை தாண்டி ஓடுகிறான். முறையான பயிற்சி இல்லாத போதும் அவனால் முதலிடத்திற்குப் போட்டிப் போட்டு ஓட முடிகிறது.
தந்தி அலுவலகத்தில் இரவில் நடக்கும் நிகழ்வுகளைச் சரோயன் அழகாக விவரித்திருக்கிறார். ஹோமருக்கும் அவன் தம்பிக்குமான உறவும் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ஊர்சுற்றியலையும் யுலிஸஸ் வழியாகச் சிறார்களின் உலகம் நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது
தன் வயதுக்கு மீறிய விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஹோமர் தன்னைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் வழியே சுகதுக்கங்களைப் புரிந்து கொள்கிறான். அமைதியாக எதிர்கொள்கிறான். முடிவில் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் துயரத்தின் போது பெரிய மனித சுபாவம் அவனிடம் முழுமையாக வெளிப்படுகிறது. ஹோமர் இனி சிறுவனில்லை என்பதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.
வீட்டில், பணியிடத்தில் என ஹோமர் தன்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவிகள் செய்கிறான். மற்றவர்களின் சந்தோஷத்திற்காகப் பாடுபடுகிறான். அவனது கனவுகள், ஆசைகளை விடவும் மற்றவர்களின் விருப்பமே அவனுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது.
ஹோமரின் தந்தையைப் பற்றி நினைவுகளின் வழியே குடும்பத்தில் தந்தை இல்லாத வெற்றிடத்தை ஹோமர் பூர்த்தி செய்ய முயல்வதை உணர முடிகிறது.
ஒரு நாள் சாலையில் மூன்று ராணுவ வீரர்களைச் சந்திக்கும் ஹோமரின் சகோதரி பெஸ் மற்றும் தோழி அவர்களுடன் ஒன்றாகத் தந்தி அலுவலகம் போகிறார்கள். தம்பிக்கு வீட்டிலிருந்து கொண்டு போன உணவை தருகிறாள் அக்கா. பிறகு அந்த வீர்ர்களுடன் ஒன்றாகச் சினிமாவிற்குப் போகிறார்கள். பிரியும் போது ராணுவ வீர்ர்களுக்கு முத்தம் தருகிறார்கள். வீட்டைப் பிரிந்துள்ள அவளது அண்ணனும் இப்படித் தான் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருப்பான் என நினைக்கிறாள் பெஸ்.
லியோனலும் யுலிஸஸும் பொது நூலகம் ஒன்றுக்குள் செல்லும் காட்சி மிக அழகானது. அவர்கள் முதன்முறையாக நூலகத்திற்குள் செல்கிறார்கள் அவர்களுக்குப் படிக்கத் தெரியாத போது புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். நூலகர் அவர்களை உள்ளே அனுமதிக்கிறார். வியப்போடு புத்தக அடுக்கினை பார்வையிடுகிறார்கள். அது புதிய அனுபவமாகயிருக்கிறது.
வில்லியம் சரோயன் ஒரு ஆர்மீனியர், புகலிடம் தேடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். 1940 ஆம் ஆண்டில் நாடகத்திற்கான புலிட்சர் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது, மேலும் 1943 ஆம் ஆண்டில் அவரது ஹ்யூமன் காமெடி நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது சிறந்த கதைக்கான அகாடமி விருதைப் பெற்றார். அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சரோயனின் வாழ்க்கையே இந்த நாவலில் வெளிப்படுகிறது.
ஏன் இந்த நாவலில் கிரேக்கப் பெயர்கள், இடங்கள் இடம்பெறுகின்றன என்று வாசிப்பில் சந்தேகம் வரவே செய்கிறது. சரோயன் ஒருவேளை இந்தக் கதையைக் கிரேக்கத் தொன்மத்தின் நவீன உருவாக்கம் போலப் புனைந்திருக்கிறாரோ என்று யோசிக்கச் செய்கிறது. ஆனால் அப்படியான எந்த அறிகுறியும் இல்லை. ஒருவேளை இந்தக் கிரேக்கப் பெயர்கள் நினைவில் பதிந்து போனவை என்பதால் தன் நாவல் நினைவின் ஊசலாட்டத்தைச் சொல்வதால் இப்படிப் பயன்படுத்தியிருப்பாரோ என்னவோ.
இரண்டாம் உலகப் போரில் ஒரு சிப்பாய் வாழ்க்கை என்னவாகிறது என்று ஒரு தளத்திலும் சிறுநகர வாழ்க்கை எப்படியிருக்கிறது. அந்த நகரைப் போர் எப்படிப் பாதிக்கிறது என்பதை இன்னொரு தளத்திலும் இருஇழைகளாகப் பின்னி கதையைக் கொண்டு செல்கிறார் சரோயன்
இறந்தவரின் நினைவுகள் நம் நெஞ்சில் இருக்கும்வரை, பகிர்ந்து கொள்ளவும் மக்கள் எஞ்சியிருக்கும் வரை யாரும் உண்மையில் இறக்க மாட்டார்கள் என்கிறார் சரோயன்.

சிறிய நகர வாழ்க்கையின் சந்தோஷங்களை, அபூர்வமான மனிதர்களைச் சரோயனின் திறம்படச் சித்தரித்திருக்கிறார். அவரும் இது போன்ற ஒரு சிறிய நகரத்தில் வளர்க்கப்பட்டவர். ஆகவே அதை எழுத்தில் துல்லியமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது.
அன்பு தான் குடும்பத்தை ஒன்றிணைக்கிறது. அன்பை உருவாக்கவும் முன்னெடுக்கவுமே ஹோமர் முயல்கிறான். அவனுக்கு முடிவில் எஞ்சியிருப்பது குடும்பத்தின் சந்தோஷம் மட்டும் தான். துயரத்திலும் கூடக் குடும்பங்கள் தனக்கான இயல்பான பிணைப்பைக் கொண்டுள்ளன, இந்தப் பிணைப்பை இன்னும் வலிமையாக்க மற்ற குடும்ப உறுப்பினர்களின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் சரோயன்.
குடும்ப உறவில் கசப்புணர்வுகள் தலைதூக்கி விட்டால் குடும்பம் சிதைவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே அன்பின் செயல்களால் குடும்பம் வளர்ச்சி அடையவேண்டும். நேசமே மனித உறவுகளை வலிமையாக்குகிறது என்பதை ஹோமரின் வழியே அடையாளப்படுத்துகிறார்.
கதையை ஒரு காவிய பயணமாக வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இது அன்றாட வாழ்வின் ஊடாகச் செல்லும் பயணமாகும். நாவலின் தலைப்பு தாந்தேயின் டிவைன் காமெடியை நினைவுபடுத்துகிறது. விளையாட்டுத்தனத்திலிருந்து விடுபட்டு முழுமனிதனாக ஒருவன் அடையும் வளர்ச்சிப் பயணமாகவும் இதைக் கருதலாம்.
••
January 15, 2021
நிழல் வேட்டை
23 Paces to Baker Street 1956 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படம். ஹென்றி ஹாத்வே இயக்கியது.

பிலிப் ஹன்னன் என்ற பார்வையற்ற நாடக ஆசிரியர் ஒருவர் குற்ற நிகழ்வு ஒன்றினைக் கண்டறிவதே இந்த திரைப்படம். Don’t Breathe, ஒப்பம் , ராஜ் தி கிரேட் போன்ற படங்களுக்கு இதுவே முன்னோடி.
தன்னைச் சுற்றி நடக்கும் உரையாடல்களைத் துல்லியமாக நினைவில் பதிவு செய்து கொள்ளும் திறன் கொண்டவர் பிலிப். நாடக ஆசிரியராக இருப்பதால் கற்பனை ஆற்றலும் அதிகம். அன்றாடம் தான் எழுத வேண்டிய விஷயங்களைத் தன்னுடைய குரலில் பதிவு செய்து கொடுத்துவிடுகிறார். அவரது ஒலிப்பதிவு கூடத்திலிருந்து தான் படம் துவங்குகிறது.

அவருக்கு பாப் மேத்யூ என்ற உதவியாளர் இருக்கிறார். அவர் பிலிப் பதிவு செய்து தரும் விஷயங்களை அப்படியே டைப் செய்து அனுப்பிவிடுகிறார். பிலிப்பின் முன்னாள் உதவியாளரும் காதலியுமான ஜீன் ஒரு நாள் அவரைத் தேடி வருகிறாள்.
லண்டனில் வாட்டர்லூ பிரிட்ஜ் மற்றும் சேரிங் கிராஸ் ஸ்டேஷனுக்கு இடையில் தேம்ஸ் ஆற்றின் கரையில் உள்ள அழகான குடியிருப்பில் வசிக்கிறார் பிலிப். பார்வையற்ற போதும் அவரால் வெளியிலுள்ள இயக்கங்களை துல்லியமாக அறிந்து சொல்ல முடிகிறது.
குறிப்பாகப் படகில் செல்லும் காட்சியில் மாலை நேரத்துச் சூரியனின் பொன்னிற அழகை மிகச்சரியாக விவரிக்கிறார். கடந்தகாலத்தில் தவிர்க்க முடியாத சூழலால் அவரால் ஜீனை மணந்து கொள்ள முடியவில்லை. அவளும் விலகிப்போய் விடுகிறாள்
நீண்டகாலத்தின் பிறகு அவள் தன்னைச் சந்திக்க வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவளுக்குத் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து லண்டன் நகரக் காட்சிகளை அறிமுகம்செய்து வைக்கிறார். நலம் விசாரிக்கிறார். அவள் தங்களின் பழைய உறவை நினைவுபடுத்தவே அவளிடமிருந்து தப்பிக்க அருகிலுள்ள மதுவிடுதிக்குப் போகிறார்.
அது பிலிப் ஹன்னன் வழக்கமாகச் செல்லும் உள்ளூர் பப். அன்று தற்செயலாக ஒரு உரையாடலைக் கேட்கிறார். யார் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. திரைமறைவின் பின்னால் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குற்றம் புரிவதற்குத் திட்டமிடுகிறார்கள். என்ன குற்றம். கொலையா, கடத்தலா என எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேச்சில் குறிப்பிட்ட நாளில் அதைச் செய்ய இருப்பதை அறிந்து கொள்கிறார்
அந்த உரையாடலை அப்படியே மனதில் பதியவைத்துக் கொண்டு தன் வீட்டிற்குத் திரும்புகிறார். ஒரு சொல் மாறாமல் அதைப் பதிவு செய்து அந்த டேப்பை போலீஸ் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டுகிறார்.
யார் அவர்கள். என்ன குற்றம் செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் எப்படித் தடுப்பது. இது ஒருவேளை அவரது கற்பனையாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கிறார் போலீஸ் அதிகாரி.
காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காத பிலிப் ஹன்னன் தானே அந்த குற்றவாளிகளைக் கண்டறிய முயல்கிறார்.

முதல் புள்ளியாக அந்தப் பெண் யார் என்று தேட ஆரம்பிக்கிறார். அவள் ஒரு வீட்டில் வேலை செய்தவள், அந்த வீட்டு எஜமானி ஒபரா பார்க்கப் போயிருக்கிறாள் என்பதை வைத்துக் கொண்டு எந்த வீட்டில் செய்தாள் என கண்டுபிடிக்க முயல்கிறார் பிலிப்.
இதற்கு உதவியாளர் பாப் மேத்யூஸ் மற்றும் காதலி ஜீன் உதவி செய்கிறார்கள். தனது புத்திசாலித்தனத்தைக் கொண்டு அந்தப் பெண் வேலை செய்த வீட்டினை பிலிப் கண்டுபிடிக்கிறார். அந்த வீட்டினைத் தேடிப் போகிறார். ஆனால் அவள் வேலையை விட்டு நின்றுவிட்டதாக தெரிய வருகிறது
அவளை எந்த நிறுவனம் வேலைக்கு அனுப்பியது என விசாரித்து அங்கே போகிறார்கள். அங்கேயும் அவளைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. மதுவிடுதியில் பேசிய பெண் அணிந்திருந்த செண்ட் வாசனையை வைத்து அவளைத் தான் கண்டுபிடித்துவிட முடியும் என உறுதியாகச் சொல்கிறார் பிலிப்
பல்வேறு இடங்களில் விசாரித்தும் அந்தப் பெண்ணை கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. ஆகவே நியூஸ்பேப்பரில் ஒரு விளம்பரம் கொடுக்கிறார். முகம் தெரியாத ஒரு ஆளிடமிருந்து போன் வருகிறது. ஒரு பெண் அவரைத் தேடி அவரது இருப்பிடத்திற்கே வருகை தருகிறாள். அவள் தான் குற்றவாளி என நினைக்கும் பிலிப் ரகசியமாக அவளைப் பின்தொடரும்படி பாப்பை அனுப்பி வைக்கிறார். பாப் அவளைப் புகைப்படம் எடுக்கச் செய்யும் முயற்சிகள் வேடிக்கையாக இருக்கின்றன. அவளைப் பின்தொடர்ந்து போய் மழையில் நனைந்து வீடு திரும்புகிறார் பாப்.
அந்தப் பெண்ணோடு இருந்த ஆண் யார். அவர்கள் என்ன குற்றம் செய்ய இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் பிலிப் அதைத் தடுத்து நிறுத்த முயல்கிறார். தங்களை பிலிப் ஹன்னன் பின்தொடர்வதை அறிந்து கொண்ட குற்றவாளி அவரை தந்திரமாக மடக்கிக் கொல்ல முயல்கிறான். தேடிப்போய் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்.
பிலிப் உண்மையை எப்படிக் கண்டறிந்தார். என்ன குற்றம் நடந்தது. அதை எப்படித் தடுக்க முயன்றார் என்பதை மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்கள்.

பார்வையற்ற ஒருவர் தனது நினைவுத்திறன் மற்றும் வாசனையை அறிவதன் மூலம் எப்படி ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே திரையில் காட்டிவிட்டார்கள். அதுவும் முதற்காட்சியில் துவங்கி கடைசி காட்சி வரை பரபரப்பு. வேகம். நம்மால் யூகிக்க முடியாத கதைப்போக்கு.
ஹிட்ச்காக்கின் Rear Window படத்தின் பாதிப்பிலிருந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். ஹிட்ச்காக்கின் படம் பெற்ற பெரும்வெற்றி அந்த பாணி திரைப்படங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. அதில் சக்கர நாற்காலியில் இருக்கும் கதாநாயகன் எதிர்வீட்டில் ஒரு குற்றம் நடக்க இருப்பதை அறிந்து கொள்கிறான். அதைத் தடுக்க காவல்துறையை நாடுகிறான். உதவி கிடைக்காத போது தானே கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால் ஹிட்ச்காக் கதையில் எதிர் வீட்டில் நடப்பதைக் கதாநாயகனால் காணமுடிகிறது. இதில் பிலிப்பிற்கு யார் குற்றவாளி என்றே தெரியாது. துப்பறியும் முறையில் அவனது புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.
பிலிம் நுவார் படங்களை இயக்கிய ஹென்றி ஹாத்வே படம் என்பதால் திரைக்கதையைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
சில கதைகள் சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டிலும் திரும்பத் திரும்ப மறுவடிவம் பெற்றபடியே இருக்கின்றன. அத்தகைய கதைகளில் ஒன்றே இத்திரைப்படம். நாளையே இதே கதைக்கருவை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவானாலும் அதுவும் வெற்றிகரமாக ஒடவே செய்யும்.
••
உலக இலக்கியத்தின் சாளரம்.
வாசிப்பை நேசிப்போம் குழுவில் கா.மூர்த்தி எழுதியுள்ள புத்தக விமர்சனம்.
••••

நூல் : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி
ஒரு வருடத்தில் எந்தெந்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயாரிப்பதற்கு ஒரு “Shortcut”
1. எஸ்ரா அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்
2. எஸ்ரா பரிந்துரைக்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் இதை முடித்தால் அந்த ஒரு வருடத்திற்கு பலதரப்பட்ட புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைக்கும்.
இந்த இரண்டுமே சேர்ந்து நடந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த புத்தகம். இந்த வருடத்தின் மிக முக்கியமான புத்தகங்களில் இது ஒன்று. மொத்தம் 26 உலக இலக்கிய கட்டுரைகள், அத்தனையும் தகவல் களஞ்சியங்கள். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கிய படைப்புகள் பற்றியும் இந்த நூல் நமக்கு ஒரு அறிமுகம் தருகிறது. இதற்கு முன்பாகவும் எஸ்ரா அவர்கள் உலக இலக்கியத்தைப் பற்றிய புத்தகங்கள் வெளியிட்டு இருந்தாலும் இந்தப் புத்தகம் இதுவரை வெளிவந்த புத்தகத்தை விட ஒரு படி மேலாகவே இருக்கிறது.
இதில் எஸ்ரா அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுகிறார் “நாம் பயன்படுத்தும் செல்போனில் துவங்கி வீட்டுச் சமையலறை வரை சர்வதேச தயாரிப்புகளை வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம் ஆனால் ஒவ்வொரு வருடமும் உலக அளவில் வெளிவரும் புத்தகங்களையோ அல்லது எழுத்தாளர்களைப் பற்றி வாசிப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது”. எவ்வளவு உண்மை?
இந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட ஒரு 50 எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமாவது நமக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சம் பிரதிகள் விற்கும் புத்தகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உவமைகள், உருவகங்கள் இன்றி கவிதை எழுதும் கவிஞரை உங்களுக்குத் தெரியுமா? எந்தெந்த நாவல்கள் திரைப்படமாக வந்திருக்கிறது என்ற தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற புத்தகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?- இந்த நூலில் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களையும் அல்லது எழுத்தாளர்களைப் பற்றியும் நாம் முழுமையாக வாசித்து விட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் குறைந்தபட்சம் இவர்களைப் பற்றியாவது நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நூலில் இறுதியாக எஸ்ரா அவர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து மிகவும் முக்கியமானது. அயல்நாடுகளில் அவர்களுடைய எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுவதாகவும், அது பல கல்வி நிலையங்களில் திரையிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர்கள் தீவிரமான ஆய்வு மேற்கொண்டு கடின உழைப்போடு பெரும் பொருட் செலவுடன் உருவாக்கப்படுகிறது , ஆனால் இந்தியாவிலோ சாகித்திய அகடமி மட்டுமே ஆண்டுதோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்களை உருவாக்கி வருகிறது. அது பெரும்பாலும் நியூஸ் ரீல் போலவே தயாரிக்கப்படுவதால் அதை யாரும் அதிகமாக பார்ப்பதில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்
சமகாலத்தில் தன்னுடைய எழுத்தைத் தவிர்த்து மற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் எஸ்ரா அவர்கள் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார். நாம் பரீட்சைக்குத் தயார் செய்யும்பொழுது “Important Questions” என்று நம்முடைய ஆசிரியர்கள் நமக்குக் குறித்துத் தருவார்கள். அதுபோல்தான் நமக்கு எஸ்ரா அவர்கள் இந்த நூலைப் படைத்துள்ளார். இந்த ஒரு புத்தகம் உலக இலக்கியங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவும், உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கவும் பெரிய உந்துதலாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நன்றி
வாசிப்பை நேசிப்போம்.
நீர்மை
என்.எஸ்.மனோகரன் மிகச்சிறந்த ஓவியர். சென்னை ஒவியக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர். கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி நிறைய இளம் ஓவியர்களை உருவாக்கியவர்.

மனோகரின் நீர்வண்ண ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிராமிய வாழ்வின் காட்சிகளைத் தனது தூரிகையின் வழியே நுட்பமான கலைப்படைப்பாக உருவாக்குகிறார்.
சீன நிலக்காட்சி ஓவியங்களில் காணமுடிகிற நுட்பமும் எளிமையும் இவரது ஓவியங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக ஒளியும் நிழலும், வசீகரமாக வண்ணங்களைப் பயன்படுத்தும் விதமும் புதிய ஓவிய மொழியாக வெளிப்படுகின்றன.

ஓவியர் என்.எஸ். மனோகரன் வாழ்க்கை மற்றும் ஓவியங்கள் குறித்த ஆவணப்படமான நீர்மை மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது
அசோகன் நாகமுத்து இதனை இயக்கியிருக்கிறார். இளவேனில் இதனைத் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிக அழகான கோணங்களின் வழியே காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார் இளவேனில். குறிப்பாக மனோகர் நீர்வண்ண ஓவியத்தை வரையும் காட்சி பரவசமூட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வயல்வெளி, வளைந்து செல்லும் சாலை, அதில் நடக்கும் ஆண்பெண் உருவங்கள் லயத்தோடு உயிர்பெறுகிறார்கள். குறிப்பாகப் பனைமரங்கள் சிறிய தீற்றலில் உயிர்பெறும் விந்தை மறக்கமுடியாதது
ஆடு வரைவதில் மனோகர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆவணப்படத்திலும் ஆடு ஒன்றை மனோகர் வரைகிறார். அந்தக் காட்சியில் ஆட்டின் உருவம் மட்டுமில்லை அதன் உடல்மொழியும் உணர்ச்சிகளும் துல்லியமாக வெளிப்படுகின்றன. ஆட்டின் முதுகில் நிற்கும் குருவியின் அழகு நிகரற்றது.
மனோகரின் ஓவியங்கள் குறித்துப் புகழ்பெற்ற ஓவியர்கள் ஆர்.எம். பழனியப்பன், இளையராஜா, சந்தான கிருஷ்ணன் ஆகியோரின் நேர்காணலின் வழியே மனோகரின் ஆளுமையும் தனித்துவமும் திறம்பட வெளிப்படுகிறது.
மனோகரின் மனதில் தஞ்சை மண்ணின் கிராமிய வாழ்க்கை மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே அவரது உயிரோட்டமான ஓவியங்கள்..

காலம் தான் அவரது உண்மையான கருப்பொருள். காலமாற்றத்தில் கைவிடப்பட்ட, இடிந்து போன. தொலைந்து போன பண்பாட்டு அடையாளங்களை அவர் தொடர்ந்து மீள் உருவாக்கம் செய்து வருகிறார். புதிய மோஸ்தர்கள், போலியான வெளிப்பாட்டு வடிவங்களைத் தாண்டி அசலாகத் தனது மண்ணின் கலைஞனாக ஓவியங்களை வரைந்து வரும் மனோகரன் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

நீர்மை ஆவணப்படத்தின் வழியே மனோகரின் நிகரற்ற கலையாளுமை சிறப்பாகக் கவனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த இளவேனில் மற்றும் அசோகன் நாகமுத்துவிற்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
Neermai | நீர்மை | Documentary on art works of N.S.Manoharan
January 13, 2021
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

January 11, 2021
நதிமுகம் தேடி
ராம் தங்கம் நம்பிகை தரும் இளம்படைப்பாளி. இவரது திருக்கார்த்தியல் நல்ல சிறுகதைத் தொகுப்பு. இவரது ராஜவனம் என்ற நாவலை வாசித்தேன். எண்பது பக்கங்கள் கொண்ட சிறிய நாவல். முகளியடி மலையிலுள்ள நந்தியாற்றின் மூலம் காணச் செல்லும் பயணத்தின் கதை.

காடு நூறாயிரம் உயிர்களின் வாழ்விடம். காட்டின் பிரம்மாண்டம் அதன் மரங்கள். காட்டில் எப்போது இருள் மிச்சமிருக்கிறது. பாதைகளை அழிப்பது தான் காட்டின் இயல்பு. மழைக்காலத்தில் காடு கொள்ளும் ரூபம் விசித்திரமானது.
கோபாலும் அவன் நண்பர்களும் முகளியடி மலையை நோக்கி செல்கிறார்கள். அவர்களின் பயணம் மெல்ல காட்டின் இயல்புகளை அறியத் துவங்குவதாக அமைகிறது. பயமும் வசீகரமும் ஒன்று கலந்த அந்தப் பயணத்தின் ஊடாக காட்டில் வாழும் விலங்குகள் பறவைகளை அவதானித்தபடியே நடக்கிறார்கள். காட்டின் சங்கீதத்தைக் கேட்கிறார்கள. காணிகளின் குடியிருப்பிற்குச் செல்லும் வரை காட்டின் மீது மயங்கியவர்களாகவே நடக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

காணிகளின் குடியிருப்பினை அடைந்த போது கோபால் தனது தந்தை வனக்காவலர் ராஜசேகர் என மூட்டுக்காணியிடம் சொல்கிறான். ஆன ராஜசேகரா என்று மூட்டுக்காணி கேட்கிறார். அந்த இடத்திலிருந்து கதை தன் உச்சத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறது. காணிகளின் நினைவில் ராஜசேகர் என்றும் நிலைத்திருக்கிறார். அவன் ராஜசேகரின் மகன் என்பதை அறிந்து கொண்ட காணிகள் அவனிடம் நெருக்கம் கொள்கிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். காணிகளுக்கு ராஜசேகர் செய்த உதவிகளும், காட்டுயானைகளை பாதுகாக்க அவர் எடுத்த முயற்சிகளும் அழகாக எழுதப்பட்டுள்ளன
உண்மையில் இந்தப் பயணம் நினைவுகளின் வழியே கோபால் தன்னைக் கண்டறியும் பயணமாகவே அமைகிறது. காணிகளின் உலகை ராம் தங்கம் மிக நன்றாக எழுதியிருக்கிறார்
எளிய மொழியில் நேரடியான கதை சொல்லுதலின் வழியே நம்மையும் காட்டிற்குள் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.
வாழ்த்துகள் ராம் தங்கம்
••
ஃபிலிப் லார்கின்
சொல்வனம் டிசம்பர் இதழில் கவிஞர் ஃபிலிப் லார்கின் பற்றி மிகச்சிறப்பான கட்டுரை ஒன்றை நம்பி எழுதியிருக்கிறார்

ஃபிலிப் லார்கின்: கவிதைகளை வாசித்திருக்கிறேன். Kingsley Amis உடனான அவரது நட்பு மற்றும் அவருக்கு எழுதிய கடிதங்களைப் படித்திருக்கிறேன். A Girl in Winter என்ற அவரது நாவல் நூலகத்தில் பணியாற்றும் கேதரின் வாழ்க்கையில் பனிரெண்டு மணிநேரங்களை விவரிக்கக்கூடியது.
லார்கினின் நேர்காணல் ஒன்றில் உங்களைப் போலவே நூலகராக வேலை செய்தவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் என்று கேள்விகேட்பவர் சொல்லும் போது லார்கின் யார் போர்ஹெஸ் என்று கேட்கிறார். அந்தப் பதிலை என்னால் மறக்கமுடியாது. லார்கின் உரைநடையும் கவித்துவமானது.
நான் அறிந்தவரை லார்கின் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதற்கட்டுரை இதுவே. லார்க்கின் கவிதையுலகை அறிந்து கொள்வதுடன் நம்பியின் கவிதை வாசிப்பு மற்றும் புரிதலின் ஆழத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
நம்பியின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும் போது அவர் தன் கட்டுரைகளை ஒரு இசைக்கோர்வை போல உருவாக்குவதாக உணருகிறேன். காரணம் அது மையப்பொருளைச் சுற்றி மூன்று நான்கு இழைகளை ஒன்றிணைக்கிறது. சஞ்சரித்தலை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. கடினமான விஷயங்களை மிக எளிமையாகவும், எளிமையான விஷயங்களை ஆச்சரியமாகவும் மாற்றுகிறது.
ஒளியின் மீது நம்பிக்கு உள்ள விருப்பம் அவரது கட்டுரைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. அது போலவே கவித்துவமான வெளிப்பாட்டின் ஊடாகப் பேச்சுவழக்கில் மொழிதலையும் அவரது கட்டுரைகளில் காணமுடிகிறது.
நம்பி எதிலும் ஒரு இயக்கத்தை விரும்புகிறார். இறுக்கமான விஷயங்களை நோக்கிச் செல்கிறார். இரண்டு குரல்கள் கொண்டதாகவே அவரது கட்டுரைகள் காணப்படுகின்றன. ஒரு குரல் படைப்பின் நுட்பங்களை ஆழ்ந்து வெளிப்படுத்துகிறது. மற்றொரு குரல் நடப்பு வாழ்வின். நிகழ்வின், சுய அனுபவங்களிலிருந்து வெளிப்படும் குரல். இந்தக் குரல் பல நேரங்களில் பரிகாசம் போல ஒலிக்கிறது. அல்லது வியப்படைகிறது. தன்னைச் சிறியோனாகக் கருதுகிறது.
ஆனால் படைப்பின் நுட்பத்தைப் பற்றிப் பேசும் குரலோ அபூர்வமான தருணங்களை, நிகழ்வுகளை ஒரு கண்டுபிடிப்பு போல ஆராய்ந்து முன்வைக்கிறது. இது போலவே நம்பியின் கட்டுரை இரு வேறு வயதுடையவர்கள் எழுதியது போலவும் எனக்குத் தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட வாசிப்பாகக் கூட இருக்கலாம்.
“The bottle is drunk out by one;
At two, the book is shut;
At three, the lovers lie apart,
Love and its commerce done;
And now the luminous watch-hands
Show after four o’clock,
Time of night when straying winds
Trouble the dark”
“ஒரு மணிக்குள் பாட்டில் பருகித் தீர்க்கப்படுகிறது;
இரண்டு மணிக்குப் புத்தகம் மூடி வைக்கப்படுகிறது;
மூன்று மணிக்கு, காதலர்கள் விலகிப் படுத்திருக்கிறார்கள்;
காதலும் அதன் கொள்ளல் கொடுத்தல்களும் ஆயிற்று;
ஒளிரும் கடிகாரக் கரங்கள் இப்போது
மணி நான்கு கடந்ததைக் காட்டுகின்றன,
இருளைத் தடுமாறச் செய்யும் தடம் புரள் காற்று
வீசி வரும் இரவின் அந்நேரம்”
என லார்க்கின் கவிதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கவிதையில் Love and its commerce done; என்ற வரிக்குக் காதலும் அதன் கொள்ளல் கொடுத்தல்களும் ஆயிற்று; என மொழியாக்கம் செய்திருப்பது சிறப்பு.
எவ்வளவு அழகான வார்த்தைகள். கொள்ளல் கொடுத்தல் என்பதை இப்படி ஒரு இடத்தில் பயன்படுத்துவது அவரது தனித்துவம்.
இது போலவே Time of night when straying winds என்பதற்கு இருளைத் தடுமாறச் செய்யும் தடம் புரள் காற்று என மொழியாக்கம் செய்திருப்பது அசல் கவிதை வரி போலவே மாற்றுகிறது.
லார்கின் கவிதைகளை மட்டுமில்லை. நம்பியின் இந்தக் கட்டுரையினையும் புரிதலின் உன்னதம் என்றே சொல்வேன்
•••
ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம்
இளம்வாசகி
எனது நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து என்ற சிறார் நூலுக்கு பதினோறு வயது சிறுமி ரியா எழுதியுள்ள விமர்சனம்.
உன் அன்பான வாசிப்பிற்கு நன்றி ரியா.
••

பெயர் : ரியா ரோஷன்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
வயது :11
இடம் :சென்னை
புத்தகம் :நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
ஆசிரியர்:எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி
விலை : Rs.70
சனிக்கிழமை நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். நான் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான் எஸ்.ரா அவர்களின் ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’.இந்த புத்தகத்தையே முதலாவதாக படித்து புத்தக விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.இந்த புத்தகம் இப்போது தான் வெளிவந்து இருக்கிறது. சரி கதைக்கு உள்ள போகலாமா?
கதை :-
மேக்கரை என்ற ஊரில் இருக்கும் அரசு பள்ளியில் என்ன இலவச கல்வி மற்றும் இலவச உணவு இருந்தாலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெற்றோர்கள் ஐந்து மாடிக்கட்டடம் உள்ள விக்டோரியா ஆங்கில பள்ளிக்கே பிள்ளைகளை அனுப்ப விரும்பினார்கள். இதை தெரிந்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் பழனியப்பன் வெவ்வேறு கிராமங்களுக்குப் போய் மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்கும் படி கேட்டார். அதற்கு பெற்றோர்கள் முதலில் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்தால் தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அனுப்புவோம் என்று சொல்கின்றார்கள். பழனியப்பனும் ஒத்துக்கொண்டு இந்த அரசு பள்ளியில் படித்த சுந்தரம் ஐ.ஏ.எஸ் மற்றும் பிற பழைய மாணவர்களிடம் உதவி கேட்கிறார். அவர்களின் உதவி மூலம் ஒரு பஸ்ஸையும், டிரைவரையும் ஏற்பாடு செய்கிறார். இது தெரிந்த விக்டோரியா பள்ளியின் நிர்வாகி ராஜலக்ஷ்மி அரசு பள்ளிக்கு எதிராக பல சதிவேலைகள் செய்கிறார். அவர் முன்னாள் MLA வின் மனைவி. அதிகார பலத்தோடு அரசு பள்ளியை எதிர்க்கிறார்.இந்த அரசு பள்ளிக்கும் விக்டோரியா பள்ளிக்கும் நடக்கும் போட்டியே இந்த கதை.
இந்த கதையில் எனக்கு பிடித்த விஷயங்கள் :-
1. சேது என்ற மாணவனும் மற்ற மாணவர்களும் ஒரு கோப்பையை வென்று இருப்பார்கள். அதை சேது தன் தாயிடம் காண்பிக்க வேண்டுமென ஆசைப்படுவான். அவன் கோரிக்கையை ஏற்று தலைமை ஆசிரியர் பழனியப்பன்,பரிசு வென்றவர்களின் அம்மாக்களை பாராட்டு விழாவிற்கு அழைப்பார். சேது தன் தாயிடம் காண்பிக்கும் அன்பும் மரியாதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
2. அரசு பள்ளியில் படித்து நிறைய பேர் பெரிய ஆள் ஆகி இருக்கிறார்கள். நாம் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் படித்தால் சாதிக்க முடியாது என்று இல்லை. நாம் எந்த பள்ளியில் படித்தாலும் சாதிப்பது நம் கையில் தான்.
3. சேதுவின் தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர். அதனால் அவரையே இந்த பஸ்சுக்கு டிரைவர் ஆக போட்டுவிடலாம்,குழந்தைகளை பத்திரமாக கொண்டு போய்விடுவார் என்று தலைமையாசிரியர் பழனியப்பன் சொல்லுவார். இந்தக்கதையில் ராணுவத்தின் முக்கியத்துவமும் இருக்கும்.
4. இந்த அரசு பள்ளியின் மாணவர்கள் குளத்தை சரி செய்வது, இயற்கை வேளாண்மை, கிராமப்புற தள்ளுவண்டி நூலகம் போன்ற நல்ல வேலைகளை செய்கிறார்கள்.
நன்றி
ரியா ரோஷன்
முயலின் தோழன்
Roald & Beatrix: The Tail of the Curious Mouse தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்,
எழுத்தாளர் ரோல்ட் டாலின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை முதன்மையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எழுத்தாளரான ரோல்ட் டால், சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி, மாடில்டா, தி ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ்’ போன்ற புகழ்பெற்ற சிறார் படைப்புகளை எழுதியவர்
ரோல்ட் டால் சவுத் வேல்ஸில் உள்ள லாண்டாஃப் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் நார்வேயைச் சார்ந்தவர். தொழில்நிமித்தம் இவரது தந்தை இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தார். ஆறு வயதான ரோல்ட் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் பீட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய முயல் கதைகளை விரும்பி படித்து வந்தார். இரவில் படுக்கையிலும் அப் புத்தகம் துணையாக இருந்தது..

அந்த நாட்களில் பீட்ரிக்ஸ் பாட்டரின் புதிய புத்தகம் எப்போது வரும் எனச் சிறுவர்கள் காத்துக் கிடந்தார்கள்.
ஓவியரான பீட்ரிக்ஸ் தனது புத்தகங்களுக்கான வண்ண ஓவியங்களைத் தானே உருவாக்கினார். தி டேல் ஆஃ பீட்டர் ராபிட் அவரது புகழ்பெற்ற சிறார் நூல். அதில் வரும் முயல் உருவத்தை இன்றும் சிறுவர்கள் நேசிக்கிறார்கள்
விலங்குகளை நேசிப்பதில் ஆர்வம் கொண்ட பாட்டர் முயலையும் பன்றியினையும் எலிகளையும் முக்கியக் கதாபாத்திரமாக்கி கதைகள் எழுதியிருக்கிறார். காளான்களை ஆராய்ந்து இவர் வரைந்த ஓவியங்கள் தாவரவியல் துறையில் இவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது.
பாட்டர் முப்பது புத்தகங்களை எழுதியிருக்கிறார் அதில் இருபத்தி மூன்று குழந்தைகளின் கதைகள் மிகவும் பிரபலமானவை.
புத்தகங்களிலிருந்து கிடைத்த வருமானம் மற்றும் அத்தையின் குடும்பச் சொத்தைக் கொண்டு கும்ப்ரியான் பகுதியில் பெரிய பண்ணையை விலைக்கு வாங்கிய பாட்டர் குடியேறினார்

மலைவளத்தைப் பாதுகாப்பதில் அதிக ஈடுபாடு காட்டிய பாட்டர் ஆடு வளர்ப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தார். பாட்டரின் புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. திரைப்படமாகவும் அனிமேஷன் படமாகவும் வெளியாகியிருக்கிறது.
கண் பார்வை மங்கத் துவங்கிய பாட்டர் புதிய கதையை எழுத மனமின்றி வீட்டுப்பன்றியைப் பராமரித்துக் கொண்டு முயலுடன் பேசிக் கொண்டு நாட்களைக் கடத்துகிறார். அங்கிருந்து தான் படம் துவங்குகிறது.
வெளியாட்களின் வருகையை விரும்பாத அவர் கிறிஸ்துமஸ் சங்கீத பாடுகிறவர்களைக் கூடத் துரத்தியடிக்கிறார். சாலி என்று அழைக்கப்படும் செல்லப்பன்றி வீட்டில் அவருடனே உலவுகிறது.
கிறிஸ்துமஸ் விருந்திற்காக ஒரு வாத்தை அறுத்துச் சமைக்க முடிவு செய்து அதைத் துரத்துகிறார். அந்த வாத்துப் பிடிபடாமல் தப்பியோடுகிறது. வாத்தை துரத்தியோடும் பாட்டர் அதைக் கடுமையாக எச்சரிக்கிறார். அந்த வாத்து எப்படியே தப்பிவிடுகிறது.
பாட்டரின் கண்களைப் பரிசோதனை செய்ய வந்த மருத்துவர் அவர் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அது பாட்டருக்குப் பிடிக்கவில்லை. மருத்துவர் தந்த கண்ணாடியை ஓரமாகப் போட்டுவிட்டு மங்கலான பார்வையுடன் அவர் வீட்டின் ஜன்னல் வழியே உலகை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார்.

இருநூறு மைலுக்கு அப்பால் வசித்து வந்த ஆறு வயதான ரோல்ட் டால் கதைகள் படித்துப் படித்துக் கற்பனையுலகில் சஞ்சரிக்கிறான்.
ஒரு நாள் அவனது தந்தை திடீரென இறந்துவிடுகிறார். அவரது உடல் வைக்கப்பட்ட அறைக்குள் போகும் ரோல்ட் கண்களை மூடிக் கொள்கிறான். இனி தனது வாழ்க்கை என்னவாகும் என்ற பயம் ஏற்படுகிறது
அம்மா சோஃபி அவனை ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிடப் போகிறாள் என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு ஓடிப்போக முயல்கிறான்.
அப்போதும் கையில் பீட்டர் ராபிட் புத்தகமிருக்கிறது. அந்த முயலின் கண்களை நேராகப் பார்க்க ரோல்ட் ஆசைப்படுகிறான். எழுத்தாளரை விடவும் அவரது கதைகளில் வரும் உலகைக் காணவே ரோல்ட் அதிகம் விரும்புகிறான்.

வீட்டை விட்டு கிளம்பும் போது, அவனது இறந்து போன சகோதரி வைத்திருந்த பொம்மை, தனக்கு ஒரு புதிய உடையைக் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசாகத் தர வேண்டும் என ஒரு வேண்டுதல் கடிதத்தை ரோல்ட் டாலிடம் தருகிறது. அந்தக் கடிதத்தைத் தன் பையில் வைத்திருக்கிறான் ரோல்ட்.
ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அவனைக் கண்டுபிடித்துவிடுகிறாள் அவனது அம்மா. இருவரும் ஒன்றாகப் பீட்ரிக்ஸ் பாட்டரைத் தேடி அவரது வீட்டிற்குப் போவது என முடிவு செய்கிறார்கள்
இருநூறு மைலுக்கும் அப்பால் இருந்த பாட்டரின் வீடு நோக்கி அவர்களின் பயணம் துவங்குகிறது.
ஒரு எழுத்தாளரைக் காண தன் மகனை அழைத்துக் கொண்டு ஒரு பெண் பயணம் செய்கிறாள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த எழுத்தாளருக்கு தனக்கு இப்படி ஒரு இளம் வாசகன் இருப்பது தெரியாது. அந்தச் சிறுவனுக்கோ பாட்டர் ஒரு தேவதை. கதைகள் சொல்லும் தேவதை. ஆகவே ஆசையாக அவரைக் காணப் பயணம் மேற்கொள்கிறான்.
இதற்கிடையில் பீட்ரிக்ஸின் புதிய கதையை வெளியிடுவதற்காகப் பதிப்பகத்திலிருந்து ஒரு பெண் கும்ப்ரியான் இல்லத்திற்கு வருகிறாள். பாட்டர் எழுதிய கதையைப் படித்துப் பார்க்கிறாள். அதில் சில இடங்களைத் திருத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறாள். அது பாட்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பதிப்பாளரின் கட்டாயத்தால் மாற்றுவதற்குச் சம்மதிக்கிறார்.
இந்தச் சூழலில் பாட்டரின் வீட்டிற்கு வரும் ரோல்ட் அங்கிருந்த வளர்ப்பு நாயிற்கு உணவு கொடுத்து தனதாக்கிக் கொள்கிறான். வீட்டு முயலுடன் பேசுகிறான். யாரோ ஒரு விளையாட்டு சிறுவன் கேட்டைத் தாண்டி உள்ளே வந்திருக்கிறான் என்று நினைத்து அவனைத் துரத்துகிறாள் பாட்டர்.
அவளிடமிருந்து தப்பிய ரோல்ட் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள ஒரு அறையில் ஒளிந்து கொள்கிறான். எங்கே ஒளிந்திருந்தாலும் தண்டிப்பேன் என்று அவள் சப்தமிடுகிறாள். அவளிடமிருந்து தப்பிப்போக முயற்சிக்கையில் பாட்டர் அவனைப் பிடித்துவிடுகிறாள்.
அவளைக் கண்டுபயப்படாமல் அவளது கதையைத் தான் எவ்வளவு விரும்பி வாசித்தேன் என்று ரோல்ட் மனம் திறந்து சொல்கிறான். அவனது பேச்சு மற்றும் அவன் வைத்திருந்த கடிதம் பாட்டரின் மனதை மாற்றுகிறது.
தனது பதிப்பாளர் சொன்ன திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுவர்கள் தன்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தன் கதையை முழுமையாக நேசிக்கிறார்கள் என்பதைப் பாட்டர் உணர்ந்து கொள்கிறார். அதற்குக் காரணமாக இருந்த ரோல்ட்டினை நன்றியோடு நினைவு கொள்கிறார்.
கதைப்புத்தகம் ஒரு சிறுவனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் படத்தில் மிக அழகாகச் சித்தரித்துள்ளார்கள்.
படத்தின் ஒரு காட்சியில் மகனைத் தனியே விட்டுச் செல்லும் சோபியாவிடம ஆருடம் சொல்லும் பெண் உன் மகன் எதிர்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளன் ஆவான் என்று சொல்கிறான். அதைக் கேட்டு சோபியா மிகுந்த சந்தோஷம் அடைகிறாள். அந்தக் கனவு பின்னாளில் உண்மையானது. ரோல்ட்டின் புத்தகங்கள் பீட்ரிக்ஸ் பாட்டரை விடவும் பலமடங்கு விற்பனையானது என்பதே வரலாறு
பாட்டருக்கு ஏன் யாரையும் பிடிக்கவில்லை. உலகம் அவரை முட்டாள் என நினைக்கிறது. பைத்தியக்காரதனமான வேலைகளைச் செய்கிறவள் எனப் பரிகாசம் செய்கிறது. அவளைப் புரிந்து கொள்ளாத உலகை அவள் துரத்துகிறாள். விலக்கி வைக்கிறாள்.
வசதியான குடும்பத்தில் பிறந்த பாட்டர் சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதிலும் ஒவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது பீட்ரிக்ஸ் மற்றும் அவரது சகோதரரும் தங்கள் சொந்த வடிவமைப்பில் கிறிஸ்துமஸ் அட்டைகளையும், சிறப்பு வாழ்த்து அட்டைகளையும் உருவாக்கினார்கள்.
அவளது கற்பனையில் உருவான ஓவியத்தில் எலிகள் மற்றும் முயல்கள் வண்ண உடைகளுடன் ஸ்டைலாகப் போஸ் கொடுத்தன.. . இந்த வாழ்த்து அட்டைகள் தனது நண்பர்களுக்குத் தவறாமல் அனுப்பி வைத்தார் பாட்டர்.
மெல்லப் பாட்டரின் ஓவிய வாழ்த்து அட்டைகள் புகழ்பெறத் துவங்கின. அவற்றை ஒன்று சேர்த்து ஒரு கதைப்புத்தகம் ஆக்கலாமே என்ற யோசனையை ஆனி என்ற தாதி சொல்லவே அதன்படி பாட்டர் சிறார்களுக்கான கதைப் புத்தகம் ஒன்றை எழுதினாள். அதில் இந்த ஓவியங்கள் இணைக்கப்பட்டன. தானே சொந்த செலவில் அதை அச்சிட்டு விநியோகம் செய்தாள். அந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பே அவரை எழுத்தாளராக்கியது.
இதன்பிறகு வார்ன் & கோ என்ற பதிப்பகம் அவரது புத்தகங்களை வெளியிட முன்வந்தது. பாட்டரின் புத்தகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றது. கதையில் வரும் முயல் உருவத்திற்குப் பாட்டர் காப்புரிமை பெற்றார். ஆகவே அந்த முயல் உருவம் பதித்த அட்டைகள். முத்திரைகள், போர்வைகள். கலைப்பொருட்கள் வழியாக அவருக்குப் பெரும்பணம் குவியத் துவங்கியது.
தாவரவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பாட்டர் காளான்களைத் துல்லியமாகப் படம் வரைந்து கொடுத்திருக்கிறார். தன் பண்ணையிலிருந்த மலர்களையும் அழகான வண்ண ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.
டிசம்பர் 22, 1943 அன்று நிமோனியா மற்றும் இதய நோயால் பாட்டர் இறந்தார், அவரது நாலாயிரம் ஏக்கர் பண்ணை மற்றும் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளை, இயற்கை பாதுகாப்புப் பணியில் செயல்படும் தேசிய அறக்கட்டளைக்குத் தானமாக உயில் எழுதியிருந்தார். இன்றும் அவர்களே அந்தச் சொத்தைப் பராமரிப்புச் செய்து வருகிறார்கள்.
படத்தின் இறுதிக்காட்சியில் தான் பாட்டரும் ரோல்ட்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். உரையாடுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக ரோல்டின் தோழனைப் போலவே பாட்டரின் புத்தகம் உடனிருக்கிறது. அது தான் புத்தகத்தோடு ஒரு சிறுவன் கொள்ளும் அற்புத உறவு. பீட்டர் ராபிட் கதையின் அத்தனை வரிகளையும் அவன் மனதிலே பதிய வைத்திருக்கிறான். புதிய புத்தகம் எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிறான். கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தனக்குப் பரிசாகப் பாட்டரின் புதிய புத்தகம் வேண்டும் என்று வேண்டுகிறேன். முடிவில் அது பலிக்கிறது
பீட்ரிக்ஸ் பாட்டர். ஒரு விளையாட்டு சிறுமியாகவே எப்போதும் நடந்து கொள்கிறாள். செத்துப் போன எலி ஒன்றை ஒரு டீக்கோப்பையில் போட்டு வைத்திருப்பது. பன்றியைக் கொஞ்சி விளையாடுவது. வாத்தைத் துரத்தி ஓடுவது என நிறைய வேடிக்கைகள் செய்கிறாள்.
ரோல்ட் மற்றும் பாட்டரின் கதைகளுக்குள் கண்பார்வையற்ற எலியின் கதையும் ஊடாடுகிறது. அந்த எலிகளின் வாழ்க்கையை வரைகலை மூலம் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.
பனிபொழியும் பாட்டரின் வீடும். கணப்பு அடுப்பு வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் பாட்டரும் மறக்கமுடியாத பிம்பங்களாகி விடுகிறார்கள். ரயில்வே நிலையத்தில் என்ஜின் டிரைவருடன் ரோல்ட் பேசும் காட்சி சிறப்பானது.
பெரியவர்களின் உலகிற்குள் சிறுவர்கள் இல்லை. அவர்கள் தங்களுக்கான தனியுலகில் வாழுகிறார்கள். பெரியவர்கள் அவ்வப்போது சிறார்களைத் தங்கள் உலகிற்குள் இழுத்துக் கொண்டு வருகிறார்கள். மிரட்டுகிறார்கள். பணிய வைக்கிறார்கள். ஆனால் சிறார்கள் அதிலிருந்து தப்பி தங்கள் உலகிற்குள் மீண்டும் போய்விடுகிறார்கள்.
சிறார்கள் உலகில் கற்பனை தான் யதார்த்தம். அங்கே மாயமும் மந்திரமும் இயல்பானவை. அவர்கள் பூமியை மனிதர்கள் மட்டும் வாழும் இடமாக நினைப்பதில்லை. பெரியவர்களின் காரணக் காரியப்பேச்சு மற்றும் செயல்கள் சிறார்களை எரிச்சலூட்டுகின்றன. அதிலிருந்து தப்பிக்கப் பகல்கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அப்படிப் பகல்கனவு கண்ட சிறுவனே ரோல்ட். அந்தக் கனவு தான் வளர்ந்து அவனைப் பின்னாளில் பெரிய எழுத்தாளராக்குகிறது.

பாட்டரின் வீட்டுவாசலில் மகனைத் தனியே விட்டு அவனது அம்மா விலகிப்போய்விடுகிறாள். அந்தச் சுதந்திரம் தான் அவள் மகனை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதன் அடையாளம். மகன் எழுத்தாளரைச் சந்தித்துத் திரும்பும் வரை ஒரு காபிஷாப்பில் காத்திருக்கிறாள். அவர்கள் சந்திப்பில் என்ன நடந்தது என அம்மாவிற்குத் தெரியாது.
இந்தப் புரிதலும் மகன் விரும்பிய சந்தோஷத்தை உருவாக்கித் தருவதும் எத்தனை அழகானது. அது தான் ரோல்டை எழுத்தாளராக்கியது என்பேன்.
••
January 10, 2021
தந்தை எனும் அதிகாரம்
தந்தையும் தனயர்களும் என்ற தலைப்பில், இவான் துர்கனேவ் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்குப் பிடித்தமானது. காரணம், தலைமுறைகள் மாறினாலும் தந்தைக்கும் தனயனுக்குமான உறவிலுள்ள எதிர் நிலை மாறவேயில்லை.
தந்தையாக இருப்பது என்பது ஒரு அதிகாரம்.எல்லாத் தந்தைகளுக்கும் அது பொருத்தமானதே.தனயன் என்பது ஒரு மீறல். ஒரு விடுபடல். சுதந்திரம். எல்லாக் காலத்திலும் மகன் தந்தையினைக் கடந்து போகவும் மீறிச் செயல்படவுமே முயற்சிப்பான். அதுவே இயல்பு. மகன் வளர்ந்து பெரியவன் ஆகி திருமணமாகி மகனோ, மகளோ பெற்றவுடன் அவனும் தந்தையின் வேஷத்தை புனையத் துவங்குவான். தன் தந்தையைப் போல நிச்சயம் நடந்து கொள்ளமாட்டான். அவரைவிடச் சிறப்பாக, சுதந்திரமாக, கட்டுபாடுகள் அற்றுப் பிள்ளைகளை வளர்க்க முற்படுவான். ஆனால் அதில் அவன் எவ்வளவு வெற்றி அடைகிறான் என்பதைக் காலம் தான் முடிவு செய்கிறது.

காஃப்காவிற்கு அவரது தந்தையைப் பிடிக்காது. தந்தையின் கெடுபிடிகள். அறிவுரைகள்.கண்காணிப்பு குறித்து வேதனையுடன் கடிதம்
எழுதியிருக்கிறார்.உண்மையில் காஃப்காவின் அப்பா ஒரு குறியீடு.அவரைப் போலத் தானே புதுமைப்பித்தனின் அப்பாஇருந்தார். மகாகவி பாரதியின் அப்பா நடந்து கொண்டார். சுந்தர ராமசாமி தனது தந்தையின் கண்டிப்பு மற்றும் அறிவுரைகள் பற்றி எழுதியிருக்கிறாரே.இந்தியாவிற்கே தந்தையான மகாத்மா காந்தியை அவரது பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லையே. காந்தியின் மகன் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பினானே?
தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தை தனது சந்தோஷமே முக்கியம் என நினைப்பவர். தனது சுகத்திற்காக எதையும் செய்ய முற்படுகிறவர்.மகாபாரத்தில் அப்படி யயாதி வருகிறாரே. நாவலில் வரும் கரமசோவ் தஸ்தாயெவ்ஸ்கியின் நிஜதந்தையின் சாயலில் உருவாக்கப்பட்டவரே. கோகோலின் தாரஸ்புல்பாவில் வரும் தந்தை, பிள்ளைகளை மிகவும் நேசிப்பவன். ஆனால் இனப்பெருமைக்காக மகனைக் கொல்லக் கூடியவன். மகாபாரத்தில் வரும் பாண்டு, நோயாளியான தந்தை. திருதாரஷ்டிரன், பார்வையற்றவன். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயமே அவனை இயக்குகிறது. பாரபட்சமாக நடந்து கொள்ளச் செய்கிறது. தசரதன் போன்ற தந்தைக்கு நால்வரில் மூத்தவன் ராமன் மீது தான் பாசம் அதிகமாக இருக்கிறது. அப்படி எத்தனையோ குடும்பங்களில் மூத்த பையனை அதிகம் நேசிக்கும் தந்தை இருக்கதானே செய்கிறார்கள்?
தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளி, புரிதல். கருத்துமோதல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய திரைப்படத்தில், வளர்ந்த பையனை தந்தை அடிக்கும் காட்சியைக் காண முடிகிறது.
நவீன இலக்கியத்திலும் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத தந்தை, சொத்து தரமுடியாது எனச் சண்டையிடும் தந்தை. பொறுப்பில்லாமல் குடும்பத்தை விட்டு ஓடிய தந்தை. மகள் வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட தந்தை எனத் தந்தையின் பல்வேறு வடிவங்களைக் காண முடிகிறது.
தந்தையிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு ஒடிய பையன்கள் இருக்கிறார்கள். தாயிடம் சண்டையிட்டு அப்படி ஒடியவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
குடும்பப் பொறுப்புகளை மறந்து சுயநலத்துடன் ஓடிப்போன தந்தையை இலக்கியம் பதிவு செய்கிறது. அப்படியான பெண் பற்றிக் குறைவான பதிவுகளே காணப்படுகிறது.

தந்தைக்கும் மகளுக்குமான உறவு இந்தத் தலைமுறையில் மிகவும் மாறியிருக்கிறது. பெண்ணைப் படிக்கவைப்பது. வேலைக்கு அனுப்பி வைப்பது, விரும்பியவரை திருமணம் செய்து தருவது எனத் தந்தை மிகவும் மாறியிருக்கிறார். தந்தையை ஒரு தோழனைப் போலப் பெண்கள் நினைக்கிறார்கள். தந்தைக்குச் சவரம் செய்துவிடும் மகளைப் பற்றி நானே ஒரு கதை எழுதியிருக்கிறேன்.
தந்தையைப் பற்றி உயர்வாக எழுதப்பட்டவை யாவும் பெண்களால் எழுதப்பட்டதே. அபூர்வமாக ஆண்களில் ஒரு சிலர் தந்தையின் தியாகத்தை, பொறுப்புணர்வை உருகி எழுதியிருக்கிறார்கள். பொதுவில் தந்தையோடு கொண்ட வெறுப்பு, பிணக்கு தான் அதிகம் எழுதப்பட்டிருக்கிறது.
தந்தை ஒரு தலைமுறையின் அடையாளம். அவரது வெற்றி தோல்விகள் பிள்ளைகளின் மீது படிவதை தவிர்க்க முடியாது. தந்தையின் அவமானங்களைப் பிள்ளைகள் அறிவதில்லை. தந்தை ஒரு பிரபலமாக இருந்தால் அந்த நிழல் தன் மீது விழக்கூடாது எனப் பிள்ளைகள் நினைக்கிறார்கள். அது சரியே.
வீட்டில் அரசனைப் போல உத்தரவுகள் போடும் தந்தை, அலுவலகத்தில் கைகட்டி நிற்பதுடன் கூப்பிட்ட குரலுக்கு ஓடுவதும், தேநீர் வாங்கித் தருவதையும், உட்கார நேரமில்லாமல் கால்நடுக்க நிற்பதையும் கண்ட எனது நண்பன், தன் இயலாமையைத் தான் அப்பா வீட்டில் காட்டுகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று சொன்னான். அது தான் உண்மை.
தந்தையாக நடந்து கொள்ளும்போது ஒருவன் கண்ணுக்குத் தெரியாத சுமைகளைச் சுமக்க துவங்கிவிடுகிறான். கற்பனை பயத்தில் உலவ ஆரம்பிக்கிறான். மகன் அல்லது மகளை இப்படித் தான் உருவாக்க வேண்டும் என்று கனவு காணுகிறான். பெரும்பான்மை தந்தையின் கோபத்திற்குக் காரணம் முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதில் தானிருக்கிறது. என்ன படிக்க வேண்டும் என்பதில் துவங்கி, என்ன உடைகள் வாங்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்பது வரை தானே முடிவு செய்ய வேண்டும் எனத் தந்தை நினைக்கிறார். இன்று தான் அந்த மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
ஒரு மகள் பிறந்தவுடன் அவளது திருமணத்தைப் பற்றித் தந்தை கனவு காணத்துவங்கிவிடுவான். அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான் என்று, சீனர்கள் சொல்கிறார்கள். யியுன் லி எழுதிய சீனச் சிறுகதையில், அமெரிக்காவில் வாழும் மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் எனத்
தனியே வாழுகிறாளே என்று தந்தை கவலை அடைகிறார். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று, தேடி வருகிறார். அவளோ என் வாழ்க்கையை நான் தீர்மானித்துக் கொள்வேன். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று கேட்கிறாள். இந்தக் கவலை இன்று உருவானதில்லை. அது நீ பிறந்த நாளில் இருந்து உருவானது என்கிறார், தந்தை. அது தான் மேற்சொன்ன நம்பிக்கையின் அடையாளம்.
சீனத் தந்தையிடமிருந்து தமிழகத்திலுள்ள தந்தைகள் வேறுபட்டவர்களில்லை. மகள் மீது கூடுதல் அன்பு தந்தைக்கு இயல்பாகவே இருக்கிறது. மகளும் தாயை விடத்தந்தையை அதிகம் நேசிக்கவே செய்கிறாள்.
புத்தனாவது சுலபம் என்றொரு சிறுகதையைஎழுதியிருக்கிறேன். அது இன்றைய தந்தையின்மனநிலையை விளக்ககூடியது. தன்னையும் மகனையும் பிரிப்பது மகன் வைத்திருக்கும் பைக் எனத் தந்தை நினைக்கிறார். தன் விருப்பங்களை ஏன் மகன் புறக்கணிக்கிறான் என்று புரியாமல் தடுமாறுகிறார். மகனைப் பற்றிக் காரணமில்லாமல் பயப்படுகிறார். இது நம் காலத்தின் குரல் இந்தத் தலைமுறையில் மகனோ, மகளோ தந்தையைப் புரிந்து கொண்ட அளவில் சென்ற தலைமுறையில் புரிதல் ஏற்படவில்லை.

தந்தை பெரும்பாலும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர். மொழியற்றவர். அவரது கெடுபிடிகளும் கோபமான பேச்சும், தோரணையும், உத்தரவுகளும் அவர் மீதான அச்சத்தை எப்போதும் மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிடுகிறது. தந்தை தன் மீது கொண்டிருக்கும் அன்பை பலரும் கடைசிவரை தெரிந்துக் கொள்ளாமலேயே போவதுதான் வேதனை.
உதிரிப்பூக்கள் படத்தில் வரும் விஜயன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் அந்த வீடு கலகலப்பாக மாறும். அப்படித்தான் பெரும்பான்மை குடும்பங்களில் இன்றும் நிலைமை இருக்கிறது.
இந்தத் தலைமுறையில் பிள்ளைகளுடன் அன்றாடம் உரையாடவும், அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளவும், கூடி விவாதிக்கவும் நண்பர்களைக் கொண்டாடவும் ஒன்றாகப் பயணிக்கவும் பெற்றோர்கள் தயராகியிருக்கிறார்கள். அந்த மாற்றம் உறவில் புதிய சந்தோஷத்தை உருவாக்கியிருக்கிறது
மகன் அல்லது மகளின் வெற்றியை உருவாக்குவதில் தந்தைக்குள்ள பங்கு மிக முக்கியமானது. விளையாட்டு வீரர்களைப் பாருங்கள். தன் மகன் விரும்பும் விளையாட்டில் அவனை வெற்றியடையச் செய்ய அவனது தந்தை விடிகாலையில் அவனுடன் மைதானத்திற்கு ஓடுகிறார்.தேவையான உதவிகள் செய்கிறார். போக வேண்டிய ஊர்களுக்கு எல்லாம் அழைத்துப் போகிறார். கடன் வாங்குகிறார். கஷ்டப்படுகிறார். மகன் அடையும் வெற்றிதான் அவரது ஒரே கனவு. டெண்டுல்கரின் தந்தை அப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறார். தங்கல் என்ற இந்தி திரைப்படம் அப்படி ஒரு தந்தையினைத் தானே காட்டுகிறது.
காய்ச்ச மரம் என்றொரு சிறுகதையைக் கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார். தன் பிள்ளைளை ஒரு தந்தை எவ்வளவு நேசிக்கமுடியும். அப்படிபட்ட தந்தை தாயை பிள்ளைகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை, மிகவும் உருக்கமாக எழுதியிருப்பார். அப்படி முதுமையில் துரத்தப்பட்ட தந்தைகள் வேதனைக்குரியவர்கள்.
ஷேக்ஸ்பியரின் கிங் லியர் தான், தந்தை பிள்ளைகளிடம் எதைக் கேட்க கூடாது. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம். கிங் லியரின் மனைவில ஒரு போதும் பிள்ளைகளிடம் அப்படி தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று கேட்டிருக்கமாட்டாள்.
பண்பாடும் சமூகமும் தந்தைக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பயம் எளிதானதில்லை. ஊடகங்கள் அந்த பயத்தை அதிகமாக்குகின்றன. ஆனால், இந்த பயம் அர்த்தமற்றது. தந்தை நாற்பது வயதில் அடைந்த வெற்றியை. உயரத்தை, பையன் இருபது வயதிலே அடைந்துவிடுகிறான். அது தான் இந்தத் தலைமுறையின் சாதனை.
நிறைய இளைஞர்கள் தன் தந்தையின் விருப்பத்தைப் புரிந்து அவரைத் தோழனாக நடத்துகிறார்கள். தந்தையிடம் ரகசியங்களை மறைப்பதில்லை. பணம் கேட்பதும் பணம் கொடுப்பதும் அத்தனை எளிதாக மாறியிருக்கிறது. தந்தையும் வயதை உதறி இளமையின் உற்சாகத்துடன் நடந்து கொள்கிறார். அந்த மாற்றம் தான் நம் காலத்தில் உறவில் ஏற்பட்ட புதிய வரவு என்று சொல்வேன்
••
அந்திமழை இதழில் வெளியான கட்டுரை. ஜனவரி 2021
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
