S. Ramakrishnan's Blog, page 142
February 16, 2021
காட்டு வாத்துடன் பறந்து செல்வேன்
– ஜப்பானிய எழுத்தாளர் கென்ஸாபுரோ ஒயி நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி
தமிழில் எம்.எஸ்.

குழப்பம் நிறைந்த முதல் உலக மகா யுத்தத்தின் போது நான் ஒரு சிறு பையனாயிருந்தேன். இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில், ஜப்பான் தீவுக்கூட்டத்தில் ஷிக்கோகு தீவின் தனிமையான மரங்களடர்ந்த பள்ளத்தாக்கில் வசித்து வந்தேன். அப்போது இரண்டு புத்தகங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. The Adventures of Huckleberry Finn மற்றும் The Wonderful Adventures of Nils.
இந்த உலகம் முழுவதையும் அப்போது பயங்கரம் அலையாக சூழ்ந்திருந்தது. இரவில் காட்டுக்குள் சென்று, வீட்டில் கிடைக்காத பாதுகாப்புடன் மரங்களிடையே உறங்கியதை என்னால் நியாயப்படுத்த முடிந்தது. The Adventures of Nilsன் முக்கிய பாத்திரம் ஒரு சிறிய பிராணியாக உருமாறிப் பல வீரதீரச் செயல்கள் புரிந்தது. பறவைகளின் மொழியை அது அறிந்திருந்தது. அந்தக் கதையிலிருந்து பலவிதமான மகிழ்ச்சியைப் பெற்றேன். முதலில், ஷிக்கோகு தீவில் அடர்ந்த காட்டில் வெகு காலத்திற்கு முன் என் முன்னோர்களை போல வாழ்ந்ததில் இந்த உலகமும் இந்த மாதிரி வாழ்க்கையும் உண்மையிலேயே விடுதலை அளிப்பதான ஒரு தோற்றத்தைத் தந்தது. இரண்டாவதாக, நில்ஸ் என்ற அந்த கதாபாத்திரம். ஸ்வீடனில் யாத்திரை செய்யும்போது காட்டு வாத்துக்களுடன் சேர்ந்து, அவைகளுக்காகப் போராடி, தன்னை ஒரு சிறுவனாக மாற்றிக் கொண்டு, அப்போதும் ஒன்றும் அறியாதவனாக, முழு நம்பிக்கையும் அமைதியும் கொண்டவனாய் இருந்த அந்தக் குறும்புக்காரச் சிறுவனிடம் நான் இரக்கப்பட்டதுடன், என்னை அவனாகவே உணரவும் செய்தேன். கடைசியில் தன் வீட்டுக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் நில்ஸ் தன் பெற்றோர்களிடம் போகிறான். அந்தக் கதையிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சி அதன் மொழியில் இருந்துதான். ஏனெனில் நில்ஸுடன் சேர்ந்து பேசும் போது நானும் புனிதமடைந்ததாய், உயர்ந்து விட்டதாய் உணர்ந்தேன். அவனது பேச்சு இவ்வாறு இருந்தது:

“அப்பா, அம்மா! நான் ஒரு பெரிய பையனாகிவிட்டேன். நான் மீண்டும் மனிதனாகி விட்டேன்” என்று கத்தினான். குறிப்பாக “நான் மீண்டும் மனிதனாகி விட்டேன்” என்ற சொற்கள் என்னைக் கவர்ந்தன.
நான் வளர்ந்த பின்னர், வாழ்வின் பல்வேறு நிலைகளில், பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது – குடும்பத்தில், ஜப்பானில் சமூகத்துடன் என் உறவில், பொதுவாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் என் வாழ்க்கை முறையில். எனது இந்த கஷ்டங்களை எனது நாவலில் இடம் பெறச் செய்ததன் மூலம் நான் உயிர் பெற்று விட்டேன். அப்படிச் செய்ததன் மூலம், ‘நான் மீண்டும் மனிதனாகி விட்டேன்’ என்பதைச் சற்று பெருமூச்சு விட்டபடியே, திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டேன்.
இம்மாதிரியெல்லாம் என்னைப் பற்றிக் கூறிக்கொள்வது இந்த இடத்துக்குப் பொருத்தமில்லாமல் இருக்கலாம். அதுவும் இந்த சந்தர்ப்பத்தில் இருந்தாலும், எனது எழுத்தின் அடிப்படைத் தன்மை எனது சொந்த விஷயத்தில் இருந்தே தொடங்குகிறது. பின்னர்தான் சமூகத்துடன் தொடர்புகொண்டு, அதன்பின் நாட்டுடனும் உலகத்துடனும் இணைகிறது. எனது சொந்த விஷயங்களை சற்று விரிவாகவே கூறுவதற்காக என்னை மன்னித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
அரை நூற்றாண்டுக்கு முன், அந்த அடர்ந்த காட்டின் உள்ளே இருந்தபடி நான் The Adventures of Nils படித்தபோது இரண்டு தீர்க்கதரிசனங்களை உணர்ந்தேன். ஒன்று, நான் எப்போதாவது ஒருநாள் பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்வேன். இரண்டு, நான் எனது பிரியமான காட்டு வாத்துடன் பறந்து செல்வேன் – குறிப்பாக ஸ்கான்டிநேவியாவுக்கு.

எனக்குத் திருமணமாகி, பிறந்த முதல் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியிருந்தது. ஹிக்காரி என்று அதற்குப் பெயரிட்டிருந்தோம். ஜப்பானிய மொழியில் அதற்கு ‘ஒளி’ என்று பொருள். குழந்தையாயிருக்கும்போதே அவனுக்கு மனிதக் குரல்களை புரிந்து கொள்ளும் திறனற்றிருந்தது. ஆனால் பறவைகளின் ஒலியை நன்கு புரிந்து கொண்டான்.
அவனுக்கு ஆறு வயது இருக்கும் போது ஒரு கோடைக் காலத்தில் நாங்கள் எங்கள் கிராமத்துச் சிறிய வீட்டில் தங்கியிருந்தோம். ஒரு புதருக்கு அப்பால் ஏரியில் இரண்டு நீர்க்கோழிகள் தங்கள் இறக்கைகளை உதறும் ஒலியை அவன் கேட்டான்.
உடனே, “அது நீர்க்கோழி” என்றான் ஏதோ அறிவிப்பாளன் போல.
இதுதான் அவன் பேசிய முதல் வார்த்தைகள்.
அதன் பின்னர்தான் நானும் என் மனைவியும் எங்கள் மகனுடன் மனித மொழியில் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.
ஹிக்காரி இப்போது ஊனமுற்றோருக்கான தொழிற் பயிற்சி நிலையமொன்றில் பணிபுரிகிறான். ஸ்வீடனில் நாங்கள் கற்றுக்கொண்ட சில கருத்துக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் அது. இதற்கிடையில் அவன் இசையமைக்கத் தொடங்கியிருந்தான். மனிதருக்கான இசையை அமைப்பதில் அவனுக்குத் தூண்டுகோலாயிருந்தது பறவைகளே.
எப்போதாவது ஒருநாள் நான் பறவைகளின் மொழியை அறிந்து கொள்வேன் என்ற எனது பழைய தீர்க்கதரிசனம் என் சார்பாக அவன் நிறைவேற்றி வருகிறான்.
அத்துடன், என் மனைவியின் அளப்பரிய பெண் வலிமையும் அறிவும் இல்லாவிடில் எனது வாழ்க்கையே நாசமாகியிருக்கும் என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
நில்ஸின் காட்டு வாத்துக்களின் தலைவியான அக்காவின் மறுபிறவியே அவள். அவளுடன் நான் ஸ்டாக்ஹோமுக்குப் பறந்து வந்திருக்கிறேன்.
அதன் மூலம் என் இரண்டாவது தீர்க்க தரிசனமும் இப்போது நிறைவேறுகிறது.
February 15, 2021
நீலம் இதழில்
ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகளை நீலம் இதழ் வெளியிட்டு வருகிறது.
அதில் எனக்குப் பிடித்த தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் குறித்து எழுதியிருக்கிறேன்.
பிப்ரவரி 2021 நீலம் இதழில் வெளியாகியுள்ளது.

திரைப்படவிழாவில்
சென்னையில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் பிப்ரவரி 19 மாலை மூன்று மணிக்கு உரையாற்றுகிறேன்.
சத்யம் திரையரங்கிலுள்ள சிக்ஸ் டிகிரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

கற்றுத் தரும் உலகம்
பத்திரிக்கையாளரும் எனது நண்பருமான ஜென்ராம் புதிய யூடியூப் சேனல் ஒன்றினைத் துவக்கியுள்ளார்.
அந்தச் சேனலுக்காக ஜென் ராம் அவர்களுடன் Life in a day ஆவணப்படம் குறித்து உரையாடினேன்.
February 14, 2021
தாகூரைப் பற்றி
சொல்வனம் இணைய இதழ் சார்பில் வங்காள இலக்கியத்திற்கான சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார்கள்.

மிகச்சிரத்தையாக, விரிந்த தளத்தில் செறிவாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு இளம்வாசகனுக்கு இந்தச் சிறப்பிதழ் பெரும்பொக்கிஷமாகவே அமையும்.
சொல்வனம் ஆசிரியர் குழு சிறப்பான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த பாஸ்டன் பாலா, நம்பிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குழுவினர், பங்களித்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
இந்தச் சிறப்பிதழுக்காக அற்புதமான லோகோ அமைத்தவருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்.

சொல்வனம் இதழில் சத்யஜித்ரே இயக்கிய தாகூர் பற்றிய ஆவணப்படம் குறித்து எழுதியிருக்கிறேன்.
தாகூரின் கூப்பிய கரங்கள்
ஜப்பான் நினைவுகள்
ஒரு புகைப்படத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2014ல் ஜப்பான் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சேமிப்பு பழைய ஹார்ட் டிஸ்க் ஒன்றில் இருப்பதைக் கண்டேன். அவற்றை இரவில் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை இனிமையான நாட்கள். இனிய நினைவுகள். எவ்வளவு அற்புதமான நண்பர்கள்.

ஜப்பானுக்குத் தனது வேலை நிமித்தம் சென்ற இளைஞர்களில் சிலர் ஒன்றுகூடி முழுமதி அறக்கட்டளை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்வழியே தமிழ் கற்றுத்தருவது, இலக்கிய நிகழ்ச்சிகள் செய்வது. தமிழகத்திலுள்ள கிராமப்புற கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வது. தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பது என ஆரோக்கியமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் அழைப்பின் பெயரால் தான் ஜப்பான் சென்றிருந்தேன்.
ஒரு சின்னஞ்சிறிய அமைப்பு தங்கள் கைப்பணத்தை செலவு செய்து ஆண்டுதோறும் எழுத்தாளர்களை ஜப்பானுக்கு வரவழைத்துப் பொங்கல் விழா கொண்டாடுவது பாராட்டிற்குரிய விஷயம்.

இன்று நினைத்துப் பார்க்கும் போதும் அவர்களின் வரவேற்பும் அன்பும் ஒருங்கிணைப்பு செய்த விதமும் அளவற்ற நேசத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ஒவ்வொருவரும் என் நினைவில் பசுமையாகப் பதிந்து போயிருக்கிறார்கள்.

அருள், மணிமாறன், செந்தில்,துரைப்பாண்டி, பாலு, அவரது மனைவி, வேல்முருகன் அவரது துணைவியார், பாலா, சதீஷ் என அன்பான நண்பர்கள். தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜீவானந்தம் அவரது துணைவியார் சரஸ்வதி என நேசமான மனிதர்கள்.

கோவிந்த் எனது நண்பன் ராஜகோபாலின் மாமா. மிகச்சிறந்த இலக்கிய வாசகர். நீண்டகாலம் ஜப்பானில் வசிப்பவர். எனது நண்பர் ஜென் ராமின் சகோதரர். இன்றும் அவர் சென்னை வரும்போது நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்.




ஜப்பானில் மிகச்சிறந்த உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் நண்பர் குறிஞ்சில் பாலாஜி. சென்னையிலும் இவர்களின் உணவகம் மற்றும் தங்குமிடம் செயல்படுகிறது. மிகப் பாசமான மனிதர். ஜப்பான் பயணத்தின் போது சிறப்பான உணவு கொடுத்து உபசரித்த அவரது நேசத்தை மறக்க இயலாது

ஜப்பானுக்குச் சென்றிருந்த போது டோக்கியோ செந்தில் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மிகுந்த ஆர்வமாக இலக்கியம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றார். ஹிரோஷிமாவிற்கு ஒன்றாகப் பயணம் செய்தோம். இன்று அவர் எழுத்தாளராகியிருக்கிறார். இசூமியின் நறுமணம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.


முழுமதி நண்பர்கள் அனைவரையும் இந்த இரவில் நிறைந்த அன்போடு நினைத்துக் கொள்கிறேன். உங்கள் நற்செயல்கள் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
••
February 12, 2021
மூத்தோர் பாடல் -2 காதலின் கானல் உருவங்கள்.
கலித்தொகையிலுள்ள பாலைக்கலி ஒன்பதாவது கவிதையை வாசிப்பதற்கு முன்பு ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
கொதிக்கும் வெயில் பரந்த பாலை நிலத்தில் காதல் வசப்பட்ட ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் வீட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். உடன்போக்குதல் பாலையின் இயல்பு.

அப்படித் தான் அந்த இளைஞனும் பெண்ணும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் செல்கிறார்கள்.
நடந்தால் மட்டுமில்லை. அதைப்பற்றி நினைத்தாலே சுடக்கூடியது பாலை நிலம்.
பாலையின் கடுமை அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த இளம்பெண்ணுக்கு முழுமையாகத் தெரியாது. அவள் பாலை நிலத்திலே பிறந்து வளர்ந்தவள் என்பதால் பாலையின் வெயில் குடித்து வளர்ந்திருக்கக் கூடும். தைரியமிக்கவளாக இருந்திருப்பாள். பாலை நிலத்துப் பெண்களுக்கே உரித்தான உயர்ந்த தோற்றம். மெலிந்த உடல். கத்தி போன்ற நடை. அச்சமற்ற கண்களுடன் அவளிருந்திருப்பாள். ஆனால் முதன்முறையாக பாலையைக் கடந்து போகிறாள்.
அந்தப் பெண்ணை அந்த இளைஞன் எப்படிக் காதலித்தான்.. எவ்வளவு நாள் காதலித்தான். யார் முதலில் காதலைச் சொன்னது. எதுவும் தெரியாது. சினிமாவின் முதற்காட்சியைப் போல அவர்கள் ஊரைவிட்டு ஒடுகிறார்கள்.
பாலையைக் கடந்து செல்வது எளிதானதில்லை. துணிவு தான் காதலின் ஒரே ஆயுதம். துணிந்தவர்களால் தான் காதலில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. தயங்கித் தயங்கி மனதிற்குள் பூட்டி வைத்த காதல் தோல்வியில் தான் முடியும். காதலித்த பிறகு தயங்குகிறவர்களால் ஒரு போதும் காதலித்தவரைத் திருமணம் செய்ய முடியாது. ஆனால் இந்த இளைஞனும் பெண்ணும் துணிந்து பெற்றோரை விலகி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் புறப்பட்டுவிட்டார்கள்.
மழை இல்லாது வறண்ட நிலம், குடிக்கத் தண்ணீர் கிடைக்காத நிலையில் நாவறட்சி தாங்கமுடியாமல் தன் கண்ணீரால் நாவின் வறட்சியைப் போக்கிக் கொள்ளும் அளவிற்கான செந்நாய் உலவும் வெங்காடு.
சுட்டெரிக்கும் சூரியனையோ, வெக்கையை வாறிச்சுழற்றும் காற்றினையும் நிழல் இல்லாத பெருவெளியினையும் அவனால் என்ன செய்யமுடியும். இப்படி வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு ஜோடிக்குக் கல்யாணம் நடந்த போது நான் போயிருக்கிறேன். அந்தப் பெண்ணும் பையனும் தங்கள் பெற்றோர்களுக்குப் பயந்து விடியும் வரை ஒரு வாடகைக்காரிலே சுற்றிக் கொண்டிருந்தார்கள். பிள்ளையார் கோவிலில் வைத்துத் திருமணம். அந்தப் பையன் சார்பில் நாலைந்து நண்பர்கள் வந்திருந்தோம்.

பெண்ணுடைய சார்பில் ஒருவருமில்லை. திருமணம் செய்து கொள்ளும்வரை பதற்றமாக இருந்த பெண் கழுத்தில் மலையேறியதும் தனக்கென ஒருவர் கூட இல்லையே என்று அழுதார். நாங்கள் எவ்வளவு சமாதானப்படுத்திய போதும் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. திருமணத்திற்குச் சாட்சி வேண்டும் என்பதற்காகப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். பக்கத்திலிருந்த சரவண பவனில் மதிய உணவு சாப்பிட்டார்கள்.
அந்தப் பெண்ணால் ஒரு கவளம் சோற்றை விழுங்க முடியவில்லை. அந்தப் பையன் அவளுக்கு ஊட்டிவிட்டான். அப்போதும் அவள் அழுதாள். கல்யாணச் சாப்பாடு பற்றிய கனவு எல்லோருக்கும் கைகூடுவதில்லை தானே. பெற்றோர்களுக்குப் பயந்து உடனே அவர்கள் ரயிலேறி வேறு மாநிலத்திற்குப் போய்விட்டார்கள்.
பிறகு சண்டை சச்சரவுகள் நடந்து அவர்களைக் குடும்பம் ஒதுக்கி வைத்தது. இரண்டு வருஷம் வட இந்தியாவில் போய் வேலை பார்த்தார்கள். கஷ்டப்பட்டார்கள். பின்பு நல்ல வேலை கிடைத்தது. பையன் பிறந்தான். மும்பை டெல்லி என மாறிமாறி சென்றார்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இரண்டு பிள்ளைகள். வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன. பெண்ணின் பெற்றோர் சமாதானமாகிவிட்டார்கள். பையன் வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. இன்றும் சில நாட்கள் தங்கள் திருமணத்தின் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்து அந்தப் பெண் அழுகிறாள். காதலின் சந்தோஷம் கண்ணீரால் தான் எழுதப்படுகிறது போலும்
இந்த ஆணும் பெண்ணும் பாலையில் செல்லும் போது வழிப்போக்கர்களாக வரும் வைணவத் துறவிகளைச் சந்திக்கிறார்கள். துறவிகள் பாலையில் எங்கே போகிறார்கள்.. யாசிப்பதற்குப் பாலைநிலத்தில் என்ன இருக்கிறது. ஒருவேளை அவர்கள் திருமாலை வழிபடுவதற்காகச் செல்லும் யாத்ரீகர்களாக இருக்கக்கூடும்.
துறவிகளிடம் அந்தக் காதல் ஜோடி ஏதாவது உதவி கேட்டார்களா அல்லது துறவிகளோ இந்தப் பாலை நிலத்தில் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் நடந்து போகிறார்களே என்று விசாரித்தார்களா என்று தெரியாது. ஆனால் அவர்களுக்குள் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறது. துறவிகளிடம் ஒருவேளை அந்தப் பெண் உண்மையைச் சொல்லியிருக்கலாம். துறவிகள் உணவும் குடிநீரும் கொடுத்து இருக்கலாம். அந்தத் துறவிகளை விட்டு காதல் ஜோடி விலகி தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்
இந்தக் காட்சி திரைப்படத்தில் வருவது போலக் கண்முன்னே விரிகிறது. பாலைநிலத்தினுள் இரண்டு ஈரமான காட்சிகள். துறவிகளின் வருகை மழை வருவதைப் போன்றது. காதல் ஜோடிகளின் பயணம் வானவில் தோன்றுவதைப் போன்றது. காதல் ஜோடிக்குத் துறவிகள் ஏதாவது அறிவுரை சொன்னார்களா எனத் தெரியவில்லை. ஆனால் துறவிகளும் காதலைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது
இந்தக் காட்சியை மனதின் மூலையில் வைத்துக் கொண்டு கலித்தொகையின் ஒன்பதாவது பாடலைப் பாருங்கள். பாலைபாடிய பெருங்கடுக்கோ பாடியது. இவர் ஒரு சேரமன்னர் என்கிறார்கள். இவரது 58 பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. எல்லாப் பாடல்களும் ஒருவர் எழுதியது தானா அல்லது பாலை பாடிய பெருங்கடுங்கோ எனப் பாண்டி நாட்டில் ஒருவரும் சேர நாட்டில் ஒருவரும் இருந்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
சேர மன்னர் என்றால் ஏன் பாலையை மட்டும் பாடியிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் பாலையை முதலில் இடம்பெறச் செய்திருக்கிறார். இதை அன்றைய கவிகள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்று வியப்பாகவே இருக்கிறது.
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை 5
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும?
வைணவத் துறவி:
காணேம் அல்லேம்! கண்டனம்! கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய, 10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15
நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20
என, ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇ சென்றனள்,
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே
என்று பாடல் இரண்டு காட்சிகளை விவரிக்கிறது.
முதற்காட்சியில் உலர்ந்த நத்தை ஓடு போலக் காணப்படும் பாலைநிலத்துக் கிராமம் ஒன்றைத் துறவிகள் கடந்து போகும் வழியில் ஒரு தாய் அவர்களிடம் ஒரு இளம்பெண்ணும் பையனும் போவதை வழியில் கண்டீர்களா என்று கேட்கிறாள்.
அவள் கேள்வியில் கோபம் வெளிப்படவில்லை. கவலையே வெளிப்படுகிறது. அந்தக் காலத்தில் பூப்பு எய்தும் வரை தான் பெண் தாயின் பொறுப்பில் வளர்ந்தாள். அதன்பிறகு செவிலித்தாய் தான் அவளை வளர்ப்பாள். இங்கே துறவிகளிடம் கேட்பவளும் செவிலித்தாயே. அவளுக்குத் தான் இளம்பெண்ணின் மனதும் காதலும் புரிகிறது. அவளுக்குத் தன் மகளின் காதலனைப் பிடிக்கவில்லை. எவளோ ஒருத்தியின் மகன் என்று என்றே குறிப்பிடுகிறாள். ஒருவேளை பொய் கோபமாகவும் இருக்கக்கூடும். அந்தக் காதலர்கள் நீண்டகாலமாகவே காதலித்து வந்திருக்கிறார்கள். அதைச் செவிலித்தாய் சொல்வதன் வழிய உணரமுடிகிறது
அதாவது நேற்றுவரை என் மகளும், வேறொருத்தியின் மகனும் மற்றவர் அறியாது தமக்குள் கூடியிருந்தார்கள். இன்றோ மற்றவர் அறியுமாறு ஒன்றாக வெளியேறிச் சென்றுவிட்டார்கள் என்கிறாள்

வைணவத் துறவிகள் வழியில் காதல் ஜோடியைக் கண்டதை ஒத்துக் கொள்கிறார்கள். துறவிகள் பொய் சொல்லாதவர்கள். ஆகவே கண்டதைச் சொல்லுகிறார்கள். துறவிகளிடம் கேட்டால் நிச்சயம் உண்மையைச் சொல்வார்கள் என்று அறிந்து தான் அந்தச் செவிலித்தாய் கேட்டாளோ என்னவோ, இளஞ்ஜோடிகளைப் பற்றித் துறவிகள் தரும் பதில் வியப்பாக இருக்கிறது
அது பாடலின் இரண்டாம் பகுதி.
அழகிய அணிகளை அணிந்த இளம் பெண்ணின் தாயே, மலையில் விளையும் சந்தனத்தால் மலைக்கு என்ன பயனிருக்கிறது. பயன்படுத்துகிறவர்களுக்குத் தானே சந்தனம் வாசம் தருகிறது. கடலில் விளையும் முத்தால் கடலுக்கு என்ன பயன். மாலையாக்கி அணிபவர்களுக்குத் தானே முத்து அழகைத் தருகிறது. யாழில் இசை பிறந்தாலும் யாழுக்கு என்ன பயன். கேட்பவருக்குத் தானே இனிமையாக இருக்கிறது. ஆகவே உன் மகள் தன் காதலனுடன் சென்றது சரியே. சந்தனமரத்தை வளர்ந்த மலையைப் போல, முத்தை விளைவித்த கடலைப் போல, இசை தந்த யாழைப் போல நீ இருப்பதே சரி என்கிறார்கள்
துறவிகளின் இந்தப் பதில் செவிலித்தாயிற்குச் சமாதானம் அளித்திருக்காது. அவள் உண்மையில் துறவிகளிடம் கேட்க விரும்பியது தன் மகள் பாதுகாப்பாக இருக்கிறாளா. வழியில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டதா என்று தானோ.
துறவிகள் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் சொல்லும் பதிலில் இருக்கிறது.
இவ்வளவு வெளிப்படையாகத் துறவிகள் காதலுக்கு ஆதரவு தருவது வியப்பளிக்கிறது. துறவிகளும் காதலை வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சமாகவே கருதுகிறார்கள். போற்றுகிறார்கள்.
தாயே நீ வருந்தாதே, உன் மகள் சிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளாள், அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும் என்கிறார்கள்.
இந்தப் பதிலில் அந்தக் காதலனுக்கும் துறவிகளுக்கும் இடையே உரையாடல் நடந்திருப்பதையும் அவர்களுக்குக் காதலன் பணிவிடைகள் செய்திருப்பதும் மறைந்து புலப்படுகிறது.
காதலின் பெருமையைத் துறவியின் வழியாகப் பேசவைத்திருப்பதே இந்தப் பாடலின் தனிச்சிறப்பு.
இந்தப் பாடலில் வரும் செவிலித்தாயிற்குத் தன் மகளின் காதல் தெரியும். அவள் இப்படி உடன்போக்குதலை மேற்கொண்டு விட்டாளே என்று தான் கவலை கொள்கிறாள். அந்தப் பெண்ணை பெற்ற தாய் என்ன நினைத்திருப்பாள். அல்லது தந்தை என்ன செய்தார் என்று பாடலில் இல்லை.
பாலைபாடிய பெருங்கடுக்கோவின் பாடல் முடிந்துவிட்டது. ஆனால் அந்தக் காட்சி நமக்குள் மறைவதில்லை.
அந்த இளம் ஜோடி எங்கே செல்வார்கள். வேறு நிலத்திற்குச் சென்று வாழுவார்களா. தன் நிலம்விட்டுப் போகிறவர்கள் திரும்பவும் சொந்த நிலத்திற்குச் சொந்த ஊருக்குத் திரும்புதல் எளிதானதா. வாழ்க்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இப்படிதான் இருந்திருக்கிறது. இன்றும் இப்படித் தானிருக்கிறது.
துறவிகள் சொன்ன அறிவுரையை செவிலித்தாய் மௌனமாகக் கேட்டுக் கொள்கிறாள். துறவிகளைக் கோவித்துக் கொள்ளவில்லை. இன்று நிலைமை தலைகீழாகவிட்டது. ஜாதி விட்டு ஜாதி காதலித்த குற்றத்திற்காகக் காதலன் கொல்லப்படுகிறான். காதலி எரிக்கப்படுகிறாள். வன்கொலைகள் நடக்கின்றன.
பாலை நிலத்து முரட்டு மனிதர்களிடம் கூடத் துறவிகளால் காதலின் இயல்பைச் சொல்லிப் புரிய வைக்க முடிந்திருக்கிறது. ஆனால் நிகழ்காலப் படித்த மனிதர்களிடம் தான் மூர்க்கமான குரூரம் நிரம்பியிருக்கிறது
வீட்டைவிட்டு ஓடும் எவராலும் தங்களின் இருபது வருஷ, இருபத்தைந்து வருஷ நினைவுகளை எடுத்துக் கொண்டு போக முடியாதே.
ஐங்குறுநூறு பாடலில் காதலனுடன் உடன்போக்கிய மகள் சிறுவயதில் விளையாடிய பொருட்களைப் பார்த்துப் பார்த்து செவிலித்தாய் வருந்துகிறாள். பிரிவு காதலர்களுக்கு மட்டுமேயானதில்லை. பெற்றோரையும் பீடிக்கக்கூடியதே.
கானல் உருவங்களைப் போல அந்தக் காதலர்கள் பாலைநிலத்தில் செல்லும் காட்சி மனதில் அழியாச்சித்திரமாக உருக்கொண்டிருக்கிறது. கலித்தொகையில் இப்படி உணர்ச்சிப்பூர்வமான நாடகத்தருணங்கள் நிறையவே இருக்கிறது.
காதலனுடன் ஓடிப்போன பெண்ணைப் பற்றி வேறு ஏதாவது தேசத்தில் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கிறதா, பாடல் இயற்றியிருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்
சீன இலக்கியத்தில் இப்படி ஒரு பாடலிருக்கிறது.
ஹ்சியாங்-ஜூ ஒரு இளம் கவிஞர், அவர் உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேலையை இழந்தார். ஒருநாள் அவர் பணக்காரனின் விருந்திற்குச் சென்று பாடினார். அந்தப் பாடலில் மயங்கிய பணக்காரனின் மகள் சோ வான்-சான் அவர் மீது காதல் கொண்டு அவருடன் ஓடிப்போனாள், அவர்கள் ஒன்றாக ஒரு மதுக்கடையை அமைத்து வாழ்ந்தார்கள். காலம் மாறியது. தனது காதல்கவிதைகளின் மூலம் ஹ்சியாங்-ஜூ புகழ்பெற்ற கவிஞராக மாறினார். பணத்திற்காகத் தனது காதல் கவிதைகளை விற்ற ஆரம்பித்தார். ஒரு ஆசைநாயகியைப் பெறுவதற்காகக் காதல்கவிதைகள் எழுத ஆரம்பித்தார். கணவனின் இந்த நடவடிக்கைகளைத் தாங்க முடியாமல் சோ வான்சான் ஒரு கவிதை எழுதியிருக்கிறாள்.
SONG OF SNOW-WHITE HEADS என்ற தலைப்பில் அந்தக் கவிதை வெளியாகியிருக்கிறது.
இது ஒரு பெண்ணின் பார்வையில் தன் காதலின் நினைவுகளைப் பேசுகிறது.
சங்க இலக்கியத்தில் வரும் செவிலித்தாய்க்கு எத்தனை வயது. அவளுக்குச் சொந்த மகள் கிடையாதா, அவள் ஏன் வளர்ப்பு மகள் மீது இத்தனை பாசம் வைத்திருக்கிறாள். அவளுக்கு வேறு துணை ஏதும் இல்லையா. ஒரு செவிலித்தாயின் கீழே ஊரிலிருந்த இளம்பெண்கள் யாவரும் ஒன்றாக இருந்தார்களா
பழங்குடி சமூகத்தில் இப்படியான பழக்கம் இருக்கிறது. வெர்யர் எல்வின் கோண்டு இனத்தில் இப்படியான பழக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறாரே. ஒரு கிராமத்தில் பல்வேறு சாதியினர் குடியிருந்து வந்த சூழலில் அவர்கள் வீட்டுப் பெண்கள் ஒன்றாக ஒரே இடத்தில் அல்லது ஒரே பெண்ணின் கீழே இருப்பதற்குச் சமூகம் அங்கீகரித்ததா.

செவிலித்தாயின் சொந்தவாழ்க்கையைப் பற்றி அதிகப்படியாக என்ன தகவல்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஒருவேளை சொந்த தாய் செவிலித்தாய் என்பது கவிதைக்காக உருவாக்கபட்ட தாய்மையின் இருவேறு படிமங்களா.
பொதுவாகச் சங்கக் கவிதைகளில் பயண வழியில் மானைக் காணுவார்கள். அல்லது ஏதாவது ஒரு விலங்கினைக் காணுவார்கள். அதைக் குறியீடாகச் சொல்லி காதலியோ, காதலனோ தனது நிலையை விளக்குவார்கள். இந்தப் பாடலில் ஒரு இளம் ஜோடியைத் துறவிகள் காணுகிறார்கள். துறவும் காதலும் எதிர்நிலையானது. இரண்டும் ஒரு புள்ளியில் சந்திப்பதில் தான் இந்தக் கவிதை புதியதாகிறது.
பாலை பாடிய பெருங்கடுக்கோ மன்னர் என்றால் காதல் திருமணத்தை அவர் சட்டமாக்கியிருக்கலாமே. மன்னர் ஏன் இப்படிப் பொதுவாகப் பேசுகிறார். பெருங்கடுக்கோ பாடல்களை ஒருசேர வாசித்தால் அவர் ஒருவராக இருக்கமுடியாது என்ற எண்ணமே தோன்றுகிறது.
தொகை நூல்களை இன்று தொகுப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அன்று எப்படி நானூறு கவிதைகளை ஒரு தொகுப்பாகத் தேர்வு செய்தார்கள். யாருக்கு அடுத்து யார் இடம்பெறுவது என்பதை எப்படி முடிவு செய்தார்கள். தொகைநூல் வெளியான போது என்ன சர்ச்சைகள் சண்டைகள் நடந்தன. எதுவும் நமக்குத் தெரியவில்லை.
இன்று ஒரு தொகுப்பில் நமது கதையோ, கவிதையோ இடம்பெற்றால் தொகுப்பின் ஒரு பிரதியும் ஐநூறு ரூபாயும் அனுப்பித் தருகிறார்கள். அன்று அகநானூறு புறநானூறு தொகுப்பில் இடம்பெற்றவர்களுக்குத் தகவல் எப்படித் தெரிந்திருக்கும். என்ன சன்மானம் கொடுத்திருப்பார்கள். எப்படிப் பிரதி கைவசமாகியிருக்கும்.
தொகுப்பில் ஒரேயொரு பாடல் மட்டுமே இடம்பெற்ற கவிஞர் ஒரு பாடல் தான் எழுதியிருப்பாரா என்ன. அவரது மற்ற பாடல்கள் ஏன் காலத்தில் நிற்கவில்லை.
தொகுப்பில் இடம்பெறாத முக்கியக் கவிஞர்கள் என்னவாகியிருப்பார்கள். கவிதை எழுதுகிற மன்னரும் கவிதை எழுதுகிற கொல்லரும் ஒன்றாகப் பழகியிருப்பார்களா, ஒன்றாகச் சேர்ந்து சுற்றியிருப்பார்களா,
இப்படி நிறையக் கேள்விகள் எழுகின்றன. நிறையப் பதில்களும் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தப் பதில்கள் எனக்குத் திருப்தி தரவில்லை. குறுந்தொகை பாடலும் ஜப்பானியச் செவ்வியல் கவிதையும் ஒன்று போல இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சீனாவின் தொகைநூல்களும் நமது தொகை நூல் மரபும் ஒன்று போலத் தானே இருக்கிறது.
தேனடையில் எந்தப் பக்கம் பிய்த்துத் தின்றாலும் இனிப்பாக இருப்பது போலச் சங்க இலக்கியத்தில் எதைப்படித்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
••
February 11, 2021
தேசாந்திரி புதிய வெளியீடுகள் -4
புத்தக வாசிப்பை ஒரு விளையாட்டாக மாற்றக்கூடிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய வெளியாகியிருக்கின்றன. ரஷ்ய சிறார் நூல்களில் இது போன்ற முயற்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. தமிழில் இது போன்ற கதாவிளையாட்டுகள் இல்லை. ஆகவே முதன்முயற்சியாக ஒரு கதையைப் படிக்கும் வாசகர் கையில் ஒரு பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப கதையின் பாராக்களை படித்துப் போனால் எப்படியிருக்கும் என்ற சுவாரஸ்யமான விளையாட்டினை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது.
வீடியோ கேம் ஒன்றினை நீங்கள் புத்தகமாக உருமாற்றினால் எப்படியிருக்கும் என்பதன் அடையாளமே அபாய வீரன்.
அபாய வீரன்

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -3
குறத்தி முடுக்கின் கனவுகள்
ஜி.நாகராஜன், சம்பத், காசியபன்,ஹெப்சிபா ஜேசுதாசன், வண்ணதாசன்,லா.ச.ரா, பஷீர், அக்ஞேயா, எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

பேசத் தெரிந்த நிழல்கள்
உலகப் புகழ்பெற்ற ஆவணப்படங்கள். மற்றும் ஆசிய நாடுகளின் முக்கிய திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு.

இருள் இனிது ஒளி இனிது
பெட்ரிக்கோ பெலினி ,இங்மர் பெர்க்மன், அகிரா குரோசவா, டேவிட் லீன் போன்ற உலகப்புகழ்பெற்ற இயக்குநர்களின் முக்கியத் திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

பறவைக் கோணம்
தமிழ் திரையிசைப் பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.
இன்றும் இந்தப் பாடல்களைக் கேட்கும் போது காலத்தின் பின்னே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது
சினிமா பாடல்கள் நம் வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்டவை. அவற்றின் தாக்கமும் சந்தோஷமும் அலாதியானது.

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -2
சித்தார்த்தா
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலை கவிஞர் திருலோக சீதாராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அதன் புதிய பதிப்பை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. ஹெஸ்ஸே குறித்த விரிவான அறிமுகம் மற்றும் சித்தார்த்தா நாவல் பற்றிய எனது விரிவான அறிமுக கட்டுரையுடன் இந்த நூல் வெளியாகிறது. இதற்கு அனுமதி தந்த திருலோக சீதாராம் குடும்பத்தினருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துறவு வாழ்க்கையை மேற்கொள்ளச் செல்லும் சித்தார்த்தன் என்ற இளைஞன் நாவலில் பகவான் புத்தரைச் சந்திக்கிறான். அவரோடு உரையாடுகிறான். இந்திய ஞானமரபின் ஊடான பயணமாக இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

யாமா
ரஷ்ய இலக்கியத்தில் தனித்துவமான நாவலாக கொண்டாடப்படும் யாமா தி பிட் என்ற அலெக்சாண்டர் குப்ரின் நாவலை புதுமைப்பித்தன் பலிபீடம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பல்வேறு பதிப்புகள் வந்துள்ள இந்த நாவல் எனக்கு மிகவும் விருப்பமானது,

அலெக்சாண்டர் குப்ரின் பற்றிய விரிவான அறிமுக கட்டுரையுடன் இந்த நாவலை தேசாந்திரி பதிப்பம் மறுபதிப்பு வெளியிடுகிறது

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
