S. Ramakrishnan's Blog, page 141

March 12, 2021

காலத்தின் தேவை

சென்னையில் ஆங்கில நாடகங்களை நிகழ்த்துவதற்கெனத் தனியான நாடகக்குழுக்கள் இயங்குகின்றன. The Madras Players போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்களின் நாடகங்களை ம்யூசியம் தியேட்டர்களில் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். சில சமயம் ம்யூசிக் அகாதமி போன்ற பெரிய அரங்கிலும் இவர்கள் நாடகம் நடத்துவதுண்டு.

இந்த நாடகங்களுக்கு இருநூறு முதல் இரண்டாயிரம் வரை கட்டணம். ஆனால் எந்த நாடகமாக இருந்தாலும் அரங்கு நிரம்பிவிடுவது வழக்கம். சென்னையில் ஆங்கில நாடகங்கள் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கெனத் தனிப் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை பிரிட்டனிலிருந்து வந்த குழுவினர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றைச் சென்னையில் பார்த்தேன். மிகப்பிரம்மாண்டமான மேடை ஒளியமைப்பு. சிறந்த நாடக உருவாக்கம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைக்கம் முகமது பஷீரின் சிறுகதைகளை இணைத்து ஆங்கில நாடகமாக்கியிருந்தார்கள். சிறந்த தயாரிப்பு. நேர்த்தியான நடிப்பு. இந்த நாடகம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டிருக்கிறது.

முன்பு ஒருமுறை Mahatma vs Gandhi என்ற மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நாடகம் ஒன்றினை காண ம்யூசிக் அகாதமி சென்று டிக்கெட் கிடைக்காமல் திரும்பினேன். இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்களிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. காந்தியாக நஸ்ருதீன் ஷா நடித்திருந்தார். ஆங்கில நாளிதழ்கள் இந்த நாடகத்தைக் கொண்டாடி எழுதியிருந்தார்கள். ஆனால் நவீனத் தமிழ் நாடகங்கள் பற்றி ஆங்கில நாளிதழ்களில் ஒருவரி இடம்பெறாது. இது ஒரு வகைத் தீண்டாமை.

நூறு வருஷங்களுக்கும் மேலாகவே சென்னையில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கான நாடகமாகக் கருதப்பட்டது. ஆகவே பம்மல் சம்பந்த முதலியார் தமிழ்ப்படுத்தி எளிய மக்களும் பார்க்கும்படி நாடகமாக்கினார்.

பெரும்பான்மை கல்லூரி விழாக்களில் இன்றும் ஆங்கில நாடகம் நிகழ்த்துவது மரபு மீறாமல் நடந்து வருகிறது. அதுவும் இப்சன் அல்லது ஷேக்ஸ்பியர், மார்லோ இவர்களின் நாடகங்களைத் தான் நடத்துகிறார்கள். மதுரைக்கல்லூரி ஒன்று ஒருமுறை கிரீஷ் கர்னாடின் துக்ளக் நாடகத்தை நிகழ்த்தினார்கள். அந்த விழாவில் நான் கலந்து கொண்டேன். ஐந்து நிமிஷங்களுக்கும் மேல் நாடகத்தைப் பார்க்க முடியவில்லை. அந்த நாடகத்தைத் தொடர்ந்து காதலோ காதல் என்ற ஒரு நாடகம் நடத்த இருப்பதாக அறிவிப்புச் செய்தார்கள். நல்லவேளை அதற்குள் கல்லூரியை விட்டு வெளியேறியிருந்தேன்.

சென்னையில் இயங்கும் நாடகக்குழுக்களின் முக்கியப் பிரச்சனை ஒத்திகை பார்க்க இடம் கிடைக்காமல் திண்டாடுவதே. ஒரு மாத கால ஒத்திகை அவசியம் எனும் போது யார் வீட்டிலாவது அல்லது தெரிந்த பள்ளிக்கூட மைதானம், திருமண மண்டபம் எதிலாவது ஒத்திகை செய்வது வழக்கம். நடிகர்கள் பலரும் அலுவலகம் முடிந்து மாலை ஒன்று கூடுவார்கள். சிலர் குழந்தைகளுடன் வருவதும் உண்டு. நாடக ஒத்திகையைக் காணுவது நல்ல அனுபவமாக இருக்கும்.

நாடக ஒத்திகையை மையமாக் கொண்டே Tonight We Improvise என்ற நாடகத்தை லூயி பிராண்டலோ எழுதியிருக்கிறார். அவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். கவிஞர். சிறுகதையாசிரியர். 1934 ஆம் ஆண்டு அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Six Characters in Search of an Author என்ற பிராண்டலோவின் நாடகம் மிகப்புதுமையானது. நாடக ஆசிரியரைத் தேடி வரும் அவரது கதாபாத்திரங்கள் நாடகத்தில் தங்களின் பங்கு பற்றி விவாதிப்பது சுவாரஸ்யமானது.

இந்த நாடகத்தையும் சென்னையில் அரங்கேற்றியிருக்கிறார்கள். அதைப் பார்த்திருக்கிறேன். பிரெக்ட்டின் நாடகங்களை ஒருமுறை மாக்ஸ் முல்லர் பவனில் நிகழ்த்தினார்கள். வித்தியாசமான நாடகமாக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூடாமணியின் சிறுகதைகளை மையப்படுத்திச் சென்னை ம்யூசியம் தியேட்டரில் நாடகம் நிகழ்த்தினார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடனக்கலைஞர் சந்திரலேகாவின் Spaces என்ற கலைமையம் பெசன்ட் நகரில் உள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள வீடு. அங்கே தொடர்ந்து நாடகங்கள் நடந்து வருகின்றன. மேஜிக் லேண்டன் நாடகக் குழுவின் சார்பில் அல்லயன்ஸ் பிரான்சே அரங்கில் சிறந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

எனது அரவான் நாடகத்தைக் கேரளாவில் ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதை நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால் ஆங்கில நாளிதழ்களில் அதைப் பாராட்டிய எழுதியிருப்பதை அனுப்பி வைத்திருந்தார்கள்.

அசோகமித்திரன் பரிக்ஷாவின் நவீன நாடகத்தில் நடித்திருக்கிறார். மேடையில் அவர் எப்படியிருந்திருப்பார் என்ற யூகிக்கவே முடியவில்லை. அவரது நாடக அனுபவம் பற்றி எதுவும் எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை. அவரது நாடக புகைப்படம் எதுவும் கிடைக்கவுமில்லை. இலக்கியக் கூட்டங்களிலே ரகசியம் பேசுவது போல மென்மையாக, தணிந்த குரலில் பேசும் அசோகமித்திரன் நாடகத்தில் எப்படிப் பேசியிருப்பார் என்று தெரியவில்லை.

எழுத்தாளர் கோணங்கி வீதி நாடகங்களில் நடித்திருக்கிறார். கோவில்பட்டியில் நடந்த நாடகம் ஒன்றில் அவர் நடிப்பதைக் கண்டிருக்கிறேன். எழுத்தாளர் வேல. ராமமூர்த்திச் சிறந்த நாடக நடிகர். நிறைய வீதி நாடகங்களில் நடித்திருக்கிறார். இன்று சினிமாவிலும் தனித்துவமிக்க நடிகராக விளங்குகிறார்.

மு.ராமசாமி மிகச்சிறந்த நாடக நடிகர். இயக்குநர். மதுரையில் இவர் நிகழ்த்திய நாடகங்கள் மிகச்சிறப்பானவை. இவரது துர்க்கிர அவலம் மறக்கமுடியாத நாடகமாக்கம். திரையுலகிலும் தனியிடம் பிடித்துள்ளார்.

கல்கத்தா விஸ்வநாதன் என்ற திரைப்பட நடிகரை ஒருமுறை படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது அவர் வங்காள நாடகங்களில் நடித்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார். தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பதை அவரது உரையாடலில் அறிந்து கொள்ள முடிந்தது. மூன்றுமுடிச்சுப் படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை இன்றும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

75 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ராஜதானியில் 250 நாடக நிறுவனங்கள் இருந்தன. ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் நிகழ்த்தினார்கள். புதிது புதிதாக நிரந்தர நாடக அரங்குகள் கட்டப்பட்டன. சென்னை மிண்ட் பகுதியில் இருந்த ஒத்த வாடை நாடக அரங்கு முக்கியமான செயல்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

அறிவொளி இயக்கம் தமிழகம் முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த போது நிறைய வீதி நாடக இயக்கங்கள் உருவாகின. அறிவொளி இயக்கத்திற்காக நாடகங்களை எழுதி நடித்தார்கள். இது போலவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பிலும் நாடகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன

எனது நண்பர் வெளி ரங்கராஜன் நாடகத்திற்கென்றே நாடக வெளி என்ற இதழைக் கொண்டுவந்தார். அதில் நிறைய நாடகப்பிரதிகள் வெளியாகின. நாடக நிகழ்வுகள் குறித்தும். நாடக அனுபவம் குறித்தும் நிறையக் கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. நாடக வெளி இதழில் நிறைய எழுதியிருக்கிறேன். தற்போது வெளி ரங்கராஜன் தொடர்ந்து நவீன நாடகங்களை இயக்கி வருகிறார்.

திருப்பத்தூர் கல்லூரியில் பணியாற்றிவரும் பார்த்திப ராஜா தொடர்ந்து நவீன நாடகங்களைச் சிறப்பாக நடத்தி வருகிறார். அத்தோடு ஆண்டுதோறும் ஒரு நாடகவிழா ஒன்றினையும் மிகப்பெரியதாக நடத்திவருகிறார். அவரது நாடகப்பங்களிப்பு மிகுந்த பாராட்டிற்குரியது

இது போலவே தியேட்டர் லேப் சார்பில் ஜெயராவ் தொடர்ந்து நடிப்புப் பயிற்சி அளித்து வருவதுடன் புதுமையான நாடகங்களைத் தனது மாணவர்களைக் கொண்டு நடத்தி வருகிறார். எனது நான்கு நாடகங்களை இவர்கள் மேடையேற்றியிருக்கிறார்கள்.

சிறுவர்களுக்கான நாடகங்களை உருவாக்கித் தொடர்ந்து மேடையேற்றி வருவதில் வேலு சரவணன், ரவி, காந்திமேரி மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள். முருகபூபதி அரூபமும் குறியீடுகளும் சங்கேதங்களும் கொண்ட புதிய நாடக மொழியைக் கொண்ட நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

தற்போது கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி தனது தந்தையின் நாடகங்களைத் திரும்ப மேடையேற்றி வருவதுடன் சுஜாதாவின் சிறுகதைகள். ஜானகிராமன் சிறுகதைகளையும் நாடகமாக்கிச் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். அவருக்கும் என் வாழ்த்துகள்.

சென்னை மதுரை கோவை போன்ற பெரிய நகரங்களில் நவீன நாடகங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சிறிய நகரங்கள் எதிலும் நாடகம் நிகழ்த்தப்படுவதில்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் திருவிழாக்களில் நடத்தப்படும் மேடை நாடகங்கள் மட்டுமே.

எனது புத்தக வெளியீட்டுவிழாவினை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒருமணி நேரமாகத் தியேட்டர் லேப் நடித்தார்கள். நானே அதன் நாடகப்பிரதியை எழுதிக் கொடுத்தேன். நான் அறிந்தவரை தமிழில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்க்கையை விவரிக்கும் முதல் நாடகம் அதுவே. ஆனால் அந்த நாடகத்தை நிகழ்த்தும் படி வேறு எவரும் அழைக்கவேயில்லை. அது போன்ற நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும்.

நண்பன் கருணா பிரசாத் சிறந்த நடிகர். எனது அரவான் என்ற தனிநபர் நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றினான். ஒரு நடிகர் மேடையில் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடித்துப் பல்வேறு உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துவது சவாலான விஷயம். அதை மிகச்சிறப்பாகச் செய்து காட்டினார். அந்த நாடகம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.

சென்னை புத்தகக் கண்காட்சி போன்ற பெரிய நிகழ்வுகளில் தினசரி மாலை ஒரு நவீன நாடகத்தை நிகழ்த்தச் செய்யலாம். மதுரை, கோவை ஈரோடு போன்ற நகரங்களில் இனிமேல் தான் புத்தகக் கண்காட்சிகள் நடத்த இருக்கிறார்கள். அவர்கள் நவீன நாடகத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

ந.முத்துசாமி மிக உறுதியான நம்பிக்கையோடு, தீவிரமான கலைவேட்கையோடு கூத்துப்பட்டறையின் மூலம் நவீன நாடகங்களை நிகழ்த்தினார். சிறந்த நடிகர்களை உருவாக்கினார். மிக முக்கியமான நாடகங்களை மேடையேற்றினார். இன்றும் கூத்துப்பட்டறை அந்த முன்னெடுப்புகளைத் தொடரவே செய்கிறது. பிரளயன். ஞாநி, மங்கை மூவரும் சமூகப்பிரச்சினைகளை மையமாக் கொண்ட வீதி நாடகங்களைச் சிறப்பாக நிகழ்த்தினார்கள். இன்றும் அந்த மேடையேற்றங்கள் தொடர்கின்றன.

புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மூலம் சிறந்த நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. புதிய நாடக இயக்குநர்கள் நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். சுகுமார் போன்ற இளம் இயக்குநர்கள் மிகச்சிறப்பான நாடகங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த ஆண்டுத் தேசிய நாடக விழாவிலும் சுகுமாரின் நாடகம் இடம்பெற்றிருந்தது. நல்ல வரவேற்பினைப் பெற்றது

நவீன தமிழ் நாடக வளர்ச்சியில் சங்கீத நாடக அகாதமியின் ஊக்குவிப்பு திட்டங்களும் நிதி உதவியும் முக்கியமானது. அதில் எனது உருளும் பாறைகள் போன்ற நாடகம் தேர்வு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் செ.ரவீந்திரன், புது டெல்லியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்பு செய்வதில், அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார். நாடக ஒளியமைப்பு குறித்த விவரங்களை ஒன்றுதிரட்டி அவர் தொகுத்த ‘ஒளியின் வெளி’ என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது

கோமல் சுவாமிநாதன் தமிழகம் முழுவதும் நாடக விழாக்களைச் சுபமங்களா சார்பில் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தினார். இது போலவே சென்னையில் நாரத கான சபா , ம்யூசிக் அகாதமி மினி ஹாலில் நிறைய நவீன நாடகவிழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்றும் அது போல ஒரு நாடகவிழாவிற்கான தேவையிருக்கிறது. இதைத் தி இந்து தமிழ் நாளிதழ் போன்றவர்கள் முன்னெடுப்புச் செய்ய வேண்டும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2021 00:40

March 11, 2021

இலக்கியச் சிந்தனை விருது

மாதந்தோறும் தமிழில் வெளியான சிறந்த கதைகளை வாசித்து அதில் ஒரு கதையை அந்த மாதத்தின் சிறந்த கதையாக இலக்கியச்சிந்தனை தேர்வு செய்து வருகிறது.

இந்த 12 கதைகளில் ஆண்டின் சிறந்த கதையாக ஒன்றை நடுவர் குழு தேர்வு செய்து விருதும் ஐந்தாயிரம் ரொக்கப்பணமும் வழங்குகிறது.

சென்ற வருஷம் இலக்கியச்சிந்தனையின் ஆண்டின் சிறந்த கதையாகச் சிற்றிதழ் என்ற எனது கதை தேர்வு செய்யப்பட்டது.

பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி இலக்கியசிந்தனை நடத்தும் விழாவில் அந்த விருது எனக்கு வழங்கப்பட இருக்கிறது.

சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2021 22:39

மகா பிரஜாபதி

.

தேரி கதா எனப்படும் பௌத்த பெண் துறவிகளின் பாடல்களைக் கொண்ட தொகுப்பினை வாசித்தேன்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டுப் புத்தர் மறைவுக்குப்பின் 1905 இல் திருமதி ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்தத் தொகுப்பில் புத்தரின் தாயான மகா பிரஜாபதி கௌதமியின் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இவரே புத்தரை வளர்த்தவர். இவர் புத்தரின் தாயான மாயாவின் தங்கை.

புத்தர் பிறந்த ஏழாம் நாளில் அவரது தாய் இறந்துவிடவே பிரஜாபதியே அவரை வளர்த்தார். இரண்டு குழந்தைகளின் தாயான பிரஜாபதியின் தனது சொந்த மகன் நந்தனை தாதியிடம் வளர்க்கச் சொல்லிவிட்டு புத்தரை வளர்ப்பதிலே தன் வாழ்வினை செலவிட்டார். பிரஜாபதியின் மகன் நந்தன் பின்னாளில் புத்தரின் சீடர்களில் ஒருவனாக மாறினான்.

பிரஜாபதி பௌத்த சமயத்தின் முதல் பெண் துறவியாகக் கருதப்படுகிறார். ஐநூறு பெண்களுடன் இவர் புத்தரிடம் தீட்சை பெற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவரைப் பிக்குணியாக ஏற்றுக் கொள்ளும் போது பௌத்த சங்கத்தில் பெண்களை ஏற்றுக் கொள்வது குறித்துப் பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. ஆரம்பத்தில் புத்தர் அவரைத் துறவியாக ஏற்கவில்லை. ஆனால் தானே தலைமுடியை மழித்துக் கொண்டு மஞ்சள் துறவாடை உடுத்தி துறவு ஒழுக்கத்துடன் வாழத்துவங்கிய பிரஜாபதி புத்தரைத் தேடி சகதுறவிகளுடன் வைஷாலிக்கு 150 மைல் நடந்தே பயணம் மேற்கொண்டார். இந்த மனவுறுதியைக் கண்டு வியந்த புத்தர் பின்பு தீட்சை வழங்கினார்.

புத்த பிக்குணிகளில் மூத்தவர்களான ஐம்பது பேர்களின் பாடல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் தனது குழந்தையின் இறப்பு காரணமாகவே துறவு வாழ்க்கைக்கு வந்திருக்கிறார்கள். மரணத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பிரஜாபதியும் தன் கணவரின் மரணத்திற்குப் பிறகே பிக்குணியாக மாறுகிறார்.

ஐம்பது பிக்குணிகளில் முப்பத்திரண்டு பேர் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு ஞானம் அடைந்தவர்கள். பதினெட்டுப் பெண்கள் திருமணமானவர்கள். பின்பு துறவியாக மாறியிருக்கிறார்கள். சுமா அனுபமா சுமேதா ஆகிய மூன்று பெண்கள் வசதியான வீட்டில் பிறந்தவர்கள்.

பௌத்தப் பிக்குணிகளின் பாடல் அவர்கள் எப்படித் துறவு வாழ்வினை மேற்கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது.

இந்தப் பாடலில் மகாபிரஜாபதி சொல்கிறார்

முன்பு நான் தாய், மகன், தந்தை, சகோதரர் மற்றும் பாட்டி;

எனச் சம்சாரத்தில் பயணம் செய்தேன்.

முடிவில் நான் உண்மையை அறிந்தேன்

இது என் கடைசி உடல்.

எனது பிறப்பின் நீள் பயணம் நீக்கப்பட்டது

இதுவே எனது கடைசி உடல் என்ற அவரது பிரயோகம் நிறைய யோசிக்க வைக்கிறது. நோய் மற்றும் மரணத்தால் உடல் பாதிக்கப்படுகிறது. உடலைக் கையாளுவது தான் வாழ்க்கையா, பிக்குணிகள் யாவரும் இது தங்களின் கடைசி உடல் என்றே கூறுகிறார்கள். மனதாலும் புலன்களாலும் தான் உடலைப் பாதுகாத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

மகாபிரஜாபதியின் மௌனம் ஆழமானது. அவர் புத்தரை வளர்க்கும் போது கண்ட கனவுகள் யாவை. அவற்றை எப்போதாவது வெளிப்படுத்தியிருக்கிறாரா. புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறிய மறுநாள் மகாபிரஜாபதி எப்படி உணர்ந்தார். அவரது வேதனையைப் புத்தர் அறிவாரா. புத்தரை மட்டுமின்றி அவரது மகன் ராகுலனையும் பிரஜாபதியே வளர்க்கிறார். ராகுலனுக்குக் கதைகள் சொல்கிறார். அவரது நினைவுகள் செஞ்சுடராக அவருக்குள்ளே எரிந்து அடங்கிவிட்டது.

வீட்டினை, உறவுகளை, பிள்ளைகளை விலக்கிவந்த மனநிலையை அறியாமையிலிருந்து விடுபட்டுத் தெளிவு கொண்ட நிலை போலவே பிக்குணிகள் விளக்குகிறார்கள்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பினை தண்ணீரில் குளிரவைத்தால் அது சப்தமிடும். ஆனால் பின்பு அதன் சூடு முற்றிலும் அடங்கிவிடும். அப்படித் தான் தனது காமமும் ஆசைகளும் ஆரம்பத்தில் ஓலமிட்டன. பின்பு தானே முற்றிலுமாக அடங்கிவிட்டது என்கிறார் ஒரு பிக்குணி.

புத்தரின் முற்பிறப்பு கதைகளைப் போலவே பிரஜாபதிக்கு முற்பிறப்புக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் அவர் முற்பிறவி ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தரின் மகளாகப் பிறந்து துறவிகளுக்கான தங்குமிடம் ஒன்றை கட்டி எழுப்பினார். அங்கே வரும் துறவிகளுக்கு உணவு வழங்கினார் என்கிறது அக்கதை.

இன்னொரு கதையில் புத்தரிடமிருந்து தனது பார்வையை விலக்கக் கூடாது என்பதற்காகப் பின்பக்கமாகவே பிரஜாபதி நடந்து சென்றார். அவரது பார்வை எப்போதும் புத்தரை நோக்கியே இருந்தது என்றொரு குறிப்புக் காணப்படுகிறது.

இயேசுவின் அன்னையான மரியாள் வணங்கப்படுவது போலப் புத்தரின் அன்னையான பிரஜாபதி வணங்கப்படவில்லை. ஆனால் பிக்குணிகளில் மூத்தவராக, ஞானவாணியாக அறியப்படுகிறார்.

வீட்டைப் பிரிந்து செல்கிறவர்கள் தரும் துயரத்தைப் பெண்கள் காலம் காலமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரிந்தவர்களுக்காக மௌனமாகக் கண்ணீர்விடுகிறார்கள். காத்திருக்கிறார்கள். அது புத்தனாக இருந்தாலும் சரி, கூலி வேலைக்காக வெளிநாடு போன மகனாக இருந்தாலும் சரி தாயின் கண்ணீர் ஒன்று தானே.

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் வீட்டைவிட்டு ஓடிப்போன கணவர் சாமியராகத் திரும்பி வருவதைச் சுஜாதாவின் தாய் மகிழ்ச்சியோடு வரவேற்பார். இத்தனை ஆண்டுகளாக அவர் தங்களைக் கஷ்டத்தில் விட்டுப்போய்விட்டாரே எனச் சுஜாதா கோவித்துக் கொள்ளும்போது என்ன இருந்தாலும் அவர் உன்னோட அப்பா என்று அவரது அன்னை பதில் சொல்லுவார். அதைத்தான் சுஜாதாவால் தாங்கிக் கொள்ளமுடியாது

வீட்டைவிட்டு ஓடிப்போய் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டவர்களை எப்படிப் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்கள். நடிகை சோபியா லாரன் ஹாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் கேரி கிராண்டைக் காதலித்தார். இருவரும் மிக நெருக்கமாக பழகினார்கள். ஒன்றாக நடித்தார்கள். சிறந்த ஜோடி என சினிமா உலகம் அவர்களைக் கொண்டாடியது.

புகழின் உச்சியிலிருந்த கேரி கிராண்ட்டை திருமணம் செய்து கொள்வதா, அல்லது இத்தாலியினரான கார்லோ பாண்டி என்ற தன்னை விடப் பலவயது மூத்தவரைத் திருமணம் செய்வதா என்ற குழப்பம் சோபியா லாரனுக்கு ஏற்பட்டது. அவர் இத்தாலியப் பண்பாடு தெரியாத கேரி கிராண்டினை திருமணம் செய்வதை விடவும் தனது தந்தையின் வயதை ஒத்த கார்லோ பாண்டியைத் திருமணம் செய்வது என முடிவு செய்தார்.

சோபியாவின் நெருங்கிய தோழிகள் இது தவறான முடிவு என்றார்கள். ஆனால் சோபியா லாரன் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் போது ஒரு அமெரிக்கரை மணந்து கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு வரக்கூடாது. இத்தாலிய உணவை, இத்தாலியப் பண்பாட்டினை அவருக்குப் பாடம் நடத்திக் கொண்டே இருக்க முடியாது. ஆகவே கார்லோ பாண்டியைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றார்.  அப்படியே திருமணமும் செய்து கொண்டார். கேரி கிராண்டிற்கு இது பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. 

சோபியாவின் திருமண வாழ்க்கை நீண்டகாலம் இனிமையாகவே தொடர்ந்தது. இப்படித் தான் பெண்கள் முடிவு எடுக்கிறார்கள். கேரி கிராண்டினை திருமணம் செய்து கொண்டிருந்தால் புகழின் உச்சத்திற்குப் போயிருக்கலாம். மிக வசதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் தந்தையின் அன்பை போன்ற ஒன்றையே அவர் தேர்வு செய்தார். இது போல பெண்கள் எடுக்கும் முடிவுகள் விசித்திரமானதே.

பிரஜாபதியும் இப்படியான ஒரு முடிவினை தான் எடுத்தார். அவர் தனது சொந்தப்பிள்ளைகளைத் தாதியின் வளர்ப்பில் விட்டுவிட்டார். சித்தார்த்தனை மட்டுமே தனது பிள்ளையாகக் கருதினார். தாயன்பினை அவருக்கு முழுமையாக அளித்தார். கடைசி வரை புத்தரின் கூடவே நிழல் போல இருந்தார்.

பிள்ளைகள் தாயை விலக்கக் கூடும். பிரிந்து போகக்கூடும். தாயால் ஒரு போதும் பிள்ளைகளை வெறுக்கவோ, விலக்கவோ முடியாது. பிள்ளைகள் எங்கேயிருந்தாலும் அவர்களுக்காகத் தாய் கவலைப்பட்டுக் கொண்டேதானிருப்பார்.

புத்தருக்கும் அவரது மனைவி யசோதராவிற்க்கும் ஒரே வயது. அந்தக் காலத்தில் எப்படி ஒரே வயதுள்ள இருவர் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வியப்பானதே. யசோதராவிற்கும் மகாபிரஜாபதிக்குமான உறவு எப்படியிருந்தது. தன் மருமகளைப் பிரஜாபதி எப்படி நடத்தினார் என்பதெல்லாம் நிழலான விஷயங்களே.

யசோதரா குதிங்கால் வரை தொடும் நீண்ட தலைமயிரைக் கொண்டிருந்தார் என்கிறார்கள். அவர் சித்தார்த்தனைத் திருமணம் செய்து கொண்ட போது வயது பதினாறு. அவளை அடைவதற்காக சித்தார்த்தன் வில்வித்தை, குதிரையேற்றம் என பல போட்டிகளில் வென்றிருக்கிறார். பிரிந்த கணவனை யாரோ ஒருவரைப் போல ஒரு பெண் சந்திக்கும் தருணம் விநோதமானது. அப்படி ஒரு தருணத்தை ஆன்டன் செகாவ் தனது கதை ஒன்றில் எழுதியிருக்கிறார். அந்தப் பெண் தனது ஏக்கத்தை மறைத்தபடியே பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் யசோதரா தனது மனதின் ஆசைகளை ஒருபோதும் புத்தரிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவள் கணவன் சித்தார்த்தன். புத்தர் அவள் அறியாத மாமனிதர். யசோதராவின் கடைசி நாட்கள் எப்படியிருந்தன. எந்த நினைவுகளில் அமிழ்ந்து கிடந்தாள்.  கணவரை மகனைப் பிரிந்த அவள் தனிமையில் ஒரு பிக்குணி போலவே வாழ்ந்தாள்.

புத்தர் மீதான யசோதராவின் அன்பு நிகரற்றது. தனது 78 வயதில் யசோதரா இறந்து போனாள். அப்போது புத்தர் என்ன நினைத்திருப்பார். எப்படி அதை எதிர்கொண்டார் என்ற குறிப்புகளை அறிய இயலவில்லை. ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் அது அழகான கதைக்கான கரு என்பதை அறிவேன்.

தேரி காதையின் ஒரு பாடலில் ஒரு பெண் சால் மரத்தின் அடியில் நிற்கிறாள். மரம் பூத்துக் குலுங்குகிறது. மரத்திற்கு இத்தனை பூக்கள் துணையிருக்கின்றன. உனக்கு யார் இருக்கிறார்கள் என்று காற்று அவளிடம் கேட்பது போல உணருகிறாள்.

பௌத்த பிக்குணியாக மாறிய போதும் அவர்கள் தாய்மை உணர்விலிருந்து விடுபடவில்லை. ஒரே மாற்றம் சொந்தக் குழந்தைகளுக்குப் பதிலாக அனைவரையும் தனது பிள்ளையாகக் கருதும் மனநிலைக்கு அவர்கள் மாறியதே.

ஏழு வயது வரை ராகுலன் தனது தந்தையை அறியவில்லை. முதன்முறையாகப் புத்தரைச் சந்தித்தபோது ராகுலன் உங்களின் நிழல் கூட எனக்குச் சந்தோஷம் அளிக்கிறது என்றான்

ராகுலன் துறவு வாழ்க்கையை ஏற்றபோது புத்தரின் தந்தை அவரிடம் வேண்டுகோள் வைத்தார். பிள்ளைகள் இப்படித் துறவியாக மாறுவது தந்தையின் மனதை வேதனைப்படுத்தக்கூடியது. பிள்ளைகளின் பிரிவைத் தந்தையால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆகவே துறவியாவதற்குத் தந்தையின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற ஒரு விதியை உங்கள் சங்கத்தில் உருவாக்குங்கள் என்றார். மன்னர் சுத்தோதனார் கண்ணோட்டத்தில் அவரது மகன், மனைவி, மருமகன் பேரன் பேத்தி என அனைவரும் பௌத்த துறவியாகிவிட்டார்கள். அது எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிற விஷயமா என்ன.

சாரிபுத்தன் மற்றும் மொகல்லானா இருவரும் ராகுலனின் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இதில் சாரிபுத்தன் ராகுலனுக்குத் தம்மத்தைப் பற்றிய அறிவைக் கற்பித்தார் மொகல்லானா ராகுலனின் நடத்தையினை ஒழுங்குபடுத்தினார்.

ஒவ்வொரு காலையிலும் ராகுலன் எழுந்து கைபிடி நிறைய மண்ணை எடுத்துக் காற்றில் வீசிவிட்டு “இன்று நான் எனது ஆசிரியர்களிடமிருந்து இந்த மணற்துகளைப் போல நிறைய அறிவுரைகளையும் அறிவுறுத்தலையும் பெறுவேன் என்று கூறுவானாம். அந்தக் காட்சி மனதில் தனித்துவமானதாக ஒளிர்கிறது.

ஒரு நாள் புத்தர் ஒரு கண்ணாடியை ராகுலனிடம் காட்டி இது எதற்காகப் பயன்படுகிறது என்று கேட்டார். பிரதிபலிப்பதிற்காக என்று ராகுலன் பதிலளித்தான். அதைக் கேட்ட புத்தர் சொன்னார்: “இதைப்போல், ராகுலா, நீயும் எதையும் சொல்வதற்கு அல்லது செய்வதற்கு முன்பு உனக்குள் பிரதிபலிக்கவும். உனது பேச்சு அல்லது செயல் மற்றவர்களுக்கும் உனக்கும் எவ்வளவு நன்மை அளிக்கும் என்பதை யோசிக்கவும்.

ஒருவேளை உன் செயல் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்காது என்று நீ உணர்ந்தால் அதைச் சொல்வதிலிருந்தும் செய்வதிலிருந்தும் விலகு

ஒருவேளை அச்செயல் மற்றவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்கும் என்று உணர்ந்தால் அச் செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்றார்.

அது ராகுலினுக்காகச் சொன்ன பாடம் மட்டுமில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2021 05:11

March 10, 2021

அன்பான நன்றி

புத்தகக் கண்காட்சி நேற்றோடு நிறைவு பெற்றது. இந்த 14 நாட்களில் எத்தனையோ விதமான வாசகர்களைச் சந்தித்தேன். உரையாடினேன். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஒரு எழுத்தாளன் மீது வாசகர்கள் காட்டும் அன்பை முழுமையாக உணரக்கூடிய தருணமிது.

காலை 11 மணிக்கு தேசாந்திரி அரங்கிற்கு வந்து மாலை ஐந்துமணிக்கு நான் வரும் வரை காத்திருந்த வாசகருக்கு எப்படி நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்வது.

என்னிடம் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக மட்டுமே பெங்களூரில் இருந்து பயணம் செய்து வந்த குடும்பத்தினர் காட்டிய நேசம் உன்னதமானது.

எனது நலனுக்காக திருப்பதிக்குப் போய் வேண்டுதல் செய்து பிரசாதம் கொண்டு வந்த வாசகர் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் என்று மனதார வாழ்த்தினார். அது தான் உண்மையான அங்கீகாரம்.

80 வயதான தாத்தா என்னைக் காண வேண்டும் என சொன்னதால் அவரைச் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்தார் அவரது பேத்தி.

அந்த தாத்தா மனம் நிறைந்த அன்போடு எனக்கு ஆசி அளித்தார். அந்த நிமிஷத்தில் கண்கலங்கிப் போனேன்.

நான் படிப்பதற்காக புத்தர் தொடர்பான நூல்களை பரிசாக அளித்த நண்பருக்கும். என்னை அழைத்துக் கொண்டு போய் வேண்டிய புத்தகம் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பைநிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த வாசகிக்கும். என் பெயரை தனது பையனுக்கு வைத்துள்ள இளம் தம்பதிக்கும் தீராத நன்றிகள்.

இப்படி நூறு நூறு மறக்கமுடியாத நினைவுகள். அற்புதமான வாசகர்கள்.

தேசாந்திரி பதிப்பகத்திற்கான உங்கள் ஆதரவுக்கும் அன்பிற்கும் என் மனம் நிரம்பிய நன்றி.

புத்தகக் கண்காட்சியில் உறுதுணை செய்த நண்பர்களுக்கும் ,ஸ்ருதி டிவி கபிலன், சுரேஷ், மணிகண்டன். அகரமுதல்வன், அன்புகரன், சண்முகம், கல்கி, தினமணி, தி இந்து தமிழ், விகடன், மற்றும் அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்.

4 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2021 02:23

March 9, 2021

உலகமே வீடு

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ள Nomadland திரைப்படத்தைப் பார்த்தேன்

இந்தப் படம் சென்ற ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக விருது பெற்றுள்ளது. இந்த ஆண்டுக் கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆஸ்கார் பரிசும் இந்தப் படத்திற்கு நிச்சயம் கிடைக்கக்கூடும்.

கடந்த இரண்டு வாரங்களாக ஆஸ்கார் போட்டிக்கான படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் இதுவே மிகச்சிறந்த படம். சீன இயக்குநரான Chloé Zhao இதுவரை இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவரது முதல் திரைப்படம் Songs My Brothers Taught Me விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. அடுத்த படமான The Rider சிறந்த இயக்குநருக்கான Independent Spirit Award பெற்றிருக்கிறது.

இன்று Nomadland வழியாக ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறார். அதிலும் கோல்டன் க்ளோப் விருதுகளை இவர் வென்றபோது அமெரிக்கத் திரையுலகமே ஒன்று சேர்ந்து பாராட்டியது. இன்று அமெரிக்கச் சினிமா அமெரிக்கர்கள் கையில் இல்லை. சர்வதேச இயக்குநர்களே ஹாலிவுட்டின் புதிய சினிமாவை உருவாக்குகிறார்கள். கடந்த கால ஆஸ்கார் விருதுகளே இதற்குச் சாட்சி.

நாடோடி என்ற உடனே நம் மனதில் எழும் பொதுப்பிம்பம் ஆணாகும். ஆனால் நாடோடி வாழ்க்கையை வாழுவதற்கு ஆண் பெண் என்ற பால் பேதமில்லை என்பதையே நவீன வாழ்க்கை நிரூபிக்கிறது. பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் அமெரிக்காவின் பரபரப்பான அன்றாட உலகிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு அவரவர் விரும்பிய பாதையில் நாடோடியாக வாழும் மனிதர்களைக் கொண்டாடுகிறது இந்தப்படம்.

படத்தில் நாம் நவீன நாடோடிகளின் வாழ்க்கையை மட்டும் உணருவதில்லை. அமெரிக்காவின் விநோதமான நிலக்காட்சிகளை, பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளை அறிந்து கொள்கிறோம். ரோடு மூவி எனப்படும் பயணத்தை முதன்மையாகக் கொண்ட படங்களில் இந்தப்படம் போல நிலவியலின் ஊடே நீண்ட பயணத்தை மேற்கொண்ட படம் எதுவும் சமீபமாக வெளியாகவில்லை.

ஒரு ஆவணப்படம் காணுவது போலவே கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மிக உண்மையாக, நெருக்கமாக நாம் காணுகிறோம். படத்தின் ஒளிப்பதிவு அபாரம். மிகச்சிறப்பான படத்தொகுப்பு.

நாடோடி வாழ்க்கையை வாழும் ஃபெர்ன் கதாபாத்திரத்தில் பிரான்சிஸ் மெக்டார்மண்ட் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை ஜெசிகா ப்ரூடர் எழுதி 2017ல் வெளியான Nomadland: Surviving America in the Twenty-First Century என்ற கட்டுரைத்தொகுப்பினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது

அறுபது வயதான ஃபெர்ன் கணவரை இழந்தவர். அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ஜிப்சம் தயாரிக்கும் ஆலை ஒன்றில் பணியாற்றியவர். 2011ல் அந்த ஆலை மூடப்பட்டதால் தனது வேலையை இழக்கிறார். தன் கைவசமிருந்த சேமிப்பினைக் கொண்டு ஒரு வேனை விலைக்கு வாங்கும் ஃபெர்ன் அதைத் தனது வீடாக மாற்றிக் கொண்டு நீண்ட பயணத்தைத் துவங்குகிறார். வேலை தேடிச் செல்வது போலத் துவங்கும் அந்தப் பயணம் உண்மையில் இலக்கற்றது. வழியில் அமேஸான் நிறுவனத்தின் விநியோகப் பிரிவில் தற்காலிகமாக வேலை செய்கிறாள்.

அங்கே உடன் பணியாற்றிய லிண்டாவோடு நட்பு கொள்கிறாள். ஒரு நாள் லிண்டா அரிசோனாவில் நடைபெறவுள்ள பாலைவன சந்திப்பைப் பார்வையிட ஃபெர்னை அழைக்கிறார், மெக்சிகோ எல்லையில் நடைபெறவுள்ள அந்தச் சந்திப்பினை பாப் வெல்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் நாடோடிகளுக்கான அமைப்பு ஒன்றினை நடத்தி வருகிறவர். அந்த அமைப்பு. நாடோடி வாழ்க்கையின் சுதந்திரத்தை முன்னெடுக்கிறது.

அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் , ஃபெர்ன் தன்னைப் போல உலகமே வீடு என நினைத்துப் பயணிக்கும் சக நாடோடிகளைச் சந்தித்து எளிய வாழ்க்கையின் சிறப்புகளைக் கற்றுக் கொள்கிறாள். இருப்பதைக் கொண்டு வாழுவதற்கான அடிப்படை திறன்களைப் பெறுகிறாள்.

நீண்ட பயணம் அவளது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. நாடோடிகளுக்குள் உள்ள அற்புதமான நேசத்தையும் அன்பையும் உணர்ந்து கொள்கிறாள். பறவைகளைப் போலத் தான் விரும்பும் திசையில் அவர்கள் பயணிக்கிறார்கள். ஒரே மரத்தில் பறவைகள் ஒன்று கூடுவது போல வழியில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.

ஒரு நாள் ஃபெர்னின் வேன் டயர் வெடித்துப் போகிறது. அருகிலுள்ள நகருக்குச் சென்று மெக்கானிக்கை அழைத்துவருவதற்காக ஸ்வாங்கி என்ற நாடோடியிடம் உதவி கேட்கிறாள். இது போன்ற வேலைகளை நாமே செய்யப் பழக வேண்டும் என அறிவுரை கூறும் ஸ்வாங்கி அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறாள். அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகிறது. புற்றுநோய் பாதித்து மரணத்தை எதிர்கொள்ளும் நிலையிலிருந்த ஸ்வாங்கித் தான் மருத்துவமனை கட்டிலில் கிடந்து உயிர்விடுவதை விடவும் விரும்பிய சாலைகளில் சுற்றியலைந்து வாழ்க்கையைக் கடைசி நிமிஷம் வரை அனுபவிக்க இருப்பதாகச் சொல்கிறாள்.

பின்னர் ஃபெர்ன் பேட்லாண்ட்ஸ் தேசிய பூங்காவில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்கிறார் அங்கே டேவிட் என்பவரைச் சந்தித்து நட்பு கொள்கிறார். அவர் திடீரென உடல்நலமற்றுவிடவே மருத்துவமனையில் அவரை அனுமதித்துக் கூடவே இருந்து பணிவிடைகள் செய்கிறாள். அவர்களின் உறவு படத்தில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் ஊடே கலிபோர்னியாவில் உள்ள தனது சகோதரியின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். அது மறக்கமுடியாத காட்சி. ஃபெர்னிற்குத் தேவையான பணத்தை அவளது சகோதரி தருகிறாள். அவளிடமிருந்து விடைபெறும் ஃபெர்ன் டேவிட் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடிப் பயணிக்கிறார்.

டேவிட் வீட்டில் அவளை உற்சாகமாக வரவேற்கிறார்கள். அங்கேயே சில நாட்கள் தங்குகிறாள். டேவிட் அவள் நிரந்தரமாகத் தன்னோடு தங்கிவிடும்படி அவளை வற்புறுத்துகிறார். ஆனால் அவள் அங்கிருந்தும் விடைபெறுகிறாள்.

தனிமையை உணர்வது, புதிய நட்பைப் பெறுவது. கிடைக்கும் வேலையைக் கொண்டு அதில் வாழுவது. நண்பருக்காகப் பணிவிடைகள் செய்வது. தோழியின் இறப்பை உணருவது என இந்த நாடோடி வாழ்க்கை ஃபெர்னை முற்றிலும் மாற்றுகிறது.

நாடோடி சமூகத்தில் விடைபெறுவது இறுதியான விஷயமில்லை , காரணம் நாடோடிகள் எப்போதும் ஒருவரை ஒருவர் “சாலையில்” பார்ப்போம் என்று நம்புகிறார்கள். சாலை தான் அவர்களின் வசிப்பிடம். சாலையின் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பினை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இணைந்து வாழுகிறார்கள்.

ஃபெர்ன் வழியாக அமெரிக்காவின் இன்னொரு முகத்தை இயக்குநர் அறிமுகம் செய்துவைக்கிறார். அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் வாகன நெருக்கடி மிகுந்தசாலைகளையும், கூட்டமான மின்சார ரயிலையும் கொண்ட பரபரப்பான வாழ்க்கையைப் பார்த்துப் பழகிய நமக்கு ஆளற்ற வெட்டவெளியும் பனிப்பிரதேசத்தின் இரவுகளும், இயற்கையின் விநோத தோற்றங்களாக விரியும் நிலவெளியும், வேனிற்குள்ளாகவே வாழும் எளிய வாழ்க்கையும் முற்றிலும் புதியதாக உள்ளன.

ஒரு காலத்தில் ஜிப்சிகள் இப்படித் தான் இசையும் நடனமும் எனக் கொண்டாட்டமான வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் அவர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் நவீன நாடோடிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. இதில் ஒரு காட்சியில் ஃபெர்ன் ஒரு இளைஞனைச் சந்திக்கிறாள். உரையாடுகிறாள். அதில் வயது வேறுபாடின்றிச் சுதந்திரமான மனதோடு நாடோடிகள் பயணிப்பதை நாம் உணர முடிகிறது.

பனிச்சறுக்கு விளையாட்டு போலத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட பனிப்பிரதேசத்தில் மேலும் கீழுமாகச் சறுக்கிச் செல்வது போலவே கதை நகருகிறது. பயணம் எப்போதும் விசித்திரமான மனிதர்களை அடையாளப்படுத்தக் கூடியது. அதை இந்தப் படத்தில் நிறையவே காணுகிறோம்.

வீடு, குடும்பம், பொருள்தேடுவது அதிகாரம் செய்வது என்று உலகம் செல்லும் திசைக்கு எதிரான திசையில் செல்லும் வாழ்க்கைமுறையை இந்தப்படம் உண்மையாக விவரிக்கிறது. வீடற்றவர்களுக்கு உலகமே வீடு என்பதைப் படம் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு வேனிற்குள்ளாகத் தனக்குத் தேவையான அத்தனையும் ஃபெர்ன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள். நத்தை தன் கூட்டினை முதுகிலே கொண்டு போவது போன்ற வாழ்க்கையது.

அறுபது வயதான ஃபெர்ன் ஏன் இப்படி ஒரு இலக்கற்ற பயணத்தை மேற்கொள்கிறாள். அவள் தன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடிச் செல்கிறாள். அதைச் சாலையே அவளுக்கு உணர்த்துகிறது. நாம் அனைவரும் பயணிகளே. அவரவர் இடம்வந்தவுடன் பிரிந்து போய்விடுவோம். சாலையின் நினைவுகள் முடிவற்றவை. ஃபெர்ன் தன் சகோதரியின் வீட்டிலிருந்து விடைபெறுவது மிகச்சிறப்பான காட்சி. எல்லா உறவுகளையும் ஃபெர்ன் துண்டித்துக் கொள்கிறாள். இயற்கை தான் அவளது நிரந்தரத் துணைவன்.

ஒரு பெண் இயக்குநரால் மட்டுமே இத்தனை அழுத்தமான ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்க இயலும். மனதிற்கு மிகவும் நெருக்கமான திரையனுபவத்தைத் தர இயலும். அந்த வகையில் Chloé Zhao ஆஸ்கார் வெல்வது தகுதியானதே.

**

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2021 00:02

March 7, 2021

புத்தகக் காட்சி தினங்கள்- 5

கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். இத்தனை ஆயிரம் வாசகர்கள் ஒன்று சேர்ந்து பதிப்புத் துறைக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனி மற்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சி சிறப்பாகத் தொடரும்.

ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் சங்க இலக்கியம் குறித்து ஆற்றிவரும் உரைகளின் முதற்பத்து உரைகளின் நூல் வடிவினை நேற்று வெளியிட்டேன். சங்கச்சுரங்கம் என்ற இந்த தொடர் நிகழ்வு மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளது.

கடவுள் ஆயினும் ஆக நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

நூல் வெளியீட்டில் ராஜேந்திரன் ஐஏஎஸ் எழுத்தாளர் தமிழ்செல்வன். டாக்டர் சங்கர சரவணன். .எழுத்தாளர் அப்பணசாமி, எழுத்தாளர் காமுத்துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள். பாரதி புத்தகாலயம் நாகராஜன் இதனை ஒருங்கிணைப்பு செய்தார்.

சாகித்ய அகாதமியில் பூமி என்ற ஆஷா பகே எழுதிய மராத்திய நாவலை வாங்கினேன். பி.ஆர். ராஜாராம் மொழியாக்கம் செய்திருக்கிறார். மும்பையில் வாழும் தமிழ் குடும்பத்தின் கதையை மராத்தியில் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாதமி பரிசு பெற்றுள்ள இந்த நாவல் மிகச்சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகர்லெவின் மதகுரு நாவலைப் பற்றி ஒரு சிறப்புரை நிகழ்த்துங்கள் என்றொரு கோரிக்கையை ஒரு வாசகி முன்வைத்தார். அவருக்கு மிகவும் பிடித்த நாவல் என்றார். எனக்கும் மிகவும் பிடித்த நாவலிது. உலகப்புகழ் பற்ற இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகக் கண்காட்சியில் இந்த நாவல் விற்பனைக்கு கிடைக்கிறது

மதகுரு
ஸெல்மா லாகர்லெவ் (ஆசிரியர்), க.நா.சு. (தமிழில்) அன்னம் வெளியீடு

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 22:40

இரண்டு இளம் படைப்பாளிகள்

காளி பிரசாத்: ஆள்தலும் அளத்தலும்

மராத்திய எழுத்தாளர் விலாஸ் சாரங் எழுதிய தம்மம் தந்தவன் நாவலை மொழியாக்கம் செய்த எழுத்தாளர் காளிபிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பதாகை மற்றும் யாவரும் வெளியீடாக வந்துள்ளது.

இவரது கதைகளை முன்னதாகச் சொல்வனம் மற்றும் பதாகை இதழில் வாசித்திருக்கிறேன்.

இந்தத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளை நேற்று படித்தேன். தினசரி வாழ்வின் நுண்தருணங்களைக் கதைகளாக எழுதுகிறார். சரளமான எழுத்து நடை.

பழனி கதையில் வரும் கதாபாத்திரச் சித்தரிப்பும் கதை சொல்லும் முறையும் மிகவும் பிடித்திருந்தது.

அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

சுஷில்குமார் : மூங்கில்

சுஷில்குமார் சிறுகதைகளை யாவரும்.காம் மற்றும் பதாகையில் படித்திருக்கிறேன். அவரது முதல் சிறுகதை தொகுப்பு மூங்கில் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது

மூங்கில் ஒரு அற்புதமான கதை. மூங்கில் மேட் ஓவியங்கள் செய்யும் அப்பாவினைப் பற்றி மகள் வரையும் சித்திரங்களே கதை. புகழ்பெற்ற ஒவியக் குடும்பத்தில் வந்த அந்த மனிதர் தற்போது வயிற்றுப்பாட்டிற்காக ஒவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார். அப்பா தனி அறையில் ஒவியம் வரையும் காட்சி மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. வீட்டில் அம்மாவும் அக்காவும் கூடை பின்னிக் கொடுப்பதில் அவர்களின் வாழ்க்கை ஒடுகிறது. அந்தத் தந்தையின் வீழ்ச்சி காவிய சோகம் போலக் கதையில் அழுத்தமாக வெளிப்படுகிறது. மிக நல்ல கதை.  கதைகளில் வரும் உரையாடல்களை மிக அழகாக எழுதுகிறார் சுஷில்குமார்.

அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 22:13

March 5, 2021

சர்வோத்தமன் சடகோபன்

தஸ்தாயெவ்ஸ்கியினைப் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன். இவரது பார்வையும் புரிதலும் அற்புதமானது. ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும்.

பெங்களூரில் பணியாற்றிவரும் சர்வோத்தமன் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகச் சாலை என்ற வலைப்பக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

http://sarwothaman.blogspot.com/

தற்போது முறையிட ஒரு கடவுள் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மணல்வீடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். இன்னும் சில கட்டுரைகள் எழுதிய பின்பு தொகுக்க இருப்பதாகப் பதில் அனுப்பியிருந்தார்.

நேற்று புத்தகக் கண்காட்சியில் அவரை நேரில் பார்த்தபோது அந்த வேண்டுகோளை மறுபடியும் நினைவூட்ட நினைத்தேன். கூட்டம் அதிகமிருந்த காரணத்தால் பேசிக் கொள்ள இயலவில்லை.

சர்வோத்தமன் எவரது அங்கீகாரம் பற்றியும் கவலையின்றித் தொடர்ந்து தனது படைப்புச் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரைப் போன்ற தனிக்குரல்களை நாம் கொண்டாட வேண்டும்.

புதிய சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கும் சர்வோத்தமனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 18:37

எனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்

காந்தி பற்றி தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான நூல்களைத் தொகுத்திருக்கிறேன். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட காந்திய நூல்களைத் தனியே பதிவிட இருக்கிறேன். இதில் பெரும்பான்மை மொழியாக்க நூல்களே.

1) காந்தி வாழ்க்கை

லூயி ஃபிஷர்

தமிழில் : தி.ஜ.ர.

பழனியப்பா பிரதர்ஸ்

பத்திரிக்கையாளரான லூயி ஃபிஷர் காந்தியோடு நேரில் பழகியவர். காந்தியின் வரலாற்றை லூயி ஃபிஷர் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டே காந்தி திரைப்படம் உருவாக்கப்பட்டது

2)மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள்

வால்டெர் ஏரிஷ் ஷேபெர்

தமிழில் : ஜி. கிருஷ்ணமூர்த்தி

ஜெர்மன் ரேடியோவில் ஒலிபரப்புச் செய்யப்பட்ட நாடகம். கூத்துப்பட்டறை இந்த நாடகத்தைச் சென்னையிலும் நிகழ்த்தியுள்ளது. காந்தியின் கடைசி நிமிஷங்களை விவரிக்கும் சிறந்த நூல்

3)காந்திக் காட்சிகள்

காகா காலேல்கர்

தமிழ்நாடு காந்தி நினைவு நிதி வெளியீடு

காந்தியவாதியான காகா காலேல்கர் எழுதிய காந்தி குறித்த சிறந்த நூல். அற்புதமான நிகழ்வுகளையும் நினைவுகளைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு

4) அன்புள்ள புல் புல்’ – கட்டுரைத் தொகுப்பு.

சுனில் கிருஷ்ணன். யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடு, 2018.

காந்தி இன்று (www.gandhitoday.in) இணையதளத்தில் காந்தி குறித்து வெளியான கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு

காந்தி குறித்து முன்வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகளை மறுக்கும் அல்லது அன்றைய சூழலை முழுமையாக விளக்கும் விதமான ஆய்வுத்தன்மையு கொண்ட கட்டுரைகள் இதில் உள்ளன

5) காந்திஜி ஒரு சொற்சித்திரம்

பிரான்ஸிஸ் வாட்சன், மாரிஸ் பிரவுன்

தமிழில் : பி. வி. ஜானகி

‘Talking of Gandhiji’ என்ற நூலின் தமிழாக்கம்.

6)தமிழ்நாட்டில் காந்தி

அ.ராமசாமி

விகடன் வெளியீட்டு

காந்தியின் தமிழகப் பயணத்தை முழுமையாக விவரிக்கும் அரிய ஆவணத்தொகுப்பு 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று காந்தி பலவிதங்களில் பயணம் செய்திருக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள்

7) இந்திய சுயராஜ்யம்

மகாத்மா காந்தி

தமிழில்: ரா. வேங்கடராஜுலு

காந்திய இலக்கியச் சங்கம்

குஜராத்தி மூலநூல் 30,000 வார்த்தைகளைக் கொண்டது. 1909-இல் காந்திஜி இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குக் ‘கில்டோனன் காஸில்’ என்ற கப்பலில் திரும்புகையில், அப்பிரயாண காலத்தில் கப்பலில் கிடைத்த காகிதத்தைக் கொண்டே இதை எழுதி முடித்தார்.

8) காந்தி காட்டியவழி

:க.சந்தானம்

மணிவாசகர் பதிப்பகம்

9) காந்தி எனும் மனிதர்

மிலி கிரகாம் போலக்,

தமிழில்: க.கார்த்திகேயன்

சர்வோதய இலக்கியப் பண்ணை

காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த போது அவரது உற்ற தோழனாக இருந்தவர் ஹென்றி போலக் என்னும் ஆங்கிலேயர். அவர் காந்தியின் வீட்டிலேயே தங்கியிருந்தார். ஹென்றி போலக்தைத் திருமணம் செய்துகொள்வதற்காக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வந்தவர் மிலி. காந்தி அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தார். மிலியின் பார்வையில் காந்தியின் ஆளுமையும் அவரது செயல்பாடுகளும் அழகாக எழுதப்பட்டுள்ளன.

10) பாபூ அல்லது நானறிந்த காந்தி

ஜி. டி. பிர்லா

தமிழில்: அ. சுப்பையா

தொழிலதிபரான பிர்லா காந்தி மீது மிகுந்த பற்று கொண்டவர். அவர் காந்தியோடு பழகிய நாட்களை, நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நூல் இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக்கிடைக்கிறது

11) வாழ்விக்க வந்த காந்தி

ரொமெய்ன் ரோலந்து

தமிழில்: ஜெயகாந்தன் (தமிழில்)

கவிதா வெளியீடு

எழுத்தாளர் ரோமன் ரோலந்து எழுதிய காந்தி நூலை ஜெயகாந்தன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்

12) மகாத்மா காந்தி

வின்சென்ட் ஷீன்

வ.உ.சி நூலகம்

13) யாவரும் சோதர

மகாத்மாவின் மணிமொழிகள்

தொகுப்பு கிருஷ்ண கிருபளானி.

சாகித்ய அகாதமி வெளியீடு

14) மகாத்மா காந்தி நினைவு மாலை

எஸ். அம்புஜம்மாள்

காந்தியை சென்னையில் சந்தித்துப் பழகிய அம்புஜம்மாள் அவரது ஆசிரமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி சேவை செய்தவர். அவரது நினைவுகளின் வழியே காந்தி ஒளிருகிறார்

15) காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

வி.ராமமூர்த்தி (ஆசிரியர்), கி.இலக்குவன் (தமிழில்)

பாரதி புத்தகாலயம்

16) தமிழ்நாட்டில் காந்தி

தி.சே.சௌ.ராஜன்

சந்தியா பதிப்பகம்.

17) தென்னாப்பிரிக்காவில் காந்தி

ராமச்சந்திர குஹா (ஆசிரியர்)

கிழக்குப் பதிப்பகம்

18) நவகாளி யாத்திரை

சாவி

1947-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் காந்தி மகான் நவகாளி ஜில்லாவில் கிராமம் கிராமமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்

அந்தப் பயணத்தில் கலந்து கொண்டு சாவி எழுதிய நேரடி அனுபவத் திரட்டு

19)அண்ணல் அடிச்சுவட்டில்

ஏ.கே.செட்டியார்

தமிழில் : ஆ.இரா.வேங்கடாசலபதி

காந்தியை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்க ஏ.கே. செட்டியார் எவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பயணம் செய்திருக்கிறார் என்பதைப் பற்றிய அரிய நூல்

20) பல ரூபங்களில் காந்தி

– அனு பந்தோபாத்யாயா

தமிழில் ராஜகோபாலன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 00:18

March 4, 2021

இரண்டு குறுங்கதை தொகுப்புகள்

.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக குறுங்கதைகள் எழுதிவருகிறேன். எனது தாவரங்களின் உரையாடல் தொகுப்பிலே எட்டு குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன. அதிலுள்ள பாதம் என்ற குறுங்கதை தற்போது ஆறாம்வகுப்பிற்கான பாடமாக வைக்கபட்டுள்ளது.

நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதைகளின் தொகுப்பினை 2009ல் வெளியிட்டேன். இந்தத் தொகுப்பில் ஐம்பது கதைகள் இடம்பெற்றிருந்தன. இப்படிக் குறுங்கதைகளை மட்டுமே கொண்ட ஒரு தொகுப்பு அதன் முன்பு எவராலும் வெளியிடப்பட்டதில்லை. அந்த நூல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதன் ஐந்தாவது பதிப்பைத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் குறுங்கதை வடிவம் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக அறியப்படுகிறது. Modern Fables, Sudden Fiction. Flash Fiction. Modern Parables, Little Fable, Micro Stories, Fantasy tales எனப் பல்வகையிலும் குறுங்கதைகள் எழுதப்படுகின்றன.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான காஃப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ், இதாலோ கால்வினோ, யாசுனாரி கவாபத்தா, எட்கர் கிரட், ஹென்ரிச் ப்யூல், மிரோஜெக், டொனால்டு பார்த்தல்மே போன்றவர்கள் மிகச்சிறந்த குறுங்கதைகளை எழுதியிருக்கிறார்கள். கவாபத்தாவின் Palm-of-the-Hand Stories Yasunari Kawabata மிகச்சிறந்த குறுங்கதைகளின் தொகுப்பு.

எனது நகுலனின் வீட்டில் யாருமில்லை தொகுப்பிலுள்ள ஒரு குறுங்கதைகளைக் குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நித்திலன் புன்னகை விற்பனைக்கு என்ற குறும்படமாக இயக்கியுள்ளார். அப்படம் நாளைய இயக்குநர் திரையிடலில் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்றிருக்கிறது

இந்த ஆண்டு 125 குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன். அது கர்னலின் நாற்காலி என்ற பெயரில் தனி நூலாக வெளியாகியுள்ளது. அதிலுள்ள மூன்று குறுங்கதைகளை வேறுவேறு இளம் இயக்குநர்கள் குறும்படமாக உருவாக்கி வருகிறார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய புத்தகங்களில் இதுவே மிக அதிகம் விற்பனையாகியுள்ளது.

குறுங்கதைகளுக்கு வரையறைகள் கிடையாது. பலரும் பக்க அளவை வைத்துக் கொண்டு அதை முடிவு செய்கிறார்கள். உண்மையில் அது கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலுள்ள வடிவம். மின்னல்வெட்டு போல அனுபவத்தின் வெடிப்பினை அடையாளப்படுத்தக் கூடியது. ஒரு தருணம் அல்லது ஒரு நிகழ்வின் அற்புதம் அல்லது மாயத்தை விவரிக்ககூடியது. பனித்துளியில் ஒளிரும் சூரியனைப் போன்றதே குறுங்கதை. மிகச்சிறந்த குறுங்கதைகள் உரைநடைக்கவிதை போலவே எழுதப்பட்டிருக்கின்றன. மேற்குலகில் நவீன வாழ்வின் அபத்தத்தை வெளிப்படுத்தும் குறுங்கதைகளும் எழுதப்படுகின்றன.

மேஜிகல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வகைமை கதைகள் உள்ளன.

எனது இரண்டு குறுங்கதைகளின் தொகுப்பினையும் புத்தகக் கண்காட்சியில் உள்ள தேசாந்திரி அரங்கு எண் 494 மற்றும் 495ல் பெற்றுக் கொள்ளலாம்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2021 23:02

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.