S. Ramakrishnan's Blog, page 143
February 26, 2021
எனது பரிந்துரைகள் -3
சென்னை புத்தகக் கண்காட்சியின் மூன்றாம் நாளுக்கான எனது பரிந்துரைகள்.
••
பிறக்கும் தோறும் கவிதை
ஷங்கர் ராமசுப்ரமணியன்
வனம் வெளியிடு

கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் நவீன கவிதையுலகில் தனித்துவமான கவிஞர். கவிதைகள் குறித்த அவரது கட்டுரைகள் ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாக அமைந்தவை. சமகாலத் தமிழ் கவிதைகள் குறித்த அவரது இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நவீன தமிழ்க்கவிதையின் போக்கினையும் சாதனைகளையும் எடுத்துச் சொல்கிறது
இயந்திரம்
மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய நாவல்.
தமிழாக்கம் ஆனந்தகுமார்.
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.

அரசு அலுவலகங்களில் செயல்படும் ஊழல் மற்றும் அதிகாரப் போட்டி. அராஜகமான நடவடிக்கைகள் குறித்து மிக விரிவாக எழுதப்பட்ட சிறந்த மலையாள நாவல்.
கடற்புறத்து கிராமம்
அனிதா தேசாய்.

நேஷனல் புக் டிரஸ்ட்.
கடற்கரை கிராமம் ஒன்றின் வாழ்வியலை விவரிக்கும் சிறந்த நாவல். கார்டியன் இதழில் பரிசினை வென்ற நூலிது. துல்லியமான, அடர்த்தியான மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் சிறந்த ஆவணப்படம் போல வாழ்க்கையை உண்மையாகப் பதிவு செய்துள்ளது
என் நண்பர் ஆத்மாநாம்
ஸ்டெல்லா ப்ரூஸ்
விருட்சம் வெளியீடு

கவிஞர் ஆத்மாநாம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த நினைவுக்குறிப்பு. எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தனது மனைவி ஹேமாவின் மறைவு பற்றி எழுதிய உணர்வுப்பூர்வமான பதிவு என மிக அழகான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு
எனது போராட்டம்
ம.பொ.சி
பூங்கொடி பதிப்பகம்.

தமிழறிஞர் ம.பொ.சியின் தன்வரலாற்றுடன் விடுதலைப்போராட்ட காலம் மற்றும் எல்லைப்போராட்ட வரலாற்றை விவரிக்கும் சிறந்த நூல்.
February 25, 2021
புத்தகக் காட்சி தினங்கள் 1
நேற்று மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன்.

சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என்பதால் வழக்கத்தை விட மிக அகலமான, பெரிய நடைபாதைகளை அமைத்திருக்கிறார்கள். கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கபட்டிருந்தன.
புத்தகக் கண்காட்சிக்கு சென்று வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது என்பது பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்வது போன்றது. வாசகர்களின் தீராத அன்பும் பாராட்டும் ,எழுத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையுமே என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. எத்தனை விதமான வாசகர்கள். அவர்களுடன் உரையாடவும் அவர்களின் பல்வேறு வகை கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பம் முக்கியமானது.
குறிப்பாக இப்போது தான் எழுதத் துவங்கியுள்ள இளைஞர்கள் பலரைச் சந்திக்க முடிவதும், வாசிப்பில் தீவிரம் கொண்டுள்ள இளைஞர்களுடன் உரையாடுவதும் இனிமையான அனுபவம்.
சிலர் என்னோடு ஒரு செல்பி எடுத்துக் கொள்வதோடு சரி, புத்தகங்கள் வாங்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களின் வேண்டுகோளை நான் ஒரு போதும் மறுப்பதில்லை. மகிழ்ச்சியின் அடையாளமாக நினைக்கிறார்கள். அப்படியே இருக்கட்டுமே
ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்கு வந்து எனது புத்தகங்களை வாங்கி அதில் கையெழுத்து பெற்றுக் கொண்டு கூடவே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
நேற்றும் ஒரு நண்பர் அப்படி எட்டு வருஷங்களில் எடுத்த புகைப்படங்களைக் காட்டினார். தன் வீட்டின் புத்தக அலமாரியில் இரண்டு வரிசைகள் முழுவதும் எனது புத்தகங்கள் மட்டுமே இருப்பதாகச் சொன்னார். இந்த அன்பு தான் எழுத்தில் நான் சம்பாதித்த சொத்து.

காவல்துறையில் பணியாற்றும் ஒரு வாசகர் கைநிறைய எனது புத்தகங்களை வாங்கிக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு கம்பீரமாக ஒரு சல்யூட் அடித்துச் சென்றார்.
ஒரு சிறுமி என்னிடம் வந்து எங்கம்மா உங்க ரீடர். அவங்க உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கிடலாமா என்று கேட்டாள். மகிழ்ச்சியோடு அவர்களை அருகில் அழைத்தேன். குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் பெண்ணின் கணவர் தனக்குப் புத்தகம் படிக்கிற பழக்கமில்லை. ஆனால் தன் மனைவி நிறைய படிக்க கூடியவர். அவருக்காகவே புத்தகக் கண்காட்சிக்கு வந்தோம் என்றார். பெரம்பூரில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம். ஆண்டிற்கு ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு வந்து தேவையான அத்தனை புத்தகங்களையும் வாங்கிக் கொண்டுவிடுவதாக அந்தப் பெண் சொன்னார். அத்தோடு வீட்டில் சமைக்கும் நேரம் யூடியூப்பில் எனது இலக்கிய உரைகளை கேட்பதாகவும் சொன்னார்.
உங்கள் சமையல் அறை வரை தஸ்தாயெவ்ஸ்கியும் செகாவும் வந்துவிட்டார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது என்றேன். அந்தப் பெண் புன்சிரிப்புடன் எங்க வீட்டுக்கு ஒரு நாள் வருவீர்களா என்று கேட்டார். நேரம் கிடைக்கும் போது அவசியம் வருகிறேன் என்று சொன்னேன்.
இரண்டு பை நிறையப் புத்தகங்களுடன் அவர்கள் நடந்து போவதைக் காண அத்தனை சந்தோஷமாக இருந்தது.

ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ் தேசாந்திரி அரங்கில் சிறிய நேரலை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது பணி மிகுந்த நன்றிக்குரியது

நியூஸ் 7, ஜெயா டிவி மற்றும் இரண்டு யூடியூப் சேனல்கள் புத்தகக் கண்காட்சி குறித்த எனது கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.
எழுத்தாளர் உத்தமசோழனின் மகன் என்னைச் சந்தித்து தனது தந்தை எழுதிய ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ எனும் புதிய நாவலைக் கொடுத்தார். ஆயிரம் பக்கங்களுக்கும் மேலுள்ள நாவல். கீழத்தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். உத்தமசோழன் இனிய நண்பர். அவரது நலத்தை விசாரித்தேன்.
நேற்று புத்தகக் கண்காட்சிக்கு போய் திரும்பும் போது தான் இயல்பு வாழ்க்கை துவங்கியிருப்பதாக உணரத் துவங்கினேன்.
••
February 24, 2021
எனது பரிந்துரைகள் -2
சென்னை புத்தக் கண்காட்சியின் இரண்டாம் நாளுக்கான எனது பரிந்துரைகள்.
மிச்சக் கதைகள்

கி.ராஜநாராயணன்
அன்னம் – அகரம் பதிப்பகம்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் தனது 98வது வயதில் எழுதிய கதைகளின் தொகுப்பு.
••
மறக்க முடியாத மனிதர்கள்
வண்ண நிலவன்

காலச்சுவடு
இலக்கிய ஆளுமைகள் குறித்த வண்ணநிலவனின் நினைவுக்குறிப்புகள்.
••
ராஜாஜி வாழ்க்கை வரலாறு

ராஜ்மோகன் காந்தி
தமிழில்:கல்கி ராஜேந்திரன்
வானதி பதிப்பகம்
ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக விவரிக்கும் இந்த நூல் தமிழக அரசியல் வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் துல்லியமாக விவரிக்கிறது.
•••
இந்து மாக்கடல்
சஞ்சீவ் சன்யால்

மொழிபெயர்ப்பாளர் : சா. தேவதாஸ்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
பக்கங்கள் : 372
இந்தியப் பெருங்கடலினை முன்வைத்து இந்தியா வரலாற்றைப் புதிய கோணத்தில் ஆராய்கிறது இந்நூல்.
••
யாத் வஷேம்
கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்
நேமிசந்த்ரா

தமிழில் : கே. நல்லதம்பி
எதிர் வெளியீடு
இரண்டாம் உலகப்போரின் காரணமாக பெங்களூரில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த யூதக்குடும்பங்களின் வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறது இந்த நாவல்.
••
எனது பரிந்துரைகள் -1
நான் படித்த, எனக்கு விருப்பமான சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இவை புத்தகக் கண்காட்சியில் கிடைக்க கூடும். எந்தக் கடையில் கிடைக்கிறது என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அச்சில் இல்லாமல் இருந்தால் நூலகத்தில் தேடித்தான் வாசிக்க வேண்டும்.
இவான்

விளதீமிர் பகமோலவ்
தமிழில்: நா. முகம்மது செரீபு
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
புகழ்பெற்ற ரஷ்ய இயக்குநரான தார்கோவெஸ்கியின் (Andrei Tarkovsky) Ivan’s Childhood திரைப்படம் இந்த நாவலை மையமாக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய நாவல். இந்த நாவலைப் படித்துவிட்டுத் திரைப்படத்தைப் பாருங்கள். திரைக்கதையின் நுட்பங்களை நீங்களே அறியத் துவங்குவீர்கள்.
•••
கவிதாலயம்

ஜீலானி பானு
தமிழில் :முக்தார்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
மிகச்சிறந்த உருது நாவல். கவிதை புனைவதிலும் சிற்றின்ப நுகர்ச்சியிலும் செல்வ வளத்திலும் திளைத்துப் போன சமூகத்தையும் ஹைதராபாத் நிஜாமில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் விவரிக்கும் சிறந்த நாவல்.
•••
மித்ராவந்தி
கிருஷ்ணா ஸோப்தி

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
தமிழில் : லட்சுமி விஸ்வநாதன்
கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள். கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் பெண்ணின் அடக்கப்பட்ட காமத்தையும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார்.இந்தி இலக்கியத்தில் ஸோப்தியின் குரல் வலிமையானது. அவர் ஏற்படுத்திய அதிர்ச்சிகளும் லேசில் அடங்கக்கூடியவையில்லை. மித்ராவந்தி அதற்குச் சரியான உதாரணம்
••
கொல்லப்படுவதில்லை

வங்க மொழியில் மைத்ரேயி தேவி எழுதிய ‘நாவல் .
தமிழாக்கம் : கிருஷ்ணமூர்த்தி
சாகித்திய அகாடமி வெளியீடு
காதலின் மறுபக்கத்தைச் சொல்லும் இந்த நாவல் வெளியானதே சுவாரஸ்யமான கதை. தன்னைப் பற்றி அவதூறாகக் காதலன் எழுதிய நாவலுக்கு மறுப்பாகவும், உண்மையான காதலின் வெளிப்பாடாகவும் இந்த நாவலை மைத்ரேயி தேவி எழுதியிருக்கிறார்
•••
தன் வெளிப்பாடு

சுநில் கங்கோபாத்யாயா
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சுநில் கங்கோபாத்யாயாவின் இந்த நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி மொழியாக்கம் செய்துள்ளார்.
இது ஆத்ம பிரகாஷ் என்ற வங்க நாவலின் தமிழாக்கம்.
சுய அடையாளத்தைத் தேடும் இளைஞனின் கொந்தளிப்பான நாட்களை, மனநிலையை வெளிப்படுத்தும் சிறந்த நாவல்
•••
புத்தகக் காட்சி துவங்கியது
இன்று காலை 44- வது சென்னை புத்தகக் காட்சி இனிதே துவங்கியது.
தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 494 & 495ல் தயாராகிவிட்டது. எனது புதிய நூல்களையும் தேசாந்திரியின் பிற வெளியீடுகள் அனைத்தையும் இந்த அரங்கில் பெற்றுக் கொள்ளலாம்.




புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய சிறந்த நூல்கள் குறித்த பரிந்துரைகளை தினமும் வெளியிட இருக்கிறேன். அத்துடன் காணொளி மூலமாகவும் எனது பரிந்துரைகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.
புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருப்பதால் பயணம் செய்து வருவது எளிதானது.


February 23, 2021
பெர்க்மெனின் விரிந்த சிறகுகள்
இங்க்மார் பெர்க்மேனின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இரண்டு ஆவணப்படங்கள் உருவாக்கப்பட்டன. அதில் Searching for Ingmar Bergman அவரது வாழ்க்கை மற்றும் திரையுலக வாழ்வினை விவரித்தது. அதில் பெர்க்மென் எப்படி உலகை விட்டு ஒதுங்கி ஒரு தீவில்வீட்டைச் சுற்றிலும் கோட்டைச் சுவர் எழுப்பிக் கொண்டு பார்வையாளர்களை முற்றிலும் தவிர்த்தபடியே வாழ்ந்தார் என்பதையும் அவரது கசப்பான திருமண உறவுகள், அவரது திரையுலக அனுபவங்கள் மற்றும் காதல் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.

Bergman: A Year in the Life பெர்க்மென் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எப்படித் தொடர்ச்சியான, தீவிரமான கலைவெளிப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதை விவரிக்கிறது. பத்திரிக்கையாளர் ஜேன் மேக்னூசன் இதனை இயக்கியுள்ளார்.
1957ம் ஆண்டுப் பெர்க்மெனின் The Seventh Seal திரைப்படம் வெளியானது. அந்த ஆண்டில் அவர் நான்கு நாடகங்களை அரங்கேற்றினார், ஒரு தொலைக்காட்சி திரைப்படத்தை எழுதி இயக்கினார். ரேடியோ நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார். அத்தோடு ‘Wild Strawberries’ படத்தின் கதையை எழுதிப் படப்பிடிப்பினையும் பூர்த்தி செய்து வெளியிட்டுள்ளார். எப்படி ஒருவரால் இத்தனை பணிகளை ஒரே ஆண்டில் செய்ய முடிந்தது என்பது வியப்பான விஷயமே.
படைப்பாற்றலின் உச்சத்தை வெளிப்படுத்திய அந்த ஆண்டில் பெர்க்மென் எப்படியிருந்தார். அவரால் எப்படி இத்தனை பணிகளையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது என்பதையே இந்த ஆவணப்படம் ஆராய்கிறது
எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு ஏதாவது ஒரு ஆண்டு அல்லது சில ஆண்டுகள் படைப்பாற்றலின் உச்சத்தைத் தொடுவதாக அமையும். அந்த ஆண்டில் அவர்கள் எழுதிக் குவித்திருப்பார்கள். முக்கியமான படைப்புகள் வெளியாகியிருக்கும். ஊற்றுக்கண் திறந்து தண்ணீர் பீறிடுவது போன்ற நிகழ்வது. அப்படித்தான் பெர்க்மெனிற்கும் நடந்திருக்கிறது.
அந்த ஆண்டுப் பெர்க்மென் கடுமையான வயிற்று உபாதையால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஒரு அறுவைச்சிகிச்சையினையும் மேற்கொண்டார். அவருக்கு உணவு ஒவ்வாமை தீவிரப் பிரச்சனையாக இருந்தது. ஆகவே குறிப்பிட்ட சில உணவுகளைத் தவிர வேறு எதையும் சாப்பிட இயலாது. பிஸ்கட் மற்றும் ஸ்வீடிஷ் தயிர் மட்டுமே அவரது காலை உணவு. வயிற்றுப்புண் ஏற்பட்டு ரத்தக்கசிவுடன் அதிகமான வலி ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமாகியிருந்தது

இந்த நிலையில் அவர் உருவாக்கிய இரண்டு படங்களும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கோணங்களில் வாழ்க்கையை அணுகுவதாக அமைந்திருந்தது. சொந்த துயரங்களைத் தாண்டி வாழ்க்கையின் மீதான ஆழ்ந்த புரிதலை உருவாக்குவதாக இந்தப் படங்கள் அமைந்திருந்தன.
நோய் தன்னுடைய உடலை முடக்கிவிடாமல் அதோடு போராடுவதும், மனதின் திசையில் உடலைக் கொண்டு செல்வதும் கலைஞனின் அடிப்படை கூறுகள். படைப்பாற்றலின் தீவிரம் காரணமாகவே அவன் நோயுறுகிறான். படைப்பின் வழியாகவே அவன் நோயிலிருந்து விடுபடுகிறான். வலியைக் கடந்து செல்ல அவன் சொற்களை மருந்தாகக் கொள்கிறான். சொற்களே அவனது மீட்சி.
வாழ்நாள் முழுவதும் நோயுடன் போராடியபடியே எழுதிக் கொண்டிருந்த படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள்.பெண் எழுத்தாளர் ஐசக் டெனிசன்(,Isak Dinesen), காதல் திருமணம் செய்து கொண்டு ஆப்ரிக்காவிற்கு காபி தோட்டம் உருவாக்க கணவோடு சென்றார். அங்கே கணவரின் பால்வினை நோய் அவரையும் தொற்றிக் கொண்டது. அதற்கு சிகிட்சை எடுத்தபடியே தான் தனது படைப்புகளை எழுதினார். தஸ்தாயெவ்ஸ்கிக்கு வலிப்பு நோய் இருந்தது. அதிலிருந்து மீள முடியவேயில்லை. வர்ஜீனியா வுல்ப் தீவிரமான மனச்சிதைவு நோயால் பாதிக்கபட்டிருந்தார். செகாவ் காசநோயால் அவதிப்பட்டார். இப்படி படைப்பாளிகளின் நோய்மை அவர்களை உடலளவில் முடக்கிய போதும் படைப்பின் வழியே அவர்கள் வாழ்க்கையின் மீது பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உலகை சந்தோஷம் கொள்ள வைத்திருக்கிறார்கள்.
பெர்க்மென் தனது கடந்தகாலத்தை மறைக்க முயல்கிறார். அவர் தனக்கான கடந்தகாலம் ஒன்றைத் தானே உருவாக்கி உலகின் முன்னால் காட்சிப்படுத்துகிறார். உண்மையில் அவரது வாழ்க்கை அப்படியிருக்கவில்லை என்று ஆவணப்படத்தின் இயக்குநர் தெளிவான சான்றுகளுடன் விளக்கிக் கூறுகிறார்.

இந்த ஆவணப்படத்தில் பெர்க்மெனின் சகோதரர் டாக் பெர்க்மென் கொடுத்த தொலைக்காட்சி நேர்காணல் உள்ளது
அதில் தனக்குச் சிறுவயதில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் பெர்க்மென் தனக்கு நடந்ததாக எழுதியிருக்கிறார். பொதுவெளியில் சொல்கிறார். அது பச்சைப்பொய். அவருக்கு அப்படி எந்த வேதனை தரக்கூடிய நிகழ்வுகளும் பால்யத்தில் நடைபெறவில்லை. அவர் தந்தையின் செல்லப்பிள்ளை. தந்தையோடு மிகவும் நெருக்கமாக இருந்தார். தந்தை தன்னைத் தண்டிக்கும் போது பெர்க்மென் அதை ரசித்தார். என்கிறார் அவரது சகோதரர்.
இந்த நேர்காணலைக் கண்ட பெர்க்மென் மிகுந்த கோபம் கொண்டு இதைத் தொலைக்காட்சி ஒளிபரப்பக் கூடாது என்று நீதிமன்ற தடையாணை பெற்றார். நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நேர்காணல் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது
பெர்க்மெனின் தந்தையைப் போன்ற கதாபாத்திரத்தைத் தனது படத்தில் பெர்க்மென் எப்படி உருவாக்கினார். அவரது திருமண உறவு மற்றும் காதலில் ஏற்பட்ட நெருக்கடிகள். தீவு வாழ்க்கை. தொலைக்காட்சிக்காக எடுக்கபட்ட திரைப்படத்தில் அவர் செய்த புதுமைகள். நாடகமேடையில் வெளிப்பட்ட அவரது ஆளுமையின் மறுபக்கம் போன்றவற்றை இந்த ஆவணப்படம் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.
தீராக் காதலன், நாஜி அனுதாபி, ஒட்டுதல் இல்லாத குடும்பஸ்தர். தீவிரமான படைப்பாளி. சிறந்த இயக்குநர், அதீதமாகத் தனிமையை விரும்பும் மனிதர் எனப் பெர்க்மெனின் பல்வேறு முகங்களை நாம் இந்த ஆவணப்படத்தில் காணுகிறோம். நோயுற்ற ஒருவர் அதிலிருந்து விடுபடுவதற்காகத் தனது படைப்பாற்றலின் உச்சத்தை நோக்கிச் செல்வது தான் எனக்குப் படத்தில் பிடித்த விஷயம்.
1957ல் பெர்க்மெனுக்கு 39 வயது. இரண்டு திருமணங்கள், ஆறு குழந்தைகளின் தந்தை. புதிய காதல் என அவரது வாழ்வின் வேகம் தீவிரமாக இருந்தது. அவரது மேஜிக் லேண்டர்ன் என்ற சுயசரிதையில் தனது பால்யகாலம் துவங்கி இளமைக்காலம் வரை எப்படி இருந்தேன் என்பதைப் பெர்க்மென் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். இதில் உண்மை எவ்வளவு சதவீதமிருக்கிறது என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது.

ஐந்துமுறை திருமணம் செய்து கொண்டவர் பெர்க்மென். அவரது திருமண உறவு ஒருபோதும் சந்தோஷமாக இருந்ததில்லை. அவர் பாலுறவில் நாட்டமில்லாதவராக இருந்தார். ஆனால் எப்போதும் பெண்துணை தேவையுள்ளவராகவும் இருந்தார். அது தான் அவரது பிரச்சனை. தனது உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வீட்டிற்குள்ளும் தனது அறையின் கதவுகளை மூடிக் கொண்டிருப்பார். இசையும் வாசிப்பும் மட்டுமே அவரது விருப்பமான விஷயங்கள். அவரோடு சினிமாவில் பணியாற்றுவது அற்புதமான விஷயம். அவர் மிகச்சிறந்த காதலர். ஆனால் மிக மோசமான கணவர் என்கிறார் நடிகை லீவ் வுல்மான்.
இந்த ஆவணப்படத்திற்காக மூன்று ஆண்டுகள், பெர்க்மானுடன் நேரடியாகப் பணியாற்றிய பலரையும் ஜேன் தேடிச்சென்று நேர்காணல் செய்திருக்கிறார். அரிய ஆவணக்காப்பகக் காட்சிகளையும் பயன்படுத்தியிருக்கிறார்
ஏன் பெர்க்மெனின் சொந்தவாழ்க்கையை இப்படித் தொடர்ந்து ஆராய்ந்தபடியே இருக்கிறார்கள். அவர் தான் இதற்கான முக்கியக் காரணம். அவர் எழுதிய குறிப்புகள். நேர்காணல்கள் மற்றும் சுயசரிதையிலிருந்தே இந்த மாறுபாடுகள். வேறுபாடுகள் குறித்த கேள்விகள் உருவாகின்றன.
பெர்க்மெனைத் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் அவரோடு வாழ்ந்த வாழ்க்கை பற்றி எழுதிய புத்தகத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் பெர்க்மென் என்ற தனிமனிதனின் பலவீனங்களாக, குறையாக அறியப்படுகின்றன. ஆனால் அவரது திரைப்படங்களும். நாடகங்களும் இந்தக் குற்றச்சாட்டுகளை மீறி ஆழ்ந்த, உயரிய கலைப்படைப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கலையின் வழியே உன்னதமான ஆளுமையாக விளங்கிய ஒருவர் சொந்த வாழ்க்கையில் ஏன் இத்தனை சிக்கல்கள். புதிர்கள் கொண்டவராக இருக்கிறார் என்பதே அவர் குறித்த தொடர்ந்த ஆய்விற்கான முக்கியக் காரணம்.

“He is so honest about his weaknesses, there’s something good about that. He admits he’s a terrible father and husband, and unfaithful. Bergman’s exorcising his demons, and treats what’s going on inside his head. He is a man who is super sensitive to sound, light, food, dreams, but not really to other people “என்று லீவ் உல்மான் தனது நேர்காணலில் கூறுகிறார். அது தான் பெர்க்மெனை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
புத்தகக் காட்சியில்
சென்னைப் புத்தகக் காட்சியில் தேசாந்திரி அரங்கு மற்றும் புதிய நூல்கள் குறித்த அறிமுகம்.
ஒவிய நூல்கள்
தேசாந்திரி பதிப்பகம் எனது ஒவிய நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.


சென்னைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 494 & 495ல் இந்த நூல்களைப் பெறலாம்.
February 22, 2021
புதிய வெளியீடுகள்
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் புதிய வெளியீடுகள்.
புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 494 & 495 ல் புதிய நூல்களைப் பெறலாம்.
சிறார் நாவல்
தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகள்
கெட்டி அட்டைப் பதிப்பு
உலக சினிமாக் கட்டுரைகள்
தமிழ் திரையிசைப் பாடல்கள் குறித்த கட்டுரைகள்
சிறார் நாவல்
உலக சினிமாக் கட்டுரைகள்
சிறார் கதைகள்
February 21, 2021
தேசாந்திரி அரங்கு
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது
கடை எண் 494 மற்றும் 495.
எட்டாவது நுழைவாயிலின் இறுதியில் அமைந்துள்ளது.

பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 9 வரை புத்தக் காட்சி நடைபெறுகிறது
தினமும் காலை 11 மணி இரவு 8 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.
எனது எல்லா நூல்களையும் தேசாந்திரி அரங்கில் பெற்றுக் கொள்ளலாம்.
அனைவரும் வருக
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

