S. Ramakrishnan's Blog, page 140
March 2, 2021
எனது பரிந்துரைகள் -4
புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஐம்பதுக்கும் அதிகமான புதிய கவிதைநூல்கள் வெளியாகியுள்ளதாக அறிந்தேன். ஒரு சில நூல்களை மட்டுமே காண முடிந்தது. இளங்கவிஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.

நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கில் 50 சதவீத தள்ளுபடியில் மிகச்சிறந்த நாவல்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த நாவல்கள் இனி மறுபதிப்பு வருமா என்பது சந்தேகமே. ஒருவேளை வந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். நூறு ரூபாயில் இரண்டு மூன்று முக்கியமான நாவல்களை இங்கே வாங்கிவிட முடியும்.
கவிதாலயம், ஏணிப்படிகள். மித்ரவந்தி, மய்யழிக்கரையில், கயிறு, ஆதவன் சிறுகதைகள், இயந்திரம், இது தான் நம் வாழ்க்கை உயிரற்ற நிலா, கங்கைத்தாய், கன்னடச்சிறுகதைகள் போன்ற நூல்கள் இங்கே கிடைக்கின்றன. இவை மிகச்சிறந்த புத்தகங்கள். குறைந்த பிரதிகளே உள்ளன. வாங்கத் தவறவிடாதீர்கள்.
சுகுமாரன் கவிதைகள்

நவீன தமிழ்கவிதையுலகில் தனித்துவமும் அபாரமான கவித்துவமும் கொண்ட மிகப் பெரும் ஆளுமை கவிஞர் சுகுமாரன். அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இளங்கவிஞர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகமிது. கவிதையை நேசிக்கும் அனைவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய சிறந்த நூல்.

காஃப்கா கடற்கரையில்

ஹாருகி முரகாமி

தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்
எதிர் வெளியீடு
ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமியின் புகழ்பெற்ற நாவலை கார்த்திகைப் பாண்டியன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.காஃப்காவின் சிறுகதைகளை முரகாமி ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நாவல் காஃப்காவின் மனநிலையை கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் வாழ்வினை முதன்மைப்படுத்துகிறது. எதிர் வெளியீடாக வந்துள்ளது.
வேப்பங்கிணறு

தேனீ சீருடையான்

அன்னம் – அகரம் பதிப்பகம்
தேனீ சீருடையான் சிறந்த நாவலாசிரியர். இவரது நிறங்களின் உலகம் தமிழில் வெளியான மிகமுக்கியமான நாவல். சீருடையானின் புதிய நாவலிது. அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கள்ளர் மடம்

மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்
சி. சு. செல்லப்பா

பதிப்பாசிரியர்: கால சுப்ரமணியம்
கருத்து=பட்டறைபதிப்பகம்
தமிழ் இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளி சி.சு.செல்லப்பா எழுதிய முக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்

பதிப்பாசிரியர்: : திவாகர் ரங்கநாதன்
காலச்சுவடு பதிப்பகம்
கவிஞர் ஞானக்கூத்தனின் நேர்காணல்களின் தொகுப்பு. தமிழின் சங்கக் கவிதைகள் துவங்கி சமகால வாழ்க்கை வரை ஞானக்கூத்தனின் பார்வைகள் தனித்துவமானவை.
நினைவுகளின் ஊர்வலம்

எம். டி. வாசுதேவன் நாயர்
தமிழில்: : டி. எம். ரகுராம்
சந்தியா பதிப்பகம்
ஞானபீடம் பரிசு பெற்றுள்ள மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் இளமைப்பருவத்தை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. டி.எம். ரகுராம் ஒரு ஆங்கிலக் கவிஞர். . தமிழில் இந்த நூலை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
மிதக்கும் உலகம்

ஜப்பானியக் கவிதைகள் | மர அச்சு ஓவியங்களுடன்
தமிழில் ப. கல்பனா, பா. இரவிக்குமார்
பரிசல் பதிப்பகம்
தேர்வு செய்யப்பட்டஜப்பானிய கவிதைகளின் தொகுப்பு. மிக அழகான ஒவியங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். பேராசிரியர் இரவிக்குமார் மற்றும் பேராசிரியர் ப..கல்பனா இருவரும் இணைந்து கவிதைகளை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
நானும் எனது இலக்கியத் தேடலும்.
(தினமணி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை.)

எது நான் படித்த முதல் புத்தகம் என்று யோசித்துப் பார்த்தால் விடை காணமுடியவில்லை. ஆனால் மூன்று நான்கு வயதுகளிலே வண்ணப்படம் உள்ள புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது.
என் வீட்டில் புத்தகம் படிக்கும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. ஆகவே வார இதழ்கள், மாத இதழ்கள். புதிய புத்தகங்கள் வீட்டிற்கே வந்துவிடும். படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டில் காரசாரமாக விவாதிப்பார்கள். ஆகவே புத்தக வாசிப்பு வீட்டில் தான் முதலில் அறிமுகமானது.
“மல்லாங்கிணர்’ எனும் எனது கிராமத்தின் நூலகத்திலிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்துத் தான் நான் உருவானேன். அதன் பின்பு புத்தகம் வாங்குவதற்காகப் பழைய புத்தகக் கடைகளைத் தேடி ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தேன். எனது சேமிப்பில் உள்ள அரிய நூல்கள் யாவும் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியவையே. புத்தகங்கள் தான் என்னை எழுத்தாளனாக உருவாக்கின.
கால இயந்திரத்தில் ஏறி வேறுவேறு காலங்களுக்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தையே புத்தகங்களும் தருகின்றன. “பொன்னியின் செல்வனை’ப் புரட்டியதும் சோழர் காலத்திற்குப் போய்விடுகிறீர்கள். “போரும் அமைதியும்’ வாசிக்கையில் ரஷ்யப்பனியில் நனைய ஆரம்பிக்கிறீர்கள். சங்க கவிதைகளை வாசிக்கையில் நாமும் சங்க காலத்திற்கே போய்விடுகிறோம். மனிதனின் வாழ்க்கை கால அளவில் மிகச்சிறியது. ஆனால் இந்த வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கைகளை, பல்லாயிரம் அனுபவங்களைப் புத்தகம் வழியே அனுபவித்துவிட முடிகிறது. ஒரு நல்ல ஆசிரியர் எப்போதும் துணையிருப்பது போலச் சிறந்த புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது.
சிறிய கிராமங்களில், சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்குக் கடைகள் கிடையாது. பெரிய நகரங்களைத் தேடிப்போய்ப் புத்தகம் வாங்க வேண்டும். இன்றும் அதே நிலை தான் உள்ளது.
ஐந்தாயிரம் பேர், பத்தாயிரம் பேர் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் கூடப் புத்தகக் கடை கிடையாது. தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் ஒன்றில் கூடப் புத்தகக் கடை கிடையாது. அண்ணாபல்கலைக்கழகமாவது இதை முன்னெடுக்கலாம்.
எனது கல்லூரி நாட்களில் புத்தகம் வாங்குவதற்காகவே பயணம் செய்யத் துவங்கினேன். கல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூர் என்று சென்று வருவேன். லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸிற்கு நோபல் பரிசு கிடைத்த செய்தியைப் படித்த உடனே அவரது புத்தகம் வாங்க வேண்டும் என்று தேடினேன். தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கவில்லை. ஆகவே அவரது புத்தகம் வாங்குவதற்காகவே டெல்லிக்குப் பயணம் செய்தேன். அங்கேயும் உடனே கிடைக்கவில்லை. காத்திருந்து புத்தகம் வாங்கி வந்து படித்தேன்.
இன்று அந்தக் காத்திருப்பு, நீண்ட பயணம் யாவும் தேவையற்றதாகிவிட்டது. வீட்டிலிருந்தபடியே எந்தப் புத்தகத்தையும் ஆன்லைன் விற்பனையகம் மூலம் பெறமுடிகிறது. தமிழ்நாட்டில் பெரிய, சிறிய நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இதனால் புத்தகங்களைத் தேடும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிகப்பெரிய வாசல் திறந்து விடப்பட்டிருக்கிறது.
பள்ளி வயதில் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படித்தேன். இன்றும் கிராபிக் நாவல்கள். மாங்கா போன்ற வரைகலை புத்தகங்களை விரும்பிப் படிக்கிறேன்.
ரஷ்ய இலக்கியங்களின் மீது அதிக ஈடுபாடு எனக்குண்டு. அவற்றை அறிமுகம் செய்து நிறைய எழுதியிருக்கிறேன். பேசி யிருக்கிறேன். அது போலவே சர்வதேச இலக்கியங்களை அறிமுகப்படுத்தி இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்த ஆண்டு அப்படி ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றிய உரைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்த கையோடு அந்த நூல்களையும் வாங்கி வாசிக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
இதுவரை முப்பதாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களைச் சேகரித்திருக்கிறேன். புத்தகங்களை வைத்துக் கொள்ளப் போதுமான இடம் தான் இல்லை. தற்போது எனது நூலகத்தை மின்னூல்களாக மாற்றிப் பாதுகாத்து வருகிறேன்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் வருகிறேன். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போல எனது பண்டிகை இந்தப் புத்தகக் கண்காட்சி நாட்களே. வாசகர்களைச் சந்திப்பதும் உரையாடுவதும் விரும்பிய புத்தகங்களைத் தேடி வாங்குவதும் இனிமையான அனுபவம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். காரில் உள்ளே நுழைய இயலவில்லை. எங்கும் ஜனத்திரள். இவ்வளவு வாசகர்கள் ஆசையாகப் புத்தகம் வாங்கச் செல்கிறார்கள் என்பதும் வாங்கிய புத்தகங்களை இரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் தூக்கி வருகிறார்கள் என்பதும் பெருமகிழ்ச்சியைத் தந்தது.
கரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிலை நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிட்டது. மக்கள் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இன்று அதிலிருந்து மீண்டுவர மக்கள் புதிய நம்பிக்கையை, உத்வேகத்தைப் பெறப் புத்தகங்களை நாடுகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் டி.ஜி. டெண்டுல்கரின் எட்டு தொகுதிகளை இந்த ஆண்டுப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். “பிறக்கும் தோறும் கவிதை’ என்ற கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கட்டுரைத் தொகுப்பு. நேமிசந்த்ரா எழுதி கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற “யாத் வஷேம்’ என்ற நாவல், கவிஞர் ஞானக்கூத்தன் மொத்த கவிதைகளின் தொகுப்பு, நபகோவ் இன் அமெரிக்கா, மோகன் ராகேஷ் சிறுகதைகள் போன்றவற்றை வாங்கினேன்.
ரீடர் என்ற வார்த்தை பொதுவாக வாசகரைக் குறிப்பதாக மட்டுமே நம்பியிருந்தேன். ஆனால் பார்வையற்றவர்களுடன் பழகிய பிறகு தான் அது தனக்காகப் புத்தகம் வாசிக்கும் நபரைக் குறிக்கும் சொல் என்பதை அறிந்து கொண்டேன். இந்தக் கண்காட்சியிலும் பார்வையற்றவர்கள் துணையோடு வருகை தந்து விருப்பமான புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள்.
அவர்களின் ஒரே வேண்டுகோள். பார்வையற்றவர்களுக்கான பிரையில் வெளியீடுகள். ஆடியோ புத்தகங்கள் கொண்ட தனி அரங்கு ஒன்றைக் கண்காட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். வருங்காலத்திலாவது அந்தக் கனவு நனவாக வேண்டும்.
நன்றி :
தினமணி நாளிதழ்
வல்லினம் இதழில்
வல்லினம் இணைய இதழில் எனது புதிய சிறுகதை கறுப்பு ரத்தம் வெளியாகியுள்ளது.

அஞ்சலி
காந்தியவாதியும் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான அருமை நண்பர் டாக்டர் ஜீவா ( ஈரோடு) இன்று காலமானார்.

எளிமையும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட அற்புதமான மனிதர். நிறைய மொழியாக்க நூல்களை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியதில் முன்னோடி.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
February 28, 2021
புத்தகக் காட்சி தினங்கள் -3
சனிக்கிழமை இருந்த கூட்டத்தைப் போல நேற்று இரண்டு மடங்கு அதிக கூட்டமிருந்தது. எனது கார் உள்ளே செல்ல இயலவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து உள்ளே சென்றேன். திருவிழாக் கூட்டம். இத்தனை பேர் புத்தகங்களை ஆசையாக வாங்குகிறார்கள் என்பது சந்தோஷம் அளித்தது
நீண்ட நேரம் முகக் கவசம் அணிந்து கொண்டு இருப்பது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் புகைப்படம் எடுக்கும் அனைவரும் முகக்கவசத்தை நீக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே கண்காட்சியில் நிறைய நேரம் முகக்கவசம் அணிய இயலவில்லை. சானிடைசர் வைத்து கைகளைச் சுத்தம் செய்து கொள்கிறேன்.

நேற்று மாலை வானம் பதிப்பகம் மணிகண்டன் அவர்களின் மகன் ரமணாவின் புத்தக வெளியீடு. சிம்பாவின் சுற்றுலா என்ற சிறார் கதை. ரமணா ஆறு வயதான இளம் எழுத்தாளர். அவரது நூலை வெளியிட்டு வாழ்த்தினேன். எட்டு வயது, பத்து வயதில் என சுற்றிலும் நிறைய சிறார் எழுத்தாளர்கள். இத்தனை சிறுவர்கள் கதை எழுத வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கியது.



தனது நூலிற்கான ராயல்டி தொகையாக ஆயிரம் ரூபாயை விழா அரங்கில் ரமணா பெற்றுக் கொண்டான். போராடாமல் ராயல்டி பெறும் அதிர்ஷடசாலியான எழுத்தாளர் என்று கேலியாகச் சொன்னேன். நிகழ்வினை எழுத்தாளர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார்.

நேற்று என்னிடம் கையெழுத்துப் பெற வந்த ஒரு வாசகர் புத்தகத்தின் 11 வது பக்கத்தில் கையெழுத்துப் போடச்சொன்னார். இது என்ன புது பழக்கம் எனக்கேட்டேன். நான் எல்லா நூலிலும் 11 வது பக்கத்தில் தான் கையெழுத்து வாங்குவேன் என்றார். எழுத்தாளர்களை விடவும் வாசகர்கள் விசித்திரமானவர்கள்

ஆன்டன் செகாவைப் பற்றிய எனது உரைகளைக் கேட்டு. அவரது சிறுகதைகளை வாசித்த ஒரு இளம்வாசகர் செகாவ் மீதான அபிமானத்தால் 2018ம் ஆண்டு ரஷ்யாவிற்கு பயணம் செய்து செகாவ் நினைவில்லத்தையும், ரஷ்ய எழுத்தாளர்கள்களின் நினைவகங்களையும் பார்த்து திரும்பியிருக்கிறார். நிஜமாகவா என வியப்புடன் கேட்டேன். அவர் தன் செல்போனில் இருந்த புகைப்படங்களைக் காட்டினார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு திடீரென ரஷ்யப்பயணம் புறப்பட்டு விட்டதாகவும் செகாவ் பற்றிய எனது உரையே இதற்கான தூண்டுதல் என்று சொன்னார். எப்படி எல்லாம் வாசகர்கள் நடந்து கொள்கிறார்கள் பாருங்கள்.

கதாவிலாசம் நூலின் ஒரு பிரதியை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வாங்கிச் செல்லும் ஒரு வாசகர் நேற்று வந்திருந்தார். அந்த நூல் வெளியானது முதல் ஆண்டு தோறும் அதன் ஒரு பிரதியை வாங்கிப் போகிறேன். பிடித்த சினிமாவை திரும்பத் திரும்ப பார்ப்பது போல எனக்கு இந்தப் புத்தகத்தை திரும்ப திரும்ப படிக்கப் பிடிக்கும். அட்டை கிழிந்து போகும் அளவு படித்துவிடுவேன். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் புதிய பிரதி ஒன்றை வாங்கிக் கொண்டு விடுகிறேன் என்றார். இப்படியான வாசகர்கள் இருப்பது பெரும் அதிர்ஷ்டம்
எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி மாணவிகள் பத்து பேர் நேற்று என்னைச் சந்தித்து கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றினைப் பதிவு செய்தார்கள். நல்ல கேள்விகளை கேட்டார்கள். வாசிப்பின் மீது மாணவிகள் கொண்டுள்ள ஈடுபாட்டினை பெரிதும் பாராட்டினேன்
சென்னை ஒவியக்கல்லூரி மாணவர்கள் நேற்று தேசாந்திரி அரங்கிற்கு வருகை தந்து பிகாசோவின் கோடுகள். சித்திரங்களின் விசித்திரங்கள். ஆயிரம் வண்ணங்கள் என்ற எனது ஒவியம் குறித்த நூல்களை வாங்கிக் கொண்டு போனார்கள். ஒவியக்கல்லூரிக்கு ஒரு நாள் வந்து உரையாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அவசியம் வருவதாகச் சொன்னேன்.

கடலூர் சீனு தனது நண்பர்களுடன் அரங்கிற்கு வருகை தந்து உரையாடினார். இனிமையான சந்திப்பு.
சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாவது சீசனை வெளியிடுங்கள் என்று இரண்டு இளைஞர்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்தக் காணொளித் தொடர் நிறையப் பேருக்குப் பிடித்திருப்பது சந்தோஷம் தருகிறது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவர் தனது பிள்ளைகளுடன் வந்திருந்தார். நியை நூல்களை வாங்கினார். எனது இடக்கை நாவல் குறித்து மருத்துவ நண்பர்கள் ஒரு இணையவழி உரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகச் சொன்னார். நேரமிருந்தால் அவசியம் கலந்து கொள்வதாகச் சொன்னேன்.
எனது ஏழு நாள் உலக இலக்கியச் சொற்பொழிகளையும் கேட்ட ஒரு வாசகர் அந்த நூல்களை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொண்டு வந்து அதில் எனது கையெழுத்தினைப் பெற்றுக் கொண்டு போனார். உங்கள் உரையை கேட்டதும் அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்றார்.
வித்தியாசமான வாசகர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் மகிழ்ச்சியான அனுபவமாகவே இருக்கிறது. புத்தகக் கண்காட்சி இல்லாவிட்டால் இதற்கான சந்தர்ப்பமேயில்லாமல் போய்விடும்.
••
புத்தகக் காட்சி தினங்கள் -2
நேற்று புத்தகக் கண்காட்சியில் நல்லகூட்டம். நீண்ட காலத்தின் பின்பு அலை அலையாகப் புத்தகம் வாங்க வந்த மக்களைக் காணச் சந்தோஷமாக இருந்தது.

வழக்கமாக எந்த வரிசையில் எந்தக் கடைகள் இருக்கின்றன என்ற பட்டியல் ஒன்றை பபாசி அளிப்பார்கள். சில நேரம் அது தன்னார்வலர்கள் முயற்சியிலும் வெளியிடப்படும். இந்த ஆண்டு அப்படி எந்தத் தகவலும் தெரியாத காரணத்தால் தேசாந்திரி அரங்கு எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் அலைந்து திரிந்து நிறைய பேர் சிரமப்பட்டிருக்கிறார்கள்.
பபாசி கடைகளின் பட்டியலை வெளியிட்டால் வருகை தருகிறவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
எட்டாவது வழியாக வந்தால் அதன் கடைசியில் தேசாந்திரி அரங்கு உள்ளது. அரங்க எண் 494 மற்றும் 495.
தனது புத்தகத்தை வெளியிடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இளைஞர்கள் பலரும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்வது போல ஒரு அரங்கினை அமைத்து புதிய எழுத்தாளர், கவிஞர்கள் எப்படித் தனது நூலை வெளியிட இயலும் என்பதற்கு வழிகாட்டும் பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் ஒரு நாள் மாலை அமர்வினையாவது பொது அரங்கில் ஏற்பாடு செய்யலாம்.

பப்ளிகேஷன் டிவிசன் அரங்கில் மிக நல்ல நூல்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக காந்தி மற்றும் நேரு குறித்த அரிய நூல்கள் நிறைய இருக்கின்றன. காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் MAHATMA – Volumes 1 to 8 by D.G. Tendulkar இங்கே கிடைக்கிறது
தேசாந்திரி அரங்கில் ஆன்டன் செகாவ். தஸ்தாயெவ்ஸ்கி. டால்ஸ்டாய் உருவம் கொண்ட அழகிய போஸ்ட்கார்டுகளை இலவசமாக விநியோகம் செய்து வருகிறோம். ஆசையாகப் பெற்றுக் கொண்டு போகிறார்கள்.
நேற்று எனது பத்து நூல்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. இன்னும் பத்து நூல்கள் இரண்டு நாட்களில் வெளியாகும். துணையெழுத்து கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த ஒரு குடும்பம் நேற்று எனது அத்தனை நாவல்களையும் ஒரு சேர வாங்கினார்கள். அத்தனை நூலிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
அமெரிக்காவில் வசிக்கும் எனது மகனுடன் அலைபேசியில் பேசுங்கள் என்று ஒருவர் தனது போனை என்னிடம் கொடுத்தார். அமெரிக்காவிலுள்ள வாசகர் வீடியோ காலில் என்னுடன் உரையாடி தேவையான புத்தகங்களைச் சொன்னார். அவரது பெற்றோர் அதை வாங்கிக் கொண்டு போனார்கள். அமெரிக்காவில் வசித்தபடியே சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்குமளவு உலகம் சுருங்கிவிட்டது நல்ல முன்னேற்றமே.
தினமும் நாலைந்து புத்தகங்களைத் தேடி வாங்குவது எனது வழக்கம். நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்





வாசக சாலை நண்பர்கள் அனைவரையும் இரவு சந்தித்தேன். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம்

February 26, 2021
எனது பரிந்துரைகள் -3
சென்னை புத்தகக் கண்காட்சியின் மூன்றாம் நாளுக்கான எனது பரிந்துரைகள்.
••
பிறக்கும் தோறும் கவிதை
ஷங்கர் ராமசுப்ரமணியன்
வனம் வெளியிடு

கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் நவீன கவிதையுலகில் தனித்துவமான கவிஞர். கவிதைகள் குறித்த அவரது கட்டுரைகள் ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாக அமைந்தவை. சமகாலத் தமிழ் கவிதைகள் குறித்த அவரது இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நவீன தமிழ்க்கவிதையின் போக்கினையும் சாதனைகளையும் எடுத்துச் சொல்கிறது
இயந்திரம்
மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய நாவல்.
தமிழாக்கம் ஆனந்தகுமார்.
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.

அரசு அலுவலகங்களில் செயல்படும் ஊழல் மற்றும் அதிகாரப் போட்டி. அராஜகமான நடவடிக்கைகள் குறித்து மிக விரிவாக எழுதப்பட்ட சிறந்த மலையாள நாவல்.
கடற்புறத்து கிராமம்
அனிதா தேசாய்.

நேஷனல் புக் டிரஸ்ட்.
கடற்கரை கிராமம் ஒன்றின் வாழ்வியலை விவரிக்கும் சிறந்த நாவல். கார்டியன் இதழில் பரிசினை வென்ற நூலிது. துல்லியமான, அடர்த்தியான மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் சிறந்த ஆவணப்படம் போல வாழ்க்கையை உண்மையாகப் பதிவு செய்துள்ளது
என் நண்பர் ஆத்மாநாம்
ஸ்டெல்லா ப்ரூஸ்
விருட்சம் வெளியீடு

கவிஞர் ஆத்மாநாம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த நினைவுக்குறிப்பு. எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தனது மனைவி ஹேமாவின் மறைவு பற்றி எழுதிய உணர்வுப்பூர்வமான பதிவு என மிக அழகான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு
எனது போராட்டம்
ம.பொ.சி
பூங்கொடி பதிப்பகம்.

தமிழறிஞர் ம.பொ.சியின் தன்வரலாற்றுடன் விடுதலைப்போராட்ட காலம் மற்றும் எல்லைப்போராட்ட வரலாற்றை விவரிக்கும் சிறந்த நூல்.
February 25, 2021
புத்தகக் காட்சி தினங்கள் 1
நேற்று மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன்.

சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என்பதால் வழக்கத்தை விட மிக அகலமான, பெரிய நடைபாதைகளை அமைத்திருக்கிறார்கள். கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கபட்டிருந்தன.
புத்தகக் கண்காட்சிக்கு சென்று வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது என்பது பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்வது போன்றது. வாசகர்களின் தீராத அன்பும் பாராட்டும் ,எழுத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையுமே என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. எத்தனை விதமான வாசகர்கள். அவர்களுடன் உரையாடவும் அவர்களின் பல்வேறு வகை கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பம் முக்கியமானது.
குறிப்பாக இப்போது தான் எழுதத் துவங்கியுள்ள இளைஞர்கள் பலரைச் சந்திக்க முடிவதும், வாசிப்பில் தீவிரம் கொண்டுள்ள இளைஞர்களுடன் உரையாடுவதும் இனிமையான அனுபவம்.
சிலர் என்னோடு ஒரு செல்பி எடுத்துக் கொள்வதோடு சரி, புத்தகங்கள் வாங்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களின் வேண்டுகோளை நான் ஒரு போதும் மறுப்பதில்லை. மகிழ்ச்சியின் அடையாளமாக நினைக்கிறார்கள். அப்படியே இருக்கட்டுமே
ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சிக்கு வந்து எனது புத்தகங்களை வாங்கி அதில் கையெழுத்து பெற்றுக் கொண்டு கூடவே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
நேற்றும் ஒரு நண்பர் அப்படி எட்டு வருஷங்களில் எடுத்த புகைப்படங்களைக் காட்டினார். தன் வீட்டின் புத்தக அலமாரியில் இரண்டு வரிசைகள் முழுவதும் எனது புத்தகங்கள் மட்டுமே இருப்பதாகச் சொன்னார். இந்த அன்பு தான் எழுத்தில் நான் சம்பாதித்த சொத்து.

காவல்துறையில் பணியாற்றும் ஒரு வாசகர் கைநிறைய எனது புத்தகங்களை வாங்கிக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு கம்பீரமாக ஒரு சல்யூட் அடித்துச் சென்றார்.
ஒரு சிறுமி என்னிடம் வந்து எங்கம்மா உங்க ரீடர். அவங்க உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கிடலாமா என்று கேட்டாள். மகிழ்ச்சியோடு அவர்களை அருகில் அழைத்தேன். குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் பெண்ணின் கணவர் தனக்குப் புத்தகம் படிக்கிற பழக்கமில்லை. ஆனால் தன் மனைவி நிறைய படிக்க கூடியவர். அவருக்காகவே புத்தகக் கண்காட்சிக்கு வந்தோம் என்றார். பெரம்பூரில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம். ஆண்டிற்கு ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு வந்து தேவையான அத்தனை புத்தகங்களையும் வாங்கிக் கொண்டுவிடுவதாக அந்தப் பெண் சொன்னார். அத்தோடு வீட்டில் சமைக்கும் நேரம் யூடியூப்பில் எனது இலக்கிய உரைகளை கேட்பதாகவும் சொன்னார்.
உங்கள் சமையல் அறை வரை தஸ்தாயெவ்ஸ்கியும் செகாவும் வந்துவிட்டார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது என்றேன். அந்தப் பெண் புன்சிரிப்புடன் எங்க வீட்டுக்கு ஒரு நாள் வருவீர்களா என்று கேட்டார். நேரம் கிடைக்கும் போது அவசியம் வருகிறேன் என்று சொன்னேன்.
இரண்டு பை நிறையப் புத்தகங்களுடன் அவர்கள் நடந்து போவதைக் காண அத்தனை சந்தோஷமாக இருந்தது.

ஸ்ருதி டிவி கபிலன் மற்றும் சுரேஷ் தேசாந்திரி அரங்கில் சிறிய நேரலை நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது பணி மிகுந்த நன்றிக்குரியது

நியூஸ் 7, ஜெயா டிவி மற்றும் இரண்டு யூடியூப் சேனல்கள் புத்தகக் கண்காட்சி குறித்த எனது கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.
எழுத்தாளர் உத்தமசோழனின் மகன் என்னைச் சந்தித்து தனது தந்தை எழுதிய ‘சுந்தரவல்லி சொல்லாத கதை’ எனும் புதிய நாவலைக் கொடுத்தார். ஆயிரம் பக்கங்களுக்கும் மேலுள்ள நாவல். கீழத்தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். உத்தமசோழன் இனிய நண்பர். அவரது நலத்தை விசாரித்தேன்.
நேற்று புத்தகக் கண்காட்சிக்கு போய் திரும்பும் போது தான் இயல்பு வாழ்க்கை துவங்கியிருப்பதாக உணரத் துவங்கினேன்.
••
February 24, 2021
எனது பரிந்துரைகள் -2
சென்னை புத்தக் கண்காட்சியின் இரண்டாம் நாளுக்கான எனது பரிந்துரைகள்.
மிச்சக் கதைகள்

கி.ராஜநாராயணன்
அன்னம் – அகரம் பதிப்பகம்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் தனது 98வது வயதில் எழுதிய கதைகளின் தொகுப்பு.
••
மறக்க முடியாத மனிதர்கள்
வண்ண நிலவன்

காலச்சுவடு
இலக்கிய ஆளுமைகள் குறித்த வண்ணநிலவனின் நினைவுக்குறிப்புகள்.
••
ராஜாஜி வாழ்க்கை வரலாறு

ராஜ்மோகன் காந்தி
தமிழில்:கல்கி ராஜேந்திரன்
வானதி பதிப்பகம்
ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக விவரிக்கும் இந்த நூல் தமிழக அரசியல் வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் துல்லியமாக விவரிக்கிறது.
•••
இந்து மாக்கடல்
சஞ்சீவ் சன்யால்

மொழிபெயர்ப்பாளர் : சா. தேவதாஸ்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
பக்கங்கள் : 372
இந்தியப் பெருங்கடலினை முன்வைத்து இந்தியா வரலாற்றைப் புதிய கோணத்தில் ஆராய்கிறது இந்நூல்.
••
யாத் வஷேம்
கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல்
நேமிசந்த்ரா

தமிழில் : கே. நல்லதம்பி
எதிர் வெளியீடு
இரண்டாம் உலகப்போரின் காரணமாக பெங்களூரில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த யூதக்குடும்பங்களின் வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறது இந்த நாவல்.
••
எனது பரிந்துரைகள் -1
நான் படித்த, எனக்கு விருப்பமான சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இவை புத்தகக் கண்காட்சியில் கிடைக்க கூடும். எந்தக் கடையில் கிடைக்கிறது என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அச்சில் இல்லாமல் இருந்தால் நூலகத்தில் தேடித்தான் வாசிக்க வேண்டும்.
இவான்

விளதீமிர் பகமோலவ்
தமிழில்: நா. முகம்மது செரீபு
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
புகழ்பெற்ற ரஷ்ய இயக்குநரான தார்கோவெஸ்கியின் (Andrei Tarkovsky) Ivan’s Childhood திரைப்படம் இந்த நாவலை மையமாக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய நாவல். இந்த நாவலைப் படித்துவிட்டுத் திரைப்படத்தைப் பாருங்கள். திரைக்கதையின் நுட்பங்களை நீங்களே அறியத் துவங்குவீர்கள்.
•••
கவிதாலயம்

ஜீலானி பானு
தமிழில் :முக்தார்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
மிகச்சிறந்த உருது நாவல். கவிதை புனைவதிலும் சிற்றின்ப நுகர்ச்சியிலும் செல்வ வளத்திலும் திளைத்துப் போன சமூகத்தையும் ஹைதராபாத் நிஜாமில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் விவரிக்கும் சிறந்த நாவல்.
•••
மித்ராவந்தி
கிருஷ்ணா ஸோப்தி

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
தமிழில் : லட்சுமி விஸ்வநாதன்
கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள். கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் பெண்ணின் அடக்கப்பட்ட காமத்தையும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார்.இந்தி இலக்கியத்தில் ஸோப்தியின் குரல் வலிமையானது. அவர் ஏற்படுத்திய அதிர்ச்சிகளும் லேசில் அடங்கக்கூடியவையில்லை. மித்ராவந்தி அதற்குச் சரியான உதாரணம்
••
கொல்லப்படுவதில்லை

வங்க மொழியில் மைத்ரேயி தேவி எழுதிய ‘நாவல் .
தமிழாக்கம் : கிருஷ்ணமூர்த்தி
சாகித்திய அகாடமி வெளியீடு
காதலின் மறுபக்கத்தைச் சொல்லும் இந்த நாவல் வெளியானதே சுவாரஸ்யமான கதை. தன்னைப் பற்றி அவதூறாகக் காதலன் எழுதிய நாவலுக்கு மறுப்பாகவும், உண்மையான காதலின் வெளிப்பாடாகவும் இந்த நாவலை மைத்ரேயி தேவி எழுதியிருக்கிறார்
•••
தன் வெளிப்பாடு

சுநில் கங்கோபாத்யாயா
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சுநில் கங்கோபாத்யாயாவின் இந்த நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி மொழியாக்கம் செய்துள்ளார்.
இது ஆத்ம பிரகாஷ் என்ற வங்க நாவலின் தமிழாக்கம்.
சுய அடையாளத்தைத் தேடும் இளைஞனின் கொந்தளிப்பான நாட்களை, மனநிலையை வெளிப்படுத்தும் சிறந்த நாவல்
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
