நானுமொரு திராட்சை

கீறல் பிரதிகளின் தனிமை என்ற கவினின் கவிதைத் தொகுப்பு சமீபமாக வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்து வியந்து அவரைப் பாராட்டுவதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் கவினின் இரண்டாவது கவிதை தொகுதி இது என்றார். பாஷோ என்ற கவிதை இதழ் ஒன்றினையும் கொண்டுவந்திருக்கிறார். அவற்றை நான் பார்த்திருக்கிறேன்.

கீறல் பிரதிகளின் தனிமையில் கவிஞர் தேவதச்சனின் பாதிப்பு நிறையவே இருக்கிறது என்றாலும் அசலான தருணங்களை, தனித்துவமான கவிமொழியில் கவின் எழுதியிருக்கிறார். அது பாராட்டிற்குரியது.

வடிவ ரீதியாகவும் மொழியைக் கையாளுவதிலும் கவினின் கவிதையினைச் சங்க கவிதைகளிலிருந்து தொடரும் நவீன கவிதைகள் எனலாம். இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவியங்கள் சிறப்பாக, மிகப்பொருத்தமாக வரையப்பட்டிருக்கின்றன.

பெரும்பான்மைக் கவிதைகளில் இருப்பும் இன்மையும் விவாதிக்கப்படுகின்றன. இருப்பு இன்மை பற்றிப் பேசும் இந்தக் கவிதைகளில் தண்ணீரில் வெயில் ஊர்ந்து போவது போல அபூர்வமான தருணங்கள் வெளிப்பட்டு மறைகின்றன.

உதிர்தல் நிமித்தம்

அன்றாடத்தின் ஒளியை

மிக எளிமையாக உள்வாங்கி

ஈரம் சொட்டிக்

குப்புறக் கிடக்கும்

வெண்ணிற மலர்கள்

பூமிக்குச் சொல்வதென்ன?

இவ்வளவு பெரிய பூமிக்கு

சின்னஞ்சிறிய

பூவொன்றுக்குச்

சொல்ல இவ்வளவு இருக்கிறது

மிக அழகான கவிதை. அன்றாடத்தின் ஒளியை மிக எளிமையாக உள்வாங்கி ஈரம் சொட்டக் கிடக்கின்றன மலர்கள். உதிர்தல் என்பது மலர்தல் போல இயல்பானது தான். பூமியோடு பூக்கள் உரையாடுகின்றன என்பதில் தான் கவித்துவம் துவங்குகிறது. என்ன பாஷையது. எது குறித்து உரையாடுகிறது. ஒரு பூவிற்குப் பிரம்மாண்டமான பூமியின் பரப்பு தேவையில்லை. அது இலையளவு நிலத்தைத் தானே கேட்கிறது. உதிர்ந்த பூக்கள் செடியோடு பேசுவதை விட்டு ஏன் பூமியோடு பேசுகின்றன. உண்மையில் கவிதை சொல்ல நிறைய இருப்பதை நமக்குப் புரிய வைக்கிறது. பூக்களின் மௌனமும் பூமியும் மௌனமும் மகத்தான உரையாடலின் பகுதிதான் என்பதைக் கவிதை புரிய வைக்கிறது

குடுகுடுப்பைக்காரன் படம் இருக்கும்

அறையிலிருந்து கவிதை எழுதுகிறேன்

சமயத்தில் வார்த்தைகளை மாற்றிப் போடுவது

உடுக்கை அடிப்பது போலவே இருக்கிறது

ஆமாம் என்று வேறு சொல்கிறது இரண்டாம் ஜாமம்

சொற்களை இசையாக மாற்றும் கவிதையின் அபூர்வமான தருணத்தை இந்தக் கவிதை விவரிக்கிறது. குடுகுடுப்பைக்காரன் ஏற்படுத்தும் அச்சம் என்பது தற்காலிகமானது. ஆனால் ஆழமானது. அவன் எதிர்காலத்தைச் சொல்கிறான். ஆனால் நிகழ்காலத்தில் யாசிக்கிறான். இந்த இருநிலையும் கொண்டது தானே கவிதை.

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை

நான் அவற்றோடே பிறந்திருக்கிறேன்

ஓடியாடி வளர்ந்திருக்கிறேன்

குடும்பத்தில் ஒருவனாய்

நானுமொரு திராட்சையாய்

திகழ்ந்திருக்கிறேன்

புளிப்புச் சுவையை நான்

அறிந்திருந்தாலும் எப்போதுமே எப்போதுமே

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை

இந்தக் கவிதை தன்னைத் திராட்சையாக அறிந்த ஒருவனின் வெளிப்பாடு. சுவையில் வேறுபட்டாலும் அவனும் ஒரு திராட்சை தானே.

ஓவியத்தில், சிற்பத்தில் திராட்சை இடம் பெறும்போது அது ஒரு குறியீடாகிறது. அதாவது சிற்றின்பம் அல்லது செழிப்பு. பாலியல் வேட்கை போன்றவற்றைக் குறிக்கவே திராட்சையை அடையாளப்படுத்துகிறார்கள். இந்தக் கவிதையில் வரும் திராட்சையும் ஒரு குறியீடே.

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை என்று துவங்கும் கவிஞனின் குரல் சுவையைத் தாண்டி திராட்சையை அறியும் ஒரு வழிகாட்டுதலை முன்வைக்கிறது. அதில் நான் திராட்சைகளுடன் பிறந்தேன் எனும் போது திராட்சை உறவின் வெளிப்பாடாக மாறிவிடுகிறது. திராட்சை இனிப்பாக இருந்தாலும் புளிப்பாக இருந்தாலும் கனிவின் வெளிப்பாடு தானே.

கவினின் கவிதைகளில் வெளிப்படும் சந்தம் தனித்துவமானது. அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களை அவர் கவிதைகளில் கலைத்துப் போட்டு விளையாடுகிறார். கேலியும் கிண்டலும் கலந்த இந்தக் கவிதைகள் கிளையிலிருந்து சட்டென வான் நோக்கி எழும் பறவைகள் போல இரண்டு மூன்றாவது வரியில் பறத்தலை மேற்கொள்ளத் துவங்கிவிடுகின்றன. அதுவே இந்தத் தொகுப்பின் விசேசம். கவினுக்கு என் வாழ்த்துகள்

புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பு, புகைப்படம். முன்னுரை என எதுவுமில்லை. தன்னை மறைத்துக் கொண்டு தனது கவிதைகளை மட்டும் முன்வைக்கும் கவினின் தனித்துவமே இந்த நூலை உடனே வாசிக்கும்படி என்னைத் தூண்டியது. இது வெறும் அடக்கம் மட்டுமில்லை. ஒரு மரபு என்றே சொல்லத் தோன்றுகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2021 23:23
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.