ஐந்து வருட மௌனம்

புதிய சிறுகதை

பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த முசாபரி பங்களாவின் வெளியே அதிகாலையில் இவ்வளவு பேர் கூடிவிடுவார்கள் என்று ராஜன் எதிர்பார்க்கவில்லை. காந்தியைக் காண்பதற்காகக் கிராமவாசிகள் திரண்டிருந்தார்கள். தினசரி காலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை செய்வது காந்தியின் வாழ்க்கையில் என்றும் மாறாத பழக்கமாக இருந்தது.

இன்னமும் சூரியன் உதயமாகவில்லை. இருளுக்குள்ளாகவே நடந்து கிராமவாசிகள் வந்திருந்தார்கள். இரண்டாயிரம் பேருக்கும் மேலிருக்கும். அதில் பாதிக்கும் மேல் பெண்கள்.

அவர்கள் முதன்முறையாகக் காந்தியோடு ஒன்றாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். யாருக்காக அந்தப் பிரார்த்தனை, என்ன வேண்டுகிறார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் காந்தியின் அருகில் இருப்பதைக் கடவுளின் அருகில் இருப்பதைப் போலவே உணர்ந்தார்கள்.

“பிரார்த்தனை தான் ஒவ்வொரு நாளையும் திறக்கும் திறவுகோல்“ என்றார் காந்தி.

அந்தப் பங்களாவில் பொதுவாக வெள்ளைக்கார அரசு அதிகாரிகளோ மேல்மலைக்கு வேட்டைக்கு வரும் ஜமீன்தார்களோ தான் தங்கியிருப்பார்கள். ஆகவே அதற்குள் கிராமவாசிகள் வந்தது கிடையாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாகக் காந்தி தனது பயணத்தின் போது இரவு அந்த முசாபரி பங்களாவில் தங்கப்போகிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் மக்கள் அவரது வருகையை எதிர்பார்த்துத் திரண்டு விட்டார்கள்

காந்தி தனது பயணத்திலும் நேர ஒழுங்கை மாற்றிக் கொள்ளவில்லை. விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து கொண்டுவிட்டார். வெற்றுடம்புடன் அவர் பங்களாவின் பின்புறமிருந்த பாதையில் நடைபயிற்சி சென்றார். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் பின்தங்கிப்போனார்கள். நடைப்பயிற்சியின் போது ஒரு வார்த்தை கூட எவரோடும் பேசவில்லை.

மாமரங்கள் அடர்ந்த பாதையில் நடந்து கொண்டிருந்தார். பாதை தெரிய வேண்டும் என்பதற்காகக் கையில் ஒரு அரிக்கேன் விளக்குகளுடன் கணபதி கூட நடந்து சென்றார். அந்த வெளிச்சம் பாம்பு போலச் சாலையில் ஊர்ந்து சென்றபடி இருந்தது. காந்தி குளிர்காற்றினை ஆழ்ந்து சுவாசித்தபடியே வேகமாக நடந்தார். வழியில் கிடந்த ஒரு மயிலிறகு ஒன்றைக் குனிந்து கையில் எடுத்து வைத்துக் கொண்டார். அதில் ஒரு சிறுவனின் ஆர்வம் வெளிப்பட்டது.

பனிக்காலம் முடிந்த போதும் குளிர் விலகவில்லை. இரண்டு வாரங்களாகவே அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். நாளொன்றுக்கு சராசரியாக 150 கிமீ பயணிப்பது அவரது திட்டம்.

அவரைக் காண வழியெல்லாம் மக்கள் திரண்டிருந்தார்கள். அவரது காரை வழிமறித்துக் கோஷமிட்டார்கள். பூக்களைத் தூவி வழிபட்டார்கள். கருப்பட்டி, வாழைத்தார், தேன், வேர்க்கடலை, பலாப்பழம் தேங்காய் எனத் தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் அவருக்காகக் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

தேர் நகர்வது போல அவரது கார் ஜனத்திரளினுள் மெதுவாக நகர்ந்தது. காந்தியைத் தொட்டுவிட ஆசை கொண்டவர்கள் கூட்டத்தினுள் முண்டியடித்து அவரை நோக்கி கைகளை நீட்டினார்கள். இவர் தான் காந்தியா என்ற ஆச்சரியம் அந்த முகங்களில் பிரதிபலித்து. வழியெங்கும் கூப்பிய கரங்கள். கசிந்த விழிகள். வாழ்த்தொலிகள். பதினாயிரக்கணக்கான கண்கள் அவரைப் பார்த்தபடியே இருந்தன புன்னகை மாறாத முகத்துடன் அவர் மக்களை நோக்கி கைகளை அசைத்தபடியே வந்தார்.

சில வேளைகளில் காரை விட்டு இறங்கி மக்களோடு மக்களாக நடந்தார். ஏழை எளியவர்களின் குடிசைக்குள் சென்றார். அவர்களுடன் உணவு உட்கொண்டார். ஊர்மக்களைச் சேர்த்துக் கொண்டு மண்வெட்டினார். குப்பைகளை அள்ளி அகற்றினார். எங்கும் பாதுகாப்பு அதிகாரிகள் என எவருமில்லை. மக்கள் தான் அவரது பாதுகாப்பு அரண். அவரது பயணத்தைப் புகைப்படம் எடுக்க வந்திருந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எட்வினுக்கு அந்தக் கிழவரின் மனவுறுதி வியப்பாக இருந்தது. அவர் மக்களில் ஒருவராகவே தன்னை நினைக்கிறார். மக்களுடன் கைகோர்த்து நடப்பதையே விரும்புகிறார் என்பதை எட்வின் உணர்ந்திருந்தார்

காந்தியிடம் ஒருமுறை எட்வின் கேட்டார்

“நீங்கள் மக்கள் கூட்டத்தில் எதையோ தேடுகிறீர்கள். என்ன உங்கள் தேடல்“

“எதைத் தேடி தண்ணீர் வேகமாகச் செல்கிறது.“ எனக் கேலியாகக் கேட்டார் காந்தி

“சாந்தியை“ என்றார் பத்திரிக்கையாளர்

“நானும் அதையே தேடுகிறேன். தேசத்தின் சாந்தியை, சுதந்திரத்தை, அதை அடைவதற்கான வழிகளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்“

“உங்களைக் கடவுளின் பிரதிநிதியாகவே மக்கள் நினைக்கிறார்கள்“

“நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பிரதிநிதிகள் தான். அதில் என்ன சந்தேகமிருக்கிறது. உண்மையில் நான் கடவுளின் சேவகன். அதுவும் கடைக்கோடி சேவகன்.“

“இந்தப்பயணத்தில் என்ன அறிந்து கொண்டீர்கள்“

உண்மையான நேர்மையான செயல்களை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆதரவு அளிக்கிறார்கள். சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது வெளியில் நடந்தால் மட்டும் வெற்றிபெற முடியாது. அது ஒவ்வொருவர் மனதிலும் நடந்தேற வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் இவர்களை வழிநடத்தவில்லை. அவர்களே எனக்கு வழிகாட்டுகிறார்கள்“ என்று சொல்லி காந்தி சிரித்தார்

“அது உண்மை“. என்று எட்வினும் பதிலுக்குச் சிரித்தார். நாள் முழுவதும் காரில் பயணம். வழியில் கூட்டம். நிதி அளிப்பு நிகழ்ச்சி. இராட்டை வழங்கும் விழா. சேவா சங்க பிரதிநிதிகளின் சந்திப்பு. என ஓயாத அலைச்சல். பகலில் வெயில் மிகவும் உக்கிரமாகவும் காற்று அனல் போலிருந்தது. ஆனாலும் காந்தி ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. அவருடன் வந்தவர்கள் களைத்துப் போயிருந்தார்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் காந்தியின் உடலைப் பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் சௌரி அவரது ரத்த அழுத்தம் உயர்ந்து கொண்டேயிருப்பதை அறிந்தார். காந்திக்கு நல்ல ஓய்வு தேவை என்பதை வலியுறுத்தினார். காந்தி அந்த மருத்துவரிடம் உங்கள் மருந்தை விடவும் மக்களின் முகங்களே எனக்கு உண்மையான மருந்து. அவர்களின் அன்பு என்னைப் புத்துணர்வு கொள்ள வைத்துவிடும் என்று மெதுவான குரலில் சொன்னார்.

காந்தியின் வருகையைப் பற்றி அறிந்திருந்திருந்த கிராமவாசிகள் தங்கள் ஊர்களிலிருந்து மாட்டுவண்டி மூலமும் நடந்தும் வந்து கொண்டேயிருந்தார்கள். இரவெல்லாம் சாலையோரம் காத்துகிடந்தவர்களும் உண்டு.

அதிலும் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென மழை பிடித்துக் கொண்ட போது அந்த மழைக்குள்ளும் மக்கள் அசையாமல் அப்படியே காத்திருந்ததைக் காந்தி கண்டார். அவர் காரை விட்டு இறங்கிய போது குடையை நீட்டியவரிடம் அதை விலக்கிவிட்டு காந்தியும் மழைக்குள்ளாக நடந்தார். மழையின் சப்தத்தை விடவும் மக்களின் வாழ்த்தொலி அதிகமாகயிருந்தது. அந்த முகங்களில் தென்படும் எதிர்பார்ப்பினை நம்பிக்கையைக் காந்தி நெருக்கமாக உணர்ந்தார். அவர்களின் கண்கள் தன்னிடம் பேசுவதை நன்றாகவே அறிந்தார்.

மழைக்குள்ளாகவும் சில பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களை ஒரு சகோதரனைப் போல ஆற்றுப்படுத்தினார். இந்த மழைத்துளியைப் போல அவர்கள் வற்றாத நம்பிக்கையை அளித்தபடியே இருக்கிறார்கள். துளிகள் ஒன்று சேர்ந்து திரண்டிருப்பது தானே சமுத்திரம்.

அவர் சேவா சங்க ஊழியர்களில் மூத்தவரான சுதர்சனை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார். அவரும் கடிதத்தைப் படித்துவிட்டு பெருமூச்சோடு சொன்னார்

“கதர்கொடி கிட்டுவை எனக்கே தெரியும். ஐந்து வருஷமா சுயநினைவு இல்லாமல் படுக்கையில் கிடக்கார். போலீஸ் தலையில அடிச்ச அடியிலே நினைவு போயிருச்சி. விருதுபட்டி வட்டாரத்தில அவரைத் தெரியாதவர் இல்லை. பெரிய தியாகி. லட்சுமியாபுரத்தில் தான் வீடு.

அவருக்குக் காந்தி தான் தெய்வம். காந்தி உருவத்தைக் கையில் பச்சை குத்தியிருப்பார். காந்திஜி மாதிரியே மேல்சட்டை கிடையாது. எந்தப் போராட்டம்னாலும் கதர்கொடியை உயர்த்திப் பிடிச்சிகிட்டு முன்னால் போய் நிற்பார். மனசில பயமே கிடையாது.

அவர் மனைவி சின்னவயசுல இறந்துட்டாங்க. ஒரே மகள் அந்தப் பொண்ணும் காந்தியோட தொண்டர் தான்.

கிட்டு. ஆளும் காந்தியைப் போலத் தான் இருப்பார். நல்ல உசரம். எங்கே போனாலும் நடை தான். கால்ல செருப்புக் கிடையாது. எப்பவும் கையில் கதர்கொடியை வச்சிகிட்டு இருப்பார்.

புதூர்ல நடந்த கள்ளுகடை போராட்டத்தில போலீஸ் அடிச்ச அடியில ஆள் சுருண்டுவிழுந்துட்டார். அப்புறம் எழுந்திருக்கவேயில்லை. மகள் பார்வதி தான் ஐந்து வருஷமா பீ மோத்திரம் அள்ளி பணிவிடை செய்து பார்த்துகிட்டு இருக்கா.

தன் வாழ்நாள்ல ஒரு தடவையாவது காந்தியை பாத்து சேவிக்கணும்னு ஆசைபட்டுகிட்டு இருந்த மனுசன். ஆனா பாவம் குடுத்து வைக்கலே“.

ராஜன் அந்தக் கடிதத்ததைக் காந்தி பிரார்த்தனை முடித்துவந்தவுடன் படித்துக் காட்ட வேண்டும் என்று பையிலே வைத்துக் கொண்டார். அன்றைய பிரார்த்தனையில் ஒரு பெண் எங்கும் நிறைந்தவனே என்ற பாடலை மனம் உருகப்பாடினாள். அவளது குரலின் வசீகரம் மக்களை மெய்மறக்க செய்திருந்திருந்தது. காந்தியும் கூடக் கண் கலங்கிப் போயிருந்தார். அந்தப் பெண் காந்தியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். அவளை ஊர் ஊராகப் போய்க் கதர் வெற்றிக்காகப் பாடும்படி காந்தி கேட்டுக் கொண்டார்

பிரார்த்தனை முடிந்தபோதும் மக்கள் கலைந்து போகவில்லை. காந்தி எழுந்து நடக்க ஆரம்பித்தபோது மக்கள் அவரை நடக்கவிடாமல் தள்ளினார்கள். காந்தி தன் அறைக்குள் சென்று அன்றைய பயணத்திற்குத் தயாராக முனைந்து கொண்டிருந்த போது ராஜன் அவரிடம் சென்று கடிதத்தை நீட்டினார்

காந்தி அதைக் கையில் வாங்கியபடியே என்ன கடிதம் என்று கேட்டார். ராஜன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாகக் கதர்கொடி கிட்டுவைப் பற்றி;r சொன்னார்.

அதைக் கேட்டு முடித்தபோது காந்தியின் கண்கள் மூடியிருந்தன. அவர் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்து போயிருந்தார். பிறகு அவராக அந்தக் கடிதத்தைப் புரட்டிப் பார்த்தார்

“எங்கே இருக்கு லட்சுமியாபுரம்“ என்று ராஜனிடம் கேட்டார்

“இங்கேயிருந்து பனிரெண்டு மைல் தூரம். குக்கிராமம்னு வெங்கட்ராமன் சொன்னார்.“

“நம்ம சுற்றுப்பயணம் கிளம்புறதுக்கு முன்னாடி அங்கே போயிட்டு வந்துரலாமா“

“அந்த ஊருக்குக் கார் போற அளவுக்கு ரோடு கிடையாது. மண்ரோடு. அதுவும் வயல் வழியாகத் தான் போகணுமாம்“

“அப்போ நடந்து போவோம்“

“அவ்வளவு தூரம் நடக்கணுமே“

“பனிரெண்டு மைல் பெரிய தூரமில்லை. கூட வேற யாரும் வரவேண்டாம். நாம ரெண்டு பேர் போவோம்“.

“சுதர்சனுக்குத் தான் கிட்டுவோட வீடு தெரியும்“

“அப்போ அவரை அழைச்சிகிடுவோம். யாருக்கும் சொல்ல வேண்டாம். “

“உங்களுக்குக் காலை ஆறரை மணிக்கு எஸ்.எஸ். கந்தசாமி ரெட்டியாரோட சந்திப்பு இருக்கு. எட்டுமணிக்கு மூதூர்ல கூட்டம். சிறுகுடியில சேவாசங்க நிகழ்ச்சி இருக்கு“

“அதுக்குள்ளே வந்துரலாம்“.

காந்தி முடிவு எடுத்துவிட்டார் என்றால் அதை எளிதாக மாற்ற முடியாது என ராஜனுக்குத் தெரியும். அவருக்கும் கதர்கொடி கிட்டுவை நேரில் காண வேண்டும் போலவே இருந்தது.

சுதர்சன் அழைத்துவரப்பட்டார். அவரால் நம்பமுடியவில்லை. நினைவு அழிந்து கிடக்கும் கதர்கொடி கிட்டுவைக் காண காந்தி போகப்போகிறார். அவர் உணர்ச்சிப்பெருக்கில் காந்தியை கையெடுத்து வணங்கினார்

“நாம புறப்படலாமா “என்று காந்தி சுதர்சனை நோக்கி கேட்டார்

“பாபூ, நடந்து போற வழியில் உங்களைப் பார்த்தா கூட்டம் திரண்டிரும். அதைச் சமாளிக்கிறது கஷ்டம் “

“என்ன செய்யலாம்“

“ஒரு கூண்டுவண்டி ஏற்பாடு பண்ண சொல்றேன். அதுல போய்ச் சத்திரம் விலக்குல இறங்கி கிடலாம். அங்கே இருந்து வயல் வரப்புல குறுக்கே நடந்து போயிரலாம்“

“அது உங்க இஷ்டம். ஆனால் தாமதாமாகக் கூடாது, உடனே நாம கிளம்பணும். “

சுதர்சன் அவசரமாக ஒரு ஆளை பிடித்து ஒரு கூண்டுவண்டியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் காந்தியும் ராஜனும் சுதர்சனும் ஏறிக் கொண்டார்கள். காந்தி தன் அறையில் ராட்டை நூற்றுக் கொண்டிருப்பதாக வெளியே தகவல் சொல்லி வைத்திருந்தார் ராஜன். கூட்டம் காந்திக்காக முசாபரி பங்களா வெளியே காத்துக் கொண்டிருந்தது.

அவர்கள் வண்டி வடக்கே செல்லத் துவங்கும் போது சூரியன் உதயமாக ஆரம்பித்திருந்தது. சிறிய மண்சாலையில் வண்டி குலுங்கி குலுங்கி பயணம் செய்தது.

அந்தக் கடிதம் கொண்டு வந்த இளைஞன் யார் என்று அப்போது தான் காந்தி கேட்டார்

“கிட்டுவின் தம்பி மகன்“ என்றார் சுதர்சன்.

“அந்த பையனையும் நான் சந்திக்க வேண்டும்“ என்றார் காந்தி

“வரச்சொல்லிவிடுகிறேன்“ என்றார் சுதர்சன்

தூரத்துக் குன்றினைப் பார்த்தபடியே வந்தார் காந்தி. ஆடு ஒட்டிச் செல்கிறவர்கள் தொலைவில் போய்க் கொண்டிருந்தார்கள். மூங்கில் கூடை ஒன்றை தலையில் வைத்தபடியே ஒரு கிழவி தனியே வரப்பில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். பறவைகள் கூட்டமாக வானில் போய்க் கொண்டிருந்தன.

மண்பாதை சீரற்றிருந்தது. அதில் கூண்டுவண்டி ஏறி இறங்கும் போது மாடுகள் திணறின. பனைமரங்களைத் தாண்டி அவர்கள் வண்டி சென்றபடியே இருந்தது. அரை மணி நேரப்பயணத்தின் பிறகு அவர்கள் இடிந்துகிடந்த சத்திரம் ஒன்றின் முன்பாக வந்து நின்றார்கள். வண்டியிலிருந்து சுதர்சன் இறங்கியபடி தொலைவில் தெரியும் ஊரைக் காட்டிச் சொன்னார்

“அது தான் லட்சுமியாபுரம்“

காந்தி விடுவிடுவென அந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில் அவரைக் கடந்து போனவர்களுக்கு அது காந்தி என்றோ அவரைக் காணத்தான் மக்கள் இரவெல்லாம் காத்துகிடந்தார்கள் என்றோ தெரியாது. அவர்கள் வழக்கம் போலத் தங்கள் விவசாய வேலைகளுக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

வயல்வரப்பில் காந்தி நடந்து போவது வீடு திரும்பும் விவசாயி ஒருவரைப் போலவே தோற்றமளித்தது. சுதர்சன் அவருக்கு முன்பாகப் போக வேண்டும் என்பதற்காக வயலினுள் இறங்கி வேகமாக முன்னே போகத்துவங்கினார்.

யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை

நூறு வீடுகளுக்குள் இருக்கும் மிகச்சிறிய கிராமம். வீதியில் ஒரு பெண் கோழியை விரட்டிக் கொண்டிருந்தாள். வீட்டு அடுப்பிலிருந்து வெளிப்படும் புகை காற்றில் சுழன்றபடியே இருந்தது. ஒன்றிரண்டு ஒட்டுவீடுகளைத் தாண்டி பெரும்பான்மை குடிசை வீடுகள். சாக்கடை வழிந்து ஒடும் சிறிய தெருக்கள். கழுதை ஒன்று சுவரை ஒட்டி அசையாமல் நின்றிருந்தது

சுதர்சன் காந்தியின் முன்னே நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருநாய்கள் குலைத்தபடியே அவர்களைப் பின்தொடர்ந்தன. ஊரின் தென்புறமாக இருந்த தெருவைக் கடந்து அவர்கள் நடந்தார்கள். வைக்கோல் படப்பு ஒன்றினை ஒட்டி சிறிய குடிசை வீடு தென்பட்டது. அருகிலே ஒரு மாட்டுத்தொழுவம். அதையொட்டி ஒரு வேப்பமரம். வழியெங்கும் ஆட்டுப்புழுக்ககைள்.

புகைமூட்டமான அடுப்பில் வெந்நீர் போட்டுக் கொண்டிருந்த கிட்டுவின் மகள் பார்வதி கண்களைக் கசக்கியபடிய யாரோ வீட்டுக்கதவை தள்ளி உள்ளே வருவதைப் பார்த்தாள்.

“அது சுதர்சன் மாமா“.

அவர் ஏன் இந்த அதிகாலையில் வந்திருக்கிறார் என்று புரியாதவள் போல அவள் சேலையால் முகத்தைத் துடைத்தபடியே எழுந்து கொண்டாள்

சுதர்சனைத் தொடர்ந்து காந்தியும் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார். அவளால் நம்பமுடியவில்லை

“அது காந்தி. ஆம் காந்தியே தான்“.

அவளுக்குக் காந்தியை நேரில் பார்த்தவுடன் கைகள் நடுங்கத்துவங்கியது. அவள் தன் நடுக்கத்தை மறைத்தபடியே சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்தாள். காந்தி அவளை எழச்செய்து ஆசி கொடுத்தார்.

வெளிச்சம் வராத மூலையில் இருந்த ஒரு கயிற்றுகட்டிலில் கிட்டுப் படுத்துகிடந்தார். ஒடுங்கிய முகம். அவரது வேஷ்டி விலகிக்கிடந்தது. மெலிந்து வற்றிப்போன உடல். துருத்திக் கொண்டிருக்கும் கழுத்து எலும்புகள். குச்சியான கை கால்கள். நீண்டகாலம் படுக்கையிலே கிடந்து உடம்பு சருகு போலாகியிருந்தது.

காந்தி அமர்வதற்காக ஒரு முக்காலியை கொண்டு வந்து போட்டாள் பார்வதி. காந்தி அதில் அமர்ந்தபடியே கதர்கொடி கிட்டுவைப் பார்த்தார். கண்கள் பாதித் திறந்திருப்பது போலிருந்தது. தலையிலிருந்த நரைமயிர்கள் ஒட்டிப்போயிருந்தன. இறுக்கமான புருவத்தில் ஒரு மயிர் நீட்டிக் கொண்டிருந்தது. அழுந்திப்படுத்த காரணத்தால் காது மடல் மடங்கியிருந்தது.

“அய்யா.. அய்யா“ என்று பார்வதி கிட்டுவை எழுப்ப முயன்றாள்

கயிற்றுக்கட்டிலை ஒட்டி ஒரு இராட்டை ஒரமாகத் தென்பட்டது. பார்வதி கையைக் கட்டிக் கொண்டு காந்தி அருகில் ஒரு மாணவி போல நின்றிருந்தாள்

காந்தி மெதுவான குரலில் “கிட்டு.. கிட்டு“ என்று அழைத்தார். கிட்டுவிடம் சலனமேயில்லை.

“தன்னுசார் கிடையாது. யாரையும் அடையாளம் தெரியாது. ஐந்து வருஷமா இப்படியே தான் இருக்கார். ஒரு வார்த்தை பேசலை. சூரங்குடி வைத்தியர் வந்து மருந்து அரைச்சி தருகிறார். ஆனா நினைப்பு வரவேயில்லை. உசிரு மட்டும் தான் ஒட்டிகிட்டு இருக்கு“ என்றாள்

காந்தி குனிந்து கிட்டுவின் கைகளைத் தடவினார். வெறித்த அந்தக் கண்களைப் பார்த்தபடியே இருந்தார்.

பார்வதி நெகிழ்ச்சியில் தழுதழுத்த குரலோடு தன் தந்தைக்கு நடந்தவற்றைச் சொல்ல துவங்கினான்.

“புதூர்ல நிறையக் கள்ளுகடை இருக்கு. அதை எதிர்த்து அய்யா போராட்டம் பண்ணினாரு கள்ளுகடைக்குக் குடிக்க வர்றவங்கள தடுத்து நிறுத்தி “வேண்டாம் ஐயா! கள் குடிக்காதீங்க கையெடுத்து கும்பிடுறேன்”னு கேட்டுக்கிட்டு இருந்தாரு. ஒரு ஆள் அய்யா முகத்திலே எச்சில் துப்பினான். அப்பவும் அய்யாவுக்குக் கோபம் வரலை. உங்க கால்ல விழுந்து கேட்குறேன்னு சொல்லிட்டு இருந்தார் திடீரென்று போலீஸ்காரங்க ஒரு வந்து இறங்கி தொண்டர்களைத் தடியாலே அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அய்யா இடத்தை விட்டு நகரவேயில்லை. அவருக்குத் தலையில் சரியான அடி. ரத்தம் கொட்டுது. ஆனா கதர்கொடியை விடவேயில்லை. உங்க பேரை தான் சொல்லிகிட்டே இருந்தார்.

ஒரு போலீஸ்காரன் கதர்கொடியை பிடிச்சிருந்த கையிலே லத்தியாலே அடிச்சான். இன்னொருத்தன் அய்யா வேஷ்டியை உருவி அம்மணமாக்கினான். நாலு போலீஸ்காரங்க ஒண்ணு சேர்ந்து அவரை அடிச்சாங்க. அதுல மயங்கினவரு தான் எழுந்திருக்கவேயில்லை “

அவள் பேசியதை ராஜன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துவங்கியதும் காந்தி வேண்டாம் என்றபடியே அவள் சொல்வது தனக்குப் புரிகிறது என்று வழியும் அவளது கண்ணீரைக் காட்டினாள்

காந்தி வந்திருக்கிறார் என்ற செய்தி இதற்குள் ஊர் முழுவதும் பரவிவிட்டது. கிட்டுவின் குடிசைக்கு வெளியே மக்கள் திரண்டிருந்தார்கள். காந்திக்குக் கடிதம் கொடுத்த இளைஞனான முத்துக் கூட்டத்தை விலக்கிவிட்டு குடிசைக்குள் வந்தான்

அவனால் நம்பமுடியவில்லை.

காந்தி ஒரு எளிய தொண்டரைத் தேடி வந்திருக்கிறார். அதுவும் சுயநினைவு இல்லாமல் இருக்கும் ஒருவரை காண வந்திருக்கிறார். தன் பெரியப்பா எவ்வளவு பாக்கியம் செய்தவர்.

அவனும் காந்தியை வணங்கிக் காலைத் தொட்டு நமஸ்கரித்தான்

“நீ தான் கடிதம் எழுதிக் கொடுத்ததா“ என்று காந்தி கேட்டார்

ஆமாம். எங்க பெரியப்பாவுக்கு எல்லாமே நீங்கள் தான். அவரை நீங்கள் தெரிஞ்சிகிடணும்னு தான் லெட்டர் எழுதி குடுத்தேன். நீங்க வீடு தேடி வருவீங்கன்னு எதிர்பார்க்கலை என்று தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொன்னான் முத்து

“என்ன வேலை செய்கிறாய்“ என்று அவனிடம் காந்தி கேட்டார்

“ஸ்கூல் டீச்சர் “என்றான் முத்து

கிட்டுவிற்குத் தானே பணிவிடைகள் செய்யப்போவதாகச் சொல்லி காந்தி வெந்நீரையும் ஒரு துணியையும் கொண்டுவரும்படி சொன்னார்

பார்வதி மறுத்தபடியே அய்யா வேணாம் நான் பாத்துகிடுறேன் என்றாள். ,இத்தனை ஆண்டுகளாக அவள் தான் தந்தையைக் குளிக்க வைத்து உடை உடுத்தி உணவு கொடுத்து உறக்கதிலும் அருகிலிருந்து விசிறி விட்டு அவரைப் பராமரித்து வருகிறாள். அவளுக்கென்று தனி வாழ்க்கை எதுவுமில்லை.

காந்தி தானே அடுப்பை நோக்கி செல்லத்துவங்கியதும் அவள் காயவைத்திருந்த வெந்நீரை எடுத்து ஒரு இரும்பு வாளியில் ஊற்றினாள். அந்த வாளியை காந்தியே தூக்கிக் கொண்டு வந்தார். அவள் கிழிந்த துணி ஒன்றை அவரிடம் கொடுத்தாள்.

காந்தி அங்கே நின்றிருந்தவர்களை வெளியே செல்லும்படியே சொன்னார்

அறையில் பார்வதியும் காந்தியும் மட்டுமே இருந்தார்கள்.

நீண்ட பயணமும் நடையும் கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றுவதும் காந்தியைக் களைத்துப் போகச் செய்திருந்தது. சில நாட்கள் அவரது கால்கள் வீங்கியிருந்தன. ஆனால் எதற்காகவும் அவர் தனது பயணத்திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அன்றாடம் எந்த வழியில் பயணம் செய்கிறோம். எங்கே பேசுகிறோம். யாரைச் சந்திக்கிறோம். எங்கே நிதி அளிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டிருந்தார். இதற்குள் ராட்டை நாற்பது. பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பது. கடிதம் எழுதுவது, மண்குளியல் என எதையும் மாற்றிக் கொள்ளவில்லை.

பெண்கள் அதிகம் திரண்டுவந்த இடங்களில் அவரது கார் தானே நின்றது. பெண்களுக்கென்றே தனியான கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதைக் கறாராகச் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றாடம் அவர் படுக்கைக்குப் போகு முன்பாகச் சுற்றுப்பயணத்தில் வசூலான தொகைகளின் கணக்கைப் பார்ப்பது வழக்கம். இரவு எவ்வளவு நேரமானாலும் அதைப் பார்த்து முடித்துக்கொண்டுதான் உறங்கப் போவார். ஸ்ரீ வைகுண்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றை அங்கேயே ஏலத்தில் விட்டு அந்தப் பணத்தை அரிஜன் நிதிக்காகச் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார். காந்தியிடம் ஆட்டுக்குட்டியை ஏலத்தில் எடுத்த பொன்னி நாயக்கர் அந்த ஆட்டுக்குட்டியை வணங்கினார். அந்த ஆடு கிராமத்தில் இனி தனிச்சிறப்பு பெற்றுவிடும்.

காந்தியோடு கூடவே பயணம் செய்து கொண்டிருந்த ராஜனுக்கு அன்பின் மிகுதியால் மக்கள் காந்தியைத் தொல்லை செய்கிறார்கள். இனிப்புப் பண்டத்தைப் பிய்த்து எடுப்பது போலப் பிய்த்து எடுக்கிறார்கள் என்று தோன்றியது. பயணத்திட்டத்தில் முன்னர் நிச்சயம் செய்யாத இடங்களில் அவரது கார் நிற்கும் போதெல்லாம் ராஜன் பதற்றமாகினார். மூடப்பட்ட ரயில்வே கேட் முன்பு ஆயிரம் பேர் காரை சுற்றி நின்று கொண்டால் அவர் என்ன தான் செய்வார்.

விருதுநகரில் நடந்த கூட்டத்திற்குள் கதர் சட்டை வேஷ்டி அணிந்த ஒரு இளைஞன் காந்தியிடம் ஒரு கடிதம் ஒன்றைக் கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தான். அவனால் காந்தியை நெருங்கமுடியவில்லை. அவன் தன் கையிலிருந்த கடிதத்தை ராஜனிடம் கொடுத்துக் காந்தியிடம் ஒப்படைக்கச் சொன்னார். அன்றாடம் இப்படிப் பல நூறு கடிதங்கள். வாழ்த்து மடல்கள். கவிதைகள் தரப்படுகின்றன. அவற்றை எல்லாம் காந்தி படித்துப் பதில் தருவது என்றால் அதற்கே நாள் முழுவதும் போய்விடும். ஆனால் ராஜன் அவற்றைக் கவனமாக வாசித்தார். முக்கியமான தகவலோ செய்தியோ இருந்தால் அதை மட்டும் காந்தி ராட்டை நூற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் அவரிடம் தெரிவிப்பார். சில வேளைகளில் அந்தக் கடிதத்தைக் காந்தி படிக்கச் சொல்லிக் கேட்பதுண்டு. உடனே பதிலை டிக்டேட் செய்வதும் உண்டு.

அப்படித் தான் அந்த இளைஞன் கொடுத்த கடிதத்தை ராஜன் முகாமிட்டிருந்த இடத்தில் இரவு வாசித்தார். அதிலிருந்த விஷயங்களை படிக்கப் படிக்க அவரை அறியாமல் கண்ணீர் பெருகியது. இது நிஜம் தானா.

ஒரு தொண்டன் இப்படி எல்லாம் காந்திய வழியினை முன்னெடுத்து அடியும் உதையும் பட்டு உருக்குலைந்து போயிருக்கிறானா. எவ்வளவு பெரிய தியாகமது.

அதுவும் நோயுற்றுப் படுக்கையில் கிடந்த நிலையிலும் எவரது உதவியும் ஏற்றுக் கொள்ளாது வறுமையில் வாடுவது என்பது எளிதான விஷயமா என்ன.

காந்தி ஒரு தாதியைப் போல வெந்நீரில் துணியை முக்கிச் சூடு பொறுக்கும்படி பார்த்துவிட்டு மெதுவாகக் கிட்டுவின் பாதங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். வெடிப்பேறிப் போன கால்கள். எவ்வளவு நடந்து அலைந்திருக்கும். இந்த அலைச்சல் எதற்காக, தான் முன்னெடுத்த அஹிம்சாவழிக்கான போராட்டத்திற்குத் தானே.

அவர் அந்தப் பாதங்களைச் சீராகத்துடைத்தார். பார்வதி இதற்குள் தந்தையின் வேஷ்டியினை அரையோடு சேர்த்துச் சுருட்டிவிட்டாள். காந்தி அந்த மனிதரின் உடல் தன் உடலைப் போலவே மெலிந்து ஒடுங்கி இருப்பதைக் கண்டார்.

மிகக் கவனமாக, சிரத்தையாகக் கிட்டுவின் உடலைக் காந்தி துடைத்துத் தூய்மை செய்தார். வயிற்றில் காந்தியின் கை பட்டபோது லேசான சூடு தெரிந்தது. கிட்டுவின் நரைமயிர் அடர்ந்த மார்பினை துடைக்கும் போது மலர் கொண்டு தொடுவது போல மெதுவாகத் துடைத்தார். வலது கையில் தன் உருவத்தைக் கிட்டுப் பச்சை குத்தியிருப்பதைக் கண்டார். அந்த உருவத்தைத் தன் விரலால் தொட்டுத் துடைத்தார்.

பின்பு கிட்டுவின் முகத்தைத் தன் கைகளால் தடவிவிட்டார். கண்களைத் துடைத்தபடியே அதிலிருந்து கண்ணீர் கசிவதை உணர்ந்தார்.

கிட்டுவிற்குத் தான் வந்திருப்பது தெரிகிறதா. அவர் தன்னை உணர்கிறதா என்பது போலக் கிட்டுவின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தார். அதில் சலனமேயில்லை. நெற்றியினைத் துடைத்து காது மடல் வரை சுத்தம் செய்துவிட்டு அவருக்கு என்ன உணவு கொடுக்கிறாய் என்று பார்வதியிடம் ஆங்கிலத்தில் கேட்டார்

“பழைய கஞ்சி“ என்றாள்

அதைக் கொண்டுவரும்படி காந்தி சொன்னார்

அவள் ஒரு கலயத்தில் பழைய கஞ்சியைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

அந்தக் கஞ்சியினையும் அவரே கிட்டுவிற்குப் புகட்டிவிட்டார். வழியும் உதட்டினை தனது வேஷ்டி நுனியாலே துடைத்துவிட்டார். கிட்டுவினால் இரண்டு வாயிற்கு மேல் குடிக்கமுடியவில்லை

மீதமான கஞ்சியைக் காந்தி குடித்தார்.

இதற்குள் குடிசைக்கு வெளியே திரண்ட மக்கள் காந்திக்கு வாழ்த்து சொல்லி குரல் எழுப்பத் துவங்கியிருந்தார்கள்.

வெளியே நிற்பவர்களை உள்ளே வரும்படி சொன்னார் காந்தி

அந்தக் குடிசை முழுவதும் ஆட்கள் நிரம்பியிருந்தார்கள். கட்டிலைச் சுற்றிலும் ஆட்கள் அமர்ந்து கொண்டார்கள்.

காந்திஜி தணிவான குரலில் சொன்னார்

“நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கிட்டுவிற்காகப் பிரார்த்தனை செய்வோம்“

அனைவரும். கைகூப்பியபடியே நின்றார்கள்.

சுதர்சன் பாடத்துவங்கினார். கண்களை மூடி கிட்டுவிற்காகக் காந்தி பிரார்த்தனை செய்தார். பின்பு மெல்லிய குரலில் சொன்னார்

“கிட்டுவை தாக்கிய போலீஸ்கார்கள் நலனிற்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம். “

அதைக் கிராமவாசிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் காந்தியை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்கள். காந்தி மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திக்கத் துவங்கினார். சுதர்சனுடன் கிட்டுவின் மகள் பார்வதி மட்டுமே பிரார்த்தனை செய்தாள்.

பிரார்த்தனை முடிந்தபிறகு காந்தி அந்த ஊர்மக்களை நோக்கிச் சொன்னார்

“கடவுள் நல்லவர்களைக் கைவிடுவதில்லை. கிட்டுவும் என் சகோதரர் தான். அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் அனைவரின் பொறுப்பு“

மக்கள் தலையாட்டி ஏற்றுக் கொண்டார்கள்.

விடைபெற்றுக் கொள்ளும்முன்பு காந்தி முக்காலியில் அமர்ந்தபடியே கட்டிலில் கிடந்த கிட்டுவின் கைகளை எடுத்து அதில் எதையோ எழுதினார். என்ன எழுதினார் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால் கிட்டுவின் புருவங்கள் நெகிழ்ந்து தளர்வதைக் காந்தி கண்டார்.

பின்பு காந்தி சுவர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கிட்டுவின் ராட்டையை எடுத்து நூல் நூற்றார். விடைபெறும் போது பார்வதியிடம் காந்தி சொன்னார்

“உன் தந்தையிடம் நான் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டேன். அவருக்கு நான் சொன்னது புரிந்திருக்கும். உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் எனக்கு ஒரு தபால் அட்டை எழுது. நீயும் இனி என் மகள் தான். “

அவள் தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினாள். அவளை ஆறுதல் படுத்திய பின்பு காந்தி அங்கிருந்து விடைபெற்றார்

வயல் வரப்பில் நடந்து வரும் போது ராஜனிடம் காந்தி சொன்னார்

“இந்த தேசம் கிட்டுவைப் போன்றவர்களுக்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறது. “

“நினைவுகள் இல்லாத வெற்றுடலாக வாழுவது பெரும் சோகம்“ என்றார் ராஜன்

“அதிகாரத்தின் கோரத்திற்கு இதை விட என்ன சாட்சியம் வேண்டும். கிட்டு தன்னை பலிகொடுத்திருக்கிறார். நாம் செய்யப்போகும் செயல்கள் தான் கிட்டுவிற்கான நீதி. “ என உறுதியான குரலில் சொன்னார் காந்தி

அந்தக் குரலில் அவர் எதையோ மனதிற்குள் திட்டமிடத் துவங்கியிருக்கிறார் என்பது புரிந்தது. பின்னாளில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான விதை அன்று தான் காந்தி மனதில் உருவானது.

வயலைத் தாண்டும் போது காந்தி திரும்பிப் பார்த்தார். அமைதி ஊர்வலம் போல மொத்த கிராமமும் அவரது பின்னால் திரண்டு வந்து கொண்டிருந்தது.

செய்தாக வேண்டிய வேலைகள் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்ததை உணர்ந்தவராக அவர் கூண்டு வண்டியை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2021 03:08
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.