கிணற்றின் வயது
புதிய சிறுகதை

அவர்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள்.
மூவரில் உயரமாக இருந்தவருக்கு வயது எழுபதிற்கும் மேலிருக்கும். ஈட்டி போன்ற உறுதியான உடற்கட்டு கொண்டிருந்தார். தோளில் ஒரு துண்டு. அழுக்கடைந்த வேஷ்டி. உடன் வந்திருந்த இரண்டு பேரும் இளைஞர்கள். பெரியவர் கையில் ஒரு மஞ்சள் பையிருந்தது. அதில் ஏதோ ஒரு பொருளைச் சுற்றி வைத்திருந்தார்.
வீட்டின் பின்புறமிருந்த கிணற்றடிக்கு அவர்கள் போய் நின்றபோது விசாலாட்சி பூக் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எழுபது வயது நடந்து கொண்டிருந்தது. தலையில் ஒரு கறுப்பு முடி கூடக் கிடையாது. மற்றவர்களைப் போல அவள் தலைக்குக் கறுப்பு மை பூசிக்கொள்வதுமில்லை. செங்கல் நிற சுங்கடி புடவை உடுத்தியிருந்தாள். அவளது ஜாக்கெட் தொளதொளவென இருந்தது.
“இன்னைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கு. பூஜையை மட்டும் முடிச்சிடுகிவோம். கிணற்றை மூடுறதை நாளைக்குச் செய்யலாம்“ என்றார் பெரியவர்
விசாலாட்சி வருத்தம் தோய்ந்த முகத்துடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு வீட்டுக்கிணற்றை மூடுவதில் விருப்பமில்லை. எவ்வளவோ சண்டையிட்டுப் பார்த்துவிட்டாள். வீட்டில் அவளது மகன் பிரசாத் மருமகள் பாவனா பேரன் பேத்தி என எல்லோரும் கிணற்றை மூட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்
“ஒரு தட்டுல வெத்திலை பாக்கு, வெல்லம், தேங்காய் பழம், பூ வச்சி கொண்டுட்டு வாங்க“ என்றார் பெரியவர்
விசாலாட்சி பூஜை அறைக்குள் சென்று ஒரு தட்டில் அவர் கேட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தாள். திடீரென அவள் கட்டிய பூ மாலையைச் சாமிக்குப் போடுவதற்குப் பதிலாகக் கிணற்றுக்கே போடலாமே என்று தோன்றியது. அதையும் தட்டில் வைத்தாள். கூடவே 101 ரூபாய் பணத்தையும் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்
இதற்குள் வந்தவர்கள் கிணற்றடியைச் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். இளைஞன் வாழையிலை ஒன்றை வெட்டி படையலுக்காக விரித்து வைத்திருந்தான்.
அந்தப் பெரியவர் தன் பையிலிருந்து சிறிய வெண்கலப்பதுமை ஒன்றை வெளியே எடுத்து இலையின் முன்னால் வைத்தார். விசாலாட்சி கொண்டு வந்திருந்த பூஜை பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து இலையில் பரப்பி வைத்தார்
பிறகு அவளிடம் “ஒரு நாழி நிறைய அரிசியும் நிறை விளக்கும் கொண்டுகிட்டு வாங்க“ என்றார்
“நாழியை எங்கேபோய்த் தேடுவது“ என ஒரு நிமிஷம் யோசித்தாள். மரக்கால் உறி, மண்கலயம், வெண்கலப் பானைகள். எல்லாம் மறைந்து போய் எத்தனை ஆண்டுகளாகிவிட்டது. அவரிடமே கேட்டாள்
“சின்ன உழக்கு தான் இருக்கு கொண்டுட்டு வரவா “
“அப்போ ஒரு சொளகு நிறையப் பச்சரிசி கொண்டுகிட்டு வாங்க“ என்றார் அந்தப் பெரியவர்
சமையல் அறைக்குள் போய்ப் பச்சரிசியைத் தேடினாள். சமையல் மருமகள் வசமானபிறகு எந்தப் பொருள் எங்கேயிருக்கிறது என்று தெரியாது. சில பாக்கெட்டுகளைக் காணும் போது அது என்ன பொருள் என்று கூட அவளுக்குத் தெரியாது. சமையல் அறையே மாறிவிட்டது. மீனாம்பாள் இருந்தவரைக்கும் சமையல் அறையில் அவளைத் தவிர வேறு எவரும் ஒரு உப்புக்கல்லைக் கூட எடுக்க முடியாது. மாமியார் இல்லாத குறையைத் தீர்க்க வந்த மகராசி, அவளும் போய் சேர்ந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டபடியே பச்சரிசியைச் சொளகில் கொண்டு போய்க் கொடுத்தாள்
அவர்கள் வாழை இலையில் அரிசியைப் பரப்பினார்கள். பூ மாலையைக் கிணற்றுக்குச் சூடினார்கள். உருளையில் பூவைக் கிள்ளி சொருகினான் இளைஞன்.
ஐந்து முகம் கொண்ட விளக்கினை ஏற்றினார் அந்தப் பெரியவர்.
“சூடம் காட்டுற தட்டும் மணியும் வேணும் “என்று இளைஞன் கேட்டான்
விசாலாட்சி வீட்டிற்குள் அதை எடுக்கப்போனபோது மருமகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தபடியே “காசு எதுவும் குடுக்காதீங்க. காண்டிராக்டர்கிட்ட ஏற்கனவே அட்வான்ஸ் குடுத்து இருக்கோம் “ என்றாள்
“சூடம் காட்டுற தட்டு வேணுமாம்“
விசாலாட்சியின் பேரன் நந்து கேட்டான்
“பாட்டி. கிணற்றை எதை வச்சி மூடுவாங்க. ஸ்டோனா. இல்ல டோரா “
அவள் பதில் சொல்லவில்லை. சூடம் காட்டுகிற தட்டையும் மணியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் திரும்பி பேரனிடம் சொன்னாள்
“சாமி கும்புட வா. நந்து“
“போ பாட்டி. நான் வரலை. அந்தக் கிணறு ரொம்ப டர்ட்டி. அது கிட்ட போகக் கூடாதுனு மம்மி சொல்லியிருக்காங்க“
“நாளைக்குக் கிணற்றை மூடப்போறாங்கடா“
“புது கார்ஷெட் கட்டப்போறோம். மம்மி சொல்லிட்டாங்க“
பேரபிள்ளைகளும் இப்படியாகிவிட்டார்களே என்று விசாலாட்சிக்கு ஆதங்கமாக இருந்தது. இந்தக் கிணற்றடியில் வைத்து எத்தனை நாட்கள் மகனுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். விடுமுறைக்காகச் சேலத்திலிருந்து வந்த உறவினர்பிள்ளைகள் அத்தனையும் இந்தக் கிணற்றடியைச் சுற்றித் தானே விளையாடினார்கள். கதை பேசினார்கள். குளித்தார்கள்.
அவள் சூடம்காட்டும் தட்டினையும் மணியினையும் அந்த இளைஞனிடம் கொடுத்தாள்.
இதற்குள் பெரியவர் தன் மேல்சட்டையைக் கழட்டிவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டியபடியே மந்திரம் சொல்பவர் போல எதையே முணுமுணுத்தபடியே இலையின் முன்னால் அமர்ந்திருந்தார்.
என்ன வணங்குகிறார்கள் எனப்புரியாமல் அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெரியவர் விளக்கைத் தூண்டி விட்டார். இளைஞன் மணி ஆட்டினான்
பெரியவர் கைபிடி நிறைய அரிசையை எடுத்து ஏதோ சொல்லி கிணற்றில் கொண்டு போய்ப் போட்டுவந்தார். பின்பு நான்கு திசைகளை நோக்கியும் பூப்போட்டு வணங்கினார். தேங்காய் உடைத்துத் தீபராதனை காட்டினார். இளைஞன் வேகமாக மணியை அடித்தான்
அவளிடம் “கும்பிட்டுக்கோங்க “என்றார்.
அவள் கிணற்றை இருகரம் கூப்பி வணங்கினாள். பின்பு கோவிலை வலம் வருவது போலக் கிணற்றைச் சுற்றி வந்து வணங்கினாள்
“வீட்டில இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவந்து கிணற்றில் ஊற்றுங்க “என்றார் அந்தப் பெரியவர்
விசாலாட்சி வீட்டிற்குள் போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவந்து பெரியவரிடம் நீட்டினாள்
“நீங்களே ஊற்றுங்க“ என்றார்
மரணப்படுக்கையில் கிடப்பவர்களுக்குக் கடைசியாகப் பால் ஊற்றுவது நினைவிற்கு வந்து போனது. கிணற்றில் அந்தத் தண்ணீரை ஊற்றினாள். எவ்வளவு தண்ணீரை இந்தக் கிணறு நமக்குத் தந்திருக்கிறது. இன்று அந்தக் கிணறுக்கு நாம் ஒரு டம்ளர் தண்ணீர் பதிலுக்குத் தருகிறோம். இரண்டும் ஒன்று தானா
அவளை அறியாமல் கண்கள் கலங்கின

“வீட்டுல இருக்கிற எல்லோரும் வந்து கும்பிட்டுக்கோங்க“ என்றார் பெரியவர்
தன்னைத் தவிர எவருக்கும் கிணறு வேண்டியதில்லை என்று அவரிடம் எப்படிச் சொல்வது. அவள் கிணற்றைக் கைகூப்பி வணங்கினாள்.
“ராத்திரி முழுக்க இந்த விளக்கு எரியட்டும். காலையில் நாங்க வந்து கிணற்றை மூடுற வேலையை ஆரம்பிச்சிடுறோம்“
சரியெனத் தலையாட்டினாள்
அவர் தனது பையில் உடைத்த தேங்காய் பழம் வெற்றிலை அரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துப் போட்டுக் கொண்டார். பிறகுத் தன் சட்டையை அணிந்தபடியே சொன்னார்
“சாந்தி செய்யாமல் கிணற்றை மூடக்கூடாதும்மா. “
அவளுக்கு அது புரிந்தேயிருந்தது.
“கிணற்றுக்குள்ளே ஒரு ஆமை இருக்கு“ என்றாள் விசாலாட்சி
“நாளை கிணற்றுக்குள்ளே இறங்கி அதை வெளியே எடுத்துவிட்ருவோம் “என்றான் இளைஞன்
“அது எங்கே போகும்“ என்று கேட்டாள் விசாலாட்சி
“நாங்களே கொண்டு போய் ராஜாஊரணியில விட்ருறோம்“ என்றான்
இதுவரை அந்த ஆமை வெளிஉலகினை கண்டதேயில்லை. நாளைக்குத் தான் முதன்முறையாக வெளியுலகினை காணப்போகிறது
“மறக்காமல் ஆமையை வெளியே எடுத்துவிடணும்“ என்று சொன்னாள் விசாலாட்சி.
பெரியவர் தலையாட்டிக் கொண்டார்
ஒரு இளைஞன் வாளி கயிறை உருவி தனியே எடுத்தான். இரும்பு உருளையைக் கழட்டினான்.
“இதை எடுத்து உள்ளே வச்சிக்கோங்க“ என்றான் ஒருவன்
“இனிமே இது எதுக்கு“ எனக்கேட்டாள் விசாலாட்சி
“நாங்க எடுத்துகிடவா“ என்று கேட்டான் மற்ற இளைஞன்
விசாலாட்சி தலையாட்டினாள். அவன் அந்த வாளி கயிறை கையில் எடுத்துக் கொண்டான்
பெரியவர் மீண்டும் ஒரு முறை கிணற்றை வலம் வந்து வணங்கினார். பின்பு கிளம்புவதற்கு முன்பு சொன்னார்
“கிணறு அமையுறது ஒரு பாக்கியம். அதுவும் நல்ல தண்ணீர் கிடைக்குதுன்னா ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கோம்னு அர்த்தம். பெரிய அய்யா இருக்கிறப்போ அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவேன். இந்தக் கிணற்று தண்ணியைக் குடிச்சிருக்கேன். சக்கரையா இனிக்கும். இன்னைக்கு அப்படித் தண்ணீ ஏது. இப்போ தண்ணிய பாக்கெட்டுல அடிச்சி விக்குறான். இந்தக் கர்மத்தை எல்லாம் பாக்குறதுக்குளே பெரிய அய்யா செத்துப்போயிட்டார். ஒரு கிணற்று தண்ணியைக் குடிச்சி வளர்ந்தா எந்த நோயும் வராதுனு சொல்வாங்க. இன்னைக்குச் சம்பாதிக்கிறதுல பாதியை ஹாஸ்பிடல்காரனுக்குத் தான் குடுக்க வேண்டியிருக்கு. தண்ணியை மொத்தமா சீரழிச்சிப்புட்டாங்க“
என்றபடியே அவர் தன்னோடு வந்தவர்களை அழைத்துக் கொண்டு புறப்படத் துவங்கினார்
கிணற்றடியில் எரியும் விளக்கைப் பார்த்தபடியே விசாலாட்சி அமர்ந்திருந்தாள். இறந்த கணவனின் உடல் முன்னால் அமர்ந்திருந்த நாள் நினைவில் வந்து போனது. கிணற்றை இழப்பதும் மனிதரை இழப்பதும் வேறுவேறா என்ன.
••
இரண்டு முறை புதிதாகக் கிணறு வெட்டி அவள் பார்த்திருக்கிறாள். அவளுக்கு ஏழு வயதான போது கிருஷ்ணமூர்த்தி மாமா தோட்டத்தில் கிணறு வெட்டினார்கள். ஊற்றுமுகம் தென்பட்டதும் பெண்கள் குலவையிட்டார்கள். ஊற்றின் கண்திறந்து தண்ணீர் பீய்ச்சியடித்தபோது மாமா பூமியைக் கைகூப்பி வணங்கினார். அந்தத் தண்ணீரை கைநிறைய வாங்கிக் குடித்தார். இன்னொரு முறை கோவிலை ஒட்டிய நந்தவனத்தில் பழைய கிணறு தூர்ந்துவிட்டது என்று புதிய கிணறு தோண்டினார்கள். நாற்பது அடியில் நல்ல தண்ணீர் வந்துவிட்டது. கோவிலே ஆரவாரம் செய்தது. ஆனால் கிணற்றை மூடப்போவதை தன் வாழ்நாளில் இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறாள். அதுவும் தன் வீட்டுக்கிணற்றை மூடுவதைக் காணுவது எத்தனை துயரமானது.
கோடை காலத்தில் கிணற்றுத் தண்ணீர் வற்றிப்போய்விடும்.. அப்போது காற்றுக் கிணற்றில் புகுந்து வெளியேறும் போது விநோதமான சப்தம் வரும். கைவிடப்பட்ட தாயின் அழுகையைப் போன்ற ஒலியது. மழைக்காலத்தில் கிணறு பிள்ளைத்தாய்ச்சியின் வயிற்றைப் போலாகிவிடும். அதைக் காணவே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.
கிணற்றுக்கு எப்படித் தண்ணீர் வந்து சேருகிறது. எப்படி மறைந்து போகிறது என்பது புதிரானது. தண்ணீர் நம் கண்ணில் படாத ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. ஒருவேளை அதற்கும் தாய்வீடு இருக்குமோ என்னவோ.
அவள் திருமணமாகி வந்து இந்த ஆண்டுடன் ஐம்பத்திரெண்டு வருஷங்களாகி விட்டது. இத்தனை வருஷங்களாக இந்தக் கிணறு தான் அவளது உற்ற தோழி. துணை. எத்தனையோ நாட்கள் கிணற்றிடம் தன் கவலைகளைச் சொல்லியிருக்கிறாள். அழுதிருக்கிறாள். கிணற்றுத் தண்ணீர் அவளைச் சாந்தப்படுத்தியிருக்கிறது.
அதுவும் மார்கழி மாத குளிரில் இந்தக் கிணற்றுத் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டவுடன் உடம்பில் அதுவரை இருந்த கசடுகள் எல்லாம் கரைந்துபோய் ஆள் புதுமனுஷியாகிவிட்டது போலிருக்கும். அவள் அந்தக் கிணற்றுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறாள். ரகசியமாக அதைச்சொல்லி அழைப்பாள்.
வீட்டுக் குளியலறை ஒருபோதும் கிணற்றடி தந்த சுகத்தை நினைவுகளைத் தர இயலாது.
கிணற்றை மூடி அந்த இடத்தில் கார்ஷெட் கட்ட வேண்டும் என்று அவளது மகன் நீண்டகாலமாகவே சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் விசாலாட்சி அதை அனுமதிக்கவில்லை. வீட்டில் இரண்டு கார்கள் வந்தபிறகு அதை வாசலில் நிறுத்த இடமில்லை என்பதால் கிணற்றை மூடி ஷெட் கட்ட வேண்டும் என்பதில் மருமகள் பாவனா தீவிரமாக இருந்தாள்.
என்ன பெண்ணிவள். கிணற்றை மூடச் சொல்கிறாளே என்று விசாலாட்சிக்கு அவள் மீது பெருங்கோபம் வந்தது. அவளுடன் நேருக்கு நேராகவே பேசி சண்டையிட்டிருக்கிறாள்
“அந்த கிணற்றை நாம இப்போ யூஸ் பண்ணுறதுல்ல. அதுல இருந்து கெட்ட நாற்றம் அடிக்குது. அதை மூடுனா என்ன தப்பு“
“மழைக்காலத்துல கிணறு நிறைஞ்சப்போ அந்தத் தண்ணியைத் தானே செடிகளுக்கு யூஸ் பண்ணுறோம்“ என்றாள் விசாலட்சி
“அது நல்ல தண்ணியில்லை “
“அந்த தண்ணியில தான் நான் குளிச்சேன். உன் புருஷன் காலேஜ் போற வரைக்கும் குளிச்சான். அதைத் தான் நாங்க இருபது முப்பது வருஷமாகக் குடிச்சிட்டு இருந்தோம்“

“பழைய கதைய பேசி ஆகப்போறதில்லை. இப்போ குழாய்ல வர்ற தண்ணிய குடிக்கவே பயமா இருக்கு. மினரல் வாட்டர் குடிச்சிகிட்டு இருக்கோம். இதுல எங்களைக் கிணற்று தண்ணீரை குடிக்கச் சொல்றீங்களா“
“நான் கிணற்று தண்ணியைக் குடிக்கச் சொல்லலை. ஆனா கிணறை மூட வேண்டாம்னு சொல்றேன்“
“அப்போ நாங்க வேற வீடு பாத்து போய்கிடுறோம். எனக்குக் கார் நிறுத்த இடம் வேணும். நீங்களே உங்க கிணற்றைக் கட்டிகிட்டு அழுங்க “
இந்தச் சண்டையின் போதெல்லாம் விசாலாட்சி தான் மனம் உடைந்து போனாள். சில நாட்கள் ஆற்றாமையில் அழுவாள். மகனிடம் தனியே பேசிப் பார்ப்பாள். அவனும் பிடிவாதமாகக் கிணற்றை மூட வேண்டும் என்றே சொன்னான்
ஒருவேளை அவள் கணவர் உயிரோடு இருந்திருந்தால் அவளுக்குத் துணையாகப் பேசியிருப்பாரோ என்னவோ. அவருக்கு வெளியே போய்விட்டு வந்தால் எந்த இரவிலும் கிணற்றில் போய்த் தண்ணீர் இறைத்து குளிக்க வேண்டும். தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட வெந்நீரில் அவர் குளித்தது கிடையாது. பச்சைத் தண்ணீர் தான் அதுவும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் தான். சில நாட்கள் வெளியூர் பயணம் போய்விட்டு இரவு திரும்பி வந்தால் கூடப் பையை வைத்த மறுநிமிடம் கிணற்றடிக்குப் போய்விடுவார். தானே இறைத்து இறைத்து வாளி தண்ணீரைத் தலையில் ஊற்றிக் குளிப்பார்.
மாமனாருக்குத் தண்ணீர் இறைத்து வைக்க வேண்டும். நாலு அண்டா தண்ணீர் குளிப்பார். ஒரு அண்டா தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அடுத்தது நல்ல சூடு கலந்த தண்ணீர். மூன்றாவது லேசாக வெதுவெதுப்பு. நாலாவது பச்சைத்தண்ணீர். இத்தனையும் அவள் தான் ரெடி பண்ண வேண்டும். அவரும் ஒரு நாளில் இரண்டு முறை குளிக்கும் பழக்கம் கொண்டவர். வயதான காலத்தில் அவர் உட்கார்ந்து குளிப்பதற்காக ஒரு முக்காலி ஒன்றைச் செய்து வைத்திருந்தார்கள். அதில் உட்கார்ந்து கொண்டு தான் குளிப்பார்.
இரண்டு வருஷங்கள் மழையில்லாமல் போய்க் கிணறு முற்றிலும் வற்றியபோது வீட்டில் போரிங் போட்டு மேல்நிலை தொட்டி கட்டி தண்ணீரை ஏற்றினார்கள். அதன்பிறகு கிணற்றில் தண்ணீர் இறைக்கும் வேலை குறைந்து போனது. ஆனாலும் துவைப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர் தான். அந்தத் தண்ணீரில் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் போய்விடும்.
அவளது மாமனார் காலத்தில் தான் அந்த வீட்டைக் கட்டினார்கள். வக்கீல் கோசல்ராம் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் கிடையாது. அந்தக் காலத்திலே ஆயிரம் ரூபாய் பீஸ் வாங்கிய பெரிய வக்கீல். ஜமீன்தார்கள் வண்டி போட்டு வந்து வீட்டுவாசலில் காத்து கிடப்பார்கள்..
அவர் கட்டிய வீடு என்பதால் மிகப்பெரியதாக இருந்தது. விசாலமான ஹால். அதில் ஒரு ஊஞ்சல் போட்டிருந்தார்கள். லட்சுமி விலாஸம் என அவர் தன் தாயின் பெயரைத் தான் வீட்டிற்கு வைத்திருந்தார். பத்து பனிரெண்டு அறைகள். அவர் கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேச தனி அறை. மாடியில் அவரது நூலகம். படிப்பறை. மாடியிலும் இரண்டு படுக்கை அறைகள். இத்தனை இருந்த போதும் வீட்டிற்குள் கழிப்பறை கிடையாது.. வீட்டின் பின்புறம் இருந்த வெளியில் ஒரு ஓரமாக ஓடு வேய்ந்த கழிப்பறை அமைத்திருந்தார்கள். வீட்டின் பக்கம் நிறையக் காலி இடம் கிடந்தது. அதில் ஒரு மாமரமும் தென்னை மரங்களும் அவள் வந்து தான் வைத்தாள். இன்று அந்த மரங்கள் உயர்ந்தோங்கி நிற்கின்றன.
வீட்டின் பின்பக்கமிருந்த கிணற்றை யார் வெட்டியது என்றோ, அதற்கு எத்தனை வயது என்றோ யாருக்கும் தெரியாது. கிணற்றுக்குக் கூட யூகமாக வயதைச் சொல்லிவிடலாம் ஆனால் தண்ணீருக்கு ஏது வயது. அந்தக் கிணற்றை ஒட்டி துவைகல் ஒன்றினைப் போட்டிருந்தார்கள்.
இரண்டு வாழை மரங்களையும் பூச்செடிகளையும் விசாலாட்சி தான் வைத்தாள். கிணற்றடியில் பெரிய கல்தொட்டி வைத்திருந்தார்கள். அதில் எப்போதும் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் இறைக்க இரும்பு வாளியினை நார்கயிற்றில் கட்டியிருப்பார்கள். இரும்பு உருளையில் கயிறு இழுபடும் போது விநோதமாகச் சப்தமிடும். அது ஒரு சங்கீதம்.. யார் கிணற்றடியில் நிற்கிறார்கள் என்பது அந்தச் சப்தத்தை வைத்து அவளால் தெரிந்து கொள்ள முடியும். ஆளுக்கு ஒரு விதமாகத் தான் அந்த உருளை சப்தமிடுகிறது.
வக்கீலின் பிள்ளையாக இருந்த போதும் விசாலாட்சியின் கணவர் நாராயணன் அளந்து பேசக் கூடியவர். அவர் ஒரு போட்டோகிராபர். பஜாரில் அவர் தனியாகப் போட்டோ ஸ்டுடியோ துவங்கியதை அவரது தந்தை விரும்பவில்லை. ஆனால் தன்விருப்பத்தின் படியே தான் அவர் செயல்பட்டார். காலை ஏழு மணிக்கு ஸ்டுடியோவிற்குப் போனால் மதியம் மூன்று மணிக்குச் சாப்பிட வருவார். பின்பு ஸ்டுடியோவை மூடி விட்டு அவர் வீடு வந்து சேருவதற்கு இரவு பத்தரையாகிவிடும்.
அவர்களுக்கே சொந்தமாகப் போட்டோ ஸ்டுடியோ இருந்த போதும் அவர் விசாலாட்சியை நிறையப் புகைப்படம் எடுத்ததில்லை. ஆனால் மகன் பிரசாத்தையும் மகள் செல்வியையும் நிறையப் போட்டோ எடுத்திருக்கிறார். அவரும் அவரது தந்தையும் இருப்பது போல வீட்டில் ஒரு போட்டோ கூடக் கிடையாது. பெரும்பாலும் தந்தையின் முன்னால் அவர் நின்று பேசவே மாட்டார். ஏதாவது சொல்லவேண்டும் என்று கோசல்ராம் நினைத்தால் கூட மருமகளிடம் தான் சொல்லுவார்
கோசல்ராமின் மனைவி பிரசவமான ஆறாம் நாள் இறந்து போனவள். ஆகவே பிள்ளையை வளர்க்க உதவியாக அவரது அத்தை மீனாம்பாளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அவள் தான் நாராயணனை வளர்த்தாள். அவளுக்கும் விசாலத்திற்கும் ஆகவேயில்லை. எப்போதும் சண்டை. அவள் விசாலத்திடம் குறை கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தாள்.
அத்தை குளிப்பதற்காகக் கிணற்றடியை ஒட்டி சிறிய ஒற்றை அறை ஒன்றை கோசல்ராம் கட்டிக் கொடுத்தார். அந்த அறையில் அவள் ஒருத்தியைத் தவிர வேறு எவரும் குளிக்கக் கூடாது.
விசாலாட்சி கிணற்றடியில் ஒரு அண்டாவை வைத்திருந்தாள். அந்த அண்டாவில் தண்ணீரை நிரப்பி மெதுவாகக் குளிப்பாள். சில நாட்கள் அவள் குளிப்பதை ஒரு காகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். சில நேரத்தில் குளித்து முடித்தபிறகும் அவள் கிணற்றடியிலே ஈரக்கூந்தலை உணர்த்தியபடியே நின்றிருப்பாள். வெயில் ஏறிய நாட்களில் கிணற்றடியில் நிற்கும் போது விநோதமான குளிர்ச்சியை உணர முடியும்.
அந்தக் கிணற்றில் இறைத்த தண்ணீரை வடிகட்டி அதைத் தான் குடித்தார்கள். சமையலுக்குப் பயன்படுத்தினார்கள். வக்கீல் வீடு என்பதால் கட்சிக்காரர்கள் குடிப்பதற்கென்றே பெரிய மண்பானை வெளியே வைக்கப்பட்டிருந்தது. கூடவே ஒரு அலுமினிய டம்ளர். அதில் நாலைந்து டம்ளர் தண்ணீர் மோந்து குடித்துவிட்டு தேனா இனிச்சிகிடக்கு என்று சொன்னவர்கள் உண்டு.
அந்தத் தண்ணீரை மருமகள் பாவனா கேவலமாகப் பேசுகிறாள். அவள் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆறு, குளம். கிணறு எல்லாம் அவளுக்குத் தேவையில்லாத விஷயங்கள். அவள் அறிந்து வைத்திருப்பதெல்லாம் தண்ணீர் வீட்டுக்குழாயில் வரும். அல்லது தண்ணீர் லாரியில் வரும் பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவும் பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி படித்தவள். அங்கே தண்ணீர் பிரச்சனையே கிடையாது.
தன் வாழ்நாளில் ஒருமுறை கூடப் பாவனா கிணற்றில் தண்ணீர் இறைத்தது கிடையாது கிணற்றடியில் குளித்தது கிடையாது. அவளுக்கு எப்படிக் கிணற்றின் அருமை தெரியும் என நினைத்துக் கொள்வாள் விசாலாட்சி
மருமகள் சொன்னது போலக் கடந்த ஐந்து வருஷங்களாக அவர்கள் கிணற்று தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்தவில்லை. வீட்டுக்குழாயில் வரும் தண்ணீரை மினரல் வாட்டர் பிளாண்ட் மூலம் சுத்தகரிப்புச் செய்து தான் குடிக்கிறார்கள். குளிப்பதற்கும் துவைப்பதற்கும் கூடக் குழாய் தண்ணீர் தான்.விசாலாட்சி மட்டும் கிணற்றுத் தண்ணீரில் பிடிவாதமாகக் குளித்து வந்தாள். ஆனால் ஒருமுறை காய்ச்சல் கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர் அவள் கிணற்றுத் தண்ணீரில் குளிக்கக் கூடாது என்றார். அதை மகன் பிடித்துக் கொண்டுவிட்டான். அத்தோடு அவள் கிணற்றடியில் குளிப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் இறைத்துச் செடிகளுக்கு ஊற்றுவாள். மழைக்காலத்தில் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உயர்ந்திருக்கிறது என்று பார்த்துக் கொள்வாள். கோடையில் கிணறு வற்றிய போது கையளவு தண்ணீரில் கிடக்கும் ஆமையை வேடிக்கை பார்த்தபடியே இருப்பாள்.
அந்த ஆமை சில நேரம் தலையை எட்டிப்பார்க்கும். வெயில் படுவதைக் கண்டதும் வெளியே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போலத் தலையை ஒட்டிற்குள் இழுத்துக் கொண்டுவிடும்.
விசாலாட்சியும் அப்படித்தானிருந்தாள். அவளுக்கும் வீடு தான் உலகம். அதுவும் கணவர் இறந்தபிறகு வெளியூர் போவதை பெரும்பாலும் தவிர்த்துவிட்டாள். வீட்டில் இருக்கும் நேரங்களில் கூடத் தன் அறைக்குள்ளாகவே இருப்பாள். பேரன் பேத்திகளுடன் பேசுவது மட்டுமே அவளுக்கான ஒரே ஆறுதல்
அவர்களும் கூட இந்தக் கிணற்றை மூடுவதற்குத் துணையாக இருக்கிறார்களே என்று விசாலாட்சிக்கு வருத்தமாக இருந்தது.
பூஜை முடிந்து பெரியவர் போனபிறகும் அவள் கிணற்றடியிலே இருந்தாள். கிணற்றின் முன்னே எரியும் விளக்கினை பார்த்தபடியே இருந்தாள். அவளே எத்தனையோ முறை இப்படிக் கிணற்றடிக்கு விளக்கு வைத்திருக்கிறாள். திருக்கார்த்திகை அன்று கிணற்றைச் சுற்றிலும் அகல் விளக்கு வைத்திருக்கிறாள். எவ்வளவு அழகான காட்சியது. நினைவில் அழியாமல் பதிந்து போயிருக்கிறது.
இன்றைக்கு எரியும் சுடர்களைக் காணும் போது அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டுவந்தது.
எத்தனையோ பொருட்கள் கைவிட்டுப் போய்விட்டன. நேசித்த மனிதர்கள் பூமியை விட்டுப் போய்விட்டார்கள். இந்த வீடே எத்தனையோ முறை மாற்றிக் கட்டப்பட்டுவிட்டது. அது போல இந்தக் கிணறும் போகட்டும். மனிதர்களால் தான் நேசித்தவற்றைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியாது. இழக்க வேண்டியதை இழந்து தான் ஆக வேண்டும்.
இருட்டிய பிறகு பின் வாசல் கதவைத் தள்ளித் திறந்து வந்த பேரன் நந்து சப்தமாகச் சொன்னான்
“பாட்டி கொசு உள்ளே வருது. மம்மி பின்கதவை மூடச்சொன்னாங்க“
“நீ மூடிட்டு போ“
“நீங்க உள்ளே வரலையா“
“நான் கொஞ்ச நேரம் நேரம் கழிச்சி வர்றேன்“
“அப்போ என்னைக் கூப்பிடு. கதவை திறந்துவிடுறேன்“ என்று பெரிய மனுஷன் போல நந்து சொன்னான்
அவன் பின்கதவை மூடும் சப்தம் கேட்டது.அந்தக் கிணற்றடிக்கு காலை நேரம் வரும் வெயில் அத்தனை அழகானது. அந்த இளவெயிலில் நின்றபடி ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவளுக்குள் ஒரு ஆசையிருந்தது. ஆனால் அதைக் கணவரிடம் கேட்கவேயில்லை. சொந்த கணவராக இருந்தாலும் மனதில் தோன்றும் ஆசைகளை எல்லாம் கேட்டுவிட முடியுமா என்ன. ஒருவேளை அப்படி ஒரு புகைப்படம் எடுக்கபட்டிருந்தால் அதில் இந்தக் கிணறும் பதிவாகியிருக்கும். அந்த வீட்டோடு இப்படி ஒரு கிணறு இருந்தது என்பதற்குப் புகைப்படம் எதுவும் கிடையாது. அதன் சாட்சியாக உள்ள தன்னையும் மகனையும் தவிர வேறு எவர் நினைவிலும் அது இனி இருக்காது.
ஒருவேளை தன் காலத்தின் பின்பு மகனும் கிணற்றை மறந்துவிடுவான். அப்படித் தானே நடக்க முடியும். பெற்றவர்கள் மறைவையே பிள்ளைகள் சில மாதங்களில் மறந்துவிடுகிறார்களே. முந்தைய காலம் போலத் துக்கம் இப்போது நீண்டதில்லை. எல்லா வருத்தங்களும் துயரங்களும் நாட்கணக்கில் மணிக்கணக்கில் முடிந்துவிடுகின்றன.
தன் கணவர் இறந்த அன்று அவரது உடலை ஹாலில் கிடத்தியிருந்த இரவில் விசாலாட்சி இப்படித் தான் உணர்ந்தாள். “இனி பேசிக் கொள்ள எதுவுமில்லை. நடந்த விஷயங்களை நினைத்துக் கொள்ள வேண்டியது தான். ஆழ்ந்த மௌனம் கொண்டவர்களைப் புரிந்து கொள்வது கடினம். “
நீண்டநேரம் அந்தக் கிணற்றடியிலே விசாலாட்சி உட்கார்ந்திருந்தாள். தான் வேறு ஒரு காலத்தில், வேறு ஒரு உலகில் இருப்பது போலவே தோன்றியது.
வீடு திரும்பிய மகன் பின்கட்டு லைட்டைப் போட்டு கதவை திறந்து வெளியே வந்த போது கோபமாகக் கேட்டான்
“பாம்பு கீம்பு கிடக்கப்போகுதும்மா. இங்கே என்ன பண்ணுறே“
“நாளைக்குக் கிணற்றை மூடப்போறாங்கடா“ என்றாள் அம்மா
அவன் பதில் சொல்லவில்லை. குற்றவுணர்வோடு தலைகவிழ்ந்திருந்தான்
பிறகு உறுதியான குரலில் சொன்னான்
“கிணறு தானேம்மா“
அது சரி. கிணறு தானே. அதற்கு எதற்குத் தான் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறோம். கிணறு என்றால் வெறும் கிணறு மட்டும் தானா. அதன் கொடையும் கருணையும் ஒன்றுமில்லைதானா. பெற்ற பிள்ளைகளும் உறவுகளும் ஒன்றுமில்லாமல் போய்விட்ட உலகில் தண்ணீரின் கருணையை யார் நினைக்கப் போகிறார்கள்
“இந்த விளக்கை உள்ளே எடுத்துக்கிட்டு போம்மா“ என்றான் மகன்
“எரியுற வரைக்கும் எரியட்டும் பிரசாத்“ என்றாள்
அவன் அம்மா எழுந்து கொள்வதற்காகக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். வீட்டிற்குள் போகும் போது நாளைக்கு உபவாசமிருக்க வேண்டும் என்று தோன்றியது. கால்களை அசைக்க முடியவில்லை. மிக மெதுவாக நடந்தாள். உடம்பில் அதிகக் கனம் கூடிவிட்டது போலிருந்தது.
படுக்கையில் வந்து படுத்துக் கொண்டபோதும் மனது அடங்கவில்லை. மனம் பெரும் பாரமாக இருந்தது. மனதின் துயரம் தான் உடலின் எடையாக மாறிவிடுகிறதோ.
நாளைக் கிணற்றை மூடுவதைத் தான் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டவளாக அவள் கண்களை மூடிக் கொண்டாள்.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
