காற்றில் பறக்கும் மலர்
புதிய சிறுகதை
கரணின் டீசர்டை அபர்ணா துவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்படிக் காலை ஐந்து மணிக்கு பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து அவனது டீசர்டை ஏன் துவைத்துக் கொண்டிருக்கிறாள் என வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பின்கதவு பாதித் திறந்திருந்தது. வாழைமரத்தில் அசைவில்லை. அதன் விநோதநிழல் சரிந்து விழுந்த, மஞ்சள் வெளிச்சத்தில் இப்படி அபர்ணாவைப் பார்க்க கலக்கமாகவே இருந்தது.
கலைந்த கூந்தலுடன் சேலையை இடுப்பில் தூக்கி சொருகியபடியே அவள் துணியினைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த பிளாஸ்டிக் வாளியில் சோப் நுரையுடன் கரணின் நீல நிற பேண்ட் தொங்கிக் கொண்டிருந்தது.

கரண் வீட்டை விட்டு ஒடிப்போய் ஒன்பது மாதங்களாகிவிட்டது. நாங்கள் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டோம். அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நானும் அபர்ணாவும் அவனைத் தேடி கொடைக்கானல் வரை போயிருந்தோம். அங்கே அவனைப் பார்த்ததாக ஸ்டீபன் சார் சொன்னார்.
எதற்காக இந்தக் குளிர்காலத்தில் கொடைக்கானல் போயிருக்கிறான் என்று புரியவில்லை. ஆனால் நாங்கள் கொடைக்கானல் முழுவதும் தேடியும் அவனைக் கண்டறியமுடியவில்லை. கைவிடப்பட்ட குதிரையொன்றை வழியில் கண்டேன். கரண் ஞாபகம் அதிகமானது
ஒருவேளை அங்கிருந்து வெளியேறிவிட்டானோ என்னவோ, கயிறு அறுந்து போன பட்டம் காற்றில் தன்னிஷ்டம் போலப் பறந்து போலக் கரண் சுற்றிக் கொண்டிருந்தான். பட்டம் சுதந்திரமாகத் தன்னை உணரக் கூடும். ஆனால் கையில் பிடித்திருந்த வெற்றுக்கயிற்றுடன் தனியே அலையும் பட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆளின் வேதனையை எப்படிப் பகிர்ந்து கொள்வது. அந்தத் துயரம் யாருக்கும் வரக்கூடாது.
வழக்கமாகக் கரண் காலையில் மைதானத்திற்குக் கிளம்பிப் போகும் போது இந்தப் பேண்டினையும் டீசர்டினையும் தான் போட்டுக் கொண்டு போவான். அவனுக்கு எந்த விளையாட்டிலும் ஈடுபாடு கிடையாது. ஆனால் அதிகாலையிலே மைதானத்திற்குப் போய்விடுவான். காதில் இயர்போன் மாட்டியபடியே தனியே அவன் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நடைப்பயிற்சிக்குப் போகிறவர்களிடம் காணப்படும் வேகம் அவனிடம் கிடையாது. மரத்திலிருந்து உதிரும் இலை காற்றில் அலைந்தாடுவது போல மெதுவாக நடப்பான். யாரையும் நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை. அதே மைதானத்தில் தான் நானும் நடக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னிடம் அவன் பேசியதில்லை. என்னைக் கண்டுகொண்டது போலத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்
அந்த மைதானத்தில் காலை ஆறுமணிக்கெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாக்கிங் போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருவருடன் கூடக் கரணுக்கு நட்பு உருவாகவில்லை. அவன் நண்பர்களே இல்லாமல் இருந்தான். வீட்டிலும் கூட அவன் யாருடனும் பேசுவதில்லை. அபூர்வமாக அவனைத் தேடி உடன்படித்த மாணவன் திவாகர் வருவான். அவனுடன் கூட ஐந்து நிமிசத்திற்கு மேல் பேசமாட்டான். அவசரமாக அனுப்பி வைத்துவிடுவான்.
எதற்காகப் பதினேழு வயதில் ஒருவன் இவ்வளவு தனிமையாக உணருகிறான். மௌனத்தின் குகைக்குள் தன்னை அடைத்துக் கொண்டிருக்கிறான்.
கோபம் தானா, இல்லை குழப்பமா, அல்லது வெறுப்பா, என்னவென்று எனக்கும் புரியவில்லை.
சில நேரங்களில் அவனை நினைத்து அபர்ணா அழுவாள். நீயே பேசு அபர்ணா என்பேன்.
என்ன பேசுவாள் என்று தெரியாது. ஆனால் அவளால் அவனது மௌனத்தைக் கலைக்க முடியவில்லை. காலில் ஒட்டிக் கொண்ட தார் போல மௌனம் அவனைப் பிடித்திருந்தது.
பதினேழு வயதில் கறுப்பு மேகங்கள் போலப் பல்வேறு குழப்பங்கள் மனதில் உலவத் துவங்குகின்றன. திடீரென அவன் நனைந்த பஞ்சினைப் போலாகிவிடுகிறான். அல்லது பின்னிகரவில் அதிகப் பிரகாசமாக எரியும் தெருவிளக்கினைப் போல ஒளிர ஆரம்பிக்கிறான். சில நேரங்களில் கரண் முகத்தைக் காணும்போது அதில் இந்த உலகம் தனக்கு ஒரு பொருட்டேயில்லை என்பது போலிருக்கும். சில வேளைகளில் இவ்வளவு துயரங்களை நான் ஏன் சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்பது போல வேதனை கவ்வியதாகயிருக்கும்.
கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரை கையாளுவது போலப் பதினேழு வயது பையனை கையாள வேண்டியிருக்கிறது.
உண்மையில் இது எதுவும் அவனது பிரச்சனையில்லை. வயதின் பிரச்சனை. ஆனால் அந்த வயதை நானும் கடந்து வந்திருக்கிறேன். இப்படி நடந்து கொள்ளவேயில்லை என்றும் தோன்றியது.
எனக்குள்ளும் அந்த வயதில் கோபமிருந்தது. ஆனால் அதை நேரடியாகக் காட்டி பழக்கபட்டிருந்தேன். சாப்பிடாமல் சண்டைபோட்டிருக்கிறேன். தாடி வளர்ந்திருக்கிறேன். வீட்டில் தன் ஆசைகளை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயக்கம். பெற்றவர்களின் கோபம் அவ்வளவு வலிமையானதா என்ன. ஏன் விலகிக் கொண்டேயிருக்க வேண்டும்.
கரண் கோவத்தில் ஒரு முறை கூடச் சாப்பிடாமல் இருந்ததேயில்லை. அவன் கோபத்தை வெளியே காட்டுவதேயில்லை. அவனது கோபம் வெறுப்பு யாவும் உறைந்து விநோத சுடர் ஒன்று எரிவது போல மாறியிருக்கிறது.. அந்த வெளிச்சம் அவன் முகத்தில் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன்.
மதியவேளையில் நிம்மதியற்ற அணில் ஒன்று தண்ணீர் குழாயின் மீது வேகவேகமாக ஏறி இறங்கி ஒடுவதைக் கண்டிருக்கிறேன். அந்த அணிலின் மனநிலை போலத் தான் கரணுக்கும் இருந்தது. ஆனால் அணிலின் வேகமில்லை. அவன் தன் செயல்களின் இயல்பை மாற்றிக் கொண்டுவிட்டான். ஒருவன் மெதுவாகச் சாப்பிடுவது என்பது கூடக் கோபத்தின் அடையாளம் தான் என்பதை அவனிடமிருந்தே புரிந்து கொண்டேன்.
கரணுக்கு என்ன பிடிக்கவில்லை. யார் மீது கோபம். எதற்காகத் தன்னை இப்படி வருத்திக் கொள்கிறான். ஒருவேளை படிப்பில் ஆர்வமில்லையா, அல்லது வேறு எதையோ நினைத்து பயப்படுகிறானா.
அவனுடன் சிலவேளைகளில் பேசிப் பார்த்திருக்கிறேன். அப்போது கரண் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பான்.. பலநேரம் வெறுமனே தலையசைத்து இல்லை என்று சொல்லுவான். சில நேரம் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுவான். சொற்களில்லாமல் கோபத்தைக் காட்டுகிற ஒருவனை எப்படிக் கையாளுவது என எனக்குப் புரியவில்லை.
கரண் தலைசீவிக் கொள்ளமாட்டான். தேய்த்து வைத்த உடைகளைப் போட்டுக் கொள்ளமாட்டான். படுக்கையைச் சுத்தம் செய்துவம் கிடையாது. வேண்டுமென்றே சூடான உணவினை ஆறவிட்டுச் சாப்பிடுகிறான். நாள் கிழமை தேதி எதுவும் தெரியாது. பாலைநிலத்திற்குள் வந்துவிட்ட பனிக்கரடியை போல அவன் தன்னை அந்நியமாக உணர்ந்தான்.
கரணுக்காக நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டோம். அவன் கேட்காமலே பணம் கொடுத்தோம். அவனோ தன் மௌனத்தை வீடு முழுவதும் நிரப்பிக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்படி வீட்டை விட்டு ஒடுவான் என்று நாங்கள் நினைக்கவேயில்லை.
எது ஒருவனை வீட்டை விட்டுத் துரத்துகிறது. நாங்கள் அவன் மீது அன்பு காட்டுகிறோம் தானோ, அவனுக்குத் தேவையான வசதிகளை, விருப்பமான பொருட்களை வாங்கித் தந்திருக்கிறோம் தானே. பின் ஏன் அவன் வீட்டை விட்டு ஒடினான். என்ன குறை. என்ன கோபம். யார் மீது வெறுப்பு.
நாமாகப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானா. குற்றவுணர்ச்சி ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது. பிள்ளைகளை நீர்குமிழி போல நினைப்பது தவறானது தானா. அவர்கள் எரிகற்கள் போன்றவர்களா.
காற்றில் கரங்களால் பறித்துச் செல்லப்படும் மலரை காற்று எவ்வளவு தூரம் கொண்டு செல்லும். தரையில் வீழ்ந்த மலரின் கதி தான் என்ன. மலர்கள் ஏன் இப்படிப் பறக்க ஆசைப்படுகின்றன.
கரணால் நான் அதிகம் குழப்பத்திற்கு உள்ளானேன். அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். குழப்பம் என்பது சேற்றுநிலம் போல. அதில் காலை வைத்து நடக்கத் துவங்கிவிட்டால் எளிதாக வெளியேற முடியாது. ஒரு அடி வைப்பது கூட எளிதானதில்லை.
கரண் இப்படி ஒரு விடிகாலையில் தான் வீட்டை விட்டு ஒடிப்போனான். அவன் கிளம்பிப் போன விஷயமே எங்களுக்குத் தெரியாது. ஆறரை மணிக்கு அபர்ணா கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு யாரோ திருடன் இரவில் வந்து பூட்டை உடைத்திருக்கிறான்எனப் பயந்து என்னை அழைக்குனும் வரை அவளுக்கும் கரண் வெளியேறிப் போனது தெரியாது
எதற்காகப் பூட்டை உடைத்துப் போட்டிருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் உடைகள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனது செல்போன் கூட வீட்டில் தானிருந்தது. சைக்கிள் ஒரமாக நின்றிருந்தது. வெறும் கையோடு போயிருக்கிறான். திடீரென முடிவு செய்து கிளம்பிப் போனது போலவே இருந்தது.
ஒருவேளை மைதானத்திற்குப் போயிருப்பான் என நினைத்துக் கொண்டு வேகமாக மைதானத்திற்குச் சென்றேன். ஆனால் அவனைக் காணவில்லை. திடீரென மைதானம் மிகப்பெரியதாகிவிட்டது போல அச்சமாக இருந்தது. கைகள் நடுங்க அவசரமாக வீடு திரும்பினேன். அபர்ணா அழுது கொண்டிருந்தாள். பக்கத்துவீட்டுப் பெண் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
கரணை எங்கே போய்த் தேடுவது என்று தெரியவில்லை. இருவருமாகப் பேருந்து நிலையம் வரை போய்ப் பார்த்துவந்தோம். விடிகாலையில் அப்படி ஒருவன் வந்தானா எனப் பெட்டிக்கடைகளில் விசாரித்தோம். ஒருவர் கண்ணிலும் கரண் படவில்லை. எங்கே போயிருப்பான். அபர்ணா பேருந்து நிலையத்தில் நின்றபடியே சப்தமாக அழுதாள். அவள் அழுகையை ஒருவரும் கண்டுகொள்ளவேயில்லை
அவளை ஆறுதல்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தேன். அன்றிலிருந்து மூன்று நாட்கள் தெரிந்தவர்கள் வீடு. அவனது நண்பர்கள். ஆசிரியர்கள். எனப் பலரையும் விசாரித்துப் பார்த்துவிட்டோம். எங்கும் அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை அவனாக வீடு திரும்பி வந்துவிடக்கூடும் என்பதற்காக இரவில் வீட்டின் முன்தவை பூட்டவேயில்லை. அன்றாடம் அவனுக்காக இரவு உணவை தனியே எடுத்து வைத்தாள் அபர்ணா. அவன் அறையைச் சுத்தம் செய்து வைத்தாள்.
இப்படிச் சில நாட்கள் விடிகாலையில் எழுந்து துவைத்து தேய்த்து வைத்த அவனது உடைகளை மீண்டும் தண்ணீரில் ஊற வைத்து துவைத்து வந்தாள் அவளும் தன் கோபத்தைத் தான் இப்படிக் காட்டுகிறாளா. அல்லது வேதனையைக் கட்டுபடுத்த முடியவில்லையா
ஒருவன் வீட்டை விட்டுப் போய்விடுகிறான் என்பது எளிய விஷயமில்லை. தனது பதினேழு வருஷ கடந்தகாலத்தை அவன் விட்டுச் செல்கிறான். எத்தனை நினைவுகள். எவ்வளவு கனவுகள். பெற்றோர்களைத் தண்டிப்பதில் ஏன் பிள்ளைகள் இத்தனை ஆனந்தம் கொள்கிறார்கள்
ஒருவேளை கரணின் பக்கமிருந்து பார்த்தால் இதுவெல்லாம் இயல்பான விஷயமாக இருக்குமோ என்னவோ. வீட்டை விட்டு ஒடுவதென்பது மரத்தில் இருந்து திடீரெனப் பறவை விடுபட்டு வானத்தில் பறந்து போய்விடுவது போல எளிதான விஷயம் தானா. பறவைகளுக்கு எளிதாகக் கூட இருக்கலாம். மரமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது
கரணைத் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. எனது வேலைக்கு லீவு போட்டுவிட்டுச் சுற்றியலைந்தேன். சில சமயம் நானும் அபர்ணாவும் ஒன்றாகத் தேடினோம். கரண் கிடைக்காமல் வீடு திரும்பும் நாட்களில் அபர்ணா வேறு யாரோ ஒரு பெண்ணைப் போலிருந்தாள். அவள் முகத்திலிருந்த வேதனை மனதை மிகவும் கலக்கமடையச் செய்தது.
கரண் வீட்டை விட்டு ஒடியதற்குத் தானே காரணம் என அழுவாள். சில நேரம் நான் தான் காரணம் என்று சண்டையிடுவாள். பல நேரம் அவனுக்குப் படிக்கப் பிடிக்கவில்லை. வேறு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கலாம் என்று ஆதங்கப்படுவாள்.
ஒருவன் காணாமல் போனவுடன் ஆயிரம் காரணங்கள் கிளைவிடத் துவங்கிவிடுகின்றன. எல்லாமும் நியாயமாகவும் தோன்றுகின்றன.

கரண் வீட்டில் இருந்தாலும் அவன் அறையை விட்டு வெளியே வர மாட்டான். பள்ளிக்கு போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறைக்குள்ளே இருந்தான். அதன் ஜன்னல்களையும் திறக்க மாட்டான். பல நேரம் லைட் போட்டுக் கொள்வது கூடக் கிடையாது. ஒருவனால் எப்படி இருட்டிற்குள் அமர்ந்திருக்க முடிகிறது. அபர்ணா தான் அவன் அறையில் எப்போதும் லைட்டை போட்டு விடுவாள். சில வேளைகளில் இரவில் லைட்டை அணைக்கவே மாட்டான். இரவெல்லாம் எரிந்து கொண்டேயிருக்கும் பகலிலும் அது எரிவதை கண்டிருக்கிறேன். பகலில் எதற்காக இப்படி லைட் எரிகிறது என்று கோபம் கொண்டிருக்கிறேன். அது அவன் தெரியாமல் செய்த விஷயமில்லை. தெரிந்தே அந்த விளக்கினை எரிய விடுகிறான்.
கோபம் இப்படியும் வெளிப்படுமா என்ன,
கரணுக்குப் படிப்பில் விருப்பமில்லை. விளையாட்டில் விருப்பமில்லை. சாப்பாட்டில் விருப்பமில்லை. நல்ல உடைகளில் விருப்பமில்லை. அவனுக்கு எதிலோ விருப்பமிருந்தது. அதை எங்களால் கண்டறிய முடியவில்லை.
அபர்ணா அவனை ச்துரங்கம் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தாள். இரண்டு மாதங்கள் சென்று வந்தான். பிறகு ஒரு நாள் அவன் சதுரங்கம் ஆடப்பிடிக்கவில்லை என்று நிறுத்திக் கொண்டுவிட்டான். சில செடிகள் வளரும் போது திடீரென வளைந்து கொண்டுவிடுகின்றன. அவற்றை எப்படி நேர் செய்தாலும் அவை வளைந்து நிற்கவே விரும்புகின்றன. கரண் அப்படித்தானிருந்தான்.
வீட்டை விட்டு ஒடுகிறவனுக்கு வெளிப்படையான காரணங்கள் தேவையில்லையோ என்னவோ. உண்மையில் அவன் எங்களைத் தண்டிக்க விரும்பியிருக்கிறான். அந்தத் தண்டனை எளிதானதில்லை. ஒன்பது மாதங்களாக அன்றாடம் நாங்கள் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரவில் அவன் வந்துவிடுவானோ என்று கதவை பார்த்தபடியே இருந்தேன். பாதி உறக்கத்தில் கதவு தள்ளப்படும் சப்தம் கேட்பது போலத் தோன்றியது
கரண் இல்லாத அவனது படுக்கையைக் காண்பது மனதை ரணப்படுத்தியது. குளியல் அறையில் கரணின் சோப்பை கையில் எடுத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பைத்தியக்காரத்தனமிது. ஆனால் அந்தச் சோப்பினுள் கரணின் வாசனை கலந்திருக்கிறது.
கரண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான். யாருடன் தங்கியிருப்பான். அவனது கஷ்டங்களை நாங்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தோம். அந்த வருத்தம் சமயத்தில் கோபமாக மாறிவிடும். எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலும் மனச்சோர்வை அதிகமாக்கிவிடும்.
கரண் காணாமல் போனது இது மூன்றாம் முறை.
அவனது ஆறு வயதில் குற்றாலத்திற்குப் போயிருந்தோம். என்னோடு தான் அருவில் குளிப்பதற்காக வந்திருந்தான். பேரோசையுடன் கொட்டும் அருவியைக் கண்டு பயந்து ஒரமாக நின்றிருந்தான். மெலிந்த அவன் கைகளைப் பிடித்து அருவிக்குள் இழுத்தேன். வெற்றுடம்பில் தண்ணீர்பட்டு தெறிக்க விலகி ஒடினான். தண்ணீரை வாறி அவன் மீது அடித்தேன். அதன் குளிர்ச்சி தாங்க முடியாதவன் போல நடுங்கினான்
ஒண்ணும் செய்யாது கரண். வா. குளிக்கலாம் என்று அவனை மறுபடியும் இழுத்தேன்.
அவன் தயங்கி தயங்கி அருவிக்குள் வந்தான். சிறுகிளை போல விரிந்து வழியும் தண்ணீரில் அவனைக் குளிக்கச் செய்தேன். ஒரு நிமிஷம் கூட நிற்கவில்லை. அவசரமாக வெளியேறி ஒடினான்.
சிரித்தபடியே நான் பேரருவியினுள் நுழைந்து தலையைக் கொடுத்தேன். அருவிக்குள்ளும் என் கண்கள் கரணை பார்த்தபடியே இருந்தன. ஆனால் தண்ணீரின் வேகத்தில் கரண் புலப்படவில்லை. கூட்டம் வேறு இடித்துத் தள்ளியது. அருவியை விட்டு வெளியேறி வந்தபோது கரணைக் காணவில்லை.
எங்காவது தனியே உட்கார்ந்து கொண்டிருப்பான் என நினைத்து அங்குமிங்கும் தேடினேன். ஒரு வேளை அபர்ணா வந்து அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டாளா. அல்லது அவனே அவளைத் தேடிப் போய்விட்டானா எனக்குழம்பியபடியே அபர்ணா குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பக்கம் போவதற்கு முயன்றேன். அங்கிருந்த காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை.
அபர்ணா தன்னை மறந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயரை சொல்லி சப்தமிட்டேன். அது அருவிச் சப்தத்தினுள் கேட்கவில்லை. ஒரு பெண்ணிடம் அவளை அழைக்கும்படி சொன்னேன்
அபர்ணா ஈரம் சொட்டும் உடையுடன் வந்து நின்று கரண் எங்கே என்று கேட்டாள்
“இங்கே வரலையா“ என்று கேட்டேன்
“என்ன சொல்றீங்க. உங்க கூடத் தானே வந்தான்“ என்று பதற்றமாகக் கேட்டாள்
“அவனைக் காணோம்“ என்றேன்
அவ்வளவு தான் அபர்ணா சப்தமாக அழ ஆரம்பித்தாள். இதைக் கேட்டு அங்கிருந்த காவலர் ஒருவர் விசாரிக்க ஆரம்பித்தார். நாங்கள் மூவருமாகக் கரண்யை தேட ஆரம்பித்தோம்.
திடீரென அந்த அருவியும் இளவெயிலும் அருவிக்கரையில் மோதி வழியும் மனிதர்களும் அச்சமூட்டினார்கள். கரண் கரண் என்று கத்தியபடியே இங்குமங்கும் ஒடினோம். காவலர் உதவி மையத்தில் ஒலிபெருக்கியில் கூட அறிவித்தார்கள்.
எங்கே போயிருப்பான் கரண். ஒருவேளை ஒடும் தண்ணீரில் விழுந்துவிட்டானா. அல்லது கடைவீதிகளுக்குள் போயிருப்பானா. அபர்ணா கடைவீதியில் தனியே அலைந்தாள். நான் ஒருபக்கம் சுற்றி அலைந்தேன். சிறுவர்களின் முதுகு ஒன்று போலவேயிருப்பதை அன்று தான் கவனித்தேன்.
அபர்ணா கரடிபொம்மைகள் விற்பவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். யாரும் கரணைப் பார்த்திருக்கவில்லை. மனம் விபரீதமான விஷயங்களைக் கற்பனை செய்து கொண்டிருந்தது. மதியம் இரண்டு மணி வரை அருவியைச் சுற்றிய இடங்களில் தேடி அலைந்தோம். பூங்காவிற்குக் கூடப் போய்ப் பார்த்து வந்தேன்.
அபர்ணா மறுபடியும் அருவிக்கரைக்கு ஒடினாள். ஆண்கள் பகுதியினுள் தனியே சுற்றி அலைந்தாள். யாரோ அவளைக் கோவித்துக் கொண்டார்கள். எதையும் அவள் கண்டுகொள்ளவேயில்லை.
வழிந்தோடும் தண்ணீரில் அமர்ந்தபடியே அபர்ணா அழுது கொண்டிருந்தாள் எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவளை ஆறுதல் படுத்த முயன்று தோற்றுப் போனேன்.
மதியம் மூன்றுமணி வரை கோவில் முன்பாகவே நின்று கொண்டிருந்தோம். இதற்குள் அபர்ணா நான்கு தடவைகள் சாமி கும்பிட்டு திரும்பி வந்தாள். வேண்டுதல் உடனே பலித்துவிடுமா என்ன.
நாலரை மணிக்கு ஒரு குடும்பம் குளிப்பதற்காக வந்தார்கள். எண்ணெய் வழியும் பருத்த வயிறுடன் ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் நடந்து வந்தார்கள். அந்தச் சிறுமியோடு கரணும் வந்து கொண்டிருந்தான். அவர்களுடன் எப்படிப் போனான் என்று தெரியவில்லை ஆனால் அபர்ணா தொலைவிலே அவனைக் கண்டுபிடித்துவிட்டாள்.
ஒடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
அந்த ஆள் உங்க பையனா. காலையில் குளிச்சிட்டு கிளம்பும் போது எங்க கூட வந்துட்டான். கேட்டா பதிலே பேசலை. ரூம்க்கு கூட்டிட்டு போயிட்டோம்.
கரணை அபர்ணா அடித்தாள். அவளை அடிக்க வேண்டாம் என்று நான் தடுத்தேன். கரண் அடிவாங்கிக் கொண்டு சலனமேயில்லாமல் நின்றிருந்தான். அந்தக் குடும்பம் அருவியை நோக்கிச் சென்றது. சிறுமிகள் திரும்பி பார்த்தபடியே நடந்தார்கள்.
கரணின் கைகளைப் பிடித்துக் கோவிலுக்குள் இழுத்துக் கொண்டு போனாள் அபர்ணா. திரும்பி வரும்போது இருவர் நெற்றியிலும் திருநீறு இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் நாங்கள் அறையைக் காலி செய்து பேருந்தில் ஏறியிருந்தோம்
எதற்காக யாரோ ஒரு குடும்பத்துடன் கரண் போனான் என்று புரியவில்லை. வீடு வந்து சேர்ந்தவுடன் அபர்ணாவிற்குக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் கரணிடம் எவ்வளவோ விசாரித்துப் பார்த்தும் அவன் ஒரு வார்த்தை பதில் சொல்லவில்லை
அதன் பிறகு நாங்கள் பயணம் போவதற்கே தயங்கினோம். அபர்ணா எப்போதும் அவனைத் தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டாள். டிவியில் குற்றால அருவியைக் காட்டினால் கூட எனக்குக் கரண் காணாமல் போய்த் தேடியது தான் நினைவில் வந்து போனது
இது நடந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அபர்ணா சொன்னாள்
“நீங்க தான் பிள்ளையை அருவிக்குள்ளே தள்ளிவிட்டு இருக்கீங்க. அந்தக் கோபத்தில தான் அவங்க கூடப் போயிருக்கான்“
“இல்லை அபி.. நான் கையைப் பிடிச்சி குளிக்கத் தான் கூட்டிட்டு போனேன்“
“அருவியில குளிக்காட்டி என்ன குறைஞ்சா போயிடும். அதான் அவன் பயப்படுறான்லே“
“நான் கையைப் பிடிச்சிட்டு தான் இருந்தேன்“
“அவங்க அருவிக்குக் கூட்டிகிட்டு வர்றப்போ நல்லவேளையா கோவில் வாசல்ல நின்னுகிட்டு இருந்தோம். இல்லாட்டி நம்ம பிள்ளை அவ்வளவு தான்“
என்று சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது
“அதான் வந்துட்டான்லே“
“அவனை இனிமேல் எதுக்கும் கட்டாயப்படுத்தாதீங்க“
சரியென்று தலையாட்டினேன்
அதன்பிறகு நான் அவன் கைகளைப் பிடிக்கும் போதெல்லாம் குற்றவுணர்வு கொண்டேன். அவன் எங்களுடன் சேர்ந்து சாப்பிடாத போதும் கூட நான் கோவித்துக் கொள்ளவில்லை.
அவனை வேறு பள்ளிக்கு அபர்ணா மாற்றிபோதும் நான் கோவித்துக் கொள்ளவில்லை. ஆனால் கரண் சப்தமில்லாமல் தான் விரும்பியதை செய்யக்கூடியவன் என்பதை நன்றாக உணர ஆரம்பித்திருந்தேன். அதன்பிறகு நாங்கள் மூவரும் வெளியே போவதாக இருந்தால் எங்கள் கவனம் முழுவதும் கரணின் மீதே இருந்தது.
கரண் பள்ளிவிட்டு திரும்பி வர அரைமணி நேரம் தாமதமானாலும் உடனே அபர்ணா கிளம்பி போய்விடுவாள். கரணுக்கு போட்டோ எடுத்துக் கொள்ளப்பிடிக்காது. ஆகவே அவனது பத்து பனிரெண்டு வயது புகைப்படங்கள் ஒன்று கூட என்னிடம் கிடையாது. உறவினர்கள் திருமண வீட்டிற்குப் போனாலும் கரண் சாப்பிடமாட்டான். கூட்டத்துடன் அமர்ந்து சாப்பிட அவனுக்குப் பிடிக்காது. அபர்ணா அவனுக்காக வீட்டில் சமைத்து வைத்திருப்பாள். அல்லது வழியில் ஹோட்டலில் அவனை மட்டும் சாப்பிடச் சொல்லுவாள்
ஹோட்டலி அத்தனை பேர் முன்னாலும் சாப்பிட முடிகிறவனுக்குக் கல்யாண வீட்டில் சாப்பிட மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று ஆத்திரமாக வரும். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டேன்

கரணுக்கு எதில் ஆர்வமிருந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் ஒடாமல் கிடந்த கடிகாரம் ஒன்றை தானே ஒரு நாள் கரண் சரிசெய்து கொடுத்தான். அத்தோடு அந்தக் கடிகாரத்தின் எண்கள் இருளில் ஒளிரும்படி செய்திருந்தான். எங்கே கற்றுக் கொண்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்குக் கடிகாரங்களை உருவாக்குவதில் விருப்பம் இருந்தது. அபர்ணாவின் கைக்கடிகாரத்தைப் புதிய வடிவில் உருமாற்றிக் கொடுத்தான்
“கடிகாரம் செய்வதற்கு ஏதாவது படிப்பு இருந்தால் அவனைப் படிக்க வைக்கலாம் “என்றாள் அபர்ணா
“அப்படி ஒரு படிப்பும் கிடையாது. “ என்றேன்
“என் வாட்சை எவ்வளவு அழகாக மாத்திட்டான்“ என்று பெருமையாகச் சொன்னாள் அபர்ணா
கடிகாரம் செய்வதற்கு என்ன படிப்பு இருக்கிறது. எந்தக் கல்லூரி இருக்கிறது என்று தேட ஆரம்பித்தேன். எவருக்கும் அதைப்பற்றித் தெரியவில்லை
இரண்டாம் முறையாகக் கரண் காணாமல் போனது அவனது பதினைந்தாம் வயதின் பிறந்த நாளின் போது. அன்றைக்குச் சைக்கிளில் வெளியே போனான். கேக் வாங்கிக் கொண்டு வரப்போவதாக அபர்ணா சொன்னாள். பத்து மணிக்கு வெளியே போனவன் மதியம் இரண்டு மணியாகியும் வகரண்ல்லை. நான் பைக்கில் ஒவ்வொரு பேக்கரியாக அலைந்து தேடினேன். கரணைக் காணவில்லை
ஒருவேளை ஏதாவது ஆக்சிடெண்ட் ஆகியிருக்குமா எனப்பயந்து அபர்ணா பொதுமருத்துவமனைக்குப் போய்த் தேடி வருவோம் என்றாள். நாங்கள் பயந்தது போல ஒரு தகவலும் இல்லை. இரவு வரை காத்திருந்தும் கரண் வீடு திரும்பி வரவில்லை
சைக்கிளில் ஒருவன் எங்கே போயிருப்பான். கரணோடு படிக்கும் அஸ்வின் ஹைவே ரோட்டில் அவன் போவதைப் பார்த்ததாகச் சொன்னான்.
ஹைவேயில் எங்கே போனான் என்று தெரியவில்லை. பைக்கில் நானும் மாரிமுத்து சாரும் ஒன்றாகத் தேடி அலைந்தோம். பெட்ரோல் பங்க் பையன் மட்டும் அப்படி ஒருவன் கடந்து போனதைக் கண்டதாகச் சொன்னான். எவ்வளவு தூரம் போவது எனப்புரியாமல் பைக்கில் போய்க் கொண்டேயிருந்தோம். வீடு திரும்பிய இகரண்ல் அபர்ணா தரையில் சுருண்டு படுத்துகிடப்பதைக் கண்டேன். லைட்டைக் கூடப் போடவில்லை. அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தன. அவளை எழுப்பிக் கரணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன்
பிறந்த நாளும் அதுவுமா எங்க போனான் என்று அவள் மறுபடியும் விசும்பத் துவங்கினாள்
இரவில் கரண்யைப் பற்றி நினைத்தபடியே உறக்கமற்று கிடந்தோம். இரண்டு நாட்கள் கரணைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் மூன்றாம் நாள் காலை அவன் சைக்கிள் வீட்டுவாசலில் நின்றிருந்தது. கரண் வீடு திரும்பியிருந்தான் தலையில் ஒரு ஒலைத்தொப்பி.
அபர்ணா அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. கரண் தன் அறைக்குப் போய் உறங்கத் துவங்கிவிட்டான்
ஒரு வாரத்தின் பிறகு அபர்ணா சொன்னாள்
“கன்யாகுமரி வரைக்கும் சைக்கிள்ல போயிருந்தானாம்“
“சொல்லிட்டு போகலாம்லே“
“திடீர்னு தோணுச்சாம்“
எனக்குள் கோபம் பீறிட்டது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அந்த ஒலைத்தொப்பியை காணும் போதெல்லாம் அது என்னைப் பரிகாசம் செய்வது போலவே தோன்றியது
இரண்டாம் முறை காணாமல் போய்த் திரும்பி வந்தபிறகு கரணிடம் ஒரு மாற்றத்தை கண்டேன். அவன் படிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். கணிதபாடத்தில் அவன் முதல்மதிப்பெண் பெற்றிருக்கிறான் என்று அபர்ணா சந்தோஷமாகச் சொன்னாள்
ஒரு நாளில் இரண்டு டியூசன் படிக்கப் போய்வந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தான். ஆனால் இந்த மாற்றம் மூன்று மாதங்களில் வடிந்து போனது. பரிட்சை நாளில் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலே இருந்தான். அபர்ணா எவ்வளவு திட்டியும் அவன் பள்ளிக்கு போகவில்லை. என்ன நடக்கிறது அவனுக்குள் , ஏன் திடீரெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டான்
ஒரு நாள் அபர்ணா சொன்னாள்
“அவனுக்குப் படிக்கப் பிடிக்கலையாம்“
“என்ன செய்யப்போறானாம்“
“சைக்கிள்லயே இந்தியா பூரா போகப்போறானாம்“
“லூசாடி அவன். சைக்கிள்ல ஊர் சுத்துனா வயிறு நிரம்பிடுமா“
“அவன் கிட்ட நீங்க தான் பேசுங்க“
“பேசுனா வாயை திறக்கமாட்டாங்கிறேன்“
“என்கிட்டயும் தான் பேசமாட்டேங்குறான். அதுக்காக அப்படியே விட்றமுடியுமா“
“என்ன செய்யச் சொல்றே“
“நீங்க கண்டிக்கத்தான் வேணும்“
நான் கரணைக் கண்டிக்கவில்லை. ஆனால் அவன் சைக்கிள் பயணம் போகும் எண்ணத்தைத் தானே கைவிட்டுவிட்டான். அதையும் அபர்ணாவிடம் தான் சொல்லியிருக்கிறான்
கரண் மூன்றாம்முறை காணாமல் போவான் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. இந்த முறை அவன் ஒன்பது மாதங்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை. அவன் சைக்கிள் கூட வீட்டில் தானிருக்கிறது. பேரலை ஒன்று அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டது போல உணர்ந்தேன்.
தேடிச் சோர்ந்த நாட்களில் நாங்கள் இருவரும் இரவெல்லாம் விளக்கை எரிய விட்டு உட்கார்ந்தேயிருந்தோம். திடீரெனக் கரணின் ஐந்து வயதில் நடந்த விஷயங்களை அபர்ணா சொல்ல ஆரம்பிம்மாள். நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்
பிரிவு என்பது எவ்வளவு சிறிய சொல். எவ்வளவு பெரிய வலி. அதை ஏன் கரண் புரிந்து கொள்ளவில்லை. ஒடிப்போனவர்கள் நினைவுகளையும் எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியது தானே
சில நாட்கள் அபர்ணாவின் கனவில் கரண் வந்தான். விடிந்து எழுந்தவுடன் அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பாள். ஆனால் ஒருமுறை கூட என் கனவில் கரண் வகரண்ல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக நானும் அபர்ணாவும் பித்தேறியவர்கள் போல நடந்து கொள்ள ஆரம்பித்தோம். கரண் எங்களுடன் இருப்பது போலவே கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தோம். அதை உறுதிப்படுத்துவது போலக் கரண்க்குப் பிடித்த பிளம்கேக்கை பேக்கரியில் இருந்து வாங்கி வர ஆரம்பித்தேன். அபர்ணா அவனது அறையில் இகரண்ல் விளக்கை எரிய விட்டாள். மின்விசிறிறை சுழல விட்டாள்.
கரண் என்ற சொல்லை எங்கே கேட்டாலும் அது எங்கள் கரணை மட்டுமே குறிப்பதாக மாறியது.
வீட்டை துறந்து சென்றவர்கள் நினைவில் பெற்றோர்களின் வாடிய முகங்கள் வந்து போகுமா. தான் இல்லாத வீட்டின் வெறுமை எத்தகையது என அவர்கள் உணர்வார்களா, தன் கோபத்தை உலகம் மீது காட்ட இயலாமல் தான் வீட்டின் மீது காட்டுகிறார்களா.
அபர்ணா காத்திருக்கத் துவங்கிவிட்டாள். பெண்களால் எத்தனை ஆண்டுகளுக்கும் காத்திருக்க முடியும். கண்ணீரை உறையச் செய்துவிட முடியும். ஆனால் என்னால். ஒவ்வொரு நாளின் காத்திருப்பும் தோளில் பெரும்பாரமாக இறங்குகிறது
என் இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது. எதைக் கொண்டு என் கண்ணீரை மறைத்துக் கொள்வது
அபர்ணா துணியைக் கொடியில் காயப்போட்டுவிட்டு வந்தாள். என்னைக் கடந்து போகையில் அவள் எதையோ கேட்க விரும்பியது போல நின்றாள். ஆனால் கேட்கவில்லை.
எனக்கும் அவளிடம் எதையோ சொல்ல வேண்டும் போலிருந்தது. சமையல் அறையில் இருந்த கரணின் சாப்பாடு தட்டை வேண்டுமென்றே எடுத்து கீழே போட்டேன்
அது தரையில் விழுந்து சப்தம் எழுப்பியதை அவள் கேட்காதவள் போல நின்று கொண்டிருந்தாள். எனக்கோ அது எங்கோ தொலைவில் சப்தம் எழுப்பியதைப் போலக் கேட்டது.
தலைகீழாகக் கிடந்த தட்டின் முதுகினைக் காணும் போது கரண் நினைவு மிகவும் அதிகமானது எனக்கு மட்டும் தான்
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

