S. Ramakrishnan's Blog, page 144
January 31, 2021
தேவதைகளின் தோழன்
ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Andersen. Zhizn bez lyubvi என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது

சிறார்களுக்கான படமாக இதை உருவாக்கவில்லை. விசித்திரமான நிகழ்வுகளும் நிஜமான அனுபவங்களும் ஒன்று சேர்ந்த உளவியல் படைப்பாகவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சனின் நினைவுகளே படத்தை முன்னெடுக்கின்றன. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இசை படத்தின் தனித்துவமாகும்.
சிறுவர்களுக்கான தேவதை கதைகளை எழுதி உலகப் புகழ்பெற்றவர் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் .The Steadfast Tin Soldie, The Snow Queen, The Little Mermaid, Thumbelina), The Little Match Girl ,The Ugly Duckling போன்றவை இவரது புகழ்பெற்ற படைப்புகள். ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இக் கதைகளைத் தழுவி திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கபட்ட எழுத்தாளராக அறியப்படுகிறார்.

இந்தப்படத்தின் ஒரு காட்சியில் ஆண்டர்சன் நிகழ்த்தும் நாடகம் ஒன்றைக் காணுவதற்காக டேனிஷ் மன்னர் வருகை தருகிறார். நாடகம் முடிந்தவுடன் தனி அறையில் மன்னருக்கு உணவளிக்கப்படுகிறது. விதவிதமான உணவு வகைகளை மன்னர் ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஆண்டர்சன் அழைத்துவரப்படுகிறார். அவரையும் மன்னர் தன்னோடு சாப்பிடும்படி அழைக்கிறார். தனக்குப் பசியில்லை என்று ஆண்டர்சன் மறுக்கவே மன்னர் ஆச்சரியத்துடன் கேட்கிறார்
“பசித்த போது மட்டும் சாப்பிடுவதற்கு நீ என்ன விலங்கா?“
“என்னை விலங்கோடு ஒப்பிட்டதற்கு நன்றி , பசித்த வேளையில் மட்டும் தான் சாப்பிடுவேன்“ என்று பணிவாகப் பதில் சொல்கிறார் ஆண்டர்சன்
மன்னரின் கேள்வி அரசவாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஒரு வரியில் விளக்கிவிடுகிறது. விரும்பும் நேரமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தான் மன்னரின் வாழ்க்கை. டேனிஷ் மன்னரோ குளியல் அறையில் குளித்தபடியே சாப்பிடுகிறார். உடை அணிந்தபடியே சாப்பிடுகிறார். பேசிக் கொண்டிருக்கும் போதும் எதையோ மென்றபடியே இருக்கிறார். சாப்பிடுவதற்காகவே வாழுவது தான் அவரது உலகம். ஆனால் ஆண்டர்சன் போன்ற ஏழைகளுக்குப் பசித்த வேளையில் கூட உணவு கிடைக்காது.
கிறிஸ்துமஸ் நாளில் சாப்பிட உணவின்றிக் கொட்டும் பனியில் தவிக்கும் போது தவறி விழுந்த ஒரு உருளைக்கிழங்கை எடுத்துச் சாப்பிடுகிறார் ஆண்டர்சன். குளிருக்கு ஒதுங்க இடமின்றி நாடக அரங்கினுள் அடைக்கலமாகிறார். யாரும் இல்லாத மேடையில் மண்டியிட்டுத் தான் ஒரு புகழ்பெற்ற நடிகனாக வேண்டும் என்று மன்றாடுகிறார். உணர்ச்சிப்பூர்வமான காட்சியது
இது போலவே அவரது குரலின் இனிமையைக் கேட்டு ரசித்த மக்கள் அவர் ஆணா பெண்ணா என்று சந்தேகம் கொள்கிறார்கள். ஆடை உருவி அவரது அடையாளத்தைக் காண முயல்கிறார்கள். அவர் தடுத்தபோது உடைகளை உருவி அசிங்கப்படுத்துகிறார்கள். அந்தக் கும்பலிடம் தப்பியோடுகிறார். கண்ணீருடன் புழுதியில் விழுந்து கிடக்கும் ஆண்டர்சனின் தோற்றம் கலங்க வைக்கிறது.
ஒரு நாள் அவரது சகோதரி அவருக்காக நோட்டு ஒன்றை திருடப்போய் அடிபடுகிறாள். அவளை அடித்த கடையின் மீது ஆண்டர்சன் கல் வீசுகிறார். அவள் வீட்டைவிட்டு ஒடிவிடுகிறாள். படத்தில் அவளுடன் ஆண்டர்சனுக்குள்ள அன்பு அலாதியானது.
ஆண்டர்சன் தன் வாழ்நாளில் அனுபவிக்காத கஷ்டமேயில்லை. எவரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மனிதர்கள் கைவிட்ட காரணத்தால் அவர் தேவதைகளைத் தனது உதவிக்கு அழைக்கத் துவங்கினார். தனது கண்ணீரைத் தான் அவர் மகிழ்ச்சியின் வாசனை திரவியமாக உருமாற்றினார். கதைகளை அவர் ஒரு போதும் வெறும் கற்பனையாகக் கருதவில்லை. அவற்றை மாற்று உலகமாகக் கருதினார்.
கால் உடைந்து போன போர்வீரன் பொம்மை ஒன்றை எப்போதும் ஆண்டர்சன் கூடவே வைத்திருந்தார். அந்தப் பொம்மை வீரனுக்குப் போரில் கால் உடைந்துவிட்டதாகக் கதை சொன்னார். உலகம் ஒருவனைக் கைவிடும் போது கதைகள் அவனைக் காப்பாற்ற முனைகின்றன. ஆற்றுப்படுத்துகின்றன. கனவுகளை உருவாக்கி நம்பிக்கை கொள்ள வைக்கின்றன.
ஆண்டர்சன் கதைகளின் பின்னால் இருப்பது அவரது சொந்த வாழ்வின் துயரங்களே. Ugly Duckling கதையில் வரும் வாத்து அவர் தான்.

சிறுவயதில் அவரது தோற்றம் மற்றும் கீச்சிடும் குரலுக்காக மற்றவர்களால் கேலி செய்யப்பட்டார். அந்தக் கிண்டல் அவரைத் தனிமைப்படுத்தியது, தன்னை ஒரு அசிங்கமான வாத்து என நினைத்துக் கொண்டார். புகழ்பெற்ற எழுத்தாளரான பிறகே அவர் அழகான அன்னமாக உருவெடுத்தார். இந்தக் கதையில் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பினைக் காணமுடிகிறது
ஆண்டர்சன் டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் 1805ல் பிறந்தார். தந்தை செருப்புத் தைப்பவர். தாய் சலவை தொழிலாளி. சிறுவயதிலே தந்தையை இழந்தவர். தானே செய்த பொம்மைகளை வைத்து விளையாடத் துவங்கிய ஆண்டர்சன் கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தார். கவிதைகள் எழுதவும் பாடவும் கூடிய திறமைசாலியாக இருந்த போதும் உலகம் அவரை அங்கீகரிக்கவில்லை. நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு கோபன்ஹேகனுக்கு ஓடிப்போனவர். ஆனால் அவரது கனவு எளிதாக நிறைவேறவில்லை. அவரது அசாத்தியமான குரலில் மயங்கிப் பாடுவதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தந்தார்கள். தனது கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் ஆண்டர்சன் புகழ்பெறத் துவங்கினார்
அரண்மனையில் நடைபெறும் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆண்டர்சனிடம் உடனடியாக ஒரு கதை சொல்ல முடியுமா எனக்கேட்கிறாள் மகாராணி. புகழைப் பற்றிய கதையாக இருக்க வேண்டும் என்கிறார் மன்னர். உடனே புதிதாகக் கதை ஒன்றைச் சொல்லத் துவங்கினார். புகழுக்கு ஒரு உருவம் கொடுக்க ஆரம்பிக்கிறார். மிக உயரமான தோற்றம் கொண்ட புகழ் ஒருவரை தன் விரல்களால் தூக்கி மேலே கொண்டு போய்ப் பார்த்துவிட்டு கீழே எறிந்துவிடும் என்றொரு கதையைப் புனைந்து சொல்கிறார். கதையைக் கேட்டு அனைவரும் பாராட்டுத் தெரிவிக்கிறார்கள். எல்லாப் புகழும் தற்காலிகமானதே. புகழின் உச்சிக்குப் போனவர்கள் எவரும் அங்கே தங்கிவிட முடியாது என்பதை அழகான கதையின் மூலம் புரிய வைத்துவிடுவார் ஆண்டர்சன்.

கலையுலகில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசைக்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். ஒரு காட்சியில் தான் பாடுவதைக் கேளுங்கள் என்று கால்களைப் பிடித்துக் கெஞ்சுகிறார். ஒரேயொரு வாய்ப்பு அவருக்குத் தரப்படுகிறது. ஆழ்மனதின் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாகப் பாடுகிறார். அந்தப்பாடல் கேட்பவர்களுக்குக் கண்ணீரை வரவழைக்கிறது. இதன் காரணமாக மன்னரது டேனிஷ் நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக்கொள்கிறார்கள் .
ஆண்டர்சன் கதைகள் தோற்ற அளவில் தேவதை கதைகளைப் போலத் தெரிந்தாலும் தன்னை நிரூபிக்கும் வரை ஒருவர் அடையும் அவமானங்களையும் புறக்கணிப்பையும் பற்றியதாகவே உள்ளது. மீட்சி தான் தேவதைகளால் ஏற்படுகிறது
அப்படியான மீட்சி ஆண்டர்சனுக்கும் காதலின் வழியே கிடைத்தது. அவர் நிகழ்த்திய நாடகம் ஒன்றைக் காணவரும் அழகான பெண்ணிடம் காதல் வசப்படுகிறார். அந்தப் பெண்ணை நாடக அரங்கில் அவர் நடத்தும் விதம் காதலின் அழகான தருணங்கள். காதலின் பொருட்டுத் தன்னைக் கடற்கன்னியாக மாற்றிக் கொண்ட தி லிட்டில் மெர்மிட் கதையிற்குப் பின்னாலும் அவரது சொந்தவாழ்க்கையின் நிழலே காணப்படுகிறது.
அரண்மனையில் நடத்தப்பட்ட நாடகத்தைப் பார்க்க வந்த தணிக்கை அதிகாரி இது போன்ற முட்டாள்தனமான, அரசு எதிர்ப்பு நாடகங்களை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை செய்யும் போது உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று ஆண்டர்சன் கோபம் கொள்கிறார். அரச சபையினரால் ஆண்டர்சன் அவமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆதரவாக மன்னரே தனது அலங்கார ஆடையைக் கழட்டி வீசியதும் அனைவரும் ஆண்டர்சனுக்கு ஆதரவாகத் திரளுகிறார்கள். படத்தின் மிக முக்கியமான காட்சியது. இந்த மன்னரை மனதில் வைத்து தான் ஆண்டர்சன் மன்னரின் புதிய ஆடை என்ற கதையை எழுதியிருக்கிறார்
ஆண்டர்சன் பள்ளியில் படித்த நாட்களில் வறுமையின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அவரது ஆசிரியர் வீட்டிலே தங்கிச் சாப்பிட்டுக் கல்வி பயின்றிருக்கிறார். அந்த ஆசிரியர் அவரை ஒரு வேலைக்காரனைப் போலவே நடத்தியிருக்கிறார். அத்தோடு அவரது திறமைகளைக் கேலி செய்து முட்டாள் எனப் பட்டம் சூட்டியிருக்கிறார். இதனால் ஆண்டர்சன் மனவேதனை அடைந்திருக்கிறார்.

படத்தின் அந்தப்பகுதியில் ஆண்டர்சன் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அப்போது வேண்டுமென்றே மெழுகுவர்த்திகளை அணைக்க முற்படுகிறார் ஆசிரியர். ஆனால் மெழுகுவர்த்தியின் சுடர்கள் அணைய மறுக்கின்றன. தனியே காற்றில் மிதந்து நடனமாடுகின்றன. ஆண்டர்சன் அந்தச் சுடர்களைத் தன்னை நோக்கி அழைக்கிறார். அவை ஆண்டர்சனைச் சுற்றிலும் நடனமாடுகின்றன. மிக அழகான காட்சியது
இன்னொரு காட்சியில் வீடு தீப்பற்றி எரியும் போது அவர் ஒடியோடி தனது பொம்மைகளைக் காப்பாற்றுகிறார். அவரது செல்ல பிராணியான காகம் புகைக்கூண்டில் மாட்டிக் கொள்ளவே கூண்டிற்குள் நுழைந்து அதைக் காப்பாற்றுகிறார். அவர் நேசிக்காத விலங்குகளே இல்லை. ஆனால் நாயைக் கண்டு மட்டும் அவருக்குப் பயம். அதுவும் தெருநாய்கள் என்றால் ஒடத்துவங்கிவிடுவார்.
படத்தின் துவக்காட்சியில் கடவுள் அவர் முன்னே தோன்றி அவரை ஆசிர்வதிக்கிறார். அந்தக் காட்சியில் கடவுளின் தோற்றமும் அவரது உரையாடலும் ஒரு நடிகரைப் போலவே இருக்கிறது. அவர் கடவுளைச் சந்தித்த விஷயத்தை அம்மாவிடம் சொல்கிறார். அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் தன் மகன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது அவளுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.
ஆண்டர்சன் தனது இலக்கிய ஆதர்சமாக எழுத்தாளட்ர சார்லஸ் டிக்கன்ஸை கருதினார். டிக்கன்ஸ் கதைகளைப் பித்துப்பிடித்தவர் போலப் படித்தார். 1847 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு விருந்தில் டிக்கன்ஸை சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு உருவானது. டிக்கன்ஸ் வீட்டில் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் ஆண்டர்சன். அந்த நாட்களை மறக்கமுடியாது என்று டிக்கன்ஸ் எழுதியிருக்கிறார்.

ஆண்டர்சனின் கதைகள் எப்போதும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன , எந்த வயதில் படித்தாலும் அந்தக் கதைகள் தரும் வியப்பு மாறுவதேயில்லை. அவரது பிறந்த நாளினை தான் சர்வதேச சிறுவர் புத்தகத் தினமாக இப்போது கொண்டாடுகிறார்கள்.
••
January 30, 2021
சென்னை புத்தகக் கண்காட்சி
44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்குகிறது.

நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது.
தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் .
அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாகப் பபாசி அறிவித்துள்ளது
மேகம் போல வாழ்க்கை
போலந்தில் வாழ்ந்த ஜிப்ஸி இனக்குழுவைச் சார்ந்த கவிஞர் பபுஸ்ஸாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Papusza திரைப்படத்தைப் பார்த்தேன். 2013ல் வெளியான படமிது.

கறுப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட காவியம் என்றே இதைச் சொல்வேன். ஓவியங்களில் காணப்படுவது போல அகன்ற நிலக்காட்சியினை வெகு நேர்த்தியாகத் திரையில் பதிவு செய்திருக்கிறார்கள்.
முடிவற்ற நிலவெளியில் ஜிப்ஸிகள் குதிரைவண்டிகளில் பயணம் செய்வது, முகாமிட்டுத் தங்குவது. அவர்களின் இரவு வாழ்க்கை, நடனம், வாழ்க்கை நெருக்கடிகள். இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பி அலைந்த போராட்டம் என ரோமா வாழ்க்கையைப் பேரழகுடன் படம்பிடித்திருக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து 11ம் நூற்றாண்டில் அகதிகளாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் பரவிய ஜிப்ஸிகள் கட்டுப்பாடற்றவர்கள் என்ற காரணத்தால் கம்யூனிச நாடுகளின் ஆட்சியாளர்களால் சித்ரவதை செய்யப்பட்டார்கள். பாசிச ராணுவத்தால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது நான்காவது ஆணியை ஜிப்ஸிகள் திருடிச்சென்றுவிட்டார்கள் கிறிஸ்துவை வலியிலிருந்து காப்பாற்ற அது உதவியது என்றொரு கதையுமிருக்கிறது.

ஆடல், பாடல், இசை என உற்சாகமான வாழ்க்கையைக் கொண்டவர் ஜிப்ஸிகள். அவர்களுக்குக் கடந்தகாலத்தைப் பற்றிய ஏக்கம் கிடையாது. வருங்காலம் பற்றிய பயமும் கிடையாது.
சொந்தமாகப் பாடல் புனைந்து பாடும் திறமை கொண்டிருந்த போதும் ஜிப்ஸிகள் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டதில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு பெறும் உரிமை கிடையாது. ஆணுக்கு நிகராகச் சண்டையிடவும் குதிரையேற்றம் செய்யவும் கூடிய ஜிப்ஸிப் பெண்கள் கூட கல்வி கற்றுக் கொள்ளவில்லை.
ஜிப்ஸி இனத்தை ரோமா என்று அழைக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகியவை மிகப்பெரிய அளவில் ரோமா மக்களைக் கொண்டிருந்தன.
பபுஸ்ஸாவின் இயற்பெயர் ப்ரோனிசாவா வாஜ்ஸ், அவள் தன்னுடைய சிறுவயதில் கோழிகளை திருடி, அதைக் கட்டணமாகக் கொடுத்து யூத கடைக்கார பெண் ஒருத்தியிடம் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டாள். புத்தகம் படிக்கத் துவங்கினாள். ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி அவள் படிக்கும் காட்சியில் அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷம் நிகரற்றது.

ப்ரோனிசாவா தனது குடும்பத்தினருடன் நாடோடி முறையில் வளர்ந்தவள். பேரழகி. தைரியமான பெண். பதினைந்து வயதில் அவளை விட இருபது ஆண்டுகள் வயதில் மூத்த டியோனிஸி வாஜ்ஸ் என்ற இசைக்கலைஞனுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.
அந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் கட்டாயமாக மணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஒரு பையன் பிறக்கிறான். ஊர் ஊர்விட்டு மாறி போய்க் கொண்டேயிருக்கிறார்கள். சொந்த வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து மீளுவதற்குப் பாடல்கள் எழுத ஆரம்பித்தார்
தனது தனிமை மற்றும் ஏக்கம் குறித்த வெளிப்பாடாக அந்தக் கவிதைகள் அமைந்தன. உண்மையில் அவருக்குக் கவிதையின் இலக்கணங்கள் எதுவும் தெரியாது. தானே எழுதித் தானே இசையமைத்துப் பாடினார்.
தண்ணீர் தன் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என அவரது கவிதையொன்று துவங்குகிறது. பபுஸ்ஸா கவிதைகளின் கையெழுத்துப் பிரதியை வாசித்த போலந்து கவிஞர் ஜெர்சி ஃபிகோவ்ஸ்கி அவரை அங்கீகரித்து உடனடியாக அந்தக் கவிதைகள் வெளியாவதற்கு உதவிகள் செய்தார்.

ஒரு காட்சியில் ஃபிகோவ்ஸ்கி ஒரு பேனாவை அவளுக்குப் பரிசாக அளிக்கிறார். அதே பேனாவை பின்பு ஒரு நெருக்கடியான சூழலில் அடமானம் வைத்து குழந்தைக்கான மருந்துகளைப் பெறுகிறாள் பபுஸ்ஸா
ஹிட்லரின் நாஜி ராணுவம் யூதர்களைப் போலவே ஜிப்ஸிகளையும் வேட்டையாத் துவங்கியது. அவர்கள் இடம் விட்டு இடம் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மீறியவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது நாஜி ராணுவம்.
அது போலவே ஜிப்ஸிகளின் முகாம்களைத் தாக்கி பெண்களை வன்புணர்வு செய்தார்கள். அவர்கள் உடைமைகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில் கட்டாயத்தின் பெயரால் ஜிப்ஸிகள் வீடுகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது..
அதை டியோனிஸியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவரும் அவரது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கேயும் ஆடல் பாடல் என உற்சாகமாக இருந்தார்கள். வீட்டின் மீதான கோபத்தில் டியோனிஸி அதைக் கோடாரி கொண்டு உடைந்து சிதறடிக்க முயன்றதும் உண்டு.
இந்த நிலையில் ஜெர்சி ஃபிகோவ்ஸ்கி ரோமாக்களின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் ஜிப்ஸிகளுடன் ஒன்றாக வாழ்ந்தவர் என்பதால் நேரடி அனுபவங்களைப் பதிவு செய்திருந்தார். அவரது தோழியாக விளங்கியவர் பபுஸ்ஸா. ஆகவே அவரையும் ஜிப்ஸிகளின் சமூகம் துரோகியாக என்று கருதத் தொடங்கியது,

ஜிப்ஸிகளின் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் பொதுவான சட்டம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதாக அவர் மீது விசாரணை நடைபெற்றது. அதில் குற்றம் உறுதிப்படுத்தப்படவே பபுஸ்ஸா இனக்குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இந்த ஆத்திரத்தில் அவர் தான் எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தீயிட்டு எரித்துவிட்டதோடு எல்லா உறவுகளையும் விட்டு விலகி கணவருடன் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார்
கணவன்-மனைவியான ஜோனா கோஸ்-க்ராஸ் மற்றும் க்ரிஸ்ஸ்டோஃப் க்ராஸ் இயக்கியுள்ள இந்தப் படம் கோழியைத் திருடியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட பபுஸ்ஸா அவரது கவிதை நிகழ்விற்காகச் சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படுவதில் துவங்குகிறது
சிறையின் சாவித்துவாரம் வழியாகக் காட்டப்படும் ஒரு ஷாட் மிகப்பிரமாதமாகவுள்ளது. கேமிராகோணங்கள் படம் முழுவதும் வியப்பளிக்கின்றன. பபுஸ்ஸாவின் கடந்தகால வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது.
1900 களின் முற்பகுதியில் போலந்து நாட்டில் ஜிப்ஸிகள் இலக்கற்று குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். ஜிப்ஸிகள் வெளியாட்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை ,ஜிப்ஸி அல்லாதவர்களைக் காட்ஜோ என்கிறார்கள். ஊர் ஊராகச் சென்று ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் ஜிப்ஸிகள் வாழ்ந்தார்கள்.
பபுஸ்ஸா என்பதற்கு ரோமானிய மொழியில் “பொம்மை” என்று பொருள். மரப்பொந்தினுள் ஒளித்துவைக்கபட்ட லென்ஸ் மற்றும் பணத்தைச் சிறுமியான பபுஸ்ஸா ரகசியமாக எடுக்கும் காட்சி அழகானது. ஜிப்ஸிகளுடன் இணைந்து பயணித்த காட்ஜோவான ஃபிகோவ்ஸ்கி அவள் மீது அன்பு காட்டுகிறான். அவள் படிப்பதற்குப் புத்தகங்கள் தருகிறான். அவளைப் புரிந்து கொண்ட ஒரே ஆண் அவன் மட்டுமே

ஜிப்ஸிகளின் கூட்டத்தைப் பிரிந்து வார்ஸா செல்ல முயலும் ஃபிகோவ்ஸ்கியை ஒரேயொரு முறை தான் பபுஸ்ஸா முத்தமிடுகிறாள். அது தான் அவள் காதலின் அடையாளம். பபுஸ்ஸாவின் கவிதைகள் பத்திரிக்கையில் வெளியாகியிருப்பதைக் கண்ட அவளது மகன் சந்தோஷமாக வீட்டிற்குக் கொண்டு வருகிறான். பபுஸ்ஸா அதைக் கையில் வாங்கியபடியே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொள்கிறாள். அற்புதமான காட்சியது. ஜிப்ஸிகளின் உலகம் Krzysztof Ptak ஆல் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது
பபுஸ்ஸா கவிதைகள் எழுதுவதன் மூலம் பெற்ற பணத்தை அவள் கணவன் பிடுங்கிக் கொள்கிறான். குடித்துவிட்டுப் போதையில் அவளுடன் சண்டையிடுகிறான். அவன் கடைசி வரை பபுஸ்ஸாவைப் புரிந்து கொள்ளவில்லை. அவனது மரணத்தின் போது அமைதியாக அருகில் நின்று அந்த உடலை பபுஸ்ஸா வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சொல்லப்படாத ஆயிரம் கதைகள் அவள் முகத்தில் தோன்றி மறைகின்றன.
முன்பின்னாக மாறிமாறிச் செல்லும் படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமானது. ஜிப்ஸிகளின் வாழ்க்கையை மிகவும் யதார்த்தமான வகையில் படம் சித்தரித்துள்ளது. குறிப்பாக ரோமா சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு ஜிப்ஸி பெண்கள் மற்றும் குழந்தைகள் யாசிப்பதற்காக நகரங்களுக்குச் செல்வது, ஆருடம் சொல்வது. திருட்டில் ஈடுபடுவது மற்றும் குதிரை வணிகம் செய்வது போன்றவை படத்தில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வானத்தின் கீழுள்ள மொத்த உலகமும் தனக்கானது தான் என நினைத்த ஜிப்ஸிகள் சிறிய இருட்டறையில் அடைக்கப்பட்டு குற்றவாளிகளைப் போல வேட்டையாடப்பட்ட துயர வரலாற்றைப் படம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. சுதந்திர உணர்வின் வெளிப்பாடாக அவர்களின் இசை இருந்தது. இன்றும் அந்த இசையின் தொடர்ச்சியினைக் காணமுடிகிறது.

தங்களின் சந்தோஷத்தைக் கண்டு ஹிட்லருக்குப் பொறாமை, அதனால் தான் தங்களை வேட்டையாடுகிறான் என்று ஒரு காட்சியில் ஒரு ஜிப்ஸி சொல்கிறார். அது உண்மையே.
பொருள் தேடுவதை மட்டுமே வாழ்க்கை என நினைக்காமல் சுதந்திரமாக, சந்தோஷமாக இசையும் பாடலும் இன்பமுமாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையை அதிகாரத்தால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கலை தரும் சுதந்திர உணர்வை வளரவிடாமல் தடுப்பது அதிகாரத்தின் இயல்பு. அது தான் ஜிப்ஸிகளின் விஷயத்திலும் நடந்தது.

பபுஸ்ஸா கவிதைகள் தற்போது தனி நூலாக வாசிக்கக் கிடைக்கின்றன. அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு இனத்தின் வரலாற்றுச் சாட்சியமாக மாற்றியதே இயக்குநரின் வெற்றி என்பேன்
••
January 29, 2021
அஞ்சலி
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளியான டொமினிக் ஜீவா மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மல்லிகை இதழின் வழியே சிறந்த முற்போக்கு படைப்பாளிகளை உருவாக்கியவர். 1966 துவக்கபட்ட மல்லிகை 2012 வரை 401 இதழ்கள் வெளியாகியிருக்கிறது. இது தனித்துவமான சாதனையாகும்.

ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் டொமினிக் ஜீவா அவர்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.
January 28, 2021
ஆன்டன் செகாவ் பிறந்தநாள்.
இன்று ஆன்டன் செகாவின் பிறந்த நாள். 161 வது பிறந்த நாளிது. இந்த நாளில் அவரை மானசீகமாக வணங்குகிறேன்.
ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியான அவரது வாழ்க்கை வரலாற்றை செகாவ் வாழ்கிறார் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறேன். செகாவ் பற்றி விரிவான உரையும் நிகழ்த்தியிருக்கிறேன்.

செகாவின் பிறந்த நாளில் அவரது சிறுகதை தொகுப்பிலிருந்து ROTHSCHILD’S FIDDLE, THE BLACK MONK என்ற இரண்டு கதைகளை வாசித்தேன். இப்போது தான் எழுதி வெளியானது போல புத்துணர்வு. அலங்காரமில்லாத எளிமை. நேரடியாகக் கதைகளை சொல்லும் முறை. அழுத்தமான கதாபாத்திரங்கள். கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாடு.சிறுகதைகளின் பேரரசன் என்றே அவரைச் சொல்ல வேண்டும்.
நானூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைச் செகாவ் எழுதியிருக்கிறார். அதில் இருபது முப்பது கதைகள் தமிழில் வந்திருக்கின்றன. புதிதாக நிறைய மொழிபெயர்ப்புகளும் நடந்து வருகின்றன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் செகாவ் அளவிற்கு மாறுபட்ட சிறுகதையை எழுதியவர்கள் குறைவே,
செகாவின் நாடகங்களை வாசித்தால் அதில் வரும் கதாபாத்திரங்கள் நாவலின் மனிதர்களைப் போலவே தோன்றுகிறார்கள். அவற்றைப் பெரிய நாவலாக எழுதியிருந்தால் இன்னும் கதை விஸ்வரூபம் கொண்டிருக்கக் கூடும்.

காதலைக் கொண்டாடியவர் செகாவ். சொந்த வாழ்விலும், படைப்பிலும் காதலே அவரது ஆதாரப்புள்ளி. காசநோய் முற்றிய நிலையில் சிகிட்சைக்காகப் பாடன்பாடனுக்குச் செல்ல திட்டமிட்ட செகாவ், மாஸ்கோ நகரை விட்டு நீங்கும் முன்பாகக் கடைசியாக ஒரு முறை மாஸ்கோ மிருககாட்சி சாலைக்குச் சென்றிருக்கிறார். அது அவருக்கு விருப்பமான இடம். இரவு முழுவதும் மாஸ்கோ வீதியில் சுற்றி அலைந்திருக்கிறார். நினைவுகளின் பாதையில் சென்ற பயணம் தானோ என்னவோ.
செகாவை நினைவு கொள்ளும் போதெல்லாம் அவரது நாய்கார சீமாட்டியும் நினைவில் வந்துவிடுகிறாள். எவ்வளவு அழகான சிறுகதை. The Lady with the Dog என்ற தலைப்பை விடவும் சீமாட்டி என்ற தமிழ் தலைப்பு தான் நெருக்கமாக இருக்கிறது.
டார்லிங் என்ற செகாவின் கதையை எப்படி மறக்கமுடியும். வேட்டைக்காரன் கதைகளில் அவனால் நேசிக்கப்படாத அவனது மனைவி தொலைவில் நின்று அவனை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி மனதிலே நிற்கிறது. ஆறாவது வார்ட்டின் டாக்டர் நம் மனசாட்சியின் உருவம் போலவே இருக்கிறார்.
“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஆறடி என்று சொல்வார்கள். இதை மறுத்து செகாவ் சொல்கிறார்
“சவத்திற்குத் தான் ஆறடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“
உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவர்களின் தேவையும் ஒன்றில்லை, செகாவ்வின் இந்த வாசகம் வாழ்வின் மீதான அவரது பற்றுதலின் வெளிப்பாடு.
செகாவின் மீதான அன்பில் My Dear chekhov என்ற குறும்படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். அதை என் மகன் ஹரிபிரசாத் மிக அழகான குறும்படமாக இயக்கியிருக்கிறான்.
இலக்கிய விழாக்கள் தோறும் திரையிட்டு கொண்டாட வேண்டிய குறும்படமிது. சென்ற ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில் இந்தக் குறும்படத்தைத் திரையிட்டார்கள். இணையத்தில் இந்த குறும்படம் காணக் கிடைக்கிறது.
செகாவ் பற்றிய எனது உரையை கேட்க விரும்புகிறவர்களுக்கான இணைப்பு
செகாவ் வாழ்கிறார் நூலை வாங்குவதற்கு

செகாவ் வாழ்கிறார்
விலை ரூ 150.00
நன்றி
எனது மகன் ஹரியின் White Knights Creative Agency நிறுவனத்தைத் துவக்கி வைத்து வாழ்த்திய திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன், திரு. சீனு ராமசாமி, திரு. ஆனந்த சங்கர் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றி
இந்த நிகழ்வை வாழ்த்திய நண்பர்கள். வாசகர்கள். அன்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்




தொடர்புக்கு
January 27, 2021
குரலின் ஈரம்.
ஷெரீப் எஸ். எல்முசா (Sharif Elmusa ) அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனக் கவிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கவிதைகள் அரபு அமெரிக்கன் கவிதைகளுக்கான இதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது மகளின் பெயர் கர்மா. I am Palestinian by birth, American by citizenship, Egyptian at heart. எனத் தன்னைப் பற்றிச் சொல்கிறார் எல்முசா.
Flawed Landscape என்ற அவரது கவிதைத் தொகுப்பினை வாசித்தேன்.. மூன்று பகுதிகளாக உள்ள தொகுப்பிது.

இதில் ஒரு கவிதை குட்டி இளவரசனைப் பற்றியது. ஆகாய ஆகாயத்திலிருந்து குண்டு போடும் விமானப்படை குண்டு வீச்சாளரிடம் சில கேள்விகள் என்பதாக இந்தக் கவிதை வெளிப்படுகிறது.
பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மீது ஏன் குண்டு போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு விமானப்படை குண்டு வீச்சாளர் தான் குழந்தைகளைக் குறிவைத்து குண்டு போடவில்லை என்கிறார்.
தேன்கூட்டில் வசிக்கும் தேனீக்களைப் போல நகரெங்கும் குழந்தைகள் வசிக்கிறார்கள். அவர் மீது தானே உங்கள் குண்டு விழுகிறது எனப் பதில் கேள்வி கேட்கப்படுகிறது.
நான் குறிவைப்பது “கட்டிடத்தில் மறைந்திருந்த அரக்கர்களை” கொல்ல என்கிறான் விமானப்படை குண்டுவீச்சாளர்.
குண்டு வீச்சாளரின் தர்க்கத்தை ஏற்கமுடியாத குட்டி இளவரசன், பெரியவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை என்று சொல்வதாகக் கவிதை நிறைவு பெறுகிறது.
இன்னொரு கவிதையில் அகதிகள் முகாமிற்குப் பெயரில்லை என்ற வரி இடம்பெறுகிறது. அதைக் கடந்து செல்ல முடியாமல் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிருந்தேன். போரும் போரின் விளைவாக அழிந்த ஊர்களின் நினைவுகளுமே அவரது கவிதைகளில் பிரதானமாக வெளிப்படுகின்றன.
காஸா என்பது திறந்த வெளிச்சிறைச்சாலை. அது ஒரு மாபெரும் கூண்டு என நீளும் கவிதையில் சீனக்கவிஞன் தொலைதூர நிலவையும் குரங்கினையும் பார்த்துக் கொண்டிருப்பது போலக் காஸாவின் அகதிகள் முகாமை பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதுகிறார்.
என் தந்தையின் கண்ணுக்குள்
ஒரு நீர்த்தேக்கம் இருந்தது
அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை
ஆனால் நான் அவரது குரலின் வழியே
கண்ணீர் சொட்டுவதைக் கேட்டேன்
சரியாக மூடப்படாத குழாயிலிருந்து சொட்டும்
நீர்த்துளியினை போல
முப்பது ஆண்டுகளாக
நான் அவற்றைக் கேட்டேன்.
என ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். குரலின் வழியே கண்ணீர் சொட்டுகிறது என்ற வரி அற்புதமானது. மிக அழகாக எழுதியிருக்கிறார்.
சொந்த ஊர் என்பது நம் பெயர்களைச் சரியாக உச்சரிக்கக் கூடிய இடம் என்றொரு மேற்கோளை ஒரு கவிதையின் முகப்பில் எழுதியிருக்கிறார். எவ்வளவு உண்மை.
” நீங்கள் தனிமையில் இருக்கும்போது
சூரியனுடன் நண்பராகிறீர்கள் ” என இத்தாலியிருந்த நீட்சே ஒரு நண்பருக்கு எழுதினார் என ஒரு கவிதை துவங்குகிறது

பொருட்கள் எப்படி இடம் மாறிப் போகின்றன என்பதைக் குறித்த கவிதையில், சிறிய மூடிகள், கரண்டிகள் ஏன் தன்னை மறைத்துக் கொள்வது போல இடம் மாறிப் போகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறார். முதுகில்லாத சின்னஞ்சிறு பொருட்கள் ஏன் ஒளிந்து கொள்கின்றன என்ற கேள்வி முக்கியமானது. இது தனது அகதி வாழ்வின் துயரைப் போன்றதே என்றும் உணருகிறார்.
குறைபாடுள்ள நிலப்பரப்பு என்பது பாலஸ்தீனத்தின் அடையாளம். ஒரு பக்கம் பாலஸ்தீனத்தின் யுத்தம், அழிவு என்ற சூழல் நிலவுகிறது. இன்னொரு பக்கம் அடுத்த வேளை உணவிற்கு என்ன சாப்பிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க சுகவாசிகளின் வாழ்க்கை. இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில் எல்முசாவின் கவிதை ஒலிக்கிறது.

ஆலிவ் மற்றும் பேரீச்சம்பழம் கடந்தகால வாழ்வின் அடையாளமாக மாறுகின்றன. தன் தந்தையின் நினைவில் இருந்த பத்து ஆலீவ் மரங்களைப் பற்றி ஒரு கவிதையில் எழுதியிருக்கிறார்.
நாடு கடந்தவர்கள் காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டு தளங்களிலும் பாதிக்கப்படுகிறார்கள். ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்றில் கியோத்தோ நகரில் இருக்கும் ஒருவன் கியோத்தோவை நினைத்து ஏங்குகிறான். அவன் ஏங்குவது பால்யத்தில் அவன் கண்ட ஊரை. உடல்ரீதியாக அவன் கியோத்தோவில் இருக்கிறான். ஆனால் மனம் வேறு காலத்தில் வாழுகிறது. இது போன்றது தான் அகதியின் வாழ்க்கை. அவன் புகலிடத்தில் பிழைப்பிற்காக வாழுகிறான். அவன் மனதோ சொந்த தேசத்தை, சொந்த ஊரையே சுற்றிக் கொண்டிருக்கிறது.
கடந்தகாலத்தை நினைவுகொள்ளுவது ஒரு சுகம். தற்கால நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க இந்த நினைவுகொள்ளுதல் தேவைப்படுகிறது. அதை தன் கவிதைகளில் காணமுடிகிறது என்றும் எல்முசா, பாலைவனத்தைப் பற்றி ஒருவன் அறிந்து கொள்வதற்குப் பாலைநிலம் முழுக்க அலைந்து திரிய வேண்டியதில்லை. அதைப்பற்றி வாசித்தாலும் போதுமானது. சொற்களின் வழியே சூரியன் ஒளிர்வதைக் காணமுடியும். மணலின் நாட்டியத்தை அறிய முடியும். கவிதையும் அது போன்றது தான் என்கிறார்.
போரில் அழிந்து போன கிராமங்களின் சரித்திரத்தைத் தொகுத்து எழுதும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கும் எல்முசா நினைவின் பாடல்களையே ஒலித்துக் கொண்டிருக்கிறார்
••
January 26, 2021
சொல்லின் வலிமை.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது I’m Not Here to Give a Speech.
தலைப்பு அவரது சிறுகதையான I Only Came to Use the Phoneயை நினைவுபடுத்துகிறது.

அவர் ஸ்பானிஷில் நிகழ்த்திய உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பான்மையான உரைகள் சிறியவை.. இதன் எழுத்துவடிவத்தை மார்க்வெஸ் உருவாக்கியிருக்கிறார். எழுதி வைத்த உரைகளைச் சில தருணங்களில் அப்படியே வாசித்திருக்கிறார்.
மேடைப்பேச்சு குறித்த தனது பயத்தையும் தயக்கத்தையும் ஒரு உரையில் பகிர்ந்து கொள்கிறார். உரையாற்றுவதற்காக விசேச உடைகளை அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தனித்துவமான தலைப்பைத் தேர்வு செய்வதுடன், மேற்கோள்களை மனப்பாடம் செய்து கொள்ளத் தேவைப்படுகிறது. மேடையில் நின்று பேசுவது மிகவும் அசௌகரியமானது என்கிறார்.
இதில் 21 உரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் சில விருதுகளுக்கான ஏற்புரைகள். அதில் ஒன்று நோபல் பரிசு பெற்ற போது ஆற்றிய உரை. அது தான் அவரது உரைகளில் அளவில் பெரியது. அந்த உரையில் தனது ஆசான் வில்லியம் பாக்னர் தனது நோபல் பரிசு உரையில் பேசியதை நினைவு கொள்கிறார்.

மார்க்வெஸின் எழுத்தைப் போல முற்றுப்புள்ளியில்லாத நீண்ட ஒற்றை வாக்கியம் போலவே பேசியிருக்கிறார். முதல் உரை பல்கலைக்கழகத்தில் ஆற்றியது. நட்பினைப் பற்றியது. பெரிதாக ஒன்றுமேயில்லை.
அடுத்த உரை தான் எவ்வாறு எழுதத் துவங்கினேன் என்பதைப் பற்றியது. அதில் தன்னுடைய கல்லூரி நாட்களை நினைவுகூறுகிறார். எல் ஸ்பெக்டடார் இதழின் இலக்கிய ஆசிரியர் எட்வர்தோ சலேமியா போர்தோ இன்றுள்ள இளைஞர்களுக்கு எழுத்தில் ஆர்வமே கிடையாது. இளம் படைப்பாளிகளைக் காணுவது அரிதாகிவிட்டது. ஆகவே தான் இதழில் தொடர்ந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களை வெளியிடுகிறோம் என்று பகிரங்க சவால் விடுத்திருந்தார். அவரது வாயை மூடும்படியாகவே தான் முதற்கதையை எழுதியதாக மார்க்வெஸ் சொல்கிறார்.
அடுத்த இதழிலே அவரது சிறுகதை வெளியானதுடன் தான் நினைத்தது தவறு என்று எட்வர்தோ சலேமியா ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். அப்படித்தான் மார்க்வெஸின் இலக்கியப் பிரவேசம் நடந்தேறியிருக்கிறது.
தன்னுடைய எழுத்து ஒருவேளை அங்கீகரிக்கப்படாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் எனக் கேள்வி எழுப்பும் மார்க்வெஸ், எழுத்து பிரசுரமாவதைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படத் தேவையில்லை. தொடர்ந்து அவன் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். தீவிரமான எழுத்து தானே அதற்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார்.
எழுதுவதற்கான விஷயம் கிடைத்தவுடன் அவசரமாக அதை எழுதிவிடுவது கிடையாது. கதைக்கருவை மனதிற்குள் வளர்த்துக் கொண்டேயிருந்து சரியான நேரத்தில் எழுதுவதே தனது வழக்கம் எனும் மார்க்வெஸ். தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை எழுதுவதற்கான விதை மனதில் விழுந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகே அதை நாவலாக எழுதினேன் என்கிறார்.

ஒரு கதையை உட்கார்ந்து எழுதுவது சிரமமான வேலை. அலுப்பாகிவிடும். ஆனால் கதையை மனதிற்குள் வளர்த்துக் கொண்டேயிருப்பது சுவாரஸ்யமானது. கதையைப் பின்னி வளர்ப்பது சுகமானது. எழுத்தாளனாக அதையே அதிகம் நேசிக்கிறேன் என்றும் குறிப்பிடுகிறார்
புதிய லத்தீன் அமெரிக்கன் சினிமாவின் அடித்தளத்தை உருவாக்குவது பற்றிய காஸ்ட்ரோவின் விருப்பத்தை ஏற்றுக் கியூபாவில் நடைபெற்ற ஒரு விழாவில் மார்க்வெஸ் லத்தீன் அமெரிக்கச் சினிமாவிற்கான நிறுவனம் உருவாவதை பெருமையாக குறிப்பிடுகிறார்
ஐந்து அவரது கதைகளை ஐந்து லத்தீன் அமெரிக்க இயக்குநர்கள் தொலைக்காட்சிக்கான திரைப்படமாக உருவாக்க இருப்பதைப் பற்றியும் விவரித்திருக்கிறார்
செயின்ட்-ஜான் பெர்ஸ் தனது நோபல் பரிசு ஏற்புரையில் குறிப்பிடுவதை இரண்டு உரைகளில் மார்க்வெஸ் நினைவுபடுத்துகிறார். இரண்டும் ஒரு சமூகத்தில் கவிதை மற்றும் கவிஞனின் இடம்பற்றியது.

“poetry is first and foremost a mode of life - and of integral life. The poet existed in the caveman, he will exist in the man of the atomic ages because he is an irreducible part of man. From the poetic requirement, the spiritual requirement, religions themselves were born, and through poetic grace, the spark of the divine lives forever in the human flint. When mythologies collapse, it is in poetry that the divine finds refuge; maybe even his relay. And even in the social and immediate human order, when the Bread Carriers of the ancient procession give way to the Torchbearers, it is to the poetic imagination that the lofty passion of the peoples still lights up. quest for clarity.“
தனது நண்பரான கொலம்பிய கவிஞர் அல்வாரோ முட்டிஸ் ஜராமில்லோ பற்றிய அவரது சிறிய உரை அழகானது. கேலியும் கிண்டலும் கொண்டது. அதில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் முன்பு சந்திக்க வேண்டியது அவசியம் தானா எனக் கேட்டுக் கொள்வோம். மிக அவசியமானது என்றால் மட்டுமே சந்திப்போம். அந்த இடைவெளியும் புரிதலும் முக்கியமானது. ஒரேயொரு முறை இந்தக் கட்டுப்பாட்டினை நான் மீறியிருக்கிறேன் என்றும் வேடிக்கையாகச் சொல்கிறார் மார்க்வெஸ்
இன்னொரு உரையில் எழுத்தாளர்கள் ஹூலியோ கோர்த்தசார், கார்லோஸ் ஃபியூண்டஸ் உடன் தான் பாரீஸிலிருந்து மேற்கொண்ட ரயில் பயணத்தை நினைவுகூறும் மார்க்வெஸ், மூவரும் விமானத்தில் பயணம் செய்யப் பயந்தவர்கள் என்கிறார். அன்றிரவு கோர்த்தசார் ப்யானோ எப்படி ஜாஸ் இசையில் இடம்பெற்றது என்பது பற்றிய ஆற்றிய உணர்ச்சிபூர்வ உரையை ஆச்சரியத்துடன் குறிப்பிடுவதுடன், கோர்த்தசாரின் ஆயுதம் அவரது குரல். தன்னுடைய குரலில் அவர் தனது கதையை வாசிக்கக் கேட்டிருக்கிறேன் என்கிறார்
தன் பனிரெண்டாவது வயதில் ஒரு நாள் சாலையில் நடந்து செல்கையில் எதிர்பாராமல் ஒரு சைக்கிள் மோத வந்தது. திடீரென ஒரு பாதிரியார் கவனிக்கவும் என உரத்துச் சப்தம் எழுப்பினார். அந்தக் குரல் கேட்டு நான் விலகிக் கொண்டேன். சைக்கிள்காரன் தரையில் விழுந்து உருண்டான். அன்று அந்தப் பாதிரியார் ‘இப்போது நீ வார்த்தையின் சக்தியை உணருகிறாயா என்று என்னை நோக்கிக் கேட்டார் அன்று தான் வார்த்தைகளின் வலிமையை நான் கண்டுபிடித்தேன் என்று ஒரு உரையை மார்க்வெஸ் துவக்குகிறார். ஒரு சிறுகதையைப் போல உரையை ஆரம்பித்திருப்பது தனித்துவமானது
தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் பத்து லட்சம் பிரதிகள் விற்பனையானதை ஒட்டிய நிகழ்வில் ஆற்றிய உரையில், எங்கோ ஒரு அறையில் தனித்திருந்து எழுதிய ஒரு நாவலைப் பத்து லட்சம் பேர் தேடிப் படித்திருக்கிறார்கள் என்றால் அது வியப்பானது. இதைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார்.
தனது உரையில் தட்டச்சு செய்த பெண்ணைப் பற்றி மார்க்வெஸ் குறிப்பிடுவது முக்கியமானது.
எஸ்பெரான்சா அராய்சா என்ற பெண்ணை மறக்கமுடியாது, அவள் தான் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கையெழுத்துப்பிரதியைத் தட்டச்சு செய்தவர். கார்லோஸ் ஃபியூண்டஸ் நாவலை அவர் தான் தட்டச்சுச் செய்தார். யுவான் ருல்போ நாவலை தட்டச்சுச் செய்திருக்கிறார். அவர் தான் எனது நாவலின் கையெழுத்துப் பிரதியினையும் தட்டச்சு செய்து கொடுத்தார்
தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் முதல் வடிவம் கறுப்பு மை பேனாவில் எழுதப்பட்டது. இரண்டாவது வடிவத்தைச் சிவப்பு மையில் எழுதினேன். மூன்றாவது முறை அது தட்டச்சுச் செய்யப்பட்டது. உடனிருந்து நானே வாசித்துத் திருத்தங்களைச் செய்தேன். ஒரு நாள் எஸ்பெரான்சா தட்டச்சு செய்த நாவலின் இறுதி வடிவத்துடன் பயணம் செய்த போது அவற்றைத் தவறவிட்டுவிட்டார். நாவலின் பக்கங்கள் காற்றில் பறந்தன. வீதியில் பறந்த அவற்றை ஒடியோடி சேகரித்திருக்கிறார். பல பக்கங்கள் ஈரமாகிவிட்டன. அவற்றை உலரச் செய்வதற்காகத் தானே ஒவ்வொரு பக்கமாக அயர்ன் பாக்ஸை வைத்துத் தேய்த்திருக்கிறார். அதை அன்று அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் நீண்ட காலத்தின் பிற்கு நடந்ததை ஒப்புக் கொண்டார்
கையில் காசில்லாத நிலையில் தபாலில் இந்த நாவலை அனுப்பி வைக்கவே போதுமான பணமின்றிக் கஷ்டப்பட்டேன். என் மனைவி தான் வீட்டுச் செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவினார். தபாலில் நாவல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு நடந்தது வரலாறு என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கொள்கிறார் மார்க்வெஸ்
மார்க்வெஸின் புனைவில் காணப்படும் கவித்துவம் மற்றும் மாயங்கள் எதையும் இந்த உரைகளில் காணமுடியவில்லை. பத்திரிக்கையாளரான மார்க்வெஸின் நிலைப்பாடே பெரிதும் வெளிப்படுகிறது. மார்க்வெஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் பட்டியலைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அவர் எப்போதும் புகழின் உச்சத்திலே இருந்திருக்கிறார். புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் பேச்சு எவ்வளவு எளிமையாக இருந்தாலும் உடனே அங்கீகாரம் பெற்றுவிடும். அதிக வெளிச்சத்தில் சொற்கள் அர்த்தம் இழந்துவிடுகின்றன.
புனைவில் வெளிப்பட்ட மார்க்வெஸின் சாயலை மட்டுமே அவரது உரைகளில் காணமுடிகிறது. இந்த உரைகளை வாசித்து முடித்தவுடன் இணையத்திலுள்ள அவரது காணொளிகளைப் பார்த்தேன். மெல்லிய குரலில் தான் பேசுகிறார். ஸ்பானிய மொழி புரியாத போதும் அவரது கண்களை, முகபாவனைகளை, பேசும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தன்னுடைய புகழை அவர் நன்கு அறிந்து கொண்டவராகத் தோன்றுகிறார். அதை ரகசியமாக ரசித்தபடியே தான் பேசுகிறார்
••
திறப்பு விழா
ஜனவரி 28 காலை ஒன்பதரை மணிக்கு ஹரியின் White Knights நிறுவனத்தை திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன். திரு. சீனுராமசாமி, திரு. ஆனந்த் சங்கர் ஆகியோர் இணையவழியாக துவக்கி வைத்து வாழ்த்துகிறார்கள்.




தொடர்பு கொள்ள :
Instagramhttps://instagram.com/whiteknights_creativeagency?igshid=19mo8wijzaqsn
Twitterhttps://twitter.com/white_knightsof?s=20
Contact number:+91-8939329251
January 25, 2021
கடவுளின் எட்டாம் நாள்
சமகால ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய ஒரு குறுங்கதையை வாசித்தேன். இவர் ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு சிறந்த உதாரணம் போலிருக்கிறது இக் கதை.

***
உலகைச் சிருஷ்டித்து சலித்துப் போன கடவுள் எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதைப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி எழுந்த போது அங்கிருந்த டிவியைக் காணவில்லை.
எங்கே போனது என்று தெரியாமல் குழம்பி போனார். இதனால் என்ன விளைவுகள் உருவாகப் போகிறதோ தெரியவில்லையே என்று ஆதங்கபட்டார்.
அது நிஜம். சாத்தான் அந்த டிவியைத் திருடிக் கொண்டு போய், என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த ஆதாம் ஏவாளிடம் விற்று விட்டான். அதுவும் ஆதாம் இல்லாத நேரமாகப் பார்த்து ஏவாளிடம் பேரம் பேசி மயக்கி அதை விற்றிருந்தான்.

அப்பாவி ஆதாம், விலங்குகளுக்குப் பெயர் வைத்து முடித்துவிட்டு பசியோடு வீடு திரும்பி வந்து, என்ன சாப்பாடு என்றபடியே ஏவாளை சமையல் அறையில் தேடினான். அவளை அங்கே காணவில்லை. அவள் வெளிச்சம் மினுமினுங்கும் ஒரு பெட்டியின் முன்னால் ஒய்யாரமாகச் சாய்ந்தபடியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதைக் கண்டான்.
என்ன அது கேட்டபடியே அருகில் போய் நின்றான்.
அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் டிவியில் ஒடும் காட்சிகளை ஆசையோடு பார்த்து கொண்டிருந்தாள் ,
டிவியில் தோன்றிய கவர்ச்சியான விளம்பரங்களைக் காட்டி, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆதாம் கேட்டான். எனக்கும் தெரியவில்லை ஆனால் வசீகரமாகயிருக்கிறது என்றாள் ஏவாள்.
அவள் அருகில் எப்படி ஒரு பாப்கார்ன் பாக்கெட் வந்தது என்று ஆதாமிற்குப் புரியவேயில்லை. அவன் தானும் ஒரு கை நிறைய பாப்கார்ன் எடுத்துமென்றபடியே பசியை மறந்து டிவி பார்க்கத் துவங்கினான்.
டிவி அவனுக்குள் இச்சையை தூண்டியது. அவன் ஏவாளை வியப்போடு உற்றுப் பார்க்கத் துவங்கினாள். அப்படி என்ன பார்க்கிறாய் என்று ஏவாள் கேட்டாள். இத்தனை நாட்கள் விலங்குகளுக்குப் பெயர்வைக்கப் போகிறேன் என்று வெட்டியாக அலைந்து திரிந்ததில் உன்னுடைய அழகை ரசிக்கத் தவறிவிட்டேன். உண்மையில் நீ ஒரு பேரழகி என்றான்.
ஆஹா, தன்னை ஆதாம் இவ்வளவு ரசிக்கிறானே என்று பெருமிதம் கொண்டாள் ஏவாள்.
அவர்கள் இருவரும் தங்களை மறந்து டிவி பார்த்து கொண்டிருந்தார்கள்.
கடவுள் படைத்த உடலுக்கு நிறைய வேலை இருக்கிறது என்பதை டிவி வழியாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அத்துடன் விளம்பரத்தில் வந்த பல்வேறு வீட்டு உபயோகப்பொருட்களை தாங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்று ஆசை கொண்டார்கள்.
அன்றிரவு புகைபிடிப்பதற்காக ஆதாமின் பண்ணை வீட்டுபக்கம் நடந்துபோன கடவுள், என்ன வாழ்க்கையிது என்று புலம்பியபடியே ஆதாமின் வீட்டைக் கவனித்தார்.
ஏதோ வெளிச்சம் பீறிட்டுக் கொண்டிருந்தது. ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்
அவரால் நம்பவே முடியவில்லை. டிவி ஒடிக்கொண்டிருந்தது. அதன் முன்னே ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் கட்டிபிடித்து முத்தமிட்டபடியே மல்யுத்தம் போல ஒருவர்மீது மற்றவர் ஏறி அமர்ந்து இறுக்கிப்பிடித்து உருண்டு கொண்டிருந்தார்கள்.
நிச்சயம் இது தனது எதிரியான அந்த சாத்தானின் வேலை தான் என்று கடவுளுக்குத் தெரிந்து போனது.
திருட்டுப்பயல், நம்ம பிள்ளைகளை இப்படிக் கெடுத்துவிட்டானே என்று சாத்தான் மீது கடுமையான கோபம் வந்தது.
ஒரு வாரம் கஷ்டப்பட்டு நாம உருவாக்கியதை மோசம் செய்து விட்டானே, எனப் புலம்பியபடியே கதவை ரகசியமாகத் திறந்து உள்ளே போய் டிவியை அணைத்தார்.
திடுக்கிட்டு எழுந்த ஆதாம் ஏவாளைப் பார்த்து, இந்தத் தவறுக்காக நீங்கள் தண்டிக்கப்படப் போகிறீர்கள் என்று கோபத்துடன் சொன்னார்.
இருவரும் தங்களின் பாவச்செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்கள். ஆனாலும் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆதாமே, நீயும் உன் வாரிசுகளும் இனிவாழ்நாள் முழுவதும் கேபிள் டிவி இணைப்பிற்காக மாதமாதம் பணம் செலவழித்து சீரழிந்து போவீர்கள்.
ஏவாளே, இனி நீ பிள்ளைகளை வளர்க்கும் பிரச்சனையுடன் பகல் முழுவதும் டிவி பார்த்து உன் நேரத்தைச் செலவழிக்க நேரிடும் என்ற தண்டனையைத் தருகிறேன் என்றார்.
அத்துடன் சாத்தானின் வீட்டை நோக்கிச் சென்று, மோசக்காரனே உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தினார்.
சாத்தான் ,முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று ஏளனம் செய்தான்.
ஆத்திரமான கடவுள் உலகை அழிப்பதற்கான மஹாபிரளயத்தை உருவாக்கினார். பகலிரவாக மழை கொட்டியது. வெள்ளம் உலகெங்கும் நிரம்பியது . முப்பத்தி ஒன்பது நாட்கள்பெருமழை பெய்தது. நாற்பதாம் நாள் கடவுளின் கோபம் தணிந்தது.
வெள்ளம் வடிந்த பிறகு கடவுள், நோவாவின் கப்பல் என்னவானது என்று காண்பதற்காகச் சென்றார். அது அரராத் மலையில் தட்டி நின்றிருந்தது.
அங்கே நோவா எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். என்ன அது என்று கடவுள் நெருங்கிப் போய் கண்ட போது அவன் முன்னே இரண்டு டிவிகள் ஒடிக் கொண்டிருந்தன.
எப்படி இரண்டு டிவி வந்தது என்று புரியாமல் கடவுள் கோபபடவே , உலகில் உள்ள ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியை காப்பாற்ற வேண்டும் நீங்கள் தானே கட்டளை தந்தீர்கள். அதனால் இரண்டு டிவிகள் காப்பாற்றபட்டன என்றான்.
கடவுளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை

அதன் பிறகு நோவாவின் வாரிசுகளும் வாரிசுகளின் வாரிசுகளும் பெரிய பெரிய டிவிகளைப் பார்க்கத் துவஙகினார்கள். அரசியல், விளையாட்டு. வானிலை, அன்றாடச் செய்திகள், சினிமா, சமூகப்பிரச்சனைகள் என்று சேனல் மாற்றி மாற்றிச் சலிக்காமல் பார்த்து தொலைக்காட்சியின் அடிமைகளானார்கள்.
மனிதர்களைத் தன்னால் திருத்தமுடியாது என்று ஒய்வு பெற்ற கடவுளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தனியாக முதுமையை கழிக்க ப்ளேராரிடா மாநிலத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
சமீபமாக அவரை தொலைக்காட்சி சேனலுக்காக நேர்காணல் செய்த போது, ஒருவேளை தன்னுடைய சிருஷ்டியைத் திருத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் டிவியை உருவாக்கமல் தவிர்த்துவிடுவேன் என்றார்.
இது விளம்பரத்திற்காக அவர் அடித்த ஸ்டண்ட் என்றே பலரும் நினைத்தார்கள்.
••••
மீள்பிரசுரம்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
