S. Ramakrishnan's Blog, page 147
January 10, 2021
திசை எட்டும்
சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குறிஞ்சி வேலன் மொழிபெயர்ப்பிற்கென்று திசை எட்டும் இதழை மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த கொரோனா காலத்தில் இதழைத் தயாரிப்பது கடினமான பணி. அதிலும் சிறப்பாக முயன்று திசை எட்டும் 65-66 வது இதழைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்
இந்த இதழில் எனது இரண்டு குமிழ்கள் சிறுகதையை வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்
வின்சென்டிற்கு எனது அன்பும் நன்றியும்

நூரெம்பெர்க் விசாரணை
நூரெம்பெர்க் வழக்கு விசாரணை உலக வரலாற்றில் மிக முக்கியமானது. ஹிட்லரின் நாஜிக் கொடுமைகளை விசாரிக்க நூரெம்பெர்க்கில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சர்வதேச நீதிபதிகள் முன்பாக நாஜி ராணுவ தளபதி, அன்றைய அமைச்சர்கள். உயரதிகாரிகள். நீதிபதிகள் எனப் பலரும் நீதி விசாரணை செய்யப்பட்டார்கள்.
இந்த விசாரணையைப் பற்றி Judgment at Nuremberg என்றொரு படம் 1961ல் வெளியானது. மிகச் சிறந்த படமிது.
அந்தத் திரைப்படத்தில் ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை அவரை மிகப்பெரிய ஆளுமையாகக் கொண்டாடிய அனைவரும் குற்றத்திற்கு உடந்தையானவர்களே. அப்படி அவரை நாயகனாகக் கொண்டாடிய தேசங்களுக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாஜி அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து செயல்பட்ட அத்தனை பேரும் குற்றவாளிகள் தான் என்று படம் சுட்டிக்காட்டுகிறது
நூரெம்பெர்க் நீதி விசாரணையைப் பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மூன்று மணிநேரம் கொண்ட அந்தத் தொடரைக் கண்டேன். (Nuremberg -miniseries)

நூரெம்பெர்க் விசாரணையின் அறியப்படாத விஷயங்களைப் படம் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொலைக்காட்சி தொடர் ஜோசப் பெர்சிகோ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது
இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜி விமானப்படையின் தளபதி ஹெர்மன் கோரிங் அமெரிக்க ராணுவத்திடம் சரணடைய ஒரு காரில் தன் குடும்பத்துடன் வந்து இறங்குகிறார். விமானப்படை தளபதியிடம் சரண்டைகிறார். அமெரிக்க ராணுவம் கோரிங்கையும் அவரது குடும்பத்தினையும் தங்கள் விருந்தினர் போல நடத்துகிறார்கள். புகைப்படம் எடுத்து சந்தோஷப்படுகிறார்கள்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரூமனின் உத்தரவின் பேரில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ராபர்ட் எச். ஜாக்சனை நூரென்பெர்க் விசாரணையை நடத்த அழைப்பு விடுக்கிறார்கள். அவர் அரசிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதை அரசு ஏற்றுக் கொள்கிறது.
ஜாக்சன் நீதி விசாரணையை எங்கே, எப்படி நடத்துவது என்பது பற்றி முடிவு செய்ய நூரெம்பெர்க்கிற்குப் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார். இங்கிருந்து தான் படம் துவங்குகிறது. ஜாக்சனுடன் அவரது உதவியாளரான எல்ஸி டக்ளஸ் பயணிக்கிறாள்.

நாஜி ராணுவம் நடத்திய குற்றங்களுக்காகக் கோரிங், ஆல்பர்ட் ஸ்பியர் மற்றும் பலர் போர்க்குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டு லக்சம்பெர்க்கிலுள்ள பேட் மொன்டோர்ஃப் என்ற இடத்தில் அடைக்கப்படுகிறார்கள். நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படும் வரை அவர்களுக்குப் பலத்த காவல் விதிக்கப்படுகிறது.
இந்தக் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மனநல நிபுணர் குஸ்டாவ் கில்பர்ட் நியமிக்கப்படுகிறார். அவர் ஒரு யூதர். அவர் கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடுகிறார். தாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம் என்று போர் குற்றவாளிகள் நினைக்கிறார்கள். வருந்துகிறார்கள்.
நூரெம்பெர்க்கிற்கு வருகை தரும் ஜான்சன் இடிபாடுகளுக்குள் பயணம் செய்து புகழ்பெற்ற நூரென்பெர்க் நீதி சபை கட்டிடத்தைக் காணுகிறார். அக் கட்டிடம் இடிந்து சரியும் நிலையில் இருக்கிறது. அதைப் புதுப்பித்து அங்கேயே நீதிவிசாரணையை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். இதற்கான பணிகள் உடனே துவங்குகின்றன. மூன்று நாடுகளின் சார்பில் மூன்று நீதிபதிகள் இந்த விசாரணையை மேற்கொள்ள நியமிக்கப்படுகிறார்கள்.
ஜாக்சன் எப்படி ஆதாரங்களைத் திரட்டி நீதி விசாரணையை நடத்த இருக்கிறார் என்பது விரிவாகக் காட்டப்படுகிறது. படத்தின் சிறப்பு கோரிங்கின் பிடிவாதமான செயல்கள். சிறைப்பட்ட போதும் அவர் தான் எந்தத் தவற்றையும் செய்யவில்லை. என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.
ஹிட்லர் மாபெரும் வரலாற்று நாயகன் என மற்றவர்களை மீண்டும் விசுவாசியாக மாற்றுகிறார். அவரிடம் மரணபயமில்லை. சிறைக்காவலர்களைக் கூடத் தன்னுடைய பேச்சில் மயக்கிவிடுகிறார். நீதிமன்றத்திலும் தன்னுடைய தரப்பு நியாயமானது என்றே சொல்கிறார். அவரை ஜாக்சன் நீதி விசாரணை செய்யும் காட்சிகள் மறக்கமுடியாதது.
நீதி விசாரணை துவங்கும் நாளில் தாங்கள் எவரும் குற்றவாளிகள் அல்ல என்று பிரதிவாதிகள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செய்த குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு ஜாக்சனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அவர் இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைக்கிறார். யூதர்களுக்கு எதிரான படுகொலைக் காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பாகிறது. வதை முகாம்களின் கொடூரத்தை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. படத்தில் உண்மையான ஆவணக்காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதைக் காண முடியாமல் நீதிமன்றத்திலே பலர் கண்ணீர் விடுகிறார்கள். தலைகவிழ்ந்து கொள்கிறார்கள். பார்வையாளராக நாமும் அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறோம். ஆனால் இக் காட்சிகள் கோரிங்கை உலுக்கவில்லை. அவர் இப்படி எல்லாம் நடந்தது தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். இவை யாவும் புனைந்து உருவாக்கப்பட்டவை என்று மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் நீதிபதிகளால் கூட இந்தக் காட்சிகளைக் காண முடியவில்லை. மன வருத்தம் கொண்டவர்களாக நீதிமன்றத்தை ஒத்தி வைக்கிறார்கள்.
ஜாக்சனின் நீதிமன்ற உரைகள் மிக விரிவாக நாஜிக் குற்றங்களை விளக்குகின்றன. அவர்கள் காட்டிய இனவெறி. முகாமில் அவர்கள் யூதர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னிருந்த ராணுவத்தின் மறைமுக உத்தரவுகள் எனச் சாட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார். ஆனால் இந்த உத்தரவுகளில் கையெழுத்துப் போட்டவர்கள் அவை பொய்யான தகவல்கள் என மறுக்கிறார்கள்.
குறுக்கு விசாரணையில் ஜாக்சனின் முனைப்பை முடக்க வேண்டும் என்பதே கோரிங்கின் நோக்கம். அதில் அவர் நிறைய நேரங்களில் வெற்றி பெறுகிறார். குற்றவாளிகள் அனைவரும் ஒன்றாகக் கோரிங்கை ஆதரிக்கிறார்கள். இதனால் ஜாக்சன் சோர்ந்து போகிறார். அவரது அணுகுமுறையைச் சோர்வடையத் தொடங்குகிறது.
கோரிங்கை தனிமைப்படுத்தி வைக்காவிட்டால் அவர் மற்ற கைதிகளைத் தூண்டிவிடுவதை நிறுத்தமுடியாது என்று ஜாக்சன் நன்றாக உணருகிறார். இதன்படி கோரிங் தனிமைப்படுத்தப்படுகிறார்.
நீதி விசாரணையின் துவக்கத்திலிருந்தே ரஷ்யா தனி நிலைப்பாடு எடுக்கிறது. ரஷ்ய ராணுவத் தளபதி தன் அதிகாரத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பக் காட்சியிலே ஜாக்சன் அதைச் சாதுர்யமாகக் கையாண்டு மோதலை தடுத்துவிடுகிறார்.
ஜாக்சன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான ஜெர்மானியரின் மனைவி ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில், ரஷ்ய ராணுவ அதிகாரிகளுக்குச் சேவை செய்யமுடியாது. அவர்கள் தன் மகனைக் கொன்றவர்கள் என்று மறுக்கிறார். இதனால் ரஷ்யத் தளபதி கோபம் அடைகிறார். அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக எல்சி தானே உணவு தட்டினை எடுத்துப் போய்ப் பரிமாறுகிறாள்.

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட கோரிங் தனது காவலரான லெப்டினென்ட் டெக்ஸ் வீலிஸுடன் நட்பாகப் பழக ஆரம்பித்து நெருக்கமாகிறார். டெக்ஸ் அவருக்காக மதுவைப் பரிசாக அளிக்கிறான். கோரிங்கை மிகப்பெரிய ஆளுமையாக நினைக்கிறான். கோரிங்கின் பரிசுகளை ஏற்றுக் கொள்கிறான். தன் தரப்பு நியாயங்களை அவனிடம் விளக்குகிறார் கோரிங். அதில் தானும் அமெரிக்காவும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்று அழுத்தமாகச் சொல்கிறார்.
ஆஷ்விட்சின் கொடூரத்தை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துகிறார் ஜாக்சன். இதனால் நாஜி ஆட்சியின் குற்றங்களுக்கான கூட்டுப் பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும் என்று வாதிடுகிறார். நீண்ட குறுக்குவிசாரணைக்குப் பிறகு நீதி விசாரணை முடிவு பெறுகிறது.
முடிவில் கோரிங் மற்றும் சிலர் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறார். ஒன்றிரண்டு பேர்களுக்கு இருபது ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு மூலம் கொல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கோரிங் எழுப்புகிறார். ஆனால் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிடுகிறது.
தூக்குலிடுவதற்கு முன்பாகக் கோரிங் தன் அறையிலே தற்கொலை செய்து கொள்கிறார். மற்றவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள். முடிவில் ஜாக்சன் நீதியை நிலை நாட்டியவராக அமெரிக்கா திரும்புகிறார்.
யூதரான மனநல மருத்துவர் கில்பெர்ட்டை கோரிங் சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. அதில் கோரிங் யூதப்படுகொலைக்காக வருத்த மடைவதேயில்லை. அவர் யூதர்கள் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது
இதே போல இன்னொரு காட்சியில் கோரிங்கின் மனைவி குழந்தையை மனநல மருத்துவர் சந்தித்து உரையாடும் காட்சியும் முக்கியமானது. அதில் ஹிட்லர் தங்களை அழித்துவிடும்படி உத்தரவிட்டிருந்ததாகவும் அதிலிருந்து தப்பிக்கவே அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் சொல்கிறாள்.
Judgment at Nuremberg படத்தில் இடம்பெற்றது போல நீதிமன்றக் காட்சிகள் வலுவாக இல்லை. ஜாக்சன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியதால் படம் அழுத்தமாக மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜாக்சனாக அலெக் பால்ட்வின் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் வரலாற்றுத் தகவல்கள் துல்லியமாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது.
இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவின் பங்களிப்பை ஒத்துக் கொள்ளாத மனநிலையே படம் முழுவதும் வெளிப்படுகிறது. குறிப்பாக ரஷ்ய ராணுவத் தளபதி, அதிகாரிகள் அனைவரும் முட்டாள் போலவே சித்தரிக்கப்படுகிறார்கள். அது ஹாலிவுட்டின் வழக்கமான தந்திரமாகும்.
நூரெம்பெர்க் விசாரணையை அமெரிக்கா தான் முன்னின்று நடத்தியது என்ற பிம்பத்தை உருவாக்கவே இந்தப் படம் முயலுகிறது. அது வரலாற்று உண்மையில்லை.
நீதிவிசாரணையின் ஊடாக ஜாக்சனுக்கும் அவரது உதவியாளருக்கும் ஏற்படும் நெருக்கம். காதல் காட்சிகள் கதையின் போக்கோடு ஒட்டவேயில்லை.

இடிபாடுகளுடன் உள்ள நூரெம்பெர்க் வீதியினுள் கார் பயணிப்பதும். நீதிமன்ற காட்சிகள். மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
ஜெர்மானியர்கள் எப்படிக் கட்டுப்பாடுகளுக்கு பழக்கப்பட்டு, யாரோ ஒருவரின் விசுவாசியாக, உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றுகிறவர்களாக இருந்தார்கள். அது மரபாக எப்படி அவர்களிடம் தொடர்கிறது என்பதைப் படம் விளக்குகிறது. உத்தரவிற்குக் கட்டுபடுவது ஜெர்மானியர்களின் இயல்பு. அதை ஹிட்லர் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தார். ஆகவே அவர் தன் இஷ்டம் போல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். கட்டளைக்குப் பணியும் அவர்களும் ஹிட்லரின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றி வந்தார்கள் என்பதைக் கில்பெர்ட் விளக்குகிறான்.
எந்த இடத்தில் நீதிமறுக்கபட்டதோ அதே இடத்தில் நீதி நிலைநாட்டப்படுகிறது என்பதே படத்தின் முக்கியச் செய்தியாக இருக்கிறது.
••
January 9, 2021
கூடுதலான எனது கைகள்
எமிதால் மஹ்மூத் (Emtithal Mahmoud) சூடானியக் கவிஞர். அமெரிக்காவில் வசிக்கிறார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நல்லெண்ண தூதராகச் செயல்பட்டு வரும் இவர் கென்யா, கிரீஸ் மற்றும் ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார்.
மஹ்மூத் சூடானின் டார்பூரில் பிறந்தவர், 1998 இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கே பிலடெல்பியாவில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்றார்
யேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற நாட்களில் கவிதைகள் எழுதத் துவங்கினார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு Sisters’ Entrance 2018ல் வெளியானது.

Sisters’ Entrance கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் படித்தேன். மிகச்சிறந்த கவிதைகள். இளந்தலைமுறையின் புதுக்குரலைக் கவிதையில் கேட்க முடிகிறது
முதன்முறையாகக் குண்டுவெடிப்பதைக் காணும் சிறுமியின் கண்களின் வழியே தன்னைச் சுற்றிய உலகின் அதிகார வெறியை எமிதால் எழுதுகிறார்.
நான் என் அம்மாவிடம்
அவளுடைய பலத்தை எனக்குக் கொடுக்கச் சொன்னேன்.
அவள் ஒரு முழுக் கிரகத்தையும் தூக்க ஆரம்பித்தாள்
தன் முதுகிலிருந்து.
என ஒரு கவிதையைத் துவங்குகிறார். எல்லாப் பெண்களும் தன் தாயிடமிருந்து அவரது பலத்தையே யாசிக்கிறார்கள். ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணிற்குப் பலத்தைத் தர இயலுகிறது. இந்தப் பலம் உடல் ரீதியானதில்லை. மனரீதியானது. நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழுவதற்கும், எல்லாக் கஷ்டங்களையும் தாண்டி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளவும் தேவையான பலமது. அதைப் பெண்கள் எப்படியோ பெற்றுவிடுகிறார்கள். எமிதாலின் குரலில் ஒலிப்பது நம் வீட்டுப் பெண்ணின் அகமே.
கடவுள் ஒரு கவிஞர்.
அவர் வானத்தைத் திறந்து,
தன்னுடைய வார்த்தைகளைக் கொட்டினார் நம்
தோலின் மீது
என்று ஒரு கவிதையில் சொல்கிறார். அதன்படி கறுப்பின பெண் என்ற அடையாளம் கடவுளின் சொல்லிலிருந்து உருவானதாகக் குறிப்பிடுகிறார்.

நம்பிக்கை என்பது
மாற்றத்தக்கதல்ல
ஆனால், குற்ற உணர்வைப் போலல்லாமல்,
அது பிரகாசமாக எரிகிறது
இணைந்திருத்தல் மூலம்
என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார்.
ஒன்றிணைவதன் வழியே தான் நம்பிக்கை ஒளிர ஆரம்பிக்கிறது. நம்பிக்கை பிரகாசமாக எரிகிறது என்பது அழகான வரி.
நம் மூதாதையர்கள் மண்ணிலிருந்தே
இந்த உடலை உருவாக்கினார்கள்
என் வீட்டு ஆண்களுக்கு அல்ல
அந்த எலும்புகளிலுள்ள
களிமண்ணிற்கே நான் விசுவாசமாகயிருப்பேன்
என்று இன்னொரு கவிதையில் சொல்கிறார்
இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பெண் என்ற அடையாளம் குறித்த பொதுப்புத்தியைக் கேள்விகேட்கிறார். கேலிப்பேச்சுகளில் பெண்ணைப் பசுவாகக் கருதும் பழக்கம் உலகம் முழுவதும் வழக்கம் ஏன் அனுமதிக்கப்படுகிறது என்று கோபம் கொள்கிறார்.
குண்டுவெடிப்பு. துர்மரணம். குருதிக்கறை படிந்த நிலம். வன்முறையின் உச்சமான தினப்பொழுதுகள் என நீளும் வாழ்க்கைக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் தவிப்பை, நினைவுகளை, கோபத்தை, தனித்துவமான உணர்வுகளை மிக அழகாகக் கவிதையில் எழுதியிருக்கிறார் எமிதால்.
இந்தக் கவிதைகளை வாசிக்கையில் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.
என் இருகைகளில் ஒன்றைத் தருகிறேன்
எடுத்துக் கொள்
எனது குரலைத் தருகிறேன்
உன் வழிகாட்டியாக்கிக் கொள்
என்று ஒரு கவிதையில் தாய் தன் மகளுக்குச் சொல்கிறாள்.
எமிதாலின் கவிதைகளின் வழியே அவரது வாழ்க்கையை மட்டுமில்லை சூடானியப் பெண்களின் தலைமுறை கடந்த கோபத்தையும், ஏக்கத்தையும், அன்பையும் அறியமுடிகிறது என்பதே இந்தத் தொகுப்பின் தனிச்சிறப்பு.
••
January 8, 2021
பொங்கல் புத்தகத் திருவிழா
சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேட் சென்டர் எதிரில் PMAC EXPO HALLல் ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 5
தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இந்தக் கண்காட்சி செயல்படும்
வழக்கமாக நடைபெறும் நந்தனம் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு தாமதமாகிற காரணத்தால் சிறிய புத்தகக் கண்காட்சியினை சென்னை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் ஐம்பது அரங்குகள் அமைக்கபட்டுள்ளன
தேசாந்திரி அரங்கில் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு கிடைக்கின்றன





January 7, 2021
துணையெழுத்து சிறப்பு பதிப்பு
ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ள துணையெழுத்து ,சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது
இதன் விலை ரூ 475

தேசாந்திரி பதிப்பகம்
D1, Gangai apartments, 110,
Sathya garden, Saligramam,
Chennai – 600 093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
ஆன்லைனில் வாங்க :
கர்னலின் நாற்காலி சிறப்பு பதிப்பு
கர்னலின் நாற்காலி -குறுங்கதைகளின் தொகுப்பு சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியாகியுள்ளது

இதன் விலை ரூ 470.
தேசாந்திரி பதிப்பகம்
D1, Gangai apartments, 110,
Sathya garden, Saligramam,
Chennai – 600 093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
ஆன்லைனில் வாங்க :
ஏழாம் நாள் பேருரை- இதாலோ கால்வினோ
உலக இலக்கியம் குறித்த பேருரைகளின் ஏழாம் நாளில் இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் குறித்து உரை நிகழ்த்தினேன்
ஏழு நாட்களும் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்டு வந்த வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி
இந்தப் பேருரைகளைப் பாராட்டி நிறைய மின்னஞ்சல்கள். தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
புத்தாண்டில் இப்படி ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்திய ஸ்ருதி டிவிக்கு எனது அன்பும் நன்றியும்
இந்தப் பேருரைகள் ஸ்ருதிவிடி யூடியூப் பக்கத்திலும் தேசாந்திரி யூடியூப் பக்கத்திலும் நிரந்தரமாக இருக்கும். ஆகவே எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.
திரைக்கூட்டணி
புக்கர் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது இரண்டையும் வென்ற ஒரே எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜாப்வாலா. மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இவரே திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். இவர்கள் கூட்டணி கடைசிவரை நீடித்தது.

ஹாலிவுட் சினிமாவில் பெண் திரைக்கதை ஆசிரியர்கள் குறைவு. அதிலும் இப்படி நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கூட்டணியாகத் திரைப்படத்தில் பணியாற்றுவது அபூர்வமானது.
ஜாப்வாலா பன்னிரண்டு நாவல்களையும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 23 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். இதில் இரண்டு முறை சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்.
ஜாப்வாலா ஜெர்மனியில் பிறந்தவர். யூத சமயத்தைச் சேர்ந்தவர். லண்டனில் படித்துக் கொண்டிருந்த போது பார்சி மாணவராக இருந்த ஜாப்வாலாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகே ஜாப்வாலா இந்தியாவில் குடியேறினார். அவரைப் பலரும் இந்தியர் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதுடில்லியில் வாழ்ந்து வந்த அவர் 1963ல் தற்செயலாகவே திரையுலகிற்குள் நுழைந்தார். அவரது நாவலின் உரிமையைப் பெறுவதற்காக இஸ்மாயில் மெர்சண்ட் அணுகிய போது அவரைத் தவிர்க்கவே ஜாப்வாலா முயற்சித்தார். ஆனால் அந்தச் சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றிவிடும் என்று அறிந்திருக்கவில்லை.
மும்பையில் பிறந்த இஸ்மாயில் மெர்சண்ட் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தி நடிகை நிம்மியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த மெர்சண்ட் அவரது உதவியோடு சினிமா உலகிற்கு அறிமுகமானார். தனது 22 வயதில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக மெர்சண்ட் அமெரிக்கா சென்றார். பின்பு அங்கேயே வாழத்துவங்கினார். அமெரிக்காவில் வசித்த நாட்களில் நிறையச் சர்வதேச திரைப்படங்களைப் பார்த்தார். இந்திய திரைப்படங்களை அமெரிக்காவில் திரையிடுவதற்கான வழிகளை உருவாக்கினார்.
திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் ஐவரியை நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து நட்பு கொண்டார். அவர்கள் இணைந்து மெர்சண்ட் ஐவரி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்கள். அந்தக் கூட்டணி நாற்பது ஆண்டுகள் நீடித்தது.
இவர்கள் தயாரித்த சில படங்கள் இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டவை. குறிப்பாகப் பிரிட்டிஷ் வாழ்க்கையை அல்லது பிரிட்டிஷ் கால இந்திய மேல்தட்டு வர்க்க வாழ்க்கையை விவரித்தன.

மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் உருவான திரைப்படங்களில் ஷேக்ஸ்பியர்வாலா தான் மிகச்சிறந்தது என்பேன். அதில் சசிகபூர் முக்கிய வேஷத்தில் நடித்திருக்கிறார். சசிகபூரின் மனைவி ஜெனிபர் கேண்டல் ஒரு பிரிட்டிஷ் பெண் அவரது தந்தை ஜெஃப்ரி கெண்டல் ஷேக்ஸ்பியர் நாடகங்களை இந்தியாவில் நடத்தியவர். அதில் ஜெனிபரும் நடித்திருக்கிறார். அந்த அனுபவங்களை முதன்மைப்படுத்திய இந்தப்படம் உருவாக்கபட்டிருக்கிறது
இப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருப்பது சுப்ரதா மித்ரா. பனிப்புகையினுள் சசிகபூர் தன் காதலியோடு செல்லும் காட்சி எத்தனை அழகானது. அது போலவே ஷேக்ஸ்பியர் நாடகங்களை நிகழ்த்தும் அரங்க காட்சிகளும் மிக நேர்த்தியாகப் படமாக்கபட்டிருக்கின்றன. படத்தின் துவக்க காட்சியிலே படத்தின் தனியழகு புரியத்துவங்கிவிடுகிறது.
சசிகபூர் ஒரு நாடக நிகழ்வில் தான் ஜெனிபரை சந்தித்தார். இருவரும் ஒன்றாக நடித்தார்கள். அந்த நட்பு வளர்ந்து காதலாக மாறியது. இவர்கள் திருமணத்தை ஜெஃப்ரி கெண்டல் ஏற்கவில்லை. அந்த எதிர்ப்பை மீறி சசிகபூர் 1958ல் ஜெனிபரை திருமணம் செய்து கொண்டார்
திருமணத்திற்குப் பிறகு அவர்கள் ஒன்றாகப் பல படங்களில் நடித்தனர், குறிப்பாக மெர்சண்ட் ஐவரி தயாரிப்புப் படங்களில் சசிகபூர் தொடர்ந்து நடித்து வந்தார். .இதன்வழியே ஆங்கிலப் படங்களில் அதிகம் நடித்த இந்திய நடிகராகச் சசிகபூர் விளங்கினார்.

மெர்சண்ட் ஐவரி நாற்பது திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். இதில் பாதிக்கும் மேல் புகழ்பெற்ற நாவல்கள். இந்த நாவல்களுக்கு ரூத் ப்ராவர் ஜாப்வாலா திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தக் கூட்டணி எந்தச் சூழலிலும் பிரியவில்லை. ஒரு குடும்பம் போல அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள்.
யூதரான ஜாப்வாலாவின் குடும்பம் நாஜி கொடுமையிலிருந்து தப்பி இங்கிலாந்தில் அடைக்கலமானது. லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த ஜாப்வாலா ஆங்கிலச் சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்றார். . நான்கு நாவல்களை எழுதியுள்ளார். திரைப்படங்களை விரும்பி பார்க்கக் கூட விரும்பாத அவரை மெர்சண்ட் திரைக்கதை எழுத அழைத்தபோது அது தனக்கான வேலையில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் மெர்சண்ட் தொடர்ந்து வற்புறுத்தவே ஒத்துக் கொண்டிருக்கிறார். அப்படித் தான் அவரது திரை வாழ்க்கை துவங்கியது.
விமர்சகராகத் தான் ஒரு போது எந்த நாவல் பற்றியும் கட்டுரைகள் எழுதியது கிடையாது. அது தான் திரைக்கதை எழுதச் சாதகமான விஷயமாக இருந்தது. ஒரு நாவலைப் படித்து ஆராதித்து அதிலே மூழ்கியிருக்கும் போது அதை எப்படிச் சாரம் கெடாமல் திரைக்கு மாற்றுவது என்று புலப்படத் துவங்கும். நீங்கள் விமர்சகராக இருந்துவிட்டால் நாவலை கூறுபோட ஆரம்பித்துவிடுவீர்கள். கேள்வி கேட்கத் துவங்கிவிடுவீர்கள். அது நாவலின் சாரத்தைச் சிதைத்துவிடுவதாக இருக்கும் என்கிறார் ஜாப்வாலா.

நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களை நாம் திரைக்கு ஏற்ப மாற்றக்கூடாது. அது நாவலுக்குச் செய்யும் அநீதி. மாறாகக் கூடுதலாகச் சிறுநிகழ்வுகளை இணைத்துக் கொள்ளலாம். அல்லது சில நிகழ்வுகளைக் கைவிடலாம். ஆனால் கதாபாத்திரத்தின் இயல்பை மாற்றித் திரைக்கதை எழுதக்கூடாது. அது நாவலுக்குச் செய்யும் துரோகம் என்கிறார்
திரைப்படமாக்கப் போகிற நாவலைப் பலமுறை படிப்பேன். குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். அதிலிருந்து ஒரு வரைபடத்தை மனதிற்குள் உருவாக்கிக் கொள்வேன். அப்படித் தான் எனது திரைக்கதை பணி நடைபெறும் என்றும் சொல்கிறார் ஜாப்வாலா.
The Householder என்ற ஜாப்வாலாவின் நாவல் பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் பிரேம் சாகரைப் பற்றியது. புதிதாகத் திருமணமாகி மனைவி இந்துவோடு வாழுகிறார். அவனது அம்மாவின் வருகை மனைவியோடு பிணக்கு ஏற்படச் செய்கிறது. திருமண வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் பிரேம் தடுமாறுகிறான். அந்த அலைக்கழிப்பை நாவல் விவரிக்கிறது. எளிமையான கதை. அதை மெர்சண்ட் ஐவரி அழகான படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.. இந்தப்படம் சத்யஜித்ரேயின் Apur Sansar பாதிப்பில் உருவானது போலவேயிருக்கிறது.
Heat and Dust ஜாப்வாலாவின் புக்கர் பரிசு பெற்ற நாவல். 1982 ஆம் ஆண்டில், ஆனி என்ற வெள்ளைக்கார பெண் தனது அத்தை ஒலிவியா காணாமல் போன சம்பவம் பற்றி விசாரிக்கத் துவங்குகிறார். ஒலிவியாவிற்கு என்ன நடந்தது. ஏன் அவர் காணாமல் போனார் என்பதைக் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகளின் உதவியோடு கண்டறிய முற்படுகிறார். ஒலிவியா பிரிட்டிஷ் ஆட்சியில் உதவி ஆட்சியாளராக இருந்த டக்ளஸின் மனைவி.
ஒலிவியாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது ஃப்ளாஷ்பேக்கில் கூறப்படுகிறது. 1923 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது மாவட்ட சப்கலெக்டராக இருந்த டக்ளஸ் ரிவர்ஸை (கிறிஸ்டோபர் காசெனோவ்) திருமணம் செய்து கொண்டார் , மத்திய இந்தியாவிலுள்ள சதிபூரில் வாழ்ந்து வருகிறார்

இந்தியாவின் கடுமையான வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒலிவியா கோடைக்காலத்தைச் சிம்லாவில் கழிக்க வேண்டும் என்று டக்ளஸ் வலியுறுத்தும்போது அவள் மறுக்கிறாள். ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறை அவளுக்குச் சலிப்பூட்டுகிறது. இந்திய ஆண்கள் மிக மோசமானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று திருமதி க்ராஃபோர்டு பயமுறுத்துகிறாள்.
ஒலிவியா இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு இந்திய இசையும் வாழ்க்கையும் பிடித்திருக்கிறது. ஒரு நாள் நவாபின் விருந்தில் கலந்து கொள்கிறார். அங்கே நடைபெறும் கச்சேரியை ரசித்துக் கேட்கிறாள். நவாப் அவளையும் டக்ளஸையும் மறுநாள் தனிச் சிறப்பு விருந்திற்கு அழைக்கிறார்
இந்த விருந்தின் வழியே அவள் நவாப்போடு பழக ஆரம்பிக்கிறாள். அடிக்கடி நவாபினை காண வருகிறார். அது ரகசிய காதலாக மாறுகிறது.
இதே நிகழ்வின் மறுவடிவம் போலவே ஆனிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கிறது. இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜாகிர் உசேன் இந்தர்லால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒலிவியா நவாப்பின் உறவால் கர்ப்பமாகிறாள். இது எதிர்பாராத பிரச்சனைகளை உருவாக்குகிறது. ஒலிவியாவிற்கு என்ன ஆனது என்பதே படத்தின் மீதக்கதை.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ரொமான்டிக் நாவல்களில் ஒன்று போலவே தான் ஜாப்வாலாவின் நாவலிருக்கிறது. அதைப் படமாக்கிய விதம் சுவாரஸ்யமாக உள்ளது. முன்பின்னாக நகர்ந்து செல்லும் திரைக்கதையும் கதாபாத்திர சித்தரிப்பும் அழுத்தமாக உள்ளன. அரங்க அமைப்பும் இசையும் சிறப்பாக உள்ளன.
மெர்ச்ண்ட் ஐவரி முயற்சியால் தான் சத்யஜித்ரே திரைப்படங்கள் அமெரிக்காவில் திரையிடப்பட்டன. ஆகவே ரே அவர்களுடன் நெருக்கமாக இருந்தார். ஷேக்ஸ்பியர்வாலா படத்திற்கு இசையமைக்க மிகக் குறைவான கால அவகாசமே ரேயிற்கு அளிக்கப்பட்டது. மிகச்சிறந்த இசையைப் படத்திற்கு ரே வழங்கியிருக்கிறார்.

அனிதா தேசாயின் எழுத்துகளைப் போலவே ஜாப்வாலாவின் படைப்புகளும் இருக்கின்றன. ஆனால் தேசாயிடம் ஏற்படும் நெருக்கம் ஜாப்வாலாவிடம் கிடைப்பதில்லை. இந்திய ஆங்கிலப் படைப்பாளிகளில் ஒருவராக ஜாப்வாலா பல்வேறு இந்திய பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படுகிறார். அவரது நாவல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் பொதுவெளியில் அவரது நாவல்கள் சிறுகதைகள் இன்று பெரிய கவனம் பெறவில்லை.
1960களில் இந்தியாவின் ஞானத்தைத் தேடி அமெரிக்க இளைஞர்கள் படையெடுத்து வர ஆரம்பித்தார்கள். யோகா மற்றும் தாந்திரீக முறைகளின் மீது பெரிய கவனம் உருவாக ஆரம்பித்தது இந்தியத் துறவிகளுக்கு வெளிநாட்டுச் சீடர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். அந்தச் சூழல் தான் ஜாப்வாலாவை எழுத வைத்தது. அவரது நாவல்களில் வரும் வெளிநாட்டுப் பெண்கள் இப்படி இந்திய ஆன்மீகத்தால். இசையால், பண்பாட்டால் ஈர்க்கபடுகிறார்கள். ஆன்மீக தேடலில் ஈடுபடுகிறார்கள்.
இந்தியாவில் வாழ்ந்து இந்தி கற்று தன் மூன்று பிள்ளைகளையும் இந்தியாவில் வளர்த்த போதும் அவரால் இந்தியாவைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. இந்தியாவை வெளியிலிருந்து பார்க்கும் பார்வையே கொண்டிருந்தார். அது தான் அவரது படைப்புகளிலும் வெளிப்பட்டது. அதன் காரணமாகவே அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். புக்கர் பரிசில் கிடைத்த பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் குடியேறிய ஜாப்வாலா இறுதி வரை அங்கேயே வசித்தார்
ஜாப்வாலா இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்றிருந்த போதும் மெர்சண்ட் ஐவரி தயாரிப்பு தவிர வேறு எவரது திரைப்படத்திலும் பணியாற்றவில்லை. அது தான் வியப்பாக இருக்கிறது. மூவர் கூட்டணியின் உறுதியான நட்பினை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கிறது
••
January 6, 2021
ஏழாம் நாள் உரை -இதாலோ கால்வினோ
உலக இலக்கியச் சொற்பொழிவின் ஏழாம் நாள் உரை இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் பற்றியது.
இன்று மாலை ஆறுமுப்பது மணிக்கு ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகும்

ஆறாம் நாள் பேருரை – ஜாக் லண்டன்
உலக இலக்கியம் குறித்து ஆற்றி வரும் பேருரைகளின் ஆறாம் நாளில் ஜாக் லண்டன் குறித்து உரையாற்றினேன்.
அதன் காணொளி இணைப்பு
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
