S. Ramakrishnan's Blog, page 150
December 31, 2020
கடல் கடந்த கடிதங்கள்.
ஒரு பழைய புத்தகக் கடைக்கும் , அதன் வாடிக்கையாளருக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்திய புத்தகம் 84, சேரிங் கிராஸ் ரோடு. உண்மை சம்பவத்தின் தொகுப்பு. புத்தகம் முழுவதும் கடிதங்களே இடம்பெற்றிருக்கின்றன.

1970 ஆம் ஆண்டு ஹெலன் ஹான்ஃப் வெளியிட்ட இந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் தொடர்ச்சியாக மேடைநாடகமாகவும் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் நாடக ஆசிரியரான ஹெலன் ஹான்ஃ புத்தகம் படிப்பதை வாழ்க்கையாகக் கொண்டவர். அவர் பிரிட்டிஷ் இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி நியூயார்க்கிலுள்ள புத்தகக் கடைகளில் தேடுகிறார். அவர் படிக்க விரும்பிய புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் Saturday Review of Literature இதழில் லண்டனிலுள்ள மார்க்ஸ் அண்ட் கோ என்ற பழைய புத்தகக் கடை ஒன்றின் விளம்பரத்தைக் காணுகிறார். அதில் கிடைக்காத அரிய புத்தகங்களை அவர்கள் விற்பனை செய்வதாகவும் உலகின் எங்கேயிருந்து ஆர்டர் செய்தாலும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆகவே 1949ல் அவர்களுக்குத் தனது புத்தகத் தேவை குறித்து ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அரிய புத்தகங்கள் என்றாலே விலை மிக அதிகமாக இருக்கும், என்னைப் போன்ற தீவிரவாசகர்களால் அவ்வளவு விலை கொடுத்துப் புத்தகத்தை வாங்க முடியாது- ஆகவே ஐந்து டாலர்களுக்குள் விலையுள்ள புத்தகமாக இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள் என்று ஒரு புத்தகப் பட்டியலை இணைத்துக் கடிதம் அனுப்புகிறார். அப்போது ஹெலனின் வயது 33. திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வருகிறார்.
ஒரு மாத காலத்தில் அந்தக் கடையிலிருந்து அவள் கேட்ட ஸ்டீவன்சன் கட்டுரைகளின் தொகுதி மற்றும் லத்தீன் பைபிளுக்குப் பதிலாகக் கிரேக்க புதிய ஏற்பாடு பிரதி அனுப்பி வைக்கப்படுகிறது. கூடவே FPD எனக் கையெழுத்துப் போட்ட கடிதமும் வந்து சேருகிறது. அது கடை உரிமையாளர் பிராங் டோயலின் கையெழுத்து.
மிக அழகாக அச்சிடப்பட்ட, நேர்த்தியான பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் என்பதால் ஆசையாக அதைத் தொட்டு தொட்டு மகிழ்ச்சி அடைகிறாள் ஹெலன் ஹான்ஃப்
மிகக் கவனமாகப் பேக் செய்து அதை அனுப்பி வைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் எழுதுகிறாள். கூடவே ஆறு டாலர் பணத்தையும் அனுப்பி வைக்கிறாள்.
அவளது பணத்தைப் பெற்றுக் கொண்டு கூடுதலாக அவள் அனுப்பி வைத்துள்ள தொகையைக் கணக்கில் வைத்துக் கொள்வதாகப் பதில் கடிதம் எழுதுகிறார் பிராங்.

அடுத்த முறை அவள் ஈசாப் பற்றிய Landor’s Imaginary Conversations என்ற அரிய நூலின் பிரதி கிடைக்குமா என்று கேட்டுக் கடிதம் எழுதுகிறாள். இதில் பணம் அனுப்புவதற்காகத் தான் அலைந்து திரிய வேண்டிய சூழல் பற்றி எழுதுகிறாள். இதற்கு ஆலோசனையாகத் தபாலில் பணம் அனுப்பி வைக்கும்படி பிராங் பதில் கடிதம் எழுதுகிறார்.
1949ல் இப்படித் துவங்கிய கடித உறவு புத்தகக் கடையின் ஆறு ஊழியர்களுக்கும் ஹெலன் ஹான்ஃப்பிற்கும் இடையில் நெருக்கமான நட்பை உருவாக்குகிறது. கடிதங்கள் வழியாகவே அவள் தான் படிக்க விரும்பிய அரிய புத்தகங்களைப் பற்றி எழுதுகிறார். தனது வாசிப்பு குறித்தும் சொந்த வாழ்க்கை பற்றியும் எழுதுகிறார்
அந்தக் கடிதங்களுக்குப் பிராங் நேர்த்தியாகப் பதில் எழுதி அனுப்பி வைப்பதுடன் புத்தகங்கள் குறித்துச் சிறப்பான குறிப்புகளையும் எழுதி அனுப்பி வைக்கிறார். அதில் அவர் எவ்வளவு தேர்ந்து படித்தவர் என்பது வெளிப்படுகிறது..
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிரிட்டனில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை அறிந்த ஹெலன் ஹான்ஃ பழைய புத்தகக் கடை ஊழியர்களுக்குத் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாகக் கிறிஸ்துமஸ் பரிசாக டின்னில் அடைத்த உணவுப்பொருட்களை வாங்கி அனுப்புகிறாள்.
அது மார்க்ஸ் அண்ட் கோ ஊழியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. புத்தகக் கடையோடு உள்ள உறவு என்பது குடும்ப உறவு போல மாறுகிறது. அவளது கடிதத்தை ஊழியர்கள் அன்பின் அடையாளமாகக் கருதுகிறார்கள். தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பி வைக்கிறார்கள்.

அவள் கேட்ட அரிய புத்தகங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து வாங்க வேண்டும் என்பதற்காகப் பிராங் லண்டனின் பல்வேறு இடங்களில் தேடி அலைகிறார்.
பிராங்கின் மனைவி, பிள்ளைகள் பற்றி ஹெலன் ஹான்ஃப் அக்கறையுடன் விசாரிக்கிறார். மார்க்ஸ் அண்ட் கோவில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் குறித்தும் அவர்களின் வாழ்க்கை குறித்தும் அக்கறையுடன் கடிதம் எழுதுகிறாள்.
ஹெலன் ஒருமுறை தங்கள் விருந்தினராக லண்டன் வரும்படி கடை ஊழியர்கள் அழைக்கிறார்கள். சொந்த வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக அவளால் பயணம் கிளம்ப இயலவில்லை.
ஹெலன் ஹான்ஃப் பிரிட்டிஷ் இலக்கியங்களை வாசிப்பதன் வழியே இங்கிலாந்து மக்களை, தேசத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறார். இலக்கியமே உண்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் என்கிறார் ஹெலன்
கவிதையின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட அவர் ஜான் டன்னின் கவிதைகளையும் உரைநடையும் கொண்ட தொகுப்பினை ஆர்டர் செய்து வாங்கிப் படித்து மகிழுகிறார். ஜான் டன் மெய்யியல் கவிஞர்களில் முக்கியமானவர். ஹெலன் ஹான்ஃப் வழியாக நாமும் பிரிட்டிஷ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளை அறிந்து கொள்கிறோம்
ஜேன் ஆஸ்டன் நாவல்கள், ஹிலாரி பெலோக் கட்டுரைகள். ஜான் டன் கவிதைகள் மற்றும் கட்டுரைகள். சார்லஸ் லேம்ப் கட்டுரைகள். ஸ்டீவன்சன், ராபர்ட் லூயிஸ். ஸ்டெர்ன், லாரன்ஸ் நாவல்கள். பழைய ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு என அவள் விரும்பி வாங்கிய புத்தகங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் கடிதங்களின் வழியே நாம் அறிந்து கொள்ள முடிகிறது
புத்தகங்களை ஒருவர் எவ்வளவு தீவிரமாக நேசிக்க முடியும். அந்த நேசம் எப்படிப் புத்தகக் கடை ஊழியர்கள் மீது அன்பு செலுத்த வைக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம்.
கடிதங்கள் வழியாகவே ஹெலன் ஹான்ஃப் மற்றும் பிராங் டோயலின் வாழ்க்கை மற்றும் அந்தப் புத்தகக் கடை ஊழியர்களின் நிலை விவரிக்கப்படுகிறது. நேரில் பார்த்துக் கொள்ளாமல் புத்தகங்கள் குறித்த கடிதங்களின் மூலம் ஹெலனுக்கும் பிராங்கிற்கும் இடையில் உருவான நட்பு அபூர்வமானது. சொற்களால் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்கிறார்கள். புத்தகங்களின் வழியே கைகுலுக்கிக் கொள்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள்.
பழைய புத்தகங்கள் விற்கும் கடை என்றாலும் எவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். எவ்வளவு சிரத்தையெடுத்து பேக் செய்து புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். உடனுக்குடன் பதில் எழுதுகிறார்கள் என்பது அவர்கள் செய்வது வெறும் வணிகமில்லை, அது ஒரு தீவிர ஈடுபாடு என்பதைப் புரிய வைக்கிறது.
ஒருமுறையாவது லண்டனுக்குப் பயணம் செய்து தனக்குப் பிடித்தமான புத்தகக் கடைக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். பிராங் உள்ளிட்ட நண்பர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஹெலன் ஹான்ஃப். அந்த ஆசை நிறைவேறுவதற்குள் பிராங் இறந்துவிடுகிறார்

1968 இல் பிராங் இறந்துவிடவே புத்தகக் கடை 1970 டிசம்பர் இறுதியில் மூடப்படுகிறது.
1971ல் ஹான்ஃப் லண்டன் சென்று சேரிங் கிராஸ் சாலையிலிருந்த மூடப்பட்ட புத்த கடைக்குச் சென்றார். அவருக்குள் பிராங்கின் நினைவுகளும் அந்தக் கடையின் வழியே தனக்குக் கிடைத்த புத்தகங்கள் பற்றிய எண்ணங்களும் வந்து போகின்றன. தனது பயண நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக The Duchess of Bloomsbury Street என்ற புத்தகம் எழுதியிருக்கிறார்
84, சேரிங் கிராஸ் ரோடு மறக்கமுடியாத புத்தகம். புத்தகங்களின் தோழமையை இதைவிடச் சிறப்பாக வெளிப்படுத்தமுடியாது.
••
December 30, 2020
உலக இலக்கியக் கொண்டாட்டம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக இலக்கியம் குறித்து ஏழு நாட்கள் தொடர் உரைகள் நிகழ்த்தினேன்.சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நிற்க இடமில்லாத அளவு கூட்டம். மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த உரைகள் தனியே டிவிடியாக வெளிவந்து ஆயிரக்கணக்கில் விற்பனையாகியது. உரையின் வடிவம் நூலாகவும் வெளியானது
அது போன்ற தொடர் உரைகளை மறுபடியும் நிகழ்த்த விரும்பினேன். அதற்கான காலமும் சூழலும் அமையவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது. ஆகவே ஒரு வார காலம் தொடர் உரைகள் நிகழ்த்தலாம் எனத் திட்டமிட்டேன்.
ஒரு வார காலத்திற்குப் பெரிய அரங்குகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு ஹோட்டல் அரங்குகள் தரத் தயாராக இருந்தார்கள். ஆனால் அதன் கட்டணம் ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக வந்தது. இது போன்ற நிகழ்வுகளுக்கு எனது கைப்பணத்தை செலவு செய்து தான் நடத்த வேண்டும். எவரது நிதி ஆதரவும் கிடையாது. ஆகவே பொருளாதார நெருக்கடியான இந்த சூழலில் ஒரு லட்சம் ரூபாய் அரங்கிற்கு கொடுக்க இயலாது, மேலும் கொரோனா கட்டுபாடுகளை முறையாக கடைபிடித்து நிகழ்வினை ஏற்பாடு செய்வது சிரமமான விஷயம் என்று தோன்றியதால் ஸ்ருதி டிவி மூலம் இதனைப் படம்பிடித்து ஒளிபரப்பு செய்யலாம் என முடிவு செய்தேன்
ஸ்ருதி டிவி கபிலன் உடனடியாக இதனை ஏற்றுக் கொண்டு நிகழ்வுகளைப் படமாக்கினார். நிகழ்வின் ஒரு உரையை மட்டும் நண்பர் ஜீவ கரிகாலன் புதிதாகத் துவங்கியுள்ள பி பார் புக்ஸ் புத்தகக் கடையில் நிகழ்த்தினேன்.
ஏழு உரைகளையும் ஸ்ருதி டிவி மிகச்சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்தார்கள்.
ஒளிப்பதிவாளர் கபிலன்,சுரேஷ், ஹரி பிரசாத். அன்பு கரண் , மணிகண்டன், அகரமுதல்வன், ஜீவகரிகாலன் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உரைகளை ஜனவரி -1, 2021 வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி -7 வியாழன் வரை ஒரு வார காலம் ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள்.
புத்தாண்டு முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு இலக்கியப் பேருரைகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

ஸ்ருதி டிவி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்
நிகழ்வினைக் காண :https://www.youtube.com/c/ShrutiTv
ஏழு நாட்கள் உரைகளின் விபரம்
ஜனவரி 1 – மாலை 6 :30 ஹெர்மென் மெல்வில் – “ மோபிடிக் “

ஜனவரி 2 –மாலை 6 :30 நிகோலாய் கோகோல் – “தாரஸ் புல்பா“

ஜனவரி 3 –மாலை 6 :30 சோபாக்ளிஸ் – “ஈடிபஸ் அரசன்“

ஜனவரி 4–மாலை 6 :30 ஐசக் பாஷவிஸ் சிங்கர் -“ கிம்பல் மற்றும் கதைகள்“

ஜனவரி 5 – மாலை 6 :30 ஸ்டிபான் ஸ்வேக் –“தி ராயல் கேம்“

ஜனவரி 6– மாலை 6 :30 ஜாக் லண்டன் – “கானகத்தின் குரல் “

ஜனவரி 7– மாலை 6 :30 இதாலோ கால்வினோ – “புலப்படாத நகரங்கள் “

உலக இலக்கியப் பேருரைகள் குறித்த தகவலை அனைவருக்கும் கொண்டு செல்லும் விதமாக உங்கள் முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து உதவுங்கள்.
தொடர்புக்கு :
தேசாந்திரி பதிப்பகம்
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
December 27, 2020
நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலை இரண்டு பேர் எங்கள் கிராமத்தின் நூலகம் முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது நூலகம் திறக்கப்படவில்லை. காலை ஏழு மணியிருக்கும். இருவருக்கும் இருபதை ஒட்டிய வயது . மெலிந்த தோற்றம். பொருத்தமில்லாத மேல்சட்டை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவன் அடர்ந்த தாடி வைத்திருந்தான்.
கிராம நூலகம் என்பதால் அதைத் தூய்மைப்படுத்தி வைக்கும் பொறுப்பு மாரியம்மாள் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டில் தான் நூலகத்தின் சாவி இருக்கும். அவர் காலையில் நூலகத்தைக் கூட்டிப் பெருக்கி துடைத்துப் போவார். சில நாட்கள் அவரே காலையில் நூலகத்தைத் திறந்து வைத்துவிடுவார்.

நூலகர் பெரும்பாலும் ஒன்பது மணியைக் கடந்து தான் வருவார். சில நாட்கள் அவர் வருவதற்குப் பத்து மணிக்கு மேலாகிவிடும். கிராம நூலகத்தில் காலை நேரம் நியூஸ் பேப்பர் படிக்க வருபவர்களைத் தவிர வேறு ஆட்களைக் காண முடியாது. அதுவும் ஒன்றிரண்டு பேரே வருவார்கள்.
ஆனால் அந்த இளைஞர்கள் காலையில் நூலக வாசலில் வந்து நிற்பதை மைதானத்திற்குச் செல்லும் போது பார்த்தேன். உள்ளூர் முகங்களாகத் தெரியவில்லை.
ஒருவேளை நூலகரிடம் ஏதாவது விண்ணப்பம் எழுதித் தரச் சொல்லிக் காத்திருப்பவர்களாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன். பத்து மணி அளவில் நூலகர் வந்த போது அவர்கள் இருவரும் கைகளைக் கட்டிக் கொண்டு நின்று தயக்கத்துடன் “ஏதாவது வேலை வேண்டும்“ என்று கேட்டார்கள்
“லைப்ரரியில் என்ன வேலையிருக்கு. இங்கே வந்து வேலை கேட்குறீங்க“ எனக்கேட்டார் நூலகர்
“நாங்கள் இலங்கைத் தமிழ் அகதிகள், முகாமில் தங்கியிருக்கிறோம். வேலை ஏதாவது இருந்தால் கொடுங்கள்“ என்றார் தாடி வைத்த இளைஞர்
சில மாதங்களுக்கு முன்பு ஊரின் கிழக்கே பள்ளிக் கூடத்தைத் தாண்டி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியிருந்த மக்களுக்கு அகதி முகாம் உருவாக்கப்பட்டிருந்தது. கோழிக்கூண்டுகள் போன்ற சிறிய வசிப்பிடம். எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. மின்சார வசதி தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடிநீருக்காக அவர்கள் ஊருக்குள் தான் வரவேண்டும்
“புத்தகங்களை அடுக்கித் தர்றோம். பைண்டிங் வேலை இருந்தாலும் செய்து தர்றோம்“ என்றார் இன்னொரு இளைஞர்
நூலகர் தன் கையிலிருந்து தான் அதற்கு ஊதியம் தர வேண்டும் என்பதால் தயக்கத்துடன் “உங்களை எப்படி நம்பி வேலை கொடுக்கிறது“ என்று கேட்டார்
“புத்தகத்தைக் கையில் தொட்டு மாதக்கணக்கு ஆகிடுச்சி. நாங்க காலேஜ்ல படிச்சிகிட்டு இருந்தோம். அங்கே லைப்ரரிக்குப் போவோம். நிறையப் புத்தகம் வாசிப்போம். ஆனால் யுத்தம் எல்லாத்தையும் அழிச்சிருச்சி“ என்றார் தாடி வைத்த இளைஞர்
“ஆளுக்கு இருபது ரூபா தர்றேன். வேலை செய்வீர்களா“ எனக்கேட்டார் நூலகர்
அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். ஒரேயொரு விண்ணப்பம் வைத்தார்கள்
“நாங்க படிக்கிறதுக்குப் புக்ஸ் எடுத்துட்டு போகலாமா“
“அது முடியாது. உள்ளூர்காரங்களுக்கு தான் புக் தர முடியும். நீங்க அகதியாச்சே. எப்படித் தர முடியும்“ எனக்கேட்டார் நூலகர்
“நாங்க இந்த ஊர்ல தானே இருக்கோம். முகாம்ல இருக்கிற என் சிஸ்டர் படிக்கப் புக் வேணும் “என்றார் இன்னொரு இளைஞர்
“அட்ரஸ் புரூப் வேணும். யாராவது உங்களை அறிமுகப்படுத்தி வைக்கணும். அதுவரைக்கும் புக் வெளியே கொடுக்க முடியாது “என்றார் நூலகர்
அவர்கள் ஏமாற்றத்துடன் நூலகரை வெறித்துப் பார்த்தார்கள்

தேசம் இழந்து, சொத்து சுகம் இழந்து, உயிர்தப்பி வந்தவர்களுக்கு நூலகத்தில் படிக்கப் புத்தகம் கூடத்தரப்படவில்லை என்பதே நிஜம்.
அவர்கள் பகல் முழுவதும் நூலக அடுக்கில் தூசி படிந்து போயிருந்த புத்தகங்களை வெளியே கொண்டு வந்து வைத்துத் துடைத்துச் சுத்தம் செய்து அடுக்கினார்கள். கிழிந்து போன புத்தகங்களைக் கோந்து ஒட்டிச் சரி செய்தார்கள். மதியம் சாப்பிட கூடச் செல்லாமல் டீக்குடித்துவிட்டு வேலை செய்தார்கள். மாலைக்குள் நூலகம் புதியதாக மாறியது.
இதற்குள் நூலகர் அந்த வேலைக்காகத் தர வேண்டிய ஊதியத்தை மில் சூப்ரவசைர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டிருந்தார்
அவர்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாலை திரும்பும் போது மறுபடியும் கேட்டார்கள்
“ஒரேயொரு புத்தகம் கொடுத்தால் போதும். முகாமில் யார் கிட்டயும் படிக்க ஒரு புக் கிடையாது“
நூலகர் சிறிது யோசனைக்குப் பிறகு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவர்கள் பெரிய நாவல் ஒன்றை எடுத்துக் கொண்டார்கள். தாடி வைத்த இளைஞன் நூலகரிடம் சொன்னான்
“அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு ஒரு பதிவேடு செய்து தரட்டுமா சார். அதுக்கு ஊதியம் ஏதும் தர வேண்டாம்“
நூலகர் ஒத்துக் கொண்டார். அதன் பிந்திய நாட்களில் அந்த இருவரும் நூலகத்தில் அமர்ந்து பதிவேடு ஒன்றை உருவாக்கித் தந்தார்கள். அழகான கையெழுத்து. அச்சடித்தது போன்றிருந்தது.
புத்தகங்களுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்கள் இப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பதிவேட்டினை நூலகர் அனைவரிடமும் காட்டி மகிழ்ந்தார்.
இதன் சில நாட்களுக்குப் பிறகு மாலை நேரம் ரோஸ் வண்ண பாவாடை சட்டை அணிந்த ஒரு பெண் தயக்கத்துடன் நூலகத்திற்கு வந்து தன் அண்ணன் படிக்க எடுத்த வந்த புத்தகத்தை நூலகரிடம் திரும்பிக் கொடுத்துவிட்டு “தானே ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாமா“ எனக்கேட்டார்
நூலகர் அந்தப் பெண்ணை அனுமதித்தார்
அவள் ஆசை ஆசையாக ஒவ்வொரு புத்தகமாகத் தொட்டுப் புரட்டிப் பார்த்தாள். சில வரிகளை லேசாக முணுமுணுப்பதும் கேட்டது.
நீண்ட தேடுதலின் பின்பு அவள் “மணியோசை“ என்ற சிறுகதைத் தொகுப்பினை எடுத்துக் கொண்டு போனாள். இந்தப் பெண் நூலகத்திற்கு வந்து போக ஆரம்பித்த சில நாட்களில் அவளது தோழிகளும் நூலகத்திற்குப் புத்தகம் வேண்டி வர ஆரம்பித்தார்கள்
நூலகத்தின் வாசலில் நின்று அவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசினார்கள். சில வேளைகளில் சப்தமாகச் சிரிப்பதும் கேட்டது.
அவர்களுக்கு உறுப்பினர் அட்டை தர இயலாது என்பதால் முகாம் பொறுப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் பெற்றுவந்தார்கள் அதை வாங்கிக் கொண்டு நூலகர் புத்தகம் இரவல் தரத் துவங்கினார்
அந்த இளம்பெண்கள் நூலகத்திற்கு வருகை தர ஆரம்பித்த பிறகே அவர்கள் வயதுடைய உள்ளூர் பெண்கள் நூலகத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
அந்தப் பெண்களில் ஒருத்தி ஒரு நாள் நூலகரிடம் “பெண்கள் அமர்ந்து நியூஸ் பேப்பர் படிக்க ஒரு பெஞ்சு போடலாமே“ என்று யோசனை சொன்னாள்
“இங்கே ஏது இடம்“. என்று கேட்டார் நூலகர்
“அப்போ தினம் சாயங்காலம் படிச்சி முடிச்ச நியூஸ் பேப்பரை முகாமிற்கு எடுத்துட்டுப் போய்ப் படிச்சிட்டு மறுநாள் காலையில் கொண்டுவந்து தர்றோம்“ என்றாள் அந்தப் பெண்
நூலகர் நீண்ட யோசனைக்குப் பிறகு ஒத்துக் கொண்டார்
அதன்பிறகு அன்றாடம் அவர்கள் படித்து முடித்த செய்தித்தாள்களை முகாமிற்குக் கொண்டு போனார்கள். ஒன்று கூடி வாசித்தார்கள். மறுநாள் காலை நூலகரிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள்
படிப்பது வாழ்வின் மீதான பற்றுதலை, நம்பிக்கையை உருவாக்கும் என்பதற்கு அடையாளம் போலிருந்தது அவர்களின் செய்கை. நூலகத்தில் கிழிந்த புத்தகங்கள் என்று ஒதுக்கி வைத்த நூல்களை அவர்கள் எடுத்துக் கொண்டு போய்ப் படித்தார்கள். ஒட்டி பைண்டிங் செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள்
ஒவ்வொரு புத்தகத்திற்குள் ஒருவகை வெளிச்சமிருக்கிறது. அது வாசிப்பவனின் கண்களுக்கு மட்டுமே புலப்படுகிறது. சொற்களின் துணை கொண்டு அவன் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள தயாராகிறான். அது தான் முகாமில் இருந்தவர்களிடம் நடந்தது.
ஒரு நாள் முகாமிலிருந்து ஒரு கிழவர் நூலகத்திற்கு வந்து தான் தச்சு வேலைகள் செய்கிறவன் என்று சொல்லி நூலகத்தில் உள்ள மரப்பெஞ்சின் ஆடிக் கொண்டிருந்த கால்களைச் சரிசெய்து கொடுத்துப் போனார். அதற்குப் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்
இனி தங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று தெரியாத நிலையிலும் முகாமிலிருந்தவர்கள் நம்பிக்கையோடு பிள்ளைகளை உள்ளூர் பள்ளியில் படிக்க வைத்தார்கள். நூலகத்திற்கு வந்து விருப்பமான புத்தகங்களைப் படித்தார்கள். இந்த விருப்பமோ நம்பிக்கையோ கிராமவாசிகளில் படித்தவர்களாக இருந்த பலருக்கும் இருக்கவில்லை. அவர்கள் சந்தேகக் கண்களுடன் முகாமிலிருந்தவர்களைப் பார்த்தார்கள் நடத்தினார்கள். அவர்களுடன் நட்போடு பழகுவது போல நெருங்கி உறவாடி ஏமாற்றினார்கள்.
நூலகம் மூடப்பட்டிருந்த நாட்களில் கூட அவர்கள் நூலகத்தின் முன்பு வந்து நின்று கூடிப் பேசினார்கள். ஊரின் பொது விஷயங்களில் உதவி செய்வதற்கு முன்வந்தார்கள்.
ஒரு நாள் முகாமிலிருந்து இரண்டு பேர் தப்பிப் போய்விட்டார்கள் என்று காவலர்கள் இருவர் நூலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். தப்பிப் போனவர்களில் ஒருவர் நூலகத்திற்கு வேலை கேட்டு வந்த தாடி வைத்த இளைஞன்.
காவலர்களின் மிரட்டல் காரணமாக நூலகர் இனி அவர்களை நூலகத்திற்கு அனுமதிப்பதில்லை. புத்தகங்கள் இரவல் தருவதில்லை என்று முடிவு செய்தார். இதற்கு நாங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நூலகர் அவர்களை நூலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.
சிறைச்சாலையில் கூடப் புத்தகம் படிக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. சிறிய நூலகங்கள் இயங்குகின்றன. ஆனால் அதை விடக் கொடுமையாக முகாமில் இருந்தவர்களுக்குப் படிக்க வசதியில்லை. பொதுநூலகங்களும் அவர்களை அனுமதிக்கவில்லை.
முகாமிலிருந்த இளம்பெண்கள் நூலகத்தைக் கடந்து போகும் போது ஏக்கத்துடன் தலை திருப்பிப் பார்த்தபடியே சென்றார்கள். உணவும் உடையும் மட்டும் வாழ்க்கையில்லை. படிப்பதும், யோசிப்பதும், செயல்பட உந்துதல் பெறுவதும் வாழ்விற்குத் தேவைதானே. அதைப் புத்தகங்கள் தருவதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது போலிருந்தது அவர்களின் பார்வை.
அந்தக் கண்களை என்னால் மறக்கமுடியவில்லை.
பொதுநூலகத்திலிருந்த பதிவேட்டினை காணும் போதெல்லாம் முகாமிலிருந்து ஓடிப்போன இளைஞனின் முகம் நினைவிற்கு வந்து போகும். என்ன ஆகியிருப்பான். எங்கே வாழ்ந்து கொண்டிருப்பான் என யோசித்தபடியே இருப்பேன்.
யுத்தம் ஏற்படுத்திய வடுக்களை விடவும் சொந்த சகோதரர்களாக அவர்கள் நினைத்த தமிழக மக்கள் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழ் மக்களை நடத்திய விதமும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் என்றும் ஆறாதவை.
••
சிறப்பு சலுகை
தேசாந்திரி பதிப்பகம் புத்தாண்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது

ஐன்ஸ்டீனின் கனவுகள்
முப்பது ஆண்டுகளுக்கு முன்புகவிஞர் ஆனந்த், கவிஞர் தேவதச்சன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து காலம் பற்றிய ஆய்வு ஒன்றில் ஈடுபட்டார்கள். 1992ல் ஆனந்த் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது காலம் குறித்த வியப்பான விஷயங்களை, தகவல்களை, கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த ஆய்விற்காகப் பலரையும் நேர்காணல் செய்தார்கள். ஆனால் அது இன்றும் வெளியிடப்படவில்லை.

இன்று Einstein’s Dreams என்ற நாவலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் வந்து போயின
ஆலன் லைட்மென் எழுதிய இந்த நாவல் ஐன்ஸ்டீனின் காலம் குறித்த எண்ணங்களைப் புனைவாக்கியிருக்கிறது. சின்னஞ்சிறிய நாவல்.இதாலோ கால்வினோ பாணியில் எழுதப்பட்ட புனைவு. உரையாடல்கள் மிகவும் குறைவு. நிறைய இடங்களில் கவித்துவமான வரிகளைக் காணமுடிகிறது.
இளம் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கனவுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். இந்தக் கனவுகளின் வழியே அவர் எப்படிக் காலம் குறித்த எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறார் என்பதையே நாவல் விவரிக்கிறது. முப்பது சிறு அத்தியாயங்கள் வழியே காலம் குறித்த பல்வேறு கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடிகாரம் காட்டும் காலம் ஒரு புறம் உடலில் இயங்கும் காலம் ஒரு பக்கம். இந்த இரு கால நிலைகளுக்குள் நாம் எப்படிச் சஞ்சரிக்கிறோம் என்பதை இந்த நாவலின் ஒரு பகுதி பேசுகிறது. கடிகாரத்தை வெறும் அலங்கார பொருளாகக் கருதக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதய ஓசையைத் தான் காலமாகக் கருதுகிறார்கள். பசித்த போது சாப்பிடுகிறார்கள் உறக்கம் வரும் போது உறங்குகிறார்கள். அவர்களைக் கடிகார காலம் கட்டுப்படுத்துவதில்லை
ஆனால் அலுவலகம் செல்பவர்களைக் கடிகாரம் தான் இயக்குகிறது. அவர்கள் காலை எத்தனை மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும். எத்தனை மணிக்குள் அலுவலகம் போக வேண்டும். எப்போது மதிய உணவு. எப்போது மாலை தேநீர் அருந்த வேண்டும். எப்போது வீடு திரும்ப வேண்டும் என எல்லாவற்றையும் கடிகாரமே முடிவு செய்கிறது. அவர்கள் தங்கள் உடலின் கடிகாரத்தை விடவும் இயந்திர கடிகாரங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்.
காலம் நீரோட்டம் போலச் செல்லக்கூடியதா, அல்லது வாலைக் கவ்வியிருக்கும் பாம்பைப் போல வட்டமானதா, அல்லது அம்பு போலக் காலம் முன்னோக்கிச் செல்கிறதா என மாறுபட்ட கண்ணோட்டங்கள் தோன்றி மறைகின்றன.
காலம் இல்லாத இடமேயில்லை. மனிதர்களே இல்லாத இடத்திற்குச் சென்றாலும் காலம் இருக்கவே செய்கிறது. காலவுணர்விலிருந்து விடுபட முடியாது. ம்யூசியம் போன்ற இடத்திற்குள் செல்லும் போது காலம் உறைந்து போயிருப்பதை உணர முடிகிறது. நகரங்கள் கால உணர்வில் மிக வேகமாக இருப்பது போலவும் கிராமம் வேறு காலத்தில் வாழுவது போலவும் தானே இருக்கிறது

ஒரு உணவு மேஜை முன்பாகக் கணவனும் மனைவியும் அமர்ந்திருக்கிறார்கள். புதிதாகத் திருமணமானவர்கள். அந்த மேஜை தண்ணீர் குவளைகள் நாற்காலி எல்லாமும் புதிதாக இருக்கிறது. அதே மேஜையில் சில ஆண்டுகளுக்குப் பின்பு அந்தக் கணவன் மனைவியோடு இரண்டு குழந்தைகள் அமர்ந்து உண்ணுகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் அந்தப் பையன்கள் வளர்ந்திருக்கிறார்கள். கணவன் மனைவி தோற்றம் மாறியிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் அந்தப் பையன்கள் பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணமாகிறது. தந்தையும் தாயும் முதுமை அடைகிறார்கள். பையன்களுக்கும் பிள்ளைகள் பிறக்கின்றன. அதே உணவு மேஜையில் இப்போது பேரன் பேத்திகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். காலம் அந்த மேஜையில் ஒரு சாட்சி போல மௌனமாக அமர்ந்திருக்கிறது. அவதானிக்கிறது. அவர்களின் சந்தோஷத்தையும் வேதனையையும் அறிந்து வைத்திருக்கிறது. அவர்கள் வாழ்வின் சாட்சியமாக அந்த உணவு மேஜை மாறிவிடுகிறது. காலம் இப்படிப் பொருட்களின் மீது தனது தடயத்தை விட்டுப் போகிறது.
Farewell to the Ark ஜப்பானியத் திரைப்படத்தில் தீவில் வசிக்கும் அனைவரின் கடிகாரத்தையும் பறி முதல் செய்து புதைத்துவிடுகிறார்கள். ஒரேயொருவர் வீட்டில் மட்டுமே கடிகாரம் இருக்கிறது. அவர் தன்னைக் காலத்தின் அதிபதி என்று அழைத்துக் கொள்கிறார். அதிகாரமே காலத்தை எப்படிச் செலவு செய்வது என்பதை முடிவு செய்கிறது. நாட்டுப்புறக்கதையில் பகலை இரவு என்றும் இரவைப் பகல் என்று அழைக்க உத்தரவிட்ட மன்னரைக் காணுகிறோம். மதவழிபாடு முழுவதும் காலத்தோடு தொடர்பு கொண்டது. குறிப்பிட்ட நேரத்தில் தான் பிரார்த்தனை செய்யப்பட வேண்டும் என்று மதம் வலியுறுத்துகிறது. எல்லாச் செயல்களும் காலத்தினால் தான் மதிப்பிடப்படுகின்றன. காலத்தினால் தான் வழிநடத்தப்படுகின்றன. காலத்தை எவரும் சந்தேகிக்க முடியாது. அதிகாரம் செலுத்த முடியாது.
இயற்கை குறிப்பிட்ட காலஒழுங்கினைக் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் பருவகால மாற்றங்கள்.
நாவலில் ஐன்ஸ்டீன் காலம் குறித்த தனது கனவுகளை நண்பர் மைக்கேல் பெசோவுடன் பகிர்ந்து கொள்கிறார். . ஒவ்வொரு கனவும் காலத்தின் ஏதோவொரு கருத்தாக்கத்தை உள்ளடக்கியதாகயிருக்கிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை எவ்வாறு உருவாக்கினார் என்பதை இந்த நாவலின் வழியே அறிந்து கொள்ள முடிகிறது
The tragedy of this world is that no one is happy , whether stuck in a time of pain or of joy. The tragedy of this world is that everyone is alone, For a life in the past cannot be shared with the present ,Each Person who gets stuck in time gets stuck alone என்று நாவலின் ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது
உண்மையான விஷயமிது. நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்தோடு நின்றுவிடுகிறோம். நமது ரசனை, விருப்பங்கள். யாவும் அந்தக் காலத்தோடு உறைந்துவிடுகிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. சிலர் தன்னை1980களின் மனிதராக மட்டுமே இன்றும் நினைப்பதற்கு அது தான் காரணம். குறிப்பிட்ட ஒரு மலரைக் கண்ணால் பார்த்து அது எந்த நாளின் மலர் என்று கண்டறிய முடியாது. நேற்றின் மலர்கள் இன்றின் மலர்கள் என்பதெல்லாம் வெறும் தோற்றமே.
காதலர்கள் நீண்ட பிரிவிற்குப் பின்பு திரும்பச் சந்தித்துக் கொள்ளும் போது காலம் தான் உறுத்துகிறது. காலம் தான் பெரும் இடைவெளியாக அவர்கள் முன்நின்று வதைக்கிறது. குடும்பப் புகைப்படங்கள் காலத்தை நினைவுகளாக்கிவிடுகிறது.
இன்று காலமே பணமாக மாறுகிறது. எத்தனை மணி நேரம் வேலை செய்தோம் என்பதை வைத்து ஊதியம் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நிமிஷத்தையும் பணமாக்க வணிகர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மனிதனுக்கு ஒரு நாள் தான் வாழ்க்கை என்றிருந்தால் எப்படியிருக்கும். காலத்தின் முக்கியத்துவத்தை அப்போது தான் மனிதர்களால் நன்றாக உணரமுடியும்
காலம் குறித்து தத்துவவாதி ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்பியலாளர் டேவிட் போம் இருவரும் நீண்ட உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். அது The ending of time என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. அதில் ஜே.கிருஷ்ணமூர்த்தி விஞ்ஞானி போல பேசுகிறார் டேவிட் போம் தத்துவவாதி போல கருத்துகளை முன்வைக்கிறார். அது தான் வியப்பான விஷயம்.

பழத்தைச் சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.
எனத் தேவதச்சனின் கவிதை ஒன்று சொல்கிறது. உண்மையில் நாம் இன்றை உண்ணுகிறோம். இன்றை சுவாசிக்கிறோம். இன்றின் வெளிச்சத்தில் வாழுகிறோம்.
கவிதை எவ்வளவு அழகாகக் காலத்தைப் புரிய வைத்துவிடுகிறது பாருங்கள்
••
December 26, 2020
நிழல் பேசுவதில்லை.
புகைப்படக்கலைஞர் ஜான்ஐசக் நேர்காணல் ஒன்றில் அவர் யுனெஸ்கோவிற்காகப் பிரபல நடிகை ஆட்ரி ஹெபர்னுடன் செய்த பயண அனுபவங்களைப் பகிர்ந்திருப்பார்.
அதில் புகழ் வெளிச்சத்தைத் தன் மீது படிய விடாமல் ஹெபர்ன் எளிமையாக எல்லோருடன் பழகினார்.ஆதரவற்ற குழந்தைகளைத் தேடிச் சென்று உதவிகள் செய்தார். நோயுற்ற குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தார். கைவிடப்பட்ட சிறார்களுடன் கைகோர்த்து நடந்தார். குழந்தைகளுடன் இருக்கும் போது மிகச் சந்தோஷமாக உணர்வதாக ஹெபர்ன் சொன்னார். அந்த மகிழ்ச்சி அவரது கண்களில் பிரதிபலித்தது என்று ஐசக் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் ஹெலினா கோன் இயக்கிய Audrey: More Than An Icon ஆவணப்படத்தைப் பார்த்தேன். அதிலும் ஜான் ஐசக் நேர்காணல் இடம்பெற்றிருக்கிறது. முன்பு சொன்ன விஷயங்களின் தொடர்ச்சியைப் போல இதிலும் ஹெபர்னைப் பற்றிப் பேசியிருக்கிறார்

ஆட்ரி ஹெப்பர்ன் தனது 24 வயதில் தனது முதல் ஆஸ்கார் விருதை வென்றார் இன்றும் ஹாலிவுட்டின் நிகரற்ற நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார். திரை வெளிச்சத்தைத் தாண்டி உண்மையான ஆட்ரி ஹெபர்ன் யார் என்பதையே இந்த ஆவணப்படம் ஆராய்கிறது.
தனது தந்தையால் கைவிடப்பட்டு, ஹாலந்தில் நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் வளர்ந்து வந்தவர் ஹெபர்ன், ஒரு பாலே நடனக் கலைஞராக வேண்டும் என்பதே அவரது கனவு. இதற்காக நீண்டகாலப்பயிற்சிகள் எடுத்தவர் ஆட்ரி ஹெபர்ன். திரைத்துறைக்குள் நுழைந்தது தற்செயலே.
பிரஸ்ஸல்ஸில் உள்ள இக்செல்லஸில் பிறந்த ஹெபர்ன் தனது குழந்தைப் பருவத்தின் சில ஆண்டுகளைப் பெல்ஜியம், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் கழித்தார். ஆம்ஸ்டர்டாமில் சோனியா காஸ்கலுடன் மற்றும் லண்டனில் மேரி ராம்பெர்ட்டிடம் பாலே நடனம் பயின்றார். வெஸ்ட் எண்ட் இசை நாடக தயாரிப்புகளில் கோரஸ் பெண்ணாக நடிக்கத் தொடங்கி, பின்னர்ப் பல பிரிட்டீஷ் திரைப்படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்தார். 1951 ஆம் ஆண்டுப் பிராட்வே நாடகமான GIGIயில் ஹெப்பர்ன் நடித்தார், அதில் பிரெஞ்சு நாவலாசிரியர் கோலெட்டால் ஹெபர்ன் நாடக மேடைக்கு அறிமுகமானார்.

வில்லியம் வைலர் இயக்கி தயாரித்து 1953 ஆம் ஆண்டு வெளியான ரோமன் ஹாலிடே மூலம் ஆட்ரி ஹெபர்ன் சினிமாவில் அறிமுகமானார். இளவரசியாக ஆனாக அவர் தோன்றும் காட்சியில் தான் எத்தனை கம்பீரம். எவ்வளவு அழகு. அது போல வேடிக்கையான இளம்பெண்ணாக அவர் ஸ்கூட்டர் ஒட்டும் காட்சி உலகெங்கும் ரசிகர்களைக் கொண்டாடச் செய்தது.
இந்தப் படத்திற்காக ஆட்ரி ஹெபர்ன் ஆஸ்கார் விருது பெற்றார். ஒரே படத்தின் வழியே அவர் ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக உருமாறினார்
ரோமன் ஹாலிடே திரைப்படத்தில் எலிசபெத் டெய்லரே இளவரசி கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் வில்லியம் வைலர் செய்த ஸ்கிரீன் டெஸ்டில் ஹெபர்ன் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றவே அவரைப் படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள். வசீகரமாக முகமும், அப்பாவித்தனமான தோற்றமும் சிறந்த நடிப்பு திறமையும் கொண்டிருந்தார் ஹெபர்ன் ஆகவே அவரைத் தேர்வு செய்தேன் என்கிறார் வைலர்..

1964 ஆம் ஆண்டில் வெளியான ஹெபர்னின் My Fair Lady அவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது.
இந்த ஆவணப்படத்தில் ஹெபர்னின் சினிமா பற்றிய செய்திகள் குறைவாகவே உள்ளன. அவரது சொந்தவாழ்க்கையினைத் தான் படம் விரிவாகப் பேசுகிறது. திரையுலகின் பேரழகியாகக் கொண்டாடப்பட்ட ஹெபர்னின் திருமண வாழ்க்கை ஏமாற்றமானதாக மாறியது.
1954,ல் ஹெப்பர்ன் அமெரிக்க நடிகர் மெல் ஃபெரரை சந்தித்தார், மேலும் அவர்கள் ஒரு நாடகத்தில் ஒன்றாக நடித்தார்கள். அந்த நட்பு காதலாக மாறியது. எட்டு மாதங்களின் பின்பு, சுவிட்சர்லாந்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், War and Peace திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகனைக் கவனித்துக் கொள்வதாகத் திரையுலகில் தனது கவனத்தைக் குறைத்துக் கொண்டார் ஹெபர்ன். 14 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இருவரும் 1968 இல் விவாகரத்துச் செய்து கொண்டார்கள்.
அதன்பிறகு இத்தாலிய மனநல மருத்துவர் ஆண்ட்ரியா டோட்டியை ஜூன் 1968 இல் ஹெபர்ன் மத்திய தரைக்கடல் பயணத்தில் சந்தித்தார். அப்போது உருவான நட்பு மெல்ல வளர்ந்தது. அவர்கள் 18 ஜனவரி 1969 இல் திருமணம் செய்து கொண்டனர், அவர்களது மகன் லூக 1970ல் பிறந்தார். ரோமில் வாழத்துவங்கிய ஹெபர்ன் தனது புகழை மறந்து குடும்பத் தலைவியாக இயல்பாக வாழ்க்கையை மேற்கொண்டார். ஆனால் டோட்டிக்கு பல்வேறு பெண்களுடன் இருந்த கள்ள உறவும் அவரது நாணயமற்ற நடத்தையும் ஹெபர்னை வேதனைப்படச் செய்தது. அந்தத் திருமணமும் 1982 இல் விவாகரத்தில் முடிந்தது.
1980ல் இருந்து ஹெபர்ன் இறக்கும் வரை, டச்சு நடிகர் ராபர்ட் வோல்டர்ஸுடன் நெருக்கமாக இருந்தார். ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கை அவருக்கு ஆறுதல் தருவதாக இருந்தது என்கிறார்கள்

உலகையே சந்தோஷப்படுத்திய ஹெபர்னின் சொந்த வாழ்க்கை வேதனையும் பிரச்சனைகளும் நிரம்பியதாகவே இருந்தது. அவளது புகழும் பணமும் மட்டுமே அவளது கணவருக்குத் தேவையாக இருந்தது. அவளைப் புரிந்து கொள்ளவேயில்லை. தனது குடும்ப வாழ்க்கைக்காக அவள் சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்த போதும் அவர்கள் உறவு சீராகயில்லை. ஹெபர்ன் ஏமாற்றப்பட்டார். கணவராலும் நண்பர்களாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்.
இந்த ஆவணப்படத்தின் சில காட்சிகளில் அவரது கண்களில் தெரியும் துயரம் அவரது வாழ்க்கையின் அடையாளம் போலிருக்கிறது. இந்தப் பிரச்சனைகள் சொந்த வாழ்க்கையின் துயரங்களைக் கடந்து அவர் உலகின் மீது அன்பு காட்டவே யுனெஸ்கோவின் தூதுவராகச் செயல்படத் துவங்கினார். அந்தப் பயணமும் அனுபவமும் அவரைக் கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்க வந்த தேவதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.
புகழ் தான் ஹெபர்னை அதிகம் தொந்தரவு செய்த விஷயம். எந்த நேரமும் அவரது வீட்டினை புகைப்படக்கலைஞர்கள் சுற்றிக் கண்காணித்துக் கொண்டேயிருந்தார்கள். சுதந்திரமாக எங்கும் செல்லமுடியவில்லை. தோழிகள் இல்லை. அரிதாக வெளியே செல்லும் போதும் தேவையற்ற தொந்தரவுகளைச் சந்தித்தார்.
ஸ்விட்சர்லாந்தில் மகன் படிப்பதற்காகத் தனிவீடு வாங்கி அங்கே வாழ்ந்த ஹெபர்ன் அன்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கியிருக்கிறார். இளமையில் அவரது முகத்திலிருந்த வெகுளித்தனம் மெல்ல உறைந்து கலக்கமான, குழப்பமான முகமாக முதுமையில் மாறிவிட்டிருக்கிறது.

இளவரசியாகத் திரையில் அறிமுகமான ஹெபர்ன் மகாராணி போல வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால் வேடிக்கையான இளம்பெண்ணாகத் திரையில் ஒடியோடி சந்தோஷங்களை அனுபவித்த அந்த இளம்பெண் தான் நிஜவாழ்க்கையில் முடக்கப்பட்டார். அவருடன் பணியாற்றிய திரைப்பட இயக்குநர்கள் நடிகர்கள் அவரது நடிப்புத் திறனை வெகுவாகப் புகழ்ந்து பேசுகிறார்கள். அவரது சந்தோஷத்தை நடிப்பில் மட்டுமே காணமுடிந்திருக்கிறது.
சிறுவயதில் தன்னைக் கைவிட்டுப் போன தந்தை எங்கேயிருக்கிறார் என்று ஹெபர்ன் தேடிக் கண்டறிகிறார். அவரைத் தேடிப்போய் மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார். இத்தனை ஆண்டுகள் தன்னை வெறுத்துப் போன தந்தையை ஏன் அவர் இன்னும் நேசித்தார். எது அவரைத் தந்தையினைத் தேடிப்போய் உறவு கொள்ள வைத்தது. அவருக்குத் தந்தையின் நேசம் அன்பு தேவைப்பட்டது. ஆவணப்படத்தில் அந்தப்பகுதி சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
1992 இன் பிற்பகுதியில் சோமாலியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்குத் திரும்பியதும், ஹெபர்ன் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படத் தொடங்கினார். சுவிட்சர்லாந்தில் மருத்துவச் சிகிச்சைகள் செய்து கொண்டார். ஆனாலும் புற்றுநோயின் தாக்கம் என்பதால் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார் அங்கே அவருக்குக் கீமோதெரபி தரவேண்டிய நிலை உருவானது.
ஹெபர்ன் தனது கடைசிக் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காகச் சுவிட்சர்லாந்திற்கு வீடு திரும்ப முடிவு செய்தார் அவருக்கெனச் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் பயணம் செய்து சுவிட்சர்லாந்து சென்றார் ஹெபர்ன். அதுவே அவரது கடைசிப்பயணம். பின்பு அவர் வீட்டில் படுக்கையிலே நாட்களைக் கழித்தார்
ஜனவரி 20, 1993 அன்று, ஹெபர்ன் வீட்டில் தூக்கத்தில் இறந்து போனார். அவரது மரணத்திற்குப் பிறகு, கிரிகோரி பெக் கண்ணீர் மல்க ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “முடிவில்லாத காதல்” என்ற கவிதையைப் பாடினார். அது அவர்களுக்குள் இருந்த காதலின் அடையாளமாக ஒலித்தது.

சினிமா பெரும்புகழ் பணம் இரண்டினையும் அவருக்குத் தந்தது. ஆனால் இந்த இரண்டாலும் வாழ்க்கையைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியவில்லையே. அவரது பணம் புகழ் இரண்டும் அவருடன் இருந்தவர்களுக்கே அதிகம் பயன்பட்டிருக்கிறது. சினிமாவை விட்டு விலகிய போதும் அவரால் எளிய வாழ்க்கையை வாழ முடியவில்லை. காய்கறி கடை அல்லது இறைச்சிக் கடையில் அவரைக் காணும் பொதுமக்கள் அவரைத் துரத்தினார்கள். புகைப்படம் எடுக்கப் போட்டிப்போட்டார்கள். விருந்திற்குச் செல்வதற்கே ஹெபர்ன் பயந்தார்.
அவர் விரும்பி திருமணம் செய்து கொண்ட இரண்டு திருமணத்திலும் ஹெபர்ன் ஏமாற்றப்பட்டார். எது அவரது வாழ்க்கையினை இப்படிச் சுழித்தது. ஏன் அவர் விரும்பிய படி வாழ இயலவில்லை.
திருமண உறவின் சிக்கல்களை எப்படியாவது சரிசெய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியும் எனப் போராடியிருக்கிறார். ஆனால் அது இயலவில்லை. திரைப்படம் போல வாழ்க்கையில் முடிவு சந்தோஷமாக இருப்பதில்லையே.
Giving is living. If you stop wanting to give, there’s nothing more to live for. என்று ஹெபர்ன் சொல்கிறார். அது உண்மை. ஹெபர்ன் பணம், பொருள் மட்டும் கொடுக்கவில்லை. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாறாத நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
ஒரு தேவதைக் கதை போலவே அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நடந்திருக்கின்றன. வெற்றி அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் எந்தத் தேவதையும் திருமணத்தால் இப்படி வீழ்ச்சி அடைந்ததில்லை. அந்த வகையில் அவள் ஒரு மானுடப்பெண் என்பதையே நிரூபித்திருக்கிறார்
••
December 25, 2020
விழா
நேற்று எனது புத்தக வெளியீடு நேரலையின் வழியே சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் எனது விருப்பத்திற்குரிய வாசகர்களும் நண்பர்களும் புத்தகத்தின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர் பிரபாகரன். எழுத்தாளர் அகர முதல்வன். நண்பர் சண்முகம், இயக்குநர் மோகன். இணை இயக்குநர் மந்திரமூர்த்தி, மதுரை அழகர், ஆகிய அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி
நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஸ்ருதி டிவி கபிலன். சுரேஷ் இருவருக்கும் அன்பும் நன்றிகளும்
புத்தகங்களை அழகாக அச்சிட்டு உதவிய மணிகண்டனுக்கும் புத்தகத் தயாரிப்பில் உதவிய ஹரி பிரசாத், குருநாதன். அன்புகரன் உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும்
நேரலையில் கலந்து கொண்டு உரையாடிய வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.






https://www.facebook.com/100008908201177/videos/2471667653140151/
December 24, 2020
அஞ்சலி

தமிழ் பண்பாட்டின் வேர்களை நமக்கு அடையாளம் காட்டிய பெருந்தகை
தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிமையின் கண்கள்.
இளங்கவிஞரான வே.நி.சூர்யா மிகச் சிறப்பான கவிதைகளை எழுதி வருகிறார்.

கரப்பானியம் என்ற அவரது கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இதனைத் சால்ட் பதிப்பகம் வெளியீட்டுள்ளது

அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகும் கவிதைகளும் அற்புதமாக உள்ளன.
இணையம் மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வரும் அவரது கவிதைகள் தனித்துவமான குரலில் ஒலிக்கின்றன.
தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம். தானற்று போவதையும் தான் எதில், எவ்வாறு சிதறி வெளிப்படுகிறோம் அல்லது விலக்கப்படுகிறோம் என்பதையே சூர்யாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
அவரது கவிதை மொழி மிகவும் புதியது. ஐரோப்பியக் கவிதைகளில் காணப்படுவது போன்று எளிய தோற்றத்தில் அபூர்வமான கவித்துவ மொழிதலைக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக அவர் தனது கவிதையை துவங்கும் விதம் அபாரமானது.
எந்த சன்னலிடமும் நேற்று இல்லை
அவை வைத்திருப்பதெல்லாம் இன்றினை மாத்திரமே
என தனது சன்னல்கள் பற்றிய கவிதையைத் துவங்குகிறார். சன்னல் ஏன் கடந்தகாலத்தினை கைவிடுகிறது. அல்லது கடந்து போய்விடுகிறது. சன்னல் ஒரு திறப்பு. சட்டகம் மட்டுமே. அதன் வழியே காட்சிகள் மாறிக் கொண்டிருப்பதற்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை. உலகோடு நாம் கொள்ளும் தொடர்பின் ஒரு வடிவமே சன்னல். ஒரு வகையில் சன்னலுக்கு பின்னே நிற்பது பாதுகாப்பின் அடையாளம். சன்னல் வழியாக காணும் உலகம் ஒரு சட்டகத்திற்கு உட்பட்டது. ஆனால் சன்னலைக் கடந்து செல்லும் பறவையைப் போலவே காலம் செயல்படுகிறது. ஆகவே சன்னலிடம் நேற்றில்ல. அவை வைத்திருப்பது இன்றினை மாத்திரமே. கண்ணாடியைப் போல சன்னலை மாற்றும் அற்புதம் இந்தக் கவிதை வரியில் நடக்கிறது. சூர்யாவின் புதிய கவிமொழியும் கவிதை வெளிப்படுத்தும் விஷயங்களும் அவரை தனித்துவமிக்க இளங்கவிஞராக அடையாளம் காட்டுகின்றன
தேவதச்சன் கவிதைகளில் காணப்படுவது போல தொலைவும் அண்மையும் இவரது கவிதைகளிலும் இடம்பெறுகிறது. ஆனால் இவர் அந்த எதிர்நிலைகளுக்குள் தனது தத்தளிப்பையே முதன்மையாக்குகிறார்.
காற்று ஒருவனின் இருப்பை இடம் மாற்றம் செய்கிறது. உதிரும் இலைகளுக்கு ஒருவன் பெயரிடுகிறான். அவற்றை காதல்ஜோடிகளாக உலவவிடுகிறான். நிழலாகயிருப்பது நன்று நிழலாகக் கூட இல்லாமலிருப்பது அதனினும் நன்று என ஒரு கவிதை சொல்கிறது. பெரிய சந்தோஷத்தின் முன்பு சிறிய சந்தோஷம் மிரட்சி கொள்கிறது. சூர்யாவின் கவிதைமொழி பாதரசத்தைப் போல ஒளிருகிறது. சுய அனுபவத்தை இப்படியான கவிதைகளாக மாற்ற முடியுமா என வியப்பளிக்கின்றன இவரது கவிதைகள்.
அவர் மொழியாக்கம் செய்ய தேர்வு செய்யும் சர்வதேசக் கவிஞர்களும் முக்கியமானவர்கள். சிறந்த கவிதைகளை தேர்வு செய்து மொழியாக்கம் செய்து வருகிறார்
கவிஞர் வே.நி.சூர்யாவிற்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்
.•••••

சன்னல் கவிதைகள்
வே.நி.சூர்யா
எந்த சன்னலிடமும் நேற்று இல்லை
அவை வைத்திருப்பதெல்லாம் இன்றினை மாத்திரமே
நீங்கள் வேண்டுமானால்
‘இதோ வைத்துக்கொள் வைத்துக்கொள்’ என
நேற்றுகளை கொடுத்துப் பாருங்களேன்
குளிர்பொறுக்காமல் பனிக்கட்டிகளை நழுவ விடும் பாவனையோடு அவை
அவற்றை தவறவிட்டுவிடும்
நேற்றுகளை ஏற்றுவிட்டால்
உலகம் மண்ணோடு மண்ணாய்ப் போய்விடும் என்று
சன்னல்களுக்குத் தெரியும்..
00
திறந்திருக்கும் சன்னலுக்குள் காட்சிகளின் நதி ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நதியை நீந்திக்கடக்க முயன்று கொண்டேயிருக்கிறாள் ஒருத்தி
கரையை ஒவ்வொருமுறை நெருங்கும்தோறும்
கரை தூரம் தூரம் என சென்றபடியிருக்கிறது
ஆனால் மூடியிருக்கும் சன்னலுக்குள்
இருண்ட பாலைவனம் வளர்ந்துகொண்டிருக்கிறது
அப்பாலையில் மணல் இழுக்க இழுக்க
தன்னை வெளியே எடுத்துக்கொண்டே நடக்கிறான் ஒருவன்
இருவருமே ஒருவரையொருவர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் கட்டியணைத்துக்கொள்ளும்போது
சன்னல்களை திறக்கவோ மூடவோ முடியாது
00
ஒவ்வொரு சன்னலுக்கும் ஒரு எல்லையுண்டு
அந்த எல்லையில் எந்நேரமும்
ரோந்து செல்கிறார்கள் ராணுவ வீரர்கள்
கண்காணிப்பு கோபுரங்கள் தலையை
இங்கும் அங்கும் அசைக்கின்றன
திடுமென ஒருவரை மாற்றி ஒருவர்
சுட்டுக்கொள்கிறார்கள்
பீரங்கிகள் ஊர்ந்து செல்கின்றன
எரிநட்சத்திரங்கள் வீழ்வதுபோல் நெருப்புக்கட்டிகள் விழுகின்றன
சன்னல்களின் அமைதி உடன்படிக்கையை
காற்று ஒன்றிற்கு இரண்டு முறை படித்துப்பார்க்கிறது ..
00
சின்னஞ்சிறிய சந்தோஷங்கள் இருண்ட காலத்தில் வாழ்கின்றன
வே.நி.சூர்யா
1
பெரிய சந்தோஷங்கள் வரும்போது
சின்னஞ்சிறிய சந்தோஷம்
விழிவிரியமிரட்சியுடன்பார்க்கிறது
என்ன செய்ய
யாரோ ஒருவன்தான்
அதனிடம் தெம்புடன் இருக்கச்சொல்கிறான்
2
ஒரு சின்னஞ்சிறிய சந்தோஷம்
டீக்கடையில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறது
இருசக்கர வாகனத்தில்
முறைத்துக் கொண்டே போகிறது பெரிய சந்தோஷம்
3
ஒருசமயத்தில்
சின்னஞ்சிறிய சந்தோஷத்தை கரப்பான் பூச்சி உட்பட
யாருமே கண்டுகொள்ளவில்லை
சுவரில் முட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறது
••
ஒரு டிசம்பர் மாலைப்பொழுது
வே.நி.சூர்யா
காற்றடித்தால்
உயரத்திலிருந்து
சிணுங்கிச் சிணுங்கி
நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் எனத்
தெரிவிக்கும்
இந்த உலோகக் கிண் கிணிகளை
நீ என்று நினைத்தது தவறாகப் போயிற்று
இப்போது பார்
காற்று வீசும்போதெல்லாம் அருகிலிருப்பவனாகவும்
வீசாதபோதெல்லாம் தூரத்திலிருப்பவனாகவும்
மாறிக்கொள்ள வேண்டியிருக்கிறது எனக்கு
சோகம்தான். .
•••
சாவதானம்
வே.நி.சூர்யா
பூங்காவில் இருக்கையின் மீது
ஒரு இலை
விழுகிறது.
சற்றுநேரத்தில் இன்னொரு இலை.
நான் முதலில் விழுந்த இலைக்கு மாதவி எனவும்
இரண்டாவது இலைக்கு சூர்யா எனவும் பெயரிடுகிறேன்
இப்போதோ இருவரும் அருகருகே அமர்ந்து
பூங்காவின் சாவதானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
எனக்குத் தெரியும்
இன்னும் கொஞ்சநேரத்தில் இந்நகரின் மீது ஜோடியாக பறப்பார்கள்
நான் சந்தோஷத்துடன் பார்ப்பேன்..
•••
வே.நி.சூர்யா மொழியாக்கம் செய்துள்ள கவிதைகள்.

ஓர் இலையுதிர் காலத்து காலை
– டோபிரிசா செசாரிக்
நான் உடையணிந்து கொண்டேன்.
பின்பு சன்னலை நோக்கிச் சென்றேன்.
வெளியே: இலையுதிர் காலம்.
என் நண்பன் உள்ளே வந்தான். அவனுடைய மேலங்கியோ நனைந்திருந்தது.
என் மொத்த அறையையும் மழையின் வாடை அடிக்கும்படிச் செய்திருந்தான்.
ஒரு “வணக்கம்” கூட சொல்லவில்லை.
உட்கார்ந்தான்.
பிறகு யோசனையில் ஆழ்ந்தவாறு
அவன் சொன்னான்: “இலையுதிர் காலம்”
அந்த வார்த்தையோ அவ்வளவு புதியதாக இருந்தது
மழைக்குப் பிறகான
கிளையிலிருக்கும் ஆரஞ்சு போல.
*
நன்றி: Dobrisa Cesaric Poems
••
எஹுதா அமிக்ஹாய் கவிதைகள்
••••

ஒருவரை மறந்துவிடுவது
ஒருவரை மறந்துவிடுவது என்பது
புழக்கடையிலிருக்கும் விளக்கை
அணைக்காமல் விடுவதைப் போன்றது
ஆகையால் அது ஒளிர்ந்துகொண்டேயிருக்கும் மறுநாள் வரைக்கும்.
ஆனால் பின்பு அதன் வெளிச்சமே
நமக்கு ஞாபகப்படுத்திவிடும்.
**
பிறகு நினைவுகூர்பவர்களை யார் நினைவுகூர்வது?
மறக்கப்படுதல், நினைக்கப்படுதல், மறக்கப்படுதல்.
திறந்திருத்தல், மூடியிருத்தல், திறந்திருத்தல்.
(தொடர் கவிதையின் ஒரு பகுதி)
**
கடலும் கரையும்
கடலும் கரையும் எப்போதும் ஒவ்வொன்றுக்கும்
அடுத்தடுத்ததாக உள்ளன.
இரண்டும், ஒரு வார்த்தையை மட்டும்,
பேசவும் சொல்லவும்
கற்றுக்கொள்ள விரும்புகின்றன.
கடல் “கரை” என்று சொல்ல விரும்புகிறது
கரை “கடல்” என்று சொல்ல விரும்புகிறது
மில்லியன் வருடங்களாக, அவை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன, அந்த ஒரு வார்த்தையை
பேசுவதற்காகவும் சொல்வதற்காகவும்.
கடல் “கரை” என்றும் கரை “கடல்” என்றும் சொல்லும்போது,
மீட்சி உலகத்திற்கு வருகிறது,
உலகமோ பெருங்குழப்பத்திற்கே திரும்புகிறது.
••
சார்லஸ் சிமிக் கவிதைகள்

ஒரு காகத்தைப் போல கடந்து செல்லுதல்
இலைகளற்ற இந்த மரங்களுக்காக பேசுவதற்கு
உனக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறாதா?
துணியுலர்த்தும் கொடியிலிருக்கும்
ஒரு ஆணின் சட்டையையும் ஒரு பெண்ணின் இரவு உடையையும்
காற்று என்ன செய்ய நினைத்திருக்கிறது என்று உன்னால் விளக்க முடியுமா?
கருத்த மேகங்களை குறித்து உனக்கு என்னத் தெரியும்?
உதிர்ந்த இலைகளால் நிறைந்த குளங்களைக் குறித்து?
சாலையோரச் சந்துகளில் துருப்பிடித்து நிற்கும் பழைய ரக கார்களை குறித்து?
சாக்கடையில் கிடக்கும் பியர் குப்பியைப் பார்க்க யார் உன்னை அனுமதித்தது?
சாலையோரத்தில் கிடைக்கும் வெண்ணிறச் சிலுவையை?
விதவையின் வீட்டு முற்றத்தில் இருக்கும் ஊஞ்சலை?
உன்னை நீயே கேட்டுக்கொள்
சொற்கள் போதுமானவையா
இல்லை மரம் விட்டு மரம் சிறகடித்து பறக்கும் ஒரு காகத்தைப் போல
நீ கடந்து செல்வது மேலானதா?
**
அச்சம்
ஏனென்றே தெரியாதவாறு
அச்சம் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது,
ஒரு இலை தன் விதிர்ப்பை மற்றொன்றிற்கு கைமாற்றுவதைப்போல.
திடீரென மொத்த மரமும் அதிர்கிறது,
ஆனால் அங்கே காற்றின் எந்த அறிகுறியுமில்லை.
**
நித்தியத்துவத்தின் அனாதைகள்
ஒரு இரவில் நீயும் நானும் நடந்து கொண்டிருந்தோம்.
மிகப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது நிலவு.
அப்புறம் முகில்கள் வந்து அதை மறைக்கப் பார்த்தது.
அதனால் வெறுங்கால்களில் மணலினை உணரும் வரைக்கும்
நம் பாதையில் கண்மூடித்தனமாக செல்ல வேண்டியிருந்தது
பிறகு அலையடிப்பதை செவியுற்றோம்.
நீ என்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா?
“இந்த தருணத்திற்கு வெளியிலிருக்கும் அனைத்துமே பொய்கள்தான்”
நாம் இருட்டில் உடைகளை கழற்றிக் கொண்டிருந்தோம்
சரியாக நீரின் விளிம்பில்
என் மணிக்கட்டிலிருந்து கைக்கடிகாரத்தை நழுவவிட்டபோது,
உனக்கு தெரியாமலும்
பதிலுக்கு எதையும் சொல்லிக்கொள்ளாமலும்
நான் அதை எடுத்து கடலில் தூக்கி எறிந்தேன்.
நன்றி
December 23, 2020
சஞ்சாரம் -ஒவியம்
சஞ்சாரம் நாவலை வாசித்த கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் நாதஸ்வரக் கலைஞர் பற்றிய ஒவியம் ஒன்றை வரைந்து அனுப்பியிருக்கிறார். நாவல் குறித்த அவரது பாராட்டிற்கும் அழகான ஒவியத்திற்கும் நன்றி

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
