கடவுளின் எட்டாம் நாள்

சமகால ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய ஒரு குறுங்கதையை வாசித்தேன்.  இவர்  ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு சிறந்த உதாரணம் போலிருக்கிறது இக் கதை.

***

உலகைச் சிருஷ்டித்து சலித்துப் போன கடவுள்  எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதைப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி எழுந்த போது அங்கிருந்த டிவியைக் காணவில்லை.

எங்கே போனது என்று தெரியாமல் குழம்பி போனார்.  இதனால் என்ன விளைவுகள் உருவாகப் போகிறதோ தெரியவில்லையே என்று ஆதங்கபட்டார்.

அது நிஜம். சாத்தான் அந்த டிவியைத் திருடிக் கொண்டு போய், என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த ஆதாம் ஏவாளிடம் விற்று விட்டான். அதுவும் ஆதாம் இல்லாத நேரமாகப் பார்த்து ஏவாளிடம் பேரம் பேசி மயக்கி அதை விற்றிருந்தான்.

அப்பாவி ஆதாம், விலங்குகளுக்குப் பெயர் வைத்து முடித்துவிட்டு பசியோடு வீடு திரும்பி வந்து, என்ன சாப்பாடு என்றபடியே ஏவாளை சமையல் அறையில் தேடினான். அவளை அங்கே காணவில்லை. அவள் வெளிச்சம் மினுமினுங்கும் ஒரு பெட்டியின் முன்னால் ஒய்யாரமாகச் சாய்ந்தபடியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதைக் கண்டான்.

என்ன அது கேட்டபடியே அருகில் போய் நின்றான்.

அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் டிவியில் ஒடும் காட்சிகளை ஆசையோடு  பார்த்து கொண்டிருந்தாள் ,

டிவியில் தோன்றிய கவர்ச்சியான விளம்பரங்களைக் காட்டி, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆதாம் கேட்டான். எனக்கும் தெரியவில்லை ஆனால் வசீகரமாகயிருக்கிறது என்றாள் ஏவாள்.

அவள் அருகில் எப்படி ஒரு பாப்கார்ன் பாக்கெட் வந்தது என்று ஆதாமிற்குப் புரியவேயில்லை. அவன் தானும் ஒரு கை நிறைய பாப்கார்ன் எடுத்துமென்றபடியே பசியை மறந்து டிவி பார்க்கத் துவங்கினான்.

டிவி அவனுக்குள் இச்சையை தூண்டியது. அவன் ஏவாளை வியப்போடு உற்றுப் பார்க்கத் துவங்கினாள். அப்படி என்ன பார்க்கிறாய் என்று ஏவாள் கேட்டாள். இத்தனை நாட்கள் விலங்குகளுக்குப் பெயர்வைக்கப் போகிறேன் என்று வெட்டியாக அலைந்து திரிந்ததில் உன்னுடைய அழகை ரசிக்கத் தவறிவிட்டேன்.  உண்மையில் நீ ஒரு பேரழகி என்றான்.

ஆஹா, தன்னை ஆதாம் இவ்வளவு ரசிக்கிறானே என்று பெருமிதம் கொண்டாள் ஏவாள்.

அவர்கள் இருவரும் தங்களை மறந்து டிவி பார்த்து கொண்டிருந்தார்கள்.

கடவுள் படைத்த உடலுக்கு நிறைய வேலை இருக்கிறது என்பதை டிவி வழியாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

அத்துடன் விளம்பரத்தில் வந்த பல்வேறு வீட்டு உபயோகப்பொருட்களை தாங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்று ஆசை கொண்டார்கள்.

அன்றிரவு புகைபிடிப்பதற்காக ஆதாமின் பண்ணை வீட்டுபக்கம் நடந்துபோன கடவுள், என்ன வாழ்க்கையிது என்று புலம்பியபடியே ஆதாமின் வீட்டைக் கவனித்தார்.

ஏதோ வெளிச்சம் பீறிட்டுக் கொண்டிருந்தது. ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்

அவரால் நம்பவே முடியவில்லை. டிவி ஒடிக்கொண்டிருந்தது. அதன் முன்னே ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் கட்டிபிடித்து முத்தமிட்டபடியே மல்யுத்தம் போல ஒருவர்மீது மற்றவர் ஏறி அமர்ந்து இறுக்கிப்பிடித்து உருண்டு கொண்டிருந்தார்கள்.

நிச்சயம் இது தனது எதிரியான அந்த சாத்தானின் வேலை தான் என்று கடவுளுக்குத் தெரிந்து போனது.

திருட்டுப்பயல், நம்ம பிள்ளைகளை இப்படிக் கெடுத்துவிட்டானே என்று சாத்தான் மீது கடுமையான கோபம் வந்தது.

ஒரு வாரம் கஷ்டப்பட்டு நாம உருவாக்கியதை  மோசம் செய்து விட்டானே, எனப்  புலம்பியபடியே கதவை ரகசியமாகத் திறந்து உள்ளே போய் டிவியை அணைத்தார்.

திடுக்கிட்டு எழுந்த ஆதாம் ஏவாளைப் பார்த்து, இந்தத் தவறுக்காக நீங்கள் தண்டிக்கப்படப் போகிறீர்கள் என்று கோபத்துடன் சொன்னார்.

இருவரும் தங்களின் பாவச்செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்கள். ஆனாலும் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதாமே, நீயும் உன் வாரிசுகளும் இனிவாழ்நாள் முழுவதும் கேபிள் டிவி இணைப்பிற்காக மாதமாதம் பணம் செலவழித்து சீரழிந்து போவீர்கள்.

ஏவாளே, இனி நீ பிள்ளைகளை வளர்க்கும் பிரச்சனையுடன் பகல் முழுவதும் டிவி பார்த்து உன் நேரத்தைச் செலவழிக்க நேரிடும் என்ற தண்டனையைத் தருகிறேன் என்றார்.

அத்துடன் சாத்தானின் வீட்டை நோக்கிச் சென்று, மோசக்காரனே உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தினார்.

சாத்தான் ,முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று ஏளனம் செய்தான்.

ஆத்திரமான கடவுள் உலகை அழிப்பதற்கான மஹாபிரளயத்தை உருவாக்கினார்.  பகலிரவாக மழை கொட்டியது. வெள்ளம் உலகெங்கும் நிரம்பியது . முப்பத்தி ஒன்பது நாட்கள்பெருமழை பெய்தது. நாற்பதாம் நாள் கடவுளின் கோபம் தணிந்தது.

வெள்ளம் வடிந்த பிறகு கடவுள், நோவாவின் கப்பல் என்னவானது என்று காண்பதற்காகச் சென்றார். அது அரராத் மலையில் தட்டி நின்றிருந்தது.

அங்கே நோவா எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். என்ன அது என்று கடவுள் நெருங்கிப் போய் கண்ட போது அவன் முன்னே இரண்டு டிவிகள் ஒடிக் கொண்டிருந்தன.

எப்படி இரண்டு டிவி வந்தது என்று புரியாமல் கடவுள் கோபபடவே , உலகில் உள்ள ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியை காப்பாற்ற வேண்டும் நீங்கள் தானே கட்டளை தந்தீர்கள். அதனால் இரண்டு டிவிகள் காப்பாற்றபட்டன என்றான்.

கடவுளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை

அதன் பிறகு நோவாவின் வாரிசுகளும் வாரிசுகளின் வாரிசுகளும் பெரிய பெரிய டிவிகளைப் பார்க்கத் துவஙகினார்கள்.  அரசியல், விளையாட்டு. வானிலை, அன்றாடச் செய்திகள், சினிமா, சமூகப்பிரச்சனைகள் என்று சேனல் மாற்றி மாற்றிச் சலிக்காமல் பார்த்து தொலைக்காட்சியின் அடிமைகளானார்கள்.

மனிதர்களைத் தன்னால் திருத்தமுடியாது என்று ஒய்வு பெற்ற கடவுளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தனியாக முதுமையை கழிக்க ப்ளேராரிடா மாநிலத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

சமீபமாக அவரை தொலைக்காட்சி சேனலுக்காக நேர்காணல் செய்த போது, ஒருவேளை தன்னுடைய சிருஷ்டியைத் திருத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் டிவியை  உருவாக்கமல் தவிர்த்துவிடுவேன் என்றார்.

இது விளம்பரத்திற்காக அவர் அடித்த ஸ்டண்ட் என்றே பலரும் நினைத்தார்கள்.

••••

மீள்பிரசுரம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 04:47
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.