பிரபஞ்சனின் நினைவு

இந்தப் புத்தகக் கண்காட்சி துவங்கிய நாளில் இருந்தே பிரபஞ்சனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இல்லாத வெறுமை மனதைப் பெருந்துயரம் கொள்ளச் செய்கிறது. எத்தனை அன்பான மனிதர். அவரோடு புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன

அவரைப் பற்றி முன்பு எழுதிய கட்டுரையினை நேற்று திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். மனதில் அவர் இல்லாத வலி மேலும் அதிகமாகியது

••

பிரபஞ்சனின் இணையற்ற தோழமை என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி :

பிரபஞ்சன் என்றால் மனதில் தோன்றும் முதல் பிம்பம் சிரித்துக் கொண்டேயிருக்கும் அவரது முகம். இனிமையான குரலில் வரவேற்று நலம் விசாரிக்கும் பண்பு. கையில் காசேயில்லாமல் அறையில் அவர் தனித்துவிடப்பட்டிருந்த நாளில் கூடச் சந்தித்திருக்கிறேன். அப்போதும் அந்தச்சிரிப்பு மாறியதேயில்லை. அது வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பு. நீ என்னைக் குப்புறத்தள்ளி விட்டதாக நினைக்கிறாய். நான் ஒரு எழுத்தாளன். பொருளாதாரக் கஷ்டங்களால் ஒரு போதும் விழுந்துவிடமாட்டேன் என இறுமாறுப்புடன் வெளிப்பட்ட புன்னகை.


தனது கஷ்டங்கள், உடல்நலப்பிரச்சனைகள் குறித்து ஒரு போதும் அவர் புலம்பியவரில்லை. எவரிடமும் கையேந்தி நின்றவரில்லை. அதே நேரம் தனது சந்தோஷங்களைத் தனித்துக் கொண்டாடியதேயில்லை. தன் மகிழ்ச்சியை நண்பர்களுக்கு பகிர்ந்து தருவதில் நிகரற்றவர். அவரது அறை எப்போதும் நண்பர்களுக்காக திறந்தேயிருந்தது. அதிலும் என்னைப் போல எழுத்தாளர் ஆக வேண்டும் என வேலையில்லாமல் அலைபவர்களுக்கு அந்த அறை நிரந்தரப் புகலிடமாகவே இருந்தது.


இளம் எழுத்தாளர்களை அவரைப் போல பாராட்டிக் கொண்டாடிய இன்னொருவரை நான் கண்டதில்லை. சில நேரங்களில் இவ்வளவு பெரிய வார்த்தைகளால் புகழ்கிறீர்களே என அவரிடமே கேட்டிருக்கிறேன்.

பாராட்டு தானே ராமகிருஷ்ணன் எழுத்தாளனை மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆயிரம் ரூபாய் கொடுப்பதை விடவும் அவனது கதை கவிதை சிறப்பாக உள்ளது. நீ மிக நன்றாக எழுதுகிறாய் என்று பாராட்டு சொல்வதை தானே படைப்பாளி பெரியதாக நினைக்கிறான். நல்ல படைப்புகளை யார் எழுதினாலும் எந்தப் பத்திரிக்கையில் வந்தாலும் தேடிப் படித்து உடனே பாராட்டக்கூடியவன். அது எனது கடமை என்று சொன்னார் பிரபஞ்சன்.

இந்தப் பண்பு அவரை எப்போதும் இளந்தலைமுறை படைப்பாளியோடு தோழனாக இருக்க வைத்தது.


புதுச்சேரி மண்ணின் வரலாற்றையும் அவர் ஆழமாக அறிவார். இதை விரிவாக எழுதியும் இருக்கிறார் எழுத்து, இசை,கலை,பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானே அன்றி வேறு எதற்கும் இல்லை. அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே பிரதானமாக ஒரு உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும், என்பதே என் செய்தி எனப் பிரபஞ்சனே தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அது முற்றிலும் உண்மை

புதுமைப்பித்தன் காலம் முதல் இன்று வரை தமிழ் எழுத்தாளர் எழுத்தை மட்டுமே நம்பி வாழமுடியாத நிலைதான் நிலவுகின்றது. பிழைப்பிற்காகவே பத்திரிக்கை துறையில் வேலை செய்தார். பத்திரிக்கைகள் தனக்கான உலகமில்லை என்று அறிந்து கொண்டபிறகு எழுத்தை மட்டுமே நம்பி வாழுவது என முடிவு செய்து கொண்டார். அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது. அது ஒரு தற்கொலை முயற்சி எனத் தெரிந்துமே அதில் ஈடுபட்டேன் என்று சிரித்தபடியே சொன்னார்.

1970களில் ‘இல்லஸ்டிரேடட் வீக்லி’ போல அழகான இலக்கியப் பத்திரிகை தமிழில் நடத்தவேண்டும் என்பது அவரது கனவாக உருவானது. இதற்காக புதுவையில் பாரதி அச்சகம்’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றைக் காந்தி வீதியில், சின்னப்பிள்ளையார் கோயில் பக்கத்தில் தொடங்கினார். மனைவியின் நகையை விற்று டிரடில் மெஷின் வாங்கினார். அதில் பாரதியாரின், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற கவிதையைக் கம்போஸ் பண்ணி அச்சேற்றினார். ஆனால் அது முழுமையாக அச்சாகவில்லை.

அப்போது தான் அந்த மிஷின் உடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தன்னை ஏமாற்றி விற்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.. வேறுவழியின்றி அந்த அச்சகத்தைச் சொற்ப விலைக்கு விற்பனை செய்தார். சிறந்த பத்திரிக்கை ஒன்றை நடத்த வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறவேயில்லை

பிரபஞ்சன் ஒப்பனை செய்து கொள்வதிலும் நேர்த்தியாக உடைகள் அணிந்து கொள்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அழகான தோற்றம் கொண்டவர். உயர் ரக ஜிப்பா அணிந்து அவர் கூட்டங்களுக்கு வருவதைக் காண அத்தனை வசீகரமாகயிருக்கும். காபியை விரும்பிக் குடிப்பவர் என்பதால் அவருக்குச் சரவணபவன் காபி மீது கூடுதல் விருப்பம். அங்கே பணியாற்றுகிற அத்தனை பணியாளர்களையும் அவர் அறிவார். அவர்கள் குடும்ப நலன்களைக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை ஒரு சர்வருக்கு உடல் நலமில்லை என அறிந்து பைநிறைய ஆரஞ்சு பழங்களை வாங்கி அளிப்பதை நேரில் கண்டிருக்கிறேன். மகாகவி பாரதியிடம் இது போன்ற அன்பு இருந்த்தாகச் சொல்லியிருக்கிறார்கள். அதே அன்பு பிரபஞ்சனிடமும் இருந்தது.

புதுவையில் இருந்து சினிமாத்துறையில் பிரவேசிக்க வேண்டியே அவர் சென்னைக்கு வந்தார்.  ஆனால் அந்த ஆசை ஒன்றிரண்டு வருஷங்களிலே வடிந்துவிட்டது, காரணம் அவர் பட்ட அவமானங்களே. ஆனால் கரந்தை தமிழ் கல்லூரியில் முறையாக தமிழ் கற்றவர் என்பதால் பத்திரிக்கை துறையிலும் எழுத்து துறையிலும் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். பிரபஞ்சனின் கதைகள் அதிகமும் பெண்களின் துயரத்தை பேசின. எளிய மனிதர்களின் வாழ்க்கையை கவனத்துடன் அக்கறையுடன் அன்புடன் அவர் எழுதினார். 

தனது வம்சத்திலே பெண் பிள்ளைகள் கிடையாது. எல்லோருக்கும் ஆண்பிள்ளைகள் தான். எனக்கும் ஆண்பிள்ளைகள் தான். ஆகவே நான் சந்திக்கும் இளம்பெண்களை மகளைப் போல நினைத்துக் கொள்வேன் என்று ஒருமுறை பிரபஞ்சன் சொன்னார். அவரது மகள் போல நேசித்த பெண் படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நூலிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். வெளியீட்டு விழாக்களில் பேசி அவர்களைக் கொண்டாடியிருக்கிறார். அவர்களின் சொந்த வாழ்க்கையில் துயரம் கவ்வும் போதெல்லாம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் எத்தனையோ பெண் படைப்பாளிகளின் தந்தை என்றே சொல்வேன்

வரலாற்றை மீள்ஆய்வு செய்வதிலும் வரலாற்று உண்மைகளை உலகம் அறியச் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். புதுவையின் வரலாற்றை விவரிக்கும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியை முதன்மையாகக் கொண்டு அவர் உருவாக்கிய வானம் வசப்படும்,  மிகச்சிறப்பான வரலாற்று நாவல்.  அந்நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. அந்த விருது அறிவிக்கபட்ட நாளில் அவரைத் தேடிச் சென்று வாழ்த்துச் சொன்னேன். தமிழில் நல்ல வரலாற்று நாவல்கள் இல்லை என்று நீண்ட குறையிருந்து வந்தது. அந்தக்குறையை போக்கும் ஒரு நாவலை நான் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி என்று சொன்னார். அது வெறும் தற்பெருமையில்லை. இலக்கியவாதி தன் படைப்பின் மீது கொண்ட மரியாதை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2021 22:48
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.