நாச்சியாரு, என் பிரியே
கி.ராவின் ’கன்னிமை’ சிறுகதையில் வரும் நாச்சியாரைப் பற்றி நினைக்கும் போது மனதில் மணிமேகலையின் உருவம் தோன்றி மறைகிறது. இருவருக்கும் ஒரே சாயல்.

நாச்சியார் கன்னிப்பெண்ணாக இருந்த போது எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிறாள். ஒடியோடி உதவிகள் செய்கிறாள். அன்பு மயமாக இருக்கிறாள். வேலைக்காரர்களுக்குக் கூட அவள் கையில் தான் கஞ்சி ஊற்றுவது பிடித்திருக்கிறது. பருத்தி எடுக்கும் பெண்கள் கூட அவள் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மாஎன்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி
அவளுக்கு ரங்கையாவோடு திருமணமாகிறது. திருமணம் பேசி முடிக்கபட்டதும் அவள் மூன்று நாட்கள் நினைத்து நினைத்து அழுகிறாள். திருமணமானதும் அவளது இயல்பு மாறிவிடுகிறது. இப்போது அவளிடம் அள்ளிக் கொடுக்கும் மனசில்லை. வாசலில் வந்து யாசிப்பவருக்குச் சோறு போட முகம் சுளிக்கிறாள். வேலைக்காரர்களைக் கோவித்துக் கொள்கிறாள். கணவனுக்கு உடல் நலமில்லை என்னும் நிலையிலும் வீட்டுக்கணக்குப் பார்ப்பதில் தான் கவனம் செலுத்துகிறாள்.
இந்த கதையில் வரும் உணவு வகைகளும் அதன் தயாரிப்பும் நாவில் எச்சில் ஊறச் செய்கின்றன அத்துடன் நாச்சியாரைப் பற்றிய இந்த சித்திரம் அபூர்வமானது
அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின் வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத் தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட ’ வடிவத்தில் ஒரு துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த ’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும். அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும் பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள். வாசித்துக்கொண்டே வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப் பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.
அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும் செய்யும்; ‘கேட்க ’வும் செய்யும்.
விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும் விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும் அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.
“நாச்சியாரு,என் பிரியே !நீ எங்கிருக்கிறாய்?” என்று கதையை முடிக்கிறார் கி.ரா.
திருமணமான நாச்சியாரிடம் இந்த மாற்றங்கள் தானே உருவாகின்றன. கிரா கன்னிமையின் அடையாளமாக அவளது தாராள மனதையும் அன்பு செலுத்துவதையும் சொல்கிறார்.
மணிமேகலையின் கையில் அட்சயபாத்திரம் கிடைப்பதும் அவள் பெருங்கருணையுடன் பசித்தோருக்கு உணவு வழங்கியதும் இந்தக் கன்னிமையால் தானா
நாச்சியாரும் மணிமேகலையும் சகோதரிகள் போலவே இருக்கிறார்கள்
நாச்சியாரு என் பிரியே நீ எங்கிருக்கிறாய் என்ற குரல் கதையைத் தாண்டி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
கிராம வாழ்க்கையில் தான் கண்டறிந்த பெண்ணின் நினைவில் இந்தக் கதையை எழுதியதாகக் கிரா நேர் பேச்சில் குறிப்பிட்டார். நாச்சியாருக்கு மாற்றாகத் திருமணமான பின்பு தாராள மனதுடன் அள்ளிக் கொடுக்கத் துவங்கிய பெண்களை நான் அறிவேன். அவர்கள் வறுமையான குடும்பச் சூழல் காரணமாகப் பசியும் பட்டினியுமாக வளர்ந்தவர்கள். நல்ல இடத்தில் திருமணமாகிப் போனதும் அவர்களின் வயிறு நிறைந்ததோடு கொடுக்கும் மனதும் உருவாகிவிட்டது.
பெர்க்மெனின் வர்ஜின் ஸ்பிரிங் திரைப்படத்தில் கன்னிப்பெண் கொல்லப்படுகிறாள். அவள் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு நீரூற்று பிறக்கிறது. அந்த நீரூற்று வற்றாத அன்பின் அடையாளம். அதைத் தான் கிராவும் சொல்கிறார் என நினைக்கிறேன்.
கிராவின் சிறுகதைகளில் வரும் பெண்கள் அசலானவர்கள். அபூர்வமான கதாபாத்திரங்களாக உருவாக்கப்பட்டவர்கள். நடுத்தரவர்க்க குடும்பங்களைச் சித்தரிக்கும் கதைகளில் காணமுடியாத வலிமையும் துணிச்சலும் வெளிப்படையான பேச்சும் கோபமும் கொண்டவர்கள். இந்தக் கதையில் வரும் நாச்சியார் மிகச்சிறந்த கதாபாத்திரம்.
கன்னிமை தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான சிறுகதை
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
