உறக்கத்தை வரைபவர்
ஹென்றி மாங்குயின் (Henri Manguin )என்ற பிரெஞ்சு ஓவியரின் La Sieste என்ற ஓவியம் உறக்கத்திலுள்ள ஒரு பெண்ணைச் சித்தரிக்கிறது.

1905ல் வரையப்பட்ட இந்த ஓவியத்திலிருப்பவர் மாங்குயினின் மனைவி ஜீன். அவளை மாடலாகக் கொண்டு மாங்குயின் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார்
இந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் மனதில் ஜப்பானிய நாவலாசிரியரான யாசுனாரி கவாபத்தா எழுதிய House of the Sleeping Beauties நாவல் தான் நினைவிற்கு வந்தது. மயக்க நிலையில் உறங்கும் பெண்ணின் அருகில் அவளறியாமல் படுத்து உறங்கும் கிழவரின் இரவுகளைப் பற்றிய அந்த நாவல் பாலுணர்வைத் தாண்டிய பெண்ணின் தேவையை, நெருக்கத்தை நுட்பமாக விவரிக்கிறது.

இயற்கைக் காட்சிகளை, நிர்வாணப்பெண்களை, நீராடும் அழகிகளை, மலர்த்தோட்டங்களை, விருந்துக்காட்சிகளை ஐரோப்பாவில் நிறைய ஓவியர்கள் சிறப்பாக வரைந்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு ஓவியர் தொடர்ந்து உறக்கத்தை வரைவது என்பது அபூர்வமான விஷயம்.

உறக்கத்தில் உங்களின் அழகை நீங்கள் காட்டிக் கொள்ள முடியாது. ஒருவகையில் நீங்கள் இயற்கையைப் போல இயல்பாக இருக்க நேரிடுகிறது. இயக்கத்தில் வெளிப்படும் அழகினை விடவும் ஓய்வில் வெளிப்படும் அழகு மாறுபட்டது. தனித்துவமானது.
பொதுவாக ஒருவரின் உறக்கத்தினை மற்றவர் அவதானிப்பதில்லை. உறங்கும் போது நாம் யாருடைய சாயலில் உறங்குகிறோம் என்று நமக்குத் தெரியாது.
உறங்கும் பெண்ணின் உருவத்தை மாங்குயின் நிறைய வரைந்திருக்கிறார். La Sieste ஓவியத்தில் மரங்களுக்கு நடுவே சாய்வு நாற்காலியில் உறங்கும் பெண்ணின் மீது படும் ஒளி அலாதியானது. நடுத்தரவயதுடைய பெண்ணின் உடல் மற்றும் அவளது உடை. அவள் சாய்ந்து படுத்துள்ள விதம். அந்த முகத்தில் வெளிப்படும் சாந்தம் அழகாக வரையப்பட்டிருக்கிறது. வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ள விதமும் ஓய்வின் இதத்தை வெளிப்படுத்தும் உணர்வும் சிறப்பாக உள்ளன.
பிரெஞ்சு ஓவியரான ஹென்றி சார்லஸ் மாங்குயின் இம்ப்ரெஷனிசத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர், பிரகாசமான வெளிர் வண்ணங்களை அவர் பயன்படுத்துவதில் இதன் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது.

உறக்கத்தின் போது உங்கள் கை மற்றும் கால்கள் நெகிழ்வடைந்து விடுகின்றன. இந்த ஓவியத்திலும் அது அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கால்களைக் குறுக்கேயிட்டு உறங்குவதன் மூலம் வெளியிடத்தில் உறங்குகிறோம் என்ற கவனம் இருப்பதாகத் தோன்றுகிறது.
சற்றே சாய்ந்து உறங்கும் பெண்ணின் முகத்தில் சந்தோஷம் படர்ந்திருக்கிறது. அவரைச் சுற்றிய இயற்கையின் இயக்கம் இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர் தன்னை இயற்கையின் பொறுப்பில் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். இக்காட்சியை மாங்குயின் வரைந்துள்ள விதம் Cézanne இன் ஒவியப்பாணியை நினைவூட்டுகிறது.
இந்த ஓவியத்தைப் போலவே உறங்கும் பெண்ணைச் சித்தரிக்கும் வேறு பல ஒவியங்களையும் மாங்குயின் வரைந்திருக்கிறார்.

எதற்காக உறக்கத்திலிருப்பவரை வரைவதில் இவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார் என்று வியப்பாக உள்ளது.
உண்மையில் விழித்திருப்பவரிடம் இல்லாத எதை அவர் தூக்கத்தில் காணுகிறார்.

ஹென்றி ரூசோ வரைந்த The Sleeping Gypsy ஓவியம் தான் உறக்கத்தைச் சித்தரித்த ஓவியங்களில் மிகவும் புகழ்பெற்றது. அதில் தன்னை மறந்து உறங்கும் ஜிப்சியின் தோற்றம் மிகவும் அழகானது. அந்த ஓவியம் கனவில் வெளிப்படும் காட்சி போலவேயிருக்கிறது. நிலவொளியில் சிங்கம் நிற்பது கனவுத்தோற்றம் போலிருக்கிறது சிங்கத்தின் தோற்றமும் அதன் கண்களும் முகபாவமும் கூடச் சாந்தம் கொண்டதாக இருக்கின்றன. நிலவொளி அந்தக் காட்சிக்கு மாயத்தன்மையை உருவாக்குகிறது.
உறக்கத்தினை ரூசோ வியப்பூட்டும் நிலையாக வரைந்திருக்கிறார். ஆனால் மாங்குயின் ஓவியத்தில் உறங்கும் பெண் இதிலிருந்து மாறுபட்டவள். அவள் பகலுறக்கம் கொள்கிறாள். தெற்கு பிரான்சின் கோடைக்கால காட்சியது. தொலைவில் தெரியும் விரிகுடாவின் தண்ணீர் இந்தக் காட்சிக்குக் கூடுதல் அழகினை தருகிறது.
ஓவியத்தில் அந்தப் பெண்ணைப் போலவே இயற்கையும் நெகிழ்வுதன்மை கொண்டிருக்கிறது. விரிந்த கிளைகளும் நிழல் தரும் இதமும் சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது

Model at Rest ஓவியத்தில் நாம் காணுவதும் இது போன்ற ஒரு ஓய்வு நிலையைத் தான். அந்தப் பெண்ணின் கைகளைப் பாருங்கள். பின்புறமாக மடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தண்ணீருக்குள் பிரவேசிப்பது போலவே ஒருவர் உறக்கத்திலும் மெதுவாகப் பிரவேசிக்கிறார். தண்ணீரைப் போலவே உறக்கமும் இதமாக அணைத்துக் கொள்கிறது. உறக்கத்தின் நுழைவாயில் எது வெளியேறும் வாசல் எது என எவராலும் சொல்ல முடியாது.

Sleeping Child ஓவியத்திலும் கோடைக்காட்சியே இடம்பெற்றிருக்கிறது. இதில் தொப்பி அணிந்தபடியே அந்தச் சிறுமி உறங்குகிறாள். இதிலும் இயற்கையும் அவளும் ஒரே நிலை கொண்டதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொப்பியின் நிழல் அவளது முகத்தில் விழுவது அழகாக வரையப்பட்டிருக்கிறது.
மாங்குயின் பகலுறக்கத்தை வரைவதில் தான் ஆர்வம் கொண்டிருக்கிறார். குறிப்பாக இயக்கமற்ற இயக்கத்தைக் காணுவது தான் அவருக்குப் பிடித்திருக்கிறது.

இந்த வகை ஓவியங்களை ஃபாவிஸ்ட் என்கிறார்கள்
அதாவது ஃபாவிஸ்ட் ஓவியங்கள் நிறத்தினைக் குறியீடாகப் பயன்படுத்துவதில்லை. மாறாகத் தூய நிறத்தின் வெளிப்படையான குணங்களைக் கொண்டிருக்கின்றன. பொருள் இயற்கையில் எப்படிக் காட்சியளிக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் பொருட்படுத்தவில்லை.. அடர்த்தியான தூரிகைகள் மற்றும் பிரகாசமான நிறத்தினைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கினார்கள்
மாங்குயின் தெற்கு பிரான்ஸின் இயற்கையால் கவரப்பட்டு, 1920 இல் அங்கு ஒரு வீட்டை வாங்கினார். அங்கிருந்தபடியே வரைந்த ஓவியங்களில் ஒன்று தான் ஜேன் பகலுறக்கத்திலிருப்பது. இதமான நிழல் தரும் மரங்களின் நடுவே தனியாகவும் அமைதியாகவும் படுத்திருக்கிறாள். கடலை நோக்கிய தோட்டத்தினுள் தான் இந்தக் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
நேர்த்தியான ஒளி, மகிழ்ச்சியான மனநிலை, ஒளிரும் வண்ணங்கள் மற்றும் அமைதியான புறச்சூழல் இவற்றையே மாங்குயின் ஓவியங்களில் அதிகம் காணமுடிகிறது. நீல நிறத்தை இவர் பயன்படுத்தும் விதம் தனித்துவமாகயிருக்கிறது.
ஹென்றி மாங்குயின் சிறுவயதிலேயே பள்ளியை விட்டு விலகி ஓவியத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். 1894 ஆம் ஆண்டில் குஸ்தாவ் மோரோ அவரைத் தனது ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார், அங்கு மாங்குயின் ஹென்றி மத்தீஸ் மற்றும் மார்க்குரட் ஆகியோருடன் பயிற்சி பெற்றார். 1899 ஆம் ஆண்டில் அவர் தனது விருப்பமான மாடலான ஜீன் கேரெட் மணந்தார், அடுத்த மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். செசான் மற்றும் வான் கோவின் பாணியில் மாங்குயின் தனது ஓவியங்களை உருவாக்கினார்.
உடலை இயற்கையுடன் ஒத்திசைவு கொள்ள வைப்பதன் மூலம் உண்மையான பிணைப்பை உருவாக்கியிருக்கிறார் என்பதாகவே இதனை உணருகிறேன்.
•••
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
