பச்சை வாசனை

Yellow Flowers on the Green Grass என்ற வியட்நாமிய படத்தைப் பார்த்தேன். 2015ல் வெளியான இப்படத்தை இயக்கியுள்ளவர் Victor Vũ. இரண்டு சிறார்களின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் பால்ய வயதின் கொண்டாட்டங்களை, பயத்தை, இழப்புகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறது

1980 களின் மத்திய வியட்நாமில் கதை நடக்கிறது. 12 வயது தியூ, 7 வயதான அவனது தம்பி துவாங் இருவரையும் மையமாகக் கொண்ட கதை.

சின்னஞ்சிறிய கிராமம். சுற்றிலும் பசுமையான வயல்கள். தூரத்து மலை. வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் நீல ஆகாசம். தெளிந்த ஆறு என எழிலான சூழல்.. விவசாயக் குடும்பத்தில் பிறந்த தியூ ஏழாம் வகுப்புப் படிக்கிறான். அவனது தம்பி துவாங். இருவரும் அருகிலுள்ள பள்ளிக்கு வயல்வெளியின் ஊடாக நடந்து போய்ப் படித்து வருகிறார்கள்.

தியூ பயந்தவன். ஆனால் துவாங் தைரியசாலி. சகோதரர்கள் ஒன்றாக வயலில் விளையாடுகிறார்கள், வீட்டு வேலை செய்ய ஓடுகிறார்கள், ஒரே படுக்கையில் தூங்குகிறார்கள், அவர்களின் நாட்கள் மகிழ்ச்சியான சாகசங்களால் நிரம்பியுள்ளன.

விளையாட்டுதனமிக்கத் துவாங் தனது மாமா தரும் காதல் கடிதங்களை ரகசியமாக அவரது காதலிக்குக் கொண்டு போய்த் தருகிறான். பெரிய மனுசன் போலத் தனது தம்பி நடந்து கொள்வதைக் கண்டு தியூ வியப்படைகிறான்.

அண்ணன் மீது மிகுந்த நேசம் கொண்டவன் துவாங், பள்ளியில் தனது அண்ணனை யாராவது திட்டினாலோ, அடிக்க வந்தாலோ பாய்ந்து அடித்துவிடுகிறான்.

துவாங் எப்போதும் ஒரு தவளையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். பூச்சிகளைச் சேகரிக்கிறான். மரமேறுவது, பாறைகளில் தாண்டி விளையாடுவது. நீந்தி குளிப்பது என உற்சாகமாக இருக்கிறான்.

ஆனால் தம்பியைப் போல விளையாட்டுகளில் ஈடுபடாமல் தியூ படிப்பதிலும் கதை கேட்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். ஒரு நாள் அவனது மாமா அந்த ஊரின் எல்லையிலுள்ள காய்ந்த மரத்திற்குள் மோகினி ஒளிந்திருக்கிறாள் என்றொரு கதை சொல்கிறார். இதைக் கேட்டதிலிருந்து தியூ இரவில் அந்த மரத்தைக் கடந்து போகப் பயப்படுகிறான்.

அந்த மோகினி கதை படம் முழுவதும் ஒரு குறியீடு போலவே தொடருகிறது. இரவில் அந்த மரத்தைக் காணும் காட்சியில் தியூவின் பயம் கலந்த ஒட்டம் அசலான சித்தரிப்பு.

அவனோடு படிக்கும் மூன் என்ற மாணவியை நேசிக்கும் தியூ அவளிடம் தனது அன்பை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தான் படித்த கவிதையிலிருந்து இரண்டு வரிகளை ஒரு கடிதமாக எழுதித் தருகிறான். அதை மூன் வகுப்பு ஆசிரியரிடம் தந்துவிடுகிறாள்.

காதல் கடிதம் எழுதியதற்காகத் தியூ ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான். மாணவர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். மாலை வீடு திரும்பும் போது மூன் அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அதன்பிறகு அவர்களுக்குள் நட்பு உருவாகிறது.

மூனின் தந்தை தொழுநோயாளி என்பதால் எவர் கண்ணிலும் படாமல் ஒரு குடிசையில் மறைந்து வாழுகிறார். அவளது அம்மா தன் கணவன் வெளியூர் போயிருப்பதாக நடித்து வருகிறாள். இந்த நிலையில் ஒரு நாள் அக் குடிசை தீப்பிடித்து எரிந்துவிடவே அவரை ரகசியமாக நகரிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு போகிறாள் மூனின் அம்மா

தீவிபத்தின் காரணமாக மூன் சில நாட்கள் தியூ வீட்டில் தங்க நேரிடுகிறது. தன் வீட்டிலே மூன் இருப்பது அவனை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. ஆனால் தம்பியோடு அவள் சிரித்து விளையாடுவது தியூவிற்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் ஆத்திரத்தில் தியூ தம்பியைப் பலமாகத் தாக்கிவிடவே அவனது இடுப்பு எலும்பு முறிந்து போகிறது. பெற்றோர்களிடம் தான் மரத்திலிருந்து விழுந்துவிட்டேன் என்று பொய் சொல்கிறான் துவாங்.

அவனுக்குச் சிகிச்சை அளித்தும் பலனற்றுப் போகிறது. துவாங் நடமாட முடியாமல் படுக்கையில் வீழ்கிறான்.

தனது தம்பியின் கால்கள் முடங்கிப் போனதற்குத் தானே காரணம் என்ற குற்றவுணர்வு கொண்ட தியூ தம்பிக்கான எல்லா உதவிகளையும் செய்கிறான்.

வயதில் மூத்தவன் போல நடந்து கொள்ளும் துவாங்கிடம் இல்லாத பொறாமை பயந்து போன, ரகசியமாக எதையும் செய்யக்கூடிய தியூவிடம் வெளிப்படுகிறது. அந்த முரண் தான் படத்தின் மையம். சிறுவர்கள் பிறர் அறியாத கற்பனையுலகில் சஞ்சரிக்கிறார்கள். மனதிற்குள்ளாகவே ஆசையை வளர்த்துக் கொள்கிறார்கள். குடும்பச் சூழல் அவர்கள் ஆசையை தடுக்கும் போது ஏமாற்றமடைகிறார்கள். மூன் குடும்பக் கஷ்டங்களை உணர்ந்திருக்கிறாள். மென்சோகம் கலந்த அவளது முகம் அவளது குடும்பத்தின் துயரைத்தை அடையாளப்படுத்துகிறது.

படத்தில் இரண்டு கிளைக்கதைகள் தனி இழைகளாக ஊடாடுகின்றன. ஒன்று தியூ மாமாவின் காதல் கதை. மற்றொன்று சர்க்கஸில் வேலை பார்த்து வந்தவரின் மனநலம் பாதிக்கப்பட்ட மகளின் கதை. இந்தத் தேவதைக்கதை வேறு திசையை நோக்கிப் படத்தைக் கொண்டு செல்வதால் மைய கதையிலிருந்து நாம் விலகிப் போகிறோம். அதை நீக்கியிருந்தால் படம் இன்னும் முழுமைபெற்றிருக்கும்.

மரணக்கிணறு சுற்றும் பெண்ணின் கதாபாத்திரம் வித்தியாசமானது. அதுவும் மகளின் முன்னால் அவள் வேகமாகப் பைக்கில் சுற்றிவரும் காட்சி சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

மூன் ஊரை விட்டுச் செல்லும் காட்சியில் இனி அவள் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்து கலங்கி நிற்கும் காட்சியிலும், அவள் நினைவாகப் பழைய கவிதை நூலைப் புரட்டி பார்க்கும் காட்சியிலும் தியூ சிறப்பாக நடித்திருக்கிறான். மூன்று சிறுவர்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் இதில் மூன் உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

Nguyen Nhat Anh என்ற எழுத்தாளரின் நாவலை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் , நவீன உபகரணங்கள் எதுவுமில்லாத கிராமிய வாழ்க்கையை, அதன் வறுமை, மற்றும் நெருக்கடிகளை யதார்த்தமாக எழுதியிருக்கிறார். அழகான இடங்கள், இயல்பான நடிப்பு. மிக நேர்த்தியான ஒளிப்பதிவு, மென்மையான இசை படத்தினைச் சிறப்பாக்குகிறது.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்தவன் துவாங். அசலான விளையாட்டுச் சிறுவன். அவனது முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம். கடைசிவரை அவன் அண்ணன் மீது கோபம் கொள்ளவில்லை. வெறுக்கவில்லை. தூய அன்பின் அடையாளமாக இருக்கிறான்.

திரையில் காணும் பால்யத்திற்கும் நமது பால்யத்திற்கும் பெரிய இடைவெளியில்லை. வாழ்க்கையின் பச்சை வாசனையைப் படம் முழுவதும் உணர முடிகிறது. அந்த நெருக்கமே படத்தைச் சிறந்த அனுபவமாக்குகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2022 04:33
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.