இளமையின் குழப்பங்கள்
நாட்சுமே சோசெகியின் கோகொரோ நாவல் 1959ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நாவல் ஜப்பானில் 1914ல் தொடராக வெளியானது. கோகொரோ என்பதன் பொருள் இதயம் அல்லது இதயத்தால் உணரப்படுவதாகும். மூன்று பகுதிகளாக உள்ள இந்த நாவல் சென்ஷி எனப்படும் முதியவரும் சோசெகிக்குமான நட்பையும் சோசெகியின் குடும்பப் பின்புலம் மற்றும் சென்ஷியின் கடந்தகாலத்தையும் விவரிக்கிறது

விடுமுறை நாளில் காமகுரா கடற்கரையில் தற்செயலாக ஒரு முதியவரைச் சந்திக்கிறான் கல்லூரி மாணவனான சோசெகி. கிழவர் கடலில் நிதானமாக நீந்தும் விதம் மற்றும் அவரது உடற்மொழி அவனைக் கவருகிறது. அவருடன் நட்புடன் பழக விரும்புகிறான். ஆனால் அவரோ விலகிப்போகிறார். வலிந்து அவருடன் அறிமுகமாகி அவரது நட்டைப் பெறுகிறான்
முதியவர்களின் தனிமை வேறு இளைஞர்களின் தனிமை வேறு. இளைஞர்கள் தனிமையைப் போக்கிக் கொள்ளத் துணையைத் தேடுகிறார்கள். முதியவர்களோ விரும்பி தனிமையை ஏற்றுக் கொள்கிறார்கள். அல்லது உருவாக்கிக் கொள்கிறார்கள் என்கிறார் சென்ஷி.
குரு, வழிகாட்டி, அல்லது ஆசான் என்ற பொருள் கொண்டதே சென்ஷி எனும் சொல். தனது வழிகாட்டியாகவே அந்த முதியவரை சோசெகி நினைக்கிறான். அவரது உண்மையான பெயர் நாவலில் சொல்லப்படுவதில்லை.
சென்ஷியின் வீட்டிற்குச் சென்று அவருடன் நெருங்கிப் பழகுகிறான். சென்ஷியின் மனைவி ஷிஜி அவனை அன்போடு நடத்துகிறார். சென்ஷி தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை.

ஒரு நாள் அவரைத் தேடிச் சென்ற போது அவர் கல்லறைத்தோட்டத்திற்குச் சென்றிருப்பதாக மனைவி சொல்கிறார். அங்கே தேடிப்போன போது எதிர்பாராத வருகையை விரும்பாதவராகக் கடுமையாக நடந்து கொள்கிறார். தனது நண்பனின் கல்லறையைக் காணச்செல்வதாக மட்டும் சொல்கிறார். யார் அந்த நண்பன். ஏன் அங்கே தனியே செல்கிறார் என்று எதுவும் அவனுக்குப் புரியவில்லை.
ஆனால் நண்பனின் மறைவில் மாளாத துயரம் கொண்டிருக்கிறார் என்பதை மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது
முதியவரான சென்ஷியை ஏன் சோசெகி விரும்புகிறான். காரணம் சென்ஷியிடம் பரபரப்பில்லை. அவர் ஒரு புத்த துறவி போலவே நடந்து கொள்கிறார். அவர் தனது மனைவி ஷிஜுவை இசை நாடகம் என அழைத்துப் போகிறார். அன்பான தம்பதியாக விளங்குகிறார். ஒருநாள் அவர்களுக்கு இடையில் நடக்கும் சண்டையைக் காணுகிறான் சோசெகி. அன்று அவனிடம் நான் அறிந்துள்ள ஒரே பெண் என்று மனைவி மட்டும் தான், ஆனாலும் அவள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை, என்று சென்ஷி வருத்தப்படுகிறார். எதற்காகச் சண்டை நடந்தது என்பதை அவர் விவரிக்கவில்லை.
பல்கலைக்கழக பாடங்களைப் போலவே சென்ஷியின் வழியே வாழ்க்கையைப் பற்றிய பாடங்களையும் சொசேகி கற்றுக் கொள்கிறான். நேரடியாக அவர் எதையும் போதிப்பதில்லை. ஆனால் அவரது செயல்களின் வழியே அவன் நிறையக் கற்றுக் கொள்கிறான். நட்போடு நெருங்கிப் பழகிய போதும் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
படிப்பை முடித்துச் சொந்த ஊருக்குச் செல்கிறான் சோசெகி. அவன் பட்டம் பெற்று வந்திருப்பதைக் குடும்பம் பெருமையாகக் கருதுகிறது. திருமணப்பேச்சு நடக்கிறது. அதை அவன் விரும்பவில்லை. தான் பெரிய வேலைக்குப் போக வேண்டும் எனக் கனவு காணுகிறான். எதிர்பாராமல் தந்தை உடல்நலமற்றுப் போகவே உடனிருந்து உதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது
நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி இதுவே. நகரில் படித்து முடித்துவிட்டு சொந்த ஊரில் சொந்த வீட்டில் நாட்களைக் கழிப்பதைப் பற்றிய அந்தப் பகுதி என்றைக்கும் பொருந்தக்கூடியது. கிராம வாழ்க்கை அவனுக்குச் சலிப்பூட்டுகிறது. என்ன வேலைக்குப் போவது என்று தெரியவில்லை. ஆனால் மனதில் பெரிய கனவு இருக்கிறது. அவன் பட்டம் வாங்கியதற்காக வீட்டோர் விருந்து கொடுக்க ஆசைப்படுகிறார்கள். அவன் அதை விரும்பவில்லை. படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவிட வேண்டும் எனப் பெற்றோர் நினைக்கிறார்கள். அதையும் ஏற்கவில்லை. இந்தக் குழப்பமான நாட்களை நாட்சுமே சோசெகி மிகவும் உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார். வேலை தேட உதவி கேட்டு சென்ஷிக்குக் கடிதம் எழுதுகிறான். அவரிடமிருந்து பதில் வரவில்லை. அது ஏமாற்றமளிக்கிறது. உலகைப் புரிந்து கொள்ள முயலும் அந்தப் புள்ளி இளைஞனின் வாழ்வில் முக்கியமானது. அதைச் சரியாக, துல்லியமாகப் பதிவு செய்திருப்பதே நாவலின் சிறப்பு
நாவலின் இரண்டாம் பகுதியில் அவனது தந்தையும் சென்ஷியும் இருவேறு நிலை கொண்ட முதியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். உடல்நலமற்ற சூழலிலும் குடும்பத்தின் பொருட்டு வேலைகளைத் தொடரவே அவனது தந்தை முயல்கிறார். ஆனால் உதவி கேட்டு எழுதிய கடிதங்களைக் கூடப் புறக்கணிக்கிறார் சென்ஷி. அது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை.
ஒரு நாள் சென்ஷியிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வருகிறது. இந்தக் கடிதம் உன்னிடம் சேர்வதற்குள் நான் இவ்வுலகை விட்டுச் சென்றுவிடுவேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயந்து போன சோசெகி அவசரமாக டோக்கியோ புறப்படுகிறான்
சென்ஷியின் கடிதமும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும் மூன்றாவது பகுதியாக விரிகிறது. கடந்த காலக் கதையின் மூலம் நிகழ்கால முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன.
நாவலின் ஒரு பகுதியில் ஜப்பானின் மன்னர் இறந்து போனதை மக்கள் எவ்வாறு பெருந்துக்கமாக அனுஷ்டித்தார்கள் என்பதை விவரித்துள்ளார். அதில் மன்னரின் மரணத்தைத் தாங்க முடியாமல் தளபதி நோகி மாரேசுகே தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மக்கள் நெகிழ்ந்து போனதையும் பதிவு செய்திருக்கிறார்.
நாவலில் இரண்டு குடும்பங்கள் விவரிக்கப்படுகின்றன. சென்ஷியிடம் குடும்பம் எரிமலையைப் போலத் தோற்றத்திற்கு அமைதியாகவும் உள்ளே கொந்தளிப்பான நிலையிலும் இருக்கிறது. ஆனால் கதைசொல்லியின் குடும்பம் வெளிப்படையாக, வாழ்வின் அடுத்த நிலைக்குப் போக முயற்சிக்கும் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக இருக்கிறது. மாறிவரும் ஜப்பானின் வாழ்க்கை முறையைத் தான் சோசெகி கவனப்படுத்துகிறார். குறிப்பாகப் பெண்கள். மற்றும் குடும்ப உறவில் ஏற்பட்ட மாற்றம். தேசத்தின் எதிர்காலமும் தனிநபரின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும் நிலை பற்றி எழுதியிருக்கிறார்.
இந்த நாவலை வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் Poor Folk நாவல் நினைவிற்கு வந்தது. அது ஒரு எபிஸ்டோலரி நாவல் — அதாவது, கதாபாத்திரங்களுக்கு இடையே கடிதங்களின் வழியாகச் சொல்லப்பட்ட கதை. இந்த நாவலில் சென்ஷியின் கடிதம் வழியே தான் முன்கதையின் இடைவெளிகள் நிரப்படுகின்றன. அந்தப் பகுதியில் வரும் கே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாநாயகனை நினைவுபடுத்துகிறான். சென்ஷியிடமும் அந்தச் சாயலே வெளிப்படுகிறது.
சென்ஷியை முதன்முறையாகச் சந்தித்த போதே அவரை எங்கேயோ முன்பு பார்த்திருப்பது போலச் சோசெகி உணருகிறான். அவரோ அதன் முன்பு அவனைக் கண்டதேயில்லை என்கிறார். புரிந்து கொள்ள முடியாத அந்த உணர்வு தான் அவனை அவருடன் நெருக்கமாக்குகிறது
இதே போலத் தான் Zorba The Greek நாவலில் இளைஞனும் ஜோர்பாவும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஜோர்பா குற்றவுணர்வைக் கடந்தவன். கொண்டாட்டமே வாழ்க்கையாகக் கொண்டவன். சென்ஷி இதற்கு எதிரான மனப்போக்கு கொண்டவர்.
ஐரோப்பிய இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பது சொசேகியின் எழுத்துகளை வாசிக்கும் போது நன்றாகத் தெரியவருகிறது. குறிப்பாக சுயசரிதை பாணியிலான எழுத்துமுறையை அவர் ஆங்கில இலக்கிய எழுத்துகளிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த நாவலை யார் மொழிபெயர்ப்புச் செய்தார்கள் என்று முகப்பில் இல்லை. கலைக்கதிர் வெளியீடு என்று மட்டுமே உள்ளது. விலை 1 ரூபாய். அணிந்துரை எழுதியுள்ள ஏ.எல் முதலியார் நாவலினை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. பொதுவாகத் தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்ட் செயல்பாட்டினைப் பற்றியே எழுதியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தார் என்பதால் இந்த அணிந்துரையை வாங்கியிருக்கக் கூடும்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய நாட்சுமே சோசெகி கல்வி அமைச்சகத்தின் நிதி நல்கையுடன் தனது 34வது வயதில் லண்டன் சென்று கல்வி பயின்றிருக்கிறார். அப்போது அவருக்குத் திருமணமாகி குழந்தையிருந்தது. மனைவி கர்ப்பிணியாக இருந்தார். அவர்களைத் தனியே விட்டு சோசெகி லண்டனில் இரண்டு ஆண்டுகள் ஆங்கில இலக்கியம் பயின்றிருக்கிறார். தனது லண்டன் நாட்கள் குறித்து விரிவாக நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். லண்டன் வாழ்க்கையைப் பற்றிச் சைக்கிள் டயரிஸ் என்ற பெயரில் தொடராகவும் எழுதியிருக்கிறார்
லண்டனிலிருந்த நாட்களில் ஏற்பட்ட தனிமை மற்றும் மனக்குழப்பங்கள் அவரை மனச்சிதைவு கொண்டவராக்கியது. அவரது மகிழ்ச்சியற்ற பால்ய காலம் கசப்பான நினைவுகளாக மனதில் படிந்திருந்தது. பாதுகாப்பின்மை, அவநம்பிக்கை, அதீத தனிமை, புறக்கணிப்பட்ட நிலை இவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். அந்த மனநிலை தான் அவரது எழுத்திலும் வெளிப்பட்டது
கிராமப்புற நினைவுகளை எழுதுவதிலிருந்து நகர்ப்புற நினைவுகளை எழுதுவதை நோக்கி நகர்ந்ததே நவீன ஜப்பானிய இலக்கியம் செய்த முதற்பணி. இந்த நாவலிலும் அதை நாம் காண முடிகிறது. மாறிவரும் டோக்கியோவும் அதன் புதிய புறநகர் வாழ்க்கையும் அவரது நாவல்களில் இடம் பெற்றுள்ளது.
தனது சொந்த தந்தையை மிகவும் வெறுத்தார் சொசேகி. அத்துடன் தனது சிறுவயதில் இரண்டு மூத்த சகோதரர்களை இழந்தவர் என்பதால் அந்த நினைவுகள் அவரை வாழ்நாள் முழுவதும் அலைக்கழித்தன. வாழ்க்கைக்கும் சாவுக்கும் இடையில் எங்கோ சுற்றிக்கொண்டிருக்கும் விசித்திரமான நிலையைத் தான் உணர்ந்தாக எழுதியிருக்கிறார்
நமக்கு எவ்வளவு வயதானாலும், நாம் இளமையின் உணர்வை முழுவதுமாக இழப்பதில்லை என்கிறார் ஆர்.எல். ஸ்டீவன்சன். அந்த வரித் தன்னை மிகவும் பாதித்தது எனும் சோசெகி அதைச் சென்ஷியின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்
நாட்சுமே சோசெகி நாவலாசிரியராக மட்டுமின்றி ஜென் கவிஞராகவும் சித்திர எழுத்துக்கலைஞராகவும் விளங்கினார். அவரது கோகொரோ நாவல் மூன்றுமுறை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டால் தமிழில் கதையை மட்டுமே சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் 1959ல் இப்படி ஒரு ஜப்பானிய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை நிச்சயம் பாராட்டவே வேண்டும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
