இரா. முருகன்'s Blog, page 67
October 16, 2021
From The Novel MILAGU – கவுடின்ஹோ பிரபுவும், விக்ஞான உபாத்தியாயரும், பேய் மிளகும்
இருட்டுகிற வரை கவுட்டின்ஹோ பிரபு எழுந்திருக்கவில்லை. சுற்றி பேய் மிளகுக் கொடி பந்தலித்து அவர் கால்களை முழுக்கச் சூழ்ந்திருந்தது. பின்னால் இருந்து அது நீண்டு அவர் தலையைச் சுற்றிப் படர்ந்து இறுக்கத் தொடங்கியிருந்தது.
வேலைக் காரர்கள், தோட்டக்காரன், சமையல்காரன், வீட்டு நிர்வாகி என்று எல்லோரையும் இன்று வரவேண்டாம் என்று சொல்லியிருந்ததால் அவருக்கு என்ன ஆனது என்று பார்க்க, தேவையானால் வேண்டிய உதவி செய்ய என்று கூட அடிப்படை கவனத்தை ஈயவும் யாருமே இல்லாமல் போனார்கள்.
அவரும் விக்ஞான உபாத்தியாயர் ராயப்பரும் மிளகுக்கொடியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரகசியமான நாள் அது. மிளகு சாகுபடியை மேம்படுத்துவது, குறுகிய கால ஊடுபயிராக மிளகு உற்பத்தி செய்வது, அதிக திடமும், கனமும், வாசனையும், நீண்ட நாள் கெடாததுமாக மிளகின் தன்மையை மேம்படுத்துவது, இதெல்லாம் அல்லது இதில் யாதானும் ஒன்று நோக்கமாகக் கொண்டு நல்ல சிந்தையோடு கவுட்டின்ஹோ பிரபு விக்ஞான உபாத்தியாயாரைக் கூட வைத்துக் கொண்டு நடத்தும் ஆராய்ச்சி அதென்று கருதினால் பெருந் தவறாகும் அது.
மிளகு பயிர்பண்ணி சிறு கொடியாக வளர்ந்த பருவத்தில், கப்பலில் பயணம் போகும் பிரயாணி பத்திரமாக எடுத்துப்போய், ஒரு மாதம் கடலில் பயணப்பட்டு, போகுமிடம் போய்ச் சேர்ந்ததும் சேர்ந்த இடத்தில் அந்த மிளகுக் கொடியை ஊன்றி வைத்தால், உடனே பல்கிப் பெருக ஆற்றல் உள்ள மிளகை உருவாக்குவதே கவுட்டின்ஹோ பிரபுவின் தேடலாகும்.
விக்ஞான உபாத்தியாயருக்கு இனிப்பு லட்டுருண்டை தின்கிறது போல் ரொம்பவே பிடித்துப்போன ஆராய்ச்சி இது. அவருக்கு வயது எழுபதாகி, மறதி நிறைய ஏற்பட்டு, நடுராத்திரி தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டு வாசல் திண்ணையில் நின்று பாடம் நடத்துவதாகக் கேள்வி.
அது இல்லாமல் நாள் பூரா கவுட்டின்ஹோ பிரபு ஆக்ஞைப்படி அரைத்து, கரைத்து, கொட்டி, கிளறி, வேகவைத்து, வறுத்து, பொடித்து, கலக்கி, வடிகட்ட என்று நாள் முழுக்க விக்ஞான உபாத்தியாயருக்கு வேலை தருவதால் உபாத்தியாயர் பிரபு மேல் மதிப்பு கொண்டுள்ளார் என்பது சொல்ல வேண்டியதில்லை.
இந்த ஆய்வுகளுக்கு விக்ஞான உபாத்தியாயருக்கு மாதத்துக்கு பத்து வராகன் கவுரவ உழைப்புக்காக பிரபு தருகிறார் என்பது சந்தோஷமான விஷயம்.
இன்றைக்கு அபூர்வமானதான பேய் மிளகு என்ற வகை மிளகுக்கொடி ஆய்வுக்குக் கிடைத்தது பிரபுவுக்கு. காலையிலேயே பிரபு, உபாத்தியாயர் இருவரும் ஒரு குடுவை நிறைய மூத்திரம் பெய்து முகத்தில் துணி கட்டிக்கொண்டு அதைக் காய்ச்சினார்கள். அதில் வந்த உப்பை ஜாக்கிரதையாகச் சேமித்துக் கொண்டார்கள் அடுத்து.
வீட்டுக்குள் கழிப்பறை வாடை ஜாஸ்தியாக வந்ததால் மட்டிப்பால் ஊதுபத்திகளையும் சாம்பிராணியையும் கொளுத்தி வீடு முழுக்க நல்ல வாடை வர வைத்திருந்தது.
October 15, 2021
மிளகு, The Novel – Saradha Teresa’s loud thinking on time space continuum – excerpts
அடுத்த ஆச்சரியகரமான அனுபவமும் இந்த அம்பலப்புழையில் தான் கிடைத்தது. அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம் தரிசித்த பகல் நேரம் பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு எல்லோரோடும் நானும் போகிறேன். திடீர்னு அந்த வீட்டையும் அசுர மிளகுக் கொடி சூழ்ந்து படர்ந்து வாடை கனமாகக் கவிந்து வருதுன்னு பிஷாரடி சொல்லி அந்த மிளகுக் கொடியின் பீஜத்தை பிடுங்கிப் போடுகிறார்.
அப்புறம் சொல்றார் – அது யார் அந்த சின்னப் பையன். மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கிய இடத்திலே இவன் என்ன பண்றான்? ஓ கதவு சாத்தியிருக்கு. அது எந்தக் காலத்து மிளகுக் கிடங்கு, எந்தக் காலத்துப் பையன்? அவன் யார் என்று யாருக்காவது ஒருத்தருக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்.
மங்களூர் கடற்கரைக்கு சின்னச் சங்கரன், வசந்தி, ஜெயம்மா ஜயகர் மேடத்தோடும் போனபோது அப்பா அப்பா என்று அழைக்கிற சிறு பிள்ளைக் குரலை வசந்தி கேட்ட ராத்திரி நினைவு வருகிறது. ஜெயம்மா வீட்டில் உறக்கத்தைப் போக்கித் தட்டி எழுப்பிய பிள்ளைக் குரல் என்னை எழுப்பியது அப்பா என்று யாரையோ அழைத்தபடி.
பிஷாரடி சொல்வது போல் அந்தக் குரல் வேறு ஒரு காலத்தில் இருந்து வருவதாக இருக்கலாம். சோப்புநீரில் சிறு குழலிட்டு ஊதும்போது தெறிக்கும் சின்னக் குமிழிகள் போல் வேறு ஏதோ காலத்தின் குமிழிகளை காலப் பெருவெளியில் மிதக்க வைத்து அரசூர் குடும்பத்தையும், அம்பலப்புழை குடும்பத்தையும், இவற்றோடு உறவு கொண்ட மதறாஸ் குடும்பத்தையும் யாரோ கவன ஈர்ப்பு செய்ய நினைக்கிறார்கள். யாராக இருக்கக் கூடும்? அந்தப் பையன்? யார் பையன்?
வீட்டுப் பின்னணி, தெருப் பின்னணி, மிட்டாய்க்கடை பின்புலம், அடுத்து கிடங்கு பின்னணி. அவன் காலம் உள்ளடங்கிய நாற்பரிமாண வெளியில் நகர நகர பின்னணி மாறுது. அந்தப் பையன் மட்டும் காலத்தில் நிலைச்சிருக்கான். அவன் பதைபதைப்பு நிஜமானதாக இருக்கலாம். காலக் குமிழிகள் ஊடாக நம்மோடு, பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்யறான் அவன். சின்னச் சங்கரன் மாதிரி ப்ராணபயத்தில் இருக்கான். கிட்டத்தட்ட நம் எல்லோரையும் நேரடியாக இல்லாவிட்டாலும் ஏதோ காட்சி ரூபமாக பிரத்யட்சப்பட்டு தொடப் பார்க்கிறான்.
எனக்கு தோணுறது தப்பாக இருக்கலாம். இப்போதைக்கு ஒன்று மட்டும் நிச்சயம். காலவெளியிலே அவன் நமக்கு வெகு பின்னால் இருக்கப்பட்டவன். அவன் நம்மோட காலத்துக்கு வரணும் அல்லது நாம் அவன் காலத்துக்குப் போகணும். காலக் குமிழ்கள் நம்மை பின்னால் கொண்டு போகுமாக இருக்கும். பின்னால் போக முடிந்து போனால் அப்புறம் நம்மோட இந்தக் காலத்துக்கு எப்படி திரும்ப முடியும்? இதற்கு பதில் இன்னும் கிடைக்கலே.
படம் கெளடி ராமேஸ்வரன் – வீரபத்ரன் கோவில்கள்
நன்றி wikimedia.org
October 14, 2021
மிளகு பெருநாவலில் இருந்து : The Calderdale – Kuttanadu virtual way of wild pepper creepers
சாரதா – தெரிசாவும் அசுர மிளகும் – நீள்பதிவிலிருந்து ஒரு சிறு பகுதி
முப்பது வருஷம் என் வாழ்க்கையில் அதிசயங்கள் ஏதும் நிகழவில்லை. கடந்த சில மாதங்களாக, குறிப்பாகச் சொல்லப் போனால் வருஷம் 2000 பிறந்தபின் ஆச்சரியகரமான நிகழ்வுகள் மறுபடி தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது.
டிசம்பர் 1999 இறுதியில் நான் என் மகன் மருதுவோடு கொஞ்சம் நாள் லண்டன் கருப்புக் குதிரை வீதி பலமாடிக் குடியிருப்பில் தங்கி இருந்து வர லண்டன் போயிருந்தேன். சின்னச் சங்கரன் காத்மாண்டுவில் இருந்து தில்லி போய்ச் சேர ஏறிய விமானம் மத அடிப்படைத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கண்ட்ஹரில் எந்த நேரமும் சின்னச் சங்கரன் உயிர் போகலாம் என்ற பயங்கரமான சூழ்நிலை என்னைப் பாதித்த டிசம்பர் இறுதி 1999இல் தான் அற்புதங்கள் என்னை திரும்ப சூழ்கின்றன.
சின்னச் சங்கரன் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டபோது நான் லண்டனில் இருந்து தில்லி போயிருந்தேன். முதல் தடவையாக என் சின்னச் சங்கரன் சங்கூவின் சட்டபூர்வ மனைவி வசந்தி, மகள் பகவதிக்குட்டியோடு கூட சங்கரனின் வீட்டிலேயே தங்கியிருந்தேன். சங்கரன் கந்தஹரில் இருந்து மீட்கப்பட்டு தில்லி பாலம் விமானத்தாவளத்தில் வந்து சேர்ந்தபோது வசந்தி அவனைக் கட்டியணைத்துக் கொண்டபோது என்னையும் அந்த அணைப்பு வளையத்தில் வந்திருக்கச் சொன்னதை மறக்க முடியாது. என்றாலும் நான் குறிப்பிட்ட அதிசயம் அது இல்லை.
தில்லியில் இருந்து அம்பலப்புழை வந்த ராத்திரி வீட்டைச் சூழ்ந்தது ஒரு வினோதமான தாவரம். அசுர மிளகு என்று அதன் பெயரை எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் பிஷாரடி குறிப்பிட்டார். பெயரில் என்ன இருக்கிறது?
சாயந்திரம் நான் கொச்சி நெடும்பாசேரி விமானத் தளத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது வாசல் படி ஓரமாக செடிபோல் இரு புறமும் தழைத்திருந்ததைக் கண்டபோது ஏதோ காட்டுச்செடி வாசலுக்கு வந்திருக்கிறது, நான் இல்லாத நேரத்தில் வாசல் தோட்டத்தை யாரும் கவனிக்காததால் ஏதேதோ தாவரங்கள் அண்டியிருக்கின்றன என்று தோன்ற உள்ளே போகிறேன்.
மனமெல்லாம் சின்னச்சங்கரனின் மனத் துன்பமும், சாவு என்ற பள்ளத்தாக்கின் ஓரம் வரை போய் எட்டிப் பார்த்து திரும்பிய சங்கரனின் பரிதாபத்துக்குரிய நிலையும் தான் நினைவில் முழுக்கச் சூழ்ந்திருந்ததால் வாசல் தாவரம் நினைவில் வரவேயில்லை.
ராத்திரி எட்டு மணியைப் போல் வீட்டுக் காரியம் செய்து வீட்டைப் பராமரிக்கவும், அத்தியாவசிய சமையல் செய்யவும் நான் ஏற்பாடு செய்திருக்கும் சுகிர்தா என்ற பேரிளம்பெண் வீட்டு குசினியில் முழுக்கப் பற்றிப் படர்ந்து இன்னும் அதிகமாகிக்கொண்டு அந்த அசுரமிளகுக் கொடி ராட்சச வேகத்தில் வீட்டுக்குள் பரவி வருவதை முதலில் பார்த்து குடல் நடுங்க சத்தமிடுகிறாள்.
வீட்டு மாடியில் ஓடித் திரிந்த கரப்பான் பூச்சிகளும், எங்கிருந்தோ எப்படியோ ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்திருந்த எலிகளும் சத்தியத்துக்குக் கட்டப்பட்டதுபோல் மேலே வேகமாக வளர்ந்து வரும் அசுர மிளகுக் கொடிக்குள் நுழைகின்றன. பின் அவை வெளியே வருவதில்லை.
மேடம் எலி இன்னிக்கு உள்ளே போகும்னா, நானும் நீங்களும் உள்ளே போக எவ்வளவு நேரம் பிடிக்கப் போறது? ஆப்பிரிக்காவிலே காட்டுலே திரியறவங்களைக் கட்டி அணைச்சு ரத்தத்தை உறிஞ்சற மரம் பற்றி பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கேன். இங்கே அம்பலப்புழையிலே மாமிசம் தின்னற மிளகுக்கொடி பற்றி, அதுவும் ஒரு மணி நேரத்திலே வீட்டை சூழ்கிற ராட்சச தாவரம் பற்றி கேட்டதே இல்லை. இப்போது தான் பார்க்கிறேன் என்று பயமும் ஆர்வமும் கலந்து கூச்சலிடுகிறாள் சுகிர்தா.
இரண்டு பக்கமும் பார்த்து விட்டு என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள் அவள். இது வேறு எங்கோ இட்டுச் செல்லும் என்று தோன்ற மெல்ல அவளை ஆலிங்கனத்தில் இருந்து விடுவித்து, கீழே போகச் சொல்கிறேன். மாடிப்படிகள் இறங்கும் பாதி தூரம் வரை அசுர மிளகு பரவியிருக்கிறது.
வீட்டை விட்டுப் போய் என் ஓட்டலில் மேல் மாடியில் என் உபயோகத்துக்காக எழுப்பியிருக்கும் தனி அறைக்குத் தற்காலிகமாகக் குடிபெயரலாம் என்று முடிவு செய்து மாடிப்படி இறங்கும்போது கீழே டாக்டர் பிஷாரடி நிற்கிறார். திலீப் ராவ்ஜியும் ரஷ்ய முதுபெண் என் வயதானவள் ஒருத்தியுமாக வாசலில் தாவர முற்றுகை தவிர்த்து உள்ளே வருவதை பார்க்கிறேன்.
பீஜத்தை கெல்லிப் போடுங்க என்று பிஷாரடி சத்தமாக கீழே வந்து நிற்கும் கிட்டாவய்யர் உணவு விடுதி பணியாளர்களிடம் கூச்சலிடுகிறார். அடுத்த பத்தாவது நிமிடம் வாசலுக்கு நேரே இடம் கொண்ட மிளகுக் கொடியின் வேர் தட்டுப்பட அதை அசைத்துப் பிடுங்கி, வேரை அறுத்தெறிகிறார்கள்.
அதில் ஒரு மிளகை வாயிலிட்டுச் சுவைத்த சுகிர்தா பசுமாடு இங்க்லீஷ் பேசுவது போல் கரகரவென்ற குரலில் எல்லோரையும் போகச் சொல்கிறாள். துப்பு சுகிர்தா துப்பு என்று நான் அவள் தலையைக் குலுக்க தரையில் அவள் மென்ற மிளகு கூழாக வந்து விழுகிறது. துப்பிட்டேன் மேடம் என்று அவளுடைய கிரீச்சிடும் குரலில் சொல்கிறாள் சுகிர்தா.
பத்தே நிமிடத்தில் மேலே படர்ந்தேறிய அசுர மிளகு தடதடவென்று கீழே குவிந்து விழுந்து குப்பையாகிறது. வீட்டுப் பின்னாலும் பாருங்கள் என்று பிஷாரடி சத்தம்போட நான் மாடியிலும் கொடி வேர் பரப்ப பால்கனியில் மண் நிறைத்த தொட்டிகள் உண்டென்பது நினைவு வர திரும்ப மேலே ஓடுகிறேன். டாக்டர் பிஷாரடியை வாங்க என்று வரவேற்கக் கூடத் தோன்றாமல் கற்கால மனுஷி உசிர் பயத்தில் ஓடுவது போல் செயல்படுகிறேன்.
ராத்திரி பதினோரு மணிக்கு ஹோட்டல் ஸ்ரீகிருஷ்ணா அதிபரும் இன்னும் இரண்டு பேரும் வாசல் அழைப்பு மணி அழுத்துகிறார்கள். பால்கனியில் இருந்து பார்க்க, கை ஆட்டுகிறார்கள். ராத்திரி உடுப்பில், பரவாயில்லை என்ன அவசரமோ என்று மாடிப்படி இறங்கி வருகிறேன்.
“மேடம் திலீப் ராவ்ஜி சாரும் மதம்மா ஒருத்தரும் ரூம் போட்டிருக்காங்க என்று ஹோட்டல் அதிபர் ஆரம்பிக்க, எனக்கெதுக்கு அந்த அந்தரங்கம் எல்லாம் என்றதாக கையை அசைத்து மேலே போகலாம் என்கிறேன்.
மதாம்மா ரூம் சர்வீஸை ஒரு மணி நேரம் முன்னால் கூப்பிட்டு ஏதோ ராட்சச தாவரம் அவங்களை பெட் மேலே இருந்து இறங்க முடியாமல் சூழ்ந்திருக்கறதாக அலர்றாங்க. போய்ப் பார்த்தால் ஷணத்துக்கு ஷணம் மேலே வளர்ற தாவரம் அது.
யாரோ சொன்னாங்க, உங்க வீட்டுலே முதல்லே வந்து அதை அழிச்சீங்களாம். அவர் முடிப்பதற்குள் நான் களைப்பும், பிரயாண அயர்வும், தூக்கத்தில் இருந்து எழுப்ப்பப்பட்ட எரிச்சலுமாக சத்தமிடுகிறேன் – பீஜத்தை பிடுங்கி எரியுங்க பீஜத்தை பிடுங்குங்க. எரியுங்க. அவர் ஒன்றும் புரியாமல் தன் காலுக்கு நடுவே பார்த்துக்கொள்ள அந்த எரிச்சலிலும் சிரிப்பு வருகிறது. அசுர மிளகு கொடியை பிடுங்கினா வேர் ஒரு இடத்திலே தட்டுப்படும். அந்த பீஜத்தை தூர எரியுங்க அல்லது எரிச்சுடுங்க. கொடி வளராது என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டு உறக்கத்தைத் தொடர மாடியேறுகிறேன். உறக்கம் வரவில்லை. அந்த இரவு சுகிர்தா என் வீட்டிலேயே தங்கியிருந்தாள்.
October 13, 2021
மிளகு – In the wonderland of minor miracles
நான் சாரதா. நான் தெரிசா. நான் கொச்சு தெரிசா. நான் சாரதா தெரிசா.
இன்றைக்கு என் பிறந்தநாள். ஜூலை 4 அமெரிக்காவுக்கு சுதந்திரதினம் என்பதோடு எனக்கும் விசேஷமான தினம். அறுபத்தைந்து வயது ஆகிறது. அம்பலப்புழை தேகண்ட என்றால் சமையல்கார பிராமணர்களின் கிட்டத்தட்ட நூற்றுநாற்பது வருட வரலாறு கொண்ட குடும்பத்தில் வந்தவள். அம்பலப்புழை தேகண்ட பிராமண குடும்பத்தில் இருந்து என் கொள்ளுத்தாத்தா மதம் மாறியதால் அவர் ஜான் கிட்டாவய்யர் ஆனார். நான் மறுபடி மதம் மாறி இந்துவாக, சாரதாவாக ஆனேன். ஜான் கிட்டாவய்யரின் மகள் சாரதாவாக இருந்து வல்ய தெரிசா ஆனாள். நான் கொச்சு தெரிசா.
அம்பலப்புழை குடும்பம் போல நூற்றுநாற்பது வருட வரலாறு கொண்ட அரசூர் குடும்பத்தில் நான் வாழ்க்கைப்பட்டவள். அரசூர் குடும்பத்தில் சங்கர அய்யருக்கு என் கொள்ளுத் தாத்தாவின் தங்கை பகவதி அம்மாள் வாழ்க்கைப்பட்டு வம்சம் விருத்தியானது. பகவதிப் பாட்டியின் பேரன் சின்னச் சங்கரனுக்குத்தான் நான் தாலி கட்டாமலேயே வாழ்க்கைப்பட்டேன். அரசூர், அம்பலப்புழை குடும்பங்களை இணைப்பது நானும், எங்கள் அன்பு மகன் மருதுவும்.
என் அறுபதாண்டு ஜீவிதத்தில் அற்புதங்களை நான் தரிசிக்க, அனுபவிக்கத் தொடங்கியது மேற்கு யார்க்ஷயரில் இதுவரை இல்லாத அதிசயமாக ஒரு மயில் வந்து ஆடியதில்தான். முப்பது வருடம் முன் நான் கால்டர்டேலில் நடத்தி வந்த பிஷ் அண்ட் சிப்ஸ் கடை வாசலில் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
என் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பரான அமேயார் பாதிரியார் அந்த வினோதப் பறவை என்ன என்று வாட்டிகனுக்கு, சங்கைக்குரிய போப் ஆண்டவருக்கு லிகிதம் எழுதி விளக்கம் வந்து சேர எதிர்பார்த்திருந்தார்.
அதற்கு முன், என் முதல் கணவன் மெட்காஃப் உயிரோடு இருந்த காலத்தில் அதிசயமான ஒரு காரை செகண்ட் ஹாண்ட் ஆக வாங்கி அடிக்கடி அங்கே இங்கே மோதி உடைத்து ஒருமாதிரி ஓட்டிக் கொண்டிருந்தான். அந்தக் காரில் விபத்து நிகழ்வது அதிசயமில்லை. பெட்ரோல் தேவையில்லாமல் தண்ணீரில் ஓடுவது என்பதே பேராச்சரியம்.
மெட்காஃப் இறந்துபோய் முசாபரை நான் இரண்டாம் கணவனாகத் திருமணம் செய்து கொண்டபோது அந்தக் காரை ஓட்டிப் போக அவன் விருப்பப் படவில்லை. எனினும் அதன் கியாதி லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் பரவ, இங்கிலாந்து ஸ்காட்லாந்து பேரரசியான ஹர் மெஜஸ்ட்டி எலிசபெத் மகாராணி அந்தக்காரைப் பார்க்க விருப்பப்பட்டதால் அமேயர் பாதிரியாரும் மெட்காஃபின் சிநேகிதன் ஒருவனும் காரை லண்டனுக்கு எடுத்துப்போய் அரண்மனை வாசலில் விட அந்த வாகனம் தானே நகர்ந்து விரியத் திறந்த அரண்மனைக் கதவுகள் கடந்து உள்ளே போக, கதவுகள் மறுபடி மூடிக்கொண்டனவாம். அப்புறம் என்னாச்சோ அந்தக் காருக்கு, தெரியவில்லை.
என் வாழ்க்கையில் அதிசயங்கள் அத்தோடு முடிவடைந்தன என்று நான் கருதியிருந்த காலத்தில் அதாவது இன்றைக்கு முப்பது வருடம் முன்பு சின்னச் சங்கரனை முதலில் சந்திப்பதற்கு முன் அடுத்த ஆச்சரியமான நிகழ்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறையில் நானும் என் அப்போதைய கணவன் முசாஃபரும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த நேரம் அது. தற்செயலாக அரசூரில் சின்னச் சங்கரனின் பூர்வீகமான வீட்டுக்குப் போயிருந்தேன். என்றால் பூட்டியிருந்த கதவுகளுக்கு இந்தப் பக்கம் இருந்து ஒரு ராத்திரி நான் பார்க்க, உள்ளே தீப ஒளியில் ஹாலில் போட்டு வைத்த ஊஞ்சல் ஆடி அசைந்தபடி இருந்தது. ஊஞ்சலில் குடுமியோடு ஒரு அழகனும் ஆவி ரூபத்தில் ஒரு அழகியும் காதல் புரிந்து கொண்டிருந்தது எனக்கு சிறிது நேரம் கண்ணில் பட்டு நின்று போனது. இந்த மண்ணில் எனக்கு ஏற்பட்ட முதல் அதிசய அனுபவம் அது.
அதற்கு அப்புறம் நானும் முசாஃபரும் அம்பலப்புழையில் என் பூர்வீக வீட்டின் சிதிலங்களைப் பார்வையிட்டு விட்டு, நூறு வருடம் முன் சாவக்காட்டு வயசன் என்ற குடும்பத்துக்குப் பரிச்சயமான ஒரு கிழவருக்கு புதையல் கிடைத்த தலத்துக்குப் போனோம். புதையுண்ட போத்தலில் நிறைந்திருந்த ஏதோ தைலத்தில் தோய்த்த பலா இலையை கிழவன் வீசியெறிய அந்த இலையை அசைபோட்டு உண்ட பசுமாடு ஒன்று திடீரென்று கட்டைக்குரலில் இங்க்லீஷில் பேச ஆரம்பித்த அந்த இடத்தில் என் கால் பட்டதும் கரகரத்த குரலில் என்னை அந்தப் பசு வரவேற்றுப் பேசியது மறக்க முடியாத ஒன்று.
fish and chips shop pic
ack wikipedia.org
October 12, 2021
An Italian traveller meets with a barefooted Indian Queen – மிளகு பெருநாவலில் இருந்து
குதிரைகள் தண்ணீர் அருந்தவும் நாங்கள் சற்றே இளைப்பாறவும் சாலை ஓரத் தோப்பில் சாரட்கள் நிற்கின்றன. நேரம் என்ன என்று கேட்பதற்கு முன் பகல் ஒரு மணி ஆகப் போகிறது. உள்ளாலில் இருந்து ஒண்ணரைக்கல் வெளியே இருக்கிறோம் என்று பாதுகாப்பு வீரர் மரியாதையோடு சொல்லி நிற்கிறார் – எதாவது வேணுமா அம்மா?
வேணும் என்று சொல்ல வாயெடுக்கிறேன். வேணாம். அவர்கள் அத்தனை ஆண்களும் தோப்பின் மரங்களுக்குப் பின்னாலும் கொஞ்ச தூரம் நடந்து பழைய ஆளில்லாத கட்டடங்களின் ஒரமாகவும் குத்தவைத்து சிறுநீர் கழிப்பதைப் பார்த்து முகம் திருப்பிக் கொள்கிறேன்.
உள்ளால் மகாராணி உட்கார்ந்து நீர்பிரிய முடியாது. பெண்களுக்கே உரிய சுகவீனம். பொறுத்துக் கொள்ளத்தான் வேணும். வேறு வழி? தாகம் எடுத்தாலும் தண்ணீர் பருகுவதை ஒத்தி வைக்கிறேன். அரசு மாளிகை போய்ச் சேர்ந்துதான் தண்ணீரும், மோருமெல்லாம். அற்பசங்கை முடித்துத்தான் எல்லாம்.
இதோ வந்தாகி விட்டது. இன்னும் கால் கல் தொலைவுதான். சாரட்டை நிறுத்தி நடக்கத் தொடங்குகிறேன். கூடவே பாதுகாப்பு அதிகாரிகளும், ஆட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் வருகிறார்கள். தலையில் பருத்தித் துணியால் முக்காடு போட்டுக் கொள்கிறேன். மார்பு மூடி தலையும் மூடும் நீள்துணி இது. காலில் செருப்பின்றி வேகமாக நடக்கிறேன். என் கூட்டம் வேகமாக பின் தொடர்கிறது.
சாலை ஓரத்தில் இருந்து ஒரு வெள்ளைக்காரன் எதிர்ப்படுகிறான். கூடவே அவன் அமர்த்திக்கொண்டு வந்த துவிபாஷி.
நான் பியத்ரோ தெல்லா வல்லே. வெனிஸ் நகரில் இருந்து வருகிறேன்.
அவன் சொல்வது, துவிபாஷி மூலம் உடனே மொழிபெயர்ப்பாகிறது.
வெனிஸ்ஸில் இருந்து தனியாகவா வருகிறீர்கள்? கடவுள் உண்டம்மா என்னோடு என்கிறான் அவன். இளைஞன் தான்.
இதென்ன மொழி நீங்கள் பேசுவது? இத்தாலி அம்மா.
எங்கெல்லாம் இந்துஸ்தானத்தில் போயிருக்கிறீர்கள்? கண்ட்ஹர், லக்னௌ, தில்லி, மத்துரா அவன் அடுக்கிப் போகிறான். எனக்கு மாளிகைக்குள் போகும் அவசரம். அவனைத் தவிர்க்கப் பார்க்கிறேன்.
இத்தனை பெரிய நகரங்களுக்குப் போய்விட்டு இந்தப் பொட்டல்காட்டுக்கு என்ன காண வந்தீர்கள் என்று நடந்தபடி கேட்கிறேன். அரசியாக இருந்து காலில் காலணி கூட இல்லாமல் நடந்து வருகிறீர்களே அந்த உலக ஆச்சரியமான நிகழ்வைக் காணத்தான் வந்தேன் என்கிறான்.
பார்த்தாயிற்று தானே, செல்லலாமா? நான் இன்னும் சில அடிகள் நடந்து மாளிகையில் நுழையும் முன் அவனுக்கு இன்றும் நாளையும் தங்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யவும் அரச மாளிகை அலுவலர்களிடம் முணுமுணுக்கிறேன்.
நன்றி சொல்லும் அவனிடம் நான் கழிப்பறைக்கு நடக்கும் முன் சொல்கிறேன் – இது என் பிறந்த மண். காலணி இட்டு இதைப் பிரிய மாட்டேன். முடிந்தால் உருண்டு கொண்டே வருவேன் எங்கும். என் மண் என் மக்கள்.
அவன் கரவொலி செய்தது பின்னால் கேட்கிறது. கூட வந்த மற்றவர்களும்.
அரசி என்றால் நாளைக்கு வரலாற்றில் இடம் பெற இதெல்லாம் சொல்லவும் செய்யவும் வேண்டித்தான் இருக்கிறது.
படம் – இத்தாலிய ஓவியத்தின் அடிப்படையில் வரையப்பட்ட ராணி அப்பக்காவும் இத்தாலியப் பயணியும்
October 11, 2021
From MILAGU, The Novel – கரைக்கு வந்த கணபதி
என் பெருநாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி.
வழக்கம்போல் ஊர்ப் பிரமுகர்கள் என்னிடம் பேசத் தயாராக மேல் துண்டால் வாய் பொத்தி நிற்கிறார்கள். துண்டை அகற்றித் தோளில் போட்டுக் கொண்டு சுருக்கமாக, வாழ்த்து எல்லாம் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து பேசச் சொல்கிறேன். கேட்டதின் சாரம் இதுதான் –
இந்த ஏரியில் உத்தர கர்னாடாகப் பிரதேசத்தின் பல பகுதி நீர்நிலைகளில் இருப்பதுபோல் கோடையில் வெள்ளம் வடிவதும் மற்ற காலங்களில் கூடுவதும் சாதாரணமாக நடப்பதில்லை. மழைநீர் சேமிப்பு இருப்பதால் இந்த ஏரி வற்றுவதே இல்லை. ஆகக் குறைவான மழை பெய்தாலும், ஏரி சிறியதென்பதால் சேமிப்பு வழக்கம்போல்தான் இருக்கும்.
இந்த ஆண்டு மழை இருந்தது. ஆனால் வெய்யில் வழக்கத்தை விட மிக அதிகமாக நீண்டநாள் தொடர்ந்ததால் ஏரி வற்றிப் போய் உள்ளே இருந்து மரச் சிற்பமாக விநாயகர் வெளிப்பட்டிருக்கிறார்,
பேசிக்கொண்டே ஏரிக் கரையில் கிழக்கு மூலைக்கு நடந்தோம். பந்தல் போட்டு புது மணல் பரப்பி குலை தள்ளிய வாழை மரங்கள் கட்டி கல்யாண வீட்டு சூழ்நிலை வியாபித்திருந்தது அங்கே. நடுவில் ஜம்மென்று மூன்றடி உயரத்தில் விநாயகர் காட்சி கொடுத்துக்கொண்டிருந்தார்.
கரம் கூப்பி வணங்கினேன். கொண்டுபோன நைவேத்தியப் பொருட்களை கணபதிக்குப் படைத்து என் மகள் பானுமதி விரைவில் மால்பே போய் அவள் கணவனோடு ஊடுதலெல்லாம் தீர்ந்து கூடியிருந்து நிறைவாழ்வு வாழ அருளப் பிரார்த்திக்கிறேன்.
முதல் கிராமத்து ஏரிக்கு முறையான காவல் இன்னும் சிலர் செய்ய, இரண்டாம் கிராமத்து ஏரியில் இருந்து முதலை நீங்க விநாயகன் அருளை அடுத்து வேண்டுகிறேன். பிரார்த்திக்கும்போது கவனிக்கிறேன். வலம்புரியாகத் தும்பிக்கை கீழே சற்றே பின்னப்பட்டிருந்தது. காரணம் என்னவாக இருக்கும்?
மரத்தில் விக்ரகத்தைச் செதுக்கும்போது கைத்தவறுதலாக தும்பிக்கையில் பங்கம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் ஏரியில் எந்தக் காலத்திலோ விசர்ஜனம் செய்து விக்ரகத்துக்கு விடை கொடுத்திருக்கலாம்.
காணபத்யம் என்ற கணபதி வழிபாடு இருநூறு, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பெருவாரியாகத் தென்னிந்தியாவிலும் மேற்குக் கரையிலும் பரவியபோது அப்போதைய பேரரசுகள் அதற்குத் தடை விதித்தன. உயிர்நீக்கம் வரை கொடுமையான தண்டனைகள் மத நம்பிக்கை பேரில் ஏற்பட்ட அந்தக் காலத்திலும் பிடிவாதமாக அவசர அவசரமாக வழிபாடு நடத்தியிருந்ததாக வரலாறு சொல்கிறது.
கணபதி விக்ரகத்தை வைத்து வழிபட்டு அதை மரியாதைபூர்வமாக அகற்ற, களிமண் பிரதிமைகளே ஏற்றவை என்று அந்த விநாயக பக்தர்கள் அறிந்தார்கள். மஞ்சளிலும், களிமண்ணிலும், ஏன் ஆவின் சாணகத்திலும் கணபதியைப் பிடித்து வைத்து ஆறு, குளம், கடல், கிணறுகளில் அவற்றைப் பின்னர் அமிழ்த்திய காலத்து விநாயகர் இந்த ஏரி விநாயகராக இருக்கலாம்.
அதுவும் இல்லை என்றால் வீட்டில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்து தற்போது தினசரி வழிபட வசதி இல்லாமல் ஏரிக்குள் யாரோ கொண்டு வந்து விடுத்துப் போயிருக்கலாம்.
நான் சொல்லச் சொல்ல கிராமத்துப் பிரமுகர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதுவாக இருந்தாலும் வழிபட்டு விடைகொடுத்து ஏரித் தரையில் ஓய்வு கொள்ள அனுப்பிவைத்த கணபதியை மறுபடி கரைக்குக் கூட்டி வந்து வழிபடுவது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது. எதற்கும் மத அறிஞர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவர்களில் மூத்த பிரமாணி சொன்னார் – அம்மா நல்ல புரிதலோடு தெளிவாகச் சொன்னீர்கள். எங்களுக்கு இதேதான் பிரச்சனை. கணேசர் கரையில் இருக்கட்டுமா ஏரியில் இருக்கட்டுமா?
நான் சிரிக்கிறேன். ஏரிக்கரையில் ஏற்கனவே கணபதி வீற்றிருக்கிறார். ஊரெல்லாம் நகரெல்லாம் விநாயகர் தான். மஞ்சளில் பிடித்து வீடுதோறும் சுப காரியங்களைத் தொடங்கி வைப்பவர் அவர் தான். வெல்லத்தில் பிடித்த வெல்லப் பிள்ளையாராக அவரை வழிபட்டுக் வயிற்றடியில் இருந்து பிரசாதமாகக் கிள்ளித் தின்றாலும் கோவித்துக்கொள்ள மாட்டார் அவர்.
ஜெய்கண்பதி ஜெய்ஜெய் கண்பதி கோஷங்கள் அதிர, ஏரி கணபதியை ஏரிக்குள்ளேயே அழைத்துப் போய் இருக்க விட்டு அவருடைய ஏரிக்கரை பிரதிமையை வழக்கம்போல் வழிபடுவோம் என்றார்கள் அவர்கள்.
நாளை பௌர்ணமி. அர்ச்சனை, படையல், அபிஷேகம் எல்லாம் செய்வித்து விநாயகரை அனுப்பி வைக்கிறோம். மகிழ்ச்சியாக என்னையும் அனுப்பி வைத்தார்கள் கட்டோலி கிராமத்துப் பெருமக்கள்.
படம் நன்றி zee5.com
October 10, 2021
மிளகு பெருநாவலில் இருந்து – A crocodile and a queen
நான் பார்த்தபோது முழங்கால் வரை ஏரிநீரில் மூழ்க விட்டுக்கொண்டு பலபேர் எந்த காரியமும் இல்லாமல் ஏரிக்குள் இருந்து எல்லா திசையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏரிக்குள் இறங்கி நிற்கும் எல்லோரையும் இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து அவரவர்களுக்கான காரியங்களில் செயல்படுவதை தொடரச் சொல்லி உத்யோகஸ்தர்கள் பலமாகக் கூவுகிறார்கள். அப்படி வரவில்லை என்றால் முதலை ஊர்ந்து வந்து பிடித்துக் கொண்டால் மீட்க ஒரு முயற்சியும் செய்யப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
ஏரிக் கரையில் நிற்பவர்கள் முதலையைப் பிடிக்க எடுக்கப் போகிற ஒரு ராஜாங்க நடவடிக்கையில் பங்கு பெற அழைக்கப்படுகிறார்க்ள். கிட்டத்தட்ட எல்லோரும் உடனே கலைந்து போய்விடுகிறார்கள்.
அம்மா, இவர் தான் இந்த ஏரிக்குக் காவல் இருக்கும் குகன் என்று வயசன் ஒருவனை என் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார் பிரமாணி.
இந்த வாரம் ஷராவதி நதியிலிருந்து திசை திரும்பிய வெள்ளப் பெருக்கில் இந்த முதலை ஏரிக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்று கிராமப் பேச்சாம். முதலை வந்தால் முதல் காவு என்னை மாதிரி காவல்காரங்கதான் என்று ஏரிப் பாதுகாவலன் குரல் தழுதழுக்கச் சொல்கிறான்.
முதலை வெளியே வந்தால் அதன் ஆயுளை ஓய்த்து விடலாம் ஆனால் வருவேனா என்று அடம் பிடிக்கிறது என்கிறார் பிரமாணி. ஏரியில் மீன்பிடித்தமும் கடல்முகத்துக்கான போத்துவரத்தும் நான்கு நாட்களாக நடக்காமல் வர்த்தகம் நின்று போயிருக்கிறது என்று கிராமப் பெரிய மனிதர்கள் சிலர் என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் என்ன செய்து முதலையை வெளியே கொண்டு வரவேண்டும்? அதனோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா?
அம்மா ஒரு கன்னுக்குட்டி அல்லது ஆட்டுக்குட்டியை முளையடிச்சு ஏரிக்கரையில் கட்டி வச்சா, அதுவும் காதை அறுத்து ரத்த வாடையடிக்கக் கட்டி வச்சிருந்தா, இளசு ரத்தம், சதைக்காக முதலை வெளியே வரும். ஆட்கொல்லி புலியை சுலபமாகப் பிடிக்க இதான் செய்யறாங்க என்கிறார் ஒரு ஊர்ப் பிரமுகர்.
எனக்கு சபையில் கோபம் வருவது அபூர்வம். இப்போது வருகிறது. அப்படித்தான் முதலை பிடிக்கணும்னா மனுஷ ரத்தவாடை, மனுஷ உடம்புன்னு படைக்கலாமே. என்னை எடுத்து காதை அறுத்து கட்டி வைக்கச் சொல்லுங்க. முதலைக்கு அப்பக்கா ராணி மாமிசம் பிடிக்காமல் போகாது சதை கொஞ்சம் குறைவு தான் என்றாலும்.
நான் சொல்லி முடிப்பதற்கு முன் அவர் என் காலில் விழுந்து பிழை பொறுக்கச் சொல்லி மன்றாடுகிறார். அவரை எழுப்பி நிற்க வைத்து நகர்கிறேன்.
பாதுகாப்புப் படையில் இருந்து வந்த வீரர்கள் மொத்தம் எண்பத்தேழு பேர் என்று என்னிடம் கணக்குச் சொன்னார் அவர்களின் தலைவர். அவர்கள் கரையில் ஏரி நீர்ப் பரப்பை ஒட்டியும் பத்து பேர் மட்டும் பெரும் கவனத்தோடு நீர்ப் பரப்பில் நின்றும் தொடங்கலாமா என்று ஒரே குரலில் கேட்டு ஜெயவிஜயிபவ என்று முழங்குகிறார்கள்.
இன்னும் பத்து பேர் பெரிய வலைகளோடு ஏரிக் கரையில் இருந்து ஏரிக்குள் மெல்ல நகர்ந்து போகிறார்கள். திடீரென்று நிசப்தம். எல்லாக் கண்களி, ஏரிக்குள்ளிருந்தன.
ஏரி உள்ளே ஏதோ பெரிய உடம்போடு ஊர்ந்து வருவது கண்டு தண்ணீரில் இறங்கி நின்றவர்கள் அவசரமாக விலகி நீர்ப் பரப்பை விட்டு வெளியே ஓடி வருகிறார்கள்.
முதலை முதலை என்று குரல்கள் உச்சத்தை அடைய நான் வெகு சிரமப்பட்டு அவர்களை அடக்குகிறேன்.
முதலை நான் நிற்கும் பக்கமாக முன்னேறுகிறது என்று என் பாதுகாப்பு வீரர்கள் கையில் எடுத்த வாளோடு தண்ணீரில் இறங்கப் போகும்போது நான் தடுத்து நிறுத்துகிறேன். இந்த வாளும் வில்லும் முதலைக்கு சாதாரணம். நெருப்பு அம்பு இருந்தால் சித்தம் பண்ணுங்கள் என்கிறேன்.
உடனே பாதுகாப்பு வீரர்கள் உடம்போடு சேர்த்து வைத்திருந்த சிறு பெட்டகத்தில் இருந்து வெடியுப்பையும் கந்தகத்தையும் எடுத்துக் கலந்து நாட்டுத் துப்பாக்கியில் அதை உள்ளாக்கி விசையை முதலை பக்கம் நகர்த்தி இழுத்து விரல் சுண்ட பெரும் சத்தத்தோடு துப்பாக்கி வெடிக்கிறது.
இல்லை, அதன் மேல் படவில்லை. முதலை வந்த வேகத்தில் ஏரிக்குள் திரும்ப ஓடுகிறது. ஷராவதி நதியில் நீர்ப்பெருக்கு அதிகமாகி வருவதாக ஒன்றுக்கு மேல் பலர் சொல்கிறார்கள். தண்ணீர் மட்டம் உயரும்போது வெள்ளத்தோடு முதலையும் கரைக்கு வரலாம் என்று நேரிட வேண்டியிருக்கக் கூடும் பெரும் இடர் அத்தனை பேர் மனதிலும் எழுந்திட எல்லோரும் அமைதியாக நிற்கிறார்கள்.
October 9, 2021
மிளகு – Abbakka Rani learns a lesson about politically correct thinking and speaking
An excerpt from my mega-novel MILAGU
இரண்டு நாள் முன்பு சென்னபைரதேவி அவளுடைய வளர்ப்பு மகனை மிர்ஜான் கோட்டையில் இருந்து வெளியேற்றிய செய்தி கொண்டு வந்த தூதன் ஏதாவது பதில் இருக்கிறதா அம்மா என்று கேட்டான்.
என் ஆதரவை சென்னபைரதேவிக்கு அளிக்கிறேன். ஜெர்ஸோப்பா நாட்டு மகாஜனங்களும் அவருக்கு பெரும் ஆதரவு தரவேண்டும் என்று விரும்புகிறேன் . உத்தர கர்னாடகா பிரதேசத்தின் வியாபார, பொருளாதார வளர்ச்சிக்கு அவருடைய பங்கு கணிசமானது. அவருக்கு எதிரான சிறு போராட்டங்கள் நிலைக்காது. நிலைமை சீராகிறது, பார்க்கலாம்”.
இதை என் மனதில் இருந்து பேசினேன். ஆனால் என்ன ஆச்சு? நேற்று காலையில் கேலடி அரசதிபர் வெங்கடப்ப நாயக்கர் அனுப்பியிருந்த துரிதச் செய்தியில் என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார், அவருடைய வேடிக்கை விநோத எழுத்துப் பாணியில் –
பிரியமான அப்புக்குட்டி, சென்னாவை உனக்கும் பிடிக்கும் எனக்கும் பிடிக்கும்; திகம்பர முனிகளை உனக்குப் பிடிக்கும் எனக்குப் பிடிக்காது. அப்பக்காவை சென்னாவுக்கு பிடிக்கும் எனக்கும் பிடிக்கும். என்னை சென்னாவுக்குப் பிடிக்கும் உனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை. ஏன் சென்னாவுக்கு ஆதரவு சொல்ல அத்தனை அவசரம்? நீ செய்தி கொண்டு வந்த ஒற்றனிடம் ரகசிய லிகிதமாக எழுதிக் கொடுத்திருக்கலாம். வாய்வார்த்தையாகச் சொல்லி ஜெர்ஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் உன் உள்ளாலிலும் சகலருக்கும் சம்பந்தமுண்டோ இல்லையோ சகலருக்கும் தெரிந்து விட்டிருக்கும். இனிமேலாவது ராஜாங்க ரகசியத்தை அற்பர்களிடம் வாய் வார்த்தையாகச் சொல்லாதே. வாய் நிறைய சந்தோஷமான காரியங்களுக்காக ஏற்பட்டது. உன்னை எனக்குப் பிடிக்கும். உனக்கு என்னை
அப்போது சிரித்தபடி படித்துச் சுருட்டி வைத்துவிட்டாலும், மறுபடி திரும்பத் திரும்பப் படிக்கும்போது வெங்கடப்ப நாயக்கார் சொல்வதின் ஆழமான பொருள் என்னைச் சூழ்ந்து மருட்டுகிறது.
இந்த விவகாரத்தில் நான் என்ன செயது கொண்டிருக்கிறேன்? அடுத்த குறுநிலத்தின் ஆட்சியைப் பற்றிக் கருத்துச் சொல்ல நான் யார், தனிப்பட்ட முறையில் சென்னா என் நெருங்கிய தோழி என்றாலும்?
நாளையே ஏதாவது உடன்பாடு ஏற்பட்டு தாயும் மகனும் மீண்டும் சேர்ந்து விட்டால், அதுவும் சென்னாவின் முழு விருப்பத்தோடு நேமிநாதன் அரசராகப் பதவி ஏற்றுக்கொண்டால், என் மேல் அவன் விரோதத்துடன் தானே ஆட்சிக்கு நட்பு – எதிரிக் கணக்கைத் தொடங்குவான்?
உடையாத பலூன் கவிதை இரா.முருகன்
உடையாத பலூன்
—————
போன வாரம், சரியாக எட்டு நாள் முன்பு
பாப்பாவுக்குப் பிறந்தநாள்
வீடு அலங்கரித்தோம்
காகிதத் தோரணம் தொங்க விட்டோம்
முகமூடி அணிந்து குழந்தைகள் ஆட
பாட்டு ஒலிபரப்பினோம்
அடுமனைக்கு தொலைபேசி
கேக்கும், சமோசாவும், சர்பத்தும்
வரவழைத்தோம் நல்ல விருந்து.
பெரிய பலூன்களை ஊதி ஊதி
குழந்தைகள் கையில் கொடுத்தோம்
கதவிலும் ஜன்னல்களிலும் ஒட்டவைத்தோம்
பாப்பா கையிலும் பலூன் பிடித்து
அங்குமிங்கும் ஓடினாள் ரம்யமாக.
எல்லா பலூனும் அப்புறம் உடைய
பாப்பா கை பலூனுக்கு ஆயுசு கெட்டி.
பிறந்தநாள் வாழ்த்து பாடியபோது
மடியில் எல்சா பொம்மையோடு
பலூனும் இருத்திக் கொண்டு
பாப்பா சிரித்தாள் மகிழ்வோடு
உடையாத பலூனில் வரைந்த முகமும்
கூடவே நகைத்தது சத்தமின்றி.
அடுத்தநாள் முன்னறையில்
தனியாக மிதந்த பலூனை
புன்சிரிப்போடு பாப்பா தொட்டாள்
எழுந்து மேலே பறந்தது
விளையாட்டென்று; பாப்பாவுக்கு
ஆன் லைன் வகுப்பு நேரமாச்சு
பலூனை ஒதுக்கி ஓடினாள்.
இரண்டு நாள் கழித்தும்
உடையாத பலூன் பெருமையோடு
பாப்பா பின்னால்
மிதந்து போனது அவள் அறியாது
தோளில் தொட்ட பலூனை போவென்று
தட்டி அகற்றினாள் ஸ்லைம் பொம்மை
செய்ய களியுருட்டிய குட்டி தேவதை.
ராத்திரியில் பாப்பா உறங்கப் போக
முகத்தில் மோதிய உடையாத பலூன்
தனக்குத் தெரிந்த கதைசொல்ல
சிரித்த முகத்தோடு மிதந்தது.
தொந்தரவு பண்ணாதே போ என்று
பாப்பா பலூனை அடித்து விரட்டினாள்.
அப்புறம் மூன்று நாளாக
எல்லோர் காலிலும் மிதிபட்டு
கழிவறைக்குள் பறந்து
உதைபட்டு வெளியே மிதந்து
எல்லாக் கதைகளோடும்
பலூன் இன்னும் உடையாமல்
மின்விசிறியில் இன்னும் மாட்டாமல்
மிதக்குது நாள் முழுதும் ராவிலும்
உபயோகம் முடிந்து
நாள்சென்ற பலூனுக்கு
உடைந்தால் நிம்மதி
சுவர்களில் கதவில்
ஜன்னலில் முட்டுது மோதுது
இன்னும் உடையவில்லை.
October 8, 2021
மிளகு – பெரு நாவலில் இருந்து – ஏரிக்காவலரின் விநோத அனுபவம்
நேற்று ராத்திரி நான் தான் ஏரிக்குக் காவல் சக்கரவர்த்தினியம்மா. எப்பவுமே நான் தான். என்னை ஏரிக்காவல் கந்தய்யான்னு கூப்பிடுவாங்க. நாற்பது வருஷமா காவல் இருக்கேன். ஆனா நேற்று ராத்திரி எப்படியோ அசந்துட்டேன். ஏரிக்குள்ளே எங்கே இருந்துன்னு இவங்களுக்கு தெரியாம நீர்வரத்து ஏறிட்டிருந்திருக்கு. இன்னும் அரை மணி நேரம் அப்படியே விட்டிருந்தா ஏரி உடைஞ்சிருக்கும்.
தொண்டை கமற நிறுத்தி, தொடர்கிறார் கந்தய்யா.
நடுராத்திரிக்கு பூ வாடை. கண்ணைத் திறந்தா அம்பாள் கொண்டை போட்டு சித்தாடை கட்டிக்கிட்டு காலில் தண்டையும் போட்டு வந்து ஏரிக்கரையில் என் குடிசைக்குள்ளே நுழைஞ்சுட்டு இருக்கறாங்க. கந்தா எழுந்திருன்னு எங்கம்மா குரல்லே நாலு தடவை சொல்லி அழைக்கறாங்க. ஏதோ கனவுன்னு நான் மறுபடியும் உறங்கப் போறேன். குறிபார்க்கற குறமகள் வச்சிருக்கற பிரம்பு கையிலே வச்சிருக்காங்க அதனாலே என் முதுகில் சுறீர்னு ரெண்டு தடவை அடிச்சு என்னை எழுப்பிட்டு உடனே வெளியே போயிடறாங்க.
அப்படியா? நான் வியப்பை குரலில் கொண்டு வந்து விசாரிக்கிறேன். நம்புவதாக குரலும் முகபாவமும் காட்டுவதால் என்ன குறைந்து போச்சு. அவர் பரவசத்தோடு தொடர்கிறார் –
நான் வெளியே போய் என்ன நடந்ததுன்னு தெரியாமலேயே ஏரியோட வடகிழக்கு பகுதி ஓரமாக நீருக்குள்ளே போறேன். மூச்சு பிடித்து முங்கி ஆழத்திலே கண்மறைவாக வச்சிருக்கற சக்கரத்தை வலமிருந்து இடதாக திருப்பறேன். நிலத்தடி தண்ணீர் ஊற்று நீர் ஏரியில் கசிவது நின்னுபோகுது. அதுக்குள்ளே ஏரி உடையப் போகுதுன்னு உங்களுக்கு விடிகாலையிலே சந்தேசம் அனுப்பிட்டாங்க போல் இருக்கு.
நான் கந்தய்யாவைத் தோளில் தட்டிப் பாராட்டிப் பின்னால் பார்க்க கருவூல அதிகாரி வராகன் பையை என்னிடம் தருகிறார். உள்ளே இருந்து பத்து விராகன் காசுகளை கந்தய்யாவிடம் தருகிறேன்.
பிரமாணியும் மற்றவர்களும் என்னைக் கைகூப்பி வணங்கறாங்க. அபயராணி வாழ்கன்னு காலைப் பறவைகள் பயந்து தூரமாகப் பறக்க, வாழ்த்தொலி முழக்கி டமாரங்களை அடிச்சு சங்கு முழக்கறாங்க.
நான் ஏரிக்காவல் கந்தனிடம் கேட்கறேன். நிலத்தடி தண்ணீர் எப்படி திறந்தது? சில சமயம் நீர் அழுத்தத்தாலே அந்த விசை இடம் வலமாகத் திரும்பி நீர் வரத்து தொடங்கறது நடக்கறதுதான் என்று சாதாரணமாகச் சொல்கிறார் கந்தையா.
அதை கண்டுபிடித்து தண்ணீருக்குள்ளே முங்கு நீச்சல் போட்டுப்போய் விசையை வலம் இடமாக்கி நிறுத்தற திறமையை இதுவரைக்கும் யாருக்கும் கத்துக்கொடுக்காமல் ரகசியமாக வச்சிருக்கறது தப்பு. ஊர்லே ஒரு பத்து பேருக்காவது சொல்லிக் கொடுக்கணும் என்று கட்டளை இடுகிறேன்.
எல்லோரும் அமைதியாக இருக்க, பிரதானி சொல்கிறார் –அம்மா, அவங்களுக்கு கத்துக்க ஆசைதான். ஆனால் முங்குநீச்சல் கற்றுக்கொள்ள மூச்சை அடக்க வேண்டீருக்கே. அதுக்குத்தான் பயம்.
பிரமாணி சிரிக்க, இரண்டு இளைஞர்கள் நான் வர்றேன் என்று முன்னால் வருகிறார்கள். நான் அவர்களை வரவேற்பதுடன் பிரமாணியிடம் சொல்கிறேன் – ஏதோ ஒரு காலத்தில் எதிரிகளிடமிருந்து நீர்நிலையை காப்பாத்த இப்படி விசைகளை மறைவாக வைத்திருக்காங்க. உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த விசையை இன்னும் அதிக உயரத்தில் தண்ணீர் மட்டத்துக்கு மேலே நிர்மாணம் செய்து இயக்கறதை எளிமைப் படுத்தலாம்.
எல்லாம் செய்து என்னை அடுத்த செவ்வாய்க்கிழமை காலையில் உள்ளாலில் சந்தித்து நிலைமை பற்றி தகவல் சொல்ல ஆணையிடறேன். மகாராணி சித்தம் என்று தலை வணங்கி நிற்கிறார்கள்.
படம் நன்றி விக்கிமீடியா
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

