இரா. முருகன்'s Blog, page 70
September 17, 2021
‘மிளகு’ – பெரும் நாவலின் ஒரு பக்கம் A midwife and wife
மிங்குவுக்கு இது மூன்றாவது முறை பிரசவ வலி கண்டது. ஒவ்வொரு தடவை வலிக்கும்போதும் உள்ளறையில் இருந்து வேதனை முனகல் கேட்டு மிங்குவின் கணவர் பைத்யநாத் வைத்தியர் உள்ளே ஓடிப் போய் நோக்குகிறார்.
அங்கே இருக்கும் மருத்துவச்சி ராஜம்மா அவரை வாசலுக்குக் கை சுட்டி மிதமான குரலில் சொல்கிறாள் – ”மருமகனே, நீங்க ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கலாம். ஆனா இப்படி வைத்தியர் பெண்டாட்டிக்கும் பிரசவம் பார்க்கறது இந்த மருத்துவச்சிதான். எப்போ உங்களை உள்ளே கூப்பிடணுமோ அப்போ கூப்பிடறேன். அதுவரை வாசல்லே இரும்”. வைத்தியரை வெளியே விரட்டாத குறையாக அனுப்பி வைக்கிறாள்.
பத்து நிமிடம் சென்றிருக்கும். ஆச்சா? ரகசியம் பேசும் குரலில் விசாரித்தபடி வைத்தியர் திரும்பவும் உள்ளே ஓடி வருகிறார். மருத்துவச்சி ராஜம்மா இல்லை என்று தலையசைக்கிறாள்.
”அது வந்து, பனிக்குடம் உடைஞ்சு அவள் சத்தம் போட்ட மாதிரி கேட்டது”.
”பனிக்குடம் உடைஞ்ச பொண்ணு சத்தம் போடறது தான் உங்களுக்கு கேட்டு அனுபவம். எனக்கு உடைஞ்சது என் கர்ப்பத்திலேன்னு சுய அனுபவம். பதறாமல் போய் உக்காருங்கோ. நான் பார்த்துக்கறேன். எப்போ கூப்பிடணுமோ அப்போ கூப்பிடறேன்”.
பனிக்கால இரவாக இருந்தாலும் வைத்தியருக்கு வியர்த்துக் கொட்டியது. நடுவயதைத் தொடும்போது ஏற்பட்ட கர்ப்பம். மிங்குவுக்கு முப்பத்தைந்து வயது. வைத்தியரோ நாற்பதைத் தொட்டாகி விட்டது. இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு பேருக்கும், ஏன், குழந்தை வளரும்போது அதற்கும், கஷ்டம் இல்லையா?
வைத்தியரும் மிங்குவும் கர்ப்பத்தில் முடியாத உடல் சேர்க்கையையே எப்போதும் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துச் சென்ற இரண்டு வருடமாக செயல்பட்டார்கள். என்ன செயல்பட்டோம் என்று வைத்தியர் அதிசயித்தார்.
நாள் பார்த்து சம்போகம், அவ்வப்போது அணைப்பு என்று உபத்திரவமில்லாமல் போய்க்கொண்டிருந்த தாம்பத்ய ஜீவிதம், போன காமன் பண்டிகை ராத்திரி அவரும், மிங்குவும் அரிசி மது அருந்தியதும் விழித்தெழுந்து, இப்போது மருத்துவச்சி வந்து வீட்டுக்குள் சட்டமாக உட்கார்ந்து வைத்தியரை அதிகாரம் செய்வதில் முடிந்து கொண்டிருக்கிறது.
இன்னும் ஒரு மணி அல்லது ரெண்டு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும். வீடே மாறப் போகிறது அப்புறம். மிங்கு ரெண்டு மாதமாவது மகாராணியின் நம்பிக்கைக்குரிய தாதியாக பணி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி குழந்தையைப் பராமரிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அவள் வேலைக்குத் திரும்ப வேண்டும்.
ராஜாங்க வைத்தியராக தான் இருப்பதை விட, மிங்கு சென்னபைரதேவி ராணியம்மாவின் பிரத்யேக தாதி என்பது மிர்ஜான் கோட்டையிலேயே சக்தி வாய்ந்த ஒரு உத்தியோகம். அதை எப்படியும் வைத்தியர் குடும்பத்தில் தக்கவைக்க வேண்டும் என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார்.
வைத்தியர் மறுபடி வீட்டுக்குள் அரைகுறை இருட்டில் பார்க்கிறார். மருத்துவச்சி வெற்றிலை பாக்கை சின்னஞ்சிறு தாம்பூல உரலில் டொக்டொக்கென்று இடிக்கிற சத்தமும், சில்வண்டு இரையும் சத்தமும் தவிர ராத்திரி அமைதியானது.
pic A child birth in ancient Rome
ack historyextra.com
September 16, 2021
பெரு நாவல் ‘மிளகு’ – ஷராவதி தீரத்தில் ஒரு விழாக்காலக் காலைப் பொழுது
காசிரையின் புன்முறுவலும் அழகிய பெரிய விழிகளும் அதிகாலை வெளிச்சத்தில் அழகாகத் தெரிய சாரட் வண்டி தண்ணீர்த் துறைக்கு வந்து நின்றது. தேரோட்டி அருகமகாவீரன் குதித்து இறங்கினான்.
”காசக்கா, நீங்க சொன்னபடி வெளிச்செண்ணெய், அரப்புப் பொடி, வாசனைப்பொடி, மல்லிகைப் பூ, கருந்துளசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் பிரம்பு கடகத்துலே தனித்தனியாகப் போட்டுக் கொண்டு வந்திட்டேன். சரியா இருக்கா பாருங்க” என்றான் அவன்.
”சரி நான் பார்த்துக்கறேன். நல்ல காரியம் செய்திருக்கே. உன்னை அருகதேவரும் மகாவீரரும் சேர்ந்து ஒரு மாசம் மதுசாலைக்கு போகாமல் பார்த்துக்கொள்ளட்டும். இப்போ கிளம்பு. ஆண்கள் இன்றைக்கு பகல் வரை வரமுடியாத பிரதேசம் இது”.
அருகமகாவீரன் கண்ணை அகல விரித்து காணாதன கண்டது போல் நாலு திசையும் திரும்பித் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்ததை உடனடியாகத் தடுத்து அவனை அனுப்பிவைத்தாள் காசிரை.
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.
ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற நிலைமை துணிச்சலை ஏற்படுத்த, நீராட்டு கட்டத்தின் படிகளில் மேல்துணி துறந்த பெண்டிர் ஒருத்திக்கு ஒருத்தி முதுகு தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். விளையாட்டாக முதுகில் இருந்து முன்னால் படர்ந்த கைகள் விளையாட, சிரிப்பும் கூச்சலும் ஒவ்வொரு வினாடியும் மிகுந்து, அடங்கி, மீண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தன.
“அக்கா, முதுகு தேய்ச்சு விடவா?” என்று காசிரையிடம் உரிமையோடு ஏழெட்டு சிறுமியர் அவள் அமர்ந்த கல்படிக்கு அடுத்த மேற்படியில் இருந்து, முதுகில் தொட்டு மெல்ல அடித்துச் சிரித்தார்கள்.
இன்னும் கீழிருந்த படியில் அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்கள் நான்கு பேர் ரம்மியமாகப் பாட ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பாட்டின் தாளமும் இசையும் மனம் கவர தண்ணீர்த்துறையே கூடச் சேர்ந்து பாடியது. எண்ணெய் பூசிய தொடைகள் மின்னி தாளம் கொண்டு சிலிர்த்தன –
கும்மியடி பொன்னூர் பூமி முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மி அடி.
நம்மை சூழ்ந்திடும் நன்மைகள் எல்லாம்
உண்மை இதுவென்று கும்மியடி.
காசிரை எண்ணெய்க் காப்பு கொள்ள நிறைய நேரம் பிடித்தது. சிறுமிகளின் தலையில் எண்ணெய் வைத்து வாழ்த்த நிறையப்பேர் காசிரையைக் கோரினார்கள்.
சொல்வனம் இதழில் மிளகு முழு அத்தியாயங்களாக வெளியாகிறது
சொல்வனம் – மிளகு தொடர் ஐந்தாவது அத்தியாயம் திருமதி சரஸ்வதி தியாகராஜனின் இனிய, காட்சியைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் குரலில்
September 15, 2021
’மிளகு’ பெரும் நாவலில் இருந்து The Government machinery appearing to be at work
“நேற்று நான் ஒரு கனவு கண்டேன். எல்லா தீர்த்தங்கரர்களும் சிற்பமாக உருவாகும் ஒரு சமணக் கோவில்.பஸதி. வாசலில் கழிவுநீர் ஓடை. அதன் நடுவே கழுத்து வரை மூழ்கியபடி ஒரு சிறுமி துணி பொம்மையை அசுத்த நீரில் நனைத்து சிரிக்கிறாள். தேங்கிய சாக்கடை இது. நான் பஸதிக்குள் போகிறேன். பாதி உருவான தீர்த்தங்கரர்கள் சுவர்ப்பக்கம் பார்த்தபடி திரும்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் – எங்களுக்குப் படைக்க நீ எடுத்து வந்திருக்கும் இனிப்புகளும் பழங்களும் எங்களுக்கு வேண்டாம். அந்தச் சிறுமியை குளிப்பாட்டி அழைத்து வந்து அவளுக்கு அதையெல்லாம் ஊட்டு. தேங்கிய சாக்கடையை உன் கையால் நகர்ந்து ஓட வை. தீர்த்தங்கரர்கள் சொல்லி முடிப்பதற்குள் கனவு கலைந்தது”.
இந்தக் கனாத்திறம் உரைக்க யாராவது உண்டா?
இன்று மாலை சென்னா மாலை நேர பஸதி பிரார்த்தனையில் இதைச் சொல்வாள். பஸதி நிர்மாணம் சற்றே ஓய்வெடுக்க அதற்காக ஒதுக்கிய பணம் ஹொனாவரில் சாக்கடை சீர்திருத்தப் பயன்படுத்தப்படும் என்பதை அவள் தெரிவிக்கப் போவது அப்படித்தான். இன்னும் ஒரு மாதத்தில் பஸதி முழுமையாகுமெனவும் தான்.
கோட்டை நிர்வாக அதிகாரி சரணன் எட்டிப் பார்த்தான்.
சரணா, அடுத்து யார் வந்திருக்கிறார்கள் என்னை சந்திக்க?
அம்மா, மங்களூரில் இருந்து யூதர் நிதிநிறுவனத் தலைவர் மேயர் கஸன் பத்தரை மணிக்கு வர இருக்கிறார். பதினொன்றரை மணிக்கு போர்த்துகல் அரசத் தலைமைப் பிரதிநிதி இமானுவல் பெத்ரோ சென்ஹோர் வர இருக்கிறார். அதற்கு முன் நீங்கள் காலைப் பசியாற உணவு காத்திருக்கிறது.
எடுத்து வரச்சொல் சரணா.
சென்னா எண்ணங்களில் மூழ்கியிருந்தாள். உணவு உண்டு சோதிக்கும் உத்தியோகஸ்தன் அப்படி உண்டு அரசி உண்ணலாம் என்று கைகூப்பித் தெரிவித்தான்.
ரெண்டு இட்டலிகளும் ஒரு இனிப்பு குழக்கட்டையும் வை.
உண்ணத் தொடங்கினாள் சென்னபைரதேவி.
சரணன் பரபரப்பாக மறுபடி உள்ளே வந்து வணங்கினான்.
உண்ணும்போது தொந்தரவு செய்வதை மன்னிக்க வேண்டும். தறிக்காரன் தெரு பஸதியில் தீர்த்தங்கரர்களின் பாதி செதுக்கிய திருவுருவங்கள் சுவரைப் பார்த்துத் திரும்பிக்கொண்டனவாம். தறிக்காரன் தெருவில் ஒரே ஜனநெரிசல்.
சென்னா அவனைக் கூர்ந்து பார்த்தாள். சிரித்தபடி சொன்னாள் –
சிற்பிகளையும் திரும்பி அமர்ந்து வேலையைத் தொடரச் சொல்.
அவள் மனதில், ஆனந்தபைரவி ராகத்தில், குழலும், நாகசுவரமும் இழைந்து சூழ்ந்தன.
September 14, 2021
Sculptor Chistle Ensemble – ‘மிளகு’ பெருநாவலில் இருந்து
உளிகள் விடிந்தது முதல் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன.
தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது.
பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது.
சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப போய், சலிக்காமல் அந்த ஒரே பாட்டைப் பாடுவது போன்ற இரைச்சல். நூறு இருநூறு சிற்பிகள் சிற்பம் செதுக்கும் கூட்டு ஒலி.
பட்கல்லிலும், கோகர்ணத்திலும், ஜெருஸோப்பாவிலும், ஹொன்னாவரிலும். உள்ளாலிலும், உடுப்பியிலும், மால்பேயிலும், கார்வாரிலும், புட்டிகேயிலும் அச்சு அசலாக ஒரே மூலத்தின் பன்முகத்தன்மையிலமைந்த சதுர்முக பஸதிகள் ஒரே நேரத்தில் எழுந்து வருகின்றன.
இவற்றில் சில சென்னபைரதேவியின் அரசாட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் அமைவதில்லை. அந்தந்த குறுநிலங்களின் மன்னர்கள் சென்னா பஸதி கட்டுவதை பார்த்து நல்ல பெயர் வாங்க அவர்களும் கட்டத் தொடங்கினார்கள்.
கருங்கல் பாளங்களை எடுத்துக் கிடைமட்டமாக நிறுத்திக் கூரையாக்கி, கருங்கல்லைத் தரையாக்கி, கருங்கல்லைச் சுவராக்கி, ஒவ்வொரு பஸதியும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த இயலாதபடி கல்லில் செதுக்கிய ஒற்றைக் கவிதையின் பிரதிகள் போல இருக்கும்.
பஸதிகளின் சுவர்களிலும் கூரையிலும் சின்னச் சின்னதாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்படும். இந்துஸ்தானம் முழுவதிலும் இருந்து வந்த சிற்பிகள் காட்சி வைக்கும் விரல் திறமையும், உளிகொண்டு செதுக்கும் சிற்ப மேன்மையும் அதிசயமானது.
சென்னா பஸதிகளை உளியின் ஒலிகொண்டு தான் நினைவு கொள்வாள். அவை ஒலித்துக் கொண்டிருக்கும் வரை இந்த மிளகு மூதாட்டிக்கு உற்சாகமும் ஊக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.
சயன கிருஹத்துக்கு வெளியே சென்னா வந்தபோது ஓரமாக உட்கார்ந்திருந்த நாகசுவர இசைக் குழு மிக இனிமையாகக் காலையில் இசைக்கத் தகுந்த ராகமான மலையமாருதத்தை இசைக்கத் தொடங்கியது. நேற்று பூபாளம் வாசித்த குழு அது. அதன் முந்திய தினம் பௌளி என்ற இந்துஸ்தானி ராகம். தினசரி மங்கல இசையோடு துயில் உணர்ந்து, இரவு உறங்கும் முன் ஒரு மணி நேரமாவது இசையில் அமிழ்ந்து கண்மலர்கிறாள் சென்னா. நேற்றிரவு புல்லாங்குழல் மென்மையாக தாலாட்ட பஹாடி ராகத்தின் ஒலிகளோடு மலைச் சிகரங்களையும் மலையடிவாரங்களையும் சென்னா சுற்றிவந்தாள்.
“இசையோடு எழுந்து இசையோடு துயின்று வாழ்க்கை இசைமயமாகட்டும். தினம்தினம் ஏற்படும் அழுத்தத்துக்கும் இறுக்கத்துக்கும் ஒவ்வொரு எலும்பும், நரம்பும் பாதிப்பு ஏற்றுப் பிணங்கி நிற்காமல் அவை இரவில் அமைதியாக ஓய்வுகொள்ளட்டும். துயில் எழுந்து சாந்தமாக நாள் முழுக்க இயங்கட்டும். இசை எப்போதும் மனதில் உங்களோடு லயிக்கட்டும்” –
மிளகு நாவலில் இருந்து Bread from Ilias, the baker and pork marinated in corked white wine
“கஸ்ஸி, வா, வா, உன் மலர்ப் பாதங்களை தாங்கிக் கிடக்க என் வீட்டுப் படிகளுக்கும் வாசல் தரைக்கும் என்ன அதிர்ஷ்டம்”.
போர்த்துகீசிய மொழியில் மிகை நாடகம் ரசிக்கப்படுவது அதிகம் என்பதை மனதில் நினைத்தோ என்னமோ எழுபது வயது கவுடின்ஹோ மிகையான கையசைவு, கண் உருட்டல், வாயைக் கிழித்துத் தொங்கவிட்டதுபோல் புன்னகை, அசட்டுப் பேச்சு என்று கூத்து நிகழ்த்த, பொறுத்துக்கொண்டு வல்லூறு எங்கே கொத்தப் போகிறது என்று ஊகித்தபடி உள்ளே வந்தாள் கஸாண்ட்ரா, அவர் கூப்பிட்டது போல் கஸ்ஸி என்று யாரும் இதுவரை அவளை அழைத்ததில்லை.
”ராயப்பா, நாளை தாவரவியல் ஆராய்ச்சியைத் தொடரலாம். பெத்ரோ சீமான் அவசர பணிக்காக அவருடைய இல்ல நிர்வாகியை அனுப்பி வைத்திருக்கிறார்”.
நாற்காலியில் இருந்து எழுப்பி வெளியே கொண்டு விடாத குறையாக ராயப்பாவை வாசல் வரை கூட்டி போய் அனுப்பி விட்டு, வாசல் கதவை சாத்தினார்.
கஸாண்ட்ராவின் பின்னால் மோப்பம் பிடித்தபடி வேகமாக நடந்தார்.
“என் கண்ணே, என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று அவள் முதுகுப் புறத்தில் இருந்து கழுதைப்புலி ஓலமிடுகிறது போல் நாராசமான குரலில் பிதற்றினார். கஸாண்ட்ரா பன்றி என்றாள். பின்னால் திரும்பி மாமிசம் என்று சேர்த்தாள்.
“பெத்ரோ சின்ஹோர் உங்களுக்காகத் தனியாக வெள்ளை ஒயினில் ஊறிய பன்றி மாமிசத்தை ரொட்டியில் பொதிந்து சுட்டுக் கொண்டு வந்து தரச்சொன்னார். அருமையான, இருபது வருடம் பழைய ஒயின்” என்றாள் கவுடின்ஹோவிடமிருந்து ஒரு அடி விலகி நின்று.
“இருபது வருடம் பழைய ஒயினா? நான் கவுரவிக்கப் படுகிறேன்” என்று தன் நெஞ்சில் விரலால் தொட்டு அடுத்து கஸாண்ட்ராவின் உடலிலும் சுவாதீனமாகத் தொட்டுச் சொன்னார்.
“சின்ஹோர், ஒயின் மட்டுமில்லை பன்றியும் பழையது தான்” என்றாள் கஸாண்ட்ரா. ஓ என்று நிறுத்தாமல் சிரித்தார் கவுடின்ஹோ.
ஒயின் பழையது தான். நடுவில் தக்கை திறப்பானை விட்டுத் திருகித் திறக்க முற்படும்போது தக்கை உதிர்ந்து ஒயினில் விழுந்ததால் அது குடிக்கத் தரமற்றுப் போனது என்பதை கவுடின்ஹோவுக்குச் சொல்லலாம் என்று நினைத்தாள் கஸாண்ட்ரா. ’கார்க் ஒயினில் விழுந்தால் ஒயின் கெட்டுப் போகும். அதை அடுத்து பன்றிகளுக்குத் தான் தரவேண்டி இருக்கும்’.
”மிகச் சுவையாக பிஃபானாகள் அமைந்ததால் உங்களுக்கு முதலில் அளித்து வரச் சொன்னர் என் துரை”.
அவள் பேசியபடி நடக்க, இருளில் கிடந்த அறை வாசலில் நின்று அவளை எல்லா வலிமையும் காட்டி உள்ளே இழுத்தார் கவுடின்ஹோ.
September 12, 2021
சிறுபறை கொட்டி, பாடல்கள் பாடி நதிநீராடி ஒரு காலை
மிளகு நாவலில் இருந்து
விடிந்து கொண்டிருக்கும்போது அந்தப் பெண்கள் நடக்கத் தொடங்கினார்கள். சிறுபறை கொட்டிப் பாடிக்கொண்டே நடந்தால் நடக்கும் தொலைவு தெரியாதென்று பாட ஆரம்பித்தது, நடையும் தீரவில்லை, பாட்டும் ஓயவில்லை.
எல்லோரும் பதினைந்து வயதிற்கு உட்பட்ட கன்யகைகள். எல்லோரும் பதினைந்து வயதுக்காரிகள் என்றோ சொன்னது? இந்தக் கூட்டத்தைத் தலைமை வகித்து நடத்திச் சென்றவள் காசிரை. அப்படித்தான் தன் பெயரைச் சொல்லிக்கொள்கிறாள் கஸாண்ட்ரா சில நேரம்.
பல நேரமும் அவள் தன் போர்த்துகீசிய தந்தை ரொனால்டோ பத்ரோஸின் மகளாக உணரும்போது அவள் கஸாண்ட்ரா. இந்துஸ்தானத்து அம்மா காவேரியின் செல்லப்பெண்ணாக உணரும்போது காசிரை.
இன்றைக்கு கல்யாணம் கழித்த, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்கள் நிலாக் கடவுளையும் சூரியனையும் வழிபட்டு, நிலா மறைந்த பின், ஆதவன் எழும்போது ஆற்றில் நீராடினால் விரைவில் திருமணம் நிகழும் என்று நம்பிக்கை.
கல்யாணம் ஆகாத கன்யகைகள் கோதுமையில் சர்க்கரை சேர்த்துப் பிடித்து வைத்த நிலாத்தேவனின் உருவத்தையும், சூரியனின் உருவையும் வணங்கி அந்தச் சிறு உருவங்களை சுவைக்காமல் வாயிலிட்டு விழுங்குதலும் வழிபாட்டில் ஒரு பகுதியாகும்.
நெய் மிகைத்துப் பெய்த சர்க்கரைப் பொங்கலும் அப்பங்களும், உப்பிட்ட கடலைப்பருப்பு சுண்டலும், ஒற்றை இட்டலிகளுமாக ஆற்றங்கரையில் இருந்து உண்ண வேண்டும். வழிபட்டு திரும்பி வரும்போது சிறுபறைகளையும் பழந்துணியையும் ஆற்றோடு போகவிட்டு வரவேண்டும்.
கூட்டமாகத் தோழிகளோடு போய் ஆற்று நீராடும் இந்த வழிபாடு தமிழ் பேசும் பிரதேசத்திலிருந்து வந்தது என்று சொல்வார்கள். காசிரைக்கு அதொன்றும் சிந்தனைக்குரிய விஷயமில்லை.
விடிகாலைப் பனியும், கூட்டமாக கோவிந்தன் பெயர் சொல்லிச் சிறு பறை கொட்டிப் போவதும், பாடுவதும், பேசுவதும் ஐந்து வயதிலிருந்து பிடித்துப்போனவை. காசிரை ஆகும் தினங்கள் வருடம் ஒருமுறை மட்டும், ஜோசியர்கள் கணித்தபடி வரும்.
pic Bathing Ghat
ack gettyimage
September 11, 2021
போர்த்துகீஸ் பன்றி மாமிச சாண்ட்விச் பிஃபானாவும் வெள்ளை ஒயினும்
வீடு அமைதியில் கிடந்தது. காஸண்ட்ரா கதவுகளைச் சாத்தித் தாழிட்டு பின்னறையிலிருந்து எடுத்த பெரிய பீங்கான் ஜாடியோடு சமையலறைக்கு நடந்தாள்.
ஜாடிக்குள், இரவு முழுவதும் வெள்ளை ஒயினில் ஊறிய பன்றி மாமிசத் துண்டுகள் தனி வாடையைக் கிளப்பிக்கொண்டிருந்தன. ஓலைக் கடகத்தில் அடுமனையில் இருந்து வந்திருந்த ரொட்டியை எடுத்து சீரான சதுரத் துண்டுகளாக சீய்த்து சமையலறை மேடை மேல் பித்தளைத் தட்டில் இட்டாள்.
ரொட்டியும் பெத்ரோவின் மாளிகையில் தான் முன்பெல்லாம் செய்து வந்தார்கள். ரொட்டி செய்யலாம் என்று ஆரம்பித்தால் வேறெதெல்லாமோ கவனிக்க வேண்டி இருந்தது. நல்ல, புழுபூச்சி இல்லாத கோதுமை வாங்குவது, கரகரவென்று மாவு ஆக கல் யந்திரத்தில் போட்டுச் சுற்றிச் சுற்றி அரைத்து வைப்பது, வெண்ணெயும் தேங்காயும், எள்ளும், கலந்து புளிக்காடி சேர்த்து அடித்து அடித்து மாவைப் பிசைந்து களிமண் அடுப்பில் சுட்டெடுப்பது என்று பல செயல்முறைகள் கடைப்பிடிப்பது தேவைப்படும்.
ஆகரி தெருவில் யூதன் இலியாஸ் அடுமனை தொடங்கிய பிறகு ரொட்டி மாவு பற்றிய விசனம் இல்லாமல் போனது.
ரொட்டி சுட அடுமனை அடுப்பு ஒன்றை யூதனிடம் சொல்லி வைத்து கொச்சியில் இருந்து வாங்கிவைத்திருந்தார் பெத்ரோ. வீட்டு உபயோகத்துக்காக என்பதால் சிறியதாகத் தோற்றம் தரும் அந்த அடுப்பில் உஷ்ணம் உற்பத்தியாவதுடன், வந்த வெப்பம் வெளியேறாமல் இருக்க இருப்புத் தட்டுகள் அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன.
அரை மணி நேரத்தில் புத்தம்புது ரொட்டி துண்டுகள் பத்திருபது சுட்டெடுக்கவும், இரண்டிரண்டு துண்டுகள் நடுவே ஒயினில் ஊற வைத்த பன்றி இறைச்சித் துண்டுகள் செருகப்பட்டு இன்னொரு முறை வாட்டவுமாக நேரம் போனது.
ஆக, கவுடின்ஹோ பிரபு உண்ண ஆறு துண்டு சாண்ட்விச்சுகள். அப்படித்தான் இங்கிலீஷ் பேசும் பூமியில் சொல்கிறார்களாம். தக்காளி மிளகாய் மிளகு சேர்த்துக் காய்ச்சிய கூழும் எடுத்துக் கொண்டாள் கஸாண்ட்ரா.
கிழக் கோட்டானுக்கு இவ்வளவு அருமையாகச் சமைத்ததைக் கொண்டுபோய்த் தரணுமா என்று எரிச்சல். என்றாலும் புறப்பட்டுவிட்டாள் மரவீதிக்கு. கவுட்டின்ஹோ அங்கே தான் வசிக்கிறார்,
September 10, 2021
ஷராவதி நதியில் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் – மிளகு நாவலில் இருந்து
மிளகு நாவலில் இருந்து –
ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி ஷராவதியை மடை மாற்றி கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது.
கட்டத்தின் படிகளில் ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற நிலைமை துணிச்சலை ஏற்படுத்த, மேல்துணி துறந்த பெண்டிர் ஒருத்திக்கு ஒருத்தி முதுகு தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கைகள் விளையாட, சிரிப்பும் கலகலப்பும் ஒவ்வொரு வினாடியும் அதிகரித்து அடங்கி மீண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தன. அக்கா முதுகு தேய்ச்சு விடவா என்று காசிரையிடம் உரிமையோடு ஏழெட்டு சிறுமியர் அவள் அமர்ந்த கல்படிக்கு அடுத்த மேற்படியில் இருந்து முதுகில் தொட்டு மெல்ல அடித்துச் சிரித்தார்கள். இன்னும் கீழ்ப் படியில் உட்கார்ந்திருந்த தமிழ்ப் பெண்கள் நான்கு பேர் ரம்மியமாகப் பாட ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பாட்டின் தாளமும் இசையும் மனம் கவர ஸ்நானக் கட்டமே கூடச் சேர்ந்து பாடியது. கைகள் கொட்டி, எண்ணெய் பூசிய தொடைகள் மின்ன பாதங்கள் தாளமிட்டன –
கும்மியடி பொன்னூர் பூமி முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மி அடி.
நம்மை சூழும் நல்லன எல்லாம்
உண்மை ஈதென்று கும்மியடி.
காசிரை எண்ணெய்க் காப்பு கொள்ள நிறைய நேரம் பிடித்தது. சிறுமிகளின் தலையில் எண்ணெய் வைத்து வாழ்த்த நிறையப்பேர் காசிரையைக் கோரினார்கள்.
கொஞ்சம் பெரிய பெண்கள் அவள் கையால் எண்ணெய் வாங்கி நெற்றியிலும் பின் கழுத்திலும் உச்சந்தலையிலும் விரலால் தொட்டுக்கொண்டு ஷராவதி தாயை வணங்கி விரைவில் மணநாள் காண அருளும்படி கண்மூடி பிரார்த்தித்து, நதியில் நீராடி வருவார்கள்.
இவர்களுக்கும் பிறகு, எப்படி மேகம் போல் கருத்த கூந்தலைப் பராமரிப்பது, உதடுகள் வெடிக்காமல் மிருதுவாக காட்சியளிக்க என்ன செய்யணும், இன்னும், பலருக்கும் தேவையான, மார்பகங்கள் திண்ணென்று எப்போதும் திகழ என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் குறிப்புகளை காசிரையிடம் கேட்டுத் தெளிவு பெற ஒரு கன்னியர் கூட்டம் நிற்கும்.
காசிரையின் முதுகையும், உருண்ட தோள்களையும் தடவி மெய்மறந்து பாராட்டவும் சில பெண்கள் காத்திருப்பார்கள். அந்த வழுவழுத்த உடல் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்விக்கு அவள் சொல்கிற ஒரே பதில் – பயத்தம்பருப்பு மாவைத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்துக் குளி.
ஹொன்னாவர் பெண்கள் வந்தாலே பசுநெய் ஊற்றிப் பிடித்த மாவுருண்டை நடந்துவருவது போல் வாடை தீர்க்கமாக அடிக்க பயத்தம்பருப்பு கவசம் முக்கியக் காரணமானது. கையும் காலும் வழுவழுத்துப் போனதாக காசிரைக்கு நன்றி சொன்னவர்கள் அநேகம்.
September 9, 2021
நடந்தாய் வாழி ஷராவதி
மிளகு நாவலில் இருந்து சிறு பகுதி
காவேரியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதி மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும். அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள் கொண்டுதரும் நீர்ச் சுவையும், நதிவாசனையும் துறந்து உப்புச் சுவை மீதுர கடல்வாடை கொண்டு, ஷராவதி மறைந்து போவாள்.
நதி கடலோடு கலக்கும் கழிமுகத்துக்கு முன்னால் மடைமாற்றி வேகத்தைக் கட்டுப்படுத்தி, நீராடவும், படிகளில் அமர்ந்து கால்தொட ஆறு நனைத்துப் போவதுமாக நேரம் செலவிட, நீராடும் துறைகள் கரையில் மும்முரமாக இயங்கும் நிலாநாள் காலை.
இருபது வருடமாக காசிரை இந்த நதி நீராடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவளோடு பாடிக் கொண்டும், சிறுபறை கொட்டிக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் வருகிற கன்யகைகளில் சிலர் கல்யாணமாகிக் காணாமல் போகிறார்கள். புதிதாக சின்னப்பெண்கள் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். அவளை வாடி போடி என்று உரிமையோடு அழைத்துக் கூட வந்த பெண்கள், வயதுக்கு முன் வந்து சேரும் இளம் முதுமையோடு, அவர்களின் பனிரெண்டு வயதுப் பெண்ணை நதிநீராட காசிரையோடு அனுப்பிவைக்கிறார்கள். அடியே காசிரை விளிகள் அத்தை காசிரையாகி, அதுவும் போய் காசிரை அம்மாளாகத் தேய இன்னும் நிறைய வருடங்கள் மீதி இல்லை என்பதை காசிரை அறிவாள்.
கூட வந்தவர்கள் தொலைந்து போன அந்த சோகத்தை நினைத்தால் எதற்கு நதிநீராட்டு நாளுக்கு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக இல்லை, காசிரை தனக்காகப் போகிறாள். இனியும் அவளுக்கு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அவள் அதற்காக நிலாத் தேவனை வேண்டுவதும் இல்லை.
இமானுவெல் பெத்ரோ என்னும் போர்த்துகீசிய அரசியல் அதிகாரப் பெரும் ஆளுமை கொண்ட நாற்பது வயதானவரோடு முப்பத்தைந்து வயதான காசிரையின் இரவுகள் இன்பமாகக் கடந்து போகின்றன என்று உலகமே குரல் தாழ்த்திப் பேசி, நம்புகிற தகவல் உண்மையானதில்லை என்பதை காசிரை அறிவாள். பெத்ரோ துரை அறிவார். தெய்வம் அறியுமா தெரியாது.
அவரோடு சம்பந்தப்படுத்தி காசிரையைப் பேசுவது ஒரு விதத்தில் அவளுக்குப் பாதுகாப்புதான். வேறு யாரும் சின்னத்தனம் பண்ண முயற்சி செய்வதற்கு முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக யோசிப்பார்கள்.
pic Jog Falls
September 8, 2021
மருமக்கள் தாயம் என்ற அலிய சந்தான நடைமுறை 1604-ம் ஆண்டு
மிளகு நாவல் – ஜெருஸுப்பா, ஹொன்னாவர், எட்டாக்கனி
வீட்டு வளாகத்தில், வீடு நிற்கும் இடத்துக்குப் பின்னால் இன்னும் நாலு வீடு கட்ட முடியுமளவு நிலம் இருந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு நேரே தெற்கில் இருந்த இந்த நிலப்பரப்பும் சுத்தம் செய்யப்பட்டு பந்தல் வேய்ந்து கல்யாணத்துக்கான போஜனசாலை ஆனது. இன்றிலிருந்து நாளை மறுநாள் கல்யாணம் முடிந்து, அதற்கடுத்த நாள் முளைப் பாலிகை கரைத்து முடியும்வரை இனி விருந்து இங்கேதான். அப்புறம் மாப்பிள்ளை, மருமக்கள் தாயம் என்ற அலியசந்தான நடைமுறைப்படி பெண் வீட்டுக்குக் குடி வந்து விடுவான். அது அடுத்த வாரம் நல்ல நாளான புதன்கிழமையன்று.
மாப்பிள்ளை உறவுக்காரர்களுக்கு விருந்து அறிவித்த பெண்வீட்டு உறவினர் கோஷ்டியில் மாமண்டுவும் இருந்தான். எல்லோரும் சந்தோஷமாக இருக்க, கொரகொரவென்று இருந்தார் அந்த சிடுமூஞ்சி உறவினர்.
அடுத்த புதன்கிழமை நல்ல நாளா? வியாழன் அதைவிட நல்ல நாள். அவர் கம்பீரமாகச் சொன்னார்.
வியாழக்கிழமை அமாவாசையாச்சே என்றார் ஐயர் குடுமி முடிந்தபடி.
அதான் சொல்றேன், ரொம்ப நல்ல நாள்.
தமிழ் பேசும் மண்ணில் அமாவாசை சுப தினம், கர்னாடகத்தில் அப்படி இல்லை. அந்தக் குழப்பம் தீர்த்து வைத்தது ஐயர் தான். புதனே நல்ல நாள் என்று முடிவானது. என்றாலும் சிடுசிடுப்பு கொஞ்சம் மீதி இருந்தது. ஜெருஸப்பா என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளமுடியாத ஏமாற்றமோ என்று மாமண்டு சந்தேகப்பட்டான்.
அவர் ஜெரஸோப்பான்னா என்ன அர்த்தம்னு கேட்டார். எனக்கு தெரியலே என்றான் மாமண்டு.
தெரியாம என்ன? சொக்கப்பா, இப்படி உக்காரும்.. பைரவ ஷெட்டி எதிர் இருக்கையைக் காட்டினார். அவர் ஒரு வெற்றிலையை எடுத்து சாவகாசமாக மென்றார். சொல்ல ஆரம்பித்தார்-
நாட்டு முந்திரி இருக்கு இல்லே, போர்த்துகல் இறக்குமதி இல்லே, நாட்டு முந்திரி, பல்லாதகா அப்படீன்னு சமஸ்கிருதத்திலே சொல்வாங்க. தமிழ்லே கிட்டாக்கனி. மலையாளத்துலே அலக்குசேறு. அது கன்னடத்திலே ஜெரு அப்படீன்னு சொல்றோம். ஸொப்புங்கறது கன்னடத்தில் இலை அப்படீன்னு பொருள்படும். ஜெருஸொப்பூர் அதாவது முந்திரி மர தோப்பு இருந்த இடம் ஜெருஸப்பூர், ஜெருஸப்பா ஆச்சு. சமஸ்கிருதப் பெயர் அடிப்படையில், பல்லாதகிபுரம்னு ஜெருஸுப்பாவுக்கு இன்னொரு பெயர் உண்டு. ஹொன்னாவர் பெயர்க் காரணம் தெரியுமா? கன்னடத்திலே ப பெரும்பாலும் ஹ ஆகிறது உண்டே. ஹொன்னு அப்படீன்னா பொன்னு. ஹொன்னாவர் பொன்னாவரம். அங்கே போர்த்துகீசியர்கள் மிளகு, சாயம் தோய்த்த துணி, ஏலம், லவங்கம் இப்படி நம்மவர்கள் கிட்டே வாங்கிக்கிட்டு அதற்கான விலையாக பொன்னைக் கொடுப்பாங்க. ஆகவே அந்த இடம் ஹொன்னூர். ஹொன்னவர். துறைமுக நகரம். புரிஞ்சுதா?
பைரவ ஷெட்டி இன்னொரு வெற்றிலை போட்டுக்கொள்ள, தரையில் உட்கார்ந்து கேட்டுக் மாமண்டு எழுந்து ரொம்ப நல்லா சொன்னீங்க ஐயா என்றபடி சொக்கப்பாவைப் பார்த்தான். அவர் சுவரில் சாய்ந்து உட்கார்ந்த படிக்கே உறங்கிப் போயிருந்தார்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

