இரா. முருகன்'s Blog, page 73
August 17, 2021
லொளலோட்டே எல்லா லொளலோட்டே ஆன குதிர எல்லா லொளலோட்டே சேன பண்டாரமு லொளலோட்டே
மிளகு நாவலில் இருந்து
”சாப்பிட்டு நடக்க முடியலேடி துளுவச்சி, ஒரு பக்கமா கொண்டுபோய்த் தள்ளுது. அதான் சாரட்டு சவாரி, இல்லாட்டாலும் குதிரை ஆள் அம்பு எல்லாம் இந்த உடம்பிலே உசிர் இருக்கறவரை கூடவே வரும். மூச்சு நின்னா, நின்னா சென்னா இல்லேதான்”.
சென்னபைரதேவி சிரித்தாள்.
லொளலோட்டே எல்லா லொளலோட்டே
சென்னபைரதேவி பாட அப்பக்காவும் சேர்ந்து கொண்டாள்.
லொளலோட்டே எல்லா லொளலோட்டே
ஆன குதிர எல்லா லொளலோட்டே
சேன பண்டாரமு லொளலோட்டே
சிநேகிதிகள் கைகளை உயர்த்திச் சேர்த்துத் தட்டி நீரூற்றைச் சுற்றி பாடிக்கொண்டே ஆடினார்கள்.
யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கருவூலம் எல்லாம் நிலையற்றது என்று விட்டலனை சரண்புகச் சொல்லும் புரந்தரதாசரின் தேவர்நாமா பாடல் அது.
அப்பக்கா மாளிகைத் தோட்டச் சுவருக்கு அந்தப் பக்கமாக மறைவாக நின்று கொண்டிருந்த வைத்தியர் மகாராணி சென்னாவுக்கும் அப்பக்கா ராணிக்கும் கைகுவித்து வணக்கம் சொல்லியபடி வெளியே வந்தார்.
“அட நீ இருக்கேன்னு மறந்து நான் பாட்டுக்கு ஏதோ கூவறேனே” என்று சென்னா பயந்த கோலம் காட்டினாள்.
”கிறுகிறுப்புக்கு இந்த லேகியம் நீங்க எடுத்துக்கவே இல்லை. நெல்பரலி போட்டு காய்ச்சி முந்தாநாள் தான் கொடுத்தனுப்பினேன். முதல்லே அதை சாப்பிடுங்க”
நெல்பரலி கலந்த லேகியம் எடுத்துக் கொடுத்து சென்னாவை அதை விழுங்கச் சொன்ன வைத்தியர், என்னென்ன சாப்பிட்டாள் மகராணி என்று விசாரணை செய்து கொண்டிருந்தார்.
”நாலு ஜிலேபியா, அப்போ இந்த குளிகை ரெண்டு. பால் பணியாரமா? இந்த லேகியம் ஒரு மடக்கு. நெய்ப் பொங்கலா? சீரக இஞ்சி மொரபா. மிளகு வடை நாலா சரிதான். நெல்லிக்காய் லேகியம் உடனே சாப்பிட்டாகணும் என்று வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த குழந்தைக்கு பாட ரீதியாகத் தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கும் வாத்தியார் மாதிரி வைத்தியர் ஒவ்வொன்றாகக் கொடுக்கப் பொறுமையோடு விழுங்கிக் கொண்டிருந்த சென்னா, ’போதும் போடா’ என்று வேகமாக உள்ளே போய்விட்டாள்.
வைத்தியருக்கும் அப்பக்காவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
idly courtesy wikipedia.org
August 16, 2021
அசுரவித்து- ஒரே இரவில் பற்றிப் படர்ந்து வெளி நிறைக்கும் மிளகுக்கொடி
மிளகு நாவலில் இருந்து
தெருவில் அந்த நேரத்திலும் கூட்டம்.
“எந்தினாணு அவிடெ திரக்கு?” என்று விசாரிக்க ”சாரதாம்ம வீட்டுலே ஏதோ மேஜிக்காம்” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விழுந்தடித்து ஓடினான் கேட்கப்பட்டவன்.
வீடு முழுக்க நல்ல மிளகு வாசனை. வாசலில் க்ரோட்டன்ஸ் வைத்திருக்கும் சிறு தோட்டத்தில் முழுக்க கொடிவிட்டுப் படர்ந்திருந்த மிளகும் அதே போல் நல்ல வாசனை பரத்திக் கொண்டிருந்தது.வாசலில் பிஷாரடி நின்றிருந்தார்.
”சாவக்காட்டு வயசன் புளிச்ச காடியை அமிர்தம்னு குடிச்சுட்டு துப்பின இடம் இது. அந்த மண்ணுக்கு திடீர் திடீர்னு அபூர்வ குணம் காணும். இப்போ வீட்டையே பிடிச்சு இறுக்கறதா மிளகு வள்ளி pepper creeper ஷணத்துக்கு ஷணம் கூடிண்டே போறது” என்றார் அவர் திலீபை பார்த்து.
“பீஜம் கண்டு பிடிச்சு வெட்டினா போதும்” என்றபடி வாசல் படிக்குக் கீழே பார்க்கச் சொல்லி யாருக்கோ கட்டளை இட்டுக் கொண்டிருந்தார். சாரதா தெரிசா அந்தக் கட்டளையை ஏற்று வாங்கி வேறு ஒரு கூட்டத்திடம் தெரிவிக்க பச்சையும் ஈரமும் கருத்த உள்வேருமாக பீஜம் தட்டுப்பட்டது. அப்புறம் மிளகுக் கொடிகள் பற்றுவிட்டு விழத் தொடங்கின.
பிஷாரடி பிறகு பார்க்கலாம் என்று திலீப் ராவ்ஜியிடம் சைகை செய்து விட்டு இறங்கிப் போனார்.
தெரிசாவின் வேலைக்காரப் பெண், சுகிர்தா என்று பெயர் அவளுக்கு, கிரீச்சிடும் குரல் வாய்த்தவள், கீச்சிட்டாள்- ”போங்க போங்க இங்கே என்ன ஆடிக்கிட்டா இருக்காங்க”.
அவுத்துப் போட்டுட்டு ஆட்டம் என்று யாரோ கூட்டிச் சேர்த்தார்கள். உடனடி சிரிப்பு உருண்டு அலையாக எழுந்து வந்தது. சுகிர்தா பற்று விலகி வீழும் மிளகுக் கொடியில் பறித்தெடுத்த ஒரு மிளகை வாயிலிட்டு மென்றாள். உடனே பசுமாடு பேசுவது போன்ற குரலில் அவள் எல்லோரையும் கலைந்து போகச் சொன்னாள். அது இங்க்லீஷில் இருந்தது.
August 15, 2021
மிளகு நாவலில் இருந்து – மாஸ்கோவில் இருந்து வந்த நடாஷா
”நடாஷா, உன் குடும்பம்?”
திலீப் தயங்கித் தயங்கிக் கேட்டான் அவளை.
“நானா? சில இனிப்புப் பழம், சில புளிப்புப் பழம், சில அழுகிய பழம், இன்னும் சில பழுக்காமலேயே உலர்ந்து உதிர்ந்தது. என் பழக்கூடையிலே எல்லாம் உண்டு”.
நடாஷா சிரித்தாள்.
”நான் இங்கே இருந்து மாஸ்கோ போனபோது எங்கப்பாவுக்கு சித்தபிரமை பிடிச்சிருந்தது. அதோடு கூட சென்ட்ரல் கமிட்டியில் சிறப்பாக வேலை பார்த்திருந்தார். அவரை குருஷேவ் எதிர்ப்பாளர்னு சைபீரியா அனுப்பிட்டாங்க. பிரஷ்னேவ் ஆதரவுக்காரர் அவர்னு அப்புறம் கண்டுபிடிச்சாங்க. பிரஷ்னேவுக்கே தனக்கும் ஆதரவாளர்கள் இருக்காங்கன்னு அவ்வளவு தாமதமாகத்தான் தெரியுமாம். அப்பாவை சைபீரியாவில் இருந்து வெளியே அனுப்ப அனுமதி வந்தபோது வெளியே போக மாட்டேனுட்டார் அவர். நான் அதுக்குள்ளே மாஸ்கோ யூனிவர்சிட்டியிலே இந்திய அச்சுத் தொழிலின் பாரம்பரியம் பற்றி இங்கே குறிப்பெடுத்துப் போனதை எல்லாம் வச்சு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன். நல்லவேளை என் டாக்டரேட்டை அவங்க தடுக்க முடியலே. இப்போவும் பீட்டர்ஸ்பெர்க், மாஸ்கோவிலே அவ்வப்போது கௌரவ பேராசிரியராக வகுப்பெடுக்கறேன். பொழுது போகாட்ட, பழைய பாணியிலே அப்படியே வச்சிருக்கற வீடு, மளிகைக்கடையிலே போய் நேரத்தை சந்தோஷமா செலவிடறேன். சோவியத் சந்தோஷம் இல்லே இது. ரஷ்ய சந்தோஷம்”.
அவள் சிரிக்க திலீப் ராவ்ஜியும் கூடச் சேர்ந்து சிரித்தார்.
”எல்லாம் சொன்னே, உன் கல்யாணம், காதல், குழந்தை குட்டி, இதெல்லாம் சொல்லேன் நடாஷா. நாங்க இந்தியர்கள். சினிமாவோ, நாடகமோ, நாவலோ சாங்கோபாங்கமாக இதெல்லாம் தெரிஞ்சாகணும். இல்லேன்னா நாங்களே கற்பனை செய்து கூடச் சேர்த்துப்போம்”.
படம் :ரஷ்ய ஆர்ட் காலரி russianpainting.org
August 14, 2021
லிஸ்பன் மாநகரப் பிரமுகர்களும் ஒரு பெருச்சாளியும்
(மிளகு நாவலில் இருந்து)
தோமஸ் அகஸ்டின்ஹோ ரொம்பப் பரிதாபமான நிலையில் காணப்பட்டார். லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த அவருக்கும், அவர் கூட வந்த ஜோஸ் கார்லோஸுக்கும் ஹொன்னாவர் கருமார் தெருவில் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தான் பிரச்சனை.
படுத்தால் உறக்கம் வரவில்லை. மெழுகுவர்த்திகளை அமர்த்தினார். திரைகளை முழுக்க இழுத்து மூடினார். அதையும் இதையும் நினைத்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் அகஸ்டின்ஹோ.
வேறொண்ணுமில்லை. ஒரு பெருச்சாளி, ராத்திரி படுக்க விடாமல் அவர் படுக்கையைச் சுற்றிக் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தது. அவர் போதை வஸ்துவைக் கவனிப்பாரா, பெருச்சாளியைக் கவனிப்பாரா? அதுவும் கொங்கணி பாஷை பேசுகிற பிரதேசத்து பெருச்சாளி இவர் போர்த்துகீஸ் மொழியில் விரட்டியதை புரிந்து கொண்டிருக்கப் போவதில்லை. வேலைக்காரர் யாரும் இல்லாத ராத்திரி நேரம் அது.
இன்னும் நாலு நாள். அப்புறம் லிஸ்பனை நோக்கிப் பயணம். நல்லபடியாக பயணம் நடைபெற வேண்டும். கடல் பயணத்துக்கான அசம்பாவிதங்களான கடலில் எழும் சூறாவளி, பொங்கி நாலு ஆள் உயரத்துக்கு அலை எழுப்பும் கடல், கப்பலைத் துரத்தும் சுரா, கூட்டமாக கப்பலைச் சூழ்ந்து திமிங்கில தாக்குதல், எப்போதாவது வந்து சேரும் கடல் கொள்ளைக்காரர்கள், கப்பல் பாய்மரமோ சுங்கானோ, மேல்தட்டோ பழுது சேர்ந்து போவது இது எல்லாம் அசம்பாவிதங்களில் சேர்த்தியானவை. , காற்று இல்லாமல் கப்பலைச் சுற்றி எடுத்துப் போய் அடுத்த காற்றுக்காகக் காத்திருத்தல், கொண்டு வந்த உணவும் குடிதண்ணீரும் குறைவாகப் போவது, சாப்பிடத் தகுதி இல்லாமல் போவது, கப்பல் செலுத்துகிறவர்கள், மற்றவர்கள் உடல்நலம் கெடுதல் இவை சந்திக்க வேண்டிய பேரிடராக இருக்கக் கூடும்.
எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கே கிளம்பினோம், அங்கே போய்ச் சேர்ந்தோம் என்று நாலு வாரத்தில் பயணம் முடித்தால் நன்றாக இருக்கும்.
படம் கோவாவில் போர்த்துகீஸ் பாணி வீடு
நன்றி அவுட்லுக் இந்தியா
August 13, 2021
விடுமுறை தரும் வாவுநாள் – மிளகு நாவலில் இருந்து
சிறுவன் மஞ்சுநாத் அப்பாவோடு விளையாட இரு வாரத்துக்கு ஒரு நாள் கிடைக்கிறது என்று பேர். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அவை. அந்த வாவு தினங்களில் ஜெருஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் எல்லா வர்த்தக நிறுவனங்களும் கடை அடைத்து வியாபாரத்தை அடுத்த நாளுக்குத் தள்ளிப்போட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜயநகர விதிமுறைகளைப் பின்பற்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு ஐந்து வருடமாகி விட்டது.
வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி கடைவீதி உறங்கும் பௌர்ணமி வாவுதினம். அழகான அதிகாலை.
பௌர்ணமி வாவுதினமும், அமாவாசை வாவுதினமும் அப்பா பரமன் பெரும்பாலும் ஜெருஸோப்பாவில் இருக்கும் நாட்கள் இல்லை. ஹொன்னாவருக்கு வந்து ரதவீதி ரேணுகாம்பாள் மிட்டாய் அங்காடியில் ஏதாவது புது இனிப்புப் பலகாரம் செய்ய முயற்சிகளில் இருப்பார். வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், ஊர் திரும்பணும், உற்றவர்களோடு பம்பாயில் சேர்ந்து குடும்பம் நடத்தணும் என்று மனம் சதா நச்சரித்துக் கொண்டிருக்கும். ஹொன்னாவருக்குப் போவது தன்னிடமிருந்து தானே தப்பித்து ஓடுவது என்று பரமன் தனக்குள் சொல்லிக் கொள்வார். வாவு நாள் விடிகாலையில் அங்கே போகும்போது குழந்தை மஞ்சுநாத் உறங்கிக் கொண்டிருப்பான். ராத்திரி திரும்பும்போது அவன் நித்திரை போயிருப்பான்.
நீங்க ஹொன்னாவர் போகிறபோது அவனையும் கூட்டிப் போங்களேன். போகிற வழியில் வேடிக்கை எல்லாம் காட்டினால் பார்க்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறான் என்று ரோகிணி பரமனிடம் வாதாடுவாள்.
அவன் பார்த்திடுவான் தான். ஆனால் நான் சாரட்டில் உட்கார்ந்ததும் உறங்கி விடுகிறேனே. என்னத்தை வழியில் மரமும் செடியும் தடாகமும் காட்டுவது என்று பரமன் தலையைக் குலுக்கி நடக்காத காரியம் என்பார்.
சரி உங்களோடு சாரட் உள்ளே உட்கார வேணாம். ரதசாரதி அருகன் கூட உட்கார்ந்து வரட்டுமே என்பாள் விடாமல் ரோகிணி. தேர்த்தட்டில் குழந்தை சௌகரியமாக உட்கார் முடியாது என்று மறுப்பார் பரமன். இந்த பௌர்ணமி வாவுநாள் அவன் அருகனோடு உட்கார்ந்து வரட்டும். எப்படி இருக்கு என்று பார்க்கலாம் என்பாள் ரோகிணி. அவளும் ஹொன்னாவர் போகத் திட்டமிடும் வாவு நாளாயிருக்கும் அது.
அவன் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருப்பான் என்றாள் ரோகிணி, மிட்டாய்க்கடையில் அதுவும் பௌர்ணமி வாவுநாள் அன்றைக்கு அவனோடு விளையாட யார் உண்டு? பரமன் கேட்டார், அவனே விளையாடட்டும். லட்டு உருண்டையை எடுத்து சுவரில் அடிக்கட்டும். அல்வாவை நாற்காலியில் பசையாக ஒட்டி வைக்கட்டும். ஜெயவிஜயிபவ இனிப்பை வாசலில் வரவேற்கும் தலையாட்டி பொம்மையின் தலைப்பாகைக்கு உள்ளே வைக்கட்டும். விளையாடினான். தனியாகக் களிக்க சீக்கிரமே அலுத்துப் போனது. அடுத்த வாரம் கடை ஊழியர்கள் ரெண்டு பேருக்கு பவுர்ணமி வாவுநாளுக்கு முந்திய நாள் அல்லது அமாவாசை வாவுதினத்துக்கு முந்திய நாள் விடுப்பு கொடுத்து, வாவு நாளன்றைக்கு வேலைக்கு வரணும் அவர்கள். அலமாரிகளில் பழைய இனிப்புகளைக் களைந்துவிட்டுப் புதியதாக உண்டாக்கிய இனிப்புகளை சீராக அடுக்கி வைப்பது பாதி நாள் வேலை. மஞ்சுநாத்தோடு விளையாடுவது இன்னொரு பாதிநாள் வேலை. அதை நிறைவேற்றத்தான் இப்போது பரமன் மஞ்சுநாத் கூட ஹொன்னாவருக்குப் போய்க் கொண்டிருக்கிறார். கூடவே ரோகிணியும் உண்டு.
0சாரட் வண்டி கல் பாளம் மேவிய தரையில் சப்தமிட்டுப் போகும் ஒலியையும் குதிரைகளின் தாளம் தவறாத குளம்படி ஓசையையும் காது கொடுத்துக் கேட்கிறார். பக்கத்தில் இருக்கும் மஞ்சுநாத்திடம் அந்தத் தாளம் தப்பாமல் தகிட தக திமி தகிட தக திமி என்று சொல்கட்டை உதிர்க்கிற உற்சாகம் அவர் குரலில் பொங்கி வழிகிறது. தகிட தக ஜுணு தகிட தக ஜுணு. ரோகிணி குதிரைக் குளம்பொலியோடு இசைந்து வர இன்னொரு சொல்கட்டை உதிர்க்கிறாள். மஞ்சுநாத் கைகொட்டி சந்தோஷமாகச் சிரித்தபடி அதை அலகு தவறாமல் அப்படியே சொல்கிறான். தகிட தக ஜுணு.
இரண்டு சொல்லையும் கலந்து சொல்கிறான் மழலை மாறாத குரலில் –
தகிட தக திமி தகிட தக ஜுணு
தகிட தக ஜுணு தகிட தக திமி
வாஹ் ஜனாப். ரோகிணி குனிந்து நெற்றியில் புறங்கை வைத்து மஞ்சுநாத்தின் திறமைக்கு மரியாதை செய்கிறாள்.
மிட்டாய்க்கடை படம் நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா
August 12, 2021
நவாப் பழக்கம் – ஜிலேபியும் ஜாங்கிரியும் (நாவல் மிளகு)
நாவல் மிளகு-வில் இருந்து ஒரு ஜாங்கிரி
எழுந்ததும் அப்பக்கா கடைப்பிடிக்கும் ஒரு சுல்தான் – நவாப் பழக்கம் உண்டு. ஒரு பெரிய கோப்பை நிறையக் காய்ச்சிய சூடான பால். அதில் சர்க்கரை மறந்துகூடப் போடக்கூடாது. தட்டின் நடுவில் அந்த உயரக் கோப்பை. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஜிலேபிகள். ஜாங்கிரி இல்லை ஜிலேபி என்பதில் அப்பக்கா உறுதியாக இருக்கிறாள்.
ஜாங்கிரி தென்னிந்திய இனிப்பு என்பாள் அப்பக்கா. நெய் மணக்க, கோதுமைச் சாறு காய்ச்சித் திரண்ட பூங்கொத்து போன்றது அது. எல்லா சிங்காரமும் செய்யப்பட்டு தங்க நகை மாதிரி உருவாகித் தட்டை அடைத்துக் கொண்டு காணவும், முகரவும், உண்ணவும், நினைக்கவும் மகிழ்ச்சி தரும் ஜாங்கிரி. வளைந்து நெளிந்து எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்று விடை காண முடியாத குங்குமப்பூ நிற இனிப்புப் பூ. அமைப்பு ஒழுங்கு குலையச் சீர்கேடு வந்தாலும் கவலைப்படாமல் ஒரு விள்ளல் கிள்ளி உண்டாலோ மெத்துமெத்தென்று நாவில் கரைவதாக ஜாங்கிரி இனிப்பு இனிப்பு இனிப்பு. முழுசும் உண்ணும் வரை இனிப்புத் தின்னும் ஆசை கள்ளத்தனமாக அடங்கியிருக்கும். உண்டதும் ஆசை திரும்ப நினைவுக் குமிழிட்டு வரும். இன்னொரு முறை இனிப்பான சந்தோஷம் தேடிக் கிடைக்காமல் அது தீராது.
ஜிலேபி அப்படி இல்லை. வெறும் ஒற்றைக் கம்பி தம்பூரா. நெய் கலந்த எண்ணெயில் பொறித்தெடுக்கும்போதே சுற்றின் மேல் சுற்றாகத் தேங்குழல் போல, எளிதில் ஆதியும் அந்தமும் புலப்பட சர்க்கரைப் பாகு புரட்டி வரும் ஜிலேபி. விண்டால் இனிப்பு தட்டுப்படாது முதலில். புளிப்பு. புளிக்கும். புளிப்பு தணிந்து மிதமான இனிப்பு அடுத்துத் தட்டுப்படும் நாவில்.
அப்பக்கா ஒரு விள்ளல் ஜிலேபியை உண்டு ஒரு மடக்கு சூடான பாலை உறிஞ்சினாள். அடுத்த விள்ளலைக் கண்கள் மூடிக் கடிக்க தட்டில் விரல் ஊர்ந்தபோது தட்டு வெறுந்தட்டாக இருந்தது. சிரித்தபடி அந்த மீதி ஜிலேபியை சென்னபைரதேவி கபளீகரம் செய்துவிட்டுச் சிரித்தபடி அருகில் அமர்ந்திருந்தாள்.
செய்குன்றமும் அருவியும் ஓடையும் அவளுக்கும் பிடித்த காட்சிகள் தான். சலசலத்துத் தண்ணீர் ஓடுவதும் ஓ என்ற இரைச்சலோடு தண்ணீர் விழுவதும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்க மனதில் சாந்தியும் அலாதி ஆனந்தமும் கிடைப்பதை இரண்டு சிநேகிதிகளும் உணர்ந்து வார்த்தை இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு தட்டில் ஜிலேபியும் பாலும் பின்னாலேயே வைத்தியனும் வர சென்னா சிரித்துவிட்டாள். அடுத்த சிரிப்பு அப்பக்கா சௌதா மகாராணியுடையது. வைத்தியன் சிரிக்கக் கூடாது என்று தீர்மானித்தது போல் மேல் துண்டை வாயைச் சுற்றி இட்டு வேகமாக நடந்து போனது தான் இரண்டு மகாராணியரையும் மேலும் சிரிக்கவைத்தது.
படங்கள் ஜாங்கிரியும், ஜிலேபியும்

ஹொன்னாவரில் ஒரு கிறிஸ்துமஸ்
மிளகு நாவலில் இருந்து
நாளைக்குத்தான் கிறிஸ்துமஸ் நாம வியாபார ஸ்தலமா இருக்கறதாலே இன்னிக்கே கொண்டாடறோம். கேக் செய்து கொடுத்தவர் கஸாண்ட்ரா. அவங்களுக்கு உதவி ரோகிணி. முட்டைகளைச் சேர்த்துத்தான் கேக்குகள் செய்யப்படும் என்பதால், இனிப்பு அங்காடியில் அவற்றை உருவாக்க முடியாது. இங்கே முட்டைக்காரர் கிருஷ்ணப்பா படியேறலாம். அவர் விற்கும் முட்டை உள்ளே வர முடியாது.
ஆகவே பெத்ரோ துரை வீட்டிலே, அவர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோழிக்கோடு பயணம் வைக்க முன்பு அனுமதி வாங்கி அவர் வீட்டு குசினியில் இவற்றைச் செய்தோம். நூறு வருஷத்துக்கு முந்தி அதாவது 1400களில் போர்த்துகீசிய நாட்டில் பிரபலமாகி இன்னும் எல்லோராலும் விரும்பப்படும் பாவ் டெ லோ கேக்கள் அதிக முட்டைகளோடு செய்யப்படுகிறவை என்பதால் அவற்றை முட்டை வாடைக்காக ஒதுக்கி பழ கேக்குகளில் கவனம் செலுத்தினோம். இப்போது விற்பனைக்கு வரும்.
விளம்பரத்துக்காக நான்கில் ஒரு பங்கு விலைக்கு இந்த கேக்குகள் கிடைக்கும். ஒருத்தருக்கு ரெண்டு அதிகபட்சம் கிடைக்கும். என்றாள் ரோகிணி. சீக்கிரம் இனிப்புகளோடு கேக்குகளும் பிஸ்கோத்து போல் வேறு ஐரோப்பிய நொறுக்குத் திண்டிகளும் தினசரி கிடைக்கறமாதிரி கடையை விரிவாக்குங்க என்றார் பாத்திரக்கடைக்காரர். பூக்கடைக்காரர். அவர் கடைவாசலில் சீன பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் தீபாவளிக்கு ஒரு வாரம் முன் வியாபாரம் ஆரம்பித்தார். தீபாவளி முடிந்து கிறிஸ்துமஸ்ஸுக்கு மறு கடை திறப்பு செய்து காசை அள்கிறார் என்று பழக்கடைக்காரர் வருடம் பூரா பண்டிகை வர, கொண்டாட்டம் ஏற்பட வாழ்த்தினார்.
pic Buddha Day
ack en.wikipedia.org
August 11, 2021
மிளகு நாவலுக்குள் வந்த வண்ணத்திப் பூச்சி
சாரட் ஜன்னலில் ஒரு வண்ணத்திப் பூச்சி வந்து அமர்கிறது. டிட்லி என்கிறான் கடிபோலி மொழியில். பட்டாம் பூச்சி என்கிறான் தமிழில். சித்ர சலபம் என்கிறான் மலையாளத்தில். சிட்டே என்கிறான் கன்னடத்தில். போர்பொலேடா என்கிறான் போர்த்துகீஸில். பரமன் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மூன்று வயதில் இத்தனை மொழி கொஞ்சம் போலவாவது எப்படி கற்றுக் கொண்டான்? அவனையே கேட்கிறார். தும்பைப் பூ மாதிரி முகம் மலர்ந்து பிரகாசிக்கச் சொல்கிறான் – என் சிநேகிதங்க வேறே வேறே பாஷை பேசுவாங்க. எல்லோருக்கும் பட்டாம்பூச்சி சிநேகிதி. சரிதானே அம்மா”.
ரோகிணி அவன் தலையைத் தடவி முத்தம் தருகிறாள். ஒரு வினாடி அவள் கண்கள் பரமனின் கண்களைச் சந்திக்கின்றன.
“குழந்தை புத்திசாலின்னு நிரூபிச்சுண்டே இருக்கான், பாரும்” அவள் பரமனிடம் சொல்கிறாள். “நீர் இவனுக்கு பதிவாக கணிதமும் விக்ஞானமும் கற்றுக் கொடுக்கிறீரா?” என்று வேண்டுவது போல் பரமனிடம் கேட்கிறாள்.
பாதி மரியாதையாக நீர் என்று விளிப்பது கல்யாணம் நடந்த நாள் முதல் அவளுக்குச் சுலபமாகியுள்ளது. ”நானா? கணிதமா? அது உம்முடைய திறமை சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே. தினம் அரை மணி நேரம் கற்றுக் கொடும்” என்கிறார் பரமன். வாங்கிய அரை மரியாதையை அவரும் உடனே திருப்பித் தருகிறார். இந்தக் குழந்தை மட்டுமில்லாவிட்டால் திரும்பப் போவது பெரிய சிக்கலாக தலைக்கு மேல், மனதுக்குள் சுழன்றிருக்கும்.
மஞ்சுநாத் உறக்கம் வந்து ரோகிணி மடியில் நித்திரை போகிறான். காலை ஏழு மணிக்குப் பயணம் போக ஐந்து மணிக்கே எழுந்ததால் உறக்கச் சுவடு இன்னும் உள்வாங்கிய உடம்பு. அவனை பரமன் பக்கம் இருக்கையில் படுக்க வைக்கிறாள் ரோகிணி.
ரோகிணி ரதசாரதிக்கு பின்னால் இருக்கும் சாளரத்தை மூடி அந்தரங்கம் நடப்பாக்குகிறாள்.
பரமன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவரை காமம் நனைந்த ஒரு குறுஞ்சிரிப்போடு உதட்டைக் கடித்தபடி நோக்குகிறாள் ரோகிணி. பரமனின் கரத்தை எடுத்து தன் வளமான மாரிடத்தில் வைக்கிறாள். அவள் தயாராகி விட்டதாக அழைப்பு விடுக்கும் வினாடி அது.
நேமிநாதனை நினைத்துக் கொள்கிறாள். இன்னும் எத்தனை வருடம் அவன் கேட்கும்போதெல்லாம் வரச்சொல்லி அனுமதித்து கீழ்ப்படிய வேண்டி இருக்குமோ. பரமன் வயதானவர் என்றாலும் அவரோடு எந்த சிக்கலும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியும். ராஜ்யமும், பணமும், சதியும், கார்டெல்லும், கப்பம் கட்டுவதும், கோட்டையும் கொத்தளமுமாக ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்து சாதிக்கப் போவதென்ன?
அவள் பரமனின் கால் மேல் கரங்களைத் தவழ விட்டு இடுப்பைச் சுற்றி அவரை வளைத்து தன் மடியில் வீழ்த்துகிறாள். கிராம்பு வாடை அவரைச் சூழ இறுக்க அணைக்கிறாள். எழுந்து உட்கார்ந்து வழக்கம் போல் ரோகிணியிடம் கேட்கிறார் – “சீன மந்திரத்தான் என்ன சொல்கிறான்?”
பரமனிடம் பகை பாராட்டி உற்று நோக்கி பாம்பு மாதிரி சீறுகிறாள் – “உமக்கு இங்கிதமே இல்லை. குழந்தையை கூட்டிக்கொண்டு பவுர்ணமி வாவுதினத்தைக் கொண்டாட போயிண்டிருக்கோம். உமக்கு உம்ம பைத்தியக்காரத்தனம் தான் எப்பவும் புத்தி முழுக்க. நீர் பம்பாய், விமானம், அது இது என்று பிரலாபித்திருக்கறது போதாதுன்னு கூடவே அதை எல்லாம் நடத்தித் தர சீன மந்திரவாதி, அரபு மந்திரவாதின்னு கூட்டிவரச் சொல்லி என் பிராணனை வாங்கறது. நீர் இந்த ஒப்பந்தத்திலே இருக்க வேணாம். இறங்கிப் போம். அருகா, அருகா, சாரட்டை நிறுத்து ஓ அருகா”
pic Uttara Karnataka
courtesy en.wikipedia.org
August 10, 2021
400 வருடம் பின் நோக்கிப் போனவரின் மறுவரவு – மிளகு நாவலில் இருந்து
மிளகு நாவலில் இருந்து –
———————————–
சாரட்டில் மனமே இல்லாமல் ஏறிக்கொண்டார் பரமன். குழந்தை மஞ்சுநாத் மட்டும் பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால் அவர் எல்லாவற்றையும் எல்லோரையும் உதறிவிட்டுப் போயிருப்பார். எங்கே? ஜெரஸோப்பாவில் கோவில்கள் நிறைந்த ராஜவீதிக்கு. அங்கே இருக்கவும் உண்ணவும் வண்டிக்காரன் சத்திரம் உண்டே, அங்கே வண்டிக்கார நண்பர்களும் உண்டே
சீன மந்திரவாதியால் என்ன செய்ய முடியும் என்று பரமன் காத்திருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தார். புரியவில்லை. மாசேதுங்கின் சிவப்புப் புத்தகத்தை மராட்டியின் கிளைமொழியில் மொழிபெயர்த்த இடதுசாரி பரமனா இப்போது சீன மந்திரவாதிக்காகக் காத்திருப்பது? என்ன செய்ய?
முப்பரிமாண உலகில் எல்லோரும் சுக ஜீவனம் நடத்தும்போது பரமனுக்கு மட்டும் இன்னொரு பரிமாணமாகக் காலமும் சேர்ந்திருக்கிறது. எடுத்தது எடுத்தது போல் அவரை பௌதீகமாக எந்த மாற்றத்துக்கும் உள்ளாக்காமல், டெல்லியில் இருந்து பம்பாய்க்கு வரும் வழியில் நானூறு வருஷம் பின்னால் போகவைத்து பழைய உலகத்தில் மூச்சுவிடச் செய்து வேடிக்கை பார்க்கிறவர் யார்?
நான்காவது பரிமாணத்தை ஒரு சாளரம் மாதிரி மூடினால் அடுத்த வினாடியே இந்த சாரட்டும், ஜெருஸோப்பாவும், ஹொன்னாவரும், அருகனும், ரோகிணியும், மஞ்சுநாத்தும் எல்லாமும் எல்லாவரும் மறைந்து விடுவார்கள். இது ஜெருஸோப்பாவிலிருந்து ஹொன்னாவர் போகும் நெடுஞ்சாலையாக இருக்காது. வருடம் பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் கிறிஸ்து ஆண்டான 1605 ஆகவும் இருக்காது. பரமனைக் கைகழுவிய 1960-ஆம் ஆண்டாக இருக்கலாம்.
பம்பாயில் இப்போது என்ன வருஷம், உலகம் முழுக்க என்ன வருடம்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது முடிந்து எத்தனை வருஷம் ஆகியிருக்குமோ. யார் எல்லாம் பரமன் போனபோது இருந்தபடியே இன்னும் இருப்பார்களோ, யாரெல்லாம் இறந்திருப்பார்களோ, பம்பாயும் மெட்றாஸும் எப்படி மாறியிருக்குமோ எதுவும் தெரியவில்லை. நினைக்க நினைக்க ஆயாசமும் அயர்வும் ஏற்பட சாரட்டுக்குள் கண்மூடி இருந்தார்.
August 9, 2021
பீமன் திரௌபதிக்கு நறுமண மலர் கொடுத்த ராமாயணம்
”மிளகு’ நாவலில் இருந்து =
காலை ஐந்து மணிக்கு கோவிலில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள் தெரிசா. நாலரை மணிக்குக் குளித்து விட்டு கோவில் போகும்போது பாதுகாப்பாக சங்கரனைக் கூட்டிப் போவதுபோல் அவர் நடுவில் நடக்க இரண்டு பக்கமும் இரண்டு துணைவியரும் கூட வந்தார்கள்.
திலீப் ராவ்ஜியும் விடிகாலை கோவிலில் தொழும் இனிய அனுபவத்துக்காக சங்கரன், வசந்தியோடு சேர்ந்து கொண்டார். வீட்டிலிருந்து பதினைந்து நிமிடம் நடை தூரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்பதால் வாகனம் இன்றி நடந்து போய் அந்த அதிகாலையில் தரிசிக்க எல்லோருக்கும் மனதுக்கு இதமாக இருந்தது.
“இதைவிட அமைதியான ஆத்ம அனுபவம் வேணும்னா, கோவில் திறந்ததும் அதிஅதிகாலை மூணு மணிக்கு வரணும்” என்றார் திலீப் ராவ்ஜி.
சாரதா சொன்னாள் – “மூணு மணிக்கு கிருஷ்ணன் தரிசனம் தர தயாராக இருப்பார், பக்தஜனம் தான் உறங்கிட்டிருக்கும்”.
நாம இந்த கோவில்லே என்ன கதைன்னு தெரியாமல் கதகளி பார்த்தோமே நினைவு இருக்கா என்று சங்கரனிடம் கேட்டாள் வசந்தி. சங்கரன் விஸ்தரித்துச் சொல்ல அலுப்பு காரணமோ என்னமோ ஆமாமா என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். என்ன அனுபவம் அதுன்னு தான் சொல்லுங்களேன் வசந்தி என்று தெரிசா கேட்க வசந்தி சொன்னது இது –
பெரிய குத்துவிளக்கு முன்னால் வைத்து இருக்க, கண்ணை உருட்டிக்கொண்டு ஆட்டக்காரர் ஒருத்தர் நடுவிலே நின்றார். பக்கத்தில் பெண் சாயலில் வேஷம் போட்ட இன்னொருத்தர் எதையோ அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர்களின் வளமான பின்பாகம் தட்டக்கூடிய நெருக்கத்தில் கெச்சலான ஒரு தாடிக்காரர் பாடிக் கொண்டிருந்தார். மேளமும் கைத்தாளமும் கொட்டிக் கொண்டு இன்னும் இரண்டு பேரும் அங்கே உண்டு.
”ராமாயணம் மாதிரி இருக்கு. ஹனுமான்கிட்டே சீதா சூடாமணி கொடுக்கறது”.
சங்கரன் வசந்தியிடம் தணிந்த குரலில் சொல்ல,, முன்னால் இருந்து யாரோ ரோஷமாக பின்னால் பார்த்து, ”இது கல்யாண சௌகந்திகம்” என்றார்கள்.
”பீமன் திரௌபதைக்கு புஷ்பம் கொடுக்கற கதை”.
அவர் பின்னால் சாய்ந்து சொல்லி நிமிர்ந்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ, திரும்பப் பின்னால் சாய்ந்து ”மகாபாரதம்” என்றார்.
அங்கே சிரிக்க ஆரம்பித்ததை ஓட்டம் ஓட்டமாக தங்கியிருந்த லாட்ஜுக்கு ஓடி வந்து தான் நிறுத்தினோம்.
படம் அடையாறு கலாக்ஷேத்ரா கதகளி கல்யாண சௌகந்திகம்
நன்றி The Hindu
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

