இரா. முருகன்'s Blog, page 77
July 6, 2021
பேசும் எழுத்து
மடிக்கணினியில் வேகமாக எழுதிக் கொண்டு போகும்போது, வேகத்துக்கு முட்டுக்கட்டை போட என்றே வந்து வாய்த்தது double quotation என்ற “.
ஒவ்வொரு கீபோர்டிலும் ஒவ்வொரு மாதிரி இந்த டபுள் கொடேஷனுக்கான இடம் இருக்கும். எங்கே இருந்தாலும், single quotation விசையை ஷிப்டோடு சேர்ந்து அழுத்தி “ கொண்டு வருவது, அதுவும் பக்கம் நிறைய “ வரும்போது பெருங்கஷ்டம்.
இதற்காகத்தான் அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு அரசூர் நாவல்களிலும் – மொத்தம் 2200 பக்கங்கள் – எல்லா கதாபாத்திரங்களும் “ முன்பாரம் பின்பாரமாக வராமல் பேசுவார்கள்.
இந்த நாவல்களுக்கு அடுத்து என்.எஸ்.எம் –
என்.எஸ்.மாதவன் சார் எழுதிய மலையாள நாவல் மொழிபெயர்த்தேன் – பீரங்கிப் பாடல்கள்.
ஒரு கதாபாத்திரம் கொஞ்சம் அதிகமாகப் பேசினால் அது பத்தி பிரித்துத் தரப்படும். முதல் பத்தி தொடங்கும்போது ஒரு “. பேச்சு தொடரும் ஒவ்வொரு பத்திக்கும் ஆரம்பத்தில் ஒரு “, கடைசியில் வெறுமை . கடைசி பத்திக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைத்து முடித்திருக்கும். ரொம்பப் பிடித்திருந்தது.
இதற்கு அடுத்து 1975 “க்குப் பதிலாக ஒற்றை கொடேஷன் ‘ பேச்சின் தொடக்கத்திலும் இறுதியிலும். என்னமோ குறைந்த மாதிரி உணர்வு.
ராமோஜியம், இப்போது மிளகு எல்லாம் சம்பிரதாயப்படி “blah blah blah”.
அடுத்த நாவலில் யாரும் பேச மாட்டார்கள்.
July 5, 2021
நாவல் ‘மிளகு’ சொல்வனம் இணைய இலக்கிய இதழில் இனி
மிளகு – கஜானன் கண்பத் மோதக் என்ற மராட்டியர் மலையாளி ஆனபோது
—————————————————————————
எர்ணாகுளம் ஜங்க்ஷன் வரும்போதே மோதக் மலையாளி ஆகிவிடுவார். பைஜாமாவையும் குர்த்தாவையும் களைந்து மடித்து வைத்துவிட்டு எட்டு முழ வேட்டியும் கருப்பு நிறத்தில் டீ ஷர்ட்டுமாக வேஷம் மாறிவிடும். மலையாளி போல நெற்றியில் சந்தனம் அணிந்து கொள்ள அவருக்கு ஆசைதான். ஆனாலும் நகரும் ரயில் கம்பார்ட்மெண்டில் சந்தனத்துக்கு எங்கே போக?
கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும்.
இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.
அம்பலப்புழைக்கு டவுண் பஸ் பிடிக்கவேண்டும். ஆட்டோ, டாக்சி எல்லாம் கூட உண்டு. தேவையில்லாத வெட்டிச் செலவு என்பார் மோதக். அவருடைய நண்பர் திலீப் ராவ்ஜி சொல்வது இது – மோதக்கே, வரப் போறேன்னு ஒரு போஸ்ட் கார்ட் போடக் கை வராதா உனக்கு? எந்த தேதி, எந்த ரயில்னு மட்டும் போட்டிருந்தா கரெக்டா ரயில்வே ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பியிருப்பேனே. அவருக்கு கார் அனுப்பும் அதிர்ஷ்டம் இதுவரை வாய்க்கவில்லை.
மோதக் எப்போது அம்பலப்புழை பயணம் புறப்பட்டாலும் இரண்டு கான்வாஸ் பையில் பாதிக்குத் துணி அடைத்து எடுத்துக் கொள்வார். அப்புறம் வாய் சிறியதாகவும், அடிப்படைப் பரப்பு அகலமும் ஆழமுமானதாகவும் இரண்டு பாத்திரங்களையும் மறக்காமல் எடுத்துக் கொள்வார்.
திலீப்-பாவுக்கு மிட்டாய் செஞ்சு தரேன் என்று மோதக்கின் மனைவி நிச்சலா மோதக் ஓவ்வொரு பயணத்தின்போதும் உரிமையோடு பர்ஃபி செய்து அந்தப் பாத்திரங்களில் ஒன்றில் பாதி வரை நிறைத்துக் கொடுப்பாள். மோதக் போய்ச் சேர்ந்ததும், ‘ஏண்டா மோதக்கே, தங்கச்சி செய்து கொடுத்த பர்பியோடு வர்றியே. அவளை ஒரு தடவை கூட்டி வரணும்னு தோணாதா உனக்கு என்று பர்ஃபி சுவையில் ஆழ்ந்து கண்மூடியபடி திலீப் ராவ்ஜி கேட்பது மோதக்குக்குப் பிடித்த ஒரு காட்சி.
அவருக்கு தன் மனைவியை வெளியே கூட்டிப் போகப் பிடிக்கும். ஆனால் நிச்சலாவுக்குத்தான் சிறு பிரச்சனை. பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நின்றாலோ நடந்தாலோ கால் துவள ஆரம்பித்து விடும். டாக்டர் பார்த்துவிட்டு இதற்கு உடம்பில் வலு இல்லாதது காரணம். வைடமின் டானிக் எடுத்துப் பாருங்கள் என்று காரணமும் தீர்வும் சொல்லி விட்டு அடுத்த பேஷண்டைக் கவனிக்க ஆரம்பித்தார். தினம்தினம் சிரமப்படுவது மோதக்கும் நிச்சலாவும் தான். மோதக் ரொம்ப யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு முக்காலியை தச்சரைக் கொண்டு செய்வித்தார். அதை முதுகில் ஆசனம் பொருந்துமாறு வார்கள் கொண்டு பிணைக்கச் சொன்னார். மூன்று கால்களும் பின்னால் நீட்டிக்கொண்டிருக்காமல் மடிந்து ஆசனத்துக்கு மேல் பிணைத்திருக்கும். கௌபாய் பசுமேய்க்கி ஹாலிவுட் இங்க்லீஷ் சினிமாக்களில் குதிரையேறி துப்பாக்கியோடு வரும் கதாநாயகன் மாதிரி பின்னால் முக்காலியோடு அவர் புறப்படும்போது நிச்சலா மோதக் கூடவே நடப்பாள். ஒவ்வொரு பத்து நிமிடமும் சட்டைப் பையில் அலாரம் அடிக்க மோதக் முக்காலியை தரைக்கு இறக்கி மனையாள் கால் வலித்ததா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு உட்காரச் செய்வார்.
ஒரு வாரம் இப்படி செயல்பட்டு பத்து நிமிட இடைவெளி அரைமணி நேர இடைவெளியானது. ஆனாலும் ஒரு பிரச்சனை. அலாரம் அடித்ததும் மனைவி உட்கார வேண்டிய இடம் நடுத்தெருவாகவோ, கழிவறை அதுவும் ஆண்கள் கழிப்பறை வாசலாகவோ இருக்கக் கூடும்.
முக்காலி இறங்காவிட்டால் நிச்சலா நிச்சயமாக பலகீனப்பட்டுப் போவாள். இதையெல்லாம் யோசித்து ஐந்து நிமிடத்துக்கு மேல் பயணம் தவிர்க்கவும், எப்போதாவது முக்காலி சேவையை அமுல் படுத்துவதை ஒத்திகை பார்க்கவுமாக மோதக் அல்லல் படுகிறார். சமையல் செய்யும்போது இன்னொரு முக்காலி ஸ்திரமாக சமையல்கட்டில் இருப்பதோடு, உட்கார்ந்து சமைக்கும் உயரத்தில் சமையலறை பளிங்குப் பாளம் அமைத்ததும் மோதக்கின் யோசனை.
சந்தேகமே இல்லாமல் இந்த முப்பது வருடத்தில் உபயோகமான புத்திசாலித்தனத்துக்கு அரசாங்க விருது ஏதாவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், தொடர்ந்து அவர் விருது பெற்றிருப்பார்.
திலீப் ராவ்ஜி நிச்சலாவை எரணாகுளத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் நவரக்கிழி, பிழிச்சல், இன்னும் விநோதப் பெயர் உள்ள ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு உட்படுத்தினால் நிற்பதென்ன, நடப்பதென்ன, ஓடவே செய்வாள் என்று உறுதி தெரிவித்தார். மோதக் நன்றி சொல்லி, அடுத்த முறை கூட்டி வரேன் அண்ணா. உங்களை அதிகம் கஷ்டப்படுத்த வேணாம்னுதான். அண்ணி இல்லாம நீங்க படற துன்பம் தெரியாமலா இருக்கேன் என்பார். திலீப் மௌனமாக நகர்ந்து விடும் பொழுது அது.
கால்வலிக் காலத்துக்கு முன் மோதக் தன் மனைவி நிச்சலாவை ஒரே ஒரு தடவை, செம்மீன் சினிமா வந்த வருஷம் அது, அம்பலப்புழை கூட்டி வந்திருந்தார். செம்மீன் சினிமா பார்க்க எல்லோரும் போனார்கள். முண்டு ப்ளவுஸில் பெண்களைப் பார்க்க எல்லோரும் போனார்கள்.
பார்த்து நிச்சலா அகல்யாவிடம் அஸ்லி ஹை க்யா ஏ தோனோ பஹுத் படா லக்தா-அசல்தானா – என்று கேட்டது அடுத்த வரிசையில் கேட்டு சிரிப்பு எழுந்தது.
இந்தியில் விசாரித்தால் யாருக்கும் புரியாது என்று நிச்சலா நினைத்திருந்தது தப்பாகப் போகுமென்று யாருக்குத் தெரியும்? திலீப்புக்கு அப்புறமாக அகல்யா சொல்லிச் சிரித்த நிகழ்ச்சி அது. அசல்தான்.
பழைய ஞாபகம் எல்லாம் ஒழுங்கு வரிசை இல்லாமல் அலையடித்து மனதில் நிரம்ப, மோதக் டவுண் பஸ்ஸுக்காக நிற்க, சொல்லி வைத்தாற்போல் ஒன்று கூட வரவில்லை. வெற்றிலை பாக்கு விற்கும் கடையில் தன் மலையாளத்தில் விசாரிக்க, அவர் ப்யூஜியாமா எரிமலை எர்ணாகுளத்தின் எல்லையில் இருப்பதாகவும், அது விழித்து நெருப்புக் குழம்பை லாவா லாவா என்று சிதறடிப்பதாகவும் கருதிக்கொண்டோ என்னமோ, பஸ்ஸு பஸ்ஸு பஸ்ஸு வராது வராது வராது என்பது மட்டும் மோதக்குக்கு புரிய கடமுடவென உருட்டினார். அப்புறம் அறுபது ரூபாய்க்கு ஒரு டாக்சி ஏற்பாடு செய்து அம்பலப்புழை கிளம்பினார் மோதக்.
பாதி தூரத்தில் டாக்சியில் மீட்டர் இருப்பதையும் அது இயங்காமல் இருப்பதையும் கவனித்த மோதக் டாக்சி ட்ரைவரோடு கருத்து வேறுபாடு காட்ட, டிரைவர் முணுமுணுத்தபடி மீட்டரை இயக்கினார்.அம்பலப்புழையில் திலீப் ராவ்ஜி வீட்டுக்குப் போகும் பாதையில் டாக்சி மீட்டரைப் பார்த்த மோதக் அது காட்டிய கட்டணத்தைப் பார்த்து மயக்கம் போட்டு விழாத குறைதான்.
மோதக்கின் கான்வாஸ் பைகளைக் கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு திலீப் லிப்ஃட்டை நோக்கி நடக்க, அண்ணா அண்ணா என்று சுமையை வாங்க பின்னாலேயே மோதக் ஓடினார். லிஃப்ட் நிற்க திலீப் ராவ்ஜியின் இரண்டாம் மாடி ஃப்ளாட்.
எடோ மோதக்கே, கான்வாஸ் பேக்கில் கட்டெறும்பு வாடை அடிக்கறதே, என்ன கொண்டு வந்தே என்று திலீப் கேட்க, மோதக் அவசரமாக கான்வாஸ் பையை வாங்கித் திறந்து கவிழ்த்தார். ஹால் முழுக்கக் கட்டெறும்பு ஊர்ந்தது. நிச்சலா உட்கார்ந்தபடிக்கே செய்து கொடுத்திருந்த தேங்காய் பர்ஃபி கரைந்திருக்க மிச்சம் இருந்த துண்டு துணுக்குகளையும் பம்பாயிலிருந்து முப்பத்தாறு மணி நேரம் ரயிலேறி வந்த எறும்புகள் தொடர்ந்து உண்டபடி இருந்தன.
மோதக்கே பையில் வேறே என்ன இருக்கு? திலீப் ராவ்ஜி கேட்டார். இன்னொரு பாத்திரம் அண்ணா. அதுக்குள்ளே ஒண்ணுக்குள்ளே ஒண்ணா ரெண்டு பாத்திரம். ரெண்டு ஸ்பூன். ஒரு தட்டு. ஒரு சின்ன கிண்டி. அவர் அடுக்கிக்கொண்டே போக திலீப் ராவ்ஜி சின்னக் கிண்டியை எடுத்து வைத்துக்கொண்டு இது இங்கே என்ன செய்கிறது என்கிறதுபோல் குழம்பினார்.
இது காணிக்கை விட்டுட்டு வரச் சொன்னா நிச்சலா. மெதுவாகச் சொன்னார் மோதக். ஒரு நிமிடம் கனத்த மௌனம். இந்த வயதில் மோதக்குக்கும் நிச்சலாவுக்கும் குழந்தை பிறந்தால் என்ன ஆகும்?
திலீப் ராவ்ஜி நினைப்பதற்கு முன் மோதக்கே சொல்லி விட்டார். அண்ணா நீங்க போன தடவை வந்தபோது சொன்னீங்களே, கிருஷ்ணன் விளையாடற வீட்டில் வேறே குழந்தைகள் எதுக்கு? இது அந்தக் குழந்தைக்கு ப்ரசெண்ட் பண்றா என் பொண்டாட்டி.
திலீப் ராவ்ஜிக்கும் கண் கலங்கியது.
படம் : அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவில்
நன்றி விக்கிமீடியா காமன்ஸ்
July 2, 2021
நாவல் மிளகு – 1596ஆம் ஆண்டில் ஓர் அதிகாலை
(ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை)
நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று மணி அடிக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த மனைவியும் அரசிக்குத் தாதியுமான சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி வழுவழுத்த கனமான கால்களால் வைத்தியரை மடக்கித் தன் வயிற்றோடு சிறைப் பிடித்து தலையைத் தடவி, ஓய் வைத்தியரே உமக்கு என்ன கிறுக்கா பத்து நாழிகைக்கு எழுந்து என்ன பண்ணப் போகிறீர்? சும்மா என் உடம்பு வாடை பிடித்துக்கொண்டு ஒண்டிக்கொண்டிரும் என்று தூக்கக் கலக்கமும் கிராம்பு மணக்கும் வாயுமாக உபதேசம் செய்து உறங்கினாள்.
வைத்தியர் இனி ஆத்மா உறங்கவா, விழிக்கவா, உறங்குவது போல் விழிக்கவா, விழிப்பது போல் உறங்கவா, எல்லாம் சேர்த்து நிகழவா, எதுவுமே செய்யாமல் கிடக்கவா என்ற தத்துவ விசாரத்தில் ஒரு நிமிடம் மூழ்கினார்.
ஆத்மா கிடக்கட்டும், அற்ப சங்கைக்குப் போய்க் குத்த வைக்க வேண்டும் என்று நிமிடத்துக்கு நிமிடம் அவசம் கூடிக்கொண்டு போக, கட்டிலை விட்டு இறங்கினார். போங்க ஓய் போங்க. அப்புறம் தேடிக்கொண்டு வருவீர்தானே, ஒன்றும் இவிடம் காட்டித்தரப்பட மாட்டாது. அவள் சொல்லி விட்டு நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
கழிவறைக்குப் போன காரியம் முடித்து தோட்டத்தில் காற்று வாங்க உட்காரும் கல் பாளம் பதித்த மேடையின் குளிர்ச்சியை அனுபவித்தபடி சற்றே அமர்ந்து கண் மூடிக் கொண்டார்.
நெல்பரலி. அதைத் தான் இன்று வஸ்திரகாயம் பண்ண வேண்டும். நேற்று சூரிய உதயத்துக்கு முன் கண்டெடுத்தது. கண்டெடுக்காமல் இருந்தால் பிரதானி நஞ்சுண்டையாவின் அம்மா உயிர் விடை பெற்றுப் போயிருக்கலாம். இனி ஆத்மாவும் உடம்பும் ஒன்றாக இருக்க வைத்தியர் பைத்தியநாத் மட்டும் சிகிச்சையும் சிஷ்ருசையும் செய்யக் கூடியவர்.
இதற்கு முன்பு இன்னொருத்தரும் இருந்தார். அவர் பைத்தியநாத்தின் தந்தையார் அரிந்தம் வைத்தியர். போய்ச் சேர்ந்து பத்து வருடம் ஆகிவிட்டது.
பைத்தியநாதைவிட அரிந்தம் வைத்தியர் ஆழ்ந்த அறிவும், நிலைமை அவதானமும், தக்க சமாளிப்பும் கொண்டவர். நெல்பரலி மூலிகையை ஒரு வாரம் முன்பே தேடிக் கண்டு பிடித்திருப்பார். அல்லது தேடிக் கண்டதுதான் நெல்பரலி என்று சாதித்திருப்பார்.
தகப்பனார் நினைவோடு கலுவத்தை சரணாகதி மந்திரம் சொல்லி வணங்கினார் பைத்தியநாத் வைத்தியர். அப்பா வங்காளத்தில் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் கற்றபோது பிள்ளை பிறந்ததால் வங்காள வழக்கப்படி பைத்யநாத் என்று பெயர் வைத்தது அடிக்கடி களியாக்கப்படுகிறது. வகரம் எல்லாம் பகரமாகப் பார்க்கும், கேட்கும், உச்சரிக்கும் வங்காளிகளோடு பகுதி வங்காளியாகத் தானும் சேர்ந்த காரணம் நோக்கி வியந்துகொண்டிருந்தார் வைத்தியர். கை சுறுசுறுப்பாக நெல்பரலி மூலிகையைக் கலுவத்தில் இட்டு சிறு உலக்கைகளால் நையப் புடைத்துக் கொண்டிருந்தது. வாய் கோவிந்த நாமம் சொல்லியபடி இருந்தது.
நேரம் பனிரெண்டரை நாழிகை – காலை ஐந்து மணி. கோவிந்த நாமம் சொல்லியபடி மூலிகை இடித்துக் கொண்டிருந்த வைத்தியரின் மிர்ஜான் வீட்டுக்கு அடுத்து காரைக் கட்டிடத்தில் நீளவாக்கில் நீண்டு போகும் குதிரை லாயம் தீபம் ஒளிர இருட்டுக்கு விடைகொடுத்தது. தீபமும் இன்னும் சற்று நேரத்தில் சூரியன் உதயமாக எடுத்து வைக்கப்படும்.
லாயத்தின் ஊழியர்கள் பல் துலக்கியபடி வைத்தியரின் வீட்டுத் திண்ணையை நோட்டம் விட்டபடி இருந்தார்கள். அந்த மூன்று பேரும் ஜெர்ஸோப்பாவின் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று குதிரைகளைப் பராமரிக்கும் வேலை அளிக்கப்பட்டவர்கள்.
“வைத்தியரே, அதென்ன மருந்தை இடிச்சுக்கிட்டே கோவிந்தா கோவிந்தான்னு கூவறீர். கோவிந்தன் வந்தால் மருந்து எதுக்கு? அவர்களின் கேள்விக்கு வைத்தியர் பதிலே சொல்லாமல் புன்சிரிப்புடன் உள்ளே போகிறார்.
நேரம் பதினைந்து நாழிகை. காலை ஆறு மணி. மிர்ஜான் கோட்டை குதிரை லாயத்தில் கட்டி இருந்த பதினைந்து குதிரைகளும் ஒவ்வொன்றாகப் பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனை குதிரையின் உடலில் கீறல், காயம், சொரி, சிரங்கு எதுவும் உண்டா என்று தான். இருந்தால் லாய ஊழியர்கள் ஏன் என்று சொல்ல வேண்டியிருக்கும். கோட்டைக் காவலர்கள் ஏறிவரும் இந்தக் குதிரைகள் தவிர வெளியே வேறு லாயங்களிலும் குதிரைகள் பராமரிக்கப்படுகின்றன. இவை தவிர பெரிய அதிகாரிகளின் வாகனக் குதிரைகளும், ஏறிப் போகும் மட்டக் குதிரைகளும் அவரவர்களால் பராமரிக்கப் படுகின்றன. இந்த வகைச் செலவுக்கு அரசு மானியம் உண்டு.
இரும்பு வாளிகளில் மஞ்சள்பொடியும் உப்பும் கலந்த வெதுவெதுப்பான நீர் வைக்கப்பட்டிருக்கின்றது. குதிரைகளின் மேல் பூச்செடிக்குத் தண்ணீர் விடும் பூவாளிகளில் தண்ணீர் விடப்பட்டுக் கழுவப்படுகிறது.
முனி, குதிரையை சும்மா விடமாட்டியா?
சிம்மாத்திரி என்ற மூத்த லாய ஊழியர் சிரித்தபடி அடுத்த நிலை ஊழியர் முனியைக் கேட்கக் காரணம் முனி ஒவ்வொரு குதிரையாக பீஜத்தில் பிடித்து இழுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
என்ன செய்ய சிம்மா, இதைப் பிடிச்சுப் பார்க்கத்தான் எனக்கு கூலி. சரியா இல்லேன்னா நான் தான் பதில் சொல்லணும். கவனமாக இறுக்கிப் பிடித்தபடி இன்னொரு குதிரையை சோதித்துப் போக விடுகிறார் முனி. அத்தனை குதிரைகளுக்கும் என்மேல் மாறாத இச்சை என்கிறார் அவர்.
மண் பானைகளிலும் தாழிகளிலும் இரவில் பறக்கும் சிறு பூச்சிகள் இறந்து கிடக்கும், போதை மிகத்தரும் தேறல் பருகக் கிடைக்கிறது. அது வடிகட்டாமல் பருகப்படுகின்றது.
வளரும் நாவல் ‘மிளகு’ :1596 இரவு – சில காட்சிகள்
——————————————————————
நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள். வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன. அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு பார்த்து ஏற்படுத்திய சிறு கோவிலுக்கு அடுத்துப் போகிறார்கள். வாடிக்கையாளர்கள் அதிகம் வர பிரார்த்தித்து அவர்களைச் சுற்றி சிறு மணிகள் முழங்க, தூபம் கமழ தீபாராதனை காட்டப்படுகிறது.
நாற்பத்தைந்து நாழிகை. மாலை ஆறு மணி. ஜெரஸோப்பா கடைவீதியிலும், ஹொன்னாவர் ரதவீதியிலும் துணி விற்கும் கடைகளும், பாத்திரம் விற்கும் கடைகளும் வளையலும் நகப்பூச்சும் உடம்பில் அள்ளிப்பூசி மணக்க வைக்கும் வாசனைத் தைலங்களும், அத்தரும், ஜவ்வாதும் விற்கும் கடைகளும் பரபரப்பாகின்றன. கடைத்தெருவில் பொருள் வாங்க வந்தவர்கள் தெருக் கோடியில் குதிரை சாரட் வாகனங்களை நிறுத்தி தெருவோடு நடந்து கடைகடையாக நின்று போகிறார்கள்.
கோவில்களில் சங்கீத வினிகை வழங்க (கச்சேரி செய்ய) வந்திருக்கும் கலைஞர்கள் இசைக்கருவிகளை மீண்டும் மீண்டும் மீட்டி சுநாதம் தர வழிவகை செய்கிறார்கள். பாடும் இசைஞர்கள் சற்றுக் குரல் எடுத்துப் பாடி தொண்டையை சரி செய்ய சீரகமும், சுக்குப்பொடியும் இட்ட சுடுநீர் பருகுகிறார்கள்.
ஐம்பது நாழிகை. இரவு எட்டு மணி. ஹொன்னாவர் மதுசாலையில் கூட்டம் பெருகி வழிகிறது. போர்ச்சுகீசிய ராணுவ வீரர்களும், அரபியர்களும், நகர தனவந்தர் வீட்டுப் பிள்ளைகளும், கணிகையரோடு கூடும் முன் நல்ல மது ருசித்துப் போக வந்தவர்களுமாக கலகலப்பாக இருக்கும் மதுசாலை.
ஐம்பத்தைந்து நாழிகை. இரவு பத்து மணி. மதுசாலையின் மறுபக்கம் கள் விற்பனை சுறுசுறுப்பாக நடக்கிறது. மண் பானைகளிலும் தாழிகளிலும் இரவில் பறக்கும் சிறு பூச்சிகள் இறந்து கிடக்கும், போதை மிகத்தரும் தேறல் பருகக் கிடைக்கிறது. அது வடிகட்டாமல் பருகப்படுகின்றது. புளித்த திராட்சை கொண்டு உண்டாக்கிய மதுவும் கள்ளும் பருகி லகரி தலைக்கேறியவர்கள் தரையில் உருண்டும், பாடி ஆடி விழுந்தும் அடுத்த கோப்பைக்கு அரை வராகன் காசு தனியாக மடியில் முடிந்ததை எடுத்துக் கடைக்காரர்களிடம் நீட்டுகிறார்கள். இன்னிக்கு இதுதான் கடைசி கோப்பை.
அறுபது நாழிகை. இரவு பனிரெண்டு மணி. காவல் வீரர்கள் சிலர் குதிரையேறியும், பெரும்பாலும் கையில் நாட்டுத் துப்பாக்கிகளைச் சுமந்து ஆளரவமில்லா தெருக்களில் வரிசையாக நடந்தும், கடைவீதியில் பூட்டி அடைக்கப்பட்ட கடைகளின் வாசல், பின்பகுதி, பக்கவாட்டில் அங்கும் இங்குமாகப் பிரப்பங்கழிகளால் தட்டிச் சோதித்தும், குழந்தைகள் உறங்க அடம் பிடித்தால் அஞ்ச வைக்கும் விதத்தில் ஓ என்று கூச்சலிட்டும், பாதுகைகள் ஓங்கிச் சப்திக்க நடை பயின்று போகின்றார்கள். வண்டிப் பேட்டையில் வண்டிகளிலிருந்து குதிரைகள் விடுவிக்கப்பட்டு வண்டிகள் தலை தாழ்த்தி வைக்கப்பட்டிருக்க, குதிரைகள் நின்று கொண்டே உறங்குகின்றன.
July 1, 2021
உணவுத் தட்டுகளாகக் குழிக்கப்பட்ட கல் பாளங்கள் -விஜயநகர உணவுச்சாலை
1596-ஆம் ஆண்டில் ஒரு நாள் :வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து இன்னும் சில காட்சிகள்
——————————-
இருபத்திரண்டரை நாழிகை. காலை ஒன்பது மணி. வெதுவெதுப்பான வெந்நீரில் வாசனாதி திரவியங்கள் கலந்து அரபுப் பொடி தேய்த்து நீராட சென்னபைரதேவிக்கு தாதி மிங்கு உதவ, ஸ்நானம் முடித்து மடிப் பிடவை உடுத்தி மிர்ஜான் கோட்டை பூஜை மண்டபத்துக்கு வருகிறாள் மகாராணி. தாதிகள் செலுவியும் மங்காவும் இன்னும் ஒருத்தியும் குளித்து மடி உடுத்து கூந்தலை வெண்பட்டுக் கட்டி மறைத்தபடி நானாவித புஷ்பங்களும் ரோஜா வாடையடிக்கும் மைசூர் மட்டிப்பால் ஊதுவத்திகளும், தமிழ் பேசும் கல்வராயன் மலைப் பிரதேசத்திலிருந்து வரவழைத்த கட்டி சாம்பிராணிப் புகையுமாக பூசை மண்டபம் கைலாசம் போல் மிளிர்ந்தது. வயதான புரோகிதர்கள் நாலு பேர் பூசனை மந்திரங்களைச் சொல்கிறார்கள். பெரிய பிரம்புத் தட்டுகளில் வைத்த ரோஜாப்பூ இதழ்களையும் வில்வ இலைகளையும் மகாவீரர் பிரதிமைக்கும் அடுத்து சிவபிரானுக்கும் மெல்ல பூவிதழ் தூவி அர்ச்சனை செய்தபடி இருக்கிறார் மகாராணி. மிர்ஜான் கோட்டை சமையல் அறைகளில் சுத்தமாகப் பக்குவப்படுத்தப்பட்ட பொங்கலும் பாயசமும் நைவேத்தியமாகின்றன. ருசிபார்க்கும் உத்தியோகஸ்தன் கொஞ்சம் நைவேத்தியப் பொங்கலைத் தின்று பாயசம் ஒரு மடக்கு குடித்து சரிதான் என்று வணங்கிச் சைகை தர, அரசியாரும் தொடர்ந்து தாதிகளும் நைவேத்திய பிரசாதம் உண்கிறார்கள்.
இருபத்தைந்து நாழிகை. காலை பத்து மணி. பிரதானி நஞ்சுண்டய்யா உண்டு முடித்து தாம்பூலம் தரித்து, வேஷ்டியை பஞ்சகச்சமாக அணிகிறார். மேலே முகலாய பாணி குப்பாயத்தை அணிந்து பொத்தானைத் துளையில் திணித்து நேராக வைத்தபடி குப்பாயத்துக்குள் முப்புரிநூல் தெரியாமல் இழுத்து விட்டுக் கொள்கிறார். தலையில் குல்லாய் கவிழ்த்தால் மிர்ஜான் கோட்டையில் பிரதானிகள் அரசியோடு ஆலோசனை நடத்தப் புறப்பட்டு விடலாம். நீளக் குல்லாயோடு அத்தனை பிரதானிகளும் ஒரு பார்வைக்கு கிருஷ்ண தேவராயர் போலத் தெரிகிறார்கள். இன்னொரு பார்வைக்கு கூத்தாட வந்த கோமாளிகள் போல் தோற்றம்.
அரைக் குல்லாவை எடுத்து வா என்று மலைப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் புதுப் பணியாளனுக்கு உத்தரவு தருகிறார். அவன் உள்ளே போய் பளபள என்று நீலப்பட்டில் நெய்த மார்க்கச்சை எடுத்து வந்து பவ்வியமாக நீட்டுகிறான். இது எதுக்கு எனக்கு? கச்சை தலைக்கு மேலே போச்சுன்னா எல்லா அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் அதுக்குத்தான். பிரதானி சொல்ல புரியாமல் மறுபடி உள்ளே போய் சிவப்பு கச்சையை எடுத்து வந்து தருகிறான். ஒரு கச்சையே கஷ்டம் ரெண்டா ஈசுவரா. பிரதானி தானே உள்ளே போய் குல்லாவைத் தேட குல்லா தொங்கும் கம்பிக் கொடிக்குக் கீழே பிரதானியின் மனைவி இட்டலி தின்று கொண்டிருக்கிறாள். எடுத்துத் தலையில் வைக்கும்போது நேற்றைக்கு எறும்போ எதுவோ உள்ளே இருந்து கஷ்டப்படுத்தினது நினைவுவர குல்லாயைத் திரும்ப எடுத்துத் தரையில் வேகமாகத் தட்ட, எறும்பையும் காணோம் ஒண்ணையும் காணோம். வேலைக்காரன் கொண்டுவந்து காலில் இட்ட வளைந்த சீன ஜோடுகள் மெத்தென்று பொருந்தியிருக்க பிரதானி மிர்ஜான் கோட்டையில் முடிவெடுத்து உலகைப் பராமரிக்கப் புறப்பட்டுப் போகிறார்.
முப்பது நாழிகை. பகல் பனிரெண்டு மணி. ஹொன்னாவர் நகர் ரதவீதியில் மிட்டாய் அங்காடியில் நெய்யும் உளுத்தம் மாவும் கலந்து பொறித்தெடுக்கும் வாசனையான புகை எழுந்து தெரு முழுக்கக் கமழ்கிறது. பெரிய குஞ்சாலாடுகள் என்ற லட்டு உருண்டைகள் எட்டு வரிசையாக அடுக்கிய தட்டைக் கவனமாகச் சுமந்தபடி கடை நுழைவுப் பகுதிக்கு வந்த பணியாள் ஒரு வினாடி அங்கே தரை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணின் விலகிய முந்தானையில் பதிய நாலைந்து லட்டுகள் சிதறிக் கீழே விழுகின்றன. அந்தப் பெண் ஆசையோடு உதிர்ந்த லட்டு எல்லாம் எடுத்துக் கொண்டு போகிறாள். பின்னாலேயே வந்த அங்காடி உரிமையாளர் ரோகிணி அந்தப் பணியாளன் மீதி லட்டுகளைக் கவனமாக கண்ணாடி அலமாரியில் வைக்கும் வரை காத்திருந்து அவனைக் கேட்கிறாள் – ராத்திரி பொண்டாட்டி எதுவும் செய்ய விடலியா? லட்டு வேண்டியிருக்கா வேலை நேரத்துலே? அவன் நெளிகிறான். சீபோ சீக்கு பிடிச்ச காண்டாமிருகமே உனக்கு வேணும்னா இன்னிக்கு ஒரு மணி நேரம் முன்னாலே போ. ரெண்டு லட்டு எடுத்துப் போ அவளுக்கு நான் கொடுத்ததா இருக்கட்டும். ரோகிணியம்மா-அவன் கை கூப்புகிறான். வேலையைப் பாருடா. ரோகிணி சொல்லியபடி உள்ளே போகும்போது வழக்கமான கடைத்தெரு வணிகர்கள் சாப்பாட்டுத் துணையாக காரச் சுண்டல் வாங்க வந்து கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. சுண்டல் செய்தாச்சா என்று உள்ளே பார்த்துச் சத்தம் போட, ஆச்சு. இன்னிலே இருந்து இனிப்பு வாங்கினாத்தான் சுண்டல். அவள் கண்களைச் சிமிட்டி ஜவுளிக்கடை நாராயணப்பாவுக்குச் சொல்ல அவர் சொர்க்கத்துக்குப் போன மாதிரி மெய்மறந்து சிரிக்கிறார். ஒவ்வொருத்தரும் ஆளுக்கு நாலு லட்டுகளையும் சுண்டலோடு வாங்கிக்கொண்டு போகும்போது வீட்டில் விசேஷமா என்று ரோகிணி ஒவ்வொருத்தரையும் கேட்டு, இல்லேன்னா இனிமேல் இருக்கும் என்கிறாள் லட்டைச் சுட்டிக் காட்டி. அவளை திரும்பத் திரும்ப பார்த்துப் பார்வையால் பருகியபடி கடைத்தெரு கூட்டம் திரும்பி நடக்கிறது சிரிப்பும் கும்மாளமுமாக
முப்பத்தைந்து நாழிகை. பிற்பகல் இரண்டு மணி. ஜெரஸோப்பா வண்டிச் சத்திரம். சத்திரத்தில் கருங்கல் பாளங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மேல் நல்ல சூடான வென்னீர் அடித்து ஊற்றப் படுகிறது. பாளங்கள் அடுக்கிலிருந்து உருவப்பட்டு வடித்து சூடாக சமையல்மனையிலிருந்து வந்து சேரும் சோற்றுக் கூடைக்கு அருகே வைக்கப்படுகின்றன. பாளங்களில் சோறு வைக்கவும், வியஞ்சனமும், புளிக்குழம்பும் வைத்து உண்ணத் தரவும் குழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நிரப்பித்தர பணியாளர்கள் நிற்கிறார்கள். இயன்றவர்கள் மூன்று காசு கொடுத்தும் இல்லாதவர்கள் விலையின்றியும் பகல் உணவு உண்டு போகலாம் என்று அறிவிக்கப்படுகிறது. வண்டிக் கோட்டத்து வண்டிக்காரர்கள் ஆளுக்கு மூன்று காசு கொடுத்தும், இல்லாதவர்கள் இயன்றதைக் கொடுத்தும் பகல் உணவுக்கு கல்பாளங்களோடு தரையில் அமர்கிறார்கள். வயிற்றில் பசித்தீ கனன்று எரிய, சோறும் மற்றவையும் கொண்டு அது எல்லோருக்கும் மெல்ல அணைக்கப்படுகிறது.
June 30, 2021
வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள்
வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து : 1596-ம் ஆண்டில் ஒரு நாள் – சில பகுதிகள்
பதினேழரை நாழிகை காலை ஏழு மணி ஹொன்னாவர் நகரின் சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து வந்த காய்கறிகளும், ஷராவதி நதித்தடத்தில் தூண்டிலிட்டுப் பிடித்துப் புதியதாக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களும் பிரப்பங்கூடைகளில் வைத்து விற்கும் சந்தைக் கடைகளில் சத்தமாக உள்ளது. தினமும் வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவதில் உள்ள சந்தோஷத்துக்காக குடும்பப் பெண்கள் கூடைகளோடு அடுத்த பேரத்துக்காக ஆவலுடன் கண்கள் தேட சந்தையில் நடக்கிறார்கள்.
ஒடித்தும் வளைத்தும் மூக்குத் தண்டில் தேய்த்தும் கறிகாய்களை இம்சித்து பேரமும் பேசி வாங்க வந்தவர்கள் இளம் பெண்கள் என்றால் கடைக்காரர்கள் சும்மா சிரிக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் திட்டுகிறார்கள். அநியாயத்தை சரி செய்ய கோட்டைதான் குறுக்கிடணும் என்று கத்தரிக்காய் விற்பனையில் மிளகு ராணியை மத்தியஸ்தம் செய்ய அழைக்கிறார்கள்.
மீன் கடைகளை விலக்கி அவசரமாக நடக்கும் பிராமணப் பெண்ணை குறைந்த விலையில் மத்ஸ்யம் வாங்க வரச்சொல்லி மீன்கடைக்காரர்கள் அழைப்பதும் தினசரி நடப்பதுதான். நாங்க எல்லாம் மீன் தின்ன ஆரம்பிச்சா இந்தப் பொன்னாவரம் மட்டும் இல்லை, விஜயநகரத்திலேயும் மீன் கிடைக்கத் தட்டுப்பாடு வந்துடும் என்று சிரித்தபடி பதில் சொல்லும் பார்ப்பனியோடு சந்தையே சிரிக்கிறது. அவள் ஹொன்னாவர் என்ற ஊர்ப் பெயரை நல்ல தமிழில் பொன்னாவரம் என்று உச்சரிப்பதை அந்தக் கூட்டம் ரசிக்கிறது. வீடுகளில் பால் கறக்க ஏற்படுத்தப்பட்டவர்கள் மாடுகளைக் கறந்து கறந்து பால் வாசனையோடு நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ கன்றுக்குட்டி தாய்ப் பசுவை அழைக்கும் குரல். இருடி வரச் சொல்றேன். பால் கறந்து விட்டு வந்தவர்கள் கன்றின் குரலை ஒத்தியெடுத்து ஒலிபரப்ப, எங்கிருந்தோ தாய்ப்பசுவின் இதோ வந்துட்டேன் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
இருபது நாழிகை. காலை எட்டு மணி. ஜெருஸுப்பா பிரதானி சந்திரப்பிரபு மாளிகையில் பிரதம மடையர் அடுப்பில் வெங்கலப் பாத்திரம் ஏற்றி ராகி களி கிண்டியபடி மெதுவான குரலில் ராகி தந்தீரோ என்று புரந்தரதாசர் தேவர்நாமா பாடிக் கொண்டிருக்கிறார். இசை நிகழ்ச்சி மாதிரி அவருடைய உதவியாளர்கள் கூடப்பாட, கிண்டப்படும் களியில் மிளகைக் காணோம். ஒரு மாறுதலுக்கு பச்சை மிளகாய் அரிந்து போடப்பட்டிருக்கிறது. விட்டலன் மிளகுக்கும் மிளகாய்க்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை என்கிறார் மடையர். எல்லோரும் மிளகு வேண்டாம்னு வச்சா நாளைக்கு எதை வித்து ராஜதானியிலே பணம் கிடைக்கும்? நம்ம ராஜாங்கம் வேணும்னா மிளகுப்பொடி, பரங்கி கொடி பறக்கணும்னா மிளகாய். எதுன்னு முடிவு செஞ்சுக்கங்க. அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்த உப மடையர் சொல்வதைப் பின்னால் நின்று பிரதானி சிரத்தையாகக் கவனிக்கிறார்.
”தாசாச்சார்யாரே, இனிமேல்கொண்டு நம்ம குசினியிலே மிளகாயும் வெங்காயமும் வரவேண்டாம். என்ன தெரிஞ்சுதா?” பிரதானி களி வாடையை முகர்ந்தபடி வெளியே போகிறார். பச்சை வெங்காயத்தோடு ராகிக் களி தின்ன என்ன ருசியாக இருக்கும்! அவர் நாக்கை சிரமப்பட்டு அடக்குகிறார்.
இருபத்திரண்டரை நாழிகை. காலை ஒன்பது மணி. வெதுவெதுப்பான வெந்நீரில் வாசனாதி திரவியங்கள் கலந்து அரபுப் பொடி தேய்த்து நீராட சென்னபத்மாவதிக்கு தாதி மிங்கு உதவ, ஸ்நானம் முடித்து மடிப் பிடவை உடுத்தி மிர்ஜான் கோட்டை பூஜை மண்டபத்துக்கு வருகிறாள் மகாராணி. தாதிகள் செலுவியும் மங்காவும் இன்னும் ஒருத்தியும் குளித்து மடி உடுத்து கூந்தலை வெண்பட்டுக் கட்டி மறைத்தபடி நானாவித புஷ்பங்களும் ரோஜா வாடையடிக்கும் மைசூர் மட்டிப்பால் ஊதுவத்திகளும், தமிழ் பேசும் கல்வராயன் மலைப் பிரதேசத்திலிருந்து வரவழைத்த கட்டி சாம்பிராணிப் புகையுமாக பூசை மண்டபம் கைலாசம் போல் மிளிர்கிறது. வயதான புரோகிதர்கள் நாலு பேர் பூசனை மந்திரங்களைச் சொல்கிறார்கள். பெரிய பிரம்புத் தட்டுகளில் வைத்த ரோஜாப்பூ இதழ்களையும் வில்வ இலைகளையும் மகாவீரர் பிரதிமைக்கும் அடுத்து சிவபிரானுக்கும் மெல்ல பூவிதழ் தூவி அர்ச்சனை செய்தபடி இருக்கிறார் மகாராணி. மிர்ஜான் கோட்டை சமையல் அறைகளில் சுத்தமாகப் பக்குவப்படுத்தப்பட்ட பொங்கலும் பாயசமும் நைவேத்தியமாகின்றன. ருசிபார்க்கும் உத்தியோகஸ்தன் கொஞ்சம் நைவேத்தியப் பொங்கலைத் தின்று பாயசம் ஒரு மடக்கு குடித்து சரிதான் என்று வணங்கிச் சைகை தர, அரசியார் நைவேத்திய பிரசாதம் உண்கிறார்.
June 29, 2021
புதிது – வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ – நகரத்துக்கு வந்த பசு
வளர்ந்து வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி
கோட்டை மண்டபத்தில் இருக்க நினைத்து வேண்டாம் என்று வைத்து உள்ளே சமையலறையும், உணவுப் பொருட்கள், காய்கறிகள் சேமிக்கும் அறைகளும், பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் பெரிய அலமாரிகள் வரிசையாக நீண்ட ஈரமான அறைகளுமாக விளங்கும் பிரதேசத்திற்குள் நடந்தாள் அவள். மெய்க்காப்பாளர்கள் அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகச் சென்னாவைத் தொடர்ந்து ஓடிவந்தார்கள்.
எந்தக் கசடும் குப்பையும் இல்லாத சமையலறையில் பெரிய அக்னிக் குண்டங்கள் போல் கோட்டையடுப்புகள் எரிய குளித்துச் சுத்தமாகத் தெரியும் சமையல்காரர்கள் காலை உணவைப் பாகம் செய்து கொண்டுருந்தார்கள். ஆளோடி இறுதியில் ஒரு ஓர அறை ஆகாயத்தைப் பார்தது கூரை இல்லாமல் நீண்டிருக்க, அங்கே உத்தியோகம் செய்கிறவர்கள், உபயோகித்த பாத்திரங்களைக் கழுவி அலம்பித் தூய்மைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
குசினி வாசலில் நின்றபோது பிரதம சமையல்காரர் ஒரு வினாடி தன் உதவியாளனிடம் அடுப்பைக் காட்டிச் சொல்லியபடி ராணிக்கு மரியாதை செலுத்த ஓடி வந்தார்.
எல்லாம் சரியாக நடக்கிறது தானே?
ஆமாம் அம்மா.
காலை உணவு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இட்டலிகளும் தோசையும் துவையலும் பாகம் செய்துகொண்டிருக்கிறோம் அம்மா. வெண்பொங்கலும் வெந்துகொண்டிருக்கிறது. இன்று வெள்ளி என்பதால் பூஜை நைவேத்தியமாகப் படைக்கப் பலாப்பழப் பாயசமும் சமைத்து வைத்தாகி விட்டது அம்மா. நீங்கள் சொன்னபடி குறைந்த அளவு சர்க்கரையே சேர்த்துச் செய்தோம். துரை அவர்கள் காணிக்கையாகத் தந்த கொய்யாப் பழங்களையும் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கிறோம்.
சரி ரொம்ப நல்லது. எனக்கு வேண்டிய தினசரி பானம் அனுப்புகிறீர்களா?
நிச்சயமாக அம்மா. உங்கள் தினசரி வழக்கப்படி எலுமிச்சைச் சாறும் தேனும் வென்னீரில் கலந்து வைத்திருக்கிறது. இன்று தேன் சேர்க்க வேண்டாம் என்றால் தேனில்லாமல் கருப்பட்டிக் கூழ் சேர்த்த இன்னொரு குவளையும் உண்டு. இரண்டையும் தங்கள் திருமனசுப்படி அனுப்புகிறேன்.
தேனை நாம் விலக்கவில்லை. அடிகளார் வந்தபோது அவருக்கு விலக்கு என்பதால் சொன்னோம். இப்போது தேன் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.
மண்டபத்தில் நேமிநாதன் நின்றபடி சென்னா வரக் காத்திருந்தான். வலதுகைச் சுட்டி விரலில் வெள்ளைத் துணியால் கட்டி வைத்திருந்ததை முதுகுக்குப்பின் மறைத்துக் கொண்டாலும் சென்னா கண்ணில் அது படத் தவறவில்லை. பார்த்தபடி தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள் சென்னா.
வணக்கம் அம்மா, நன்றாக உறங்கினீர்களா? நேற்று முன் தினம் அவ்வப்போது எட்டிப் பார்த்ததே அந்தக் குத்திருமல் கட்டுப்பட்டதா? வயிறு சீரணப் பிரச்சனை இன்றி சீராக இயங்குகிறதா?
அவன் சொல்லச் சொல்ல ஆம் என்று தலையசைத்தாள் சென்னா. வயிறு பற்றிய ஆம் உதிர்த்த உடன், அவனை இருக்கச் சொல்லி விட்டு தாதியைப் பார்த்தாள் சென்னா.
கொல்லைக்குப் போக கூட்டு எதுக்குன்னு பழஞ்சொல் தமிழ்லே உண்டு. ஆனா எனக்கு அறுபது வயசாகி எல்லா சீக்கும் வந்து சேர்ந்திருக்கு. கொல்லையிலே கழிப்பறையிலே கொண்டு போய் விட்டு காத்திருந்து திரும்பக் கூட்டிவர தாதி இருந்தால் மனசு ஆறுதலோட இருக்கு. சுத்தப்படுத்தறதெல்லாம் நானே தான் இதுவரைக்கும் செய்துக்கறது. வெறும் துணைதான். நான் போயிட்டு தோட்டம் போறேன். நேமி, நீ குளிச்சு உண்டு விரைவாக காரியாலயம் வந்துடறியா?
சரி அம்மா, அப்படியே ஆகட்டும். காலைச் சாப்பாடு?
அவன் தயங்கி நின்றான்.
என்ன சந்தேகம்? எப்பவும் போல சேர்ந்துதான். ரஞ்சனாவும் இருக்கட்டும். எட்டு மணிக்கு காலை ஆகாரம் இன்னிக்கு. அரை மணி நேரம் முன்னதாக.
பிடவை இடுப்பு மடிப்பில் வைத்திருந்த கடியாரத்தை எடுத்து மணி பார்த்தபடி சொல்லி விட்டு ஜாக்கிரதையாக தாதியிடம் கொடுத்தாள் சென்னா. தாதி அவளை அணைத்துக் கழிப்பறைக்குக் கூட்டிப் போக மெல்ல நடந்தாள். தாதியிடம் ஏதோ சொல்லி சென்னா கம்பீரமாகவும் தாதி தயங்கியும் சிரிக்கும் சத்தம் அடுத்துக் கேட்டது.
வயிறு சீராக இயங்கும் சந்தோஷத்தோடு கோட்டைத் தோட்டம் போகும் ஒற்றையடிப் பாதையில் நடந்தாள் சென்னா. அறுபது வயதில் கொல்லைக்குப் போய் அடிவயிற்றுக் கழிவு வெளியேற்றினாலே அந்த தினம் கொண்டாடப்பட வேண்டியது. நாள் முழுக்க சிறப்பாகப் போகும் என்று நம்பிக்கை வருகிறது. இன்று வந்தது.
மெய்க்காவலரை விலக்கித் தாதி மிங்குவை மாத்திரம் கூட இருத்திக்கொண்டு தோட்டம் பார்க்கப் புறப்பட்டாள் சென்னா.
“ஏக் அஸ்லி காய்..”
கொங்கணி மொழியில் ஒரு குழந்தைப் பாடலை உரக்க முணுமுணுத்தபடி சென்னா தோட்டத்துக்குப் போகும்போது தாதி மிங்குவைப் பார்த்து பாடுடீ என்று புன்சிரிப்போடு கட்டளையிட்டாள். ஒரு நிமிடம் மகாராணி நான் மாட்டேன் ஐயயோ என்று பயந்து நாலு திசையும் அவசரமாகப் பார்த்தாள் மிங்கு. அடுத்த நிமிடம் இரண்டு குழந்தைகள் நகரத்துக்கு வந்த பசுவைச் சேர்ந்து வரவேற்றுப் பாடியபடி கை கோர்த்துத் தோட்டத்துக்குள் நடந்தன.
June 28, 2021
அரசூர் வம்ச திலக லாவண்ய
சக எழுத்தாளர்களின் பாராட்டு சந்தோஷத்தைத் தரும். வெவ்வேறு துறை சார்ந்த, முக்கியமாக கலைத்துறை சார்ந்த நண்பர்களின் நல்ல வார்த்தைகள் இன்னொரு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இன்று காலை வந்த ஒரு பாராட்டு –
//
Only recently I got to read arasur vamsam. Thoroughly enjoyed it, especially the lingo, the expressions in the dialogues and the small detailing. Thanks so much
//
நன்றி நண்பர் சஞ்சய் சுப்ரமணியன்
(pic courtesy sruti.com)
புது நாவல் ‘மிளகு’ – 1960இல் இருந்து 1596க்கு
பரமன் என்ற பரமேஸ்வரன் 1960-இல் நாக்பூர் சிறு விமானத் தளத்தில் சொல்லாமல் விமானம் விட்டு இறங்கித் திரிந்தபோது நான்குவாயில் மண்டபம் வழியே 1595-ம் ஆண்டு உத்தர கன்னடப் பிரதேசத்தில் ஜெர்ஸோப்பா நகர் போய்ச் சேருகிறான். மிளகு ராணி காலம் அது.
———————————
கண்ணில் முன்னால் பட்ட வாசல் பக்கம் போய் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக நின்றார் பரமன். அப்போதுதான் கவனித்தார். அந்தக் கட்டடமே ஏதோ அச்சில் சுழல்கிறது போல மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது.
இந்தக் காட்டில் கட்டிடம் கட்டிப் புழங்க விடுகிறவர்களுக்குக்கூட கட்டிடக் கலையிலும், சுழலும் மண்டபங்களிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, தாங்கு கட்டைகள் மேல் உறுதியாகக் கால் ஊன்றி நின்று கதவு அடுத்துத் தான் இருக்கும் இடத்தைக் கடக்கக் காத்திருந்தார் பரமன். வாழ்க்கையே இப்படி விளையாட்டும் விநோதமுமாக ஆகியிருந்தால் எல்லாவற்றையும் மறந்து விட்டு சுழலும் கட்டிடத்தோடு ஓடிக் கொண்டிருக்க ஆசை. தாங்கு கோல்கள்?
அடுத்த கதவு பக்கத்தில் வர, திறந்து உள்ளே நடக்க, ஒரு வினாடியில் தலை குப்புற விழுந்தார் பரமன். எழுந்த போது கட்டைகளைக் காணோம். மண்டபத்தையும் காணோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை அப்பியிருந்த நிலம் கண்ணைக் கொள்ளை கொண்டது. பரமன் கவனித்தார். தாங்குகட்டைகள் இல்லாமல் அவர் கால்கள் சுபாவமாக இருப்பதுபோல் முழுமையாக இருந்தன. தோளில் மாட்டிய பை அப்படியே தான் இருந்தது. எங்கே வந்திருக்கிறார் அவர்? தில்லி பம்பாய் விமானம் எங்கே போனது?
ஹோ என்று சத்தமிட்டார் பரமன். யாரும் ஏற்று வாங்கிப் பதில் சொல்லவில்லை. தலைக்கு மேல் சத்தம். தலை தூக்கிப் பார்த்தார். பெரிய கழுகு ஒன்று தோளில் அவர் மாட்டியிருக்கும் பையைக் குறிபார்த்துச் சுற்றிச் சுற்றி வந்து நேரே இறங்குகிறதுபோல் பாவனை செய்தது. அந்தப் பையில் அதற்கான பொருள் என்று என்ன இருக்கிறது? கருப்பு கலரில் ஒரு பேண்ட், இரண்டு அரைக்கை சட்டைகள், கடலை உருண்டை பாக்கெட் ஒன்று, பர்ஸில் நூற்று இருபத்தைந்து ரூபாய் பணம், விக்ஸ் இன்ஹேலர், ஃப்ளைட்டில் கொடுத்த நான்கு ஸ்லைஸ் ரொட்டி, ஜாம் சின்ன ஜாடியில் அவ்வளவுதான் நினைவு வருகிறது. கடலை உருண்டையோ ரொட்டியோ கழுகு சாப்பிடுகிற உணவு இல்லை. பேண்ட் சட்டை அதற்கெதுக்கு? வாச்சி வாச்சியாகப் பல் இருக்கற பெரிய சைஸ் சீப்பு ஒன்று மாடுங்காவில் ஸ்டேஷன் பக்கத்தில் வாங்கியது கூட உள்ளே வைத்திருக்கும் நினைவு. பரமேஸ்வரனுக்குத்தான் படியாத தலைமுடி, பெப்பரப்பே என்று சிலும்பி நிற்கிற அதை தலையில் படிய வைத்து வாரி ஒதுக்கி நிறுத்த அந்தப் பிரம்மாண்டமான சீப்பை வாங்கி இதுவரை ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை. அதோடு பெட்டியில் வைத்திருந்து பரிசோதனையின்போது கீழே போட்ட ரேசர், ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப், டூத்பேஸ்ட், டூத் ப்ரஷ் எல்லாம் ஒரு பாலிதீன் பேப்பர் பையில் வைத்து இருக்கிறது. பெட்டி விமானத்தோடு போய்விட்டது. அதில் முக்கியமாக ஒன்றும் இல்லை; பெட்டியில்லாமல் வாழ முடியும். பை வேணும்.
கால் தானே சரியாகி விட்ட சந்தோஷம் பரமனை ஓடச் சொன்னது. ஓடினார். நெல்லோ வேறே பயிரோ செழித்து வளர்ந்திருந்த நிலப்பரப்பில் வரப்புகளில் காலூன்றி அவர் மெல்ல ஓடினார் முதலில். அடுத்து வேகத்தை அதிகமாக்கினார். கால்கள் வேறு யாருடையதோ என்பது போல் ஓடின. நிற்கிற இடத்திலேயே குதித்தார். முழு பலமும் பரந்த பரப்பில் ஊன்றி நிற்க வகை செய்து கால்கள் உயர்ந்து மீண்டும் கீழே இறங்கின. கனவில்லை. நிஜம்
மூச்சு வாங்க ஏஏஏஏஏய் என்று யாரையோ கூப்பிட்டார். யாரும் எதிர்ப்பட்டால் கால் முளைத்த கதையைச் சொல்லலாம். பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று. மணிக்கட்டில் கடியாரம் இருக்கிறதா என நோக்கினார். பிற்பகல் ஒரு மணி. எங்கே ஒரு மணி? அவருக்குக் குழப்பமாக இருந்தது.
பச்சைத் தாவரப் போர்வை போர்த்திய நிலம் ஒரு திருப்பத்தில் பாதை ஒன்றைச் சேர்ந்தது. பெரிய வீதிதான். முழுக்க சன்னமான கப்பி அடித்துப் போட்டிருந்த வீதி. தார் பூசிய, சிமெண்ட்டால் முழுக்க இட்ட தெரு இல்லை அது.
வீதியில் போகும் வாகனம் எதையும் கைகாட்டி நிறுத்தி வழி கேட்டால் என்ன. தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனம் நிற்கும் என்று பட்டது. அது அருகில் வந்தபோது குதிரைகள் இரண்டு பூட்டிய சாரட் என்று புலப்பட்டது. பரவாயில்லை, வேகமாக நகரும் ஏதோ ஒரு வண்டி. வலதுகை ஆள்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்திக் காட்டியபடி நின்றார் பரமன்.
தடக்கென்று குதிரைகள் வேகம் மட்டுப்படுத்தி அருகில் நின்று கால் அசைக்க, ஓட்டி வந்தவன் அவசரமாகக் கீழே குதித்தான். புராண நாடகத்தில் வாகனம் ஓட்டுகிறவனாக வரும் நடிகன் போல் ஒப்பனை செய்திருந்தான் அவன்.
சகோதரா, நாக்பூர் விமான நிலையத்துக்கு எப்படிப் போகணும்? இதைத்தான் பரமன் கேட்டார். திடுக்கிட்டது போல், வியப்படைந்தவனாக நின்று கேள்வியையே திரும்பச் சொன்னான். சாரட்டின் ஜன்னல் ஒன்று திறக்க பருமனாக உள்ளே அமர்ந்திருந்தவன் வாயில் வெற்றிலை அரைபட, என்ன ஆச்சு என்று தலையை உயர்த்தி ஆட்டி கேட்பதாக பாவனை செய்தான்.
நாக்பூர் ஏர்போர்ட். மை டியர் ப்ரண்ட். குட் யூ ப்ளீஸ் டைரக்ட் மி? நல்ல பிபிசி உச்சரிப்பில் ஆங்கிலத்தில் வினவினார் பரமன். அவன் முகம் ஆச்சரியத்தைச் சொல்ல சாரட்டில் இருந்து கீழே குதித்தான். போச்சு, புராண, சரித்திர நாடகத்துக்கு பெரும் தனவந்தராக வேடம் போட்டு நடிக்கிற நடிகனாக அவன் தோன்றினான்.
சாரட்டின் ஜன்னல் பக்கம் உள்ளே யாரோ பெண் வண்டிக்குள்ளிருந்து வந்து நோக்கினாள். அவள் பார்வையை பரமன் மறக்க முடியாது. வண்டிக்குள் இருந்து நிற்பவர்களிடம் ஏதோ சொல்லி பரமனையும் விழுங்கி விடுவது போல் பார்த்தாள் அவள். எழுபது வயதுக் கிழவனிடம் அப்படி என்ன பொலிவு கண்டாள் ? பெருவணிகன் பரமனை சாரட்டில் ஏறச் சொல்லிக் கை காட்டினான்.
அந்தப் பெண் புன்முறுவல் பூத்தது மிக்க அழகாக இருந்தது. ஒப்பனை இல்லாத அழகிய முகம் அது. சாரட்டில் பக்கவாட்டுக் கதவில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தபடி பரமன் கைப்பை சுமந்தபடி சாரட்டில் ஏற, கண்ணாடியில் தெரிந்தது பரமனில்லை. இளைஞன். 1920களில் பரமன் அப்படித்தான் இருந்தார். கதர்ச் சட்டையும் மூக்குக் கண்ணாடியுமாக அச்சு அசல் அப்படித்தான் இருந்தார். இருபதுகளுக்கு மறுபடி போனதுபோல் அவருக்குத் தோன்றியது. ஆனால் இவர்கள்?
சதுர்முகபஸதி (சதுர்முகவசதி கட்டிடம் – கர்க்கலா)
படம் நன்றி விக்கிபீடியா
June 22, 2021
வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ : நாற்பதாண்டுகளை ஒரு ராத்திரியில் பரிச்சயப்படுத்தி
(வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து)
—————————————–
தலையை ஆட்டிக் கொண்டு ஒரு நிமிடம் இருந்துவிட்டு தாங்குகோல்களை சத்தம் எழுப்பாமல் தரையில் கிடத்தி, “நீ எப்படி இருக்கே? உன் ஆத்துக்காரி எப்படி இருக்கா? எத்தனை பசங்க? என்ன பண்றாங்க? உலகத்திலேயே அப்பா பிள்ளை இப்படி அந்நியர்கள் மாதிரி ஷேமலாபம் விசாரிக்கறது வேறெங்கேயும் நடந்ததா தெரியலே. நடக்கவும் போறதில்லே” என்றார் வந்தவர்.
“என் பொண்டாட்டி அகல்யா அஞ்சு வருஷம் முன்னாடி சகல சௌபாக்கியத்தோடயும் போய்ச் சேர்ந்துட்டா. செர்வைகல் கேன்சர். கர்ப்பப்பை வியாதி. அவ திவசச் சாப்பாட்டைத்தான் நீங்க மதியம் விஷ்ணு இலையிலே இருந்து சாப்பிட்டேள்” என்றார் திலீப் ராவ்ஜி சலனமில்லாமல்.
”அடடா அடடா” என்று தாங்குகோல்கள் துணை இன்றி எழுந்து திலீப் ராவ்ஜியை நோக்கி தத்தித் தத்தி வர முயற்சி செய்ய ரத்னக் கம்பளம் விரித்த சோபாக்களுக்கு இடையே இருந்த இடத்தில் விழுந்தார். கம்பளம் இருந்ததால் அடி படவில்லை என்றாலும் நிலை குலைந்து கிடந்தார் அவர். திலீப் ராவ்ஜி விரைவாக எழுந்து அவரைக் கைத்தாங்கலாகத் தன் சோபாவிலேயே அருகே அமர்த்திக் கொண்டார். அப்பா என்று தயங்கித் தயங்கி அழைத்தார். வந்தவர் அவரை இறுக அணைத்தபடி தலையில் முத்தமிட்டார். எழுபது வயது முதியவரை நூற்றுப் பத்து வயது கிட்டத்தட்ட ஆன வன்கிழவர் குழந்தை போல ஏக்கத்தோடு பெயர் விளிக்க திலீப் ராவ்ஜியும் கண் கலங்கினார்.
“நீங்க இங்கேயே இப்போதைக்கு இருந்துக்கலாம். அனந்தன் கிட்டே சொல்லிடணும். என் பிள்ளை”
“என் பேரன் என்ன பண்றான்? நீ என்ன பண்றே?” வயோதிகர் குரலில் எதிர்பாராத சந்தோஷம் ஏறி ஒலிக்கக் கேட்டார்.
”அவன் உங்களை மாதிரி இடதுசாரி. Yet a practical person. பெரிய துணிக்கடை வச்சிருக்கான். மலையாள டிவியிலும் ஒரு சேனல் இன்னும் நாலு பேரோடு சேர்ந்து நடத்தறான். என் மகள் கல்பா. உங்கம்மா, கற்பகம் பாட்டி நினைவாக கற்பகம்னு பெயர் வச்சு கல்பான்னு கூப்பிடறோம். ஸ்காட்லாந்திலே வரலாற்று பேராசிரியராக வேலையில் சேர்ந்திருக்கா”.
“நீ என்ன பண்றே? பெரியம்மாவுக்கு டைப் அடிச்சுக் கொண்டு போய்க் கொடுப்பியே? அதெல்லாம் இல்லேதானே. எல்லாரும் போயிருப்பா, என்னை மாதிரி ஆமை கணக்கா ஜீவிக்கிறேன்னு பூமிக்கு பாரமா விழுந்து கிடக்க மாட்டா. பாம்பே எலக்ட்ரிக் ரயில்லே கால் போனபோதே நான் போயிருக்கணும். பரமன் எஜ்மான் நான் இருக்கேன் உனக்கு நான் இருக்கேன் உனக்குன்னு கிறுக்கச்சி, உங்கம்மா அந்த லாவணிக்காரி போக விடமாட்டேனுட்டா. அப்ஸரா ஆளின்னு அவ ஆடினா அப்சரஸ்ஸே வந்த மாதிரி இருக்கும்.. கிறுக்குப் பிடிச்சுடுத்து பாவம்.. சாரிடா திலீப் உன்னைப் பத்தி கேட்டுட்டு நானே புலம்பிண்டு இருக்கேன்” திலீப் ராவ்ஜியின் தலையைக் குழந்தையை வருடுவது போல் தடவிக் கொடுத்தார் வந்தவர்.
மும்பை சாலில் ஆரம்பித்து சற்று முன் போய் வந்த மிளகு உற்பத்தியாளர் சங்கக் கூட்டத்தில் பங்கெடுத்து விட்டு வந்தது வரை திலீப் ராவ்ஜி அப்பாவிடம் எல்லாம் சொன்னார். அரசியல், இலக்கியம், சங்கீதம் என்று இந்த நாற்பது வருடத்தில் ஏற்பட்ட மாற்றம், புதுமை எல்லாம் நடு ராத்திரி கடந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பாவும் மகனும்.
நேரு மறைவுக்கு அப்புறம் லால்பகதூர் சாஸ்திரி அரசாங்கம், அடுத்து காங்கிரஸ் பிளந்தது, இந்திரா காந்தி பிரதமரானது, கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தாலும் வலுப்பெற்று கேரளத்திலும் வங்காளத்திலும் ஆட்சி செய்ய வந்தது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டது, சைனாவில் மாசேதுங் மறைவுக்குப் பிறகு அரசாங்க சர்வாதிகாரம் கலைந்து போய் அரசாங்க முதலாளித்துவம் ஏற்பட்டது என்று வாய் ஓயாமல் திலீப் ராவ்ஜி பேட்டை, உள்ளூர், மாநில, நாட்டு, உலக அரசியல் நிகழ்ச்சிகளை பரமனிடம் விவரித்தார். இந்திராவின் வரவு, பங்களாதேசம் பிறப்பு, இந்திரா ராஜ மானியம் ஒழித்தது, பதினான்கு வங்கிகளை முதலிலும் அடுத்து ஆறு வங்கிகளையும் தேசிய மயமாக்கியது பற்றி அடுத்து விவரித்தார் திலீப்.
தமிழிலும் மலையாளத்திலும் உரைநடை இலக்கியமும் மரபுக் கவிதை தேய்ந்து புதுக் கவிதையாக உலகம் எங்கணும். முக்கியமாக தமிழில் வானம்பாடி, கசடதபற இயக்கங்கள் தமிழ்க் கவிதைப் போக்கை மடை மாற்றியது குறித்தும் அடுத்து விவரமாக எடுத்தோதினார் திலீப் ராவ்ஜி. தமிழ்ச் சிறுகதை, நாவல், குறுநாவல் பற்றிப் பேசவும் சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த படைப்புகள் என்று பட்டியல் தயாரிக்கவும் நிராகரித்து வேறு சில பட்டியலிடவும் நிறைய வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார் திலீப் ராவ்ஜி.
நடுவில் பசி எடுக்க, ரொட்டித் துண்டுகளில் ரெப்ரிட்ஜிரேட்டரில் இருந்து எடுத்த வெண்ணையைத் தடவி டோஸ்டரில் வைத்துச் சுட்டு ஆரஞ்சு மர்மலேட் பூசிய டோஸ்டும், மைக்ரோ அவனில் தயாரித்த இன்ஸ்டண்ட் காப்பியும் ராத்திரி உணவாக இருவரும் பேச்சுக்கு இடையே உண்ணவும் பருகவும் செய்தார்கள்.
மரபு இசையை காருகுறிச்சி, அரியக்குடி, செம்பை, செம்மங்குடி, முசிரி, எம்.எஸ், பட்டம்மாள், மகாராஜபுரம் சந்தானம், தண்டபாணி தேசிகர் போன்ற மூத்த வித்வான்கள் வளப்படுத்தி விடை பெற்றது, சஞ்சய் சுப்பிரமணியனும், டி எம் கிருஷ்ணாவும், பாம்பே ஜெயஸ்ரீயும், நித்யஸ்ரீயும், சௌம்யாவும் அருணா சாயிராமும் புத்தலையாகத் தோன்றி வந்தது, மரபு இசையையும் விளிம்புநிலை மக்களின் இசை வெளிப்பாடுகளையும் இணைக்கும் முயற்சிகள் பற்றியும் அடுத்துப் பேச்சு தடம் மாற்றி நகர்ந்தது.
தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாறுதல், புது அம்சங்கள் பற்றி, முக்கியமாக பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்களின் ஆக்கங்கள், இளையராஜாவின் இசை வரவு, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இரண்டு பெரும் வெண்திரை வரவுகள், ஏசுதாஸும் மலையாள திரை இசையும், மலையாள சினிமாவின் மம்முட்டி, மோகன்லால் என்ற தனித்துவம் கொண்ட புதிய முகங்கள், மலையாளத் திரைப்படம் மலையாள இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது, இந்தி சினிமாவில் அமிதாப் பச்சன் என்ற மனிதரின் மகத்தான வளர்ச்சி, ஷோலய் என்ற பிரம்மாண்டமான வணிகத் திரைப்படம், சத்யஜித்ரேயின் அபு முத்திரைப்படங்களாக வெளியான செலுலாய்ட் கவிதைகள் எனப் பாராட்டப்படும் வங்காளப் படங்கள் என்று சினிமா பற்றி அடுத்துப் பேசினார் திலீப்.
ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படம் பற்றிக் குறிப்பிட்டார். காந்தியாக நடித்து ஆஸ்கார் விருது வாங்கிய பென் கிங்க்ஸ்லி மகாத்மா காந்தியை விட அசலான காந்தியாகத் திரையில் வாழ்ந்து கோடிக் கணக்கானவர்களைக் கவர்ந்தது பற்றித் தெரிவித்தார்.
ராமானுஜம், பூபேன் கக்கர், கீவ் பட்டேல், சில்பி, கோபுலு, கொண்டைய ராஜு, ஜெயராஜ், மரியோ மிராண்டா, ஆர் கே லக்ஷ்மண், ஈ பி உன்னி இப்படி இந்திய ஓவியம் மரபுத் தொடர்ச்சியோடு மேலை நாட்டு ஓவியப் போக்குகளோடு சேர்ந்து நடப்பது குறித்துப் பேசினார்.
நாடக மேடையில் மராத்தி சகாராம் பைண்டர் போன்ற விஜய் டெண்டுல்கர் நாடகங்கள். கன்னடத்தில் கிரிஷ் கர்னாடின் ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்கள், தமிழில் கூத்துப்பட்டறை நாடகங்கள் பற்றிச் சொன்னார். மலையாள நாடகங்களில் ஒரு தேக்கம் வந்தது என்றார் திலீப்.
பரமன் பேச எதுவும் இல்லை என்பது போல திலீப் சொல்வதை எல்லாம் ஒரு சொல் சிந்தாமல் கேட்டபடி இருந்தார். அவர் இத்தனை வருட காலம் எங்கே போயிருந்தார் என்றும் எப்படி வயதாவதைக் கட்டி நிறுத்தினார் என்றும் தெரிந்து கொள்ள திலீப் ராவ்ஜிக்கு ஆசைதான். கேட்க தயக்கமாக இருந்தது. அவர் சொல்லியிருந்தாலும் அதில் எவ்வளவு நம்பியிருக்கப் போகிறார் திலீப்.
பூடகமானதைப் பூடகமாகவே இருக்க விட்டு வாழ்க்கை முன்னால் போகட்டும் என்று முடிவு எடுத்து முன்னே போக சுலபமானதாகத் தெரிந்தது.
விடியப் போகிறது என்று ஹாலில் நான்கு மணி அடித்த சுவர்க் கடியாரம் நேரம் சொல்ல அவர்கள் உறங்கப் போனார்கள். அதற்கு முன் தான் உடுத்தாமல் வைத்திருந்த இரண்டு புது வெள்ளைப் பைஜாமாக்களையும், இரண்டு முரட்டு கதர் குர்த்தாக்களையும் பரமனுக்குத் தந்தார் திலீப். சற்றே தொளதொளவென்று இருந்த அந்தத் துணிகளை உடுத்திக் கொள்ளும் முன், அந்த அதிகாலை நேரத்தில் பல் துலக்கி கீஸரின் வென்னீர் சுட வைத்துக் குளித்து வந்தார் பரமன். அவருடைய பழைய உடைகளை பிளாஸ்டிக் உறையில் வைத்து மூடி வாசலில் துப்புரவுப் பணியாளர்கள் எடுத்துப் போக வழி செய்தார் திலீப். இருவரும் உறங்கப் போக கொச்சி நகரம் இயங்க ஆரம்பித்திருந்தது.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

