இரா. முருகன்'s Blog, page 76
July 16, 2021
மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – கடல் பயணமும் உப்புக் காற்றும்
மருத்துவர் என்ற உரிமையோடு அரண்மனையில் எங்கும் எப்போதும் நுழைய பைத்தியநாத் வைத்தியருக்கு அனுமதி உண்டு. அதுவும் மகாராணி இருக்கும் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பிரவேசம் அனுமதி உண்டு. கூட அந்தப்புர மகளிரில் யாராவது வர வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையோடு. வைத்தியர் முற்றத்தில் ஓரமாக மேசை போட்டு வைத்திருக்கும் மணியை குறைந்த பட்சம் ஒலி எழுப்பி அடித்தால் போதும். அடிக்கிறார். மிங்கு வெளியே வருகிறாள். என்னப்பா என்ன விஷயம் என்று விசாரிக்கிறாள். இவ்வளவுக்கும் இருவரும் புருஷன் பெண்டாட்டி.
ராணியம்மா உறக்கத்திலேயா? ஆமாய்யா, பாவம் கொஞ்சம் பலகீனமா இருந்ததாலே சீக்கிரமே உறங்கப் போய்ட்டாங்க என்றபடி வைத்தியரைக் கையைப் பிடித்து உள்ளே கூட்டிப் போனாள். அந்தக் கையை இறுகப் பற்றியிருந்தார் வைத்தியர்.
செருப்புகள் ஒலி எழுப்பாமல் அந்தப்புர முன் மண்டபத்தில் கழற்றி வைத்து விட்டு வரச் சொன்னாள் மிங்கு. புதுச் செருப்பு என்றபடி கழற்றினார் வைத்தியர். ஊருக்குப் போனா செருப்பு வாங்கறதுன்னு எவ்வளவு வெட்டிச் செலவு பண்ணறீங்க என்று மிங்கு ஒரு நிமிடம் பெண்டாட்டியாகக் கோபித்துக் கொண்டு விட்டு, அடுத்த கணம் மௌனமாக நடக்கிறாள்.
படுக்கை அறை நாற்காலியில் அமர்ந்து கொண்டு, “வைத்தியா, வந்துட்டியா? ஒரு மணங்கு ஏதோ இலைதழையோட வந்துட்டிருந்தியே. ஜன்னல் வழியாப் பார்த்ததுமே அப்படியே குதிச்சு ஓடிடலாம்னு தோணிச்சு. அத்தனையும் எனக்கா?” பொய்க் கோபமும் பயமுமாகக் கேட்டாள் மிளகு ராணி.
“ஐயோ அம்மா, இத்தனையும் ஒரே நாள்லே சாப்பிட வேணாம்” என்றபடி வைத்தியர், நாடி பிடித்துப் பார்க்க அனுமதி கேட்கிறார். பிடிச்சுப் பாரு. அடுத்த மூலிகை கொடுத்து பரீட்சிக்கணுமே நீ” என்றாள் அடுத்த சிரிப்போடு.
சீராக வரும் நாடி அவருக்கு திருப்தியைக் கொடுக்கிறது.
”இதை லேகியம் கிளறி எடுத்துப் போகிறதுக்கு ஏதாவது கூடுதலாக நடைமுறை உண்டா?”
“ஆமாம்மா, கடல்லே பயணம்னா, உப்புக் காற்றிலே மூலிகை வீரியம் குறைய வாய்ப்பு இருக்கு. அதை நிவர்த்தி செய்ய, ஒண்ணுக்குள்ளே ஒண்ணா மூணு பகுதியாக பெட்டி. பெட்டிக்குள் சிமிழ் சரியான வெப்பத்திலே கை படாமல் கிளறிக் கைபடாமல் அடைச்சு தேன் மெழுகு உருக்கி வாயை இறுக அடைக்கணும், அப்புறம் கல் உப்பு எடுத்து மரப்பெட்டி உள்ளே வெற்றிடத்திலே தூவி இருக்கணும்”.
படம் கடல் பயணம் 16ஆம் நூற்றாண்டு
நன்றி en.wikipedia.org
July 15, 2021
எழுதி வரும் மிளகு நாவலில் இருந்து – ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேலாக மயில் கழுத்துப் பெண்கள் சாகாவரம் பெற்றுக் கவிதைகளில் ஜீவிக்க
நேமிநாதன் தேர்ந்தெடுத்த கொங்கணி கவிதைகளை போர்த்துகீஸ் மொழியில் மொழியாக்கம் செய்ய பிரதானி நஞ்சுண்டையா உதவுகிறார். வாரம் இரு முறை ஜெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவர் வந்து தங்கியிருந்து மொழிபெயர்ப்பு முன்னால் நகர்வதைப் பார்வையிட்டுப் போகிறான் நேமிநாதன்.
ஆக, முதலில் கவிதைகளை கொங்கணியில் தேட வேண்டியுள்ளது. அல்லது எழுத வேண்டியிருக்கிறது.
நாலைந்து எழுதிவிட்டு மறுபடி மறுபடி குயில், தும்பைப் பூ, மாரிடம் பெருத்த ஊர்வசிகள், ரம்பைகள் என்று எழுதி அலுத்து விடவே, இதையே இன்னும் புதுப் பார்வையாக அங்கே இங்கே மாற்றி எழுத கவிஞர்கள் கோரப்பட்டார்கள்.
ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேலாக மயில் கழுத்துப் பெண்கள் சாகாவரம் பெற்றுக் கவிதைகளில் ஜீவிக்க, கவிஞர்களின் கற்பனை வற்றாததும், போஷகர்கள் கிடைப்பதும் நிகழ்ந்தன. போஷகரின் பெயரில் பல கவிதைகள் பிறப்பெய்தின.
எப்படியோ நஞ்சுண்டையாவுக்கும் நேமிநாதனுக்கும் ஒவ்வொரு மாதமும் ஐநூறு கவிதை யார்யாரோ எழுதியது சேர்ந்து விடுகிறது. ஒரு வராகனும் ஒண்ணரை வராகனுமாக அவை ஒவ்வொன்றுக்கும் சன்மானம் கொடுக்கப் படுகிறது – ”நல்லாயில்லேன்னா நல்லாயில்லே தான். எழுதி பழகிட்டு வாங்க. நல்லா இருந்தா பரிசு உண்டு”-
கறாரான விமர்சகர்களாக அவறறை மதிப்பீடு செய்து கவிதைகளை வடிகட்டுவதும் கூடவே நடக்கிறது.
ரோகிணியோடு கலந்திருந்த ராத்திரிகளில் ’அன்பே நீ’ என்று இரண்டு வரி மடக்கி எழுதினால் கூட படிக்க சுவையாக இருக்கிறது நேமிநாதனுக்கு. அந்தக் கவிதைகளை போர்ச்சுகீஸில் மொழிபெயர்த்து அனுப்பி அப்பாவி போர்ச்சுகீசியர்கள் மேல் சிருங்கார ஆக்கிரமிப்பு நடத்த அவனுக்குப் பிடித்திருக்கிறது.
வார இறுதியில் முன் பாரம் பின் பாரமாக ரோகிணி வித்தை எல்லாம் கற்றுத்தர, கவிதை, மிட்டாய்க்கடை இனிப்பு, நஞ்சுண்டையா வீட்டு மிளகுப் பொங்கல், ரோகிணி என்று மனம் சுவாரசியமான கலவையாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது.
July 14, 2021
வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து: ஹொன்னாவர் நகர் ரதவீதியில் ஒரு மாலை நேரம்
ஹொன்னாவர் நகரத்தின் பிரதானமான ரதவீதியில் கொடிக்கம்ப மேடைக்கு அடுத்து உயர்ந்து நிற்பது போர்த்துகீசு அரசப் பிரதிநிதி திருவாளார் இம்மானுவல் பெத்ரோவின் மாளிகை.
அதற்குக் கிழக்கே இரண்டு சிறு தோட்டங்கள் கடந்து வீரப்பா ஷெட்டியாரின் மூன்றடுக்கு மாளிகை. அவர் மொத்தமாகக் கொள்முதல் செய்து அரிசி இதர தானியங்கள் விற்பனை செய்கிறவர்.
மேற்கிலோ சமண சத்சங்கம் என்ற சகலரும் வந்திருந்து இறைவன் புகழும் தீர்த்தங்கரர்களின் உன்னதமும் பாடிப் பரவி நற்கதி தேடும் புனிதமான கூடம். வீரப்பா ஷெட்டியாரின் மாளிகைக்கும் கிழக்கே புதிதாகத் தொடங்கியுள்ள மிட்டாய் அங்காடி. ரோகிணி ஜெர்ஸோப்பாவில் நடத்தும் பிரபலமான மிட்டாய் அங்காடி ஹொன்னாவரில் கிளை பரப்பிய இடம் என்று தினசரி வாங்கிப் போகிறவர்கள் சொல்கிறார்கள்.
இனிப்பு வகைகள் ஜெர்ஸோப்பாவில் இருந்து தினம் நீளமான வேகன் வண்டிகளில் கொண்டு வரப்பட்டு சிறப்பு அடுப்புகளில் சற்று சூடாக்கப்பட்டு புத்தம்புதிதாக விற்கப்படுவதை அங்கே வாங்கிப் போகிறவர்கள் மிகவும் விரும்புகிறார்கள்.
மிட்டாய் அங்காடிக்கு இன்னும் கிழக்கே அடுத்த கட்டிடம் அரசப் பிரதானி நஞ்சுண்டய்யாவின் இரண்டு அடுக்கு மாளிகை. எப்போதும் யாராவது சிவபெருமானின் பெருமைகளை கைத்தாளம் வாசித்துப் பாடிக் கொண்டே இருக்கும் அந்த இல்லத்தில் அதிகாலை, பகல், மாலை நேரங்களில் யாசகர்களுக்கு அவர்கள் குரல் விட்டு யாசிக்காமலேயே சோறும் குழம்பும் கறி அல்லது அப்பளமும் தானம் செய்யப்படுவதால் அந்த வீட்டுக்கு வெளியிலும் மாலை மறையும் வரை கூட்டம் நிறைந்திருப்பதைக் காணலாம். அப்புறம் உண்ணக்கூடாது. உணவைத் தானம் செய்யவும் கூடாது.
மேற்கில் சமணப் பள்ளிக்கு அடுத்து பழைய சிதிலமான சமணவசதிக் கட்டிடங்கள் இரண்டு நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அதற்கும் மேற்கில் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பும், நடுவில் பெரிய துரவுக் கிணறும், தொடர்ந்து வேப்ப மரங்களும், மலை வேம்பு, அசோகம், வாதுமை, ஒதியன் ஆகியவை செழித்து வளர்ந்த தோட்டமும் தெருக்கோடி வரை நீளுகின்றன.
மாலை நேரத்தில் ரதவீதி முழுக்க தண்ணீரை வெட்டிவேர் ஊற வைத்துச் சேர்த்து தூசி அடங்க பணியாளர்கள் விசிறி அடித்துப் போய்க் கொண்டிருந்த போது நேமிநாதனின் இரட்டைக் குதிரை வண்டி ரதவீதியில் நுழைந்தது.
சிதிலமான சமணக் கட்டிடத்தின் முன் நின்ற சாரட்டிலிருந்து யாரும் இறங்கவில்லை. அடுத்த கட்டிடமான சமண சத்சங்கம் வாசலில் நின்ற நாலைந்து பேர் இளவரசர்,இளவரசர் என்று பரபரப்பாகச் சத்தம்போட்டபடி தெருவில் போகிறவர்களின் கவனத்தை ஈர்க்க முனைந்தது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
அந்த வீதியில் அழகான பெண்கள் நடந்து போனால் மட்டுமே தலைகள் உயரும். பேரழகியர் பல்லக்கில் போனால் ஒரு நிமிடம் செயல் மறந்து மெய் மறந்து எல்லோரும் பார்ப்பார்கள். அதி சிறப்பான தெய்வீக ஆரணங்குகள் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சூரிய பகவான் போல் கிழக்கிலிருந்து மேற்கே போனால் சாரட்டுக்குப் பின்னே சகல வயதினரும் உன்மத்தம் கொண்டு ஊர்ந்திருக்கலாம்.
ஹொன்னாவர் தெரு – படம் நன்றி en.wikipedia.org
July 13, 2021
ஜெரஸோப்பாவில் ஒரு சிவராத்திரி 1592
எழுதப்பட்டு வரும் ’மிளகு’ நாவலில் இருந்து
———————————————–
வண்டிக்காரன் சத்திரம் நிரம்பி வழிகிறது. வெளியூர் வண்டிக்காரர்களும் வந்து தங்கிப் போகிற நாள் இது.
ஜெரஸோப்பா மஹாபலேஷ்வர் சிவன் கோவிலில் சிவராத்திரி கொண்டாட்டம். கோவிலுக்கு பூஜாதிரவியங்களோடு, ராத்திரி ஆனாலும் குளித்து மடி வஸ்திரம் அணிந்து உற்சாகமாக போகிறவர்களின் பெருங்கூட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துத்தான் கொண்டிருக்கிறது.
ஹரஹர மகாதேவ என்று எங்கும் குரல்கள் பக்தி பூர்வம் ஓங்கி எதிரொலிக்கின்றன.
வரிசையான சிறு ஜன்னல்களாக வடிவமைத்த கோவில் சுவர்களில் தீபங்கள் திரியிட்டுப் பிரகாசமாக ஒளி விடுகின்றன. காலணிகளைக் கோவில் வாசலில் விட்டு நடப்பவர்கள் ஒரு வினாடி ஏக்கப் பார்வையில் அந்தக் காலணிகளைப் பிரிகின்றார்கள். அப்போது, ’திரும்ப வந்து எடுத்துக் கொள்கிறேன்’ என்று தேங்காயும், வாழைப் பழமும், வெற்றிலை, பாக்கும் பிரம்புத்தட்டில் வைத்து விற்கும் கடைக்காரர்களிடம் போகிற போக்கில் சம்பிரதாயத்துக்காகச் சொல்லிப் போகிறார்கள்.
யாரும் திருட மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை. அதுவும் சிவராத்திரி காலத்தில்.
கோவில் வாசலில் தீவட்டிகள் தூண்களில் உயர்த்தி வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருப்பதால் பொன் அந்தி மாலை போல் நடு இரவு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.
கூட்டமாக ரகசியம் பேசுவது போல் எல்லா தீவட்டிகளும், திரி நனைய உஸ்ஸ்ஸ் என்று சத்தமிட்டு எரிகின்றன. கொளுத்தி வைத்து வார்த்த இலுப்பை எண்ணெயின் வாடை, கோவில் வாடையாக மறு உருவெடுத்துக் காற்றில் தங்கி நிற்கிறது.
அதையும் கடந்து, கஞ்சா இலைகளிலிருந்து வடித்த மெல்லிய போதையூட்டும் பாங்க் மதுவின் வாடை எங்கும் பரவியிருக்கிறது. பரபரப்பாக பாங்க் விற்கும் மதுசாலையில் வழக்கமான குடிகாரர்களை விட நின்றபடிக்கே சிவராத்திரிக்காகக் குடிக்கிற கிருஹஸ்தர்களும், பிடவைத் தலைப்பு கொண்டு சிரம் மறைத்த குல மாதர்களும் அதிகம் தட்டுப்படுகிறார்கள்.
கையில் கொண்டு வந்த கூஜாக்களில் பாங்க் வாங்கிய குடும்பத்தினர் கோவில் வாசலில் அதை மஹாபலேஷ்வருக்குப் படைத்து உடனே சிறு குவளைகளில் ஊற்றி அருந்துகின்றனர்.
சிறு குழந்தைகளுக்கும் ஒரு மிடறு பாங்க் புகட்டப்படுகிறது.
“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.
கோவில் வாசலுக்கு அருகே பஞ்ச வண்ணமும் அடர்த்தியாகப் பூசிய பெரிய சக்கரம் விசைகளால் செங்குத்தாக நிறுத்தப்பட்டுச் சுழல்கிறது. குழந்தைகளும் பெரியவர்களும் ராட்டினத்தில் உட்கார்ந்து சுற்றிவர, இரண்டு மல்லர்கள், சுழலும் இருக்கைகளை வேகம் கொள்ள கையால் பிடித்து தள்ளி விடுகிறார்கள்.
ராட்டினம் சட்டென்று கரகரவென்று ஒலி எழுப்பி நிற்க இரண்டு பெரியவர்கள் ஆசனங்களில் இருந்து எக்கி விழப் போகிறார்கள். மல்லர்கள் லாகவமாக அவர்களைத் தாங்கி தரையில் நிறுத்துகிறார்கள்
“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.
படம் நன்றி en.wikipedia.org
July 12, 2021
வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’ : மீன் உண்ட போது
நான் விருப்பப்பட்டால் மீன் மற்றும் கடல் பிராணிகளை உண்ணலாம். ஆனால் எனக்கு அந்த மாதிரி உணவு ஏற்றுக்கொள்ளாததால் ஏதோ ஒரு தினம், ஒரு சிறு வட்டிலில் எடுத்தது என்று ருசி பார்க்கிறேன்.
விஜயநகரப் பேரரசர் விருந்துக்குக் கூப்பிடும்போது அசைவமும் சைவமும் என்ன எல்லாம் அந்தப் பருவத்தில் கிடைக்கிறதோ அது எல்லாம் சமைக்கப்பட்டு விருந்து மண்டபத்துக்கு வந்து சேர்ந்து விடும்.
அங்கே விருந்து ஒரு நீண்ட சம்பிரதாயம் சார்ந்த நிகழ்ச்சி. சாப்பிடுவது நம் வயிற்றுக்காக இல்லை. வேண்டப்பட்டவர்களோடு கூடி இருந்து பேசிச் சிரித்து அவசரம் காட்டாமல் மெல்ல மென்று உண்ணும் சம்பிரதாயம்.
எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறோமோ அவ்வளவு விரைவில் பேரரசர் கவனிப்பிலிருந்து விலகி விடக் கூடும். போன விருந்தின் போது, அது நாலு நாள் முன், பௌர்ணமி ராத்திரி விருந்தில், நான் பயணம் போக விருப்பப் பட்டதாக வெங்கட தேவராயரிடம், என்றால் விஜயநகர் அரசரிடம் அறிவிக்கும் முன் சாதம், இறைச்சி, காய்கறி என்று மூன்று பேர் சாப்பிடும் அளவு உண்டபடி அவர் நோக்கக் காத்திருந்தேன்.
காசி ராமேசுவரம் போக சென்னாதேவிக்கு எண்பது வயதாகட்டும். லிஸ்பன் போவதாக இருந்தால் சென்று வரட்டும். நம் அரசு வட்டத்தில் வெளிநாடு யாரும் போனதில்லை. நான் கூடப் போனது இல்லை. சென்னா போர்த்துகீஸ் மொழி கற்றுக் கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்றாரே பார்க்கணும்.
இப்படி அவர் சொன்னபோது பகடி செய்கிறாரா, கண்டிப்பை உள்ளே வைத்த நகைச்சுவையாகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை.

படம் நன்றி commons.wikimedia.org
July 10, 2021
சுழலும் நான்முகக் கட்டிடம் – எழுதி வரும் ‘மிளகு’ நாவலிலிருந்து
சொல்வனம் இணைய இலக்கிய இதழில் தொடராகப் பிரசுரமாகிறது என் புது நாவல் ‘மிளகு’. புதினத்தின் சிறு பகுதி இது –
————————————-
சதுர்முக வஸதி. சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கு அல்லது கன்னட மொழியிலும் அந்தக் கட்டிடத்தின் மேல் நான்கு திசையும் பொறித்திருந்ததைக் கண்டார் பரமேஸ்வரன்.
சதுர்முகம் என்றால் நான்கு முகம் கொண்டது. பிரம்மா போலவா? இல்லை, நான்கு கதவுகளும் வழிகளும் இருப்பதால் சதுர்முகம் போல. வஸதி என்றால்?
வசதியான வசிப்பிடம் என்பது போலவா? மனம் மறுத்தது. புத்தியும் சேர்ந்து மறுத்தது. வஸதி என்றால் கோவிலாக இருக்கக் கூடும். ஹிந்து கோவில் இல்லை. சமணக் கோவில்.
கண்ணில் முன்னால் பட்ட வாசல் பக்கம் போய் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக நின்றார் பரமன். அப்போதுதான் கவனித்தார். அந்தக் கட்டடமே ஏதோ அச்சில் சுழல்கிறது போல மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது.
இந்தக் காட்டில் கட்டிடம் கட்டிப் புழங்க விடுகிறவர்களுக்குக்கூட நவீனமும் புராதனமும் கலந்த கட்டிடக் கலையிலும், நடு அச்சில் சுழலும் மண்டபங்களிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாகத் தோன்றியது.
கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, தாங்கு கட்டைகளைக் கையிடுக்கில் உறுதியாக ஊன்றி நின்று கதவு அடுத்துத் தான் இருக்கும் இடத்தைக் கடக்கக் காத்திருந்தார் பரமன்.
வாழ்க்கையே இப்படி விளையாட்டும் விநோதமுமாக ஆகியிருந்தால் எல்லாவற்றையும் மறந்து விட்டு சுழலும் கட்டிடத்தோடு ஓடிக் கொண்டிருக்க ஆசை. தாங்கு கட்டைகள்?
அடுத்த கதவு பக்கத்தில் வர, திறந்து உள்ளே நடக்க, ஒரு வினாடியில் தலை குப்புற விழுந்தார் பரமன். எழுந்த போது கட்டைகளைக் காணோம். மண்டபத்தையும் காணோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை அப்பியிருந்த நிலம் கண்ணைக் கொள்ளை கொண்டது.
பரமன் கவனித்தார். தாங்குகட்டைகள் இல்லாமல் அவர் கால்கள் சுபாவமாக இருப்பதுபோல் முழுமையாக இருந்தன. தோளில் மாட்டிய பை அப்படியே தான் இருந்தது. எங்கே வந்திருக்கிறார் அவர்? தில்லி பம்பாய் விமானம் எங்கே போனது?
ஹோ என்று சத்தமிட்டார் பரமன். யாரும் ஏற்று வாங்கிப் பதில் சொல்லவில்லை. தலைக்கு மேல் சத்தம். தலை தூக்கிப் பார்த்தார். பெரிய கழுகு ஒன்று தோளில் அவர் மாட்டியிருக்கும் பையைக் குறிபார்த்துச் சுற்றிச் சுற்றி வந்து நேரே இறங்குகிறதுபோல் பாவனை செய்தது.
அந்தப் பையில் அதற்கான பொருள் என்று என்ன இருக்கிறது? கருப்பு கலரில் ஒரு பேண்ட், இரண்டு அரைக்கை சட்டைகள், கடலை உருண்டை பாக்கெட் ஒன்று, பர்ஸில் நூற்று இருபத்தைந்து ரூபாய் பணம், விக்ஸ் இன்ஹேலர், ஃப்ளைட்டில் கொடுத்த நான்கு ஸ்லைஸ் ரொட்டி, ஜாம் சின்ன ஜாடியில் அவ்வளவுதான் நினைவு வருகிறது.
கடலை உருண்டையோ ரொட்டியோ கழுகு சாப்பிடுகிற உணவு இல்லை. பேண்ட் சட்டை அதற்கெதுக்கு? வாச்சி வாச்சியாகப் பல் இருக்கற பெரிய சைஸ் சீப்பு ஒன்று மாடுங்காவில் ஸ்டேஷன் பக்கத்தில் வாங்கியது கூட உள்ளே வைத்திருக்கும் நினைவு.
0 comments
July 9, 2021
கொய்யாப்பழம் என்ற போர்த்துகீஸ் காணிக்கையோடு: நாவல் மிளகு
நாவல் மிளகு சொல்வனம் இணைய இலக்கிய இதழில் தொடராகப் பதிப்புக் காண்கிறது. நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு துண்டு –
————————————————————————-
”பேகம் சாய்பா, அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். மிளகு ராணி அவர்களே, தாங்கள் எங்களுடைய பெருமதிப்புக்குரிய விருந்தினர். செலவு கணக்கு தங்களுக்கானது அல்ல. அதைத் திட்டமிடுவோம் உண்மைதான். ஆனால் எந்தச் செலவும் குறையேதும் வராதபடி திட்டமிடப்படும். அதற்குத்தான் அழைப்பு முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது, யுவர் மெஜஸ்டி”.
”அதென்ன மிளகு ராணி, யுவர் மெஜஸ்டி, பேகம் சாய்பா ஒரேயடியாக சிரசைக் குளிர வைக்கிறீர்களே? திரும்ப ஜலதோஷம் பிடித்தால் எங்கள் வைத்தியனைத்தான் கூப்பிட வேண்டும். கசப்பு கஷாயம் திப்பிலி, சுக்கு, பனஞ்சீனி என்று தட்டிப்போட்டு காய்ச்சிக் கொடுப்பதை பிடிக்கவில்லை என்று தள்ளவும் முடியாது, பிடிக்கிறதென்று ஒரு குவளைக்கு மேல் அந்தக் கருப்பு திரவத்தைப் பருகவும் முடியாது. வைத்தியன் பயணக் கோஷ்டியில் இருக்கலாமா? அத்தியாவசியமான ஒருவர்”
சென்னபைரதேவி மகாராணி கேட்டபடி பெத்ரோவைப் பார்த்தாள். அவர் ஒரு வினாடி யோசித்தார்.
“அத்தியாவசியமாக யாரெல்லாம் வரக்கூடும் என்பதை ஊகித்துப் பார்க்கலாமே. நான் குத்துமதிப்பாகப் பார்த்தால் இளையவர் நேமிநாதன், அவர் மனைவியவர்கள், வைத்தியர்”.
பெத்ரோ அடுக்கிக் கொண்டு போக போதும் என்று கைகாட்டினாள் சென்னா.
”இந்தப் பட்டியலை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இல்லை”.
ஒருவினாடி சாந்தமான அந்த முகத்தில் சினம் தெரிய, பெத்ரோ பதறிப் போனார். ஏதோ செய்ய உட்கார்ந்து வேறெதோ வந்து முடிகிற மாதிரி ஆகி விடப் போகிறதே என்ற படபடப்பு அது.
”யார் மகாராணி கூட வந்தாலும் சந்தோஷமே. யாரும் வராவிட்டால்? அதுவும் மகிழ்ச்சிக்குரியதே. முன்கூட்டி அறிந்தால் பயணத்துக்கான திட்டமிடுதல் சிறப்பாக இருக்கக் கூடும். அந்த ஆர்வம் மிகுந்து வர என்னவோ உளறி விட்டேன். மறுபடி மன்னிக்கக் கோருகிறேன். மன்னிக்கக் கோருகிறேன். புத்தி பேதலித்துப் போகிறது. என் பகல் உணவில் மிளகு சேர்க்கவில்லை. அதுதான் காரணம்”
அவர் சொல்ல, சென்னா நகைத்தாள். “நீர் மகா புத்திசாலி” என்று பெத்ரோவிடம் கண்கள் குறுகுறுத்துச் சொல்ல பெத்ரோ முகம் மலர்ந்தது. மிளகு ராணிக்காக எதுவும் செய்வார் அவர் என்ற உறுதி தெரிந்த முகம் அது.
அவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நேரம் போல மண்டியிட்டு வணங்கி எழ, சென்னா மனசு கேட்கவில்லை.
“திரு பெத்ரோ, மன்னிக்கவும், என் சொற்கள் உங்களைக் காயப்படுத்தினால் வருந்துகிறேன். போர்த்துகீசு நாடும் அந்தப் பெரு நாட்டின் அரசருடைய பிரதிநிதியான தாங்களும் எப்போதும் எங்கள் மதிப்புக்குரியவர்கள். பயணத் திட்டத்தை விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன். தயவு செய்து அதை யாருக்கும் வெளியிட வேண்டாம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”.
”நிச்சயமாக மகாராணி”
விடை பெற்று எழுந்திருக்கப் போனாள் சென்னபைரதேவி. பெத்ரோ தன் அருகில் வைத்திருந்த துணிப் பொதியை எடுத்து திறந்து அதன் உள்ளிருந்து எடுத்தது ஒரு பழம். பழ வாசனை மண்டபம் முழுக்க அடித்தது.
”மகாராணி உங்களுக்கு விருப்பமானது என்பது தெரியும். கொய்யாப் பழம். மிக இனிப்பும் வாசனையுமாக என் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது. உங்களிடம் சொல்லி விட்டு அரண்மனை குசினியில் கொடுத்து விட்டுப் போகிறேன். உண்டு பார்த்து எப்படி என்று சொல்லத் திருவுள்ளம் நாடினேன்”.
”அடடா, வைத்தியனை அருகில் நெருங்க விடாமல் விரட்டலாம் என்று பார்த்தால் நடக்காது போலிருக்கிறதே. இந்த அற்புதமான கனிகளை எப்போது உண்டாலும் வைத்தியனிடம் வயிற்று வலிக்காக மருந்து வாங்க வேண்டி வருகிறதே. நீங்களும் ஒன்று மட்டும் இனி கொடுங்கள் போதும்”.
சென்னா போலியான சிடுசிடுப்போடு சொல்ல, ”என்னது மகாராணிக்கு ஒரே ஒரு கனி கொடுத்து அவமானப் படுத்தவா? நிச்சயம் மாட்டேன் அம்மா” என்று தலை வணங்கி நிமிர்ந்து குறும்புச் சிரிப்போடு சொன்னார் பெத்ரோ.
அரசிக்கு முதுகு காட்டாது வெளியே போனார் அவர். அடுத்த மழை ஆரம்பித்திருந்தது.
படம் நன்றி en.wikipedia.org
July 8, 2021
நகரத்துக்கு வந்த பசு
சொல்வனம் இணைய இதழில் தொடர்ந்து பிரசுரமாகிறது ‘மிளகு’. நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி
மெய்க்காவலரை விலக்கித் தாதி மிங்குவை மாத்திரம் கூட இருத்திக்கொண்டு தோட்டம் பார்க்கப் புறப்பட்டாள் சென்னா.
“ஏக் அஸ்லி காய்..”
கொங்கணி மொழியில் ஒரு குழந்தைப் பாடலை உரக்க முணுமுணுத்தபடி சென்னா தோட்டத்துக்குப் போகும்போது தாதி மிங்குவைப் பார்த்து பாடுடீ என்று புன்சிரிப்போடு கட்டளையிட்டாள்.
”மகாராணி ஐயையோ நான் மாட்டேன்” என்று பயந்து நாலு திசையும் அவசரமாகப் பார்த்தாள் மிங்கு. அடுத்த நிமிடம் இரண்டு குழந்தைகள் நகரத்துக்கு வந்த பசுவைச் சேர்ந்து வரவேற்றபடிக் கை கோர்த்துத் தோட்டத்துக்குள் நடந்தன.
”மிங்கு இங்கே இருந்த மல்லிகைப்பூச் செடி எங்கே?” சென்னா கேட்டாள்.
“இங்கே மல்லிகைப் பூச்செடியே கிடையாதே ராணியம்மா?”
“என் பூவை எல்லாம் பறிச்சு செடியையும் மறைச்சு வச்சிருக்கியாடி கழுதை?”
“கழுதைக்கு எதுக்கு மல்லிகைப் பூ அம்மா? மல்லிகைச் செடியே நம்ம தோட்டத்திலே கிடையாதே”.
சட்டென்று சென்னாவுக்கு நினைவு வந்தது.
ஜெர்ஸோப்பா மாளிகைத் தோட்டத்தில் தான் மல்லிகைச் செடிகள் ஒரு வரிசை நிறையப் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. வயது ஏற ஏற காலம், இடம், ஆளுமை என்று எல்லாம் குழம்பித் தெரியத் தொடங்கி விட்டது.
”அம்மா, ஜெருஸோப்பா அரண்மனைத் தோட்டத்தில் பூத்த மல்லிகையைப் பார்த்த நினைவை இங்கே பதியன் போட்டுட்டீங்களா?’
தாதி கலகலவென்று சிரிக்க, ”என்ன சிரிப்பு, எங்கே இருந்தால் என்ன? உனக்குத் தெரிந்திருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். தேறி விட்டாய் பிழைத்துப் போ” என்று புன்சிரிப்போடு சொன்னாள் சென்னா.
”சொல்லியிருக்காவிட்டால் பிழைத்துப் போக விட்டிருக்க மாட்டீங்களா மகாராணி? யானைக் காலில் மிதிக்கச் சொல்லுவீங்களா?”
”இந்த ஆனைக்கால் விஷயம் எப்படி தெரிந்தது உனக்கு? வைத்தியன் சொல்வதாச்சே இது? உனக்கும் அவனுக்கும் என்ன பழக்கம்?”
சரியாப் போச்சு அவர் என் வீட்டுக்காரர் தானே. எங்கிட்டே சொல்லாத பொது விஷயம் எதுவும் இல்லையே?
என்ன வைத்தியனும் நீயும் கல்யாணம் கழிச்சாச்சா? எப்போடீ?
அம்மா போன மேட மாதம் ஹொன்னாவர்லே ஆச்சே. நீங்க வந்து சிறப்பித்திருந்தீர்களே?
சட்டென்று பேச்சை நிறுத்தினாள் தாதி. சென்னா அவளை நையாண்டி செய்கிறாள் என்று புரிந்ததும் அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.
போங்கம்மா என்னைக் களியாக்கி கிறுக்கச்சியாக்கணும் உங்களுக்கு இன்னிக்கு நான் தான் விளையாட்டு பொம்மை.
உன் மூஞ்சிலே ஏமாத்து ஏமாத்துன்னு எழுதி ஒட்டியிருக்கே. அதான் காலைப் பிடித்திழுத்தேன்.
சிவசிவ என் காலை நீங்க பிடிக்கறதாவது. மாப்பு மாப்பு. தன் வலது உள்ளங்கையில் துப்பித் தலையில் பூசுகிற பாவனை செய்து குழந்தைப் பெண்ணாக மறுபடி அவதாரம் எடுத்தாள் தாதி.
மீங்கு மீங்கு நீ ரொம்ப வெகுளிப் பொண்ணுடி.
சாமந்திப் பூக்களைத் தொடாமல் செடியோடு வைத்துப் பார்த்தபடி நின்றாள் சென்னபைரதேவி ராணி. இதை ஒரு சித்திரமாக எழுதணும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் மிளகு ராணி.
ஆக நான் உன் கல்யாணத்துக்கு வந்திருந்தேன். அப்படித்தானா?
வந்து மட்டும் போனீர்களா? உங்களைப் போக விட்டிருப்போமா? என்ன அருமையான வாழ்த்து, அருமையிலும் அருமையான பரிசுப் பொருட்கள். உங்களை மகாராணியாகக் கொண்டிருக்க நாங்கள் என்ன தவம் செய்தோமோ.
சிரிப்பு மெய்மறந்த கேவலாக மாற, தாதி மிங்கு அரசியாரின் வலத் கரத்தைக் கண்ணில் ஒற்றி வணங்கிச் சொன்னாள். ஆமாம், அந்தக் கல்யாணம் நினைவு வருகிறது.
என் புதிய சிறுகதைத் தொகுதி : மயில் மார்க் குடைகள்
என் அடுத்த சிறுகதைத் தொகுதி ‘மயில் மார்க் குடைகள்’ வெளிவந்துள்ளது.
என் 17-வது சிறுகதைத் தொகுதியாகும் இது.
நண்பர்கள் வாங்கி, வாசித்துச் சிறப்பிக்கக் கோருகிறேன்.
நூல் வாங்க, கீழே தரப்பட்ட சுட்டியைச் சொடுக்கவும்
பதிப்பாளர் Zero Degree Publishing
July 7, 2021
நாவல் மிளகு – ஒரு கோப்பை பால் பாயசம்
சொல்வனம் இணைய இதழில் தொடர்நாவலாகிறது – மிளகு
(இங்கே ஒரு மிகச்சிறு பகுதி)
மதியம் ஹோட்டல் காலிஃப்ளவர் பொரியலும் கிருஷ்ணன் கோவில் பிரசாதமாக வந்த உன்னியப்பமுமாக ஆகாரம் கழித்தபோது அனந்தனும் பரமன் தாத்தாவும் 1960களில் இடதுசாரிகள் பிளவுண்டது பற்றி யார் குற்றம் என்று பேசியது மோதக்குக்கு ரசிக்கவில்லை.
பரமன் அனந்தனை மாறிய இடதுசாரிகளின் ஒற்றைப் பிரதிநிதியாக ஆவாஹனம் செய்து, அவர்கள் செல்லும் வழி சரிதானா என்று பரிசீலித்தார்களா எனக் கேட்டார்.
எங்கே போறிங்க? எங்கே போறீங்க?
நாடகீயமாகக் கேட்டார் அவர். கூடவே பழைய இந்தி சினிமா பாட்டை நல்ல குரலில் பாடினார் –
ஜாயே தும் ஜாயே கஹாங்? எங்கே போறீங்க?
மோதக் முகம் மலர்ந்தது. அவர் டாக்ஸி ட்ரைவர் இந்தித் திரைப்படத்தில் ஜாயே தும் ஜாயே கஹாங் என்ற தலத் முகம்மது பாடிய அந்தப் பாடலை சிலாகித்து அது போல் அபூர்வமான கீதங்கள் இப்போது இல்லை என்று விசனம் தெரிவித்தார்.
அடுத்த நிமிடம் ஸ்ரீபாத அமிர்த டாங்கேயும் பி ராமமூர்த்தியும் ஜோதிபாசுவும் வெளியம் பார்க்கவனும் உடைந்த கட்சியோடு அந்தரத்தில் நிற்க what a vibrating silky voice என்று தலத் மொஹம்மத்தின் சற்று அதிர்வுறும் குரலில் பாட ஆரம்பித்தார் பரமன்.
பகல் சாப்பாடு மூன்றரை மணி வரை நீண்டு போனதை யாரும் லட்சியம் செய்யவில்லை.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

