இரா. முருகன்'s Blog, page 79
June 3, 2021
பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை)
பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை)
————————–
கறுப்பு நிறப் படைவீரன் ஒருத்தனை
சதுரங்கப் பலகையின் குறுக்கே
அழைத்துப் போய்
வெள்ளை முதல் வரிசையில்
கொண்டு நிறுத்தினேன்.
”நீ யாராக ஆக ஆசைப்படுகிறாய்
சொல் உன்னை மாற்றுவேன்”-
வரம் வழங்கும் கடவுளாக
கருணையோடு அவனைப் பார்த்தேன்.
என்னை யானை ஆக்கினால்
நேரே நடப்பேன் பக்கவாட்டில்
கோணல் இல்லாது ஊர்வேன்
வேண்டாம் அந்த சொகுசு அசைவு
நடக்கவே மறந்து போகும்.
என்னைக் குதிரையாக்கினால்
புத்திசாலியாக அவ்வப்போது L போல
குறுக்கும் நெடுக்கும் சட்டென்று
நகரத் தீர்மானிக்கணும்
அடிப்படை அறிவு போதாது அதற்கு.
என்னை மதகுரு ஆக்கினால்
குறுக்கே மட்டும் போய்வந்து
தூண்ட வேண்டியது
போரா அமைதியா தெரியலை.
”உன்னை மகாராணி ஆக்குவேன்” –
எல்லாம் வல்ல ஈசனாக மொழிந்தேன்
”எங்கும் எப்போதும் சஞ்சரிக்க
உனக்கே எல்லா சக்தியும் தருவேன்”
“கருப்பழகி மகாராணி ஏற்கனவே உண்டே”
வீரன் கேட்டான் “இருக்கட்டுமே
இன்னொரு ராணியாய் நீயும் இரு”.
நான் மொழிந்தபோது கருப்பு ராஜா
நரைத்த மீசை தடவிச் சிரித்தார்
வெள்ளை ராஜாவும்
பூடகமாகப் புன்னகைத்தார்.
”ராணியாக மாட்டேன் பால்மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொண்டு
சோம்பேறி அரசனுக்கு சுகம் தர
வைப்பாடியாகணுமோ முடியாது
நான் நானாகவே,
வீரனாகவே இருக்கிறேன்” என்றான்
அது முடியாது மாறித்தான் ஆகணுமென்றேன்
”நான் இன்னொரு கறுப்புப் படைவீரனாவேன்”
விடாது கெஞ்சினான் முடியாது என்றேன்.
கோபத்தோடு சதுரங்கப் பலகையிலிருந்து
இறங்கிப் போன கறுப்புப் படைவீரனை
கண்டவர் சொல்லுங்கள் காத்திருக்கிறேன்
அவன் வராமல் சதுரங்கம் இல்லை.
இரா.முருகன் ஜூன் 4, 2021
(சதுரங்கத்தில் ஒரு கறுப்புப் படைவீரன் வெள்ளை முதல் வரிசைக்குப் போய்ச் சேர்ந்தாலோ, வெள்ளை வீரன் கறுப்பு முதல் வரிசையை அடைந்தாலோ அந்த வீரன் இன்னொரு பாத்திரமாகலாம்
pawn promotion)
June 1, 2021
புதிது – எழுதி வரும் நாவல் ‘மிளகு’ வில் இருந்து – கவுண்டின்ஹோ பிரபுவும் காஸெண்ட்ராவும்
மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – Draft awaiting editing
ஹொன்னாவர் நகரில் ஷராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து பெத்ரோ புண்ணியவாளனின் தேவாலயம் போகும் சாலை. புராதன மாளிகைகள் வரிசையாக நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் ஒன்று அது. போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி மேனுவல் அகஸ்டினோ பெத்ரோ வீட்டு வாசலுக்கு வந்து காத்திருந்த வெள்ளை நிற குதிரை பூட்டிய சாரட் வண்டியையும் சேணத்தைப் பற்றியபடி நிற்கும் கடைக்கீழ் உத்தியோகஸ்தனையும் மாறி மாறிப் பார்த்தார்.
பெஹன்.. நாடு விட்டு நாடு வந்ததும் போர்த்துகீஸ் அரசு சார்பில் கற்றுத் தரப்படும் கெட்ட வார்த்தைகள் நினைவில் இருக்க, அவற்றில் நாலைந்தை வேலைக்காரன் மேல் பிரயோகித்தார். இவற்றை வேலைக்காரர்கள், துப்புரவுக்காரர்கள், பிச்சைக்காரர்கள் தவிர யார்மேலும் பிரயோகிக்கக் கூடாது என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கீழான பணி செய்கிறவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு நடுநடுங்கி துரைக்கு தெண்டனிட்டு வணங்கி அடுத்த உத்தரவுக்காக நாயாகக் காத்திருப்பார்கள் என்றும் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
ஆனால் இங்கே உடனே குழிக்குள் போகவேண்டிய இந்தத் திருடர்கள் பெத்ரோ துரை திட்டத்திட்ட வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். அவர் வரிசையாக வார்த்தை உதிர்க்க, தரையில் விழுந்து புரண்டு சிரிப்பை அடக்க முடியாமல் அடுத்த வார்த்தையை கொஞ்சம்போல் சொல்லி பெத்ரோ முழுப்பிக்கக் காத்திருக்கிறார்கள்.
இவர்களைத் திட்டுவதும் ஒன்றுதான். எருமை மாட்டின் மேல் மழை பெய்வதும் அதேபடிதான். லவலேசமாவது உறைத்தால் தானே.
நேற்று ராத்திரி உறங்கப் போகும்போது பெத்ரோ துரை இந்தப் பயல்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்.
“காலையில் மிர்ஜான் போக இருக்கேன். சாரட் வண்டி வேணாம். கருப்புக் குதிரையை சவாரிக்காக சித்தம் செய்து உடம்பு துடைத்து சேணம் புதிதாகப் பூட்டி வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்த வேண்டிய நேரம் காலை விடிந்து ஐந்து நாழிகை. என் கடியாரத்தில் காலை ஏழு மணி. புரிந்ததா?
அவர் நிதானமாகப் பேசி நிறுத்தி விசாரிக்க, இ ந்தக் களவாணிகள் புரிந்தது புரிந்தது என்று நூறு முறை சொல்லி வாயையும் பிருஷ்டத்தையும் அடைத்தபடி போனார்கள். இப்போது பார்த்தால் வெள்ளைக் குதிரை சாரட் வந்து நிற்கிறது. என்ன திட்டினாலும் சொல்கிற படி நடப்பதில்லை யாரும்.
”கருப்புக் குதிரைக்கு என்ன ஆச்சுடா ஆயுசுக்கும் குளிக்காத வேசி மகனே?” பெத்ரோ கண்ணால் எரிப்பது போல் பார்த்துக்கொண்டே விசாரிக்க அவன் இதை எதிர்பார்த்து இருந்தது போல் கூட்டமாகக் கைகாட்ட ஓ என்று சிரித்து வழிந்தார்கள். பெத்ரோ துரைக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
களவாணிகள் சிரித்தே காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.
”கருப்புக் குதிரை படுத்து உறங்கிக் கொண்டிருக்கு எஜமானே” இன்னொருத்தன் நாலாக மடிந்து நின்று இளித்தபடி சொன்னான்.
“குதிரை எப்படிப் படுத்து உறங்கும்? அது நின்று கொண்டே நித்திரை போகும் உயிரினமாச்சே?” நியாயமான சந்தேகத்தைக் கிளப்பினார் பெத்ரோ.
“அது வெள்ளைக் குதிரையோடு படுத்தது. அப்படியே உறங்கி விட்டது போல” இதற்கு சிரிப்பு அதிகமாகக் கிடைத்ததை பெத்ரோ கவனிக்க மறக்கவில்லை.
”ஆனால் குதிரை நின்று கொண்டே..”
அவர் வார்த்தையை முடிக்க விடாமல் அவர்கள் பூர்த்தி செய்தார்கள்.
ஆனால் வெள்ளை, கறுப்பு ரெண்டு குதிரையும் ஆணாச்சே.
அந்தக் கழுவேறிகள் இதைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். ஒற்றை வார்த்தையை கூட்டமாகச் சொல்லி தாவித்தாவிக் குதித்தார்கள். ஒருத்தன் மற்றொருத்தனைக் கட்டிக்கொண்டு கண்ணில் நீர் வழியச் சிரித்தார்கள். பாதி புணர்ச்சியில் வாசல் கதவு தட்டப்பட பெண்டாட்டி விலக்கிய நாயகன் போல் அடக்க முடியாமல் தரையில் மல்லாக்க விழுந்து புரண்டார்கள். இவர்களை குதிரைகளைக் கொண்டுதான் அடக்க முடியும்.
பெத்ரோ சாரட்டில் ஏறினார். சவுக்கு சகிதம் ஓட்டுகிறவன் தலை வணங்கிப் போகலாமா என்று மரியாதையோடு விசாரித்தான்.
“போய்த் தொலை” என்று நகைத்தபடி பெத்ரோ தலையாட்ட வண்டி நகர்ந்தது.
”போம் தியா சின்ஹோர்”
தெருக்கோடியில் பெண்குரல். காலை வணக்கம் சொல்வது யார்?
ஜன்னல் வழியே எக்கிப் பார்த்தார் பெத்ரோ.
கஸாண்ட்ரா நின்று கொண்டிருந்தாள். பெத்ரோவின் வீடு நிர்வகிக்கிறவள் அவள். ஐம்பது சதவிகிதம் போர்த்துகல்லும் மீதி தட்சிண, உத்தர கன்னடப் பிரதேசமும் கலந்து உருவாக்கிய அழகி. நாற்பத்தைந்து வயதானால் என்ன? அழகி அழகி தான். அதுவும் பெத்ரோ கண்ணுக்குப் பேரழகி. செப்பு நிறத்தில் வனப்பாக உயிர்த்த சிலை. வெகு அருகில் வந்து பார்த்தாலே ஒழிய முகத்தில் சிறு சுருக்கங்கள் பார்வையில் படாது. பக்கத்தில் வந்தால் வேறெவ்வளவோ இருக்க, முகச் சுருக்கத்தைப் பார்த்து நேரத்தை வீணடிப்பது புத்திசாலித்தனமா? பெத்ரோவின் மனைவி மீன் வாங்கப் போகும்போது ஐந்து பத்து நிமிஷம் அவசரமாக அண்மையைப் பகிர்ந்து கொள்வாள். குறைந்தது ஒரு முத்தமாவது தேறும். இருபது குருஸடோ அதற்கான கூலியாக வாங்கவும் மறப்பதில்லை. முத்தம் இலவசம்.
பெத்ரோவின் மனைவி அடுத்த, நான்காவது பிள்ளை பெற மலபாரில் கள்ளிக்கோட்டை நகரில் தாய் வீட்டுக்குப் போயிருக்கிறாள். கஸாண்ட்ராவுக்கு இடுப்பு முறிய வேலைப்பளு.
வண்டியை நிறுத்தச் சொல்லாமலேயே நின்றது அது. திரிசமன் செய்த விஷமப் பார்வை பார்த்தபடி சாரட் வண்டியோடு குதிரையை இழுத்துப் பிடித்து தெருவோரம் நிறுத்தியிருந்தான் வண்டியோட்டி வந்தவன்.
“பெண்ணே, அவசர வேலையாக கோட்டைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ வழிமறிக்கிறாயே இப்படி. நான் போய்ச் சேர்ந்த மாதிரிதான்” பொய்யாக அலுத்துக் கொண்டார் பெத்ரோ.
“மீ பெர்தோயி சின்ஹொர்” என்று உடனடி மன்னிப்பு தெரிவித்தாள் அவள். கல்லையும் உருக்கும் குரல் அது.
“என்னை ஊர்க் கோடியில் மாமிசம் விற்கும் அங்காடியில் விட்டுவிட்டுப் போனால் என்ன குறைந்து போவீர்கள் எஜமானே?” கஸாண்ட்ரா அவருடைய முகவாயைத் தொட்டு அசைத்துக் கேட்டாள். அவளை புழுதி படிந்த தெருவில் இருந்து உயர்த்தி இழுத்து பக்கத்தில் உட்கார்த்தி முத்தமழை பொழிய வேண்டும் என்று அடங்காத காமம் உயிர்க்க பெத்ரோ சாரட் ஓட்டுகிறவனை தீயாகப் பார்த்து விழித்தார். அவனா, அடுத்த பத்து நிமிஷம் நல்ல பொழுதுபோக்கு என்று எதிர்பார்க்கிற தோதில் காத்திருக்க, எதிர்த் திசையில் இருந்து புத்தம்புது சாரட் வந்து கொண்டிருப்பதை முதலில் பார்த்தவள் கஸாண்ட்ரா தான்.
”பெரிய துரை வந்துட்டிருக்கார்” என்றபடி உடையைத் திருத்தி தலைமுடி கலையாமல் கையால் ஒதுக்கி ஒட்டி வைத்த சிரிப்போடு அவள் நிற்க பெத்ரோ சாரட்டில் இருந்து குதித்து இறங்கி வீதியோரம் நின்றார்.
ஓரமாக ஒரு வயோதிகன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். நகரப் பன்றிகளில் கனமான ஒன்று துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தது. ஓடாத சாக்கடை ஒன்று அடுத்து கந்தம் கிளப்பியபடி நிலைத்திருக்க தெரு ஓய்வில் கிடந்தது. நான்கு குதிரை பூட்டிய பளபளப்பான சாரட்டில் ஜாதிக்காயும், பாக்கும் மென்றபடி எதிர்த் திசையில் கடந்து போகும் பெரும் வர்த்தகர் யாரையும் எதையும் லட்சியம் செய்யாமல் நேரே பார்த்தபடி அமர்த்தலாக அமர்ந்து போய்க்கொண்டிருந்தார்.
பெரிய துரை கவுண்டின்ஹோ அரசப் பிரதிநிதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டாண்டு முடிந்து விட்டது. என்றாலும் இந்த தேசத்தை விட்டுப் போக அவருக்கு விருப்பமில்லை. மனைவி பெயரில் ஏலக்காய், ஜாதிக்காய் வர்த்தகம் மறைவாகச் செய்வதாக வதந்தி. ஏகமாகக் கெஞ்சி வேண்ட, போர்த்துகல் அரசம் முதலாம் பிலிப்பும் அவரை கவுரவ ஆலோசகர் என்று ஓர் அதிகாரமுமில்லாத பதவி ஏற்படுத்தி நியமித்திருக்கிறான். யாருக்கும் தேவைப்படாத யோசனைகள் யாரென்று இல்லாமல் எல்லோரிடத்திலும் சொன்ன மணியமாக இருக்கிறார் கௌண்டின்ஹோ பிரபு.
”பெருந்தகைக்கு காலை வணக்கம்” என்று பெத்ரோ கௌண்டின்ஹோவின் சாரட் நின்றதும் ஜன்னல் வழியே பார்த்து வணங்கிச் சொன்னார். கை நடுக்கத்தோடு நெற்றியில் கரம் வைத்து சல்யூட் செய்திட கவர்னர் அதை ஏற்றுக் கொண்டதாகத் தலையசைத்தார்.
“என்ன பெத்ரோ. நடுத் தெருவில் வண்டியை நிறுத்தி என்ன சுவாரசியமான பேச்சு? இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேனே?” என்றபடி கஸாண்ட்ராவைப் பார்க்க அவள் சிந்திய புன்னகையில் அவர் ஆகக் குழைந்து போனார்.
“உனக்கு லிஸ்பனில் தானே வீடு? ரூஆ அகஸ்டியாவிலிருந்து பழைய நகரத்துக்குத் திரும்பும் பாதையில் நாலாம் அவென்யூவில் பார்த்திருப்பேனோ” என்று போர்த்துகீஸ் மொழியில் சந்தேகம் சொன்னார்.
”ஐயா மன்னிக்கணும். நான் பிறப்பு வளர்ப்பு எல்லாம் இங்கே ஹொன்னாவரில் தான். என் அப்பா போர்த்துகல்லில் போர்டோ நகரிலிருந்து வந்தவர். லிஸ்பனில் என் ஜாடையில் யாரையாவது பார்த்திருக்கக் கூடும் எஜமான்”.
”என் வீட்டை நிர்வகிக்கிறாள் கஸாண்ட்ரா” பெத்ரோ தடபுடலாக அவளை கவுண்டின்ஹோவுக்கு அறிமுகப் படுத்தினார்.
“உங்கள் மனைவி கள்ளிக்கோட்டை போயிருப்பதால் இந்தப் பெண் நிறைய உதவி செய்கிறாள் என்று ஊகிக்கிறேன். மகிழ்ச்சியைப் பரப்பி நன்றாக இரு பெண்ணே” என்று பூடகமான சிரிப்போடு சொன்னார் மாஜி கவர்னர் துரை.
கஸாண்ட்ரா வணங்கி அப்பால் போக, கவர்னர் பெத்ரோ அவர்களை ஷேம லாபம் விசாரித்து தற்போது சாரட் வண்டி பூட்டித் தெருவில் இறங்கிய விசேஷம் கேட்டார்.
“மிர்ஜான் கோட்டைக்குத் தினசரி போய் வருகிறீரா பெத்ரோ? மிளகாலேயே உம் அரைக்குக்கீழ் காப்பு இட்டு வாயிலும் ஒரு உருண்டை தின்னக் கொடுத்து உரைக்க உரைக்க சொர்க்கம் போக வைத்து விடுவார்கள் மிளகு ராணியும் கூட்டமும். ஜாக்கிரதை”
Copyright @EraMurukan
May 28, 2021
மிளகு – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து : மிர்ஜான் கோட்டையில் நிர்மல முனி நிகழ்த்திய பேருரை
Draft of an excerpt from my novel Milagu – work in progress. All rights @era.murukan
பிரபஞ்சத்தில் அனைவருக்கும், அனைத்துக்கும், என்றால், உயிருள்ள, உயிர் என்பது இல்லாத அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டென்று மொழிந்தருளினார் பகவான் மகாவீரர். ஒரு குக்கலை, என்றால் நாயைக் கல் எறிந்து காயப்படுத்தும் மூடர்கள் போல ஒரு செடியை இழுத்துப் காயும் பூவும் பறிக்கும் மூடர்களும் அந்தத் தாவரத்தை வலியால் துடிக்க வைக்கிறார்கள் என்று சொல்லியருளினார் அந்த மகான். அது மட்டுமில்லை, ஒரு கல்லை இன்னொரு கல் கொண்டு தாக்கினாலும் தாக்கப்பட்ட கல்லுக்கு வேதனையும் வலியும் மிகும் என்பதைப் புரிந்து கொள்வீர்களாக.
மண்ணுக்கும், அதில் ஆழத்தில் வசிக்கும் மண்புழுக்களுக்கும், மேலே செடிகொடி மறைவில் வாழும் எலிகள், முயல்களுக்கும், துன்பம் ஏற்படுவது நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்வது மூலம் துன்பம் ஏற்படும். எனவே வேளாண்மை வேண்டாம், உணவு துறந்து நோற்றுச் சுவர்க்கம் புகுவோம். உங்களில் எத்தனை பெயர் உலகைத் துறக்க, உணவுச் சுவை துறக்க, உறவுச் சுவை துறக்க, ஆடை துறக்க மனம் ஒப்புகிறீர்கள்? யாரும் மாட்டீர்கள். மனம் பக்குவப்படும் வரை.
நிர்மல முனி என்னும் நிர்மலானந்த அடிகள் வாயைச் சுற்றிக் கட்டிய இரட்டை வெள்ளைத் துணிக் கவசங்களுக்கு இடையே வடிகட்டிய குரல் மெதுவாகக் கசிந்து வரப் பேசினார். தரையில் ஒரு கால் மடித்து மறு கால் நீட்டி உட்கார்ந்திருந்தார் அவர். அவர் முன், தண்ணீர்ப் பாத்திரம் வைத்த சிறு மரமேடை அவருடைய இடுப்புக்குக் கீழே மறைத்து இருந்தது. திசைகளையே ஆடையாக உடுத்த திகம்பரரான அவர் இப்படி மதபோதனைச் சொற்பொழிவு செய்யாத நேரத்தில் இடுப்பில் உடுப்பு இல்லாததைப் பற்றி நினைப்பதே இல்லை.
அரண்மனைப் பிரதானிகளும், அழைப்பு கிட்டிய பெருவணிகர்கள் மற்றும் நகரப் பிரமுகர்களும் சமணத் துறவியின் உபதேச உரை கேட்கப் பெருமளவில் வந்திருந்தார்கள். அவர்களில் பத்துப்பேர் கூட சமணர் இல்லை. சென்னபைரதேவி வரச் சொல்வதால் தட்டாமல் வருகிறவர்கள் பலரும்.
எல்லாம் பிரதானி கோரிக்கை விடுத்ததில் தொடங்கியது. அரசியின் அறுபதாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது பற்றிப் பேசும்போது, இந்துமத, சமணப் பேருரைகள் நிகழ்ச்சியின் பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதோடு இன்னொன்றும் கூறினார் அவர்.
“அம்மா, இந்த வருடம் மிளகுப் பயிருக்கு தேவையான மழை இன்னும் பெய்யவில்லை. வந்து விடும் என்றாலும் தெய்வத்தைப் போற்றிக் கொண்டாடிக் கூட்டமாகப் பக்திப் பாடல் இசைத்தும், சான்றோர் நல்ல விஷயங்களைப் பற்றி உரை நிகழ்த்தியும் நல்ல வாக்குகளை வெளியிலெங்கும் பரப்பி, மழைத் தேவனையும் மற்றச் சிறு தெய்வங்களையும் மகிழ்ச்சியடைய வைத்தால், மழை நிச்சயம். சமண, இந்துத் துறவிகளை உங்கள் பிறந்த நாளைச் சிறப்பித்து நல்வாக்கருளி மிர்ஜான் கோட்டையில் உரை நிகழ்த்த அழைத்து வர உங்கள் உத்தரவு உண்டு தானே? இசை நிகழ்ச்சிகளை ஜெருஸோப்பாவில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
மழை பெய்யப் பிரசங்கம் என்றதுமே இதெல்லாம் தெரிந்தவள் அப்பக்கா மகாராணி என்று சென்னபைரதேவி நிச்சயம் செய்து விட்டாள். அப்பக்கா அவள் ராஜாங்க இருப்பிடமான புட்டிகே-யில் தான் மழை காலம் என்பதால் இருக்கிறாள் என்று செய்தி கொண்டுபோய் திரும்ப வாங்கி வரும் தூதர்கள் சொன்னார்கள். வைத்தியனும் சொன்னான். கோடை வந்தால் அங்கே இல்லாமல், இரண்டாவது தலைநகரான உள்ளல் துறைமுக நகரில் ஏற்றுமதி ஆகும் வெல்லமும், லவங்கப் பட்டையும் தரமானதாக இருக்கிறதா என்று வர்ததகர்களோடு வர்த்தகராக மேற்பார்வை பார்த்தபடி நிற்பாள். போகவர வெல்லம் கிள்ளித் தின்னவும் அவளுக்குப் பிடிக்கும்தான்.
நேரம் கடத்தாமல் குதிரையேறி விரையும் தூதர்களை அப்பக்காவிடம் லிகிதத்தோடு அனுப்பினாள் சென்னா. பதில் உடனே தேவை என்று கேட்டிருந்தாள்.
சுருக்கமான கடிதம் அது.
பிரியமான அபி, நாட்டில் மழை பெய்ய வேணும். பேசினால் மழை பெய்யும் என்ற க்யாதி உள்ள சந்நியாசிகளில் அதி சிறந்தவர் பெயரையும் எங்கே அவரைக் கண்டு அழைத்து வரலாம் என்பதையும் உடனே பதில் லிகிதமாக எழுது. சிகப்பு ஆடைத் துறவிகள் மட்டுமில்லை, திகம்பரர் என்றாலும் சரிதான். மழைக்காலத்தில் சாதுர்மாச விரதமாக ஒரே இடத்தில் நான்கு மாதம் ஆராதித்திருக்க முனிகளுக்கு மிர்ஜானிலோ ஹொன்னாவரிலோ, ஜெருஸோப்பாவிலோ தகுந்த வசிப்பிடம் ஏற்பாடு செய்து விடலாம்.
கடிதம் வந்த அடுத்த நாளே அப்பக்கா அனுப்பிவைக்க நிர்மலானந்த அடிகள் வந்து சேர்ந்தார். சாதரணமாக எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்கங்கே இருந்து இளைப்பாறி நடந்து தான் வருவது வழக்கம் சமண சந்நியாசிகள் எல்லோருக்கும்.
அவசரம் என்பதால் வாடகைக்கு வண்டி பண்ணி அனுப்பாமல் அப்பக்காவின் சொந்த சாரட்டில் அவரை ஏற்றி மிர்ஜானுக்கு அனுப்பியிருந்தாள் அவள். குதிரைக்குத் துன்பம் என்று அதற்கு எத்தனை மறுப்பு தெரிவித்திருப்பாரோ. அப்பக்கா எத்தனை மன்றாடி அவரை மிர்ஜானுக்கு அனுப்பி வைத்தாளோ.
கடுமையான உதர நோய் கண்டு குணமடைந்ததால் ஒரு பொழுது மட்டும் உண்ணும் திகம்பர விதிமுறையைச் சற்றே தளர்த்தி பகலிலும் மாலையிலும் ஒரு கைப்பிடி உண்ணுவாராம் நிர்மலானந்த முனியவர்கள். அவர் என்ன உண்ணுவார், எப்போது உண்ணுவார், எவ்வளவு உண்ணுவார் என்பதையும் எழுதியிருந்தாள் அப்பக்கா.
அதன்படி காலை ஐந்து மணிக்கு ஒரு குவளை காய்ச்சாத பசும்பாலும் சிறு கிண்ணத்தில் உலர்ந்த திராட்சைப் பழங்களும். பகலில் பருப்பு சாதம் தால் சாவல் ஒரு சிறு கோப்பை, ஒரு குவளை குடிநீர். சாயந்திரம் ஐந்து மணிக்கு இரண்டு கரண்டி சோறும், புளிக்குழம்பும், தணலில் வாட்டிய பப்படமும் சாப்பிடும் துறவி அவர். அதெல்லாமே மிர்ஜான் கோட்டை அருகே கிராமங்களில் கிடைக்கும் என்பதால் சாமியாருக்கு விருந்து புரக்கும் மரியாதை செய்ய சென்னாவால் முடிந்தது.
நிர்மலானந்த அடிகளின் உபந்நியாசத்தைக் கேட்க முதலில் வந்தது கோட்டைக் காவலர்களில் வயதானவரான இஸ்லாமியர் குர்ஷித் மியான். ”நான் எல்லா மதத்திலும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள சொற்பொழிவுகளுக்குப் போகிறேன் அம்மா. இந்த சமண சாமியார் வித்தியாசமானவர் என்றார்கள். என்ன வித்தியாசம் என்று பார்க்க வந்தேன்” என்றார் அவர் சென்னபைரதேவியிடம் மரியாதை விலகாத குரலில்.
மேடையில் உடுப்பு இல்லாமல் நிர்மலானந்த அடிகள் அமர்ந்திர்ப்பதைப் பார்த்து சற்றே சங்கடத்தோடு முதல் வரிசையில் உட்காராமல் ஐந்தாவது வரிசைக்குப் போனாள் சென்னா.
அவர் பேசுவது எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இது மட்டும் தான் சமண மதம் என்று சொன்னால் சென்னா நம்ப மாட்டாள். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதால் கல்லை உடைத்துக் கட்டடம் கட்டி வசிக்கக் கூடாது. கல்லைக் கொண்டு கோவிலும் கட்டக் கூடாது. கேட்க நன்றுதான் இது.
வேளாண்மையின்போது மண்ணுக்குள் நெளியும் மண்புழுவும் மற்றவையும் இறக்கக் கூடிய அபாயம் உள்ளதால் பயிர்த்தொழில் வேண்டாம் என்கிறாரே அடிகளார். அதைப் பற்றி யோசித்தாள் சென்னா பேச்சு முடிந்து எழுந்தபோது. சாப்பிடாமல் வயிற்றைப் பட்டினி போட்டு இறைவனின் திருவடி போவதுதான் எல்லோருக்கும் விதிக்கப்பட்டதா? சார்ந்தவர்களுக்கு எளிய சோறும், புளிக்குழம்பும், மோரும், ஒற்றைக் காய்கறியும் கூடத் தர முடியாதவர்கள் எதில் சேர்த்தி? தகப்பன், தாய், பெண்டாட்டி, மகன், மகள் என்று நெருங்கி இருந்து வாழும் உறவில் வந்தவர்களுக்கு சோறு போடாமல், பட்டினி கிடந்து போகிற சொர்க்கத்தில் என்ன மகிழ்ச்சி கிடைக்கும்? துறவறத்தையும் அஹிம்சையையும் இவ்வளவு தூரம் இழுத்து வந்தது சரிதான். எல்லோரும் துறவியாக முடியாது. ஆனவர்கள் கடினமாக அஹிம்சையைக் கடைப்பிடிக்கட்டும். மற்றவர்கள் முடிந்த அளவு அன்பே லட்சியமாக, தினசரி வாழ்க்கையில் தீச்செயல் விலக்கிப் சக மனிதர்களான பிற உயிர்கள் மேல் அன்பு கொண்டு இருக்கட்டும். கடைப்பிடிக்க முடியாத போதனைகளை தீர்த்தங்கரர்களின் பாதம் பணிந்து வணங்கிக் கடந்து போவதன்றோ இனிச் செய்ய வேண்டியது.
சென்னாவுக்குப் பசித்தது. பழைய சோறு கூடாது. பூச்சிகள் பறந்து வந்து பாத்திரத்தில் சோற்று நீரைப் பருக எழுந்து இறந்து வீழலாம். ஆக புதுச் சோறு, பழைய சோறு எதுவும் வேண்டாம். உடுப்பும் தேவை இல்லை. சென்னா மலையாகச் சோறைக் குவித்து உண்ணப் போகிறாள். புளிச்சாறும், தயிரும், உப்பிட்டு ஊறிய எலுமிச்சையும் உண்டு உண்டு வயிறு வலிக்கட்டும். வைத்தியன் கவனித்துக் கொள்வான். அவள் அவசரமாகப் புடவையை இறுக்கிக் கொண்டாள்.
மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.
நிர்மலானந்த அடிகள் பேசி முடித்தபோது கனமழை பொழிந்ததால் அவருடைய பேச்சு ராசி எல்லோருக்கும் பிடித்துப்போனது. மழை தொடர்ந்து பெய்யும் மழைக்காலம் வழக்கத்தை விடச் சீக்கிரம் வந்து சேர்ந்ததுக்கு எல்லோருக்கும் மகிழ, அப்பக்கா மழையிலேயே மிர்ஜான் வந்துவிட்டாள்.
”அடி என் செல்ல சாளுவச்சி. சொன்னேனே, நிர்மலானந்த அடிகள் பிரசங்கிச்சால் மழை கொட்டும்னு. நீ பாதி நம்பினே. இப்பப்பாரு. உன் காட்டிலே நாட்டுலே மழை”.
அப்பக்கா சென்னபைரதேவியை இறுகக் கட்டிக்கொண்டு கொத்தளத்தில் நின்று அவளோடு மழைச் சாரலில் ஆடினாள்.
Pic Fort Mirjan – Ack with thanks en.wikipedia.org
May 27, 2021
மிளகு ராணி சென்னபைரதேவிக்கு அறுபது வயது நிறைவு
“மிளகுப் பேரரசி நீடு வாழ்க. யக்ஷ தேவன் அருளுண்டாகட்டும்”
போஜன சாலை என்ற விருந்து மண்டபம் நிரம்பி வழிந்தது. தலைவாழை இலைகள், கூட்டிப் பெருக்கி பன்னீர் கொண்டு மெழுகிய பளிங்குத் தரையில் வரிசையாகப் பாய் விரித்து இடப்பட்டன. முதலில் எலுமிச்சையும் இஞ்சியும் கலந்த ஊறுகாயும் உப்பும் பரிமாறப்பட்டது. அவரைக்காயும் உருளைக் கிழங்கும் கலந்த பொரியல் அடுத்துப் பரிமாறப்பட்டது. குழைய வேகவைத்த பருப்பும் தொடர்ந்தது.
தொடர்ந்து வெல்லப் பாயசமும் மலையாளப் பிரதேசத்து பாலாடை பிரதமனும் இனிக்க இனிக்க இலையில் வந்து சேர்ந்தன.
வெள்ளரிக்காய்ப் பச்சடியும் கோசுமரியும் அடுத்து இலையேறின. தேங்காய் அரைத்து விட்டுப் பரங்கிக் காய், முருங்கைக்காய்த் துண்டங்கள் சேர்ந்த அவியல் பின்னர் வந்தது. தேங்காய் கலந்து உதிர்த்த புட்டும். வாழைக்காயை அவித்து உதிர்த்த கறியும், சித்ரான்னமாக எலுமிச்சைச் சாதமும் பரிமாறப்பட்டன.அடுத்து இரண்டிரண்டு பருப்பு வடைகள் இலைதோறும் இடப்பட்டன.
பலா மூஸும் கத்தரிக்காய்த் துண்டங்களும் சேர்த்துக் கொதிக்க வைத்த புளிக்குழம்பு வருவதற்கு ஒரு நிமிடம் முன் பொலபொலவென்று அவித்த அரிசிச் சோறு சுடச்சுட இலை தோறும் வட்டிக்கப்பட்டது. புத்துருக்கு நெய் அந்த சோற்றின் மேல் தாராளமாகப் பெய்யப்பட்டது. ஹரி என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்க அங்கே ஹரி என்று பல குரல்கள் உயர்ந்து எழுந்தன. சமபந்தி போஜனம் தொடங்கியது.
பிராமண அதிதிகள் பரசேஷணம் சடங்கை நிறைவேற்ற உணவை வழிபட மந்திரம் சொல்லி, சாதம், பருப்பு, நெய் கலந்து எடுத்த கவளம் சோற்றை எச்சில் படாமல் உயர்த்தி வாயில் போட்டுக் கொண்டனர்.
எல்லோரும் சோற்றில் புளிக்காய்ச்சலைப் பிசைந்து உண்ண ஆரம்பித்தபோது இலை தோறும் தேங்காய் எண்ணெயில் பொறித்த இரண்டு கை அகலமுள்ள உளுந்து அப்பளங்கள் அவை வைத்திருந்த கூடைகள் தரையில் இழுக்கப்பட்டு விரசாக நகர ஓடி ஓடிப் பரிமாறப்பட்டன.
அடுத்து மறுபடி சோறு பரிமாறி மிளகுச் சாறு என்ற கமகமவென்று மிளகு பொடித்துப் போட்டுச் செய்த பருப்பு ரசம் பரிமாறப்பட்டது. ஏதோ ஒரு வரிசையில் இருந்த இளைஞர்கள் மிளகுச் சாற்றைக் கண்டதும், மிளகு மகாராணி ஜெய விஜயீ பவ என்று முழங்க, அடுத்த அலைகளாக மற்ற வரிசைகளிலிருந்தும் உற்சாகமான குரல்கள் உயர்ந்தன.
மிளகுச் சாற்றில் பிணைந்த சோறு உண்டபின், அடுத்து இனிப்பு வந்தது. இலைக்கு ஒரு பெரிய ஜாங்கிரி இடது பக்க இலைக் கீழ் ஓரமாக வைத்துப் போகப்பட்டது. மூன்றாவது இனிப்புப் பாயசமாக சர்க்கரை கலந்து சுண்டக் காய்ச்சிச் செய்த பால் பாயசம் கரண்டி கரண்டியாக நிறைக்கப்பட்டு எல்லோருக்கும் இலையோரமாகத் தொன்னைகளில் பரிமாறப்பட்டது.
விரும்பி இன்னும் கொஞ்சம் இடச்சொல்லிக் கேட்டவர்களுக்கு இன்னொரு முறை அப்பளமும் அவியலும் பொரியலும் ஊறுகாயும். பாயசமும் பரிமாறப்பட்டன. அடுத்து விருந்தின் இறுதிப் பகுதியாக குளிர்ந்த அரிசிச் சாதத்தில் கெட்டித் தயிர் கலந்து, திராட்சை, கொடிமுந்திரி, இஞ்சித் துண்டுச் சீவல், பேரிச்சம்பழ விள்ளல்கள் கலந்து பிசைந்த தயிர்சாதம் பரிமாறப்பட்டு, மறுபடி ஊறுகாயாக புளிக்காடியில் ஊறிய மிளகும் இஞ்சியும் தொட்டுக் கொள்ள வந்து சேர்ந்தது.
உண்டு திருப்தியாகி கைகழுவி வந்தவர்கள் சத்தமாக ஏப்பமிட்டுக்கொண்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு பெற்று இதுபோல் விருந்து பூலோகத்திலேயே கிடையாது என்று சிலாகித்து அரசியை மறுபடி வாழ்த்தி மண்டபச் சுவர்களை ஒட்டிய கல்படிகளில் அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்டார்கள்.
ஹொன்னாவர் குகை ரயில் பாதை படம் நன்றி கர்னாடகா.காம்
May 26, 2021
‘ராமோஜியம்’ நாவல் அறிமுகம்-மதிப்புரை நண்பர் கடலூர் சீனு
நண்பர் ஜெயமோகன் தன் இணையத் தளத்தில் இன்னொரு நண்பர் கடலூர் சீனு எழுதிய ‘ராமோஜியம் நாவல் நூல் அறிமுகம் – மதிப்புரை’க்கான சுட்டியைப் பதிப்பித்திருக்கிறார்.
நன்றி ஜெயன், நன்றி சீனு
ஜெ.மோ இணையத் தளத்தில் கடலூர் சீனு கட்டுரை
—————————————————————————————————-
இரா முருகன் எழுதிய ராமோஜியம் ஒரு சமகாலவரலாற்று நாவல். 620 பக்க இந்த நாவலின் ஒன் லைனை சொல்லிவிட முடியும். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் பணியில் இருக்கும் ராமோஜிக்கும் அவன் மனைவி ரத்னாவுக்கும் இடையே வருகிறாள் சினிமா நடிகை புவனா. பிறகு என்ன நடந்தது? ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய இந்தக் கதையைத்தான் ஜென்ம ஜென்மமாக மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து மீண்டும் மீண்டும் ராமோஜி வாழும் வகைமையை இடையறாத மெல்லிய நகைச்சுயை பூசி முன்வைக்கும் நாவல்.
இந்த நாவலை எழுதும் பத்மநாப ராவின் மகனான இன்றைய மராட்டிய ராமோஜி 1937 இல் சர்க்கார் உத்யோகத்தில் சேர்ந்து, விட்டோபாவை நண்பனாக பெற்று, ரத்னாவை திருமணம் செய்து, சுதந்திராவைப் பெற்று, காமப் பிறழ்வில் புவனாவை சேர்ந்து, ஏமர்ஜன்சி காலத்தில் ஓய்வு பெற்று 1997 இல் லண்டனில் இயற்கை எய்துகிறார். இவர் எழுதும் இந்த ராமோஜியம் நாவலில் போன தலைமுறை பத்மநாப ராவ் மகன் ராமோஜி புதுவை துப்ளெக்ஸ் துறைக்கு, அனந்தரங்கம்பிள்ளைக்கு உதவியாக அரசு வேலையில் இருக்கிறான். அவன் வாழ்வில் குறுக்கிடும் விட்டோபா, ரத்னா புவனா இந்த ஜென்மத்தில் என்னவாக இருக்கிறார்கள், ராமோஜியை என்ன விதம் பாதிக்கிறார்கள் என்பது இவர்களுக்கும் முந்தைய தலைமுறை ராமோஜியில் இருந்து தொடர்வது.அந்த ராமோஜி சிவாஜியின் இரண்டாவது மகன் ஆளும் மகாராஷ்டிராவில், கடல்படை தளபதி கனோஜி ஆங்கிரே யின் முதன்மை தளபதி, அவன் வாழ்வில் குறுக்கே வரும் விட்டோபாவும் ரத்னாவும், புவனாவும் என்னவாக இருக்கிரார்கள் அவனை என்ன விதத்தில் பாதிக்கிறார்கள் என ராமோஜிக்களின் வாழ்க்கைகள் என விரியும் நாவல்.
மூன்று வெவ்வேறுகாலமும் அவை சித்தரிக்கும் நிலத்தையும், பேசும் மொழியையும் மிக குறைவான சித்தரிப்புகள் வழியே வாசகன் அந்த காலத்தில் வாழும் கற்பிதத்தை சுலபமாக உருவாக்கி விடுகிறார் இரா முருகன். குறிப்பாக பாண்டிச்சேரி ராமோஜி காலம்.
சின்ன சின்ன சித்தரிப்புகள் வழியே அந்த சூழலை விஸ்தாரமாக விவரிப்பதன் வழியே வசீகர காலப் பயணம் ஒன்றை நோக்கி வாசகனை தள்ளி விடுகிறார் நாவலாசிரியர். உதாரணமாக உலகப்போரில் சென்னையில் குண்டு விழப்போகும் பயத்தில், சர்க்கார் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, அதை பொது ஜனம் எவ்வாறு எதிர்கொண்டது என்பதை, ராமோஜி பார்க்கும் a.r.p வார்டன் பணிக்கு வாசகனையும் உடன் அழைத்து செல்வது வழியே காட்டுகிறார்.
போர்க்கால ரேஷன்கள், அரசு செய்யும் அபத்தங்களை, மெல்லிய நகைச்சுவை இழைய சொல்லி செல்லும் நாவல், உண்மையாகவே ஜப்பான் குண்டு வந்து விழும் இரவில் வேறு உணர்வு நிலைகளை தொடுகிறது. யுத்த பயத்தில் சென்னை மொத்தத்தையும் சர்க்கார் காலி செய்து ஜாகை மாற்றும் அவதிகளை சொல்லிய படியே செல்லும் ஆசிரியர் போகிற போக்கில் அந்த சூழலில் ஒரு வெள்ளைக்காரன் ரிப்பன் பில்டிங் பின்னால் இருக்கும் மிருக காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் யானை புலி சிங்கம் அத்தனையையும் சுட்டே கொல்வதையும், சுட்டு தின்ன முடிந்த உயிர்களை சுட்டு தின்றதையும் சொல்லிச் செல்கிறார்.
அன்றைய சென்னையின் ட்ராம் பயணம், அன்றைய டில்லி என வித விதமான நிலங்களுக்கு பாயும் கதை மெல்லிய தீற்றல் சித்தரிப்புகள் வழியே அந்த காலத்தையும் இடத்தையும் கொண்டு வந்து விடுகிறது.
பக்கங்கள் தோறும் மெல்லிய வினோதத்துடன் கதாபாத்திரங்கள் அறிமுகமாகி அவ்வாறே நீடித்து வளர்ந்து மறைகிறார்கள். உதாரணமாக சினிமா ஆர்ட் டைரக்டர் சாஜுகாந்த் கனிட்கர் வீட்டுக்கு ராமோஜி முதல் முதலாக வரும் சித்திரம். கதவை திறந்தும் முதலில் முட்டி வெளியேறி ஓடுகிறது ஒரு கழுதைக் குட்டி, பின்னாலேயே அந்தரிடிச்சான் சாகிப் என பல்டி அடித்தபடியே வெளியேறுகிறான் கனிட்கரின் சின்ன வயது மகன். கனிட்கர் மனைவியை அறிமுகம் செய்கிறார். அவள் பெயர் குண்டி. (மராத்தியில் பூஜாடி என்று பொருள்). ராமோஜி முதலிரவில் தாபத்துடன் மனைவியை தழுவுகிறான். முக்கிய தருணத்தில் ‘கொஞ்சம் பொறுங்க’ என்றுவிட்டு ரத்னா தலையணைக்கு கீழே எதையோ தேடுகிறாள். கண்டெடுக்கிறாள். மூக்குப்பொடி டப்பி. கற்ற்ற்றர்…என்று ஒரு சிமிட்டா இழுத்து இரண்டு தும்மல் தும்மிவிட்டு ஆங் இப்போ தொடருங்கள் என்கிறாள். இப்படிப்பட்ட தருணங்கள் வழியாக மட்டுமே நகரும் நாவலில், முதன் முதலாக சர்க்கார் தேநீர் தமிழ் நாட்டுக்குள் நிலைபெற முயன்றது, அன்றைய சினிமா சூழல், உலக இந்திய அரசியல் சூழல், என விரிந்து ஒரு முழுமையான உலகத்தில் வாசகனை இறுத்துகிறது. ராமோஜி பார்வை நோக்கில் மட்டுமே நிகழும் ( ரத்னா இடையே புகுந்து இந்த அத்தியாயத்தை நான் எழுதுகிறேன் என்ற ஒரு அத்தியாயத்தை தவிர்த்தால்) இந்த நாவலின் ஓட்டத்தில் நக்சலைட் ஆக மாற குடும்பத்தை விட்டு போகும் கல்பனா, குடும்பத்தை விட்டு வெளியேற வழியே இன்றி முதிர் கன்னியாக வாழ்ந்து சாகும் கங்கா போன்ற துணை கதாபாத்திரங்களும் உண்டு.அனைத்துக்கும் மேலாக இந்த நாவலை தனித்துவம் கொண்டதாக செய்வது இந்த நாவல் நெடுகிலும் அநேகமாக பக்கத்துக்கு ஒன்று வீதம் விவரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள். சூழ்திரு சிறுகதைக்கு இணையான சந்துஷ்டி அளிக்கும் சாப்பாட்டு வர்ணனை. கூறியது கூறல் இன்றி இத்தனை உண் பண்டங்கள் அடுக்க முடியும் என்பதே ஆச்சரியம்தான்.
இவற்றுக்கு வெளியே இந்த நாவலை எனக்கு அணுக்கமாக்கிய விஷயம் இதிலுள்ள சுகஜீவனம் எனும் அம்சம். தலைமுறைகள் தொடர்ந்தாலும் சரி, புவனா குறுக்கே போனாலும் சரி, தலைக்கு மேலே ஜப்பான் குண்டு போட்டாலும் சரி, இந்த வாழ்க்கை என்பது சுக ஜீவணம்தான் என்பதை இரா முருகன் இந்த நாவல் வழியே அடிக்கோடிடுகிறார். இந்த நாவலை போன வருட நோய்த் துயர் சூழலில் இரா முருகன் அவர்கள் எழுதியதாக தெரிகிறது. இதன் பொருட்டும் இந்த நாவல் முக்கியத்துவம் கொள்கிறது.
கடலூர் சீனு
May 22, 2021
New – from the new novel Milagu I am writing – வைத்தியன் வந்த நாள்
அரண்மனை வைத்தியன் ஒரு போத்தல் நிறைய அடைத்த முகர்ந்து பார்க்கும் உப்போடு சென்னபைரதேவியின் திருமுன்பு மரியாதை விலகாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கையைத் தள்ளி எழுந்திருக்கப் பார்த்தாள் சென்னு. அவனா விடாக்கண்டனாக அழிச்சாட்டியமாக அங்கேயே நின்றான்.
”என்னை முதல்லே யானைக் காலாலே மிதிக்க வச்சுக் கொன்னுட்டு சர்பத் குடிக்க திருமனசு வைக்கணும் மகாராணி. இப்பவே கொன்னுடுங்கோ”
வைத்தியனின் விநோதமான கோரிக்கையைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி. அவன் மேல் தப்பில்லை. சென்னுவின் நாக்கு தான் சின்னக் குழந்தை போல் உணவு ருசியில் மயங்கி விட்டது. குளிரப் படுத்திய குடிநீர் கிடைத்ததா? ஆமாம். அதில் போத்தல் நிறைய எடுத்த முகலாய ஷெர்பத் கலந்தாச்சா? ஆச்சே. சேமியா நாடாக்களை உடைத்துப் போட்டு, வெல்லம் சீய்த்துக் நெய்யில் வறுத்த அரை காலாக பாதாம் பருப்பும், பிஸ்தாவும், பெரிய பேரிச்சம் பழத் துணுக்குகளும் கலந்தானதா? ஓ ஆனதே. இந்தக் கலவையைக் களிமண் பானைக்குள் பானையாக நான்கு அடுக்கு வைத்து வெளியே சர்க்கரையிட்டுக் காய்ச்சிக் குளிர்ந்த பசுவின் பால் ஊற்றிச் சுற்றிலும் மலைத் தொடரிலிருந்து மரத்தூள் குடுக்கையில் எடுத்து வந்த பனிக்கட்டியை அணைத்தபடி வைத்தானதா? ஆனது. நான்கு மணி நேரம் பொறுத்தானதா? ஐந்து மணி நேரம் காத்திருந்தானது. பெட்டிக்குள் என்ன கண்டீர் மகாராணி? இனிப்புச் சுவையான, கேசரி நிறம் கொண்ட பாலும் பருப்பும் ஷெர்பத்தும் கலந்த அபூர்வமான சுவை உணவு. வைத்தியன் வருவதற்குள் தின்று தீர்க்க வேண்டும். வயிறு வலித்தாலும் சரிதான்.
பிறந்த நாளுக்கு சென்னு தனக்கே தனக்கான கொண்டாட்டமாக வைத்துக் கொண்டது இந்த இனிப்புப் பனிக்கட்டிதான். ஒன்று மட்டும் தின்ன நினைத்திருந்தது வேறு யாரும் கவனிக்காததால் எட்டு பனிச் சுவைக் கட்டி ஆனது. நடு ராத்திரி தொடங்கி அடிவயிறு சுண்டி இழுத்து வலிக்கத் தொடங்கியது நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டுதான் போனதே தவிர குறையவில்லை.
அம்மா, இன்னும் வலி இருக்கா? வைத்தியன் கேட்க இல்லை என்றாள் தலையசைப்பில் சென்னபைரதேவி.
வைத்தியன் பரமேஸ்வர பைத் வங்காளி. வந்த ஒரு மணி நேரத்துக்குள் எதையோ சுட வைத்து வேறெதையோ அள்ளிப் போட்டு, மற்ற ஒன்றைக் கை மறைவாகக் கிள்ளிப் போட்டு, அஸ்கா சர்க்கரை கேட்டு வாங்கி இனிப்பு கிண்டுவது போல் நெய்யில் குழைத்து கலந்து சின்னஞ்சிறு அடுப்பில் அவன் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி மகாராணிக்குக் குடிக்கக் கொடுத்த பானத்தை அதன் வாசனைக்காகவே யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் பிரியத்தோடு ஒரு சொட்டு மிச்சமில்லாமல் குடித்துவிட்டு போவார்கள். சென்னுவுக்கு இரண்டு மடக்கு குடித்த அப்புறம் அது வேண்டியிருக்கவில்லை.
“அம்மா இது வேணாம் என்றால் நல்ல கசப்பாக, ஜாதிக்காய்ப் பொடி போட்டுக் கலக்கித் தரேன். பானம் செய்விக்க உத்தரவாகணும்”
“உன் தலையிலே உத்தரவாக. ஒண்ணு பாகல் காய் கசப்பு. இல்லையோ அஸ்கா சீனி இனிப்பு. ரெண்டுக்கு நடுவிலே உனக்கு மருத்து பண்ணவே தெரியாதா?” உண்மையில் கோபமில்லை. விளையாட்டு தான்.
“நீங்க என்னை முதல்லே யானைக் கால்லே இடற வச்சுக் கொன்னுடுங்க. அல்லது குதிரையாலே கட்டி இழுக்கப்பட்டு கை கால் தனித்தனியாகப் போக வச்சுடுங்க. அதுவும் இல்லேன்னா பீரங்கி உள்ளே வச்சு வெடிச்சு வெளியே தள்ளிப் பொடிப்பொடியாப் போக வைக்கலாம். அது எல்லாமோ ஒன்று ரெண்டோ நடந்த அப்புறம் பனிக்கூழோ கட்டியோ விருப்பம் போல சாப்பிடுங்க. வயித்து வலி வரலாமா வரலாமான்னு வாசல்லே நிக்கும். வாவான்னு வெத்தலை பாக்கு வச்சு வரவேற்பு, கூடிக் குலாவல் எல்லாம் நடக்கட்டும். நான் இல்லே. ஆனைக் கால்லே, பீரங்கி உள்ளாற நான் போய்க்கிறேன். பால் மட்டும் ஊத்திப் படைக்கச் சொல்லிடுங்க”
சென்னு அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
டேய் வைத்தியா நீ உங்க அப்பா வைத்தியரோடு சின்னப் பையனா மருந்து மூட்டையைத் தோளிலே தூக்கிக்கிட்டு வந்ததை இன்னிக்குத் தான் பார்த்த மாதிரி இருக்கு. நீயானா என் கிட்டேயே அழிச்சாட்டியம் பண்ணிண்டு நிக்கறே. சரி என் நல்லதுக்குத்தான் பண்ணறே. இத்தனை முஸ்தீபா அதுக்கு? ஒரு வேளைக்கு நாலு பனிக்கூழ்கட்டி தின்னா குத்தமா? ஊர்லே படிச்சவங்க யார்கிட்டேயாவது கேட்டுப் பாரு. இங்கே கூட்டிட்டு வந்து என் முன்னாலே கேட்பேன்னாலும் சரிதான்.
“சரி அம்மா, யாராவது ஒண்ணுன்னு சொல்லி எட்டு கட்டி பனிக்கூழை வாரி வாரிச் சாப்பிட்டு உடம்பு ஒண்ணும் ஆகலேன்னு இருப்பாங்களா? அதுக்கு எனக்கு புரியறமாதிரி நியாயம் ஏதாவது சொல்லுங்கம்மா”.
பக்கத்தில் வைத்திருந்த ஓலை விசிறியை வைத்தியன் மேல் தூக்கிப் போட்டாள் சென்னு. இன்றைக்கு மீதி பனிக்கூழ் இருந்தால் இந்தப் பயல் போனதும் அதை ஒரு வழி பார்க்க வேண்டியதுதான். இவன் மருந்து கொடுக்கும் போது கொஞ்சம் தாராளமாக இன்னொரு தினத்துக்கு வருவது போல் வாங்கிக் கொள்ளலாம். பட்கல் போறேன் மால்பே போறேன் மங்கலா புரம் போறேன்னு பிரயாணத்துக்கான மருந்துன்னு கேட்டு வாங்கிடணும்
நான் அடுத்த வாரம் மங்களாபுரம் போறதா உத்தேசம்
அவள் அடி எடுத்து ஆரம்பிக்க, அந்த புத்திசாலி வைத்தியன் உடனே வணங்கிச் சொன்னது இது –
அடுத்த வாரம் முழுக்க வேறே காரியம் ஏதும் இருந்தா அதை மாற்றி வச்சுட்டு நான் முதல் சேவகனாக வந்துடறேன் மகாராணியம்மா. அதை விட வேறென்ன எனக்கு பெரிய வேலை?
படம் கோகர்ணம் மஹாபலேஷ்வர் கோவில்
Pic courtesy hellotravel.com
May 21, 2021
எழுதி வரும் புது நாவல் ‘மிளகு’வில் இருந்து – வாழை இலைப் பெட்டி
தலைநகர் ஜெருஸப்பா தெருக்களிலும், மிர்ஜான் கோட்டைக்குச் சுற்றிலும் உள்ள நெல் வயல்களைக் கடந்து நிறைந்துள்ள கிராமங்களிலும், மிர்ஜான் நகரிலும், இந்த மிர்ஜான் கோட்டைக்கு உள்ளே பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இன்று இதோ பாருங்கள் இந்தப் பொதியை ஆளுக்கொன்றாக அளிக்கிறோம். குழந்தைகளுக்குச் சற்றே சிறிய பொதியும் பெரியவர்களுக்குப் பெரிதுமாக அளிக்கப்படும் இதெல்லாம்” என்றபடி சிறு பேழை போல் மடித்து ஈர்க்கு குத்திய பச்சைப் பெட்டி ஒன்றைக் காட்டினான்.
“இதென்ன, வாழை இலையை வளைத்து நெளித்து ஈர்க்குச்சி செருகி, வாழைநார் கட்டிச் செய்த மாதிரி இருக்கே” என்று ஆச்சரியப்பட்டு அந்தப் பொதியைத் திரும்பத் திரும்ப தூக்கிப் பார்த்தாள் சென்னு.
”உள்ளே என்ன இருக்கு ரஞ்சி?” ரஞ்சிதா முகம் மலர நின்றாள். அரசியார் ரஞ்சி என்று செல்லமாக அழைத்தால் மனம் முழுக்க நிரம்பிய சந்தோஷத்தில் இருக்கிறார் என்று அவளுக்குப் பொருள் கொள்ளத் தெரியும்.
“கமகமவென்று நெய் வாடை வரவில்லையா அம்மா, மொகலாய் பிரியாணி தான்.”
”ஏது முகலாயர்களைப் போரிட்டு அழிக்க முடியாது என்பதால் அவர்களுடைய பிரியாணியைத் தின்றே அழிக்கத் திட்டமா?” சிரித்தாள்.
“அது சரி, பிரியாணி வாசனை புரிகிறது. கூடவே வேறு ஏதோ நல்ல வாசனையும் தட்டுப் படுகிறதே” பொதியைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் சென்னு.
”ஆம் அம்மா, பிரியாணியோடு கூடவே இரண்டு பருப்பு வடைகளும் தனியாகப் பொதிந்த லட்டு உருண்டையும், அல்வாத் துண்டும் வைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு இனிப்பு முட்டாயும் ஆளுக்கொரு கொத்து காய்ந்த இலையில் பொட்டலம் கட்டி உள்ளே இட்டிருக்கிறது. இந்தப் பொதி போல் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் விருந்துணவுப் பொதிகள் காலையிலிருந்து மேற்கு வீதி முழுக்க பந்தல் போட்டு தெருவில் வரிசையாக அடுப்பு பற்றவைத்து ஏற்றிக் கிண்டிக் கிளறி இறக்கப்பட்டு சூடும் சுவையுமாகப் புதிதாகப் பறித்த வாழை இலைகளில் பொதியப்படுகின்றன.
இனிப்புகளுக்காக இன்னொரு பிரிவு கூடவே சுறுசுறுப்பாக இயங்குகிறது”.
சென்னபைரதேவிக்கு நேமிநாதனை வியக்காமல் இருக்க முடியவில்லை. தெற்கு வீதியும், கிழக்கு வீதியும் அவள் தினசரி அலுவல் காரணமாக அல்லது போர்த்துகீசியர்களை அத்தியாவசியமாகச் சந்திக்கச் செல்லும்போது கடந்து போகும் வீதிகள். அங்கே ஒரு நெருப்புப் பொறி பறந்தால் கூட சென்னுவின் கூர்மையான பார்வைக்கு அது தப்பியிருக்க முடியாது. விருந்தெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பாள். ஆனால் மேற்குவீதி உள்ளொடுங்கி உள்ளதால் பார்வைக்குத் தப்பிவிடும் என்று கணக்குப் போட்டிருக்கிறான் நேமிநாதன்.
மகனே ஆனாலும் பாதுகாப்பு வளையத்தில் ஒரு சிறு தொய்வு அங்கே இருப்பதையும் அவனறியாமலேயே சொல்லாமல் சொல்லி உணர்த்தி விட்டான். இனி மேற்குத் தெருவும் சுற்றித்தான் சென்னு பயணம் போவாள்.
அவள் முன் மண்டபத்துக்கு நடந்தபோது தயங்கி நேமிநாதன் ஒரு அடி பின்னால் வந்து கொண்டிருந்தான். கூடவே ரஞ்சனாதேவி. வரிசையாக அணிவகுத்து அங்கே நின்ற சிப்பாய்கள் “மிளகுப் பேரரசி நீடு வாழ்க” என்று மேற்கத்திய பாணியில் போர்த்துகீசியரையும் ஆங்கிலேயர்களையும் போல பாதுகைகள் சப்திக்க கால் தரையில் அறைந்து நின்று விரைப்பான இங்கிலீஷ் சலாம் அடித்தார்கள்.
“சல்யூட் அடிக்கும் வீரனுக்கு பதில் மரியாதையாக இருகை கூப்பி வணங்கலாமா?” ரஞ்சிதா நேமிநாதனிடம் கேட்டது சென்னுவின் பாம்புச் செவியிலும் விழுந்தது. “நானும் சல்யூட் அடிக்கப் போகிறேன். மேற்கில் ஆண் பெண் பேதமில்லாமல் வணங்கும் முறை அதுதானாம்” என்றபடி அவர்களோடு முன் மண்டபத்தில் நுழைந்தாள் சென்னபைரதேவி.
மண்டப வெளியில் மிர்ஜான் கோட்டைக்கு வெளியே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மிர்ஜான் துறைமுக நகரில் வாசனை திரவியக் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் மாணப் பெரிய மலர் மாலையும், வெள்ளித் தகட்டால் செய்து கண்ணாடிப் பேழைக்குள் பொருத்திய ராம பட்டாபிஷேக சிற்பமுமாக நின்றார்கள்.
“மிளகுப் பேரரசி நீடு வாழ்க. யக்ஷ தேவன் அருளுண்டாகட்டும்”
சென்னுவுக்குச் சட்டென்று கோகர்ணம் மஹாபலேஷ்வர் கோவிலுக்கு இன்று வருவதாக பிரார்த்தனை நேரத்தில் சொன்னது நினைவு வந்தது. வணிகர்களுக்கு நன்றி சொல்லி அவர்கள் கொண்டு வந்த மாலையைப் பூத்தாற்போல் பிடித்தபடி நேமிநாதனைத் தேடினாள் சென்னு. ஓரமாக நின்று கொண்டிருந்தான் அவன்.
நேமிநாதனிடம் கோவில் என்று மட்டும் சொல்ல அவன் புரிந்து கொண்டு ஒரே நிமிடத்தில் மகாராணியின் சாரட் வண்டியை சகல அலங்காரங்களோடும் சௌகரியங்களோடும் அழைத்து வரச் செய்து நிறுத்தினான். பூச்சரங்களும் பாசிமணி மாலைகளும், வாழைமரம் கட்டிய அழகும், தோரணங்களின் வர்ண ஜாலமுமாக அரச ஊர்தி வந்து நின்றது.
சாப்பாட்டில் கை நனைக்க முற்பட்ட பிரமுகர்கள் நிறுத்தி வாசலுக்கு மகாராணியைக் காண விரைந்தார்கள்.
“நீங்கள் உண்ணுங்கள். நான் கோவிலுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்றபடி சாரட்டில் ஏறி அமர்ந்தாள் சென்னபைரதேவி.
“மேற்கு வீதி வழியாகப் போகலாம்” சாரட்டின் முன் பகுதியில் ஆயுதம் ஏந்தி நிற்கும் சிப்பாய்கள் இருவரும் சாரதியிடம் சத்தம் தாழ்த்திச் சொல்ல, அவன் வியப்பு ஒரு வினாடி முகத்தில் காட்டி இது தினசரி நடப்பாச்சே என்பது போல் சகஜ பாவத்தோடு முகத்தை வைத்துக் கொண்டு குதிரைகளை ஓடத் தூண்டி சாரட்டை நகர்த்தினான். தூண்டுதலுக்கு அவசியமே இல்லாமல் அந்த அரபுப் புரவிகள் வேகம் எடுத்துப் பறந்தன.
Honnavar Waterfalls Pic courtesy backpackster.com
May 19, 2021
எழுதிவரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து – கர்கலா நான்கு வாசல் கோவில்
எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’ – ஒரு சிறு பகுதி
மற்ற கோட்டைகளுக்கு எல்லாம் இல்லாத வடிவ நேர்த்தியும், அழகான புல்வெளிகளும், நீரூற்றுகளும் மிர்ஜான் கோட்டையை வேறுபடுத்திக் காட்டுவதை சென்னு மனமெல்லாம் பெருமையோடு சுவரை அணி செய்த நீண்ட தீவட்டி வரிசையை நோக்கியபடி நினைத்தாள். அவளுடைய நுணுக்கமான திட்டப்படி தான் கோட்டை எழுந்து வந்தது. ஒவ்வொரு மலைக்கல்லாக, மரத் துண்டாக அந்தப் பெரிய கல் கட்டிடம் வெறும் வெளியில் இருப்பு உரைத்து ஓங்கி உயர்ந்து எழுந்தபோது முதலில் ஏற்பட்ட பெருமை அது.
இப்போதெல்லாம் அடிக்கடி மனம் உற்சாகம் கொள்ளும்போது மிர்ஜான் மிர்ஜான் என்று அது திரும்பத் திரும்பக் குரல் தருகிறது.
என்றாலும் மிர்ஜான் கோட்டையை உள்ளே வந்து பார்த்து ஆச்சரியப்பட்டு அவளுக்கு வாழ்த்து சொல்ல மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தாளிகளை அனுமதிக்கிறாள் அவள்.
பாதுகாப்பு நிறைந்த இடம். பாதுகாப்பை ரகசிய வழி, கதவுகள் திறக்க மூட உள்ளூற இயங்கும் தமிழ்ப் பிரதேசத்து பூட்டுகள் என்று விரிவாகக் கடைப்பிடிப்பதைத் தேவையில்லாதபடி யாராவது கண்டு கொண்டு போய் வெளியே தகவல் கசிய வைத்தால் இவ்வளவு முயற்சி எடுத்துக் கட்டியதெல்லாம் ஊரறிந்த ரகசியமாகி விடும். வேறு ஒன்றும் வேண்டாம், கோட்டையைச் சுற்றி ஒன்றல்ல, இரண்டு சுவர்கள் வேறு எங்கும் இல்லாத அதிசயமென்று நோக்கிப் போகிறவர்கள் சொல்லித் தேவையில்லாதவர்களுக்குத் தகவல் தந்து மிர்ஜான் கோட்டையின் முதல் பாதுகாப்பைக் காற்றில் பறக்க விடக்கூடும்.
அவர்கள் தொலைதூரத்திலிருந்து வேறு பிரதேசத்திலிருந்துதான் வந்தவர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. சென்னுவின் ராஜாங்கத் தலைநகரமான ஜெருஸோப்பாவில் இருந்து வந்தவர்களாகக்கூட இருக்கலாம். யாருக்கு எது எதற்காகத் தேவைப் படுகிறதோ அதில் ஒரு பகுதியை அவர்களுக்குச் சொன்னால் போதும் என்பதே சென்னுவின் கொள்கை. கோட்டையும் கொத்தளமும் வந்து பார்த்து ஓரமாக மூத்திரம் பெய்து அப்பமோ அதிரசமோ உண்டு புகையிலை மென்று துப்பி சரம் சரமாகத் தகவல் அவலை மென்று போவதற்கான சமாசாரங்கள் இல்லை.
அவற்றின் முக்கியத்துவம் சென்னுவுக்குத் தெரியும். நிரந்தரப் பகைவர்களான போர்த்துகீசியர்களுக்குப் புலப்படும். நுணுக்கமாக அலசி ஆராயத் தெரியாமலா கடல் கடந்து இத்தனை தூரம் மிளகு வாங்கவும், அசந்தால் தொடையில் கயிறு திரித்து நாடு பிடிக்கவும் வந்து போக அசாத்திய சாமர்த்தியம் அவர்களுக்கு உண்டு. பகைவனின் திறமையையும் போற்றுவாள் சென்னு. சென்னு போர்த்துகீஸ் மகாராணியாக இருந்து, போர்த்துகீஸ் கவர்னர் பெரேரா சாளுவ வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கூட அவனைக் கொண்டாடி இருப்பாள் கவுன் அணிந்த போர்த்துகீஸ் சென்னு.
கவுன் அணிந்த தன் உடம்பைக் கற்பனை செய்ய அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதுவும் அறுபது வயதில். உடம்பு வழங்கினால் அறுபதிலும் கல்யாணம் கூடச் செய்து கொள்ளலாம். சென்னுவுக்கு மணாளனாக யார் வருவார்கள்? தன்னை அறியாமல் பலமாகச் சிரித்து உடனே நிறுத்திக் கொண்டாள். அறுபது வயதில் வேறென்ன வருமோ, தறிகெட்டோடும் நினைவுகளை இழுத்துப் பிடித்து நிறுத்த நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது.
இந்தத் திருப்பத்தில் இரண்டு பிரம்மாண்டமான வெளிச்சுவர்களும் ஒன்றை ஒன்று பிரியாமல் வளைந்து திரும்பி நீண்டு போக பளிங்கு போன்ற தண்ணீர் நிரம்பிய கோட்டையின் தடாகம் நடுவே அழகு மிகுந்து தென்படும். தினம் தண்ணீரை வடித்து விட்டு ஷராவதி நதியின் நீரை நிரப்ப ஒரு பத்து பேராவது குழுவாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தண்ணீர் எப்போதும் பூவும் வெட்டிவேரும் மணக்க, இனித்திருக்க, நாவல் மரத்தின் உலர்ந்த கிளைகள் நீரில் ஊறிக் கிடக்கின்றன. ஏலக்காய்ப் பொடி கூட கலந்து நல்ல வாடை இன்னும் அதிகமாக அடிக்கச் செய்ய சென்னு தயார்தான். ஆனால் கோவில் தீர்த்தம் போல் சாமி வாசனை வந்தால் தடாகத்தில் யாரும் இறங்க மாட்டார்கள். கன்னத்தில் படபடவென்று பக்தியோடு போட்டுக்கொண்டு விலகி ஓடி விடுவார்கள்.
வெய்யிலோ மழையோ மிர்ஜான் கோட்டைக்குள் தான் சென்னு எப்போதும் இருக்கிறாள். வயதாக வயதாக, மிர்ஜான் கோட்டையை விட்டு எங்கே வெளியே போனாலும், ராத்தூங்க வீடு திரும்ப வேண்டும் என்று பசுவைப் பிரிந்த கன்று போல் மனம் பதைபதைக்க ஆரம்பித்து விடுகிறது.
சென்னுவுக்குப் பாதுகாப்பு தீர்த்தங்கரர்கள் ஆசிர்வதித்த மிர்ஜான் கோட்டைதான். இன்னும் எத்தனை நாள், வருடம் சுவாசித்து நடமாட வேண்டும் என்று விதித்திருந்தாலும், அத்தனையும் இந்த இடத்தை விட்டு வேறெங்கும் இல்லை. இல்லாமல் போன பின்னும் அவள் இங்கே தான் சுற்றிச் சுற்றி வரப் போகிறாள்.
— — — — — — — –
சென்னபைரதேவி கோட்டைக் காரியாலயத்தில் நுழைந்தபோது அதிவீர் தளவாயும், பத்ரபாஹு பிரதானி மற்றும் உப பிரதானிகள் எட்டு பேரும், இரண்டு சுபேதார்களும் அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்தார்கள். எண்பது கல் தொலைவிலிருக்கும் ஜெருஸப்பா நகரின் ஊர்ப் பிரமுகர்களும் ஹொன்னவர் மற்றும் மிர்ஜான் நகரப் பிரதிநிதிகளும் ஒருவர் விடாமல் வந்து பின் வரிசை ஆசனங்களில் பெரும்பாலும் அமர்ந்து சென்னபைரதேவி வருவதற்குக் காத்திருந்தார்கள்.
அரண்மனை முற்றம் கடந்து நீண்ட ஒழுங்கைக்குத் திறக்கும் கதவின் மணி ஒலிக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
”ஜய விஜயீ பவ”.
ஜய விஜயீ பவ
விடா லோங்க அ ரயின்ஹ தா பிமெந்தா
விடா லோங்க அ ரயின்ஹ தா பிமெந்தா
“மிளகுப் பேரரசி நீடு வாழ்க”
மிளகுப் பேரரசி நீடு வாழ்க.
பிரதானி உரக்கச் சொல்ல, அவை முழுக்க எழுந்து நின்று ஒரே குரலில் மீண்டும் ஒலி எழுப்பியது.
முன் மண்டபத்தில் இருந்து இரண்டு வரிசையாக மகளிர் ரோஜா இதழ்களைப் பொழிந்தபடி வர, அவர்களுக்கு முன்னால் மங்கல வாத்தியம் வாசித்தும் தோளில் கட்டித் தொங்கவிட்ட முரசுகளை அறைந்தபடி நகர்கிறவர்களும், சங்கு முழங்கும் கலைஞரும், நாட்டியமாடி வரும் நடனப் பெண்டிருமாக அலை அலையாக வந்து அரசியின் காலடியில் வணங்கி மரியாதை செய்து பதில் மரியாதையாக இளவரசர் நேமிநாதரும் ரஞ்சனாதேவியும் வெள்ளிப் பாத்திரங்களில் வைத்து வழங்கிய காசும், பூவும், சிலருக்குக் அவற்றோடு கூட பொன்னுமாக பெற்று அவைக்கு முதுகு காட்டாமல் நடந்து போனார்கள்.
நேமிநாதனுக்கும் ரஞ்சனாவுக்கும் வழங்கி வழங்கிக் கை ஓயவில்லை.
“மிளகுப் பேரரசி நீடு வாழ்க”
பரிசுப் பொதிகளோடு ஒவ்வொருவராக எதிரில் வந்து குனிந்து வணங்கி வாழ்த்துச் சொல்லிப் போக நேரம் ஊர்ந்தது.
விஜயநகரப் பேரரசின் சார்பில் சாம்ராஜ்ய பிரதிநிதி ஹனுமந்த ராயர் மனம் குளிர வாழ்த்தினார்.
”ஒரு குழந்தையைத் தாய் ஆசிர்வதித்து வாழ்த்துவது போல், விஜயநகரப் பேரரசின் சார்பில் வாழ்த்துகிறேன். சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் என்றும் பத்திரமாக இருந்து எந்த இடரும் இன்றி நீடூழி வாழ்ந்து நல்லாட்சி தந்திடம்மா. ராயர்களின் துணையும் வழிகாட்டுதலும் என்றும் உண்டு”.
வயதான பிரமுகரான அந்த விஜயநகரப் பிரதிநிதியின் பாதம் பணிந்து எழுந்து அவரது
வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள் சென்னபைரதேவி.
“நேமி, இதுவே இன்றைக்கு முழுக்கப் போகும் போல் இருக்கே. மற்ற ராஜாங்கக் காரியத்தை எல்லாம் எப்போது கவனிக்க நேரம் கிடைக்கும் இன்றைக்கு?”
நேமிநாதனை அருகே அழைத்து ரகசியமாகக் கேட்டாள் சென்னபைரதேவி.
“அம்மா, அந்தக் கவலையே வேண்டாம். உங்கள் அறுபதாவது பிறந்தநாளன்று அதைக் கொண்டாடுவது தவிர வேறே எந்தச் செய்கையும் இல்லாமல் திட்டமிட்டுள்ளது. ராஜாங்கக் காரியங்கள் இன்று ஒரு நாள் தாமதமானால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இன்று மட்டும் அனுமதி தாருங்கள்” அவன் அன்பும் மரியாதையுமாகச் சொன்னான்.
”இதென்ன, நீயாக ஏதாவது ஏற்பாடு பண்ணுவது. செய்து முடித்து அனுமதி கேட்பது. புது வழக்கமாக இருக்கிறதே” சிரித்தபடி கேட்டாள்.
படம் : சதுர்முகபஸதி, கர்கலா (சென்னபைரதேவி கட்டியது)
நன்றி commons.wikimedia.org
May 18, 2021
எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘மிளகு’-வில் இருந்து
பிற்பகலில் கோமாளி வந்தான். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பகுதியாக, விருந்துக்கு அப்புறம் கோமாளி ஆட்டமும் பாட்டும் தொடங்கின. ஷெனாய், தெற்கத்திய ஊதுவாத்தியமான நாகசுவரம், மகுடி போல முகத்துக்கு நேரே பிடித்து வாசிக்கும் நீளமான குழல், தெற்கே எங்கும் வாசிக்கும் சிறு குழல், வீணை, சரோட் என்று வாத்திய இசையும், குரல் இசையும் வழங்க அடுத்து அடுத்து பிரபலமான இசைக் கலைஞர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். பெரிய விருந்து. விதவிதமான உணவு வந்து கொண்டே இருந்தது. உண்ட மயக்கத்தில் எல்லோரும் உறங்கிப் போவது இயற்கை என்றாலும் ராணி முன்னால் கொட்டாவி விட்டுக் கண்கள் செருக அரைத் தூக்கத்தில் இருப்பது அவமரியாதை அன்றோ.
தவிர்க்கத்தான் விருந்துக்கு அடுத்து அதிக நேரம் கடத்தாமல் கோமாளி வந்தான்.
ஆரம்பிக்கும்போதே அவன் நேமிநாதனிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டது இந்தத் தோதில் இருந்தது –
“கொஞ்சம் வார்த்தை அப்படி இப்படிப் போகலாமா? சபை நாகரிகம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணுமென்றால் சொல்லுங்க ஐயா”.
சென்னபைரதேவி சிரித்து ஆகட்டும் என்று கைகாட்ட தெம்போடு தொடங்கினான் கோமாளி.
”இது யார் மனதையும் புண்படுத்த இல்லை. எல்லா நடப்பிலும் நகைச்சுவையைக் கண்டு அதை எந்தச் சார்பும் இல்லாமல் கொண்டாடுவோம் வாருங்கள்”.
நான்கு கோமாளிகள், அதில் ஒருவன் பெண்ணாக வேடமிட்டவன் ஆட்டம் நிகழிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முதல் கோமாளி பாடினான்
வெள்ளைக்கார பூமியிலே
நல்ல பல வாசனைகள்
வந்த கதை தெரியுமா?
சொன்னாக்க குத்தவச்சு
வாந்தி வரும் சரியா?
”ரோமாபுரியில் பண்டு பண்டொரு காலத்தில் நடந்தது இது. பொய்யில்லை. முழுக்க உண்மை.
புராதன ரோம் நகரத்தில் துணிகளை வெளிரெறு சலவை செய்து தர நிறுவனங்கள் இருந்தன. அதற்கான வாயு வேண்டுமே? அந்தக் காலத்தில் ஏது? ஆகவே அந்தக் குறிப்பிட்ட வாய் நிறைந்த சிறுநீரை இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, “இங்கே சிறுநீர் கழிக்கவும்’ என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்”.
இரண்டு கோமாளிகள் மூன்றாமவனிடமும் பெண் வேடம் போட்ட நான்காவது கோமாளியிடமும் கேட்கிறார்கள்
“ஐயா, வாங்க வாங்க, மூத்திரம் பெய்து எங்களை கௌரவப்படுத்துங்க. அக்கா மூத்திரம் போகலியா?”
எல்லாரும் சிரிக்கிறார்கள். அந்தப் ’பெண்’ கன்னதில் அடித்து விட்டுப் போக இன்னும் அதிகமான சிரிப்பு எழுகிறது.
முதல் கோமாளி சிரிப்பை அங்கீகரித்து அடக்கி விட்டுப் பேசுகிறான் –
”ரோமானியர்கள் பற்றி இன்னொரு தகவல் – அவர்கள் சலவை செய்யப் பயன்படுத்தியது போக மீந்த மேற்படி திரவத்தை வாய் கொப்பளிக்கவும் உபயோகித்தார்கள். துர்நாற்றம் இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ரோமாபுரியிலேயே கிடைத்தது தவிர, ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரவழைத்த சரக்குக்கும் ஏக கிராக்கியாம். அதி சக்தி வாய்ந்த கிருமிநாசினி இந்த வெளிநாட்டுப் பொருள் என்று பரவலான நம்பிக்கை”.
‘ரோமானியப் பேரரசின் இறக்குமதி அனுமதி பெற்ற கடை. இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஸ்பெயினிலிருந்து வந்த நயம் ..”
சிரிப்பு அடங்க இரண்டு நிமிடமாகிறது. அதற்குள் கோமாளிகள் எல்லோரும் தரையில் கையூன்றி சக்கரம் போல் சுழன்று போகிறார்கள். கை ஊன்றி முன்னால் விழுந்து எழுகிறார்கள்.
“போர்த்துகீசியர்களும் இப்படியான பாரம்பரியம் உள்ளவர்களா?” யாரோ கேட்க, கோமாளி சிரிக்கிறான்.
”அவர்கள் ஸ்பெயின் நாட்டுக்கு கைப்பொம்மை ஆகி எத்தனையோ வருஷம் ஆச்சுதே. மூத்திரம் போகக் கூட ஸ்பெயின் நாட்டிடம் அனுமதி கேட்பார்கள். இங்கிலாந்து மேல் படை எடுக்க நாலு கப்பல் பாலைவனத்தில் கொண்டு வந்து சேருங்கள் என்று அவர்கள் கட்டளையிட்டால் பாலைவனத்தை தேடி ஓடுவார்கள்”
போர்த்துகீசியர்களால் பாதிக்கப்பட்ட ஊர் வணிகப் பிரமுகர்களில் சிலர் சிரிக்க, மற்றவர்கள் சற்றுத் தாமதித்து வாங்கிச் சிரித்தார்கள்.
“கொங்கண பிரதேசத்தில் கொங்கணி பேசினால் நாக்கைத் துண்டிப்போம் என்று அறிவித்து நாக்கைப் பிடுங்க மலிவு விலையில் கத்தி கிடைக்குமா என்று மால்பே வரை தேடித் திரிந்தவர்கள் அவர்கள் ஆச்சே”
சென்னபைரதேவி கைகாட்டி நிறுத்தினாள். நகைச்சுவை அரசியல் கலந்தபோது உக்கிரமான வெடிகுண்டாகி இருக்கிறது. இது இன்னும் தொடர வேண்டாம் என்று எழுந்தாள். அவை கலைந்தது.
ஜெர்சூபா சிதிலமான கட்டிடம் – படம் நன்றி tripadviser.com ட்ரிப் அட்வைஸர்.காம்
May 16, 2021
புதிது எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘மிளகு’ துவக்கம்
எழுதிக் கொண்டிருக்கும் ‘மிளகு’ நாவலின் தொடக்கம் இது –
மிளகு ராணி விடிய வெகுநேரம் இருக்கும்போதே எழுந்து விட்டாள்.
மிளகு ராணி. ஒரு தடவை நிலைக் கண்ணாடியில் நோக்கிச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள்.
கண்ணாடி பெல்ஜிய நாட்டில் செய்து அனுப்பியது. அடுத்து இருப்பது இங்கே மலையாள பூமியில் உலோகத்தைப் பளபளப்பாக்கிச் செய்த ஆரன்முளை உலோகக் கண்ணாடி. இரண்டிலும், வயதானாலும் உற்சாகமான ஒரு மூதாட்டி சிரிக்கிறாள். மிளகு ராணி.
சளுவ வம்ச மகாராணி சென்னபைரதேவி.
சென்னபைரதேவிக்கு தங்களுக்குள் பிரியத்தோடு மிளகு ராணி பட்டம் அளித்து அழகு பார்க்கிறவர்கள் பரங்கியர்கள். இங்கே மிளகும் லவங்கமும் ஏலமும் வாங்க வந்து கொண்டிருக்கும் மேற்குத் திசைப் போர்த்துகீசியர்கள். சென்னா இல்லாமல் அவர்களுடைய மாபெரும் வணிகம் ஒரே நாளில் ஓய்ந்து போய் நின்று விடும்.
மிளகு ராணி. உடம்பில் உயிர் இருக்கும் வரை ஏதேதோ கௌரவமாகவும், பகடியாகக் கேலி செய்து பட்டப்பெயர் தந்தும் பெயர் நிலைக்கும். உயிர் விடைபெற்றுப் போனால் அத்தனை பெயரும் போக அது என்று திணை மாறி விடும்.
இதென்ன விடிந்ததுமே வேதாந்த விசாரம். தலை குலுக்கி அந்தச் சிந்தனையை உதிர்த்தாள் சென்னபைரதேவி.
மிர்ஜான் கோட்டையின் கொத்தளங்களில் இருந்து நடுராத்திரிக்கு அப்புறம் இரண்டு நாழிகை கழிந்தது என்று அறிவிக்கும் முரசு சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது. கோல்கொண்டா கோட்டையில் நேரத்தை அறிவிக்க பீரங்கி முழங்குவார்கள். பீஜப்பூர் சுல்தான்களின் பழக்கம் அது. பீரங்கியோ, முரசோ, இந்த பின்னிரவுக் காலத்தில் யாரும் இதை லட்சியம் செய்யப் போவதில்லை. அவரவர்கள் வீட்டில் துணையை அணைத்துக் கொண்டு துயில் கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் தலையணையாவது அருகே இருக்கும்.
சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினெட்டு வயதில் மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள். ஆயிற்று, அறுபது வயது எட்டிப் பார்க்கிறது.
அறுபதாம் வயதின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக தலை சுற்றலும், நாவில் கசப்புப் படுதலும், சதா தொல்லை கொடுக்கும் மலச்சிக்கலும் அதன் காரணமாக வயிற்றில் வாயு பூரித்து வீர்த்திருப்பதும் மகாராணி என்று பார்த்து அனுமதி வாங்கி நுழையாமல் சென்னாவைத் துன்பப்படுத்த அந்த மெல்லிய தேகத்தில் ரகசியமாக நுழைந்திருக்கின்றன. சென்னாவுக்கு அவற்றைப் பற்றித் தெரியாவிட்டாலும் பொறுத்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டிருக்கிறாள்.
மாதவிலக்கு ஒரு இருபது வருடத்துக்கு முன்பு வரை கடுமையான உடம்பு சார்ந்த பிரச்சனையாகத் துன்பம், பெருந்துன்பம் கொடுத்ததை விடவா இந்த உடல் உபாதைகள் தேகத்தை ஓய்த்துப் போடும்? போகிற இடத்தில் எல்லாம் இடுப்பில் சிவப்புத் துணியை சேலைக்கு உள்ளே ஒரு நாளைக்கு எத்தனை தடவை அணிந்துபோய் மாற்ற வேண்டி இருக்கும். செலுவி என்ற அந்தரங்கமான சேடிப் பெண் மட்டும் இல்லாமல் இருந்தால் சென்னா மீண்டு வந்திருக்காத பெருந்துன்பமாக அந்த உடல் சம்பந்தப்பட்ட சிரமம் வடிவெடுத்திருக்கக் கூடும்.
இன்னும் எத்தனை காலம் இந்தத் துன்பத்தோடு அலைந்து திரிய வேண்டும்? மனதில் வணங்கிக் கேட்டாள் சென்னா. ஆதிநாதரில் தொடங்கி, மஹாவீரர் வரையான இருபத்து நான்கு சமணத் தீர்த்தங்கரர்கள் வரிசையை மனதில் உருப்போடத் தொடங்கினாள் கட்டிலின் ஓரத்தில் கண்மூடி அமர்ந்தபடி. ஒவ்வொரு தீர்த்தங்கராக மனதில் அழைத்து அவர்களின் திவ்ய ரூபத்தை அகக்கண் குளிரப் பார்த்து மனதால் வணங்கி இருக்க, எண்ணத்திலும் நினைவிலும் ஒரு தெளிவும் உற்சாகமும் மேலெழுந்தது.
ஓம் நமோ அரிஹண்டானம்
ஓம் நமோ சிந்தானம்
ஓம் நமோ யரியானம்
ஓம் நமோ சாயானம்
பரபரவென்று சமண மத வழிபாட்டு வாசகங்களில் தலையான நவ்கார் மஹாமந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி கோட்டையின் வெளிச் சுவருக்குச் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
மிர்ஜான் கோட்டை படம் உதவி en.wikipedia.org நன்றி
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
