இரா. முருகன்'s Blog, page 82

March 4, 2021

“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.

நாதன்ஸ் கபேயில் ஜனதா சாப்பாட்டுக்காக டோக்கன் வாங்கும்போது உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷர்மா கண்ணில் பட்டார்.

”விசு, கொஞ்சம் இரு, ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கு”,

ஷர்மா விஸ்வநாதனிடம் சொல்ல, நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று அபிநயித்து டோக்கனோடு உள்ளே நடந்தேன். கொம்பு உள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், எமர்ஜென்சி எதிர்ப்பாளர் கண்ணில் பட்டால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக ஓடி ரட்சைப் படுவதே சான்றோர் சொல்லும் வழிமுறையன்றோ.

சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது அதற்கு முன்பே அவசரமாக முடித்துக் காத்திருந்த விஸ்வநாதன், “போத்தி, நீ ஆயுர்வேத வைத்யன் தானே” என்று கேட்டான்.

குடும்பத் தொழிலாக சொல்லப்போனால், ஹோட்டல் நடத்துவது தான் குடும்பத் தொழில், உபதொழில் வைத்தியம். இது போன தலைமுறை வரை இருந்தது. போத்தி மருத்துவன் இல்லை. ஆனால் அடிப்படை தெரியும் என்று தெளிவு படுத்தினேன்.

”அது போதும், கொஞ்சம் கூட வா”.

உஷாராக வேண்டிய அடுத்த இடம். ஷர்மா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல விலகி அன்பழகன் பழச்சாறு நிலையம் வாசலில் நின்று அவர் வழக்கப்படி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன விஷயம்? விஸ்வநாதனிடம் விசாரித்தேன். தெரிந்து கொள்வதை விட, கேட்டபடி தப்பித்துப் போக வழி கண்டுபிடிப்பதே என் குறிக்கோளாக இருந்தது.

”போத்தி, நான் லெப்ட்னு தெரியும் உனக்கு”.

”கட் பண்ணு, நேரே மெயின் ஃபிலிமுக்கு வா” என்றேன்.

முந்தாநாள் வடக்கே இருந்து இரண்டு சாமியார்கள் வந்திருக்கிறார்களாம். திருப்பதி போய் சிதம்பரமும் மதுரையும் தரிசித்து, ராமேஸ்வரம் யாத்திரையாகி காசி – ராமேஸ்வரம் புனிதப் பயணத்தை முடிக்க உத்தேசித்தவர்களாம்.

யாரிடம் இந்தக் கள்ளத்தனம்? சாமியார்களா வந்திருப்பது? அவன் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னான் –

“சரி இப்போதைக்கு அப்படி வச்சுப்போம். அப்பத்தான் கதை மேலே போகும்”.

அவர்கள் துறவிகள். ரெண்டு பேரும் ஒரு அடியார் இல்லத்தில் இரண்டு நாளுக்குத் தங்கி இருக்கிறார்கள். குருநாதனின் மாடி அறை இருக்கும் அதே தெரு. கோடியில் உள்ளொடுங்கி ஒரு சந்து போகும். முடுக்குச் சந்து. அங்கே ஒரு ஷெட்டில் தான் இருக்கிறார்கள். சரி, பிறகு?

அதில் வயதான சாமியாருக்கு ஜன்னி வந்து புலம்பும் அளவு காய்ச்சல் கண்டிருக்கிறது. இடதுகை வீக்கம் வேறே. ஆண்டிபயாடிக்ஸ் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாராம். பழக்கமில்லையாம். அனால்ஜினும் நோவால்ஜினும் கேட்கவில்லை. ஹோமியோபதி போகலாம் என்று பார்த்தால் அந்த இடத்தில் யாரும் ஹோமியோ கிடையாது. அலோபத் கிட்டே போக முடியாது. ஊசி போட சம்மதிக்க மாட்டார். ஆயுர்வேதம் மருந்து எழுதிக் கொடுத்தால் நாளைக்கே கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலையில் வாங்கிக் கொடுத்து குணப்படுத்தி விடலாமாம். ஆயுர்வேத வைத்தியன் இப்போதைக்கு போத்தி.

”வந்து பத்து நிமிஷம் பார்த்து விட்டு கிளம்பி விடுவேன். இன்னொரு தடவை எல்லாம் அழைக்கக் கூடாது. ஆட்டோ கிடைத்தால் போய் உடனே வரலாம்”.

“ஆட்டோ அப்பவே சொல்லி வச்சாச்சு”.

இந்த உரையாடல் காதில் கேட்காத தூரத்தில் நின்றிருக்கும் ஷர்மா சொன்னார். மூன்று பேரும் பயணமானோம்.

குருநாதனின் மாடி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு இளைஞன் ராஜ மோகனம், ராணி தோரணம் என்று சினிமாப் பாட்டு எழுதிக் கொண்டிருக்க, பக்கத்திலேயே குருநாதன் எழுத்தில் அந்த அயோக்கியன் சேகர் அடுத்தவன் பெண்டாட்டி ரேணுகாவை விதவிதமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் காட்சி நினைவில் வந்து சிரித்தேன்.

விஸ்வநாதன் எதுக்கு என்று சைகை காட்டிக் கேட்டான். அப்புறம் சொல்கிறேன் என்றபடி அவனோடு ஆட்டோவை விட்டு இறங்கினேன். வேட்டகம் வாசல் படியிலேயே உட்கார்ந்து கொண்டார். ஏதோ ஒரு ஜாக்கிரதைத் தன்மை அவரிடம் தட்டுப்பட்டது. ரக்த தோஷாந்தக்கும் இன்னும் சில டப்பாகளும் விஸ்வநாதனிடம் கை மாறின.

கோடவுன் தான். நியூஸ் ப்ரிண்ட் வாடையும், அச்சு மை வாடையும் தூக்கலாக வந்த கிடங்கு அது.

சுவரில் வைத்த போர்ட் ஊர்ப் பேச்சு பத்திரிகையுடையது.

உள்ளே நடக்க, கோடவுன் முடிந்து, ஒரு கதவு. திறந்தால், ஒரு அறை. இரண்டு கயிற்றுக் கட்டில். பின்னால், சிறு உள்ளறையாக டாய்லெட்.

வயதான, ஈர்க்கு போல மெலிந்த ஒரு சாமியார் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார். மண் பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் நனைத்த துணியை அவர் நெற்றியில் வைத்தபடி இளைய துறவி ஒருத்தர் கயிற்றுக் கட்டிலை ஒட்டி மண்டி போட்டு இருந்தார். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ரெம்ப்ராண்ட் ஓவியம் போல இருவரும் தெரிந்தார்கள்.

விஸ்வநாதனைப் பார்த்து இளையவர் ஒரு முறை தலையசைத்தார். ஜாக்கிரதையான இங்க்லீஷில் அவர் சொன்னார் –

“இப்போ ரொம்ப பரவாயில்லே. கை வீக்கம் கொறஞ்சிருக்கு. மட் பாத் எடுக்க வேறே மண் கிடைக்கலே. பீச்சுக்கு போய் நேற்று ராத்திரி வெகு நேரம் சென்று எடுத்து வந்ததை வச்சு வறுத்து மணல் சிகிச்சை கொடுத்தேன். காய்ச்சலுக்கு நெற்றியிலே குங்குமப் பற்று போட்டேன். நல்ல முன்னேற்றம்.”.

விஸ்வநாதன் கொண்டு வந்திருந்த ரக்ததோஷாந்தக் மற்றும் பையிலிருந்து தசமூலாரிஷ்டம், சியவ்னப்ராஸ், திரிபலாதி சூரணம் என்று அரை ஆயுர்வேத வைத்தியனான நான் வந்தனை செய்யும் ஔடதங்களைப் பையில் இருந்து எடுத்து வைத்தான். இளைய சாமியார் முகத்தில் மகிழ்ச்சி மின்னி மறைந்தது

விஸ்வநாதன் பெரியவரின் அருகில் நின்று என்னைப் பார்த்தான். நான் குனிந்து இளைவருக்கு அருகே மண்டியிட்டு உட்கார்ந்து பெரியவரின் நாடியைப் பிடித்துப் பார்த்தேன். சாதாரணமாகத் தான் இருந்தது.

விஸ்வநாதன் கொடுத்த தர்மாமீட்டரை இளையவர் அவசரமாக பக்கத்தில் பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீரில் கழுவித் தர டெம்ப்ரேச்சர் பார்த்தேன்.

சொற்பமாகத்தான் ஏறி இருந்தது. நூறு டிகிரி பாரன்ஹீட். இளையவர் அருகில் வைத்திருந்த திரிபலாதி சூரணம், பாலாரிஷ்டம், ம்ருதசஞ்சீவினி இவற்றைக் காட்டினார். தொடர்ந்து தரலாம் என்றேன்.

முதியவர் புரண்டு படுத்தார். மல்லாந்து இருந்தார் அவர் இப்போது. கம்பீரமான முகம். எங்கோ பார்த்த நினைவு. எங்கே என்று தெரியவில்லை.

‘ராம் பாட்டு பாடு’ அவர் முனகினார். இளையவர் சட்டென்று கட்டில் அருகே உட்கார்ந்து மெல்லிய குரலில் பாடினார் –

”சூரஜ் கி கர்மி ஸே
ஜல்தெ ஹுவே தன் கோ
மில் ஜாயெ தருவர் கி சாயா”

வேனல் காலத்தில் வீதியில் நடப்பவன்
தான்படும் துன்பம் தருநிழல் மாற்றும்
வேதனை தான்மிகு வாழ்க்கையின் பாதையில்
வேறுயார் நிழல்மரம் கோசல ராமா!

வெய்யில் சூடு அனுபவித்தவனுக்குக் கிட்டிய மரநிழல் போல் எனக்கு ராமநாமம் என்று நாமஜபத்தின் பெருமை சொல்லும் கானம் அது.

பெரியவருக்கு மட்டுமில்லை, இளையவருக்கும், எனக்கும் கண்ணில் நீர் வழிந்தது. விஸ்வநாதன் கூட கைகுவித்து நின்றான்.

மீண்டு, என்னை இளையவரிடம் அறிமுகப்படுத்த அவர் கைகூப்பி வணங்கி ராம்ராம் என்றார்.

முதியவர் மறுபடி உறங்கி விட்டார். நாங்கள் கிளம்பினோம்.

இரண்டு நாள் கழித்து விஸ்வநாதனிடம் சாமியார்கள் பற்றிக் கேட்டேன்.

பெரியவர் யார் தெரியுமா?

சொன்னான். எதிர்பார்க்கவே இல்லை.

சரி, அவர் இருக்கட்டும், ராத்திரியில் கடற்கரை மண் எடுத்து வந்து பற்று போட்டு மகன் போல கவனித்துக் கொண்ட, சூரஜ் கி கர்மி சே பாடிய இளையவர்?

விஸ்வநாதன் சாப்பிடக் கிளம்பும் அவசரத்தில் சொன்னான் –

“பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்”.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2021 06:50

February 28, 2021

சுஜாதா என்ற கவிஞர்

சாகித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்: சுஜாதா’ புத்தகத்திற்காக எழுதி, நீளம் கருதி நான் வெளியிடாமல் போன ஒரு சிறு அத்தியாயம் இது :

சுஜாதாவின் நாலாயிரத் திவ்யப் பிரபந்த ஈடுபாடு, தமிழ் மரபுக் கவிதையில் ஈடுபாடாக முகிழ்ந்தது. முக்கியமாக வெண்பாப் பிரியர் அவர். வாசகர்களை வெண்பா எழுதத் தூண்டியதோடு அவ்வப்போது அவரும் உற்சாகமாக நேரிசை வெண்பா எழுதினார்.

வெண்பாவில் எத்தனையோ தலைமுறை கடந்து இளையோரின் விருப்பம் அரும்பியிருக்கிறது என்றால் சுஜாதாவின் அட்டகாசமான, தற்காலக் காட்சிகளைத் தத்ரூபமாகக் காட்டும் விளையாட்டு, வைர ஊசி வெண்பாக்களும் அதற்கு ஓரளவு காரணம்.

’வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு அவர் எழுதிய வெண்பா இது –

பத்துபவுன் தங்கம் பளிச்சென்று கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
பாண்டுவைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சணை.

திருவள்ளுவரைத் தன் வெண்பாவுக்குள் அழைத்து வந்து ஆங்கில நகைச்சுவைக் கவிதை வடிவமான லிம்ரிக் பாணியில் சுஜாதா எழுதிய வெண்பா –

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் – உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

மரபுக் கவிதையில் தற்காலத்தைச் சித்தரிப்பது அவருடைய ‘உடன்’ என்ற கவிதை. கிட்டத்தட்ட எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த மூன்று செய்யுட்கள் இவை. உலகச் சிறார் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் எழுதியது.

கோயிலுக்குப் பக்கத்தில் கார்துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட்எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள்பிடிப்பாய்
வாய்மொழியின் வார்த்தைகளில் வயதை மீறிடுவாய்
வழியெல்லாம் கிடக்கின்ற ப்ளாஸ்டிக் பொறுக்கிடுவாய்.

காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல்உடைப்பாய்
கார்அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டுவிற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழாஎடுக்கப் போகின்றோம்.

திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்சநாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..

அவருடைய ’கவிஞர்களே இவ்வருஷம்’ மரபுச் செய்யுள் இப்படி முடியும் –

நித்த நித்தம் உயிர்வாழும் யத்தனத்தில்
நேர்மைக்கும் கவிதைக்கும் நேரம் இன்றி
செத்தொழியக் காத்திருக்கும் மனுசர் நெஞ்சின்
சிந்தனையைக் கவிதைகளாய்ச் செய்து பார்ப்போம்
முத்தனைய சிலவரிகள் கிடைக்கா விட்டால்
மூன்றுலட்சம் ‘ ராமஜெயம் ‘ எழுதிப் பார்ப்போம் !

மரபில் ஈடுபாடு என்பதால் சுஜாதா புதுக்கவிதையைப் புறக்கணித்தார் என்பதில்லை. கல்யாண்ஜி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் என்று தேடிப் படித்து எழுதிச் சிலாகித்தார் அவர்.

ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவும் சுஜாதா மூலம் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக அறிமுகமானது.

அவர் இங்கே பிரபலமாக்கிய ஒரு ஜப்பானிய ஹைக்கூ இது –

அழகான மரக்கிண்ணம்
பூக்களை நிரப்புவோம்
அரிசிதான் இல்லையே.

’ஹைக்கூ மூன்றே வரிதான் இருக்க வேண்டும். எழுதுகிறவரின் அனுபவமாக இருக்க வேண்டும். உவமை, உருவகம் இருக்கக் கூடாது. முதல் இரண்டடி ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக, மூன்றாம் வரி ஒரு புதிய சிந்தனையைச் சொல்வதாக இருக்க வேண்டும்’ என்ற ஹைக்கூவின் இலக்கணத்தைக் கூறி, வாசகர்களை தமிழ் ஹைக்கூ எழுதத் தூண்டி, தன் பத்திரிகைப் பத்திகளில் அவற்றைப் பிரசுரித்து உற்சாகப்படுத்தியவர் சுஜாதா.

அறிவியலை ஜப்பானிய ஹைக்கூ வடிவத்தில் பொதிந்து வைத்து அவர் எழுதிய தமிழ் ஹைக்கூ இது –

சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப் பூட்டினேனா?

ஹைக்கூ பாதிப்பில் அவர் எழுதிப் பார்த்த குறுங்கவிதை இது –

மன்னாரு வந்தான்
மணி பார்த்தான், படுத்து கொண்டான்
சென்னை விட்டு திருச்சி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தை கடந்து செல்லும்

அவ்வப்போது சுஜாதா ஆங்கிலக் கவிதைகளில் அவருடைய உள்ளம் கவர்ந்தவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தம் எழுத்து மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை இது –

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன்
சிலவேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.

கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்- அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கி விழுகிறது
அதிக நேரமாகாது. நீயும் வாயேன்.

எது நல்ல கவிதை என்பது பற்றி சுஜாதாவுக்கு சந்தேகமே இல்லை. நினைவு கூரும் கவிதை (evocative poem) தான் உயர்ந்த கவிதை என்பார் அவர். அந்த அளவுகோட்டோடு தமிழ்ப் புதுக்கவிதை, மரபுக் கவிதை மற்றும் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அணுகினார் அவர்.

குறிப்பிடத் தகுந்தவை என்று அவர் கருதியவற்றைச் சளைக்காமல் தம் வாசகர்களுடனும் பகிர்ந்து கொண்டார்.

நல்ல கவிதை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய மறுமொழி அவர் எழுதிய கவிதைகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

நல்ல கவிதை உடனே பளிச்சென்று தெரிந்து விடும், குப்பையில் கிடக்கும் பொற்காசு போல. உலகின் கவிதைக் கணங்கள் ரேஷன் செய்யப்பட்டிருக்கின்றன.

அதனால், நல்ல கவிதை அரிது. கிடைக்கும்போது நாம் தவறவிடக்கூடாது. கவிஞர்களையும் பாராட்டத் தயங்கக்கூடாது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2021 19:11

February 25, 2021

சென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி 2021 நேற்று, பிப்ரவரி 24 2021 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடந்து வருகிறது.

கண்காட்சியில் என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகம் (நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம்)
F 7 அரங்கில் காட்சிக்கு / 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைத்துள்ள ஏராளமான நூட்களில் என்னுடையவையும் உண்டு. அவற்றில் சில இந்தப் பதாகை எடுத்துக் காட்டுகிறவை.

வாங்கிப் படித்து வாசிப்பனுபவம் பகிர நண்பர்களை அன்போடு வேண்டுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 00:37

February 22, 2021

வாசித்தே ஓய்ந்த குழு – உரை வெண்பா

என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுப்பில் இருந்து (அச்சுப் பதிப்பு, கிண்டில் மின்நூல்)

எங்க ஊரில் (ஹாலி·பாக்ஸ், மேற்கு யார்க்ஷயர், இங்கிலாந்து) இருக்கப்பட்ட தொண்ணூறு சதவிகிதக் கட்டிடங்கள் விக்டோரியா மகாராணி காலத்துப் பழையவை என்றால், அவற்றுக்கெல்லாம் பாட்டியம்மாவானது, தொழில் புரட்சி காலத்துப் புராதனக் கட்டடமான பீஸ்ஹால். (Piece Hall)

1766-ல் வீட்டில் தறிநெய்து துணி தயாரித்துக் கொண்டுவந்து இங்கே நெசவாளர்கள் விற்கும்போது வாங்கக் கூட்டம் அலைமோதுமாம். கட்டடத்தின் பெயரில் இருக்கும் பீஸ், துணிப்பீஸ்தான்.

நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்) வந்ததால் பீஸ்ஹால் அண்மையில் விழாக்கோலம் பூண்டிருந்தது.

வானம் பார்க்கத் திறந்த இத்தாலிய பாணிக் கட்டிட வளாகம் முழுக்க நம் அண்டை அயல்காரப் பாக்கிஸ்தானியர்கள் (யார்க்ஷயரில் இவர்கள் ஜனத்தொகை அதிகம்) கூடாரம் அடித்து காலுறை, மார்க்கச்சை, பனியன், தோல் செருப்பு என்று விற்றுக் கொண்டிருக்க, நடுவில் மேடையில் விதவிதமான இசைக்குழுக்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க இசைநிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தன.

பக்கத்து பர்மிங்ஹாமிலிருந்து ஓர் ஆந்திரமாமி வந்து பரதநாட்டியப் பட்டறை என்று சொல்லி, பிருஷ்டம் பெருத்த வெள்ளைக்காரர்களை இருபது நிமிஷம் தையத்தக்கா என்று குதிக்க வைத்து இதுதான் பரதநாட்டியம் என்று புன்னகைத்தார். புத்தறிவு பெற்ற ஒளி முகத்தில் திகழ அவர்கள் காலை அகல வைத்து நடந்து போனார்கள்.

அந்தப் பெண்மணியோடு பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய பரதநாட்டியப் பட்டறைக்கு அரசாங்கக் கொடை (grant) கிடைப்பதாகத் தெரிந்தது.

ஆனால் பீஸ்ஹாலில் இசைக்கும் எல்லோருக்கும் அரசாங்கத்தின் கருணாகடாட்சம் கிட்டுவதில்லை.
கிறித்துமஸ் – நத்தார் தினத்துக்கு ஒரு வாரம் முன் அங்கே ஓர் இசைக்குழு. கிட்டத்தட்ட முதியவர்கள் எல்லோரும்.

அருமையாக ஸ்காட்லாந்து இசையை வாசித்தார்கள். முடித்துக் கீழே இறங்கி, பிளாஸ்டிக் வாளிகளைக் குலுக்கிக் கொண்டு வர, அதையும் இதையும் வாங்கிக் கொண்டு கூட்டம் தன்பாட்டில் கலைந்து போய்க் கொண்டிருந்தது.

அந்த முதியவர்கள் ராத்திரி சாப்பிட்டார்களா என்று தெரியாது. என்னுடைய ஒரு பவுண்டில் என்ன வாங்கி இருக்க முடியும்? நான் புறப்பட்டுப் போனபிறகு யாராவது காசு போட்டார்களா?

பனிவிழும் மாலையில் பார்த்தோர் நகர
இனிவரும் காசுகள் எண்ணிக் – குனிந்துதான்
யாசிக்கும் கண்ணொடு யோசித்து நின்றிடும்
வாசித்தே ஓய்ந்த குழு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2021 20:04

February 21, 2021

என்னை வரைந்த படம் – உரை வெண்பா

என் ‘ராயர் காப்பி கிளப்’ கட்டுரைத் தொகுப்பு (அச்சு நூல், மின்நூல்) புத்தகத்தில் இருந்து –

என்னை வரைந்த படம் – உரைவெண்பா

கனமான லெதர் ஜாக்கெட்டில் ஒட்டிய பனியைத் தட்டி விட்டபடி, காசிப்பாட்டி முக்காடு போல் தலைக்கு மேலே கவிந்த தலைக் கவசத்தைப் பின்னால் தள்ளிக்கொண்டு ஹாலிபாக்ஸ் நகரில் கம்ரான் என்ற பாக்கிஸ்தானி ரெஸ்தாரண்டில் மாடிப்படி ஏறுகிறேன்.

காதைப் பிளக்கும் பஞ்சாபி பங்க்ரா இசை. உள்ளே நுழைந்ததும் கட்டியணைத்து வரவேற்கிற ஓட்டல் முதலாளியும், உணவு பரிமாறும் பெயரர்களும் நிஜமான சிநேகிதத்தோடு வரவேற்கிறார்கள். நாங்கள் எதிரி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அரசியல் சொல்கிறது.

பங்க்ராவை நிறுத்திவிட்டு, எனக்காக முகம்மத் ரஃபி காசெட்டைப் போடுகிறார்கள்.

“சவுத்வீ கா சாந்த் ஹை”

பஹாடி ராகத்தைச் சாறு பிழிந்து மூன்று நிமிஷப் பாட்டாகத் தர ரஃபியால் மட்டும்தான் முடியும்.
“இன்னிக்கும் லேட்டா?” எதிர் மேஜையில் ஜார்ஜ் விசாரிக்கிறார். அந்த வயோதிக வெள்ளைக்காரருக்கும் அவர் மனைவிக்கும் அப்படி என்னமோ இந்திய உணவில் ஒரு லயிப்பு. வாரத்தில் நாலு நாளாவது மதராஸ் கறியும் தந்தூரி ரொட்டியும் சாப்பிட இங்கே ஆஜராகி விடுகிறார்கள்.

அவர்களிடம் அன்பான விசாரிப்புகளோடு கோட் ஸ்டாண்டில் லெதர் ஜாக்கெட்டைக் கழற்றி மாட்டும்போதுதான் கவனிக்கிறேன். நீண்ட வெள்ளைத்தாடியும், கழுத்தில் புரளும் நரைத்த தலைமுடியுமாக ஒரு வெள்ளைக்காரர் ஓரமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கம்போல் பப்படம், தொட்டுக்கொள்ள பச்சடி, சாஸ் நிறைத்த ‘டிப்’ கிண்ணங்களோடு வருகிறது. கழுத்து டையைத் தளர்த்திக் கொண்டு, ஒரு விள்ளல் அப்பளத்தை எடுத்து பச்சடியில் தொடும்போது அந்த வெள்ளைக்காரரைப் பார்க்கிறேன்.

என்னைப் பார்த்தபடியே, மடியில் வைத்த வெள்ளைக் காகிதத்தில் கலர் பென்சிலால் கோடு வரைந்து கொண்டிருக்கிறார்.

“உங்க படம் தான்”

பெஷாவரி நானும் பிண்டி பாஜியுமாக என் மேஜையில் வைத்துவிட்டு பெயரர் அகம்மத் சஃபர் என் காதில் கிசுகிசுக்கிறான்.

திடுக்கிட்டுப் போகிறது.

வரையட்டும். ஆனால் முடித்துவிட்டுப் பேப்பரை நீட்டி, “ஆயிரம் பவுண்ட் கொடு” என்று கேட்டால் எங்கே போகிறது?

கையில் இருபது பவுண்ட் இருக்கிறது. ஏடிஎம் கார்டு இருக்கிறது தான். பக்கத்தில் தெருவில் ஏடிஎம் கூட உண்டு. ஆனால் ஒரு லட்சம் ரூபாய், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி மாட்டி வைக்க என் படத்தில் என்ன இருக்கிறது?

ஓவியர் மெல்லச் சிரிக்கிறார். எனக்குச் சிரிப்பு வரவில்லை. பெஷாவரி னானை மென்று கொண்டு அவரைப் பார்க்கத் திரும்பச் சிரித்து என்னையும் முகத்தை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும்படி ஜாடை காட்டுகிறார். சாப்பிட்டபடி எப்படி சந்தோஷப்படுவது? அதுவும் இவருக்கு எவ்வளவு தட்சணை தரவேண்டும் என்று மிரண்டு போய் இருக்கும்போது..

பாதி சாப்பிட்டு முடிப்பதற்குள் அவர் படத்தை முடித்து என் பெயரைக் கேட்கிறார். சொல்கிறேன்.
எழுதி, சுருட்டி அடுத்த நிமிடம் படம் என் கையில்.

ஒரு கையால் பிரித்துப் பார்க்க, இத்தனை பெரிய மீசையும், பெரிய கண்ணாடியுமாக ஒரே சீரியஸாக ஓவியத்தில் என்னை முறைக்கிற பிரகிருதி யார்? நான் தான் என்கிறது கீழே எழுதிய பெயர். ஓரமாக மாரிஸ் என்று ஓவியர் தன் பெயரையும் கிறுக்கித் தேதியும் போட்டிருக்கிறார்.

“இரண்டு பவுண்ட் தர முடியுமா?

அவர் பணிவாக விசாரிக்க, நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். சொத்தை எல்லாம் எழுதி வைக்க வேண்டியதில்லை. கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கியதாக யாரும் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்கள். மீசைக்கும் கோட், டைக்கும், கையில் முள்கரண்டியில் குத்தி எடுத்தபடி இருக்கும் ரொட்டிக்கும் வேண்டுமானால் சிரிக்கட்டும்.

மாரிஸ் அடுத்து ஜார்ஜ் பக்கம் நகர்ந்து அவர் படத்தையும், அவர் மனைவி படத்தையும் வரைய ஆரம்பிக்கிறார். ஜார்ஜ் கையில் கண்ணாடிக் கோப்பையில் ஒரு லார்ஜ் பக்கார்டி ரம்.

நான் கம்ரான் ரெஸ்தாரண்டிலிருந்து புறப்படும்போது, மாரிஸ் இன்னும் நாலு பவுண்ட் வருமானம் பெற்று, மொத்தம் ஆறு பவுண்டைக் கவுண்டரில் நீட்டி, ‘டேக் அவே’யாக கோழிக்கறியும், சப்பாத்தியும் ஆர்டர் கொடுத்துவிட்டு நாற்காலிக்குத் திரும்பி, ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொள்கிறார்.

ஒரு கலைப்படைப்பை வாங்கிய திருப்தியோடு லெதர்ஜாக்கெட்டை மாட்டிக் கொள்கிறேன். யார் கண்டார்கள்? இன்னும் இருநூறு வருடம் கழித்து, இந்த ஓவியம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு அடைந்திருக்கலாம் – வரைந்தவர் மூலமாகவோ, வரையப்பட்டவர் மூலமாகவோ.

ஆயிரம்பொன் செல்லுமோ ஆவிநின்ற அப்புறம்
காயிதக் குப்பையாய்ப் போகுமோ – வாயோயத்
தின்னும் நிலையில் திடுமென்று ஓவியன்
என்னை வரைந்த படம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2021 18:58

February 20, 2021

இடாகினிப் பேய்

என் கட்டுரைத் தொகுதி ‘ராயர் காப்பி கிளப்’ மின்நூல், அச்சு நூல் கட்டுரை இது

இடாகினிப் பேய்

இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன்.

‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு.

சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது.
மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால் விக்கி, அந்தக் குழந்தை மரித்தது. அது கண்டு துயருற்ற அவள் எல்லாக் கடவுள் கோவில்களிலும் ஏறி இறங்கி, குழந்தையை உயிர்ப்பிக்கு படி வேண்டுகிறாள்.

அவள் பாசாண்டச் சாத்தன் கோவிலுக்கு வரும்போது அங்கே இருந்த இடாகினிப் பேய் – இது சக்ரவாளக் கோட்டத்து இடுகாட்டில் பிணங்களை உண்ணுவது – ஒரு பெண் வடிவில் அங்கே வருகிறது. அதுவும், பிறரை எப்போதும் குற்றம் சொல்லும் பெண்ணாக.

மாலதியிடம் ‘நீ தவம் செய்திருக்காவிட்டால் உனக்குத் தெய்வம் வரம் கொடுக்காது’ என்று சொல்லி, அவள் கையில் வைத்திருந்த மகவை எடுத்துப் போய் இருட்டில் வைத்து உண்டு விடுகிறது.

பாசாண்டச் சாத்தன் அந்த மகவாகப் பிறப்பதாகக் கதை நீளுகிறது.

சிலம்பின் ‘கனாத்திறம் உரைத்த காதை’யில் வரும் நிகழ்வு இது.

‘ஐம்பெருங்காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ என்ற பெயரில் முனைவர் மகரிபா எழுதிய புத்தகத்தைப் படிக்க எடுத்ததும் இந்த இடாகினிப் பேய் தூண்டித்தான்.

சிலம்பிலும், மணிமேகலையிலும் காவியச் சுவைக்காகவும், முற்குறிப்பு, பின்னோக்கு உத்தி சார்ந்தும், இன்றைய மாந்திரீக யதார்த்தத்தின் பண்டைத் தமிழ் வெளிப்பாடாகவும் எத்தனையோ தெய்வங்களும், பூதங்களும், வானவர்களும் மனிதர்களோடு ஊடாடிப் போகிறார்கள் – கந்திற்பாவை, நாளங்காடிப் பூதம், சதுக்க பூதம், இடாகினிப் பேய், எரியங்கி வானவன், குரங்குக்கை வானவன், காயசண்டிகை போன்றவர்கள் இவர்கள்.

இந்திரன், பாசாண்டச் சாத்தன், மதுராபதி தெய்வம், மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சம்பாபதித் தெய்வம் போன்ற தெய்வங்கள் அங்கங்கே தட்டுப்படுகின்றன.

இந்திரனையும், பாசாண்டச் சாத்தனையும் தவிரக் காப்பியங்களில் வரும் தெய்வங்கள் எல்லாம் பெண்களே. இது ஏனென்று யாராவது ஆராயலாம்.

‘சம்பாபதித் தெய்வம் முதியோள், மூதாட்டி என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது. தெய்வங்களுக்கு முதுமையுண்டா என்பது தெரியவில்லை’ என்பது போல், தன்னால் அறுதியிட்டு நிறுவ முடியாததை எல்லாம் தெரியவில்லை என்று அடக்கமாகச் சொல்லும் மகரிபா போன்ற முனைவர்கள் அரிதாகவே கண்ணில் படுகிறார்கள். (மகரிபா குறிப்பிட்ட சம்பாபதி, ‘மன்ற அராஅத்த பேஎம் முதிர் கடவுள்’ என்று சங்க இலக்கியத்தில் வருகிற வயசான கடவுளை எனக்கு நினைவுபடுத்துகிறது.)

கண்ணகி மதுரையை எரியூட்டுவதை விவரிக்கும் மதுரைக் காண்டம் – அழற்படு காதையில் அரச பூதம், அந்தண பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என்ற நான்கு பூதங்கள் நகர் நீங்குவதாகக் குறிப்பிடப்படுவது இடைச் செருகல் என்கிறார் மகரிபா. இப்பகுதிகள் ‘கந்தியார் போலும் ஒருவரால் பாடி இடைமடுக்கப் பட்டன’ என்கிறார் ந.மு.வெங்கடசாமி நாட்டாரும், தம் சிலப்பதிகார உரையில் (கழகப் பதிப்பு).

பாசாண்டச் சாத்தனைப் பற்றிச் சொல்லும்போது முனைவர் குறிப்பிடுவது –
“(சாத்தன்) சாதாரண மானுடன் போன்றே ஒரு குடும்பத்தில் மகனாக வளர்கிறான். திருமண உறவிலும் ஈடுபடுகிறான். எட்டாண்டு வாழ்க்கை நடத்துகிறான். அதன் பின் அந்த வாழ்க்கையைத் துண்டித்துக் கொண்டு கோயில் கொண்டாலும், அந்தக் கோயிலுக்கு தேவந்தியை (மனைவி) வரச்சொல்லி அவளோடு கொண்ட தொடர்பைத் தொடர்கிறான்.”

‘கோட்டத்து நீ வா எனவுரைத்து நீங்குதலும்’ என்ற அடியைத் தனியே பார்க்காமல், பின்னால் வரும்
‘ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்
தீர்த்தத் துறைபடிவே னென்றவளைப் பேர்த்திங்ஙன்
மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்’
என்பதோடு சேர்த்துப் பார்த்தால் தேவந்தி மணவாழ்க்கையைத் தொடரக் கோவிலுக்குப் போகவில்லை என்பது புலனாகும்.

(‘ஐம்பெரும் காப்பியங்களில் இயற்கையிறந்த கூறுகள்’ – முனைவர் எஸ்.கே.எம்.மகரிபா – வெளியீடு : முப்புள்ளிப் பதிப்பகம், 24, கிரிநகர், இராமாபுரம், சென்னை 600 089).

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2021 19:02

February 19, 2021

Why should someone hoot in a discussion about Raymond Carver’s minimalist writing

Jaipur Literature Festival 2021 has gone digital in an awesome manner.

The festival site is fabulously organized.. it is a pleasure to go thru – a shade better than Music Academy site during Dec 2020 Music Festival.

It is a delight to ‘wander and hang around’ at the patio and the pavilion – Front lawn, Darbari Hall, arcade… for participating in the scheduled literary sessions.

At Jaipur Literary Festival (JLF)2021 now going on –

a lovely discussion between Ranjit Hoskote and Anupama Raju (both poets; Ranjit is also an arts curator) on ‘Words, image and text’

Ranjit mentioned during the session that he was involved in a project to convert a stage play written by Girish Karnad to an opera along with Girish and the grossly underrated music director Vanraj Bhatia.

I tweeted to him-excellent session. Ranjit, Is there any possibility of the ‘stage play to opera’ project you were involved with Girish Karnad and Vanraj Bhatia reviving to see the light of the day?

He replied – Thank you so much for your response to the session! The ‘Agnivarsha’ opera project was taken forward with courage and zest by Rani Dey Burra, who wrote most of the libretto after my early work on it. But the funding needed to achieve it as a score and a performance is vast…

I wrote – sad to know.. on a different note, liked your recitation of the ‘1857’ poem and recalling meeting with Nissim Ezekiel at PEN office and on wearing the translator’s cap.I find after translating good writing, it is immensely difficult to come out of the spell of the original writer

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2021 16:09

February 18, 2021

ஊரும் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே

என் கட்டுரைத் தொகுப்பான ‘ராயர் காப்பி கிளப்’ அச்சுப் புத்தகம், கிண்டில் மின்நூலில் இருந்து-

எழுபது ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்டது தமிழ்த் திரையிசை. அதில் தோய்ந்து தகவல் சுரங்கமாக, ஆழ்ந்த புலமையோடு ரசனையைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் அபூர்வம். ‘ஸ்கிரீன்’ பத்திரிகையில் திரை இசை பற்றித் தொடர்ந்து எழுதி வந்த வி.ஏ.கே ரங்காராவ் இவர்களில் முன்னோடி. இந்தித் திரையிசைக்கு ராஜு பரதன், தற்போது வி.கங்காதர் போல் .

(இது 2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. திரை இசை என்சைக்ளோபீடியாவான நண்பர் சரவணன் நடராஜனை இதற்கப்புறம் தான் அறிமுகப் படுத்திக் கொண்டேன்.)

தமிழ்த் திரையிசையின் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட இரண்டு இளம் நண்பர்கள் எனக்கு உண்டு. நாங்கள், தி.ஜானகிராமன் எழுதி, சிறந்த நாடக, திரைப்படக் கலைஞரான எஸ்.வி.சகஸ்ரநாமத்தால் தன் சேவா ஸ்டேஜ் குழுவினரின் நாடகமாகவும், பின் அவராலேயே திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்ட ‘நாலு வேலி நிலம்’ பற்றி அண்மையில் பேசிக் கொண்டிருந்தோம்.

தஞ்சைக் கிராமத்தைக் களனாகக் கொண்டு உருவான அப்படத்தில் வரும் ஓர் அழகான காதல் பாடல் – திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியது. மாட்டு வண்டியில் போய்க் கொண்டே பாடுகிற காதலன் முத்துராமன் என்கிறார் நண்பர். நாயகி யாரென்று தெரியவில்லை. இந்த இனிமையான பாடல் முழுக்க மாட்டு வண்டியின் காளை மணியோசை இசைந்து வரும் அழகே தனி. பாடலும் அழகுதான்.

காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல் எனக்கு ‘பாபி’ இந்திப் படத்தில் வரும் ‘ஜூட் போலே கவ்வா காடே – காலே கவ்வே ஸே டரியா’ வை நினைவு படுத்தும்.
பாடல் முழுவதையும் தன் நினைவிலிருந்து கொடுத்த நண்பருக்கு நன்றி. நீங்களும் ரசிக்க அது இங்கே –
காதல்
ஊரும் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு
நான் வருவேன் சாமத்திலே.

நல்ல பாம்பு வேடம் கொண்டு
நடுச் சாமம் வந்தாயானால்
ஊர்க்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்திடுவேன்.

ஊர்க்குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்தாயானால்
செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய்த் தூக்கிடுவேன்.

செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய்த் தூக்க வந்தால்
பூமியைக் கீறியல்லோ
புல்லாய் முளைத்திடுவேன்.

பூமியைக் கீறியல்லோ
புல்லாய் முளைத்தாயானால்
காராம்பசு வேடம் கொண்டு
கடித்திடுவேன் அந்தப் புல்லை.

காராம்பசு நீயானால்
கழுத்து மணி நானாவேன்.
ஆல மரத்தடியில்
அரளிச் செடியாவேன்.

ஆல மரம் உறங்க
அடி மரத்தில் வண்டுறங்க
உன் மடியில் நானுறங்க
என்ன வரம் பெற்றேண்டி!

அத்தி மரமும் ஆவேன்
அத்தனையும் பிஞ்சாவேன்.
நத்தி வரும் மச்சானுக்கு
முத்துச் சரம் நானாவேன்.

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலாக இருக்கலாம் என்றார் நண்பர். இசை கே.வி.மகாதேவன். (சேவா ஸ்டேஜ் ஆத்மநாதனாகவும் இருக்கலாம்).

இது பற்றி, எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மருமகனும், தமிழ்ப் புதுக்கவிதையில் முன்னோடியுமான கவிஞர் – ஓவியர் வைதீஸ்வரன் சார் என்னிடம் சொன்னது இது –

“நாலு வேலி நிலம் திரைப் படத்தை திரும்ப நினைத்துப் பார்க்கும்போது எனக்குள் சோகம் கவ்விக் கொள்ளுகிறது..

தகவல்கள் துல்லியமாக ஞாபகம் இல்லை. பாடலை இன்று படிக்கும் போது அதை ஒரு நாடோடிப் பாடல் தொகுப்பில் கண்டு பிடித்து விடலாம் என்று தோன்றுகிறது.

ஒரு படத்திற்கு பாடலாசிரியர் என்று பொதுவாக ஒருவர் பெயரை திரையில் காண்பித்தாலும் சில இடைச் செருகல் பாட்டுக்களும் அவருடைய பங்களிப்பாகவே தோற்றம் கொண்டு விடுகின்றன. இன்றைய சினிமாவில் கூட இப்படிப் பட்ட சந்தர்ப்பங்கள் நேரிடுகின்றன….

நாலு வேலி நிலத்தில் நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர்.
இந்தப் படம் திரு எஸ்.வி. ஸஹஸ்ரநாமத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிச்சியை ஏற்படுத்தி விட்டது..

ஒரு தடவை இந்தப் படத்தை தொலைக் காட்சியில் ஒளி பரப்பு செய்தார்கள். 10 வருடங்களுக்கு முன்பு. மறுபடியும் திரையிடப் பட்டால் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.”

படம் சரியாக ஓடாததால், டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் வாங்கிய பணத்தை எஸ்.வி.சகஸ்ரநாமம் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2021 18:51

February 13, 2021

என் ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ கவிதைத் தொகுப்பில் இருந்து

பெண்

கனவிலும்
வரிசை தப்பாது வரும்
வீடுகள் கடந்து
கோபுர நிழல் நீளும்
சின்ன வீதியில்
நடக்க மாட்டேன்.

ஆற்றங் கரையில்
ஊற்றுத்தோண்டிக்
கதைகள் பேசி
அலுத்த பின்னே
குடம் நிறைத்து
ஈரமண் உதிரும்
சிற்றாடை அசையக்
கூடநடந்து வந்த தோழிகளைத்
தேட மாட்டேன்.

அப்பா வந்ததும் குதித்தோட
அண்ணாவோடு காத்திருந்த
கல் யானைப் படிகள் ஏறி,
ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில்
அம்மாவின் பழம்புடவை
தரை புரளும் ராணியாய்
வலம் வந்த திண்ணை கடந்து
இருண்ட நடையுள்
போக மாட்டேன்.

மௌனமாய்க் கண்ணீரில்
அம்மா கரைய,
அண்ணா உறவு மறுக்க,
தெருவே கூடிப் பேசி நிற்க,
படமாய்த் தொங்கிப் புன்னகைக்கும்
அப்பாவையே பார்த்தபடி
நின்ற கூடத்தில்
பாதம் பதிக்க மாட்டேன்.

உறவுகள் கடந்து உன்னைப் படர்ந்து
மலர்த்திய உறவு தொட்டிலில் துயிலும்.
பாதித் தலையணையில் விழித்த உடலிருக்க
மனம் மட்டும் அங்கெல்லாம்
மெல்லப் பயணம் போகும்.

(கணையாழி 1985)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2021 19:20

அசோகமித்திரன் நினைவுகள் -2 (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்)

என் கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ கிண்டில் மின்நூலில் இருந்து –

அசோகமித்திரன் என் அப்பாவின் சிநேகிதர். இரண்டு பேரும் தி.நகர் வாசிகள் ஆனதால், அது நடேசன் பூங்கா நட்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் முற்பட்டதாம். ராணுவத்தில் இருந்த, அசோகமித்திரனின் உறவினரான, அவர்களுக்கு ஒரு தலைமுறை முந்திய யாரோடோ தொடங்கியதாக இருக்கும் என்று தெரிகிறது.

அது தெரியாமலேயே, அசோகமித்திரனை கணையாழிக்காரராகவே நான் முதலில் அறிந்திருந்தேன்.

எண்பதுகளில் தில்லியில் நான் வேலை பார்த்தபோது கணையாழிக்கும் தீபத்துக்கும் அங்கேயிருந்து கவிதை அனுப்புவது வழக்கம். அசோகமித்திரன் அப்போது கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்தார்.

நான் எழுதிய சிறுகதை ஒன்று. ‘வண்டி’ என்ற பெயரில் கணையாழியில் பிரசுரமானது. (தேர் தொகுப்பில் உண்டு). அது வருடம் 84-ல் என்று நினைவு. கவிதையிலிருந்து உரைநடைக்குக் காலடி எடுத்து வைத்த நேரம். அச்சில் வந்த என் முதல் கதை அதுவாகத்தான் இருக்கும்.

அதற்கு முன்னால் எழுதிய சிறுகதையை தீபம் நா.பாவிடம் கொடுத்திருந்தேன். நான் எழுதிய கவிதையை எல்லாம் தீபத்தில் மறுக்காமல் பிரசுரித்த அவர் கதையைப் பற்றிக் கேட்டபோது மெல்லச் சிரித்தார். பின்னாளில் வீதி குறுநாவலாக நீட்சி அடைந்த அந்தக் கதையும் தேர் தொகுப்பில் உண்டு.

கணையாழிக்கு அனுப்பிய வண்டிக்கு ஒரு விபத்தும் நேராமல் அனுப்பிய இரண்டாம் மாதமே பிரசுரமானது. ஒரு குளிர்கால சனிக்கிழமை ராத்திரி, கரோல்பாக் அஜ்மல்கான் ரோட் பக்கத்து நடராஜன் மெஸ்ஸில் ராச்சாப்பாடு முடித்து, தமிழ்க் கடையில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு கணையாழி வந்தாச்சா என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டேன். வந்தாச்சு என்ற வழக்கத்துக்கு மாறான பதிலோடு கையில் கணையாழி பனியில் நனைந்த குழந்தையாக என் கையில். பிரித்த பக்கத்தில் வண்டி.

சிகரெட்டைத் தரையில் போட்டு அணைத்தேன். சன்னமான பனிக்காற்று. சுபாவமாகவே அழகான எல்லா பஞ்சாபிப் பெண்ணும் பேரழகியாகத் தெரியும் ராத்திரி வெளிச்சம். லிப்ஸ்டிக்கும், பிரம்மாண்டமான காதணிகளும் அணிந்த ஆரணங்குகள் அந்த ராத்திரிப் பனியில் கண்ணில் கனவு மிதக்க நிற்கும் ஒரு கெச்சலான மதராஸி இளைஞனை லட்சியமே செய்யாமல் அஜ்மல்கான் வீதி நடைபாதையில் இன்னும் லிப்ஸ்டிக்கும், தோடும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாங்கி முடித்து பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பானிபூரி, பஞ்சாபி வாசனைக்கு நடுவே காஷ்மிலான் ஸ்வெட்டரோடு என் வெஸ்பா ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி வண்டி முழுக் கதையையும் படித்து முடித்தபோது ஒரு வரிகூட சேதாரம் இல்லாமல் அச்சில் சுகப் பிரசவம் என்று தெரிய வந்தது. மிதமான வேகத்தில் ஸ்கூட்டர் விட்டுக்கொண்டு இந்தியா கேட், லோதி காலனி வழியாக லாஜ்பத்நகர் வரும் வரை கதை வரிகள் மனதில் வரிசை கலைந்து வந்தபடி இருந்தன.

லாஜ்பத்நகர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம் ஒரு வீட்டு முதல் மாடியின் தனிக்கட்டையாக வாசம். வீட்டில் அந்த ரிடையர்ட் அதிகாரி, அவருடைய வயதான அம்மா, மனைவி, சகோதரி என்று நானிஜி, மாதாஜி, பூவாஜி . மற்றும் குல்வந்த் , வீரான்வாலி , அமர்ஜித் என்று பெண்கள் பள்ளியிறுதியிலும் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

பாங்க் ஆபீசர் சோக்ரா என்பதால் மட்டும் என்னை வாடகை வாங்கிக்கொண்டு முதல்மாடியில் குடிவைக்க ஏற்றவில்லை மேஜர். தப்புத் தண்டாவுக்குப் போகமாட்டான், அந்த மாதிரி ஏதாவது ஏடாகூடமாக நினைக்க முற்பட்டாலும் புஜபல பராக்ரமசாலிகளான பெண்கள் பையனை நிர்மா போட்டுத் துவைத்து பால்கனி கொடியில் காயப்போட்டு விடுவார்கள் என்று சர்வ நிச்சயமாகத் தெரியும் அவருக்கு.

வீட்டுக்குள் சிகரெட் பிடிக்காதே, வீட்டுச் சமையலறையில் தேங்காய் உடைக்காதே என்று அம்மா போட்ட நிபந்தனையோடு (எனக்கு முன்னால் அங்கே இருந்த ஒரு தலைச்சேரி நாயர் குடும்பத்தோடு தினசரி தேங்காய் யுத்தங்கள் நடத்தி அலுத்துப் போயிருந்தார் அவர்), ராத்திரி பத்து மணிக்கு முன்னால் வீட்டுக்கு வந்து சேராவிட்டால் வாசல் இரும்புக் கதவு பூட்டப்படும் என்ற தடைச்சட்டமும் அமலிலிருந்தது.

தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கவலை இல்லை. செண்ட்ரல் மார்க்கெட் பஞ்சாபி தாபாவும், லஜ்பத்நகர் தமிழ் மெஸ்ஸ¤ம், லோதி காலனி கர்னாடகா பள்ளி மெஸ்ஸ¤ம், போதாக்குறைக்கு யு.என்.ஐ காண்டீனும், கல்யாணமான நண்பர்களின் இல்லங்களும் இருந்தபடியாலும், இங்கெல்லாம் போய்க் கறங்கித் திரும்ப ஸ்கூட்டருக்குப் போடப் பெட்ரோல் அப்போது ரொம்பவே மலிவாகக் கிடைத்து வந்ததாலும், வீட்டில் சமையல்கட்டுக்குப் போவதே பாட்டில் மூடியை அகற்றிப் போடவும், பிரட் டோஸ்ட் செய்யவும்தான்.

சிகரெட் சமாச்சாரமும் கிட்டத்தட்ட ஒ.கேதான். சட்டமாக பால்கனியில் நின்று புகை விடாமல், எல்லாக் கதவையும் மூடிவிட்டு ஊதினால் புகை கீழே இறங்கி, தலைப்பா மாடிப்படியேறாது.
ஆனால், ராத்திரி பத்து மணி ஷரத்து கடைப்பிடிக்க கஷ்டமானது. வாரத்தில் இரண்டு தடவையாவது மீற வேண்டிப் போகும். மலையாள சலச்சித்ரோல்ஸவம், பெங்காலி படவிழா, மும்பையிலிருந்து குழு நாடகம் என்று கவுரவமான சாக்குகளும் இதற்குச் சில வேளை காரணமாகும்.

வண்டியை வெளியில் நிறுத்திவிட்டு, கம்பிக் கதவேறித் திருடன் மாதிரி உள்ளே குதித்து மாடிக்குப் போகும்போது கவுர்பெண்ணுகள் முதுகுக்குப் பின்னால் சிரிக்கிற மாதிரி பிரமை.

நான் தில்லிக்குப் போனது ஏக் துஜ்ஜே கே லியே வந்த நேரம். தேரே மேரே பீச் மே கைசா ஹை ஏ பந்தன் என்று எஸ்.பி.பி குரலில் பாடியபடி, எல்லாச் சுவரையும் கடந்து, வீட்டு இளம்பெண்களில் ஒருத்தியைக் காதலித்துக் கல்யாணம் செய்து, தினசரி லிப்ஸ்டிக்கும் முட்டையும்,மதர்ஸ் டயரி டோக்கன் பாலும் வாங்கி வந்து கொடுத்து, தலைப்பாக் கட்டிக் கொண்டு தில்லியிலேயே செட்டில் ஆகிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம் அது.

கல்யாண நினைவு இல்லாமல் கணையாழி நினைவில் அந்த ராத்திரியும் சுவரேறிக் குதித்து உள்ளே போனேன்.

நடு இரவில் ரஜாயைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்தபடி அசோகமித்திரனுக்கும், கஸ்தூரிரங்கனுக்கும் நன்றிக் கடிதம் எழுத உட்கார்ந்து எப்படித் தொடங்குவது, என்ன எழுதுவதென்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருந்தபடி கண்ணயர்ந்ததும், காலையில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏழு மணி ஷோவுக்கு நிசாமுத்தீனில் ‘ஒரு கை ஓசை’ போனபோது கூடக் கையோடு கணையாழியைக் கொண்டு போய் அரையிருட்டில் திரையில் அஸ்வினியும் பாக்யராஜும் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும்போது, பத்திரிகையைப் புரட்டி இன்னொரு தடவை வண்டி படித்ததும் நினைவு இருக்கிறது.

நான் தில்லியில் இப்படி ’படைப்பாளிக்கே உரிய, உரிய என்னது அது. ஆமா, படைப்பு தரும் கர்வத்தில், அளித்த திருப்தியில் திரும்பத் திரும்ப மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இன்னும் நாலு பாக்கெட் ·போர் ஸ்கொயர் சிகரெட் காலு கடையில் வாங்கிக் காலி செய்து கொண்டிருந்தபோது சென்னையில் என் வீட்டுக்கு அசோகமித்திரன் வந்திருக்கிறார். அப்பாவைச் சந்திக்க இல்லை. என்னைப் பார்க்கத்தான்.

அடுத்த வார இறுதி ட்ரங்க் காலில் எல்லா ஸ்தாயியிலும் சஞ்சரித்து ஏகப்பட்ட ஹலோ ஹலோ கேக்கறதா சகிதம் (அப்போதெல்லாம் ட்ரங்க் கால் அப்படித்தான்) அப்பா இதை எனக்குச் சொல்ல, தாங்க முடியாத ஆச்சரியம். அசோகமித்ரனா? என்னைத் தேடியா? ஏகப்பட்ட சந்தோஷம்.

அசோகமித்ரன் வந்து போயிருக்கிறார் இந்தக் கத்துக்குட்டியைப் பார்க்க. மகத்தான சோகம். அவர் வந்த போது எதிர்கொண்டு வரவேற்க நான் சென்னை திநகர் வீட்டில் இல்லை. தில்லியில் வங்கிப் பணி என்று லாஜ்பத்நகரில் குப்பை கொட்டிக் கொண்டிருந்திருக்கிறேன்.

”நீ இல்லேன்னா என்ன? எனக்கு ரொம்ப நாள்பட்ட ஃப்ரண்ட் ஆச்சே. இத்தனை வருஷக் கதை பேசிண்டிருந்தோம். சுந்தரம்னு அவர் மாமா மிலிட்டரியிலே இருந்தார் ஹலோ ஹலோ கேக்கறதா” – அப்பா சகஜமாகப் பதில் சொல்லி விட்டார்.

”அசோகமித்ரன் சார் என்ன சொன்னார்?”

”அது, நீ கணையாழியிலே எதோ கதை எழுதினியாமே. படிச்சேன்னார்”.

அடுத்த சென்னைப் பயணத்தில் எங்கள் மோதிலால் தெருவுக்கு நாலைந்து தெரு கடந்து பஸ் ஸ்டாண்டுக்கு கிழக்கே தாமோதர ரெட்டி தெருவுக்குப் போனேன் -அசோகமித்ரன் வீடு அங்கே தான். குலமுறை கிளர்த்தியதும் ஆத்மார்த்தமான, சுருக்கமான சந்திப்பு. அவர் கேட்டார் –

”ஆமா, ஏதோ பேங்க் எக்ஸாம் எல்லாம் இருக்காமே?”

”ஆமா சார், CAIIB Certified Associate of Indian Institute of Bankers. பார்ட் ஒன், பார்ட் டூ அப்படீன்னு ரெண்டு பிரிவு”.

”முடிச்சாச்சா?”

”இல்லே சார், பார்ட் ஒன் மட்டும் முடிச்சிருக்கேன்”

”ரெண்டு பார்ட்டையும் முடிச்சுட்டு கதை, கவிதை எல்லாம் வச்சுக்கலாம்கறார் உங்கப்பா”
அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

”சொல்லுங்கோ அவன் கிட்டேன்னு அழுத்தமா சொன்னார். சொல்லிட்டேன்”.

கடமை முடித்த நிறைவோடு சொன்னார்.

ஆறு மாதம் கழித்து பணி மாற்றலில் சென்னை வந்து சேர்ந்தபோது, தி.நகர் போஸ்ட் ஆபீஸ் அருகே சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அசோகமித்ரன் சாரைக் கண்டு மரியாதையோடு கையாட்டினேன்.

”எழுதியாச்சா?”

”ஆமா சார், தீபத்திலே ஒண்ணு. அன்னம் விடு தூதுவிலே.”.

”பேங்க் பரீட்சை?”

அடுத்த போஸ்ட் ஆபீஸ் வாசல் சந்திப்பில் ஆச்சு என்று பதில் சொல்ல முடிந்தது. நாலு மாதம் கழித்து.
(2017)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2021 19:00

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.