இரா. முருகன்'s Blog, page 2
April 9, 2025
பவானி தயானி பாடிய பர்வீன் சுல்தானா இந்தியர்க்குச் சொல்வது யாதும் ஊரே
என் ஒன்பதாவது கட்டுரைத் தொகுதியாக வெளியாக இருக்கும் ’யாதும் ஊரே’ நூலிலிருந்து –
————————————————————————–
Feb 27, 2009 வெள்ளி
.
நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி, காம்போதி, கீரை வடை, ஜோன்புரி, சுப பந்துவராளி என்று எதைக் கேட்டாலும் பார்த்தாலும் பக்கத்தில் டாய்லெட் இருக்கிறதா என்றுதான் அநிச்சையாகக் கண் தேடுகிறது.
போன ஞாயிற்றுக் கிழமை (ஃபெப்ரவரி 22) நாரத கான சபா தினமாகப் போய்விட்டது. மாலை முழுதும் பர்வீன் சுல்தானா. கூடவே நாள் முழுக்க, ராசியான சபா வாசனை.
ஞாயிறு மாலை நா.கா.சபாவில் குனிதாஸ் சம்மேளன். இந்துஸ்தானி இசை விழா. மும்பையில் 33 வருடமாக வெற்றிகரமாக நடக்கிற இந்த விழா சென்னைக்கும் வந்து இது மூன்றாவது வருடம். இசைக் கலைஞர் சி.ஆர்.வியாஸ் குனிதாஸ் ட்ரஸ்ட் ஏற்படுத்தி நடத்தி வரும் விழாவை இப்போது முன்னால் கொண்டு போகிறவர் அவருடைய மகனும் சந்தூர் இசைக் கலைஞருமான சதீஷ் வ்யாஸ்.
சதீஷ் வ்யாஸின் சந்தூர் கச்சேரியோடு ஐந்தரைக்கு ஆரம்பமாக வேண்டிய விழா ஆறு மணிக்கு தொடக்கம். இந்த சந்தூர் ரொம்ப சள்ளை பிடித்த வாத்தியம். சரிபாதியாக அறுத்த சவப் பெட்டிமேல், சரி வேணாம், வெறும் பெட்டி மேல் ஏகப்பட்ட தந்திகள். இதை ஒவ்வொன்றாக தட்டிக் கொட்டி முடுக்கிக் கட்ட, பக்க வாக்கில் ப்ருகடைகள். ஒவ்வொரு ராகம் வாசிக்கும் முன்பும் ராக, தாள லட்சணம் பார்த்து அங்கங்கே முடுக்கி, அங்கங்கே தளர்த்தி, தட்டிக் கொட்டி ஏகத்துக்கு மெனக்கெட வேண்டும்.
சதீஷ் ஒரு பதினைந்து நிமிஷம் இப்படி மல்லுக்கட்டிய பிறகு மதுவந்தி வாசிக்கப் போவதாக அறிவித்தார். கொஞ்சம் சிம்மேந்திர மத்யமம் சாயல் அடிக்கும் இந்த ராகத்தில் எனக்குப் பழக்கமான இந்தி சினிமாப் பாட்டு ஏதும் இல்லாததால் உதவிக்குக் கைகாட்ட முடியவில்லை.
மதுவந்தியை விளம்பித காலம் ‘ஏக் தாள்’ மற்றும் 16 அட்சரம் ‘தீன் தாள்’ துரித காலத்திலும் வாசிக்கப் போவதாக வேறு வ்யாஸ் அறிவித்ததால் பாதி நேரம் காரேஜில் மோட்டார் மெக்கானிக் கார் இஞ்சினை ட்யூன் பண்ணுவதை வேடிக்கை பார்க்கிறது போல் கழிந்து போனது. இதையும் மீறி மதுவந்தி அவ்வப்போது சுகமாக வந்து போனது.
பிற்பகல் ராகமான மதுவந்தியை அவர் முடித்தபோது வசந்தா ராகம் பாடும் சாயந்திரமும் கடந்து போய், ராத்திரி ஏழரை மணி. அவர் ஏறக் கட்டினால் தான் பர்வீன் சுல்தானா மேடையேற முடியும். வந்த கூட்டம் எல்லாம் (என்னையும் சேர்த்து) பர்வீன் பக்தர்கள். எல்லோருமே நேரில் அவர் இசையைக் கேட்டு ஏக காலமாகி விட்ட ஏக்கத்தோடு வந்து சேர்ந்தவர்கள்.
வ்யாஸ் முடிக்கும் முன் எடுத்துக் கொண்டது கீர்வாணி. நம் இளையராஜாவுக்கும் கர்னாடக சங்கீத வித்வான்களுக்கு மட்டும் பிரியமான ராகம் இல்லை இது. லட்சக்கணக்கான மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கிற வாங்கில் கூட கீர்வாணி சாயல் உண்டு.
கீர்வாணியே அராபிய இறக்குமதி என்கிறார்கள்.
தீன் தாள் தான் என்றாலும் மதுவந்திக்காக முடுக்கிய தந்தி கீர்வாணி கிட்டே கூடப் போகாதோ என்னவோ. இன்னும் கொஞ்சம் ஒர்க் ஷாப் வேலை. அப்புறம் வாசிப்பு. பேசாமல் இனிமேல் சந்தூர் வித்துவான்கள் ராகத்துக்கு ஒன்றாக ட்யூன் செய்து ஏழெட்டு சந்தூரை பெட்டி போல் அடுக்கி – வேண்டாம் சர்ச் பக்கம் வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு போனால் சங்கடமாகப் போகும்.
பர்வீன் பாட வரும்போது ராத்திரி எட்டே கால் மணி. நாரதகான சபாவே அதிர்கிற படி கரகோஷம். சட்டென்று நம்ம குடும்பத்தில் ஒருத்தர் மேடையில் வந்து உட்கார்ந்த மாதிரி எல்லோரோடும் சகஜமாகப் பேசிச் சிரித்து ஒரு நிமிஷத்தில் அந்நியோன்னியத்தை ஸ்தாபிக்க அவரால் மட்டும் தான் முடியும். கர்னாடக சங்கீத பாடகிகள் யாரும் மேடைக்குப் போனால் இப்படிப் பேசுவது இல்லை. விசாஹா ஹரி என்ன ஆனார் என்று விரலை மடக்கினால் ஒத்துக் கொள்ள முடியாது. அவர் ஹரிகதை. சாவகாசமாக விசாகா.
‘நீங்க மெட்ராஸ். நல்ல அருமையான ரசனை. ஆனா, ராத்திரி ஒன்பது மணியானா டவுன் பஸ்ஸை ரயிலைப் பிடிக்கக் கிளம்பிடுவீங்க .. அதுக்குள்ளே முடிச்சுக்கறேன் .. சுருக்கமா ஒரு மாரு பெஹாக் மொதல்லே’. பர்வீன் தொடங்கினார்.
தன்யாசி மாதிரி ‘போர்க்கள’ ராகம் இது. அதனால் தானோ என்னமோ எத்தனையோ போர்க்களம் கண்ட சீக்கிய குருமார்களின் குரு க்ரந்த் சாகிப் – ‘குர்பானி’ பக்தி இசை கானங்கள் பலவற்றையும் மாரு பெஹாக் அலங்கரிக்கும்.
பர்வீன் சுல்தானாவின் மாரு பெஹாக்கை எழுத்தில் வர்ணிக்க நினைப்பது சமுத்திரத்தை உள்ளங்கையில் அள்ளிப் பார்க்கிற முயற்சிதான்.
அவருடைய இசையோடு கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போயிருந்தால் எனக்கு முக்தி கிட்டியிருக்கும். தெய்வீக இசை என்றால் எம்.எஸ் மாதிரி பர்வீன் மட்டும் தான்.
மாரு பெஹாக் முடிந்ததும் கைதட்டோடு முழு அரங்கமே ‘பவானி, பவானி’ என்று குரல் கொடுத்தது.
‘தெரியும், நீங்க என்னை பவானி பாடாம விடமாட்டீங்க. அதுக்கு முந்தி ஒரு மீரா பஜன். அதுக்கும் முந்தி ரெண்டு வார்த்தைகள். நம்ம இசை உயர்ந்தது மட்டுமில்லே. புனிதமானது. ஒரே நாடு இந்தியா. ஒரே இசை இந்திய இசை. நம்மிடையே எந்தப் பாகுபாடும் இல்லை. இந்த இசையின் மாசற்ற தன்மையை, சுத்தத்தை, இதன் இந்திய குணத்தை தலைமுறை தலைமுறையா நாம பாதுகாத்து முன்னால் எடுத்து வந்திருக்கோம். வரும் தலைமுறையும் இதைத் தொடர்ந்து செய்ய வேணும்’
பர்வீன் உருக்கமாக வேண்டுகோள் விடுக்க அரங்கமே நெகிழ்ந்தது. ஒரு அரசியல்வாதி பேசினால் போலியாகத் தெரியும் இந்தச் சொற்கள் அந்த இசையரசியின் குரலில் உண்மையும் உயிர்த்துடிப்போடும் ஒலித்தன.
மாளவ்மாண்ட் ராகத்தில் (மாள்வா மற்றும் மாண்ட் கலப்பு) மீரா பஜன். தொடர்ந்து எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ‘மா தீ பவானி’ மிஸ்ர பைரவ் ராகத்தில் இசையையும், பக்தியையும் அற்புதமாகக் குழைத்துத் தீட்டிய இசை ஓவியம். பர்வீன் இதைப் பாடும்போது அந்த அற்புத அனுபவத்தில் தோய்ந்து நெக்குருகி எத்தனையோ முறை இருந்திருக்கிறேன். இன்று அப்படிப்பட்ட தேவகணங்களில் இன்னொன்று.
‘பர்வீன் அம்மா, மாசா மாசம் சென்னைக்கு வாங்க’ முதல் வரிசையில் ஒரு இளம்பெண் கைதட்டலுக்கு இடையே சொன்னாள். பக்கத்தில் அமர்ந்திருந்த வயலின் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், திருச்சூர் ராமச்சந்திரன், சாருமதி ராமச்சந்திரன், டி.வி.ஜி போன்ற மூத்த கர்னாடக இசைக் கலைஞர்கள் கைதட்டி அதை வழிமொழிந்தார்கள். கண்ணில் கண்ணீரோடு, ஆன்மீக அனுபவத்தில் இன்னும் மூழ்கிக் கைகூப்பியபடி மேடையில் அமர்ந்திருந்தார் பர்வீன் சுல்தானா.
==
March 27, 2025
ஓ ஹென்றியின் ‘முட்டைக்கோசும் அரசர்களும்’, சுஜாதா, அசோகமித்திர்ன். நித்தியகீர்த்தியும்
எட்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ நூலில் இடம் பெறும் சிறு கட்டுரை – ’விடுபட்டவை’ (அக்டோபர் 2009-இல் எழுதியது) –
விடுபட்டவை
லேப்டாப் உபயோகிக்க ஆரம்பித்தவுடன் (ஆச்சு, அதுவும் நாலு வருஷமாக) வீட்டுக் கணினி எப்போதாவது பிரிண்ட் அவுட் எடுக்க, ஸ்கேன் செய்ய மட்டும் பயன்பட்டு வந்தது.
இன்றைக்கு என்னமோ தோன்றியது. அந்தக் கணினியில் பழைய .pst கோப்பை அவுட்லுக்கில் திறந்து பார்ர்க, திறக்காமலே போன ஒரு கடிதம். சுஜாதா சார் எழுதிய இதை எப்படி தவற விட்டேன்?
//
From: rangarajan S [mailto:wri^ @hotmail.com]
Sent: Thursday, July 07, 2005 2:11 PM
To: $$$$@sify.com
Subject: RE: hi from era.murukan (with an interesting blog entry I read today
send one book first preferably a poetry collection if any.
I have read your bombay based story sometime back
Come to ambalam 19 cathedral garden rd on saturday 11 30 if you re free
Desikan also might be there let us meet and talk about cabbges and kings
Sujtha
//
யாருடைய கவிதைத் தொகுப்பு? O.Henry’s short story முட்டைகோசும் அரசர்களும் – என்ன விஷயமாக பேசிக் கொண்டிருந்தோம்? *****ஒன்றுமே நினைவில் இல்லை. ஆனாலும் உறுத்துகிறது.
வாத்தியாருக்கு நான் ஒரு வரி பதில் எழுதியிருக்கக் கூடாதா?
இந்த வாரம் இன்னொரு மனக் குமைச்சலும் கூட உண்டு.
போன திங்களன்று மிக நேர்த்தியாக வடிவமைத்த நாவல் ஒன்று தனியஞ்சலில் வந்து சேர்ந்தது. நித்தியகீர்த்தி எழுதிய ‘தொப்புள்கொடி’.
அட்டையில் போட்டிருந்த இளம்பெண் நித்தியகீர்த்தியா என்று சம்சயம். தெரிந்த முகமாக, ரஜனி திரணகமவின் அன்பு மகள் சாரிகா போல இருந்தது.
ஆற அமரப் படிக்கலாம் என்று மேசையிலேயே வைத்து விட்டு வேறு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வலையில் வேறு ஏதோ தேடப்போக திருமதி சந்திரவதனா பதிவு கண்ணில் பட்டது – ‘தீபாவளி அன்று நித்தியகீர்த்தி மாரடைப்பால் காலமானார்’.
ஒரு வரி, ஒரே ஒரு வரி அவருக்கு கடிதம் எழுதிப் போட முடியாமல் அப்படி என்ன வெட்டி முறித்தேன்?
அசோகமித்திரன் சிறுகதை நினைவு வருகிறது. கீழ் போர்ஷன் காரரைப் பார்க்க வந்து கதவு தட்டி அலுத்துப் போன ஒருத்தர் மேல் மாடியில் இருக்கிற கதைசொல்லியோடு உரையாடுவார். காது சரியாகக் கேட்காத கீழ் போர்ஷன்காரருக்கு ஒரு வேலைக்கான உத்தரவு காத்திருப்பதாகவும் இன்னாரை சந்திக்க வேண்டும் என்றும் செய்தி. மேல் போர்ஷன்காரர் அவரைச் சந்திக்கும்போது சொல்லி அனுப்பி வைக்கக் கோரிக்கை. அவர் மறந்து விடுவார். அடுத்த நாள் கீழ்ப்போர்ஷன் வாசி இறந்ததாகத் தெரிய வரும் . சொல்ல மறந்து போன தகவலின் கனம் அழுத்த கதைசொல்லி மனக்குமைச்சலோடு நிற்பதோடு கதை முடியும்
புரிகிறது, அசோகமித்திரன் சார்.
March 25, 2025
வேம்ப நாட்டுக் காயல் -என் அடுத்த அல்புனைவு நூல்
ic
இதுவரை வெளிவந்த 7 கட்டுரைத் தொகுப்புகளோடு இன்னும் ஒன்று சேர்கிறது – வேம்பநாட்டுக் காயல்.
நூலில் இருந்து கொஞ்சம் –
ராத்திரி அலுத்துக் களைத்து வந்து படுக்கையில் விழுந்து நிம்மதியாகத் தூங்கும் முன்னால் படித்தோம் ரசித்தோம் மூடிவைத்தோம் என்று பெயர் பண்ண ஒரு அரைமணி நேரம் கையில் எடுப்பது என்னவாக இருந்தாலும், வாழ்க்கை வரலாறாக இருக்கலாகாது. ஆனாலும் இப்படியான லேசான வாசிப்புக்கான கனமான புத்தகமாகத் தற்போது எனக்குக் கிட்டியது கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கமின் ‘மை சைட் ‘ (ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பு) தான்.
பெக்கம் போன ஜூன் வரை இங்கிலாந்தில் மான்செஸ்டர் யுனைடட் குழுவுக்காக விளையாடி அப்புறம் ஸ்பெயினில் ரியல் மாட்ரிட் குழுவில் புகுந்தாலும், அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை குறையாது – என்னையும் சேர்த்து. புத்தகத்தைப் படிக்க எடுக்க அதுவும் ஒரு காரணம்.
தேர்ந்தெடுத்து வாசிக்க வசதியாக விரிவான அட்டவணை புத்தகத்தில் பின் இணைப்பாக இருப்பதால் 1998ல் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டத்துக்கு முதலில் சாடினேன். பெக்கம் விளையாடிய முதல் இண்டர்நேஷனல் பந்தயம். அவர் ரெஃப்ரியால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதும் அங்கே மட்டும் தான் நடந்தது.
அர்ஜெண்டினாவுக்கும் இங்கிலாந்துக்குமான மோதலில் – இது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம் போன்றது என்று சொல்லத் தேவையில்லை – அர்ஜெண்டினா வெற்றி பெற்ற அந்தப் பரபரப்பான பந்தயம் இன்னும் நினைவில் இருக்கிறது.
கீழே விழுந்தபடி பெக்கம் காலை உதைப்பது போல் நீட்ட, அர்ஜெண்டினா ஆட்டக்காரர் டிகோ சிமியோன் சுருண்டு விழுவார். சக இங்கிலாந்து ஆட்டக்காரர்களான மிக்கேல் ஒவனும், கேரியும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, எதிரணிக்கார பட்டிஸ்டூட்டா ‘.. வேணும்டா உனக்கு மவனே ‘ என்று திருப்தியாகத் தலையசைக்க பெக்கம் முகமெல்லாம் வேதனை தெரிய வெளியேறுவார்.
பின்னாலிருந்து காலைத் தட்டி விழவைத்தான் அந்த எழவெடுத்த சிமியோன். அப்புறம் தலையை அன்போடு தடவற மாதிரிப் போக்குக் காட்டிட்டு முடியைப் பிடித்து இழுத்தான். என்னையறியாமல் காலை ஓங்கிட்டேன். உயிர்த்தலத்துலே உதச்சுக் கூழாக்கினது போல அந்தப் பய சுருண்டு விழுந்து பாவ்லா காட்டினதை எல்லாரும் நம்பிட்டாங்க. நான் வெளியே போய் எங்க டாடியைக் கட்டிக்கிட்டு ஓன்னு அழுதேன் சின்னப் புள்ளை கணக்கா.
பெக்கம் சொல்வது உண்மையாக இருக்கலாம். இல்லாவிட்டாலும் தான் என்ன போச்சு ?
மூட் அவுட் ஆன அந்த தினத்தில் அமெரிக்காவிலிருந்து அவர் மனைவியும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் பாப் இசைக் குழுவில் பாஷ் ஸ்பைஸ் என்ற செல்லப் பெயர் கொண்ட பாடகியுமான விக்டோரியா பெக்கம் தொலைபேசித் தான் பிள்ளையாண்டிருப்பதைச் சொல்வது, பெக்கம் உடனே நியூயார்க் விரைந்து மாடிசன் அவென்யூவில் கச்சேரி கேட்க மேடைக்குப் பின்னால் உட்காருவது, விக்டோரியாவைச் சந்திக்க வந்த பிரபல பாடகி மடோனா பெக்கமைப் பார்த்து ‘நீங்க என்ன விளையாடறீங்க ? ஃபுட்பாலா ? ‘ என்று கால்பந்து பற்றிய அசல் அமெரிக்க அறியாமையோடு கேட்பது என்று நீண்டு கொண்டு போகிறதைப் படிப்பதற்குள் ஹாவ் .. சாவகாசமாக இன்னொரு நாள் சொல்றேன்
(2004)
March 18, 2025
இடவத்துப் பாதி மழை
இன்னும் சில வெண்பாக்கள்
நண்பர் பா.ராகவன் ஆசிரியராக இருந்த குமுதம் ஜங்க்ஷனில் வெளியானவை
சுவரொட்டி
அய்யா பிறந்தவிழா அம்மா பொதுக்குழு
பைய்யா மலையாளப் போஸ்டரே *கய்யிலெடு;
சேசுதாஸ் கச்சேரி வேகம் பசைதடவு.
ஏசு அழைக்கிறார் பார்.
*கையிலெடு என்று பாடம் – பையன் ராத்திரிப் பள்ளிக் கூடத்துக்குச்
சரியாகப் போக முடியாததால் படிக்கவில்லை…
சீட்டு
நாலேகால் லட்சம் உமக்கா எனக்குந்தான்.
காலே அரைக்கால் கிடைக்குமா ? மேலேதம்
வீட்டு நிலையெண்ணிக் கூட்டமாய் நிற்கிறார்
சீட்டு நிறுவனத்தில் பூட்டு.
மாமி மெஸ்
எட்டில் ரசம்போடு ஏழிலே மோர்க்குழம்பு
பெட்டுரோ மாக்சேற்று பச்சடிவை – தட்டிலே
தாமிடவே சாம்பார் சுடுசாதம் கையெடுங்கோ.
மாமிமெஸ்ஸில் போன விளக்கு.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
கைலிக்கு மாறிக் கதைக்கத் தொடங்கிட
வைலட்டுச் சேலை கடந்திடும். தைலம்
செழும்பூ தலையில். கருவாடு பையில்.
எழும்பூர் விடுமே ரயில்.
ஷூட்டிங்
ஈரோயின் இங்கே இடுப்புத் தெரியணும்
மாரோடு அண்ணன் மடிமேல் குளோசப்பு.
கட்பண்ணி ஸூம்வைய்யா கம்மாய்க் கரைஷாட்டு
சிட்னியில் மிச்சப் பிடிப்பு.
2008-இல் அச்சுதம் கேசவம் நாவலுக்காக அம்பலப்புழ ஸ்ரீகிருஷ்ண அம்பலத்திலும் சுற்றியும் தகவல் சேகரித்துக் கொண்டிருந்த ஒரு மழைக்கால மற்றும் பந்த் கால தினத்தில் ரெசார்ட்டில் அமர்ந்து எழுதிய வெண்பாக்கள் இவை-
காற்று விலக்கும் குடைக்குள் முழுநிலாக்
கீற்றைப் புலரும் பரிதியே தீற்ற
புழையின் கரையில் படகுவர யாரோ
மழையில் நகரும் ரயில்.
அம்பல முற்றம் அசையும் திரையாக
கம்பளம் நெய்திடும் கார்முகில் – பம்மித்
தடவித் தரையைத் தழுவி அணைக்கும்
இடவத்துப் பாதி மழை.
ஓலைக் குடைபிடித்து வந்து உலகளந்த
மாலவா உன்நடையில் நிற்கிறேன் – காலையிலே
கொட்டும் மழைகொச்சி பந்தாம் (Bandh) கடையில்லை
பட்டுத் துணி,குடை தா.
பக்கெட்டு சாம்பார் பரவசமாய் மெய்கலந்த
கிக்கின் லகரி உசுப்பேற்ற – பக்குவமாய்
சட்டினி சக்களத்தி தொட்டணைத்து முத்தமிடும்
இட்டலிக்கு உண்டோ இணை.
இனி ஒரு மலையாள வெண்பா
அம்பாடிக் கண்ணன் அம்பலத்தில் பாயசம்
கும்பாவில் மாந்தி மடுத்த்ப்போள்- ‘சும்மாவா!’
சேட்டன் விளிகேட்டு சாக்லெட் பொதிகொள்ள
ஓட்டமாய் வந்நது இன்னு.
வேரெங்கே விழுந்து விலகித் தழுவுமழை
நீரெங்கே நீந்திடும் மீனெங்கே – நாரையெங்கே
ஓசையின்றித் தேடி உருகுமே என்மர
மேசையில் தாமரைப் பூ.
from the kindle ebook ‘Era Murukan Venpakkal 1’
March 15, 2025
ஆண்ட்ரு லயிட் வெப்பரும் ஏ.ஆர் ரஹ்மானும்
i இந்த வாரம் வெளியான என் அல்புனைவு கட்டுரைத் தொகுதி ‘எடின்பரோ குறிப்புகள்’ நூலில் இருந்து
ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரும் ஓபராவும்
இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பரின் இசை முயற்சிகள் எல்லாமே பெரிய தோதில் இசையமைப்பும், பிரம்மாண்டமான கட்டமைப்பும் கூடியவை. ஏ.ஆர். ரெஹ்மானின் கூட்டுறவில் அவர் உருவாக்கி இரண்டு வருடம் முன்னால் சக்கைப்போடு போட்ட ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பாலிவுட் திரைப்படப் பாதிப்பில் உருவான ம்யூசிக்கல் ஆன மும்பைக் கனவுகளை விட அவர் இசையமைப்பில் வெளியான ‘ஃபாண்டம் ஓஃப் தி ஓபரா’ முக்கியமானது.
பிரஞ்சு எழுத்தாளர் காஸ்தன் லெரோவின் லெ பாந்தெம் தெ லெ’யோபரா நாவல் அடிப்படையில், பரீஸ் ஒப்பரா தியேட்டரில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு மர்ம மனிதன் அல்லது அமானுஷ்ய உருவமான முகம் மறைத்த பிறவியொன்று ஓபராக் கலைஞர்களுடன், இசை நிகழ்ச்சிகளுடன் இடையாடுவது பற்றிய மூன்று மணி நேர நிகழ்வு இந்த இசை, நாடக, நடனப் படைப்பு. அதாவது ஓப்பரா சூழலில் ஓப்பரா பற்றி நிகழும் ஓப்பரா.
இசையரசிகளான திவாக்கள், சோபர்னோக்கள், டெனார்கள், பாலே கலைஞர்கள் என்று கிட்டத்தட்ட அறுபது பேர் பங்குபெறும் இந்த நிகழ்ச்சி இசையிலும், நாடக ஆக்கத்திலும் நடன அமைப்பிலும் ஒரு வினாடி கூடத் தொய்வு இல்லாமல் விறுவிறுவென்று அமைந்து ரசிகர்களைக் கட்டிப் போடுகிறது.
ஏகப்பட்ட உலோகக் கம்பிகள் பிடித்திழுத்து உயர்த்த, ஒரு பெரிய சரவிளக்கு மேடைக்கு மேலே மெல்ல ஆடியபடி உயருகிறது. தான் இசைப்பயிற்சி அளித்த கதாநாயகியோடு பரீஸ் ஓப்பரா தியேட்டரின் நிலத்தடிப் பகுதியில் படகு ஓட்டியபடி கம்பீரமாகப் பாடுகிறது அந்த மர்ம உருவம். காட்சி மாற, வரிசை வரிசையாக விரைந்து நகரும் நடனக் கலைஞர்களின் இசையும் நடனமும் உச்சக்கட்டத்தை அடையும்போது அந்த உருவம் அடிக்குரலில் இசைத்தபடி வளைந்து போகும் மாடிப்படிகளில் மெல்ல இறங்கி வருகிறது. பழைய நாடக நாயகியின் குரல் பிசிறில்லாது மேலே மேலே பறந்து, திடீரென்று தவளைக் கூச்சலாக மாறிக் கரகரத்து அபஸ்வரமாக ஒலிக்கிறது. அமானுஷ்ய உருவம் கையசைக்கிறது. தொள்ளாயிரம் பவுண்ட் கனமான சரவிளக்கு அடுத்த வினாடி மேடையில் உதிர்ந்து விழத் தொடங்க, கீழே ஆர்க்கெஸ்ட்ரா பிட்டில் இருபதுக்கும் மேற்பட்ட வயலின்காரர்கள் கொஞ்சம் நடுக்கத்தோடு மேலே பார்த்தபடி தோளில் சாய்த்து வைத்த வயலின் தந்திகள் உச்சஸ்தாயியை எட்ட வில்லை அழுத்தி உயர்த்துகிறார்கள்.
கொட்டகையை விட்டு வெளியே வரும்போது பிரமிப்பு மட்டும் மிஞ்சுகிறது. ரீஜண்ட் தெரு விளையாட்டு உடை, ஷூ விற்கும் கடையில் கண்ணாடிக் கூண்டுக்குள் டிரெட்மில்லில் ஒரு தாடிக்காரர் நடந்தபடி இருக்கிறார். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நடை தொடருமாம். குழுவாக நிகழ்த்தப்படும் கின்னஸ் சாதனை. Amazing என்கிறார் என் பக்கத்தில் அமெரிக்கரோ, கனாடியரோ ஒருத்தர். அவரவர் பிரமிப்பு அவரவர்களுக்கு.
March 13, 2025
அனந்தையில் அன்று ஒரு நாள்
இந்த வாரம் வெளியான என் கட்டுரைத் தொகுதி ‘ஏதோ ஒரு பக்கம்’ நூலிலிருந்து- ஒரு பக்கம்
(எழுத்து பிரசுரம் வெளியீடு )
————————————————————————–
பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் அந்தப் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம். இந்தாளு யாரென்று எல்லாரும் நம்மைப் பற்றி யோசித்திருப்பார்கள். அதிலே ஒருத்தராவது வாயைத் திறந்து யோவ் நீ யாருய்யான்னு கேட்டால் என்ன பதில் சொல்ல?
நான் எழுத்தாளன் – தமிழ்லே சொல்லுங்க –ரைட்டர்-சினிமா பத்திரிகை நிருபரா? ஊஹும்.
நம்ம இலக்கியத் தடம் எல்லாம் இங்கே சுவடில்லாமல் போய்விடும்.
உத்தியோகப் பெருமை பேசிவிடலாமா?
கம்ப்யூட்டர் கம்பெனியிலே அதிகாரி – சரி, இங்கே என்ன பண்றீங்க?
கதை எழுதி, பத்தி எழுதி, நாவல் எழுதி, சினிமா கதை வசனம் எழுதி எல்லாம் பிரயோஜனம் இல்லை. வேறே என்ன வழி? நாமும் கொஞ்சமாவது முகத்தைப் பார்த்து அடையாளம் காணும்படிக்கு பிரபலமாவதுதான்.
யோசித்துக் கொண்டே கமல் ஹாசன் என்ற ஒரு மகா பிரபலத்தோடு கிட்டத்தட்ட முழு நாளையும் கழிக்க அண்மையில் சந்தர்ப்பம் வாய்த்தது.
கோவளம் கடற்கரை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரிசப்ஷனில் அவரைச் சந்தித்தபோது, சென்னை வீட்டில் சந்தித்தால் உட்காரச் சொல்லி பேசுகிறது போலதான் சகஜமாகப் பேசினார். அதற்குள் எத்தனையோ பேர் நின்று பார்த்துக் கடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். எனக்கென்னமோ அந்தப் பார்வையில் எல்லாம் பொறாமை கொழுந்து விட்டு எரிகிற மாதிரித் தெரிந்தது.
இவ்வளவு உற்சாகமா இவன் கிட்டே பேசிட்டு இருக்காரே? யாருடா புள்ளிக்காரன்? சினிமாக்காரன் மாதிரியும் தெரியலியே.
பள்ளிகொண்டபுரம் போய் அனந்தசயனனைத் தொழுது அவன் பெயர் கொண்ட எழுத்துலகச் சிற்பி நீல.பத்மநாபன் அவர்களின் வீட்டில் இறங்கி ஒரு வணக்கம் சொல்லி விட்டு கொஞ்சம் இலக்கிய உரையாடலும் செய்து வரத் தான் திட்டம்.
நெரிசல் மிகுந்த வீதிகளில் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. உள்ளே கமல் கம்மந்தான் கான்சாகிப் பெருமையை உயர்த்திப் பிடிக்க, செம்மண் பூமிக்காரனான நான், எங்க ஊர்க்காரரும் கான்சாவின் அம்மாவனும் அவனை மாமரத்தில் தொங்கவிட்டுத் தூக்குப் போட்டுக் கொல்லக் காரணமானவருமான தாண்டவராயன் பிள்ளையின் இன்னொரு பக்கத்தை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காரசாரமான வாக்குவாதம். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த நண்பர் ஓரம் கட்டி நிறுத்தி விட்டு என்னை ஒரு கை பார்க்க பலமான சாத்தியக்கூறு. இவ்வளவு பிரபலமானவரோடு யாருடா இவன் சரிக்கு சரி கட்சி கட்டி அழிச்சாட்டியம் பண்ணுகிறான் என்று கோபம் வரலாம். வண்டி நின்றால் தெரு ஓரம் போனவர்கள் நடந்த சங்கதி கேட்டு கொதித்து என்னை சுசீந்திரம் எண்ணெய்க் கொப்பரையில் கை முக்க இழுத்துப் போகலாம்.
அதுக்கு முன்னால் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் கமலோடு மொபைல் தொலைபேசியில் அவசரமான படம் எடுத்துக் கொள்வார்கள். கிடைத்த காகிதத்தை நீட்டி ஆட்டோகிராஃப் கோரலாம்.
நல்ல வேளையாக யாருக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்தோம். அடுத்த மூன்று மணி நேரம் நகரின் ஜன சந்தடி மிகுந்த அந்தப் பகுதியில் இந்தப் பிரமுகர் இருப்பதே தெரியாமல் நகரம் வேலை நாள் மெத்தனத்தோடு இயங்கிக் கொண்டிருக்க, உள்ளே காமிரா, விளக்கு, சட்டைக் காலரில் மைக் இன்ன பிற அம்சங்களோடு பேச்சைத் தொடர்ந்தோம். பேசப் பேச பேச்சு வளர்ந்தது.
பகல் ஒரு மணிக்கு மின்சாரம் போயே போச்சு. வீட்டுக்குப் பின்னால் அவுட் ஹவுஸ் – பழைய கால பாணி மர வீட்டில் பேச்சை உற்சாகமாகத் தொடர்ந்தோம். அந்த வீட்டு வாசல் படியில் உட்கார்ந்தபடி நான் சுற்றிலும் ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் திகிலுடன் பார்த்தேன். யாராவது ஒருத்தர் பார்த்து அடையாளம் கண்டு கொண்டாலும் போதும்.
அப்புறம் நாங்கள் பார்க்கப் போனவர்களின் வீட்டுக்கு முன்னால் திருச்சூர் பூரம் போல ஜனசமுத்திரம் திரண்டு அலையடித்து எல்லோரையும் கடல் கொண்டு விடும்.
ஒரு ஜன்னல், ஒரு கதவு கூட அந்த ஒரு மணி நேரத்தில் பக்கத்தில் எங்கேயும் திறக்கப்படவில்லை. நகர வாழ்க்கையின் அமானுஷ்யத் தனிமையிலும் ஏக நன்மை!
வாய்க்கு ருசியான நாஞ்சில் நாட்டு சமையல். திருமதி பத்மநாபனின் அன்பான உபசரிப்பு. விருந்து முடிந்து வாசல் திண்ணையில் சகஜமாக பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மேல் வீட்டு குஜராத்தி குடும்பத்துக் குழந்தைகளோடு அரட்டை. சென்னை விமானத்தைப் பிடிக்கத்தான் நேரம் இருந்தது அதற்கு அப்புறம்.
பள்ளிகொண்டபுரம் நாவலைப் பற்றிய பரிமாற்றமே இன்னும் முடியவில்லை. நீல.பத்மநாபனின் தலைமுறைகள், உறவுகள், இலையுதிர்காலம் என்று மற்றப் படைப்புகள் பற்றிய கேள்விகள் எங்களோடு தான் இருக்கின்றன.
அவற்றோடு, விரைவில் அவரை மீண்டும் சந்திப்போம்.
(நேர்காணல் தினம் 3.2.2010)
March 12, 2025
வாதவூரான் புரவிகளும் எடின்பரோ குறிப்புகளும் இங்கே கிடைக்கும்
இந்த வாரம் வெளியான என் அல்புனைவு நூல்கள் இந்த மூன்றும்.
ஸீரோ டிகிரி பப்’ளிஷிங் பதிப்பு இவை,
1. வாதவூரான் பரிகள்
2. ஏதோ ஒரு பக்கம்
3. எடின்பரோ குறிப்புகள்
March 10, 2025
மினிமலிஸ கடவுள் யஷ்வந்த்ராவ்
மராட்டி, ஆங்கில மொழிக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையான அருண் கொலட்கரின் தற்காலக் கவிதை இலக்கியப் பங்களிப்பு சிறப்பானது. கொலட்கரின் ‘ஜெஜூரி’ (ஆங்கில) ’ கவிதை தொகுப்பில் இருந்து-
————————————————————–
யஷ்வந்த்ராவ்
ஒரு கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா ?
எனக்கு ஒரு நல்ல கடவுளைத் தெரியும்.
பெயர் யஷ்வந்த் ராவ்.
அருமையான தெய்வங்களில் அவரும் ஒருவர்.
அடுத்த முறை ஜெஜூரி போகும்போது
அவசியம் பார்த்துவிட்டு வாருங்கள்.
ரெண்டாம் தரக் கடவுள்தான் அவர்.
இருப்பது கோவிலுக்கு,
கோவில் மதிலுக்குக் கூட வெளியே.
என்னவோ அங்கே இருக்கப்பட்ட
குஷ்டரோகிகளுக்கும்
கடைக்காரர்களுக்கும் மட்டும்
சொந்தமானவர் போல.
அழகான முகம் கொண்ட கடவுள்களை,
விரைப்பான கவசமணிந்த கடவுள்களை
எனக்குத் தெரியும்தான்.
உங்கள் பொன்னுக்காக
உங்களை முழுக்காட்டுகிறவர்கள்.
உங்கள் ஆத்மாவுக்காக
உங்களை நனைக்கிறவர்கள்.
கனன்று எரியும் தீக்கங்குள் மேல்
உங்களை நடக்கச் செய்கிறவர்கள்.
உங்கள் மனைவி வயிற்றில்
குழந்தை வைக்கிறவர்கள்.
உங்கள் எதிரி உடலில்
கத்தியைப் பாய்ச்சுகிறவர்கள்.
உங்கள் வாழ்க்கையை
எப்படி வாழவேண்டுமென்று கூறும் கடவுள்கள்.
எப்படி உங்கள் பணத்தை
இரட்டிப்பாக்குவது என்று வழிசொல்கிற கடவுள்கள்.
உங்கள் நிலம் நீச்சை எவ்விதம்
மும்மடங்காக்குவது என்று
சொல்லித் தருகிறவர்கள்.
அவர்களைத் தேடி நீங்கள் ஒரு காதம்
தவழ்ந்து வந்ததை
ஒரு கள்ளச் சிரிப்போடு
பார்த்திருக்கும் கடவுள்கள்.
நீங்கள் ஒரு கிரீடம் காணிக்கை தராவிட்டால்
உங்களை முழுகடிக்கும் கடவுள்கள்.
என் ரசனைப்படி
கொஞ்சம் கூடுதல் ஒழுங்கமைப்போடு
அல்லது கொஞ்சம் கூடுதல் நாடகத்தன்மையோடு
இருக்கப்பட்டவர்கள் என்றாலும்
அவர்கள் எல்லாருக்கும்
பல்லாண்டு பல்லாண்டு.
யஷ்வந்த்ராவ் ஒரு கருப்புக் களிமண் பொதி.
தபால்பெட்டி போல் பிரகாசம்.
உயிர்ச்சத்தின் உருவம்.
எரிமலைக் குழம்பை உருட்டிச்
சுவரில் எரிந்த மாதிரி
கையில்லை. கால் கிடையாது.
தலையும்தான்.
ய்ஷ்வந்த்ராவ்
அவர்தான் நீங்கள் சந்திக்க வேண்டிய கடவுள்.
உங்களுக்குக் கையோ காலோ
குறைச்சல் என்றால்
நேராகத் துணைசெய்வார்.
அதியற்புதமாக ஒன்றும் இல்லை.
உலகத்தையே உங்களுக்குத் தருவதாக
உறுதிமொழி எல்லாம் அளிக்கமாட்டார் அவர்.
சொர்க்கத்துக்குக் கிளம்பும் அடுத்த ராக்கெட்டில்
உங்களுக்கு ஒரு இடம் பிடித்துக் கொடுக்க மாட்டார்.
ஆனாலும், உங்களுக்கு ஏதாவது
எலும்பு முறிந்துபோனதென்றால்
கட்டாயம் சரி செய்து விடுவார்.
உங்கள் உடலை முழுசாக்குவார்,
உங்கள் ஆத்மா
தன்னைத்தானே கவனித்துக் கொள்ளட்டும் என்று.
அப்புறம் ஒன்று.
தனக்கே தலையோ கையோ காலோ
இல்லை என்பதால்
உங்களைக் கொஞ்சம் கூடுதலாகப்
புரிந்துகொள்ள
யஷ்வந்த்ராவுக்கு வாய்க்கிறது.
(கவிதை – அருண் கொலட்கர்
(தமிழ் மொழியாக்கம் – இரா.முருகன்)
March 7, 2025
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
மகளிர் தின வாழ்த்துகள்.
‘விஸ்வரூபம்’ பெருநாவலில் இருந்து ஒரு சிறு பகுதியை பகிர்ந்து கொள்கிறேன்.
————————————————————————-
5 அக்டோபர் 1908 – கீலக வருஷம் புரட்டாசி 20, திங்கள்கிழமை
ஒரு ரெண்டு நிமிசம் தாமதமா வந்ததுக்கு இந்த கூச்சல் போடுறிங்களே எத்தனை நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே ஏழு எட்டுன்னு நேரத்தைப் பாக்காம வேலை பார்த்திருக்கேன். அதுக்கு என்ன தனியாவா அதிகக் கூலி போட்டுக் கொடுத்தீரு?
இப்படி அவன் (கரும்புத் தோட்டத் தொழிலாளி) கேட்க (கங்காணியான) என் கோபம் உச்சத்துக்குப் போய் கையில் பிடித்த பிரம்பை எடுத்து வீசி அவன் முதுகை ரத்த விளாறாக்கிப் போட்டேன்.
குய்யோ முறையோ என்று அவன் கூச்சல் போட்டபடி தோட்டம் முழுக்க ஓட நான் அவனை வேட்டை நாய் மாதிரி பின்னாடியே துரத்திப் போய் திரும்பத் திரும்ப அடித்து காலால் அவன் கொட்டையில் எட்டி உதைத்தேன். அவன் அங்கே இருக்கப்பட்டது கூழான மாதிரி ஈன சுவரத்தில் முனக பின்னும் சந்தோஷமாக அவன் குடுமியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தேன்.
ஒரு பத்து நிமிஷம் இப்படியாக சிட்சை நிறைவேற்றி கையும் காலும் எனக்கு வலியெடுக்க ஆரம்பித்தபோது அவனை வண்டியில் கரும்பு ஏற்றுகிற ஜோலிக்குப் போக விட்டேன். ஆனாலும் என் ஆத்திரம் முழுக்க தீர்ந்த பாடில்லை.
பக்கத்தில் ஏதோ நொய்நொய் என்று சத்தம். என்னடா என்று திரும்பிப் பார்க்க ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. ஓரமாக நிழலில் ஒரு சாணிச் சுருணையை விரித்து அதைக் கிடத்தி விட்டு அதைப் பெற்றுப் போட்டவள் பிடுங்கின கரும்பை தோகை வெட்டிக் கொண்டிருந்தாள். கரும்பு யந்திரத்தில் போட வாகாக இதைச் சதா செய்யாவிட்டால் யந்திரம் ஓய்ந்து போய்விடும். மேனேஜர் துரை கத்துவான்.
பிறந்து நாலைந்தே மாசம் ஆன அந்த சவலைக் குழந்தை குரலைக் கேட்டதும் அந்தப் பெண்பிள்ளை கையில் எடுத்த தோகையையும் அரிவாளையும் அந்தப்படிக்கே தரையில் வைத்துவிட்டு நிழலுக்கு ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள். முலையை எடுத்து அதுக்குக் கொடுக்க ஆரம்பிக்கிற வரைக்கும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்றேன் நான்.
அப்புறம் ஓங்கி அந்தப் பிரம்பால் அவள் முலை மேலேயே ஓங்கி அடித்தேன். திருட்டு முண்டே. வேலை நேரத்தில் என்ன சீராட்டிக் கொண்டு கிடக்கே? வரும்போதே இதையெல்லாம் முடிச்சிருக்கலாமில்லையா வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல்?
நான் சத்தம் போட அவள் என் காலில் விழுந்து குழந்தையையும் கிடத்தினாள். சாமி பால் பத்தாம அழுகிறான் பிள்ளை. பசி நேரம். நொய்க் கஞ்சி கொடுத்தா வாந்தி பேதியாவுது. வேறே வழி இல்லாம லயத்துலே இருக்கப்பட்ட காப்பிரிச்சி கிட்டே எல்லாம் கையேந்தி பால் பிச்சை வாங்கிட்டு இருக்கேன். இன்னிக்கு யாரும் தானம் தரலை. பிள்ளை உசிரு போகுது.
திரும்பக் குழந்தையை வாரியெடுத்த அவளை முடிக்க விடாமல் திரும்ப மார்க்காம்பிலேயே பிரம்பால் அடித்தேன். குழந்தை பிடிவாதமாகப் பிடித்த காம்பை விட்டு விட்டு வீரிடும்படி அதன் உதட்டிலும் அடி விழுந்திருக்க வேண்டும்.
அந்தப் பக்கம் தலையில் கரும்பு சுமந்து போன ஒரு கிழட்டு காப்பிரிச்சியைக் கூப்பிட்டு குழந்தையைப் பறித்து எறியச் சொன்னேன். அவள் நான் சொன்னது புரியாத பாவனையோடு அந்தச் சிசுவை வாரியெடுத்து ஓரமாக வைத்துவிட்டு அங்கே இன்னொரு காப்பிரிச்சிக்குக் கண்காட்டியபடிக்கு திரும்ப வந்தாள்.
தேவிடிச்சி போய் வேலையைப் பாருடி நாயே என்று நான் சத்தமாகச் சொல்லியபடி அடிவாங்கின பொம்பிளையை முறைக்க, அவள் எனக்குப் பின்னால் பார்த்து ரெண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டாள். நான் என்ன விஷயம் என்று பின்னால் நோக்கினேன்.
அங்கே இளம் வயசில் இன்னொரு காப்பிரிச்சி அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதுக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே கண் நிறைந்து போனது.
இப்படி மனுஷத்துவம் கிஞ்சித்தும் இல்லாமல் நான் போன மாயம் என்ன என்று அதிர்ந்து போய் எல்லாத்திலிருந்தும் விலகி நின்று நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ரத்தம் கட்டின முதுகோடு அந்தக் கருப்பன் கரும்பைச் சுமந்து போகிறதைப் பார்த்து அவனுக்கு அண்டையில் போனேன்.
அவன் முதுகை ஆதரவாகத் தடவி எந்த ஊர்க்காரனடா நீ என்று தெலுங்கில் விசாரித்தேன்.
திருக்கழுக்குன்றம் என்றான் அவன்.
March 4, 2025
எலிசபெத் வின்ஸ்டர் என்றொரு மனுஷி
துளுவ அரசி சென்னபைராதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ’மிளகு’ பெருநாவல் எழுதிய போது அடிக்கடி நினைவில் வந்தவர், சென்னா போல் நீண்ட காலம் இங்கிலாந்து மகாராணியாக இருந்த, அண்மையில் காலம் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணி.
னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது
. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள் ஆக (5 seasons, 10 episodes each) ஒளிபரப்பாகிறது. இன்னும் ஒரு பருவம் பாக்கி இருக்கிறது. மொத்தம் அறுபது மணி நேரம் சாவதானமாக நீட்சி அடைந்து உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்கள் ஆர்வத்தோடு விரும்பிப் பார்க்கிற வெப் சீரியலாக The Crown தி க்ரவுன் எல்லா அர்த்தத்திலும் வரலாறு படைக்கிறது.
கிட்டத்தட்ட எலிசபெத்தின் அறுபதாண்டு மகாராணி வாழ்க்கையைச் சித்தரிக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
இது இங்கிலாந்து மகாராணி சரித்திரம் மட்டுமில்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு அப்புறமான பிரிட்டீஷ் அரசைத் தழுவிச் செல்லும் நீண்ட கதையாடல் இது, பீட்டர் மார்கன் எழுதியிருக்கும் திரைக்கதை தெளிவாகவும், சுவாரசியமாகவும் மிளிர்கிறது.
எலிசபெத் சந்தித்து, ஆணையிட்டு, இடைகலந்து பழகிய பிரிட்டீஷ் பிரதம மந்திரிகளின் நீண்ட வரிசையை நோக்கினாலே இந்தப் பிரம்மாண்டம் மனதில் படும். வின்ஸ்டன் சர்ச்சில், ஹெரால்ட் மாக்மில்லன், மார்கரெட் தாட்சர், ஹெரால்ட் வில்சன், ஜான் மேஜர், எட்வர்ட் ஹீத், டேவிட் காமரூன், டோனி ப்ளேர் என்று மாறிமாறி கன்சர்வேடிவ் கட்சியும் தொழில் கட்சியும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய இந்தப் பிரதமர்களில் சிலர் எலிசபெத்தின் தாத்தா வயதானவர்கள். அவர்களில் மகாராணியின் தந்தை வயதானவர்கள், கணவர் வயதானவர்கள், சகோதரி சகோதரர் வயதானவர்கள், மகன் வயது இளைஞர்கள் என்று சகல வயதினரும் இந்தத் தொலைக்காட்சித் தொடரில் பாத்திரப் படைப்பாகிறார்கள். மகாராணி இன்னும் கொஞ்சம் நாள் ஆயுளோடு இருந்திருந்தால் தற்போதைய இந்திய வம்சாவளி பிரிட்டீஷ் பிரதமர் ரிஷி சுனாக்கும் கதாபாத்திரமாகி இருப்பார்.
எலிசபெத் குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சலனங்களை, மகாராணியின் மருமகளான டயானாவை, எலிசபெத் கணவர் பிலிப் இளவரசரை, மகன் சார்லஸ் இளவரசரை, சகோதரி மார்கரெட்டை எலிசபெத்தோடு சூழ்ந்து நிறுத்தி நிகழ்கிறது த க்ரௌன். சர்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்களை, நாடுகள் சிதறுண்டு போவதை, புதிதாக எழுவதை எலிசபெத் வாழ்க்கைச் சித்தரிப்பின் விளிம்புகளிலிருந்து காட்சிப் படுத்தப்படுகிறது. உலகப் பொருளாதாரத் தலைமையை அமெரிக்கா ஏற்க, பிரிட்டீஷ் பொருளாதாரம் அதல பாதாளம் தொட்டு, ராணி எதுக்கு நமக்கு, தண்டச் செலவு என்று பிரிட்டீஷ் பிரஜைகள் அங்கலாய்பதும் கடந்து போகிற காட்சிகளாகிறது.
பெரும் வரலாற்றோடு குறுஞ் சரித்திரமும் கதையாகிறபோது பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. 1952 டிசம்பரில் ஐந்து நாட்கள் லண்டன் மாநகரம் மாபெரும் மூடுபனிப் படலத்தால் சூழப்பட்டு சகல விதமான இயக்கமும் நின்று போனது. இரண்டாம் முறை பிரதமாராக வந்த வின்ஸ்டன் சர்ச்சில், ’மூடுபனி எல்லாம் கடவுளின் விளையாட்டு, பெருமழை மாதிரி. ஒன்றும் செய்ய முடியாது. தானே அது நீங்கும்வரை பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்’ என்று சொல்லி விட்டார். எதிர்க் கட்சிகள் மட்டுமில்லை, எலிசபெத் மகாராணியும் உறையூர் சுருட்டு பிடிக்கும் அந்தக் கிழவனாரின் பிடிவாதத்தால் எரிச்சலடைகிறார்கள். கிட்டத்தட்ட சர்ச்சிலை பதவி விலகச் சொல்லும் இக்கட்டான நிலைக்குத் துரத்தப்படுகிறார் எலிசபெத். ஆனால் முதியோரின் தெய்வம் உண்டே, ஐந்தாம் நாள் பனி, சர்ச்சில் சொன்ன மாதிரி தானே விலகி பிரகாசமான சூர்யோதயம்!
இன்னொரு micro history நிகழ்வு. மார்கரெட் தாட்சர் பிரதமரானதும் எலிசபெத் மகாராணியும் அரச குடும்பமும் அவர்கள் வார இறுதி ஓய்வு எடுக்கும் ஸ்காட்லாண்ட் பல்மோரல் கோட்டைக்கு அவரை அழைத்து ராகிங் செய்கிறார்கள். காலியாகக் கிடந்த நாற்காலியில் தாட்சர் உட்கார்ந்ததும், எலிசபெத் ராணியின் சகோதரி மார்கரெட் ”என்ன தைரியம் இருந்தால் விக்டோரியா மகாராணி உட்கார்ந்த நாற்காலியில் உட்காருவீங்க. நாங்களே அதிலே உட்கார மாட்டோம். அவ்வளவு மரியாதைக்குரிய மர நாற்காலி இது. உட்கார்ற முன் யார் கிட்டேயும் கேட்க மாட்டீங்களா” என்று நாட்டின் பிரதமரைத் திட்டித் தீர்க்கிறது அவசியம் பார்க்க வேண்டியது.
இளம் வயது எலிசபெத், நடுவயதில் அவர், மற்றும் முதுபெண்ணாக எலிசபெத் என்று அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப, மூன்று நடிகையர் எலிசபெத்தாக நடிப்பது புதுமைதான். மகாராணி மட்டுமில்லை, அவர் குடும்பத்து முக்கிய உறுப்பினர்களும் காலகட்டத்தைப் பொறுத்து வெவ்வேறு நடிக நடிகையரால் நடிப்பிக்கப் படுவது சிறப்பு.
எலிசபெத் மகாராணியாக நடிக்கும் க்ளையர் ஃபய், ஒலிவிய கால்மன், இமல்டா ஸ்டண்டன் மூன்று பேரும் அற்புதமான நடிகையர் என்றாலும், முதிய எலிசபெத் இமல்டா ஒரு மாற்று அதிகம் நல்ல நடிப்பு. வின்ஸ்டன் சர்ச்சிலாக வரும் அமெரிக்க நடிகர் ஜான் லித்கவ், மார்கரெட் தாட்சராகத் தோன்றும் ஜில்லியன் ஆண்டர்சன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.
இவர்களோடு பிரகாசிக்கும் இன்னொருத்தர் – பக்கிங்ஹாம் அரண்மனையின் கட்டுக்காவலை எல்லாம் மீறிச் சுவரேறிக் குதித்து உள்ளே நுழைந்து, எலிசபெத் மகாராணியின் படுக்கை அறையில் புகுந்து, அவர் விழித்தெழும்போது கட்டிலுக்கு அருகே இருந்து, ’மார்கரெட் தாட்சர் ஆட்சியில் விலைவாசி ஏறிடுச்சு, அரசாங்கம் ஏழைபாழை பக்கம் இல்லை’ என்று நடுராத்திரி ராஜ உரையாடலில் ஈடுபட்ட Michael Fagan மைக்கேல் ஃபேகன் என்ற சாமானிய பிரிட்டீஷ் குடிமகனாக வரும் நடிகர் பெயரை எப்படி மறந்தேன்!
888888
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers
